Search This Blog

28.2.10

ராம ராம என்றோ ஓம் நமசிவாய என்றோ அதிகம் எழுதினால் பலன் கிடைக்குமா?

ஓம்

பிரபலமான ராமவங்கி போல காசியில் ஓம் நமசிவாய வங்கி செயல்பட்டு வருகிறதாம். ஆண்டு தோறும் சிவராத்திரியன்று இந்த வங்கி திறக்கப்படுமாம். வடமாநிலப் பக்தர்களிடையே இந்த வங்கி புகழ் பெற்று விளங்குகிறதாம்.

சென்னையில் ராமநாம வங்கி உள்ளது. ராம நாமத்தை எழுதி அதை சேமித்து வைப்பது இதன் பணி.

ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று இந்த வங்கி திறக்கப்படும். ஆண்டு முழுவதும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை எழுதி வைத்த நோட்டுப் புத்தகங்களை பக்தர்கள் இங்கு கொண்டு வந்து கொடுப்பார்கள்.

இதற்காக நோட்டுப் புத்தகங்களை பக்தர்கள் விலைக்கு வாங்கவேண்டியது இல்லையாம். கோவில் நிருவாகமே அவற்றைக் கொடுக்குமாம்.

எவ்வளவு அதிகமாக எழுதுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு மகாதேவரின் அருள் கிடைக்குமாம்.

இப்படி தினமலர் (22.2.2010) ஒரு செய்தியை வெளியிட்டது.

கடவுள் மீது மக்களுக்கு இயல்பாகப் பக்தி வருவதில்லை. சிவ சிவ என்றும் ராம ராம என்றும் எழுதினால் பகவான் அருள் கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி இது போல எழுதச் செய்து பக்தியைத் திணிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்களை (Imposition) இப்படி தண்டிப்பது உண்டு அல்லவா? அதே யுக்திதான் இதிலும்.

அதிலாவது பலன் உண்டு. இதில் நேரக்கேடும், புத்திக்கேடும்தான் உண்டு. ராம ராம என்று வைணவர்கள் எழுதிப் பக்தியைப் பரப்புவதைப் பார்த்து, சிவபக்தர்கள் சும்மா இருக்க முடியுமா? அதற்குத்தான் ஓம் நமசிவாய வங்கி எல்லாம் போட்டிக் கடைகள்தான்.

ராம ராம என்றோ, ஓம் நமசிவாய என்றோ அதிகம் எழுதினால் பலன் கிடைக்கும், பகவான் அருள் கிடைக்கும் என்றால் அரசாங்க அலுவலகங்களையெல்லாம் இழுத்து மூடிவிட்டு, அந்தக் கட்டடங்களையெல்லாம் பஜனை மடங்களாக்கி, மக்களைக் கூட்டி வைத்து இந்தச் சுலோகங்களை எழுதச் செய்யலாமே!

ராமன் கோயிலைக் கட்டவேண்டும் என்று ஏன் கோர்ட்டுக்குப் போகவேண்டும்? குந்திய இடத்தில் இருந்து கொண்டு ராம ராம எழுதிச் சாதிக்க வேண்டியதுதானே! ஏன் இரட்டை வேடம்?

சரி, ஓம் என்று எழுதச் சொல்கிறார்களே. அதன் பொருள் என்ன? வெளியே சொன்னால் வெட்கக்கேடு!

இந்து மதத்தில் தாந்திரீகம் என்ற வழிபாடு உண்டு. ஆண்- பெண் புணர்ச்சியின் குறியீடே இந்த ஓம் ஆகும். யோகம், போகம் இரண்டும் உருகிக் கலக்கும் உச்சக்கட்ட நிலையை அடையாளப் படுத்துவதுதான் இந்த ஓம்.

ஒரு ஆறுதல் இந்த வழிபாடு உலகில் வேறு பல நாடுகளிலும் உண்டு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் (ஆதாரம்: கோல்டன் எஃப்டி கொலாபவாலா எழுதிய தந்திரா - காமம் சார்ந்த வழிபாடு (Tantra the Erotic Cult எனும் Orient Paper Backs நூல்).

உயிர்களில் ஆண் பெண் சேர்க்கை புணர்ச்சி என்பது இயற்கையானது. இரகசியத்தில் நடப்பதைப் பகிரங்கப்படுத்தி, உருவங்கொடுத்து, பக்தி மயமாக்குவது மதத்தின் ஆபாசத்தையும், நாகரிகமற்ற நிலையையும்தானே காட்டுகிறது? இந்தக் காட்டு மிராண்டிக் காலச் சிந்தனையை 2010 லும் புதுப்பிப்பது நாகரிகம்தானா?

இந்த அசிங்கத்தை எழுதி, சேர்த்து சேமித்து வேறு வைக்கிறார்களாம். அதற்குப் பெயர் வங்கியாம்! ஓ, அசிங்கமே, உன் பெயர்தான் இந்து மதமா?

---------------- மயிலாடன் அவர்கள் 28-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

குறிப்பு: 5.6.1990 அன்று நெல்லை அம்பாசமுத்திரத்தில் கழகத் தோழர் சுப்பிரமணியம் ஓம் என்பதற்கான விளக்கத்தை தட்டியில் எழுதி வைத்ததற்காக அவர்மீது காவல்துறை வழக்குப் புனைந்தது. மேற்கண்ட ஆத-ரத்தை வழக்கறிஞர் பாண்டி-வளவன் நீதிமன்றத்தில் எடுத்துக்-காட்டி வழக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்-தக்கது.

தமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்?மதமும் இலக்கணமும்:

உதாரணமாக மக்கள், தேவர், நரகர், உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம்தானே அதிகமாகயிருக்கின்றது?

மேல் நாட்டு இலக்கியம்

மேல்நாட்டுப் புலவர்கள், மேல் நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது? இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத் தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்.

மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ் நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்தமின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக் கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.

மலத்தில் அரிசி பொறுக்கலாமா? கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ் வளவு இழிவாகக்குறிப்பிடப்பட்டிருக் கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட் டிருக்கிறது. சுயமரியாதையை விரும்பு கிறவன் எப்படி கம்பராமாயண இலக்கி யத்தைப் படிப்பான்? இன்று கம்பராமா யணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கடவுளால் மொழி உயராது தமிழ் மொழியின் பெருமை பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்டபாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கினதாலும், தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த மொழி தமிழ் என்றால் வைணவனும் முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக்காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

இந்திப் புரட்டு

இன்று தமிழ் நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்தியப்பாஷை ஆகவேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்றுவருகிறார்கள். கோர்ட்பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தியமயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பாலோர்க்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல்வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

செத்த பாம்பு

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள், ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜுகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும், உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழாபிமானம் தேசத்துரோகம்!

தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றொல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் கூட்டத்துக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள். தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ் மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சவுகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்? மாறுதல் அவசியம்

மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன; எழுத்துகளில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துகளை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துகள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் (ஷிஜீமீறீறீவீஸீரீ) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துகளையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துகளை யேற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்றமாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.

தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவராவது அம்முயற்சிக்கு ஆதரவளித் தவர்கள் அல்லர்.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்செய்வது? என்னைக் குறைகூறவோ, திருத்தவோ, முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை. ஆனாலும் நான் அம்முறையிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.

இவைகளை யெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.

எங்கும் திருநாள்

எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது, அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.

தீபாவளி போன்ற மூட நம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த்திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்பவேண்டும். நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியும், மாரிப் பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்யவேண்டுகிறேன்.

------------------தந்தை பெரியார் - " விடுதலை" 1-5-1949

அறிவாயுதம் தேவையா? அக்கிரகார அடிமை வாழ்வு தேவையா?

எந்த வழி தேவை?

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 23.2.2010 சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயகுமார், செங்கோட்டையன், பொன்னையன் மற்றும் பாலகங்கா, சேகர்பாபு எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன் ஆகியோர் வெள்ளித்தேர் இழுத்தனர். சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் பா. வளர்மதி தலைமையில் 62 பெண்கள் தீச்சட்டி எடுத்து வழிபட்டனர். (மாலைமலர் 23.2.2010)

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேட்டி (10.2.2010)

அந்தப் பேட்டி ஒன்று போதும் பகுத்தறிவு இயக்கமான திராவிட இயக்கத்தில் சாதாரண உறுப்பினராகக்கூட இருக்கத் தகுதியற்றவர் இந்த அம்மையார் என்பதற்கு

நீங்கள் விதியை நம்புபவரா என்பது கேள்வி; பதில் பளிச் சென்று வருகிறது.

ஆம், நான் விதியை நம்புகின்றேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்துப் பார்த்தது கூடயில்லை. நான் ஒரு முதல் அமைச்சர் ஆவேன் என்று கனவு கண்டதுகூட கிடையாது. ஆனால் அது நடந்திருக்கிறது. இத்தகைய வாழ்க் கைக்காக என்னை நான் தயாரித்துக் கொண்டதும் கிடையாது.

நான் சரியாகத் தமிழைப் படித்ததுகூட இல்லை. நான் படித்த பெங்களூர் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பயிற்று மொழியில்தான் படித்தேன். இரண்டாவது மொழி கன்னடம் அல்லது இந்தி என்ற போது நான் இந்தியை எடுத்துக் கொண்டேன். அதன்பின் சென்னை வந்தேன். இங்கும் இரண்டாவது மொழியாக இந்தியைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆனால் வீட்டில் ஆசிரியரை வைத்துத் தமிழைக் கற்றுக் கொண்டேன்.

ஒரு திராவிட இயக்கத்தின் தலைவராக வருவேன் என்று நான் கனவு கண்ட தில்லை என்று கடகடவென்று பதில் சொல்லியிருக்கிறார். இந்த நிலைகளையெல்லாம் எட்டியதற்கு அவர் தலையில் எழுதப்பட்ட விதிதான் தலையெழுத்துதான் காரணம் என்று திடமாகக் கூறுகிறார் நம்புகிறார்.

அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் அவரே சொல்லியிருக்கிறபடி ஒரு திராவிட இயக்கத்திற்குத் தலைவராக எப்படி இருக்கிறார்? எப்படி இருக்க முடியும்?

விதியைப்பற்றி தந்தை பெரியார் அவர்களின் கருத்தென்ன? அண்ணாவின் பெயரால் திராவிட இயக்கப் பெயரைத் தொற்றிக் கொண்டு இருக்கிறாரே அந்த அண்ணா விதியை நம்பியவரா, மதியை நம்பியவரா?

இந்தத் தலையெழுத்தையும், விதியையும் கூறிதான் இந்த நாட்டில் ஜாதி நிலை நாட்டப்பட்டது.

நீ தாழ்ந்த ஜாதியில் பிறந்தது உன் தலையெழுத்து! போன ஜென்மத்தில் செய்த பாவம்!! அவன் பிராமணனாகப் பிறந்தது அவன் விதி! போன ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம்! என்று பிறவி ஏற்றத் தாழ்வுக்கு நியாயம் கற்பித்த கூட்டத்தைச் சேர்ந்தவரல்லவா, அதனால் தான் விதியைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

ஆரியம் திராவிடத்தில் புகுந்ததன் பயன் இதுதான் போலும்! அந்தக் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? அண்ணா பெயரில் இருக்கும் நம் கட்சிக்கு அதுவும் ஒரு திராவிடக் கட்சிக்கு விதியை நம்பக் கூடியவரை தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டோமேயென்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டாமா?

புத்த மார்க்கத்தில் ஆரியம் ஊடுருவி அதனைப் புதைக்குழிக்கு அனுப்பியதுபோல திராவிட இயக்கத்தில் ஊடுருவி, அடிப்படைக் கொள்கை வேரையே பதம் பார்க்க கிளம்பி விட்டார் பார்ப்பன அம்மையார் என்பதை பகுத்தறிவோடு சிந்தித்தால் பட்டாங்கமாய் விளங்கிவிடுமே!

12 வயது சிறுவனாகத் துள்ளித் திரிந்த பருவத்திலேயே சிறுவன் ராமன் (பெரியாருக்கு அப்பொழுது அதுதான் செல்லப் பெயர்) தலை எழுத்து பற்றி சொன்ன கள்ளிடைக்குறிச்சிப் பார்ப்பனர் ராமநாதய்யருக்குப் பாடம் கற்பித்தவராயிற்றே!

பன்னிரெண்டு வயதிலேயே பகுத்தறிவு ஒளி பெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

அவர் பெயரை ஒரு பக்கத்தில் உச்சரித்துக் கொண்டும், அவர்தம் திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டும், தலைவிதியில் எனக்கு நம்பிக்கை உண்டு என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால் இது எவ்வளவு பெரிய திரிபுவாதம் கொள்கை மோசடி!

சரி அவர் கூற்றுப்படியே வினா தொடுப்போம். முதலமைச்சர் ஆனதற்கு அவரின் தகுதி உழைப்பு தொண்டு ஆகியவை காரணமில்லை அவரின் தலையெழுத்துதான் அதற்குக் காரணம், அப்படித்தானே?

தேர்தலில் தோல்வியைக் கண்டு மாஜி முதல் அமைச்சர் ஆனதற்குக் காரணம் தலைவிதிதான் என்று நினைத்துக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே!

பின் எதற்கு உப்புப் பெறாத பிரச்சினைக்கெல்லாம் போராட்டம் ஆர்ப்பாட்டம்?

எதற்கும் தலைவிதிதான் காரணம் என்றால் தேர்தல் தோல்விக்கு யார் யாரையோ, எதை எதையோ குற்றம் கூறுவானேன்? ஒரே வரியில் எல்லாம் விதிப்பயன் என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே!

பகுத்தறிவுக்கு இடமில்லாத, விஞ்ஞான மனப்பான்மை கிஞ்சிற்றும் பொறாத ஒருவர்தான் திராவிடக் கட்சியின் தலைவரா? ஒரு நாட்டுக்கான முதல் அமைச்சரா? இத்தகைய ஒருவர் முதல் அமைச்சராக இருந்தால் என்ன சொல்லுவார்?

பசி பட்டினி என்றால் பரதேசிகளே, பட்டினியாகக் கிடக்க வேண்டியது உங்கள் தலையெழுத்து, ஆண்டவன் அப்படி எழுதி விட்டான் உங்கள் தலையில்; நான் என்ன செய்யட்டும்? என்று என்று கூறிவிடுவாரோ!

வேலையில்லாத் திண்டாட்டமா? அதற்கு நான் என்ன செய்யட்டும்? ஆண்டவனாகப் பார்த்து அப்படி ஒரு திண்டாட்டத்தை உங்கள் தலையில் சுமத்தி விட்டான். சூத்திரதாரி ஆண்டவனே தவிர அவனால் ஆட்டுவிக்கப்படும் அப்பாவியாகிய நான் என்ன செய்ய முடியும்? என்று கைவிரித்து விடுவாரோ!

தலையெழுத்தா! அப்படியென்றால் என்ன? யார் தலையில் யார் எழுதியது? அப்படி சொன்னவன் யார்? அவனை இங்குக் கொண்டு வா, அவன் தலையில் நான் எழுதுறேன். உன் தலையெழுத்தை நான் மாற்றி எழுதுகிறேன் என்று சொல்லி ஏழை, எளிய பாட்டாளி மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பச்சைத் தமிழர் காமராசர் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவரா தலையெழுத்து பற்றியும் விதியைப் பற்றியும் நீட்டி முழக்குவது? தலையெழுத்தை நம்பி தாழ்ந்து கிடந்த மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஊட்டும் தலைவர்கள்தான் நாட்டுக்குத் தேவை

தலையெழுத்தை நம்பச் செய்து கழுத்தறுக்கும் தம்பிரான்கள் நமக்குத் தேவையில்லை. அடிமையாக இருந்ததுபோதும், ஆர்த்தெழு என்று சொல்லும் அய்யாவின் தொண்டர்கள்தான் நமக்குத் தேவை. அடிமைகளாக, ஊமைகளாக தலைவிதியை நம்பியவர்களாக தலைப்பிரட்டை வாழ்க்கைக்கு வழி காட்டும் வனிதாமணிகள் நமக்குத் தேவையில்லை. அண்ணா திமுக முன்னணியினரே, அருமைத் தொண்டர்களே, ஒரு கணம் சிந்திப்பீர்!

அறிவாயுதம் தேவையா_ அக்கிரகார அடிமை வாழ்வு தேவையா?

அய்யா வழி தேவையா _ அக்கிரகார வழி தேவையா?

அண்ணா வழி தேவையா -_ அவாள் வழி தேவையா?

சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை. சிந்திக்க வேண்டியது உங்கள் உரிமை!


ஜெயலலிதாவின் பார்வைக்கு...

சுயமரியாதை அகராதி

"அடுத்த ஜென்மம் என்பது முடிச்சுமாறிகள் பேச்சு

ஆரியர் சூழ்ச்சி அறிவுக்கு வீழ்ச்சி

இதிகாசம் என்பது மதிமோச விளக்கம்

உண்மையைச் சொல்ல ஒருபோதும் தயங்காதே!

ஊழ்வினை என்பது ஊக்கத்தைக் கெடுப்பது

கருமாந்திரம் என்பது காசு பறிக்கும் தந்திரம்

கல்லைத் தெய்வமென்று கற்பிக்க வேண்டாம்!

கோத்திரம் என்பது குலத்தைப் பிரிப்பது

சனாதன தர்மம் என்பது சண்டாள அதர்மம்

சாமி சாமி என்பது காமிகளின் உளறல்

சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டடி!

நிதியைக் கொடுப்பது நிதியைக் கெடுப்பது

தெய்வ வழிபாடு தேச மக்களுக்குக்கேடு

பார்ப்பனர்கள் என்போர் பகற்கொள்ளைக்காரர்கள்

புராணங்கள் என்பவை பொய்மைக் களஞ்சியங்கள்

பேதமென்பது வேதியருக்கணிகலம்

மகாபாரதம் என்பது பஞ்சமாபாதகம்

மடத்தலைவர்கள் மடமைத் தலைவர்கள்

மதக்குறி என்பது மடமைக்கு அறிகுறி

முக்தி முக்தி என்று புத்தியைக் கெடுக்காதே

விதி விதி என்பது மதியைக் கெடுப்பது

வேதம் என்பது சூதாய்ச் சொன்னது

ஜாதி வேறுபாடு ஜன சமூகக் கேடு

க்ஷேத்திரமென்பது சாத்திரப்புரட்டு"

-------------------------- குடிஅரசு 23.2.1936

மேற்கண்ட சுயமரியாதை அகராதியை அறிவாரா ஜெயலலிதா?

இவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கத்தில் அடிஎடுத்து வைக்கத் தகுதி உடையவர் ஆவார்.

விதியை நம்புகிறேன் என்பவருக்கு திராவிட இயக்கத்தில் இடம் ஏது?


---------------------"விடுதலை” ஞாயிறுமலர் 27-2-2010

26.2.10

தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் துப்பாக்கி ஏந்திய ஏந்தல்

இராமச்சந்திரனார்

சிவகங்கைச் சீமையிலே வசதி வாய்ப்புமிக்க குடும்பத்திலே பிறந்தவர் இராமச்சந்திர சேர்வை. அந்தக் காலகட்டத்திலேயே பி.ஏ, பி.எல். படித்தவர் என்றால், அதன் சிறப்பைப்பற்றி எடுத்துரைக்கத் தேவையில்லை.

சுயமரியாதை இயக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டராகப் பணியாற்றியவர். 1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த சேர்வை என்ற ஜாதி வாலை ஒட்ட நறுக்கி வீதியிலே வீசி எறிந்த செம்மல் அவர்!

சுயமரியாதை மாநாடுகளில் எல்லாம் பங்குகொண்டவர்; பலமாநாடுகளுக்குத் தலைமை வகித்தவரும்கூட!

நெல்லையில் சுயமரியாதை மாநாடு (21.7.1929); அம்மாநாட்டின் தலைவர் இவர்தான். அவருடைய தொலைநோக்குப் புத்தறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு:

உலகமெல்லாம் ஓர் அய்க்கிய ஆட்சி நாடாகும். உலகத்தில் உள்ள சொத்து கள், பூமிகள் எல்லாம் மக்களுக்குச் சொந்தமாகும்; மனித ஆயுள் இரட்டித்து விடும். ஒருவருக்கொருவர் அன்பும், நட்பும், கூட்டுறவும் கொண்டு மக்கள் சதா சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று கணித்த பெருமகன் இவர்!

தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் துப்பாக்கி வரை ஏந்திய ஏந்தலிவர். தாலுகா போர்டு தலைவராகவும் இருந்து அருந்தொண்டாற்றினார்.

எல்லாமே இவருக்கு தந்தை பெரியார்தான்! நீதிக்கட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு அன்றைய பிரதம அமைச்சர் முனிசாமி நாயுடு அவர்கள் அழைப்பு விடுத்தபோது, தந்தை பெரியார் அவர்களின் ஆலோசனையை ஏற்று பதவிப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் சுயமரியாதைத் தொண்டினை தந்தை பெரியார் பாட்டையில் தொடர்ந்த தொண்டறத்தின் இலக்கணம் இவர்.

தென் மாநிலச் சீமையிலே கொடிகட்டிப் பறந்த இந்தப் பெருமகனாரைக் காங்கிரசின் பக்கம் ஈர்க்கத் திட்டமிட்டனர்.

மதுரை வைத்தியநாதய்யர்தான் அந்தத் தூண்டிலைப் போட்டவர். அந்தச் சிவகங்கைச் சிங்கம் என்ன சொன்னது தெரியுமா? மனிதருள் ஏற்ற தாழ்வுகளைப் பிரதி பலிக்கும் சின்னமான பூணூலைத் தாங்கள் அகற்றி னால் நாங்கள் காங்கிரசில் சேருகிறோம் என்று பொறி பறக்கப் பதிலடி கொடுத்தார்.

இந்தத் தன்மான இயக்கத் தளபதி 49 வயதிலேயே இதே நாளில் பிப்ரவரி 26 இல் (1933) கண் மூடினார் என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

அவர் மறைவு குறித்து தந்தை பெரியார் கூறிய ஒன்றே அந்தப் பெருமகனாரின் பெருமைக்குரிய சாசனமாகும்.

தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும், மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின்வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது மிகமிக அரிதேயாகும் என்றாரே அய்யா! எத்தகைய சீலர் அவர். இவருடைய அருமை மகள்தான் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சுயமரியாதை மூதாட்டி சிவகங்கை இலக்குமி அம்மாள் ஆவார்கள். இவரின் பிரகடனப்படுத்தப்பட்ட பொன்மொழி என்ன தெரியுமா? இந்தக் கையால் எந்த ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுக்கமாட்டேன்! என்பதுதான்!

--------------- மயிலாடன் அவர்கள் 27-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

ஜாதி மறுப்பு-விதவை மறுமண ஏற்பு விழா

ஜாதி மறுப்பு-விதவை மறுமண ஏற்பு உடுமலை வடிவேல் - கி.மணிமேகலையைப் பாராட்டி தமிழர் தலைவர் பேச்சு

பெரியார் வலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் உடுமலை வடிவேல், கி.மணிமேகலை வாழ்க்கை ஒப்பந்த விழாவை ஜாதி மறுப்பு, விதவை மறுமண விழாவாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடத்தி வைத்தார்.

ஜாதி மறுப்பு, விதவை மறுமணம் ஆகியவைகளை அய்யா சொன்னார்கள். நாம் நமது மாநாடுகளில் கூட பத்து கட்டளைகளை உறுதிமொழியாக ஏற்பதுண்டு. அதை உடுமலை வடிவேல் அவர்கள் தெளிவாகக் கடைப்பிடித்து இருக்கிறார் என்று தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் பெரியார் திடலில் நடைபெற்ற உடுமலை வடிவேல்_-கி.மணிமேகலை ஆகியோரின் இணையேற்பு விழாவில் குறிப்பிட்டு விளக்கவுரையாற்றினார்.

வலைக்காட்சி இயக்குநர் வடிவேல்

உடுமலைப்பேட்-டையைச் சேர்ந்த ஓ.வேலுசாமி, வே.அழகியம்மாள் ஆகியோரின் மகனும், இயக்கத் தோழரும் பெரியார் வலைக்காட்சியின் நிகழ்ச்சி இயக்குநருமான உடுமலை வடிவேல், நாகர்கோவிலைச் சேர்ந்த கிருஷ்ணன், கமலம் ஆகியோரின் மகள் கி.மணிமேகலை ஆகியோரின் இணை ஏற்பு விழா 23.2.2010 செவ்வாய்க்கிழமை அன்று பெரியார் திடலில்உள்ள மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை வழங்கினார். பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் மாநில அமைப்பாளரான திருமகள் இறையன் மணமக்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். முன்னிலை வகித்த கழக பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை மணமக்களை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து பல்வேறு தவிர்க்க இயலாத பணிகளுக்கிடையே வந்திருந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று இணை யேற்பு விழாவை நடத்தி வைத்து உரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

அவர் தனது வழிகாட்டும் உரையில், பெரியார் திடல் குடும்பத்தில் இருந்து உடுமலை வடிவேல் மணவிழாவை ஏற்கிறார் என்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே எப்படி திருமகள் இந்த மணவிழாவிற்கு காரணமோ, அதே போல அங்கே என்.ஆர்.சந்திரன் காரணமாக இருந்து இந்த திருமண விழாவை பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் மூலமாக ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். இது நல்ல முயற்சி, பாராட்டத் தகுந்த முயற்சி, திருமகள் அம்மையார் சொன்னார் உடுமலை வடிவேல் எவ்வளவு தெளிவாக எனக்கு விதவைப் பெண்தான் வேண்டும்; அதுவும் குழந்தையுடன் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி என்று கருதி இந்த மணவிழாவை ஏற்றிருக்கின்றார். எத்தனை பேருக்கு இந்தத் துணிச்சல் வரும். அவர் குறிப்பிட்டதைப் போலவே , குழந்தையுடன் கூடிய விதவை மறுமணம், ஜாதி மறுப்பு என்று இந்த இணையேற்பு நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருக்கிறது. ஜாதி மறுப்பு, விதவை மறுமணம் ஆகியவைகளைப் பற்றி அய்யா அவர்கள் சொன்னார்கள்.

மாநாடுகளில் உறுதிமொழிகள்

நமது மாநாடுகளில் கூட உறுதிமொழியாக பத்து கட்டளைகளை தவறாமல் எடுத்துக்கொள்வதுண்டு. அதை உடுமலை வடிவேல் கடைப்பிடித்துக்காட்டி உள்ளார். மேலை நாடுகளில் விதவைகள் இருக்கின்றனர். ஆனால், விதவைத் தன்மை அங்கு கிடையாது. ஆங்கிலத்தில் ‘widow’ என்று பெண்ணைக் குறிப்பது போல ‘widower’ என்று ஆணுக்கும் இருக்கிறது. ஆனால், இங்கே கைம்பெண் என்ற வார்த்தைதான் உண்டு. ஆணுக்கு அந்த நிலை கிடையாது. இது எப்படி வந்தது, மதச்சிந்தனையாலும், கடவுள் சிந்தனையாலும் இந்த மூடநம்பிக்கையாலும் வந்தது.

மனச்சுமைக்கு ஆளாவது

சமுதாயத்தில் முதலில் மனச்சுமைக்கு ஆளாவது பெண் என்றால், அதைவிட மனச்சுமைக்கு ஆளாவது பெற்றோர்தான். உடுமலை வடிவேலை பாராட்டுவதைவிட மணப்பெண்ணின் பெற்றோரைத் தான் முக்கியமாகப் பாராட்ட வேண்டும். பல நேரங்களில் பெற்றோர்கள்தான் தடையாக இருக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக

ஆகவே, இருவரும் எந்தவிதமான மனவேறுபாடோ மாறுபாடோ இல்லாமல் அன்பாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும். வாழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று வாழ்த்திப் பேசினார்.

தமிழர் தலைவர் உரைக்கு முன்னதாகப் பேசிய பேராசிரியர் மு.நீ.சிவராசன், சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றியும் மக்களின் சிறப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டு பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய இனமான நடிகரும் மாநில கலைத்துறை அமைப்பாளருமான மு.அ.கிரிதரன் ஜாதி மறுப்புத் திருமணத்தின் அவசியம் பற்றி பேசினார். நிகழ்ச்சியை பிரின்சு என்னாரெசு பெரியார் நெறிப்படுத்தினார்.

மோதிரங்கள் அணிவிப்பு

மணமக்கள் இணையேற்பு உறுதிமொழி ஏற்றவுடன் நாகர் கோவில் பெரியார் பெருந் தொண்டர் மணமக் களுக்கு அன்பளிப்பாக இரண்டு மோதிரங்களையும் பொன் நகையும் அளித்திருந்தார். அதை மணமக்கள் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில் அணிவித்துக் கொண்டனர். மணமகன் பொன்நகையை மணமக்களுக்கு அணிவித்தார். மணமகன் சார்பில் வே.திருமூர்த்தி, ஆறுமுகம் ஆகியோரும் மற்றும் இயக்கத்தோழர்களும், மணமகள் சார்பில் அவரது பெற்றோர் கிருஷ்ணன், கமலம் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

திராவிடன் நலநிதியில் ரூ.3000 மணமக்கள் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதே சமயம், தலைமை நிலையச் செயலாளரும் மணமக்களுக்கு திராவிட நலநிதியில் ரூ.3000க்கான வைப்பு நிதி சான்றிதழை வழங்கினார்.

தொடர்ந்து, பெரியார் திடலின் மேலாளர் ப.சீதாராமன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வீ.குமரேசன், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கோபால், இனமான நடிகர் மு.அ.கிரிதரன் ஆகியோர் மணமக்களுக்கு அன்பளிப்பு அளித்தனர்.

தோழர்கள் க.பார்வதி, தங்கமணி, வெற்றிச்-செல்வி, பண்பொளி, கண்ணப்பன், இசையின்பன், பசும்பொன், பெரியார் மாணாக்கன், சு.நயினார், இறைவி, மீனாட்சி, கண்ணம்மாள, பல்சர் பாபு, வை.கலையரசன், ராஜூ, ஜோதி, மணிவண்ணன், விழிவேந்தன், தஞ்சை பிரபாகரன், லாரன்ஸ், மகேஷ், தமிழ்மணி, வடசென்னை மாவட்ட செயலாளர் தி.வே.சு திருவள்ளுவர், ரவிக்குமார் ஆர்.சாமூண்டூஸ்வரி, ஆர்.சரோஜினி, ராஜசேகர், தாஸ் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

வெற்றிச்செல்வன்

நான்கு வயது பெரியார் பிஞ்சு வெற்றிச்செல்வன் கடவுள் மறுப்பில் தொடங்கி, மணமக்களுக்கு அறிவுரையும், நன்றியும் தெரிவித்து உரையாற்றினார்.


----------------"விடுதலை” 27-2-2010

25.2.10

தெய்வத்தின் குரலும் பெரியார் தந்த புத்தியும்!"கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்? அந்த மாநாட்டில் கலைஞரை எல்லோரும் புகழ்வார்கள்; மாநாட்டு மலரிலும் புகழ்வார்கள்;

தன்னைப் பிறர் பாராட்டுவதை - புகழ்வதைக் கேட்பதற்காகத்தான் மாநாட்டை கலைஞர் நடத்துகிறார். தமிழ் வளர்ச்சிக்கு அங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. ஆங்கில மொழி - இப்படி மாநாடு நடத்தியதாலா வளர்ந்தது?"

என்று துக்ளக் ஆசிரியர் சோ - அவருக்கே உரிய வயிற்றெரிச்சலோடு - அவரது பத்திரிகையின் 41வது ஆண்டு விழாவில் பேசியிருக்கிறார்.

அவர் நடத்திய அந்த ஆண்டு விழாவில் பேசியவர்கள் அனைவரும்

‘சோ’ - தைரியசாலி

விலைக்கு வாங்க முடியாதவர்

என்ற ரீதியில் அவரை வானளாவப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.

அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்துக் கேட்டுக் கொண்டுதானிருந்தாரே தவிர - "அய்யோ வேண்டாம்; போதும் புகழ்ந்தது" என்று தடுத்து விடவில்லை அவர்!

இப்படிப்பட்ட புகழுரைகளை - பாராட்டு களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே

ஆண்டுதோறும்

விழா எடுத்து

அதிலே

பேசுவோர் தனக்கு வழங்கும் பாராட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பவர்!

அப்படிப் பாராட்டுமளவிற்கு இந்த மகானுபவர் என்ன சாதனை நிகழ்த்திக் காட்டி விட்டார்?

- திராவிடர் இயக்கத்தை நையாண்டி செய்வது,

- புராண, இதிகாசங்களிலுள்ள

மூடத்தனங்களைப் பரப்புவது

- ஊழல் எதிர்ப்பு என்ற பேரால் -

ஜெயலலிதாவுக்கு தங்க முலாம் பூசுவது

போன்ற சமூக விரோத - மக்கள் விரோத - பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரான கழிசடைக் கருத்துக்களைப் பரப்புவது

என்பதைத் தவிர

வேறு என்ன சாதித்துவிட்டார்?

செம்மொழி மாநாட்டை அவர் கேலி செய்வது ஒன்றும் புதியதில்லை. சாதி வெறியரான அவர் - தனது சுயசாதி யினரின் அபிமானத்துக்குரிய சமஸ்கிருதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர். கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமி சிலைகளுக்கு சமஸ்கிருதம்தான் தெரியும், தமிழ் புரியாது என்பார். அதேசமயம் - தேவாரம் பாடிய மூவரிலிருந்து 63 நாயன்மார்களின் வரலாற்றை வாரா வாரம் எழுதுவார்! அவர் போற்றி எழுதும் - திருநாவுக்கரசரோ, ஞானசம்பந்தரோ, சுந்தரமூர்த்தி நாயனாரோ இறைவனை எந்த மொழியில் போற்றிப் பாடினார்கள்? தமிழில்தானே? திருஞானசம்பந்தருக்கு பார்வதியே வந்து ஞானப்பால் ஊட்டினாரே; அந்த சிசு, பார்வதி ஊட்டிய பாலைக் குடித்து விட்டுப் பாடிய பாடல் எந்த மொழியில்? தமிழில்தானே? மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் தமிழ்தானே? சேக்கிழார் சுவாமிகள் - பெரியபுராணம் பாடினாரே - அதற்கு - ஈசனே தானே முதலடி யைப் பாடினார் - அதை உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவன் என்றுதானே - தமிழில் தானே அடியெடுத்துக் கொடுத்தான். திருஞானசம்பந்தர் - மதுரை கூன் பாண்டியனின் தீராத வயிற்று வலியையும் (சூலை நோய்) கூன் விழுந்த முதுகையும் போக்கினாரே - அதற்கு அவர் பாடிய "மந்திரமாவதும் நீறு; வானவர்மேலதும் நீறு" என்ற பதிகம் தமிழ்ப் பதிகம்தானே? திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) நூற்றுக் கணக்கான வருடங்களாக - திறக்க முடியாதபடி - அடைத்துக் கிடந்த ஆலயக் கதவை - தமிழில் பதிகம் பாடித்தானே அப்ப ரடிகள் - ஞானசம்பந் தருடன் இணைந்து திறந்து வைத்தார்! திருவெண்ணைநல்லூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தன்று இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டபோது இறைவனின் விருப்பப்படி பாடிய பாடல் - "பித்தா பிறைசூடி" தமிழ்ப் பாடல்தானே? இதையெல்லாம் எழுதி எழுதி அல்லையன்ஸ் பிரசுரம் மூலம் காசு சம்பாதித்து வயிறு கழுவும் பக்தி வியாபாரி சோ -

தமிழில் அர்ச்சனை செய்தால் அது சாமிக்குப் புரியாது. சாமிக்கு ‘வைபரேஷன்’தான் முக்கியம். அந்த அதிர்வுகள் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது என்று வக்கணை பேசுவார். காரணம் என்ன? அவரது சுயசாதியினருக்கே பொதுவான தமிழ் விரோதம்- சமஸ்கிருத அபிமானம்தான்! உலகத் தமிழ் மாநாட்டினால் ஒன்றும் பயனில்லை என்கிறார்; அதனால் தமிழ் வளராது என்கிறார். ஆனால் - மலேசியா - கோலாலம்பூரில் ஆரம்பித்து, சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலா லம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 8 முறை மாநாடு நடத்தப்பட்டிருக் கிறதே உலகத் தமிழ் மாநாடு? உலக முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வு அறிக்கைகள் படித்தார்களே- அதனால் எல்லாம் தமிழ் வளரவில்லையா?

‘சோ’வின் சொந்த ஜாதிக்காரராகிய சங்கராச்சாரியார் சமஸ்கிருத வளர்ச்சிக்காக சதஸ்கள் நடத்தினால் அதன் மூலம் சமஸ்கிருதம் வளரும் என்று மட்டும் நம்புகிறாரே எப்படி? தமிழ்நாட்டு அரசியலை - வெறும் அரட்டைக் கச்சேரியாக மாற்றுவதற்காகவே பத்திரி கை நடத்தும் சோ - ஆண்டுதோறும் தன்னைப் புகழ மண்டபக் கூட்டங்கள் நடத்தும் சோ - கலைஞர் - செம்மொழி மாநாடு நடத்துவது தம்மைப் புகழ - பாராட்டத்தான் என்கிறாரே அதை என்னவென்று வர்ணிப்பது? சங்கராச்சாரியார் உரைகளை எல்லாம், கட்டுரைகளை எல்லாம் ‘தெய்வத்தின் குரல்’ என்று புகழும் ‘சோ’க்கள் - இப்படியெல்லாம் பேசுவது எந்தப் புத்தியினால்? பெரியார் தந்த புத்தியை உபயோகித்துப் பார்த்தால் - அது எந்தப் புத்தி என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல பளிச்சென்று விளங்கும்!

-------------------- நன்றி:- ”முரசொலி”

மோசடிக் குற்றத்தின்கீழ் ஜோதிடத்தைத் தடை செய்யவேண்டாமா?

பங்குச் சந்தை

ஜோதிடத்தின் அடிப்படையில் கூறப்படும் ஆலோசனைகளை நம்பி பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டாம் என்று முதலீட்டாளர்களுக்கு செபி (செக்யூரிட்டிங் அண்ட் எக்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜோதிடத்தின் அடிப்படையில் சிலர் கணிப்புகளை வெளியிடுவதும், அதனை நம்பி முதலீடு செய்பவர்களும், மோசம் போனவர்களும் உண்டு. அதனால்தான், செபி இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் வாங்க விரும்பும் நிறுவனத்தின் நிதி நிலைமை, அதன் எதிர்காலத் திட்டங்கள், அதன் உற்பத்திப் பொருள்கள், விற்பனை நிலைமை, அதன் தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து தொலைநோக்குக் கண்ணோட்டத்தில்தான் முடிவுக்கு வரவேண்டும்; ஜோதிடத்தை நம்பி ஏமாறவேண்டாம் என்று செபி கூறியுள்ளது.

ஜோதிடம் என்பது அறிவுப்பூர்வமானது அல்ல விஞ்ஞான அடிப்படையைக் கொண்டதும் அல்ல! வானவியல் (Astronomy) என்பது வேறு, ஜோதிடம் (Astrology) என்பது வேறு, இரண்டும் ஒன்றல்ல. ஒன்றோடு ஒன்றை போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

வானில் நிகழும் மாற்றங்களை வைத்து மனிதவாழ்வின் அன்றாட செயல்பாடுகளைக் கணிப்பது படுமுட்டாள்தனம்.

இவர்கள் கூறும் ஜோதிடத்தில் சூரியனை கிரகத்தின் பட்டியலில் வைத்துள்ளனர்; உள்ளபடியே சூரியன் ஒரு நட்சத்திரமாகும். உண்மையான கிரகமாகிய பூமிக்கு ஜோதிடத்தில் இடமில்லை; அதே-நேரத்தில், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு முக்கிய பாத்திரம் ஜோதிடத்தில் உண்டு.

அவ்வப்போது புதிய புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இவர்களோ இன்னும் நவ (ஒன்பது) கிரகங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு கிடக்கின்றனர்.

புதிய சூரியன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளிவந்துள்ளது. இனிமேல்தான் அதற்குப் பலனைக் கணிப்பார்களோ!

ஒரு ஜோதிடனிடம் பரிசு சீட்டு எந்த நம்பருக்கு விழும் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். நாய்க்கு ஒரு பெயரைச் சூட்டி, அதன் பிறந்த நேரத்தைக் கொண்டு போய்க் கொடுத்தால், எந்த ஜோதிடர் இது நாயின் ஜாதகம் என்று சொல்லுவான்? சவால்விட்டே கேட்கிறோம்.

பெரியாருக்கு ஆயுள் 67 என்று வீட்டில் எழுதி வைத்திருந்தனர். ஆனால், அவர் 95 ஆண்டுகாலம் அல்லவா வாழ்ந்தார்.

காந்தியார் பிறந்ததோ சிம்மலக்னம், மக நட்சத்திரம்; விடியற்காலம். மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு தீர்க்காயுள் உண்டு. எனவே, காந்தியாருக்கு ஆயுள் 120 வயது என்று திருத்தணி பிரபல ஜோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரியார் பாரத தேவி இதழில் (15.8.1947) எழுதினாரே என்னாயிற்று? கோட்சே என்ற கொடிய பார்ப்பான் சுட்டுக் கொன்றுவிட்டானே! அப்பொழுது காந்தியாருக்கு வயது 78 ஆண்டு 6 மாதங்கள்தானே! மக்கள் நல அரசு என்பது உண்மையானால், மோசடிக் குற்றத்தின்கீழ் ஜோதிடத்தைத் தடை செய்யவேண்டாமா?

----------------- மயிலாடன் அவர்கள் 25-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் புதிய கல்வித் திட்டம்மாணவர்கள் மத்தியில் ஒரு பூகம்பம்!

சென்னையில் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் பேரணி ஒன்று நேற்று நடத்தப்பட்டது.

கட்சி எல்லைகளைத் தாண்டி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அதில் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் சில நாள்களுக்குமுன் அறிவித்த உயர்கல்விக்கான தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற சட்டம் மாணவர்கள் மத்தி-யிலும், பெற்றோர்கள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சிப் பேரலைகளை எழுப்பி விட்டது.

இந்தியாவில் கல்வி என்பது பிறப்பின் அடிப்படையிலான உயர்ஜாதிக்காரர்களின் பிறவி உரிமையாக இருந்து வந்த வரலாற்று உண்மையை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு கொண்டு வரப்படும் எந்தத் திட்டமானாலும் அது பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் என்னும் சீற்றமிக்க புலி வாலை மிதித்த விபரீதமாகும்.

கல்வித் துறையில் மாநில அரசிலும் சரி, மத்திய அரசிலும் சரி பார்ப்பனர்களை நியமிப்பது நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பதாகும்.

கபில்சிபல் என்னும் அக்கிரகார படித்த மேதை இந்தியாவின் சமூகச் சூழலைப் படிக்காத அறிந்திராத அல்லது படித்திருந்தும், அறிந்திருந்தும், பார்ப்பன ஆதிக்க உணர்வுடன் செயல்படும் மனிதராகவே கணிக்கப்படுகிறார்.

மத்திய அமைச்சரவை ஒப்புதலின்றியே கல்வியைப்பற்றி அவ்வப்போது அவர் தெரிவிக்கும் கருத்துகள், வீண் சர்ச்சைகளை ஏற்படுத்தி மத்திய அரசுக்குத் தாங்க முடியாத தலைவலியை உண்டாக்கி வருகின்றன.

1938 இல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952 இல் முதலமைச்சராக வந்தபோதும் 6000 பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தினார்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்னும் மனுதர்ம சிந்தனையிலிருந்து பார்ப்பனர்கள் விடுபடுவதில்லை. இப்பொழுதும் அதுதான் நடந்திருக்கிறது.

வழக்கம்போல் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்தான் இந்தியாவுக்கே இதில் வழிகாட்டியாக வேண்டும். திராவிடர் கழகம் வழக்கம்போலவே மிக முக்கியமான ஒடுக்கப்பட்ட மக்களை, கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் புதிய கல்வித் திட்டத்தினை எதிர்க்கும் கடமையினைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டது.

1950 இல் சமூகநீதிக்குச் சாவு மணி அடித்தபோதும், தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் எரிமலையாக வெடித்துக் கிளம்பியது. தமிழ்நாட்டின் கொந்தளிப்பினால், முதலாவது திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது என்பதை பிரதமர் நேரு அவர்களே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

தமிழ்நாட்டில் 1979 இல் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கொண்டு வந்த வருமான வரம்பு அறிக்கையை எதிர்த்து முதல் குரல் கொடுத்து, அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து களம் கண்ட கடமையினை திராவிடர் கழகமே செய்தது. தமிழர் தலைவர் வீரமணியே வழிகாட்டி நின்றார்.

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்காக மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம்தான் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும், அதன் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடத்தி, இந்தியத் துணைக் கண்டத்தின் கண்களையெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் தமிழ் மண்ணை அகல விரித்துப் பார்க்கும்படிச் செய்தது. நீதிமன்றங்கள் குறுக்கிட்டும் இறுதி வெற்றி சமூகநீதிக்கே ஆனது.

சமூகநீதியில் கை வைக்கும் எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை _ நிலைக்க விடுவதும் இல்லை.

மத்தியில் கூட்டணியில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புதிய திட்டத்தை செயல்படுத்த விடாது என்பதை நாம் அறிவோம்.

என்றாலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யக்கூடிய இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் களம் அமைத்து போர்க் குரல் கொடுக்கவேண்டியது அடிப்படைக் கடமையாகும். அந்தக் கடமையைச் சென்னையில் ஆற்றிய மாணவச் செல்வங்களைப் பாராட்டுகிறோம்_ வாழ்த்துகிறோம்.


----------------------- “விடுதலை” தலையங்கம் 24-2-2010

24.2.10

யார் இந்த கசாப்? பயங்கரவாதியா? பலிகடாவா?

உளவுத்துறையை ஆட்டி வைக்கும் இந்துத்துவா சக்திகள்!


உங்களைப்பற்றி?

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது அனைத்தும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் தாலுகாவில். நான் முதலாவதாக 1976 இல் மகாராஷ்டிரா மாநிலக் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக

பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து 1981 இல் அய்.பி.எஸ். ஆகப் பதவி உயர்வு பெற்றேன். பிறகு எஸ்.பி.,யாக, ஏ.டி.ஜி.பி.யாக, மாநில கமிஷனராக, சி.அய்.டி.யாக, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக எனப் பல மாவட்டங்களில் பணியாற்றி 2005 இல் ஓய்வு பெற்றேன். ஓய்வு என்றால் நானே முன்வந்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்து (வி.ஆர்.எஸ்.) விருப்ப ஓய்வு பெற்றேன். அதற்குக் காரணம் என்னால் முடிந்த அளவிற்கு உண்மையாக இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை ஆற்றவேண்டும் என்பதற்காகவே. அதன்முதல்படிதான் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற இந்தப் புத்தகம்.

26/11 தாக்குதல் பற்றி?

நவம்பர் 26 தாக்குதல் நடைபெற்றபொழுது பத்திரிகைகளும், அரசும் வெளியிட்டுக்கொண்டிருந்த அறிக்கைகளில் பல முன்னுக்குபின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இதனை ஒரு காவல்துறை அதிகாரி என்ற வகையில் நான் பார்க்கும்போது பல குளறுபடிகளைக் காண முடிந்தது. தாஜ் ஓபராய் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபட்ட விதத்தில் காணப்பட்டன. குறிப்பாக தாஜ் ஓட்டலில் மட்டும் தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் 84 முறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றன. இதில் ஒருமுறைகூட ஓட்டலுக்குள்ளிருந்து யாரும் சுடவில்லை. மாறாக, அனைத்துத் துப்பாக்கிச் சூடும் காவல்துறையால் நடத்தப்பட்டவை. அதேபோன்று ரயில் நிலையத்திலும், மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தியவர்கள் மராத்தி மொழியில் பேசினார்கள் என்பதும் சி.சி. கேமராக்கள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கவை. ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மொபைல், சிம்கார்டுகள் ஆகிய அத்தனையும் மகாராஷ்டிரா மாநில சதாரா மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்டவை எனத் தெரிய வந்தன. அதேபோன்று இந்தத் தாக்குதல் நடைபெறும் என்பதை உளவுத் துறை முழுமையாக முன்-கூட்டியே அறிந்திருந்தது. ஆனால், உளவுத் துறையோ, காவல்துறைக்கோ அரசாங்கத்திற்கோ தெரியப்படுத்தாமல் தாக்குதல் நடைபெற்றபொழுது நிமிடத்திற்கு நிமிடம் யாருக்கோ தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றது. இந்தத் தாக்குதல் நடைபெறப் போகின்றது என அறிந்திருந்த உளவுத் துறை காவல் துறைக்கோ, ராணுவத்திற்கோ தெரியப்படுத்தியிருந்தால், இந்தக் கலவரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்க முடியும். ஆனால், உளவுத் துறை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் காவிமயம் ஆக்கப்பட்டிருப்பதனால், இந்தத் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன.

அதேபோன்று மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோகித், தயானந்த பாண்டே, பிரதிக்யா சிங் உள்ளிட்டோரை காப்பாற்றுவதும் இந்தத் தாக்குதலின் ஒரு அம்சமாக இருந்தது. அதற்கு இடையூறாக இருந்த கர்கரேயைக் கொல்வதும் இவர்களுடைய திட்டமாக இருந்திருக்கின்றது. தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணிக்குள்ளாக கர்கரே கொல்லப்பட்ட பிறகும், இவர்களுடைய இந்த நாடகம் முழுமை பெற இவர்கள் ஏழு மணிநேரத்தை எடுத்துக்கொண்டார்கள். இந்தப் பாசிச கும்பல் இத்தகையத் தாக்குதலை நடத்தி இந்தியாவில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் எனப் பல ஆண்டுகளாகத் திட்டம் தீட்டியதும் நேபாளம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டதும், கர்கரே அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட இந்துத்துவா பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிகணினியில் (லேப்டாப்) பல அதிர்ச்சித் தகவல்கள் இருந்தன. இதை மூடி மறைப்பதற்காகத் தன்னுடைய அரசியல் அதிகார ஆணவ முகங்களைக் கண்டுகொள்ளாத கர்கரேயைக் கொல்ல திட்டமிட்டு இத்தகையத் தாக்குதல் நடைபெற்று இருக்கின்றது. இந்தச் செய்திகள் எதுவும் என்னுடைய சொந்தக் கருத்துகள் அல்ல. அனைத்தும் உளவுத் துறையும், பத்திரிகைகளும் வெளியிட்ட அறிக்கைகளும், செய்திகளும் மட்டுமே.

எதற்காக இந்திய உளவுத் துறையை ஆர்.எஸ்.எஸ். தன்னு டைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது?

ஆர்.எஸ்.எஸ். கொள்கையே இந்தியாவையும், இந்திய மக்களையும், அரசாங்கத்தையும் தங்கள் அடிமைகளாகத் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதே. அதற்கான திட்டங்களை ஆரம்ப காலத்திலிருந்தே அவர்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இடையில் தோன்றிய காந்திஜி, அம்பேத்கர், பெரியார் போன்றவர்களால் ஆர்.எஸ்.எஸ். இன் பிடி மக்கள் மீதிருந்து குறைய ஆரம்பித்தது. இதன் எதிரொலியாக ஆர்.எஸ்.எஸ்., இந்து _ முஸ்லிம் கலவரங்களை நடத்திக் கொண்டிருந்தது. இந்தக் கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய பிராமணக் குலத்தைத் தக்க வைத்துக் கொள்ள அப்பாவி இந்துக்களைத் தங்களுடைய பகடைக் காய்களாகப் பயன்படுத்தின. அதன் விளைவாக ஆர்.எஸ்.எஸ். இன் கட்டுப்பாடு இந்தியாவின் ஒவ்வொரு துறையின்மீதும் இருக்கின்றது. முதலில் கல்வித் துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதன் விளைவாக அவர்களால் ஊடகங்களிலும், உளவுத் துறையிலும் மிகவும் சுலபமாக ஊடுருவ முடிந்தது. அரசாங்கம் எதுவாக இருந்தாலும், ஊடகம் யாருடையதாக இருந்தாலும் மக்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். அனைத்துத் துறையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில்தான் உளவுத் துறையிலும், அதனுடைய அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

26 / 11 தாக்குதலில் அமெரிக்கா வின் சதி உண்டா?

தாக்குதலில் அமெரிக்காவின் சதி உண்டா, உண்டு என்றால் எந்த அளவிற்கு என்ற கோணத்தில் நான் என்னுடைய ஆய்வை மேற்காள்ளவில்லை. ஆனால், அமெரிக்காவும், அமெரிக்க உளவுத் துறையும்,(எஃப்.பி.அய்.) இதில் எடுத்துக் கொண்டிருக்கின்ற ஆர்வத்தைப் பார்த்தால் நிச்சயமாக எஃப்.பி.அய்.யினுடைய கை இருக்க வாய்ப்புண்டு. குறிப்பாக நரிமன் ஹவுஸ் தாக்குதலில் அதனுடைய சதி இருக்க வாய்ப்பு உண்டு.

யார் இந்த கசாப்? பயங்கர வாதியா? பலிகடாவா?

இதனையெல்லாம் நான் இன்னும் ஆய்விற்கு உட்படுத்தவில்லை. கசாப் என்பவன் பயங்கரவாதியாகவும் இருக்கலாம் அல்லது உளவுத் துறையால் பலிகடாவாகவும் ஆக்கப்பட்டிருக்கலாம். இதை முழுமையாக அறியவேண்டும் என்றால், அனைத்து வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே உண்மை வெளிப்படும்.

மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் இன்றைய நிலை என்ன?

இந்த வழக்கைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்திட முடியாது. ஏனென்றால், கர்கரே விசாரணையைச் சிறந்த முறையில் பதிவு செய்து வைத்திருக்கிறார். பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதனடிப்படையில் இந்த வழக்கையும் கைது செய்யப்பட்ட புரோகித் போன்றவர்களையும் அவ்வளவு எளிதாக மூடி மறைத்திட முடியாது. ஆனால், அத்தகைய முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்திட வாய்ப்பு உண்டு. அதைத் தடுக்க அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் உடனடியாக மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.

கர்கரேயின் மரணத்தில் உள்ள மர்மங்கள் என்ன?


கர்கரேயின் மரணத்திலும், மும்பை தாக்குதலிலும் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன. இதை அனைத்தையும் வெளிக்கொணரவேண்டும் என்றால், உடனடியாக நான் ஆரம்பத்திலிருந்தே கூறுவதுபோல் அனைத்து வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கவேண்டும். விசாரித்தால் தாக்குதலில் கிடைத்த சிம் கார்டுகள், கர்கரேயின் மொபைல் போன் உரையாடல்கள் போன்ற ஆதாரங்கள் கிடைக்கும். ஆகவே, சுதந்திரமான, பாகுபாடு இல்லாத உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதி-மன்ற நீதிபதிகளை வைத்து விசாரணை நடத்தினால் மர்மங்கள் வெளிவரும்.

பொதுவாக பயங்கரவாதம் வளராமலிருக்க என்ன செய்யவேண்டும்?

உண்மையான பயங்கரவாதிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தாக்குதல் நடைபெற்ற உடன் எந்த ஒரு பாகுபாடுமில்லாமல் உடனுக்குடன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

நூல் வெளியான பிறகு எத்த கைய ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின?

ஆதரவை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மகாராஷ்டிராவில் இருந்து என்னை தமிழகத்திற்கு வரவழைத்து கண்ணியப்படுத்தியிருக்கிறீர்கள். என்னுடைய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். என்னிடம் பேட்டி வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்படி நாடு முழுவதும் உண்மை விரும்பிகளால் முழுமையான ஆதரவு எனக்குக் கிடைத்திருக்கிறது. எதிர்ப்பு என்று எதுவும் இதுவரை கிளம்பவில்லை. என்னை எதிர்க்காதவரை ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு நல்ல காலம். என்னை எதிர்த்தால் அவர்களுக்கே அது அழிவை உண்டாக்கும்.

உங்கள் புத்தகத்தில் இதுவரை நடந்த பயங்கரவாதத் தாக்குதல் அனைத்திலும் இந்துத்துவாவாதிகளே குற்றவாளிகள் என சொல்கிறீர்கள்? அப்படியானால், முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லையா?

நிச்சயமாக முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லை. இதுவரை நடந்த குண்டுவெடிப்புகளிலும், தீவிரவாதத் தாக்குதல் மூன்றில் மட்டுமே முஸ்லிம்களுடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது.

1. 1993 மும்பை குண்டுவெடிப்பு

2. 1998 கோவை குண்டுவெடிப்பு

3. கந்தகார் விமானக் கடத்தல்

இவற்றில் முதல் இரண்டையும் (மும்பை, கோவை குண்டுவெடிப்புகள்) தீவிரவாதத் தாக்குதல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவற்றில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்களே தவிர, அவர்கள் தீவிரவாதிகள் கிடையாது. ஆனால், மாலேகான், ஒரிசா, கோவா என நாட்டில் நடந்த அனைத்துக் குண்டு வெடிப்புகளிலும் இந்துத்துவா பாசிஸ்டுகளின் சதி இருந்திருக்கிறது. ஆகவேதான் என்னுடைய புத்தகத்தில் இந்துத்துவாவாதிகளைக் குற்றவாளிகள் எனச் சொல்கிறேன்.

முஸ்லிம்களில் தீவிரவாதி இல்லை என்றால், அவர்களை பயங்கரவாதி களாகச் சித்திரிக்க அரசும் ஊடகங் களும் முயல்வது ஏன்?

இதுவும் ஆர்.எஸ்.எஸ். திட்டம்தான். ஏனென்றால், உளவுத் துறையும், ஊடகமும் முஸ்லிம்களைத் திட்டமிட்டு தீவிரவாதிகளாகச் சித்தரிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். உடைய சதித் திட்டங்கள் வெளியில் தெரியாமல் இருக்கவும், அவர்களைக் காப்பாற்றவும் ஊடகங்கள் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கின்றன.

இத்தகைய பிரச்சினைகளை சமாளிக்க மக்கள் என்ன செய்யவேண்டும்?

மக்கள் இன்றைய ஊடகங்கள்மீது அழுத்தம் தரவேண்டும். ஊடகங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து அவர்களைக் கேள்வி கேட்கவேண்டும். அதேபோல், அரசும், உளவுத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். உளவுத் துறையினர் தன்னிச்சையாகச் செயல்படாமல், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் உளவுத் துறையை மாற்றி அமைக்க அரசாங்கத்திற்கும், மக்கள் அழுத்தம் தரவேண்டும்.

இந்தியாவும், பாகிஸ்தானும் நட்பு நாடாக மாற என்ன செய்யவேண்டும்?

இது ஒன்றும் கடினமான காரியமல்ல. இரண்டு நாடுகளும் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய பிரிவினைவாத சக்திகளைக் கட்டுப்படுத்தினால், இரண்டு நாடுகளும் நட்பு நாடாக மாற இலகுவாக இருக்கும். எப்படி இந்தியாவில், இந்-துத்துவா பாசிச அமைப்புகள் செயல்படுகின்றனவோ அதேபோன்று பாகிஸ்தானிலும், சில அமைப்புகள் செயல்படுகின்றன. இவர்களை இரு நாட்டு அரசுகளும் இரும்புக் கரம் கொண்டு தடுக்கவேண்டும்.

-------------------எஸ்.எம். முஷ்ரீப் அவர்களின் நேர்காணல் - நன்றி: சமரசம்,
16-28, பிப்ரவரி, 2010

காஞ்சி மடத்தின் முன் பெரியார் சிலை வந்த வரலாறு


காஞ்சியிலே...

உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? கடந்த 30 ஆண்டுகாலமாக சங்கராச்சாரியார்கள் உள்பட காஞ்சி மடப் பக்தர்கள் தூங்கி எழுந்து முதலில் விழிக்கும் முகம் தந்தை பெரியார்தான்.

ஆச்சரியமா? காஞ்சி மடத்தின் முன் தந்தை பெரியார் சிலை இந்நாளில்தான் (1980) தமிழர் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. அன்றுமுதல் பெரியார்தான் அவாளுக்கு முதல் தரிசனம்.

சிலை மட்டுமல்ல; கடவுள் மறுப்பும், ஆத்மா மறுப்பு வாசகங்கள்கூட, அதுவும் தமிழிலும், ஆங்கிலத்திலும்!

காஞ்சி மடத்துக்கு வரும் பக்தர்கள்கூட தந்தை பெரியாரை அங்கு சந்தித்துவிட்டுதான் மடத்துக்குள் செல்லவேண்டும்.

காஞ்சி மடத்துக்குள் என்ன நடக்கிறது? என்ன நடந்தது? ஆம், தந்தை பெரியார் சிலையாக நின்று சொல்லிக் கொண்டிருக்கிறாரோ!

அங்கு அய்யா சிலையை வைப்பதற்கு அடேயப்பா, எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் தெரியுமா?

1974 ஆம் ஆண்டு அங்கு சிலை வைக்க முயற்சிக்கப்பட்டது. அங்கு சிலை வைக்க எவ்விதத் தடையும் இல்லை, காஞ்சி நகராட்சி, மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை அதிகாரி ஆகியோரிடம் தடையில்லாச் சான்றும் பெறப்பட்டது. 1975 இல் சிலை வைப்பதற்கான பீடமும் அமைக்கப்பட்டு விட்டது. இடையில் ஆளுநர் ஆட்சி! (அவசர நிலை காலம்) இரண்டு பார்ப்பனர்கள் ஆலோசகர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.

ஆளுநர் ஆகட்சி முடிவுக்கு வந்த பிறகு, கழகத்தின் சார்பில் சிலை வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்-பட்டன.

அடுத்து வந்தது எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாயிற்றே!

அங்கே பெரியார் சிலை வைத்தால் பக்தர்கள் மனம் புண்படும் என்றார் திராவிட இயக்க வழிவந்ததாகக் கூறிக்கொண்ட முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

அதனை எதிர்த்து செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.பி. இராசமாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நீதிபதி மோகன் அருமையான தீர்ப்பை வழங்கினார். காஞ்சி மடத்தின் முன் பெரியார் சிலையை வைக்கத் தடையில்லை என்றாரே பார்க்கலாம்.

சட்டமன்றத்தில் இது எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் அங்கு அய்யா சிலை வைத்தே தீருவோம் என்று முழங்கினார். அப்பொழுது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா? அந்தச் சிலையை உடைப்போம் என்று முழக்கமிட்டனர் (வெட்கப்படத்தக்கது!).

எல்லாவற்றையும் கடந்து வழக்கம்போல தந்தை பெரியார்தான் வென்றார். இந்நாளில் இவற்றையெல்லாம் அசை போடுவோமாக! அய்யா சிலை வைக்கும் பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு உழைத்த சுயமரியாதைச் சுடரொளிகளாகி விட்ட சி.பி. இராசமாணிக்கம், டி.ஏ. கோபாலன், கம்மாபுரம் இராசகோபால், காஞ்சி கே.டி.எஸ். மணி உள்ளிட்டோரை மறவாமல் நினைவு கூர்வோமாக!

---------------- மயிலாடன் அவர்கள் 24-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

23.2.10

தேசிய நீரோட்டம் என்னும் அணையை உடைப்பது யார்?முல்லைப் பெரியாறு பிரச்சினை இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் தமிழ்நாட்டு மக்களை அலைகழிக்கப் போகிறதோ தெரியவில்லை.

காவிரி நீர்ப் பிரச்சினையானாலும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையானாலும் இதில் கருநாடகமும், கேரளமும், நீதிமன்ற தீர்ப்புகளைச் சற்றும் மதிப்பதாகவே தெரியவில்லை.

உச்சநீதிமன்றம் சில நாள்களுக்குமுன் அறிவித்த தீர்ப்பில் அய்வர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது. அக்குழு முடிவு செய்யும் என்று கூறியிருப்பது வேடிக்கையானது. அப்படியானால், அதே உச்சநீதிமன்றம் 142 அடி வரைத் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று நிபுணர் குழுவின் அடிப்படையில் தீர்ப்புக் கூறியதே அது என்ன ஆனது? தான் வழங்கிய தீர்ப்பை தானே உச்சநீதிமன்றம் மதிக்கவில்லையே! இதைவிடக் கேலிக் கூத்து வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?

142 அடி தண்ணீரைத் தேக்க அணை பலமாக உள்ளதா இல்லையா? என்பது குறித்து புதிதாகத் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது?

மத்திய நீர்வள ஆணையத்தின்மூலம் ஒன்பது பேர் கொண்ட உயர்நிலைப் பொறியாளர்கள் அடங்கிய விற்பன்னர் குழு 10.10.2000, 11.10.2000 ஆகிய இரு நாள்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அணை பலமாகவே உள்ளது, 142 அடி நீரைத் தேக்கிக் கொள்வதில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறிவிட்டதே அதற்குமேல் என்ன புதிய குழு?

நீதிமன்றம், நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை; விற்பன்னர் குழு இன்னொரு விற்பன்னர் குழுவின் முடிவை மதிக்கவில்லை என்பதெல்லாம் கவுரவமான நடப்புகள்தானா?

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மத்திய அரசின் வேடிக்கை விளையாட்டாகும். உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கிவிட்டது; அதனைச் செயல்படுத்த வைக்கவேண்டியது மத்திய அரசின் கடமை. இதற்கிடையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடந்துகொள்ளாமல் முல்லை பெரியாறு நீர்த் தேக்கத்தின்மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீரைத் தடுக்கும் வகையில் புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கு கேரள அரசு முயற்சிப்பதும், மத்திய அரசை அணுகுவதும். மத்திய அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் அதுகுறித்து ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதியளிப்பதும் அசல் சிறுபிள்ளைத்தனமான செயல்பாடு அல்லவா?

உச்சநீதிமன்ற தீர்ப்பை முடக்கும் வகையில் கேரள அரசு ஒரு புதிய சட்டத்தையும் இயற்றுகிறது என்றால், அதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய் திறக்கவில்லை என்பது, நீதித்துறையின்மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பீட்டைக் குறைக்காதா?

கருநாடக மாநிலமும் இதுபோல்தான் காவிரி நீர்ப் பிரச்சினையில் நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக ஒரு சட்டத்தை இயற்றியது. இந்தப் போக்குகள் நீதித்துறைக்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி உகந்த மரியாதை ஆகவே ஆகாது.

மத்திய அரசின் அணுகுமுறையில் அரசியல் நோக்கம் இருப்பது வெளிப்படையாகும். அடுத்த ஆண்டு கேரளாவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சட்டப்படியும், நியாயப்படியும் தமிழ்நாட்டுக்கு உரிய நீதி கிடைத்துவிட்டால், அது கேரள தேர்தலைப் பாதிக்கக் கூடும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

அங்கு ஆட்சியில் இருக்கும் சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்த மனப்பான்மை மேலோங்கி நிற்கிறது. இந்த அரசியல் சித்து விளையாட்டில் தமிழ்நாட்டு விவசாய மக்களும், நீதியும், நியாயமும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மையாகும்.

எப்படியோ தேசிய நீரோட்டம் என்கிற அணையை இந்தியத் தேசியவாதிகளான காங்கிரசும், சர்வதேச தேசியவாதிகளான கம்யூனிஸ்டுகளும் உடைத்திட முடிவு செய்துவிட்டனர் நீதிமன்றமும் தன்னாலான உதவியையும் செய்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணரவேண்டும்.

------------------------" விடுதலை” தலையங்கம் 23-2-2010

காமாட்சியம்மன் கோயிலா? அல்லது பவுத்தரின் தாராதேவி ஆலயமா?


பொதிகையில்!

பொதிகைத் தொலைக்காட்சியில் தினமலர் வாரம் தோறும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் எப்படிப் பாடினாரோ என்ற ஆன்மிக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. (பக்தியைப் பரப்புவதிலும், பாமர மக்களை நம்பச் செய்வதிலும்தானே பார்ப்பனியத்தின் சூட்சமக் கயிறே இருக்கிறது?).

அதில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், காமாட்சியம்மன் கோயில் அமைப்பு, வழிபாட்டு முறைகள், மாவடி பற்றிய அரிய செய்திகள், சாக்கிய நாயனாரின் பக்தி பற்றிய தகவல்கள் இங்குள்ள நதிகள் ஆகியவைபற்றிக் காணலாம் என்று தினமலர் ஒரு செய்தியை நேற்று (22.2.2010) வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மடம் எப்படி போலியோ ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது அல்லவோ அது போன்றதுதான் இந்த ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் கோயில் வண்டவாளங்களும்.

இது உண்மையான ஏகாம்பரேஸ்வரர் கோயிலா? அல்லது இதற்குமுன் இருந்த புத்தர் கோயில் உருமாற்றப்பட்டதா?

இது உண்மையிலேயே காமாட்சியம்மன் கோயில்தானா? அல்லது பவுத்தரின் தாராதேவி ஆலயமா?

இந்தக் கேள்விகளுக்கு நாத்திகர்களாகிய நாம் பதில் சொல்லப் போவதில்லை. மயிலை சீனி. வேங்கடசாமி என்னும் ஆராய்ச்சியாளர் பவுத்தமும் தமிழும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளி மதில்சுவரில் சில புத்த விக்கரகங்கள் பலவகை சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ண தேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்கவேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்ரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரி நிர்வாணம் அடையும் நிலையில் உள்ளது போன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. (பவுத்தமும், தமிழும், பக்கம் 54).

ஏகாம்பர ஈசுவரர் கோயிலில்தான் இந்தக் கதையென்றால், காமாட்சியம்மன் கோயில் மட்டும் என்ன வாழ்கிறது?).

காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம் இவ்வாலயத்தில் பல புத்த விக்கரகங்கள் இருந்தன. அவைகளில் ஆறு அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்பொழுது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சியம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த விக்கரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்கு முன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த விக்கரகம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கரகங்களைப் புதைத்து இருக்கிறார்களாம். (பவுத்தமும், தமிழும், பக்கம் 55).

புரிகிறதா? புத்தர் கோயில்களை எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி வாயிலாகவும் இத்தகைய மாய்மாலங்களைச் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த யோக்கியர்கள்தான் ராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் பாபர் என்று கயிறு திரிக்கிறார்கள்.

---------------- மயிலாடன் அவர்கள் 23-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

22.2.10

பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள் -2


பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்

(தமிழர்கள் செய்யக்கூடாத காரியங்களை அய்ந்து (பஞ்சமா) பாதகங்கள்! ” என்ற தலைப்பில் பட்டியலிட்டுள்ளார் பெரியார் . ஊன்றிப் படித்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.)

******************************


பாதகம் : நான்கு -


சினிமாவிற்குப் போகக் கூடாது.

இந்த நாட்டில் சினிமா நடப்பதை அனுமதித்துவிட்டு, அதில் பங்கு கொண்டு ஆதரித்து விட்டு, அரசாங்கத்தின் அய்ந்தாண்டுத் திட்டத்தையும் ஊதாரிச் செலவையும், (வீண் கொள்ளை) வரியையும் கண்டிப்பவர்கள் ஒன்று மடையர்களாக இருக்க வேண்டும் அல்லது மக்களை ஏய்க்கும் அயோக்கியர்களாக இருக்க வேண்டும்.

அய்ந்தாண்டு திட்டம் நல்ல எண்ணத்தின் மீது இருக்க வேண்டும். அல்லது நம்மால் இன்ன காரியம் ஆயிற்று என்கின்ற பெருமை தங்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட வேண்டும். இதுவும் கட்டுப்பாடான ஒரு சர்க்கார் (ஆட்சி) கொள்கை திட்டம் என்கின்ற பெயரால் நடத்தப்படுவது. இதில் உள்ள சுயநலம் மறுபடியும் தாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதாக இருக்கலாம். நீண்ட நாளாய் சட்டப்படி ஏற்பட்ட வரும்படியும் ஆதிக்காரர்களுக்கு இருக்கலாம்.

வசூலிக்கப்படும் வரியும் கணக்குக் காட்டி, வரவு செலவு பட்ஜெட் திட்டம் காட்டி மெஜாரிட்டி (பெரும்பான்மை) மக்களால் ஓட்டு செய்யப்பட்ட மக்கள், மெஜாரிட்டி (பெரும்பான்மை) ஓட்டுப்பெற்று நிறைவேற்றி, பெரிதும் பணக்காரர்களிடம் வரும்படியில் பங்கு என்னும் பேராலும், தொழிலின் மூலம் சம்பாதித்துக் கொண்டு, "சம்பாதித்துக் கொள்" என்னும் உரிமை கொடுத்து வசூலிக்கப் படுகிறதுடன் வரவுக்கும் செலவுக்கும் கணக்குக் காட்டப்படுகிறது.

ஆனால் சினிமாவின் (திரைப்படத்தின்) பெயரால் கதை எழுதுகிறவன், வசனம் எழுதுகிறவன், சாயம் பூசுகிறவன், நடிக்கிறவன், பாடுபடுகிறவன், முதலியவர்கள் யாருடைய பிரதிநிதிகள்? யாரிடம் ஓட்டுப் பெற்றவர்கள்? எதற்காக வசூலிப்பவர்கள்? என்ன கணக்குக் காட்டுகிறவர்கள்? இவர்கள் தகுதிக்கு, தேவைக்கு எந்தவித முறையில் கணக்குப் பார்த்து, என்ன செலவுக்கு யாருக்குக் கணக்குக் காட்ட, என்ன பொதுநலத்திற்கு என்ற கொள்ளை கொள்ளையாக வசூலிக்க வேண்டியதாகிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

சினிமா (திரைப்பட) முதலாளிகளாவது மக்களின் முட்டாள் தனத்தையும் மிருகக் காட்டுமிராண்டி உணர்ச்சியையும் முதலாக வைத்துக் கொண்டு வசூலிக்கிறார்கள். 10 லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிவிட்டுப் பல கோடிக்கணக்கில் வசூல் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது அல்லாமல் வேறு ஏதாவது சினிமா முதலாளிகள் கொள்ளைக்கு நியாயமோ சமாதானமோ சொல்ல முடியுமா?

அல்லது மேற்கண்ட இக்கூட்டத்தார் எல்லோரும் கொள்ளையடிக்கும் பணம் 100 க்கு 99 பாகம், குடி, கூத்தி, விபசாரம், சூதுவாது ஆகிய காரியங்களுக்குப் பாழாகிறதல்லாமல் வேறு பலன் எதற்குப் பயன்படுகிறது? இதில் ஈடுபடுபவர்கள் ஆணோ, பெண்ணோ, செல்வவானோ, புலவனோ, அறிஞனோ, யாரானாலும் இந்த மேற்கண்ட கதிகளுக்கு ஆளாவதல்லாமல் கடுகளவு மனிதத் தன்மைக்கோ, நல்வாழ்வுக்கோ, மக்களுக்கு நன்மை ஏற்படவோ பயன்படுகிறார்களா? என்பதையும் சிந்தித்தால் அத்தனையும் கேடும் நாசமுமாகத்தான் இருக்கும்.

இதைப் பார்ப்பவர்கள் மிருக உணர்ச்சி என்பதன் பரிகாரத்திற்கு ஆகவே பெரும்பாலான ஏழை மக்கள், எளிய மக்கள் தங்கள் குடும்பவாழ்வுக்கு நியாயமாய்ச் செலவு செய்ய வேண்டிய இன்றியமையாப் பணத்தை நாசமாக்குகிறார்கள். இதன் மூலம் ஆணும், பெண்ணும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பதான 3-வயது முதல் 90 வயது வரை உள்ள பெண்களும், அதுபோலவே உள்ள ஆண்களும் ஒழுக்கத்தில் கேடு கெட்ட கடையர்கள், காமாதுர, தூர்த்தர்கள் ஆகிப் பொது ஒழுக்கம், நாணயம், நம்பிக்கை, நன்றியறிதல் ஆகிய காரியங்களில் கீழ்மக்களாகவே தங்களை அறியாமலேயே ஆகிவிடுகிறார்கள். இந்த வகையான மனித சமுதாய ஒழுக்கக்கேட்டிற்குக் காந்தியும், காங்கிரசும், தேர்தலும், அரசியலும் காரணங்களாக இருந்தாலும் இந்தச் சினிமா வந்த பிறகு இந்தத் துறை பணந்திரட்டவும் கலைஞானத்திற்குப் பொது நலத்திற்கு என்று உழைப்பவர்களுக்கு ஒரு சாதனமாகக் கொள்ளப்பட்ட பிறகு திடீர் வளர்ச்சிக்குக் காரணமாகிவிட்டது.

காந்தி, காங்கிரஸ் தேர்தல் முதலியவைகள் பற்றிச் சிலருக்கு அபிப்பிராயபேதம் இருந்தாலும் இக்கேடுகளுக்குச் சினிமாவே முக்கியக் காரணம் என்பதில் பாபு ராஜேந்திரர், ஜவகர்லால் நேரு முதல் ராஜாஜி வரை மாறுபட்ட கருத்தில்லாமல் காமராசர் முதல் காங்கிரசுக் கண்ணீர்த் துளி வரையில், சங்கராச்சாரி பண்டார சந்நிதிகள் முதல் வீரமுத்து சாமியார்கள் வரையில் மற்றும் பெரும் பெரும் புலவர் அறிஞர், பொது வாழ்வில் பெயர் பெற்ற உலக அறிஞர் முதல் காங்கிரசுக்காரர்கள், கம்யூனிஸ்ட்கள், சோஷயலிஸ்ட்கள் வரை எல்லாத் துறை மக்களும் சினிமாவை மனித சமுதாய நல்வாழ்வுககும் ஒழுக்கத்திற்கும் கேடானது என்றே சொல்லி விட்டார்கள். அதில் ஈடுபட்டவர்கள், அதனால் மனிதர்கள் மனுஷிகள் ஆனவர்கள், வாழ்வு நடத்துபவர்கள் தவிர எல்லோரும் சினிமா கேடானது, ஒழுக்கக் கேடானது, ஏழை மக்களைப் பிடுங்கித்தின்பது என்று சொல்லி விட்டார்கள். மற்றும் சொல்ல வேண்டுமானால் நகைச்சுவையரசு என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா முதற்கொண்டு சில கலைஞர்களும் சொல்லிவிட்டார்கள். இனி யார் சொல்ல வேண்டும்?

பாதகம்: அய்ந்து -

இராட்டினம் சுற்றுவது, இராட்டினம் சுற்ற வேண்டாம்; கதர் கட்ட வேண்டாம் என்பது நம் கொள்கை.

இராட்டினம் அல்லது கைராட்டை என்பது அறிவுப்பெருக்கமில்லாமல், காட்டானாய் இருந்த காலத்தில் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு சாதனமாகும்.

எதுபோலவென்றால், மனிதன் நெருப்பு உண்டாக்குவதற்குச் சக்கி முக்கிக் கல்லைக் கண்டு பிடித்தது போலும், விளக்குக்கு மண் அகலை எண்ணெய் விளக்குக் கண்டுபிடித்தது போலும், மனிதன் போக்கு வரவுக்குக் கட்டை வண்டியைக் கண்டுபிடித்தது போலவும், உடைக்காக நூல் நூற்க இராட்டினமும், துணி நெய்ய கைத்தறியும் கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

அவைகளில் சக்கிமுக்கிக் கல்லுக்குப் பதில் நெருப்புக் குச்சியும் சிம்னி விளக்கும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று மின்சார நெருப்பும் மின்சார (Electric) விளக்கும் கண்டுபிடிக்கப்பட்டு அமலுக்கு வந்துவிட்டதுடன் வராத இடங்களில் மக்களுக்கு அதிக வேட்கையும் ஏற்பட்டுவிட்டது.

கட்டை வண்டிக்குப் பதில் சைக்கில் (மிதிவண்டி), மோட்டார், ஆகாய விமானம் ஏற்பட்டு விட்டன. இராட்டினத்திற்குப் பதில் நூற்பு யந்திரமும், கைத்தறிக்குப் பதில் நெசவு யந்திரமும் ஏற்பட்டு உலக முழுவதிலும் அமலுக்கு வந்திருப்பதோடு இந்த இரண்டு சாதனங்களினாலும்தான் மக்களுக்கு வேண்டிய அளவுக்கு ஆடை அளிக்க முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் இராட்டினத்தைக் கொண்டு நூல் நூற்கச் செய்வதென்பது, நெருப்புக்கு சக்கிமுக்கிக் கல்லையும், வழிப்பயணப் போக்குவரத்துக்குக் கட்டை வண்டியையும் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறவன் புத்திக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க முடியுமோ அந்த அளவு மதிப்புதான் கொடுக்கத் தக்கதாகுமே ஒழிய, வேறு எந்தவித்திலும் கைராட்டினம் புகுத்தியவர்களை இக்கால மனித வளர்ச்சித் தன்மைக்கு ஏற்றவர்கள் என்று சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும் காந்தியாரால் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இராட்டினம் அநேகமாக ஒழிந்து போய்விட்ட தென்றே சொல்லலாம். அதுவும் யாராலும் ஒழிக்கப்படாமல் தானாக ஒழிந்து போய்விட்டது! எப்படியெனில் பழையகால இராட்டினமாகிய (காந்திராட்டினம்) ஒரு கதிர் இராட்டினம் மறைந்துவிட்டது. என்ன சொல்லிக் கொண்டு மறைந்தது என்றால், "மக்களின் வாழ்வுக்கு (இராட்டினம் சுற்றுகிறவர்களுக்குக் கஞ்சி வார்க்க) ஒரு கதிர் இராட்டினம் போதாது, உதவாது, ஆதலால் நான் போகிறேன் அடுப்புக்கு" என்று சொல்லிக் கொண்டு போய்விட்டது! இக்கருத்தை இராட்டினம் புகுத்தப்பட்ட காலத்தில் அறிவு சுதந்திரமுள்ள மக்கள் அத்தனை பேரும் எடுத்துக் கூறினார்கள் என்றாலும், காந்தி சர்வாதிகார காலத்தில் அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டதுடன், இராட்டினம் தானாகவே நான் சாகப்போகிறேன் என்று சொன்ன காலத்தில் காந்தியாரே 'இது வேண்டாம், வேறு ஏதாவது நூல் யந்திரம் போல் பல கதிர் இராட்டினம் கண்டு பிடித்ததாக வேண்டும்' என்கின்ற அவசியத்திற்கு (கட்டாயத் தேவைக்கு) வந்துவிட்டார்.

அதுபோலவே கைத்தறிக்காரர்களும் பட்டினியால் சாக ஆரம்பித்த பின்பு, விசை நாடா தறி முதலிய பலரக கைத்தறி முதலிய பலரகத் தறி முதலிய பலரக கைத்தறி முதலிய பலரகத் தறிவந்து பழைய கைத்தறி அனேகமாய் அடுப்புக்குப் போய்விட்டது.

இந்த நிலையில் 'காந்திக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்' என்கின்ற பெயரால் கல்வித்துறையில் கைராட்டினத்தையும், கைத்தறியையும் புகுத்திக் கூத்தடிக்கிறார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள்.

கதர் (செலவு) துணி என்பது சுத்த காட்டுமிராண்டித்தனமானது. பொருளாதாரத்தையும், நாகரிகத்தையும் கொலை செய்யக் கூடியது என்று தெரிந்தும், பொதுமக்கள் வரிப்பணத்தை நாசமாக்கும் தன்மையில் ஆண்டு ஒன்றுக்குப் பல கோடி ரூபாய்களைக் கதர் வளர்ச்சிக்கு என்று உதவித் தொகையாகக் காங்கிரஸ் அரசாங்கம் கொடுத்துக் கதரைச் சாகாமல் காப்பாற்றி வருகிறது.

இது அதாவது இராட்டினம், கதர் என்கின்ற இரண்டு சாதனமும் அரசியல் விவகாரம் என்கின்ற தன்மையில் இன்று இந்த நாட்டில் உலவிக் கொண்டு இருக்கின்றன.

காந்தியையும், காங்கிரசையும் ஆதரிக்கிறவர்கள் என்பவர்களுக்கு இவை இரண்டும் சின்னங்களாக இருந்து வருகின்றன.

இவைபற்றி இன்னும் அநேகம் சொல்ல இருக்கின்றன என்றாலும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்.

ஆகவே தோழர்களே!

1. பார்ப்பான் ஓட்டலுக்குப் (உணவகத்துக்குப்) போகாதீர்கள்.
2. பார்ப்பானைப் பிராமணன் என்று சொல்லாதீர்கள்.
3. தீபாவளி கொண்டாடாதீர்கள்.
4. சினிமாவுக்குப் போகாதீர்கள்.
5. இராட்டினம் சுற்றுவதும், கதரை உடுத்துவதுமான காரியம் செய்யாதீர்கள்.

தோழர்களே! நான் வேண்டிக் கொள்வதை சிந்தித்து இந்த அய்ந்து காரியத்தையும், பஞ்சமாபாதகம் என்பதாகவே கருதி, செய்வதினின்று நீங்கி,

மானத்தையும், அறிவையும், ஆராய்ச்சித் திறனையும், ஒழுக்கத்தையும்,
பொருளாதாரத்தையும் காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.


---------------------பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்: "விடுதலை" 21-10-1957

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! - 15
ஆறாவது குருவாக ஆக்கப்பட்டவர் குரு அர்ஜனின் மகன் ஹர்கோவிந்த். தன்னுடன் எப்போதும் இரண்டு வாள்களை வைத்துக் கொண்டிருந்தவர். ஒன்று சக்தி என்றும் மற்றொன்று பக்தி என்றும் விளக்கம் அளித்தார். துறவிக்குரிய தன்னலமறுப்பும் (Piri) அரசர்க்குரிய கம்பீரமும் (Miri) ஒருங்கே அமையப் பெற்றி-ருந்தவர். உண்மையான மன்னர் (Sacha Badshah) என்று அழைக்கப்-பட்டதற்கேற்ப, படை திரட்டி, குதிரைகளில் சவாரி செய்வதை அறிமுகப்படுத்தியவர். படை திரட்டியதோடு கோட்டை கொத்தளங்களையும் கட்டியவர். சுருங்கச் சொன்னால் சாமியார்களைப் போர் வீரர்களாக்கியவர் அகிம்சை என்பதைக் கோழைத்தனம் என்றவர்.

தனது 14 ஆம் வயதிலேயே ஏழாவது சீக்கிய குரு ஆனவர் ஹர் ராய். குரு ஹர்கோவிந்தின் மூத்த மகன் பாய்குர்டித்தாவின் மகன். இவரும் 1661 ஆம் ஆண்டில் தமது 30 ஆவது வயதில் காலமானார்.

தனது இரண்டாம் மகன் ஹரிகிருஷ்ணனை எட்டாவது குருவாக்கினார். ஒன்பதாவது குருவானவர் தேஜ்பகதூர். அவர் காலத்தில் காஷ்மீர்ப் பார்ப்பனர்கள் அமர்நாத் யாத்திரை போக விரும்பினார்களாம். அந்தப் பார்ப்பனர்களில் ஒருவரான கிர்பாராம் என்பவர் கனவு கண்டாராம்; அந்தப் பார்ப்பனர்களைச் சீக்கிய மதகுருவான தேஜ்பகதூர் மட்டுமே காக்க முடியும் எனக் கண்டாராம். காரணம் கலியுகக் காவலர் அவர்தானாம். உடனே பார்ப்பனர்கள் பஞ்சாபில் அனந்தபூர் வந்து குருவைச் சந்தித்தனராம். தங்களுக்குத் தேவைப்படுவதை எடுத்துக் கூறினார்களாம். இந்துக்களை முசுலிம்களாக மதம் மாறும்படி அவுரங்கசீப் ஆணையிட்டிருப்பதையும் அதற்கு ஆறுமாத காலம் அவகாசம் தந்திருப்பதையும் தெரிவித்தார்கள். நிலைமையைத் தெரிந்து கொண்ட தேஜ்பகதூர் பார்ப்பனர்களிடம் முதலில் தேஜ்பகதூர் மதம் மாறினால் நாங்களும் மதம் மாறத்தயார் எனக் கூறிவிடுங்கள் என்றாராம்.

இதையறிந்த முகலாய மன்னர் அவரை டில்லிக்கு வரவழைத்து சிறையில் அடைத்து விட்டார். சில நாள்களில் அவரைக் கொன்று விட்டனர். உயர் ஜாதிப் பார்ப்பனச் சின்னமான பூணூல் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது எனக் கூறி பூணூலையே அணிய மறுத்து ஜாதிப் பிளவுகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்தவர் குருநானக். ஜாதிப் பிரிவுகளை எதிர்த்து அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட மதம் சீக்கியம். ஆனால் அம்மதத்தின் ஒன்பதாவது குரு பூணூல் மேனிகளைக் காப்பதற்காகத் தம்முயிரைத் தியாகம் செய்கிறார். அந்த தியாகத்தின் பலன் என்ன? இனிமேல் நாங்கள் பூணூலை அணிய மாட்டோம் என்று பார்ப்பனர்கள் உறுதி மொழி ஏற்றனரா? அல்லது குறைந்த அளவு காஷ்மீர்ப் பார்ப்பனப் பண்டிட்டுகளாவது அம்மாதிரி அறிவித்தார்களா? இல்லையே! குரு தேஜ் பகதூரின் உயிர்த்தியாகம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே! ஓர் இயக்கத்தின் நோக்கங்கள் நீர்த்துப் போனால் விளைவுகள் எப்படி ஆகும் என்பதை எடுத்துக் காட்டுகிறதே! ஜாதி ஒழிப்புக்காக உருவான மதம் ஜாதியாலேயே பிளவுபடும் நிலை வந்துவிட்டதே!

மதவாதிகளே, என்ன பதில்?

குழந்தைப் பேறு இல்லாத மன்னர் ஒருவர் குருதேஜ் பகதூரிடம் வந்தாராம். குழந்தை வேண்டும் என்றாராம். அப்படியே ஆகட்டும் என்று குரு ஆசீர்வதித்தாராம். அவருக்குக் குழந்தை பிறந்ததாம். இது போன்ற பல அற்புதங்களை அவர் செய்தாராம். மூட நம்பிக்கைகளைக் கண்டித்தும், அவற்றை ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடும் உண்டாக்கப்பட்ட மதத்தின் கதி காலப்போக்கில் எப்படி ஆனது என்று கவனிக்க வேண்டும்.

பத்தாம் குருவாக வந்த கோவிந்த் ராய், பிகாரின் பாடலிபுத்திர நகரைச் சேர்ந்தவர். வில் வித்தை கற்று அடிக்கடி விலங்குகளை வேட்டையாடச் சென்றவர். 52 கவிஞர்களைக் கூட்டி வைத்து கவி அரங்குகளை நடத்தியவர். சமக்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர், கவியரங்குகளில் மேற்கண்ட மொழிக் கவிதைகளைப் பாடியும் பாடச் செய்தும் மகிழ்ந்தவர். இந்த வகையில் இவர், தன் முன்னோர் குருக்களின் பாதையிலிருந்து விலகி வாழ்ந்தவர். மக்களின் மொழியில் மதக் கருத்துகள் இருக்க வேண்டும் என்று புத்தரைப் போலவே குருநானக்கும் மற்றவர்களும் உழைத்தனர். புத்தர் பாலிமொழியைப் பயன்படுத்தியதைப் போல சீக்கிய குருமார்கள் குருமுகி மொழியை வளர்த்தனர். அந்தப் பாதையை விட்டு மாறிய பத்தாம் குரு சமக்கிருதம், பாரசீக மொழிகளை வளர்த்துள்ளார். இம்மாதிரிச் செயலை புத்த மதத்தைச் சேர்ந்த நாகார்ஜுனன் என்பார் கூடச் செய்து புத்த வழியிலிருந்து பிசகினார். அத்துடன் நிறுத்தாமல் சீக்கிய குரு நாட்டில் நிலவி வந்த கட்டுக் கதைகளையெல்லாம் எழுத்தில் வடிக்கும் வேலையைச் செய்தார்.

1699 ஆம் ஆண்டில் சீக்கியர்களை எல்லாம் அனந்தபூர் நகருக்கு வரச் செய்து அவர்கள் முன்னிலையில் நின்றுகொண்டு தனது வாளுக்கு ரத்த அபிஷேகம் தேவைப்படுகிறது; தனது தலையைக் கொடுக்கும் துணிவுள்ளவர்கள் வாருங்கள் என அழைத்தார். ஒருவரும் வரவில்லை. (ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்பட்டிருக்கும்). மூன்றாம் முறையும் கேட்டபோது கத்ரி எனும் ஜாதியைச் சேர்ந்த தயாராம் எனும் 30 வயது இளைஞர் முன்வந்தார். மேடையில் மறைவான இடத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கூட்டம் பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது குரு வெளியே வந்தார். அவரின் கையிலிருந்த வாளிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. ஆனாலும் மறுபடியும் ஒரு வாலிபனைக் கேட்டார் குரு. கூடியிருந்தோர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. என்ன ஆயிற்று குருவுக்கு என்று பலரும் முணுமுணுக்கத் தொடங்கினர். என்றாலும் இந்த முறை ஒரு ஜாட் இளைஞர் முன்வந்தார், உயிர்த்தியாகம் செய்ய! மூன்றாம் முறையும் ஓர் உயிரைப் பலி கேட்டார் குரு. ஒரு வாலிபர், துவாரகாவைச் சேர்ந்த மொக்கம்சந்த் என்பவர் முன்வந்தார். அவர் கதை முடிந்ததும் நான்காம் முறையாகவும் ஓர் ஆள் வேண்டும் எனக் கேட்டார் குரு.

கூடியிருந்தவர்களில் பெரும்பாலோர் ஓட்டம் பிடித்தனர். என்றாலும் ஹிம்மத்சந்த் எனும் வாலிபர் முன்வந்தார். அய்ந்தாம் முறையாகவும் உயிர்ப்பலி வேண்டும் என்ற போதும் ஒருவர் வந்தார். பலியிடும் இடத்திற்கு அவரை குரு அழைத்துச் சென்றபோது, மக்கள் குருவின் தாயாரையும் குருவின் ஆலோசகர்களையும் கூட்டி இந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களும் மேடைக்கு வந்தபோது குருவும் உயிர்த்தியாகம் செய்ய ஒப்படைத்துக் கொண்ட 5 பேர்களும் மறைவிடத்தை விட்டு வெளியே வந்தனர். கூட்டம் மகிழ்ச்சியில் ஆரவாரித்தது. 5 முறையும் ஆடுகளை வெட்டி ரத்தம் தோய்ந்த வாளுடன் காட்சி அளித்து குரு நாடகம் நடத்தினார் என்ற விவரம் கூட்டத்திற்குக் கூறப்பட்டது.

ஓர் அண்டா நிறைய நீர் நிரப்பி அதனைக் கண்டா எனும் இருபுறமும் கூர் உள்ள கத்தியால் கலக்கி அது-தான் அமிர்தம் என்று கூறி, அய்ந்து இளைஞர்களையும் குடிக்க வைத்தார். அவர்கள் மதத்தில் சேர்த்துக் கொள்ளும் சடங்கு (Baptism) இதுதான். அதன்பின் அமிர்தத்தை அவரும் ருசித்தார். அந்த நொடி முதல் குருகோவிந்த் சிங் என்றாகிவிட்டார். அன்றைய நாளில் 20 ஆயிரம் பேர் சீக்கியர்களாகினர். வெட்டப்படாத தலை மயிர், தாடி, மீசை (கேசம் Kesh, இரும்பு வளையல் (கடகம் Kada), இறுக்கமான உள்ளாடை (கச்சம் Kangha) கையில் எப்போதும் சீப்பு (கங்கா முயபோய), கத்தி (கிர்பான் Kirpan) வைத்திருக்க வேண்டும் என்பது சீக்கியர்களின் அடையாளம் ஆக்கப் பட்டது. அந்த அமைப்பின் (கல்சா) அடையாளங்கள் என்றானது.

சீக்கியர்கள் புகைக்கக்கூடாது. போதை தரும் பானங்களைப் பருகக்கூடாது. காஷர் (இறைச்சியை) உண்ணக்கூடாது. மனைவியைத் தவிர வேறு பெண்களிடம் ஆசை வைக்கக்கூடாது. எல்லா சீக்கியர்களும் சமமானவர்கள் என்பதால் வேற்றுமை பாராட்டக்கூடாது. ஏற்றத் தாழ்வு என்ணுவதோ பார்ப்பதோ கூடாது. ஜாதிப் பிளவுகள் கூடாது. நிறைய கூடாதுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடைப்பிடிக்கப்படுகிறதா?

முக்கியமாக சமுதாயத்தைக் கூறு போட்டுப் பிளவுபடுத்தும் ஜாதி முறையை ஆதரித்து அனுஷ்டிக்கும் மதமாக இருப்பது குறித்து வெட்கப் படுவதேயில்லை. வெளிநாடுகளுக்குப் போனாலும் மத அடையாளத்தை ஜாதி பாகுபாடுகளின்படி வாழ்ந்து காட்டுகிற நிலை உள்ளதே! உணவு உண்பது தனி மனிதனின் விருப்பு, வெறுப்பு, பழக்கம், ருசி போன்றவை சம்பந்தப்பட்டது. அதில் மதம் குறுக்கிடுவதை எந்த மதமாக இருந்தாலும் ஏற்க முடியாது. உணவில் கட்டுப்பாடு விதிப்பதை இந்த மதமும் செய்துள்ளது. யூத மதத்தில் கோஷர் உணவு என்கிறார்கள். சீக்கிய மதத்தில் காஷர் (இறைச்சி) கூடாது என்கிறார்கள். கொல்லப்படும் கோழி, ஆடு, மாடு என்பவற்றைக் கழுத்தை அறுத்துக் கொல்ல வேண்டும் என்கிறது இசுலாம். ஒரே வெட்டாக வெட்டிக் கொல்ல வேண்டும் என்கிறது சீக்கியம்.

எல்லா மதங்களைப் போலவே, மறு உலகம், மறுவாழ்வு என்பதை சீக்கியமும் பேசுகிறது. இவ்வுலக வாழ்க்கையைப் பயணிகள் தங்கிச் செல்லும் சத்திரம் போல என்று பேசுகிறது.

குரு கோவிந்த்சிங்கிற்குப் பிறகு குரு பரம்பரை ஒழிக்கப்பட்டு கடைசி குரு எனப் புனித நூலை (ஆதி கிரந்தம்) அறிவித்து விட்டார்கள். 36 பேர்கள் எழுதிய பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. காலையும் மாலையும் அதை வணங்கவேண்டுமாம். (கடைப்-பிடிக்க வேண்டியது அல்லவா முக்கியம்?) அதை விட வேடிக்கை, வெண்சாமரம் வீசிக்கொண்டேயிருப்பார்கள் புத்தகத்திற்கு (வேர்க்குமோ?)

கடைசியாக குருகோவிந்த் சிங் சொல்லிய வரிகள்தான் புனித நூலில் உள்ளனவாம். ஆறாயிரம் பாடல்களாம். 31 ராகங்களாம். கடவுள் ஒன்றுதான், அதன் பெயர் உண்மை. அதுதான் அனைத்-தையும் படைத்தது, அதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை, தானே உருவானது, குருவின் அனுக்கிரகம் மூலம் மட்டுமே அதனை அடைய முடியும் என்று முக்கியமாகக் கூறுகிறது.

யூதத்திற்கு மோசே, கிறித்துவத்திற்கு யேசு, இசுலாத்திற்கு முகம்மது நபி, என்ற வகையில் சீக்கியத்திற்கு குரு. எனவேதான் அந்த மதத்தில் குரு ஆக வருவதற்கு இவ்வளவு போட்டிகளோ? சீக்கியர்களின் அடையாளமாகக் கருதப்படும் தலைப்பாகையில் கூட ஜாதி வேற்றுமை வெளிப்படுத்தப்படுகிறது. கூம்பு வடிவத் தலைப்பாகையைத் தாழ்த்தப்பட்டோர் அணியக்கூடாதாம். மேல்புறம் தட்டையாக இருக்கும் வகையிலான தலைப் பாகையைத்தான் அணிய வேண்டுமாம். இந்து மதம், தாழ்த்தப்பட்டவர்கள் தலைப்பாகையே கட்டக்கூடாது என்றது. அதற்கு இது பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

கொள்கைகளைப் பறக்கவிட்டுவிட்ட மதம் என்கிற பட்டியலில் சீக்கியமும் சேர்ந்து கொண்டு விட்டது!


------------------- சு. அறிவுக்கரசு அவர்கள் 22-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

உயிர் நாடியில் தேள் கொட்டியது போல துடிதுடித்த சோ


இனப் பற்று

கேள்வி: தமிழ்ச் சமுதாயம் முன்னேற ஜாதி உணர்வை அகற்றவேண்டும் என்ற கருணாநிதியின் யோசனை குறித்து?

பதில்: நீதிபதி தினகரன் முதல் மத்திய அமைச்சர் ராஜா வரை குற்றம் சாற்றப்பட்டவர்களின் ஜாதியை முன்னிறுத்தி வாதம் புரிகிறவருக்கு,இப்படியும் பேச மனம் வருவது ஒரு விசித்திரம் தான். தான் என்ன பேசினாலும் மக்கள் ஏற்பார்கள் என்ற நினைப்பு முதல்வருக்கு முழுமையாக வந்துவிட்டது.

------------------------------(துக்ளக் 24.2.2010)

இப்படி எழுதுகிறவர் யார் தெரியுமா? ஆண்டுதோறும் பூணூலைப் புதுப்பித்துக்கொள்கிற சோ ராமசாமி தான்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி தினகரன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நேரத்திலும், கருநாடக மாநிலத் தலைமை நீதிபதியாக இருந்த நேரத்திலும் அவர் மீது பாயாத குற்றசாற்று, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் போகிறார் என்றவுடன் அக்கிரகாரத்து அம்மிக்குழவி ஆகாயத்தில் பறப்பது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ராமச்சந்திர அய்யர் வயதைத் திருத்தி பதவியை நீட்டிக்கொண்டபோது, நேர்மையான முறையில் பார்ப்பனர்கள் எதிர்த்திருந்தால் அவர்களுக்கு ஜாதிப் புத்தி இல்லை போலும் என்று நினைத்திருக்கலாம், கண்டு கொள்ளவில்லையே.

கொலைக்குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு 61 நாள் சிறையில் இருந்தவர் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி, அவரைப் பற்றி ஊரு உலகத்துக்கே தெரியும்.

இருந்தும் கொலை வழக்கில் சங்கர மடத்துக்கு அநீதி நடந்துள்ளது என்று இந்தியா டுடேக்கு (9.2.2005) பேட்டி கொடுத்தாரே, திருவாளர் சோ இதற்குப் பெயர் ஜாதிப் புத்தி இல்லாமல் வேறு என்ன புத்தியாம்?

வீரமணியிடம் சோவை நான்தான் அனுப்பினேன். நான் தயாரித்த கேள்விகளைத் தான் சோ வீரமணியிடம் கேட்டார் என்று சின்னக்குத்தூசியிடம் ஜெயேந்திர சரஸ்வதி சொன்ன குட்டை எதிரொலி ஏட்டிலே (3.4.1983) சின்னக்குத்தூசி போட்டு உடைத்துவிட்டார். மற்றவர்களுக்குக் கையாளாக செயல்படக் கூடியவர் சோ என்று அம்பலமானதும், உயிர் நாடியில் தேள் கொட்டியது போல துடிதுடித்தார் சோ.

நியாயமாக சோ என்ன செய்திருக்க வேண்டும்?. சங்கராச்சாரி சொன்னது உண்மைக்கு மாறானது என்றால் அவரிடம் சண்டைக்குத் தானே போயிருக்க வேண்டும்?.

அவாளின் ஆதர்ஷப் பெரியவாளாயிற்றே! என்ன எழுதினார் சோ?.

இப்பொழுது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என்று நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பெக்ட் ஃபார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் என்றாரே பார்க்கலாம்.

மறுக்க வேண்டிய இடத்தில் மறுக்காததோடு அந்த மடத்தினிடத்தில் மரியாதை வைத்துள்ளேன் என்றாரே! இதற்குப் பெயர் என்னவாம்?.

இந்த ஜாதிப் புத்தியும், இனவெறியும் கொண்டவர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வக்காலத்து வாங்கும் கலைஞரைத் தூற்றுகிறார்.

---------------- மயிலாடன் அவர்கள் 22-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

எங்கும் பார்ப்பன ஆதிக்கமே!கோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாகச் சில தாலுகாக்களுக்கு நியமிக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. நமது ஜில்லா போர்டிலும் நமது ஜில்லாவிற்குட்பட்ட எல்லாத் தாலுகா போர்டிலும் பிராமணரல்லாத கனவான்களே தலைவர்களாயிருந்து வருகின்றனர். நம் நாட்டிலோ எல்லா உத்தியோகங்களையும், பார்ப்பனர்களே வெகுகாலமாகக் கொள்ளையடித்து வந்திருக்கின்றனர் என்ற கிளர்ச்சி பலமாக இருந்து வருகிறது. பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டையாலேயே நம் நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கட்சி உண்டானதென்பதில் சந்தேகமில்லை. பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கிளர்ச்சி தோன்றியபின் பார்ப்பனருக்கு இனி அதிகம் உத்தியோகம் கொடுக்கக் கூடாது; பார்ப்பனரல்லாதார்களுக்கே கொடுத்து வரவேண்டும் என்ற அபிப்பிராயத்திற்கு சர்க்காரிலுங்கூட ஆதரவு காட்டி வந்திருப்பதாகத் தெரிகிறது.

அப்படியிருக்க நமது ஜில்லா லோகல் போர்டு ஸ்தானங்களில் பார்ப்பனரல்லாதார்களே தலைவர்களாயிருந்தும், இவ்விடம் நியமிக்க வேண்டிவந்த நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பர்ப்பனர்களுக்கே கொடுத்ததானது பெரிய அநியாயமாகும். பார்ப்பனரல்லாத டாக்டர்கள் டாக்டர் வேலைக்கு இலாயக்கில்லையென்று போர்டார் நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. நமது ஜில்லாவில் அநேகப் பார்ப்பனரல்லாத டாக்டர்கள் பாஸ்செய்துவிட்டு வேலையில்லாமல் காத்திருக்கும் போது, ஒரு ஸ்தானங் கூடப் பார்ப்பனரல்லாதாருக்குக் கொடுக்காமல் நான்கையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததற்குப் பார்ப்பனரல்லாதார் மிகவும் வருந்த வேண்டியிருக்கிறது. போர்டு தலைவர்கள் இம்மாதிரி அநியாயம் செய்ய என்ன அவசியமேற்பட்டதோ தெரியவில்லை, என்னவோ சில சிபார்சுகள் என்ற சிறிய காரணம் தவிர, வேறு காரணம் சொல்ல முடியாதென்றே நினைக்கிறோம். உத்தியோக வேட்டையில் கைதேர்ந்த பார்ப்பனர்களுக்கு ஆளுக்குத் தகுந்த சிபார்சு பிடிக்க தெரியாமற்போகாது. கேவலம் சிபார்சுகளுக்கு தாலுகாபோர்டு தலைவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகக் கொடுத்திருப்பார்களென்பதை எண்ணும் போது வருத்தப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் தற்சமயம் தலைமை வகித்துவரும் போர்டு தலைவர்கள் பார்ப்பனரல்லாதாரின் சேமத்தில் அக்கறையில்லாதவர்களல்லர். ஆனால் பார்ப்பன டாக்டர்கள் மேற்படி ஸ்தானத்தை அடையச் செய்த சூழ்ச்சிகளுக்கு நாட்டின் அபிப்பிராயத்தையும் பார்ப்பனரல்லாதார் சேமத்தில் போர்டு தலைவர்களுக்குள்ள அக்கறையையும் பலி கொடுத்துவிட்டதானது, பார்ப்பனரல்லாதாரின் துர்பாக்கியமென்றே சொல்ல வேண்டும். எப்படியோ அந்தந்த தாலுகா போர்டு தலைவர்களைச் சரிப்படுத்தித் தங்கள் தங்களுக்கு ஆதரவு காட்டும்படிச் செய்து நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பார்ப்பனர்கள் அடித்துக் கொண்டு போனதை நினைக்கும்போது, நம்மவர்களுக்குக் கண்ணிருந்தும் பார்க்க முடியவில்லை, காதிருந்தும் கேட்கமுடியவில்லை, வாயிருந்தும் பேச முடியவில்லை, மனமிருந்தும் அறியமுடியவில்லை என்று சொல்வதைத் தவிர நாமொன்றும் சொல்லக் கூடவில்லை. இனிமேலாவது போர்டு தலைவர்கள் இது விஷயத்தைக் கவனித்துச் செய்வார்களென்று எதிர்பார்க்கிறோம்.

--------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" கட்டுரை - 23.01.1927

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! -14


மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!


அமர்தாசுக்கு அடுத்து குருவாக நியமிக்கப்பட்டவர் குரு ராம்தாஸ். இவர் குரு அமர்தாசின் மருமகன். தம் மனைவி பீபிபானி என்பவருக்குத் திருமணப் பரிசாகப் பேரரசர் அக்பர் வழங்கிய கிராமத்தில் ஒரு புதிய நகரை இவர் உருவாக்கினார். அதுதான் இன்றைய அமிருதசர். அவர் வெட்டிய குளம்தான் அமிருதசர் எனப்படுகிறது. பொற்கோயில் என்று அழைக்கப்படும் ஹர்பந்தர் சாகிப் குருத்வாரா அப்போது கட்டத் தொடங்கப்படவில்லை. குரு ராம்தாஸ் பொறுப்பு ஏற்று 7 ஆண்டுகளில் இறந்துவிட்டது ஒரு காரணம். (7 நாள்களில் கும்பகோணம் சங்கர மடத்தலைவர் இறந்து போனார் எனும்போது 7 ஆண்டுகளைப் பெரிதாக நினைக்க வேண்டும்.)

தம் இளைய மகன் அர்ஜன் தாஸ் என்பவரைத் தனக்குப் பிறகு குருவாக நியமித்தார் குரு ராம்தாஸ். குடும்பத் தலைமை தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இதனை குரு ராம்தாசின் மூத்த மகன் பிரீத்தி சந்த் ஏற்காமல் எதிர்க்கத் தொடங்கினார்.

இதைப் பற்றிக் கவலைப்படாமல் குரு அர்ஜன்தாஸ் ஹர்மந்தர் சாகிபைப் (பொற்கோயில்) கட்டும் பணியைத் தொடங்கினார். இப்பணியை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தவர் மியான் மிர் எனும் முசுலிம் பெரியவர். நான்கு பக்கங்களிலும் வாசல் வைத்துக் கட்டி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்று திட்டம்.

குரு பதவி கிடைக்காத குரு அர்ஜன்தாசின் அண்ணன் பிரீத்தி சந்த் ஒரு காரியம் செய்தார். தாமே பாடல்கள் எழுதினார். அவற்றை (முதல்) குரு நானக் பாடியதாகப் பரப்பி அமிருதசர் வரும் பக்தர்களிடம் பரப்பி வந்தார். இதை அனுமதித்தால் கண்டதும் குருநானக் பெயரில் வந்துவிடும் என்று பயந்து குரு அர்ஜன்தாஸ், அதிகாரப் பூர்வப் பாடல்களைத் தொகுத்தார். நான்கு குருமார்களின் பாடல்களையும் சேர்த்து தாம் எழுதியவற்றையும் இணைத்து போற்றி என்றும் புனித எழுத்துகள்என்றும் கூறப்படும் தொகுப்பை இறுதி செய்தார். அன்றைய நாளில் பிரபலமாக இருந்த இந்து சாமிகளின் பாடல்கள், முசுலிம் புனிதர்களின் பாடல்கள் ஆகியவற்றையும் இதில் இணைத்திருந்தார். பிரீத்தி சந்த் சும்மா இருக்கவில்லை. முகலாயர்களின் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இந்து முசுலிம் இறைத் தூதர்களை இழிவு செய்யும் விதத்தில் பாடல்கள் இருப்பதாகப் புகார். பேரரசர் அக்பர் அந்த நூலைப் பார்வையிட்டு, அம்மாதிரி ஏதும் இல்லை என உணர்ந்தார்.

அக்பருக்குப் பின் அரசரான ஜஹாங்கீர் குரு அர்ஜன் சிங்கிற்குக் கட்டளை பிறப்பித்தார். புனித நூலில் இந்து, முசுலிம் மதங்களைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கும் கருத்துகளை நீக்கிவிடவேண்டும் என்று கட்டளை. குரு அர்ஜன்சிங் இதனை ஏற்க மறுத்தார். இதற்காகஅவருக்கு 2 லட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. குரு தண்டம் கட்டவில்லை. அரசு காஜி குருவை கைது செய்து கொடுமைப்படுத்தினார். தொடர்ந்த கொடுமைகளுக்குப் பிறகு ஆற்றில் குளிக்கப் போனவர் திரும்பவில்லை. மறைந்து விட்டார்.

ஜாதிகளை எதிர்த்துத் தொடங்கப்பட்ட சீக்கிய மதம் இன்று எப்படி உள்ளது? ஜாதிப் பிரிவினைகளைக் கொண்டிருக்கிற இரு மதங்களில் இந்து மதத்திற்கு அடுத்து சீக்கிய மதம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறதே! இந்து மதத்தைப் போலவே ஜாதிக் கொடுமைகளைத் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குச் செய்வதில் கொடி கட்டிப் பறக்கிறதே! நான்கு வாயில்கள் உள்ளன என்றாலும், எல்லா வாயில்களிலும் எல்லா ஜாதியினரும் உள்ளே வரலாம் என்ற அமைப்பில் குருத்வாராக்கள் கட்டப்பட்ட மதத்தில், தாழ்த்தப்பட்டோர் நுழைய முடியாத நிலை, நுழையாத நிலை உள்ளதே! தங்களை அவமானப்படுத்தும் வழிபாட்டு இடத்திற்கு வருவதற்கு மனம் இல்லாதவர்கள் தனிக் கட்டடம் கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இந்து மதம் போலவேதானே சீக்கியமும்? தங்களுக்கென தனி குருமார்களை உண்டாக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால்... இந்து மதத்தை விட இந்த மதம் எந்த வகையில் உசத்தி? கடல் கடந்து வாழும் நாடுகளில் கூட, ஜாதி வேற்றுமை பாராட்டிக் கொலையும் செய்யும் நிலை இருக்கிறது என்று சொன்னால்... சமூகம் எங்கே ஒன்றாக இருக்கிறது?

அரசு ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட அதற்குப் பயந்து திருத்தப்படாத புனிதநூல் தாழ்த்தப் பட்டவர்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்கும் புதிதாக எழுதப்படும் நிலை தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது என்றுதானே காட்டுகிறது?

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்!

-------------------------சு. அறிவுக்கரசு அவர்கள் “விடுதலை” 20-2-2010 இல் எழுதிய கட்டுரை