Search This Blog

Showing posts with label பெரியார்-காமராசர். Show all posts
Showing posts with label பெரியார்-காமராசர். Show all posts

15.7.10

பெரியார் - காமராசரை ஆதரிப்பதேன்?





மறுபடியும் அதே காங்கிரஸில் உள்ளவரும், அதே பதவியில் அமர்ந்தவருமான திரு. காமராசரை ஆதரித்தது ஏன்? காரணம் அவருடைய செய்கைகள் நம்முடைய கொள்கைகளுக்கு ஏற்றவையாய் இருந்தன. வெகு சுலபத்தில் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றினார். பெரும் நஷ்டத்தை அடைந்து சாதிக்க வேண்டிய காரியத்தை மிக எளிதில் செய்து முடித்தார். வருணாசிரமத்தைக் காப்பாற்ற, ஜாதிப்பாகுபாடுகளை நிலைக்கச் செய்ய மக்களை மேன்மேலும் அறியாமையிலேயே ஆழ்த்த சூழ்ச்சி முறையால் ஏற்படுத்தப்பட்ட இராஜகோபாலாச்சாரியாரின் புதுக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.

எனவேதான் நான் வலியச் சென்று அவரை ஆதரித்தேன். அவரின் ஆட்சிக்குப் பங்கம் ஏற்படாவண்ணம் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகி விட்டது.

மற்றும் அவருக்குத் 'தான் தமிழன்' என்ற உணர்ச்சியுண்டு. எதையும் தமிழ் மக்களின் நன்மைக்கென்று இன்றுவரை செய்துவருகிறார். நம் மக்களுள் கல்வி கற்கும் ஒரு சிலரும் எட்டாம் வகுப்பு வரைதான் படிக்கின்றனர்.

இதன்றியும் இராமராஜ்யத்தில் (வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டவே உண்டாக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியில்) இருந்து கொண்டே, "சமுதாயத்தில் ஜாதி வித்தியாசம் ஒழிந்தால்தான் உண்மைச் சுதந்திர நாடாகிச் சாந்தியடைய முடியும். ஜாதி ஒழியவில்லையேல் இரத்தக்களறி ஏற்படும்" என்று பச்சையாக ஜாதியை ஒழிக்கத் துணிந்து கூறுகிறார். இப்படி காந்தியார் கூடக் கூறியதில்லையே! காந்தி ராமராஜ்யத்தை உண்டாக்க வந்தவராயிற்றே! எப்படிக் கூறமுடியும்? இவ்விதம் இன்றைக்கு நாம் சொல்லுவதும் திரு. காமராசர் சொல்லுவதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

எனவே நான் சொல்கின்ற இடங்கள்தோறும் அவர் நமக்குச் செய்துள்ள நன்மைகளை எடுத்துக்கூறி ஆதரிப்பதன் அவசியத்தை விளக்கி வருகிறேன்.

இதைக் கண்ட பார்ப்பனர்கள் அவருடைய ஆட்சிக்குக் கேடு செய்யச் சூழ்ச்சிகள் பல செய்கின்றனர். வெளிப்பகட்டுக்காகிலும் ஒரு சில பார்ப்பனர் அவரை வார்த்தை அளவில் புகழ்ந்து பேசுகின்றனரே தவிர, மனதிற்குள் எலியும், பூனையும் போல் எதிரியாக இருக்கின்றனர். இன்றைய நிலையில் சிறு பார்ப்பனச் சமுதாயமே எதிரியாகிவிட்டது.

நமக்குப் பார்ப்பனர்கள் எதிரியாக உள்ளதைப் போன்று அவருக்குப் பார்ப்பனர்கள் எதிராக இருக்கின்றனர். நாமும் அவருடைய ஆட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லையேல் பார்ப்பனர்கள் எண்ணம் தான் நிறைவேறும். குடியாத்தம் தேர்தலிலேயே அவருடைய ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்திருப்பர்.

ஆகவே நம்முடைய கொள்கைப்படி நம் மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அவர்களுக்கு நம் நன்றியறிதலைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

பார்ப்பனர்களின் மதம், சாஸ்திர, புராணங்களையும், கடவுள்களையும் நாங்கள் எதிர்ப்பது திராவிட மக்களின் நன்மைகென்றேயாகும்.இவைகள் ஒழிக்க வேண்டும் என்று கூறுவதும், ஆதாரங்கள் பலவற்றையும் காட்டியே பார்ப்பனர்கள் இருப்பதால்தான் நாம் பகுத்தறிவற்றவர்களாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக மூடர்களாக, மிருகத்தினும் கேடானவர்களாக பார்ப்பனர்களின் அடிமைகளாக வாழுகிறோம்.

இங்குள்ளதைப் போன்று இவ்விதப் பார்ப்பனர்களும், பார்ப்பனப் புரட்டுகளும் வெளிநாடுகளில் இல்லாததால்தான், அந்நாடுகளெல்லாம் ஒரு காலத்தில் நம்மைவிட காட்டுமிராண்டி நாடுகளாக, நாம் அப்பொழுது அவர்களைப் பார்த்து ஏளனமும் பரிகாசமும் செய்யும் முறையில் இருந்திருந்தாலும், இன்றைக்கு எவ்வளவோ நாகரிகம் கண்டவர்களாக, கல்வியறிவுள்ளவர்களாகத் திகழ்கின்றனர். தடையேதுமின்றி மூடப்பழக்க வழக்கத்தில் தங்கள் மனதைப் பறிகொடுக்காத காரணத்தால், சுதந்தர அறிவுள்ள அவர்கள், தங்கள் பகுத்தறிவை நாளாவிதங்களிலும் செலுத்தி அதிசயிக்கத்தகும் பற்பல விஞ்ஞான சாதனங்களைக் காணுகின்றனர்.

ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கூறுவதைப் போன்று பணக்காரனை ஒழிப்பதால் நாம் பகுத்தறிவு பெறமுடியாது. நம் இழிநிலை நீங்கி மனிதத்தன்மையுடன் வாழ முடியாது அயல்நாடுகளில் எல்லாம் பணக்காரர்களும் மிராசுதார்களும் இருக்கின்றனர். ஆனால் அங்கு மனிதத்தன்மையற்றவன் இல்லை. இழிஜாதி மகன் கிடையாது. மூடப்பழக்க வழக்கங்கள் இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்னவெனில் பார்ப்பான் என்ற ஒருவன் மட்டும் அங்கு இல்லாததால்தான் அவ்விதக் கொடுமைகள் இல்லை.

ஆனால், பார்ப்பனப் புழுக்களால் இவ்விதத் தொற்று நோய்கள் உண்டாக்கப்பட்டன. அப்புழுக்கள் உள்ளவரை இந்நோய்கள் நம்மைவிட்டகலாது என்பதை உறுதியுடன் கூறலாம். எனவே அவைகளை அப்புறப்படுத்தும் காரியத்தில் நாம் எதையும் செய்யத் துணிவு கொள்ள வேண்டும்.

------------------------------- சேலம் சிவதாபுரத்தில் 17-04-1955-இல் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 29-04-1955

15.7.09

கருப்புச் சட்டைக்காரர்களை மதிக்கும் காமராசர்





பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் அவர்களால் அழைக்கப்பட்ட காமராசர், தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களை கருப்புச் சட்டைக்காரர்களை மதிப்பதிலும் சிறந்த பண்பாளர் ஆக இருந்தார் என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.

பெரியகுளத்தில் நடந்த நிகழ்ச்சியை உதாரணமாக கொள்ளலாம். 1962 இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றபோது பெரியகுளம் நகரில் ஜெயா திரையரங்க வரவேற்பு நிகழ்ச்சி, பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றார். மேலும் பல நிகழ்ச்சிகளுக்குச் செல்லவேண்டிய நெருக்கடியான நிலையில், காலதாமதமாக பெரியகுளம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

பலர் மனு கொடுக்கிறார்கள், வாங்கி வாங்கி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள், அப்போது திராவிடர் கழகப் பெரியகுளம் நகர தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான சுயமரியாதைச் சுடரொளி ம.பெ. முத்துக்கருப்பையா அவர்கள் கருப்புச் சட்டையுடன் திராவிடர் கழக கோரிக்கை மனுவை கொண்டு செல்கிறார் (சோத்துப்பாறை அணைத் திட்டம் தேவை என்ற கோரிக்கை).

கோரிக்கை மனுவை படித்து காட்டிய பின்பே காமராசர் அவர்களிடம் வழங்குவேன் என கூற, பொறுப்பாளர்கள் நேரம் இல்லை மனுவை படிக்க முடியாது, கொடுத்துட்டுப் போங்கள் என கூற, முத்துக்கருப்பையா அவர்கள் மறுத்து, படித்துதான் கொடுப்ன்; இல்லை என்றால் நான் கோரிக்கை மனுவே கொடுக்கவில்லை என்கிறார்.




(முத்துக்கருப்பையா அவர்கள் மனுவினை படித்துக்காட்ட, காமராசர் அவர்கள் உன்னிப்பாக கேட்கிறார்.)


இதைக் கண்ட கல்வி வள்ளல் காமராசர், கருப்புச் சட்டைக்காரரை கூப்பிடுங்கள். அவர் படித்து காட்டிய பின்பு அந்த மனுவை வாங்கிக் கொள்கிறேன் என்றார். மானமிகு முத்துக்கருப்பையா அவர்களும் படித்துக்காட்டி, நீண்ட கால மக்கள் கோரிக்கை சோத்துப்பாறை அணை நீர்தேக்கம் அவசியத் தேவை, குறித்துப் பேசினார். பொறுமையாக கருப்புச்சட்டைக்காரர் கூறியதை கேட்டு செவிமடுத்து, சென்னை சென்றவுடன் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கட்டுக்கு முதல் தவணையாக ரூ.50,000 ஒதுக்கீடு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராக காமராசர் இருந்தபோது பெரியகுளம் நகர் மன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி, சிறப்பாக ஏற்பாடு செய்து தயாராக இருந்தார்கள். முதலமைச்சர் காமராசர் வந்துவிட்டார் நகர் மன்ற நுழைவுவாயில் அருகில் கருப்புச்சட்டைத் தோழர்கள் வரிசையாக நின்று வணக்கம் தெரிவித்தார்கள். கார் மேடை அருகே செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். காவலர்கள் உள்ளே செல்லுங்கள் என பாதை ஏற்படுத்த, வண்டியை நிறுத்தச் சொல்லி முதல்வர் காமராசர் கீழே இறங்கி, கருப்புச்சட்டைக்காரர்களிடம் வந்து ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து வணக்கம் தெரிவித்ததை என்னால் மறக்க முடியவில்லை என்கிறார் பெரியகுளம் நகர திராவிடர் கழகத் தலைவர் 79 வயது எல். நல்லுச்சாமி.

-------------------தகவல்: மு. அன்புக்கரசன்,- பெரியகுளம் நன்றி:-"விடுதலை" 15-7-2009