Search This Blog

31.7.11

நிருபமாராவுக்கு ராஜபக்சே விருந்து


இந்தியாவின் வெளி யுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இன்று ஓய்வு பெறுகிறார். வெளியுறவுத் துறைக்குப் பெண் ஒருவர் என்று பெண்ணியவாதிகள் பெருமைப்பட்டதுண்டு. மேற்கொண்டு அமெரிக்கா வுக்கு இந்தியாவின் தூதராகப் பதவியேற்கவும் இருக்கிறார்.

அந்த நிருபமாராவ் இன்றைக்கு எங்கிருக்கிறார். தெரியுமா? இலங்கையிலே இருக்கிறார்? அலுவல் நிமித்தமா? அல்ல அல்ல; சிறப்பு விருந்தினராக - சிறப்பு அழைப்பின் பேரில் சென்று இருக்கிறார். அன்பழைப்புக் கொடுத்த அந்தப் பிதா மகன் யார்? இட்லரின் மலிவுப் பதிப்பான, இடி அமீனின் அசல் நகலான ராஜபக்சேதான் இந்த அழைப்பைக் கொடுத்தவர்.

பதவி ஓய்வு பெறும் நாளில் அப்படி என்ன அவசரம் என்ற ஆவலான கேள்வி எழுமே!


இலங்கைப் பீடாதிபதி சிறப்பு விருந்து கொடுத்து பாராட்டுத் தெரிவிக்கிறராம்; அதில் கலந்து கொள்ளத்தான் இந்த அம்மையார் சென்றுள்ளார்.

ராஜபக்சே விருந்து கொடுத்து உபசரிக்கிறார் என்றால் இதன் பொருள் என்ன? ஈழத் தமிழர்கள் விஷயத்தில் இலங்கை அரசுக்கு விசுவாசமாக நடந்திருந்தால்தான் - ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட பல வகைகளிலும் நேசக்கரத்தை நீட்டியிருந்தால்தான் ராஜபக்சேவிடமிருந்து இந்தப் பாராட்டு, உபசரிப்பு நடக்க முடியும் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளப்படும் ஒன்றே.

நரவேட்டை ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில், இந்தியாவின் வெளியுறவுச் செயலர், ராஜபக்சேவின் சிறப்பு விருந்தினராகச் செல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? ராஜபக்சேக்கள், பெண் உருவத்தில்கூட இருப்பார்களோ! என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.

இந்திய அரசின் அனுமதியோடுதான் இதில் கலந்து கொண்டு இருக்கிறாரா என்று தெரிய வில்லை. இந்தியா அப்படி ஓர் அனுமதி கொடுத்திருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை! மனித உருவத்தில் நட மாடும் சிங்கள வெறியர் ராஜபக்சே என்ற கொடூரனுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பை இந்திய அரசு கொடுப்பதில்லையா!


சோ என்ற நரிப் பார்ப்பனர் ஒருமுறை ஜெயவர்த்தனே விருந்தாளி யாகச் சென்று தங்கிய துண்டு.

சந்திரிகா குமாரதுங்கே அளித்த சிங்கள ரத்தினா என்ற விருதை இந்து ஏட்டின் ஆசிரியர் என்.ராம் பெறவில்லையா?

சிங்களவனுக்குத்தான் தமிழன் மாமிசப் பிரியாணி பிடிக்கும் என்று பொருளல்ல - இந்தியாவில் உள்ள ஆரியர்களுக்கும்கூட தமிழனின் மாமிசக் கொத்துக் கறியிலும், பிரியாணியிலும் அமோகமான ஆசை வெறியுண்டே!

--------------- மயிலாடன் அவர்கள் 31-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

கருமாதி பத்திரிகை ஜாக்கிரதை!


பாம்புக்கு விறுவிறுத்தால் பொந்துக்குள் தங்காது என்பது நாட்டில் ஒரு பழமொழி உண்டு. தினமலரும் அந்தப் பாம்புப் பட்டியலில் இடம் பெறக்கூடியது தான்.

வாரம் ஒரு முறையோ, இரு முறையோ திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களைச் சீண்டாவிட்டால் எஜமான் படி அளக்க மாட்டார் போல் தெரிகிறது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அரசு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பது எங்களைப் போன்றவர்களுடைய வேண்டுகோள்.

டவுட் தனபாலு: அப்படின்னா என்ன அர்த்தம் . . . ? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அவரைக் கைது பண்ணா சரியா இருக்கும் கிறீங்களா? உங்களுக்கு ஸ்டாலின் மேலே அப்படி என்ன கோபம் . . .?

----------------(தினமலர் 31-7-2011 பக்கம் 8)

இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அரசு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் அரசுக்குச் சொன்ன அறிவுரையின் பொருள் என்ன?

ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவர்களுக்கு உடனடியாகக் கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் உண்டு. ஆக்க ரீதியான சிந்தனையும், செயல்பாடுகளும் தேவைப்படும்.

அதையெல்லாம் விட்டு விட்டு, அவசர அவசரமாக எதிர்க்கட்சிக்காரர்களைப் பழி வாங்குவது, கடந்த ஆட்சியில் செயல் படுத்தப்பட்ட நல்ல திட்டங்களுக்குக் குழி வெட் டுவது என்பது போன்ற அடாவடித்தனங்களில் ஓர் ஆட்சி ஈடுபடுவது எளிதில் கெட்ட பெயரைத்தான் சம்பாதிக்க இடம் கொடுக்கும் என்ற பொருளில் சொல்லப்படும் கருத்தைக்கூட, ஆட்சிக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு துக்ளக் தினமலர் போன்ற ஏடுகள், ஏற்கெனவே போதை ஏறியவனுக்கு மேலும் மேலும் ஊத்திக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

இவர்களிடத்தில் இந்த ஆட்சி எச்சரிக்கையாக இல்லை என்றால் நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு நட்டாற்றில் விட்டு விடுவார்கள் என்பதில் அய்யமில்லை. ஏற்கெனவே தினமலருக்கு கருமாதி பத்திரிகை என்ற ஒரு பெயர் உண்டு. அந்த வேலையைச் செய்ய ஆட்சி இடம் கொடுத்தால், நாம் என்னதான் செய்யமுடியும்?

------------------"விடுதலை” 31-7-2011

அகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது! - கி.வீரமணிமுதல் அமைச்சர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்காதது ஏன்?
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உட்பட அனைத்துக் கல்வித் துறைகளிலும் நுழைவுத் தேர்வு சட்டரீதியாக ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்திய ரீதியில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு என்கிற மருத்துவக் கவுன்சிலின் முடிவைத் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது. இதுகுறித்துத் தமிழ்நாடு முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்தியே தீர்வது என்பதில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒற்றைக் காலில் நிற்கிறது. கடந்த ஆண்டே அறிவிப்பையும் வெளியிட்டது (21.12.2010). இதனை எதிர்த்து தி.மு.க. அரசு தொடர்ந்த வழங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி இடைக்காலத் தடையும் விதித்தார்.

உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு!


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நுழைவுத் தேர்வு கிடையாது என்று திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது (2007). அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையிலும், தமிழ்நாடு சட்டம் செல்லும் என்ற தீர்ப்புப் பெற்றாகி விட்டது.

கடந்த ஆண்டு மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வு அறிவிப்புத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் தி.மு.க. அரசு தன்னையும் (Implead) இணைத்துக் கொண்டு வாதாடியது. மத்திய அரசும் மாநிலங்களின் கருத்தறிந்து இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.

திராவிடர் கழகம் போராட்டம்


மருத்துவக் கவுன்சிலின் நுழைவுத் தேர்வு முடிவை எதிர்த்துத் திராவிடர் கழகம் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது (29.12.2010). இந்த ஆண்டு அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு உண்டு என்று மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது, உச்சநீதிமன்றமும் ஒப்புதல் தந்து விட்டது.

மாநில அரசின் உரிமையில் தலையிடுவதா?


இது கண்டிப்பாக மாநில அரசின் உரிமையில் தலையிடும் அத்துமீறிய செயல்தான் என்பதில் அய்யமில்லை. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 15 சதவிகிதமும் முதுகலைப் படிப்புக்கு 50 சதவிகிதமும் மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் செல்வதோடு அல்லாமல், அகில இந்திய அளவில் ஒட்டு மொத்தமான இடங்களுக்கும் நுழைவுத் தேர்வு என்றால் - இது குரங்கு அப்பம் பிரித்த கதைதானே! அவ்வளவு ஏமாளியாக மாநிலங்கள் இருக்கின்றன என்கிற நினைப்பா? இதில் இன்னொரு கொடுமை - சமூக அநீதி என்னவென்றால் இதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது; எஸ்.சி., எஸ்.டி.க்கு மட்டும் உண்டு - என்னே பிரித்தாளும் தந்திரம்!

மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மேலானதா மருத்துவக் கவுன்சில்?

மற்ற மற்ற மாநிலங்களில் கருத்தறிந்து முடிவு செய்யப்படும் என்று கடந்த ஆண்டு கருத்துத் தெரிவித்த மத்திய அரசு - இவ்வாண்டு நுழைவுத் தேர்வுக்குப் பச்சைக் கொடி காட்டியது எந்த அடிப்படையில்? மற்ற மற்ற மாநிலங்களில் கருத்துக்களைக் கேட்டு அறிந்துதான் இந்த முடிவுக்கு வந்ததா என்பது விளக்கப்படவில்லை.

மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசின் நிதியால்தான் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மாநில அளவில் மாணவர் சேர்க்கைக்கு எந்த மாதிரியான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தானே முடிவு செய்ய முடியும்?

அகில இந்திய அளவில் அய்.ஏ.எஸ். போல அகில இந்தியக் கல்வித்துறை (அய்.இ.எஸ்.,) ஒன்றைக் கொண்டுவருவது குறித்துக்கூட யோசனை இருப்பதாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு கூறினார். பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண்ணை மாநில அரசு நிர்ணயித்தால் அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் (ஏ.அய்.சி.டி.) வேறொரு மதிப்பெண்ணைக் கூடுதலாக நிர்ணயிக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால் மாநில அரசு என்ற ஒன்றே தேவையில்லை என்ற பழைய ஜன சங்கம் (ஆர்.எஸ்.எஸ். கொள்கை) கூறி வந்தபடியான முடிவு எடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்வியைப் பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

அதனை வலியுறுத்தக் கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்தை மத்திய அரசு நிர்ப்பந்தித்துக் கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக வரும் செப்டம்பரில் சென்னையில் ஒரு மாநாடு கூட்டப்படும். +2 தேர்வு என்பது அரசு நடத்தும் தேர்வு தானே! அதில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்வது குற்றமான காரியமா? தேர்வுக்கு மேல் தேர்வு என்பதன் அவசியம் என்ன?

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான பாடத் திட்டமா இருக்கிறது? பல மொழி, பல இனம், பல்வேறு புவியியல் நிலை, ஏற்றத் தாழ்வான கல்வி வளர்ச்சி உள்ள ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது எப்படி சரியாகும்? போட்டித் தேர்வும் தகுதித் தேர்வும் ஒன்றல்ல; இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

இந்தி, இங்கிலீஷில் மட்டுமே நுழைவுத் தேர்வு எழுத முடியும் - இது இந்தி வாலாக்களுக்குத்தானே சாதகம்?


நீதிபதிகள் கூறியதென்ன?


நுழைவுத் தேர்வுதான் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோலா? இதுகுறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (27.4.2007)

நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சமநிலை என்பதும் கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தேடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல, அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்களே - அதுதானே உண்மை?

என்ன கெட்டு விட்டது?


நுழைவுத் தேர்வு இலலாமல் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்று, வெளியில் வந்து தொழில் செய்து கொண்டு இருக்கிறார்களே, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன? அகில இந்திய அளவில் மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாகத்தானே தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

இவர்கள் சொல்லுகிற மதிப்பெண் அளவுகோல்தான் தகுதியை நிர்ணயிக்கிறது என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் இவ்வாண்டு தமிழ்நாட்டில் +2 தேர்வில் கட்ஆஃப் மதிப்பெண் விவரம்: 200-க்கு 200 - 69 பேர்கள்; 199.75 - 198 மதிப்பெண் பெற்றோர் 1099; 197.97-195 - 2007 பேர்; 194.75-190 - 3180 பேர்; இந்த மதிப்பெண்கள் போதுமானவை இல்லையா? இதைவிடத் தாண்டியதா நுழைவுத் தேர்வு?

சமூகநீதிக்கு எதிரானது!


சமூகநீதியை ஒழிப்பதும் - கிராமப்புற மாணவர்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதும்தான் நுழைவுத் தேர்வின் பின்னணி என்பதில் அய்யமில்லை. மாநிலங்களிலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு மருத்துவக் கல்லூரி இடங்களை மேலும் அள்ளிச் செல்லுவதற்கான சூழ்ச்சிதான் இதன் பின்னணியில் இருக்கிறது. இந்தியா - முழுமையும் நுழைவுத் தேர்வைத் திணித்தால்கூட அம்மாநிலங்கள் ஏற்றுக் கொண்டால்கூட, தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி மண்ணாகிய தமிழ்நாடு அதனை ஏற்றுக் கொள்ளாது - இது உறுதி!

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?


இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? முதல் அமைச்சர் அவர்கள் இதுபற்றிய கருத்தினை இதுவரை தெரிவிக்காதது ஏன்?

69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க முன்வந்த முதல் அமைச்சர் அவர்கள், இந்த முக்கியமான பிரச்சினையில் தமிழ்நாட்டின் கருத்தினை உறுதியாக முன்வைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

2011-2012ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் நிறைவு பெற்றது என்றாலும் அடுத்தடுத்து வரவிருக்கும் ஆபத்தினை முன்கூட்டியே தடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

--------------கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் "விடுதலை” 31-7-2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -4

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (4)

ஆரம்ப அணுகுண்டு அதுதான்!

எல்லாவற்றிலும் பார்ப்பனமயம் என்ற கொடி ஆணவத்தோடு பறந்து கொண்டிருந்தது. நூற்றுக்குத் தொண்ணூற்றேழு சதவிகிதமான பார்ப்பனர் அல்லாத மக்கள் - மண்ணுக்குரிய மக்கள் கை பிசைந்து நின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு புள்ளி விவரம் (1912) நூற்றுக்கு மூன்று பேர்களாக இருந்த பார்ப் பனர்கள் டிப்டி கலெக்டர்களில் 55% சப் ஜட்ஜ்களில் 83%

மாவட்ட முன்சீப்புகளில் 72% என்ற நிலை.

அதே ஆண்டில் சென்னை மாநில சட்ட மன்றத்தில் இடம் பெற்றிருந்தவர்கள் யார் யார் தெரியுமா?

உள்ளாட்சித் துறைகளிலிருந்து வந்தவர்கள்

(1) தென் ஆர்க்காடு - செங்கற் பட்டுத் தொகுதி - வழக்கறிஞர் ஆர். சீனிவாச அய்யங்கார்.

(2) தஞ்சாவூர் _ திருச்சிராப்பள்ளி தொகுதி _ வி.கே. இராமானுஜ ஆச்சாரியார்

(3) மதுரை இராமநாதபுரம் தொகுதி _ கே. இராமையங்கார்.

(4) கோவை _ நீலகிரி தொகுதி _ சி. வெங்கட்ரமண அய்யங்கார்.

(5) சேலம் _ வடாற்காடு தொகுதி _ பி.வி. நரசிம்மய்யர்

(6) சென்னை நகரம் _ சி.பி. இராமசாமி அய்யர்

டில்லி மத்திய சட்டசபையில் இடம் பெற்றவர்கள் செங்கற்பட்டு மாவட்டம் எம்.கே.ஆச்சாரியார்! சென்னை: திவான் பகதூர் டி. ரங்காச்சாரி.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். சுப்பிரமணிய அய்யர்! வி. கிருஷ்ண சாமி அய்யர், டி.வி. சேஷகிரி அய்யர், பி.ஆர். சுந்தரம் அய்யர்.

இத்தகு இறுக்கமான பார்ப்பன ஆதிபத்திய சூழலில்தான் நீதிக்கட்சி உதயமாயிற்று என்பதை மறக்கக் கூடாது.

துக்ளக் பார்ப்பன வகையறாக்களுக்கு மூக்கின்மேல் புடைத்துக் கொண்டு வருகிற ஆத்திரம் - இவ்வளவுப் பெரிய அக்கிரகார ஆதிக்கக் கோட்டையை உடைத்து விட்டார்களே இந்தப் ஜஸ்டீஸ் கட்சிப் பாவிகள் என்பதுதான்!

அந்தக் காலத்தில் கல்லூரிகள் சென்னை போன்ற இடங்களில்தான். வெளியூர்களிலிருந்து சென்னைக்குப் படிக்கவரும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் கிடையாது. இருந்த விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களுடையது. பார்ப்பனர் அல்லாதாருக்கு அங்கு இடம் கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வரலாம். அங்கு தங்கி உணவருந்த முடியாது என்ற கொடுமை.

அந்தக் கால கட்டத்தில் பார்ப் பனர் அல்லாதார் தங்கிப் படிக்க சென்னையில் விடுதி ஒன்றை ஒருவர் (டாக்டர் சி. நடேசனார்) ஏற்படுத்தினார் என்றால் அது என்ன சாதாரணமானதுதானா? பாலைவனத்தில் கிடைக்கப் பெற்ற சோலையல்லவா!

பார்ப்பனர் அல்லாதார் அரசியல் உள்பட எல்லா நிலைகளிலும் உரிய இடம் பெற்றாக வேண்டும் என்று கருதியது காலத்தின் கட்டாயம் தானே!

நீதிக்கட்சி தோன்றியதும், செயல் பட்டதும் இந்த அடிப்படையில்தான்!

நீதிக்கட்சி தோன்றி 95 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட வரலாற்றின் நேர்மையான மய்ய ஓட்டத்தைப் புறந்தள்ள, கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்றால் அதனைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்யும்வரை நாம் ஓய்ந்து விட முடியுமா?

வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களால் 1916 டிசம்பர் 16ஆம் நாள் வெளியிடப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் அங்கொன் றும் இங்கொன்றுமாக வார்த்தை களைப் பிடுங்கி தம் வசதிக்கு ஏற்ப சேற்றைவாரி இறைக்கிறார் திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்.

பார்ப்பனர்களின் உத்தியோக ஆதிக்க நிலை, கல்விநிலை, சமுதாய நிலை, பார்ப்பனர் அல்லாதார் பெற வேண்டிய சுயமரியாதை உணர்வை எல்லாம் விவரித்துள்ளார் அவ்வறிக் கையில். பார்ப்பனர் அல்லாதாருக்கு ஓரியக்கம் தேவைப்படுவதன் அவசியத்தையும் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேற்றுமைகள் மறையத் தொடங்கினால் மட்டுமே சுயாட்சி பெறுவதற்கான தகுதியை நாம் பெற்றவர் ஆவோம் என்ப தையும் பதிவு செய்துள்ளார்.

இறுதியாக அந்த அறிக்கையில் பின்வருமாறு முடித்துள்ளார்.

எங்களுடைய உறுதியான நம்பிக்கை என்னவென்றால், இன்னும் சிறிது காலத்திற்காவது ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய வளர்ச்சியை முதன்மையாகக் கருத வேண் டும். பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பொழுது தான் தாழ்ந்தவன் என்று கருதாது சுயமரியாதையுடன் சம உரிமை பெற்றவன் என்று எண்ண வேண்டும். சுயமரியாதையுடன் சம நிலையிலிருந்து மற்றவர்களுடன் பணியாற்றுவதையே ஒவ்வொருவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்? என்று கூறி அறிக்கையினை நிறைவு செய்துள்ளார்.
இத்தகைய சமத்துவமும், சகோ தரத்துவமும், சமூகநீதியும் பொங்கி மணம் வீசும் ஓர் அறிக்கையைப் பார்ப்பனீயத்துக்கே உரித்தான குறுக்குப் புத்தியுடன் - குதறுவது - அவர்களுக்கே உரித்தான கோணல் புத்தியைத்தான். நிர்வாணமாக வெளிப்படுத்தும் பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக் கையைப் படித்து அந்தக் கால கட்டத்திலேயே இந்து ஏட்டுக்கு உதறல் எடுத்ததுண்டு. It is With Much Pain and Surprise that we persued the document என்று எழுதியதே! மிகுந்த வலியுடனும், திகைப்புடனும் அந்த அறிக்கையைக் கவனித்ததாம்! இருக்காதா? அதுதானே அவாள் ஆதிக்கத்துக்கான ஆரம்ப அணுகுண்டு. இன்றுவரை அந்த உதறலைக் காண முடிகிறதே!

முதல் உலகப் போருக்குப் பிறகு இந்தியர்களுக்கும் ஆட்சி அமைப்பு முறையில் போதிய இடம் அளிப்பது என்ற முடிவினை பிரிட்டிஷ் அரசு சிறப்புக் கெசட்டில் வெளியிட்டது.

இதன்மீது மக்கள் கருத்து அறிய மாண்டேகு - செம்ஸ்போர்டு ஆகிய இருவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவிடம் நீதிக்கட்சித் தலைவர் பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர் உள்ளிட்டோர் அறிக்கை ஒன்றினை அளித்தனர். வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் அளிக்கப்பட்டாலொழிய பார்ப்பனர் அல்லாதார் கடைத்தேறு வது கடினம் என்பதை உறுதியாகத் தெரிவித்திருந்தனர்.

இந்திய மக்களின் கருத்துகளைத் தொகுத்துக் கொண்டு குழுவினர் லண்டன் சென்றனர்.

இதுகுறித்து நேரில் சாட்சியம் அளிக்க இந்தியத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். பார்ப்பனர் அல்லாதார் அமைப்பின் சார்பில் டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார்.

மாண்டேகு - செம்ஸ்போர்டு அறிக்கை 1918 ஜூலை 2இல் லண்டனில் வெளியிடப்பட்டது. அதில் முசுலிம்களுக்கும், சீக்கியருக் கும் மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைந்திருந்தது. பார்ப்பனர் அல்லாதாருக்கும் தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கும் பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை.

டாக்டர் நாயர் அப்பொழுது லண்டனில்தான் இருந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் முயற்சியைக் கைவிடவில்லை. நண்பர்கள் மூல மாகவும், ஏற்கெனவே இந்தியாவில் பணியாற்றியிருந்த ஆங்கிலேய அதிகாரிகள் மூலமும் கடுமையாக முயற்சித்தார். அதன் விளைவு - பிரபுக்கள் சபையில் நாயருக்கு ஆதரவாக வாதிட்டனர். முயற்சிக்கு வெற்றி கிட்டியது. பிரபுக்கள் சபை, காமன் சபை உறுப்பினர்கள் அடங் கிய கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆங்கிலேயர்களே சொக்கக் கூடிய ஆங்கிலத்தில் புள்ளி விவரங்களை எடுத்து வைத்துப் பிளந்து தள்ளினார். பார்ப்பனர் அல்லாதா ருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் சட்டமன்றத்தில் தனித் தொகுதியின் தேவையை வெகுவாக வலியுறுத் தினார்.

இதுகுறித்துக் கருத்துகளைக் கூற இருவரைக் கொண்ட குழு ஒன்றை வெள்ளை அரசு நியமித்தது. அதற்கு சவுத்பரோ கமிட்டி (South Borough Franchise Committee என்று பெயர்.

என்ன அநியாயம் என்றால். அந்தக் குழு உறுப்பினர்கள் இருவருமே பார்ப்பனர்கள்! வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, எஸ்.என். பானர்ஜி என்ற இரு நபர்கள்தான் அவர்கள். நண்டை சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாகி விட்டது. எதிர் பார்த்தபடியே அந்த இரு பார்ப்பனர்களும் வகுப்புரிமைக்கு எதி ராகக் கருத்துகளைத் தெரிவித்து விட்டனர்.

இந்தக் கமிட்டியை புறக்கணிக்கு மாறு மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாடு (1918 அக்டோபர் 13) வேண்டுகோள் விடுத்தது.

நல்ல வாய்ப்பாக ஆங்கிலேயர் அரசு அந்த இரு நபர் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் இரண்டாவது முறையாக ஒரு வாய்ப்பினை அளித்தது. அதற்கென நியமிக்கப் பட்ட நாடாளுமன்ற பொறுக்குக் குழு முன் தங்கள் வாக்கு மூலங்களை அளிக்க இங்கிலாந்துக்கு வர அழைப்புக் கொடுக்கப்பட்டது.

நீரிழிவு நோயாளியான டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கே.வி. ரெட்டி நாயுடு, ஆற்காடு இராமசாமி முதலியார் ஆகியோரும் லண்டன் சென்றிருந்தனர்.

மருத்துவமனையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது. மருத்துவ மனையிலிருந்து குழுவைச் சந்திக்க நாயரால் முடியாத உடல் நிலையில், அந்தக் கமிஷன் உறுப்பினர்களே மருத்துவமனைக்குச் சென்று நாயரின் சாட்சியத்தைப் பெறுவதாக முடிவு செய்தனர். ஆனாலும் அந்தச் சாட்சி யத்தை அளிப்பதற்கு முன்பாகவே டாக்டர் நாயர் - தந்தை பெரியார் அவர்களால் தென்னாட்டு லெனின் என்று அழைக்கப்பட்ட அந்த வீரத் திருமகன் இறுதி மூச்சைத் துறந்தார். நாயர் மறைவு செய்தியைக் கேட்டு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடியது. சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் ஆயிரக் கணக்கான தேங்காய்களை உடைத்தனராம் அக்ரகாரத் திருமேனிகள்.

அதைவிட கொடுமை என்ன தெரியுமா? பண்பாட்டுக்கே பிறந்தவர்கள் போல ஆனந்தப் பல்லவி பாடும் இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன? காங்கிரஸ் சார்பில் சாட்சியம் அளிக்க அப்பொழுது அங்குச் சென்றிருந்த சர். சி.பி. ராமசாமி அய்யர், சுரேந்திர நாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்ய மூர்த்தி அய்யர், ஆகிய பார்ப்பனர்கள் ஒரு மனிதாபிமான அடிப்படை யில்கூட, பண்பாட்டின் அடிப் படையில்கூட மரணமடைந்த நாயர் உடலுக்கு மரியாதை தெரிவிக்கச் செல்லவில்லை.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள்தான் மல்லுக்கட்டி பேனா பிடிக்க முன் வந்துள்ளனர். பார்ப்பனர்கள் தம் தலைவர்களின் யோக்கியதையே இந்தத் தரத்தில் இருக்கிறது என்றால் சோ போன்ற வர்களின் தரம் தகரடப்பாவாகத் தானே இருக்கும்!

வீரமகன் டாக்டர் டி.எம். நாயர் மறைந்து விட்டாலும், அங்கு சென்றி ருந்த கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் டாக்டர் நாயர் நாள்குறிப்பிலிருந்து தகவல்களை தொகுத்து, பத்து நாட்கள் இரவு பகலாக உழைத்து 18 பக்கங்கள் கொண்ட அரிய அறிக் கையினைத் தயாரித்து நாடாளு மன்றக் குழுவின்முன் மெச்சத் தகுந்த முறையில் சாட்சியம் அளித்தார்.

இந்தியா என்பதை ஒரு நாடாகக் கருத இயலாது. குறிப்பாக தென்னிந்தியாவில் பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும் அடிப்படையிலே இன வேறுபாடு உண்டு. முன்னவர் ஆரியர் இனத்தைச் சேர்ந்தவர்; பின்னவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.

மதத்தின் பெயராலும், வர்ணா சிரம தர்மத்தின் பெயராலும் சிதறுண்டு திணறும் பார்ப்பனர் அல்லாத மாபெரும் சமுதாயமானது யானைப் பாகனிடம் அடங்கிப் போகப் பழக்கப்பட்ட யானைக்குச் சமமானது; சின்னஞ்சிறு குட்டிச் சமுதாயமான பார்ப்பனர் யானைப் பாகனைப் போல் பார்ப்பனர் அல்லாத பெரிய சமுதாயத்தைப் பன்னெடுங்காலமாக அடக்கி வைத்திருப்பதில் வல்லவர்கள், வஞ்சகர்கள். ஆனால், என்றெனும் ஒரு நாள் எதிர்த்து பாகனை விரட் டும் யானைபோல, பார்ப்பனர் அல்லாதார் எழுச்சிக்குப் பார்ப்பனர் கூடிப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், முடிவு ஏற்படா விட்டால் நடுவர் குழுவின் தீர்ப்புக்கு விட வேண்டும் என்றும் அந்த அறிக் கையிலே குறிப்பிட்டிருந்தார் கே.வி. ரெட்டி நாயுடு என்னதான் பிரிட் டீஷார் நல்லாட்சி நடத்தினாலும், அது எவ்வாறு இந்தியர்கள் தங் களைத் தாங்களே ஆண்டு கொள் ளும் சுயாட்சிக்குத் தகுந்த மாற்று ஆகாதோ, அதுபோலவே பிராம ணர்கள் என்னதான் நல்லாட்சி கொடுத்தாலும் அது பிராமண ரல்லாதாரின் சுயாட்சிக்குத் தகுந்த மாற்றாகாது என்னும் வைர வரிகளை அதில் பதித்திருந்தார்.

அதற்குப் பலனும் கிடைத்தது. சென்னை மாநில சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி கள் 132; அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தொகுதிகள் 98; இதில் 65 பொதுத் தொகுதிகள், 33 தொகுதிகள் சிறப்புத் தொகுதிகள்; இதில் 28 தொகுதிகள் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று ஒதுக்கப் பட்டன. ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர மீதித் தொகுதிகளிலும் பார்ப் பனர் அல்லாதார் போட்டியிடலாம் என்று நிருணயிக்கப்பட்டது.

1920 நவம்பர் 20இல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சிக்கும் ஹோம் ரூல் கட்சிக்கும்தான் போட்டி காங்கிரஸ் போட்டியிடவில்லையென் றாலும் காலித்தனத்தைக் கட்ட விழ்த்து விடும் பணியை மட்டும் தவறாமல் செய்தது.

கழுதைகளின் கழுத்தில் எனக்கு ஓட்டுப் போடு என்று எழுதிய அட் டைகளைக் கட்டி, அதன் வாலில் காலி டின்களைக் கட்டிக், கலாட்டா செய்வதிலும், காலித்தனத்தில் ஈடுபடுவதிலும் அலாதியான ஆனந்தம் அதற்கு.

சென்னை மாகாண சட்ட சபைக்கான 127 இடங்களில் நீதிக்கட்சி 63 இடங்களில் மகத்தான வெற்றியை ஈட்டியது. நியமன உறுப்பினர்கள் 18 பேர்களும் நீதிக்கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.

1920 முதல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியின் சாதனைகள் சாதாரணமானவைகளா?

வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று அக்கிரகார வாசிகள் பேனா பிடிக்கிறார்களே அவர்களுக்குப் பதில் சொல்லுவ தற்காக அல்ல _ பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள் பட்டியலைத் தெரிவிப் பது அவசியம்தானே!

பல்வேறு போதைகளில் சிக்கிச் சீரழிந்து வரும் பார்ப்பனர் அல்லாத இளைஞர் சமூகம் - தெரிந்து கொள்ள வேண்டியவை மிகப்பல.

பெயருக்குப் பின்னால் ஜாதிவால் ஒழிந்து, அதற்குப் பதிலாக படிப்புப் பட்டங்கள் பவனி வருகின்றனவே - இதற்கெல்லாம் அஸ்திவாரம் போட்டவர்கள் யார்? ஆணி வேராக இருந்து உழைத்தவர்கள் யார்?

எந்தச் சமூகநீதி நம்மை உயர்த்தியது? இவற்றைத் தெரிந்து கொண்டால் பல போதைகள் நம்மை விட்டு ஒழிந்துத் தொலையும், அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்.

-------------------தி.க. பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் 30-7-2011”விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

28.7.11

உச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந்திருந்தால்...

லண்டன் - தொலைக் காட்சி 4 - ஒளிபரப்பு உலக மக்களின் மனசாட்சியை உலுக்கியது! பார்த்தவர்கள் குமுறினர் - வாய்விட்டுக் கதறினர்.

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்காவே இதுபற்றிக் கூற முன்வந்தபோது துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீர் மல்கி யுள்ளனர்.

தனது மகன் அந்தத் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு, சிங்களவன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவ தாகக் கூறியுள்ளான். மகளும் தன் வேதனையைப் புலப்படுத்தியுள்ளார். இந்தத் தகவல்களை சந்திரிகா அம்மையாரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இலங்கைத் தீவின் முன்னாள் அதிபரின் இந்தப் பேச்சு தமிழ் ஆங்கில ஏடுகளில் வெளிவந் துள்ளது.

அதே நேரத்தில் தினமலர் குடும்பத்தைச் சேர்ந்த காலைக்கதிர் (சேலம் பதிப்பு 26.7.2011) ஏட்டில் எப்படி செய்தியும் தலைப்பும் வெளிவந்துள்ளது தெரியுமா?

தலைப்பு: தமிழர்களுக்கு ஆட்சியில் பங்கு இலங்கை மாஜி அதிபர் கோரிக்கை - இதுதான் தலைப்பு உள்ளுக்குள் வெளி வந்துள்ள செய்தியில் எந்த ஒரு இடத்திலும் லண்டன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற தமிழர்கள் படு கொலைக் காட்சியை சந்திரிகா அம்மையார் பார்த்துக் கண் கலங்கியதாகக் கூறியது பற்றியோ, அவரது மகனும், மகளும் துயரப்பட்டது குறித்தோ ஒருவரிகூட இடம் பெறாமல் முற்றிலுமாக இருட்டடிப்புச் செய்து செய்தியை வெளியிட்டுள்ளது தினமலர் குடும்பத்தின் காலைக் கதிர்

தமிழன் மாமிசம் இங்குக் கிடக்கும் என்று போர்டு போட்ட சிங்களக் காடையர்களுக்கும் இந்தத் தினமலர், காலைக்கதிர் பார்ப்பனப் பாசிசக் கும்ப லுக்கும் இதே பாணியில் செயல்படும் துக்ளக், கல்கி வகையறாக்களுக்கும் என்ன வேறுபாடு?

தமிழ் ஈழத்தில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாயிற்றே - தமிழினப் பச்சிளம் பாலகர்களாயிற்றே!

ஒரே ஒரு பார்ப்பானின் உச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந் திருந்தால் அடேயப்பா, எத்தனைப் பத்திகளில், எத்தனைக் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு, நிர்வாண நர்த்தனம் ஆடித் தீர்த்திருப்பார்கள்?

சேலம் காலைக்கதிர் இப்படி தலைப்பிட்டு செய்தியை இருட்டடித்து வெளியிட்டு இருக்க, சேலம் பதிப்பு தினத்தந்தி எப்படி செய்தியை வெளியிட்டுள்ளது?

இலங்கைப் போரில் நடைபெற்ற தமிழர்கள் படுகொலை காட்சிகளைச் சொல்லி கண் கலங்கிய சந்திரிகா என்று தலைப்பிட்டும், லண்டன் வீடியோ காட்சியைப் பார்த்து தாமும் தம் பிள்ளைகளும் கலங்கியது குறித்தும் சந்திரிகா கூறியதை தினத்தந்தி விரிவாகவே செய்தியை வெளி யிட்டுள்ளது.

காரணம் - தினத்தந்தி தமிழன் நடத்தும் பத்திரிகை - காலைக் கதிர்களோ பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிகை.

பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று அப்பாவித்தனமாக நம்பும் ஏமாறும் ஏமாளித் தமிழர்கள் இதற்குப் பிறகாவது சுத்த ரத்தத்துடன் சிந்திப் பார்களாக!

(குறிப்பு: காலைக்கதிர் செய்திக் கத்தரிப்பை அனுப்பி உதவியவர் - சேலம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு சி. பூபதி).

----------------"விடுதலை” 28-7-2011

இந்தி எதிர்ப்பும் - நாவலர் பாரதியாரும்


நாவலர் சோமசுந்தர பாரதியார் பன்மொழிப் புலவர் - 1938 இல் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் கிளர்ந்தெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தளபதிகளாகத் திகழ்ந்தவர்களுள் இப்புலவரும் முக்கியமானவர்.

இந்தி வேண்டாம் வேண் டாம் என்று நான் அறைகூவிச் சொல்கிறேன். வேண்டாம் என்பதற்கு ஆயிரம் காரண முண்டு - வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாவது உண்டா? எந்த அமைச்சருடனும் நான் வாதாடத் தயார்! யாரேனும் வருவார்களா? என்று சூளுரைத்த தீரர் அவர்.

கட்டாய இந்தி வேண்டும் என்பதற்கு அமைச்சர்கள் கூறிய போலிக் காரணங்கள் எல்லாவற்றையும் மறுத்து, இந்தி ஏன் வேண்டாம்? என்பதற்குரிய பல்வேறு காரணங்களையும் தொகுத்து 24 பக்கங்களைக் கொண்ட ஆங்கிலத்தில் எழுதப் பட்ட திறந்த மடல் ஒன்றை பிரதம அமைச்சர் ஆச்சாரியாருக்கு (ராஜாஜிக்கு) அவர் எழுதியது - அந்தக் கால கட்டத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்றாகும்.

ஒரு வார காலம் தொடர்ந்து சென்னையில் சொற்பொழிவாற்றி (13.8.1939 - 20.8.1939) இந்தி எதிர்ப்பின் சூட்டைக் கிளப்பினார்.

திருச்சியில் இந்திப் போர் மந்திராலோசனைக் கூட்டத்தில் (28.5.1938) சத்தியாக்கிரகம். அதில் வெற்றியில்லையேல், சட்ட மறுப்புதான் என்று சங்க நாதம் செய்த வீரத் திருமகன் அவர்.

அன்றுமுதல் 1939 முடிய சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியத்தின் (ழபை ஊடிஅஅயனே) தலைவராக விருந்தார்.

கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என்ற விவாதப் போரில் அறிஞர் அண்ணாவை எதிர்கொண்டவர் (சேலம் 14.3.1948).

அந்த விவாதத்தில்கூட தன்னைப் பார்ப்பனீயத்தின் வைரியாகக் காட்டிக் கொண் டவர்.

இதோ நாவலர் பாரதியார் பேசுகிறார்:

என்னுடைய 14 வயதிலே எனக்குக் கல்யாணம் நடந்த போது நேரிட்டதைச் சொல்கிறேன். எட்டையபுர சமஸ்தானத்தின் ஓர் கிராமத்திலே நாகரிக உணர்ச்சிப் பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம் - நான் வைதீக உணர்ச்சி உள்ளவன்;

நல்ல சைவன் - இப்பொழுது இருக்கும் சைவம் போன்றதல்ல - என்னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண்மையே எனக்குச் சிவம். எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறினார்கள் - அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப் பட்டிருக்கிறது - கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகிவிடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப் பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல்வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள்.

திருநெல்வேலி பண்டிதர்கள்கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர்கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப்படித்தான் கூறு கிறது என்று சொன்னார்கள் என்று சேலம் சொற்போரிலே பேசினார் நாவலர் பாரதியார்.

பக்தர்களும் புரிந்துகொள்ள வேண்டிய பகுதி இது. அந்த நாவலரின் பிறந்த நாள் இந்நாள் (1879).

குறிப்பு: நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மகள்தான் மறைந்த டாக்டர் லலிதா காமேசுவரன் - பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரன் அவர்களின் தாத்தாவும் ஆவார்.

------------ மயிலாடன் அவர்கள் 27-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


27.7.11

கோயில் சொத்துகள் அரசிடம் போகக்கூடாது என்று பார்ப்பனர்கள் கதறுவதன் சூட்சமம்!


சிதம்பரம் கோயில் ஒன்று போதாதா?

கோயில்களில் குவிந்து கிடக்கும் நகைகள், சொத்துகள், சாயிபாபா போன்றவர்களின் பீடத்தில் பதுங்கிக் கிடக்கும் சொத்துகள், நித்யானந்தா, ராம்தேவ் போன்ற யோகா சாமியார்களிடத்தில் பதுங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் - இவையெல்லாம் இந்தியா ஏழை நாடு என்று கூறுமா?

இவையெல்லாம் இருந்தும் இந்தியா ஏழை நாடு. நாள் வருமானம் 20 ரூபாய் ஈட்டக் கூடியவர்கள் 77 சதவிகிதத்தினர் என்று கூறுவது, புலம்புவது கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் பேதமைதான்.

கோயில்களில் குவிந்து கிடக்கும் இந்தச் சொத்துகள், நகைகள் எல்லாம் சுயம்புவாக தானாகப் பூமியைப் பிளந்து கொண்டு வந்து குவிந்தவையல்ல; பக்தர்களாகிய மக்கள் குவித்த பணம்தான்.

இந்தப் பணம் கோயிலில் இருந்து என்ன பயன்? நாளடைவில் கோயில் பெருச்சாளிகள் புகுந்து வேட்டையாடத்தான் வழிவகுக்கும்.

திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராய மன்னன் கொடுத்த நகைகள் எல்லாம் காணோம் என்ற குற்றச் சாற்று எழவில்லையா? நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றதே! குறிப்பிட்ட தேதிக்குள் நகைக் கணக்குகள் பார்க்கப்பட்டு, அதன் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வில்லையா?

சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி ஆட்சியின்போது - இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, இந்துக் கோயில் சொத்துகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்பொழுதும் பார்ப்பனர் தலைவர்கள் கூச்சல் போடத்தான் செய்தார்கள். சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழ்நாட்டின் கோயில்களையெல்லாம் ஆய்வு செய்து கோயில் சொத்துகள் எப்படியெல்லாம் கொள்ளைப் போயின? அதில் அர்ச்சகர்களின் பங்கு என்ன என்று விலாவாரியாகக் கூறப்பட்டதே! சர்.சி.பி. என்ன திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரா?

சாயிபாபா - கடவுள் மனிதர் (Godman) என்று அழைக்கப்பட்டார்! பிரச்சாரமும் செய்யப்பட்டது.

ரமண ரிஷியும் அவ்வாறே நம்பப்பட்டார். கோடி கோடியாக பணத்தை இவர்கள் எல்லாம் ஏன் சேர்க்க வேண்டும்? கடவுளிடமிருந்து சக்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் - கடவுளிடம் நேரடியாகப் பேசக்கூடிய இந்த அந்தராத்மாக்களுக்குப் பணம் ஏன் தேவைப்படும்?
தேவை என்பதே இவர்களுக்குத் தேவையில்லையே! காரணம், கடவுள் மனிதர்களாயிற்றே! அப்படிப் பணத்தைக் குவிக்கிறார்கள் - காணிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார் கள் என்றால், இவர்கள் எப்படி கடவுள் சித்தி பெற்றவர்கள்? கடவுளிடம் நேரடியாகப் பேசக் கூடியவர்கள்? கடவுளைப்பற்றி பக்தர்கள் எழுதி வைத்ததற்கே இது முரண்பாடாக இல்லையா?

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் தோண்டத் தோண்ட நகைகளும், அணிமணிகளும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன - அவற்றின் மதிப்பு லட்சம் கோடிக்குமேல் என்கிறபோது, இவை வெறுமனே முடங்கிக் கிடப்பதால் என்ன பயன்? எவ்வளவுக் காலத்திற்கு இவற்றைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்க முடியும்?

பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்களின் விலை யேற்றத்தால் மக்கள் பெருந் துயரத்தில் ஆழ்ந்து கிடக்கும் நிலை; இன்னொரு பக்கத்தில் கல் முதலாளிகளாகிய கடவுள்களுக்கு கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துகள் ஒன்றுக்கும் பயனில்லாமல் குவிந்து கிடப்பதை அனு மதிப்பது- மனிதாபிமானத்திற்கு எதிரான ஒன்றல்லவா! பொருளாதாரக் குற்றமும்கூட!

துக்ளக், கல்கி முதலிய பார்ப்பன ஏடுகளும், சங்கராச்சாரிகளும் விடாப்பிடியாக கோயில் சொத்துகள் மக்கள் நலனுக்குப் பயன்பட அனுமதிக்கப்படக் கூடாது என்பது - சற்றேனும் அறிவுக்கும், மனிதநேயத் தன்மைக்கும் பொருந்தக்கூடியதுதானா?

கோயில்களுக்குச் சொத்து இருந்தால், அவை ஏதோ ஒரு வகையில் பார்ப்பனர்களுக்கு வந்து சேரும் என்ற எண்ணமும், எதிர்பார்ப்பும்தான் இவர்களை இப்படியெல்லாம் எழுதச் சொல்லுகிறது.

இவர்களின் யோக்கியதைக்கு சிதம்பரம் நடராசன் கோயில் விவகாரம் ஒன்று போதாதா?

ஆண்டு ஒன்றுக்கு அக்கோயிலின் வருமானம் ரூ.33,199 என்றும், செலவு ரூ.33 ஆயிரம் என்றும், மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் கணக்குச் சொன்னார் களே தீட்சதப் பார்ப்பனர்கள் - அதே நேரத்தில் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டு வரப்பட்ட 18 மாதங்களில் வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே!

கோயில் சொத்துகள் அரசிடம் போகக்கூடாது என்று பார்ப்பனர்கள் கதறுவதன் சூட்சமம் இப்பொழுது புரிகிறதா?

--------------- “விடுதலை” தலையங்கம் 27-6-2011

பக்தர்களே, பக்தர்களே இதைக் கொஞ்சம் படியுங்கள்!


மறைந்த சாயிபாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள், சீடர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளதோடு, பல லட்சக்கணக்கான பொருள்களைக் கொட்டியும் கொடுக்கிறார்கள்!

ஆன்மீகம் என்றால் லவு கீகம் - உலக வாழ்வு - பொருள் உள்ளிட்ட எல்லா ஆசைகளை யும் துறந்து, மோட்ச உலகத் திற்கு வழிகாட்டுவதற்காக இவரை நாடுகிறோம், நாடினோம் என்று கூறும் பக்தர்களே!

அவரது ஆசிரமத்தில் (?) அவரது அறைகளிலிருந்து கண்டு எடுக்கப்பட்ட பண கத்தைகளை- அவரது சீடகோடிகள் லாரியில், வேன்களில் ஏற்றியதை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ள நிலையில் - அரசு தலையிட்ட நிலைக்குப் பின், அதன் அறக்கட்டளையின் முக்கியஸ்தர் ஆன ஒரு தமிழ் நாட்டுப் பார்ப்பனர் தொழில் அதிபர் ஏதோ ஒரு நொண்டிச் சமாதானத்தைக் (பலநாள்கள் கழித்து) கூறினார்;

அவரது சமாதியைக் கட்ட அந்த ஒப்பந்தக்காரருக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டது என்று ஏதோ ஒன்றைச் சொன்னார். தென்னை மரத்தில் ஏறிப் புல் பிடுங்கப் போனேன் என்று - மாட்டிக் கொண்ட பிறகு - சொன்ன பொய் சொல்லான் போல சொன்னார்கள்.

அவரது பல அறைகளிலிருந்தும் பொன், தங்கம், வெள்ளி, வைர நகைகள், பல்வேறு அறைகளிலி ருந்து ஏராளமான ரொக்கத்தொகை இவை எல்லாம் மூன்று ரவுண்டுகள் வேட்டையாடியபின், சாய்பாபாவின் தனித்த குடியிருப்பான யஜுர் மந்திர் (நல்ல பெயர்தான்) உள் சென்று (பிரசாந்தி நிலையத்தில்!) சோதனை நடத்தி அதிகாரிகள் எடுத்தவைகளைக் கண்டு அதிகாரிகள் மயக்கம் போட்டு விழாத குறைதான்!

(1) இறக்குமதி செய்யப்பட்ட முகச் சவர செட்டுகள்

(2) வாசனைத் திரவியங்கள் - சென்ட்டுகள்

(3) சுத்தி, ஆடையலங்காரத்துக் கான பொருள்கள் (Toiletries)

(4) ஷாம்பு (Shampoo) பாட்டில்கள்

(5) சோப்புகள், கைதுடைக்கும் சிறு கைத் துண்டுகள்

(6) விலை உயர்ந்த கை கடி காரங்கள் (Expensive Watches) (சர்வதேச புகழ் வாய்ந்த பிராண்ட் வாட்சுகள்).

(7) பதப்படுத்தப்பட்ட உலர்ந்த பழங்கள்

பக்தர்களைச் சந்திக்க அந்த அறையிலிருந்து வரும் போது மிக விலை உயர்ந்த ரக செண்ட் அடித் துக் கொண்டு வந்துதான் பக்தர், பக்தைகளுக்குக் காட்சி தந்து, ஆன்மீக குரு ஆசி வழங்குவார் என்று உடன் இருப்பவர் கூறினார் என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு (24-7-2011).

காற்று நிரப்பப்பட்ட வசதியான எளிமையான படுக்கையே சாய்பாபா பயன்படுத்தும் படுக்கை.

8) வாழும் கடவுளான இந்த சாய்பாபா அறையில் கண்டெடுக்கப் பட்ட தங்க மாலைகள் இரண்டு - 6 முதல் 7 கிலோ எடை உடையவை. (இது மேஜைக்குக் கீழே வைக்கப் பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு எடுத்தார்கள்!)

75 வெள்ளி டம்ளர்கள் - ஒரு பக்தர் 75 ஆம் ஆண்டு பிறந்தநாளுக்குத் தந்தவை என்கிறார்கள்! (ஒவ்வொன்றும் 700 கிராம் எடை)

9) பல்லாயிரக்கணக்கில் மோதி ரங்கள் (அவர் வரவழைத்துத் தர இவை தேவைப்பட்டிருக்கலாமோ?)

10) 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள் (விலை உயர்ந் தவை)

(11) வேட்டிகளும் சட்டைகளும் நிறைய.

ஆன்மிகத் தேடலுக்கும் பரப்புதலுக்கும் எவ்வளவு முக்கியமான முற்றும் துறந்த முனிபுங்கவருக்கு கடவுள் அவதாரத்திற்கு இவை ஏன் தேவைப்பட்டன?

பட்டுப் புடவைகள், சட்டைகள், துணிக் கடைகளில் கூட இவ்வளவு (ஸ்டாக்) இருப்பு இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் நாளேட்டைப் படித்த நமது நண்பர் ஒருவர்.

அவரது தனி மனித ஒழுக்கம் பற்றி அமெரிக்க சீடர் ஒருவர் எழுதிய Avatar of Night அவதார் ஆஃப் நைட்- இரவில் எடுக்கும் அவதாரம் என்ற தலைப்பில் ஒரு நூலே எழுதியுள்ளார்!

அவர் பெயர் Tal Brooke என்பதாகும். Tal Brooke - The Hidden Side of the Sai Baba Avatar of Night - (Tarang paperbacks - a division of Vikas Publishing House Pvt.Ltd.1982)

அவரது குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்கலாம் என்பதற்கு மற்றொரு ஆதாரம் மலேசியாவிலிருந்து அவரது ஆசிரமத் திற்கு (?) ஆன்மிகம் கற்றுக் கொள்ள அனுப்பப்பட்ட மாணவ இளைஞர்களிடையே அதே மாதிரி ஓரினச் சேர்க்கை கையாண்டதைக் கண்டு பதறிய பக்தர்கள் - வெறுத்து, திராவிடர் கழகத் தலைவருக்குக் கடிதம் எழுதி அம்பலப் படுத்தினார்கள்.

இதற்குப் பிறகும் விளக்கை நோக்கிய விட்டில் பூச்சிகளாகச் சென்று வீழ்வதற்குத் தயாராக இருக்கும் பக்தர்களே, நீங்கள் விழிப்புணர்வு பெறவேண்டாமா?

பிரேமானந்தாவின் லீலைகள் இரட்டை ஆயுள் தண்டனை பெற வைத்த பிறகும் பக்திப் போதை தீரவில்லையே!

வெட்கப்பட வேண்டாமா?

இன்னொரு ஆனந்தா வந்து துணிச்சலுடன் மீண்டும் ஒரு ரவுண்ட் அடிக்கிறார்! உலகப் பணக்காரனாக - ஒழுக்கக் கேட னாக வந்து உலா வருகிறார்.

ஏமாறும் மக்களின் பக்தியின் மீது மய்யம் கொண்டு ஏற்றங் கொண்டு அலைகிறார்களே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் பொன்மொழி எவ்வளவு அருமையான அனுபவ மொழி!

யோசியுங்கள்! திருந்துங்கள்! உங்கள் ஒழுக்கத்தை, அறிவைச் சேதாரப்படாமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

--------------- உண்மை விளம்பி -"விடுதலை” 26-7-2011

26.7.11

ஈழப்பிரச்சினையில் பங்களாதேசத்தை உருவாக்க இந்திராகாந்தி மேற்கொண்ட அணுகுமுறை தேவை!!


ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவே குமுறுகிறார்!

இங்கிலாந்து சேனல் 4 தொலைக்காட்சியைப் பார்த்து உலகமே கண்ணீர் விட்டுக் கோவென்று கதறுகிறது!

இதற்குமேலும் இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது!

பங்களாதேசத்தை உருவாக்க இந்திராகாந்தி மேற்கொண்ட அணுகுமுறை தேவை!!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள அரசால் விடிவு ஏற்படப் போவதில்லை; உலக நாடுகளே இப்பொழுது உணர்ந்துவிட்டன. இந்நிலையில் பங்களாதேசத்தை உருவாக்க முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மேற்கொண்ட அணுகுமுறையை இந்தியா கடைபிடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள, 30 கல் தொலைவில் உள்ள அண்டைய நாடான இலங்கையில் தற்போது உள்ள சிங்கள ராஜபக்சே அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரை நடத்துகிறோம் என்றுகூறி, அந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களான தமிழர்களின் வாழ்வுரிமையையே பறித்து, அவர்களில் பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர் - சிவிலியன்களைக் கொன்றும், அவர்களை முள் வேலிக்குள் அடைத்தும், அவர்களது நிரந்தரக் குடியிருப்புகளைப் பறித்து, சிங்களக் குடியேற்றத்தை தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தியும் வரும் கொடுமைக்கு இன்னமும் ஒரு முற்றுப்புள்ளி அங்கே இல்லை!

உலகத்தார் கண்கள் திறந்தன!


இந்திய அரசின் பொருளாதார உதவிகள், வீடு கட்டும் திட்டம், அரசியல் தீர்வு விரைவில் காண்போம் என்று கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக, அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்குக்கூட வழிவகை செய்யாதது - இவையெல்லாம் இன்று உலகத்தார் கண்களை அகலத் திறந்து பார்த்து, இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நிலையில், அய்.நா. மாமன்றம் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக்கிட நடவடிக்கை வேண்டும் என்று அறிக்கை கொடுத்து, அதன்மீது அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு செய்யவிருந்த உதவிகளைக்கூட நிறுத்தி வைத்துள்ளனர்!

கோவென்று கதறச் செய்துவிட்டது!


இங்கிலாந்து நாட்டின் சேனல் 4- என்ற ஒளி வழித் தொலைக்காட்சியில் இலங்கையில் நடந்த பல லட்சக்கணக்கான அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் முதலியவர்கள் உள்பட பலரைக் கொன்று குவித்த காட்சிகள் பல நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களை - பார்வையாளர்களான பன்னாட்டு மக்களை குமுறிக் குமுறிக் கோவென்று கண்ணீர் விட்டு அழச் செய்துள்ளது என்ற செய்தி மனிதாபிமானம் இன்னும் உலகத்தில் செத்துப் போய் விடவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது.

சந்திரிகா குமாரதுங்காவே குமுறுகிறார்!


இலங்கையின் முன்னாள் அதிபரான திருமதி சந்திரிகா குமாரதுங்கே, ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்னாள் பேசுகையில், அந்த தொலைக்காட்சி காட்டிய கொலைக் களக்காட்சி - ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்ட கொடூரக்காட்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் தழுதழுத்த குரலில், சிறிது நேரம் பேசாமலே அமைதியாக இருந்த பின்னர் தொடர்ந்த உரையில் அவர், இந்த வீடியோ காட்சியை தனது 28 வயது மகன் பார்த்ததாகவும், தான் சிங்களவன் என்றுகூற வெட்கப்படுவதாகவும் விம்மி விம்மி அழுதபடி கூறியதாகத் தெரிவித்துள்ளார்!

இதே கருத்தை தனது மகளும் வெளியிட்டதாகக் கூறி, இலங்கையில் தமிழர்களின் உரிமையை அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அங்கீகரித்து, அவர்களையும் கூட்டாட்சியாக நடத்திட ஒரு புதிய தீர்வு காணப்பட வேண்டும்; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் என்று கூறி அத்தோடு பிரச்சினை தீர்ந்தது. சிறுபான்மைத் தமிழர்களை மதிக்காமல், மிதித்தால் ஏற்படும் விளைவுகள்பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிங்கள ஹிட்லர் ராஜபக்சே காதுகளில் இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்.

இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடையை விதிக்க இதுவரை அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வராவிட்டாலும், அது தரவிருந்த பொருளாதார உதவிகளை நிறுத்தி வைக்க, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியதை ஏற்றுச் செயல்பட்டிருக்கிறது!

7 கோடி தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்ல; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் - புலம் பெயர்ந்த தமிழர்கள் உட்பட இந்திய அரசின் தெளிவான, திட்டவட்டமான செயல்பாடுகளில் இனியாவது மனிதாபிமானம் மேலோங்கும் உறுதிப்பாடு வருமா என்று எதிர்பார்க்கின்றனர்!

இந்தியாவே காரணம்!


சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் - இராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக்காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.

நடந்தவை எப்படியோ போனாலும் இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக - இந்திய அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை - அமைய வேண்டாமா? அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஓடும் மனிதநேயப் பிரவாக வெள்ளம் சிங்கள சந்திரிகாக்களிடம் ஏற்பட்டுள்ள நெஞ்சின் ஈரம், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதுவும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளால் பெற்ற ஆதரவு காரணமாக அரியணையில் அமர்ந்து ஆட்சி நடத்தும் ஓர் (U.P.A) ஆட்சிக்கு வர வேண்டாமா? இன்னும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆட்சியாக இருக்கலாமா? நியாயந்தானா?

ஒவ்வொரு தமிழனின் உணர்வு மட்டும் அல்ல இது. மனிதாபிமானம் பொங்கும் உலக மக்களின் - அவர்கள் எந்த இனத்தவராக இருந்தபோதிலும், எந்நாட்டவராக இருந்தபோதிலும் எழுப்பும் கேள்விகள் இவைகள்! இதனை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A) அரசின் தலைவர் திருமதி சோனியாகாந்தியும், பிரதமரும், அவரது காங்கிரஸ் கட்சியும் யோசிக்க தயங்கக்கூடாது!

இந்திரா காந்திக்கு வங்கதேசம் அளிக்கும் விருதின் பின்னணி!


நேற்று திருமதி சோனியாகாந்தி அவர்கள் பக்கத்து பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்று, முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்திக்கென அந்நாடு தந்த முதல் விருதினை - வங்கதேசம் உருவாவதற்கு அவர்கள் உதவியதற்கான விருது - பெற்று நன்றிகூறி திரும்பியிருக்கிறார்! வங்கதேசம் - பாகிஸ்தானிலிருந்து பிரிவதற்கு இந்தியாவும், அந்நாள் பிரதமரும், மக்களும் உதவியதற்கான காரணங்களைவிட, பல மடங்கு நியாயமான, அவசியமான, அவசரமான காரணங்கள், அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும், மனிதநேய அடிப்படையிலும் தமிழர்களுக்குத் தனி ஈழம் - நிரந்தர வாழ்வுரிமையை அவர்கள் நிம்மதியாக அனுபவிக்க ஒரே தீர்வாக அமைவதற்கு ஆயிரமாயிரம் உண்டு.

இலங்கையிடம் கொஞ்சுதலோ, கெஞ்சுதலோ வேண்டாம்!


எனவே இந்திய அரசு, இனியும் இலங்கை அரசுடன் கொஞ்சுதலோ, கெஞ்சுதலோ செய்யாமல், உத்தரவு போட வேண்டும். அவர்கள் சீனாவுடன், பாகிஸ்தானுடன் போய்ச் சேர்ந்து கொள்வார்கள் என்ற பூச்சாண்டிக்கு இணங்கி பாம்புக்குத் தலை; மீனுக்கு வால் என்பதுபோல நடந்து கொள்ளக்கூடாது.

அந்நாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி விடுதலைப்புலி போன்ற அமைப்புகளுக்கு இடம் தந்து ஆயுதப் பயிற்சி தந்தார் என்ற தொலைநோக்கிற்கான அரசியல் காரணங்களை ஆராய்ந்தால், இந்திய பாதுகாப்பும் அதன் முக்கிய அம்சம் என்பது புரியும்.

அரசியல் தீர்வு என்ற பெயரில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களை மீண்டும் முள்வேலிக்குள் வசித்திடும்படிச் செய்யக் கூடாது.

நம்மிடம் வேண்டாம் - பேதங்கள்!


தமிழ்நாட்டில், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகள் என்ற பேதங்கள் இப்பிரச்சினையில் இல்லை என்ற நிலைப்பாடு உருவாக, இங்குள்ள நமது அரசியல் கட்சிகள் பொது எதிரி யார் என்று மட்டுமே சிந்தித்து, தமிழர்கள் வாழ்வுரிமையை மய்யப்படுத்திப் பாடுபட முன்வர வேண்டுமே தவிர குற்றப் பத்திரிகைகளைத் தயாரிக்கும் வீண் வேலையில் ஈடுபட்டு, காரியத்திலிருந்து நழுவி விடக் கூடாது என்பதே நமது அன்பான வேண்டுகோள் அனைவருக்கும்!

ஈழ உள்ளாட்சித் தேர்தல் உணர்த்துவது என்ன?


தனி ஈழத்தின் அடிநாதம் அங்கே போகாது என்பதைத்தான் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழர்கள் வெளிப்படுத்திய விவேக முடிவுகளும், வெற்றிகளும் என்ற சுவர் எழுத்துகளையும் பார்த்துப் பாடம் அனைவரும் படிக்க வேண்டும். இந்திய அரசு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

---------------கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் "விடுதலை” 26-7-2011

25.7.11

வீரமணி இல்லாவிட்டால் மண்டல் குழுப் பரிந்துரைகளின் செயலாக்கம் கிடைத்திருக்காது!

வீரமணி இல்லாவிட்டால் மண்டல் குழுப் பரிந்துரைகளின் செயலாக்கம் கிடைத்திருக்காது என்று புகழாரம்!

அய்தராபாத்தில் நடைபெற்ற நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி 3ஆம் ஆண்டு நினைவு விழா மாட்சிகள்!


அறக்கட்டளை சார்பாக விருதுடன் ரூ 25 ஆயிரத்திற்கான காசோலையையும், நினைவு பரிசினையும் திருமதி சவிதாகுமார் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் திருமதி இராஜலட்சுமி அம்மாள்.


ஜஸ்டீஸ் கே.சி. பானு அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது வழங்குகிறார். விருது பெற்ற தமிழர் தலைவர் அவர்களுடன் சுவாமி அவர்கள் குடும்பத்தார், நீதியரசர்கள், முக்கிய விருந்தினர்கள்.


மறைந்த நீதிபதி பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களின் நினைவு அறக் கட்டளை சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ சுவாமி சமூகநீதி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

ஆந்திரத் தலைநகர் அய்தராபாத்தில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாக பல்லாண்டுகள் சிறப்புடனும் நாணயமாகவும் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பின்பு சமூகநீதியை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற விசாலப் பார்வையுடன், எஞ்சிய தனது ஓய்வுக் காலத்தை ஆந்திராவில் ஒரு மாபெரும் சமூகநீதி இயக்கத்தைக் கட்ட வேண்டும்; தந்தை பெரியார் அவர்கள் எப்படி தமிழ்நாட்டில் அரசியலுக்குள் நுழையாமலேயே மாபெரும் சமூக நீதி விழிப்புணர்வு இயக்கத்தைக் கட்டிக் காத்தார்களோ, அதேபோல் ஆந்திர மாநிலம் முழுமையிலும் செய்ய வேண்டும் என்று தொடர் சுற்றுப் பயணங் களை தனி ஒரு வேன் மூலம் மேற்கொண்டார்.

தெலுங்கு வார ஏடு துவக்கம்!


மனப்பத்திரிக்கா (நமது ஏடு) என்ற தலைப்பில் ஒரு தெலுங்கு வார ஏட்டினையும் தொடங்கி, அதனைப் பல்வேறு இடையூறுகள் வரினும் தொடர்ந்து நடத்தி வந்தார். புதுடில்லியில் சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்றையும் ஒரு டிரஸ்ட்டாகப் பதிவு செய்து, அதன் சார்பிலும் மாநாடுகள், கருத்தரங்குகளை நடத்தினார். 24.7.2008 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு இயற்கையெய்தினார்.

ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளை சார்பில் விழா


அவரது மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவர் செய்த பல சமூக, கல்விப் பணிகளைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவரது வாழ்விணையர் திருமதி இராஜலட்சுமி அம்மாள், அவரது ஒரே மகள் திருமதி சவிதாகுமாரி, அவரது மருமகன் சுதாகர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீதிஅரசர்மீதும் அவரது சமூக நீதித் தொண்டில் ஈர்ப்பு உள்ளவர்களும் இணைந்து ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி டிரஸ்ட் என்ற ஒன்றை நிறுவியதோடு, அவர் நடத்திய மனப் பத்திரிகா என்ற தெலுங்கு வார ஏட்டில் எழுதிய முக்கிய கட்டுரை களைத் தொகுத்து, A Journey into the thoughts of justice B.S.A.Swamy’’ என்ற தலைப்பில் ஒரு அரு மையான நூலை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அவரது மூன்றாம் ஆண்டு நினைவு நாளைப் பயன் படுத்திக் கொண்ட ஒரு சிறப்பான குழு மிக அருமையான ஏற்பாடுகளை ARSTC கலாபவனம் என்ற பொது மண்டபத் தில் 24.7.2011 அன்று ஏற்பாடு செய் திருந்தனர்.

ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது!


ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை யின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை - சமூக நீதிப்பற்றி தக்க பிரமுகர் களை அழைத்து நடத்துவது என்றும், அதுபோலவே இந்த அறக்கட்டளை சார்பில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது என்ற ஒன்றை அத்துறையில் குறிப்பிடத்தக்க அளவு தொண்டு செய்த பிரமுகர் ஒருவருக்கு விழாவில் அளித்து, அவர்களைப் பெருமைப்படுத்துவது என்றும் முடிவு செய்து, இந்த ஆண்டு 3ஆம் ஆண்டு நினைவு நாளில் அதைத் துவக்குவது என்றும் அறக்கட்டளை நிருவாகம் முடிவு செய்தது.
ஆந்திர அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஆந்திர மாநில தேர்தல் ஆணையத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சமூக நீதி உணர்வாளரும் - ஜஸ்டீஸ் சுவாமி அவர்களின் உற்ற நண்பர்களில் ஒருவருமான திரு. காக்கி மாதவராவ் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் தலைமையில் விழா 24.7.2011 ஞாயிறு காலை 11.30 மணி யளவில் ஆந்திராவில் சாலைப் போக்கு வரத்துக் கலாபவனில் துவங்கியது!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு முதல் விருது!


சிறப்புச் சொற்பொழிவினை, உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதியரசரான ஜஸ்டிஸ் கே. இராமசாமி அவர்களை வைத்து (முதல் பொழிவினை) சமூகநீதி என்ற தலைப்பில் பேச வைத்தனர்.

ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ. சுவாமி அவர்கள் பெயரால் அமைந்த விருது (முதல் விருது) திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அளிப்பது என்று முடிவு செய்து ஆந்திர சமூகநீதி களத்தில் புதியதோர் திருப்பத்தை உருவாக்கினர். மிகச் சிறப்பான வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆந்திர உயர்நீதிமன்ற முன்னாள், இந்நாள் நீதியரசர்கள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், வழக்குரைஞர்கள், மாநிலத் தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்த சமூகநீதி ஆர்வலர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டு விழா பகல் 2.15 மணிக்கு முடிவடையும் வரை மிகவும் பொறுமை யாகக் கேட்டு பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் விருந்திலும் கலந்து கொண்டார்கள்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, இணைப்புரைபோல வழங்கி னார் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

ஜஸ்டீஸ் சுவாமி அவர்களது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்யப் பட்டது. வந்திருந்த நீதியரசர்கள், நிரு வாகத் துறையினர், வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் பலரும் மரியாதை செலுத் தினர்!

மறந்து விடாதீர்!


நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய காக்கி மாதவராவ் அய்.ஏ.எஸ். அவர்கள், ஜஸ்டீஸ் சுவாமி அவர்களது தொண்டறம், நாணயம், ஈடுபாடு முதலியவற்றைப் பற்றி விளக்கியதோடு, அவர் மறைவுக்கு சில ஆண்டுகளுக்குப் பின்னரும் இவ்வளவு திரளாக சமூகத்தின் முக்கிய பகுதியினர் வந்து குழுமி மரியாதை செலுத்துவது எதைக் காட்டுகிறது? உண்மையான, நேர்மையான சமூகநீதிக்காகப் பாடு பட்டவர் என்பதால் தான்; இன்றும் இவ்வளவு சிறப்பு - மறந்து விடாதீர்! என்று குறிப்பிட்டு,

அடுத்து அறக்கட்டளை துவக்க விழா நூல் வெளியீட்டு விழா இவைகளை நடத்தி வைக்க ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு பவானி பிரசாத் அவர்களை அழைத் தார்கள். ஜஸ்டில் பி.எஸ்.ஏ.சுவாமி பெயரால் அமைந்த அறக்கட்டளைப் பதிவுப் பத்திரத்தை ஒரு பேழையில் வைத்திருந்ததை அவர் வெளியிட்டார். அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் இப்படி ஓர் அரிய முயற்சியை எடுத் தமைக்கு மிகவும் பாராட்டி நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசினார்.

நூல் வெளியீடு


பிறகு டாக்டர் ஜஸ்டீஸ் எதிராஜுலு அவர்கள் ஆந்திர நிருவாக டிரிபியூனல் தலைவர் அவர்கள் ஜஸ்டிஸ் சுவாமியின் கட்டுரைகளைக் கொண்ட புதிய நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் கே.இராமசாமி அவர்கள் சமூக நீதி என்ற தலைப்பில் மிகஅருமை யானதொரு ஆய்வுச் சொற்பொழிவினை ஆங்கிலத்தில் நிகழ்த்தியதோடு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற சமூகநீதிப் புரட்சியாளர்களது தொண்டைப் பாராட்டிப் பேசியதோடு, அதே வரிசையில்தான் தனது தொண்டை ஜஸ்டிஸ் சுவாமி அவர்களும் தொடர்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.

பிறகு ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி கள் ஜஸ்டிஸ் திரு. ஜி.சந்திரய்யா, ஜஸ்டில் திரு. பி.சந்திரகுமார், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. பி.எஸ். நாராயணா முதலியவர்கள் ஜஸ்டிஸ் சுவாமி அவர்களது எளிய வாழ்க்கை, லட்சியத்திற்கான வாழ்க்கை முறை; பண்பாளராகவும், ஒழுக்கவாதியாகவும் அவர் வாழ்ந்து காட்டிய பாங்குகளையும் வரிசையாக எடுத்துக் கூறினர்.

அவரது பெயரால் அமைந்துள்ள முதல் விருதினை, திராவிடர் கழகத் தலைவர் திரு.வீரமணி அவர்களுக்கு அளிக்க , அவரைத் தேர்வு செய்தது மிகவும் பாராட் டத்தக்கது. காரணம் சுவாமி அவர்களும், தலைவர் வீரமணி அவர்களையே பின்பற்றி சமூகநீதிப் பணி செய்வதாகக் குறிப்பிடுவார் என்பதை எடுத்துக் காட்டி தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் பேசினர்.

வீரமணி உழைப்பால் கிடைக்கப்பெற்ற மண்டல் குழு பரிந்துரைகளின் செயல்பாடு


பிறகு கருநாடக பிரபல வழக்கறிஞரும், கருநாடக மாநில பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவரும், சட்ட மேதையுமான பேராசிரியர் ரவிவர்ம குமார் அவர்கள் ஜஸ்டிஸ் சுவாமிகாரு அவர்கள் பெயரில் ஏற்படுத்தப்படும் முதல் விருது சமூக நீதித் தலைவர் திரு.வீரமணி அவர்களுக்குத் தருவதுதான் மிகவும் பொருத்தமானது என்று கூறி, இவ்விழா வின் தலைவராக சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கையாளர்கள் காக்கி மாதவராவ், ஜஸ்டிஸ் இராமசாமி, கி.வீரமணி ஆகிய முப்பெரும் சிந்தனையாளர்களை அழைத்து நடத்துவது மிகவும் பாராட்டத் தக்கது என்று கூறி,

தலைவர் கி.வீரமணி அவர்களது இடைவிடாத பணிகள் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார். வீரமணி அவர்களின் தொடர் போராட்டங்கள் இல்லாவிட்டால் மண்டல் குழு பரிந்துரை செயலாகி இருக்காது. அது போலவே இன்றும் ஜாதி அடிப்படையில் சென்சஸ் என்பதற்கு முதலில் குரல் கொடுத்து (டில்லியில்) அதற்காக இன்றுவரை பாடுபட்டு வருகிறார்; கருநாடகாவில் கீதையைப் பாடமாக ஆரம்ப வகுப்புக்கு வைத்துள்ளனர். பா.ஜ.க. அரசிற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாங்கள் கி.வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் (ஆங்கில நூலைப்) பயன்படுத்தினோம். அரிய தகவல்களை அதில் அவர் தந்துள்ளார் என்றெல்லாம் பாராட்டி உரையாற்றினார்.

ஆந்திராவின் புரட்சி சிந்தனையாளர், வழக்குரைஞர் பொஜ்ஜ தாரகம் அவர்கள் வந்து, விருது வழங்குவது பொருத்தமா னது என்று கூறி பாராட்டுரை வழங்கினார்.

பிறகு ஜஸ்டிஸ் திரு கே.சி.பானு அவர்களும், விழாத் தலைவர் மாதவராவ் (அய்ஏ.எஸ்.) அவர்களும், சுவாமி அறக்கட்டளை உறுப்பினர்களும் விருது வழங்கப்படும் தலைவர் கி.வீரமணி அவர்களை மேடை முன்புறம் ஒரு தனி நாற்காலியில் அமரவைத்தனர். சால்வை போர்த்தி, மாலை அணிவித்து, விருது பற்றிய விளக்கத்தை ஆங்கிலத்தில் திரு. சுதாகர் படித்து நீதியரசர்கள் பட்டயத்தை வழங்கிய போது எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினர்.

பிறகு சுதாகர் அவர்கள் நன்றி கூறிட விழா பிற்பகல் 2 மணி அளவில் முடிந்தது.

தமிழர் தலைவருடன் சென்னை வழக்கறிஞர் த.வீரசேகரன் அவர்களும் உடன் சென்றிருந்தார். பிறகு அனைவரிட மும் நன்றி கூறி விடை பெற்று சென்னைக் குத் திரும்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி பெயரில் அறக்கட்டளை

அறக்கட்டளை சார்பாக விருதுடன் ரூ 25 ஆயிரத்திற்கான காசோலையையும் திருமதி சவிதாகுமார் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் வழங்கினார்கள் பலத்த கைதட்டலுக்கிடையே.

பிறகு ஏற்புரை - நன்றி உரையை ஆங்கிலத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிகழ்த்தினார். ஜஸ்டீஸ் சுவாமி அவர்கள் சமூக நீதிக்காக துணிச்சலுடன் போராடிய மாவீரர். அவர் மறையவில்லை. மாறாக நம் பணிகளில் நிறைந்துள்ளார்.

அச்சம் அறியாத மாவீரர். தன்னலம் பாராத பெருந்தகையாளர். அவர் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்தபோதே, ஜோதிபா பூலே அவர்கள் பெயரில் சமூக நீதி மன்றம் அமைத்து சமூக நீதிக்காக துணிந்து தொண்டறத்தைத் தொடங்கி, அதே பணியை ஓய்வு பெற்ற பின்பும் மிகவும் தொய்வின்றி தொடங்கி, பதவி ஆசை, அரசியல் மோகம் இன்றித் தன்னந் தனியே ஒரு மாபெரும் நிறுவனமாக விளங்கினார் என்றெல்லாம் விளக்கி,

தனக்கு அளிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயுடன் மேலும் 25,000 ரூபாயை இயக்கம் தந்து - தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் - அப்பல்கலைக்கழகத்திற்கு வந்து, அதில் உள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள ஜஸ்டிஸ் சுவாமி அவர்கள் பெயரால் ஒரு நினைவு அறக்கட்டளை அமைத்து, ஆண்டுதோறும் சமூகநீதி பற்றி சொற்பொழிவு, கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் மற்றவர்களும் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கலாம் என்றும் கூறினார். (திரு. நாகராஜ் அவர்கள் தான் 25 ஆயிரம் செக் அனுப்பி வைப்பதாக பிறகு ஆசிரியரிடம் நேரில் வந்து சொன்னார்.)


24.7.11

சிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம்!


சிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம்!

இப்போது நமது இந்த வகை பிரசாரத்தால் பாரத, ராமாயண, மனு தர்ம சாஸ்திரங்களுக்கும் மதிப்பு குறைந்து விட்டதால் மனுதர்மத்தையும், ஆரிய தர்மத்தையும் பெரிதும் கொண்ட சிலப்பதிகாரத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு ஊரூராய் திரிந்து பிரச்சாரம் செய்ய ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால் ஆபாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துகளை உட்கருத்தாகக் கொண்டு நல்ல தமிழ் அமைப்பை உடையாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாக இருப்பாளோ, ஆனால் உள்ளே போய்ப் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும் உடலெல்லாம் நோய் கொண்டும் உடையால், அணியால் மக்களை ஏய்த்துப் பிழைத்துக் காணபப்டுவாளோ அது போலதான் இந்த சிலப்பதிகாரமுமாகும். பாரத ராமாயணம் போல் அது நாவல் சித்திரக்கதை. அதுவும் குறிப்பிட்ட கொள்கை இல்லாமல் எழுதின கதை.

ஆரியம் தலை தூக்கி நம் அரசர்கள் ஆரியத்திற்கு அடிமைகளாய்த் தாசர்களாய் இருந்த காலத்தில் பகுத்தறிவும் இன உணர்ச்சியும் இல்லாமல் சித்தரித்த கதையாகும். மூட நம்பிக்கைக் களஞ்சியம்; ஆரியக் கோட்டைக்கு அரண். இப்படிப்பட்டதை, 'தமிழர் பண்புக்கு' என்று பிரசாரம் செய்தால் இது மானமுடைமை ஆகுமா? ஆதிமுதல், அந்தம் வரை பார்ப்பானை பார்ப்பனியத்தைப் புகுத்தி அமல்படுத்த வேண்டும்; எப்படி எப்படி நாம் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

நான் ஒன்றும் பயந்து கொண்டு பேசுகிறேன் என்றோ, பொய் பேசுகிறேன் என்றோ நினைக்க வேண்டாம். அந்தக் கதைகளில் உள்ள கருத்தை அப்படியே எடுத்துக் காட்டுகிறேன் ஆகையால் கவனமாகக் கேளுங்கள்.
போன ஜன்மம், வருகிற ஜன்மம் என்று தலைவிதியைக் காட்டி மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும் ஆளாகச் செய்கிறது. பார்ப்பான் சொல்லுகிறபடி, அவன் எது கேட்டாலும் எடைக்கு எடை தங்கம் கொடுக்க வேண்டுமென்று சொல்லுகிறது. ஆரூடம், ஜோதிடம், பில்லி சூனியம் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லுகிறது. முட்டாள்தனமாக கற்பையும் பெண் அடிமையையும் பெருமைப்படுத்துகிறது. கோவலனை அரசன் தண்டித்த மாதிரி நம் நாட்டு ராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும். ராஜா வீட்டு சிலம்பு எங்கோ போய்விட்டது. கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டதன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன் கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லுகிறான். கோவலன் இறந்து போகிறான். இதையறிந்த அம்பாள் கண்ணகிக்குப் பெரும்கோபம் வந்து நிரபராதிகளாக மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள். இந்த அம்பாளின் கற்பைப் பற்றிச் சொல்லுவதாய் இருந்தால், தேவடியாள் வீட்டிற்குக் கணவன் போனதை அறிந்த கண்ணகி அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள். தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுத்து வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன்; கண்ணகி புத்தியற்ற மடப்பெண். அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும்போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண்டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையில் திருகினால் வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை.

அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரம் இருக்குமா? இந்த மூட நம்பிக்கைக் கற்பனையானது என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் காட்ட முடியுமா?

அக்கினி பகவானுக்குக் கண்ணகி "பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சுடு" என்று கட்டளையிட்டாளாம், மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்; இதுதான் கண்ணகி கற்பின் பெருமையா? அக்கினி பகவானுக்கென்ன புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்கின்ற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதி விடவேண்டும்.

ஆகவே வர்ணாச்சிரம தர்ம மனுநூல், இராமாயண - பாரதத்திற்கும் இதற்கும் என்ன பேதம்? இராமன் பார்ப்பனன். ஆக சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டு மென்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள்தனமாக கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவாள் என்பது சிலப்பதிகாரம். பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளாக மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். இவள் கற்புக்கரசி, வணங்கத்தக்கவள், தெய்வமானவள். பாண்டியன் 'குற்றவாளி' இதுதானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம். இதற்கு மாநாடாம்!

எவ்வளவு முட்டாள்தனம், இந்த மாதிரியான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு நமக்குச் சொந்தம் என்று சொல்லுவது?

இவற்றைத்தான் நாம் ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்.

ஆனால் மாநாடு கூட்டும் அன்பர்களோ பார்ப்பானிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவன் பிச்சை என்று இடும் பச்சை நோட்டுகளுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள், இந்தப் பச்சோந்திகள்.

மற்றும் இவர்கள், கண்ணகிதான் கற்புடையவள் என்று கூறுகிறார்கள்; அப்பொழுது மற்றவர்கள் எல்லாம் கற்பில்லாதவர்களா? இது மனிதத் தன்மைக்கே பொருத்தம் இல்லை. ஆனால் அந்த மாதிரி நடந்ததை நாம் பார்த்து இருக்கவும் முடியாது.

இந்தக் கதையைச் சொல்லி நம் பெண்களெல்லாம் கண்ணகிகளாகத் திகழவேண்டும், அவள்போல் கற்புக்கரசியாக வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றவர்களின் பிள்ளைக் குட்டிகள் முதலாவது இந்த மாதிரி நடந்தால் பொறுப்பாளர்களா? என்று கேட்கிறோம். இந்தப் பிரசார பிரம்மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில்போய் இருந்தால், இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம் நகை எல்லாம் அனுப்ப சம்மதிப்பார்களா? இப்படி நடந்தால் ஆண்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக ஆவார்களா? இது ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நூல் ஆகுமா?

ஆகவே, இது போன்ற கதைகள் பெண்களுடைய அடிமைத்தனத்திற்கு அடிகோலுதலாகவும், முட்டாள்தனத்திற்கு மூலாதாரமாகவும், பிற்போக்கிற்கு வழி அமைப்பதாயும், பார்ப்பானுடைய உயர்வைக் காப்பாற்றுவதற்காகவும் செய்யப்பட்ட இலக்கியங்களே தவிர, மனித சமுதாயத்திற்கு எந்த நன்மைக்காகவும் செய்யப்பட்ட இலக்கியங்களாகாது.

ஆகவே, நமக்கு இருக்கிற இலக்கியங்களின் நிலைமை பெரிதும் மோசமானது. உண்மையிலேயே நமக்கு ஏதாவது கடவுள் உண்டா? மதம் உண்டா? சாஸ்திரங்கள் உண்டா? அவர்கள் சொல்வதைத்தானே ஒத்துக் கொண்டு வந்து இருக்கிறோம். ஆகையால்தான் நாம் கீழ்ஜாதியாகவும், பார்ப்பான் மேல் ஜாதியாகவும் இருப்பதற்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது.

ஆகவேதான் தோழர்களே இதை இப்படியே வளர விட்டு விட்டு இருந்தால் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நம் மக்கள் பார்ப்பானுக்கு அடிமையாகவும், மனிதத் தன்மை இழந்தவர்களாகவும் இருக்க முடியுமே தவிர முன்னேற்றம் அடையவே முடியாது என்பதை உறுதியாகச் சொல்லுகிறேன்.

தோழர்களே! நான் கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்ய இங்கு வரவில்லை. ஆனால் பொருத்தம் இல்லாததைச் சொல்வதையும் எழுதி வைத்திருப்பதையும் நான் கண்டிக்கிறேன். சொல்லட்டுமே, உலகத்தில் 250 கோடி மக்களில் 20 கோடி கூட நாம் இருக்கமாட்டோம். அப்படி இருக்க நமக்கு மாத்திரம் இப்படிப்பட்ட கடவுள் உண்டு என்றால் என்ன அர்த்தம்? இருக்கிற குழவிக் கல்லுகள் எல்லாம் நமக்குக் கடவுள்களா? கம்பி இல்லா தந்தியும் அநேக ஆயிர மைல்கள் ஒரு மணி நேரத்தில் பறந்து செல்லும் விமானங்களும் கண்டுபிடிக்கும் நேரத்திலா யாகமும், ஓம குண்டமும் வளர்ப்பதும், குழவிக் கல்லுகளை வைத்துக் கொண்டு கடவுள்கள் என்று சொல்லிக் கும்மாளம் போடுவது? எவ்வளவு மானக்கேடு என்று நினைத்துப் பாருங்கள்.

ஒரு விமானம் 20 மணி நேரத்தில் லண்டன், 40 மணி நேரத்தில் அமெரிக்கா போய்ச் சேருகிறது. ஆனால் நமது கடவுள்கள் விமானத்தின் (தேரின்) மேல் உட்கார்ந்து கொண்டு 2,000 பேர் இழுத்தாலும் அந்த விமானம் ஒரு மணிக்கு ஒரு ஃபர்லாங் பிரயாணம் செய்கிறது. இதைப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கவில்லையா? இதற்காகவா பத்து ஆயிரம், இருபது ஆயிரம் பேர் போய் பெண்டு பிள்ளைகளைக் கூட்டத்தில் நசுங்க விட்டு வேடிக்கை பார்ப்பது? சமுதாயம் முன்னேற்றம் அடைந்ததாக சரித்திரம் கூறும் மக்கள், இன்றைய தினம் இவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருப்பதைப் பார்த்துக் கொண்டு யாரால் தான் இருக்க முடியும்? ஒரு யோக்கியனும் சும்மா இருக்கமாட்டான். ஆகவே, இந்த மாதிரியான கேவலமான நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும்?

நம் நாட்டு மக்கள் என்ன முட்டாள்களா? இன்றைய தினம் நம் நாட்டில் காட்சியளிக்கும் சிற்பங்களும், சித்திரக் கலைகளும் நாம் தானே செய்தோம், நம்மால் கட்டப் பட்டவைதானே, இந்தப் பாழாய்ப் போன கோவில் கட்டடங்கள் சிற்பங்கள்? இன்னும் நாட்டிலே அரிய பெரிய வேலைகளை எல்லாம் செய்து வைத்திருக்கும் நம்மை யார்தான் முட்டாள்கள் என்று சொல்ல முடியும்? இன்றைய தினம் நம்மவர்களில் அறிஞர்கள் இல்லையா? இவை எல்லாம் இருந்தும் சில சமயங்களில் நாம் அறிவை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போகிறோம்.

ஆகையால்தான் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வதற்குக் காரணமாக சில காரியங்களில் நாம் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறோமே தவிர மற்ற எந்தத் தொழில் முறையிலேயும் நம்மை மோசமாகச் சொல்ல முடியாது.

மதம் என்று சொல்லி, புராணம் என்று சொல்லி, கடைசியில் சாமியில் கொண்டு புகுத்திவிட்டால், நம் சொந்த புத்தியை இழந்து அவற்றில் அறிவைச் செலுத்தி விடுகிறோம். அவை எல்லாம் மாற வேண்டும் என்று தான் சொல்லுகிறேன்.

நான் இப்பொழுது சொன்னதெல்லாம் இன்றைய தினம் நமக்கு இருக்கிற அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட நம் அறிவைக் கொண்டு எந்தக் காரியத்தையும் சிந்திக்க வேண்டுமென்றுதான் உங்களிடம் கேட்கிறேன். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அதை ஒவ்வொன்றும் பயன்படுத்த வேண்டுமென்று தான் சொல்லுகிறேன். இவ்வளவு பரந்த உலகத்தில் எத்தனையோ கோடி மக்கள் இருக்கிறார்கள். நம்மைத் தவிர அவர்களுக்கெல்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், வேதம் எல்லாம்தான் இருக்கிறது. ஆனால் இப்படி எங்கும் இல்லை. எனவேதான் தோழர்களே எல்லோரும் பகுத்தறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும் என்று திரும்பச் திரும்பச் சொல்லுகிறேன்.

 --------------------- 22.07.1951-இல் சேலம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 27.07.1951

பஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானதா?

பஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்பது அப்பட்டமான பொய்!

1979ஆம் ஆண்டு தினமணி நாளிதழில், பழைய பஞ்சாங்கமும் வானவியல் பற்றிய நவீன ஆய்வுகளும் என்ற தொடர்கட்டுரையை திரு. ஏ.என்.சிவராமன் எழுதி வந்தார். அந்தக் கட்டுரையில் சூரியனும், கிரகங்களும் பூமியை சுற்றுவதாக நம்புவது அய்தீகம்.

பஞ்சாங்கம் என்பது அதிர்ஷ்டம் பார்ப்பதற்கு உருவானதல்ல! மேலை நாட்டினரின் அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கம் தரும் தகவலுக்கும் (சோதிடம் பஞ்சாங்கத்தை வைத்தே கணிக்கப்படுகிறது) வித்தியாசம் இருக்கும்! தோராயமான பல உண்மைகள் நமக்குத் தெரிந்தேயிருந்தன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திரு. ஏ.என்.சிவராமன் கருத்துப்படி அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கத் தகவலுக்கும் வித்தியாசம் இருக்குமென்றால் பஞ்சாங்கக் கணக்கு தவறு என்றுதானே பொருள்!


பஞ்சாங்கம் தோராயமானது என்றால் சோதிடமும் தோராயமானதுதானே

பஞ்சாங்கம் அறிவியலுக்கு வித்தியாசப்பட்டது - தோராயமானது என்றால் அந்தப் பஞ்சாங்கத்தைக் கொண்டு கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியல்

அடிப்படையானதும் - துல்லியமான கணக்குமாகும்!

சோதிடம் இன்றைய அறிவியலுக்கு வித்தியாசமானது ஒத்து வரக்கூடியது அல்ல என்பதுதானே உண்மை. தனி மனிதன் வாழ்வை சோதிடத்தின் மூலம் துல்லியமாகக் கூறமுடியும் என்பது ஏமாற்றுத்தானே! அப்படிப்பட்ட சோதிடத்தை நம்பிக் கொண்டு அதிலே அறிவியல் இருப்பதாக சோதிடரைக் தேடிக் கொண்டு அலைந்ததால் தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காணமுடியுமா!

அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் பெருமளவு வித்தியாசம்

அறிவியல்படி உண்மை நிலவரப்படி சூரியன் மகர ராசியில் டிசம்பர் 22இல் பிரவேசித்து விடுகிறது. ஆனால் சோதிடக் கணக்குப்படி ஜனவரி 13 அல்லது 14இல் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதாகக் கணக்கிட்டு மகர சங்கராந்தி கொண்டாடுகிறார்கள். அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் 22 நாள்கள் வித்தியாசம் இருக்கின்றன. இந்தச் சோதிடம் எப்படித் துல்லியமானதாகவும் அறிவியலின்படியும் ஆனதாகும்!

நிரூபிக்கப்படுவது அறிவியல்

அறிவியல் என்பது நிலைநாட்டப்பெற்ற உண்மைகள். சோதிடம் நிலைநாட்டப்பெற்ற அறிவியலா? உண்மையானதா? உலக விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டனரா!

கணித மேதை ராமானுஜம் தனது கணிதம் பற்றிய ஆய்வுகளை உலகுக்கு அறிவித்தார். உலக விஞ்ஞானிகளிடம் ஆய்வுகளை அளித்தார். நிரூபித்துக் காட்டினார். அவரது கணிதம் பற்றிய ஆய்வை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டதுடன் அவருக்குச் சிறந்த பட்டமும் வழங்கிச் சிறப்பித்தனர்.

மூலிகைப் பொருளிலிருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் என்ற இராமர்பிள்ளையால் அதை விஞ்ஞானிகளின் மத்தியில் செய்து காட்டி நிரூபிக்க முடியவில்லை. விஞ்ஞானிகள் அவரின் ஆய்வை ஏற்றுக் கொள்ளவில்லை!

எனவே நிரூபிக்கப்பட்டதைத் தான் உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வார்கள். நிரூபிக்கப்படாததை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று இதுவரை நிரூபித்துக்காட்டியதில்லை. சோதிடர்களால் நிரூபிக்கவும் முடியாது. அவ்வளவு தவறுகள் சோதிடத்தில் இருக்கின்றன. சூரியனை ஒரு கிரகமென்றும், அது ஒரே இடத்தில் நிலையாக இருக்கிற பூமியைச் சுற்றி வருவதாகவும் சோதிடம் கூறுகிறது. இந்த அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியல் பூர்வமானது என்று கூறமுடியும்.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது அண்டத்தில் ஒரு நட்சத்திரம். நொடிக்கு 60 கோடிடன் ஆற்றலை வெளியிடும் பேராற்றல் மிக்க சூரியனை, வறண்டு போன, கடும்பனி மூடிய கிரகங்களுடன் சேர்த்து சூரியனை ஒரு கிரகமென்று சோதிடம் குறிப்பிடுவது மிகப்பெரிய தவறு!

வானவெளியிலுள்ள புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கிரகங்களைத் தான் இன்றைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சோதிடம் எழுதப் பெற்ற அக்காலத்தில் யுரேனஸ், நெப்டியூன் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த கிரகங்கள் 6 மட்டுமே!

ராகு, கேது என்பது கிரகமே அல்ல! அதையும் சோதிடத்தில் கிரகமென்று சேர்த்துக் கொண்டார்கள். கிரேக்க நாட்டு வானவியல் கருத்து அது.

சூரியனிலிருந்து கிரகங்களின் வரிசை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி என்று இருப்பது கூடத் தெரியாமல் சோதிடத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வரிசைப்படுத்தியிருக்கின்றனர். கிரகங்களின் வரிசையே தவறாக இருக்கும் போது, அந்த அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் தவறானதுதானே! அது அறிவியல் அடிப்படை ஆகுமா!

ராசி வட்டத்திலும் சோதிடம் தவறாக கணக்கிடப்படுவதாக வானவியல் விஞ்ஞானி. எஸ்.சுந்தரம் தான் எழுதிய நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். வானவியல் விஞ்ஞானத்திலிருந்து சோதிடம் விலகி விட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அறிவியல்படி கிரகங்களுக்கு ஈர்ப்புவிசை கொஞ்ச தூரத்திற்கே உண்டு. ஈர்ப்பு விசையும் பூமியை எட்டுகிற அளவிற்கு கிடையாது! சில குறிப்பிட்ட தூரத்திற்கே ஈர்ப்பு விசை உண்டு! பூமியின் ஈர்ப்பு விசை 350 கிலோ மீட்டர் உயரத்தில் வலுவிழந்து இருப்பதால் விண்வெளி வீரர்கள் மிதந்தபடி இருக்கிறார்கள். ஆனால் சோதிடர்கள் கிரகங்களின் ஆற்றலால் (சக்தி) பூமியில் தனி மனிதனின் வாழ்வு நிருணயிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். அறிவியல் அறிஞர்களின் கருத்துகளை நம்பாமல் சோதிடர்களின் கருத்தை நம்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

பூமியின் துணைக்கிரகம் சந்திரனை சோதிடத்தில் சேர்த்துக் கொண்டவர்கள் மற்றக் கிரகங்களிலுள்ள துணைக் கிரகங்களைச் சோதிடத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை! அக்காலத்தில் தெரிந்திருப்பதைக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டதே தவிர, அறிவியல் தெரிந்து எழுதப்பட்டதல்ல!

சோதிடத்தில் கிரகங்கள் வரிசையில் முரண்பாடு, ராசி வட்டத்தில் தவறு, கிரகங்களுக்கு ஏதோஆற்றல் இருப்பதாகக் கூறுவது தவறு, இத்தனை தவறுகளை சோதிடத்தில் வைத்துக் கொண்டு பஞ்சாங்கமும், சோதிடமும் அறிவியல் அடிப்படையானது என்று சொல்ல எப்படித் துணிந்தார்களோ.

--------------------------தி.பொன்னுசாமி எழுதிய சோதிட மறுப்பும், வானவியல் சிறப்பும் என்ற நூலிலிருந்து

23.7.11

வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (3) வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?


இந்தியாவின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் பாடு பட்டதாகவும், ஆனால் அதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைப்படி நீதிக்கட்சி தொடங்கப் பட்டது என்றும் அவதூறு செய்கிறார் துக்ளக்கில் திரு.கே.சி. லட்சுமி நாராயணன்.

இதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத்தானே சாட்சிக்கு அழைக்கிறார்கள்? அவர் எழுதிய விடுதலைப் போரில் தமிழகம் என்ற நூலைத்தானே என்ற சாட்சிக்குக் கூப்பிடுகின்றனர்?

அந்த ம.பொ.சி.யே அந்த நூலிலே என்ன எழுதுகிறார்? அவர்கள் கொண்டு வந்த ஆயுதத்தைப் பறிமுதல் செய்து, அவர்களைத் தாக்குவது தானே சுவாரசியமானது.

காங்கிரசைத் தோற்றுவித்தவனே ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்காரன்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

முதல் மாநாடு 1885 டிசம்பர் 28,29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையின் முதல் மாநாட்டை ஹ்யூம் கூட்டினார். அதற்காக விடுத்த சுற்றறிக்கையில், வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆங்கில மொழியில் ஞானமுள்ள அரசியல் பிரமுகர்களைக் கொண்ட தாக மாநாடு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆம், இந்திய தேசியத்தின் பெயரால் முதன் முதலாக ஒரு மாநாடு, இங்கிலீஷ்காரர் ஒருவரால், இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்ற வர்களைக் கொண்டதாகக் கூட்டப் பெற்றது. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் மாநாடு நடந்தது என்று ம.பொ.சி. அதே நூலில் குறிப்பிட்டுள்ளாரே -இதற்கு என்ன பதில்?

வெள்ளைக்காரன் ஹ்யூமால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஓராண்டல்ல, ஈராண்டல்ல, 22 ஆண்டுகள் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார் அவர். அடுத்தடுத்து வெள்ளையர்கள் தலைமை வகித்தும் மகாசபை கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜவாழ்த்துப் பாடப்பட்டதும், பிரிட்டீஷ் அரசுக்கு விசுவாசம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஹ்யூம் காலத்தில்தான்.

சுருக்கமாகச் சொன்னால் எவ்வித எதிர்ப்புமின்றி படித்த இந்தியர்களுக்கு உயர் உத்தியோகங்களும் சலுகைகளும் தேடித் தரும் ஸ்தாபனமாகக் காங்கிரஸ் செயல்பட்டது ஹ்யூம் சகாப்தத்திலேயே! இது ஒன்றும் அவர்களுக்குக் குறைபாடோ, குற்றமோ அல்ல. காங்கிரசை அவர் தோற்றுவித்ததே இந்தக் காரியங்களுக்குத்தான். இவை எல்லாம் நமது சரக்கல்ல; அதே ம.பொ.சி. - அதே நூலில் காணக்கிடப்பவைதான்.

வெள்ளைக்காரனால் தொடங்கப்பட்டது
பதவிகளைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்டது
அந்தப் பதவிகள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே! என் பதை இந்நூலில் ம.பொ.சி. வெளிப்படையாகவே கூறுகிறார்.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் நீதிக் கட்சி வெள்ளைக்காரர்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தது - பதவிகளைத் தேடி அலைந்தது என்று சொல்லுகிறார்கள் என்றால் அவர்களின் யோக்கியதையை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.

மேலும் ம.பொ.சி. எழுதுகிறார் கேளுங்கள், கேளுங்கள்.

சென்னையில் கூடிய காங்கிரஸ் மகா சபையிலே பிரிட்டிஷ் அரசுக்கு வாழ்த்து பாடப்பட்டது. வெள்ளையரான சென்னை கவர்னர் கன்னிமரா விட மிருந்து வாழ்த்துச் செய்தியைப் பெற்று , அதை மிகுந்த பக்தி விசுவாசத்துடன் படித்த பிறகே நடவடிக்கை தொடங் கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியார், இந்தியாவின் சக்கரவர்த்தினியுமாகிய விக்டோரியாவுக்கு, அவர் அய்ம்பதாண்டு காலம் வெற்றிகரமாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடத்தியதற்காகப் பாராட்டு தெரிவித்து, அவரது ஆட்சி மேலும் நீடிக்க வேண்டும் எனவும் பிரார்த் தித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்று, பேசியவர்கள் எல்லோரும் பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழ்ந்தனர்.

(ம.பொ.சி. அதே நூல் பக்கம் 133,134)

வெள்ளையர்களுக்கு சாதாரண விசு வாசத்தோடு அல்ல; பக்தி விசவாசத்தோடு பிரார்த்தித்து வாழ்த்துப் பாடியதாக ம.பொ.சி. எழுதி இருக்கிறாரே. இதற்கு என்ன பதில் லட்சுமி நாராயணரே?

திருவாளர் கே.வி. லட்சுமி நாராயணன் துணைக் கழைத்த ம.பொ.சி.தான் பிறழ் சாட்சியாகிவிட்டார். அவாளின் சுதேசமித்திரனாவது அவாளுக்குத் துணை போகிறாதா என்று பார்க்கலாம்.

காங்கிரஸ் தோற்றமே
பிரிட்டிஷாருக்கு பல்லக்கு தூக்கவே


இதோ ஆதாரம்: 1855 ம் வருடம் டிசம் பர் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு காங் கிரஸ் மாநாடு துவங்கப்பட்டது.

வங்கத்துக் கீர்த்தி மிகுந்த பாரிஸ்டர் உமேசசந்திர பானர்ஜி அந்த சபையிலே அக்கிராசனம் வகிக்க வேண்டும் என்று ஏ.ஓ. ஹியூம் பிரேரணை செய்ய, அதை காசிநாத தெலங்கரும் நீதிபதி மணி அய்யரும் ஆமோதித்தனர்.

நம்மை பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு விரோ தமாகச் சூழ்ச்சிகள் செய்யும் ராஜ விரோதிகளின் கூட்டம் என்று சில கனவான்கள் ஞானக் குறைவினால் சொல்லி விட்டார்கள். பிரிட்டன் அரசு நமக்கு அனுகூலமாக எவ் வளவோ காரியங்களைச் செய்தி ருக்கிறது. அதன் பொருட்டு அதற்கு நாம் நன்றி செலுத்துவோம். அய்ரோப்பாவில் உள்ள ஜனங்கள் ஆட்சி முறையைப்பற்றி எவ்வித மான கொள்கைகள் உடையாரோ அதே விதமான கொள்கைப்படி இங்கும் ஆட்சி நடத்த விரும்பு கிறோம். இந்த விருப்பத்துக்கும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தினிடமுள்ள பூர்ண விசுவாசத்திற்கும் விரோதமே யில்லை.

(1835_ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி நடைபெற்ற முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் உமேசசந்திர பானர்ஜி தலைமை வகித்துப் பேசியது.)

இங்கிலீஷ் ராஜ்யத்திடம் நாம் பூர்ணமான அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமக்குச் செய்த நன்றிகளை எல்லாம் மறக்கமாட்டோம். அவர்கள் நமக்குக் கொடுத்த கல்வியினால் புதிய ஒளி பெற்றோம். ஆசியாவின் கொடுங் கோன்மையாகிய இருளுக்கிடையே ஆங்கிலேய நாகரீகத்தின் விடுதலை ஒளி நமக்குக் கிடைத்தது (கரகோஷம்)

- 1906 ம் வருடத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் தாதாபாய் நவ்ரோஜி தலைமை வகித்துப் பேசியது.

மகாராணியின் அனுகூலமான, என்றும் மறப்பரிய கீர்த்தி மிக்க ஆட்சியில் அய்ம்பது வருஷம் முடிவு பெற்றதைக் குறித்து சக்ரவர்த்தினி யிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகளைத் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்யத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல வருடம் ஆளவேண்டும் என்று வாழ்த்துகிறது.

- 1906 ம் வருடம் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்.

இந்த ஜனசபையை ஏற்படுத்தினோர் பிரிட்டிஷ் ராஜ்யத்திடம் மிகுந்த பற்றுதலுடையவர்கள். இதை விட்டு ருஷ்யாவினுடைய ஆட்சியின் கீழ்ப் புகுவதை அவர்கள் ஒரு நாளும் விரும்பமாட்டார்கள். இங்கி லீஷ் ராஜ்யம் நாகரீகமானது; ருஷ்ய ஆட்சியோ கொடுங் கோன்மை.

- 1889 டிசம்பர் 26 இல் பம்பாயில் நடைபெற்ற 5ஆவது காங்கிரஸ் மகா சபையில், வில்லியம் வெட்டர்பர்ன் என்ற ஆங்கிலேயர் தலைமை வகித்துப் பேசியது.

கருணை தங்கிய சக்கரவர்த்தினி யின் ஆட்சி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தின் சரித்திரத்தில் நீண்டதும், மிக உபகாரமானதும், மனித சந்தோஷத் தாலும், நாகரீகத்தாலும் மிக முக் கியமான அபிவிருத்திகளுடன் பிணைக்கப்பட்டது மாதலால், இந்த ஆட்சியில் அறுபதாண்டு முடிவு பெற்றமை கருதி அவருக்கு இந்த ஜன சபை வணக்கத்துடன் நன்றி தெரிவிக்கிறது.

- 1896ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நடைபெற்ற 12 வது காங்கிரஸ் மகாசபையில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம். சுதேசமித்திரன் வெளியிட்ட காங்கிரஸ் வரலாறு முதல் பாகத்திலிருந்து.

இதற்குப் பதவுரை, பொழிப்புரை தேவைப்படாதே! வெள்ளைக்காரர் களிடம் வேலைகள் பெறுவதற்காக மனு போட்டு அவர்களுக்கு ராஜ வாழ்த்துப்பாடி மண்டியிட்டுக் கிடந்த பரம்பரையா பெரியார் இயக்கம் பற்றிப் புழுதி வாரித் தூற்றுவது?

பெரியார் ஈரோட்டில் நடத்திய (10-5-1930) இளைஞர் மாநாட்டின் தீர்மானம் என்ன தெரியுமா?

எந்தப் பொதுக் கூட்டங்களிலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜவணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டும் என்று இம்மாநாடு தீர் மானிக்கிறது.

இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் வெத்து வேட்டு வாணங்களை விட்டு வேடிக்கை காட்ட ஆசைப்பட வேண்டாம் அக்ரஹாரமே என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

சுதந்திரம் கேட்கவா காங்கிரஸ் தொடங்கப்பட்டது?

At that time was the foundation of the Indian National Congress laid not for Swaraj, nor Swadesh, no Swadhinta or Swadharma but for few crumbs that may fall from the table of the British - whose power in India had been established on firm foundation.

அந்த நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் சுயராஜ்யத்திற்காகவோ, சுதேசிக்காகவோ, சுவாதீனத்திற்கா கவோ, சுயதர்மத்துக்காகவோ அமை யப் பட்டதல்ல. ஆனால் பிரிட்டி ஷார் மேஜையிலிருந்து விழுகிற எலும்புத் துண்டுகளுக்காகவும், அவர்களு(From sixty Years of Congress by Sajyapal and Praboth Chandra M.A.) போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

1885-இல் வெள்ளைக்காரரால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் பூர்ண சுதந்திரம் கேட்டது 1929 லாகூர் மாநாட்டில்தானே!

1916 இல் நீதிக்கட்சி தோற்றுவிக் கப்பட்டது. அதன் முதல் குறிக்கோள் பார்ப்பன ஆதிக்கப் பிடியிலிருந்து பார்ப்பனர் அல்லாதார் விடுதலை பெறுவதே அதுவும் காங்கிரஸ்காரராக இருந்த பிட்டி தியாகராயர் டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் டாக்டர் சி. நடே சனார் துணையோடு நீதிக் கட்சியை நிறுவினார்கள். 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறிய தந்தை பெரியர் 1932 டிசம்பரில் வெளியிட்ட சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத் திட்டமும் என்பதில் முதல் திட்டமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா?

பிரிட்டிஷ் முதலிய எவ்வித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்து இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது என்று திட்டம் கொடுத்தவர் அல்லவா ஈரோட்டுச் சிங்கம்.

1942 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு (Quit India) தீர்மானத்தை நிறைவேற்றியது காங்கிரஸ்.

(பார்ப்பனர்களின் குலதர்ம வீரரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் எதிர்த்தார் - பின் வாங்கினார். ஆகஸ்டு துரோகி என்று தூற் றப்பட்டார் என்பதையும் துக்ளக் கூட்டத்துக்கு இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.)

அதனைத் தொடர்ந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. எங்கும் கலவரம், கொலை, கொள்ளை, தீ வைப்பு இத்தியாதி, இத்தியாதி!

காந்தியார் கைது செய்யப்பட்டார். பின் விடுதலையானார். வெளி வந்த வேகத்தில் அவசரம் அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சட்டமறுப்பு ஆரம்பிக்கும் நோக் கம் எனக்கில்லை. முன் நிகழ்ந்தது இனி நிகழாது. 1942 ஆம் வருடத்து நிலைமைக்கு இனிமேல் இட்டுச் செல்லமாட்டேன். சிவில் நிர்வாகத்தில் உள்ள தேசிய சர்க்கார் போதும். (சுதேசமித்திரன் 14_-7_-1944) என்று கூறிடவில்லையா?

அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களை ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்.

இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண் டும்? என்று குடி அரசில் (29-12-1933) தலையங்கம் எழுதியதற்காக. வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசாங்கம் 124 ஆ. அரசு வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு (30-_12_1933) சிறையில் அடைக்கப் பட்டாரே.

எதிர் வழக்குக் கூட ஆடாமல் வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர் அல்லவா பெரியார்? 9 மாத சிறைத் தண்டனை 300 ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் தண்டனை என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தண்டனை அளித்ததே - சிரித்த முகத்துடன் தண்டனைகளை ஏற்றுச் சிறை சென்றவர் அல்லவா வெண்தாடி வேந்தர்? தந்தை பெரி யாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாளும் தண்டனைக்குள்ளானாரே?

ஆச்சாரியார் போல அண்டர் கிரவுண்ட் ஆனாரா? அப்படி அண்டர் கிரவுண்ட் ஆனவருக்குத்தானே இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்ற லாட்டரி பரிசு அடித்தது _ பார்ப்பனர் சூழ்ச்சியாலும், ஆதிக்கத்தாலும்

துக்ளக் கூட்டமே! கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்!

-----------------------(இன்னும் இருக்கிறது)

---------------கலி.பூங்குன்றன் அவர்கள் 23-7-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை