Search This Blog

9.8.09

மனுதர்மத் தீர்ப்பு!


மருமகளை மாமியார் காலால் எட்டி உதைப்பது, என் மகனிடம் சொல்லி உன்னை விவகாரத்து செய்ய வைப்பேன் என்று மாமியார் மருமகளை மிரட்டுவது எல்லாம் கொடூரமான குற்றச் செயலாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளே ஆணையாகிவிடக் கூடியதாகும். மனித உரிமைகள் எழுச்சியுரு கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், இந்தியாவின் மிக உச்ச அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது சரியானதுதானா? இதுகுறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் எழுப்பப்பட வேண்டும்.

குடும்பத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறையைத் தடுக்கும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் (Act 430/2005) நிறைவேற்றப்பட்ட இந்தியாவில், இந்தியாவின் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது எப்படி?

நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்திற்கு மேலாக இப்படி ஒரு தீர்ப்பா? இதுகுறித்து மக்கள் மத்தியில் சர்ச்சை வெடித்துக் கிளம்பவேண்டும்.

கணவன், மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் ஒரு காலத்தில் மனுதர்மத்தை எடுத்துக்காட்டி தீர்ப்பு வழங்கினார். காலம் ஓடினாலும் அந்தக் கருத்து வேறு ஒரு வடிவத்தில் மய்யம் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் இந்தத் தீர்ப்பு!

உடலால் மட்டுமல்ல, வார்த்தைகளாலும்கூட பெண்களைக் காயப்படுத்தக் கூடாது என்று இந்திய அரசு நிறைவேற்றிய சட்டம் கூட போதுமான அளவுக்கு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்படவில்லை.

எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட்டால் மட்டும் போதாது; அந்தச் சட்டத்தைப்பற்றி குடிமக்கள் அறிந்திருக்கப்படவும்வேண்டும். அதற்கு அரசுதான் உரிய முறையில் பிரச்சார ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

குடும்பக் கட்டுப்பாடுபற்றி எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் விளைவு சமூகத்தில் நல்ல அளவு மாற்றத்தைக் கொண்டு வந்ததே! அதே அணுகுமுறை இதுபோன்ற சட்டங்களைப் பொறுத்தும் பின்பற்றப்படவேண்டியது மிக அவசியமாகும்.

இந்து சமூக அமைப்பில் மாமியார் மருமகள் உறவு என்பது எலியும் _ பூனையுமாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நாமும் மருமகளாகத்தான் இருந்தோம் என்ற நினைப்பு சில மாமியார்களுக்கு வருவதில்லை என்பது கசப்பான உண்மைதான்.

இது பெண்கள் கல்வி அறிவு பெற்ற காலம். உலக வெளிச்சத்தில் அவர்களின் சிந்தனைகள் விரிந்து பரவி வீரியம் பெற்றிருக்கின்றன. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று சொன்னதெல்லாம் மலையேறிவிட்டது என்ற போதிலும், நீதிமன்றங்களில் சில வழக்குகளைப் பார்க்கும்போது வேதனையாகவே உள்ளது.

துணை வேந்தர்களாக இருக்கக் கூடியவர்களே கூட மருமகளைத் துன்புறுத்துவது, வரதட்சணை கேட்பது போன்ற செய்திகள் வெளிவரத்தான் செய்கின்றன.
நம் நாட்டுத் தொலைக்காட்சிகளும் மாமியார் மருமகள் என்ற உறவைக் கொச்சைப்படுத்தி, சதா சண்டையிடும் களமாகக் குடும்பங்களை உருவகப்படுத்திக் காட்டுகின்றனர்.
ஒரு கட்டத்தில் தன் மகன், மனைவி பேச்சைக் கேட்டு ரொம்பவும்தான் ஆடுகிறான் என்று குடும்பத்தின் தலைவி புலம்புவது போன்ற காட்சிகள்!

எந்த உறவாக இருந்தாலும் அதில் மனிதத் தன்மைகளும், ஒருவர் சுயமரியாதையை மற்றவர் மதிக்கும் பாங்கிலும், அறிவு வழிகாட்டி அன்பு அரவணைக்கும் முறையிலும் அமைந்தால் அதுதான் பகுத்தறிவுள்ள மனிதனின் உயர்ந்தபட்ச மதிப்பீடாகும்.

நீதிமன்றங்கள் இதற்கு வழிகாட்டும் மய்யங்களாக இருக்கவேண்டுமே தவிர, குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும் விதைகளைப் பயிரிட முனையக்கூடாது!

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மீது மத்திய அரசு மேல்முறையீடு செய்யவேண்டியது அவசியமாகும்.
இல்லாவிட்டால், மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்கள்பற்றிய பிரச்சினை பெரிய அளவுக்கு வெடித்து, வீட்டிலும், நாட்டிலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

இதுகுறித்து திராவிடர் கழகம், மகளிரணி விவாதித்து தக்க முடிவுகளை மேற்கொள்ளும்!

-------------------"விடுதலை" தலையங்கம் 8-8-2009

1 comments:

bandhu said...

இப்போது தீர்ப்பு கொடுத்தவர் பிராமணரா? இல்லை என்று நினைக்கிறேன். இருந்தால் நீங்கள் சொல்லியிருப்பீர்களே :-):-)