Search This Blog

19.8.09

ஆன்மிகம் முற்றினால் அது பைத்தியம்தான்!
மனநோய்!


நினைவிருக்கிறதா? 2005 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி (அய்.ஜி.) டி.கே. பாண்டே! நான் ஆண் அல்ல; ஒரு பெண்; என்னுள் பெண் இருக்கிறாள் என்று கூறி அலுவலகத்துக்கே பெண் உடையில் வந்து கலக்கினாரே நினைவிருக்கிறதா? கடைசியில் வேலையை விட்டே கல்தா கொடுக்கும் பரிதாப நிலை ஏற்பட்டது.

இப்பொழுது அதே மாநிலத்திலேயே இன்னொரு கிறுக்கர் கிளம்பியிருக்கிறார். இப்பொழுது அரசு வேலையில் இல்லை. ரயில்வேயில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்; பெயர் சக்சேனா. வயதோ 72.

அன்று போலீஸ் அய்.ஜி. தன்னை ஒரு பெண் என்றார், இவரோ நான்தான் ராதா; என் மணாளர் கோபாலகிருஷ்ணன் என்று கூற ஆரம்பித்தார். ஏதோ விகடம் செய்கிறார் என்று தொடக்கத்தில் நினைத்தார்கள். நாள் ஆக ஆக, பைத்தியம் முற்றிவிட்டது. குடும்பத்தினர்க்கோ அதிர்ச்சி!

அவர் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவர் என்று குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரியும்தான்; ஆனாலும், அது முற்றிப் போய் பைத்தியம் ஆகும் அளவுக்கு ஆகிவிடும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

வழக்கமாக அவர் அணிந்து வந்த பைஜாமா, குர்தா வகைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு பெண்ணைப்போல அலங்கரித்துக் கொள்கிறாராம்.

கிருஷ்ணன் பொம்மைமுன் உட்கார்ந்து அப்படியே நெக்குருகிப் போகிறாராம். பஜனை பாடுகிறாராம். சதா, கிருஷ்ணா, கிருஷ்ணா, என் மணாளா! என்று புலம்பித் திரிகிறாராம்.

ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த என்.டி. ராமராவ் இப்படித்தான் சோதிடன் பேச்சைக் கேட்டு புடவை கட்டிக்கொண்டார். இடது காதில் லோலாக்கு மாட்டிக் கொண்டார். தலைமைச் செயலக அலுவலகத்தின் வாயிலையே இடித்து வேறு திசையில் வைத்தார். கடைசியில் என்னாயிற்று? பிள்ளை பிழைத்த பாடில்லை; விளக்கெண்ணெய்க்குத்தான் கேடாக முடிந்தது. அரசியலிலும் தோல்வி முகம்தான் இறுதி காலகட்டத்தில்.

ஒன்று மட்டும் உறுதியான உண்மை! ஆன்மிகம் முற்றினால் அது பைத்தியம்தான்! பக்தி என்பதே ஒரு வகையான மன நோய்தானே!

திருப்பாவை பாடியதாகக் கூறப்படும் ஆண்டாள்கூட இந்த ரகத்தைச் சேர்ந்தவர்தான். பிஞ்சிலேயே முற்றி விரகதாபம் எடுத்து அலைந்து திரிந்த பெண் அவள்.

என் மணாளன் அரங்கன் என்று உருண்டு புரண்டாள். கடவுளாகிய அரங்கனைப் புணரவேண்டும் என்ற ஆசையாம்! புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து, குமைத்துக் குதூகலித்து... (போதும் இத்துடன்) பார்ப்பன மதத்தின் பக்தி கிறுக்கு என்பது எத்தகைய ஆபாசக்கடல்! (ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் இன்னும் எவ்வளவோ!)

கடவுளைத் தந்தையாகச் சொல்கிறார்கள்; அப்படி என்றால், ஆண்டாளுக்கு அரங்கன் தந்தைதானே! அந்தத் தந்தையையே புணர ஆசைப்பட்டாள் என்றால்... ஆம், இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ!


இவ்வளவு மோசமான பெரிய ஆபாசத்தை ஆச்சாரியாராலேயே (ராஜாஜியாலே) ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, ஒரு போடு போட்டார் ஆண்டாள் என்பதே கிடையாது. அது ஒரு பொய் என்றார்.

புராணம் பொய்யென்று கருஞ்சட்டைத் தோழர்கள் சொன்னால் கோபம் கொப்பளிக்கும் _ ஆச்சாரியாரே கூறிவிட்டாரே, என்ன பதில்?

---------------- மயிலாடன்அவர்கள் 19-9-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: