Search This Blog

28.8.09

வீரமணி போட்ட போடு! சிக்கும் சாமியார்கள்!!
ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் போலி சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் கழகம் அதிரடிப் பொதுக்கூட்டத்தை நடத்தியது.

இதில் காரசாரமாக மைக் பிடித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

குறி சொல்வது, மந்திர மாயம் பண்ணுவது என ஏமாற்றுத் தொழிலில் இத்தனை நாள் ஆண்கள்தான் அதிகம் இறங்கியிருந்தார்கள். இப்போது அவர்களுக்குப் போட்டியாக இந்த மந்திர மாய ஏமாற்று பிசினஸில் பெண்களும் குதித்திருப்பதோடு, சாராயம் குடித்தும், சுருட்டு குடித்தும் ஆட்டம் போடுகிறார்கள்.

இங்கே கருப்பண்ணசாமியின் பெயரால் சுதா என்கிற பெண்மணி மது அருந்திவிட்டு குறி சொல்வதாக அப்பாவி பக்தர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இத்தகைய போலிச் சாமியார்கள் மீதும் போலி மந்திரவாதிகள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? 30 நாட்களுக்குள் காவல்துறை தனது நடவடிக்கையை ஆரம்பிக்கா விட்டால், திராவிடர் கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தை இங்கே நடத்துவோம் என்று கர்ஜனை செய்தார்.


இவர் குரலில் இருந்த தீவிரத்தின் சூடு மாவட்ட காவல்துறையைத் திகைக்க வைத்தது. இதன் விளைவு டி.எஸ்.பி. வைத்தியலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கங்கைராஜ் உள்ளிட்டோர் அடங்கிய காவல்துறை தனிப்படை 22 ஆம் தேதி மாலை, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் கருப்பண்ணசாமி ஆசிரமத்தை முற்றுகையிட்டு குபீரென உள்ளே நுழைந்தது. அப்போது பெண் சாமியாரான சுதா ஒரு ஃபுல் மது பாட்டிலை கடக் கடக் என வாயில் சரித்துக் கொண்டு, பக்தர்களே கவலைப்படாதீங்க. உங்க குற்றம் குறைகளைத் தீர்க்கத்தான் கருப்பணசாமி வந்திருக்கேன். உங்க பிரச்சினைகளைச் சொல்லுங்க என ஓங்காரக் கூச்சலோடு சொன்னதோடு, ஏய். சைடிஸ் சிக்கன்-எங்கடா? என்றார்.

அருகே பயபக்தியோடு நின்றுகொண்டிருந்த சுதாவின் அப்பா, சாமி. இதோ என சில்வர் வாளியை அவர் முன் நீட்ட அதிலிருந்து ஒரு சிக்கன் பீஸை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, பொங்கிப் பொங்கி அர்த்தமில்லாமல் சிரித்தார் சுதா.

அப்போது டி.எஸ்.பி. டீம் அவர் முன் போய் நிற்க, சட்டென சுதாவின் உடம்பில் இருந்த கருப்பணசாமி காக்கிச் சட்டைகளைக் கண்டு எஸ்கேப் ஆக, சர்வமும் ஒடுங்கிப்போய் பீதியோடு நின்றார் சுதா.

குறிகேட்க வந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு, ஏம்மா உன் மேல் புகார் வந்திருக்கே. மங்களம் அருகே உள்ள கலத்தம்பாடி அண்ணாமலைங்கிறவர் நீ ஏமாத்தினதா புகார் கொடுத்திருக்கார் என இன்ஸ்பெக்டர் ரமேஷ் சொல்ல,

அருகிலிருந்த சுதாவின் அப்பா துரை, அய்யா, மூணு நாளைக்கு முன்னாடியே கருப்பண்ணசாமி போலீஸ் வந்து விசாரிக்கும்னு சொல்லுச்சு, அது நடந்திருச்சி என்று அலற,

அப்பனும் மகளும் ஜெயில்ல களி திங்கப் போறதையும் உங்க கருப்பண்ணசாமி சொல்லியிருப்பாரே என மற்றொரு இன்ஸ்பெக்டரான கங்கைராஜ் சொல்ல,

துரையோ, அய்யய்யோ, அப்படியெல்லாம் எங்களை ஜெயில்ல போட்றாதீங்க என வெடவெடத்தார். அருகே சுதா அடித்த மப்பெல்லாம் இறங்கிப் போன நிலையில் முகம் வெளிறி நின்றார்.

சரி. சரி. வாங்க என சுதாவையும் அவரது அப்பா துரையையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்தனர். அங்கு சுதா, என் உடம்பில் கருப்பண்ணசாமி இறங்கினா, நான் என்ன பண்றேன்னே எனக்குத் தெரியாது. ஒரு நாளைக்கு 5 ஃபுல் மது. 20 கட்டு சுருட்டுன்னு உள்ளே போகும். நானா எதுவும் பண்ணலை என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

புகார் கொடுத்த விவசாயி கலத்தம்பாடி அண்ணாமலை, எங்க தோட்டத்தில் தண்ணி வறண்டு போச்சு, குறி கேட்க வந்தேன். 5 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கிட்டு, ஈசான மூலையில் எங்க கிணறு தோண்டினாலும் தண்ணி பொங்கி வரும்னு சொன்னாங்க. அங்க பல இடங்களில் தோண்டியும் தண்ணிவரலை. அதனால், கொடுத்த பணத்தைக் கேட்டேன். சாமியார் சுதா கொடுத்த பணத்தைத் தர முடியாதுன்னு சொல்ல, அவங்க அப்பா துரை அரிவாளை காட்டி மிரட்டினார். அதான் புகார் கொடுத்தேன் என்றார் எரிச்சலான குரலில்.

சுதா மீதும் அவர் அப்பா துரை மீதும் மோசடி மற்றும் மிரட்டல் புகாரை பதிவு செய்த காக்கிகள், இருவரையும் வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர். கைதான சுதாவுக்கு ராஜா என்ற கணவரும் அய்ந்து, ஏழு படிக்கும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த துரையின் அண்ணன் கனகராஜ், அதிமுக நகர செயலாளரா இருக்கார். இவரோட ஆளுங்கதான் கருப்பண்ணசாமி ஆசிரமம் இருந்த இடத்தில் ஏற்கெனவே ஓம்சக்தி ஆஸ்ரமம் என்ற பெயரில் தியான சாலை நடத்தி வந்தவங்களை விரட்டிவிட்டு, ஆசிரமத்தை துரையிடம் ஒப்படைச்சாங்க. துரை, தன் மகள் சுதாவுக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்து குறி சொல்ல வச்சி, வருமானம் குவிக்க ஆரம்பிச்சார். சுதா குறி சொல்ல ஆரம்பிச்சி 2 மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள தி.க. வீரமணியால் மாட்டிக்கிச்சி என்றார் சுதாவின் நெருங்கிய உறவினர் ஒருவரே.

இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிவபாபு, இந்த நடவடிக்கையை நாங்க வரவேற்கிறோம். இது போன்ற போலி சாமியார்களை களை எடுத்தாதான் உண்மையான துறவிகளின் மதிப்பு வெளிப்படும் என்கிறார் உற்சாகமாக.

இந்து முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கரோ, திராவிடர் கழகத்தின் நிர்பந்தத்தால் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியல்ல. இந்த சுதா மட்டுமல்ல, கிரிவலப் பாதை முழுக்க நிறைய போலி சாமியார்கள் இருக்காங்க. பலர் கோயில் இடத்தை ஆக்ரமிச்சிருக்காங்க. இவைகளையும் கிரிவலப் பக்தர்களின் நலனுக்காக அரசு கவனிக்கனும் என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

கிரிவலப் பாதையில் பக்தர்களை கிறுகிறுக்க வைக்கும் டுபாக்கூர் சாமியார்கள் யார், யார் என்பதை அறிய, பவுர்ணமி அல்லாத நாளிலேயே நாம் கிரிவலம் வந்தோம்.

அப்போது, வள்ளலார் பெயரிலான ஆசிரமத்தில் (?) அருள் மணி அடிகளால் என்ற பெயரில் ஒரு வாட்ட சாட்ட நபர் காவி சகிதம் குறி சொல்லிக் கொண்டிருந்தார். ஆத்தா, இந்த பொண்ணுக்கு வரன் நல்லவனான்னு சொல்லு ஆத்தா, சொல்லாட்டி விடமாட்டேன் என நவசக்தி அம்மனை அவர் மிரட்டிக் கொண்டிருக்க அம்மன் சிலை மேலே அடுக்கப்பட்ட பூ ஒன்று காற்றில் உதிர்ந்தது.

ஆஹா, அம்மா பலன் சொல்லிட்டா என எதிரே பவ்யமாய் நின்ற குடும்பத்திடம் தட்சணை வாங்கினார். இவருக்கு ஊர் செங்கம். இவர் மேல் தார்ப்பாய் திருடிய கேஸ் இருக்கு. இவருக்கு மாஜி புதுவை முதல்வர் ரெங்கசாமி, முன்னாள்பிரதமர் தேவேகவுடா, தற்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா போன்ற பிரபலங்கள் பக்தர்கள். வி.அய்.பி.களை ஏமாத்துற விசித்திர சாமியார் இவர் என்கிறார் நமது லோக்கல் நண்பர்.

அடுத்து துர்வாசர் கோயில் அருகே சடாமுடி, தாடியோடு மை போட்டு குறி சொல்லிக் கொண்டிருந்தார் சடைசாமி. உன் காணாமல் போன பம்பு செட்டை தேடாதே. உன் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு , போ, போ என ஒரு பக்தரிடம் 500 ரூபாயைக் கறந்து கொண்டிருந்தார்.

ராதா அமமாள் என்பவர் நடத்தும் ஆசிரமத்துக்குள் நம்மை அனுமதிக்க மறுத்தனர். ஆனால் ஃபாரின் ஜோடிகள் மட்டும் உள்ளே சென்றன. உள்ளே ஆட்டம், பாட்டம் என ஒரே சத்தம் கேட்க, உள்ளே கிக்கான சமாச்சாரங்கள் நடக்கும். ஒரு இளைஞனை அந்த அம்மா வசியம் பண்ணி வச்சிருக்கிறதா மதுரை தம்பதிகள் 2006 இல் புகார் கொடுத்தாங்க. வந்த காக்கிகளை கரன்ஸியால் வாயடைச்சிட்டார் அம்மையார் என்று குறிப்புரை தந்தார் ஏரியா பக்தர்.

இவர்களைப் போலவே பஞ்சமுக தீர்த்தம் அருகே அடிக்கடி நள்ளிரவு பூஜை நடத்தும் மணிசாமி, குட்டிச் சாத்தான்களை ஏவுவதாக பீலா விடும் பிச்சைசாமி, வாழ்வின் தடைகளை நீக்குவதாக பூஜை பண்ணும் பரிகார சித்தர், மூலிகை இலைகைளைக் கொடுத்து அருள் சொல்லும் முடிசாமி, செய்வினை செய்வதோடு கந்துவட்டி புகாருக்கு ஆளான வேதவித்து சித்தர், விபூதி பாக்கெட்டுகளை விற்றே இடம் வாங்கி மடம் கட்சிய சிவசித்தர், தான் பிடிக்கும் சுருட்டால் பக்தர்களுக்கு சூடு வைத்து ஆசீர்வாதம்(?) பண்ணும் கொல்லிமலை சித்தர், பேய் பிடித்தவர்களை சாட்டையால் அடித்து விளாசும் மலையாள மாந்த்ரீகர், சின்ன சின்ன கற்சிலைகளைக் கொடுத்து-ஆயிரக்கணக்கில் வசூலிக்கும் நாடி சித்தர். ஓம் உலகநாதன் என கிரிவலப் பாதை முழுக்க சிறுசிறு போலி சாமியார்கள் கடை விரித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பக்தர்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள் காவல் துறையினர்தான். மாவட்ட எஸ்.பி. பாண்டியனோ, ஆக்ஷன்களை ஆரம்பிச்சிட்டோம். இனி பாருங்க என மீசையை முறுக்கி விட்டபடி சிரிக்கிறார்.

---------------------- நன்றி: நக்கீரன், 29.8.2009

2 comments:

ttpian said...

இந்தியா:சாயம் வெளுத்துப்போன சனநாயகப்போர்வை
எனது கட்டுரையை:
படிக்க
www.adhikaalai.com

அருண்சங்கர் said...

வீரமணி போன்ற ஒரு ஒழுக்க சிலரும், நேர்மையாளரும் இருக்கும் பொது இவ்வுலகில் மக்கள் யாவரும் நலமாக வாழ்வார்கள். மக்கள் நலனே தன் நலனாக கருதும் வீரமணி அவர்கள் வாழ்க. ஏதோ ஒரு படம்... ஞாபகமில்லை... கவுண்டமணியை அண்ணன் எவ்வளவு நல்லவரு, நேர்மையானவரு என்று புகழ்வார் செந்தில். அதை கேட்டு சுற்றி இருக்கும் கூட்டம் வாய் பொத்தி சிரிக்கும். இதை பார்த்த கவுண்டமணி, தனது பாணியில் 'சரி', 'சரி' என்று கூறி பேச்சை மாற்றுவார். எனக்கென்னவோ இந்த கட்டுரையை படிக்கும்போது இந்த நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.