Search This Blog

5.3.20

திராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை?


      (திராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என்று பலரால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. வாழ்த்துக் கூறாததற்கு என்ன அடிப்படைக் காரணம் என்பதை விளக்கும் அறிக்கை இது)
திராவிட முன்னேற்றக் கழகம், அதே உணர்வுடன் உள்ள மற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற திராவிட கட்சிகள், மற்ற கிறித்துவ, இஸ்லாமிய மத விழாக்களுக்கு வாழ்த்துகள் கூறும்போது, ஏன் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறக் கூடாது? அவர்களிடம் வாக்கு வாங்குகிறார்கள் அல்லவா? இந்து மத விழாக்களை மட்டும் ஏன் ஒதுக்குகிறார்கள்? இது நியாயமா? என்று ஒரு கேள்வி வைக்கப்படுகிறது.
நமது விரிவான, விளக்கமான, கொள்கைப்பூர்வ மான பதிலை அத்தகைய உணர்வாளர்கள் எந்த பொறுப்பு நிலையில் இருந்தாலும், அவர்கள் சற்று ஆழமாக ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறோம்.
ஒரு பழமொழி தெலுங்கில் உள்ளதை வைத்துக் கேட்பார்கள்.
குதிரைக்கு ‘குர்ரம்' என்றால், ஆனைக்கு ‘அர்ரம்' என்றா கூறுவது? அதுபோன்ற கேள்வி மேற்கண்ட கேள்வி.
திராவிடர் இயக்கம் என்பது - பார்ப்பனரல்லாதார் கல்வி, உத்தியோக உரிமையை, பார்ப்பனரின் ஏக போகத்திலிருந்து மீட்டெடுப்பதற்காகவே, சர் பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியவர்களின் ‘‘பார்ப் பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம்'' (Non Brahmin Manifesto) மூலம் 1916 இல் உருவான ஓர் சமூகநீதி இயக்கம்.
வருண தருமத்தின் அடிப்படையில்
அடிமை ஜாதியாக ஆக்கப்பட்டனர்
100-க்கு 3 பேர்களான பார்ப்பனர்களே 100-க்கு 100 இடங்களை கல்வி, உத்தியோகத்தில் ஏகபோகம் கொண் டதற்கு மூலாதாரம் அவர்களது பார்ப்பனீய, சனாதன, வேத, புராண, இதிகாச, மனுதர்ம, சாஸ்திரங்கள் மூலமே! ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புதான் காரணமாகும். ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'', ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'', ‘‘சமத்துவம், சகோதரத்துவம்'' என்பது வீழ்ச்சியுற்றது -  ஆரியத்தின் வர்ணாசிரமப் படைப்பின்மூலம் படிக்கட்டு ஜாதி - வர்ணதர்மத்தின் வாயிலாக அடிமை ஜாதிகளாக ஆக்கப்பட்டனர். (அம்பேத்கர், பழங்குடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையெல்லாம் இணைத்து ‘அடிமை ஜாதிகள் - வகுப்புகள்' என்று ஒரு பெயர் (Servile Class) என்று கூறினார்.
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நால்வருண முறையும், அதற்கும் கீழே, தாழ்த்தப்பட்டவர்களாக, பஞ்சமர்கள், என 5 ஆம் பிரிவையும், அதற்கும் கீழே அனைத்து ஜாதி பெண் மக்களும் பிரித்து வைக்கப்பட்டனர்.
கல்வி உரிமை - பிரம்மா முகத்தில் பிறந்த (மனுதர்மப்படி) பிராமணனுக்கே உரியது என்னும் ஒவ்வொரு வருணத் திற்கும் ஒரு தர்மம். சத்திரியனுக்கு ஆட்சி, வைசியனுக்கு வியாபாரம், விவசாயம்; சூத்திரனுக்கு மேலே கண்ட மூன்று ஜாதியினருக்கும் பொறாமையின்றி பணிவிடை செய்தல் (அடிமைத் தொழில்). இது மனிதர்கள் செய்தது அல்ல. கடவுளே செய்த ஏற்பாடு என்பது மனுநீதி - இந்து மதம்.
ரிக் வேத புருஷ சுத்தம் முதல் மனுவரை கூறப்பட்டு, அதன்மூலம் பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி, உத்தி யோகம் சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது.
சூத்திரர்கள், சுதந்திரத்தையோ, சமத்துவத்தையோ, சகோதரத்துவத்தையோ, உரிமைகளையோ எதிர்பார்க்காது அடிமைக் குற்றேவல் செய்யவேண்டியவர்கள் மட்டுமே!
கீதை என்ன கூறுகிறது?
‘‘சதுர்வணம் மயாசிருஷ்டம்'' - நான்கு வகை வருணங் களை ‘‘நானே உண்டாக்கினேன்'' என்று பகவத் கீதையில் விஷ்ணு அவதாரமான கிருஷ்ணன் கூறியதாக எழுதப் பட்டுள்ளது.
‘‘சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்'' (சுலோகம்  32; அத்தியாயம் 9) - வருணங் களையும், அதன் தர்மங்களையும் உண்டாக்கிய நானே நினைத்தாலும், என்னால்கூட  அவற்றை மாற்றவே முடி யாது  - இப்படி எழுதப்பட்டு இருக்கும் கீதையை அரசே முன்னின்று பரப்ப முயற்சிக்கிறது - திராவிடர்களாய்ப் பிறந்தவர்கள்கூட, இதுபோன்ற கீதைபற்றி புரிந்தோ, புரியாமலோ தலையாட்டினால், தமக்குப் பெருமை என்று எண்ணுவது நடைமுறையில் இன்றளவும் இருக்கிறது.
‘ஏன் வாழ்த்துச் சொல்லக்கூடாது - இந்து பண்டிகை களுக்கு?' என்று கேட்கும் நண்பர்களுக்கும் தெளிவு படுத்தவேண்டியது நமது முக்கிய கடமை என்பதால், இதை மூலாதாரத்திலிருந்தே விளக்கி, தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது! அதனால் விளக்கம் நீள்கிறது.
மதம் மாறியது ஏன்?
மற்ற மதங்கள் வெளிநாட்டிலிருந்த மதங்கள், இந்து மதத்திலிருந்து ஜாதி, தீண்டாமை, நெருங்காமை, தொடாமை, பாராமை என்ற Untouchability, Unseeability, Unapproachability  என்ற மனித உரிமைப் பறிப்பின் கொடுமையிலிருந்து தப்பிக்கவே, அந்த மதங்களுக்கு பல தலைமுறைகளுக்கு மாறியவர்கள் இங்குள்ளவர்கள்.
இந்து மதம் என்ற பெயர் 200 ஆண்டுகளுக்கு முன்பு அந்நியர் வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் என்பதை காஞ்சி சங்கராச்சாரியாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி (‘‘தெய்வத்தின் குரல்'' முதல் பகுதி, பக்கம் 264) உள்பட, அக்னிகோத்திரம்  இராமானுஜ தாத்தாச்சாரியார், வரலாற்று ஆசிரியர்கள், உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்வரை கூறும் நிலையில், அதன் வர்ணதர்மம் -  திராவிடக் கலாச்சாரமான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதற்கு எதிரானதாகும்.
இந்து மதம் என்பது, யாதும் ஊரே, யாவரும் கேளிர் - அனைவரும் உறவினர் என்ற திராவிடத்தின் மனித சமத்துவ மாண்புக்கும் மாறானது; பிராமண - சூத்திர - பஞ்சம சண்டாளர் என்று பிரித்து, மனித சமத்துவத்தை ஏற்காததாகும்! பிறவி இழிவைச் சுமத்தியதோடு இன்றளவும் பாதுகாத்து வருவதாகும்.
இழிவின் நீட்சியே இந்துப் பண்டிகைகள்
திராவிட மொழிகளுக்கே தாயாகிய, மூத்த மொழி செம்மொழியான தமிழையே ‘நீஷ பாஷை' என்றும், ஆரிய மொழியான வடமொழியான - சமஸ்கிருதத்தை ‘தேவ பாஷை' என்றும் கூறும் நிலை உள்ளதா இல்லையா? இன்றும் நமது பக்தர்கள் வணங்கும் கோவிலிலும், திருமணம் போன்ற நம் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பார்ப்பன ‘‘மேல்ஜாதி யினரை'' அழைத்து நடத்தி, நமது அடிமைத்தனத்தை - திராவிடர்களின் அடிமை முறிச் சீட்டை - அருவருப்பை - பார்ப்பனர்களின் வேசி மக்கள் எனும் இழிநிலையை அவர்கள் மனுதர்ம நூலில் அவர்கள் எழுதியுள்ளதை அவ்வப்போது புதுப்பித்து வந்துகொண்டே உள்ளனர்.
அதன் நீட்சிதான் இந்துப் பண்டிகைகள்.
தீபாவளியானாலும்,
சிறீராம நவமியானாலும்,
கோகுலாஷ்டமியானாலும் (கிருஷ்ண ஜெயந்தி)
விநாயகர் சதுர்த்தியானாலும்,
தமிழ் வருஷப் பிறப்பு என்ற ஆபாச அருவருப்புக் கதைகளைக் கொண்டதானாலும்,
இவையெல்லாம் மூடநம்பிக்கைகள், அறிவுக்கு ஒவ் வாத கதைகளாகப் புகுத்தப்பட்டன என்பது ஒருபுறம். மற்றொருபுறம் இது அடிப்படையில் இன இழிவைச் சுமத்துவதாகும். ‘அசுரர்களை' அழித்து, தேவர்கள் வெற்றி பெற்றதே விழாக்களின் மய்யக் கருத்தாகும். இதன் அவதார ரகசியம் - ஆரியர்கள் - திராவிடர்களைக் கொன்றதை, வென்றதை அடிப்படையாகக் கொண்டதே! ஒரு பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவே.
சூத்திரப்பட்டம் ஒழிய - தந்தை பெரியாரின் கட்டளைகள்
அதற்கும் மோசமாக, சூத்திரப் பட்டத்தை நம் மக்கள்மீது திணிப்பதாகவே ஒவ்வொரு இந்து பண்டிகைகள் மத விழாக்களின் கதைகளும், தாத்பரியங்களும், தத்துவங்களும் அமைந்துள்ளன.
எனவே, எதையும் ஆழ்ந்த அறிவுடன் ஆராய்ந்து, நம் மக்களின் சூத்திர அவமான இழிபட்டத்தை சட்டம், சம் பிரதாயம் நடைமுறையில் ஒழித்து, மானத்தையும், அறி வையும் மனிதர்க்குப் போதித்த தந்தை பெரியார் ரத்தினச் சுருக்கமாக ஒருமுறை அழகாக சில அறிவுரை வாசங்களைக் கூறினார்.
‘‘தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய,
கோவிலுக்குப் போகாதீர்கள்!
நெற்றிக் குறிகளை இடாதீர்கள்!
மதப் பண்டிகைகளைக் கொண்டாடதீர்!
பார்ப்பானை ‘பிராமணன்' என அழையாதீர்!'' என்று கூறினார்.
மற்ற வெளி மதங்கள் நம்மை ‘‘சூத்திர - பஞ்சமர்களாக'' ஆக்குவதில்லை - படிக்காதே என்று சொல்லுவதில்லை. கணவன் இறந்தால், விதவையைத் தீயில் சுட்டுப் பொசுக்கப்படவேண்டும்; அல்லது விதவையாக எல்லா உரிமைகளையும் இழந்து ஜடமாக இருக்கவேண்டும் என்ற மனித அநாகரிகத் தத்துவங்கள் மற்ற மதங்களில் இல்லை.
இதனை எதிர்க்கத்தான் தந்தை பெரியார் தனியே காங்கிரசுக்குள்ளே 1920 முதல் 1925 வரை கல்வி, உத்தியோக உரிமை, பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு - வகுப்புரிமையாகக் கிட்டவேண்டும் என்று போராடி, அதில் வெற்றி கிட்டாத நிலையில், வெளியேறினார். சமூகநீதிக்குப் போராடுவதுதான் தன் ஒரே பணி என்று உறுதியாகத் தெளிந்தறிந்து நம்மை அடக்கியாளும், இழிவுபடுத்தும் மூல வேர் - மதத்தில், சாஸ்திரத்தில் பண்டிகைகளில் உள்ளன என்று கண்டறிந்து - சுயமரியாதை இயக்கத்தைத் தொடங் கினார்.
திராவிடர் கழகம் -
கலாச்சார ரீதியாக வரலாற்றுப் பெட்டகம்
பிறகு அவர் நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட அரசியல் கட்சிக்கும், 1938 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூத்திரப் பட்டத்தை தொடக்க முதல் அந்த அமைப்பும் எதிர்த்து வந்துள்ளது. அறிஞர் அண்ணா போன்ற தளபதிகள் முன்னிலையில், 1944 இல் சேலத்தில் நீதிக்கட்சி + சுயமரியாதை இயக்கம் இணைந்து  - பார்ப்பனரல்லாதார் என்ற எதிர்மறை அடையாளப் பெயர் தேவையில்லை - கலாச்சார ரீதியாக வரலாற்றுப் பெயரான ‘திராவிடர்' என்று மாற்றத்தையும் செய்து ‘‘திராவிடர் கழகம்'' என்ற பெயர் சூட்டி, அறிஞர் அண்ணா பெயரில் அமைந்த தீர்மானமாக உருவெடுத்தது!
அதே கொள்கையுடன் அரசியலுக்குச் சென்றதால்தான், ஆட்சி மூலம் கொள்கைகளை செயல்படுத்தி வெற்றி காண முடியும் என்று கருதி, அண்ணா தலைமையில் தி.மு.க. உரு வானது 1949 இல். அப்போது உடனே அரசியலில் - தேர்த லில் அண்ணா குதித்துவிடவில்லை என்பதை இன்றைய இளைய தலைமுறை - வரலாறு படிப்பதன்மூலம் அறிய வேண்டும் - நிகழ்வுகளை அசை போடவேண்டும்.
தி.மு.க.வின் சட்ட திட்டம் என்ன சொல்லுகிறது?
1949 இலும் சரி, அதன் பிறகு 2009 இல் திருத்தப்பட்ட ‘‘தி.மு.க. கொள்கை -குறிக்கோளும் சட்டத் திட்டங்களும்‘‘ என்ற தலைப்பில் தி.மு.க. தலைமைக் கழக வெளியீட்டின்படி,
விதி 2 -  குறிக்கோள்:
அறிஞர் அண்ணா வகுத்தகுறிக்கோளுக்கு ஏற்ப, தமி ழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு, நெருங்கிய திராவிட கலாச்சார கூட்டுறவு நிலவப் பாடு படுவது; அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது என்பது தி.மு. கழகத்தின் குறிக்கோள் ஆகும்.
விதி 3 - கோட்பாடு:
அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்; பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச் சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத்  துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும், அவைகளுக்கான உரிய இடத் தைப் பெற்றுத் தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் - மத்தியில் கூட்டாட்சியும்  (Autonomy for States & Federation at Center) உருவாகிடவும் தொண்டாற்றுவது என்று கூறுகிறது தி.மு.க.வின் சட்டத் திட்டம்.
12 ஆண்டுகளுக்குமுன் (27.12.2008)  கலைஞர் தலை மையில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானிக்கப் பட்டவைதான் இவை. இன்றும் அது தொடர்கிறது - தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில்.
இந்த நிலையில், அடிக்கட்டுமானத்திலிருந்து மாறிட எண்ணவேண்டிய அவசியமில்லை.
தமிழர் விழாவை சங்கராந்தி ஆக்கியது ஆரியமே!
அறிஞர் அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை' நூலில், ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு விழாக்களில் மட்டு மல்ல; தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வருணத்தைப் புகுத்தியதை கண்டித்தே வந்திருக்கிறார்கள்!
அதிலும் நமக்குள்ள ஒரே  பொங்கல் திருநாள் - திராவிடர் திருநாள் - அறுவடைத் திருநாள் - அறிவுக்கு, உழைப்பிற்கு ஏற்ற திருவிழா!
இதையும் ஆரியம் ‘சங்கராந்தி' என்று அபகரித்துள்ளது.
‘‘தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு - சித்திரை அல்ல, நித்திரையில் உள்ள தமிழா'' என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.
தீபாவளியை எதிர்த்து நரகாசுரன் மலர் போட்ட இயக்கம். அசுரன் என்றால், குடிக்காதவன் என்ற பெரு மையைப் பெற்றவர்கள். சுராபானத்தைக் குடிப்பவர்கள் சுரர்கள் - குடிக்காதவர்கள் அசுரர்கள் - திருஷ்டம் - அதிருஷ்டம் என்பது போன்றே!
திராவிட அரசியல் கட்சி, பதவிக்குப்  போவது, வெறும் ஆட்சியைக் கடைப்பிடித்து பத்தோடு பதினொன்றாக அரசியல் கட்சியாக இருப்பதற்கல்ல - நாடாளுமன்றத்தில் ‘‘பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் - திராவிடம் முழக்கம்'' எப்படி ஒரு அதிர்வலைகளை வடக்கே  உரு வாக்கியதோ, அதனை உறுதிப்படுத்தும் தன்மையில், திராவிட இனத்தின்மீதான பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தி, மீட்டுருவாக்கத்தைச் செய்வதில் வெற்றி காணவேண்டும் - இது மிகவும் அவசியமாகும்.
ஜாதி ஒழிப்பு -  தீண்டாமை ஒழிப்பு - பெண்ணடிமை ஒழிப்பு - மூடநம்பிக்கை ஒழிப்பு - சமூகநீதி - அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் நமது கோட்பாடாகும்.
மனிதர்களுக்கு மானத்தையும், அறிவையும், உரிமை களையும் பெற்றுத்தரவேண்டும்.
அறிஞர் அண்ணா அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்த
சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை இவற்றின் தனித்தன்மை யான ஆழ்ந்த பொருள் என்ன? புரிந்துகொள்வீர்!
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சாதனைகளின் பின்னணி என்ன?
கலைஞரின்,
தமிழ் செம்மொழி,
தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம்,
பெண்களுக்குச் சொத்துரிமை,
அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் உரிமைச் சட்டம்
இவையே, ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து திராவிட உணர்வினை மீட்டுருவாக்கும் மறுமலர்ச்சிப் பணிகள் அல்லவா!
எனவேதான், அய்யா தத்துவங்களை, அண்ணாவும், கலைஞரும் நடைமுறைப்படுத்தினார்கள்.
எது நம்முடையது - எது பிறருடையது என்று வெளிப்படுத்திட - காட்டிட நமது தலைவர்கள் நிறுவியதை - உணரத் தவறினால்,  மாற்ற முனைந்தால், பாதை மாறும் பரிதாப நிலையே!
திராவிட இயக்கம் வெறும் அரசியல் கட்சியல்ல. சமு தாய மாற்றத்திற்கான அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்ட வரலாற்றுக் காரணத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதாகும்.
‘‘இந்து என்றால் இழிவை ஏற்பதே’’
அண்ணாவின் கருத்து
இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவது நமது இன இழிவை - நாம் நாலாஞ் ஜாதிக்காரர்கள் - சூத்திரர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். வெறும் மூடநம்பிக்கைக் காரணங்கள் மட்டுமல்ல என்பதைத் தெளிவாக, உறுதியாக, திட்டவட்டமாக உணர்தல் அவசியம்.
இதுபற்றி தி.மு.க. நிறுவனர் அறிஞர் அண்ணா கூறுவது என்ன?
‘‘நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மி டையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோகயாகப் புரட்டுகள் - மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை ‘இந்து’ என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக் கொள்ள எப்படித்தான் மனம் இடம்தரும்? எப்படித் தான் துணியும்? “இந்து மதம்“ என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதிதுலங்கும் விஷயங்களை விட்டு, மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாள வழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழிபிறந்த பின்னர், அடிமை முறிச் சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் ‘இந்து மார்க்கத்தில்’, போய்ச்சேர இசை வாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச்சேரார்! இழிவைத் தேடார்!!''
(அண்ணாவின் ‘‘ஆரிய மாயை'' நூலிலிருந்து)
- இதற்கு மேலும் தெளிவான விளக்கமும் தேவையா?
ஏன் அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது தன்னை ‘இந்து' என்று பதிவு செய்யாமல், தன் மதம் ‘‘திராவிட மதம்'' என்றுதான் கூறி பதிலளித்தார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் எந்தக் காலத்திலும் தன்னை ‘மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று கூறிக் கொண்டதுடன், தமிழ்ப் புத்தாண்டு தைமுதல் நாள் என்று தனி ஒரு சட்டமே இயற்றினார் என்பதையெல்லாம் மறந்துவிட முடியுமா?
இந்துப் பண்டிகை வாழ்த்து எனும் பூச்சாண்டி
‘‘இந்துப் பண்டிகை வாழ்த்து, இந்து மதப் பூச்சாண்டி'' -  இவைகளுக்கு உண்மையான திராவிட அரசியல் கட்சிகள் பயப்படவேண்டியதே இல்லை.
ஆட்சிக்குச் செல்வோரின் நாணயம், கடும் உழைப்பு, வாக்குறுதி நிறைவேற்றம், நேர்மை - ஊழலுக்கு அப் பாற்பட்டு மக்கள் நலம் சார்ந்த ஆட்சித் திட்டங்கள் இவைகளுக்காகவே பெரிதும் வாக்களிக்கிறார்கள்.
அதைத் தாண்டி, பெரியார் மண்ணாகிய இத்தமிழ் நாட்டில் இன உணர்வு, மொழி உணர்வு, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூகநீதி இவைகளுக்கு இன எதிரிகளால் ஆபத்து என்பதை உணரும்போது, உண்மையான திராவிட இயக்கமே அதனைப் பெற்றுத் தரும்; காப்பாற்றும் என்ற உறுதியுடன் நின்றால், திராவிட இயக்கம் பக்கமேதான் மக்கள் நிற்பர். எத்தனை மாயக் குதிரைகள், மகுடம் தரிக்க ஆசைப்பட்டாலும், கடைசியில் அவை பொய்க்கால் குதிரைகள் என்று புரிந்துகொள்வது என்பது உறுதி.
அண்மையில், டி.ஜே.எஸ்.ஜார்ஜ் என்ற மூத்த பத்திரி கையாளர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ நாளேட்டில், கட்டுரை ஒன்றை  எழுதியுள்ளார்.
கடவுளைக் காட்டி சிலர் வாக்கு வங்கிகளைப் பெறலாம் என்ற நிலை, பொதுவாக வெற்றி பெறாது; தமிழ்நாட்டில் அது எடுபடாது என்பதைத் தெளிவுபடுத்திய கட்டுரை அது.
அப்படி ஒரு மாயையை ஆர்.எஸ்.எஸ்., இந்து வட் டாரங்கள் உருவாக்கி பயமுறுத்தும் ‘பாச்சா' முன்பும் பலிக்க வில்லை; இராமனும், கிருஷ்ணனும் இரண்டு தேர்தல்களிலும் (1971 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டிலும்) தோற் கடிக்கப்பட்டார்கள்.
இனியும் அவர்கள் தோற்பார்கள் - எந்தப் பூச்சாண்டியைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை - மக்கள் நம் பக்கம் - திராவிடத்தால்!
உறுதியான லட்சியப் பயணத்தில் தடுமாற்றம் - தடம் மாற்றம் தேவையில்லை.

     --------------கி.வீரமணி தலைவர்,திராவிடர் கழகம் சென்னை  5.3.2020