Search This Blog

22.8.09

தமிழர்களின் பகைவர்கள் யார்? எதனால்?


தமிழர்களின் பகைவர்கள்

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் சர்வக்ஞர் சிலை திறப்புகளைக் கேலியும், கிண்டலும் செய்து வந்த துக்ளக் சோ ராமசாமி, இப்பொழுது காவிரி நீர்ப் பிரச்சினையிலும் மூக்கை நுழைத்து, இந்தப் பிரச்சினையில் மிகவும் அக்கறை உள்ளவராகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.

பொதுவாகப் பார்ப்பனர்களின் எண்ணமெல்லாம் எந்த வகையிலும் தமிழுக்கோ, தமிழருக்கோ, தமிழ்நாட்டுக்கோ நல்லது நடந்துவிடக்கூடாது என்பதிலே கூர்மையான நுட்பத்துடன் இருந்துவரக்கூடியவர்கள்.

தமிழர்கள் என்றால் உள்நாட்டுத் தமிழர்கள்பற்றி மட்டுமல்ல, வெளிநாட்டில் வாழும் தமிழர்-களுக்குக்கூட (எடுத்துக்காட்டு: ஈழத் தமிழர்கள்) ஏதும் நல்லது நடந்துவிடக்கூடாது என்பதிலே _ அவ்வளவுத் தாராளமனது.


கடல்சார் பல்கலைக்கழகம் சென்னைக்கு வருவது குறித்து, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மக்களவையில் பேசிக் கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் கையிலிருந்த ஆவணங்களைப் பறிக்கும் அளவுக்கு வன்முறையில் இறங்கினார்கள்.

அந்தப் பிரச்சினையில்கூட கல்கி தீட்டிய தலையங்கம் என்ன தெரியுமா? சென்னைக்கு வந்தால் என்ன, கொல்கத்தாவுக்கு வந்தால் என்ன, விட்டுக் கொடுக்கவேண்டியதுதானே என்று இதோபதேசம் செய்தது.

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதனால் கத்தரிக்காய் விலை குறையுமா? வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்கப் போகிறதா என்று தினமலர் ஏகடியம் செய்தது.

இது பார்ப்பனர்களின் ரத்தத்தோடு பிறந்த உணர்வாக இருந்து வருவதைத் தமிழர்களும் அறிந்துகொண்டு தானிருக்கின்றனர்.

காவிரி நீர்ப் பிரச்சினையில்கூட, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்கள் கருநாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் இருந்த 50 ஆண்டு காவிரி ஒப்பந்தம் என்பது முடிந்து போய்விட்டது என்று தவறாகச் சொல்லவில்லையா? அதனைக் கண்டித்து அவருக்குத் திராவிடர் கழகம்தான் கறுப்புக் கொடி காட்டியது என்பதையும் நினைவூட்டுகிறோம்.

காவிரி நீர்ப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தைமூலம்தான் தீர்க்க முடியும் _ கருநாடக மாநிலம் அதற்குத் தயாராகவே இருக்கிறது என்று கூறும் திருவாளர் சோ, இதற்கு முன் நடத்தப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் எல்லாம் முறிந்து போனதற்குக் காரணம் கருநாடகமே என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டுதான் பேசுகிறாரா என்று தெரியவில்லை.

கடைசியாக அவர் என்ன பரிகாரம் சொல்லுகிறார்? தம்பி (எடியூரப்பா) பிடிவாதமாகத்தானி-ருப்பாராம்; அண்ணன் (கலைஞர்)தான் விட்டுக் கொடுத்துப் போகவேண்டுமாம் உபதேசம் செய்கிறார் சோ. ராமசாமி.

தொடக்கத்தில் கூறப்பட்டு இருப்பதுபோல பார்ப்பனர்கள் செய்யும் எந்த மத்தியஸ்தமும் குரங்கு அப்பம் பிரித்த கதையாகத் தமிழர்களுக்கு விரோதமாகத்தானிருக்கும் என்பதற்கு இன்றைய நிலவரப்படியான எடுத்துக்காட்டு இது.

இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினை என்றால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்றால் அதற்கெல்லாம் நீதிமன்றம் சொல்வதைக் கேட்கவேண்டும் என்கின்றனர் . காவிரி நீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் கூறுபவைகளைக் கேட்கக் கூடாதாம் என்னே மகாபாரத, கிருஷ்ண உபதேசம்!

காவிரி நீர்ப் பிரச்சினை மட்டுமல்ல; முல்லை பெரியாறு நீர்த் தேக்கப் பிரச்சினையிலும், ஒகேனக்கல் பிரச்சினையாக இருந்தாலும் நியாயத்துக்கும், சட்டத்துக்கும், தீர்ப்புக்கும் கட்டுப்பட மறுக்கும் கேரள, கருநாடக அரசுகளுக்குக் கர்ணோபதேசம் செய்யாமல், தமிழ்நாட்டுக்கு மட்டும் அறிவுரை கூற முன்வருவது ஏன்?

இவ்வளவுக்கும் சோவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இருக்கும் தொடர்பும், உறவும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றே! அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்குரிய நியாயத்தை நிலைநாட்ட வேண்டாமா?

தமிழர்களுக்குப் பகை என்ற நிரந்தர முடிவை எடுத்துள்ளவர்களிடம் இவற்றையெல்லாம் எதிர்-பார்ப்பது கடினமே!


--------------------"விடுதலை"தலையங்கம் 22-8-2009

0 comments: