Search This Blog

19.3.18

பெரியார் : சரியாகப் பெயர் வைத்த பெண்கள்

பெரியார் : சரியாகப் பெயர் வைத்த பெண்கள்

தெய்வ பக்தர் ஒருவர் பெரியாரைச் சந்தித்தார். அவரும் அன்போடு வரவேற்றார். "சொல்லுங்க. என்ன சமாச்சாராமா வந்திருக்கீங்க” என்று கேட்டார். பக்தர் ரொம்பவும் ஆதங்கத்தோடு ஒரு கேள்வியை முன்வைத்தார். “கோடானு கோடி பேர் நம்புகிற கடவுளை வெறும் கல்லுன்னு சொல்றீங்களே. இது நியாயமா?" என்று கேட்டார். பெரியார் அவரிடம் நேரம் செலவழித்து எந்த தத்துவ விளக்கமும் தரவில்லை. அவர்தான்எதிலும் சிக்கனக்காரராயிற்றே!. மேலும் எதார்த்தமான  “வெளிப்படைச் சிந்தனையுள்ள பெரியார் அல்லவா? சித்த என்னோட வரீங்களா? கோயில் வரை போயிட்டு வந்துடலாம்” பெரியார் கேட்டார். வந்தவருக்கு ஆச்சரியம். பெரியாரா? கோயிலுக்கா? ஒன்றும் புரியவில்லை. "சரி போகலாம்” புறப்பட்டு விட்டார்.

இருவரும் கோயிலுக்குப் போனார்கள். கடவுள் சிலை இருக்கிறஇடம் வரை சென்றார் பெரியார். உடன் வந்தவருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம் . அங்கே பூசை செய்பவரிடம் பெரியார் கேட்டார்.

“இந்த சிலை தங்கமா?”
“அய்ம்பொன்னா?”
“செம்பா?”
“வெண்கலமா?”
பெரியார் கேட்டுக் கொண்டே வந்தார். பூசாரி இல்லை இல்லை என்று பதில் சொன்னார். கடைசியாக, “வேற எதுலதான் செஞ்சிருக்காங்க” என்றார். பூசாரி பட்டென்று "கல்லுல" என்றார்.
தன்னோடு வந்தவரைத் திரும்பிப் பார்த்து பெரியார் சொன்னார். “இதத்தான் நானும் சொல்றேன். பூசாரி சொன்னா பொறுத்துக்குறீங்க. நான் சொன்னா கோவிச்சுக்குறீங்க” என்று சொல்லிட்டு புறப்பட்டு விட்டார். உடன் வந்தவர் வாயடைத்து நின்றார்.
பெரியார் வாழ்க்கையில் இன்னொரு நிகழ்வு. ராமன் படத்தை செருப்பால் அடித்துவிட்டார் என்று பெரியார் படத்தை ராமர் பக்தர்கள்முச்சந்தியில் வைத்து செருப்பால் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.அடுத்த நாள் “குடிஅரசு” பத்திரிகையில் “செருப்பால் அடிக்க படம்தேவைப்பட்டால் முகவரியை அனுப்பிவையுங்கள் படம் இலவசமாக அனுப்பித்தரப்படும்" என்று குட்டி விளம்பரம்.
பெரியாரின் தோழர்கள் மனம் சங்கடப்பட்டு "என்னங்கய்யா இப்படி போட்டிருக்கிறீர்கள்” என்று கேட்டனர்.
“என்ன? சரியாத் தானே போட்டிருக்கேன். எதாவது அச்சுப்பிழை இருக்கா?” என்று பெரியார் கேட்டார். “அவங்க உங்களை அவமானப்படுத்துறாங்க அவங்களுக்குப் படம்அனுப்பித்தர்ரோம்னு சொல்றீங்க இது உங்களுக்கு நல்லாயிருக்கா” என்று தோழர்கள் கேட்டனர்.
“இத அப்டிப் பாக்கறது தப்பு. நிறைய பேர் என் படத்த செருப்பால அடிச்சா ஏன் அடிக்கிறாங்கன்னு நெறைய பேர் கேப்பாங்க. ராமன் படத்த இவர் செருப்பால அடிச்சாரு. ஆதனாலஅவர் படத்தை இவங்க செருப்பால அடிக்கிறாங்கன்னு சொல்லுவாங்க. ராமன் படத்த நாம செருப்பாலஅடிச்சதுக்கு அவங்களே விளம்பரம் குடுக்கறது நல்லது தானே” என்று பெரியார் எதிர் கேள்வி போட்டு விட்டு இயல்பாக இருந்துவிட்டார்.
இப்படி பெரியாரின் வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்வுகள் இருக்கின்றன. எதையும் அவர் இழிவாக எடுத்துக் கொண்டதில்லை. எடுத்துக் கொண்ட செயலில் உறுதியாக இருந்ததால் எல்லாத் தடைகளையும் அவர் இனிதாகவும் பொறுமையாகவும் ஆத்திரப்படாமலும் எதிர் கொண்டார்.
எண்ணியர் திண்ணியராக இருந்தால் எண்ணிய எண்ணியாங்கு எய்துவார் என்பதுதான் வள்ளுவர் நூல் மொழி. இதையெல்லாம் நன்குணர்ந்ததால் தான் தமிழகத்துப் பெண்கள் ஈ.வெ.ராமசாமியாக இருந்தவரை “பெரியார்” என்று அழைத்தனர். அந்தப் பெயர்தான் இன்று தமிழகத்திற்குள் சாதிவெறி சக்திகள் மக்களை அண்டமுடியாமல் காக்கும் நெருப்பாக நீடிக்கிறது. அதனை அணையவிடாமல் பாதுகாப்பது நமது கடமை.
இப்போதைய பெரியார் போல் ஆதிகாலத்திலும் பெரியார்கள் தமிழ் மண்ணில் இருந்துள்ளனர். அவர்களின் அறிவுரையைக் கேட்டு மன்னர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர் இரண்டு அதிகாரங்களில் வலியுறுத்தி சொல்லியிருக் கிறார். ஒன்று பெரியாரைத் துணைக் கோடல் (அதிகாரம் - 45), மற்றொன்று பெரியாரைப் பிழையாமை (அதிகாரம் - 90).
இந்தி, சமஸ்கிருதம் என்ற இரு மொழி வெறி கொண்ட எச்.ராஜா போன்ற ஆர்எஸ்எஸ்., சங்பரி வாரம் தமிழ்நெறிகளை எங்கே அறிந்திருக்கப்போகிறது?
பெரியாரைத் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் ( குறள்  892 )
பெரியாருக்கு மரியாதை கொடுக்காமல் தான் தோன்றித் தனமாகத் திமிரோடு நடந்து கொண்டால் அது பெரும் துன்பத்தைத் தரும் என்று வள்ளுவர் கி.மு. முதல் நூற்றாண்டிலேயே சொல்லியிருக்கிறார். கி.பி. இருபத்தோராம் நூற்றாண்டிலும் இதனைப் புரிந்து கொள்ளாதவர்களை என்னென்று சொல்ல! ஒருவனை நெருப்பு சுட்டுவிட்டால் ஒரு வேளை பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியாரைப் பின்பற்றாமல் தவறு செய்கின்றவர்கள் பிழைப்பதென்பதே இல்லை என்ற கருத்தினை,
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியாரைப் பிழைத்தொழுகுவார் (குறள் 896)
எனும் குறளில் வள்ளுவர் சொல்லிச் செல்கிறார்.
வள்ளுவரைப் பொய் வேடம் பூண்டு சிலர் தூக்கிச் சுமக்கலாம். அவர் யாத்த திருக்குறளில் இருக்கும் கருத்துகளை உள்வாங்காதவர்கள் போலிச் சாமியார்கள் போன்றோரே. அவர்களிடம் எல்லாத் தீச் செயல்களும் மண்டியிருக்கும். சொற்களையும் பயனற்ற சொற்களாகவே உதிர்ப்பார்கள். அப்படிப் பட்டவர்களை மனிதப்பதர் என்றார் வள்ளுவர் (குறள் 196).
இப்படிப்பட்ட பதர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படும். நெல் மணிகள்தான் களஞ்சியத்தில் இருக்கும். விதைநெல்லாய் என்றும் விளங்குவார் என்ற தொலை நோக்குப் பார்வையோடுதான் தமிழகப் பெண்கள் பெரியார் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அவரை இழிவுபடுத்துவதை, அவரது சிலைகள் உடைக்கப்படும் என்பதை, சாதி வெறியர் எனத் தூற்றுப்படுவதை மக்கள் கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவசரக்காரனுக்குப் புத்திமட்டு என்ற பழமொழியை அறிந்துள்ள மக்கள் புத்திசாலிகள். இதையெல்லாம் உள்ளுக்குள்ளே பொதிந்து வைத்திருப்பார்கள். வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் வெளிப்படுத்துவார்கள். இந்த அனுபவத்தைத்தான் -
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
என்று வள்ளுவர் சாறாகப் பிழிந்து தந்துள்ளார்.
           --------------------------------நன்றி: மயிலை பாலு -“தீக்கதிர்” 19.3.2018

7.3.18

பூணூல் அறுப்பு பற்றி பெரியார்
தந்தை பெரியார்


ஆவணி அவிட்டத்தன்று பூணூல் போடுவதைத் தான் கேட்டிருக்கிறேன், ஆரியர்களும் அவர்கள் சீடர்களும்! ஆனால் நம் தோழர்கள் அதே நாளில் தங்கள் பூணூல்களை அறுத்து விட்டார்களாம்! இது ஒரு மாதிரியான கொண்டாட்டந்தான்! ஆரிய அடிமைச் சின்னங்களில் முதல்தரமான இந்தப் பூணூலை அறுத்தெறிவதற்கு ஆவணி அவிட்டம் வருகிற வரையிலா இவர்கள் காத்திருக்க வேண்டும்? நெற்றியிலிருக்கும் விபூதியையோ, நாமத்தையோ அழிப்பது போலவே, எந்த நிமிஷத்தில் நினைக்கி றோமோ அந்த நிமிஷத்திலேயே பூணூலை அறுத் தெறிய வேண்டியது தானே!
ஓஹோ! விஷயம் புரிகிறது! நம் தோழர்கள் சப்பையானவர்களா? ஆவணி அவிட்டத்தன்று ஏன் அறுத்திருக்கிறார்கள் தெரியுமா? அந்த நாள் ஆயுள் முழுவதும் ஞாபகத்திலிருக்க வேண்டுமே, அதற்காகத்தான்! அதுமட்டுமல்ல! "ஓய்! பிராம ணரே! ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும்! எல் லோரும் சகோதரர்கள்! என்ற வாய்ச் சவடால் அடிக்கிறீரே! உம் தோளிலுள்ள பூணூலை மட்டும் அறுத்தெறியாமலிருக்கிறீரே!"
என்று யாராவதொரு காங்கிரஸ்காரரைப் பார்த் துக் கேட்க வேண்டியிருக்கும். அப்போது அவர் கேட்பார், "நீர் செட்டியார்தானே! பூணூல் உண்டே! நீர் மட்டும் போட்டுக் கொள்ளலாமா!" என்று.
"அட பைத்தியக்காரரே! நானும் இன்னும் 20 பேரும் சேர்ந்து 1946ஆம் வருஷத்து ஆவணி அவிட்டத்தன்றைக்கே அறுத்தெரிந்து விட்டோம்! இது தெரியாதா?
"விடுதலை"ப் பத்திரிகை படித்தால்தானே இதெல்லாம் தெரியும்?" என்று கூறலாமல்லவா?
பார்ப்பனத் தோழர்களுக்கு ஒரு வார்த்தை, பூணூலின் தத்துவம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ? நான் சொல்லுகிறேன். கேளுங்கள்! மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் கட்டுப் படுத்துவதன் சின்னமாகவே முப்புரிகளைக் கொண்ட பூணூல் அணியப்படுகிறது என்கிறது உங் கள் சாஸ்திரம்! ஆனால், உங்களில் எத்தனைபேர் இம்முன்றையும் கட்டுப்படுத்தியவர்கள்? அல்லது கட்டுப்படுத்த முயன்றவர்கள்? அல்லது முயன்று வெற்றி பெற்றவர்கள்?
'இராஜபார்ட்' போட்டுக் கொண்டு நாடகத்தில் நடிப்பவன் மறுநாள் காலையில் அரை "கப்" காப்பிக்கு அலைச்சலாய் அலைகின்றான், பாவம்! அது இராத்திரி வேடம்! ஆனால் நீங்கள் போடுவது பகல் வேடமல்லவா?
உங்களில் எத்தனையோ பேர் யோக்கியர்களாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கலாம்! அப்பேர்ப்பட்டவர்களாவது, பூணூலை அறுத்து, நெருப்பில் போடாவிட்டாலும், உங்கள் வீட்டில் துணி உலர்த்தவாவது கட்டிவையுங்கள்! உங்கள் விலாசத்தை மட்டும் எனக்கு அனுப்பினால் போதும்!
அந்நிய நாட்டுத் துணியை அவிழ்த்து நெருப் பில் வீசிய தேசபக்தர் பிராமணர்களுக்கு, இது ஒரு பிரமாதமான காரியமாயிருக்க முடியாதே! ஒருக்கால் இப்படிச் செய்வதற்கு நடுக்கமாயிருக்கி றதோ? அப்படியானால், கண்ணை இறுக்கி மூடிக் கொண்டு உங்களுக்குத் தோழராயுள்ள ஒரு சுயமரியாதைக்காரரைக் கூப்பிட்டுச் செய்யச் சொல்லுங்களேன்! அவர்கள் பூணூல், விபூதி, ருத்திராட்சம், நாமம் இந்த வேடங்களைக் களைந் தெறிவதில் வீரர்கள்! ஆனால் மற்றவர்களுக்கு மட்டும் தொல்லை கொடுக்க மாட்டார்கள்!
இவர்கள் ஹிந்து சமூதாயத்தின் டாக்டர்கள்! நீங்கள் விரும்பிக் கூப்பிட்டால் உதவிக்கு வரு வார்கள்! டாக்டர்கள் கட்டியை அறுப்பது போல, பூணூலை மட்டுமல்ல, குருட்டு நம்பிக்கைகள் எதையும் ஒரே நிமிடத்தில் அறுத்தெறிவார்கள்! உதவி தேவையானால், கூப்பிடுங்கள்! 

சகுனம் பார்க்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. சுமார் 20 வருஷங்களாவே கிடையாது. அதற்கு முன்புகூட அவ்வளவு கண்டிப்பாய் இருந்ததாக ஞாபகமில்லை. உங்களில் எத்தனைபேர் சகுனம் பார்க்கிறீர்களோ எனக்குத் தெரியாது.
ஒற்றைப் பிராமணன் எதிரே வந்தால் கெட்ட சகுனமாம்; இரட்டைப் பிராமணன் வந்தால் நல்ல சகுனமாம்! பார்ப்பான் தனியே வந்தால் எதிரிகள் ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்திருந்த அந்தக் காலத்தில் ஏற்பட்டது தானே! ஒருவருக்கு இருவராயிருந்தால் ஏதோ கொஞ்சம் தைரியமாகவாவது இருக்காதா என்ற நினைப்பில் எழுதி வைத்திருக்கலாம்!
காலந்தான் மாறிவிட்டதே! எத்தனை பிராமணர் கள் சேர்ந்து வந்தால் தான் இன்று என்ன செய்ய முடியும்! ஒன்று மூவர்ணக்கொடி பிடித்துக் கொண்டு வரவேண்டும்! அல்லது பிரிட்டிஷ் துப்பாக்கிக்குப் பின்னால் வரவேண்டும்! அல்லது "கடவுள்" என்ற "அணுக்குண்டு"க்கு முன்னால் வேதம் படித்துக் கொண்டு வரவேண்டும்! அல்லது கம்பர் மகாநாட்டு ஊர்வலத்தின் நடுவில் வரவேண்டும்!
இன்னொரு நல்ல சகுனமிருக்கிறது, பஞ்சாங்கத்தில்! சகுனத்தில் நம்பிக்கையுள்ளவர்களைக் கண்டால், கட்டாயம் கவனித்து ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். அது என்ன தெரியுமா? புலி இடமிருந்து வலமாகப் போனால் நல்ல சகுணமாம்! யாருக்கு நல்ல சகுணம்? புலிக்கா சகுனம் பார்த்துப் போகிறவனுக்கா, என்று பஞ்சாங்கத்தில் கூறவில்லை! "நாமாகக் கட்டாயப்படுத்திச் செய்யக்கூடாது என்று சகுன நம்பிக்கைக்காரர்கள் சொல்லுவார்கள். அப்படியானால், புலிகள் தாராளமாக நடமாடும் பகுதிகளுக்காவது போய் பரீட்சைப் பார்த்து வரச் சொன்னால்தான் நல்லது! நம் முன்னோர்கள் எழுதியதெல்லாம் பொய்யாகாது! சும்மா போய் வரச் சொல்லுங்கள்! அல்லது போகச் சொல்லுங்கள்!

     --------------------------"காலி மணிபர்ஸ்" என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. "குடிஅரசு" - 07.09.1946

4.3.18

பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான் - பெரியார்
தந்தை பெரியார்
இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை?  எது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே!  நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 11/2 (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த 11/2 வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 11/2வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரி யங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?
தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல் லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப் பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து  கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?
இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள்  மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள், முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின்  மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு  செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.
இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய  எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?
கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக  நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று  எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசி பாலிட்டிகளும்  கிராமப் பஞ்சாயத்துக்களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்ற வர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப் பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன்.  இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?
என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.
இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை  என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது  இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு  வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண்டியின் மகன் பன்றி மேய்ப்பது  ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும்  செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.
என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது  வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்க மாக, சுதந்தரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயண மாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப் படுகிறது. இதுவா முறை? மக்கள்  யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய  ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர் களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.
தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடு படுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு  விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச் சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய  இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக  முயற்சி செய்கிறார்.  நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய  பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான் ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்கு பவர்களாக  இருக்கிறோம்.
தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலு ழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்றோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது  சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.
நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப் படி செய்ய லாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான்  இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப் பான் இவையென்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம். உடலு ழைப்புச் செய்வது என்பது மேல் கீழ் என்கிற தன்மையில் தான், அதாவது கீழ்சாதிக்காரர்கள் என்பதாக மதத்தின் பேரால், கடவுளின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் ஆக்கப் பட்டவர்கள் என்பவர்கள் தான் செய்ய வேண்டும். அந்தப்படி அவர்கள் செய்வதாலேயே அவர்கள்  கீழ்சாதி மக்கள் என்பதான அமைப்பு முறை, சமூக முறை இருக்கிறதே, அதைத்தான் நாங்கள்  ஆட்சேபிக்கிறோம்; கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள்  எந்த வேலை செய்வதையும் இழிவானது என்றோ, கீழானது என்றோ கருதவில்லை, ஆனால் நீங்களும் செய்யுங்களேன், உங்கள் விகிதாசாரப்படி!
தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப் பனர்கள் - இந்த  நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று  சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.
வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்,  இந்தப்  பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000  ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!
வெள்ளைக்கார அந்நியன் 6000 மைலுக்கு அப்பால் வெகுதூரத்தில் இருந்ததால், தன் ஆதிக்கத்தைக் காப் பாற்றிக் கொள்ள, இந்த நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்தான் என்றாலும் நம்மை மனிதனாக நடத் தினான். நம் ஆட்களிடம் சாப்பிட்டான்; நம் ஆட்களைத் தொடமாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் பறையர்கள் என்று  இந்தப் பார்ப் பனர்களால்  அழைக் கப்படுகிற  மக்கள்தானே அவனுடைய  சமையல்காரர்களாக பட்லர்களாக இருந்தார்கள்?
ஆனால் இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம்  மக்கள்  தலை யெடுக்கவிடாமல்  எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறை களையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே!  ஆதலால் இப்படிப் பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?
இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?
வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட் டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ் டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!
இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.
ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்று வதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே  தீர வேண்டும்? ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்ட வாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும்  யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நியனுக்கா? இல்லையே! நமக்குத் தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும். ஆகவே, தோழர்களே இன்று சமுதாயத் துறையில், அரசியல் துறையில் நமக்குக் கேடாக இருப்பது இந்தப் பார்ப்பனர்கள்தான்.
பார்ப்பனர்களும் முடிவுகட்டிக் கொண்டார் கள், இரண்டி லொன்று  பார்த்துவிடுவது என்று. ஆச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார், இப்போது நடைபெறுகிறது தேவ- அசுர போராட்டம் என்று. அப்படியென்றால் என்ன? ஆரிய - திராவிடப் போராட்டம் இராமாயணம் போல் துவங்கி விட்டதென்று  தானே பொருள்?
இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்  சிலர்தான் இதை இன்னும்  உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!
நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட  மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக் களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன்  என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.
இன்று தோழர் ஆச்சாரியார் அவர்கள்  பாடுபடுகிறார் என்றால், எதற்கு ஆகப்பாடு படுகிறார்? அவருடைய சொந்தத்துக்கா? அவருக்கு ஏதோ இப்போது பல லட்சம் ரூபாய் இருக்கிறது என்கிறார்கள். ஆதலால் பணம் வேண்டும் என்பதற்காகப் பதவியில் இல்லை. அது போலவே அவர் பல பெரிய பெரிய பதவிகளில் எல்லாம்-கவர்னர்-ஜெனரல்-பதவிகளில் எல்லாம்  இருந்திருக்கிறார். ஆதலால் இது அவரைப் பொறுத்தவரையில் சாதாரணப் பதவிதான். அதுபோலவே தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் முதலியவைகளுக்குச் சேர்த்து வைக்க வேண் டும் என்ற கருத்திலும் அல்ல அவர் பதவியிலிருப்பது.
அவருடைய மந்திரிப் பதவிக்கு எவ்வளவு எதிர்ப்பு? என்றைக்குச் சாயுமோ என்கிற நிலையும் இருந்தாலும் இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு உடும்புப் பிடியாய் இருக்கிறார் என்றால், எதற்கு? அவர் தன் இனத்தைக் காப்பதற்கு; பார்ப்பன சமுதாயத்தின் பாது காப்புக்கு ஆகத்தான். தாம் (பதவியில்) இருக்கிறதுக்குள்ளே எல்லா இடத்திலும் பார்ப்பனர்களை நிரப்பிவிடவேண்டும்.  சூத்திரர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அவர் பதவியில் இருக்கிறார். இந்தப் புத்தியும், உணர்ச்சியும் இன வெறியும் நமக்குள் இல்லையே! அவர் எப்படிப் பார்ப்பன இனத்தின்  நன்மைக்கு  ஆகப் பாடுபடுகிறாரோ, அது மாதிரி நம்மவர்கள் பாடுபட முன்வர மாட்டேன் என் கிறார்களே!
நமக்கு இன உணர்ச்சி  கட்டுப்பாடு இருந்திருக்குமே யானால் இந்த ஆச்சாரியார் தானாகட்டும், அல்லது பார்ப்பனர்கள் தானாகட்டும் இவ்வளவு மேலே போயிருக்க முடியுமா? நமக்கு இன உணர்ச்சி அத்தகைய அறிவு இல்லை யென்பதாலேயே நாளுக்கு நாள் அவர்கள் மேலே மேலே போகிறார்கள்.
தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப் பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி  நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத் தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதி ராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் - என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக் கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு  பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.
நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது - நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?
பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான்
நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசு பவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய  தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும்  பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!
தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம்  எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்ததால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும்  என்றெல்லாம்  சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்தியமூர்த்தி.
இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு  வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக  எதிர்க்கிறார்கள். ஆனால் நம்மவருக்கு இந்த உணர்ச்சியே  இல்லையே! செருப்பால் அடித்தாலும் ஸ்ரீ பாதம் சடகோபம் என் கிறார்களே!
இன்று, திராவிட மக்களை அழித்து ஒழித்துக் கட்டுவதற்கு என்றே ஆட்சிப் பீடம் ஏறியிருக்கிற (இராச கோபால) ஆச்சாரியார் அவர்களைச் சுற்றிக்கொண்டும், அவருக்குத் ததாஸ்து பாடிக்கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தானே! நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப்பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்தான்.
இன உணர்ச்சியும், மானமும் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்?  என்றைக்குத் தான்  நம்முடைய  இழிநிலைமை ஒழியும்?  எவ்வளவு கொடுமையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங் களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திராவிட மக்கள் இதை உணர வேண்டும்.
   ---------------------------15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 17-11-1953