Search This Blog

30.4.11

மே தினம் பற்றி பெரியார்


மே தினம்

மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.

தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்கள் . தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறு குழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர். அனுதினமும் வேகா வெய்யிலிலும், குளிரிலும் தீக்ஷண்யத்திலும், வயலிலும், பாலைவனத்திலும் உழைத்து வருகின்றவர் யார்? இவ்வளவு கஷ்டமும் தங்கள் வயற்றுக்கு மட்டிலும் தானா? மணிக்கு 100 மைல் ஓடும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஆயிரக்கணக்கான பிரயாணிகளுடைய உயிர் ஒரு சிக்னல் மென் அதாவது, அடையாளம் காட்டும் ஒரு கூலிவயமிடமிருக்கின்றது! அவனைப் பன்னிரண்டு மணி நேரம் இரவில் விழித்திருக்க வேண்டுமென்றால் இதனினும் கொடுமை எங்குளது. இவன் 8மணி நேரம் வேலை செய்வதுதான் உசிதமென்று வாதமிட்டால், அவனை மிஷின் கன்களைக் கொண்டு கொல்லுவதென்றால் யாரால் பொருக்க முடியும். இத்தியாதி கொடுமைகளைப் போக்கி, உலகத்தில் தொழிலாளருக்கு நியாயத்தை ஸ்தாபிக்க நேர்ந்த தினம் இந்நாளாகும்.

சென்னை புளியந்தோப்பில் பன்னீராயிரம் நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து மாத காலமாக பசியும் பட்டினியாயும் கிடக்க நேரிட்ட காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் கருங்காலிகளை நிறுத்த எத்தனித்த காலையில், அமைதிக்கும் ஒழுங்குக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரிகள் தொழிலாளர் எழுவரைச் சுட்டுக் கொன்றனர்!! இத்தியாகத்தைக் கொண்டாடும் தினமும் மே தினமாகும்.

1905ம் வருஷத்தில் வீணாக ஜப்பானியர் மேல் படையெடுத்த ஜார் சக்கிரவர்த்தியின் கொடுமையைத் தடுக்க முயன்ற ரஷியத் தொழிலாளிகள், பதினாயிரக்கணக்காக கொல்லப்பட்ட ஞாபக தினமும் இத்தினமாகும்.

பிரான்சு தேசம் புரட்சிக்கு பின்பு பிரான்சு நாட்டில், அநீதியும் கொடுமையும் மிகுந்து வந்தபடியால் பிரான்சு தேச தொழிலாளிகளும், விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பாரீஸ் நகரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை, தீ கம்யூன் என்ற உழைப்பவர்கள் ஆட்சியை ஸ்தாபித்த காலை, முதலாளிகளுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான பிரான்சுத் தொழிலாளர்களுடைய ஞாபகத்தைக் குறிக்கும் தினம் இம் மேதினமாகும்.

ஆங்கில நாட்டினும் நிலவரியிலும், நிலங்களை இழந்ததாலும் மனம் பொறாத தொழிலாளர்கள் சார்ட்டிஸ்ட் என்ற இயக்கத்தைக் கிளப்பியதன் காரணமாக, அக்கூட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் நாசப்படுத்திய ஞாபகப் படுத்தப்படும் தினம் இத்தினமாகும்.

சீன நாட்டில் சன்யாட்சன் என்ற பெரியோர் ஸ்தாபித்த தேசீயத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பட்ட தொழிற்கட்சியை நாசமாக்கிய ஞாபக தினமும் இதுவாகும்.

நேற்று தென்இந்திய ரயில்வேயில் முப்பதினாயிரம் பேர்கள் வேலை நிறுத்திய காலையில் அவர்களின் தலைவர்கள் நிரபராதிகளாகிய பதினெட்டு பேரை, பத்து வருஷம் சிறை வாசமிட்ட ஞாபக தினமும் இத்தினமாகும். இவ்விதமாக உலகம் முழுமையும் அந்தந்த நாடுகளின் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றிய நாள் முதல் பல்லாயிரக்கணக்காக கஷ்டப்பட்டு, மாண்டு மடிந்த உழைப்போர்களுடைய தியாகத்தை ஞாபகார்த்தமாக கொண்டாட இத்தினம் ஏற்பட்டுள்ளது.

உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர் களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாக வில்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைப் போல் ஒத்திருக்கின்றது. முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால்தான், சுகப் பேற்றையடைய முடிகின்றது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார் லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும் இந்த பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து தங்கள் தத்துவத்தைக் கட்ட வேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், ஸகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம தத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.

உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம், துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கிறபடியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்.

இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்குமல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும், இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்த சந்ததியார் உலக சுகப் பேற்றை பெறவும் செய்யும் தியாகமாகும்.

தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்தி வர கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போலும்!! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இத்யாதி வியர்த்தங்களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர். இனிவரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல. வல்லரசுகளின் ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!! இம்மாபெரும் கேட்டைத் தடுப்பதற்கு உலகில் ஒருவரேயுளர். அவர்களால்தான் ரஷ்ய தேசம், புரட்சிக்குப் பின் நடந்த உள்நாட்டுக் கலகம் அடக்கப்பட்டது. வெளிநாடுகளின் உதவி பயன்படாமல் போயிற்று. போலண்ட் தேசத்து நெருக்கடியைச் சாக்காக வைத்துக் கொண்டு வல்லரசுகள் சோவியத் அரசை நசுக்கச் செய்த முயற்சி வீணானதாயிற்று. இவர்கள் யாரெனில் அகில உலக தொழிலாளர்களாவர். இவர்கள் தான் உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை கொண்டவர். இவர்கள்தான் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டியதொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப்பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய தொன்றே. இந்த ஒற்றுமைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டுதோறும் பட்ட கஷ்ட நிஷ்டூரங்களை யெல்லாம் ஞாபகப்படுத்தும் தினம் மே மாதம் முதல் தேதியாகும்.

---------------தந்தை பெரியார் - “ புரட்சி” தலையங்கம் 29.04.1934
******************************************************
மே விழாவும் ஜூபிலி விழாவும்

மே மாதம் முதல் தேதியில் மே தினக் கொண்டாட்டமும், மே மாதம் 6ந் தேதி மன்னர் ஜூப்பிலியும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஒன்று போலவே எங்கும் கொண்டாடப்பட்டிருக்கும் விஷயம் தினசரிப் பத்திரிகைகளில் பரக்கக் காணலாம்.

மே தின விழாவானது உலகம் பாடுபட்டு உழைக்கும் மக்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டாடுவதாகும்.

ஜூப்பிலி விழா இன்று ஆட்சி புரியும் அரசரின் ஆட்சியைப் பாராட்டியும் அவரது ஆட்சிக்கு கால் நூற்றாண்டு ஆயுள் ஏற்பட்டதை பற்றி ஆனந்தமடைந்தும் இனியும் நீடூழி காலம் இவ்வாட்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைபட்டும் கொண்டாடியதாகும்.

இந்தியாவின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படும் இந்திய தேசீயக் காங்கிரசானது மேற்கண்ட இரண்டு தத்துவங்களுக்கும் விரோதமான மனப்பான்மையைக் கொண்டது.

எப்படியெனில் முறையே (சூத்திரர்) தொழிலாளி, (பிராமணர்) முதலாளி அல்லது அடிமை எஜமான் என்கின்ற இரண்டு ஜாதிகள் பிறவியின் பேரிலேயே இருக்க வேண்டும் என்றும், அன்னிய ஆட்சி என்பதான பிரிட்டிஷ் ஆட்சி கூடாது என்றும் சொல்லும்படியான கொள்கைகளைக் குறிக்கோளாகக் கொண்டதென்று சொல்லிக் கொள்ளும் ஸ்தாபனமாகும்.

ஆனால் இந்திய மக்கள் இந்த இரண்டு கொள்கைகளைக் குறிக்கோளாகக் கொண்ட காங்கிரசை சிறிதும் மதிக்கவில்லை என்பதை இந்த இரண்டு விழாவும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டி விட்டது.

காங்கிரசானது வெளிப்படையாக இந்த இரண்டு விழாக்களையும் எதிர்க்க யோக்கியதை இல்லையானாலும் மனதிற்குள் தனக்கு உள்ள அதிர்ப்தியை பல வகைகளில் காட்டியது போலவே நடித்துக் கொண்டது. ஒரு பயங்கொள்ளித் தீர்மானத்தையும் போட்டு விளம்பரப்படுத்திற்று. என்ன செய்தும் ஜபம் சாயவில்லை.

இந்த இரண்டு விழாவும் இது வரை நடந்ததைவிட பல மடங்கு அதிகமாகவே கொண்டாடப்பட்டுவிட்டது.

இந்த நாட்டில் தேசீய அபிலாசைகளுக்கு சர்வாதிகாரிகளாகவும், ஒரே பாஷ்யக்காரர்களாகவும், இருந்து வந்தவை இந்து, சுதேசமித்திரன் பத்திரிக்கைகள்.

அவைகள் தங்களுக்கு இஷ்டப்பட்டபோது அரசரை விஷ்ணுவின் அம்சம் என்று பூஜிப்பதும் தங்களுக்கு இஷ்டமில்லாதபோது அரசர் மாளிகைக்குள் யாராவது சென்று வந்தால் அவர்களை தேசத் துரோகிகள் என்றும், தேசத்தைக் காட்டி கொடுப்பவர்கள் என்றும் சொல்லுவதுமாய் மக்களை ஏய்த்து ஆட்சியையும் மக்களையும் தங்களுக்கு அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இந்த இந்து, சுதேசமித்திரன் சூட்சிகளையும் அவர்கள் கூட்டத்தினர் களின் மோசங்களையும் கண்டபின் இந்திய மக்கள் பெரும்பான்மையோர் அன்னியர் ஆட்சியாலேயேதான் இக் கூட்டத்தாரின் சூட்சிகளிலும் கொடுமை களிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

இதை உணர்ந்த இந்து, சுதேசமித்திரன் கூட்டம் இப்பொழுது ராஜபக்திக்குப் போட்டி போட ஆரம்பித்து விட்டன.

அதாவது கொஞ்சகாலத்துக்கு முன்பு இந்நாட்டுக்கு விஜயம் செய்த இளவரசர் அவர்களை என்னஎன்னமோ பொருத்தமில்லாத வீம்புகளையும், வீரியங்களையும் எடுத்துச் சொல்லி பஹிஷ்காரம் செய்யத் தூண்டிய கூட்டம் இன்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு நிபந்தனையற்ற சரணாகதி போல் வாழ்த்துப் பாடி இருக்கின்றன.

அதாவது "மாட்சிமை" தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் அரசர்,

"வெள்ளி விழா கொண்டாடும் இந்த சுபதினத்தில் மன்னர் பிரானை நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுவதோடு அவர் ஆரோக்கியமாக திடகாத்தரராக நீடூழி வாழ்ந்துவர வேண்டுமென்று நாம் பிரார்த்திக்கிறோம்".

"அவருடைய இந்தியப் பிரஜைகளுக்கு அவரிடத்தில் பூரண நல்லுணர்ச்சி இருந்து வருமென்பதில் சந்தேகமில்லை".

"மனமார வாழ்த்துக் கூறுகிறோம்" என்று எழுதி இருக்கின்றன.

இந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் நாம் ஆக்ஷேபிக்க வரவில்லை. இந்தியா ஒட்டுக்குமே பஹிஷ்காரம் செய்த சைமன் கமிசனை வரவேற்று உண்மையை எடுத்துரைத்தவர்களுக்கு அரசரிடத்தில் மனஸ்தாபம் கொள்ள எவ்வித காரணமும் இருக்காதல்லவா. ஆனால் தேசீயப் பித்தலாட்டத்தின் யோக்கியதையை வெளிப்படுத்த இதை எழுதுகிறோம்.

நிற்க, இன்று இந்தியாவில் பிரிட்டிஷ் அரசராலோ, அரசாங்கத்தாராலோ ஏதாவது காரியங்கள் ஆக வேண்டி இருக்குமானால் அது பழய அரசர்களைப் போல் பிராமணர்களைக் காப்பாற்றுவதோ சுதேச அரசர்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் பாதுகாப்புகள் அளிப்பதோ வியாபாரிகளுக்கும் வட்டிக் கடைக்காரர்களுக்கும் கொள்ளை லாபம் உண்டாகும்படி நீதி செலுத்துவதோ அல்ல. இந்தக் கூட்டங்கள் ஏற்கனவே உச்ச ஸ்தானத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு சுபீக்ஷமாக ஒன்று பத்தாக அக்ஷயமாக வாழ்ந்து வருகின்றன.

எனவே அரசர் கருணையும் அரசாங்க நீதியும் ஏழை மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் ஏதாவது விமோசனம் செய்வதற்குப் பயன்பட வேண்டியதே முக்கியமாகும். இந்தத் துறைகளில் இதுவரை இந்த ஆட்சி ஏழை மக்களுக்கு ஒரு விதாயமும் செய்ததாகத் தெரியவில்லையானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெண் மக்களுக்கும் இதுவரை இந்தியாவில் இருந்த எந்த அரசும் ஆட்சியும் செய்திராத காரியத்தை ஒரு அளவுக்காவது செய்திருக்கிறது என்பதை நாம் தைரியமாய்ச் சொல்லுவோம்.

மற்றும் வேறு யாராவது குறை சொல்வதாய் இருந்தாலும் இத்துறைகளில் இதுவரை செய்தது போதாது என்றுதான் சொல்ல முடியுமே யொழிய ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லிவிட முடியாது.

ஆதலால் நமது மன்னர் அவர்களும் அவரது ஆட்சியும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களால் பாராட்டக் கூடியதே என்பதோடு இந்த ஆட்சியை நீடூழி காலம் நிலவ வேண்டும் என்றும் அவர்களால் வேண்டப்படுவதுமாகும்.

ஏழை மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்பது மாயத்தி னாலும் மந்திரத்தினாலும் சாத்தியப்படக் கூடியதல்ல.

பலர் ஊரைக் கொள்ளையடித்து குதிரில் கொட்டிக் கொண்டு 10 மூட்டை அரிசியை வேக வைத்து நொண்டி, முடம், கூன், குருடு, சோம்பேறி களுக்குப் போட்டுவிட்டால் ஏழை மக்களுக்குப் பெரிய உபகாரம் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். இந்த முறை இந்த ஜூபிலியிலும் மே விழாவிலும் கூட பல இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது.

சிலர் சத்திரமும் சாவடியும் கட்டி சோம்பேறிகளுக்கும் சோதாக்களுக்கும் அன்னமளித்து உறங்க இடம் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இது ஏழை மக்களை ஏமாற்றுவதேயாகும். இதனால் யாதொரு பலனும் ஏற்படப் போவதில்லை. சோம்பேறிகளும் காலிகளும் தான் இன்னமும் அதிகமாவார்கள்.

சிலர் பார்ப்பனர்களுக்குச் சாப்பாடு, கல்வி, கல்யாணம், சாந்தி முகூர்த்தம் செய்வித்தல் ஆகியவைகளைச் செய்து விட்டால் அதுவே ஏழைகளுக்குச் செய்ய வேண்டிய, பெரிய தருமம் செய்து விட்டதாக எண்ணுகிறார்கள். இவர்களைப் போல கண்காட்சிக்கு அனுப்பக் கூடிய ஞான சூனியர்களைக் காண்பது அரிது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே ஏழைகளுக்கு உதவி செய்வது என்பது ஏழ்மைத் தன்மை மனித சமூகத்தில் இல்லாமல் இருக்கும்படி செய்வதே ஒழிய இங்கொரு வனுக்கு அங்கொருவனுக்கு சோறு போடுவதால் அல்ல என்பதே நமது அபிப்பிராயம்.

ஏழ்மைத் தன்மை என்பது மனித சமூகம் ஒட்டுக்கே அவர்களது சாந்தமான வாழ்க்கைக்கே ஒரு பெரும் தொல்லையும் அசௌகரியமுமான காரியம் ஆகும்.

ஆதலால் மன்னர்பிரான் இந்த ஏழ்மைத் தன்மையை அடியோடு ஒழிப்பதற்கு சென்ற 25 ஆண்டு மாத்திரம் அல்லாமல் இன்னும் 50 ஆண்டும் அல்லாமல் 100 ஆண்டு ஆள வேண்டும் என்றும் ஆசைப்படு கின்றோம். அவரது வெள்ளி விழா, மே விழாவை ஒட்டி வந்திருப்பதாலும், மே விழா வெள்ளி விழாவை விட உலக முழுவதும் சுதந்திரத்தோடும் குதூகலத்தோடும் உணர்ச்சியோடும் கொண்டாடப் பெற்றிருப்பதாலும் இதுவே உலக பாட்டாளி மக்களின் அபிலாசையைக் காட்ட ஒரு சாதனமாய் இருப்பதாலும் அடுத்த விழா அதாவது அரசரின் தங்க விழா சமதர்ம விழாவாக மக்கள் எச்சாதியினராயினும், எம்மதத்தினராயினும், எத்தேசத்தவராயினும் பேதமற்று ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் எங்கும் இல்லாமல் இருக்கும்படியாகச் செய்த தினத்தைக் கொண்டாடும் விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்பதே நமதபிப்பிராயமும் ஆசையுமாகும்.

மே திருவிழா விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் நாம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே நடந்து காட்டியதற்கு மகிழ்ச்சியோடு பாராட்டுவதுடன் இனி கொண்டாடப் போகும் மே விழாக்கள் மற்றவர்களைப்போல் நாம் ஆக வேண்டுமென்று ஆசைப்படும் திருவிழாக்களாக இல்லாமல் நம்மைப் பார்த்துப் பிறர் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும் திருவிழாவாக நடைபெற வேண்டுமென்றும் ஆசைப்படுகின்றோம்.

----------------- தந்தை பெரியார் -“குடி அரசு” தலையங்கம் 12.05.1935
*********************************************

மே தினம் என்றால் என்ன?
இந்தியாவுக்கு ஏற்ற மே தினம்

தோழர்களே!

மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதானாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெய்னில் கொண்டாடப்படுவது போல் பிரஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவே தான் மேல் நாடுகளில் ஐரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.

ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.

ஆரம்ப தசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.

இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொருத்ததாகும்.

இங்கிலாந்து, பிரஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதன் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.

மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள்.

அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி யென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில்

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு அடிமைப் படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய்க் கொள்ளாமல் மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும் செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்ற கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும் அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.

நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.

ஐந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.

இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.

இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும் ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100க்கு 99லு பேர்கள் இன்று அடிமையாக இழி மக்களாக நடத்தப்பட வில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல் ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளி களாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா என்று பாருங்கள்.

மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீரப் பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும் சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி முதலாளி அல்லது எஜமான் அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான் சூத்திரன் பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில் தான் பெரியதொரு கிளர்ச்சியும் புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாட வேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளியாகவும், அடிமையாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப்பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறுவிதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி அந்தஸ்துடன் வாழுவதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய் இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.

ஆகவே ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத்தன்மையையும் அழிக்காமல் வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.

இந்தியாவில் ஏழை மக்களுக்கு ஆக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.

ஏதாவது ஒரு தொழில்சாலையில் நித்திய கூலிக்கோ மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசி விடுவதினாலேயே அல்லது அத் தொழிலாளிகள் விஷயமாய்ப் பேசி விடுவதினாலேயே அல்லது அவர்களுக்கு தலைமை வகிக்கும் பெருமையை சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளி களுக்குப் பாடுபட்டவர்களாகக் கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல் தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.

இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத் திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகின்றேன்.

இந்த முதலாளி தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர் கருப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களேயாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும்.

ஆகையால் இதில் வெள்ளையர் கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.

இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும் மதத்தையும் காப்பாற்று வதையே முக்கியமாய்க் கொண்டிருப்பதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன்.

இன்று நம் நாட்டில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி முதலாளி வகுக்கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது.

இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.

இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம் வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண் பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும் தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள் நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்ய வேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.

நிற்க, இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில் நமது பண்டிகைகளில் அனேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும் வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர் கூடி இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இன்னாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.

பெண்களையும் வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.

தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம் பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில்விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்மந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.

ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

------------------01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையேற்று ஆற்றிய முடிவுரை. ”குடி அரசு” - 12.05.1935

***********************************

மே தினக் கொண்டாட்டம்

சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள் ஆண் பெண் அடங்கலும் மே 1ந் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

ரஷியாவில் தொழிலாளர் தங்களது ஓரளவு வெற்றியை நினைத்து வெற்றி தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

மற்ற தேசங்களில் தொழிலாளர் குறைபாடுகளை வெளிப்படுத்தி உலக அரசியலிலும், சமூக இயலிலும் தொழிலாளர்கள் சமத்துவமும் ஆதிக்கமும் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டு மே தினம் கொண்டாடுகிறார்கள்.

இந்தியர்களாகிய நாமும் சமூகத்துறையில் ஜாதி மத இழிவிலிருந்தும், பொருளாதாரக் கொடுமையில் இருந்தும் விடுதலை பெறவும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பொதுக்கூட்டம் கூட்டி நமது இழிவையும், கொடுமையையும் எடுத்துச் சொல்லி சகல மக்களுக்கும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கவேண்டுமென்று விளக்கிக் கொண்டாட வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன்.

---------------------- ஈ.வெ.ராமசாமி - ”குடி அரசு” அறிக்கை 19.04.1936

மே தினம் - தமிழர்களின் பண்டிகை நாள் - சமதர்மப் பெருநாள்!


மே 1 : தமிழர்களின் பண்டிகை நாள்

மே தினம் என்பது தொழிலாளர் தினம். சர்வதேசத்திலுமுள்ள தொழிலாளர்கள் மே தினத்தைத் தங்களுடைய பண்டிகையாகக் கொண்டாடி வருகிறார்கள். மே மாதம் 1-ஆம் தேதி மே தினமாகக் கொண்டாடப்படுகிறது.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில், உலகிலுள்ள, எல்லா நாடுகளிலும், முதலாளிகள் தொழிலாளர்களைத் தினசரி 12 அல்லது 14 மணி நேரம் வரையில் வேலை செய்யும்படி வற்புறுத்தி வேலை வாங்கி வந்தார்கள். (இப்பொழுதும் இந்நாட்டில் பல நகரங்களில் நெசவுச் சாலை முதலிய தொழிற்சாலைகளின் முதலாளிகள் தினந்தோறும் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்று தொழிலாளர்களை நிர்பந்தப்படுத்துவதைப் பார்க்கிறோமல்லவா?)

அமெரிக்கா தேசத்துத் தொழிலாளிகள் அக்காலத்தில் வேலை நேரத்தை 8 மணி நேரத்துக்குக் குறைக்கும் படி கிளர்ச்சி செய்தார்கள். அவர்கள் இந்த ஞாயமான உரிமைக்காக போராடியபோது, தொழிலாளிகள் கட்டுக் கொல்லப்பட்டார்கள். அன்று உலகிலுள்ள தொழிலாளர்களின் பொருட்டு இந்த உத்தமர்கள் போராடியதால்தான், உலகில் இப்போது பெரும்பாலும் தொழிலாளர்கள் தினம் 8 மணி நேரம் வரையில் வேலை செய்ய இடமேற்பட்டிருக்கிறது. ஆகவே இந்த உத்தமர்களைப் புகழும் பொருட்டும், தொழிலாளர்களின் ஞாயமான உரிமைக்காக நேர்மையான முறையில் தக்க கிளர்ச்சி செய்யும் பொருட்டும் தொழிலாளர் களும், தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபடும் சமதர்மிகளும் மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் முதலிய முதலாளி தேசங்களில் ஒவ்வொரு தொழிலாள சங்கத்தாரும் மே மாதம் முதல் தேதியன்று உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றும் தொழிலாளர்களுக்குச் சாதகமாகப் பலவாறாகவும் எழுதப்பட்ட அட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்காக பேர்கள் ஊர்வலம் வருகிறார்கள். பொது இடங்களில் கூட்டங்கள் கூடி தங்களைப் பிடித்து ஆட்டி அலைக்கும் கொடிய வறுமை நோய் நீங்கி தாங்கள் தக்க உணவு அருந்தி தக்க ஆடை அணிந்து, தக்க வீட்டில் வசித்து, பல சௌகரியங்களும் சம்பத்துக்களும் பெற்று சந்தோஷமாக வாழ வழி உண்டாவதற்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமென் பதைப்பற்றிப் பேசுகிறார்கள்.

ஜெர்மனியில்கூட!

சென்ற வருஷத்தில் நாஸிஸம் - நவீன முதலாளித்துவம் - சர்வாதிகாரம் செய்யும் ஜெர்மனியில்கூட, தொழிலாளர் எழுச்சியை சுயமாகத் தடுக்கும் உத்தேசத்தோடு, சர்க்காரே மே தினத்தைக் கொண்டாடிற்று, உலகத் தில் எங்கும் கூடாத, 20 லட்சம் தொழி லாளர்களைக்கூட்டி வைத்து ஹெர் ஹிட்லர் பிரசங்கம் செய்ததாகப் படித்தோம்.

உல்லாசமாக...

தொழிலாளர் ஆட்சி செய்யும் ரஷ்யா விலோ, அரசாங்கத்தாரே இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். அங்கு மே தினம் அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் விடுமுறை நாளாகும். அன்று நாடு முழுவதிலும் ஜனங்கள் அபரிமிதமான உல்லாசத் துடனும் இருப்பார்கள். இந்த வைபவத்தைப் பார்க்க மற்ற தேசத்திலுள்ள தொழிலாளர் களின் பிரதிநிதிகள் அழைக்கப்படுகிறார்கள். அங்கு தொழிலாளர்களின் தலைவர்கள், தொழிலாளர்கள் நிமித்தமாக அரசாங்கத் தார் என்னென்ன செய்திருக்கிறார்களென் றும், என்னென்ன செய்யப் போகிறார் களென்றும், உலகத் தொழிலாளர்கள் சுபிட்சமடைய மார்க்கம் என்னவென்றும் தொழிலாளர்களுக்கு விளக்கமாகப் போதிப்பார்கள். அன்று மாஸ்கோவில் 25 லட்சம் தொழிலாளர்கள் போர் வீரர்கள் போல் அணி வகுத்துச் செல்லும் காட்சி, கண் கொள்ளாக் காட்சியாகும்.

மற்ற நாடுகளில் முதலாளிகள் செய்வது போல் நம் நாட்டில் முதலாளிகளால், தொழிலாளிகளுக்குப் பல வகையில் அசவுகரியங்கள் இருந்து வருகின்றது. முதலாளிகளால் அநேக தொழிலாளர் களை வேலையிலிருந்து விலக்கப்பட்டார். கள் அநேக தொழிலாளர்களுக்குக் கூலி குறைக்கப்பட்டது. அதனால் தொழிலாளர் கள் வறுமைக்கிரையாகி அல்லற்பட நேரிட்டது. இந்த நிலைமை மறையும்படி நமது அரசாங்கமும் போதியதொன்றும் செய்துவிடவில்லை. ஆகவே, நம் நாட்டிலுள்ள தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, ஞாயரீதியான கிளர்ச்சி செய்யத் தலைப் பட்டாலொழிய, தொழிலாளர்களுக்கு விமோசனமில்லை.

தமிழ்நாட்டில் ஊக்கங் காட்டவில்லையே!

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்தியாவிலும் தொழிலாளர் சங்கங்கள், மே தினக் கொண்டாட்டத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலுள்ள, தொழிலாளர் சங்கங்கள் இவ்விஷயத்தில் போதிய ஊக்கங்காட்டவில்லையென்றே வருத்தத்துடன் கூற வேண்டியதிருக்கிறது. ஒற்றுமை வலிமை என்பதைத் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியத் திலும் அவசியமாகும். ஆகவே உலகத் தொழிலாளர் தினமாகிய மே தினத்தைக் கொண்டாடி, தொழி லாளர்களை ஒன்றுபடச் செய்ய வேண்டியது, தொழிலாளர்களின் உண்மையான தலைவர்களுடையவும் அனுதாபிகளுடையவும் பொறுப்பு என்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

கொண்டாடும்படி...

ஆலைத் தொழிலாளர்கள்தான் மே தினத்தைக் கொண்டாட வேண்டுமென்ற நிலைமை மாற வேண்டும். உழவுத் தொழிலாளர், அன்றாடக் கூலித் தொழிலாளர் பாத்திரத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர் க்ஷவரத் தொழிலாளர், வண்டியோட்டும் தொழிலாளர், (ஜட்கா ரிக்ஷா, மோட்டார், ரயில்வே) முதலான சகல தொழிலாளர்களும் இவ்வைபவத்தைக் கொண்டாடும் படியான நிலைமையை உண்டு பண்ண வேண்டியது அவசியமாகும். இதைவிட்டு, ஒரு சில சோம்பேறி களும் (வேறு வேலையற்றோர்) சிறு பணக்காரர்களும் படித்த கூட்டத் தாரும் மாத்திரம் இவ்விழாவைக் கொண்டாடுவது, என்பது தொழிலாளர்களை ஏய்ப்பதற்கு வேண்டுமானால் பயன்படுமேயொழிய தொழிலாளர் முன்னேற்றத்திற்குப் பயன்படாது.

-------------------(காம்ரேட்) - "குடிஅரசு" 28.4.1935


மே தினம் - சமதர்மப் பெருநாள்!

உலகெங்கும் கடந்த 50 வருஷமாக மே தினத்தை ஓர் பெருநாளாகத் தொழிலாளர், கிருஷிகள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட வர்களுக்கும், இந்நாள் வொன்றே உவந்த தினமாகும். இந்நாளில் கோடானு கோடி மக்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும், குறைகளையும் தெரிவிப்பான் வேண்டி, ஆங்காங்கு கூட்டங்கள் போடுவதும், ஊர்வலம் வருவதும், உபன்யாசங்கள் செய்வதும் வழக்கமாயிருந்து வருகிறது. இவ் வருஷம் மே தினமாகிய சென்ற திங்களில் (1933, மே, 1) ஆங்கில நாட்டிலும் (England), பிரான்சிலும் ((France), ருஷ்யாவிலும் (Russia), ஜெர்மனி (Gernmany) இட்டலி (Italy), அமெரிக்காவிலும் (America), இந்தியாவிலும் (India) ஜப்பானிலும் (Japan) மற்றுமுள்ள தொழிலாளர், முதலாளி தேசங்களில் கோடானு கோடி மக்கள் தம்தம் குறைகளைத் தெரிவித்தும், குறைகளுக்குப் பரிகாரம் தேடியும், யோசித்தும், பற்பல தீர்மானங்கள் செய்தும் வந்திருக்கின்றனர். இந்த வருஷம் பாரிஸ் பட்டணம், இந்நாளே தொழிலாளர் விடுமுறை நாளாகக் கொண்டாடியது. சமதர்ம நாடாகிய சோவியத் ருஷியாவில் 16 கோடி ஆண், பெண், குழந்தைகள் அடங்கலாக யாவரும், ருஷியா தேச முழுமையும், இத்தினத்தைக் கொண்டாடினார் கள். சமதர்மிகளாகிய நாமும் இத்தினத்தைக் கவனிக்காமலிருப்பது பெரும் குறைவேயாகும். இம்மாதம் முதல் நாள் கடந்துவிட்ட போதிலும், வருகிற ஞாயிற்றுக் கிழமை மே மாதம் 21 தேதி சுயமரியாதை சமதர்ம சபைகள் யாவும், சமதர்ம கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங்கள் யாவும், அத்தினத்தை பெருந்தினமாகக் கொள்ளல் மிக்க நலமாகும். அன்று காலையிலும், மாலையிலும் அந்தந்தக் கிராமங்களிலும், பட்டணங்களிலும் சமதர்மிகள் ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் வரலாம். ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி சமதர்மம் இன்னதென்றும், தொழிலாளருக்கும் விவாசயிகளுக்கும், விளக்க முறச்செய்யலாம், துர்ப்பழக்க வொழுக்கங்களை வொழிக்குமாறு பல தீர்மானங்களைச் செய்ய லாம். இவ்விதமாக ஒழுங்காகவும், நியாய முறைப் படி கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத் திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.

-------------------- ஈ.வெ.ராமசாமி --- ”குடிஅரசு” 14.5.1933

-------------------------------------------------------------------------------------------------

மே தினக் கொண்டாட்டம்

சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள், ஆண்களும், பெண்களும் மே மாதம் 1ம் தேதியை "தொழிலாளர் தின"மாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ரஷிய சமதர்மத் தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும் அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரணையில் மே தினத்தை ரஷியாவில் கொண்டாடுகிறார்கள்.

பிற தேசங்களில், தொழிலாளர்களின் குறைப்பாடுகளை பகிரங்கப் படுத்தி, பரிகாரம் வேண்டுகிற முறையிலும் தொழிலாளர்களின் சுபீக்ஷ வாழ்க்கை, சமதர்ம முறையாலும், தொழில் நாயக அரசாலும் (Ergotacracy) அதாவது தொழிலாளர் குடிஅர (Proletarian democracy) சாலுமே சித்திக்கு மெனத் தீர்மானிக்கும் முறையிலும் மே தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவிலும், சில வருஷங்களாக மே தினம் இங்கொரு இடத்தில், அங்கொரு இடத்திலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருஷத்தில், இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இவ்விழா மே மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டது. பின் நமது பிரத்யேக வேண்டுகோளின்படி மே மாதம் 21ம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண்டாடப்பட்டது.

சு.ம. வீரர்களே! சம தர்மிகளே! தொழிலாளர்களே! தொழிலாளிகளின் தோழர்களே! இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி, வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன்.

தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசீய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரசாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இங்ஙனம்,

------------- ஈ.வெ. ராமசாமி- “குடி அரசு” 28.04.1935
-----------------------------------------------------------------------------------------------

அனைவரும் பங்காளி என்ற நிலை வர வேண்டும்!

அனைவரும் பங்காளி என்ற பெயரில் வாழ்வதே உண்மையான உரிமை என்று தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள். மே நாளையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

நாளை (மே - முதல் நாள்) மேதினியெங்கும் மே நாள் என்று தொழிலாளர் உரிமை முழக்கம் வென்ற நாளாக உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே, மே நாள் புரட்சியைக் கொண்டாடும்படி பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் கொண்டாடும்படி தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

முதலீடு போன்றதே உழைப்பு என்ற தத்துவம் ஒப்புக் கொள்ளப்பட்டால், தொழிலில் முதலாளி - தொழிலாளி என்ற பெயரால் அவ்விருவரும் அழைக்கப்படாமல் பங்காளி என்ற பெயரிலேயே வாழ்வதுதானே உண்மை உரிமை என்ற தந்தை பெரியாரின் கருத்து செயலாகும் காலம் விரைந்து வருவதே உண்மை வெற்றியாகும்.
அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

பெரியார் அம்பேத்கருக்கு கொடுத்த தந்தி


தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை
இப்போதுதான் புத்தி வருகிறது

தாழ்த்தப்பட்ட மக்களை காங்கிரஸ்காரர்கள் ஏய்த்து விட்ட விஷயமாய் நாம் பல தடவை எழுதி வந்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களில் எவ்வளவோ கல்வி அறிவுள்ளவர்களும் உலக ஞானமுள்ளவர்களும் இருந்தாலும் சமயத்தில் மோசம் போகும் புத்தி அவர்களுக்கு வெகுகாலமாகவே இருந்து வருகிறது. சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுடன் வாது செய்து வெற்றி பெற்றதின் பலனாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு என்று சட்டசபையில் ஒரு அளவு ஸ்தானங்கள் தனித் தொகுதி மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதை காந்தியார் பட்டினி கிடப்பதாகப் பாசாங்கு செய்து அச் சமூக மக்களை ஏமாற்றி தனித் தொகுதி உரிமையை பாழாக்கி அடிமை உரிமைக்கு ஆளாகச் செய்து விட்டார். அப்பொழுதே தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பத்காருக்கு விஷயங்களை விளக்கி ஏமாந்து போகாதீர்கள் என்று அதாவது ஒரு காந்தியாரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும் 6 கோடி மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும் ஒன்றையும் லசயம் செய்யாமல் தங்களை சிலர் மதித்து அழைத்து கெஞ்சிப் பேசுகிறார்கள் என்கின்ற மமதையில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டு தங்கள் உரிமையைப் பறிகொடுத்து விட்டார்கள்.

வாதாடி உரிமை வாங்கிக் கொடுப்பது ஒரு கூட்டம், அதை தட்டிவிட்டு வாயில் போட்டுக்கொண்டு போவது மற்றொரு கூட்டம் என்பதாக ஆகிவிட்டது. இதிலிருந்து இன்றுள்ள நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரத்தோடு வாழ தகுதி அற்றவர்கள் என்பதும் அவர்கள் இன்னும் இரண்டு கோடி அதிகமாய் இருந்தாலும் அரசாங்கத்தின் பாதுகாவலில் இருக்கத்தான் தகுதி உடையவர்கள் என்றும் விளங்குகிறது. அவ்வகுப்பில் புத்திசாலிகள் முன் யோசனைக்காரர்கள் ஒருவர் கூட இல்லை என்பதாக விஷயங்கள் வெளியாகிவருகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாய் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட தலைவர்கள் அத்தனை பேரும் இன்று அழ ஆரம்பித்து விட்டார்கள். தோழர்கள் அம்பத்கார், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, என். சிவராஜ் முதலியவர்கள் எல்லோருமே தங்கள் தவறை உணர்ந்து விட்டார்கள். சாமி சகஜாநந்தம் என்பவரும் அழுக ஆரம்பித்து விட்டார். ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ்காரர்களால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமாக ஆகிவிட்டது.

தோழர் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் இது விஷயமாய் விடுத்த அறிக்கை மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் கவனமாய் படிக்க விரும்புகிறோம். அதில் காணும் முக்கிய விஷயங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.

அதாவது,

"காங்கிரஸ் கேட்கும் உறுதி மொழியைக் கொடுப்பதானது 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களையும் மற்ற சிறுபான்மை வகுப்பாரையும் கொடுமைப்படுத்த காங்கிரஸ்காரருக்கு சர்க்கார் காட்டிக் கொடுத்ததாகும்."

"ஷெடியூல் வகுப்பாரின் (தாழ்த்தப்பட்ட மக்களின்) கல்வியில்லாத் தன்மையையும் ஏழ்மைத் தன்மையையும் காங்கிரசார் தங்களுக்கு சாதகமாய் உபயோகித்துக் கொண்டு 30 ஸ்தானங்களில் 26 ஸ்தானங்களைக் கைப்பற்றி விட்டார்கள்."

"காங்கிரஸ்காரர்கள் வரி குறைக்கப்படும் என்று சொல்லி மிராசுதாரர்களை சுவாதீனம் செய்துகொண்டு அவர்கள் மூலமாகவும் தொண்டர்கள் மூலமாகவும் மிரட்டி பயமுறுத்தி ஓட்டு வாங்கி விட்டார்கள்."

"இந்த அயோக்கியத்தனங்களை போலீசு, கிராம உத்தியோகஸ்தர்கள், மற்ற அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை."
"பூனா ஒப்பந்தத்தை கவுரவிப்பதற்குப் பதிலாக அதை மோசம் செய்து விட்டார்கள்".

"தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் கவலை எடுத்துக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ்காரர்கள் பல தொல்லை விளைவித்து விட்டார்கள்."
"சில உபாத்தியாயர்கள் வெகு தூரம் மாற்றப்பட்டார்கள். சிலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சில குடிசைகள் கொளுத்தப்பட்டன. சிலர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கப் பட்டனர். சிலரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகள் நிறுத்தப்பட்டன. மற்றும் அளவற்ற கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள்." "கூட்டுத் தொகுதி வேண்டியதில்லை. தனித்தொகுதி மூலம் 18 ஸ்தானமே போதுமானது." "பெருத்த கிளர்ச்சி செய்து சீக்கிரத்தில் கூட்டுத்தொகுதி முறையை ஒழிக்க வேண்டும்." "காங்கிரஸ்காரர்கள் மந்திரிபதவி ஏற்காமல் செய்ததற்கு கவர்னருக்கு நன்றி செலுத்துகிறேன்" என்றும் இன்னும் இதுபோன்ற முக்கிய விஷயங்களும் தோழர் ஆர். சீனிவாசன் அவர்கள் அறிக்கையில் மலிந்து கிடக்கின்றன.

இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கு காங்கிரஸ்காரர்கள் இதுவரை யாதொரு பதிலும் சொல்லவில்லை.

எனவே தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்கள் தலைவர்களும் இனியும் ஏமாந்துவிடாமலும் ஒரு துண்டுரொட்டிக்கு மானத்தை விற்றது போல் தங்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆக மானங்கெட்டு மதிகெட்டு இழிவடைந்து காங்கிரஸ்காரர்களின் கால்களை நக்கிக்கொண்டு திரியாமலும் சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

------------------ தந்தைபெரியார் - “குடி அரசு” - துணைத் தலையங்கம் - 09.05.1937

29.4.11

இன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது 121ஆம் ஆண்டு பிறந்த நாள்!


இன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது 121ஆம் ஆண்டு பிறந்த நாள்!

திராவிடர் இயக்கத்தின் இலக்கியங்களுக்கு அவர் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

புதுவையின் வைதீக கவிஞர் கனக சுப்புரத்தினம் - தந்தை பெரியார் என்ற ஞானசூரியனின் ஒளிக்கதிர்களால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை கொள் தோழா என்று முழக்கமிட்டு மாறி, புரட்சிக் கவிஞராக பூத்தார் - கனிந்தார்!

பார்ப்பான்பால் படியாதீர்; சொற்குக்கீழ் படியாதீர்

ஆர்ப்பான் நம் நன்மையிலே ஆர்வம்மிக உள்ளவன் போல் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை மணியோசை செய்த மாபெரும் இனக் காவலர் அவர்!

ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!

என்று ஆர்ப்பரித்து ஆவேசங் கொண்ட அடலேறு அவர்!

கல்வி நல்கா கசடர்க்குத் தூக்குமரம்

காண விரும்பிய கல்விப் பெருவள்ளல்!

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டில்

மண்ணடிமை தீருவது முயற்கொம்பே

என்று கூறிய, மானிடத்தின் சரி பகுதியாகவே பெண் மக்களுக்காக வாதாடிய சமுதாய சமூகநீதி வழக்கறிஞர் அவர்!

தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சாய் வருதல் வேண்டும் என்று தமிழர் - திராவிடர்க்கு ஆணை பிறப்பித்த அரிமா அக்கவிஞர்!

சமயம் என்ற சூளையிலே தமிழ் நட்டால் முளையாது என்று கூறி மதச் சார்பின்மைக்காக வாதாடிய மனிதாபிமானக் கவிஞர் அவர்!

காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்; அவன் காணத் தகுந்தது வறுமையோ, பூணத் தகுந்தது பொறுமையோ? எனக் குமுறிக் கொதித்த தொழிலாளர்களின் தோழன் புரட்சிக் கவிஞர்!

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அவள் அணிந்திராத அணியாவார் - அவள் அறிந்திராத அறிவாவார் பெரியார் என்று திராவிடர்தம் மான மீட்பர் தந்தை பெரியார்பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே படம் பிடித்துக் காட்டியவர் பாவேந்தர் என்ற புரட்சிக் கவிஞர்!

அவர் என்றும் வாழ்கிறவர்! காரணம், அவரே குறிப்பிட்டபடி - தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை!

வாழ்க! வாழ்கவே!!


----------------- கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் -29-4-2011

நூல்கள் நடுங்கும் நூல்களைத் தந்தவர்!


இந்தியா என்றாலே இந்து நாடாம். இந்துமதம் தந்த கீதை என்ற நூலுக்கு ஈடு இணை வேறு ஏதும் கிடையாதாம்! இதில் சொல்லப்படாத தத்துவங்களே கிடையாதாம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், பிரதமரிலிருந்து, இந்தியா சார்பில் அளிக்கும் நூல் இந்தக் கீதைதான். அதுபோல வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் வெள்ளிப் பேழையில் வைத்து வழங்கி மகிழ்வதும் இந்தக் கீதையைத்தான்!

நீதிமன்றங்களில் சாட்சி கூறுவோர் இந்தக் கீதையின் மீதுதான் சத்தியம் கூறிச் சொல்லுவார்கள்.

டயலிட்டிக் மெட்டீரியலிசம் பேசும் மார்க்சிஸ்டுகளே கீதையின் வாள் வீச்சிலிருந்து தப்பவில்லை என்றால், மற்றவர்-களைப்பற்றிச் சொல்லிக் காலத்தைக் கரியாக்குவானேன்?

கேரள முதலமைச்சராக இருந்தவர் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு ஈ.கே. நாயனார்.

1997இல் ரோம் சென்றார்; அப்பொழுது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்களின் தலைவரான போப்பைச் சந்தித்து இந்தக் கீதையைத்தான் பரிசாகக் கொடுத்தார்.

மார்க்சிஸ்ட்டாக இருக்கக் கூடிய ஒருவர் கீதையைப் பரிசாகக் கொடுக்கலாமா என்ற சர்ச்சை வெடித்தது.

கேரள முதல் அமைச்சரோ கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னார்.
அதில் என்ன தப்பு இருக்கிறது என்று பதிலாகச் சொன்னார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடமே சொன்னார். நெல்லை மாலை மலர் ஏட்டில் (25.6.1997) வெளிவந்தது.

100 கோடிக்கும் அதிகமான கிறிஸ்துவ மக்களின் நம்பிக்கைக்-குரியவரான போப்பாண்டவரை நான் சந்தித்து அவருக்குப் பகவத் கீதையை வழங்கியதில் எவ்விதத் தவறும் இல்லை. எனக்கு மதங்களைப்பற்றி எவ்வித மாறுபட்ட கருத்து-களும் இருந்ததில்லை. நான் மதங்களை மதிக்கிறேன். அதன் அடிப்படையில்தான் நான் பகவத் கீதையைக் கொடுத்தேன்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வைத்துள்ள மதத்திற்கு உரியதுதான் பகவத் கீதை. இந்தியக் கலாச்சாரத்தை விளக்கும் புத்தகம் அது. எனவே, இந்தியனான நான் அங்குச் சென்ற-தால் போப்பாண்டவருக்கு பகவத் கீதையைக் கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று மாநில முதல் அமைச்சர் என்ற நிலையில் உள்ள ஒரு மார்க்சிஸ்ட்டே கூறினார் என்றால், இந்தியாவில் கீதை என்ற நூல் எவ்வளவு தூரம் ஆழமாக வேர்-விட்டுக் கிளைத்து நிற்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்-பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால்-கூட முடியாது (கீதை அத்தியாயம் 4; சுலோகம் 13) என்று கடவுள் கிருஷ்ணன் கூறியதாகக் கீதை கூறுகிறது.

இந்தப் பேதம் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைந்தது கர்மப் பலனை வலியுறுத்துவது.

மனித உரிமை கோரும் எவராலும் ஏற்க முடியாது என்றால் மார்க்சியம் மட்டும் ஏற்றுக் கொள்ளுமா?

ஆனாலும் இந்தியாவில் மார்க்சியவாதிகளையே நிலைகுலைய வைத்துள்ள நூல்தான் இந்தக் கீதை.

இராமாயணம், பாரதம், புராணங்களின் யோக்கிய-தை-பற்றி தந்தை பெரியார் ஏராளமான நூல்களை வெளியிட்டதுண்டு.

கீதையைப்பற்றியும் நூல் ஒன்று வெளியிட வேண்டும் என்ற விருப்பம் தந்தை பெரியாருக்கு இருந்தது.

இதுகுறித்து ஒரு சிறு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

நமது நாட்டில் நடைபெறுகிற முட்டாள்-தனங்-களிலும், பச்சை அயோக்கியத்தனங்களிலும் தலைசிறந்த, முதல்தரமான காரியங்களில் முதலாவது காரியம் என்னவென்றால், பகவத் கீதை எனும் ஒரு காட்டுமிராண்டி, அயோக்கியத்தனம் கொண்ட நூலை, விஷயத்தை, பிரச்சாரம் செய்வதும், பரப்புவதுமாகும்.

அதன் வண்டவாளத்தை வெளியிட ஆசைப்படுகிறேன்.
அது விஷயமான ஆராய்ச்சி உள்ளவர்கள், அதில் உள்ள மடமையையும் நமது சமுதாயத்திற்குக் கேடான விஷயங்களை உணர்ந்தவர்கள் அருள்கூர்ந்து விடுதலை பத்திரிகைக்கு எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.

பிரசுரித்து, பிறகு புத்தகமாக்க ஆவலாயிருக்கிறேன் என்று கையொப்பமிட்டு விடுதலை (16.11.1973)யில் வேண்டுகோள் விடுத்தார் தந்தை பெரியார்.

யாரும் முன் வரவில்லை. தந்தை பெரியார் அவர்-களின் அந்த ஆவலை, கடைசி விருப்பத்தை நிறை-வேற்றியவர் அவரின் நம்பிக்கைக்குரிய சீடராக இருந்த விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான்.

1998இல் அந்தக் கடமையை நிறைவேற்றியவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி ஆவார்கள். இதுவரை, ஆறு பதிப்புகள் வெளிவந்து பல்லாயிரக்-கணக்கில் மக்கள் மத்தியில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

கீதையை உலகம் பூராவும் பார்ப்பனர்கள் பரப்பி வருவதால் கீதையின் மறுபக்கம் எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் ஆங்கிலத்திலும் ‘‘BHAGAVAD GIDA MYTH OR MIRAGE’’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிவரும் பணிகளின் தடங்கள், களங்கள் பற்பல. அதில் மிகவும் முக்கியமானது கருத்துப் பிரச்சாரம் ஆகும்.

அதிலும் முக்கியமானது வெளியீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரமாகும்.
அந்த வகையில் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் பல படைப்புகள் மிகவும் ஆக்கப்பூர்வ-மானவை - பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவை.

கீதையை முதன்மைப்படுத்தி உலகம் பூராவும் கொண்டு செல்லுவோர், நாள்தோறும் மண்டபங்களில் கீதை உபந்நியாசங்கள் செய்வோர் ஏராளம் இருப்பினும் ஜீயர்கள், சங்கராச்சாரியார்களாக இருந்தாலும் தமிழர் தலைவரால் எழுதப்பட்ட இந்த நூலுக்கு ஒரு வரி மறுப்புக்கூட எவராலும் எழுதப்பட முடியவில்லை என்பது இதன் வலிமையைப் பறைசாற்றும்.

கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத கோழைகள் அரசிடம் காவடி எடுத்தார்கள் வீரமணி எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி, மனு கொடுத்தார்கள் _ புகார் செய்தார்கள்.

இந்து முன்னணி தலைவர் திருவாளர் இராம.கோபாலன் முதல் அமைச்சரைச் சந்தித்து, கீதை ஒன்றை நேரில் கொடுத்து, அதனை முதல் அமைச்சர் கலைஞர் படிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முதல் அமைச்சர் கலைஞர் அவர்களோ தயாராக வைத்திருந்த - விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்-கள் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை அவரிடம் கொடுத்து இதனையும் படியுங்கள் என்றார்.

சங்கராச்சாரி - யார்?

இந்து மதத்தை, அதன் வருண தர்மத்தை, பார்ப்பனீயச் செல்வாக்கை அதன் நிலைகளிலிருந்து சற்றும் வீழ்ச்சி அடையாமல் தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பவை சங்கர மடங்கள்.
ஆதி சங்கரரால் நிறுவப்படாத மடம்தான் காஞ்சி சங்கர மடம் என்றாலும் பொய்யான ஆதாரங்களை, ஆவணங்-களைத் தயார் செய்து காஞ்சி மடமும் ஆதி சங்கரரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் என்று கதை கட்டி விட்டார்கள்.

சங்கராச்சாரியார் என்பவர்கள் உத்தம புத்திரர்கள் என்பது போலவும், உலகத்திற்கே நல்லது காட்ட வந்த மகான்கள் போலவும், தங்களிடம் உள்ள விளம்பர சாதனங்களால் ஊதிப் பெருக்க வைத்துவிட்டனர்.

உண்மை என்னவென்றால் தீண்டாமை க்ஷேமகர-மானது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சங்கர மடம் என்ற பெயரால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருப்பவர்கள். இவர்களின் உண்மை உருவத்தை உச்சிமுதல் உள்ளங்கால் வரை தோலுரித்துக் காட்டும் வண்ணம் சென்னையில் பத்து இடங்களில் பத்து ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

அதன் தொகுப்பே சங்கராச்சாரி _ யார்? என்ற நூலாகும்.
ஆதாரங்களின் தொகுப்பு இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய ஓய்வுபெற்ற சென்னை உயர்-நீதிமன்ற நீதிபதி திரு. பெ.வேணுகோபால் அவர்கள், பல்கலைக்கழகங்கள் இந்நூலுக்காக டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புரை போல் எழுதி-யுள்ளார் (25.12.1986).

நியூயார்க் நகரில் உள்ள பார்ப்பனர்கள் கல்யாணப் பத்திரிகை அடித்தாலும்கூட காஞ்சி சங்கராச்சாரியார் திருவருளை முன்னிட்டு என்று குறிப்பிட்டே தீருவார்கள். கல்யாணப் பத்திரிகையில்கூட ஒரு குட்டிப் பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள் அவர்கள்.

எனவே, தமிழில் வெளிவந்த இந்த நூல் ‘‘Saint or Sectarian’’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் பூராவும் பரப்பப்பட்டுள்ளது.

இந்நூலை ஆங்கிலத்தில் படித்த சிங்கப்பூரைச் சேர்ந்த டி.கோவிந்தசாமி என்பார் ‘‘After reading your book ‘‘Saint or Sectarian’’ I realised that I have been in a very DARK ROOM for years. Your book has opened my eyes’’ என்று எழுதினார் என்றால், தமிழர் தலைவர் எழுதிய நூல் எந்த அளவுத் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்பதை ஒருவாறு உணரலாம்.

காஞ்சி மடம் ஆதி சங்கரரால் உண்டாக்கப்பட்டதல்ல - நாத்திகனுக்கு வைத்தியம் செய்யக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு மனிதாபிமான-மற்றவர் தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் வருணாசிரம வெறியர் - சங்கர மடத்தில் நிறுவியுள்ள அத்தனை அறக்கட்டளைகளும் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் என்பனவற்றையெல்லாம் சங்கராச்சாரியார் எழுதி வெளியிட்ட நூல்களைக் கொண்டே எதிர்த்தாக்குதல் தொடுத்து, மடத்தை மக்கள் மத்தியில் மரியாதையற்றதாக்கிய மாபெரும் மனித குலத்துக்கான தொண்டறத்தினைச் செய்தவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

தோழர் பி.இராமமூர்த்திக்கு மறுப்பு

திராவிட இயக்கத்தினைக் கொச்சைப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல மார்க்சிஸ்டுகள் கூட என்பதை விவரிக்கும் ஆய்வுரை நூல்தான் காம்ரேட் பி.இராமமூர்த்தி எழுதிய விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் எனும் நூலுக்கு மறுப்புரையாகும்.

விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும் - உண்மை வரலாறு எனும் தலைப்பில் வெளிவந்த இந்நூல் 612 பக்கங்களைக் கொண்டதாகும்.

திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது - நீதிக்கட்சியைக் கீழிறக்கமாகப் பேசுவது தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்டம் குறித்த உண்மையை மறைத்துத் தகடுதத்தம் செய்வது போன்றவைகளுக்கு மரண அடி கொடுக்கும் வண்ணம் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீரமணி அவர்கள் (1985) சென்னை பெரியார் திடலில் உரையாக ஆற்றி நூல் வடிவில் வெளிவந்ததுதான்.

காங்கிரஸ் பற்றி...

காங்கிரஸ் வரலாறு மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும் என்னும் நூல்தான் அது. சுயமரியாதைத் திருமணமும் தத்துவமும் வரலாறும் என்னும் நூல் அரிய ஆய்வுப் படைப்பாகும்.

சுயமரியாதைத் திருமணம் என்பது பார்ப்பனீய புரோகிதத்தைத் தூக்கி எறிந்து தமிழன் தலைமையில் தமிழில் கருத்துகளைக் கூறி நடத்தி வைக்கும் முறை தந்தை பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

சுயமரியாதைத் திருமண மேடையை தந்தை பெரியார் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் பிரச்சார மேடையாக்கி வெற்றி மாலை சூடினார்.

ஒரு திருமண மேடையை அரசு பல சட்டங்களைக் கொண்டு வருவதற்கான கருவியாக மாற்றிய அதிசயத்தை, தந்தை பெரியார் சாதித்துக் காட்டினார்.

அதன் வரலாறு, தத்துவம் குறித்து தமிழர் தலைவரால் ஆக்கம் செய்யப்பட்டதுதான் இந்நூல், 230 பக்கங்களைக் கொண்டது.

விடுதலையில் தமிழர் தலைவர் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் கட்சிகளைக் கடந்து, மதச் சிந்தனைகளைத் தாண்டி, இன்னும் சொல்லப்போனால் பக்திக் குடுவைக்குள் சிக்கிக் கிடக்கும் மக்கள் மத்தியிலும் வசீகரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை இந்த வகையில் வெளிவரும் கட்டுரைகள்.

கடவுள் மறுப்பாளர் இவர்கள் என்று கண்களை மூடிக் கொண்டவர்களின் கண்களையும் திறக்கச் செய்த காரியத்தை இந்த வரிசை சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறது.

இதுவரை ஆறு தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் பல தொகுதிகள் வெளிவந்துகொண்டே இருக்கும்.

தந்தை பெரியார் கொள்கைகள் என்றால் வெறும் அழிக ஒழிக என்பவை மட்டுமல்ல; மாற்று நெறியைக் காட்டும் மாண்பினை உடையது என்பதை மக்கள் சமுதாயம் தெரிந்துகொள்ள, சிக்கெனப் பிடித்துக்கொள்ள வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள் ஊன்றுகோலாக உதவுகின்றது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல _ சிறந்த எழுத்தாளர், படைப்பாளர் என்பதற்கு பனிப்பாறையின் ஒரு சிறு முனையாக இக்கட்டுரையில் தொட்டுக் காட்டப்-பட்டுள்ளது. நூல்களின் ஆதிக்கம் அழிய இந்நூல்-கள் போர்வாளாகப் பயன்படும். விரிக்கின் பெருகும் என்ற அச்சத்தில் சுருக்க முறையில் தரப்-பட்டுள்ளது. வேறு சந்தர்ப்பத்தில் அவை விரியும். வாழ்க தமிழர் தலைவர்!

---------------------- கலி. பூங்குன்றன்அவர்கள் டிசம்பர் 01-15_2010 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

28.4.11

மகரஜோதி மோசடியை மறைக்க இன்னொரு மோசடியா?


மோசடியைத் தடை செய்!

கேரள மாநிலம் திருவாங்கூர் தேவசம் போர்டு செயலாளர் ஆர். அனிதா கொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இரு வழக்குகள் தொடர்பாக பதில் மனுக்கள் இரண்டினைத் தாக்கல் செய்தார்.

மகர சங்கராந்தியன்று பொன்னம்பல மேடு பகுதியில் வானத்தில் தெரியும் மகர ஜோதி ஒரு நட்சத்திரம். அது இயற்கையாகத் தோன்றக்கூடியதே! மனிதர்களால் ஏற்றப்படுவதல்ல. ஆனால், மகரஜோதி வானத்தில் தோன்றும் அதே நேரத்தில், பொன்னம்பல மேட்டில் சிறப்புத் தீபாராதனை நடைபெறும். அப்பொழுது மகர தீபம் பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படுகின்றது - அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான். இதைத்தான் பக்தர்கள் மகரஜோதி என்று கும்பிட்டு வருகிறார்கள். காலம் காலமாக இது நிகழ்கிறது. அந்த மகரஜோதி தெய்வீகமானது என்று நாங்கள் (தேவசம் போர்டு) கூறியதில்லை. மகரஜோதி பக்தர்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் மகரஜோதி ஏற்றப்படுவதைத் தடை செய்ய முடியாது என்று திருவாங்கூர் தேவசம் போர்டு செயலாளரால் அதிகார பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் வெளிப்படையாகக் கூறப்பட்டுவிட்டது.

இந்த மோசடியை கேரள மாநிலப் பகுத்தறிவாளர்கள் 1982 ஆம் ஆண்டிலேயே நேரில் சென்று ஆய்வு செய்து அம்பலப்படுத்திவிட்டனர்.

பிளிட்ஸ் ஏடு (16.1.1982) அதனை வெளியிட்டிருந்தது. இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா இதழும் (பிப்ரவரி 15-1987) மகரஜோதி என்பது வருமானத்துக்காகச் செய்யப்பட்ட வியாபார யுக்தி என்று தெரிவித்திருந்தது.

இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்த ஜோசப் எடமருகு மகரஜோதி மோசடி குறித்து கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நாயனாரிடம் விவாதித்தார். உண்மைதான் என்றாலும், அதில் தலையிட முடியாது என்று முதலமைச்சர் ஈ.கே. நாயனார் கூறினார்.

இப்பொழுதுள்ள முதலமைச்சர் அச்சுதமேனனும் அதே பதிலைத்தான் தெரிவித்தார். அதுகுறித்து விசாரணை நடத்த முடியாது; அது மக்களின் மத சம்பந்தப்பட்ட நம்பிக்கை என்று தட்டிக் கழித்துவிட்டார்.

நீதிமன்றம் தலையிட்டதன் பெயரில்தான் திருவாங்கூர் தேவசம் போர்டு நீதிமன்றத்தில் அரசு சார்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த மனுவில்கூட அரசு என்ன சொல்லுகிறது? பக்தர்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் மகரஜோதி ஏற்றப்படுவதை தடை செய்ய முடியாது என்றுதான் அரசு சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? மோசடிதான் - அது மதம் சார்ந்த - கடவுள் சார்ந்த நம்பிக்கை என்பதால், அதனைத் தடை செய்ய முடியாது என்று அரசு சொல்லலாமா?

மோசடியில் என்ன நம்பிக்கை சார்ந்தது - நம்பிக்கை சாராதது? சட்டத்தின் முன் அதற்கு இடம் உண்டா?

நீதிமன்றம் அரசு சொல்லும் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு, சபரிமலை மகரஜோதியைத் தடை செய்யவில்லையென்றால், இது மாதிரியான மோசடிகள் மேலும் மேலும் பெருகிட வாய்ப்பு செய்து கொடுத்தது ஆகாதா?

கேரள மாநிலத்துக்கு வருமானம் வருகிறது என்றால், எந்த மோசடியையும் அனுமதிக்கலாமா?

மோசடியான இந்த மகரஜோதியைத் தரிசிப்பதாகக் கூறிக் கூடிய பக்தர்களின் நெரிசலால் 2010 ஜனவரி 14 அன்று 102 பேர் பலியானார்களே - அதற்குமுன் 1999 ஆம் ஆண்டிலும் இதேபோல, பக்தர்கள் பலியானார்களே - இவற்றிற்கு யார் பொறுப்பு?

அய்யப்பன் காப்பாற்றினானா என்பதைவிட ஒரு மோசடியான காரியத்தை அரசு ஊழியர்களே பொன்னம்பலமேட்டில் செயற்கையாக தீபத்தை ஏற்றுவதால் ஏற்படும் விபரீதம்தானே இது?

மோசடி செய்யும் அந்த அரசு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமா? இதற்குத் துணை போகும் தேவசம் போர்டு குற்றவாளியல்லவா?

பொதுமக்கள் தவறு செய்தால் சட்டம் அவர்களைத் தண்டிக்கலாம்; அரசே தவறு செய்தால் அவர்களை நீதிமன்றம் தண்டிக்க வேண்டாமா?

மதம் சார்ந்த, பக்தி சார்ந்த விடயம் என்பதால் நீதிமன்றம் சட்டத்தைக் கடந்து சிந்திக்கக் கூடாது - இன்னும் சொல்லப்போனால், ஓர் அரசே மக்களை ஏமாற்றும் மோசடியைத் திட்டமிட்டுப் பல்லாண்டு காலமாகச் செய்துவரும்போது கூடுதல் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள நீதிமன்றம் நிச்சயம் கடமைப்பட்டுள்ளது.

நீதிபதிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கு மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இருந்தால், அது தனிப்பட்ட ரகத்தைச் சார்ந்தது. வீட்டின் பூஜையறை எல்லைக்குள் சம்பந்தப்பட்டது. அதனை ஒரு பொது இடத்தில், நேர்மையான சட்டத்தின் இருப்பில் பிரதிபலிக்கக் கூடாது.

இதில் இன்னொன்று முக்கியமாகக் - கவனிக்கத்தக்கது - மகரஜோதி என்பது இயற்கையான நட்சத்திரம்; மகர தீபம் என்பதுதான் செயற்கையானது என்று தேவசம் போர்டு கூறுகிறதே - மகரஜோதிதான் இயற்கையானதாயிற்றே - அதுதான் வானத்தில் தோன்றுமே, அப்படியிருக்கும்போது எதற்காக செயற்கையான தீப ஏற்பாடு? இயற்கையான மகரஜோதி என்னும் நட்சத்திரம் பகலில் தெரியுமா? ஒரு மோசடியை மறைக்க இன்னொரு மோசடியா?

நீதிமன்றம் சட்டத்தின்படி துலாக்கோலை நேர்மை யாகப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

---------------”விடுதலை” தலையங்கம் 28-4-2011

பறையனை பார்ப்பான் பிரபுவே எஜமானே என்று நின்று கொண்டு கெஞ்சுவது யாரால்?


கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா

தோழர்களே!

இன்று இவ்வாண்டு விழாவில் தோழர்கள் ஊ.பு.அ.செளந்திரபாண்டியன், என்.சிவராஜ், எஸ்.குருசாமி, டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் பேசினார்கள். என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவு பெற்றதென்றே கருதுகிறேன். ஆனால் நான் பேசவேண்டும் என்று கருதி இருந்தவற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசிவிட்டார்கள். ஆதலால் நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும்.

பகுத்தறிவு

உண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்துபார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத்தறிவு என்று சொல்லிவிடக்கூடாது. புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவ பலன் இன்னதென்று தெரியவேண்டும். நமது சக்தி எப்படிப்பட்டது? அது எவ்வளவு? என்பதை உணரவேண்டும். காலதேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் மேல்கண்ட அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவை பிரயோகிக்க பகுத்தறிவு வேண்டும்.

உங்கள் கொள்கை

இங்கு பேசிய பலர் சுயமரியாதையைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். இச்சங்கத்தை சேர்ந்த மக்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்களாகக் காணப்படுகிறபடியால் உங்களுக்கு அரசியல் அரசாங்கத்தைத் தழுவிப் போவதுதான் பயன்படத்தக்கதாகும். அரசியலில் உங்கள் வகுப்பைத் தனியாகப் பிரிக்கப்பட்டாய் விட்டது. மற்ற வகுப்புகள் விசயத்திற்கும் நிலைக்கும் உங்கள் வகுப்பு விசயத்துக்கும் நிலைக்கும் பெரியதொரு வித்தியாசம் இருப்பதாலேயே அரசியலில் நீங்கள் தனி உரிமை கேட்க வேண்டியதாயிற்று. அந்தப்படியே அரசாங்கம் உங்களுக்குத் தனி உரிமை அளித்தும் நீங்கள் மற்ற மேல் ஜாதி மக்கள் என்பவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள். அதனால்தான் அவர்கள் மேல் ஜாதிக்காரர்களாய் இருக்கிறார்கள். அதில்லாததினால்தான் நீங்கள் கீழ் ஜாதி என்பதில் சேர்க்கப்பட்டு அதற்குண்டான பயனை அனுபவித்து வருகிறீர்கள். உங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டதற்கே தோழர் ஆரோக்கியசாமி கோபித்துக்கொண்டார். கோபித்து என்ன செய்வது? பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா இல்லையா? அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமையே வேண்டியதில்லை அல்லவா? சமூக வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு இடையூறு சட்டப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது. தெரு, குளம், பள்ளிக்கூடம் ஆகியவைகளின் பிரவேச உரிமைகூட இப்போது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு உங்களுக்கு உண்டாகி இருக்கிறது. அதற்கு இன்னம் பல இடங்களில் தடை இருந்து வருகிறது.

கோவில் பிரவேசம்

திருவாங்கூர் கோவில் பிரவேச உரிமையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள். அதனால் உங்களுக்கு என்ன லாபம்? உங்கள் தாய் நாட்டில் உங்கள் நிலை என்ன? உங்களைவிட இன்னும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது. இந்த நிலையில் உள்ள மக்கள் சிலர் சிறிது கூட மானமில்லாமல் அரசியலைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மனித உரிமைக்கு லாயக்கற்றவர்கள் என்பதற்கு இதுவே போதிய உதாரணமாகும்.

நியாயமாகப் பேசப்போனால் நீங்கள் மாத்திரம் தாழ்த்தப் பட்டவர்கள் அல்ல. சில இடங்களில் கோவில் உரிமை இல்லாதவர்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சகல கோவில்களிலும் பிரவேசிக்க உரிமை உள்ள நாங்களும் தாழ்த்தப்பட்டவர்களேயாவோம். கோவிலில் எங்களுக்கும் உரிமை இல்லாத இடம் பல உண்டு. காப்பிக்கடை, ஓட்டல் முதலிய இடங்களில் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சில அறைகளுக்குள் செல்லப்படாதவர்களாகவும் தான் இருந்து வருகிறோம். உங்கள் இழிவைப்பற்றி பேசுவதால் எங்கள் இழிவும் நீங்கலாம் என்பதே எங்கள் அனுதாபத்தின் கருத்தாகும். பந்தியில் சாப்பிடும்போது தனக்கு வேண்டிய பதார்த்தத்தைப் பக்கத்து இலையில் இருக்கிறவர்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பரிமாறுகிறவனைக் கூப்பிட்டு பிறகு தனது இலைக்கும் வாங்கிக்கொள்ளுகிற தந்திரத்தை நீங்கள் அறிந்ததில்லையா? அது போல்தான் உங்கள் குறையோ இழிவோ நீங்கினால் கூடவே எங்கள் குறையும் இழிவும் தானாகவே நீங்கிவிடும். அதனாலேயே உங்கள் குறைகளைப்பற்றி நாங்கள் சதா பேசிக்கொண்டே வருகிறோம்.

காங்கிரசில் சேருவது

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு "அரசியல்" கூப்பாடுகளை வெறுக்கிறீர்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு "அரசியல்" கட்சிகளுடன் சேராமல் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய குறைகள் நிவர்த்திக்கப்படலாம் என்பது எனது அபிப்பிராயம். உங்கள் தலைமேல் கால் வைத்து ஏறிப்போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்து கிடக்க வேண்டியதுதான்.

காங்கிரஸ் ஏற்பட்டு 50 வருஷகாலம் ஆகியும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டு பங்கு கேட்க ஆரம்பித்த பிறகே சமுதாயத் துறையில் பெரியதொரு மாறுதல் ஏற்பட முடிந்தது. அதன் பிறகுதான் உங்கள் நிலையும் இந்த 10 வருஷகாலத்தில் எவ்வளவோ மாறுதலை அடைய முடிந்தது. அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கே கை தூக்கி வந்திருப்பீர்களானால் - மேல் ஜாதிக்காரர்கள் பின்னாலேயே கோவிந்தாப் போட்டிருப்பீர்களேயானால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

திருவாங்கூர் பிரகடனம்

திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விளம்பரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது எப்படி ஏற்பட்டது? தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா? அவர் சர்க்கார் பராமரிப்பிலுள்ள சகல வீதிகளிலும் சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா? அதாவது கல்பாத்தி ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு பார்ப்பன மேஜிஸ்ரேட் 144 தடை உத்திரவு போட்டு தடுத்ததைப் பற்றி சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்ட போது சர்.சி.பி. அய்யர் என்ன பதில் சொன்னார்? அந்த தடை உத்திரவு சரியானதுதான் என்று ஆதரித்துப் பதில் சொன்னார். அதாவது அந்த பிரவேச சட்டத்திற்கு ஒரு புது வியாக்கியானம் செய்தார். என்னவென்றால் "ஏதாவது ஒரு வேலையின் பேரில் - அவசியத்தின் பேரில் தெருவில் நடப்பவனுக்குத்தான் அந்தச் சட்டம் இடம் கொடுக்குமே ஒழிய அனாவசியமாய் வேலை இல்லாமல் நடப்பவனுக்கு அச்சட்டம் இடம் கொடுக்காது" என்று சொல்லி குறிப்பிட்ட 144 தடை உத்திரவு வேண்டுமென்றே அவசியம் இல்லாமல் நடந்து மேல் ஜாதிக்காரர்களின் மனத்துக்கு சங்கடமுண்டாக்குவதை தடுப்பதற்கு ஆக போடப்பட்ட உத்திரவு என்றும் அது அவசியம் தான் என்றும் சொன்னார்.

ஆகவே திருவாங்கூர் திவான் சர்.சி.பி. அய்யரின் தாராள நோக்கம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்க திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைக்கப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்கள், நாடார்கள் உள்பட உள்ள மற்ற மக்களும், மதத்தையும், கோவிலையும் சாமியையுமே உடைக்கப் பார்த்தார்கள். இந்துமதம் புரட்டு, கோவில் புரட்டு, சாமியே புரட்டு என்று மகாநாடுகள் கூட்டி பதினாயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்து தீர்மானம் செய்தார்கள். பலர் முஸ்லீமாக துருக்கி தொப்பி போட்டார்கள், பலர் தாடி வளர்த்து தலைமுடி வளர்த்து கிருபான்(கத்தி) கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு சீக்கியர்கள் ஆனார்கள். சிலர் குடும்பத்தோடு கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அதன் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள சகல மேல் ஜாதிக்காரர்களும் பார்ப்பனர்கள் உள்பட திருவாங்கூர் ராஜாவை வாழ்த்தி விட்டார்கள். வெற்றி பெறும் இரகசியம் எங்கே இருக்கிறது பாருங்கள். அதுபோலவே நீங்கள் காங்கிரஸ், மதம், கோவில், சாமி ஆகியவைகளை யெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும் சகல உரிமையும் தானாக உங்களைத் தேடிக்கொண்டுவரும்.

பட்டம் மாற்றுவதில் பயனில்லை

அப்படிக்கு இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று உங்களைக் கூப்பிடுவதற்கு ஆக நீங்கள் கோபித்துக்கொள்வதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. பறையர்கள் என்கின்ற பட்டம் மாறி ஆதிதிராவிடர்கள் ஆகி இப்போது அரிஜனங்கள் என்கின்ற பட்டம் வந்ததுபோல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழிய குறையும் இழிவும் நீங்கிவிடாது. விவசாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும் தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்கு சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.

அதுபோலவே பார்ப்பனரல்லாதார்களுக்கு நாயகர், முதலியார், தேவர், வேள் ஆளர், ராஜர் ராயர் என்கின்றதான பல பெயர் இருந்ததாலேயே சமூக வாழ்வில் சூத்திரன் என்கின்ற பெயர் போய்விடவில்லை. ஆதலால் பெயரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இழிவும் குறையும் போக்க வழி பாருங்கள். அதற்கு அம்மாதிரி நம்மை குறைவுபடுத்தும் மக்களுடன் ஒத்துழையாமை செய்வதும் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு நாம் முட்டுக்கட்டை போடுவதும் தான் சரியான மருந்தாகும்.

கோடரிக் காம்புகள்

சில கோடாலிக் காம்புகள் அவர்களுடன் ஒத்துழைப்பதால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இழி மக்கள், மானமற்றவர்கள் நம்மில் பலர் இருப்பதாலேயே நாம் இம்மாதிரி சங்கம் ஸ்தாபனம் பல வைத்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கமோ, பார்ப்பனரல்லாதார் சங்கமோ எதற்கு ஆக இருக்க வேண்டும்? நம்மில் எத்தனையோ பேர் உதைத்த காலுக்கு முத்தமிட்டு வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இழி தொழிலுக்கெல்லாம் நாம் பரிகாரம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்தப் பரிகாரம் நம்முடைய உறுதியும் தைரியமும் கொண்ட ஒத்துழையாமையிலும் முட்டுக்கட்டையிலும்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சிலர் பேசியதோடு என்னையும் சில கேள்விகள் துண்டுச் சீட்டு மூலம் கேட்டிருக்கிறார்கள்.

கேள்விகள்

1. தோழர் ஜீவானந்தம் முதலியவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்கிறார். இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. முன்பு அவர்கள் தேர்தல் பிரசாரம் ஊசிப்போனது என்றும், நாற்றமடிக்கிறது என்றும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாகப் பத்திரிகைகளில் பார்க்கிறேன். நான் ஜஸ்டிஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறேன். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். மற்றபடி வித்தியாசம் இல்லை.

2. இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு தோழர் கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் ஒரு வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகிய வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் உத்தியோக விஷயங்களில் அனுபவத்தில் சிறிதாவது இருக்கிறது என்றால் அது ஜனநாயக கட்சியின் மூல புருஷரான தோழர் எஸ்.முத்தையா முதலியார் அவர்களின் தொண்டினால் என்றுதான் சொல்லுவேன். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலரும், பார்ப்பனரல்லாத மக்களில் பலரும் அவருக்கு போதிய நன்றி விசுவாசம் காட்டாவிட்டாலும் நான் என்னைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு அளவுக்கு நன்றி யுடையவனே ஆவேன். மற்றபடி ஜனநாயகக் கட்சியார் அரசியல் நிபுணத்துவத்தை உத்தேசித்து ஜஸ்டிஸ் கட்சிக்கும் மிதவாத கட்சிக்கும் தங்கள் கட்சிக்கும் ஏதோ வித்தியாசமிருப்பதாக கூறலாம். ஆனால் அது என் சிறிய கண்ணுக்குத் தென்படவில்லை.

இந்தியாவில் ஒரே கட்சிதான்

இன்று இந்தியாவில் அரசியல் கொள்கையில் ஒரே கட்சிதான் உண்டு. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பதவியை அடைந்து பணமும் அதிகாரமும் பெறவேண்டும் என்கின்ற கவலை கொண்ட ஒரே கட்சிதான் உண்டு. அதை அடைவதற்கு பல மார்க்கங்கள் பல தந்திரங்கள் கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இருப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத்துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கட்சிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய் சில கட்சி உண்மை பேசலாம். சில கட்சி புரியாத மாதிரி பேசலாம். சில கட்சி அடியோடு பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் பேசலாம். இதுதான் இன்று அரசியல் கட்சிகளின் நிலைமை.

ஜஸ்டிஸ் கட்சி

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தனது கொள்கைகளில் திட்டத்தில் உண்மை பேசுகிறது. அதுவும் சாத்தியமான மட்டும்தான் நடத்திக்கொடுப்பதாய் பச்சையாய்ச் சொல்லுகிறது. அதில் உள்ள தலைவர்களுக்குள்ளோ அங்கத்தினர்களுக்குள்ளோ கட்சி கொள்கை விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லை. தலைவர்களில் பின் பற்றுபவர்களில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாதவர்களாகவும் பொது நோக்குடையவர்கள் அல்லாதவர் களாகவும் சுயநலத்துக்கு ஆக எதையும் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அம்மாதிரி நபர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு. அவர்களால் நேரும் கெடுதிக்கு எல்லாக் கட்சியாரும் சிறிது மார்ஜன் (இடம்) விட்டுத்தான் தீரவேண்டும். மற்றபடி இன்று சமுதாயத் துறையில் பிற்பட்டு அடிமைப்பட்டு இழிவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சிதான் "சஞ்சீவி" மருந்து என்று சொல்லுவேன்.

காங்கிரஸ் கட்சிக்கு உத்தியோகமும் பதவி ஆசையும் இருப்பதாலேயே நான் அதை குறைகூறவில்லை. ஆனால் அது பிற்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு சமஉரிமை அளிக்க மறுப்பதையும் மற்றவர்கள் அளிப்பதைக் கெடுப்பதையுமே முக்கியக் கொள்கையாய்க் கொண்டு இருக்கிறபடியால் அதை ஒழித்து ஆக வேண்டும் என்கின்றேன். அதன் தலைவர்கள் பழமை விரும்பிகளாக இருப்பதாலேயே வருணாச்சிரம தர்மிகளாக இருப்பதாலேயே அவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இல்லை. மற்றபடி கட்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

சுயமரியாதைப் பிரசாரம்

3. சுயமரியாதை இயக்கப் பிரசாரம் ஏன் செய்யவில்லை என்று கேட்கப்பட்டிருக்கிறது.

நானும் எனது தோழர்களும் ஒரு அளவுக்கு செய்து கொண்டுதான் வருகிறோம். ஆனால் முக்கிய கவனம் ஜஸ்டிஸ் பிரசாரத்தில்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைக் கோரி அது அவசியம் என்று கருதுகிறேன். எப்படியானாலும் இன்னும் ஒன்றரை மாதங்களில் ஜஸ்டிஸ் தேர்தல் பிரசாரம் தீர்ந்துவிடும். அதற்கப்புறம் அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, நானும் எனது தோழர்களும் தனி சுயமரியாதை இயக்கப் பிரசாரம் தான் செய்வோம்.

தோற்குமா? ஜெயிக்குமா?

4. ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுமா? என்று கேட்கப் பட்டிருக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தால், நான் மகிழ்ச்சியடைவதோடு சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக்கூடும் என்கிற தன்மையால் இயக்கப் பிரசாரம் வளமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜஸ்டிஸ் கச ஜெயித்தால் தலைவர்கள், பதவி பெற்றவர்கள் ஆகியவர்களினது அனாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில், சிதறி கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய தோல்வி ஒரு சாதனமாகும். ஆனால் ஜஸ்டிஸ் கட்சித் தோல்வியடையாது. ஏனெனில் அதற்கு எதிரான கட்சி எதுவும் கொள்கையில் பலம் பொருந்தியதாக இல்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் சிலர் இப்போது இருக்கும் அலசய புத்தியும் பொறுப்பற்ற தன்மையும், சுயநல சூழ்ச்சியையும் விட இன்னும் கேவலமாய் நடந்து கொண்டாலும் அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில், அதற்கு கொள்கை பலம் உண்டு. காங்கிரசுக்கு அது அடியோடு பூஜ்யம். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது என்று கருதுகிறேன்.

சமதர்மம்

5. சமதர்மத்தைப் பற்றி ஒரு தோழர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்யம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகின்றது. அதனாலேயே, நாம் அதை சமதர்ம ராஜ்யம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள்; ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வர் பயத்தினாலா? இல்லவே இல்லை. தாங்களாகவே ஆசைப்பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு செய்து கொண்டு போய் அமர ஆசைப்படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே எஜமானே என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தையாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆதாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கின்றேன். ஆகையால் சமுதாய சமதர்ம வேலையே தான் நான் இப்போதும் இன்றும் செய்து வருகிறேன்.

பொருளாதார சமதர்ம வேலை செய்ய எனக்கு ஆசைதான். ஆனால், காங்கிரஸ் அதற்குப் பரமவிரோதி என்பதோடு அது ஒரு காட்டிக்கொடுக்கும் ஸ்தாபனமுமாகும். அது ஒழிந்தால்தான் பொருளாதார சமதர்மம் பேச சவுகரியப்படும் என்றாலும் சட்டத்துக்கு மாறாய் இல்லாமல், அதாவது சர்க்கார் அடக்குமுறைக்கு ஆளாகாமல் எவ்வளவு சமதர்ம பிரசாரம் செய்யலாமோ அவ்வளவையும் செய்துதான் வருகிறேன். செய்யத்தான் போகிறேன். மற்றபடி நீங்கள் எனக்கு இவ்வளவு கெளரவம் செய்து இவ்வளவு தூரம் எனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

--------------------27.12.1936 ஆம் நாள் கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தை அடுத்த வரதராஜப் பேட்டையில் நடைபெற்ற கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்கத்தின் நான்காம் ஆண்டு விழாவில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய தலைமை உரை. ”குடி அரசு” - 10.01.1937

27.4.11

இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும்...


ஒன்றுக்கொன்று பொருத்தம்


இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும் ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமிபாரம் தீர்க்கவும் ராக்ஷதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள். இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக் கொண்டார்கள். சுப்ரமணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள். இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணியன் சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன்றான்; சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில் ராக்ஷதர்களைக் கொல்லக் கொல்ல மூலபலம் தானாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தது. அதுபோலவே சுப்ரமணியன் அசுரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாகிக் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக்கொண்டிருப்பதுமாக இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்ட கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரிய புராண 63 நாயன்மார்கள் கதையும் பக்த லீலாமிர்த ஹரிபக்தர்கள் கதையும் அனேகமாக ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பெரிய புராண நாயன்மார்களில் குயவர் வகுப்பு என்பதற்காக ஒரு நாயன்மாரை திருநீலகண்ட நாயனார் என்று உற்பத்தி செய்தது போலவே பக்த லீலாமிர்தத்திலும் குயவர் வகுப்புக்காக கோராகும்பார் என்பதாக ஒரு பக்தரை கற்பித்து இருக்கின்றார்கள். பெரிய புராணத்தில் பறையர் வகுப்பு என்பதற்காக நந்தனார் என்பதாக ஒரு நாயனாரை சிருஷ்டித்தது போலவே பக்த லீலாமிர்தத்திலும் பறையர் வகுப்புக்காக சொக்க மேளா என்கின்ற ஒரு பக்தரை சிருஷ்டித்து இருக்கின்றார்கள். இப்படியே மற்றும் பல நாயனார்களும், ஹரி பக்தர்களும் கற்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சம்பந்தமான கதைகளும் ஏறக்குறைய ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, திரு நிலகண்ட நாயனார் தன் பெண் ஜாதியோடு கோபித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் திரேக சம்மந்தமில்லாமலிருந்ததை சரி செய்ய சிவபெருமான் சிவயோகியாக வந்து இருவரையும் சேர்த்து வைத்ததாக கதை உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே பக்த லீலாமிர்தத்தில் கோராகும்பாரும் தன் மனைவியுடன் கோபித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் தேக சம்பந்தமில்லாமல் இருந்ததைச் சேர்த்து வைப்பதற்காகவே விஷ்ணு பெருமான் தோன்றி இருவர்களையும் சேர்த்து வைத்ததாகவே கதை கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே பெரிய புராணத்திலும் நந்தனாருடைய கதையிலும் நந்தனாரைக் கோவிலுக்குள் விடும்படி பரமசிவன் இரவில் வேதியர் கனவில் வந்து சொன்னதாகக் கற்கப்பட்டிருக்கின்றது. பக்த லீலாமிர்தத்தில் சொக்கமேளர் (சொக்கமாலா என்றும் சொல்வதுண்டு) என்னும் பறையர் ஒருவரை விஷ்ணு இரவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போனதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
இப்படி அனேக கதைகள் சைவத்திற்கும், வைணவத்திற்கும் போட்டிபோட்டு கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டிலும் பார்ப்பனர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் உயர்வுகள் கற்பிக்கப்பட்டிருப்பதிலும் ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இரண்டிலும் ஜாதி வித்தியாசத்தை உறுதிப்படுத்தி பிறகு அந்தக் குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில் மாத்திரம் மிக்க கடினமான நிபந்தனை மீது மன்னிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

ஆகவே இவைகள் சிவனும், விஷ்ணும் ஆகிய இரு கடவுள்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு செய்தார்களா? அல்லது இரண்டு சமயத்தின் பேராலும், ஜாதிகளை நிலை நிறுத்தவும், மதப்பிரசாரத்திற்கும், வயிற்றுப்பிழைப்புக்கும் வழிதேடும் ஆசாமிகளால் கற்பிக்கப்பட்டதா என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் நாம் சொன்னால் அது மிகுந்த "தோஷமாக ஏற்பட்டு, பெரிய பாவத்திற்காளாக வேண்டியதாய்ப் போய்விடும்."

---------- ----------- சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை -”பகுத்தறிவு” - சனவரி 1937

26.4.11

கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேயை கூண்டில் ஏற்றுவோம்!

களம் காண்போம் - வா, கழகத் தோழனே!

ஒரு கொடுங்கோலனைக் கூண்டில் ஏற்றுவோம்!

கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சே கூண்டில் ஏறும் காலம் வந்துவிட்டது; ஆம், வந்தே விட்டது!

பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பலி கொண்ட பாதகன் பாரோர் பரிகசிக்கும் வகையில் பன்னாட்டு நீதி மன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது - ஆம்; நெருங்கியே விட்டது.

என்ன கொடுமை!

கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர். இதனைத் தெரிவித்திருப்பது சிறீலங்கா அரசின் கச்சேரி ((Local Govt., Office) என்ற அமைப்பாகும்.

இவர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்களே சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நாவின் ஒச்சா அமைப்பின் கணிப்புக் கூறுகிறது.

எஞ்சிய 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் எங்கே போனார்கள்?
மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரர் சூசை அடிகளார், சேவியர் குலூஸ் அடிகளார் ஆகியோர் இந்த விவரத்தை மகிந்த ராஜபக்சே அமைத்த குழுவின் முன் தெரிவித்துள்ளனரே!

உண்மை இவ்வாறு இருக்கும்போது, இலங்கை இராணுவம் அறிவித்த மூன்று பாதுகாப்பு வளையங்களுக்குள் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 70 ஆயிரம் மட்டுமே என்று குறைத்துக் கூறியதன் மர்மம் என்ன?

படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் - எண்ணிக்கையை மறைப்பதற்குத்தானே!


இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற தமிழர்களையாவது காப்பாற்றினார்களா? கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலால் கொலைகார ஹிட்லர்கள் சிட்டுக் குருவிகளை போல சுட்டுத் தீர்த்தனரே!

ஆயிரம் கோயபல்சுகளும் இந்தக் கொடிய ராஜபக்சேவுக்கு ஈடாக முடியுமா?
விடுதலைப்புலிகளிடம் சிக்கிய மக்களை, ஒருவரைக்கூடக் கொல்லாமல் (with Zero Civiian casuality) அனைவரையும் மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக நாக் கூசாமல் கூறியதை என்ன சொல்ல!

அய்.நா. அமைத்த மூவர் கொண்ட வல்லுநர் குழு - ராஜபக்சே கூறியது பொய்! பொய்!! பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பட்டவர்த்தனமாக அறிவித்துவிட்டதே!


இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்ச்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென் ஆப்பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூக்கா ஆகிய இருவர் அடங்கிய குழு தனது அறிக்கையை அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அளித்துவிட்டது (13.4.2011)

இந்த அறிக்கையை சிங்கள அரசு நிராகரிக்கிறதாம் - இந்த அறிக்கைக்கு எதிராக சிங்கள மக்களைக் கிளர்ந்தெழச் செய்யும் கீழ்த்தரமான வேலையில் இறங்கி விட்டார் ராஜபக்சே!.


குருதியை உறையச் செய்யும் குரூரமான செயல்களை அய்.நா. வல்லுநர் குழு அறிக்கை பட்டியலிட்டு விட்டது. போர்க் குற்றங்களைக் கண்டிப்பாகச் செய்தது சிங்கள இராணுவம் என்பதற்கு ஏராளமான தகவல்களை வாரிக் கொட்டியுள்ளது.

கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன - அய்.நா.வால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு வழங்கப்படும் மய்யங்கள்கூட இராணுவத்தின் தாக்குதலுக்குத் தப்பவில்லை - மருத்துவமனைகளும் குறி பார்த்துத் தகர்க்கப்பட்டன.

சிங்கள இராணுவத்தின் வெறியாட்டம் வெளி உலகத்தில் வெளிச்சத்துக்கு வரக்கூடாது என்பதற்காக ஊடகக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சமாதான வெண் கொடியை ஏந்திச் சென்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வளவையும் செய்துவிட்டு, டைம்ஸ் ஏடு கணிக்கும் ஆற்றல் - வாய்ந்த உலகத்தில் உள்ள நூறு பேர்களுள் தாமும் ஒருவர் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று சூழ்ச்சி செய்து, அய்.நா. மன்றத்து முயற்சியின் கண்களில் மண்ணை அள்ளிப் போடலாம் என்று திட்டமிட்டார் - அந்தோ! பரிதாபம், அது கருவிலேயே சிதைந்துவிட்டது.


இப்பொழுது ராஜபக்சேயின் ஒரே நம்பிக்கை - இந்தியா, சீனா, ருசியா, பாகிஸ்தான் நாடுகள் நம்மை எப்படியும் கைவிடாது என்பதுதான்.

அய்ரோப்பிய ஒன்றிய 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி, இலங்கை அதிபர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்டு வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் அடிநாதம் (26.5.2009).

இந்த மனிதநேயத் தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்ததில் முதல் இடம் இந்தியாவுக்குத்தான்.


இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே என்பவர் அய்.நாவில் என்ன பேசினார் தெரியுமா?


இந்தக் கூட்டமே அவசியமற்றது; உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, அதனைத் தண்டிக்க, கண்டிக்க முயற்சிக்கக் கூடாது என்று பேசினாரே!

சீனா, ருசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கொடுங்கோலன் ராஜபக்சேயின் பாசிசப் போக்கிற்குப் பச்சைக் கொடி காட்டி, வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் தங்களுக்கான இடங்களை முன்பதிவு செய்து விட்டனர். இதைவிட கேவலம் - இலங்கை அரசு கொண்டு வந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான்.

பான் கீ முன் அமைத்த வல்லுநர் குழு இதுபற்றிக் கூறியுள்ள கருத்து மிக மிக முக்கியமானது.

2009 மே 26 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (எண் ஹ/ழசுஊ/8-11/டு.ஐ (சுநஎ2) மாற்றியமைக்கப்பட வேண்டும்; இதற்காக அய்.நா.வின் மனித உரிமைக் குழு கூட்டப்பட வேண்டும் என்று இந்த வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

இப்பொழுது நம்முன் உள்ள பிரச்சினை மட்டுமல்ல; உலக நாடுகள் முன் மனித உரிமை, மனிதநேயம் ஆகிய பண்புகள் முன் உள்ள ஒரே ஒரு பிரச்சினை - அய்.நா.வின் வல்லுநர் குழு அறிக்கையின்படி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான். இதற்கான மக்கள் கருத்தை உருவாக்குவோம்! அதில் ஒரு முக்கிய செயல்பாடுதான் நாளை மறுநாள் (28.4.2011) தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் அரங்கேற்ற இருக்கும் ஆர்ப்பாட்டம் ஆகும்.

சென்னையில் தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார். மற்ற மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஆர்ப்பாட்டச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதில் இந்தியா நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ராஜபக்சேயை காப்பாற்றும் கேவலமான காரியத்தில் இந்தியா ஈடுபடுமேயானால், அதைவிட அநாகரிகம், மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் கேவலம் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

இந்தியாவின் எந்தக் குரலுக்கும் அதற்குப்பின் எந்தவித மரியாதையும் கிடைக்காது - கிடைக்கவே கிடைக்காது.

தமிழர்களின் எதிரி இந்தியா என்ற எண்ணம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் உறுதியாக - கல்வெட்டாக செதுக்கப்பட்டு விடும்.

காங்கிரஸ் என்பதன் கடைசிப் பூண்டும் தமிழ்நாட்டில் அற்றுப்போய் விடும்.

கழகத் தோழர்களே! தமிழ் மண்ணின் எரிமலைக் குமுறலை வெளிப்படுத்தும்

நாள் - ஏப்ரல் 28.

கிளர்ந்திடுவீர் - தமிழர்களை இணைத்திடுவீர்!

கழகம் கொடுக்கும் குரல் அய்.நா. மன்றத்தின் கதவினையும் கனமாகத் தட்டட்டும்!
களம் காண்போம் வா, கழகத் தோழனே!

-----------------மின்சாரம் அவர்கள் 26-4-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை