Search This Blog

1.7.11

கிரிக்கெட்டுக்கு வரி விலக்கா?கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டேயல்ல!கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டேயல்ல - பொழுது போகாதவர்கள் வேண்டுமானால் அதைப் பார்த்துக் கொண்டு கிடக்கலாம்.

இந்திய வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் சோம்பேறித்தனமாகப் பிடித்துக் கொண்ட விளையாட்டு இது.

கால்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், கை பந்தாட்டம், சடுகுடு போன்ற வீர விளையாட்டுகளில் எந்தப் பார்ப்பனர்களாவது வெளியில் பெயர் தெரியும் படி இருக்கிறார்களா?... சொல்லுங்கள் பார்ப்போம்!

பார்ப்பன ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்படுவ தற்குக் கூட காரணம் - பார்ப்பனர்களே பெரும்பாலும் இதில் கொட்டம் அடித்துக் கொண்டிருப்பதுதான்!

விவசாயம் பார்ப்பனர்களுக்குச் சம்பந்தம் இல்லை என்பதால் அந்தத் தொழில் இந்தியாவில் நட்டப்பட்ட, நசிந்த தொழிலாக ஆக்கப்படவில்லையா? அதே நேரத்தில் கிரிக்கெட் என்பது வணிகமாக - தொழிலாக மாற்றப்பட்டு பணம் காய்ச்சி மரமாக அல்லவா மாறி விட்டது - காரணம் அது பார்ப்பனர்களின் கைகளில் இருப்பதுதான்!

கிரிக்கெட்டில் விளையாடுபவர்களுக்கு ஆண்டு சம்பளம் அல்லாமல் ஒவ்வொரு முறை விளையாடும் பொழுதும் லட்சக்கணக்கில் சம்பளம். வெற்றி பெற்று விட்டால் மத்திய - மாநில அரசுகள் கொடுக்கும் ஊக்கத் தொகைகள் - விலை உயர்ந்த வீட்டு மனைகள் - பரிசு மழைகள் - அப்பப்பா! சொல்லுந் தரமன்று!

5 நாள் கிரிக்கெட் (Test) என்பதற்கான மரியாதை போய் ஒரு நாள் கிரிக்கெட்டாகி, இப்பொழுது அய்.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) என்று அரை நாள் போட்டியாக ஆகிவிட்டது.

பெரும் பெரும் ஆலை முதலாளிகளும், சினிமாக்காரர்களும் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களை ஏலம் கூறி விலை பேசும் கேவலமாகி விட்டது.

கோடிக்கணக்கான ரூபாய்க்கு இவர்கள் விலை பேசப்படுகிறார்கள். நாட்டுக்காக விளையாடும் போட்டிகளில் காட்டும் ஆர்வத்தைவிட அய்.பி.எல். போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்; காரணம் கோடி கோடியாகப் பணம் கிடைக்கிறதே - அதுதான்.

இந்த அய்.பி.எல். போட்டியை நேரில் பார்ப்பதற்கு டிக்கெட் 25 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய்களாம்; கேட்பதற்கே தலைசுற்றவில்லையா?

இவ்வளவுப் பணம் புழங்கும் இந்த விளையாட்டுக்கு வரி விலக்காம்! கேளிக்கை வரிகூடக் கிடையாதாம். கொடுமையை என்னவென்று சொல்லுவது!

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த சக்திவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பொது மக்களின் பொழுது போக்குக்குக் கிரிக் கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறைந்தபட்சம் 500 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் டிக் கெட்டுகள் விற்கப்படுகின்றன. வசதி படைத்தவர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கு கின்றனர். கட்டணத்தை அரசுதான் ஒழுங்குபடுத்த வேண்டும்.

அய்.பி.எல். போட்டி நடத்துவதற்காக அய்.பி.எல். - பி.சி.சி.அய் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து வணிக வரி அலுவலகம் சார்பில் பொழுது போக்கு வரி வசூலிக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்க வில்லை; அவர்களிடம் இருந்து வரி வசூலித்தால் அரசுக்கு வருவாய் பெருகும்.

இதை வைத்து மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியும். பகல் - இரவு போட்டிகளை நடத்துகின்றனர். இதற்கு அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவுகிறது. எனவே பகல் நேரத்தில் நடத்திட வேண்டும். தமிழ்நாடு பொழுது போக்கு வரி ஒழுங்குமுறை சட்டத்தின்படி கட்டணம் ஒழுங்குபடுத்த அரசுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இக்பால் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, அய்.பி.எல். போட்டிக்கு வரிவிலக்கு அளித்திருப்பதை எங்களால் பாராட்ட முடியாது என்று தெரிவித்திருப்பதுடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

நியாயமான பொது நல வழக்கு இது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

20 ரூபாய் நாள் ஒன்றுக்கு வருமானம் ஈட்டக் கூடிய 77 விழுக்காடு மக்கள் வாழும் ஒரு நாட்டில் 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்து வேடிக்கை பார்க்கும் ஒரு விளையாட்டில் கொட்டப்படும் பணத்துக்கு வரி விலக்கு என்றால் இது என்ன கொடுமை! கண்டிப்பாகக் கூடுதல் வரி வசூலிக்க வேண்டும் என்பதே சரியானதாக இருக்க முடியும்.

--------------------"விடுதலை” தலையங்கம் 1-7-2011

0 comments: