Search This Blog

31.1.15

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா?முசுலிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதா?

மக்கள் தொகைப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை! இந்துத்துவாவாதிகள் இப்பொழுது புதிய முழக்கம் ஒன்றைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.


இந்துக்களே! நமது மக்கள் தொகை குறைய ஆரம்பித்து விட்டது. முசுலிம் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஆபத்து! ஆபத்து!! இந்த நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளைச் சரமாரியாகப் பெற்றுத் தள்ளுங்கள்! என்பது தான் இவர்கள் முழக்கம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை கூடினால் என்ன, குறைந்தால் என்ன? இது ஒரு பிரச்சினையா?


மதம் வளர்ந்தால் மத வெறியும் சேர்ந்தே வளரப் போகிறது; அதன் விளைவு மோதல்கள் - உயிர்ப் பலிகள் - இவற்றின் காரணமாக சமுதாயத்தில் எல்லா வகையான நல்ல வளர்ச்சிகளும் கெட்டுக் குட்டிச்சுவராகி போகும். அவ் வளவு தானே!


அத்தகைய மதத்தின் வளர்ச்சியால் என்ன பயன்?


இன்னொரு வகையில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டாமா? ஏற்கெனவே 120 கோடி மக்கள் தொகையால் மூச்சுத் திணறி கொண்டு இருக்கிறது இந்திய துணைக் கண்டம். இன்னும் பத்து ஆண்டுகளில் சீனாவையும் புறந்தள்ளி உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இந்தியத் துணைக்கண்டம் இருக்கப் போகிறதாம்!


உலகநாடுகளின் வளர்ச்சி விகிதத்தில் இந்தியா 72ஆவது இடத்தில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.20 வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 77 சதம் இருக்கிறார்கள் என்கிறது அரசின் புள்ளி விவரம். மக்களின் அடிப்படைத் தேவைகள், இன்னும் பூர்த்தியாக வில்லை; பள்ளிகளில் கழிவறை வசதிகள் செய்வதில் கூட தன்னிறைவு இல்லை. மனிதன் மலத்தை இன்னொரு மனிதன் சுமக்கும் கேவலம் மற்றோர் புறத்தில்.


வேலையில்லாத் திண்டாட்டம் விலா எலும்பை முறிக்கிறது. உணவு உற்பத்தியிலும் பிரச்சினை, விவசாயி கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை!


இந்தநிலையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் கொள்கையும், திட்டமாகவும் இருந்து வருகிறது. ஆனால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர்களே- அந்த கட்சியின் துணை அமைப்புகளே - ஆட்சியின் கொள்கைக்கு  விரோதமாக இந்துக்களே! குழந்தைகளை பெற்றுத்தள்ளுங்கள் என்று கூசாமல் குரல் கொடுப்பது வெட்கக்கேடு அல்லவா. பொறுப்பற்ற தன்மை அல்லவா! திருவாரூரில் செய்தியாளர்களிடம்  திராவிடர் கழகத் தலைவர்  மானமிகு கி.வீரமணி அவர்கள் இதனை சுட்டிக் காட்டி கண்டிக்கவும் செய்தாரே!


இந்தக் கண்ணோட்டத்தில் மற்ற மற்ற அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டிக்க வேண்டியது அவர் களின் பொறுப்பான கடமையாகும்.


இதில் என்ன கொடுமை என்றால் ஆளும் பிரதமரோ, கேபினட் அமைச்சர்களோ யாரும் இதனைக் கண்டு கொள்வதில்லை. காரணம் அவர்களும் இந்துத்துவாவாதி களாகவும், இந்து மக்களின் எண்ணிக்கை உயர வேண்டும்  எனும் எண்ணம் உடையவர்களாகவும் இருப்பதுதான்.


ஓசூரில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் கூட மகாபாரதத்தில் பாண்டவர்கள் போல அய்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றி உள்ளனரே!
ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருப்பதால் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்துமக்கள் சிறுபான்மையின மக்களாக மாறும் அவல நிலை ஏற்படும். எனவே, ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள் போல அய்ந்து குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் முதியோர் இல்லங்கள் குறையும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.


ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், காவியாளர்களும் இதனை வலியுறுத்தியே வருகிறார்கள்.
 

1. இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து மைனாரிட்டி ஆகி விடுவார்கள். அதை தடுக்க இந்துத் தம்பதிகள் கட்டாயம் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அசோக் சிங்கால் (23.2.2014 - போபால்)


2. இந்துக்கள் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்து நாடு உருவா க்க இது முக்கிய கடமையாகும் என்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் (10.10.2014, கொல்கத்தா)


3. இந்துக்களின் பலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. ஆகவே இந்துக்கள் குறைந்தது அய்ந்து குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் பிரவீன் தொகாடியா (10.11..2014 - உத்ரகாண்ட்)


4. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் லோக்சபா தொகுதி பா.ஜ., எம்.பி., சாக்ஷி சாமியார் மீரட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும் போது இந்துப் பெண்கள் அனை வரும் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (13.1.2015). 

5. இந்து பெண்கள் அனைவரும் தலா 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தர்காண்ட் சங்கராச்சாரியார் வாசுதேவனாந்த் சரஸ்வதி ஆலோசனை தெரிவித்துள்ளார் (19.1.2015 - அலகாபாத்)


நாடு எங்கே செல்கிறது என்பதை பொறுப்பு வாய்ந்த குடிமக்களும் வாக்காளர்களும் எண்ணிப்பார்க்க வேண் டாமா? இதில் இன்னொரு பிரச்சினையும் முக்கியமானது. குழந் தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், பெற்றுக் கொள் ளுங்கள் என்று கூச்சல் போடுகிறார்களே - அவர்களை நோக்கி மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது.


குழந்தைகளைப் பெறுவது பெண்கள்தானே! குழந்தை களைப் பெற்றுக் கொண்டே இருப்பதுதான் அவர்கள் வேலையா? அவர்களின் நிலையை எண்ணிப் பார்த்திருந்தால் இப்படி சொல்வார்களா?


இந்துத்துவா வாதிகளுக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன உறவு?  பெண்களை அடிமைப் பொருளாக கருது வதுதானே இந்து மதம் - அந்த கண்ணோட்டத்தில் இப்படி யெல்லாம் பேசித் திரிகிறார்கள் என்னும் போது இந்த இந்து மதம்தான்  எவ்வளவு மோசமானது  என்பதைப் பெண்கள் எண்ண வேண்டும். இந்த வகையில் பார்த்தால் கூட  பெண்ணுரிமைக்கு எதிராக இந்த இந்துமதம் ஏன் வளர வேண்டும் என்றுதான் பெண்கள் நினைப்பார்கள் - நினைக்க வேண்டும்.
இதில் என்ன வேடிக்கை என்றால் குழந்தைப் பிறப்பு பற்றி சாமியார்கள் பேசுவதுதான். என்ன செய்வது. இந்து மத சாமியார்கள் ஆசிரமத்தை சோதனை செய்தால் அங்கே கர்ப்பத்தடைக் கருவிகள் தான் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.


கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று துல்லிய மாக கண்டுபிடிக்கக்கூடிய எந்திரங்களும் இருக்கின்றன.


அர்த்தமுள்ள இந்துமதத்தை நினைத்தால் குடலே புரட்டிக் கொண்டே வருகிறது - மகா வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!


வளர்க பகுத்தறிவு!!                -------------------------- ”விடுதலை” தலையங்கம் 31-01-2015

30.1.15

மத மாற்றம் - திருஞானசம்பந்தன் 16 வயதில் மண்டையைப் போட்டது ஏன்?


மத மாற்றம் பற்றி சர்ச் சையைக் கிளப்புகிறார்கள். மதுரையை ஆண்ட கூன் பாண்டியனை சமண மதத் திலிருந்து சைவ மதத் திற்குச் சூழ்ச்சியால் மாற்றவில்லையா?


கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் ஏற்பட்டது என்றும் சமண முனிவர் களால் அந்த நோயைப் போக்க முடியவில்லை. திருஞான சம்பந்தன் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகத்தை பாடி மன்னன் உடலில் திருநீறு பூச மன்னனின் வெப்பு நோய் விலகி ஓடியது என்று கதை கட்ட வில்லையா? கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் ஆகினானாம்!


சமணர்களை எதிர்த்து அனல் வாதம், புனல் வாதம் நடத்தினார்களாம்.
சமணர்கள் பெரு நெருப்பை மூட்டினர்; சம்பந்தர் தான் பாடிய தேவாரத் திருமுறையில் கயிறு சாத்தி, போகமார்த்த என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து தளரிலி வள ரொளி என்ற பதிகத்தைப் பாடி நெருப்பில் இட்டார். அது தீயில் வேகாமல், கருகாமல் விளங்கியது; சமணர்கள் தங்கள் ஏடு களை நெருப்பிலிட அது சாம்பலாயிற்றாம்!


உடனே புனல் வாதம் தொடங்கியது. அப்பொ ழுது திருஞான சம்பந்தன் ஒரு பாடலைப் பாடினா னாம்.


வாழ்க அந்தணர் வானவரானினம்
வீழ்க தண் புனல்வேந்தனு மோங்குக
ஆழ்கதீய தெலா மர நாமமே
சூழ்க வையகமுந் துயர் தீர்கவே!


என்ற பதிகத்தைப்பாடி எழுதி அதை வைகை ஆற்றில் போட்டானாம்; அது ஆற்றில் எதிர் நீச்சல் போட்டு சிறிது தூரஞ் சென்று ஒரு கரையில் ஒதுங்கிற்றாம் - அந்த ஓதுங்கின இடத்திற்குத் திருவேடகம் என்று பெயர் வந்ததாம்.

வாதத்தில் தோற்றதால் சமணர்கள் எண்ணாயிரம் பேர்கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டனர் அரசன் துணையோடு! (என்னே சைவத்தின் கருணை மழை!)


இதனை நினைவு கூரும் வகையில் ஒவ் வொரு ஆண்டும் - தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு சிவன் கோயிலிலும் பிர மோற்சவம் நடக்கும்போது ஆறாந் திருவிழாவை சமணர்களைக் கழுவில் ஏற்றிய புண்ணிய விழா வாகக் கொண்டாடுகிறார்கள் இப்பொழுதும்!


சீர்காழி சின்னசாமி அய்யரின் திருமகனான திருஞானசம்பந்தன்பற்றி அளந்து கொட்டப்பட்ட தகவல்கள் கொஞ்சமா - நஞ்சமா!


பாடலால் ஆண் பனை யைப் பெண் பனையாக மாற்றினார்.


சென்னை மயிலையைச் சேர்ந்த சிவசேனச் செட்டியாரின் செத்துப் போன மகளின் எலும்பிலிருந்து ஒரு பதிகம் பாடி உயிர்ப் பித் தானாம்! 

(புளுகுவதற்கும் ஓர் அளவு வேண்டாமா?)

அதெல்லாம் சரி.. இவ்வளவுப் பெரிய ஆள் 16 வயதில் மண்டையைப் போட்டது ஏனாம்!/


---------------- மயிலாடன் அவர்கள் 30-01-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29.1.15

வெளிநாடுகளில் நான்கு வகை ஜாதிகள் உண்டா?

தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது - பேராசிரியர் க.அன்பழகன் முழக்கம்!
தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது
நான்கு வகை வருணத்தைத் திணித்தவர்களும் ஆரியர்களே!

ஆவடி வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் முழக்கம்!

ஆவடி, ஜன.29- தமிழர்களிடையே இல்லாதிருந்த ஜாதி யைத் திணித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் - தமிழரு டைய கலாச்சாரம் கெட்டதும் அவர்களால்தான் என்றார் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.


சென்னையை அடுத்த ஆவடியில் 25.1.2015 அன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு:


இந்தி எதிர்ப்பு உணர்ச்சி இன்னும் கலைஞரிடத்தில் இருக்கிறது! 

இந்தி மொழிக்கு தமிழ் நாட்டில் இடம் கிடையாது. தமிழ் நாட்டில்  வாய்ப்பைத் தேடி வந்த இந்திப் பெண்ணே, நீ இந்த நாட்டை நம்பாதே ஓடிப்போ! என்று பாடியவர் கலைஞர். அன்று தொடங்கிய அந்த உணர்ச்சி இன்றும், கலைஞரிடத்தில் அவருடைய பேச்சில், செயலில்,  எழுத்தில் நீடிக்கிறது. உண்மையாக இந்தி மொழி மட்டும் நம் எதிர்ப்பு அல்ல. இந்தி மொழிக்கு முன்னாலே ஏறத்தாழ 500 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் தமிழருடைய உரிமை யைப் பறிக்கக்கூடிய முறையில் சமஸ்கிருதம் திணிக்கப் பட்டது. திருக்கோவில்களில் எல்லாம் ஆண்டவனுக்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு. தமிழ் வீட்டுத் திருமணங்கள் எல்லாம் புரோகிதர்களைக் கொண்டு நடத்துகின்ற ஒரு நிலை. நான் சிறுவனாக, மாணவனாக இருந்த போது நாட் டில் பல இடங்களில் பிராமணர்களுக்கென்றே பாடசாலை கள். அந்தப் பாடசாலைகள் எல்லாம் வேத பாடசாலைகள். ஒவ்வொரு வேத பாடசாலைகளிலும் 30 பேர், 40 பேர் பிரா மணர்கள்தான் படிப்பார்கள். அவர்களுக்கு இலவசமாக சாப்பாடு, இலவசமாக குடியிருப்பு, இலவசமாக எண்ணெய், பால், இலவசமாக ஆடை எல்லாம் வழங்கப்பட்டன. பார்ப்பனரல்லாதவர்க்கு பள்ளிக்கூடமே இருக்காது. வெள்ளைக்காரன் வந்தான். ஏதோ அவர்களுக்கு ஆட்கள் தேவை என்பதற்காக பள்ளிக்கூடங்களை வளர்த்தார்கள் என்ற ஒரு கருத்து. அவர்கள் ஆட்கள் தேவை என்று வளர்த்தாலும்கூட அவன்தான் பள்ளிக் கூடத்தில் நம்மை எல்லாம் நுழைய விட்டான்.தாழ்த்தப்பட்ட தோழர் கிருஷ்ணசாமியோ, அவருடைய தந்தையோ, பாட்டனோ ஒரு அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கூடங்களுக்குள் நுழைய முடியாது. கிருஷ்ணசாமி படித்தது ஆச்சரியம்.  பள்ளிக்கூடத்தை திறந்துவிட்டது நீதிக் கட்சித் தலைவர்கள். நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள் சர்பிட்டி தியாகராயர் - தெலுங்கர். டாக்டர் டி.எம்.நாயர் - மலையாளி, டாக்டர் நடேசனார் - முதலியார்! -தமிழன். இந்த மூன்று பேரும் கலந்து பேசி தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இருக்கிறது.
பிராமணீய ஆதிக்கம் இருக்கிறது. தமிழ் மக்களை தலை எடுக்கவிடாத அளவிற்கு அந்த ஆதிக்கம் இருக்கிறது. அரசாங்க உத்தியோகத்திலே எல்லாம்  நூற் றுக்கு மூன்று பேராக இருக்கிற பிராமணர்களுக்கு நூற்றுக்கு எழுபத்தைந்து இடம். தமிழர்களாகிய நாம் ஏறத்தாழ 90 பேர், நமக்கு சமுதாயத்தில் இருபது இடம். 90 பேருக்கு இருபது இடம். மூன்று பேருக்கு 75 இடம். இது என்ன நியாயம்?அப்படி இருந்ததைத்தான் தியாகராயரும், டாக்டர் நாயரும் எதிர்த்து கண்டித்தார்கள். வெள்ளைக்கார அரசு பார்ப்பனீயர்களின் கைப்பாவையாக இருக்கிறது. ஆங்கி லேயர்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் பிராமணர் அல் லாதாரை ஒதுக்கிவிட்டு செல்வாக்குள்ள பிராமணர்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இந்த முறை கேட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்கள். எனக்குத் தெரிந்து, 1930 ஆவது  ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிக் கூடங்களில் பார்ப்பனரல்லாதாருக்கு இடம் கொடுத்தாலும் கூட ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடையாது.  ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்குப் போய் கிருஷ்ணசாமியின் சொந்தக் காரர் தன்னுடைய பிள்ளையை சேர்க்கப் போனால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல; டாக்டர் அம்பேத்கருக்கே இந்த கதிதான்.


டாக்டர் அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள்!


டாக்டர் அம்பேத்கர் படிக்கப் போனபோது மற்ற பிள்ளைகளை எல்லாம் உட்கார வைத்து  அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள். ஒரு தட்டிக்குப் பக்கத் திலே உட்கார வைத்தார்கள். இந்தத் தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள். இந்த தட்டிதான் ஆதிதிராவிடர்களைக் காப்பாற்றியது. தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள், தட்டிக்கு இப்பால் ஆதி திராவிடர் அல்லாதவர்கள். அதற்கு மேலே ஆசிரியர்கள்! தண்ணீர் வேண்டுமானால் இந்த ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் இருந்து தான் வாங்கி குடிப்பார். அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவேண்டுமானால் அங்கே இருக்கும் பானையிலே தண்ணீர் எடுக்கக்கூடாது. அவர் வெளியிலே போய்தான் யார் வீட்டிலாவது தண்ணீர் வாங்கி குடிக்கவேண்டும். அது எவ்வளவுப் பெரிய வெட்கக் கேடு, நம்முடைய தமிழன் இந்த பார்ப்பனீயக் கொள் கைக்கு எப்படியோ அடிமைப்பட்டான். இன்றைக்கு  நான் உங்களிடத்தில்  பெருமையாகச் சொல்கிறேன். திருவள்ளு வர் பிறந்த தமிழகத்தில் திருவள்ளுவருக்கு சாதி கிடை யாது. திருவள்ளுவர் காலத்தில் இருந்து புரவலர்களுக்கு சாதி கிடையாது.வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மன்னர்களுக்கு சாதி கிடையாது.

தமிழருடைய கலாச்சாரம்
ஆரியத்தால் கெட்டுவிட்டது!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அப்போது உயர்ந்த மொழி! அப்படி இருந்த காலத்தில் சமஸ் கிருதத்திற்கு இங்கே வேலையில்லை. யாரோ சில பேர் இங்கே சமஸ்கிருதம் படித்தார்கள். அவர்கள்தான் பிரா மணர்கள். நம்முடைய கோவில்களில் எல்லாம் சமஸ் கிருதம் ஆக்கிரமிக்கவில்லை. அப்போது நம்முடைய வீட்டுத் திருமணங்களை பிராமணர்கள் நடத்துகின்ற ஒரு நிலை கிடையாது. அது ஒரு காலம். அந்தக் காலம் மாறிப் போய் எவ்வளவோ ஆண்டுகள் ஆகி, ஆரிய ஆதிக்கம் மெல்ல மெல்ல வேரூன்றியது. தந்தை பெரியார் சொல்வார். ஆரிய ஆதிக்கம் என்பது பாம்புப் புற்றுக்கு பால் வார்ப் பதைப் போல. நாம் அதை ஆதரித்து விட்டோம். நம்மு டைய அறியாமை என்று. பாம்பு புற்றில் பால் வார்த்தால், பாம்பு நம்மை கடிக்காது என்று தாய்மார்கள் சொல்வார்கள். அது பால் இருக்கும் வரைக்கும் குடிக்கும். அது கிடைக் காதபோது கடிக்கும். ஆனால், இந்தப் பாம்பு பாலையும் குடித்து இரத்தத்தையும் குடிக்கும். அந்த ஆரிய கலாச் சாரத்தை எதிர்ப்பதுதான் தமிழருடைய பாதுகாப்பு என்று பிராமண அறிஞர்களே சொன்னார்கள். பி.டி.சீனிவாச அய்யங்கார் என்ற வரலாற்றுப் பேரறிஞர் எழுதினார். தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டுப் போய்விட்டது. நான்கு வகை சாதியை ஆரியர்கள் தமிழகத்தில் புகுத்தினார்கள். இந்த நால்வகை சாதி இல்லாவிட்டால் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்க முடியும். பிராமணன், சத்திரியன், வைஸ்யன், சூத்திரன் என்றெல்லாம் ஆண்டவன் படைப்பு என்று ஏமாற்றி விட்டார்கள்.


பிராமணன் என்றால் உயர்ந்த சாதி, கிருஷ்ண சாமி என்றால் தாழ்ந்த சாதி. அவர் எப்படித் தீண்டப் படாதவர், நீ எப்படி எல்லாருக்கும் மந்திரம் சொல்பவர்? கேட்டால் பிரா மணர் சொல்லக்கூடிய வார்த்தை என்ன தெரியுமா? 

ஆண்டவன் படைப்பு. ஆண் டவன் யார் என்று கேட்டால் பிரம்மா என்பார்கள். பிரம்மா எப்படி படைத்தார் என்றால், பிரம்மா முகத்தில் இருந்து பிரா மணரை படைத்தார், தோளில் இருந்து சத்திரியனை படைத்தார். தொடையில் இருந்து வைஸியனைப் படைத்தார், வைஸி என்றால் வியாபாரி. பாதத்தில் இருந்து சூத்திரனைப் படைத்தார். முகத் தில் இருந்து பிராமணர்களை படைத்த தால் அவர்களுக்கு அறிவு சாதியாம். தோளில் இருந்து படைத்த சாதி என்றால் அது வீர சாதியாம்.


தொடையில் இருந்து படைத்த சாதி ஊர் ஊராக சுற்றும் சாதியாம். காலில் இருந்து படைத்த சாதி என்றால் வேலை செய்கிற சாதியாம். அந்த சூத்திரனுக்குக் கீழே பஞ்சமன்.

வெளிநாடுகளில் நான்கு வகை ஜாதிகள் உண்டா?

பஞ்சமன் என்றால் பறையன், பள்ளன், தாழ்த்தப்பட்டவன். தீண்டாதவர்கள் யாரோ அவர்கள் எல்லாம் இதில் அடங் கும். இதையெல்லாம் சொன்னபோதுதான், பெரியார் சொன்னார் இப்படியெல்லாம் பிரித்து ஆண்டவன் படைப்பானா, ஆண் டவன் இப்படி நான்கு சாதியைப் படைத்து இருந்தால் மிச்ச சாதிக்கெல்லாம் யார் கணக்கு சொல்வது. இந்த நான்கு சாதியை இந்தியாவில்தான் படைத்தானா, அய் ரோப்பாவில் நான்கு சாதியைப் படைத் தானா? வெள்ளைக்காரன் இடத்தில் படைத்தானா, மற்ற நாட்டில் எல்லாம் படைக்காமல் இங்கே மட்டும் படைத்தான் என்றால் அவன் ஆண்டவனா? அப்படித் தான் படைத்தார்கள் என்றால் அவரவர் வேலையைச் செய்து இருக்கலாம் இல்லையா, ஆனால் பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் எத்தக் காலத்திலும் தொண்டு செய்வது அவர்களுடைய கடமை. அடி மையாக வேலை செய்யவேண்டி இருக்கே, எங்களுக்கு விடுதலை கிடை யாதா என்றால், விடுதலை என்று நீ கேட் டாலே மோட்சத்திற்குப் போக மாட்டாய். விடுதலை கேட்டால் நரகத்திற்குத்தான் போவாய். பிராமணர்களுக்கு தொண்டு செய்வதிலிருந்து விடுதலை சூத்திரர் களுக்குக் கிடையாது. எவ்வளவு காலமாக ஆனாலும் பிராமணருக்கு சூத்திரன் தொண்டு செய்துதான் மேல் நிலைக்கு வர வேண்டும். பிராமணர்கள் வேலை செய் வதற்கு கூலி கொடுக்காவிட்டால்கூட வேலை செய்யவேண்டும். சூத்திரர் களுக்கு சொத்து எது எது என்று கருது கிறார்களோ அந்தச் சொத்துக்கள் அத் தனையும் பிராமணர்களுக்குச் சொந்தம்.


ஏதோ சில காரணத்தால் சூத்திரனுக்கு சொத்துக்கள் கிடைத்தாலும்கூட அதை
பிராமணன் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வான். இப்படியெல் லாம் எதை எதையோ எழுதி வைத்திருக் கிறார்கள். அதையெல்லாம் பிராமணர் கள் சாஸ்திரம் என்கிறார்கள். முட்டாள் தனம் எல்லாம் சாஸ்திரமா? சாஸ்திரத் தில் சொல்லி இருந்தால் எதையும் நாம் அனுமதிக்கலாமா?


சாஸ்திரத்தில் நீங்கள் மேல் சாதி நாங் கள் கீழ் சாதி என்று சொல்லி இருந்தால் அதை ஒப்புக் கொள்ளவேண்டுமா? ஆண்டவன் படைத்தான் என்றால் அதற் காக நாங்கள் அடிமையாக இருக்கவேண் டுமா? அப்படியானால் ஆண்டவனே அடிமையாக இருக்கட்டும். என்னை ஏன் அடிமையாக இருக்கச்  சொல்கிறீர்கள்? எனவே சாஸ்திரத்தின் பெயரால், கட வுளின் பெயரால், தெய்வத்தின் பெயரால் கற்பனையாக நம்மையெல்லாம் முட்டா ளாக்கி நான் சொல்கிற வார்த்தைக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் நம்மை யெல்லாம் அடிமைகளாக்கினார்கள். தமிழ்நாட்டில் இப்போது நம் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது நான் படித்த, மயிலாடுதுறை யில் இரண்டு தெருக்கள். இந்த இரண்டு தெருவிலும் இருநூறு வீடுகள். இந்த இருநூறு வீடுகளில் 195 வீடுகளும் பிரா மணர்கள் வீடுகள்தான். ஒரு அய்ந்தாறு வீடுகளில்தான் முதலியார், செட்டியார் போன்றோர் இருந்திருப்பார்கள். வன்னி யரைக்கூட உள்ளே விடமாட்டார்கள். ஆதிதிராவிடர்கள் அந்தத் தெருவிலே நடக்கக் கூடாது. யாராவது இறந்து போனால் தூக்கிக் கொண்டு போகலாமே தவிர நடக்கக்கூடாது.


தீண்டாமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் வேலையாக இருந்தது!


இந்தத் தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் நோக் கம். தீண்டாமையை ஒழிக்க பள்ளியில் இடம் கொடுத்தது நீதிக்கட்சி. அரசாங்க நிலையிலே பங்கு கொடுத்தது நீதிக் கட்சி. நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒரு சூத்திரரை உட்கார வைத்தது கலைஞர். ஆதிதிரா விடர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆக்கியது கலைஞர். கிருஷ்ணசாமிதான் நீதிபதியாக ஆக வேண்டும் என்று கட் டாயமில்லை. ஒரு ஆதிதிராவிடர் ஆகி விட்டால் கிருஷ்ணசாமி ஆனது போலத் தான். நம்முடைய இனம் உள்ளே நுழை யக் கூடாது என்கிறார்கள். அந்த இடத் திற்கு நுழையக் கூடிய ஒரு உரிமையை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலை ஞர் அவர்கள் தேடிக் கொடுத்திருக்கிறார்.


சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக்கூடாது!


இப்படி நடைபெற்ற அநீதிகளுக் கெல்லாம் காரணம் சமஸ்கிருதம். சமஸ் கிருதம் தேவ மொழி, தமிழ் நீச மொழி என்று சொன்னார்கள். தமிழ் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழ் இலக்கியங்கள் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழில் உள்ள நீதி நூல்களுக்கு ஈடாக சமஸ் கிருதத்திலே கிடையாது. தமிழ் எல் லோரும் படிக்கலாம். ஆனால், சமஸ்கிரு தத்தை  பிராமணர்கள் மட்டும் தான் படிக் கலாம். அது  அவர்களுக்காகவே தயா ரிக்கப்பட்ட மொழி. தமிழ் மொழி எல் லோருக்கும் உரியது. சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக் கூடாது. மனைவி, தாய் படிக்கக் கூடாது. ஆனால், தமிழை எல் லோரும் படிக்கலாம், மனைவி படிக்கலாம், தாய் படிக்கலாம். தங்கை படிக்கலாம், முதலாளி, தொழிலாளிகள் என்று எல் லோரும் படிக்கலாம்.


தமிழ் நம்மை வாழவைத்த மொழி, சமஸ்கிருதம் நம்மை சாகடித்த மொழி. அந்த சமஸ்கிருதம் பிராமணர்களுக்கு பயன்படுகிறது. அந்த சமஸ்கிருதத்திலே தான் இந்தி வளர்க்கப்பட்டு புகுத்தப்படு கிறது என்ற காரணத்தால் ஏற்கெனவே நாங்கள் சமஸ்கிருதத்தால் பாதிக்கப்பட்ட வர்கள். மறுபடியும் நீங்கள் இந்தியைக் கொண்டு வருகிறீர்கள் அதை ஏற்க மாட்டோம் என்று பெரியார் சொன்னார், மறைமலை அடிகள் சொன்னார். மிகப் பெரிய தமிழறிஞர்கள் எல்லாம் சொன் னார்கள்.


பாரதியாரே தமிழ் மொழியைத் தான் போற்றிப் பாடினார். பாரதிதாசன் இந்தி மொழி நுழைவதைக் கண்டித்துப் பாடி னார். இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்! என்று கேட்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.


தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கியது இந்த இயக்கம்!

இந்த இயக்கம் தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கி இருக்கிறது. எனக்கு தெம்பு இருந்தால், நான் கொள்கையோடு வாழ்ந்தால், ஒரு லட்சியம் எனக்கு இருந் தால், நான் பேசுகிற போது அந்தப் பேச்சில் நம்பிக்கை இருந்தால் அத்தனையும் கொடுத்தது திராவிட இயக்கம். தியாகராயர் இல்லாவிட்டால், டி.எம். நாயர் இல்லாவிட்டால் அந்த வழியிலே வந்த தலைவர்கள் இல்லாவிட்டால் இந்தி திணிப்பை எதிர்க்கின்ற ஒரு உணர்வு இல்லாவிட்டால், எங்களைப் பொறுத்த வரையில், எங்களைப் போன்றவர்களுக்கு இன்றைக்கு கலைஞருக்கோ, எனக்கோ இந்த இயக்கத்தில் முன்னோடிகளாக இருந்து பணியாற்றுகின்ற அந்த சூழ் நிலையே வந்திருக்காது.


இந்திமொழியைத் திணிக்க மாட்டோம் என நேரு கொடுத்த உறுதிமொழி!


அண்ணாவே உயர்ந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார். காமராஜருக்கே மரியாதை வந்திருக்காது. ராஜாஜியை எதிர்த்து காமராஜர் போராடியபோது கருப்பு காந்தி என்று காமராஜரை சொன் னார்கள். அப்படி இந்த நாட்டில் சாதி உணர்வு, வைதீக ஆதிக்கம், பிராமணிய மேலாண்மை, சூத்திரர்களை இழிவுபடுத் துவது இவையெல்லாம் எதிர்த்து நின்ற ஒரு வலுவான சக்தி திராவிட இயக்கம். அந்த வழியில் தான் இந்தி மொழியைத் திணிக்காதே., பள்ளிக் கூட மாணவர் களுக்கு அரசாங்கத்திலே கொண்டுவந்து எல்லா இடத்திலும் இந்தியைப் பரப்பாதே என்று அன்றைக்கு போராட ஆரம்பித்து, பண்டித ஜவஹர்லால் நேரு அதை ஒத்துக் கொண்டு, இந்தி மொழி பேசாத மக்கள் ஒப்புக்கொள்கிற வரையில் நாங்கள் இந்தியை அந்த மக்களுக்கு ஆட்சி மொழியாக ஆக்க மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்தார். நீங்கள் ஒத்துக் கொண்டால்தான் ஆட்சி மொழி - இல்லா விட்டால் நாங்கள் திணிக்க மாட்டோம். இது லால்பகதூர் சாஸ்திரியும் சொன்னார்.


இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

                    --------------------”விடுதலை” 29-01-2015

பொங்கல் என்பது திராவிடர் திருநாள் மகர சங்கராந்தி என்பது ஆரியர் திரிபு!

பொங்கல் என்பது திராவிடர் திருநாள் மகர சங்கராந்தி என்பது ஆரியர் திரிபு!
திராவிடர் திருநாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் உரைசென்னை, ஜன. 28- பொங்கல் என்பதற்கும் மகர சங்கராந்தி என்பதற்கும் உள்ள வேறுபாட்டை எடுத்து விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


16.1.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.


அவரது உரை வருமாறு:


நம்முடைய விழாக்களிலேயே சிறப்பான விழா இந்தத் திராவிடர் திருநாள் பொங்கல் விழா என்பதாகும்.


சலசலப்புக்கெல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை

அடிப்படையிலே, சிலர் சொன்னதைப்பற்றிச் சொன்னார் கள், சிலருக்கு அவர்கள் உயிரோடு இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காக அவர்கள் சில யுக்திகளை கையாள்கிறார்கள். ஆரியத்தின் அம்புகளாக மாறுகிறார்கள். அதற்குத் தக்க கூலியும் பெறுகிறார்கள் விளம்பரங்கள் மூலமாக.


ஆகவே, அந்த வகையில், சிலருடைய சலசலப்புக் கெல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை. பெரியார் திடலுக்கு முன்னால், பல விஷயங்களைச் செய்தவர்கள் இருக்கிறார்கள்; பின்னாளில் அவர்களே மாறி, அவர்கள் வருத்தம் தெரிவித்து, இங்கே வந்தவர்களும் உண்டு.  ஆகவே, ஏதோ சில நிகழ்ச்சிகளைப்பற்றி அவர்கள் இப்படி நாம் பேசி விளம்பரம் கொடுக்கவேண்டும் என்று நினைக் கிறார்கள்.


அவற்றை நாம் புறந்தள்ளி, திராவிடர் தமிழர் திருநாள் என்பதா இப்பொழுது போட்டி? திராவிடர் என்று சொன்னால், அதிலே தமிழர் அடங்கியிருக்கிறது என்பதுதான் அடையாளம். ஆனால், ஏன் திராவிடர் திருநாள் என்று நாம் சொல்கிறோம் என்று சொன்னால், திராவிடருக்குத்தான் திருநாள் உண்டு, விழா உண்டு; மற்றவர்களுக்கு அது வெறும் பண்டிகைதான் உண்டு. அதை நன்றாகப் புரிந்துகொள் ளவேண்டும்.


தினசரி விஷத்தை கக்குகின்ற தினமலர் நாளேடு

எந்த அளவிற்கு இன்றைக்கு ஆரியம் தலை தூக்கி ஆடுகிறது; தங்கள் கையில் வாய்ப்புகள் கிடைத் திருக்கிறது என்பதற்காக மிகப்பெரிய அளவில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம், தினசரி விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு நாளேடு, பார்ப்பன நாளேடு தினமலர் நாளேடு.
இந்தத் தினமலர் நாளேட்டில், 15 ஆம் தேதியிட்ட நாளேட்டில், மனம் நிறைய மகிழ்ச்சி பொங்கட்டும்; பொங்கல் ஸ்பெஷல் என்று ஒரு பக்கம் எழுதியிருக்கிறார்கள். இதில், தமிழர் என்ற சொல்லைக்கூட அவர்கள் பயன்படுத்துவ தற்குத் தயாராக இல்லை.

ஏமாந்த தமிழா! கூலிக்கு மாரடிக்கும் தமிழா!

தமிழ் என்ற பெயராலே, தமிழ்த் தேசியம் என்ற முத்திரை யோடு வரக்கூடிய மிக வேடிக்கையான, விவரம் புரியாத, அடி முட்டாள் தமிழனாக இருக்கின்ற தமிழர்களே, உங்களுக்கும் சேர்த்து சொல்கிறோம். இதைத் தேர்ந்து நீங்கள் படியுங்கள்!  புரிந்துகொள்ளுங்கள்!

நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை, நாம் தீர்மானிப் பதில்லை; நம் எதிரிதான் தீர்மானிக்கிறான். இது மாவோவின் வாசகம் மட்டுமல்ல; அனுபவத்திலும் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒரு செய்தி.


அந்த வகையில், மனம் நிறைய மகிழ்ச்சி பொங்கட்டும்; பொங்கல் ஸ்பெஷல்; பொங்கல் சிறப்பு நாள் என்று கூட கிடையாது - பொங்கல் ஸ்பெஷலாம்.
அதில், மிக முக்கியமான தகவல்கள்; யாருக்கும் தெரியாத தகவல்கள் எல்லாம், அற்புதமான தகவல்களையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.
திராவிடர் திருநாள் என்று சொல்லக்கூடிய இதனுடைய தத்துவம், எதன் எதிர்ப்பிலே அமைந்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டுமானால், எதிரிகள் கையாளுகின்ற விளம்பரத்தை, அவர்களுடைய கருத்துப் பிரச்சாரத்தை, அதிலும் புதிதாக தங்களுடைய ஆட்சி நிலவுகிறது, மீண்டும் ஒரு குப்தர் காலம் போல, மீண்டும் தாங்கள் வந்துவிட்டோம்;


அசோகன் ஆட்சியை வீழ்த்தி விட்டோம். அதற்குப் பதிலாக நாம் ஆரிய ஆட்சியை நிலை நாட்டி இருக்கிறோம் என்று கருதுகிறவர்களுக்காக சொல் கிறேன், சிந்திக்கவேண்டும்.


சூரியன் பயோடேட்டா!

சூரியனுக்கே பயோடேட்டா - தந்தை காஷ்யப முனிவர்; இவர் யாருக்குப் பிறந்தவர் என்று தெரியவேண்டுமானால், தந்தை பெரியார் அவர்கள் எழுதிய மனுகுலத்துக்கு ஒரு நீதி என்ற ஒரு சிறிய புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!


எந்தெந்த ரிஷி, யார் யாருக்குப் பிறந்தான்? எப்படிப் பிறந்தான்? என்ற பட்டியலைப் போட்டு, ஒருவன்கூட மனிதனுக்குப் பிறக்கவில்லை. மிருகத்திற்கு, குடத்திற்கு, குவளைக்கு என்ற விவரங்கள் எல்லாம் தெரியும்.


தந்தை - காஷ்யப முனிவர்

தாய் - அதிதி

மனைவியர் - உஷா, பிரத்யுஷா

திசை - கிழக்கு

பிடித்த நிறம் - சிவப்பு

பூஜிக்கும் தெய்வம் - சிவன்

பிடித்த இலை - எருக்கு

விரும்பும் தானியம் - கோதுமை

பிடித்த மொழி - சமஸ்கிருதம், தெலுங்கு

நண்பர்கள் - குரு, புதன்

பிடிக்காதவர்கள் -சுக்கிரன், ராகு, கேது அடடா,

உங்கள் யாருக்காவது துளியளவாவது துணிவுண்டா? தெம்பு உண்டா?

மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்!

திராவிடர் திருநாள் என்று ஏன் பெரியார் திடல் கொண்டாடுகிறது என்பதற்கு இதைவிட தெளிவான எதிரியின் விளக்கம் வேண்டுமா?


தலையில்லா முண்டங்களே, தமிழ்த் தேசியம் என்று ஆடுகிறீர்களே, இதைப் பொறுத்து! உங்கள் நிலை என்ன? இதை மறுக்க எங்களைப் போல், உங்கள் யாருக்காவது துளியளவாவது துணிவுண்டா? தெம்பு உண்டா? திராணி யுண்டா? திராவிடர் என்று சொல்லுகின்ற நேரத்தில்தான், அதுவும் பெரியாருடைய மாணவராக நாங்கள் இருந்து சொல்கின்ற போதுதான் இந்த உணர்வு இருக்கிறது.

அடுத்த அந்த தினமலரில் வந்து இன்னொரு செய்தியையும் பாருங்கள்! மகர சங்கராந்தி என்றால் என்ன? அதைப்பற்றி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.


சூரியன் மகர ராசியில் நுழையும் மாதத்தையே தை என் கிறோம். இது பேச்சு வழக்கில் சங்க ராந்தி என இருந்தாலும், சங்கிராந்தி என்பதே சரியானது. கிராந்தி என்றால், மாறுதல். இது சம் என்ற அடைமொழி இணையும்பொழுது, நல்ல மாறுதல் என்று பொருள்படும். சூரியன் இல்லாவிட்டால், உலகம் இல்லை. அவரே உலக உயிர்களுக்கு உணவு தருகிறார்.


விளைச்சலுக்குக் காரணமாகிறார். ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் நல்ல மாறுதலை உருவாக்குகிறார். விவசாயிகள் மட்டுமல்ல, அவர்களிடமிருந்து பொருளைப் பெறும் எல்லா மக்களுமே தங்களுக்கு உணவளித்த சூரியனுக்கு நன்றி சொல்லும் நன்னாளாக, மகர சங்கராந்தி அமைகிறது. அன்பை வெளிப்படுத்தும் நாளும் இதுவே! சம்பந்திகள் இந்நாளில் தங்களுக்குள் பொருள்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.


அடுத்த இன்னொரு செய்தியையும் அந்த தினமலர் வெளியிட்டுள்ளது.

நெற்றிக்கண் அறிவியல் பார்வை!

சிவனுக்கு நெற்றிக்கண் உள்ளதாகச் சொல்கிறோம். இதை அறிவியல் ரீதியாக ஆராய்ந்துள்ளனர். சூரியன் ஒரு எரிகோளம். அதை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். நடுவில் உள்ளது ஒளிக்கோளம். இதிலிருந்துதான் வெப்பமும் ஒளியும் உண்டாகின்றன.


இதைச் சுற்றி ஹைட்ரஜன் வாயு அடங்கிய வண்ணக் கோளம் உள்ளது. இதற்கு வெளியே உள்ள பாகத்தை ஒளிர் மகுடம் என்பர். இந்தப் பகுதிகள் அனைத்தும் வட்டமாக இருக்கும்.


சூரியனை சிவன் என வைத்துக் கொண்டால், அதன்  மூன்று சக்திகளான ஒளித்திறன், வெப்பத் திறன், ஈர்ப்புத் திறன் ஆகியவற்றை அவரது மூன்று கண்களாகக் கொள்வர். இதில் வெளிப்பகுதியான ஒளிர் மகுடமே நெற்றிக்கண். சூரியன், ஆறு நட்சத்திரங்கள் அடங்கிய கார்த்திகை நட்சத்திர கூட்டத்தைக் கடப்பதையே, ஆறு பொறிகள் நெற்றியில் இருந்து வருவதாகக் குறிப்பிடுவர்.
சூரியனால் உருவாகும் இளவேனில், முதுவேனில், முன்பனி, பின்பனி, குளிர், மழை ஆகிய ஆறு பருவங்களே முருகனின் ஆறு முகங்களாக குறிக்கப்பட்டது.


பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கு வாய்ப்பே தருவதில்லை

எதற்காக இதனை எடுத்துச் சொல்கிறோம் என்றால் நண்பர்களே, இந்தக் காலத்தில்கூட மகரசங்கராந்தியைக் கொண்டாடுகிறார்களே தவிர, அதைத்தான் அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்களே தவிர, பொங்கல், அது தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கு வாய்ப்பே தருவதில்லை அவர்கள்.
ஆரியம் ஆட்சியைப் பிடித்தால் என்னாகும்? நாங்கள் இடைவிடாது கேட்டுக்கொண்டதன் விளைவாக, கலைஞர் ஆட்சிக்கு வந்ததால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததின் காரணமாக, அரிய பண்பாட்டு புரட்சிகளில் ஒன்று, எப்படி அண்ணா அவர்கள், சென்னை ராஜதானியை, தமிழ்நாடு என்று மாற்றினார்களோ, அதுபோல, காலங்காலமாக 60 வருஷப் பிறப்பு. அது ஒன்றும் ஆண்டு பிறப்பல்ல. ஆண்டு பிறப்பு என்பது தை முதல் நாள்தான்.


பெரியார் ஊட்டிய உணர்வை, அசைத்து விடலாம் என்று நீங்கள் யாரும் நினைக்காதீர்கள்!

60 ஆண்டுகள் என்று சொல்லும்பொழுது, திராவிடர் தமிழர் என்று சொல்லுங்கள் என்றெல்லாம் சில வித்தைகளை ஆரிய வில்லுக்கு அம்பாகி வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், ஏனென்றால், எதிரிகள் சிலர் விளம்பரத்திற்கு வருவார்கள்; சில பேர் ஆரியம் தரக்கூடிய கூலியைப் பெற்றுக்கொண்டு வருவார்கள்.


யார் வந்தாலும், இந்த உணர்வை, இன்னும் ஆயிரம் காலத்துப் பயிராக இருக்கக் கூடிய பெரியார் ஊட்டிய உணர்வை, அசைத்துவிடலாம் என்று நீங்கள் யாரும் நினைக்காதீர்கள். அதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.


மிக முக்கியாக ஒரு சிறப்பான ஒரு கேள்வியை பெரியார் அய்யா அவர்கள்  கேட்டார்.

தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்கிறபொழுது நாங்கள் பிரபவ, சுக்கில, விபவ என்று சொல்கின்றவைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோமா? இங்கே பேசுகின்றபொழுது மதிமாறன் அவர்கள் மிகவும் அற்புதமாகக் கேட்டாரே, நம் முடைய பேரசிரியர் சுப.வீ. அவர்கள் சொன்னார்களே, இதனை யாராவது மறுத்து, எதிர்ப்பைக் காட்டியிருக் கிறார்களா? எங்களைத் தவிர!


இங்கே பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்கள் பேசும்பொழுதும் சொன்னாரே, மற்ற ஆண்டுகளில் அந்த விழாவினை எளிமையாக நடத்தினோம். ஆனால், எந்த ஆண்டு அது மறுக்கப்பட்டதோ, அப்பொழுதுதான் அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல, பெரியார் திடலில் கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தன்மையோடு அந்த விழாவினை நடத்துகின்றோம். மற்றவர்கள் அதை செய்கிறார்களா, இல்லையா என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்கிற உணர்வோடு!


இங்கே வந்திருக்கின்ற ஏராளமான புது முகங்களை நாங்கள் வரவேற்கிறோம். வழக்கமாக பெரியார் திடலுக்கு வருபவர்கள்தான் வந்திருக்கிறார்கள் என்பதல்ல, தமிழர்கள், திராவிடர்களுக்கு அந்த உணர்வு இருக்கிறது.
திராவிடர்கள் என்று சொல்லும்பொழுது, அதில் திராவிடர்கள், தமிழர்கள் என்பதில் என்ன பெரிய வேறுபாடு?


பெரியார் மிகச் சாதாரணமாக விளக்கம் சொன்னார். தமிழன் என்று சொன்னால், பார்ப்பானும் தமிழனாகி விடுகிறானே? பார்ப்பானும் தமிழ் பேசுகிறானே! அவனும், தமிழன் ஆகிவிடுகிறானே! ஆகவே, திராவிடன் என்று சொல்லுங்கள், பார்ப்பான் உள்ளே நுழைய முடிகிறதா என்பதைப் பாருங்கள் என்று சொன்னார். திராவிடன் என்பது வெறும் ரத்தப் பரிசோதனை அல்ல.
இன்னமும், பொங்கல் விழாவைக்கூட, திராவிட திருநாளாக, திராவிடர் விழாவாகக் கொண்டாடாமல், அதற்கு சூரியனுக்கு எத்தகைய ஆராய்ச்சி செய்கிறான்; மகர சங்கராந்திக்குச் செல்கிறான். அந்த 60 வருடங்களைச் சொல்கிறோம், புதிதாக வந்திருக்கின்ற தோழர்களுக்குச் சொல்கிறோம்.
வருஷம் என்பதே முதலில் தமிழா? தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்கிறார்கள்.


60 வருஷங்களின் பெயர்கள்!


பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய.


ஒரு சொல்லாவது தமிழ்ச் சொல் இருக்கிறதா? இதற்குத் தமிழ்ப் பேசக்கூடியவர்கள், நாங்கள் தமிழ்த் தேசியத்தில் விழுந்திருக்கிறோம் என்று சொல்லக்கூடியவர்கள் யாராவது, தமிழ்ப் புத்தாண்டு  என்று சொல்கின்ற நேரத்தில், தமிழனுக்கு ஆண்டு என்று சொல்கின்ற நேரத்தில், ஒரு சொல்லாவது தமிழ்ச் சொல்லாக இருக்கவேண்டாமா? ஒரு பண்பாட்டு படையெடுப்பினுடைய ஆதிக்கம்தானே அது.


இதைக் கண்டிக்கத் தந்தை பெரியார் போன்றவர்கள் இருந்த காரணத்தினால்தான், இன்றைக்குத் தமிழ்ப் புத்தாண்டு, திராவிடர் திருநாளாக உருவாகி இருக்கிறது. அதைத்தான் நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.


இங்கே இவ்வளவு தாய்மார்கள், சகோதரிகள் மற்றவர்கள் இருக்கின்ற இடத்தில், வெளிநாட்டுக்காரர்கள் யாரிடமாவது இந்த 60 வருஷக் கதையைச் சொன்னால் என்னாகும்? 60 வருஷத்திற்குமேல் வாழ்ந்தால் என்னாகும்? இப்பொழுது பேராசிரியருக்கு இப்பொழுது வயது 93. அவர் தமிழ் வருஷத் தில் பிறந்திருந்தால் என்னாகும் கணக்கு. நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.


திராவிடத்தால் அறிவு பெற்றோம்!
திராவிடத்தால் மானம் பெற்றோம்!
திராவிடத்தால் உரிமை பெற்றோம்!

60-க்கு மேலே இவனுடைய சிந்தனையே வாழவில்லை, அந்தக் காலத்தில். அதனால்தான், 60 வயதை சஷ்டியப்த பூர்த்தி என்று சொன்னான். இதனை மிகப்பெரிய அளவில் மாற்றியது திராவிடர் இயக்கம்தான். முத்து விழா, பவழ விழா, மணிவிழா என்று மாற்றியது திராவிடர் இயக்கம்தான். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லாதீர்கள் நண்பர் களே, திராவிடத்தால் அறிவு பெற்றோம்! திராவிடத்தால் மானம் பெற்றோம்! திராவிடத்தால் உரிமை பெற்றோம் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வை பெறுங்கள்!


60 வருஷங்கள் எப்படி பிறந்தார்கள் என்று கேட்டால், நாரதனும், கிருஷ்ணன் இணைந்து பெற்றார்களாம். இந்த 60 வருஷமும் கீதை பிறந்த பிறகுதான் வந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மனுதர்மத்தினுடைய கடைசி பாகத்தில்தான் கிருஷ்ணன் என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது.
ஆகவே, திட்டமிட்டு ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. யாருக்காவது சந்தேகம் இருந்தால், அபிதான சிந்தாமணி புத்தகத்தை எடுத்துப் பாருங்கள். அதில் 60 வருஷக் கதைகள் இருக்கும்.


அந்தக் கதைகள் மிகவும் ஆபாசமாக இருக்கும். கிருஷ்ணனிடம் நாரதன் சென்று கேட்கிறாராம், கிருஷ்ணா உனக்கு 16 ஆயிரம் கோபிகாஸ்திரீகள் இருக்கிறார்களே, எனக்கு ஒரு பெண்ணாவது கொடுக்கவேண்டாமா? என்று.
தேவர்கள் எவ்வளவு முக்கியமான வேலையைப் பார்த்திருக்கிறார்கள் பாருங்கள், அவர்கள் எல்லாம் அவதாரங்கள்.


ஒவ்வொரு வீட்டிலும் கோபிகாஸ்திரீகளை, கிருஷ்ணன் கொஞ்சிக்கொண்டிருக்கிறானாம்!

உடனே கிருஷ்ணன் சொல்கிறானாம், நீ ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கதவைத் தட்டு; நான் இல்லாத இடமாக இருந்தால், நீ அந்த வீட்டிற்குத் தாராளமாகச் செல்லலாம் என்று சொல்கிறான். 16 ஆயிரம் கோபிகாஸ்திரீகளின் வீட்டிற்கும் சென்று நாரதன் கதவைத் தட்டுகிறானாம்.
எங்கே பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் கோபிகா ஸ்திரீகளை, கிருஷ்ணன் கொஞ்சிக் கொண்டிருக்கிறானாம். உடனே, நாரதன் எனக்கு ஒன்றும் புரியவில்லையே, எனக்கு ரொம்ப போதை வந்துவிட்டதே என்று கிருஷ்ண னிடம் சொல்கிறானாம்.


கிருஷ்ணன் சொல்கிறான், அப்படியென்றால், நீயும், நானும் கூடி குழந்தைகளைப் பெறலாம் என்றானாம். நாரதன், கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் பிறந்த குழந்தைகள்தான் 60 ஆண்டுகளாம் என்று எழுதி வைத் திருக்கிறார்கள்.


இதைவிட ஆபாசமான, இதைவிட அறிவுக்குப் பொருந்தாத கற்பனை வேறு இருக்க முடியுமா? இதுதான் நம்முடைய தமிழ் புத்தாண்டு என்று சொன்னால், இதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? நாகரிக உலகத்திலிருந்து மறுபடியும் காட்டு விலங்காண் டித்தனம் என்று சொன்னார்களே, அந்தக் காட்டுமிராண்டித் தனத்திற்கு நாம், நம்மை நோக்கியே பிற்படுத்திக் கொள் கிறோம் என்று பொருள்.


எனவேதான், திராவிடர் திருநாள் என்பது, ஒரு பண் பாட்டு புரட்சியினுடைய அடையாளம். எழுச்சியினுடைய தொடக்கம். அதனுடைய சிறப்பான கருத்து, கவிஞர் அவர்கள் சொல்லியதுபோல், ஒரு மீட்டுருவாக்கம்.


எனவே, இந்தக் கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தவேண்டிய அவசியம், அவசரம் இப்பொழுது ஏராளம் உண்டு.


ஏனென்றால், எதிரிகள் தங்களுக்கு
ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்டோர்
புலி வேஷம் போட்டு ஆடுகிறான்
பொதுமக்களுக்கு புல்லளவேனும்
மதிப்பேதும் தருகின்றானா?
இருட்டறையில் உள்ளதடா உலகம்


என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, அந்த இருட்டறையில், ஒரு வெளிச்சத்தை உண்டாக்கக்கூடிய ஒரு சக்தி, தந்தை பெரியார் என்கிற தத்துவத்திற்குத்தான் உண்டு என்கிற முறையில், பெரியாரைப் பேசாத நாளெல் லாம், பிறவாத நாட்களாகக் கருதும் பேராசிரியருடைய உரைக்காக, என்னுடைய உரையை நான் முடிக்கின்றேன்.

வணக்கம்! நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

------------------------ இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். --"விடுதலை” 28-01-2015

28.1.15

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் ....

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 

 

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அகற்றப்பட்டு, அவ்விடத்தில் இந்தி மட்டுமே வந்திருக்கும். அவ்வாறு மாறியிருந்தால் தமிழகத்தில் இந்தி எந்த அளவில் புகுந்து நாட்டாண்மை செய்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


1. இந்திய ஆட்சிப் பணி, காவல்துறைப் பணிகளுக்கான (IAS, IPS) தேர்வுகளில் இந்தியில் மட்டுமே கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழகத்திலி ருந்து ஒருவர்கூட அப்பணிகளுக்கு வந்திருக்க முடியாது.


2. நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழ் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும்.


3. பாஸ்போர்ட், தொடர்வண்டி பயணச் சீட்டு, விமான பயணச் சீட்டு என அனைத்து மத்திய அரசு தொடர்பான ஆவணங்களிலும், இடங்களிலும் இந்தி மட்டுமே குடி புகுந்து இருந்திருக்கும்.


4. அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு கேள்விகள் ஆங்கிலம் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக் கும் தமிழகத்திலிருந்து ஒருவர்கூட படித்திருக்க மாட்டார்கள்.


5. அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்துப் பாடங்களும் இந்தி வழிக் கல்வியின் (இந்தி மீடியம்) மூலமாக படித்திருப்போம்.


6. தமிழகத்தில் உள்ள மத்திய மாநில வேலை வாய்ப்புகள் அனைத்திலும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான் நிரம்பி வழிந்திருப்பார்கள்.


7. அரசியல் கட்சிகள் வைக்கும் பதாகைகள் அனைத்தும் இந்தியாகவே இருந்திருக்கும்.


8. வட நாட்டில் இருப்பது போல பேருந்துகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் பெயர்ப் பலகை இந்திமயமாகவே இருந்திருக்கும்.


9. தமிழகம் அய்.டி. துறையில் இவ்வளவு முன்னேறி யிருக்காது. ஆங்கிலம் தெரியாத காரணத்தால் வெளி நாடுகளுக்கு,  நாசா போன்ற அறிவியல் துறைகளில் அமையும் நல்ல வேலை வாய்ப்புகளுக்கு  தமிழர்களில் அதிகமானவர்கள் சென்றிருக்க முடியாது. இந்தி பேசும் மாநிலங்கள் போல தமிழகம் மிகவும் பின்தங்கி இருந்திருக்கும்.


10. தமிழில் இவ்வளவு திரைப்படங்கள் மற்றும் இவ்வளவு தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள், இணையதளங்கள் வந்திருக்காது.


11. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என அனைத்திலும் இந்தி மட்டுமே இருந்திருக்கும், தமிழ் கட்டாயம் இருந்திருக்காது.


12. பிறப்பு  - இறப்பு சான்றிதழ் கூட இந்தியில் தான் இருந்திருக்கும்.


13. தமிழக சட்டமன்றத்தில் பல இந்திக்காரர்கள் உள்ளே புகுந்திருப்பார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் இந்திதான் சட்டமன்ற மொழியாக இருந்திருக்கும்.


14. இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மொழிகளும் இந்நேரம் வழக்கத்தில் இருந்து  மறைந்திருக்கும்.


15. வீட்டில் உள்ள குழந்தைகளும் பெற்றோர்களிடம் இந்தியில்தான் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். தாய் மொழிகளின்  நிலை கேள்விக்குறி  ஆகியிருக்கும்.


16. தமிழகத்தில் தமிழில் வணிகம் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கும்; இந்தி தெரிந்தவர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.


இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.


தமிழர்கள் செய்த மொழிப் போராட்டத்தின் விளைவாக அனைத்து மாநில மொழிகளும் காப்பாற்றப்பட்டன என்பதில் நமக்கு பெருமையே!
இருப்பினும் இந்திய அரசின் இந்தித் திணிப்பு இன்னும் ஓயவில்லை. தமிழர்களின் மொழிப் போராட்டமும் முடியவில்லை.


இப்பொழுது சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். திராவிட இயக்கத்தால் இந்தி எதிர்க்கப்பட்டதால் தமிழ்நாட்டு மக்கள் இந்தி படிக்க இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. அப்படி இல்லையென்றால், இந்தி படித்து முன்னேறி இருப்பார்கள் என்று பொறுப்பு இல்லாமல் பேசி திரிகிறார்கள் - சிலர் எழுதவும் செய்கிறார்கள். வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கும் என்பது அவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.


உண்மை நிலை என்ன? இந்தியைத் தாய் மொழி யாகக் கொண்ட வட மாநிலத்தவர்கள்தான் இன்றைய தினம் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வேலை செய்து கொண்டுள்ளனர்.


எந்த மொழியைத் தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்லும் நிலையில் அந்நாட்டு மொழியை நாளடைவில் கற்றுக் கொண்டு தொழிலையும், வாழ்வையும் நடத்திக் கொண்டுள்ளனர்.


குறிப்பாக தமிழ்நாட்டில் வட்டிக் கடைகளையும் மற்றும் பல தொழில்களைச் செய்து வரும் மார்வாடிகளும் குஜராத்துக்காரர்களும் வரும் பொழுது தமிழைக் கற்றுக்கொண்டா வந்தார்கள்?


இங்கு வந்தார்கள் - மக்களிடம் புழங்கினார்கள் - பேச்சுத் தமிழ் தானாக வந்து சேரவில்லையா?


சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியை - இந்தி பேசாத மாநிலங்களில் திணிப்பது  - ஒரு பண்பாட்டுத் திணிப்பு என்பதை மறக்க வேண்டாம்!


இதனை இன்றல்ல - நேற்றல்ல - 1926ஆம் ஆண்டி லேயே தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும் என்ற தலைப்பில் கட்டுரையை எழுதி னார் தொலைநோக்காளரான தந்தை பெரியார் (ஆதாரம்: குடிஅரசு 7.3.1926).


89 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை நினைத்துப் பார்க்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியாரை வாசிப்போம் - சுவாசிப்போம்! அதன் மூலம் நம்மை எதிர் நோக்கி ஆணவமாகச் சிரிக்கும் சக்திகளைத் தூள் தூளாக்குவோம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

                      ------------------------------”விடுதலை” தலையங்கம் 28-01-2015

27.1.15

இதுதான் வால்மீகி இராமாயணம்-53

இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன).
இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


அயோத்தியா காண்டம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

தூதர், வசிட்ட முனிவன் ஏவலோடு வந்தோமெனப் பரதனிடம் கூறியதாக வால்மீகி கூறக்கம்பர் தசரதனிட மிருந்து வந்ததாகவே கூறுகின்றனர். பரதன் கனாக்கண்டு வந்திருந்தமையைக் கம்பர் கூறவேயில்லை. பரதன் அயோத்தி வந்ததும் தன் தந்தையிருக்கும் அரண்மனை யிற் காணாது தன் தாயகம் வந்தான் என்று வால்மீகி கூறக்கம்பர்.

அவன் தசரதன் வீட்டிலிருக்கும்போது தோழியையனுப்பிக் கைகேயி அவனை அழைக்கிறா ளெனக் கம்பர் கதை கட்டுகிறார். பின் இராமன் குற்ற மிழைத்துக் காடேகினனோ என்ற பரதன் வினாவுக்கு நேராகத்தான் செயத சூழ்ச்சியைக் கைகேயி கூறினா ளென வால்மீகிக் கூறக்கம்பரோ, பரதன் குற்றமிழைத்த தால் இராமன் காடேகினனோ என்று கேட்டுவிட்டு, அவன் குற்றம் செய்யான் எனத்தானே சமாதானம் செய்துகொண்டு அவன் காடேகியது மன்னன் இறக்கு முன்னோ, பின்னோ என வினாவினனெனவும், அதற் குக் கைகேயி முன்னே எனக்கூறி வாளாவிருந்தனள் பின்னெனவும் இராமன் வனமேகக் காரணமென்ன வெனப் பரதன் வினவிய பின்பே அவள் உண்மை கூறினாளெனவும் கம்பர் கதை கட்டுகிறார்.

இதனால் அவர் எண்ணம் கைகேயி தான் செய்த தீமையைக் கூற அஞ்சி மறைக்க முயன்றது போற்காட்டி அவளை மிகத்தீயவளாக்கவே பரதன் எவ்வாறு தன் தாயை இகழ்ந்தானென வால்மீகி கூறுகிறாரோ அதற்கு நூறுமடங்கு அதிகக்கடுமையாக அவன் அவளை இகழ்ந்ததாகக் கம்பர் கூறுகிறார். அவள் மேல் தனக்கிருந்த சின வெறியையெல்லாம் கம்பர் பரதன் வாயால் போக்கிக் கொள்கின்றனர்.

பரதனைக் கண்டவுடன் கோசலை அவனைப் பலவாறு இகழ்ந்ததோடு நில்லாது அவன் தசரதனது சவச்சடங்குக்கு ஆகான் எனவும் கூறி அச்சுறுத்துகிறாள் என வால்மீகி கூறுகிறார். கம்பரோ இவ்வுண்மையை மறைத்துக் கோசலை பரதனுடைய வருத்தங்கண்டு, அப்பா! நீ கைகேயி செய்த தீமையை அறிந்திலை போலும் என மட்டும் வினவியதாகக் கூறுகிறார்.
இது கோசலையை மிகவும் நல்லவளாக உலகத்தாருக்குக் காட்டவே. கம்பருடைய தீயமதி இருந்தவாறு மிக அழகிதே! உண்மையை உள்ளவாறு கூறாமல் புரட்டுவதால் இவர் என் பெற்றார்? கைகேயி இவருக்குச் செய்த தீமையென்ன, கோசலை செய்த நன்மையென்ன?

பரதன் தசரதனுடைய பிணத்திற்கு எரிமூட்ட எழுந்தபொழுது வசிட்டன், தசரதன் பரதனை விலக்கிய கூற்றைக்கூறித் தடுத்து, அவன் மனம் வருந்த சத்துருக்கனைக் கொண்டு தீ மூட்டியதாகக் கம்பர் வேண்டுமென்று கதை கட்டுகிறார்.

பரதனுமா இவர் உண்ணும் சோற்றில் மண்ணைவாரியிட்டான்? இவர் ஏன் பரதனிடமும் கொடுமை காட்டி, வேண்டுமென்றே பொய் புகலுகிறார்? வசிட்டன் இச்சொல்லைக் கூறியதாகவே குறிக்காமல் பரதனே கைப்பட எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கிறானென வால்மீகி மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

                                          ----------------------------------” விடுதலை”24-1-2015
Read more: http://viduthalai.in/page1/94800.html#ixzz3Pk54hkzY

அயோத்தியா காண்டம் பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி
இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை.
வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.

அயோத்தியா காண்டம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

தசரதனுக்குப் பட்டமகிஷியரைத் தவிர அறுபதி னாயிரம் மனைவியர் இருந்தனரென மிகைப்படக்கூறிய கம்பர், தசரதனிறந்தவுடன் முனிவன் அவர்களைப் பார்த்து அப்பிணத்தைச் சுடும்போது தீயிற் புகுங்க ளெனத் தீயால் கொளுத்திய அன்று அவர்களைனை வரும் தீயிற் புகுத்திறந்தனரெனவும் ஓர் அபாண்டமான பொய்யைக் கட்டிவிடுகிறார்.


இவற்றைப் பற்றி வால்மீகி ஒன்றும் கூறாததோடு, தசரதனைக் கொளுத்தியபின் அப்பெண்களனைவரும் அயோத்திக்குத் திரும்பின ரெனவும் தெளிவாகக் கூறியிருக்கின்றார். வால்மீகி கூறியிருந்தால் கதைப் போக்குக்குக் கம்பர் சொல்லித் தொலையட்டும்.
கூறாத பொய்யை ஏன் இவர் கட்டிக்கூற வேண்டும்? அறுபதினாயிரம் பெண்களும் மாண்டு மடியத்தீவளர்த்த அந்தச் செய்தியைக் கம்பர் விவரித்திருப்பின், அவருடைய சிறந்த அறிவு திகழும், பெண்களை மிகக்கேவலமாக்குகின்றார் கம்பர்.


குடிகள் வந்து பரதனை அரசேற்க வேண்டியதையும் அவன் மறுத்துப் பக்கத்திலிருப்போரைக் கங்கைவரை வழி செய்ய ஏவியதையும் கம்பர் மறைத்தார். மேலும் பரதன் சுமந்திரனை நோக்கிச்சேனை முதலியோரைப் புறப்பட கட்டளையிடுமாறு ஏவியதாக வால்மீகி கூறக்கம்பர் அவன் தன் தம்பி சத்துருக்கனை நோக்கிக் கூறியதாகக்கூறுகிறார்.


மேலும் பரதன் மரவுரியுடுத்துத் தேரேறி அயோத்தியை நீங்கினானெனப் பொய் புகல்கிறார். சத்துருக்கன் கூனியை அடித்ததை வால்மீகி புறப்படுமுன் கூறக்கம்பர் அவர்கள் புறப்பட்டு வாயிலையடைந்தவுடன் கூறுகிறார்.
பரதன் முதல்நாள் இராமன் தங்கிய சோலையிலே தானும் தங்கியிருந்து அங்கிருந்து கால் நடையாக இராமனைப்போல் நடந்து சென்றானென்று கதை கட்டுகிறார். இராமன் கங்கைக்கரைவரை தேரிற் சென் றதை மாற்றிச் சோலை வரையே சென்றானென முன் கதை கட்டியதற்கேற்ப, இங்கும் இவர் கதையை மாற்றிக் கதைகட்டினார் போலும்!


பதின்மூன்றாம் அத்தியாயம்


பரதன் சேனையோடு கங்கைக்கரையை யடைந்த தைக் கண்ட குகன், மனத்தாலும் எண்ண முடியாத சேனையுடன் இவன் வருகிறான். இவன் வேடர்களான நம்மைச் சிறை செய்வானோ கொல்வானோ? இராமனைக் கொல்ல வருகிறானோ? வேடர்களே நீங்கள் மரக்கலங் களில் ஏறித் துறையைப் பாதுகாத்துப் போருக்குத் தயாராயிருங்கள் என்று கூறிக் காணிக்கையும் புலாலும் பழமும் எடுத்துக் கொண்டு பரதனிடம் போனான்.
சுமந்திரன் அவன் வருவதைக்கண்டு பரதனை நோக்கி இவன் வேடர் தலைவர் குகன், இராம னுக்கு உயிர்த் தோழன். இராமனிருக்குமிடம் அறிந்தவன், உன்னைக் காண வருகிறான் என்றான். பரதன் அவனை அழைத்து வரச் சொன்னான்.


குகன் வந்து பரதனைப் பணிந்து, இது உங்கள் நாடு, கங்கைக்கரை வரையில் வழிபோட்டதை உணர்ந்தும் தாங்கள் வருவதாக எனக்குத் தெரிவியாத தால் மோசம்போனேன். அடிமைகளாகிய எங்கள் ஊரில் தங்கி நாங்கள் கொடுக்கும் புதுப்புலால், உலர்ந்த புலால் இவற்றை உண்டு இன்றிரவு தங்க வேண்டு கிறேன் என்றான்.


பரதன், உன்பேச்சால் மிக மகிழ்ந்தேன், பரத்து வாச முனிவருடைய குடிசையை அடைய வேண்டும். கங்கையையும் தாண்டவேண்டும் என்று கூறினான். குகன் அவனை நோக்கி, அதற்கு வேண்டுவன செய் கிறேன்.
ஆனால், உமது பெரிய சேனை எனக்கு ஓர் அய்யத்தை உண்டாக்குகிறது. நீர் இராமனிடம் நல்ல எண்ணத்துடன் போகிறீரா, கெட்ட எண்ணத்துடன் போகிறீரா? என்று கேட்டான். நான் இராமனை அழைத்துவரப்போகிறேன். இது உண்மை என்றான்.


                                   ------------------” விடுதலை” 27-01-2015

26.1.15

கலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டும்

கலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டும்பார்ப்பனர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் சாஸ்திரம், அதுதான் சட்டம் - அதனை ஏற்க மறுத்தால் அவர்கள் ஏதாவது உள்நோக்கம் கற்பிப்பது, முத்திரை குத்துவது என்பதைத் தங்கள் பிழைப்பாகக் கொண்டு திரிகிறார்கள்.


தமிழ்நாட்டில் இருந்துகொண்டே, தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழர்களை இழிவுபடுத்துவதில் மூர்க்கக் குணம் கொண்டு திமிராக எழுத ஆரம்பித்துள்ளனர்.


தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று இந்த ஆண்டும் திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தி எழுதி விட்டாராம். துர்வாசர் என்ற பெயரில் துக்ளக்கில் உண்டு இல்லை என்று கலைஞர் அவர்களை எழுதித் தீர்க்கின்றனர் (துக்ளக் 28.1.2015 பக்.28).


யுகாந்திரமாக சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்தால் கலைஞருக்கு என்ன வந்தது? இவர் யார் இப்படி சொல்லுவதற்கு? இவரது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மறைமலை அடிகளே சொல்லி விட்டார், சோமசுந்தர பாரதியாரே சொல்லி விட்டார் என்று அறிக்கை வெளியிடுகிறார். மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியாரும் தமிழர்களின் மகா சன்னி தானங்களா?  மடாதிபதிகளா? மகாசன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகிற நம்பிக்கைகளை எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இந்த லட்சணத்தில் திராவிட மகா சன்னிதானம் என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் இந்தக் கருணாநிதி சொல்வதையா போயும் போயும் கேட்பார்கள்? என்று பொரிந்து தள்ளுகிறது துக்ளக்.


முதலில் கருணாநிதி என்ன சன்னிதானமா என்ற கேள்வியை எழுப்புகிறார் - சரி, கலைஞர் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் அறிஞர்களான, கற்றுத் துறைபோகிய பெரு மக்களாகிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சொல்லுகிறார்கள்  என்றால் அவர்கள் என்ன மடாதிபதிகளா? சன்னிதானங்களா? என்று கேள்வி கேட்கிறார்.


தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிப் பேச தமிழறிஞர்களை விடத் தகுதியானவர்கள் இந்த அம்மாஞ்சிப் பார்ப் பனர்களா? தமிழர் பிரச்சினையில் கருத்துச் சொல்லு வதற்கு இந்தப் பார்ப்பனர்கள் யார் என்று திருப்பி நம்மால் கேட்கமுடியாதா?


மகா சந்நிதானங்களும்,  மடாதிபதிகளும் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னால் ஏற்க வேண்டியதுதானே? ஏற்பார்களா? அடுத்து ஒரு முரண்பாட்டைக் கவனிக்கவும். 


இவர்கள் எல்லாம் மடாதிபதிகளா? சந்நிதானங்களா? என்று கேள்வி கேட்டு விட்டு, அடுத்த வினாடியே மகா சன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எழுதுகிறார். முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையிலேயே முரண்பாடு வழிந்து ஓடுகிறது. இந்த லட்சணத்தில் துக்ளக் பார்ப்பனர் துடை தட்டுகிறார்.

தமிழ் ஆண்டுகள் என்று சொல்லுகிறார்களே - அதில் ஒரே ஓர் ஆண்டுக்காவது தமிழில் பெயரில்லையே - ஏன்? இதற்கு என்ன பதில்? அறுபது ஆண்டுகள் சமஸ்கிருதத் தில் இருக்கின்றன என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம் அதையே பிடித்துக் கொண்டு தொங்குகின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.


உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் மலேசியாவின் தலைநகரமான கோலாலம் பூரில் கூடி தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்துவிட்ட பிறகு, பூஜை வேளையில் பெரியவாள் சங்கராச்சாரியார் நீஷப்பாஷையான தமிழில் பேச மாட்டார் என்று சொல்லுகிற கூட்டம் தமிழ்ப் புத்தாண் டைப்பற்றியா பேசுவது?


யுகாந்திரமாக வந்ததை எல்லாம் மாற்றலாமா என்று அதி புத்திசாலிபோல துக்ளக் கேள்வி கேட்கிறதே - யுகாந்திரம் என்றால் எந்த ஆண்டு அதற்கான தொடக்கம் என்று சொல்ல முடியுமா? சரி, அவர்கள் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்கிற முறையில் ஒரு வினாவைக் எழுப்புகிறோம். அப்படி வந்த எதையும் மாற்றிக் கொள்ளவேயில்லையா?


நிர்வாணமாக அலைந்து திரிந்த மனிதன் பின் இலைகளால் உடையணிந்த மனிதன் படிப்படியாக மாறுதலுக்கு உட்படவில்லையா? மாறுதலின் அடையாளம் தானே புத்தி வளர்ச்சி என்பது - புத்தியைப் பயன்படுத் தினால் இதன் உண்மை விளங்கும், மாறுதலே கூடாது என்று ஒருவர் பேசுகிறார், எழுதுகிறார் என்றால் அவர் புத்தி இன்னும் வளரவேயில்லை; அந்த காட்டுவிலங்காண்டி காலத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார் என்று தானே பொருள்படும்?


தீண்டாமை க்ஷேமகரமானது என்று அவாளின் சீனியர் சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொல்லி இருக்கிறார்- அவர் சொன்னார் என்பதற்காக அதனை ஆதரித்து இதே துக்ளக்கில் எழுதட்டுமே பார்க்கலாம் - ஜாமினில் வெளியே வர முடியாத அளவுக்கு சிறைக்கும் போக வேண்டியிருக்குமே!


இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம், ராம ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்று நரேந்திர மோடியும், பிரவீன் தொகாடியாவும், அசோக் சிங்காலும் உளறிக் கொட்டுகிறார்களே - இவர்கள் யார்? குருக்களா சன்னிதானங்களா? மடாதிபதிகளா? இவற்றையெல்லாம் சொல்லுவதற்கு என்று திருப்பிக் கேட்க முடியாதா?


புராணத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்பதற்காக இரண்யாட்சதன் பூமியைப் பாயாக சுருட்டிக் கடலில் விழுந்தான் என்பதை நம்ப வேண்டும் என்றுகூடச் சொல்லுவார்களோ!


பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் அல்லர் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

தொண்ணூறையும் தாண்டிய திராவிட இயக்கத் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களை பார்ப்பனர் மனம் போனவாறு தரம் தாழ்ந்து எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இவர்களின் ஜெகத் குருக்களின் வண்டவாளங்களை தெருமுனைக் கூட்டங்கள் மூலம் நார்நாராய்க் கிழிக்கத் தயங்க மாட்டோம் - எச்சரிக்கை!

                       -----------------------"விடுதலை” தலையங்கம் 26-01-2015

காந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்?

காந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்?
நாதுராம் கோட்சேவை தூக்கிலிட்ட தினத்தை அவரது நினைவு நாளாக மகராஷ்டிரா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித்தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது:  நாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.நாம் இந்து தேசத்திற்காக பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப்பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று, இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடிவருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலை போற்றிப் பாதுகாத்து வருகிறோம் அதை அகண்ட பாரதமானபிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (கராச்சி-பாகிஸ்தான்) கரைப்போம், இது எங்கள் சத்திய பிரமாணம்! இதை தலைமுறைக்கு எடுத்துக் கூறவே இந்த நாளை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றைக் எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்ர நாதுராம்ஜீ கோட்சே என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட விருக்கிறோம். உண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.அது மட்டுமல்ல, காந்தியார் கொல்லப்பட்ட ஜனவரி 30 அன்று கோட்சேவுக்காக இருசக்கர வண்டி ஊர் வலங்களை நடத்த இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.


சீதாபூர் பகுதியில் கோட்சேவுக்கு கோயில் கட்டும் திட்டத்தைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந் தாலும், கோட்சேவுக்காக இரு சக்கர வண்டிகளில் ஊர்வலத்தின் வாயிலாக காந்தி எதற்காகக் கொல்லப்பட்டார் என்று பிரச்சாரம் செய்ய இந்து மகாசபை திட்டமிட்டுள்ளது.இந்து மகாசபாவின் தேசிய செயல் தலைவர் காம்லேஷ் திவாரி கூறும் போது, இரு சக்கர வண்டி களில் கோட்சேவை ஆதரித்து, காந்தி கொல்லப்பட்ட தற்கான காரணங்களை விளக்கிப் பிரச்சாரம் செய்யும்போது, பாப்தமாவ் கிராமத்தில் கோட்சே சிலை அமைப்பதற்கான பூமி பூஜை செய்ய உள்ளோம். பின்னர் அந்த இடத்தில் கோட்சே சிலையை அமைப்போம். அதே போன்று கோட்சேவுக்கான கோயில் அமைப்பதற்கு பூமி பூஜை செய்ய உள்ளோம். மேலும், பூமி பூஜை செய்வதற்கு முன்பாகவே சீதாபூரில் ஜனவரி 30 அன்று கோட்சே சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று திவாரி கூறினார்.மேலும் அவர் கூறும் போது, கர்ஷெட் பாக்கில் உள்ள இந்து சபா பவனில் இரு சக்கர வாகன  பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. சார்பாக், ஆலம் பாக், சவுக், அமினாபாத் மற்றும் பாரா ஆகிய பகுதிகளைக் கடந்து பப்தமாவ் கிராமத்தை அடையும். இருசக்கர வாகன பிரச்சாரத்தின் போது, கோட்சே ஏன் காந்தியைக் கொன்றார்? என்பதை விளக்கும் துண்டறிக்கைகள் வழங்கப்பட உள்ளன.


ஜன் ஜக்ரான் இரு சக்கர வாகன பிரச்சாரத்துக்கு இந்து மகாசபையின் நிர்வாகத்தின்மூலம் அனுமதி கோரப்பட்டுள்ளது. உரிய அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ். என்கிற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தில் கோட்சேவைப் புகழ்வதில் சட்ட விரோதம் எதுவுமில்லை. அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக எந்த சட்டத்தின்படி கோட்சேவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது? என்று திவாரி கேட்டுள்ளார்.அமைதியை சீர் குலைப்பதான குற்றச் சாட்டின் பேரில் திவாரி உள்ளிட்ட 26பேர் மீது சிதாபூர் மாவட்ட நிர்வாகம் 26.12.2014 அன்று வழக்கு பதிவு செய் துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காந்தியாரை 1948 ஜனவரி 30ஆம் தேதி இந்துத்துவா வெறி படுகொலை செய்தது போதாது என்று மீண்டும் மீண்டும் அவரைக் கொலை செய்ய வெறி கொண்டு கிளம்பி விட்டது காவிக் கூட்டம். இதன் போக்கு எதில் கொண்டு போய் முடியுமோ என்ற திகில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்கும்  வேலையில் இறங்கி இருப்பது - அதாவது வேலியே பயிரை மேய்ந்து தீர்ப்பது என்ற முடிவோடு முண்டாதட்டி கிளம்பி இருப்பது - நாடு ரண களப்படுவதற்கான முயற்சியேயாகும்.


சங்பரிவார்கள் இப்படி சண்டமாருதம் செய்வதை ஆட்சியில் உள்ள பிரதமர் கண்டு கொள்வதேயில்லை. இந்த மவுனம் இந்த வன்முறைக்கு மறைமுகமாகப் பச்சைக் கொடி காட்டுவதாகத் தான் பொருள்படும்.

காந்தியார் பிறந்த நாளை தூய்மைப் படுத்தும் நாள் என்று அறிவித்து, காந்தியாரின் நினைவை மக்கள் மத்தியிலிருந்து முற்றிலும் அப்புறப்படுத்துவதே இதன் பின்னணியில் உள்ள தந்திரமாகும்.

பொதுவாக பார்ப்பனீயம் என்பதே மறைந்திருந்து தாக்கும் யுக்தியுடையதாகும்; வாலியை மரத்தின் மறைவிலிருந்து தாக்கவில்லையா கோழை இராமன்?


ஆரியர்களுக்கு ஆபத்துவரும் பொழுதெல்லாம் இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று ஆச்சாரி யார்கள் சொல்லுவதன் பொருள் இதுதான்.மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்து ஏழரை மாதங்கள் ஆவதற்குள்ளாகவே கா(லி)விவெறித்தனம் கண் மூடித்தனமாக குதியாட்டம் போட ஆரம்பித்து விட்டது; இன்னும் சொச்ச காலம் எப்படி போகுமோ என்ற பீதியில் மக்கள்  உறைந்து இருக்கிறார்கள்.இதே மக்கள் நினைத்தால் இந்த மத்தியக் காவி ஆட்சிக்குத் தக்க பாடம் கற்பிக்கலாம்; நடக்கவிருக்கும் ஒவவொரு தேர்தலிலும் வாக்குச் சீட்டு மூலம் பாடம் கற்பிக்க வேண்டும்; இன்னொரு பக்கத்தில் மிக முக்கியமாக இந்துத்துவாவின் கேடு கெட்ட கோட் பாட்டை உள்வாங்கிக் கொள்வது மிக மிக முக்கியமாகும்.தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு மூலி கையே  இதற்கான கை கண்ட மாமருந்து என்பதையும் மறக்க வேண்டாம்!


                                                        -------------------------”விடுதலை” தலையங்கம் 9-1-2015

Read more: http://viduthalai.in/page-2/94197.html#ixzz3OKHNFQ85

25.1.15

நல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது-பெரியார்

நல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது

- தந்தை பெரியார்

அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர் டி.சண்முகம் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இன்று சென்னைக்கு ஆஸ்பத்திரியில் சேருவதற்காக வந்தேன். இங்கு என்னால் அதிகநேரம் நிற்கவோ பேசவோ முடியாது. தலைவர் சில வார்த்தைகள் கூறுமாறு சொன்னார்.


 நான் சொல்லுவது உங்களுக்கு இனிப்பாயிருக்காது. ஆனால், என் இயற்கைக் குணம் உங்களுக்குத் தெரியும். தோழர்கள் டி.சண்முகம், கயப்பாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கம் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். அவர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பாராட்டுதலை எனக்கு ஏற்பட்டதைப் போலவே கருதுகிறேன். என் விஷயத்தில் அவர்களுக்கு மிக மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அவர்கள் விஷயத்தில் எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. அவர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுவது என்னையே பாராட்டிக் கொள்வதாகு மென்று கருதுகிறேன்.


அவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் இயற்கை யில் வீரர்கள் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். தாழ்த் தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக் கும் நண்பர்கள். பொது வாழ்வில் அடியோடு சுயநலத்தைச் சம்பந்தப்படுத் தாதவர்கள். அவர்களைப் பற்றிய வார்த்தைகளை இவ்வளவோடு விட்டு விட்டு, என்னுடைய கொள்கைகளையும், அனுபவத்தையும் ஒட்டிச் சில யோசனை களை அவர் களுக்குச் சொல்லுகிறேன்.


அதன்படி அவர்கள் சிந்தித்துச் சரி யென்று பட்டதைச் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.


தோழர்களே! நானும் எனது நண்பர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் ஏதாவது ஒரு வகையில் ஒத்துப்போய் இந்த மாகாண அரசியலைக் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டிருந்தால், உண்மை யில் இந்த ஜில்லா போர்டு, முனிசிபா லிட்டி முதலியவைகளைக் கலைத்தே இருப் போம். அல்லது பொப்பிலி ஆட்சி இதுவரையில் இருந்திருக்குமானால் - இந்த ஜில்லா போர்டுகளின் அதிகாரங் களை வெகுவாகக் குறைக்கப்படவே, அதிகாரங்களைக் குறைக்கவே செய் திருப்பேன்.


தாலுகா போர்டைக் கலைக்காமல் இருந்தால் நன்றாயிருக்குமென்று தலை வர் குமாரராஜா அவர்கள் சொன் னார்கள். தாலுகா போர்டை எடுப்ப தற்குத் தூண்டுதல் செய்து கொண்டி ருந்தவன் நான்தான். இது டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கும் தோழர் ராஜகோ பாலாச்சாரி அவர்களுக்கும் தெரியும்.


கட்சி காரியத்திற்காக இந்த ஸ்தா பனங்கள் வேண்டுமென்பது சிலருடைய அபிப்பிராயம். ஜில்லா போர்டைக் கலைத்து விட வேண்டுமென்று சொன்ன ஆச்சாரியார் அவர்களும் அரசியலைக் கைப்பற்றின பிறகு, அவற்றைக் கலைக் காமற் போனதற்குக் காரணம், அவர் கட்சிக்கு அவை பயன்படவேண்டுமென் னும் எண்ணத்தினாலேயே யாகும்.


கட்சிகள் இந்த நாட்டில் பெரும் பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவை களாக இருப்பதால், பொது மக்கள் நலத்தை விட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது. இந்த மாதிரியே 2 கட்சிகள் இருக்கிற வரையிலும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கும்.


எதிரியிடத்திலிருந்து தப்புவதே நம் நோக்கமாயிருப்பதால், மக்கள் நலம் சரிவரக் கவனிக்கப்பட முடிவதில்லை. இது இயற்கையே. ஆனால், சீக்கிரத்தில் ஒரு காலம் வரும்.


இப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்கவேண்டியவர்கள் முக்கியமாக மனத்தில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, பொது ஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த மாதிரியான ஸ்தாபனங் களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்க கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.


நான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு, தேவஸ் தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலிய வைகளுக்குத் தலைவனாக இருந்திருக் கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். வேறு சில ஸ்தாபனங் களுக்கும் சர்வாதிகாரியாகவும், தலைவனாகவும் இருக்கிறேன். இவை  ஒன்றி லாவது பொது ஜனங்களிடமோ, நம்மை அனுசரித்துப் பின்பற்றுகிற வர்களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.


பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாத வர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு எது? தங்கள் ஜாதி - இனம் என்ன? என்பவற்றையே உணராத வர்கள். மீதி யுள்ளவர்களில் 14 பேர்கள் சுயநலக் காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக் கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக் கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக் கும் அவ்வளவு புத்திசாலிகள். இந்தமாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மை யான பொதுத் தொண்டு ஆகுமா? அந்த நல்ல பேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?


இவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங்களும், அயோக் கியத் தனங்களும், ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால் தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற் சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்ற வனாவான் என்று சொல்லி வருகிறேன்.


மற்றப்படி, நான் என்ன செய்ய வேண் டுமென்று சொல்லு கிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடு நிலையிலிருந்து ஆலோ சித்து முடிவு கட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதா யிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.


பொதுஜனங்கள் தயவால் மறுபடியும் நாம் இந்த ஸ்தானத்துக்கு வரவேண் டுமே என்று கருதவே கூடாது.


தோழர். டி. சண்முகம் அவர்கள் ஜில்லா போர்டில் எவ்வளவு ரூபாய் வேண்டுமா னாலும் கொள்ளையடித்துக் கொண்டு, இரண்டொரு கோயில் களைக் கட்டிப் பார்ப்பனர்களுக்குச் சமாராதனை முதலிய வைகளை அடிக்கடி கொடுத்து பல சோம்பேறிகளுக்கும் பரதேசிகளுக்கும் பப்ளிக் ரோட்டில் பொங்கிப்போட்டு சில பத்திரிகைக் காரர்களுக்கு 5,10 என்று பிச்சைக்காசு எறிந்து விடுவார்களானால், தோழர் சண்முகம் பிள்ளை அவர்கள் பெரிய பிரபு ஆகவும், மகா கெட்டிக்கார நிர்வாகி ஆகவும், மகா நாணயஸ்தராகவும், சாகும்வரையில் அவரே அந்த ஸ்தானத் தில் இருக்க வேண்டுமென்று பொது மக்களால் பிரார்த்திக்கப்படுபவராகவும் ஆகிவிடுவார். இது வரையிலும் சற்றேறக் குறைய இந்த முறைதான் - இப்படிப்பட்ட ஸ்தாபனங்களுக்கு இருந்து வந்திருக்கிறது.


பாமர மக்களையும் சுய நலக் காரரையும் திருப்திப்படுத்துவதுதான் பொது நலத் தொண்டு என்று எண்ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்றுபட்டதைத் தைரியமாகச் செய்துகொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற்றப் படாவிட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப் படத்தக்கவையாக இருக்கும்.


முன்னோர்கள் செய்துவைத்ததை மாற்றக்கூடாதே என்று கவலைப்படு கிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளே யாவோம். நம்மை விட நமக்குப் பின்னால் வருகிற வர்கள் இன்னும் அனுபவசாலிகளே யாவார்கள். 5 வயதுப் பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சவுகரி யங்களும் சாதனங்களும் இருக்கின் றனவோ, அது போலவே, முன்காலத் தைவிட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சவுகரி யங்களும் சாதனங்களும் இருக்கின்றன. அது போலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத் திற்கும், நாம் செய்ய வேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரிய வேண்டுமானால், அவர்கள் யார்? நாம் யார்? அவர்கள் லட்சியம் என்ன? நம் லட்சியம் என்ன? என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரி யத்தைச் செய்ய வேண்டும்.


உதாரணமாக, காந்தி ஆசிரமத்துக்கு காந்தியாருக்குப் பிறகு நான் தலை வனாகப் போனால், அந்தக் குளிர் நாட்டில் காலையில் 5 மணிக்கு எழுந்து அங்குள்ள குழந்தைகளை, வாலிபர்களைத் தண்ணீரில் முழுகவைத்து இராமபஜனை செய்யச் சொல்ல முடியமா? செய்வேனா? அது போலவே, இன்னும் அனேக மகான்கள் என்பவர் களுடைய காரியங்களெல்லாம் இந்தக் காலத்து மகான்கள் - பெரியார்கள் என்பவர்களுக்குப் பொருத்தமாயிருக்க முடியுமா?


ஆகவே, காலத்தையும், எதிர்காலத் தையும்,மக்கள் நிலைமையையும் கவ னிக்க வேண்டும். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அதுதான் பொதுநலத் தொண்டு செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும். அப்படிப்பட்ட வர்கள் நம் இடையில் தோழர்கள் டி. சண்முகம், சவுந்திரபாண் டியன் முதலிய வெகுசிலர் தாம் நம் கூட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தைக் கருதாத வர்கள். அதனாலேயே இப்படிப்பட்டவர் களிடத்தில் எனக்கு அதிக மதிப்புண்டு.


இப்பொழுது நாட்டில் நம் எதிரிகள் ஒரு கிளர்ச்சி துவக்கியிருக்கின்றார்கள். அதாவது சர்க்காரார் மதுபானத்தைப் புகுத்துகிறார்கள் என்றும் அதை நான் ஆதரிக்கின்றேன் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் பயப்படவில்லை. சர்க்கார் உத்தரவை நான் வரவேற்கிறேன். இந்த உத்தரவு போடவேண்டுமென்று 3,4 வருட காலமாகவே, வைஸ்ராயிடத்திலும் நம் கவர்னரிடத்திலும் நேரில் பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆதலால், நான் அந்தக் குற்றச்சாட்டு என்பதிலிருந்து மறைந்து கொள்ள ஆசைப்படவில்லை. பேசுகிறவர்களுக்கு மதுவைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்குமென்றோ, அல்லது தெரிந்தவர்கள் நாணயமாய் பேசுகின்றார்களென்றோ நான் கருத வில்லை. இந்த உத்தரவை நம் எதிரிகள் சர்க்காரை வையவும், என்னைக் குறைகூறவும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சர்க்காருக்குத் தெரியும். என் குறைபாடுகளைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை.


உண்மையான மதுவிலக்கு எப்படி என்பது எனக்குத் தெரியும். நான் மதுவினால் ஏற்படும் கெடுதியை நீக்க வேண்டுமென்று சொல்பவனே தவிர, அடியோடு மதுவே கூடாது என்கிற வர்ணாசிரமக்காரனல்ல. சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக் கூடாது என்பதே வருணாசிரமம். பிறவி யைக் கவனிக் காமல் சுத்தமாயிருப்ப வனைத் தொட லாமென்பதும், அசுத்தமா யிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத் தக்கவனாக ஆக்கிக் கொள்ளலா மென்பதும் எனது கொள்கை.


இந்த மேடையை அரசியல் மேடை யாக ஆக்கிக் கொள்ள எனக்கு இஷ்ட மில்லை. இதற்காக வேறு கூட்டம் ஏற் பாடு செய்து. காயலாவோடே ஆஸ்பத் திரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வந்து ஒரு நாளைக்குப் பேசலாமென்றி ருக்கிறேன். பின் ஏன் இங்கு இதைச் சொன்னேன் என்றால், நான் பாமரப் பொதுஜன அபிப்பிராயத்துக்கோ, சுய நலக் கூலிப் பத்திரிகைகளின் கூப் பாடுகளுக்கோ செவிசாய்ப்பதில்லை எனத் தெரியப்படுத்திக் கொள்ள வேயாகும்.


-----------------------------------------04.12.1943  அன்று சென்னை, திரு வொற்றியூரில் மாலை திருவொற் றியூர் பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் காம்ப வுண்டில், செங்கற்பட்டு ஜில்லா போர்டு தலைவர் தோழர் டி. சண்முகம் அவர்களுக்கும், உபதலைவர் கயப் பாக்கம் ஜமீன்தார் தோழர் கே. முத்துலிங்கம் அவர்களுக்கும் நடத்தப் பட்ட தேநீர் விருந்தின் போது தமிழரின் தனிப்பெருந் தலைவர் பெரியார். ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு