Search This Blog

21.7.11

புத்தர் கொள்கை, மதம்போல் ஆகிவிட்டதா?

பவுத்தர் அம்பேத்கர்

நூல் : அம்பேத்கர் வாழ்வும் பாடமும்
ஆசிரியர் : சு. அறிவுக்கரசு
வெளியீடு : விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் - 641 001
பக்கங்கள் 128 விலை ரூ.65/-

இந்த நூலிலிருந்து...

இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என முடிவு செய்த பாபாசாகேப் அம்பேத்கர் பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். மெட்ரிகுலேஷன் தேறியதற்காக அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவருக்குப் பரிசளிக்கப்பட்ட புத்தரின் வரலாறு நூல் அவருள் பலத்த கருத்து மாற்றத்தை விளைவித்தது. அதன் பயனாக புத்தம் தொடர்பான எல்லா நூல்களையும் படித்து அலசி ஆய்ந்தார். பார்ப்பன மேலாண்மை, வல்லாண்மை, ஜாதிக் கொடுமை போன்ற இந்துமதக் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன் கவுதம புத்தர் நடத்திய சமுதாயப் புரட்சியின் விளைவுதான் பவுத்தம் என்பதைத் தெளிந்து தெரிவித்தார். ஆரிய வைதீக சனாதன இந்து மதத்தின் மூடக் கொள்கைகளான ஆன்மா, கர்மா தத்துவம், பூர்வஜென்ம வினைப்பயன், மறுஜென்மம் போன்றவற்றைப் பவுத்தம் எதிர்த்தது என்பதையும் விளங்கி மக்களுக்கும் விளக்கமளித்தார். புத்தரின் தர்மம் எனும் தலைப்பில் அவற்றை எடுத்துக் கூறினார்.

நான் யார், எங்கிருந்து வந்தேன், எங்கே போவேன் என்பன போன்ற வேதாந்த விசாரணைகளில் மனிதன் ஈடுபட்டுக் காலத்தை வீணாக்குவதைப் புத்தர் கண்டித்தார்.

ஆன்மா என்பதைப் பொய் என்றார். அதை உடலோடும் புலன்களோடும் உணர்வோடும் உயிரோடும் வைத்து எண்ணுவதைக் கண்டித்தார். ஆன்மா என ஒன்றில்லை என்று தெளிவாகக் கூறினார்.

உலகத்தைக் கடவுள் படைத்தது என்பதை அவர் ஏற்கவில்லை.

மனிதனையும் விலங்குகளையும் உயிர்களையும் கடவுள் படைத்தது என்பதை புத்தர் மறுத்தார்.

ஊழ்வினை என்பதை, மனிதனுக்கும் உலகிற்கும் எதிர்காலத்தில் நேரப் போவதைக் கடவுள் முன் முடிவு செய்து வைத்திருக்கிறது என்பதை அவர் ஒதுக்கித் தள்ளி, நம்ப மறுத்தார்.

சென்ற பிறவியில் செய்யப்பட்ட செயல்களின் தாக்கம் இப்பிறவியில் துன்பமுறச் செய்கிறது என்பதை அவர் ஒதுக்கித் தள்ளினார்.

மனம் பொருள்களுக்கு முந்தியது. அதுவே செயல்திறன் அனைத்துக்கும் தலைமையானது, மனத்தைப் பண்படுத்தும் பணியே முதலில் கவனிக்கப்பட வேண்டியது. இது கருத்துமுதல் வாதம். அறிவியல் கண்ணோட்டம் பொருள்முதல் வாதத்தை முன் வைக்கிறது. இதனை ஏற்காத அம்பேத்கர், பொருள்முதல் வாதத்தைக் கண்டித்தார். கம்யூனிசத்தைக் கண்டித்தார். பவுத்த நாடுகளில் கம்யூனிசம் பரவியதைக் கண்டித்தார்.

பிரபஞ்சத்தைப் படைத்தது கடவுள் என்பதைப் புத்தர் மறுத்தார். ஜைனமதமும் மறுக்கிறது. கடவுள் இருக்கிறது என்கிற கோட்பாட்டை புத்தர் ஏன் நிராகரித்தார் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன என்கிறார் அம்பேத்கர். கடவுளைக் கண்டவர் யாருமில்லை; ஆனால் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள். கடவுள் அறியப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை. கடவுள் உலகைப் படைக்கவில்லை. உலகம் பரிணமித்ததே தவிர படைக்கப்பட்டதல்ல. கடவுளை அடிப்படை யாகக் கொண்ட எந்த ஒரு மதமும் ஏற்பதற்கு உரியதல்ல. அது மூடநம்பிக்கையை உருவாக்குவதிலேயே முடியும்.

கடவுள் எல்லா வல்லமையும் பெற்றதாகவும் அனைத்துப் படைப்புக்கும் காரணமாகவும் இருக்குமேயானால், மனிதன் தானே எதையும் செய்ய இயலாதவனாகவும் எதையும் செய்யத் தேவை அற்றவனாகவும் ஆகிவிடுவானல்லவா? உலக விவகாரங்களில் பங்கேற்க லாயக்கில்லாத, செயல் ஊக்கமில்லாத அற்ப ஜீவனாக மட்டுமே மனிதன் நீடிக்க வேண்டி ஆகுமே! இதுதான் மனிதனின் கதி என்றால், அவன் ஏன் படைக்கப்பட வேண்டும்? (தன்னை வணங்குவதற்காக மனிதனைக் கடவுள் படைத்தது என்று இஸ்லாம் கூறுகிறது. அற்பத் தன்மைக்கு இது ஓர் அடையாளம்.)

கடவுள் நல்ல மனதுடையது என்றால், பின் அது படைத்த மனிதர்கள் ஏன் கொலைகாரர்களாக, திருடர்களாக நேர்மையற்றவர்களாக, பொய்யர்களாக, பழிநிறைந்த செயல் செய்பவர்களாக, தீய செயல் புரிபவர்களாக உருவாகிறார்கள்? இதற்கும் கடவுள்தானே காரணம்? அனைத்துக்கும் காரணமானது கடவுள் என்றால், கடவுள் நல்லதாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நீதிமானாக, கருணைமிக்கதாகக் கடவுள் இருக்குமேயானால் உலகில் ஏன் இவ்வளவு அநீதிகள் நிலவுகின்றன? எங்கும் துயரங்கள் நிறைந்திருக்கின்றனவே, தம்மால் படைக்கப் பெற்றவற்றை ஏன் கடவுள் சரிப்படுத்தக் கூடாது? எல்லையற்ற ஆற்றல் உடையது கடவுள் என்றால், எல்லாவற்றையும் நல்லனவாக்க ஏன் அதனால் முடியவில்லை? அதனால் படைக்கப்பட்டவை ஏன் பாதிப்புக்கும் துன்ப துயரத்துக்கும் ஆளாகின்றன? எல்லோருக்கும் ஏன் இன்பத்தை அளிக்கவில்லை? உண்மையும் நியாயமும் ஏன் தோல்வி அடைகின்றன? இத்தனை தீமைகளுக்கும் காரணமான கடவுளும் அநீதியானதே!

மதம் என்பதே மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க வேண்டும். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவுக்குப் பாலமாக இருக்கக் கூடாது என்றார் புத்தர்.

புத்தர் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார். கூடுவிட்டுக் கூடு பாயும் (சன்சாரா) மறுபிறப்பு முறை என்பது புத்தரின் புதுப்பிறப்புக் கோட்பாட்டால் மாற்றியமைக்கப்பட்டது என்கிறார் அம்பேத்கர்.

புத்தரின் கோட்பாட்டின்படி, ஓர் உடலை உருவாக்கும் தனிமங்கள் நான்கு மட்டுமே! ப்ரித்வீ, அப்பு, தேஜ் மற்றும் வாயு எனப்படும் நிலம், நீர், தீ, காற்று ஆகியன. இந்நான்கு மூலங்களும் சேர்ந்ததுதான் உடல். பஞ்ச பூதங்கள் எனப்படுவதற்குப் பதில் நான்கு பூதங்கள் என்கிறது பவுத்தம். இந்தக் கருத்தையே பழங்கால சார்வாகம் கூறியது. வானம் என்பது மூலம் (தனிமம்) அல்ல என்பது இதன் கருத்து. வானத்துக்கும் மனித உடலுக்கும் தொடர்பில்லை.

உடல் (இறந்து) இயற்கையடைந்தபின், இந்த நான்கு மூலங்களும் அழிந்து போகின்றன என்பதை புத்தர் ஏற்கவில்லை. அவை விண்ணில் மிதக்கும் அவற்றையொத்த மூலங்களின் தொகுதியோடு இணைந்துவிடுகின்றன என்றார் புத்தர். அப்படி இணையும்போது புதிய பிறப்பு இடம் பெறுகிறது என்கிறது பவுத்தம்.
ஆணின் உயிரணு பெண்ணின் சினையுடன் காற்றும் வெளிச்சமும் புக முடியாத கருவறைப் பகுதியில் இணையும்போது புதிய உயிர் உருவாவதாக அறிவியல், வெட்ட வெளியில் காற்றும் வெளிச்சமும் கரியும் தூசும் கண்டதும் கலந்து மிதக்கும் விண்ணில் மிதக்கும் மூலங்களோடு செத்த உடலின் மூலங்கள் கலப்பதால் புதிய உயிர் பிறக்கிறது என்று புத்தம் கூறுகிறது. அந்தப் புதுப்பிறப்பு மனித உயிரா? விலங்கா? புழுவா? பூச்சியா? மரமா? செடியா? கொடியா? கொடிய பாம்பா?

மறுபிறப்பு பற்றிக் கூறும் பவுத்தக் குழப்பம் இப்படியாக இருக்கிறது. குழப்பம் தீர, சிறு விளக்கமும் உண்டு. இறந்த ஒரே உடலிலிருந்து வெளிவந்த மூலங்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையாம். வெவ்வேறு இறந்த உடல்களிலிருந்து சேர்ந்த தொகுதியிலிருந்து ஈர்க்கப்பட்டு இருக்கலாமாம். உடல்தான் மரணிக்கிறது. மூலங்கள் எப்போதும் வாழ்கின்றன என்கிற ஒரு மாதிரியான மறு பிறப்பிலேயே புத்தர் நம்பிக்கை கொண்டிருந்தார் என டாக்டர் அம்பேத்கர் எழுதுகிறார்.

திராவிட இயக்கக் கவிஞர் ஒருவர் 1946இல் பாடினார்.

நரியது ஒன்று இறந்ததாலோ - இந்த நாட்டில் அமைச்சன் பிறந்து விட்டான்?
வெறிகொண்ட குக்கல் இறந்ததாலோ - இங்கு
வீரப்பேச்சாளன் பிறந்து விட்டான்?

..................

சிந்திப்பீர் நீங்கள் இறந்த பின்னர் - பெறும்
திருவடிவம் என்ன செப்புவீரா?

இதை எழுதிப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் பவுத்த மறுபிறப்பை ஏற்று வாதாடினார் பாரிஸ்டர் அம்பேத்கர். பகுத்தறிவுவாதிகள் ஏற்க முடியாத நிலை!

பவுத்தத்தைத் தழுவுவதற்கு முன்பு, பல மதங்களைப் பற்றியும் எடைபோட்டுப் பார்த்து எழுதும்போது கிறித்துவத்திற்குப் போனால் கிறித்துவர்களின் எண்ணிக்கை கூடிவிடும் என்பதால் ஒதுக்கிவிட்டார். முஸ்லீம் மதத்தைப் பற்றிய விமர்சனம் வந்தால் அதனைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத மதம் அது; மேலும் இசுலாமியர்களின் எண்ணிக்கை கூடிவிட்டால், பாகிஸ்தான் கோரிக்கை வலுவாகிவிடும். சீக்கிய மதத்திற்குப் போகலாமா என்று சிந்தித்து வருகிறேன் என்கிற மாதிரியாகப் பேசினார். தம் தளபதிகளில் சிலரைப் பஞ்சாபிற்கு அனுப்பி நேரிடையாகவே, அம்மதம் பற்றியும் மக்கள் பற்றியும் அறிந்துவரச் செய்தார். இதை அறிந்ததும் இந்துக்கள் மனம் மகிழ்ந்தனர். சட்டப்படி, சீக்கியர்களும் இந்துதானே! பவுத்தம், சமணம், சீக்கியம் ஆகியவை இந்து மதத்திலிருந்து பிரிந்து போனவைதானே! இந்து மதப் பிரிவுகள்தான் என்கிற எண்ணம் இந்துமதத் தலைவர்களுக்கு! குறிப்பாக, விநாயக தாமோதர சவர்க்கார் எனும் இந்து மகாசபைப் பார்ப்பனருக்கு மகிழ்ச்சியும் மன நிம்மதியும்! மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொடுத்துவிட்டு, அந்தமான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மராட்டிய மாநிலம் ரத்தினபுரி மாவட்ட எல்லையைத் தாண்டக்கூடாது என்கிற ஆங்கில அரசின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுக் கையெழுத்துப் போட்டு முடங்கிக் கிடந்த வீர சவர்க்கார் சீக்கிய மதமாற்றத்தை வரவேற்றார்.

ஆனால், சீக்கிய மதத்தின் நிலை வேறுவிதமாக இருந்தது. குருநானக் போதித்தவை வேறு: நடைமுறையில் காணப்படும் நிலை வேறு! இந்து மதத்தைப் போலவே அதிலும் ஜாதிப் பிரிவினைகள். ஜாட், சுத்ரி, அரோரா போன்ற உயர்ஜாதிகளோடு, பார்ப்பனச் சீக்கியர்களும் உண்டு. தாழ்த்தப்பட்ட ஜாதிகளும் உண்டு. சமர் ஜாதியிலிருந்து சீக்கியரானவர்கள் ரவிதாசிய சீக்கியர் எனப்பட்டனர். நெசவாளர் ஜாதியிலிருந்து சீக்கியரானவர்கள் ராம்தாசா சீக்கியர் எனப்பட்டனர். பங்கி ஜாதியைச் சேர்ந்தவர்கள் சீக்கிய மதத்தில் மனூபி சீக்கியர் எனப்பட்டனர். இந்நிலை டாக்டர் அம்பேத்கரின் மனதை உறுத்தியது. சீக்கியத்தை மறுதலித்து விட்டார். பவுத்தக் கொள்கைகளை எவ்வித விமர்சனமுமின்றி ஏற்று பவுத்தராக 14.10.1956இல் மாறினார்.

புதுடில்லி மகாபோதி சங்கச் சார்பிலான கூட்டத்தில் 5.2.1956இல் பேசும்போது, மறுபிறப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக்காட்ட முடியும். என்னுடைய கருத்துப்படி, இயற்கை சக்திகள் மாறியிருக்கின்றனவே தவிர மனிதன் மாறவில்லை என்றார்.

மாறுவது ஒன்றுதான் மாறாதது என்றார் தந்தை பெரியார். மனிதன் மாறவில்லை என்றார் அம்பேத்கர். மறுபடியும் ஒரு மாறுபாடு.

இப்போது புத்தர் கொள்கை, மதம்போல் ஆகிவிட்டது. பர்மா, சிலோன் முதலிய இடங்களில் சாயபு என்றால் என்ன அடையாளம் உண்டோ, அதுபோல பவுத்தனுக்கும் கோயில், மண்டி போடுதல் இவையெல்லாம் பவுத்தமத அடையாளமாகி மதமாகிவிட்டது. இதைத்தான் நான் அம்பேத்கரிடம் சொன்னேன். இந்து மதத்தில் உள்ள பார்ப்பனருக்குப் பயந்து அங்கு போனால் இந்தப் பிட்சுகளைக் கட்டிக்கொண்டு யாரால் அழமுடியும் என்று தந்தை பெரியார் 1956இல் பேசினார். (விடுதலை 29.12.1956).

------------------- “உண்மை” ஜூலை 16-31 2011

0 comments: