Search This Blog

29.4.18

பார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பெரியார் பாதையில் செல்லுங்கள்

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இப்போது "பார்ப்பனர் உணவு விடுதி களில் உண்ணக் கூடாது'' என்று - பெரியார் அவர்கள் சொல்கிறார்கள் என்றால் இதில் மாணவர்கள் முற்றிலும்  கலந்து கொள் ளலாம், இதில் பங்கேற்கலாம். அரசியலாரை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் மக்கள் மட்டுமே கலக்க  வேண்டும்; எந்தப் பகுதியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பெரியார் அவர்கள் கூறுகிறார்களோ அதில் கலந்துகொள்ளக் கூடாது. நம்முடைய சீர்திருத்தப் போராட் டத்திற்கு வேண்டிய கிளர்ச்சிகள் உங் களிடமே உள்ளன.  எத்தனை முயற்சிகள் எந்தெந்த முயற்சிகள் உண்டோ - அத்தனை முயற்சிகளையும் கையாள வேண்டும்.
இரண்டு தண்ணீர்ப் பானைகள் வைக் கப்பட்டு ஒன்று நமக்கு என்றும், மற்றொன்று பார்ப்பானுக்கு என்றும் கூறப்பட்டால் சும்மாவிடலாமா? இது போன்ற சின்ன தகராறுக்கெல்லாம்கூட பெரியாரிடம் சொல் லலாமா? நாமே இதற்கு முடிவுகட்ட வேண்டும்.
பெரியார் பாதையில்செல்லுங்கள்
ஆகையினால் தோழர்களே! எது அரசியல் பகுதி, எது சமூகப் பகுதி என்பதை நீங்கள் நன்கு அலசிப் பார்த்து போராட வேண்டும். இப்படிப்பட்ட சமுதாயத் துறையில் பெரியாருக்கு முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு, நீங்கள் அவர் வழி நிற்க வேண்டும். அவர் பாதையில் செல்ல வேண்டும்.
தியாகத்தால் வளர்ந்த இயக்கம்
சிதம்பரம் பக்கம் பரதூர் என்ற ஊரிலே ராஜன் என்ற வாலிபர் இருந்தார். இந்த இயக்கத்திலே ஆழ்ந்த பற்றுள்ளவர். அந்த ஊரிலேயே நம் இயக்கத்தின் கூட்டம் ஒன்றைப் போட்டார். அதற்கு அந்த ஊரில் உள்ளவர்கள் என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? நீங்கள், சற்று கவனமாகக் கேளுங்கள்; அவருடைய மனைவியைத் தூக்கிச் சென்றனர். அவரையும் அடித்து ஊரை விட்டு விரட்டினர். அவருடைய வீட்டைப் பிடுங்கிக் கொண்டு, அவருடையது அல்ல  என்று சொல்லி விட்டனர். தாய், பாட்டி முதலியோரை ஊருக்கு அனுப்பி விட்டனர். கடைசியிலே மானத்திற்கு இழுக்கு வந்ததை எண்ணி எண்ணி ஏங்கிய அந்த தமிழன் தஞ்சைக்கருகில் உள்ள கரந்தை கல்லூரிக்குப் பக்கத்தில் தூக்கிட்டுக் கொண்டு மாண்டார். அதைப் போல பல பல உத்தமர்கள் தியாகம் செய்து வளர்த்த இயக்கம்.
எதிரியின் பெரும் சதி

 சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டுவிழா.சகஜானந்தாவுக்கும், சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணிப் பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பெரிதும் விரும்பினார். பெரியார் அவர்களும் வர ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் சனாதனிகளும், தீட்சதர்களும் எதிர்ப்பைப் பலமாகக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அன்றைய தினம் கலகம் செய்ய ஆயிரக்கணக்கில் திரண்டுவிட்டனர். ஒவ்வொருவனிடமும் கல், தடி, கத்தி போன்ற ஆயுதங்கள் உள்ளன. அன்று பெரியாரை ஒழித்து விடுவது என்றே திட்டமிட்டு விட்டனர். நிலைமை மிக மிக பயங்கரமாக இருந்தது.
நாங்கள் பத்து பேர்கள்  போயிருந்தோம். இந்த நிலையைப் பார்த்து விட்டு பயந்தே போனோம். உடனே நாங்கள் ரயிலடிக்குப் போய் பெரியார் வந்ததும் திரும்பப் போகச் சொல்லி விடுவது என்று முடிவு கட்டிக் கொண்டு ரயிலடிக்குப் போனோம்; பெரியார் வராமலேயே இருந்தால் நல்லது என்று எண்ணினோம். 

பெரியாரின் ஆண்மையும் வீரமும்
ஆனால் வருகிறேன் என்று கூறியிருந்த   வண்டியில் வந்திறங்கினார்.  உள்ள நிலைமையைக் கூறினோம். கேட்டுக்கொண்டே 'விடு விடு', என்று ஊருக்குள் போனார். போகவேண்டாம் 'ஆபத்து ஆபத்து' என்று கூறக் கூற கேட்டுக் கொண்டே  போனார். எந்த வழியில் போகக் கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியில் போனார். போய்  'டக்'  என்று நின்றார். அதுவும்  எந்த  இடம்? எந்த இடத்தில் நிற்கக் கூடாது என்று நினைத்துப் பயந்தோமோ அதே இடம்; போலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம்பித்து விட்டது. போலிகளின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்துவிட்டன. 'இன்று என்ன செய்யப் போகிறோம்?' என்று எங்கள்  கூட்டில் உயிர் இல்லை.
எதிரிகளின் மனதையும் ஈர்த்த பேச்சு

 இந்த நிலையில் பேசவும்  ஆரம்பித்து விட்டார். எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும்  முறையில், அழகாக உள்ளம் கவரும் விதத்தில் பேசினார். "உங்கள் பையன் ஒருவன் படித்திருக் கிறான்; பார்ப்பனரின் பையன் ஒருவன் படித்திருக்கிறான், நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றுதானே? ஆனால் இன்றைய பார்ப்பன ஆதிக்கத்தில் யாருக்குக் கிடைக்கும்? இதைத்தானே கூறுகிறேன்" என்றார்.  உயர்த்திய கரங்கள் தாழ்ந்தன. அனைவரின் மனமும் சிந்திக்க ஆரம்பித்தன; "கடைசியில் மூட நம்பிக்கையின் பிறப்பிடமான இந்த ஊர் ஆலயத்திலே உள்ள நடராசன் சிலையைக் கொண்டு வந்து திருப்பிப்போட்டு வேட்டி துவைப்பேன்" என்றார் எதிர்த்த கரங்கள் திரும்பி தட்டுதலின் மூலம் ஓசையைக் கிளப்பின. அன்று சாகடிக்கப்படவிருந்த பெரியார், 'நடராஜன் கோவில் துவம்சமாக்கப்பட வேண்டும்' என்றும்,  அன்றே ஆக வேண்டுமென்றும் பெரியார் கட்டளையிட்டிருப்பாரேயானால் ஒரு நொடியிலே ஆகியிருக்கும். அப்படிப் பெரியார் அவர்கள் பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த இயக்கம். எந்த இயக்கம் நிலையானது - எந்த இயக்கம்  மக்களுக்கு உண்மையாகப் பாடுபடுவது - எந்த இயக்கம் நம் சமுதாயம் முன்னேற உண்மையாக உழைக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் சேர வேண்டும்.  தமிழ் மாணவர்கள் எல்லோரும் ஒற்று மையாக இருக்க வேண்டும். பார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது. எஞ்ஞான்றும் விழிப் போடு இருக்கவேண்டும். பெரியார் அவர்கள் சொல்கின்ற அறிவுரைகளை அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டும்.


              ---------------------1957ஆம் ஆண்டு, 'பிராமணாள்' உணவு விடுதிகளுக்கு எதிராக, தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சாதி ஒழிப்புப் போராட்டத் தீ தமிழகத்தின் மூலை முடுக்கெல் லாம், பட்டி -- தொட்டியெல்லாம் கொழுந்துவிட்டு எரிந்த நேரம். இந்தப் பின்னணி யில் 23--.6.-1957 அன்று குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில் புரட்சிக்கவிஞர் ஆற்றிய வீர உரையின் பகுதிகள் இவை.