Search This Blog

19.3.16

கலப்புத் திருமணம் என்பது தவறு - பெரியார்

பெண் சமுதாயம் முன்னேறாவிடில் நாடு முன்னேற முடியாது!



நான் பகுத்தறிவுவாதி, சமுதாயத் தொண்டு செய்பவன் என்பதால், உண்மையென்று எனக்குத் தோன்றிய கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு மனித சமுதாய முன்னேற்றத்தைக் கருதித் தொண்டாற்றி வருகின்றேன். மனித சமுதாய முன்னேற்றத்திற்கு -வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகின்றேன். அதில் ஒன்றுதான் இத்திருமண முறை மாற்றமுமாகும். முதலில் கலப்புத் திருமணம் என்று பேசியவர்கள், இது கலப்புத் திருமணம் அல்ல, கலப்புத் திருமணம் என்பது தவறு என்று குறிப்பிட்டார்கள்.

மனிதனுக்கு மனிதன் செய்து கொள்ளும் திருமணத்தில் கலப்பு என்ன வந்தது? கலப்புத் திருமணமென்பதே ஆரியர்கள் வந்ததிலிருந்து வந்தது தான். அவன் தான் ஆடு, மாடு, கழுதையைக் கட்டிக் கொண்டிருக்கின்றான் என்பதாக அவர்களுடைய புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் என்பவற்றில் காணப்படுகின்றன. இது அதுபோன்று மனித ஜீவனுக்கும், வேறு ஜீவனுக்கும் நடைபெறும் திருமணம் அல்ல. மனித ஜீவனுக்கும் மனித ஜீவனுக்கும் நடைபெறும் திருமணமேயாகும். இதில் கலப்பு என்று சொல்வதற்குப் பொருளே கிடையாது. பொதுவாக இந்நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதன் கருத்து, ஜீவ சுபாவத்தை முன்னிட்டு ஆண்கள், பெண்களைத் தங்களின் அடிமை களாகக் கருதுவது கூடாது என்பதற்குத் தான். மனிதன் எப்படித் தன்னை இழிஜாதி, கீழ்ஜாதி என்றும், சூத்திரன் என்றும் கருதிக் கொண்டிருக்கின்றானோ, அதுபோலப் பெண்கள் தங்களை ஆண்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள், அடிமைப்பட்டவர்கள் என்று எண்ணி வருகின்றனர். இவை நம் வளர்ச்சிக்குக் கேடானதாகும்.
ஜாதியைப் பற்றியாவது, எவனாவது ஒருவன் இருவன் பேசி இருப்பான். எதற்காக உயர்ந்த ஜாதி, கீழ் ஜாதி இருக்க வேண்டுமென்று பேசி இருப்பான். ஆனால், பரிதாபத்திற்குரிய நம் பெண்களின் - தாய்மார்களின் இழிவை நீக்க வேண்டுமென்று எங்களைத் தவிர, வேறு எவரும் தோன்றித் தொண்டாற்றவில்லை. நாங்கள் தான் அவர்களின் இழிவினைப் போக்கப் பாடுபட்டு வருகின்றோம். நமது இலக்கியங்கள் யாவும் நம் பெண்களை அடிமைகளாக இருக்க வேண்டுமென்றே வலியுறுத்துகின்றன. வள்ளுவரை மிகப் பிரமாதப்படுத்தி, அவர் கருத்து முக்காலத்திற்கும் ஏற்றது, வெங்காயம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த வள்ளுவனே பெண்களைப் பற்றிச் சொல்லும் போது என்ன சொல்கிறான்? பெண்கள் தங்கள் கணவன்மாருக்கு அடிமையாக இருக்க வேண்டும். கணவனைத் தெய்வமாகக் கருதி, அவனைத் தொழ வேண்டும். அவன் மனம் கோணாதவாறு அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். அவன் என்ன செய்தாலும் அதைச் சகித்துக் கொண்டு அவனுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கின்றாரே ஒழிய, பெண்களுக்கு ஆண்கள் தொண்டு செய்ய வேண்டும், பெண்கள் சொல்கிறபடி ஆண்கள் நடந்து கொள்ளவேண்டுமென்று ஒரு வரி கூடச் சொல்லவில்லை. பகுத்தறிவாளர் என்று ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிற வள்ளுவனே இப்படியென்றால், மற்ற புலவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.'

'நமக்கு நீதி சொன்னவர்கள் அத்தனை பேரும் பெண்கள் ஒழுக்கமாகக் கற்போடு, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அறிவுரை கூறி இருக்கின்றார்களே ஒழிய, ஆண்கள் கற்பைப் பற்றி எவனும் ஒரு வரி கூடச் சொன்னது கிடையாது. மனித ஜீவனில் ஆண், பெண் என்று பேதப்படுத்திக் காட்டும்படியாக இருப்பது சில உறுப்புகளே தவிர, மற்றப்படி ஆண் செய்கிற அத்தனை காரியங்களையும் பெண் செய்யக் கூடியவளாகவே இருக்கிறாள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பெண்களால் பிள்ளை பெறக் கூடும். ஆண்களால் அது முடியாது. இதைத் தவிர, ஆணுக்கும், பெண்ணுக்கும் எதிலும் வித்தியாசமே கிடையாது.'

மனித சமுதாயத்தில் சரிக்குச் சரியாக (பகுதியாக) இருக்கும் பெண் சமுதாயமானது, மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலும் பயன்படாத சமுதாயமாகவே இருப்பதால், நம் நாட்டில் நடைபெற வேண்டிய முன்னேற்றங்களில் பாதிக்கு மேல் நடைபெற முடியாமல் போனதோடு, அடைய வேண்டிய வளர்ச்சியடையாமல் உலக நாடுகளில் மிகவும் பின்தங்கிய நாடாக நம்நாடு இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்க வேண்டியதாயிற்று. நம் நாடு முன்னேற்றமடையவும், வளர்ச்சியடையவும் பெண்கள் சமுதாயமானது விடுதலை பெற்று ஆண்களைப் போலச் சகல துறைகளிலும் சுதந்திரமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் நம் நாடு முழு வளர்ச்சியினைப் பெற முடியும் என்பதால் தான் பெண் விடுதலையை முதன்மையாகக் கொண்டு இக்காரியத்தில் இறங்கி இருக்கின்றோம். நான் சொல்வது ஆண்களுக்குச் சற்று கஷ்டமாக இருக்கலாம். இனி பெண்கள் சோறாக்கக் கூடாது. ஆண்களைச் சோறாக்கச் சொல்ல வேண்டும். பெண்கள் சோறாக்க வேண்டியது தங்கள் கடமை என்று தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் நன்றாகப் படித்து உத்தியோகங்களுக்குப் போக வேண்டும்.

மற்ற நாடுகளில் உள்ள பெண்களை எல்லாம் பார்த்திருக் கின்றேன். அங்குள்ள பெண்கள் யாவரும் சோறு சமைப்பதில்லை. குழந்தைக் குட்டிகளோடு ரெஸ்டாரன்ட்டு (உணவு விடுதி)க்குப் போய், தங்கள் உணவினை முடித்துக் கொள் கின்றனர். அதனால் பெண்களுக்கு உணவு சமைக்க வேண்டிய நேரம் மிச்சமாவதோடு உணவிற்காக ஆகும் செலவும் மிச்சமாகின்றது. ஆண்களைப் போல அவர்களும் வேலைக்குச் செல்கின்றனர், சம்பாதிக்கின்றனர். மகிழ்ச்சி யோடு வாழ்வை நடத்துகின்றனர். அதுபோன்று நம் பெண்களும் வாழ வேண்டுமென்பது தான் எங்களுடைய ஆசை.

தாய்மார்கள் தங்கள் பெண்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். தாங்கள் பட்டினிக் கிடந்தாவது அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். பெரிய வித்வானாக்காவிட்டாலும், அது வாழ்க்கைக்கு சம்பாதித்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு அதைப் படிக்க வைக்க வேண்டும். பிறத்தியார் கையை எதிர்பார்த்துப் பெண்கள் வாழக் கூடாது. கணவன் நம்மைத் தள்ளி விட்டால் என்ன செய்வது என்கிற பயம் பெண்களுக்கு இருக்கக் கூடாது. மேல்நாடுகளில் எல்லாம் பெண்கள் பிறர் கையை எதிர்பார்த்து வாழ்வது கிடையாது என்பதோடு, அப்படி வாழ்வதை மிகக் கேவலமாகவும் கருதுகின்றனர். அதுபோன்று நம் பெண்களும் கருதும்படியான நிலை நம் நாட்டிற்கு வந்தால் தான் நம் சமுதாயம் முன்னேற்றமடையும்.

இந்தத் திருமண முறையே தேவை இல்லை என்பது எனது கருத்து. யோக்கியமான அரசாங்கமாக இருந்தால், இதைக் கிரிமினல் குற்றமாக்கி இருக்கும். என்ன காரணத்திற்காக ஒரு பெண்ணானவள் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டும்? இந்தத் திருமண முறையே ஆரியன் நம் நாட்டிற்கு வந்த பின் தான் ஏற்பட்டது. ஆரியன் இங்கு வரும்போது பெண்களோடு வரவில்லை. இங்குள்ள பெண்களைச் சரிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருந்தான். பெண்கள் அவனுக்கு அடங்காமல் போகவே, அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டி, தனது உரிமைப் பொருளாக்க வேண்டி, சடங்குகள் சம்பிரதாயங்களை ஏற்படுத்தினான். இதைத் தொல் காப்பியத்திலேயே சொல்லி இருக்கிறான். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப என்று பார்ப்பனரிடையே ஒழுக்கம் கெட்ட பின் பார்ப்பனர்களால் செய்யப்பட்டது தான் இந்தச் சடங்காகும்.

நம் புலவர்கள் அயோக்கியர்களானதால் அய்யர் என்றால் நம் புலவர்கள் பெரியவர்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். அதற்காகவே வேறொரு சூத்திரத்தில், மேலோர் மூவர்க்கும் யாத்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே. பார்ப்பனர்களான மேல்ஜாதிக்காரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் கீழ் ஜாதிக்காரர்களுக்கு (சூத்திரர்களுக்கு) ஆன காலமும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்; நம் புலவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக எதையும் விற்கக் கூடியவர்களாக இருப்பதாலும், மானமற்றவர்களாக இருப்பதாலும் இந்த உண்மைகளையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வது கிடையாது.

                        -----------------------13.6.1968 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை- "விடுதலை" 4.7.1968.