Search This Blog

14.7.11

ஈழத்தமிழர் பிரச்சினையில் பார்ப்பனர்கள்-மலையாளிகளின் சதி!

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் உரை

ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பார்ப்பனர்களும், மலையாளிகளும் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தினர் என்பது குறித்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் ஆதாரங்களை எடுத்து வைத்தார்.

நேற்றைய உரையின் தொடர்ச்சி வருமாறு:

இலங்கை அரசின் அமைச்சரவையில் வீட்ட மைப்பு பொறியியல் சேவைகள் மற்றும் நிருமாண பொது வசதிகள் துறை அமைச்சராக இருப்பவர் ஜனதா விமுக்திப் பெரமுனாவின் (ஜெ.வி.பி.) தலைவரான விமல் வீரலவங்க; இலங்கையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் இந்தப் பெயர். மார்க்சியம் உதட்டால் பேசி, உள்ளத்தால் பாசிசம் பேசும் வன்குணாளர்கள் இவர்கள். (இந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள்தான் இந்தியாவில் நடைபெறும் மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடுகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

இவர் இலங்கையில் அமைச்சராகவும் இருக்கக் கூடியவர். இனப்படுகொலையை விசாரிக்க அய்.நா. மூன்று பேர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்தது அல்லவா? அதனைக் கடுமையாக விமர்சனம் செய்தவர் - பட்டினிப் போராட்டம் நடத்தியவரும் கூட. உச்சக் கட்டமாக அய்.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூனின் கொடும் பாவியை எரித்தவர்.

முதல் அமைச்சர்-ஏன் கண்டிக்கவில்லை?

அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில் 8-6-2011 அன்று ஈழத் தமிழர் தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இனப்படுகொலை செய்த சிங்கள அரசு - அதன் அதிபர் மகிந்த ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளாதார தடையைக் கொண்டு வரவேண்டும்.

எதிர்க்கட்சிகள் உட்பட இந்தத் தீர்மானத் திற்கு ஆதரவு அளித்தன. தி.மு.க. ஆதரவு தெரிவித்த நிலையிலும் இப்பிரச்சினையில் தமிழ்நாடு சுருதிப் பேதமின்றி இருக்கிறது என்று உணர்த்துவதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பை அ.தி.மு.க. அரசு கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டது. தீர்மானத்தை வழிமொழியும் நிலையில் முதல் அமைச்சர் தி.மு.க.வையும், கலைஞர் அவர்களையும் வசை பாட இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தியது முதல் அமைச்சரின் முதிர்ச்சியின்மைக்கான அடையாளம். தேவையில் லாமல் விடுதலைப் புலிகள் மீதும் சேற்றை வாரி இறைத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதற்குத் தாமே காரணம் என்று பெருமையடித்துக் கொண்டார்.

அதிகார பூர்வமான எதிர்க் கட்சித் தலைவரான தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந் தும் தம் பங்குக்கு முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களைத் தரக் குறைவாகச் சாடி, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நோக்கத்தையே சிதைத்தார்.

இதற்குப் பிறகு இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து உரையா டினார்.

சிவசங்கரமேனன் தலைமையில் வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவ், இந்திய பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப் குமார் அடங்கிய குழு இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேயுடனும், சம்பந்தப்பட்டவர்களு டனும் பேசினார்கள்.

இலங்கை செல்லும் முன் தமிழக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அதிபரிடம் பேசி இருப்பார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள். அதுதான் நடக்க வில்லை.

இந்தியா புறப்படுமுன் ராஜபக்சேவை சந்தித்த பின் கொழும்பில் சிவசங்கரமேனன் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் என்ன கூறினார்?

தமிழ்நாடு முதல் அமைச்சர் தெரிவித்த கருத்துகள் குறித்து இலங்கை அதிபரிடம் பேசவில்லை என்று கூறி கை விரித்து விட்டாரே!

இதென்ன கொடுமை! எதற்காக சிவசங்கர மேனன் இலங்கை செல்லும் முன் தமிழ்நாட்டு முதல் அமைச்சரைச் சந்தித்துப் பேசினார்? முதல் அமைச்சரை சந்தித்து விட்டு, இலங்கை அதிபரை சந்திக்கச் சென்ற இடத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக முதல் அமைச்சரை கலந்தா லோசித்த கருத்துகள் குறித்தும் பேசவேண்டிய இடத்தில் பேசவில்லை என்றால், தமிழ்நாடு சட்டப் பேரவையின் தீர்மானத்துக்குத்தான் என்ன மரியாதை? முதல் அமைச்சருடனான சந்திப் புக்குத்தான் என்ன மரியாதை?

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். நாங்கள் டில்லியுடன்தான் பேசுவோம் - தமிழ்நாட்டு முதல் அமைச்சருடன் அல்ல என்று நீட்டி முழங்கினாரே!
தமிழ்நாடு முதல் அமைச்சர் என்ன செய்திருக்க வேண்டும்?

சிவசங்கர மேனன் தலைமையில் சென்ற மூவர் குழுவினர் இப்படி நடந்து கொண்டதற்காக முதல் அமைச்சர் தம் கருத்தைக் கூறி இருக்க வேண்டாமா? கண்டித்திருக்க வேண்டாமா?

இது குறித்துத் தமிழ்த் தேசியம் பேசும் தோழர்களும் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்?

கபட நாடகம் அல்லவா நடக்கிறது!

இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ராஜீவ்காந்தி இந்தியப் பிரதமராகவும், ஜெயவர்த்தனே இலங்கை அதிபராகவும் இருந்த கால கட்டத்தில் மேற் கொள்ளப்பட்டது. அதில்தான் மாநிலங்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் என்றும் கூறப்பட்டது.

அது பற்றியெல்லாம் இனி பேசிப் பயனில்லை; மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த போர் வெற்றியை சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடம் அளிக்க முடியாது என்று கூறுகிறார் என்றால் இவர்கள் மத்தியில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு எங்கிருந்து கிடைக்கப்போகிறது? ராஜபக்சே போர்க்குற்றவாளிதான் என்று அறிவிக்கப்படுவதற்கான அவ்வளவு ஆதாரங் களையும், ஆவணங்களையும் அளித்துள்ளனர் வல்லுநர் குழுவினர்.

இப்பொழுது எங்கே முட்டுக்கட்டை? ராஜ பக்சே உலக நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ள அய்.நா.வின் பாது காப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி தேவைப் படுகிறது. அதன் உறுப்பினர்களான சீனாவும் ருசியாவும் வீட்டோ பவரைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க தோள் தூக்கி நிற்கின்றனரே - இந்தியாவும் துணை போகிறதே!
இந்த முட்டுக்கட்டையை அகற்றாமல் ராஜ பக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது எப்படி? போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படு வதன் சாத்தியம் என்ன? இந்தப் பிரச்சினை உலகப் பிரச்சனையாக மாற்றப்பட வேண்டிய அவசியத் துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.!

அய்ரோப்பிய ஒன்றிய பதினேழு நாடுகள் இலங்கையின் போர்க்குற்றங்களை முன்னிறுத்தி இலங்கை அதிபர் ராஜபக்சே மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப் பட்டு வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரி மைக்கான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் அடிநாதம்! (26-5-2009)

இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதில் முண்டா தட்டி முந்திரிக் கொட்டையாக நடந்து கொண்டது இந்திய அரசின் பிரதிநிதிதானே! இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங் குளங்கரே என்பவர் என்ன பேசினார்?

இந்தக் கூட்டமே அவசியமற்றது. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, அதனைத் தண்டிக்க, கண்டிக்க முயற்சிக்கக் கூடாது என்று பேசினாரே! இதே இந்திய அரசு தமிழர்களின் பிரச்சினை யான இதில் இப்படி நடந்து கொண்டுள்ளதே - மற்ற இனப் பிரச்சினைகளில் எப்படி நடந்து கொண்டு இருக்கிறது?

ஆப்பிரிக்காவில் உகண்டா நாட்டில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்தியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்த அடுத்த கணமே இந்திய அரசு துடிதுடித்ததே! பிரான்சு நாட்டின் தலைநகரில் வாழும் சீக்கியர்கள் உட்பட அனைவரும் தலைக்க வசம் (ழநடஅநவ) அணிய வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தபோது பிரான்சு அதிபரை நேரில் சந்தித்தாரே பிரதமர் மன்மோகன்சிங்!

ஏன் இந்த ஓர வஞ்சனை?

வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிக் சூட்டில் ஒருவர் பலியானார். 30 பேர்கள் காயமடைந்தனர். அதன் எதிரொலியாக இந்தியாவில் பஞ்சாப் பற்றி எரிந்தது. ஜலந்தர்-சண்டிகர்- லூதியானா போன்ற நகரங்கள் பதற்றம் அடைந்தன. பிரதமர் மன்மோகன்சிங் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தாரே!

புதிதாக அயல்துறைஅமைச்சராகப் பொறுப் பேற்ற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஆஸ்திரியாவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கு மாறு வற்புறுத்தவில்லையா? ஒரு உயிர் பறி போனதற்கே இப்படி துடி துடிக்கும் இந்தியஅரசு பல லட்சக் கணக்கான தமிழர்களை பலி கொடுத்துப் பரித விக்கும் மக்கள் பக்கம் பார்வையைச் செலுத்தாதது-ஏன்?

லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது. பன்னிரண்டாயிரம் இந்தியர்கள் அங்கு வாழ் கிறார்கள் என்றவுடன் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லையா? உடனடியாக ஆறு போர்க் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டனவே! அப்படி வந்து சேர்ந்த கேரள மக்களை இந்தியாவின் பல்வேறு விமான நிலையங் களில் இருந்து விமானம் மூலம் அனுப்பினரே! போர்க்கால வேகத்தில் பணிகள் முடுக்கப் பட்டனவே! (21.7.2006) ஏன் இந்த ஓரவஞ்சனை - மாற்றாந்தாய் மனப்பான்மை? இந்திய அரசுக்கு என்ற வினாவைத் தமிழர்கள் எழுப்பமாட்டார் களா?

மலையாளிகள் ஆதிக்கம்

ஈழத் தமிழர் பிரச்சினையில் விதிவிலக்கு இல்லாமல் அனேகமாக எல்லாப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் தமிழர்களுக்கு எதிராகவே விஷம் கக்குகின்றனர். இது ஒரு பக்கம் என்றால் மலையாள அதிகார வர்க்கம்-தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொள்வது என்ற முடிவோடு இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியப் பிரதமருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் எம்.கே.நாராயணன். (இப்பொழுது மேற்கு வங்காள ஆளுநர்) ஒரு மலையாளி! வெளியுறவுத் துறை ஆலோசகராக இருந்தவர் சிவசங்கர மேனன் (இப்பொழுது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) ஒரு மலையாளி!

அய்.நா. மன்றத்தின் செயலாளர் பான்-கி-மூன் அவர்களுக்குச் செயலாளராக இருக்கும் விஜய் நம்பியார் ஒரு மலையாளி! இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சதீஷ் நம்பியார் ஒரு மலையாளி! (ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி). அய்.நா.வின் செயலாளராக இருக்கும் விஜய் நம்பியாரும் இலங்கை அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் சதீஷ் நம்பியாரும் அண்ணன் தம்பிகள் ஆவர். உலகப் புகழ் பெற்ற டைம்ஸ் ஏட்டின் எழுத்தாளர் கேத்தரின் பிலிப் எழுதுகிறார்:

பான்-கீ-மூனின் தலைமை ஆலோசகர் விஜய் நம்பியார், கொழும்பிலிருந்த அய்.நா. அலுவலக ஊழியர்களுக்கு எழுதுகிறார். படுகொலை செய்யப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக் கையை அய்.நா.வுக்குத் தெரிவிக்க வேண்டாம். இதனால் இலங்கை அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்று உத்தரவிடுகிறார்.

அய்.நா.மீது படிந்துள்ள இந்தக் கறையைத் துடைக்கவே முடியாது என்று டைம்ஸ் ஏட்டில் எழுதியுள்ளார் கேத்தரின் பிலிப். மத்திய அரசின் துறைச் செயலாளர்கள் மொத்தம் 53 பேர் என்றால் 19 பேர்கள் மலையாளிகள். இவ்வளவுக்கும் கேரளா சின்னஞ்சிறு மாநிலமாகும்.

சிங்களவர்கள் தமிழர்களை எதிரிகளாக நினைப்பது போல, நடந்துகொள்வதுபோல, இந்தியாவில் பார்ப்பனர்களும், மலையாளிகளும் தமிழர்களை எதிரிகளாகவே காண்கின்றனர். ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தச் சிக்கலும் மிகக் கொடுமையானதாகும்!

லண்டன் தொலைக்காட்சியில்...

லண்டன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப் பட்ட உண்மை நிகழ்வுகள் உலகம் முழுவதும் உள்ள மக்களைத் துடித்து எழச் செய்திருக்கிறது.

அமெரிக்க, இங்கிலாந்து நாடுகள்கூட ராஜபக் சேவைக் குற்றக் கூண்டில் நிறுத்த ஆதரவுக் கரங்களை நீட்ட ஆரம்பித்துள்ளன. கம்யூனிசம் பேசம் சீனா, ருசியா, கியூபா, சோசலிசம் பேசும் இந்தியா எல்லாம் சேர்ந்து கொண்டு இனப் படுகொலைக்குத் துணை போன கொடுமைக்கு மன்னிப்பு எந்த நூற்றாண் டிலும் கிடைக்கப்போவதில்லை.

அய்.நா. மன்றத்தின் குற்றச் சாற்றுக்கு இலக்காகி போர்க் குற்றவாளியாக இதற்கு முன் அறிவிக்கப் பட்டவர்கள் பலர் உண்டு. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946 மே 3ஆம் நாள் டோக்கியோ போர்க்குற்ற நீதிமன்றம் ஜப்பானிய தலைவர்கள் மீது விசாரணை நடத்தியது. மூன்று விதமான குற்றங்கள் குறித்து விசாரிக்கப் பட்டது. இரண்டாம் உலகப் போரில் இழைக்கப் பட்ட அமைதிக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

டோக்கியோ நீதிமன்றத்தில் ஜப்பானிய பிரதமர் களாக இருந்த ஜெனரல் டோஜோ, ஜெனரல் கொய்சோ, ஜப்பானிய இராணுவ தளபதியான யோஷிஜிரோ உமேசு, போர் அமைச்சராக இருந்த செய்ஷிரோ ஹிட்ட ஹாக்கி உட்பட பலருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே போல நூரம்பர்க் விசாரணை மன்றத்தில் ஜெர்மனியப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த ஹெர்மன் கோயரிங், எஸ்.எஸ்.படையின் உயர் தளபதியாக இருந்த எர்னஸ்ட் கால்ட்டென புரூனர் அடால்ப் ஈச்மென் ஆகியோர் உள்பட நாஜி உயர்தலைவர்கள் பலரும் தண்டிக்கப் பட்டனர். யூகோஸ்லோவேகியா குடியரசுத் தலைவராக இருந்த மிலோ சேவிக் போர்க் குற்றங்கள் புரிந்ததான சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில் சிறையிலே மரணமடைந்தார்.

போஸ்னியா முன்னாள் குடியரசுத் தலைவர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி கைது செய்யப் பட்டு, பெல்கிரேடு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஹேக் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தொடர் விசாரணை ஒரு பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இவர்களை எல்லாம் விட மிகப் பெரிய குரூரமான போர்க் குற்றவாளியான மகிந்த ராஜபக்சே குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனை விதிக்கப்படாவிட்டால், உலகில் கொடுமைக்கும், கொலை வெறிக்கும் தங்கு தடையின்றி முழு உரிமம் அளிக்கப்பட்டதாகவே, சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டதாகவே பொருள் படும்!

அய்.நா.அதிகாரிகளையே தடை செய்த இலங்கை

இலங்கை முகாம்களில் முடங்கிக் கிடந்த, அடைத்து வைக்கப்பட்ட தமிழர்களை அய்.நா. அதிகாரிகள் நேரில் பார்வையிடச் சென்ற போது இலங்கை அரசு அதனைத் தடை செய்ததே! இதனை யுனிசெஃப் மேலாண்மை இயக்குநர் வெனிமென் அறிக்கை மூலம் வெளிப்படுத்திக் கண்டித் துள்ளாரே!

பத்திரிகையாளர்கள் படுகொலை

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பகுதி களுக்குச் செல்ல சர்வதேச பத்திரிகைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதே. 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஒன்பது பத்திரிகையா ளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 27 பேர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழின இளை ஞர்கள் அடைத்து வைக்கப்பட்ட முகாம்களிலி ருந்து பிரித்தெடுக்கப் பட்டு மிகக் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாயினர். அய்.நா.வின் இலங் கைத் தூதர் பாலித்த கோ கொன்னா ஒப்புக் கொண்டு கூறினார்.
அடையாளம் கண்டு அழிப்பார்களாம்!

தனி முகாம்களில் 13 ஆயிரம் பேர்கள் இருக்கி றார்கள். மேலும் மற்ற முகாம்களில் 10 ஆயிரம் புலிகள் மறைந்திருக்கக்கூடும். ஆனால் இவர்கள் எல்லோரையும் அடையாளம் கண்டு அழிப்பது தான் எங்கள் நோக்கம் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டவர்களைக் குற்றக் கூண்டில் ஏற்றா விட்டால் 21 ஆம் நூற்றாண்டு என்பது மிகப் பெரிய அவமானத்துக்குரிய, கறைபடிந்த காலமாகவே கருதப்படும்.
1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு 24 தேசிய இனங்கள் தனி நாடுகளாக மலர்ந்துள்ளன. அதில் 25 ஆவது நாடாக தமிழ் ஈழம் பிரிந்தாகவேண்டும்.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கிழக்கு தைமூர், செக் குடியரசில் சுலோவேகியா, தெற்கு சூடான் தனி நாடாகவில்லையா?

இலங்கை அரசையும் அய்.நா. ஏன் இந்த வகையில் வற்புறுத்தக்கூடாது?

திராவிடர் கழகம் கடைசிவரை ஈழத் தமிழர் களுக்காகக் குரல் கொடுக்கும், கர்மத்துக்கு உரியவர்கள் நாங்கள்-கடைசிவரை துணை நிற்போம் என்று கூறினார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன்.
--------------- “விடுதலை” 14-7-2011

0 comments: