Search This Blog

30.9.10

என்னைப் பெற்ற ஏழைகள் - பெரியார்


அம்மையார் இந்திய மக்களின் சராசரி வாழ்வுக்கு 4 பங்கு காலம் அதிகமாகவே வாழ்ந்து விட்டார். தானாக நடக்க, இருக்க, மலஜலம் கழிக்க சவுகரியமுள்ள காலம் அவ்வளவும் வாழ்க்கை நடத்திவிட்டு சவுகரியம் குறைந்த 2 மணி நேரத்தில் முடிவெய்திவிட்டார். 28ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அம்மையிடம் அனுமதிபெற்றே ஜோலார்பேட்டை பிரச்சாரத்துக்குச் சென்றேன். 12 மணிக்கு ஆவி போக்குவரவு நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தேன். சின்னத்தாயம்மாள் சேலம் டவுனுக்கு 3 மைலில் உள்ள தாதம்பட்டி என்கின்ற கிராமத்தில் ஒரு பிரபல செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். மிக்க செல்வமாய் வளர்க்கப்பட்டவர்.

உதாரணமாக, தனது கிராமத்தில் புஷ்பவதி ஆனதற்கு சேலம் டவுனில் ஊர்வலம் விடத்தக்க தடபுடல் வாழ்க்கையில் இருந்தவர். ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தில், குழந்தைப் பருவத்திலேயே தகப்பனார் காணாமல் போன பிறகு ஒரு மிக ஏழ்மை வாழ்க்கை நடத்திய தாயாரால் காப்பாற்றப்பட்டவரும், பள்ளிக்கூடமே இன்னதென அறியாதவரும், 6 வயதிலேயே கூலி வேலை செய்யவும் 18 வயதில் கல்லுடைப்பு வேலை செய்யவுமாய் இருந்து வந்தவரும், 25 வயதில் வண்டி வைத்து வாடகைக்கு ஓட்டப்போகிறவருமான வெங்கிட்ட நாயக்கருக்கு நெருங்கிய பந்து உறவு காரணமாக வாழ்க்கைப் படுத்தப்பட்டவர்.

அம்மை செல்வக்குடும்பத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்தவராய் இருந்தாலும், வெங்கிட்ட நாயக்கரை மணந்த பிறகு வெங்கிட்ட நாயக்கர் தரித்திர வாழ்வு அம்மையாரையும் பீடித்து அம்மையார் செங்கல், ஓடு முதலியவைகளை காளவாயிலிருந்து ஊருக்குள் கட்டிடம் கட்டுபவர்களுக்குக் கூலிக்கு கூடைகளில் சுமந்து போட்டு தினம் 8 பைசா கூலி வாங்கி பிழைத்து வந்தவர். புருஷனுக்கு தினம் 2 அணா கூலியும், பெண்ஜாதிக்கு தினம் 0-0-8 பைசா கூலியுமாக சம்பாதித்து வந்தவர். பிறகு புருஷனுக்குக் கல்சித்திர வேலையில் தினம் பகலில் 8 அணாவும் இரவில் 0.12.0 அணாவும் பெறக்கூடிய யோக்கியதையும் வேலைத் திறமையும் ஏற்பட்டபோது, அம்மையார் வெளிவேலைக்கு போகாமல் இருக்க நேர்ந்தது.

ஆனபோதிலும் பின்னால் புருஷன் வண்டி ஓட்டிக்கொண்டு அடிக்கடி வெளியூர்-களுக்குப் போவதைச் சகிக்காத அம்மையாரின் தகப்பனார் ஒரு சிறு தட்டுக்கடை வைத்துக் கொடுத்தார். அந்தக் கடை ஒரு வண்டிப்பேட்டையில் வைத்தால் தன்னுடன் தோழர்களாய் இருந்த வண்டிக்காரர்கள் தன்னிடம் சாமான் வாங்குவார்கள் என்று கருதி சட்டி பானை, அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் பொடி, விறகு முதல் சகல சாமக்கிரியை சாமானும் ஒருங்கே வைத்து வியாபாரம் செய்தார்கள். இந்தக் கடைக்கு வேண்டிய சகல சாமானும் அம்மையாரும், அம்மையாரின் மாமியாரான கெம்பு அம்மாளும் வீட்டில் தயார் செய்து கொடுத்து வருவார்கள். இந்த சமயம் 2, 3 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன.

இந்த நிலையில் அந்தக் கடையில் நல்ல லாபம் கிடைத்ததாலும், பிறகு போட்டி ஏற்பட்டதாலும் அதை விடுத்து அந்தக் கடையை அப்படியே மற்றொருவனுக்கு விற்று விட்டு லாபப்பணத்தையும், கைம்முதல் பணத்தையும் சேர்த்து ஈரோடு பஜார் ரோட்டில் ஒரு மளிகைக் கடை வைத்தார். அம்மையை கைப்பிடித்த சம்பவத்தால் கல்தச்சு வெங்கிட்டன் என்ற பெயர் மாறி வண்டிக்கார வெங்கிட்ட நாயக்கனாகி, அதுவும் மாறி தட்டுக்கடை வெங்கிட்ட நாயக்கனாகி, பிறகு மளிகைக்கடை வெங்கிட்ட நாயக்கரானார். அதில் 3 வருஷத்திலேயே மற்றவர்கள் பொறாமைப்படும் படியான லாபமடைந்தார். ஒரு சிறு குச்சு அதாவது கதவு இல்லாமல் தட்டி வைத்து இரவு முழுவதும் நாயை விரட்டிக் கொண்டிருக்க வேண்டிய குடிசையை மாற்றி ஓட்டுவில்லை கட்டிட வீடும், 2 ஏக்கரா விஸ்தீரணமுள்ள நல்லவயல் நிலமும் உடையவ ரானார்.

இது சமயம்தான் அம்மையாருக்கு முன்பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துபோய் ஸ்தல யாத்திரைகள், தவங்கள் செய்து வரடி கல் சுற்றி, நிலத்தை வழித்து அதில் சாப்பாடு போட்டு பிசைந்து சாப்பிட்டு, சன்யாசிகளின் எச்சில் சாப்பிட்டு, வரம் பெற்று ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், ஈ.வெ.ராமசாமியையும் பெற்றெடுத்த காலம் என்றாலும், அம்மையாருக்குள்ள பிள்ளை ஆசையால் மூத்த பிள்ளை ஒன்றே தனக்குப் போதுமென்று கருதி அதற்கே தனது முலைப்பால் முழுதும் கொடுக்க ஆசைப்பட்டு இளைய பிள்ளையாகிய ராமனை மற்றொரு குழந்தையில்லாத அம்மையாருக்கு அதாவது தன் புருஷனின் சிறிய தகப்பனார் மனைவியாகிய ஒரு விதவைக்கு ஒரு சிறு வீடும் சிறிது நிலமும் இருந்த காரணத்துக்காக அவர் களையே வளர்த்துக்கொள்ளும் படி இனாமாய்க் கொடுத்துவிட்டார்கள்.

அந்தக் காரணத்தாலேயே ராமன் (ஈ.வெ.ராமசாமி, பள்ளிக்கு அனுப்பாமல் தெருத்தெருவாய் சுற்றவும் கேள்வி கேட்பாடு இல்லாமல் அலையவும், கம்மநாட்டி வளர்ப்பது கழுதைக்குட்டிதான் என்ற பெயருக்கேற்ப ஒரு உருவாரமாய் இருந்து வரவும், மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியை மிக அருமையாய் செல்வமாய் வளர்க்கவும் ஆன நிலையேற்பட்டது. ஆனால் இந்தச் சமயம்தான் அதாவது இந்த இரு குழந்தைகளும் பிறந்த சமயம் தான் வெங்கிட்ட நாயக்கருக்கு பெரிய செல்வம் பெருக சந்தர்ப்பமும் பெருகி வந்த காலமாகும். அதாவது கடைசியில் சொன்ன மளிகை கடை வியாபாரமானது வலுத்துவிட்டது. வீடு, வயல், தங்க நகைகள் கேட்போர் மனமும், பார்ப்போர் கண்களும் திடுக்கிடும்படியான தோற்றமாய் இருந்த காலத்தில் எப்படியாவது மளிகைக்கடை நடக்கும் கட்டடத்தை பிடுங்கிக் கொண்டால் தங்களுக்கு அந்த லாபம் கிடைக்குமென்று கருதி சிலர் அந்தக் கடையை கட்டடக்காரனிடம் அதிக வாடகை வைத்து கேட்க ஆரம்பித்தார்கள்.

அம்மையாரும் - புருஷனும் யோசித்து கடையை சகல சாமானுடனும் பாக்கியுடனும் ஒப்புக்கொள்பவர்களுக்கு கொடுத்து விடுவதாய் விலை கூறினார். அதற்கு ஏற்பட்ட போட்டியில் நல்ல விலை கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு உடனே ஒரு மண்டிக்கடை அதாவது மொத்த வியாபாரக் கடை (மூட்டைக் கணக்காய் விற்பது) வைக்க யோசித்தார்கள். உடனே நல்லதொரு கடை அமைந்தது. அங்கு மண்டிக்கடை வைத்தார் புருஷன். உடனே மண்டிவெங்கிட்ட நாயக்கரானார். சின்னத்தாயம்மையாரும் மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கும் ஊரில் பணக்காரர் கூட்டத்தில் சேர்க்கத்தக்க பெயர் ஏற்பட்டதோடு எப்படியோ நாணயமுமேற்பட்டு விட்டது. தான் மிகவும் நாணயசாலி என்று காட்டிக் கொள்வதில் இருவர்களும் சமர்த்தர்கள்.

அந்தக் காலங்களில் பணம் படைத்தவர்களுக்கு பணம் போட்டு வைக்க பாங்கி இல்லாததால் நாணயத்தில் பேர்பெற்ற சின்னத்தாயம்மாளும், வெங்கிட்ட நாயக்கரும் ஒரு சேவிங் பாங்கி ஆகிவிட்டார்கள். பணம் ஏராளமாய் தங்களிடம் டிபாசிட் வர ஆரம்பித்ததும். தங்கள் வியாபாரத்தை மிகவும் பெருக்கி விட்டார்கள். மண்டிவெங்கிட்ட நாயக்கர் தன் கடையில் வியாபாரம் செய்தால் சின்னத்தாயம்மாள் வீட்டில் நெல் குத்தும் கொட்டணம், துவரை உளுந்து உடைக்கும் வேலை, விளக்கெண்ணெய் காய்ச்சி ஊத்தும் வேலை முதலியவைகளில் வீட்டில் எப்போதும் 20, 30 பேர் வேலை செய்யும்படியான தொழில் செய்து புருஷனைப் போலவே தானும் வருஷா வருஷம் சிறிதாவது பணம் சம்பாதித்து புருஷனுக்கு கொடுத்தே வருவார்கள்.

பணம் சேர்ந்தவுடன் மத பக்தி, மத சின்னம், விரதம், நோன்பு, திதி முதலியவைகள் தானாகவே தேடி வருவது வழக்கமல்லவா? அதுபோல் அம்மையார் மிகவும் பக்தியுடையவரானார். விரதங்கள் அதிகமாய் அனுஷ்டிக்கத் தொடங்கினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கும் நாமம் பலமாக பட்டை பட்டையாய்த் திகழ்ந்தது. இந்த மத்தியில் வீட்டில் செல்வமாய் வளர்க்கப்பட்ட மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியும் பாகவதராக ஆகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் அதாவது மண்டி வைத்து மண்டிக்கடை நன்றாய் நடக்க ஆரம்பித்து சிறிது எதிர்பார்த்ததுக்கு மேல் லாபம் வர ஆரம்பித்தவுடன் சின்னத்தாயம்மாள் சின்ன பிள்ளை ராமனை (ஈ.வெ.ராமசாமியை) ஒரு சிறு சண்டை காரணமாக இனாமாக (தத்து கொடுத்து விட்ட அம்மாளிடமிருந்து) பிடுங்கிக் கொண்டார்கள்.

ராமனை வளர்த்த அம்மாள் ஊர் பஞ்சாயத்துக் கூட்டினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கு ஒன்றும் தட்டிச் சொல்ல முடியவில்லை. சின்னத்தாயம்மாள், 2 கண்ணு தான் எனக்கு இருக்கிறது. இதில் ஒன்றைக் கொடுக்க முடியுமா? முடியாது போ! என்று சொல்லிவிட்டார்கள். முடிவில் ராமனை சுமார் 9 வயதில் கைப்பற்றினாலும் அவள் விதவை வளர்த்த பிள்ளையாய், ஊர்சுத்தியாய், லோலனாய்த் திரிந்ததால் படிப்பு இல்லை. அது மாத்திரமா? இனிமேல் படிக்கவும் லாயக்கில்லாத சோதாவாய் ஆகிவிட்டான்.

இருந்த போதிலும் பள்ளியில் வைத்து வீட்டு வாத்தியார் வைத்துப் பார்த்தார்கள். வாத்தியாருடன் சண்டை, பிள்ளைகளுடன் பலாத்காரம், அடிதடி, கடைசியாய் உபாத்தியாயரை வைவதில்லை பிள்ளைகளை அடிப்பதில்லை என்கின்ற வாசகம் ஆயிரம் தடவை, அய்ந்தாயிரம் தடவை தண்டக் காப்பி எழுதுவதே வேலையாய் இருந்ததால் ராமனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டு, மண்டிக்கடையில் அதாவது தரகு வியாபார இலாகாவில் மஞ்சள், மிளகாய், ஏலம் கூறும் வேலையில் போட்டார்-கள். இருந்தாலும் ராமன் எங்கு வளர்த்த தாயாரிடம் போய்விடுவானோ என்றுச் சின்னத்தாயம்மாள் சின்ன மகனுக்கு சிறிது சலுகைக் காட்டி பொய் அன்பாவது காட்டிவருவார்கள்.

எப்படியோ பணம் சேர்ந்துகொண்டே வரும். இந்த சந்தர்ப்பம்தான் வெங்கிட்ட நாயக்கன் என்ற பெயர் மாறி நாயக்கரானதும் சின்னத் தாயம்மாள் என்கிற பெயர் மாறி நாயக்கர் அம்மாள் என்ற பெயர் ஏற்பட்டதுமாகும். அம்மையாருக்கு தெய்வ பக்தி கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது நாயக்கரும் அம்மாள் சொன்னபடி ஆடியாகவேண்டும். பணத்தை அள்ளி இறைக்க ஆரம்பித்து-விட்டார்கள். கண்ட விடமெல்லாம் காடுமேடெல்லாம் கோவில், சத்திரம், சாவடி கட்ட ஆரம்பித்தார்கள். பார்ப்பனர்களின் புகழுக்கு அடிமைப்பட்டு பல குருமார்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

ஒவ்வொரு கல்யாணத்தின் போது தருமக் கல்யாணங்கள் செய்வார்கள். நன்றாய் இருக்கும் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்வார்கள். நாயக்கர் (புருஷன்) ஏதாவது தட்டிச் சொன்னால் நீங்கள் பணம்கொடுக்க வேண்டியதில்லை. என் பணத்தில் செய்யுங்கள் என்று எடுத்தெறிந்தாற்போல் பேசிவிடுவார்கள். வீட்டில் வாரம் ஒரு காலட்சேபம், ராமாயண பாரத வாசகம், அங்குத் திரியும் சந்நியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும் சதாசர்வகாலம் உலையில் நீர் கொதித்த வண்ணமாய் இருக்கும் படியான தண்டச் சோத்து சத்திரம் போல் வீட்டை நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் ஒரு விஷயம் குறிப்பிடத்தகுந்தது. இளைய மகன் ராமனிடம் எவ்வளவு அன்பு காட்டினாலும் அம்மையார் ராமன் தொட்ட சொம்பு, டம்ளர், ஆகியவைகளை கழுவியே வைப்பார்கள். ராமனை சமையல் வீட்டிற்குள் விடமாட்டார்கள். அப்பொழுதே அவன் ஜாதி கெட்ட பயலாய் விளங்கினான். ராமனுக்கு ஆகவே சமையல் வீட்டிற்குள் வேறு யாரும் நுழையக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் அம்மையார் மாமிசம் சாப்பிடமாட்டார். ராமனுக்கு தினமும் வேண்டும். ஆதலால் ராமனுக்குக் கல்யாணமானவுடன் அவனுடைய அனாச்சாரத்துக்கு ஆகவே அம்மையார் ராமனை வேறு வைத்துவிட்டார்கள்.

சதா சர்வ காலம் தன் வயற்றில் இப்படிப்பட்ட பிள்ளை ராமன் பிறந்ததற்கு துக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள். நன்றாய் சம்பாதித்து நன்றாய் செலவு செய்தவர்கள். பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள். அளவுக்கு மீறி ஆச்சாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள். எத்தனையோ பேரைத் திருத்திய ராமனால் அம்மையாரிடம் தன் கொள்கையை சொல்லுவதற்குக்கூட தைரியம் ஏற்படும்படியாய் அம்மையார் இடம் கொடுக்கவில்லை. கடைசி வயதில் கூட அம்மையாரைப் பார்க்க வந்தவர்களிடம் என் மகன் ராமனை சிறிது பார்த்துக் கொள்ளுங்கள் இளங்கன்று பயமறியாது என்பது போல் கண்டபடி திரிகிறான் என்று ஆவலாதி சொல்லியே வருவார்கள்.

ஒரு காலத்தில் மவுலானாக்கள் ஷவ்கத்தலி, மகமதலி அம்மையாரின் கையில் தங்கள் தலையை ஒட்ட வைத்து வாழ்த்தும்படி கேட்டபோது தன்னை அவர்கள் தொட்டுவிட்டதற்காக முகத்தை சுளித்துக்கொண்டார். இதை நான் வெளிப் படையாய் எடுத்துக்காட்டி கேலி செய்து அம்மையாரை மன்னிப்புச் சொல்லும்படிச் செய்தேன். அதனால் அரசியல் தலைவர்கள் காந்தி முதல் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் எங்கு தன்னை தொட்டுவிடுவார்களோ என்று பயந்து ஒடுங்கி ஒரு மூலையிலேயே நின்று தான் அவர்களுடன் பேசுவார். மூடநம்பிக்கைகளுக்கும். குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் இருந்தாலும் 95 வயது வாழ்ந்து முடிவெய்தி விட்டார். எனக்கு அவர் முடிவெய்தியதைப் பற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்த அம்மாளுடைய கோரிக்கை - எனக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டுச் சாகவேண்டுமென்பதே. எனது கோரிக்கை - எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திடவேண்டு-மென்பதே. என் இஷ்டம் நிறைவேறிற்று.

மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பூரண மகிழ்ச்சி!!

---------------------தந்தை பெரியார் - "குடிஅரசு", (இரங்கல் கட்டுரை-2.08.1936

பகுத்தறிவுப் பிரச்சார உரிமையும் - காவல்துறையின் போக்கும் -2


பிரச்சார உரிமை

சீர்காழியில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் கீழ்க்கண்ட முதல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும் ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ - எச் பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப் பட்டுள்ள நிலையில், திராவிடர் கழகம் தமது கொள்கையின் அடிப்படையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்கையில், அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்க் கும்பல் காவல்துறையிடம் புகார் கொடுப்பதும், அதனை ஆழ்ந்து நோக்காமல் நுனிப்புல் மேயும் தன்மையில் காவல்துறையினர் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து விசாரிப்பதும், திட்டமிட்ட வகையில் ஏற்கெனவே முறைப்படி ஏற்பாடு செய்துள்ள கழகத்தின் நிகழ்ச்சி களுக்கு இடையூறு செய்து வருவதும் சட்டப்படியும், நியாயப்படியும் முறையானது அல்ல என்பதை இம் மாநாடு தெரிவித்துக் கொள்வதுடன், முதலமைச்சர் அவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தி, உரிய வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.


இத்தீர்மானத்தின் அவசியத்தை அதிகம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. நம் நாட்டு ஊடகங்களும் குறிப்பாக தொலைக்காட்சிகள் காலைமுதல் இரவு வரை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மத்தியில் மூட நஞ்சை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே பழக்கவழக்கம் என்ற பெயரால் மூட நம்பிக்கை என்னும் பொல்லாத நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் அறிவின்மீது பலம் கொண்டு சம்மட்டி அடிகொடுப்பது போல, நம் நாட்டுத் தொலைக்காட்சிகள் சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்து வருகின்றன.

விஞ்ஞானம் தந்த கருவிகளைப் பயன்படுத்தி, அஞ்ஞானக் கருத்துகளை மக்கள் மூளையின் மீது திணித்து வருகின்றனர். தீர்மானத்தில் சுட்டிக்காட்டி யுள்ளபடி மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை - சீர்திருத்த உணர்வைப் பரப்புவது இந்த ஊடகங்களின் அவசியமான கடமையாகும். அப்படிச் செயல்படாத இந்த ஊடகங்கள் கண்டிப்பாக அறிவியல் மனப்பான்மையை, வளர்க்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிடவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவேண்டிய கடமை கூட மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

இந்த அடிப்படைக் கடமையினைச் செய்யத் தவறிய ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், கடமை உணர்வோடு சீர்திருத்தப் பிரச்சாரத்தைச் செய்துவரும் திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு வருவது வெட்கக்கேடான தாகும். தங்களால் அந்தக் கடமையினைச் செய்யத் தவறும் பட்சத்தில் சீர்திருத்தக் கடமையினைச் செய்துவரும் கழகத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் எதிராகச் செயல்படாமல் இருக்கவேண்டாமா?

மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வுகளை ஏற்படுத்தும் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்பட கடமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்குமே அந்தக் கடமையை அடிப்படையானதாக இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும்போது, அரசிற்கு இதில் கூடுதல் கடமை உணர்வு இருக்கவில்லையா?

சீர்திருத்தப் பணிகளை அடிப்படைக் கடமையாகச் செய்துவரும் அமைப்புகளுக்கு ஊக்கம் தரவேண்டியதும், பாதுகாப்பு கொடுக்கவேண்டியதும் அரசுகளின் கடமை யாகும்.

மூட நம்பிக்கைகளுள் மிகவும் மோசமான மூத்த - முடைநாற்றமடிக்கும் மூட நம்பிக்கை கடவுள் நம்பிக்கையே!

அதிலும் இந்து மதம் கற்பித்துள்ள கடவுள்கள் ஆபாசமும், அருவருப்பும் நிறைந்தவை. அழுக்கில் பிறந்த கடவுள், குதிரைக்குப் பிறந்த கடவுள் அவதாரம், விபச்சாரம் செய்யும் கடவுள், கொலை செய்யும் கடவுள், சண்டை போடும் கடவுள், மகளையே மனைவியாகக் கொண்ட கடவுள் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இந்த ஆபாச, அறிவுக்குப் பொருத்தமற்ற கடவுளை நம்பி அறிவையும், தன்னம்பிக்கையையும், பொருளையும், பொழுதையும் பலி கொடுக்கும் மக்களைத் திருத்தும் பணியிலே திராவிடர் கழகம் ஈடுபடும்பொழுது, ஆதா ரங்களின் அடிப்படையில் இந்தக் கடவுள்களின் தன்மைகள்பற்றி அச்சிட்டுக் கொடுக்கும்பொழுது, மூட மக்களின் மனது புண்படுகிறது என்று கூறி, காவல்துறையினர் கழகப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிப்பது உகந்தது அல்ல.

அதுவும் மதவெறியைத் தூண்டும் இந்துத்துவா அமைப்புகளின் குரலுக்குச் செவிமடுத்து, துண்டு அறிக்கைகளை வழங்கக் கூடாது என்று தடுக்க முயற்சிப்பது சட்ட விரோதமும், கருத்துரிமையைத் தடுக்கும் தவறான அணுகுமுறையுமாகும்.

இதில் வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக சில ஊர்களில் திராவிடர் கழகத்தினர்மீது வழக்குகளைப் பதிவு செய்தும் உள்ளனர்.

இராமனையும், சீதையையும், இலட்சுமணனையும் பகிரங்கமாகக் கொளுத்தி இராவண லீலாவை நடத்தி தமிழின மக்களின் தன்மான உணர்வை அன்னை மணி யம்மையார் கம்பீரமாக வெளிப்படுத்திக் காட்டினார்களே, தமிழர்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களே, அந்த நிகழ்ச்சிகூட இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக அரசு தொடர்ந்த வழக்கில் கழகம் வெற்றி பெற்றதே - வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதே - இந்த உண்மைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தெரிந்து வைத்திருந்தால் வழக்குப் பதிவு செய்வார்களா?

இந்துக்களைப்பற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தெரிவித்த கருத்தின்மீதுகூட வழக்குப் பதிவு செய்யப் பட்டதுண்டு - பிறகு அது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதையும் இந்தத் தருணத்தில் நினைவூட்டுகிறோம்.

--------------------"விடுதலை” தலையங்கம் 29-9-2010

29.9.10

மனிதன் அயோக்கியனாவது ஏன்?மனித சமுதாயத்தினிடம் ஒழுக்கம், நாணயம் குறைந்துவிட்டது. பலாத்கார உணர்ச்சியும், கெடுதல் புத்தியும் வளர்ந்து விட்டது. இதற்கு நமது மதம், ஜாதி என்பனவாகிய இரண்டும்தான் காரணம். கடவுளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் கடவுள் என்றால் என்ன என்பது உலகில் யாருக்குமே தெரியாது. அது வெறும் வேஷம்தான். மதம், ஜாதி என்பது யாவருக்குமே தெரியும். மதம் என்பது மற்ற மதக்காரனிடம் துவேஷம், வெறுப்பு, இழிவுபடும் தன்மை என்பனவாகும்.

எந்தவிதமான கூடாத, கேடான காரியத்தைச் செய்தாவது மதத்தைக் காப்பாற்றலாம் _ காப்பாற்ற வேண்டும்; அதுபோலவே தானும் வாழ வேண்டும் என்பதாகும். ஜாதியும் அதுபோன்றதே. இந்துமதம் பார்ப்பன ஜாதி என்பவை எந்தவிதமான அதர்மத்தைச் செய்தாவது தர்மத்தைக் காப்பாற்று என்பதோடு, பிராமணன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்பதாகும்.

அது போல கிறிஸ்துவர், மகமது (இஸ்லாம்) மதங்கள் மனிதன் என்ன பாவத்தைச் செய்தாலும் சடங்கு, பிரார்த்தனை, தொழுகை மூலம் பாவமன்னிப்புப் பெறலாம் என்பது. இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்ட மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியம் முதலியவைகளை எதிர்பார்க்கமுடியுமா? எந்த மனிதனாலாவது ஒழுக்கம், நாணயம், நேர்மை, யோக்கியம் ஆகியவைகள் உடையவனாக இருக்க முடியுமா?

பாவத்திற்கு (கேடு செய்ததற்கு) பிரார்த்தனையால், வேண்டுதலால் மன்னிப்பு கிடைக்கும் என்று கடவுளை, மதத்தை வணங்குகின்ற கொள்கை கொண்ட எவனால் தான் உலகில் யோக்கியனாக இருக்க முடியும்? அதனால்தானே கடவுள் பக்தர்களிடம் வேஷத்தைத் தவிர ஒழுக்கத்தையோ யோக்கியத்தையோ காண முடிவதில்லை. இப்பொழுது தெரிகிறதா, மனிதன் ஏன் அயோக்கியனாய் இருக்கின்றான் என்பதற்குக் காரணம்? ஆகவே கடவுள், மதம், ஜாதி ஆகியவை உலகில் இருக்கும் வரை எவரும் யோக்கியமாய் இருக்க முடியாது. மனிதனுக்கு ஆசை இயற்கை. அதோடு அதற்காக எது செய்தாலும் மன்னிப்பு உண்டு என்றால் என்ன ஆகும் என்பதை நீங்களே சிந்தித்தும் அனுபவத்தைக் கொண்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

---------------தந்தை பெரியார் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில் (17.9.1970) தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

பகுத்தறிவுப் பிரச்சார உரிமையும் - காவல்துறையின் போக்கும்


மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்..., அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்த உரிமை..., காவல்துறையினரின் வீண் தலையீடு தடுக்கப்படவேண்டும்...,

சீர்காழி மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ எச் பிரிவின்படி மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யும் திராவிடர் கழகப் பணிக்குக் காவல்துறை இடையூறு செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் சீர்காழியில் நேற்று (27.9.2010) நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் எண் 1:

திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சார உரிமையும் - காவல்துறையின் போக்கும்

மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ - எச் பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், திராவிடர் கழகம் தமது கொள்கையின் அடிப்படையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்கையில், அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்க் கும்பல் காவல்துறையிடம் புகார் கொடுப்பதும், அதனை ஆழ்ந்து நோக்காமல் நுனிப்புல் மேயும் தன்மையில் காவல்துறையினர் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து விசாரிப்பதும், திட்டமிட்ட வகையில் ஏற்கெனவே முறைப்படி ஏற்பாடு செய்துள்ள கழகத்தின் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்து வருவதும், சட்டப்படியும், நியாயப்படியும் முறையானது அல்ல என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்வதுடன், முதலமைச்சர் அவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தி, உரிய வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் இம்மாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2 (அ):

பாபர் மசூதி குற்றவாளிகள் மீதான வழக்கு; விசாரணையை விரைவுபடுத்துக!

அயோத்தியில் ராமன் ஜென்ம பூமி என்று சொல்லி ஏற்கெனவேயிருந்த 450 ஆண்டுகால வரலாறு படைத்த, சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கு 18 ஆண்டு காலமாக நிலுவையில் இருப்பதும், குற்றவாளிகள் பெரிய பதவிகளில் அலங்கரிப்பதும் நாட்டின் ஒட்டுமொத்தமான நிருவாகம், நீதி, மதச் சார்பின்மை இவற்றின் மீதான நம்பிக்கையை வெகு மக்கள் இழக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கினை விரைந்து முடித்து, உண்மையான குற்றவாளிகள் எந்தவகையிலும் தப்பிக்க முடியாத அளவுக்கு வழக்கினை செறிவாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்து கிறது.

தீர்மானம் எண் 2 (ஆ):

கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறிக்கொண்டு மத அமைப்புகள் உரிமை கோரி போராடுவதும், வழக்குத் தொடுப்பதும் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கக் கூடியது என்பதையும், அதன்படி பார்த்தால், பெரும்பாலான இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில் புத்த விகார்களாக இருந்து, பிற்காலத்தில் வன்முறையாலும், மன்னர்களின் அதிகாரத்தாலும் இந்துக் கோயில்களாக திட்டமிட்ட வகையில் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு அசைக்க முடியாத அனேக ஆதாரங்கள் உள்ளன என்பதையும் இம்மாநாடு வரலாற்றுக் கண்ணோட்டத் தோடு சுட்டிக் காட்டுகிறது. 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளை மய்யப் புள்ளியாக வைத்து, அதற்குமுன் இருந்த நிலை தொடரப்படவேண்டும் என்று அரசு ஏற்கெனவே முடிவு செய்த கருத்து நிலை நிறுத்தப்படவேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3 (அ):

வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமையாக்குக!

வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும், தனியார்த் துறைகளிலும், பன்னாட்டு அமைப்புகள் நடத்தும் அனைத்து நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்திட உரிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும் என்றும் இம் மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 (ஆ):

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குக!

அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் பல்லாண்டுகள் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்துவதை கொள்கை யாக வகுத்துக் கொண்டு, அதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது

இலாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக!

விலைவாசி உயர்வு பொது மக்களை அவதிக்கு உள்ளாக்குவதால், இந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து, அதனை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு நடுவண் அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தக சூதாட்டப் பேரத்தைத் தடை செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

ஈழத் தமிழர்களுக்கான வாழ்வுரிமை - மத்திய அரசின் கடமை

ஈழத்தில் போர் ஓய்ந்து ஓராண்டாகிவிட்டது என்று கூறப்பட்டாலும், போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமை என்பது வருந்தத்தக்க அவல நிலையில்தான் உள்ளது என்பதைப் பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் தெளிவாகத் தெரிவிக்கும் நிலையில், இந்திய அரசின் அணுகுமுறை இப்பிரச்சினையில் ஏனோதானோ என்ற போக்கிலேயே இருந்து வருகிறது - உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்தமான தமிழர் களின் கடும் அதிருப்திக்கு இந்திய அரசு ஆளாகியிருப் பதையும் நினைவூட்டி, உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் ஈழத் தமிழர்கள் வாழ்வில் உறுதியான வளர்ச்சிகள், மாற்றங்கள் ஏற்பட இந்தியா உளப்பூர்வமான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

காஷ்மீர் மற்றும் நக்சலைட் பிரச்சினைகள்

காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள், நக்சலைட்களின் பிரச்சினைகளை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை களாகக் கருதாமல், அவற்றின் பின்னணியில் உள்ள சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு - மண்ணில் மைந்தர்கள், மலைவாழ் மக்கள் உரிமை களையும் கணக்கெடுத்து, உண்மையான தீர்வினைக் காண முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

-------------------" விடுதலை” 28-9-2010

28.9.10

பெரியார் இயக்கம் பார்ப்பனர்களை ஜாதியை கடவுளை மதத்தை எதிர்ப்பது ஏன்?


(தந்தைபெரியார் அவர்களின் கொள்கைகளை இங்கு கேள்வி -பதில் வடிவத்தில் தொகுத்துத் தரப்பட்டிருக்கிறது- படியுங்கள்-தெளிவடையுங்கள்-பரப்புங்கள் ..... நன்றி)சுயமரியாதை இயக்கம் ஜாதியை கடவுளை மதத்தை எதிர்ப்பது ஏன்?


சுயமரியாதை இயக்கம் ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்தாலேயே அதன் யோக்கியதையைக் கெடுத்துக் கொண்டது என்கிறார்கள்.

மனிதனுக்கு இழிவு ஜாதியால் தானே உண்டாகி வருகிறது? ஜாதியோ மதத்தினால் தானே உண்டாகி வருகின்றது? மதமோ கடவுளால்தானே உண்டாக்கி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள்.

ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்துமதத்தை வைத்துக் கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா?

ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?

நான்கு ஜாதியை இந்தமத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறைகளைக் கீதை முதலியவை கடவுள் வாக்குகள் ஒப்புக் கொள்கின்றன.

"நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன். அத்தருமங்கள் தவற எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன்" என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார்.

இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதிபேதம், ஜாதிப்பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங்களையும், கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் முடியுமா? அல்லது இவைகளுக்குப் பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை, மதத்தை, கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக்கிறதா என்று பாருங்கள்.

------------------------- ”குடிஅரசு” 19-1-1936


பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?

நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்.
திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பது போல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுதனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப்பாடுபடுகிறேன்.

------------ 31.08.1959 சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார் ஈ.வெ.ரா.சொற்பொழிவு. “விடுதலை” 11.09.1959


பகுத்தறிவுவாதியின் கொள்கை எது?

பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும். தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும்.
மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும். ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகிவிட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி.
இராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதா அசுரர் என்பவர்கள் எல்லாம் இந்த பூமியில் இருந்ததாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை.
இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளாக இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால் 'கடவுளுக்கு' எதிரி இருக்க முடியுமா?

ஜோசியம் என்பது பெரும் பொய், வெறும் ஏமாற்றுதலே ஆகும்.
இராகு காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய். பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய். நட்சத்திரப் பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப் பலன், வருடப் பலன் என்பவை யாவும் பொய்.
பல்லி விழும் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய். கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய்.
மந்திரம், மந்திரத்தால் அற்பதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டப் பொய்.

”தெரியாத புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும்" என்பதாக கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான்.
நம்பியதன் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவற்றிற்குத் தன்னை சரிப்படுத்திக் கொள்ளுகிறான்.
பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.


--------------- 09.02.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

ஒழிக்க வேண்டிய மூன்று கேடுகள்

தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமூதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள் நன்மை தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும்.

முதலாவதாக மேல்ஜாதி.... கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான், கடவுளுக்குச் சமமானவன்! அவன் சாமி! பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள்.

மனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே!

மேல்ஜாதி என்பது பாடுடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி. பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.

இரண்டாவதாகப் பணக்காரன், ஏழை. இது எதற்காக? பணக்காரன் - ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?

மூன்றாவதாக - ஆண் எஜமானன்! பெண் அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி பெண் அடிமைதான்! சில நிர்பந்தம், அடக்குமுறை ஆண்களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் எசமான்; பெண் அடிமை; இந்த வேறுபாடு தேவையில்லாதது. அக்கிரமமானதுங்கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.

இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97-பேர் கீழ்ஜாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97-பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மையினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.

காரணம் 1.கடவுள்; 2.மதம் - சாஸ்திரம்; 3.அரசாங்கம்.

கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால் மதம் சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக்கிறார்கள் திராவிடர் கழகத்தைத் தவிர?

--------------12-11-1958 அன்று மேலவாளாடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. (விடுதலை 07-01-1959)நமக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள வேறுபாடு?

நமக்கும் பார்ப்பனர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்ன வித்தியாசமென்றால் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடான ஒற்றுமை இருக்கிறது. காஷ்மீர் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் கன்னியாகுமரியிலே இருக்கிற பார்ப்பானுக்கு நெறி ஏறும். அவ்வளவு தூரம் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடு இருக்கிறது.
ஒரு பார்ப்பான் அவன் எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும் அவன்கூட ஒருக்காலமும் தன்னுடைய இனத்துக்கு, அதன் நலத்துக்கு, சவுகரியத்துக்கு, விரோதமான காரியம் செய்யமாட்டான். தன்னுடைய இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். காட்டிக் கொடுக்க மாட்டான்.

ஆனால் நம்முடைய திராவிட ஆட்கள் என்பவர்களோ அதற்கு நேர்மாறான குணம் படைத்தவர்கள் தன் வாழ்வுக்கு தன் சவுகரியத்துக்காகத் தன்னுடைய இனத்தை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கத் தயங்கவே மாட்டான் திராவிடன். இனத்தைக் காட்டிக் கொடுப்பதிலேயே தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளும் விபீஷணர்கள், அனுமார்கள் தான் அதிகமாய் இருக்கிறார்கள். ஆனதால் நாம் பார்ப்பனர்களை எதிர்ப்பதோடு, இந்த இனத்துரோக வீபிஷண அனுமார்களையும் சேர்த்து எதிர்த்து வெற்றி பெற வேண்டியிருக்கிறது.
--------------------- “ விடுதலை” 8-9-1953

பார்ப்பானே வெளியேறு" என்று சொல்லுவது ஏன்?

"பார்ப்பானே வெளியேறு" என்று நாம் ஏன் சொல்லுகிறோம் என்றால், இந்த நாட்டில் பார்ப்பான் எதற்கு ஆக இருக்க வேண்டும்? உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது இம்மாதிரிப் பார்ப்பான் என்ற ஒரு ஜாதி பாடுபடாமல் வாழுகிற ஜாதி அதுவும் உயர் ஜாதியாக வாழுகிற ஜாதி இருக்கிறதா? பார்ப்பான் இருக்கிறதால் இந்த நாட்டுக்கு என்ன லாபம்? அல்லது பார்ப்பான் இல்லாவிட்டால் தான் இந்த நாட்டுக்கு என்ன நட்டம் வந்துவிடும்? பார்ப்பனர்களே சகல சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டு நம் மக்கள் எதிலும், என்றைக்கும் முன்னேற முடியாமல் நிரந்தரமாக அழுத்தி வைக்கப்படுவதை எவ்வளவு நாளைக்குச் சகித்துக் கொண்டிருக்க முடியும்?

இந்த நாட்டின் பெருவாரியான மக்கள் 97 பேராகவுள்ள திராவிட மக்கள், நாட்டின் சொந்தக்காரர்கள் காட்டு மிராண்டிகளாய் அடிமைகளாய் இருக்க 3 பேராக உள்ள பார்ப்பனர்கள் அந்நியர்கள் இந்த நாட்டைக் கொள்ளையடிப்பதா? பார்ப்பான் இருக்க வேண்டும் என்றால், இருக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவனால் அவன் "பார்ப்பானாக" இல்லாமல் மனிதனாக இருக்கட்டும் என்றுதான் திராவிடர் கழகம் கூறுகிறது.

-------------- 23.08.1953 தருமபுரியில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு. “விடுதலை” 02.09.1953

காந்தியாரையே சிந்திக்க வைத்த சுயமரியாதை இயக்கத்தினர்

சிலிர்க்கட்டும் சீர்காழி!

மானமிகு தோழர்களே, சீர்காழி அழைக்கிறது வாருங்கள். வரும் 27ஆம் தேதி மாலை சீர்காழி நகரம் சீர்திருத்தத்தையும் கடந்து புரட்சிப் பூபாளம் பாடும்போர் மறவர்களின் - புது புறநானூறு அரங்கேற்றம்.

திருவாரூர் மண்டல திராவிடர் கழக மாநாடு சீர்காழியில் நடைபெற உள்ளது. இந்த சீர்காழி இயக்க வரலாற்றில் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளையிட்ட காளான் அல்ல!

இயக்க வரலாற்றில் சீர்காழிக்கென்று சீர்மிகு அத்தியாயம் உண்டு.

அதன் நுனியைத் தொட 75 ஆண்டுகள் பயணிக்க வேண்டும். 1935 ஜூலை 9ஆம் தேதி இதே சீர்காழியில் ஊழியக்காரன் தோப்பில் தஞ்சை மாவட்ட ஆதிதிரா விடர் முதலாவது அரசியல் மாநாடு நடைபெற்றுள்ளது.

மாநாட்டுத் தலைவர் யார் தெரியுமா? தஞ்சை ஜில்லா மிராசுதாரும், கிழக்குத் தஞ்சை ஜில்லா போர்டு தலைவருமான என்.ஆர்.சாமியப்பா முதலியார்; திறப் பாளரும் சாதாரணமானவர் அல்லர். சென்னை மாநில இரண்டாவது அமைச்சர் பி.டி.ராஜன் பார் அட் லா ஆவார்.

இரண்டாம் நாள் வாலிபர்கள் மாநாடு. அன்ன பூர்ணி அம்மையார் தலைமை வகிக்க - தோழர் ஈ.வெ.ராமசாமி (குடிஅரசு, 7.9.1935 அப்படிதான் குறிப்பிடுகிறது) திறந்து வைத்தார்.

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, பூவாளூர் பொன்னம்பலனார், மஞ்சுளாபாய், கே.எம். பாலசுப்பிரமணியம், சித்தர்க்காடு ராமையா என்று பெரும் தளகர்த்தர்கள் எல்லாம் அம்மாநாடுகளில் அரிமா முழக்கமிட்டுள்ளனர்.

சாமியப்ப முதலியார் மிராசுதார் ஆயிற்றே - பார்ப்பனருக்கு அடுத்த உயர்ஜாதியைச் சேர்ந்தவர் ஆயிற்றே. அவர் ஆதிதிராவிடர் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிலாமா என்று அவசரப்பட்டு ஆரா திக்கும் கத்துக்குட்டிகளுக்கு நமது அய்யா, அன்றே அந்த மாநாட்டிலேயே தலைவரை வழிமொழியும் பாங்கில் பளார் என்று தெரிவித்தும் விட்டார்.

தோழர் சாமியப்பா அவர்கள் பொதுவாகப் பிராமணர்களுக்கு அடுத்தபடியாக சொல்லப்படும் சமூகத்திலுதித்தவரும், தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்துவதில் முதல் பட்டம் பெற்ற சமூகத் திலுதித்தவருமான தோழர் சாமியப்பா ஆதிதிராவிடர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து வந்த பெரிய தியாகம் என்று குறிப்பிட்டது சாதாரணமானதன்று.

நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிட்டா மிராசு தார்களாக இருந்தாலும் அதன் ரிங் மாஸ்டராக இருந்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே - அவர் கண்காணிப்பாலும், கருத்து ஒளியாலும் தங்களைத் தாழ்த்திக் கொண்டு தலையாய பணிகளை அர்ப்பணித்த மனப்பான்மையுடன் செய்தனர் என்பது தான் தனிச் சிறப்பாகும். அந்த மகாநாட்டில் 21 தீர்மானங்கள் என்றால், மகாநாட்டின் மகத்தான சிறப்புக்கு வேறு கட்டியமும் கூற வேண்டுமோ!

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றவர் அண்ணல் அம்பேத்கர். வருணாசிரம வாதியான காந்தியாரின் பிடிவாதத்தால் அது தட்டிப் பறிக்கப்பட்டது.

அந்த நெருக்கடியான நேரத்திலும் ஒரு காந்தியா ரின் உயிரைவிட கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் நலனே முக்கியம் என்று அம்பேத்கர் அவர்களுக்கு அய்ரோப்பிய நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த தந்தை பெரியார் தந்தி ஒன்றும் கொடுத்தார் என்பது - ஒடுக்கப்பட்ட மக்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய உன்னதமான தகவலாகும்.

சீர்காழி ஆதிதிராவிடர் மாநாட்டின் 3ஆவது தீர்மானம் அது தொடர்புடையதே!

பூனா ஒப்பந்தத்தால் ஏற்பட்ட கூட்டுத் தொகுதியில் நம்மவர்கள் நலத்திற்கென உழைத்துவரும் தோழர்கள் சுயராஜ்ய அரசியலில் இடம் பெற முடியாமல் கஷ்டப் படுவதைத் தடுப்பான் வேண்டி மேற்படி கூட்டுத் தொகு தியை விலக்கும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு தீர்மானமும் ஆதிதிராவிட மக்களின் உரிமைகளை நோக்கிய அரிமா அணிவகுப்பாகும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு திராவிடர் கழகம் என்ன செய்தது என்று வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று குறைப் பிரசவ கூச்சல்காரர்களுக்குச் சீர்காழி மாநாடு செவுளில் அறை கொடுப்பது போன்றதாகும்.

பார்ப்பனர்களுக்கு முந்திய தமிழிசை மூவர்கள் முத்துத்தாண்டவரும், அருணாசல கவிராயரும், தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளையும் இசைமாரி பொழிந்த பூமி இது.

நமது நெடுநாளைய கோரிக்கையை ஏற்று மானமிகு கலைஞர் அரசால் நம் தமிழின இசை வித்தகர்களின் பெயரால் பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் எழுப்பிட அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.

மூடநம்பிக்கையின் முற்றமும் இந்தச் சீர்காழியில் உண்டு. அப்பன் சின்னசாமி அய்யர் குளத்தில் குளிக்கச் செல்லும் முன் மகன் திருஞானசம்பந்தனை படித்துறை மேல் படிக்கட்டில் நிற்க வைக்க, பாலகன் பாலுக்கழ, பார்வதி தேவியார் கீழே இறங்கி வந்து ஞானப்பால் ஊட்ட தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாட லைப் பாடத் தொடங்கினான் என்கிற பார்ப்பனர்களின் சரடுதான் அந்த மூடநம்பிக்கை.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பூம்பாவை திரைப்படத்திலே இந்த அருள் பித்தலாட்டத்தைத் தோலுரித்துக் காட்டினார்.

கலைவாணர்:

சின்னவயதிலே கன்னித்தமிழிலே

சொன்னான் ஒரு பாட்டு

என்று போடுறியே வேட்டு!

மற்றவர்கள்: அன்னை பார்வதி அன்புடன் பாலை

அவர்க்களிக்க வந்தாள்; ஞானம்

அப்பொழுதே தந்தாள்

மண்ணில் சைவ மதமே

தழைக்க மழையெனவே...

கலைவாணர்: உழைப்பதன் வெற்றிப் பயனே அருளாம்

உண்மை தெரிந்திடா

விளைவும், மோட்சம் கடவுள் கூட்டம்

வீணான வார்த்தையடி!

அருளாள் பிழைப்போமா?

பொருளால் பிழைப்போமா?

உடுமலை நாராயண கவி பாடல் எழுத, கலைவாணர் கிண்டலடிப்பார்.

வருடா வருடம் சீர்காழியிலேயே பார்வதி ஞானப் பால் ஊட்டியதாகக் கதையளக்கும் திருவிழா நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மும்பையிலே திலகர் என்ற பார்ப்பனர் கட்டிவிட்ட அழுக்கு மூட்டையான பிள்ளையார் ஊர்வலத்தைத் தமிழ்நாட்டிலும் இறக்குமதி செய்துள்ளனர்.

மதங்களுக்கு ஜீவ நாடியாய் இருந்து வருவது பணமும் பிரச்சாரமுமேயல்லாமல், அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று எதையும் யாரும் சொல்ல முடியாது என்றார் தந்தை பெரியார் (குடிஅரசு, 8.10.1933)

மதங்களின் இந்த மூடப் பிரச்சாரத்தை பகுத்தறிவுப் பிரச்சாரத்தால்தான் முறியடிக்க முடியும்.

வரும் திங்களன்று சீர்காழியில் மண்டல மாநாடு மட்டுமல்ல - அதனையொட்டியே மாபெரும் மூடநம் பிக்கை ஒழிப்புப் பேரணியும் இடம்பெறும்.

ஜெயிப்பது யார் பிள்ளையார் கூட்டமா, பெரியார் பெரும்படையா என்பதைக் காட்டுவோம், வாருங்கள் கருஞ்சட்டைத் தோழர்களே!

வகுப்புரிமையின் சிற்பி எஸ்.முத்தையா முதலியார் சீர்காழி மண்ணுக்குச் சொந்தக்காரர். சீர்காழியை யடுத்த குரும்பக்குடி மிராசுதார் அவர்.

வகுப்புரிமைத் திசையில் முதல் ஆணையை 1928இல் பிறப்பித்து ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பாலை வார்த்த பெருமகன் அவர். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் பிறக்கும் ஒரு குழந்தைக்கு முத்தையா என்று பெயரிடுங் கள் என்று தந்தை பெரியார் எழுதினார் என்றால் அந்தப் பெருமகனாரின் பெருமைக்கு வேறு எந்த வைர முடிவேண்டும்?

தமிழ்நாட்டில் செயல்பாட்டிலிருந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துக என்று தந்தை பெரியார் களம் இறங்கி போராடிய அந்தத் தருணத்தில், நமது முத்தையா முதலியார் என்ன சொன்னார் தெரியுமா?

இந்தத் தீமை அகற்றப்பட மய்ய அரசு முன்வர வில்லை என்றால் இந்தியாவிலிருந்து சென்னை மாநிலம் பிரிய வேண்டும் என்று இடிமுழக்கம் செய்தார் என்றால் சாதாரணமா?

அந்த சமூக நீதிச் சிற்பியின் உருவப் படத்தைத் திறந்து அவரின் சொந்த மண்ணிலே சமூக நீதி சங்கநாதம் செய்ய உள்ளார் நமது தமிழர் தலைவர்.

கருஞ்சட்டைக் குடும்பத்திலே பிறந்து - இன்றைய தினம் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்களின் அமைச்சரவையிலே அங்கம் வகிக்கும் மானமிகு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் பங்கேற்க உள்ளார்.

வயது 95இல் அடி எடுத்து வைத்தாலும் வாலிபர் போல நடைபோடும் திருவாரூர் மண்டலத் தலைவர் மானமிகு எஸ்.எஸ்.மணியம் அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார். கழக முன்னணியினர் பங்கேற்ற உள்ளனர்.

மண்டல மாநாடு என்றாலும் மாவட்ட மாநாடு போல ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. சுவர் எல்லாம் மண்டல மாநாட்டை பற்றிப் பேசுகின்றன. எங்குப் பார்த்தாலும் டிஜிட்டல் பேனர்கள்.

தேநீர்க் கடைகளிலும் பேருந்து நிலையங்களிலும் மாநாட்டைப் பற்றிதான் மக்கள் பேச்சு.

சமூக நீதிக் களத்திலே சாதிக்க வேண்டியவை இன்னும் பல உண்டு. ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பிலும் நமது பயணம் தொடர வேண்டியுள்ளது. பெரியார் வலம்வந்த மண்ணிலே காவிக் கூட்டத்திற்கு இடம் இல்லை என்று காட்ட வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.

இந்தக் கடமைகள் அழைக்கின்றன - வாலிபர்களே வாருங்கள், வாருங்கள் - இளைஞர்களே கூடுங்கள், கூடுங்கள்! தாய்க்குலமே அணிவகுத்து வாருங்கள்; தொழிலாளர்களே தோள் தூக்கி வாருங்கள்! மாணவப் பட்டாளமே மார்பு நிமிர்த்தி வா!

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்களே, கழகத்தின் அழைப்புக்குக் காதுகளைக் கொடுங்கள்!

சிங்கநாதம் கேட்கட்டும்!

சீர்காழி சிலிர்க்கட்டும்!!

வாரீர்! வாரீர்!!

--------- மின்சாரம்--"விடுதலை" 24-9-2010

காந்தியாரையே சிந்திக்க வைத்த சீர்காழி

இம்மாதம் 12ஆம் தேதி சீர்காழியில், மாவட்டக் கழக அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் 80 வயதை நெருங்கும் மானமிகு ச.மு.செகதீசன் அவர்களின் பகுத்தறிவுச்சுடர் ஏந்துவீர்! என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் தேதி கொடுத்திருந்தார்.

அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், வேறு தேதிக்கு நிகழ்ச்சியை ஒத்தி வைத்துக்கொள்ளுங்கள் என்று காவல்துறையினர் முன்கூட்டியே சொன்னார்கள். அதன் விளைவு என்ன தெரியுமா?

வெறும் கவிதை நூல் வெளியீட்டு விழா மட்டுமல்ல மண்டல மாநாட்டையே அதே சீர்காழியில் நடத்துங்கள்! என்று ஆணையிட்டார் தமிழர் தலைவர். அதன் விளைவுதான் நாளை மறுநாள் (27.9.2010) சீர்காழியில் நடக்க இருக்கும் கழக மண்டல மாநாடு.

எந்தப் பின்னடைவையும் முன்னேற்றத் திசையைநோக்கிப் பேரடி எடுத்து வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் அணுகுமுறை. அதன் விளைச்சலை சீர்காழியில் கண்டு களிக்கப்போகிறோம்.

..........

இந்தச் சீர்காழியிலே குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சி ஒன்று, காந்தியார் அவர்களையே தம் போக்கில் சித்தம் மாறச் செய்த தலையான, ஒரு சம்பவம்-அதனைச் சாதித்தவர்கள் சுயமரியாதை இயக்கத்தினர். 16.2.1934 அன்று சீர்காழிக்கு வருகை தந்தார் காந்தியார்.... மாநாடு நடைபெற்ற இடம் சீர்காழி ஊழியக்காரன் தோப்பு; அதே இடத்தில்தான் அதற்கு அடுத்த ஆண்டில், சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆதிதிராவிடர் முதலாவது அரசியல் மாநாடும் நடைபெற்றது.

காந்தியாருக்குப் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வரவேற்புகள் அளிக்கப்பட்டன. காந்தியார் அங்கு வந்தபோதும், கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோதும் சுயமரியாதை இயக்கத்தினர் கருப்புக்கொடிகளைக் காட்டிக்கொண்டு நின்றனர்.

காந்தியார் அதனைக் கவனித்தார்; கவனித்ததோடு மட்டுமல்ல, அதைக் கணக்கிலும் எடுத்துக்கொண்டார்; அந்தக் கூட்டத்திலும் அது பற்றிக் குறிப்பிடவும் செய்தார். இதோ காந்தியார் பேசுகிறார்:

கருப்புக்கொடியை ஆட்டிக்கொண்டிருந்தாலும் கூட, அவர்கள் மரியாதையோடும், ஒழுக்கத்தோடும் நடந்துகொள்வதை நான் பாராட்டுகிறேன். இப்பொழுது செய்வது போல், தங்களுடைய உணர்ச்சியை வெளிக்காட்ட அவர்களுக்கு முழு உரிமையுண்டு.

சுயமரியாதை இயக்கத்தினர் என்று கூறிக்கொள்பவர்களுக்கும் எனக்கும் எத்துணையோ அம்சங்களில் உடன்பாடு இருக்கின்றது என்று நேற்று நான் கூறினேன்.

ஆண்டவன் என்று ஒருவர் இல்லை; அப்படியே இருப்பதானாலும், எங்களைப் பொறுத்தவரை அது மனித வர்க்கம்தான் என்று சுயமரியாதை இயக்கத்தினர் கூறுகிறார்கள். ஆண்டவன் ஒருவர் இருப்பதாக நம்பும் அளவுக்கு நான் மூடநம்பிக்கை உள்ளவன்தான் என்பது ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், சொற்களை வைத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிட நான் விரும்பவில்லை. மனித சமூகம் என்ற சொல் அவர்களுக்குப் பிடிப்பதாயிருந்தால், ஆண்டவனை மனித சமுதாயம் என்ற பெயரால் அழைக்க நான் தயாராய் இருக்கிறேன். அன்பும், ஜீவகாருண்யமும்தான் தங்களுடைய குறிக்கோள் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுடன் நேற்று பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களின் குறிக்கோளைப் பாராட்டுவதாகச் சொன்னேன். அவர்களுடைய குறிக்கோளுடன் நூற்றுக்கு நூறு உடன்படுவதாகவும் சொன்னேன் என்று குறிப்பிட்டார்.

(தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 775)

கடவுள் நம்பிக்கை என்பது, ஒரு மூடநம்பிக்கைதான் என்றும், ஆண்டவனை மனித சமுதாயம் என்ற பெயரால் அழைக்க நான் தயாராய் இருக்கிறேன் என்றும் காந்தியாரைச் சொல்ல வைத்ததுசிந்திக்க வைத்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பதை நன்றாக நினைவில் வையுங்கள்!.

சீர்காழி சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள், காந்தியாரை இவ்வாறு பேச வைத்துள்ளனர் என்பதைச் சொல்லும்போது, இயக்கத் தோழன் ஒவ்வொருவனின் மார்பும் புடைக்கிறது; தோளும் விம்மி எழுகிறது.

தந்தை பெரியார் சொன்னாரே- நினைவிருக்கிறதா? என்னுடைய பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி விளையாட்டு உணர்ச்சியல்ல; காந்தியாரையே திருத்திய உணர்ச்சி! காந்தியைப் பார்ப்பனரால் சொல்லச் செய்த உணர்ச்சி என்பது மாத்திரமல்ல; 3 தரம் மந்திரிப் பதவியை உதைத்துத் தள்ளிய உணர்ச்சியாகும். இது ராஜாஜிக்கும், ராஜா சர். முத்தையா செட்டியாருக்கும் தெரியும். ராவ்பகதூர், திவான் பகதூர் பட்டத்தையும், தினம் 100 ரூபாய் டபுள் பஸ்ட் கிளாஸ் பந்தா உள்ள கமிசன் பதவியையும் உதைத்துத் தள்ளிய உணர்ச்சியாகும். இதை 1919 ஆம் ஆண்டு போர்ட் செயின்ட் ஜார்ஜ் கெசட்டில் பார்த்தால் தெரியும்.

(விடுதலை, 2.5.1968)

காந்தியாரையே திருத்திய உணர்ச்சி- தந்தை பெரியார் அவர்களுடைய உணர்ச்சி என்பதை நினைவு கூர்ந்தால், சீர்காழி சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் காந்தியாருக்குக் காட்டிய கருப்புக்கொடியின் மேன்மை என்ன என்பது விளங்காமற் போகாது!

அன்றைக்கு வெறும் கருப்புக்கொடி பிடித்து, காந்தியாரையே சிந்திக்க வைத்த சுயமரியாதைத் தொண்டர்களின் வழிவந்த கருஞ்சட்டைத் தொண்டர்களே! கருப்பும் நடுவில் சிவப்பு வட்டமும் சேர்ந்த கழகக் கொடி பிடித்து, சீர்காழியையே கருஞ்சட்டைக்கடலாக்க-கருஞ்சிறுத்தையாய் வாரீர்! வாரீர்! என்று அழைக்கிறோம்.

--------------- மின்சாரம் -"விடுதலை" 25-9-2010
27.9.10

நாயினும் கேடா தாழ்த்தப்பட்டோர்?மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெற்றுள்ள சம்பவம், இந்தியாவில் இந்து சமூக அமைப்பில் இந்த 2010 ஆம் ஆண்டிலும்கூட நாடு எந்த அளவிற்குக் கீழிறக்கத்தில் இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டே!


ராம்பால்சிங் என்ற ராஜபுத்திர ஜாதியைச் சேர்ந்தவர் ஷெரு என்ற கலப்பு இனத்தைச் சேர்ந்த நாயை வளர்த்து வந்துள்ளார். சுனிதா ஜாடவ் என்ற தாழ்த்தப்பட்ட பெண் ரொட்டித் துண்டு ஒன்றை அந்த நாய்க்குப் போட அந்த நாயும் வாலை ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாகச் சாப்பிட்டுள்ளது.


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் போட்ட ரொட்டித் துண்டை தனது வளர்ப்பு நாய் சாப்பிட்டதைப் பார்த்துவிட்ட அந்த உயர்ஜாதிக்காரர் ஆத்திரப்பட்டார், வாய்க்கு வந்தவாறு அந்தத் தாழ்த்தப்பட்ட பெண்ணைத் திட்டித் தீர்த்துள்ளார். செருப்புத் தைக்கிற பெண்ணே, நீ எப்படி என் நாய்க்கு உங்க வீட்டு ரொட்டியைப் போடலாம்? என்று திட்டியுள்ளார்.


அதோடவாவது அவர் சீற்றம் தணிந்து போய்விட வில்லை! ஊர்ப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நாய் ஜாதி விலக்குச் செய்யப்பட்டது. இனி அந்த நாய் உயர்ந்த ஜாதிக்காரரான அந்த ராஜபுத்திரர் (ராஜ்புட்) வீட்டில் இருக்கக் கூடாது; தாழ்த்தப்பட்டவர் வீட்டில்தான் - சேரியில்தான் இருக்கவேண்டும். அதோடு மட்டுமல்ல; அந்தத் தாழ்த்தப்பட்ட பெண் ரூ.15 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என்று ஊர்ப் பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினார். (இதுதான் ஊர்ப் பஞ்சாயத்தின் நிலைமை!).


அர்த்தமுள்ள இந்து மதம் குறித்து வாய் கிழியப் பேசுவோர் இந்தக் கேவலமான செயல்பாட்டுக்கு என்ன வெங்காய விளக்கம் - விளக்கெண்ணெய் சப்பைக்கட்டு சொல்லப் போகிறார்கள்?


இவ்வளவுக்கும் அந்த நாய்க்கூட கலப்பின வகையைச் சார்ந்ததுதான். நாய் கலப்பு ஜாதியைச் சார்ந்தது என்றால், அங்கு ஜாதி பார்க்கப்படுவதில்லை. ஆனால், அந்த ஜாதி மறுப்பு நாய்க்கு ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ரொட்டித் துண்டைப் போட்டால் அங்கு மட்டும் ஜாதி பார்க்கப்படுகிறது என்றால், இதன் பொருள் என்ன?
தன்னை வளர்க்கும் எஜமான் என்ன ஜாதி? தனக்கு ரொட்டித் துண்டைப் போட்ட அந்தப் பெண் என்ன ஜாதி என்று அந்த நாய் பொருட்படுத்தவில்லை.
ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் - செல்வந்தன் மட்டும் ஜாதி பார்க்கிறானே! ரொட்டித் துண்டில்கூட ராஜபுத்திர ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று பிரிவு இருக்கிறதோ!


வட மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் மிக வெளிப்படையாக நடந்து வருகின்றன. மதவாத சக்திகள் அங்கு காலூன்றி நிற்கின்றன! செத்துப் போன பசுமாட்டின் தோலை உரித்த அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சங் பரிவார்க் கும்பலால் படுகொலை செய்யப்படவில்லையா?


இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவிருந்த பாபுஜெகஜீவன்ராம், வாரணாசியில் டாக்டர் சம்பூர்ணா னந்து சிலையைத் திறந்தார் என்பதற்காக - காசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயர்ஜாதி ஆணவம் பிடித்த மாணவர்கள், அந்தச் சிலையை கங்கைத் தண்ணீரை ஊற்றிக் கழுவவில்லையா? காரணம் பாபுஜெகஜீவன்ராம் செருப்புத் தைக்கும் ஜாதியைச் சேர்ந்தவராம்!


பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வைக் கற்பிக்கும் இந்த இந்து சமூக அமைப்பின் வருணக் கொடுமை அமைப்பு முறையை ஒழித்துக் கட்டுவதற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கின்றனர் இந்த நாட்டில் உள்ள படித்த மேதாவிகள்? எழுத்தாளர்களான அறிவு ஜீவிகள்? இவர்களில் பெரும்பாலோர் மேல்ஜாதி ஆணவக்காரர்கள் என்பதுதானே இதற்குக் காரணம்? ஊடகங்கள் எல்லாம் உயர்ஜாதிக்காரர்களின் உடைமையாக இருப்பது இன்னொரு முக்கியக் காரணம் இல்லையா?


சரி, அவர்கள்தான் இதற்காகக் குரல் கொடுக்க வில்லை; குரல் கொடுக்கக் கூடிய போராடக் கூடிய அமைப்புகளுக்காவது ஆதரவுக் கரம் நீட்டுவதுண்டா? ஆதரவு தெரிவிக்காததோடு மட்டுமல்ல; குறுக்குச்சால் ஓட்டி குற்றப் பத்திரிகை வாசிக்காமல் இருக்கிறார்களா?


இந்தியா வளர்கிறது - ஒளிர்கிறது என்பதன் இலட்சணம் இதுதானா? இதில் கடைந்தெடுத்த வெட்கக்கேடு இது தொடர்பாக பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண் காவல் துறையிடம் புகார் கொடுத்தால் அதனை உடனடியாகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கூட காவல்துறை தயாராக இல்லை!


இதுதான் இந்தியாவில் தீண்டாமை ஒழிப்பின் யோக்கியதை - நிருவாக இயந்திரத்தின் அடிநாதம்!


தந்தை பெரியார்தம் கருத்துகளும், அண்ணல் அம்பேத்கர்தம் சிந்தனைகளும் மக்கள் மத்தியில் பரவினாலொழிய வேர்பிடித்தாலொழிய இதற்குப் பரிகாரம் காண முடியாது.


வெறும் தீண்டாமை ஒழிப்பு என்ற ஏட்டுச் சுரைக்காய் சட்டத்தை வைத்துக்கொண்டு இருக்கும்வரை இதற்கு நிரந்தரத் தீர்வும் காணப்பட முடியவே முடியாது.


தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதில், ஜாதி ஒழிப்பு என்று திருத்தி, அதனைச் செயல்படுத்திட கடுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்படாதவரை, பார்ப்பனர்களும், ராஜபுத்திரர்களும், உயர்ஜாதியினரும் இங்கே துள்ளித் திரியத்தான் செய்வார்கள். மற்றவர்கள் நாயினும் கேடாக மதிக்கப்படும் அவலம்தான் தொடரும் - எச்சரிக்கை!

-------------------"விடுதலை” தலையங்கம் 27-9-2010

யாகப் புரட்டு - ஜீவகாருண்யம்
தலைவரவர்களே! தோழர்களே! ஜீவகாருண்யத்தைப் பற்றி நான் பேச வந்திருப்பது உங்களில் பலருக்கு வேடிக்கையாகக் காணப்படலாம். ஏனெனில், நான் நீங்கள் பெரும்பாலும் கருதி இருக்கிற ஜீவ காருண்யத்தைச் சேர்ந்தவனல்ல என்று நீங்கள் கருதி இருப்பதேயாகும். ஜீவகாருண்யம் என்கின்ற வார்த்தைக்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான அர்த்தம் கொண்டிருக்கிறார்கள். சிலர் மாமிசம் சாப்பிடாமல் இருந்தால் அதுவே பெரிய ஜீவகாருண்யம் என்றும், மற்றபடி ஜீவன்களுக்கு எவ்வித மன வருத்தத்தையும், உடல் வருத்தத்தையும் செய்தால் குற்றமில்லை என்றும் கருதியிருக்கிறார்கள். சிலர் ஜீவன்களை இம்சைப்படுத்தாமல் இருந்தால் போதும் என்றும், மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிக் குற்றமில்லை என்றும் கருதி இருக்கிறார்கள்.


சிலர், சில ஜந்துக்களை மாத்திரம் இம்சை படுத்தக் கூடாதென்றும், மற்ற ஜந்துக்களைப் பற்றிக் கவலை இல்லை என்றும் கருதி இருக்கிறார்கள். ஜீவகாருண்யத்திற்கு இந்தப்படி எத்தனையோ விதமான கருத்துக்களும், தத்துவங்களும் இருக்கின்றன.


விவரமாய்ச் சொல்ல வேண்டுமானால் ஜீவ காருண்யம் என்பது ஒவ்வொரு தேசத்துக்கும், ஒவ்வொரு மதத்துக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாய்க் கருதப்படுகின்றது.


இந்துக்கள் என்பவர்கள் பசுவை வணங்குவார்கள். அதனிடத்தில் அளவுக்கு மீறிய மரியாதையும், ஜீவகாருண்யமும் காட்டுவார்கள். யாராவது பசுவைக் கொன்றால், சாப்பிட்டால் அவர்களிடம் குரோதமும், வெறுப்பும் கொள்ளுவார்கள். இந்தக் காரணத்தினாலேயே இந்துக்களுக்கு மகமதியர்கள் மீது வெறுப்பும் அசூசையும் இருந்து வருகின்றன. இதனாலேயே பல இடங்களில் இந்து முஸ்லிம் கலகங்களும் கட்சிகளும் உண்டாகின்றன. இந்துக்களிலேயே பறையர், சக்கிலியர் என்று அழைக்கப்படும் வகுப்பார், மாட்டு மாமிசம் உண்பதினாலேயே அவர்களைக் கீழ் ஜாதிக்காரர்கள் என்று கருதுவதாகவும், அதனாலேயே அவர்களைத் தொடுவதற்கு அஞ்சுவதாகவும் சொல்லப்படுகின்றன. இதை அனுசரித்து பல சாதிரங்களும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.


ஆனால், இப்படிப்பட்ட இந்துக்கள் பசுமாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் வண்டியிலும் உழவிலும், ஏத்தத்திலும், செக்கிலும் கட்டி அதைச் சாகும் வரை உபத்திரவிக் கிறார்கள். அதை நல்ல காளைப் பருவத்தில் கட்டிப் போட்டு விதர்களை நசுக்கி, கொட்டாப் பிடியால் தட்டிக் கரைத்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். அதன் பாலை அதன் கன்றுக்குக் கொடுக்காமல் அதற்கு வெறும் புல்லைப் போட்டு விட்டுத் தாங்கள் சாப்பிடுகிறார்கள். இப்படி அர்த்தமற்ற ஜீவகாருண்யம் பலப்பல ஜீவன்கள் பெயரால் எத்தனையோ விதத்தில் உலகத்தில் வழங்குகின்றன. பட்சி, மிருகம், ஊர்வன ஆகிய விஷயங்களில் காட்டப்படும் ஜீவகாருண்யத்தில் ஒரு சிறு பாகம்கூட மனித ஜீவனிடத்தில் மக்கள் காட்டுவது அருமை என்றே சொல்லலாம்.


மக்கள் சமுக வாழ்க்கைத் திட்டத்தின் பயனாய் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொடுமைப்படுத்து கிறார்கள்? எவ்வளவு கொடுமைக்கும் துக்கத்துக்கும் ஆளாக்குகிறார்கள்? என்று பார்த்தால் நடைமுறையில் உள்ள ஜீவகாருண்யங்கள் முட்டாள் தனமான தென்றே சொல்லலாம்.
நான் ஏன் வந்தேன்?


நான் ஏன் இங்கு இந்த ஜீவகாருண்யக் கூட்டத்திற்கு வந்தேன் என்று சிலர் கேட்கலாம். உண்மையிலேயே இங்கு கடலாடியில் நடக்கும் யாகத்தில் ஏதோ சில அய்ந்தோ, பத்தோ, ஆடுகள் கொல்லப்படுவதை நான் பிரமாதமாகக் கருதி இங்கு வரவில்லை. லட்சக்கணக்கான ஆடுகள், மாடுகள், மற்றும் சில ஜீவன்கள் தினமும் கொல்லப்படுவது எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட கொலைகளை என் போன்றவர்களால் நிறுத்திவிட முடியாது என்பதும் எனக்குத் தெரியும். அப்படி இருக்க, பின் (கடலாடி) ஏன் நான் இங்கு வந்தேனென்றால் யாகத்தின் புரட்டையும், அது செய்யப்படுவதின் உள் எண்ணத்தையும் அதனால் ஏற்படும் பலன்களையும் உயர்ந்த ஜாதியார் அஹிம்சா தர்மமுள்ள அந்தணர் என்று கர்வமுடன் தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களின் யோக்கியதை யையும் பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டவும், கொல்லப்படும் பிராணிகள் யாகத்தின் பேரால் எப்படிச் கொல்லப்படுகின்றன என்பதையும் ஜனங்களுக்கு அறிவித்து, இப்படிப்பட்ட கொடுமையான சித்திரவதை இனியும் நிகழாமல் இருக்கும்படிச் செய்ய சர்க்காரைத் தூண்டுவதற்காகவுமே இங்கு வந்திருக்கிறேன்.


இவற்றில் என் அபிப்பிராயம் தவறுதலாய் இருந்தாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் நான் உண்மையானதென்று அறிந்ததை எவ்வித விருப்பு வெறுப்பு இல்லாமல் பொது நன்மையை உத்தேசித்துச் சொல்லுகின்றேன். உங்களுக்குச் சரியென்று பட்டதை எடுத்துக் கொண்டு அதற்கும் உங்களாலான உதவி செய்யுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.


கொலைக் கொடுமை


முதலில் கொலைக் கொடுமைகளைப் பற்றிச் சொல்லுகிறேன். யாகத்தில் கொல்லப்படும் ஆடுகள் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பது தங்களில் சிலருக்காவது தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். நான் அறிந்த மட்டில் ஆட்டை, கால்களைக் கட்டிக் கீழே தள்ளி கொம்பைப்பிடித்து ஒருவர் அமிழ்த்துக் கொண்டு வாய்க்குள் மாவைத் திணித்துக் கொண்டிருக்க ஒருவர் நன்றாக மூச்சுவிடாமல் கட்டி சத்தம் போடாமல் செய்து ஒருவர் விதர்களை கிட்டி போட்டு நசுக்க, மற்றவர் வயிற்றில் ஆயுதங்களால் இடித்து கிழித்து அதன் சிற்சில உறுப்புகளைத் தனித்தனியாய் அறுத்து எடுப்பதன் மூலம் கொல்லப்படுகிறதாம். இது சகிக்கக் கூடியதா? உயிர்களிடத்தில் அன்பு காட்டக் கூடிய ஜாதியார் செய்யக்கூடியதா? அகிம்சைக்காரருக்கு ஏற்றதா? இப்படிப்பட்டவர்கள் மேல் ஜாதிக்காரர்களா? இவர்களுக்குப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமையுண்டா? மற்றவர்களைப் பார்த்து கீழ் ஜாதியார் என்றும், ஜீவகாருண்யமில்லாதவர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் பாபிகள் என்றும் பாதகர்கள் என்றும் அழைக்க இவர்களுக்கு உரிமை உண்டா? யோசித்துப் பாருங்கள். ஆடு கோழியைத் தலைகீழாகப் பிடிப்பதையும், தர, தரவென்று இழுப்பதையும் ஜீவஇம்சை என்று சட்டஞ்செய்து அம்மனிதர்களைத் தண்டிக்கும் சர்க்கார், இவர்களை என்ன செய்யவேண்டும்? ஆலையிலிட்டு நசுக்கும்படி சட்டம் செய்தால் அதைத் தப்பு என்று சொல்ல முடியுமா? யோசித்துப் பாருங்கள். இந்த யாகம் ஆட்டுக்கு மாத்திரமில்லையாம். மாடு, மனிதர், குதிரை முதலியவைகளுக்கும் உண்டாம். இப்படியே விட்டுவிட்டால் நாளைக்கு இந்த ஆடுகளின் கதிதானே மனிதர்க்கும் ஏற்படும். மத சம்பந்தத்தில் அரசாங்கம் நுழைவதில்லை என்று சொல்லி அரசாங்கம் சுலபமாய் தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால், நாளைக்கு நரமேதியாகம் செய்து 10, 20 மனிதர்களை இந்தப்படி சித்திரவதையான கொலைப்பாதகம் செய்தால் மதத்தில் பிரவேசிக்காமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்குமா? அதுபோலவே இப்போது கருதி இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான சித்திரவதைக் கொலை களையும், இம்சைகளையும் அரசாங்கம் ஏன் நிறுத்தக்கூடாது? பார்ப்பனர்களுக்குப் பயந்தோ, மதத்திற்குப் பயந்தோ தாங்கள் சும்மா இருப்பதாக சொல்வார்களானால் இப்படிப்பட்ட கொலையும், சித்திரவதையும் தங்கள் மதத்திற்கு விரோதமென்று கருதி அதற்காக வேதனைப்படும் ஜயின மதத்தினுடையவும், ஜயினர்களுடையவும் கொள்கையும், மரியாதையும் உணர்ச்சியும் காப்பாற்றப்பட வேண்டாமா என்று கேட்கின்றோம்.


இராமாயணம்

தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப் படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள். இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாகமே யாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத்தைக் கெடுத்ததற்காகத்தானே கொல்லப்பட்டிருக்கிறார். இந்த மாதிரி கொலை பாதக யாகத்தைக் கெடுக்க யார்தான் துணியமாட்டார்கள்? யாகத்தைக் கண்டு மனம் வருந்தி பரிதாபப்பட்டு அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?


நமக்குச் சக்தியில்லாததாலும், நம் உணர்ச்சிக்கு அனுகூலமான ஆட்சி இல்லாததாலும் நாம் எல்லோரும் இங்கு வந்து கத்துகிறோம். சக்தியும் ஆட்சி உரிமையும் இருக்குமானால், நாம் தாடகையைப் போல் தானே நடந்து கொண்டு தீருவோம். யாகத்தை வெறுத்ததற்காக அந்த அம்மாளைக் கொன்றுவிட்டதுமல்லாமல் அந்தம்மாளை இழித்துக் கூறும் முறையில் அந்த அம்மாள் மூத்திரம் பெய்து யாக நெருப்பை அணைத்துவிட்டார் என்றும் மிருகங்களையும், பட்சிகளையும் பச்சையாய் சாப்பிட்டார் என்றும், பொருத்தமற்றதும் போக்கிரித்தனமானதுமான ஆபாசக் கதைகளையும் கட்டி விட்டார்கள். இதிலிருந்தே ராமாயணக் கதை ஜீவகாருண்ய காரணமாய் ஏற்பட்ட ஆரியர் திராவிடர் கலகம் என்றும், ஆரியர் தங்களை உயர்த்தியும் திராவிடர்களைத் தாழ்த்தியும் திராவிடர்களுக்கு என்றும் பழி இருப்பதாக எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்றும், ராம லட்சுமணர்கள் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ராவணனாதியோர் திராவிட அதாவது ஜீவகாருண்யக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்கவில்லையா? என்பதை யோசித்துப் பாருங்கள்.


அக்கதையில் மிருகங்களையும் ஜீவர்களையும் கொல்லும் விஷயங்களிலும், மது மாமிசம் சாப்பிடும் விஷயங்களிலும், சூதுவாது செய்த விஷயங்களிலும், பெண்களை இழிவாய் நடத்திக் கொடுமைப்படுத்தின விஷயங்களிலும் சிறிதும் தயங்காத ராமலட்சுமண கூட்டங்களை இவ்வளவு தூரம் புகழ்ந்திருப்பதுமல்லாமல் அவர்களைக் கடவுளாகக் கருதச் செய்து திராவிட மக்களைக் கொண்டே பூஜிக்கவும் வணங்கவும் புகழவும் செய்து விட்டார்கள். அது போலவே ராவணாதியர்கள் இந்த யாகத்தை வெறுத்ததல்லாமல் வேறொரு கெடுதியும் ராம லட்சுமணர்கள் செய்த அளவுகூட செய்யாதவர்களை திராவிட மக்களைக் கொண்டே இகழச் செய்துவிட்டார்கள். திராவிட மக்களில் சிலரையே இவ்விதப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்து கொண்டு பிழைக்கவும் செய்துவிட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்த இருவரில் ஒருவன் (ராவணன்) ராட்சதனாம்; ஒருவன் (விபீஷ்ணன்) தேவகணத்தைச் சேர்ந்த (ஆழ்)வனாம். என்ன புரட்டு! யோசித்துப் பாருங்கள். ஒரு பெண்ணின் மூக்கையும் முலையையும் அறுத்த பாவிகள் கடவுளின் அவதாரங்களாம். ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலியவைகளை மேற்கண்டபடி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள் தேவர்களாம். இதிலிருந்து கடவுள்கள், தேவர்கள், பிராமணர்கள் ஆகியவர்களின் யோக்கியதை களை சற்று நினைத்துப் பாருங்கள். திராவிட மக்களின் யோக்கியதைகளையும் ஏமாளித் தனத்தையும் எண்ணிப் பாருங்கள்.


புண்ணியம், சொர்க்கம்

இது நிற்க, இந்த யாகங்கள் புண்ணிய காரியங்களாம். சுவர்க்கத்திற்குக் காரணமானவைகளாம், புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும், சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம், சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து, கால் கைகளைக் கட்டிப் போட்டு வாயில் மண்ணை அடைத்து, விதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று போட்டால் புண்ணியமும் சொர்க்கமும் கிடைத்துவிடும் போல் இருக்கிறது. வேண்டுமானால் சில மந்திரங்களையும் சொல்லிவிடலாம். இதில் நமக்கு இரண்டு வித லாபம் போலும். சொர்க்கம் நரகம் என்பவை சோம்பேறிகளின் வயிற்றுப் பிழைப்பு சாதனங்கள் என்று பல தடவை நான் சொல்லி வந்திருக்கிறேன். பாடுபட்டு உழைத்தவன் பொருளைக் கையைத் திருகிப் பிடுங்கிக் கொள்வதற்குப் பதிலாக சொர்க்க நரகங்கள் என்னும் பூச்சாண்டிகளைக் காட்டி பயப்படுத்திப் பிடுங்கிக் கொள்ளப்படுகின்றன. இப்படிப்பட்ட சொர்க்க நரகத்துக்கு உண்மையான அர்த்தம் நல்ல விதத்தில் செய்ய வேண்டுமானால் மனிதனின் மூர்க்க சுபாவமும், பழிவாங்குந் தன்மையும் சொர்க்க நரகம் என்னும் வார்த்தைகளால், கற்பனைகளால் பிரதி பலிக்கின்றது என்பதேயாகும.


யாகத்தின் கருத்து


இப்படிப்பட்ட சொர்க்க நரகத்தைப் பிரச்சாரம் செய்யவே யாகங்கள் முதலியன செய்யப்படுகின்றன. யாகத்தில் பிராமணர்களுக்கு நம்பிக்கை இல்லை யென்பதே எனது அபிப்பிராயம். மற்றவர்களை மிரட்டவும் ஏமாற்றவும் சிலர் செல்வம் சேர்த்து வயிறு பிழைக்கவுமே இப்போது யாகங்கள் செய்யப்படுகின்றன.
யாக சம்பந்தமான வேத சாதிர ஆதாரங்கள் நமக்குப் பொறுத்தமானவைகளாகுமா? நாம் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படிப்பட்ட கொடுமைக்கும், கொலை பாதகத்துக்கும் சித்திரவதைக்கும் ஒரு கடவுள் சொர்க்கத்தைக் கொடுப்பதாய் இருந்தால் கடவுளின் தன்மையாகக் கூறப்படும் அன்பு, கருணை என்று சொல்லுவது உண்மையாய் இருக்க முடியுமா? கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனை மற்றொரு ஜீவன் சித்திரவதை செய்து ஆகுதி கொடுப்பதைக் கடவுள் விரும்புகின்றார் என்றால் ஜீவர்களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்தார் என்பது உண்மையாயிருக்க முடியுமா? கடவுள் பேராலேயே இப்பேர்ப்பட்ட காரியங்கள் நடப்பதை ஒரு கடவுளோ, அரைக் கடவுளோ, அணுவளவு கடவுளோ இருந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? அல்லது கடவுளுக்கு இது தெரியாது என்று சொல்லிவிட முடியுமா? இவைகளெல்லாம் பாமர மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிப் பிரச்சாரமே யொழிய வேறில்லை. இப்படிப்பட்ட யாகங்களுக்குச் சங்கராச்சாரி சுவாமியார் என்பவரும் அனுமதியளிக்கிறாராம்; பணம் கொடுக் கிறாராம். இதிலிருந்து சங்கராச்சாரிகள் என்பவர்கள் யோக்கியதைகளையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

யாகம் ஏன் செய்யப்படுகிறது?

இந்த யாகங்கள் இப்பொழுது ஏன் செய்யப்படு கின்றன? என்பது உங்களுக்குத் தெரியுமா? சனாதன தர்மங்கள் கெட்டுப் போய்விட்டனவாம். எதனால் என்று கேட்பீர்களானால்- சாரதா சட்டம் செய்யப்பட்டுவிட்டதாம். தீண்டாமை ஒழிப்புச் சட்டமும், கோவில் பிரவேசச் சட்டமும் இப்போது இந்திய சட்டசபையில் இருக்கிறதாம். அவை நிறைவேறிவிடும் பட்சத்தில் சனாதன தர்மத்துக்குப் பெரிய ஆபத்து வந்து விடுமாம். ஆதலால், யாகங்கள் செய்வதன் மூலம் அவற்றைத் தடுத்து சனாதன தர்மத்தை நிலை நாட்ட வேண்டுமாம். ஆகவே, சனாதன தர்மங்கள் என்பவை பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பார்ப்பனர் ஒழிந்த மற்ற மனித சமுகத்துக்கு எவ்வளவு மோச மானதும் கெடுதியானதும் சுயமரியாதைக்கு விரோத மானதுமான காரியம் என்பதை நான் உங்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.


இதிலிருந்து பார்ப்பனப்புரட்டுகளை நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடும் என்று நினைக்கிறேன். சில பார்ப்பனர்கள் தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும் சில பார்ப்பனர்கள் கோவில் பிரவேசம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதும், மற்றபார்ப்பன குருமார்கள், மடாதிபதிகள், ஜாதித் தலைவர்கள் ஆகிய எல்லோரும் சேர்ந்து சட்டம் ஒழியவும், பிரயத்தனப்படுபவர்கள் ஒழியவும், யாகம் செய்வதும் யாகத்தை ஆதரிப்பதுமாயிருந்தால் இதற்கு என்ன அர்த்தம் சொல்வது என்று உங்களையே கேட் கின்றேன். நான் இங்கு வரப்போவதாய்ப் பத்திரிகையில் தெரிந்தவுடன், இரண்டொரு பார்ப்பன நண்பர்கள் என்னைப் பரிகாசம் செய்தார்கள். அது என்னவென்றால், நீங்கள் இப்பொழுது உலக மக்கள் பொது விஷயங்களில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கும் போது எங்கோ இரண்டொரு பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஏதோ ஒரு வியாபாரமாய் யாகம் செய்து பிழைக்கிற காரியத்தைப் பிரமாதமாய்க்கருதி அதற்காக நீங்கள் போகலாமா? என்று கேட்டார்கள். இந்த யாகங்களை யாரோ இரண்டொரு பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் என்று எண்ணிவிட முடியுமா? இதற்கு எல்லாப் பார்ப்பனரும் பணம் கொடுத்திருக்கிறார்கள். சங்கராச்சாரி முதலியவர்கள் ஆதரவளிக்கிறார்கள். அய்யங்கார்ப் பார்ப்பனர்களுக்கு யாகம் விரோதமானது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், இப்போதைய யாகத்தில் அய்யங்கார் பார்ப்பனர்களும் சில மாத்வப் பார்ப்பனர் களும்கூட சேர்ந்து ஆதரவளித்தும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அப்படி இருக்க இரண்டொரு பார்ப்பனர் என்று எப்படிச் சொல்லிவிட முடியும்?
அப்படியானால், இவ்வளவு கூச்சல் ஏற்பட்ட பிறகாவது சில முக்கியமான பார்ப்பனர்கள் ஏன் ஒன்று கூடி ஓர் அறிக்கையை வெளிப்படுத்தக் கூடாது? இந்த யாகம் பார்ப்பன சமுகத்தின் சார்பாகவோ மதத்தின் தத்துவப் பிரகாரமோ நடப்பதல்ல. நாங்கள் அதை ஆதரிப்பதில்லை என்பதோடு வெறுக்கவும் செய்கிறோம் என்று தோழர்கள் மகாகனம் சாதிரியாரும், சர். சிவசாமி அய்யரும், சர். சி.பி. ராமசாமி அய்யரும், டி.ஆர். வெங்கட்டராம சாதிரியாரும், சர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும் ஓர் அறிக்கை வெளியிடட்டுமே? இவர்களெல்லாம் தங்களைப் பெரிய சீர்திருத்தவாதிகள் என்றும், தாங்களே இந்திய மக்களின் பிரதிநிதிகள் என்றும் எல்லா விஷயங்களுக்கும் தாங்களே அபிப்பிராயம் கொடுப்பவர்கள் என்றும் தாராளமாக விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்ததுடன் போதிய விளம்பரமும் பெற்றிருக்கிறார்களே ஏன் இவர்கள் வாய்திறக்கக் கூடாது என்று கேட்கிறேன். காங்கிர பார்ப்பனர்களாவது ஏன் அறிக்கை வெளியிடக்கூடாது. தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் முந்திரிக் கொட்டை போல் உலக விஷயங்களுக்கெல்லாம் முன்னால் வந்து அபிப்பிராயங்கொடுப்பவர் இதற்கு ஏன் வாய் மூடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்கின்றேன்.


தீண்டாமை விலக்கு மசோதாவும், கோவில் பிரவேச மசோதாவும் காங்கிரசின் சார்புடையவை யல்லவா என்றும், தோழர் காந்தியார் இம் மசோதாக்கள் நிறைவேற வேண்டி கவலை எடுத்துக் கொண்டு இந்திய சட்டசபை அங்கத்தினர்களிடம் பிரச்சாரம் செய்து ஆதரவு தேடி வருகிறார்களா இல்லையா என்றும் கேட்கின்றேன். இப்படிப்பட்ட காங்கிர அனுமதி பெற்ற காங்கிர சார்பான மசோதாக்களை ஒழிப்பதற்கு யாகம் செய்தால், காங்கிர வாதியான தோழர் சத்தியமூர்த்தியின் கடமை என்ன என்று கேட்கின்றோம்?


தோழர் சத்தியமூர்த்தி இந்திய சட்ட சபைத் தேர்தலுக்கு தஞ்சை, திருச்சி ஜில்லா சார்பாக நிற்கப் போவதாய் பிரதாபம். தஞ்சை ஜில்லா பார்ப்பனர்கள் வருணாசிரமக்காரர்கள். அவர்கள் தீண்டாமை விலக்கு மசோதாவுக்கும் கோவில் பிரவேச மசோதாவுக்கும் எதிராகவும், சாரதா சட்டத்தை ஒழிப்பதற்குத் தகுதி உடையவர்களையும், அந்தப்படி செய்வதாக வாக்களிப் பவர்களையுந்தான் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி இருக்க தோழர் சத்தியமூர்த்தி சாதிரிகள் அந்தத் தொகுதியில் நிற்பதென்றால் அவர் எப்படிப்பட்டவராய் இருக்கக் கூடும் என்று யோசித்துப் பாருங்கள். தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்த இரண்டு மூன்று மசோதாக்களையும் ஆதரிப்பதாக இதுவரை எங்கும் பிரதாபமிருக்கவே இல்லை. அன்றியும் தீண்டாமை விலக்கு, கோவில் பிரவேசம் ஆகிய காரியங்களுக்கு சட்டம் செய்யக்கூடாது என்று தஞ்சை, திருச்சி ஜில்லாவில் பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தான் காங்கிர தலைவர்கள் மாத்திரமல்லாமல் தோழர் காந்தியால் பாராட்டப்பட்ட வர்களுமாய் இருக்கிறார்கள். இவர்களைப் போன்ற சிலபார்ப்பனரல்லாதார்களும் இருக்கிறார்கள். தோழர் முத்துரங்க முதலியார், கூட்டமும் இப்படிப் பட்டதேயாகும். இவர் இந்திய சட்டசபை போகவேண்டுமாம். இது மாத்திரமா? தோழர் சீர்காழி சிதம்பரநாத முதலியார், கோவை வெள்ளியங்கிரிக் கவுண்டர் ஆகியவர்கள் சனாதன தர்மத்தை ஆதரித்ததுடன் வைசிராய் பிரபுவைக் காண சனாதன தர்ம பார்ப்பனர்களுடன் டெபுடேஷன் சென்றார்கள் என்று நான் சமீபத்தில் அறிந்தேன். ஆகவே காங்கிர யோக்கியதையைப்பற்றி நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.


தேர்தல் தந்திரம்

இந்த யாகத்தை நான் ஒரு தேர்தல் தந்திரமாகவே நினைக்கிறேன். சனாதன தர்மம் நிலை நிறுத்தப்பட யாகம் செய்தால், அந்த சனாதன தர்மத்துக்கு விரோதமான வர்களுக்குப் பாவமும் கெடுதியும் ஏற்படக்கூடும் என்று பாமர மக்கள் பயப்படக்கூடும். அப்போது பெரும்பாலும் பகுத்தறிவற்ற பாமர ஜனங்களும் தோழர்கள் சிதம்பரநாத முதலியார் வெள்ளியங்கிரிக் கவுண்டர், முத்துரங்க முதலியார் போன்ற செல்வவான்கள் என்பவர்களும், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்பவர்களுக்கே ஓட்டுக் கொடுக்கக் கூடும் என்கின்ற எண்ணத்தின் மீது பாமர மக்களைப் பயப்படுத்தவே இந்த யாகப் பூச்சாண்டி காட்டப்படுகின்றது. யாகத்திற்காக யாரும் பயப்பட வேண்டியதில்லை. நான் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் இருக்கும்போது எனக்கும் என் மனைவிக்கும் எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் விரோதமாக யாகம் செய்யப்பட்டது. இந்த யாகங்களுக்கு மேல் ஜாதிக்காரர்கள், பணக்காரர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகதர்கள், அரசாங்க தேவதான இலாகா ஆகியவர்கள் பலவித உதவிசெய்தார்கள். அது எங்களைக் கொல்ல முடியவில்லை. அது மாத்திரமல்லாமல் அந்த சமதான ராஜாவைச் சாகாமல் காப்பாற்றவும் முடியவில்லை. அந்த யாகத்தின் போது நான் 6 மாதம் தண்டனைபெற்று திருவனந்தபுரம் சென்டிரல் ஜெயிலில் இருந்தேன். அதே சமயத்தில் அத்தேச அரசர் இறந்து போனார். அதனால் நான் தண்டனை காலம் பூராவும் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டுவிட்டேன். யாகம் முடிந்ததும் வைக்கம் சத்தியாக்கிரக விஷயம். வைக்கத்தைப் பொறுத்தவரை வெற்றி பெற்றுவிட்டது. ஆகையால் யாகத்துக்கு ஏதோ சக்தி இருப்பதாகவோ அது நம்மை ஏதாவது செய்து விடுமென்றோ யாரும் பயப்பட்டு விடாதீர்கள். இந்த தந்திரம் எல்லாம் உழைப்பாளிகளின் உழைப்பைச் சோம்பேறிகள் சாப்பிடுவதற்காகவே ஒழிய வேறில்லை.


உழைத்தவன் உழைப்பின் பயனை அடைய வேண்டுமானால் இப்படி யாகம், சாதிரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜன்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது.


எத்தனையோ வருஷ காலமாய் யாகம் செய்யப்பட்டு வருவதாய் அறிகிறோம். உலகத்தில் என்ன அக்கிரமம் மாறி இருக்கிறது? என்ன கொடுமை நீங்கி யிருக்கின்றது? யாகம் யக்கியம் கிரமமாய் செய்யப்பட்டு வந்த தெய்வீக அரசர்களான ராமன், அரிச்சந்திரன் ஆகியவர்கள் காலத்தில் உள்ள அக்கிரமம் அயோக்கியத் தனம், கொலை பாதகம் எல்லாம் இன்னும் இருந்துதான் வருகின்றன. எவ்வித மாறுதலும் ஏற்பட்டுவிடவில்லை. ஆகையால் நீங்கள் இப்படிப்பட்ட மிரட்டுதல்களைக் கண்டு பயந்துவிடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்!!


-------------------------ஆரணிக்குப் பக்கத்தில் கடலாடி என்னும் கிராமத்தில் சில பார்ப்பனர்களால் யாகம் நடத்தப்படுவதை உத்தேசித்து அதைக் கண்டிப்பதற்காகவென்று சென்னை ஜீவரட்சா பிரச்சார சபையாரால் 3-6-34 இல் நடைபெற்ற கூட்டத்தில் திரு.வி.கலியாண சுந்தரமுதலியார் தலைமையில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு. - ”புரட்சி” - 10.6.1934

26.9.10

கடவுள் பெயரால் ஆபாசம்-அருவருப்பு

மதவெறியைக் கிளப்பக் கூடிய சக்திகள் விழிப்போடிருக்கின்றன
சென்னையில் தமிழர் தலைவர் பேச்சு

மதவெறியைக் கிளப்பக்கூடிய சக்திகள் இன்றைக்கும் இருக்கின்றனவே என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி விளக்கிப் பேசினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


வெள்ளைக்காரர்கள்

வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். சிதம்பரம் வல்லபைகணபதி, மத்தூர் வல்லபை கணபதி கோயில் ஆகியவற்றைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இது என்ன? என்று வெள்ளைக்காரன் விளக்கம் கேட்டால், இதுதான் எங்களுடைய கடவுள் என்று சொன்னால், இதைப் பற்றிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வாரா? இல்லிங்க, இது யானைக் கடவுள் என்று சொன்னால், யானைக் கடவுள் எப்படி வந்தது என்று கேட்க மாட்டானா? அரை யானை; அரை மனிதன் என்று சொன்னால் ஏற்க முடியுமா?


வல்லபை கணபதி


யானைத் தலையை எடுத்து மனிதனுக்கு ஒட்டவைத்தது என்று சொன்னால் ஏற்க முடியுமா? வல்லபைகணபதியினுடைய வரலாறை வெள்ளைக்காரனிடம் விளக்கினால் என்ன ஆகும்? கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தைபெரியார் சொன்னதற்கு இப்பொழுது, யாராவது பதில் சொல்லுங்கள். காட்டுமிராண்டி காலத்து சிந்தனை அது. அந்த சிந்தனையை இன்றைக்கும் நாம் தூக்கி வைத்துக் கொண்டி ருப்பதால் என்ன இலாபம்? ஒரு மதம்-ஒரு கடவுள் கதையைச் சொல்லுகின்றான். இன்னொரு மதம் இன்னொரு கதையைச் சொல்லுகிறது.


மனித இரத்த ஆறு ஓடலாமா?


இந்தக் கடவுள்களைக் காட்டி, மனித இரத்தம் தெருக்களில் ஓடலாமா? இந்த இடத்திற்குப் போகாதீர்கள் என்று காவல்துறை சொன்னால், நாங்கள் அந்த இடத்திற்குப் போக மாட்டோம்.


பெரியார் பிறந்தநாள் விழா என்பதற்காகத் தான் நாங்கள் இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விரும்பினோமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
ஏனென்றால், காவல் துறைக்கு இருக்கின்ற மரியாதை இருக்கிறது பாருங்கள், யார் ஆட்சிக்கு வந்தாலும் அது குறையக்கூடாது என்று கருதுகின்றவர்கள்.


காவல்துறையை மதிக்க வேண்டும்


ஏனென்றால், காவல்துறைதான் எல்லோருக்கும் பாதுகாப்பு. (கைதட்டல்). ஆட்சிகள் மாறும். ஆனால் காவல்துறையினுடைய கடமைகள் இருக்கிறது பாருங்கள், அது என்றைக்கும் மனித சமுதாயத்திற்குத் தேவை.
ஆகவே, அவர்களை சங்கடப்படுத்த வேண்டும் என்பதோ, மற்றதோ நம்முடைய நோக்கம் கிடையாது. தந்தை பெரியார் அவர்கள் இதில் ரொம்ப குறியாக இருந்தவர்கள். காங்கிரஸ் கட்சி காவல்துறையினரை எதிர்த்தபொழுதுகூட தந்தை பெரியார் சொன்னார். காவல்துறையினரை எதிர்க்கக் கூடாது. காரணம் என்னவென்றால், இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கலாம்; நாளைக்கு இன்னொரு ஆட்சி இருக்கலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பவர்கள் அவர்கள்தான். அவர்கள் மாறுபாடாகக் கூட நடக்கலாம். அது திருத்தப்பட வேண்டியதே தவிர, வேறு ஒன்றும் இல்லை.


கடவுள் பெயரால் ஆபாசம்-அருவருப்பு


ஆகவே, கடவுள் என்ற பெயராலே ஆபாசத்தை, அருவருப்பை, ஒழுக்கக்கேட்டை, மூட நம்பிக்கையை உருவாக்கி வைத்துக்கொண்டு-அதை வைத்துப் பிழைக்கலாம் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள். இன்னொரு சாரார்- அமைதியான இந்தப் பூமியிலே ஒரு கலவரத்தை உருவாக்கலாம் என்று நினைத்து செயல்படுகிறார்கள் என்று சொன்னால், எவ்வளவு கொடுமை என்பதை எண்ணிப் பாருங்கள்.


எல்லோரும் வாழ வேண்டும்


பன் மதங்கள், பல ஜாதிகள், இருந்தாலும் என் மதம் மட்டுமே ஆட்சியிலே இருக்க வேண்டும். உன் மதம் சாக வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் அல்ல நாங்கள். எல்லோரும் வாழ வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் நாங்கள். எல்லோரும் நல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற இயக்கம் சுயமரியாதை இயக்கம்- திராவிடர் கழகம். 24ஆம் தேதி பாபர் மசூதி சம்பந்தமாக ஒரு தீர்ப்பு வருகிறது என்று சொன்னவுடனே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார்கள். எல்லோரும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்ல வேண்டியதன் அவசியமென்ன?


மதவெறியைக் கிளப்பிவிடக்கூடிய சக்திகள்


மதவெறியைக் கிளப்பிவிடக்கூடிய சக்திகள் ரெடியாக இருக்கின்றன என்பதுதானே அர்த்தம்? தீயை அணைக்கிறோம், தீயை அணைக்கிறோம் என்று சொல்லி பெட்ரோல் ஊற்றினால் என்ன ஆகும்? இதுவா தீயை அணைக்கின்ற முறை? ஆகவேதான், எங்களைப் பொறுத்தவரையிலே நாங்கள் மனிதநேயத்தோடு தெளிவாக இருக்கக் கூடிவர்கள். கடவுளை மற; மனிதனை நினை! என்று தந்தை பெரியார் சொன்னார் (கைதட்டல்).
ஒருவர் கோவில் கட்டினால், இந்துக்கள் மட்டும் அந்தக் கோவிலுக்குப் போவார்கள். ஒருவர் சர்ச்சைக் கட்டினால், கிறித்துவர்கள் மட்டும் சர்ச்சுக்குப் போவார்கள். ஒருவர் மசூதி கட்டினால், முஸ்லிம் மட்டும் போவார்கள்.


பள்ளிக்கூடம்-மருத்துவமனை என்றால்


ஒருவர் பள்ளிக்கூடம் கட்டினால், அனைவரும் போவார்கள். ஒருவர் மருத்துவமனை கட்டினால், எல்லா நோயாளிகளும் போவார்களே! கடவுளை மற; மனிதனை நினை என்று சொன்ன தந்தை பெரியார் வாழ்க என்று சொல்லி, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இந்தப் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிகளுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

----------------”விடுதலை” 26-9-2010

பார்ப்பனர்களின் அகங்காரம் ஆணவம் அடங்கி விட்டதா?


அடங்கி விட்டதா அகங்காரம்?


கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...?

பதில்: பிராமணர்கள் உயர்ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!

(கல்கி 19.9.2010 பக்கம் 30)

_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:

Ignored by Political Parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ ஆத்திரத்தோடோதான் அய்யர்வாளின் வாயிலிருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.

மனிதர்களாக இருப்பவர்கள் தேவையானவர்களே! பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - இன்றைக்கும் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவுபடுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.

ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எவனாவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கிறாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயிலாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாடகைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்களைப் பிய்த்துத் தின்பது உண்மையெனின், சகலவிதமான கூலி வேலைகளையும் செய்ய வேண்டியதுதானே?

தந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கிறார்களா? களை எடுக்கிறார்களா? ரிக்ஷா இழுக்கிறார்களா? துணி வெளுக்கிறார்களா? சவரத் தொழில் செய்கிறார்களா? ஏன் இவற்றைச் செய்வதில்லை? வறுமையிலும் வருணாசிரமம் இருப்பது ஏன்? அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்புகிறார்கள். அவர்களின் சதவிகிதமான மூன்று சதவிகிதம் கிடைக்கவில்லை என்று கூற வருகிறார்களா? அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -அந்த நிலை பறி போய்விட்டது என்று பதறுகிறார்களா? என்பதைத் தெரிந்து கொள்ளவே நமக்கு ஆசை.

2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்கள் யார்?

பி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமிபிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசின் தலைமைச் செயலாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே! இதேபோல தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களோ தொடர்ந்து தலைமைச் செயலாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா?

பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா?

மத்திய அரசு துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.

அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே?

இந்த நிறுவனங்களுக்கு பணியமர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள்? முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா? எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே!

தந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.

அவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.

இதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே!

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்கூடாது, அவன் ஏழையாகவே இருக்கவேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.

ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

(குடிஅரசு 9.11.1946)

பார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்?

ஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவாளர் சோ ராமசாமி? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்று துக்ளக் தலையங்கம் தீட்டுகிறதே! (துக்ளக் 18.11.1998)

தமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடியுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதினாரே! அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார்? பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே!

எவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.

பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்விட்டது என்று கல்கி பதில் சொல்கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா? (டிசம்பர் 2005)

அந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்? அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா?

2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்று ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே - மறந்து விட்டீர்களா?

தமிழன் என்று சொல்லடா! தலை-நிமிர்ந்து நில்லடா - அது ஒரு சுலோகம்.

பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே இதுதான் பார்ப்பனர்களின் அகங்காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா?

பொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது?

பார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன?

நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).

அய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா?

தமிழ் செம்மொழி ஆனால், வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அரசு அறிவிக்க முடியாது அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டிருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்ளார் இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது வேகவே வேகாது!


--------------கலி.பூங்குன்றன் அவர்கள் “விடுதலை” ஞாயிறுமலர் 25-9-2010 இல் எழுதிய கட்டுரை