Search This Blog

28.2.13

ஜாதி சின்னங்களை,பூணூல் அணிவது உட்பட தடைசெய்யப்பட வேண்டும்!


தூக்குத் தண்டனையை ரத்து செய்க!
தென்மாவட்டங்களைப் பாதிக்கச் செய்யும்
முல்லைப் பெரியாறு தடையை நீக்கிச் செயல்படுத்துக!
சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படட்டும்!!
கம்பம் திராவிடர் கழக மாநாட்டில் அரிய தீர்மானங்கள்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார்
கம்பம், பிப். 28- தென் மாவட்டங்களுக்கு மிகவும் தேவைப்படும் முல்லைப் பெரியாறு நீர்ப்பாசனம் வழக்கம்போல அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாடு உரிமையைக் காப்பாற்றும் வகையில் உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில, மத்திய அரசுகளை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 27.2.2013 அன்று கம்பத்தில் நடைபெற்ற மதுரை மண்டல திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1 (அ) :
ஜாதி என்பதும் - அதன் விளைவான தீண்டாமை என்பதும் பகுத்தறிவுக்கும்,  அறிவியலுக்கும், மனிதத் தன்மைக்கும் விரோதமானதால் அந்தப் பிறவி பேதங்களை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக வாழ வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்ப்பெருங்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 1 (ஆ) :

தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 1 (இ) :

ஜாதி, மத வெறிகளைத் தூண்டுவதோடு வன்முறைக்குத் தூபம் போடும் வகையில் பேசுகிறவர்கள், எழுது கிறவர்கள், நடந்து கொள்பவர்கள் மீது காலந் தாழ்த்தாது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 1 (ஈ) :

அரசியலுக்காக ஜாதியைப் பயன்படுத்தும் போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. குறிப்பாக தலித்- தலித் அல்லாதார் என்று ஒரு புதிய முறையில் பிளவுபடுத்திட மேற்கொள்ளப்படும் சிந்தனை - அணுகு முறை - செயல்பாடுகள் அபாயகரமான திசைநோக்கி சமூகத்தை இழுத்துச் செல்லும் என்பதை எடுத்துக்காட்டி, சமூக எழுச்சி வரலாறு அத்தகையோரை மன்னிக்காது - மறக்காது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு இம் மாநாடு சுட்டிக்காட்ட விழைகிறது.

தீர்மானம் 2 : 

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய மிகவும் முக்கியமான இவ்விரு சக்திகளும் இணைந்து போராடி பல உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, இருகரங்களாக, தோள்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. நம்மில் ஒற்றுமை நீங்கின் ஆதிக்க சக்திகள் தலைஎடுக்க ஏதுவாகும் என்பதை இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது. இச்சமூகங்களை வழிநடத்தும் தலைவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிளவு மனப் பான்மையை, பகைமை உணர்ச்சியை மறந்தும் கூட ஏற் படுத்தாது, சமூகப் பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதிலாக அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி மறுப்பு திருத்தம் செய்க!

தீர்மானம் 3 : 

இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை (UNTOUCHABILITY)
ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. இந்த வகையில் மாநில அரசுகளும், முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களும் வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தைச் செயல்படுத்துக!

தீர்மானம் 4 :
(அ) ஜாதியைப் பாதுகாக்கும், ஊக்குவிக்கும் கீதை, மனுதர்மம் போன்ற வேத சாஸ்திர, புராண, இதிகாச நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(ஆ) ஜாதி - தீண்டாமை என்பவை குற்றமானவை. மனித நேயத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் எதிரா னவை என்ற உணர்வை தொடக்க நிலையிலேயே மாணவர்களுக் குப் போதிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வகுக்குமாறு மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(இ) ஜாதி என்ற அளவுகோல் சமூகநீதிக் கண் ணோட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும், மருந்தில் நோய்க்கொல்லியாக விஷம் சேர்க்கும் அளவு பயன் படுத்தப்படவேண்டும் என்றும், வேறு எந்தக் காரணத் துக்காகவும் ஜாதி முன்னிறுத்தப்படக்கூடாது என்றும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது. இதுவும் கால வரை யற்றதல்ல; ஒரு சமனியம் பெறும் வகையில் மட்டுமே!

(ஈ) பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைக் கண்டிப்பாகப் போடக்கூடாது.

(உ) ஜாதி சின்னங்களை குறிப்பாக பூணூலை யாரும் அணியக்கூடாது.
ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப்பது ஜாதி சின்னங்களை.
 தடைசெய்யப்பட வேண்டும்

(ஊ) தெருக்கள், ஊர்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள், வணிக நிறுவனங்களில் இடம்பெறும் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும் வகையில் சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(எ) கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(ஏ) ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள் வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர்களாக அறிவித்து குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவர்களுக்கு இடஒதுக்கீடு (INTER CASTE QUOTA) அளிக்கப்பட வேண்டும். இந்த வகையான இடஒதுக் கீட்டின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போக வேண்டும், ஜாதி அளவு கோல் இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டு போகும் வகையில் சட்டத்திருத்ததத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(அய்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டும்போது, தனித்தனி காலனிகளைக் கட்டாது, ஊருக்குள் பலரும் கலந்து வாழும் வகையில் கட்டித் தருவதே சமத்துவம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு நிரந்தர வழிவகுக்கும் என்பதை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் கொள்ள இம்மாநாடு வற்புறுத்துகிறது.

தீர்மானம் 5 :

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களையும், காதல் திருமணங்களையும் - துணைவரை இழந்தோர், மணமுறிவு பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகி யோருக்கான திருமணங்களையும் ஊக்குவிப்பது, மன்றல் தேடும் விழாக்களை நடத்துவது, அவர்களுக்குப் பாது காப்பு அளிப்பது என்ற ஆக்க ரீதியான செயல்களில் ஈடு படுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 6 :

சிலை திருட்டுப் போன்றவற்றிற்குக் காவல் துறையில் தனி உளவுத்துறை இருப்பது போல ஜாதி, மத மோதல் களைத் தொடக்க நிலையிலே தடுக்கும் வகையில், காவல் துறையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள் கிறது.

(அ) இன்னும் தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளை முறை, சுடுகாடு மற்றும் சுடு காட்டுக்குச் செல்லும் பாதைப் பிரச்சினைகள், கோயில் திருவிழாக்களில் ஜாதியச் சிக்கல்கள் அவற்றின் காரணமாக கலவரங்கள் - இவற் றிற்கு இடம் இல்லாத அளவுக்கு இராணுவத் தீர்வு போல செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளுக்குத் திட்ட வட்டமாகத் தெரிவித் துக் கொள்கிறது.

தீர்மானம் 7 :

நீதித்துறை, தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட் டைச் செயல்படுத்த வேண்டும் என்றும், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ராமன் பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா?

தீர்மானம் 8 :
ராமன் பெயரைச் சொல்லி, தமிழ் நாட்டின் நீண்டகால எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்குவதைப் புறந்தள்ளி, மக்கள் வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு அத்திட்டத்தை உடனடியாகச் செயல் படுத்த மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9 :
முல்லைப் பெரியாறு அணையினால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட் டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்குப் பயன்பட்டு வந்தது. 152 அடி நீரைத் தேக்க வசதி படைத்த இந்த அணையில் வெறும் 136 அடியாகக் குறைக்கப் பட்டதால் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகி விட்டன. 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒரு போக சாகுபடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கேரள அரசு அடாவடித்தனமாக 152 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இப்பிரச்சனையில் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் சட்டப்படியான நிலை தொடருவதற்கு ஆவன செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10 :
ஈழத்தில் இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தவகையில் இந்திய அரசு முன்னின்று செயல்பட வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

ஈழத்தில் எஞ்சியுள்ள தமிழர்கள் வாழ்வுரிமை பாதிக் கப்பட்டு, அன்றாடம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், இதில் இந்தியா அக்கறைகாட்டி செயல்பட வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. டெசோ அமைப்பின் செயல்பாடுகளை இம்மாநாடு வரவேற்கிறது. இதற்குத் தமிழர்கள் பெரும் ஆதரவு காட்டி ஈழத்தமிழர் களின் உரிமை வாழ்விற்கு ஒத்துழைப்புக் கொடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தூக்குத் தண்டனையை ரத்து செய்க!

தீர்மானம் 11 :
தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 12 :
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல வறண்ட, நிலத்தடி நீர் குறைந்து போன மற்ற மாவட்ட விவசாயி களுக்கும்,  அரசு மானியம் வழங்க முன்வரவேண்டுமென இம்மாநாடு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 13 :
விலைவாசியைக் குறைப்பதற்கு அனைத்து முயற்சி களையும் எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார். பலத்த கரஒலிக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன).
      ----------------------”விடுதலை” 28-2-2013

27.2.13

நீ என்ன ஜாதிடா!? பார்ப்பனத் திமிர் -குறுக்கு வழியில் தீர்ப்பு வாங்க வந்த துறவி!

இவர் - இவர்கள் புரிந்துகொள்ளுங்கள்! 

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த, முதிர்ந்த வழக்குரைஞர்களில் ஒருவர் நண்பர் ஆர். காந்தி அவர்கள். தமிழ் இனவுணர்வாளர் - தேசியவாதி - என்றாலும் கட்சியைவிட தனக்குச் சரியெனப்படுவதைத் துணிவுடன் எங்கும் கூறத் தயங்காதவர்.

ஒப்பற்ற உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து சமூகநீதிக் கொடியை அவர் சென்ற பஞ்சாபில் பறக்கவிட்டதால், ஆதிக்க ஜாதிகளின் மீடியா சதிகளால் பின்னப்பட்டாலும், சற்றும் கலங்காது நெஞ்சை உயர்த்திய ஜஸ்டீஸ் வி. இராமசாமியின் இளையராக - அவரது அலுவலகத்தின் வார்ப்படங்களில் ஒருவர்.

அவர் எழுதி, இரண்டாம் பதிப்பாக வெளிவந்த ஆம், கனம் நீதிபதி அவர்களே! என்ற தலைப்பில் உள்ள அவரது தன் வரலாற்று நூலை எனக்கு நமது கழகச் சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன்மூலமாக நேற்றுமுன்தினம் (25.2.2013) அனுப்பி வைத்தார்.

இரவு கூட்டம் முடித்துச் சென்று, படுக்கைக்குப் போகும் போது அந்நூலை எடுத்துப் படித்தேன் - சுவைத்தேன்!

மிக யதார்த்தமாக எதையும் மறைக்காமல் அந்த காந்தி அண்ணல் போலவே உண்மைகளை அப்பட்டமாகப் போட்டு உடைத்துள்ளார்.

இவரது வாழ்க்கை வரலாறு என்றாலும், நம் சமூகம் எப்படிப்பட்டது என்பதை சில நிகழ்வுகள்மூலம் எல்லோருக்கும் புரிய வைக்கிறார்.

ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களுக்கு நெருக்கமான குடும்பம் இவரது குடும்பம். காங்கிரஸ் பாரம்பரியம். இவரது தாயார் மிகவும் நோய்வாய்ப் பட்ட நிலையில் இருந்தபோது, இவர் குழந்தைப் பருவத்தில் - தியாகியான அவரது தந்தை தியாகி இராமசாமி (கவுண்டர்) சிறையில் தண்டிக்கப் பட்டிருந்தபோது, அவரைப் பரோலில் வெளிவந்து மரணப் படுக்கையில் இருந்த இவரது தாயாரைச் சந்திக்க வைக்க தந்தை பெரியார் அவர்கள்தான் பெரும் உதவி செய்தார் என்று நன்றி யுடன் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார்!

பெரியாரின் மனிதநேயம் பற்றிய பல்வேறு நிகழ்வுகளைத் தொகுத்தால், ஒரு நூலே எழுத முடியும்.

முத்தமிழ்க்கலா வித்துவ ரத்தினங்களான டி.கே.எஸ் சகோதரர்களில் டி.கே. சண்முகத்தின் மனைவி அவர்கள் க்ஷயரோகம் காரணமாக மரணத்தின் விளிம்பில் இருந்தபோது, மற்றவர்கள் ஈரோட்டில் வீடு தர மறுத்தபோது, பெரியார் ஒரு புது வீட்டுச் சாவியை தன்னிடம் தந்து, எங்களுக்குப் புகலிடம் தந்தார் என்று அவர் தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்!

இந்த நூலில், கடவுள் நம்பிக்கை யாளரான வழக்குரைஞர் காந்தி அவர்கள்  குறிப்பிடும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இதோ:

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந் திருப்பது இறைவன் மட்டுமல்ல, சில சிக்கல்களும்தான். தமிழகத்தில் அப்படி எங்கும் நிறைந்திருக்கும் ஒரு சிக்கல் தான் ஜாதிச் சிக்கல். கருவறையிலேயே ஜாதி தீர்மானிக்கப்படுகிறது. கல்லறை வரை அது தொடர்கிறது. இடையில் பள்ளிக்கூடத்தில், பணியிடத்தில் என்று வாழ்வாதார நிலையங்களிலெல்லாம் ஜாதி சப்பணமிட்டு அமர்ந்துகொள் கிறது.

நான் சென்னைப் பார் அசோசி யேஷனில் அங்கத்தினராக இருந்தேன். 1976 என நினைக்கிறேன். ஒரு நாள் மதியம் என் வீட்டிலிருந்து நெய்ச்சோறு (பிரியாணி) கொடுத்தனுப்பி இருந் தார்கள். அதன் மணம் பார் அசோசி யேஷன் முழுவதும் பரவியது. என்ன காந்தி வீட்டில் விசேஷமா? என்று கேட்கும் அளவுக்கு அனைவரின் மூக்கிலும் நுழைந்து மூளை வரை சென்றது அந்த மணம்.

அடுத்த நாள் முன்னாள் அட்வகேட் ஜெனரல் திரு.வி.கே. திருவேங்கடாச் சாரி, டேய் காந்தி! இங்கே வாடா! என்றென்னை அழைத்தார். பொதுவாக எல்லாரையும் அவர் டேய் என்றுதான் கூப்பிடுவார். நானும் மரியாதை நிமித் தமாகச் சென்று, சொல்லுங்க என்றேன். நீ என்னமோ கறி தின்கிறியாமே, அதுவும் பார் அசோசியேஷனில் கறி சாப்பிடுகிறாயாமே! என வினவினார். எனக்குச் சுருக்கென்றது. ஆனாலும், ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவே இருந்தது. காரணம், பிராமணர்களின் மூக்கைக்கூட என் வீட்டுப் பிரியாணியின் மணம் விட்டு வைக்கவில்லையே என்று. உடனே, நான் கறி மட்டுமா? மீன், கோழி, கருவாடு எல்லாம்கூட சாப்படுகிறேன். இதனால் யாருக்கு என்ன இழப்பு? என்று துணிச்சலாகக் கேட்டுவிட்டேன்.

சில வயதான பிராமணர்கள் வயிறு எரிந்து பேசினார்கள். அதனால்தான் உன்னிடம் சொன்னேன் என்றார். நல்லவர்கள், வயிறு எரிந்து பேசினால் தான் நாடே நலிந்து போகும் என மனத்தில் நினைத்துக்கொண்டே என்னோடு அமர்ந்து சில பிராமணர்களும் கறி உண்ணுகிறார்களே! அதை என்ன சொல்லுவது? என்று மறுமொழியாகக் கேட்டேன்.

என் வினாவுக்குச் சற்றும் தொடர்பே இல்லாமல் அடுத்த வினா எழுப்பினார் அவர். நீ என்ன ஜாதிடா? என்றார். ஒருபுறம் கோபம். மறுபுறம் அதிர்ச்சி. என்றாலும், அவற்றை வெளிக்காட்டா மல், நான் பறையன்தானுங்க என்றேன். இப்போது அவர் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டார். அதை வெளிப்படுத்தியும் விட்டார். பறையன் தெரியாதுங்களா? எஸ்.சி.,யில ஒண்ணு என்றேன். அவ்வளவுதான், நீ கறியாவது சாப்பிடு! வேறு எதையாவது சாப்பிடு! என்று கோபமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டார்.

வி.கே.டி. (V.K.T.) என்ற மூன்றெழுத்து உயர்நீதிமன்றத்தில் பெரிதும் மதிக்கப்படுகிற பெயர். மிகச் சிறந்த அறிவாளி. சட்ட நூல்களை அலசிக் குடித்தவர். காமராசர், பக்தவத்சலம், போன்ற முதலமைச்சர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட மாபெரும் மனிதர் நான் புலாலுணவு சாப்பிட்டேன் என்பதற்காக நீ என்ன ஜாதிடா எனக் கேட்டதுதான் இன்னும் வருத்திக் கொண்டிருக்கிறது. அன்று சாப்பிட்ட கறி செரித்துவிட்டது. ஆனால், அவர் கேட்ட வினா இன்னமும் செரிக்க வில்லை.

நீதித்துறையிலும் ஜாதி ஆணவத்தை எக்ஸ்-ரே படம்மூலம் அல்லவா காட்டுகிறார்?

இரண்டாவது சம்பவம்:

காவிகளுக்குள்ளே ஒளிந்துள்ள கர்வமும், கபடமும் எப்படி என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது!

அருட்செல்வர் என்ற பட்டத்துக்கு உரியவர்தாம் அருட்செல்வர் திரு. மகாலிங்கம் அவர்கள். ஆன்மிகத்திலே மிகுந்த ஈடுபாடு உடையவர். வள்ளலார் நெறி போற்றுபவர். ஆண்டுதோறும் வள்ளலார், காந்தி விழாவினை அக்டோபர் மாதம் சிறப்பாக நடத்தி வருபவர். தமிழ்மொழியின்மீது அள விலாத பற்றுடையவர். தமிழ் நூல்கள் வெளியிடுவதற்கும் தமிழறிஞர்களுக்கு உதவிகள் பல செய்து வருபவர். தொழிலதிபர் என்றாலும், எளிமையாக இருப்பவர். இப்படி இவர் சிறப்புகளின் அணிவகுப்புப் பெரியது. என்னுடைய இனிய நண்பர்.

ஒரு நாள் இவரின் உதவியாளர் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். திருப்பராய்த் துறை ஆசிர மத்திலிருந்து சாமி வந்திருக்கிறார். உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்றார். இன்று வீட்டில்தான் இருக் கிறேன் வரச் சொல்லுங்கள் என்றேன். அன்றைய தினம் நீதிமன்றம் விடுமுறை என்பதாலும், வெளியே போகவேண்டிய பணி இல்லாததனாலும் வீட்டில்தான் இருந்தேன். நண்பகல் 12 மணியளவில் பெரிய காரிலே வந்திறங்கினார். துறவி என்பதற்கு அடையாளமான காவியுடை அணிந்து வந்திருந்தார்.
அவரை வாசலிலே இருந்து வர வேற்று என் அலுவலகத்தில் அமரச் செய்தேன். மரபு கருதி காபி சாப்பிடுகிறீர்களா அல்லது மோர் வேண்டுமா என்று கேட்டேன். மோரைவிட காபி தானே காஸ்ட்லி அதையே கொண்டு வாருங்கள் என்றார். பருகுவதிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கிறாரே என்ற எண்ணம் அப்போது என்னுள் ஓடியது. அதனை வெளிக்காட்டாமல் காபி கொண்டு வரச் சொன்னேன். வழக்கமான நல விசாரிப்புகள். பிறகு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்? நான் ஏதாவது செய்யவேண்டுமா? என வினவினேன்.

இந்த வினாவுக்காகவே காத்திருந்திருப்பார் போலும். கேட்டவுடன் அப்படி யொரு பிரகாசம் அவர் முகத்தில். வேறொன்றும் பெரிய செய்தி அல்ல. எங்கள் மடத்துப் பெரிய வழக்கொன்று கரூர் சார்பு நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கிருக்கும் நீதிபதி உங்கள் இளவரென்று கேள்விப்பட்டேன். நீங்கள் கோடு போட்டால் அவர் தாண்டவே மாட்டாராம் எனச் சிரித்துக் கொண்டே சொன்னார். எனக்குச் சிரிப்புக்குப் பதிலாய் எரிச்சல்தான் வந்தது. என்றாலும், அதை உடனே வெளிக்காட் டாமல், ஆமாம்! அவர் என் இளவர்தாம். நான் கோடு போட்டால் அவர் தாண் டவே மாட்டார் என்பதும் உண்மைதான் என்றேன்.

முன்பிருந்த ஒளியைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி அவர் முகத்தில் இப்போது தெரிந்தது. மகிழ்ச்சியில் அவர் மனம் திளைத்திருந்ததை முதலில் முகம் சொல்லியது. அடுத்து அவரின் வார்த்தை சொல்லியது. மிகுந்த மகிழ்ச்சியில், அப்போது நம் வழக்கு ஜெயித்துவிட்டதுபோல்தான் என்றார். உடனே அவரை மறுத்து நான் கோடு போட்டால் என் இளவர் தாண்ட மாட்டார் என்பதை அறிந்திருக்கிறீர் கள். ஆனால், நான் கோடே போட மாட்டேன் என்பதை நீங்கள் அறிந் திருக்கவில்லையே என்றேன். இதைக் கேட்டவுடன் அவர் முகம் சுண்டைக்காய் போலச் சுருங்கிவிட்டது.

எனக்கு ஏற்பட்ட கோபத்தில் கடுமையான அறிவுரைகளை அவருக்கே சொல்லத் தொடங்கிவிட்டேன். நீங்கள் எல்லாம் துறவி என்ற பெயரில் காவியை அணிந்துகொள்வதற்கே அச்சப்பட வேண்டும். சுவாமி சித்பவானந்தர் அவர்களிடத்தில் உண்மையிலேயே நீங்களெல்லாம் தீட்சை பெற்றிருந்தால் இப்படிப்பட்ட தவறான எண்ணங்களோடு நடந்திருக்கமாட்டீர்கள் என்றேன்.

நான் சித்பவானந்தர் அவர்களின் காலில் விழுந்து அவரிடம் பலமுறை வாழ்த்துப் பெற்றதாலும், அவரின் கைகளைப் பிடித்துச் சில நாள் நடக்க வாய்ப்புப் பெற்றதனாலும் இன்றுவரை நான் தொழிலில் நேர்மையாகவும், தூய்மையாகவும் நடந்து வருகிறேன். நீங்கள் குறுக்கு வழியில் சென்று தீர்ப்புப் பெறும் செய்தி மட்டும் சுவாமி சித்பவானந்தர் அவர்களுக்குத் தெரிந்தால் கல்லறையிலிருந்து எழுந்து வந்து உங்களை அடிப்பார் என்றேன்.

துறவியர் பெருமக்கள் என்றால், சமூகத்துக்கே எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். துறவியின் சிறப்பை உணர்த்துவதற்காகவே தனியோர் அதிகாரம் படைத்திருக்கிறார் பார்புகழ் வள்ளுவப் பெருந்தகை. திருப்பராய்த் துறை மடத்துத் துறவியான இவர் இப்படிக் குறுக்கு வழியைத் தேர்ந் தெடுப்பார் என்று நான் எண்ண வில்லை. எடுத்துக்காட்டுப் பெருமக்களே ஏடாகூட மக்களாய் வாழ்ந்தால் பொதுமக்களின் கதி என்னாவது? இந்த ஆதங்கமே என்னை அவரிடம் கோபமாய்ப் பேச வைத்தது.

வந்திருந்த சாமியாரோ, மகாலிங்கம் சொல்லித்தான் வந்தேன் என்றார். உடனே நான், இந்த மகாலிங்கம் மட்டுமல்ல கைலாயத்திலிருக்கும் அந்த மகாலிங்கமே வந்தாலும், இதுதான் பதில் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டேன்.

துறவிகளுக்குக் கோபமே வரக் கூடாது என்பார்கள். ஆனால்,  இவருக்குச் சட்டென்று கோபம் வந்து விட்டது.வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்றுதான் திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார். துறவியர் தன் மைக்கு மாறாக இவருக்குக் கோபம் வந்து, கொடுத்த காபியைக்கூட குடிக்காமல் சென்றுவிட்டார்.

குறுக்கு வழியில் சென்று தீர்ப்பு வாங்கத் துறவிகளே முன்வந்தால் நியாயம், தருமம் முதலியவற்றை யார் தாம் கடைப்பிடிப்பது? இந்தச் சாமியாரின் இத்தகைய நடவடிக்கையைப் பார்த்தால், இவருக்கு இதுவரை சாதகமாய் வந்த தீர்ப்புகளையெல்லாம் சந்தேகப்பட வேண்டியதாய் இருக்கிறது.

சில நாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது இந்தச் சாமியார் குறித்த பேச்சும் எழுந்தது. மகாலிங்கம் அவர்கள், என்னிடம் அந்தச் சாமியார் உங்களைப் பார்க்கவேண்டும் என்று தான் சொன்னார். ஆனால், காரணத்தைச் சொல்லவில்லை. காரணம் தெரிந் திருந்தால், நானே அனுப்பியிருக்க மாட்டேன் என்று சொல்லிப் புன்ன கைத்தார்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள் களஞ்சியமாக உள்ளன! நல்ல நூல், படித்து நாமும் பயன்பெறவேண்டிய நூல்.

தோல்வியைப் படிக்கட்டாக்கி, அதன்மேல் ஏறி நிற்கும் நண்பர் அவர்.
ஏணியாய் பலரை ஏற்றி விடுபவர் இவர்! எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் இன உணர்வாளர்!

26.2.13

இதுதான் மதச் சார்பின்மையா? அறிவியல் மனப்பாங்கா? வெட்கக் கேடு - மானக் கேடு!



இந்திய அரசியல் சட்டத்தின்மீது உண்மையான நம்பிக்கை கொண்டு அதன்படி, கடமையாற்றுவேன் என்றுதான் பிரதமர், முதல் - பஞ்சாயத்துத் தலைவர் வரை உறுதி மொழி கூறி பிறகு பதவியேற்கிறார்கள்!

ஆனால் நம்முடைய நாட்டில் மதச் சார்பின்மை எப்படி கேலிக் கூத்தாக்கப்படு கிறது என்ற செய்தி அன்றாடம் ஏடுகளில் ஏராளமாக வந்து கொண்டுள்ளது. இதைவிட வெட்கக்கேடு, உறுதிமொழி மீறல் என்ற குற்றம் வேறுண்டா?

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாளை அவருடைய கட்சிக்காரர்கள் கொண் டாடுவது அவர்களுடைய உரிமை.

அதற்காக தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தையே யாக சாலையாக மாற்றியா கொண்டாடி, மதச் சார்பின்மை - Secular State - என்பதை கொச்சைப்படுத் துவது?

இதுபற்றி பேச, எழுத, கண்டிக்க, ஜன நாயக வாதிகள் - இடதுசாரிகள் என்ற முற் போக்கு அக்மார்க் முத்திரையாளர்கள் முன்வர வேண்டாமா?

ஒரு நாளேடு - அதுவும் அம்மாவின் ஆட்சிக்கு முழு ஆதரவு தரும் அக்கிரகார பூணூல் நாளேடு இன்று காலை வெளி யிட்டுள்ள செய்தி இதோ:

யாக சாலையாக மாறிய வீட்டுவசதி வாரிய அலுவலகம் 

சென்னை நந்தனத்தில் உள்ள, வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக வர வேற்பறை, நேற்று திடீரென, யாக சாலையாக மாறியதால், ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின், தலைமை அலுவலகம் நந்தனத்தில் உள்ளது.

வாரியத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர், செயலர் ஆகி யோரின் அலுவலகங்கள் இங்கு செயல்படு கின்றன. இந்நிலையில், நேற்று காலை, வாரிய பணியாளர்களும், அதிகாரிகளும் வழக்கம் போல், வாரிய அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், வாரிய அலுவலக கட்டடத்தின் தரைத் தளத்தில், வரவேற்பறை அமைந்துள்ள பகுதியில், புரோகிதர்கள் புடைசூழ, அக்னி வளர்க்கப்பட்டு, யாகம் நடந்து கொண்டிருந்தது.

வாழை, மாவிலை தோரணம் என்று, வழக்கமான அரசு அலுவலகத்துக்கான நிலையில் இருந்து, முற்றிலும் மாறுபட்டு, ஒரு யாக சாலையாகவே மாறியிருந்தது. இதைப் பார்த்த ஊழியர்கள், நம் அலுவலகத்துக்கு தான் வந்திருக்கிறோமா அல்லது ஏதாவது யாக சாலைக்குள் சென்று விட்டோமா என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

காரணம் என்ன? இதுகுறித்து விசாரித்த போது, அண்ணா தொழிற்சங்கம் சார்பில், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, இந்த யாகம், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டதாக, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என, ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், வீட்டுவசதி வாரிய தொழிற் சங்கத்தினர், வாரிய தலைமை அலுவலகத்தை, யாக சாலையாக மாற்றி யிருப்பது குறிப் பிடத்தக்கது. - (தினமலர் பக்கம் 12)

யாகசாலை நடத்தலாமா? வீட்டு வசதி வாரியம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட லாமா? யாகக் குண்டம் அங்கேதான் நடத்த வேண்டுமா? எளிமையாகக் கொண்டாடுதல் என்பது இதுதானா?

மதச்சார்பின்மைபற்றி எழுத்தில், பேச்சில் பீற்றிக் கொள்ளும் முற்போக்காளர்கள் எல்லாம் இதைக் கண்டும் காணாததுபோல் முக்காடு போட்டுக் கொண்டு சீட்டுப் பிச்சைக் காக திருவோடு ஏந்தி நிற்கலாமா?
இது ஒருபுறம், இன்னொருபுறம்  செயற் கைக்கோள்களுடன் சிறீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் மிகச் சிறப்பாகத் தயாரித்த பி.எஸ்.எல்.வி.20 ராக்கெட் வெற்றி கரமாக பறந்தது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே! விரைவில் செவ்வாய்க் கிரகத் தினை நோக்கி நம் செயற்கைக் கோள் செலுத் தப்படும் என்று பெருமிதத்துடன் நமது குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!

ஆனால் அந்த இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக உள்ள ராதாகிருஷ்ணன் நாயர், இதை விண்வெளிக்கு அனுப்புமுன், திருப்பதி சென்று வெங்கடாஜலபதியிடம் வைத்து (Miniature
-  சிறிய மாடல்) அர்ச்சனை செய்து பிறகே திரும்பி, இந்த ராக்கெட்டைச் செலுத் தியுள்ளார். இவ்வளவு விஞ்ஞானிகளின் மூளையை - ஆராய்ச்சியை - அறிவை - வெறும் சூன்யப்பிரதேசமாக ஆக்கிக் காட்டியிருக்கிறார்! 

விஞ்ஞானிகளே இப்படி மூடநம்பிக்கை பரப்பும் முகவர்களாக இருக்கலாமா? நல்ல வேளை கோவிந்தா கோவிந்தா கோஷம் கொடுக்கச் செய்யவில்லை!
அவருக்குப் பக்தி இருந்தால், அது அவரது சொந்த விஷயம்; வீட்டுக்குள் பூஜை புனஸ்காரம் என்று புரண்டு புரண்டு எழட்டும் நமக்குக் கவலை இல்லை; இப்படி பொதுவான ஒரு அறிவியல் சாதனையை - விஞ்ஞான வளர்ச் சிக்கு விரோதமாகச் செய்து காட்டுவது எவ் வகையில் நியாயம்? மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமல்லவா?

நாளைக்கு கிறிஸ்துவர் அதிகாரி வந்தால்  சர்ச்சுக்குப் போவார் - இஸ்லாமி யர் மசூதிக்குப் போவார் என்றால் அதை விடக் கேலிக் கூத்து வேறுண்டா?
அரசியல் சட்டத்தின் 51A(h) பிரிவின் கீழ் உள்ள, குடிமகனின் அடிப்படைக் கடமை அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது என்ப தற்கு நேர்மாறானதல்லவா - ராதாகிருஷ் ணன்களின்  பக்திப் பரவசம்?

இவர் முன்பும் இதேபோல ஏழுமலையான் தரிசனம் செய்துவிட்ட ராக்கெட் ஏன் பாதி துரத் திலேயே வீழ்ந்தது? வெட்கமாக இல்லையா? 

வெளிநாட்டவர்கள் இதனைப் பார்த்து மகிழ்வார்களா? காரித் துப்ப மாட்டார்களா? பூசாரிகளாக இருந்து செய்வது, இஸ்ரோ தலைவரே செய்வது வெட்கக் கேடு மட்டுமல்ல, இந்தியாவுக்கே மானக்கேடும் ஆகும்!

           -------------- - ஊசி மிளகாய் அவர்கள் 26-2-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25.2.13

நெஞ்சு பொறுக்குதில்லையே! பாலகன் பாலச்சந்திரன் படுகொலை!!டெசோ கூட்டத்தில் முடிவுகள்


நெஞ்சு பொறுக்குதில்லையே! பாலகன் பாலச்சந்திரன் படுகொலை!!
மார்ச் 5ஆம் தேதி இலங்கைத் தூதரக முன் டெசோ சார்பில் முற்றுகைப் போராட்டம்!
  • டில்லியில் நாடாளுமன்றம்முன் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
  • மார்ச் 7இல் டெசோ சார்பில்  டில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு  செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கம்
டெசோ கூட்டத்தில் முடிவுகள்
சென்னை, பிப்.25- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலகன் - பாலச்சந்திரனை இனப்படுகொலையாளன் ராஜபக்சேயின் சிங்கள வெறி இராணுவத்தினர் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த காட்சிப் படங்கள் உலக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க் குற்ற வாளி என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை என்பது உலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல. மனித உரிமை மனிதநேயம்  பேசும் அனைவரின் உள்ளத்திலும்  கனன்று எழுந்து நிற்கக் கூடியதாகும்.

இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற டெசோ உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முடிவுகளை செய்தியாளர்கள் கூட்டத் தில் டெசோ உறுப்பினரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்கள் விளக்கிக் கூறினார்.

1) மார்ச்சு ஏழாம் தேதி புதுடில்லியில் டெசோ சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கு ஏற்கும் மாநாடு நடைபெறுகிறது.

சேனல் 4, வாசிங்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கக் கூடிய சர்வதேச மன்னிப்பு சபை (ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல்) மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (ஹியூமன் ரைட் வாட்ச்) ஆகிய அமைப்புகளும் மாநாட்டில் பங் கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அம்மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங் கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது.

2) விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலகன் பாலச்சந்திரன் சிறிதும் ஈவு இரக்கமின்றி  சிங்கள இனவெறி யாளன், இனப்படுகொலையாளன் - இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்ற கொடூரக் காட்சியை  பிரிட் டனின் சேனல் 4 ஒளிபரப்பி, உலககெங்கும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி விட்டது.
போர்க் குற்றவாளியாக ராஜபக்சே உலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு இது ஒன்றே போதுமானதாகும்.

இலங்கைத் தூதரகமுன் முற்றுகைப் போராட்டம்!

இந்திய அரசு இதன் மீது கவனம் செலுத்த வேண்டும். ராஜபக்சே மீதுநடவடிக்கை எடுக்கப் பட இந்திய அரசு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 5ஆம் தேதி (மார்ச்சு) காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினை முற்றுகை யிடும் போராட்டம் டெசோ சார்பில் நடைபெற உள்ளது. .

அதே நாளில் (மார்ச்சு 5) டில்லியில் நாடாளு மன்றத்தின்முன் திமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள் திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

(டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தொண்டை வலி காரணமாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டார்.)

முன்னதாக டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்பு லட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண் டனர். தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்,  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திமுக அமைப்புச் செயலாளர் மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், வழக்குரைஞர் இராதா கிருஷ்ணன், அசன் முகம்மது ஜின்னா ஆகி யோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்பு
திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 28ஆம் தேதி இலங்கைத் தூதரகத்தின் முன் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச்சு 5ஆம் தேதி டெசோ சார்பில் இத்தகையப் போராட்டம் நடைபெறும்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
                    ----------------------"விடுதலை” 25-2-2013

24.2.13

காவிரிநீர்பிரச்சினை அன்றே சொன்னது திராவிடர் கழகம்

அன்றே (1980-இல்) சொன்னது திராவிடர் கழகம்



19.12.1980 அன்று காவிரிநீர்பிரச்சினை தொடர் பாக முதலைமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் திராவிடர்கழகத்தின் சார்பில் எழுத்துருவில் அளிக்கப்பட்ட கருத்துரு.

காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை என்பது தமிழ் நாட்டு மக்களின் வாழ்வோடு ஒட்டிய முக்கிய பிரச் சினை, இதில் அரசியல் கண்ணோட்ட மாகவோ, வேறு வகையான எண்ணங்களோ குறுக்கிடாமல் நடுநிலை யோடும், நிகழ்கால வருங்கால சந்ததியினரின் வாழ்வு குறித்த கவலையோடும், பொறுப்போடும் சிந்தித்துத் தீர்வு காணவேண்டியது அனைத்து மக்களின் முக்கிய கடமையாகும். தமிழ்நாட்டில் காவிரிப் படுகைப் பகுதி வேளாண்மைக்கு மிக உகந்ததாக இருக்கிறது. படுகைப் பகுதி முழுவதிலும் பெரும்பாலும் நெல்லே பயிரிடப்படுகிறது. காவிரியில் ஜூன் மாதத்தில் தண்ணீர் விடப்பட்டு, ஜூலையில் பெருக்கெடுக்கும் பொழுது குறுவைச் சாகுபடி நன்றாக நடைபெறும். அப்படிக் குறுவைப் பயிர் சாகுபடி செய்யமுடியாத நிலங்களில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சம்பாப் பயிர்நடவாகி நவம்பர்,  டிசம்பரில் பயிரிடப்படுகிறது. பெய்யும் மழையின் உதவி கொண்டு, குறுவை நிலங் களில் அறுவடை முடிந்து தாளடி பயிரிடப்படுகிறது. காவிரிப் பள்ளத்தாக்கில் மழை பெய்வது, அதாவது மேட்டூர் அணைக்குக் கீழ்ப்பகுதியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வடகிழக்குப் பருவக்காற்றின் விளைவாக. ஆனால், மேட்டூருக்கு மேற்பகுதியான கேரளா, கர்நாடக மாநிலங்களில் ஜூன் முதல் அக்டோபர் வரையில் மழை பெய்வது தென்மேற்குப் பருவக்காற்றின் விளைவாக என்கின்ற இந்தச் செய்தியை நினைவில் கொள்வது நல்லது.
1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைப்பற்றி எல்லோரும் அறிவார்கள். ஆனால், இது எதன் அடிப்படையில் அமைந்ததென்றால் பழைய சென்னை அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலாகும். அந்தப் பழைய ஒப்பந்தத்தின்படி, மைசூரில் எந்தப் புதிய பாசனத்திட்டம் துவங்கவேண்டுமென்றாலும் சென்னை யின் ஒப்புதலின் பேரில்தான் செய்யவேண்டும். இதன்படி       சென்னை மைசூரைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, தடுக்க முடியாது. தடுக்க முடிந்திருந்தால் பாலாறு பாழாறு ஆகியிருக்காதே!

பின்னர் பேச்சுவார்தைகள் நடந்து 1924 ஆம் ஆண்டு ஓப்பந்தம் நிறைவேறியது. இதில் முதல் முடிவே ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய பாசன வசதிகளை அப்படியே பாதுகாக்கும் உறுதியாகும்.

இரண்டாவதாக, மேலும் இருப்பதாகக் கருதப்பட்ட எஞ்சிய தண்ணீர்  ஒரு பகுதியை உடனடியாகவும், இன் னொரு பகுதியை ஒரு குறிப்பிட்ட வகையிலும் பங்கிட வழி செய்யப்பட்டது.

கடைசியாக, இதற்கு மேலும் எஞ்சிய தண்ணீர் உள்ளதா என்பதை 50 ஆண்டு அனுபவத்தில் கண்டறிந்து, அதைப் பற்றி 1974 ஆம் ஆண்டில் மறுஆய்வு நடத்தவேண்டும் என்பதாகும்.

ஆகையால், 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டில் காலாவதி ஆகிவிட்டது என்னும் கூற்றே தவ றானதாகும். மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றே அது சொல்கிறது.

அரசுகோப்புகளில் ஒரு செய்தி கட்டாயம் இடம் பெற்றி ருக்கும். அதாவது, 1972 மே மாதம் 29 ஆம் தேதி மத்திய நீர்ப்பாசன அமைச்சரான டாக்டர் கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலையில் புதுடெல்லியில் நடைபெற்ற மூன்று மாநில முதல் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்ச்சிக் குறிப்புகளே அவை. அப்போது குறிப்பிட்டதென்ன ?

''மறு ஆய்வு செய்யப்படவேண்டிய காலமான 1974 ஆம் ஆண்டு விரைவில் வர இருப்பதால் செய்துகொள்ளப்பட்ட இடைக்கால தற்காலிக ஏற்பாடுகளைப் பற்றியே இன்னும் விவாதித்துக்கொண்டிராமல், நாம் நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் பற்றி எண்ணிடவேண்டும். இதற்காக நம்பகமான விவரங்களைத் திரட்டித் தந்திட உண்மை கண்டறியும் குழு (Fact finding committee) ஒன்று அமைக்கப்படவேண்டும்'' என்பதே அது. ஆகையால் நாம் இப்போது இந்த ஒருமித்த கருத்துக்குச் செயல்வடிவம் தர வலியுறுத்திடல் அவசியமாகும்
1973 ஆம் ஆண்டு ஏப்ரலில் டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களின் மாநாட்டில், ''காவிரிக்குழு''வின் முடிவுகள் ஏற்கப்பட்டன. மேற்கொண்டு இதன் வழியில் நடவடிக் கைகள் நடைபெறவில்லை, 1973 அக்டோபரில் புதிய நெறி யென்று காட்டப்பட்டது. படேல் குழு அமைக்கப்பட்டது.

பயிர்களுக்குப் பாசனம் ஆகும் தண்ணீரைக் குறைத் தால் எவ்வளவு சேமிக்கமுடியும் ; எஞ்சிய தண்ணீர் கடலில் விரயமாகாமல் எவ்வாறு தடுக்கலாம் என ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டது. தமிழகத்திற்கு எதிராகத் திருப்பி விடப்பட்ட இந்த முடிவுக்குக் காரணம் அரசியல் என்றே தெளிவாக உணரலாம்.

இதற்குப் பின்னரே, நடைமுறைக்கு ஒவ்வாத பல திட்டங்கள் மத்திய அரசாலும், கர்நாடக, கேரள மாநில அரசுகளாலும் முன்வைக்கப்பட்டன.
இவை அமலுக்கு வந்தால், படுகைப் பகுதியின் குறுவை விளைச்சலே நாசமாகும்.

இந்தப் பிரச்சினையின் சாராம்சம் என்னவென்றால், இப்போது நமக்குள்ள பாசனத்திட்டம் பாதுகாப்பாக இருக்க, மேட்டூருக்கு மேலுள்ள மாநிலங்கள் நமக்கு எவ்வளவு தண்ணீருக்கு உறுதிமொழி தரமுடியும் என்பதை முடிவு செய்திட வேண்டும். இது நடந்தால் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி நமது படுகையில் கிடைக்கும் தண்ணீரைக் கணக்கிடுவதும், பங்கிடுவதும் இப்போது இங்குள்ள வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் எளிதாகும்.

ஆகவே, இப்போது நடைபெற இருக்கும் பேச்சு வார்த்தைகளின்போது நாம் எடுத்து வைக்கவேண்டிய கருத்துகளாவன ; -

1. 1972 மே மாதம் மாநில முதல்வர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவாறும், 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் காட்டப்பெற்றுள்ளவாறும் இப்போது நடைபெறும் பேச்சுவார்தைகள் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மறு ஆய்வுதான் - என்பது.

2. பயிர்களுக்குப் பயன்படுத்தும் இப்போதைய பாசன முறைக்குத் தேவையான அளவு தண்ணீர் மேட்டூருக்கு விடுவதற்கு உறுதிமொழி தரப்படவேண்டும். இதில் விட்டுக்கொடுப்பதோ, அளவைக் குறைப்பதோ ஏற்கத் தக்கதல்ல - என்பது.

3. பயிர்களுக்குப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவைக் குறைப்பதற்குத் தண்ணீரைக் கட்டுப் படுத்தும் முறைகளை நாம் மேற்கொள்வோம் என்றும், இத்துறையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளை ஏற்போம் என்றும் நாம் உறுதிமொழி தரலாம் என்பது.

4. அளவைக் குறைப்பதால் மீதமாகும் தண்ணீரைப் பற்றி பின்னர் கணித்தறிந்து படுகைப் பகுதிகளில் சமப்பங்கீடு செய்வது குறித்துக் காலக்கெடு குறிப்பிடாமல் ஒரு ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ள லாம் என்பது.

பத்தாண்டுகட்கு மேலாக உருப்படியான பயனின்றி நடைபெற்றுவரும் காவிரி நீர்ப்பங்கீடு பற்றிய பேச்சு வார்தைகளுக்கு சுமுகமாக ஒரு முடிவு மேற்கூறிய வண்ணம் அமையாமற்போகுமானால் நாம் அடியிற் கண்டவாறு மாற்றுத்திட்டம் ஓன்றினைத் தரலாம் ;

1. பிரச்சினையை நடுவர் குழுவுக்கு (tribunal) விட லாம். அல்லது,

2. காவிரிப் பள்ளத்தாக்கு ஆணை அமைப்பு (cauvery valley authority) ஒன்றினை உருவாக்கி, அதிகபட்சம் பயன்பெறவும், படுகைப் பகுதியின் நீர்த் தேக்கங்கள் சமவாய்ப்பும் பயனும் பெறவும், இப் போதுள்ள பாசன அமைப்பு பாதுகாக்கப்படவும் வழிவகை காண்பதாகும்.

இதில் ஆழமாகத் சிந்தித்து அனுபவம் அதிகம் உள்ள நிபுணர்களான திருவாளர்கள் எஸ்.பி.நமச் சிவாயம், (ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்)   நீரியல் நிபுணர் பி.குமாரசாமி போன்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்
தங்கள் உண்மையுள்ள,

கி.வீரமணி                                                                
பொதுச்செயலாளர், 
திராவிடர் கழகம்

சென்னை 19.12.80 ----"விடுதலை” 24-2-2013

23.2.13

அடுத்த பிரதமர் மோடியா? காவிக் கூட்டமும் பார்ப்பன ஊடகங்களும் உஷார்! உஷார்!!


நீதிபதி மார்க்கண்டேய கட்ஜும், வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குகாவும் என்ன சொல்லுகிறார்கள்?

இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி தான் என்று காவிக் கும்பல் காவடி எடுத்து ஆடுகிறது. பார்ப்பன ஊட கங்கள் எல்லாம் துந்துபி முழங்கு கின்றன.

இப்பொழுதே அவர் பிரதமர் ஆகி விட்டது போன்ற மாயை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த விளம்பரம் ஆக்கப்படும் மனிதர்பற்றி இந்தியாவின் பத்திரிகைக் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க் கண்டேய கட்ஜும், பிரபல வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குகாவும் என்ன கருதுகின்றனர்? இவர்களின் கணிப்பு என்ன? இந்து ஏட்டிலிருந்தே இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

திரு மார்க்கண்டேய கட்ஜு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. தற்பொழுது அவர் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (Press Council of India) தலைவராக உள்ளார். அவர், அண்மையில் இந்து பத்திரி கையில் (15.2.2013 பக்கம் 13) எழுதி யுள்ள ஒரு கட்டுரையின் சுருக்கம். இதோ: 

குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடியை சிலர் வருங்கால இந்தியப் பிரதமராக விளம்பரப்படுத்தி வருகின்றனர். கும்பமேளாவில் கூடி நின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், பாரதீய ஜனதா கட்சியினரும் மட்டும் அல்லாமல், சில படித்த இளைஞர் களும்கூட மோடி பற்றிய பிரச்சாரத் திற்குப் பலி ஆகியுள்ளனர்.

அண்மையில் நான் டில்லியி லிருந்து போபாலுக்கு விமானம் மூலம் பயணம் செய்தேன். என் பக்கத்தில் ஒரு குஜராத்தி வணிகர் அமர்ந் திருந்தார். நரேந்திர மோடியைப்பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டேன். அவர் மோடியைபற்றி வானளாவப் புகழ்ந்தார். 2002ஆம் ஆண்டில் சுமார் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைப்பற்றி கேட்டேன். அவர் குஜராத்தில் எப்பொழுதும் முஸ்லிம்கள் தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தனர். 2002-_க்குப் பிறகு அவர்கள் நடுங்கிப் போய் விட்டனர்.  இப்பொழுது அமைதி நிலவுகிறது என்று சொன்னார். நான் சொன்னேன், இப்பொழுது நிலவுவது வெறும் மயான அமைதி. நியாயமும் அத்துடன் இணைந்து இருந்தால் தான் அது நிலைத்து நிற்கும் என்று சொன்னேன். உடனே அவர் தனது இருக்கையை மாற்றிக் கொண்டு போய் விட்டார்!

உண்மை என்னவென்றால் இன்றைய குஜராத்தில் முஸ்லிம்கள் அச்சப்படுத்தப்பட்டு, 2002 நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுவதற்கே அஞ்சுகின்றனர். திரும்பவும் தாக்கப் பட்டு பழி வாங்கப்படுவோம் என்று பயம் கொண்டுள்ளனர். 200 மில்லி யன் முஸ்லிம் மக்கள்  தொகையினர் ஒட்டு மொத்தமாக அனைவரும் மோடிக்கு எதிராகவே உள்ளனர் -_ விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவிர கோத்ரா நகரில் 59 இந்துக்கள் ரயிலில் எரிக்கப்பட்டதற் கான பதிலடிதான்; தன்னெழுச்சி நிகழ்ச்சியாகும் என்பதை என்னால் ஏற்க முடியாது. தவிர கோத்ரா நிகழ்விற்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமை யாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக குஜராத்தில் உள்ள அத்தனை முஸ்லிம்களையும் தாக்கு வது எந்த விதத்தில் நியாயமானது? குஜராத்தின் மொத்த ஜனத் தொகை யில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகி தம்தான். அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும், வீடுகள் எரிக்கப்பட்டும் மற்றும் சொல் லொணாக் கொடுமைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

2002இல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை  பொங்கி எழுந்த கிளர்ச்சி! ஜெர்மனியில் 1938இல் கிருஷ்டலினா (Kristallnacht) என்ற இடத்தில், யூதர்கள் கொல்லப்பட்டு, அவர்கள் வழிபாட்டு இடங்கள் எரிக்கப்பட்டு கடைகள் கொள்ளையடிக்கப்பட் டதைத்தான் நினைவு கூர வைக்கிறது. ஜெர்மானிய அரசுப் பிரதி ஒருவர் ஒரு யூத இளைஞனால் பாரிஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குக் காரணம் அந்த இளைஞன் ஜெர் மானிய நாஜிக் கட்சியினரால் கொடுமைப்படுத்தப்பட்டது தான். அதனால் தான் யூதர்கள் மீது வன்முறை ஏவப்பட்டதாக தங்களது கொடுஞ் செயலை நாஜிக்கள் நியாயப்படுத்தினர்.

மக்கள் தன்னிச்சையாகக் கிளர்ந்து எழுந்ததால் நடந்ததாக நாஜி அர சாங்கம் சொன்னாலும் கூட, உண்மை யில் திட்டமிடப்பட்டு, நாஜி அதிகாரி களால், மதம் பிடித்த மக்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட கொடூரம் தான் அது.
வரலாற்றுப்படி இந்தியா பல வந்தேறிகளைக் கொண்டு இருப்பதால் ஏராளமான வேறுபாடுகளைக் கொண் டுள்ளது. ஆகவே இந்தியா ஒன்று பட்டு இருக்க வேண்டுமானால், எல்லா இனத்தவருக்கும், மதத்தினருக்கும், மொழியினருக்கும் சமமான வாய்ப் புகளும், நீதியும் கொண்ட ஜாதி மத வேறுபாடற்ற ஆட்சி முறை வேண் டும். முன்னோடிகளான அக்பர் முதல் நேரு வரை அதைத்தான் புரிந்து கொண்டு அமைதியான ஆட்சி முறைக்கு வழி வகுத்தனர்.


மோடியின் விசுவாசிகள் இந்த நிகழ்வுகளுக்கும், மோடிக்கும் எந்தவித தொடர்புமில்லை; எந்த நீதிமன்றத்தாலும் அவர் தண்டிக்கப்படவுமில்லை என்று கூறுகின்றனர். அந்த கால கட்டத்தில் அவர்தான் முதல்வராக இருந்துள்ளார். ஆகவே அவர்காலத்தில் நடந்த கொடுமைகளுக்கு அவர் பொறுப்பல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்?

தான், குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக நரேந்திரமோடி குறிப்பிடுகிறார். எது வளர்ச்சி? மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தரம் உயருவதுதான் வளர்ச்சி! ஆனால் மோடி, பெரிய வணிக நிறுவனங்களுக்கு சலுகைகள் பல கொடுத்துள்ளார். அவர்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரமும், நிலங்களும் கொடுத்துள்ளதால் மட்டும் பொது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடவில்லை.

குஜராத்தில் உள்ள குழந்தைகளில் 48 சதவீதம் பேர் ஊட்டச் சத்து குறை பாடினால் அவதியுறுகின்றனர். இது தேசிய அளவைவிட அதிகம். குழந் தைகள் இறப்பு விகிதமும், கர்ப்பிணிப் பெண்களின் சாவு விகிதமும் அதிகம் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் 57 சதவிகிதம் ஏழ்மை நிலைக்குக் கீழே யுள்ளனர். சுற்றுச்சூழல் கேடுகள் வளர்ந்து வருகின்றன. கல்வித்தரம் குறைந்து வருகிறது.

உடல் நலம், கல்வி, வருமானம் ஆகிய துறைகளில் மற்ற இந்திய மாநிலங்களைவிட குஜராத் 8ஆவது இடத்தில்தான் உள்ளதாக அய்க்கிய நாட்டு சபையைச் சேர்ந்த நிறுவனம் (ஹிழிஞிறி) குறிப்பிட்டுள்ளது.
வணிகத் துறையினர் மோடியைப் பாராட்டலாம். ஆனால், இந்தியாவில் அவர்கள் மட்டும்தான் உள்ளனரா? என்று கட்ஜு எழுதியுள்ளார்.


வரலாற்று ஆசிரியர் இராமசந்திர குகா என்ன சொல்லுகிறார்? அதுவும் இந்து ஏட்டில் (18.2.2013) வெளி வந்ததுதான்.

சமீபத்தில் நரேந்திரமோடியைப் பேட்டி கண்ட ஒரு பத்திரிகையாளர் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

குஜராத் கடல் பகுதியை மட்டுமே கொண்டிருக்கிறது. மூலப் பொருள்கள் எதுவுமே இல்லை என்றாலும் குஜராத் அனைத்திலும் முதன்மை கண்டுள்ளது. அசாம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கிடைக்கும் இயற்கை வளங்கள் எங்களிடம் இருந்தால் இந்தியாவின் முகத்தையே மாற்றிக் காட்டியிருப்பேன் (தி. டெலிகிராஃப் சனவரி 18.2013).

இதுதான் மோடி கொடுத்த பேட்டி சாதனைகளைக் குவிக்கும் வீரனாகத் தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார் மோடி. தான் பிரதமரானால் இந்தி யாவின் வளர்ச்சி 8 சதவிகிதத்தி லிருந்து 10 சதவிகிதத்திற்கு  எட்டிப் பிடித்து விடும். ஒரே இரவில் அதிகாரிகள் எல்லாம் கோப்புகளை முடித்து விடுவார்கள். நிருவாகத்தில் ஊழலே தலை காட்டாது. வறுமைக் கோடு பூஜ்ஜியத்தை நோக்கி விரையும்; தொடர் வண்டிகள் ஒழுங்காக நேரப்படி பயணிக்கும் என்றெல்லாம்.  மோடியின் இந்தக் கூற்றை யெல்லாம் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் யார்? பல தரப்பட்டவர்கள்; தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள், பெரும் முதலீட்டாளர்கள் மேற்கு நாடுகளின் தூதர்கள்; மறந்து விட வேண்டாம். இளஞ்சிவப்பு அல்லது வெள்ளைச் செய்தித்தாள்களின் தொடர் எழுத்தாளர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். இவற்றை எதிர்ப்பவர்கள் இரு வகையினர்; அவர்கள் மோடியின் சாதனைகளைப் புஸ்வாணம் ஆக்கி விடுகின்றனர்.

நேருவின் ஆதரவுக் கொள்கை யுடையவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்கள் 2002இல் குஜராத்தில் நடைபெற்றதுபோல முசுலிம் எதிர்ப்பைத் தொடரக் கூடியவர் மோடி. தனிப்பட்ட முறையில் நிரூ பிக்கப்படாவிட்டாலும் குஜராத்தில் நடைபெற்ற வன்முறைகள், படு கொலைகள் இவைகளுக்கு இறுதியில் பொறுப்பேற்க வேண்டியவர் அம் மாநில முதல் அமைச்சர் மோடிதானே என்ற வினாவை முன் வைக் கின்றனர்.

இதற்கான பொறுப்பை இதுவரை மோடி ஏற்க முன் வராமையால் நாட்டை ஆள மோடி தகுதியானவர் அல்லர் என்று இவர்கள் கூறு கின்றனர்.
மோடியின் மதச் சார்பற்ற தன்மை என்ற நிலையானது அவருக்குப் பெருங் குறையுடையதாகும்.

குஜராத்தில் முன்னேற்றம்  முறையாக அமைந்துவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

குஜராத்தில் தெற்குப் பகுதி மாவட்டங்கள் (எடுத்துக்காட்டாக சவுராஜ்டிரா உள்பகுதிகள்) வறண்டுப் போய்க் கிடக்கின்றன. சுற்றுக் சூழல் அதிகம் மாசுபட்டுக் கிடக்கிறது. கல்வித் தரம் பெரும் வீழ்ச்சி அடைந்துவிட்டது. ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளின் எண் ணிக்கை மிக அதிகம். தனி மனித னின் வருமானம் அதிகமாக உள்ள ஒரு மாநிலத்தின் நிலைமை இது!
ஒரு சமூக இயல் ஆர்வலராக முழுமையான முன்னேற்றத்தின் புள்ளி விவரங்களில் நம்பிக்கையற்ற நான், இந்தியாவில் குஜராத் முன்னேறியுள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

மூன்றாம் முறையாக நரேந்திர மோடி ஆட்சி ஏற்ற நிலையில், சவுராஷ்டிரா வழியாக நான் பயணம் செய்தேன். சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகவும், உயி ருக்கே பெரும் அளவில் போராட வேண்டிய பகுதியாகவும் தெளிவாகத் தெரிந்தது.

குடிநீர், சாலைகள், பயண வசதிகள், துப்பரவுப் பணிகள் மிகவும் மோசம் பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்தன. இயற்கை வளங்கள் அரிதாகவே காணப்பட்டன. ஆடு மேய்ப்பவர்கள் புல் வெளியைத் தேடி பல மைல்கள் நடக்க வேண் டியிருந்தது.

சமூக, பொருளாதார முன்னேற் றத்தில் சுமாரான மாநிலங்களைவிட குஜராத் சிறந்ததுதான். ஆனால் நாட்டின் மிகச் சிறந்த மாநிலங்களுள் ஒன்றல்ல!
இந்தியா முழுவதும் நான் பயணம் செய்த மாநிலங்களில் கேரளா, இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு  ஆகிய மாநிலங்கள் தான் அதிக மானவர்களுக்கு மரியாதையான வாழ்வாதாரங்களை வழங்குகின்றன என எண்ணுகிறேன்.
தெற்கு குஜராத்தில் பட்டேல்கள், பொதுவளங்களைக் கபளீகரம் செய் துள்ளதைத் தடுத்து நிறுத்தவில்லை. பணக்கார விவசாய முதலாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

எனது கண்ணோட்டத்தில் மோடி இந்தியாவின் பிரதமராவதற்குத் தகுதியற்றவர் என்பது, அவர் உள் ளுணர்வும் அடாவடித்தனமான எதேச்சதிகாரத் தன்மையும் தான் காரணம்.

நான் இந்தியாவின் முகத்தை மாற்றியமைப்பேன் என்கிறார்; நாம் அல்ல; நான் நான்தான் எல்லாம்!

மோடியின் குஜராத்திலே உடன் உழைப்பார் யாருமில்லை. உடன் பணியாளர்களும் யாரும் இல்லை. அவருக்கு 56 அங்குல நெஞ்சுண்டு. அவரே இப்படி தற்புகழ்ச்சியில் ஈடுபடுவதுண்டு. எனவே குஜராத் மாநிலத்தில் ஆண் -_ பெண் இரு பாலரும் அவருடைய சர்வ அதி காரத்திற்கும் கட்டுப்பட்டே இருக்க வேண்டும்.
எதிலும் ஆதிக்கம் செலுத்தும் மனிதர் அவர் என்பது வெளிப் படையானது; சமூக அறிவியலாளர் களின் கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பதினைந்து நிமிடங்கள் அவர் பேச்சைக் கேட் டாலே போதும். அவர் குறுக்கே யார் வந்தாலும் உதறித் தள்ளி விடும் மனிதர் மோடி என்பது புலனாகி விடும். அவர் குரல் வலிமையானது - கேட்பவர்களை அச்சமூட்டித் தன்னைப் பின்பற்றச் செய்யும் முயற்சியாகும்.

அரசியல் முரடர்கள் எல்லோரைப் போலவும் சுதந்திரமான பேச்சுகளை யும், கலைப் படைப்புகளையும் மோடி வெறுக்கிறார்.

சில புத்தகங்களையும், சில திரைப்படங்களையும் அவர் தடை செய்துள்ளார் - (புத்தகங்களைப் படிக் காமலும், திரைப்படங்களைப் பார்க் காமலுமே இவ்வாறு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).

சுதந்திர மனம் கொண்ட எழுத் தாளர்களையும்,, சிந்தனையாளர்களை யும், கலைஞர்களையும் அச்சுறுத்தி வருந்திருக்கிறார் என்று விரிவாக பிரபல வரலாற்றாளர் - சமூக இயலாளர் திரு. இராமச்சந்திர குகா இந்து ஏட்டில் எழுதியுள்ளார்.

மோடியைப் பற்றி இந்த இரண்டு சிந்தனையாளர்களும் சொன்னது போதாது என்றால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு (தமிழ் நாட்டவர்) அரிஜித் பசாயத் ஆகி யோரின் தீர்ப்பில் நரேந்திரமோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டதையும் இணைத்துக் கொள்ளலாமே!

ஆமாம், இந்தியாவுக்கு இப்படிப்பட்ட ஒரு பிரதமர் நீரோ மன்னன் தேவையாம்! சொல் லுகிறது காவிக் கூட்டமும் பார்ப்பன ஊடகங்களும் உஷார்! உஷார்!!
            ---------------------மின்சாரம்-”விடுதலை” 23-2-2013

22.2.13

காவிரி நீர்ப் பிரச்சினையில் முதற்கட்ட வெற்றியே! - கி.வீரமணி

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்  வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
காவிரி நீர் பிரச்சினை யில் தற்போது நமக்குக் கிடைத்துள்ளது முதற்கட்ட வெற்றிதான் - இதனைத் தொடர்ந்து மத்திய அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைப் பொறுத்துத்தான் முழு வெற்றி வந்தாகவேண்டும்; இதற்காக ஒருமித்த குர லில் மத்திய அரசை வலி யுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1. முதன் முதலாக காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைத்துத் தீர்வு காண தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த அ.தி. மு.க. அரசு கூட்டிய சர்வ கட்சிக் கூட்டத்தில் (19.2.1980) எடுத்து வைத்தது திராவிடர் கழகமே! (ஆவண ஆதாரம் உண்டு).

2. காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு என அமெரிக்கா - கனடா போன்ற நாடுகளில் உள்ள நதி நீர்ப் பங்கீடு குறித்து, அங்குள்ள சுதந்திர நிபுணர்களைக் கொண்ட அமைப்பான டெனசி நதி பள்ளத்தாக்கு ஆணையம் (Tenasy River Valley Authority CVA) போன்ற ஒன்றை நிரந்தர தீர்வுக்காக நிரந்தரமாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசினை வற்புறுத்திட வேண்டும் என்ற ஆலோசனையை காவிரி சம்பந்தப்பட்ட அச்சர்வ கட்சிக் கூட்டத்தில் முன்வைத்தது திராவிடர் கழகம்.

3. காவிரி நடுவர் மன்றம் அமைக்க கலைஞர் தலைமை யில் 1989 இல் அமைந்த தி.மு.க. ஆட்சி - அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களிடம் வற்புறுத்தி, அதனைப் பெற்ற பெருமையும் வழங்கிய கொடையும் முறையே தி.முக..வுக்கும், வி.பி. சிங் அவர்களின் தேசிய முன்னணி ஆட்சிக்கும் உரியதாகும்.

4. இந்தியஅரசியல் சட்டத்தின் 262 ஆம் பிரிவின்படி, நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் தாவாவை தீர்த்து வைக்க, நதிநீர் சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Inter State Water Disputes Act) 1956 (33 of 1956) என்பதில் உள்ள 11 ஆவது செக்ஷன்படி உச்சநீதிமன்றத்திற்கேகூட நதிநீர்ப் பங்கீடு வழக்குகளை நடுவர் மன்றம் விசாரித்த நிலையில், தீர்ப்புக் கூற அதிகாரம் கிடையாது.
ஆனால், அதன் செக்ஷன் 4-ன்படி,  மத்திய அரசு அதன் சட்டக் கடமையை நிறைவேற்றிடவேண்டும்என்று ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் அதற்கு உண்டு.


இந்த அடிப்படையிலேயே, கருநாடக அரசு தொடக்க முதலே செய்த அத்தனை சட்டவிரோத அடாவடித்தனங் களையும் தாண்டி, காவிரி நடுவர் நீதிமன்றம் 2007 பிப்ரவரி மாதத்தில் அதன் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

5. 1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைந்த பிறகு அடுத்த 1991 ஆம் ஆண்டின் ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு இடைக்காலத் தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. (இதனைக் கூட இதுவரை கருநாடக அரசு தவறாமல் வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தைக் காப்பாற்றிட உதவியதா என்றால் இல்லை).


இந்நிலையில், இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கியுள் ளதில்,
ஓடிவரும் நீரின் மொத்த அளவு    - 740 டி.எம்.சி.
இதில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு    - 419 டி.எம்.சி.
கருநாடகத்திற்கு    - 270 டி.எம்.சி.
கேரளாவிற்கு    - 30 டி.எம்.சி.
புதுவைக்கு    - 7 டி.எம்.சி.
சுற்றுச்சூழலை பாதுகாக்க    - 10 டி.எம்.சி.

இந்த இறுதித் தீர்ப்பு வெளியான 6 ஆண்டுகள் கழித்து, அதுவும் உச்சநீதி மன்றம் மத்திய அரசிடம் கேள்வி மேல் கேள்விகளை தலையில் குட்டுவதுபோல் குட்டிக் கேட்ட பிறகே, இறுதி கெடுவுக்கு முதல் நாள் பிப்ரவரி 19 ஆம் தேதி யன்றுதான் வெளியிட்டது என்பது மத்திய அரசுக்குப் பெருமை தருவதல்ல.

இடையில் கருநாடகத்தில் வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தல் என்ற அரசியல் கண்ணோட்டம் அதன் தவக்கத்திற்குரிய முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.

வழமையான மத்திய அரசின் காலந்தாழ்ந்த செயலாக்கத்தின்மூலம், அதற்குரிய முழு நன்றி - பாராட்டைத் தமிழக மக்களிடம் பெற இயலாத நிலை.


நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு தனது கெசட்டில் வெளி யிடுவது என்பது அரசியல் சட்டப்படி ஆற்றிடவேண்டிய சட்டக் கட்டாயம் ஆகும். அதனைச் செய்ய வைக்கவே வழக்கு, மக்கள் - விவசாயிகள் போராட்டம் தேவை என்பது விசித்திர மானதொன்றாகும்.

6. கெசட்டில் வெளியிடப்பட்ட நிலை யில், இது எனது வெற்றி என்று முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெருமைப்படுகிறார்; அதில் யாருக்கும் சங்கடம் இல்லை. அதேநேரத்தில், தொடக்கம்முதல் இதற்காகக் குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள் அனைவரின் பங்கினைப் புறந்தள்ளு வதோ, இருட்டடிப்பதோ சரியல்ல! அதே நேரத்தில், இந்த முக்கிய வாழ்வாதார காவிரி நீர்ப் பிரச்சினையில் முந்தைய எம்.ஜி.ஆர்., கலைஞர் அரசுகள் கூட்டியது போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, அவருடன் தோழமையாக உள்ள கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கேட்டும் அவர் கூட்ட மறுத்தது இதனால்தானோ என்று எண்ண வேண்டியுள்ளது.


கருநாடகத்தில் ஷெட்டர் அரசு மூச்சுக்காற்றுக்காக வென்டிலேட்டரில் இருக்கும் அரசு என்றாலும்கூட, இது வரை இந்தப் பிரச்சினைக்காக பத்து முறை சர்வகட்சிக் கூட்டங்கள், அனைத் துத் தலைவர்களுடன் பிரதமரை டில்லி சென்று சந்தித்து வற்புறுத்தியது முதலிய பல வகையிலும் நடந்துகொண்ட முறை சுட்டிக்காட்டப்படவேண்டும்.

என்றாலும் அனைத்துத் தமிழ்நாட்டுக் கட்சிகளும்  (தனித்தனியாகவேனும்) குரல் கொடுத்தன; வாதாடின - நாடாளு மன்றத்திலும், வெளியிலும்; எனவே, இது அனைத்துக் கட்சிகளின் வெற்றி என் பதைவிட, தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்கும் கிடைத்த - காலந்தாழ்ந்த வெற்றியாகும். இதற்குக் காரணமான அத்தனைப் பேருக்கும் இந்த வெற்றியில் உரிமை கொண்டாட பாத்தியதை உண்டு. இப்போதுஅந்த ஆராய்ச்சி முக்கியமல்ல.
அதைவிட  அடுத்த கட்டம்தான் மிக முக்கியமானது.


7. இந்த இறுதித் தீர்வுப்படி நிரந்தர மாக காவிரி நீர்ப் பங்கீடு செய்ய இரண்டு முக்கிய அமைப்புகளை அமைக்க வேண்டியது மத்திய அரசின் முக்கிய கடமையாகும்.

1. காவிரி நதிநீர் நிர்வாக வாரியம் இதற்குத் தலைவர், இரண்டு முழு நேர உறுப்பினர்கள், இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள்,

மத்திய அரசே நியமிக்கவேண்டியது. இதன் தலைவருக்கு குறைந்தது 20 வருட அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் இருக்கவேண்டியது அவசியம். மற்ற இருவரில் ஒருவர் நீர்ப் பாசனத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவமும், தலைமைப் பொறியாளராக பணியாற்றிய அனுபவமும் அவசியம். இன்னொருவர் விவசாயத் துறையிலிருந்து நியமிக்கப்படுவார்.

அரசிதழில் வெளியிடப்பட்ட அடுத்த 90 நாள்களுக்குள் இந்த அறிவிக்கை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குமேல் அதனை முறைப்படுத்த ஒரு கண்காணிப்பு - முறைப்படுத்தும் கமிட்டி ஆகிய ஒன்றும் தேவை.

இவை இரண்டையும் உடனடியாக மத்திய அரசு - முந்தைய காலதாமதம் போல் இன்றி - நியமித்து, இப்பிரச்சி னையை சுதந்திரமாக முடிவு செய்ய அத்தகைய அமைப்புகளின் பொறுப்பில் விட - உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.

முதல்கட்ட வெற்றிதான் - முழு வெற்றியல்ல!

இன்று காலை தமிழ்நாட்டு எம்.பி.,க் கள் பிரதமரிடம் சென்று, நன்றி தெரி வித்து, மேற்கொண்டு அமைப்புகள் அமைக்கக் கேட்டுக்கொண்ட நிலையில், பிரதமர் மன்மோகன்சிங், உடனே அமைப்பதாக உறுதியளித்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது - நன்றி!

ஒட்டுமொத்தமான குரலாக தமிழ் நாட்டு மக்கள், கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் எல்லோரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.
இந்த செயல்பாட்டைத் தடுத்து நிறுத் திட கருநாடகம் வரிந்து கட்டிக் கொண் டுள்ளது என்பதைப் பார்க்கையில், நாம் அடைந்துள்ள முதல் கட்ட வெற்றியையே முழு வெற்றிபோல் கருதி, ஏமாந்துவிடக் கூடாது.

2. இந்த இறுதித் தீர்ப்பின் விளைவு களை தெளிவாக விவசாயிகளும், தமிழக மக்களும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது!

3. இந்த கெசட் வெளியாவதன்மூலம் ஏற்கெனவே 1892, 1924 ஆகிய ஆண்டு களில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந் தங்களே முடிவுக்கு வந்து புதிய நிலை சட்ட ரீதியாகப் பிறக்கிறது.
இதிலிருந்து பலர் கூறிய அபாண்டமும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. 1924 ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை தி.மு.க. அரசு, எனவே ஒப்பந்தம் முடிந்ததற்கு தி.மு.க.வும், கலைஞரும் காரணம் என்று வெங்கட்ராமன்கள் முதல் இங்குள்ள பலரும் பேசிவந்த புரட்டு உடைந்துவிட்டது!


இனிமேல் உச்சநீதிமன்றத்திடம் சென்று முறையிட முடியாது என்பதாலும், கருநாடகத்திடம் எளிதில் நியாயம் கிடைக்காது என்பதாலும் நமது கவனம் - இரு அமைப்புகளையும் விரைந்து நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அழுத்தம், வற்புறுத்தலில் இருக்கவேண் டும். இது மிகமிக முக்கியம். மிகமிக அவசரம்!

21.2.13

காவித் தீவிரவாதம் பொய்யா?

 
காவித் தீவிரவாதம் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் கூறிவிட்டாராம். ஆகா, அமைதியின் சொரூபமான எங்களைப் பார்த்து நாக்கின் மேல் பல்லைப் போட்டுச் சொல்லலாமா? எங்களைவிட அகிம்சாமூர்த்திகள் உலகில் உண்டா என்று சூலத்தைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளது - சங்பரிவார்கள் கும்பலும் - அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி.யும்.

இன்றைய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மட்டுமல்ல; இதற்குமுன் உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் அவர்களும் இதே குற்றச்சாற்றை வைத்ததுண்டு.

நாடாளுமன்றம் நடக்கவிருக்கும் கால கட்டத்தில் அவை சுமுகமாக நடக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக உள்துறை அமைச்சர் ஷிண்டே நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது; நான் கூறியதன் காரணமாக யார் மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று கூறித் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனை வைத்துக் கொண்டு, பார், பார், நாங்கள் உத்தமப் புத்திரர்கள் என்று காவிக் கூட்டம் மார்தட்டுமானால், அதனை விடப் பரிதாபம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் ஒவ்வொரு முறையும் ரகளையில் எதிர்க்கட்சியான பி.ஜே.பி. ஈடுபட்டு வருவதை வாக்காளப் பொது மக்கள் தெரிந்து வைத்துக் கொண்டுதான் உள்ளனர். நாடாளுமன்றத்திற்கு இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியது, பிரச்சினைகளை எடுத்துக் கூறத்தானே தவிர, நாடாளு மன்றத்தையே செயல்பட விடாமல் முடக்கு வதற்கல்ல.
ஷிண்டேயின் வருத்தம் தெரிவிப்பு மூலம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் எதிர்க்கட்சியான பி.ஜே.பி.க்கு அதில் நம்பிக்கை இல்லை என்பதையும் வெளிப்படுத்தி விட்டது என்றுதான் கொள்ள வேண்டும்.

காவிப் பயங்கரவாதம் பற்றி உள்துறை அமைச்சர் கூறியதற்குப் போதுமான தக்க ஆதாரங்கள் உண்டு என்று உள்துறை மூத்த செயலாளர் ஆர்.கே.சிங் அய்.ஏ.எஸ். கூறியுள்ளாரே! அவர் என்ன அரசியல்வாதியா? சகல தகவல்களையும் அறிந்து வைத்துக் கொண்டி ருக்கும் இடத்தில் இருக்கக் கூடிய அதிகாரி யாயிற்றே!

எந்த அளவுக்குக் காவிப் பயங்கரவாதம் நிர்வாண கோலத்தில் தாண்டவம் ஆடுகிறது என்பதற்கு மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று போதாதா?

இராணுவத் துறையில்கூட ஊடுருவி இருக் கிறார்களே, இராணுவத்துறையில் மட்டும் கிடைக் கும் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து இவர்களுக்கு எப்படி கிடைத்தது?

இராணுவக் கல்லூரி வைத்து, சங் பரிவார்க் கும்பலுக்குப் பயிற்சி கொடுப்பதும் இவர்கள்தானே!

மாலேகான் குண்டு வெடிப்பில் உண்மைக்கு மாறாக வழக்கை திசை திருப்பிய நிலையில், அதன் உண்மையைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி ஹேமந்த்கார்கரே சுட்டுக் கொல்லப் பட்டது எப்படி? அதன் பின்னணியில் இருந்த வர்கள் யார்? என்ற கேள்வியை மத்திய அமைச்சராக இருந்த அப்துல் ரகுமான் அந்துலே நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லையா?

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் யார்? நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம் என்று மக்களவையில் அதிகாரப் பூர்வமான எதிர்க் கட்சியின் தலைவர் சுஷ்மா சுவராஜ் பகிரங்கமாகச் சொல்லவில்லையா?
இந்த நிலையில் காவித் தீவிரவாதிகள் என்று சொன்னதும் ரோஷம் பொத்துக் கொண்டு கிளம்பி விட்டதுபோலும்!

ஊருக்கு ஊர் திரிசூலங்களை மக்களுக்கு வழங்கி வன்முறையைத் தூண்டும் வி.எச்.பி. காவிக் கூட்டத்தைச் சேர்ந்தது அல்லவா? உண்மையைச் சொன்னால் எரிச்சலா?

உள்துறை அமைச்சர் ஷிண்டே குறிப்பிட்ட காரணத்துக்காக வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஆனால் வெகு மக்களுக்குக் காவி தீவிரவாதம்பற்றி மிக நன்றாகவே தெரியும்.

               -------------------------"விடுதலை” தலையங்கம் 21-2-2013

20.2.13

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மீதான படுகொலை ஊட்டும் உணர்வு

பாலச்சந்திரன்மீதான படுகொலை ஊட்டும் உணர்வு

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் - பாலகன் பாலச்சந்திரனை சிங்கள இன வெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு காட்டு விலங்காண்டித்தனமாக - குரூரமாக நெஞ்சில் ஒரு துளியும் இரக்கமுமின்றி சுட்டுக் கொன்ற விதம் உலக மக்களைப் பதைபதைக்கச் செய்துவிட்டது.

நேற்று இந்து ஏட்டில் முதல் பக்கத்தில் வெளிவந்த அந்தச் சிறுவனின் முகம் வெளிறிக் காணப்பட்ட காட்சி! படத்தைப் பார்த்தவர்களின் நெஞ்சில் வடிந்த ரத்தக் கசிவு எளிதில் உறையாது.

வேறு எந்தப் பிரச்சனையை நோக்கிக் கவனம் செலுத்தினாலும் இந்தக் காட்சி அவர்கள் நினைவில் குறுக்கே குறுக்கே வந்து நிற்கிறது.

சீ..... இப்படியும் சில மனிதர்களா? ஆட்சியாளர்களா? என்ற வினாக்கள்தான் எழுந்து நிற்கின்றன.

ஏதோ தின்பண்டம் கொடுத்து, பழுது ஏதும் அறியாத அந்தப் பால் வடியும் பாலகனைக் குரூரமாகக் கொன்றுள்ளார்களே!

அந்தப் பாலகனின் முன்னிலையிலேயே சிலரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர் - அந்த மனித உருவத்தில் நடமாடும் மிருகங்கள்.

இலங்கை சிங்கள அரசு இதனைச் சிறிதும் எதிர்பார்த்திருக்காது. அதுவும் காலம் காலமாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஜெயவர்த்தனேயின் சீடராக இருந்து செயல்பட்டு வந்திருக்கிற இந்து ஏட்டில் படத்துடன் இந்தச் செய்தி வெளி வந்திருப்பதை ராஜபக்சே எதிர்பார்த்திருக்கக் கூட மாட்டார்.

ஆனாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது நடைமுறையில் வழங்கப்படும் பழமொழியாகும்.

பல நாடுகளில் ஆயுத உதவியைப் பெற்று ஈழ விடுதலைப்புலிகளை, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து விட்டோம் என்று ஆணவத்தின் உச்சியில் நிர்வாணக் கூத்தாடிய ராஜபக்சே - தன்னை நோக்கிக் கடுமையான அம்புகள் பாயும் என்று நினைத்திருக்க மாட்டார்; காரணம் அதிகார வெறியும், ஆணவமும், அழித்து முடித்து விட்டோம் என்ற திமிரும் அந்தக் கொடியவனை அவ்வாறு நினைக்கச் செய்திருக்கும்.

தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான மானமிகு டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளது போலவே ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்பதற்கு பாலச்சந்திரன் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம் ஒன்று போதாதா என்று வினா எழுப்பியுள்ளது மிகவும் சரியானதாகும்.

இதற்கு மேலும் எந்த ஒரு நாடாவது ஜெனிவாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மறுக்குமேயானால், அந்த நாடுகளையும் ராஜபக்சேயின் பட்டியலில்தான் வைக்க வேண்டும் - வரலாறும் அவ்வாறுதான் எள்ளி நகையாடும்.
இலட்சக்கணக்கான யூதர்களை ஆரிய வெறியன் அடால்ப் ஹிட்லர் கொன்று குவித்துக் குதியாட்டம் போடவில்லையா? இறுதியில் நஞ்சு அருந்தித் தற் கொலை செய்து கொண்டான். அந்த நிலைக்கு ராஜ பக்சேயை விட்டு விடாமல், விரைந்து அதிகாரபூர்வமாக உலக நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அதற்கான தண்டனையை அனுப வித்தே தீர வேண்டும்.

ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு. மருத்துவமனைகள், மத நிறுவனங்கள், குழந்தைகள் இல்லம் இவற்றின்மீது குண்டு மாரி பொழியவில்லையா?

பத்திரிகைக்காரர்களைத் தீர்த்துக் கட்டவில்லையா? 2006 முதல் 2009 வரை ஒன்பது பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 27 பேர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாகரன் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது, கடத்தப்பட்டது குறித்து எழுப்பிய வினாவுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.  உலகில் எங்கு போர் நடந்தாலும், அங்கெல்லாம் சென்று பொது மக்களுக்குத் தொண்டுக்கரம் நீட்டக் கூடிய செஞ்சிலுவைச் சங்கத்தினர்கூட அவர்களின் தொண்டினைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அடுக்கிக் கொண்டே போகலாம் போர்க் குற்றவாளி ராஜபக்சே என்பதற்கான காரணங்களை...

உலக நாடுகள் மதிப்புப் பெற - குறிப்பாக இந்தியா - மனித உரிமை காப்பாற்றப்படக் குரல் கொடுக்கும் நாடு தான் என்பதை நிலைநாட்ட - அய்.நா. தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள - நம் முன் எழுந்து நிற்கும்  அரிய வாய்ப்பு - அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானமாகும். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் நடந்து கொள்ளட்டும்! பாலகன் பாலச்சந்திரன்மீதான படு கொலை இந்த உணர்வை ஊட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

           ---------------------” விடுதலை” தலையங்கம் 20-2-2013

19.2.13

பிரபாகரன் மகன் - பாலகன் படுகொலை செய்யப்பட்ட பெருங்கொடுமை!



சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன், தமிழீழத் தலைவர் பிரபாகரனின் மகன் ராணுவத்தின் பிடியிலிருந்தார். பிறகே அந்த  பாலகன் சுட்டுக் கொல்லப்பட்டார். கொடியவர்களால்
பிரிட்டனின் உள்ள சேனல் - 4 என்கிற தொலைக்காட்சி அண்மையில் ராணுவ நிலவறை ஒன்றில் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் தனது மறைவிடத்தில் சிறைபிடித்து வைத்திருந்ததை வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் மே மாதம், இலங்கை  உள்நாட்டுப் போர்,  முடிவுக்கு வரும் நிலையில் இருந்தபொழுது, பாலச்சந்திரன் சாகடிக்கப்படுவதற்குமுன் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டதாக இந்த சானல் - 4 குறிப்பிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் ஆவணப்படம் பாலச்சந்திரன், தரையில் மடிந்து கிடப்பதையும், நெஞ்சில் 5 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் இருந்ததையும் காட்டியது.

அதன் தொடர்ச்சியாக இந்தப் படம் விரைவில் ஒளிபரப்பப்படும். இந்தப் படங்கள் மூன்றும் ஒரே கேமிராவில் எடுக்கப்பட்டதாகவும்,  பிரபாகரனின் மகன் ராணுவத்தின் பிடியில் இருந்தபோதுதான் கொல்லப்பட்டான் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
கால்லம் மக்ரே என்பவர் சின்ன வயது பாலகன் கொலை என்று இந்தக் கட்டுரைக்குத் தலைப்பிட்டுள்ளார்.
                   -----------------------------தி இந்து 19.2.2013 முதல் பக்கம் -”விடுதலை” 19-2-2013

18.2.13

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்குத் தண்டனை எப்போது?

அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சாமியார்கள் கூட்டத்தில் ராமன் கோயில் கட்டும் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாம். விசுவ ஹிந்து பரிஷத் நிருவாகிகள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் செய்தி வந்துள்ளது.

சமுதாயத்தில் முற்போக்கான பல பணிகளை போராட்டங்களைக் கையில் எடுத்துக் கொள்ளும் பொழுதெல்லாம் சில மேதாவிகள் என்ன சொல் லுவார்கள்? நாட்டில் எத்தனையோ அவசியமான, முக்கியமான பிரச்சினைகள் இருக்கும்பொழுது, இவையெல்லாம் அவசியமா என்று திசை திருப்புவார்கள். பாமரத்தனம் மிகுந்த நாட்டில் அதற்கு ஆமாம் சாமியும் போடுவார்கள்.

அதே மேதாவிகள் கிடப்பது கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மணையில் வை என்பதுபோல இப்பொழுது ராமன் கோயில் கட்டுவதை முன்னி றுத்துகிறார்களே - இதைப்  பற்றி அந்தத் தோரணை யில் கருத்துக் கூறுவார்களா?கூறவே மாட்டார்கள்.

காரணம் இந்த மேதாவிகள் மனதுக்குள் குடிபுகுந்து குடும்பம் நடத்தும் மதவாதச் சிந்தனை கள்தான்.

மதவாதத்திற்கு எதிரான கருத்துக்களை முன் வைக்கும்போது, அதற்கு முகம் கொடுக்க  முடி யாதவர்கள் அதனைத் திசை திருப்புவதற்கே இப்படியெல்லாம் கூறுவார்கள்.

உண்மையில் அவசர அவசரமாக செய்ய வேண்டியது ராமன் கோயில் கட்டுவதல்ல; 450 ஆண்டுக் கால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கை விரைவு படுத்தி, தண்டிக்க வேண்டியதுதான்!
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆன நிலையில் குற்றவாளிகள் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் வெட்கக் கேடு என்னவென்றால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இந் தியாவின் துணைப் பிரதமராக, உள்துறை அமைச்சராக, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தனர் என்றால் இதைவிட வெட்கக் கேடும், தலைகுனிவும் வேறு இருக்க முடியுமா?
குற்றங்கள் என்றால் சாதாரணமானவையல்ல; இந்தியக் குற்றவியல் பிரிவு 147,153 (ஏ) 153(பி) 295(ஏ) 505, 120 (பி) என்ற பிரிவுகள் சாதாரணமானவையா?
கலகம் விளைவித்தல், குரோத உணர்வைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என்ற குற்றங்கள் சாதாரண மானவைதானா?

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு, மறுக்கப்பட்ட தீர்ப்பு என்று வார்த்தையளவில் சொன்னால் போதுமா? பாபர் மசூதி இடிப்பு வழக்கின்மீது 21 ஆண்டுகள் ஓடிய பிறகும் தீர்ப்புக் கிடைக்கவில்லை என்றால் மறுக்கப்பட்ட தீர்ப்புதானே?
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் மதக் கலவரம் ஏற்பட்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தச் சூழ் நிலையில் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டப் போகிறோம் என்று திரிசூலங்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்கின்றனர் என்றால், இது என்ன நாடா? அரசமைப்புச் சட்டத்தின் செயல் பாடுகள் உயிரோட்டமுடன் தான் இருக்கின்றனவா? நிருவாகம் என்பது தன் முதுகெலும்பை இழந்து விட்டதா?

நீதியை நிலைநாட்டத் துடிக்கும் சக்திகள், ஊடகங்கள் ஊனமுற்றுப் போய் விட்டனவா என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது?

இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத காரணத்தால்தான் அடுத்த கட்டத்திற்குத் தாவி எழும் முரட்டுத் துணிவைப் பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்க முடியுமா? திருடன் பிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப் படவில்லையானால் அவன் மேலும் திருடிக் கொண்டேதானே இருப்பான்?
தண்டனை என்பது தவறைத் தடுப்பதற்கான ஏற்பாடு; பாபர் மசூதி இடிப்பில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? என்பதை ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உலக நாடுகள் முன் இந்தியாவைத் தலைகுனிய வைத்த தேசிய குற்றம் என்று கருதப்படுகிற பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்காதவரை சட்டம் நீதி நியாயம் பற்றிப் பேசுவதெல்லாம் பைத்தியக்காரத்தனமே!

               -----------------------------"விடுதலை” தலையங்கம் 18-2-2013