Search This Blog

31.7.12

பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பிக்கும் நாள்- ஆவணி அவிட்டம்!


ஆவணி அவிட்டமாமே!

நாளை ஆவணி அவிட்டமாம்! பார்ப்பனர்கள் நாளை பூணூலைப் புதுப்பிக்கும் நாள்.

இடஒதுக்கீட்டால் ஜாதிக்குப் புத்துயிர் ஊட்டப்படுகிறது என்றெல் லாம் நீட்டி முழங்கும் பார்ப்பனர்கள் அனைவரும் (சோ உள்பட) நாளைய தினம் தவறாமல், மறக்காமல் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள்.

இந்தப் பூணூலை அணிந்த பிறகுதான் எந்த ஒரு பார்ப்பனச் சிறுவனும் துவிஜாதி (இரு பிறவியாளன்) பிராமணன் ஆகிறான். பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்பதற்கான டமார அறிவிப்புதான் இந்த பூணூல் அணிவிப்பு.

பார்ப்பனர்களைத் தவிர மற்ற செட்டியாரும், ஆசாரியாரும், பத்தரும் பூணூல் அணிந்து கொள்கிறார்களே என்று சிலர் கேட்கக் கூடும்.

அதற்குச் சாத்திரத்தில் அங்கீகாரம் கிடையாது. இதுகுறித்து மனுதர்ம சாஸ்திரம் பச்சையாகவே நெற்றியில் மொத்துவது போலவே எழுதி வைத்திருக்கிறது.

பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது. (மனு தர்மம் அத்தியாயம் 2 - சுலோகம் 44)
இதில் சூத்திரனுக்குப் பூணூல் தரிப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இராமானுஜர்கூட ஆதிதிராவிடர் களுக்குப் பூணூல் அணிவித்துப் பார்த்தாரே! பாரதியாரும் அதுமாதிரி முயன்றார். ஆனாலும் மூக்கறுபட்டது தான் மிச்சம்.

இந்து மதம், பார்ப்பனீயம் அதனை அனுமதிக்காது. பிறப்பால் பேதம் கற்பிக்கப்பட்ட சமுதாயத்தில் மாற்றங்கள் என்பது குதிரைக் கொம்பே! சீர்திருத்தவாதி என்று பார்ப்பனர்கள் கூறும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 1938இல் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது ஆசாரியார், ஆச்சாரியார் என்று போட்டுக் கொள்ளக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் ஆயிற்றே!

பார்ப்பனர்கள் சூத்திரர் வீடுகளுக்கு விவாஹசுப முகூர்த்தங்களை நடத்தி வைக்கும் பொழுது மட்டும் ஒரு முகூர்த்த நாழிகைக்குப் பூணூலைத் தரிக்கச் செய்வார்கள். ஏன் அந்தப் பதவி உயர்வு என்றால் சூத்திரனுக்குக் கல்யாண உரிமை சாஸ்திரப்படி கிடையாதே! அதே நேரத்தில் சூத்திரர்களின் பொருளைச் சுரண்டவும் வேண்டாமா?

மேலும் வேத மந்திரங்களைச் சூத்திரங்களின் காதுகளில் ஓதுவும் கூடாது என்பதால் தற்காலிகமாக மாப்பிள்ளையின் தோளில் பூணூலை மாட்டி, கல்யாணம் முடிந்து தட்ச ணையையெல்லாம் தட்டாமல், பாக்கியில்லாமல், கறாராகப் பெற்றுக் கொண்ட நிலையில், மறக்காமல் ஆம்! மறக்கவே மறக்காமல் மாப் பிள்ளை தோளில் பூட்டப்பட்ட அந்தப் பூணூலைக் கழற்றச் சொல்லி, குப்பையோடு குப்பையாகக் கூட்டி ஒதுக்கச் செய்த பிறகுதான் மேற்படி யான் நடையைக்கட்டுவான்.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும்கூட பூணூலைப் புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் தனியே ஒதுக்கி வைத்து ஜாதி ஆணவக் குறியான பூணூலை மற்றவர்களைச் சூத்திரர்கள் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கும் அறிவிக்கும் வகையில் புதுப்பிக்கிறார்களே! அதனை அனுமதித்துக் கொண்டும் இருக்கிறோம் என்றால் அதன் பொருள் - நம் மக்களுக்குப் போதுமான அளவுக்கு மான உணர்வு பொங்கி எழவில்லை - வீறுகொண்டு கொந்தளிக்கவில்லை என்றுதானே பொருள்!

------------------------"விடுதலை” 31-7-2012

30.7.12

பெரியார்மீதான விமர்சனம் பற்றி மருத்துவர் இராமதாசு


தந்தை பெரியார்மீதான விமர்சனம்?


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு சா. இராமதாசு அவர்களின் பேட்டி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

தாங்கள் தந்தை பெரியார் அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறுகிறீர்கள். நீங்கள் இருக்கும் மேடையிலேயே பெரியாரையே விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பா.ம.க. நிறுவனரிடமிருந்து தெளிவான பதில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்வியேகூட வேறு மாதிரியாக இருந்திருக்க வேண்டும். பெரியாரைக் கொச்சைப் படுத்திப் பேசுகிறார்களே என்ற வகையில் வினா எழுப்பப்பட்டு இருக்க வேண்டும். விமர்சனம் என்பது வேறு - கொச்சைப்படுத்துவது என்பது வேறு.

அப்படியே பார்த்தாலும் தந்தை பெரியார் அவர்களை விமர்சிக்க இப்பொழுது என்ன அவசியம் வந்தது? அதன் மூலம் யாருக்கு லாபம்? விமர்சிக்க வேண்டிய பிரச்சினைகள் எத்தனை எத்தனையோ இருக்க, தந்தை பெரியார் அவர்களை சரியான புரிதல் இன்றி விமர்சிப்பது யாரைத் திருப்திப்படுத்த?

தந்தை பெரியாரைச் சொல்லியே வெளியில் வந்தார். இப்பொழுது தந்தை பெரியார் அவர்களை தமிழினத்துக்கு விரோதமானவர் என்று பா.ம.க., மேடைகளிலே பேசுவதன் மூலம் பெரும் வீழ்ச்சியை அந்தக் கட்சி சந்திக்கப் போகிறது என் பதை இன்றைக்கே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

தமிழ்த் தேசியம் என்ற பதாகையை வீர தீரமாகத் தூக்கி வந்தவர்கள் பெரியார்மீது கை வைக்கப் போய் சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற நிலைக்கு ஆளாகி இருப்பதை மருத்துவர் தெரிந்து கொள்வது நல்லது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யைத் தவிர, தந்தை பெரியார் பெயரைச் சொல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாத நிலைதான்.

சமூக நீதிக் கொள்கையை முன்னெடுப்பதாகச் சொல்லிக் கொண்டே இன்னொரு வகையில் தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்தலாம் என்றால் அதனைத் தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. சமூகநீதி என்பது இந்த நாட்டில் வெறும் இடஒதுக்கீடு மட்டுமல்ல - அது விரிந்த பொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டது.

தந்தை பெரியார் அவர்களின் எந்த கொள்கை தவறானது - தமிழர்களுக்கு விரோதமானது என்று இவர்களால் எடுத்து வைக்க முடியுமா?

பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்களும் எவற்றை முன்னிறுத்தித் தந்தை பெரியார் அவர்கள்மீது சேற்றை வாரி இறைக்கிறார்களோ, அவற்றையே இரவல் வாங்கி இவர்களும் அந்த வேலையைச் செய்வதன் மூலம் தமிழர்கள் மத்தியில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பொருள்.

இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறக் கூடாது. திராவிட இயக்கத்தையும் அதன் ஒப்பற்ற கொள்கையையும் இவர்கள் எதிர்ப்பதன் மூலம் பார்ப்பனர் எதிர்ப்பைக் கைக்கொள்ள இவர்கள் தயாராக இல்லை; மாறாக அவர்களின் கைகளுக்குள் புதைந்துகொள்ள முடிவு செய்து விட்டார்கள் என்றே கருத வேண்டும்.

இது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொள்ள பெரிய ஆய்வுகள் தேவையில்லை. அவர்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களில் பார்ப்பனர்கள் பற்றியோ அவர்களின் ஆதிக்கத்தைப் பற்றியோ, சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனர்களின் நிலைப்பாடு குறித்தோ ஒரு வார்த்தை பேசுவது கிடையாது.

பெரும்பாலும் தற்பெருமையும், அரசியல் கட்சிகளைச் சாடுதலும்தான் அதிகம் இருக்கும்.

தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதும், திராவிட இயக்கத்தை கேவலமாக விமர்சிப்பதும் தான் அவர்களின் இன்றைய முதன்மைத் திட்டமாக இருந்து வருகிறது.

எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேராமலும், தந்தை பெரியார் அவர்களையும், திராவிட இயக்கத்தை விமர்சித்தும் வாக்கு கேட்டு வரட்டும்! தமிழர்கள் வட்டியும் முதலுமாகப் பாடம் கற்பிக்கத் தயாராகவே இருப்பார்கள்.

இடையில் கறுப்புச் சட்டை போட்டதெல்லாம் இவற்றின் மூலம் வெளிறி விட்டது. தமிழ்மண், தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தால் உழைப்பால் பல நிலைகளிலும் தாக்கம் பெற்று தலை நிமிர்ந்து நிற்கிறது. இதில் எந்தச் செங்கல்லை இவர்கள் உருவப் போகிறார்கள்? சந்திப்போம்!
-----------------------"விடுதலை” தலையங்கம் 30-7-2012

29.7.12

திராவிடத்தை எதிர்க்கத் துணிந்துள்ள திரிபுவாதிகள்

திராவிடத்திலிருந்து தமிழைப் பிரிப்பது... அறிவுத் தடுமாற்றமா...! ஆரிய மயக்கமா ...!
ஆரியம், தமது மேம்பாட்டுக்கென வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஒரு இயக்கத்தையோ, கட்சியையோ தோற்றுவித்து செயல்பட துணிச்சலற்றது. ஆனால் வேறு எந்த இயக்கத்தையும், கட்சியையும் விட ஆகப் பெரிய சமூக சக்தியாக, அரசியல் சக்தியாக உயிர் வாழ்ந்து கொள்ளும் சூழ்ச்சியும் செயல்திறனும் உடையது.

ஆரியம் சார்ந்தவர்களில் சிலர் மன மாற்றம் பெற்று சமநிலை சமூகத்தின் பக்கம் நெருங்கி வந்தாலும், ஆரிய தீவிரவாதிகள் சிலர் அவ்வப்போது தோன்றி ஆரியத் தனித்தன்மைகளையும் காலம் காலமாக அதன் காரணமாக அனுபவித்து வரும் உயர்ந்த சலுகைகளையும் மனதில் கொண்டு சமநிலை சமூகத்திற்கான மாற்றத்தை நீர்த்துப் போகச் செய்கின்ற பணியில் ஒன்று திரட்டி சலியாது உழைக்கத் தொடங்கி விடுவார்கள். இதற்கென்று அவ்வப் போது அவர்களுக்கென்று சில அவதார புருஷர்களை உருவாக்கிக் கொள்வார்கள்.

இத்தகைய அவதாரபுருஷர்கள் சிலபோது அரசியல்வாதியாகவோ, பத்திரிகைக்காரர்களாகவோ, மடாதிபதிகளாகவோ, முன்னாள் நடிகர்களாகவோ, காமெடியன்களாகவோ, எந்த வகையினராகவும் இருக்கலாம்; அதற்காக அவர்கள் கவலையோ, வெட்கமோ படுவதில்லை. மற்றவர்களுக்கு மட்டும் தகுதி, திறமை போன்ற அளவீடுகள் பேசும் அவர்கள், தங்களின் சுயநல மேம் பாட்டுக்காக தலைமையை உருவாக்கி, வியாபாரம் செய்வதில் எவ்வித தகுதியும் திறமையும் பார்க்கமாட்டார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்த, அத்துமீறிய ஆரிய மொழிப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலகட்டத்தில் தோன்றிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கம், சாதி, சமயம், அதன் சடங்குகள் என்கின்ற ஆரியப் பண்பாட்டு நிறுவனங்களை எதிர்க் காமலும், தவிர்க்க முயற்சிக்காமலும், அதே நேரத்தில் ஆரியத்தை, அதன் மொழி ஆதிக்கத்தை எதிர்த்து பல்வேறு முனைகளில் முயன்றும், மிகவும் பரிதாபகரமாகத் தோற்றுக் கொண் டிருந்த அவலத்தை தமிழக வரலாறு தெளிவாக நிறுவியுள்ளது.

இவ்வாறாக ஆரியத்தின் மேலாண்மையை வெற்றி கொள்வோம் என்று அணிவகுத்தவர்களில் சிலர் மெய்யான உணர்வு உடையவர்களாகக் கூட இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் ஆரியத்தின் சூழ்ச்சிப் பின்னலின் ஆற்றலை சரியாகப் புரிந்து கொண்டவர்களாக இல்லாது போனார்கள். காலப் போக்கில் தமிழின் சிறப்பையும் உயர்வையும் காரண காரியங்களோடு எடுத்து வைத்தல், தமிழறிஞர்களாகக் கூடியும், தனித்தும் அறிக்கைகள் விடுதல், தீர்மானங்கள் நிறைவேற்றுதல் ஆகியப் பணிகளோடு ஆரிய எதிர்ப்பு தமிழியக்கம் குறுகிக் கொண்டிருந்தது.

அத்தகைய அவலமான சூழலிலே தான், வடமொழி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டுமென்றால் அதற்கு, தமிழும், தமிழுணர்வும் சரியானதாக போது மானதாக இருக்கலாம். ஆனால் ஆரியம் என்கின்ற இன நெருப்புப் படைக்கலங்களை புறங்காண வெறும் கைவாளும் வில்லும் போதாது என்று 19ஆம் நூற்றாண்டு இறுதியில், நமக்கான நெருப்புப் படைக்கலங்கள் எங்கே என்று தேடியபோது நம்மால் தெரிந்து கொள்ளப்பட்டு மீட்டெ டுக்கப்பட்டதுதான் திராவிட இனம் - அந்த முழுமையான, முதன்மையான, செம்மையான இனத்தின் வழிவந்த வர்கள் நாம் என்கின்ற உண்மை.

புத்தர் முதல், தந்தை பெரியார் வரை, ஆரிய ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்த / அழிக்க எத்தனையோ புரட் சியாளர்கள் பாடுபட்டும் ஏன், எப்படி, இன்னும் ஆரியம் மறையாமல் ஆனால் சில சமயம் அடங்குவதும், மீண்டும் எழுச்சி பெறுவதுமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திராவிடம் என்றால் என்ன என்று முழுமையாக விளக்கப்படாத கால கட் டத்தில், அத்தகைய மீஉயர் இனத்தினைப் பற்றியும், அதன் தலைமை வழித்தோன்றல்கள் நாம் என்கின்ற உண்மையும், வைகறை வெளிச்சத்தில் இருந்த காலத்தில் - அதாவது சென்ற நூற்றாண்டு முதல்பகுதியில் - திராவிடத்தை வெறுத்து எதிர்த்துத் தகர்க்க நினைத்து எழுந்த சக்திகளையெல்லாம் எப்படி வெல்வது, எவ்வகையில் அடக்கிவைப்பது என்று வழிகாட்ட, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அணிவகுப்பில் தலைவர் கலைஞர் போன்று நிறைய பேர் இருந்தார்கள்.

அதன் விளைவு, திராவிட இனம் பற்றிய செய்திகள் உலக வரலாற்றில் தாக்கத்தை உருவாக்கியது. . . திராவிட இன உணர்வு இந்திய மக்களால் பேசப் பட்டது . . . திராவிட இந்தியத் தலைவர் களால் அது மக்கள் இயக்கமாக்கப் பட்டது.
அந்த காலகட்டத்திலேதான் ஆரியத்தின் வெப்பத்தால் தடுமாறிக் கொண்டிருந்த தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் திராவிட இன உணர்வோடு இணைந்து திராவிட தேசியம் என உருவானது. அதனால்தான் தமிழ் மறுமலர்ச்சி முழுமைபெற்றது. வலிமை பெற்றது. வடமொழி ஆதிக்கம் உட்பட ஆரிய எதிரிகள் வலுவிழந்தார்கள், செயல் மயங்கினார்கள் என்கின்ற உண்மையை மறந்துவிடக்கூடாது.

1956_-57 ல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநில மாநாட்டில், அரசியலில் பங்கேற்கலாமா? என்று மக்கள் கருத்தைக் கேட்டபோது, திராவிட உணர்வை விட்டு விட்டோ, ஒத்தி வைத்துவிட்டோ, அல்லது குறைத்துக் கொண்டோ, அரசியல் பணியை மேற் கொள்ளலாம் என்று அண்ணாவும் கூறவில்லை; நாமும் அப்படி எண்ணி வாக்களிக்கவில்லை.

அதோடு இது...!
அதை வென்றெடுக்க இது...!
அதை நிலைக்க வைக்கத்தான் இது...!
என்றுதான் அண்ணாவும் மற்ற தலைவர்களும் கருதிச் சொன்னார்கள்...!
நாமும் அந்த நம்பிக்கையுடன்தான் பின் தொடர்ந்தோம்...!

ஆனால், காலத்தின் கோலம், நாம் சற்று அயர்ந்து விட்ட காரணத்தினால், சாதி வெறியர்களும், மதவெறியர்களும், தமிழ், திராவிட அடையாளங்களை தங்களின் அரசியல் வாணிப தேவைக்காக ஒப்பனை செய்து கொண்டு அதன் அடிப்படைப் பண்புகளை கீழ்மைப் படுத்திக் கொண்டிருக்கும் அவலத்தை இப்போது நாம் காண்கிறோம்.

பழைய எதிரிகள், ஆரிய இனம் சார்ந்தவர்கள், பழமை வாதிகள், அவர்கள் திராவிடத்தையும் எதிர்த் தார்கள், தமிழையும் நீச பாஷை என்றார்கள். ஆனால் தற்போதைய புதிய எதிரிகள் தமிழை வைத்துக் கொண்டு அதன் படைப்பு மூலமான திராவிடத்தை எதிர்க்கத் துணிந்துள்ள திரிபுவாதிகள் . . .! விஷயமறியா பேதைகள்! தமிழை திராவிடத்திடமிருந்து பிரித்து அநாதையாக்கி ஆரிய மாயை யில் தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்ளத் துடிக்கும் விட்டில் பூச்சிகள்.

அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கு உண்மையான காரணங்கள் தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் தங்களுடைய கட்சிகள் வளரத் தடையாக இருக்கிறதே என்கின்ற விரக்தி. அடுத்து திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சாதி, சமய எதிர்ப்பு, பகுத்தறிவுக் கருத்துகள் ஆகியவற்றை ஏற்க இயலாத தங்களின் அடிப்படைவாத வெறி.

ஆனால் சாமான்ய தமிழனுக்கு எடுப்பாக இருக்க அவர்கள் கண்டு பிடித்த காரணம், கர்நாடகாவிலும், கேரளாவிலும் சில பிரச்சினைகளின் காரணமாக எழுந்துள்ள தமிழர் எதிர்ப்பு அரசியல் - எனவே திராவிட எதிர்ப்பைக் கையிலெடுத்து விட் டார்கள்.

திராவிட இன உணர்வு நினைவு கூறப்பட்டதும், திராவிடப் பேரியக் கமாக அது எழுந்ததும், பரப்பப்பட் டதும், திராவிட மொழியினங்களான கன்னட, தெலுங்கு, மலையாளம், மற்றும் துளு ஆகிய மக்களுக்காகவும் சேர்த்துதான் என்பது உண்மைதான். என்றாலும் இப்பேரியக்கம் முதன்மையாக நம்மை வைத்தே தொடங்கப் பெற்றது. விரிவாக்கம் கண்டது. காரணம் திராவிடத்தின் முதன்மையானவர்கள் என்பதால் அதற்குரிய உரிமையும் கடமையும் தமிழர்களாககிய நமக்கிருந்தது.

எனவே, கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் நம்மோடு சேர்வதால் மட்டுமே நாம் திராவிடர்கள் என்கின்ற அடையாளத்தைப் பெறுவோம் என்பது வடிகட்டிய அறியாமையல்லவா . . .! திராவிட மொழி இனங்கள் சேர்ந்திருந்தாலும், பிரிந்திருந்தாலும் அவர்கள் திராவிட இனம்தானே. .! இதை எந்த நிதான சிந்தனையுடையவனும் மறுக்க முடியுமா.?

காங்கிரஸ், பொதுவுடமை கட்சிகள் தொடங்கி - ஏன் அ.தி.மு.க. வரை, தமி ழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களிலும், திராவிட உணர்வு உடையவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் சார்ந் துள்ள; அமைப்புகளின் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ள வேறு கொள்கைகளை முன்னிட்டு, திராவிட உணர்வை உள்ளூரக் கனன்று கொண்டிருக்கும் நிலையில் மட்டுமே தனித்து வைத்திருக்கலாம். அதே நேரத்தில் நம்மால் முடியாததை வேறு யாராவது செய்ய மாட்டார்களா? என்கின்ற உள்ளார்ந்த ஏக்கம் அவர்களிடம் இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

இதைப் போலவே, இதே நிலையில், இதே அளவில், திராவிட இன உணர்ச்சி உடையவர்கள் கர்நாடகா விலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் தலைசிறந்த எடுத்துக்காட்டுதான் திரு.என்.டி. இராமராவ் அவர்களின் எண்ணத்தில் உதித்து, திரு சந்திரபாபு நாயுடு அவர்களால் நிறுவப்பட்டு செம்மாந்து நிற்கும், திராவிடப் பல்கலைக் கழகம்.

அங்கே தமிழ்த்துறை, திருவள்ளுவர் மாளிகை யிலும், தெலுங்குத் துறை, வேமனாவின் மாளிகையிலும், கன்னடத்துறை பஸவய்யா மாளிகையிலும், மலையாளத் துறை நாராயண குரு மாளிகையிலும் உயர்கல்வி மாணவர் களைப் பயிற்றுவித்தும், நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களைக் கொண்டு திராவிட இயல் உயராய் வுகளும் நடைபெற்று வருகின்றன.

அப்பல்கலைக் கழகம் நிறுவிய வேளையில் தமிழகத்தின்பங்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஒரு பெருந்தொகை மானியமாக வழங்கப்பட்டது.

தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் ஏறக்குறைய சங்கமிக்கின்ற குப்பம் என்கின்ற இடத்தில் அமைந்து திராவிடவியல் ஆய்வில் சிறப்பாக நடைபோடும் இப் பல்கலைக் கழகம், திராவிட ஆராய்ச்சிகள் என்னும் காலாண்டு ஆய்விதழை தொடர்ந்து வெளியிட்டும் வருகிறது.

எனவே கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிவழி மக்களில் திராவிட இன உணர்வு உடை யவர்கள் கணிசமான அளவு இப் போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுள் கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள், உயர் அதிகாரிகள், நீதி அரசர்கள் என்று பலர் அடங்குவர் - என்ன! அங்கெல்லாம் இதற்காக அரசியல் கட் சிகளோ, தனி இயக்கங்களோ இல்லை - அவ்வளவு தான். . .!

சாதிய மற்றும் மதவாதக் கட்சிகள் என்றுமே கொள்கை அடிப்படையில் தமிழியக்கம் மற்றும் திராவிட இயக்கத்தினைச் சார்ந்து இருக்க முடியாது. ஏனென்றால், சாதியும், மதமும் ஆரிய சமூகத்தின் அங்கங்கள். ஒரு வேளை அதன் காரணமாகத்தானோ என்னவோ இங்கு சில சாதி, மதவாதக் கட்சிகள் திராவிட என்ற இன அடையாளத்தைத் துறக்கத் துணிகிறார்கள் போலும். அவ்வாறாக, ஆரியத்தின் அங்கங்களான பின்னர் இவர்கள் நெஞ்சம் எப்படி தமிழ் நெஞ்ச மாக இருக்க முடியும்...!

மேலும், தமிழ் உணர்வோடு மட்டும் வைத்துக் கொண்டு ஆரியத்தை எதிர்க்க முடியாது, வெல்ல முடியாது. ஏனென்றால் தமிழ், தமிழன் என்கின்ற குடைகீழ் ஆரியர்களும், ஆரியமும் இடம் பிடிக்க முடியும்.

தமிழன் எப்பொழுதெல்லாம் தமது திராவிடப் பற்றை இழக்கிறானோ அப்போதெல்லாம் அந்த அளவுக்கு அவன் ஆரிய மாயையில் வீழ்ந்திருக்கிறான். ஆரிய மாயை என்பது ஒவ்வொருவன் மனதிலும் தாம் மற்ற சிலரை/பலரைக் காட்டிலும் சமூக அந்தஸ்தில் உயர்ந்திருக்கிறோம் என்கின்ற போதையை ஏற்றி அவனது மனிதநேய உணர்வை செயலிழக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் தமிழ் நெஞ்சம் என்பதோ திராவிட இனப் பண்பாட்டு அடிப்படையில் உருவாவதுதானே! அப்படியிருக்க, திராவிடம் நீக்கி தமிழ் உணர்வு என்பது ஆரிய இதயமாகத்தானே இருக்க முடியும்!

தமிழ் இலக்கியங்கள் சிலவற்றுள் சில இடங்களில் ஆரியம் கலந்து / ஊடுருவி இருந்தாலும், சற்று நிபந்தனை யோடு அவற்றை தமிழன் ஏற்றுக் கொள்ளக் காரணமே அவனிடத்தில் உள்ள திராவிட இனப்பண்பாடுகளின் அடிப்படை கள்தானே...!

தமிழ் படைப்புகளில் நேர்ந்துவிட்ட ஆரியக் கருத்துகளை திராவிடம் ஏற்காது...!
திராவிடத் தமிழும் ஏற்காது...!
கம்பராமாயணத்தை தமிழ் ஏற்றுக் கொள்ளும்...! ஆனால் திராவிடம் ஏற்றுக் கொள்ளுமா...!
ஏனென்றால், அது தமிழில் எழுதிய ஆரிய இலக்கியம். எவ்வளவுதான் அதில் உள்ள தமிழின் சிறப்பைப் பாராட்டினாலும் அது என்றுமே திராவிடத் தமிழ் இலக்கியம் ஆகாது. .!
எனவே, திராவிட நெஞ்சம் இல்லா தமிழு ணர்வு ஆரிய ஆன்மாவோடு அலையும் தமிழ் வேடதாரிதான்...!

தமிழை மட்டும் கொண்டு ஆரியத்தையும் வெல்ல முடியாமல், தமிழனையும் காப்பாற்ற முடியாமல் போன நிகழ்வுகளையும், வகைகளையும் வரலாறு பல்வேறு கட்டங்களில் உறுதிப் படுத்தியுள்ளது.

இந்திய மொழிகளில் தமிழுக்கென்று உள்ள தனிச் சிறப்பும், அங்கீகாரமுமே, அது திராவிட இனத்தின் தொன்மையான, செம்மை பெற்ற மொழி என்பதால்தான். அப்படி இருக்க, திராவிடத் தாயிடமிருந்து தமிழைப் பிரித்துப் பார்க்கும் செயல் எந்த அரசியல் ஆதாயத்திற்காக...? யாருடைய கோபத்திற்குப் பயந்து...? யாரைத் திருப்தி படுத்துவதற்காக...?

இன்றைய இந்தியாவில் ஊடகங்களில் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆரியம், அந்த ஊடகங்களின் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு உறவுகளைத் துண்டிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் சில பேதைகள்.

இந்தியாவில் தோன்றிய அத்துணை சிந்தனையாளர்களின் ஒட்டு மொத்த விளைவாக எழுந்து நின்றவர் தந்தை பெரியார். அவர் நமக்கென்று ஆய்ந்து தேர்ந்து கொடுத்த அறிவாயுதம்தான் பகுத்தறிவு. . .! அடையாளம்தான் திராவிடம்...!
அதை எந்தச் சூழலிலும் காப்பாற்ற அண்ணா செய்த பிரகடனம்தான், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் என்றும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படும் என்பது.

இன்று திராவிடத்தையும் தமிழையும் பிரிக்க நினைக்கும் இரண்டும் கெட்டான்களை தோலுரித்துக்காட்ட பிறவித் தலைவரான கலைஞர் அழைப்பு விடுத்துவிட்டார். . . அவர்கள் பின்னே திராவிடத் தமிழர் அனைவரும் அணி வகுத்துப் புறப்படுவோம்.

எனென்றால்!

திராவிட அடையாளம், திராவிட உணர்வு, திராவிட இயக்கம் என்பவை நாம் இறுதியானதாகப் பெற்ற வரலாற்றுப் பரிமாணம்.

அதற்கு கலைஞரின் இன்றையத் தலைமை காலத்தின் கட்டாயம்.

இதை உணராமல் திராவிடத்திலிருந்து தமிழைப் பிரிக்கத் தூண்டுவது அறிவுத் தடுமாற்றமா...! ஆரிய மயக்கமா...!

-------------------முனைவர் பெ.ஜெகதீசன் (முன்னாள் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், துணைத் தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) அவர்கள் முரசொலி 4.6.2012 இல் எழுதிய கட்டுரை

பெரியாரின் நண்பர்


பெருமைக்குரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! தோழர்களே! அனைவருக்கும் என் வணக்கம். எனக்கு முன் பேசிய தலைவர் (காமராஜர்) அவர்களும் திரு. அண்ணாமலைப் பிள்ளையவர்களும் மறைந்த டாக்டர் நாயுடு அவர்களின் தொண்டைப் பற்றி விளக்கமாகச் சொன் னார்கள். அவர்கள் சொன்னது கொஞ்சம்கூட மிகைப்படுத்திக் கூறியதாகாது. முற்றிலும் சரியே. பல வருஷங்களாக அவருடன் கலந்து கூடி பழகியவன், வேலை செய்தவன், நண்பனாக இருந் தவன் என்ற முறையிலேயே நான் ஒரு சில வார்த்தைகளைக் கூறலாம் என்று முன்வந்துள்ளேன்.

எங்கள் முதல் தொடர்பு

எனக்கு மறைந்த தலைவர் நாயுடு அவர்களைச் சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகத் தெரியும். அதாவது 1914 முதல். அப்போது அவர் திருப்பூரில் பிரபஞ்ச மித்திரன் என்ற பத்திரிகையைத் துவக்கினார். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் முதல் சந்திப்பு ஏற்பட்டது. அது முதல் அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதெல்லாம் காங்கிரசு பிரபலமடைய வில்லை. பிறகுதான் கொஞ்ச காலம் கழித்து காங்கிரசு பிரபலம் அடையத் துவங்கியது. காந்தியார் போன்ற தலைவர்கள் காங்கிரசுக்குள் வர ஆரம்பித்த காலமாகிய அந்நாளில்தான் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசு செல்வாக்கு பெறத் தொடங்கியது.

அந்தக் காலத்தில் டாக்டர் வரத ராஜூலு நாயுடு அவர்கள் மதுரை தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கு சுமார் ஒரு வருடம் தொடர்ந்து நடைபெற்றது. அவர் சார்பில் வழக்கறிஞராக ஆச்சாரியார் அவர்கள்தான் வாதாடினார். அந்த வழக் குக்காக அடிக்கடி சென்னையில் இருந்து மதுரைக்குப் போவார்கள். ஈரோடு மத்தியில் உள்ள இடமானதால் அவர்கள் என்னைச் சந்திப்பார்கள். நானும் அவர் களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பதென்று ரயில்வே ஸ்டேஷனுக்காவது போய்ச் சந்திப்பேன். அப்போது தான் இராஜாஜி அவர்களது நட்பும் எனக்குக் கிடைத்தது. அது கிடைக்கக் காரணமானவர் டாக்டர் வரதராஜூலு நாயுடுதான். அன்பர் டாக்டர் நாயுடுதான் என்னைப் பொதுக் காரியங்களில் ஈடுபட வைத்தவர். அவர் அடிக்கடி வந்து என்னிடம் வெள்ளைக்காரர்கள் செய்யும் கொடுமைகளைப் பற்றி ஆவேசமாக எடுத்துக் கூறுவார். அந்த நேரத்தில்தான் பஞ்சாப் படுகொலை கொடுமை ஏற்பட்டது. அப்போது நாயுடு அவர்கள் வந்து அதைப் பற்றி மிகவும் ஆத்திரத்துடன் என்னிடம் கூறினார். உடனே நானும் மனம் குமுறி வருத்தப்பட்டு என்னால் ஆன தொண்டைச் செய்தேன். இது போன்ற அக்கிரமங்கள் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதாகக் கூறி எனது வியாபாரத்தையும் விட்டு விட்டுப் பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். ஆச்சாரியார் அவர்கள் என்னைக் கோவை ஜில்லா செயலாளராகப் போட்டு காரியாலயச் செலவுக்காகவும் கட்சி பிரசாரத்திற்காகவும் ரூ. 600 க்கு செக் எழுதி ரிஜிஸ்டர் செய்து எனக்கு அனுப்பினார்.

என்னை காங்கிரசுக்கு இழுத்தவர் அவரே

திரு. நாயுடு அவர்கள் வற்புறுத்தியதன் பேரிலேயே நான் காங்கிரஸ் தொண் டனானேன். பொது வாழ்வைப் பொறுத்த வரை நான் அவருக்குச் சீடனானேன். 1920 லிருந்தே பாடுபட ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் ஜெயில் என்றால் மக்கள் எல்லாம் பயந்தார்கள். காரணம் மிகமிக கொடுமைகள் செய்யப்பட்டன. இப்போது சிறைக்குப் போகிறவர்களில் பலர் வெளியே இருப்பதை விட வெகு வசதிகளை அனுபவிக்கிறார்கள். அப் போது அப்படியல்ல காலஞ்சென்ற வ.உ.சி. அவர்கள் சிறையிலே செக்கிழுக்கிறார் என்ற செய்தி வெளியே பரவியிருந்த காலம்.

நாயுடுவின் சிறை வாழ்க்கை

அந்தக் காலத்தில் பலமுறை சிறை சென்று ஜெயிலுக்குப் போவதைச் சுலப மாக்கிக் காட்டியவர் திரு.நாயுடு அவர்களாவார். டாக்டர் நாயுடு அவர்களுக்கும் ஜெயிலில் வேலை கொடுத்தார்கள். பட்டை தட்டுதல், கேப்பைக்களி ஆட்டும் வேலை போன்ற கடினமான வேலையே கொடுத்தார்கள். இந்தக் கொடுமைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களைத் தட்டி எழுப்பும் ஆற்றல் வாய்ந்த பேச் சாளராகத் திகழ்ந்தார் நாயுடு அவர்கள்.

பொதுமக்களைப் பேச்சினால் கவர்ந்தவர்

அந்தக் காலத்தில் இருந்த தலைவர்களிலேயே நாயுடு பேச்சு என்றால்தான் பெருங்கூட்டம் கூடும். அது முதுபெருந் தலைவர் இராஜாஜி அவர்கள் பேசுகின்ற கூட்டமானாலும் சரி பெருங்கூட்டம் வரவேண்டுமென்றால் முதலில் டாக்டர் நாயுடு அவர்களைக் கொஞ்ச நேரமாவது பேசவிட வேண்டும் என்ற நிலை இருந்தது.

பெருந்தியாகி

தமிழ்நாடு பத்திரிகையில் யாரோ எழுதியதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் சிறை சென்றார். இது மாதிரி பொதுக் காரியங்கள் என்றால் அவர் சொந்தப் பணத்தைத் தான் செலவு செய்வார். அவர் கட்சி வேலையாக எங்கு போனாலும் கட்சிப் பணத்தைச் செலவு செய்ய மாட்டார். ஆனால் நான் கட்சி வேலையாகச் சென்றால் சொந்தப் பணத்தைச் செலவு செய்யமாட்டேன். கட்சிப் பணத்தைத் தான் செலவு செய்வேன். அப்போதெல்லாம் அவருக்கு ஏராளமான அளவில் வருமானம் வந்து கொண்டிருந்தது. திருப்பூரிலிருந்து அவர் கோவை வந்த சமயத்தில் அவருடைய மாத வருமானம் சுமார் ரூ. 2000 இருக்கலாம். சித்த வைத்தியம், மின்சார ரசம் இவை மூலம் ஏராளமாக வருவாய் கிடைத்தது. எல்லாவற்றையும் கட்சிக்கும் பொது வாழ்க்கைக்குமே தாராளமாகச் செலவு செய்துவிடுவார். எத்தனையோ முறை வரி கொடுக்க மறுத்து ஜெயிலுக்குப் போய் இருக்கிறார். அவருடைய சொத்துகளும் சாமான்களும் ஜப்தி செய்யப்பட்டு ஏலத்திற்கு வரும்.

கருத்து வேறுபடினும் உண்மை நண்பர்கள் ஆவோம்

அவருடன் நெடுநாள் உழைத்த நான் 1925 இல் எப்படியோ பிரிய நேர்ந்தது. அப்போது பெரியார் திரு.வி.க. அவர்கள் நவசக்தி பத்திரிகையின் ஆசிரியராகவும், டாக்டர் நாயுடு அவர்கள் தமிழ்நாடு பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந் தார்கள். கடுமையாகத் தாக்கி எழுதுவேன். அவர்களும் கடுமையாகத் தாக்கு வார்கள். ஆனால் நேரில் கண்டுவிட்டால் நாங்கள் எல்லோரும் உண்மையான சகோதரர்களாகத்தான் பழகுவோம். அந்தக் காலத்தில் தமிழில் பேசத் தெரிந்தவர்கள் மிகமிக அபூர்வம். அப்போது திரு.வி.க., நாயுடு இந்த இரண்டே பேர்தான். ஆச்சாரியாருக்குக் கூட அந்தக் காலத்தில் சரியாகத் தமிழில் பேசத் தெரியாது. வீடு பிரிச்சு போட்டிருக்கு என்று சொல்லத் தெரியாமல், வீடு அவுத்துப் போட்டிருக்கு என்றுதான் சொல்லுவார். சத்தியமூர்த்திக்குக் கூட அந்தக் காலத்தில் மக்களை வசப்படுத்தக்கூடிய முறையில் பேசத் தெரியாது. டாக்டர் நாயுடு அவர்களுடைய பேச்சு மக்களை வசப்படுத்தக் கூடிய, உணர்ச்சி ஊட்டக்கூடிய பேச்சாகும். உங்களுக்கெல்லாம் அதிசயமா யிருக்கும். நான் பேச அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று சொன்னால் அது உண்மை.

ஈடுசெய்ய முடியாத நஷ்டம்

அவர் இயற்கை எய்தினது உண்மையிலேயே ஒரு பரிகரிக்க முடியாத நஷ்டமாகும். ஏனென்றால் அவர் போன்ற தலைவர் இனி கிடையாது. தலைவர் (காமராஜர்) போன்றவர்கள் இந்தப் பதவி (முதலமைச்சர்) யல்லாது இனி கவர்னர் ஜெனரலாக வந்தாலும் கூட அவருடைய மதிப்பு இவருக்கு வராது - இப்படிச் சொல்லுவதால் இவருக்குத் தகுதியில்லை என்றோ, வர வாய்ப்பு இருக்காது என்றோ அர்த்தமல்ல. உலகத்தின் இன்றைய போக்கை வைத்தே இப்படிச் சொல்லுகிறேன். மக்களிடத்தில் தலைமைக்கான சன்னது பெற்றவர்கள் ஒரு சிலர்தான் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குப் பிறகு அந்த இடத்தில் யார் என்ற கேள்விக்குச் சரியான பதில் கிடைக்க முடிவதில்லை.


இனி, சிறந்த தலைவர் யார்?

பொதுவான நிகழ்ச்சிகள் எல்லா வற்றிற்கும் தலைமை வகிக்க என்று அவர் ஒருவர்தான் இருந்தார். இப்போது அவரும் இல்லை. அந்த இடமும் காலியாகத்தான் இருக்க வேண்டும்.

இனி நம் நாட்டுக்குத் தலைவர் கிடையாது. இனிமேல் வருகிற தலைவர்கள் எல்லாம் முனிசிபாலிட்டி, டிஸ்டிரிக்ட் போர்டுக்கு வரும் தலைவர்கள் மாதிரிதான் இருப்பார்கள். அத்தகைய தலைவர்களும் மக்களை நடத்திச் செல்லக் கூடிய முழுச் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்க முடியாது. இதற்கு என்ன காரணம் என்றே என்னால் சரியாகச் சொல்ல முடிவதில்லை. தலைவர்கள் உற்பத்தியாகாததோ அல்லது மக்கள் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாத அந்த அளவுக்கு மக்கள் பண்பு உயர்ந்துவிட்டதோ என்றால் தலைவர்களுக்கோ பஞ்சமில்லை. ஏராளமாகத்தான் வருகிறார்கள். ஆனால் மக்கள்தான் அவர்களிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை. உதாரணமாக கோவையில் பிர பலஸ்தர்களாக விளங்கிய சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார், வெள்ளி யங்கிரி கவுண்டர் போன்ற அய்ந்து தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் கோவை ஜில்லாவுக்கு மாத்திரமில்லாமல் மாகாணத்திற்கே தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் மறைந்த பிறகு தலைவர் யார் என்றால் யாருமே தென்படவே இல்லை. அதிகத் தலைவர்கள் உற்பத்தியாவ தனால்தான் மக்கள் அவர்களை நம்ப மறுக்கின்றார்கள். தலைவர் நாயுடு அவர்கள் இடத்தைப் பூர்த்தி செய்ய ஆள் இனி கிடையாது.


நான் சென்னைக்கு எப்போது வந்தாலும் திரு. நாயுடு அவர்கள் என்னை வந்து சந்திக்கத் தவறுவதே கிடையாது. 15 நாளைக்கு முன்பு என்னிடம் டெலிஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இன்று காலை அவருடைய மகன் டெலி ஃபோனில் அவர் காலமான செய்தியைச் சொன்னதும் முதலில் நம்பாமல் பிறகு அதிர்ச்சி அடைந்தேன். திடீரென அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இல்லா விட்டால் அவரது உடல் கட்டுக்கு இன்னும் பல ஆண்டுகள் இருப்பார். அவர் எப்போதெல்லாம் என்னைப் பார்க் கிறாரோ அப்போதெல்லாம் என் உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லி வற்புறுத்துவார். உணவு விஷயத்தில் எவ்வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதில் மிக கண் ணுங் கருத்துமாக இருப்பார். நானும் அப்படிப் பார்த்துதான் சத்தான உணவையே சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார். ஆனால் என்னால் இது முடிவதில்லை. இதற்குக் காரணம் எனக்கு ஓய்வில்லை என்பதும், நான் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத ஒரு சோம்பேறி என்பதும் ஆகும். என் சாப்பாடு பிச்சைக்காரன் சாப்பாடு மாதிரி. இங்கொரு நாள் அங்கொருநாள், இந்த வீட்டில் ஒரு நாள் அந்த வீட்டில் ஒரு நாள் என்று சாப்பிட்டு அலைந்து கொண்டிருப்பவன். என்னால் எப்படி உணவு விஷயத்தில் அவ்விதம் நடந்து கொள்ள முடியும்?

யாருக்கும் உதவி புரியும் பண்புள்ளவர்

டாக்டர் நாயுடு அவர்களிடத்தில் காணப்பட்ட மற்றொரு அரிய பண்பு என்ன என்றால் யார் போய் எந்தக் காரியத்தை அவரிடம் சொன்னாலும் மாட்டேன் என்று சொல்லாமல் தன்னால் முடிந்தவரை செய்து முடிப்பார். அதிலும் இப்போது தலைவர் அவர்கள் பொறுப் பான பதவிக்கு வந்த பிறகு டாக்டரிடத் தில் இன்னும் ஏராளமான அளவுக்குப் போய் செய்யச் சொல்லி தொந்தரவு கொடுத்தார்கள். அவரும் யாருக்கும் உதவி செய்யாமல் இருந்ததில்லை. அவருடைய வயது இப்போது 71. என்னை விடச் சிறியவர்தான். ஆனாலும் நல்ல அளவுக்குப் பொது வாழ்வில் இருந்து உழைத்தார்கள். தலைவர் காமராசர் அவர்களுக்குக் கிடைத்த நல்ல துணைவராக இருந்தார் டாக்டர் நாயுடு அவர்கள். பல விஷயங்களை நல்ல யோசனைகளைச் சொல்லக் கூடியவராக இருந்தார். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட நல்ல துணைவர்களைத் தேர்ந்தெடுப்பதே மிகமிகக் கஷ்டமான காரியமாகும்.

எப்படியோ நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் டாக்டர் நாயுடு அவர்கள். இப் போது சும்மா அவரது ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்று பேசுவது வெறும் பேச்சாகும். ஆத்மா என்று ஒன்று இருந்தால் அது நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது தானே சாந்தி அடையும். அதிலொன்றும் சந்தேகம் வேண்டியதில்லை.

தனக்கென வாழா பிறர்க்குரியாளர்

இப்போது நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகளைப் பற்றி நினைக்க வேண்டும். டாக்டர் அவர்களுடைய குடும்பம் சங்கடமான நிலையில் இல்லை என்றாலும் அவர் இவ்வளவு பாடுபட்டும் அவர் தனக்கென்று ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. பெரிய பதவி களை அவர் அனுபவித்ததும் கிடையாது. நான் தொடர்ந்து காங்கிரசில் இருந்திருப்பேனானால் நிச்சயமாக அவரை நான் மந்திரியாக்கிப் பார்த்திருப்பேன். இப்போதிருப்பவர்கள் அவருக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை என்பதோ அவர் அதற்கு அனுபவமற்றவர் என்றோ அல்ல இதற்கு அர்த்தம். அதற்குக் காரணம் டாக்டர் நாயுடு அவர்களே தன்னை அப்படி ஆக்கிக் கொண்டார். முக்கியமாக குருகுலப் போராட்டத்தில் அவர் தீவிர மாக ஈடுபட்டு ஒரு சிலரின் வெறுப்புக்கு ஆளாகியது மாத்திரமல்லாமல் தன்னை யாரென்றும் காட்டிக் கொண்டார்.

திருப்தியான வாழ்க்கை நடத்தியவர்

ஆனாலும் அவர் திருப்தியோடுதான் மனக்குறை இல்லாமல் வாழ்ந்தார். அந்தத் திருப்தி உணர்ச்சியைத்தான் பொது வாழ்வில் இன்று இருப்பவர்கள் பெற வேண்டும். அதைத்தான் அவரது வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியில் உழைத்ததினால் அவர் பணமோ பதவியோ பெறவில்லை. மாறாகத் தன்னுடைய செல்வத்தை அதற்கென செலவு செய்தார். அவர் ஒன்றும் இதனால் பயன் பெறவில்லை.

கற்க வேண்டிய பாடம்

தொண்டுக்குப் பலன் அடையவேண் டும் என்று நினைக்காமல் வாழ வேண்டும். காலஞ்சென்ற டாக்டர் நாயுடு அவர்கள் அப்படித்தான் பலன் அடையாமல் பொது வாழ்வில் உழைத்தார். அதைத்தான் பொது வாழ்வில் உள்ள அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இறுதி மரியாதை

இங்கு (இறுதிச்சடங்கு நடைபெறும் இடம்) வந்துள்ள பலரும் பலவித கொள் கையுடையவர்கள் என்றாலும் அவரவர் நம்புகின்ற லட்சியங்களை வைத்துப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பலனைப் பற்றிக் கவலைப்படாமல் காரியமாற்ற வேண்டும். இதுதான் நாம் டாக்டர் அவர்களுக்குச் செய்யும் சிறந்த இறுதி மரி யாதையாகும்.

---------------------------------டாக்டர் வரதராஜூலு நாயுடு பற்றி தந்தை பெரியார் இரங்கலுரை --"விடுதலை" 24 ஜூலை 1957

28.7.12

உத்தரகாண்டம் பொய்யா?இந்து மதக் கண்ணி வெடியைக் கண்டு ஏமாறவேண்டாம்!

நான்கு செய்திகள் மீதான விவாதங்கள்!

உத்தரகாண்டம் பொய்யா?

சம்புகனின் சாவு பற்றி பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. இராமாயணம் பட்டாபிஷேகத்துடன் முடிவடைந்துவிடுகிறது. இதன் பிறகு நடந்தவை உத்தர ராமாயணத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஆனால் பல்வேறு உத்தர ராமாயணங்கள் இருக்கின்றன. ஆனால் வால்மீகி இவற்றை எழுதவில்லை.

ஒரு உத்தர ராமாயணத்தில் சம்புகனின் கதை இருக்கிறது. அதில் இராமன் கொன்ற காரணம் பின் வருமாறு சொல்லப்படுகிறது. சம்புகன் தன் உடலுடனேயே தேவர் ஆக வேண்டும் என்று கடுந்தவம் மேற் கொண்டான். அது குறித்து தேவர்கள் அஞ்சினர். அவர்கள் மனிதர்களை அச்சப்படுத்த மழை பெய்யாமல் செய்தனர். சம்புகன் இராமனை வணங்கினான் என்றே கூறப்பட்டி ருக்கிறது. இராமன் தேவர்களின் அச்சத்தைப் போக்க சம்புகனின் தலையைக் கொய்தான். உடனே, தேவர்கள் மகிழ்ச்சி கொண்டு மழை பெய்யச் செய்தனர். மேலும் அந்த குழந்தை உயிர் பெறச் செய்தனர்.

இவ் வாறு போகிறது அந்தக் கதை. ஆனால், புத்த சமண இராமாயணங்களில் இந்தக் கதை இல்லை. கதை உண்மை என்று கொண்டாலும் இராமன் இதை மழை பெய்வதற்காக பொது நலனுக்காக செய்தான் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தக் காலத்தில் மழை பெய்ய தேவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று நம்பிக்கை இருந்தது. ஆகவே, இந்தக் கதையை அந்தக் காலத்தில் நிலவி வந்த நம்பிக்கை சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். இந்தக் காலத்து விஞ்ஞான அறிவை வைத்து அல்ல. சம்புகன் கொலை இந்தக் காலத்தில் யாரும் ஆதரிக்க வில்லை. அப்படி செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

இப்படி ஒரு செய்தி ஊடகத்தில் உலவ விடப்பட்டுள்ளது. மிகச் சாமாத்தியமாக! சம்புகவதை இடைச்செருகல் என்று சொல்லி விட்டு, பிறகு அதை நியாயப்படுத்தும் கேவலத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது; நம்பிக்கை என்னும் பதுங்கு குழியில் ஒளிவதையும் கவனிக்கவும். தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் மூட்டிய பிரச்சாரத் தீயில் சம்புகன் கொலையை இன்று ஏற்கவில்லை என்று கூறும் நிலை ஏற்பட்டு விட்டது. எதை எதையெல்லாம் நியாயப்படுத்த முடியாதோ அவற்றை யெல்லாம் கைகழுவ வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள் ளது என்பது உண்மையானால் ஒட்டு மொத்தமாக இராமாயணத்தையே கைவிடவேண்டியிருக்கும். பாரதத்தில் கீதை இடைச்செருகலென்றால் ஏற்கமாட்டார்கள். ஆனால் இராமா யணத்தில் உத்தரகாண்டம் என்பதோ இடைச் செருகல் என்பார்கள். அவர்களின் வசதியைப் பொறுத்தது.

இராமன் பிறப்பை மட்டும் நியாயப் படுத்த முடியுமா? வால்மீகி கூறும் புத்திரகாமேஷ்டி யாகம் ஆபாசத்தின் எல்லையல்லவா? வெட்டுண்ட குதிரையோடு தசரதனின் பத்தினி மார்கள் படுத்துப் புரண்டனர் - அதன்பின் யாகப் புரோகிதர்களிடம் அப்பெண்கள் ஒப்படைக்கப்பட்டனர்; இவர்கள் தசரதனின் மனைவிகளைப் புணர்ந்தனர் என்பதை நியாயப் படுத்திப் பேசப் போகிறார்களா?

இந்தியாவில் இராமாயணம் ஒன்றா இரண்டா? வால்மீகிதானே மூலம். அவன் உத்தரகாண்டத்தை எழுத வில்லை என்று எதை வைத்து எழுது கின்றனர்?

சம்புகனை இராமன் கொல்ல வேயில்லை என்றே வைத்துக் கொள் வோம் - அப்படியானால் இராமன் வருணாசிரம தர்மத்தை ஆதரிக் காதவன் என்று சாதிக்கப் போகி றார்களா?

எத்தனை எத்தனை இடங்களில் பார்ப்பனர்களின் பாதந்தாங்கியாக தன்னை வருணித்துக் கொள்கிறான்?

அனுமன் பார்ப்பன வடிவத்தில் வந்தபோது கூட காலில் விழுந்து வணங்குகிறானே இராமன்; - நான் பார்ப்பனன் அல்லன், குரங்கு வம்சத்தவன் என்று அனுமன் ஒப்புக் கொண்டபோது கூட அது எனக்கு முக்கியமல்ல. பிராமணன் உருவத்தில் உம்மைக் கண்டேன் -உம் காலில் பணிவது என் கடமை என்று இராமன் சொல்லவில்லையா?

ஒரே ஒரு வரியில் இராமன் பொய்யன், இராமாயணம் உண்மை அல்ல என்று ஒப்புக் கொண்டு இரண்டு கைகளையும் தூக்கி சரண் அடையவேண்டியதுதானே!

சக்ரவர்த்தி திருமகன் எழுதிய ராஜாஜியே இராமாயணம் பொய் என்று சொல்லிவிட்ட பிறகு வேறு எந்த அம்மாஞ்சிகள் அலறி என்ன பயன்?

வால்மீகி முனி அல்லது யார் முதலில் பாடினாரோ அந்தக் கவிஞர் ஓர் அரக்கனைக் கற்பித்தார். உள்ளும் புறமும் மகா பயங்கரமாக விரிந்த ஒரு பிரகிருதியை சிருஷ்டித்தார். தமிழர் சிலர் அந்த அரக்கனே தம் குல புருஷன் என்று வைத்துக் கொள்ள முற்படுகிறார்கள்.

கதையைச் சரித்திரமாக்கி, அதிலிருந்து பகைமையை உண்டாக்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, இல்லாத துக்கத்தை சம்பாதிக்கப் பார்க்கிறோம் என்கிறார் ராஜாஜி. (ராஜாஜியின் கட்டுரைகள் எனும் நூலில் பொருளற்ற சண்டைகள் எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து.)

இராமாயணத்தில் உத்திர காண்டம் மட்டுமல்ல. இராமாயணத்தையே காப்பாற்றிட முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது ராஜாஜியின் கட்டுரை மூலம்.

இராமாயணத்தைக் காப்பாற்றிடத் துடிக்கும் அண்ணாவின் தம்பிகள்

ஆளானப்பட்ட ஆச்சாரியாராலேயே இராமாயணத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற போது, இராமாயணத்தைத் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்று சூளுரைத்த அறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்ட அண்ணா தி.மு.க.வினர் அனுமாராகத் தாண்டிக் குதிப்பதுதான் வேடிக்கை.

செங்கோட்டையன் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் வெளியேற்றினார் முதல் அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெயலலிதா. அந்தக் கட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.

ஓராண்டுக்குள்ளேயே அமைச்சரவை ஆறுமுறை மாற்றப்பட்டுள்ளது. அனேகமாக எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஓர் சுற்று அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது எப்படியோ போகட்டும்! வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் என்ன பேசுகிறார்? நான் உண்மை யான தொண்டன் என்பதை நிரூபிக்க அனுமான் மார்பைப் பிளந்து காட் டியது போல இயக்கத்துக்காக மார்பைப் பிளந்து காட்டுவேன் என்று பேசி இருக்கிறார்.

எப்படியோ தன்னை அனுமன் என்று காட்டிக் கொண்டு விட்டார் செங்கோட்டையன். இராமாயண காலத்திலிருந்து இன்று வரை அனுமார்கள் ஆரியர்களுக்கு மிக மலிவாகவே கிடைத்து விடுகிறார்கள்.

நல்லமுத்து கம்பன் அறநிலையப் பொன்விழா ஆண்டு விழாவில்தான் இவ்வாறு பேசியிருக்கிறார்.

கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று வாதம் புரிந்து இரா.பி. சேதுப்பிள்ளையையும் நாவலர் சோமசுந்தரபாரதியையும் வாதில் வென்றவர் அண்ணா. கம்பனைக் காட்டிக் கொடுக்கும் துரோகி என்று தோலுரித்துக் காட்டினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரில் ஒரு கட்சி. அதில் இப்படிப்பட்ட தள(ர்)பதிகள்!

பதவியைத்தான் பறி கொடுத்தார்; அண்ணாவின் கொள்கையையும் கூடவா பறிகொடுக்க வேண்டும்? இன்னொரு தகவலையும் இந்த நவீன அனுமார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வால்மீகி மூல இராமாயணத்திலேயே கூட அனுமார்களுக்குக் கடைசியில் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

இதோ!

வால்மீகி இராமாயணம் (உத்தர காண்டம். சமஸ்கிருதத்தில் உள்ளதை பதத்துக்கு பதம் தமிழ் வசன நடையில் காலம் சென்ற ராவ் சாகேப் பி.எஸ்.கிருஷ்ணசாமி அய்யரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகத் தில் எழுதி உள்ளதை கீழே அப் படியே ஆதாரமாகத் தருகிறோம். இராமாயணப் பிரியர்கள் படித்துப் பார்ப்பார்களாக!)

மேற்கண்ட புத்தகம் பக்கம் 555-ல் ராமபட்டாபிஷேக காலத்தில் வெகு மானிக்கப்பட்டவர் பட்டியல் தரப்பட்டுள்ளது. புருஷோத்தமர் (இராமர்) லட்சம் குதிரைகளையும், அப்படியே அப்போது ஈன்ற பசுக்களையும் நூறு காளை மாடு களையும் முதலில் பிராமணர்களுக்குத் தானம் செய்தார். (பக்கம் 556)

மீண்டும் இராமர் பிராமணர்களுக்கு முப்பது கோடி பொன் நாணயங் களையும், மிகவும் விலையுயர்ந்த பொன் ஆபரணங்களையும் வஸ்திரங் களையும் தானம் செய்தார்.

தன்னுடன் இராவணன் மீது நடத்தப்பட்ட போரில் உதவிய சுக்ரீவனுக்குப் பொன் ஆரம் ஒன்றைக் கொடுத்தார். அங்கதனுக்குத்தான் வளையம் கொடுத்தார். அனுமானுக்கு சீதை இரண்டு வஸ்திரங்களைக் கொடுத்தார். சீதைக்கு ஒரு முத்தாரத்தை இராமர் கொடுத்தார். இலங்கை பக்கமே தலை எடுத்து வைத்துப் படுக்காத, போர்க் களத்தின் பக்கமே தலைகாட்டாத பார்ப்பனர்களுக்கு முப்பது கோடி பவுனாம், லட்சம் குதிரைகளாம், பசுக்களாம், கடைசிவரை எல்லாக் களத்திலும் துணை நின்ற அனுமா னுக்கு இரண்டு வஸ்திரங்களாம்.

சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி. இதுதான் இராமாயணம்.

மார்பைப் பிளந்து தன்னை அனுமார்களாக வரித்துக் கொள்ளும் செங்கோட்டையன்கள் இதனைத் தெரிந்து கொள்வதோடு மட்டுமல் லாமல் புரிந்து கொள்ளவும் வேண்டும். இப்பொழுது அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை உட்பட!

தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் கூட்டம்

புதுவையை அடுத்த ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடி கிராமத்தில் வர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு மிளகாய் தூள் கரைசல் மூன்று கைகள் கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் வாங்கிக் குடித்தவுடன் அவர்களின் தலையில் அக்கரைசல் ஊற்றப்பட்டது (3-.7.-2012).

ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைப்பது என்பது நம் நாட்டுப் பழமொழி. பக்தியில் புத்தியைப் பறி கொடுப்பவனும் ஏமாந்தவன்தானே! அதுதான் இங்கும் நடந்திருக்கிறது.

பக்தி என்று வந்துவிட்டால் புத்தி போகிறது என்பது மட்டுமல்ல; மான அவமானம் பற்றியும் கவலைப் படுவதில்லை.

சேலம் அன்னதானப்பட்டியில் செருப்படி திருவிழா நடைபெறுகிறது. தட்சணை கொடுத்தல்லவா படித்த வர்களும் கோயிலுக்குச் சென்று செருப்படி படுகின்றனர்.

பெண்கள் கூட பெரிய பாளையத் தம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடும்போது வேப்பிலையை மட்டும் உடலில் கட்டிக் கொண்டு கிட்டத்தட்ட நிர்வாணமாக நிற்கி றார்கள். இவ்வளவுக்கும் அக்கோயில் அர்ச்சகர்கள் ஆண்கள்தான்.

பார்ப்பான் பஞ்சகவ்யம் என்று கூறி, மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலக்கிக் கொடுத்தால் பயபக்தியோடு தட்சணை கொடுத்தல்லவா, முகம் சுளிக்காது மொடக்கு மொடக்கு என்று குடிக் கிறான். கீழே அது சிந்தினால், அதனை அப்படியே கையில் வாங்கித் தலையில் அல்லவா தடவிக் கொள் கிறான். நமது முட்டாள்தனத்தை அளக்கும் தர்மா மீட்டர் என்று தந்தை பெரியார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

ராஜமரியாதை ஒரு பொழுதுதானா?

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த திருவரங் குளம் அரங்குளலிங்கநாதர் திருக் கோயிலில் ஆடிப் பூரத் தேரோட்டம் நடந்தபோது வடம் தொட்டுக் கொடுப்பதற்காக தாழ்த்தப்பட்ட இனத்தவர் வெண்கொற்றக் குடை பிடித்து ராஜமரியாதையுடன் அழைத்து வரப்படும் காட்சி.

தேவகோட்டையில் தேர் இழுக்க தாழ்த்தப்பட்டவர் வந்தால் உயர் ஜாதியினர் உறுமுகின்றனர். புதுக் கோட்டையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இப்படி ராஜமரியாதை - ஏன் இந்த முரண்பாடு?

ஏதோ ஒரு நாள் கோயில் திருவிழா வின்போது ராஜமரியாதை கொடுத்தால் போதுமா? அந்தத் திருவிழா முடிந்த அடுத்த நொடியில் அந்தத் தோழருக்கு அளிக்கப்படும் மரியாதை என்ன என்பதுதான் கேள்வி.

ஒரு நாள்தான் உனக்கு மரியாதை - மற்ற நாளில் மரியாதையாக ஒதுங்கிப்போ என்று சொல்லாமல் சொல்லுவதுதானே இதற்குள் புதைந்திருக்கும் சம்பிரதாயம்?

நந்தனைக் கூட தீக் குளித்து விட்டு தானே நடராஜன் வரச் சொன்னான்? அதன் பொருள் என்ன? நந்தன் பறை ஜாதி! -தீக்குளிக்கச் செய்தால்தான் தீண் டாமையைப்போக்க முடியும் என்று கட வுளே கருதுவதாகத்தானே பொருள்?

இந்து மதக் கண்ணி வெடியைக் கண்டு ஏமாறவேண்டாம்! எச்சரிக்கை!

--------------------"விடுதலை” ஞாயிறுமலர் 28-7-2012 “ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

27.7.12

டெசோவும் பார்ப்பனர்களும்

தனியீழம் தேவைதான் என்று துக்ளக்-சோ போன்ற பார்ப்பனர்கள் கருதுவார்களேயானால் டெசோவை ஆதரிக்க வேண்டும் - வரவேற்று எழுதி யிருக்க வேண்டும். டெசோ மாநாட்டில் தனி ஈழத் தீர்மானம் கொண்டு வரப்பட வில்லையே என்று ஆதங்கப்படக் கொஞ்சம் யோக்கியதையும் இருக்கலாம்.

தனி ஈழம் கூடாது என்பதுதான் இந்தக் கூட்டத் தினரின் கருத்து என்றால் இந்தக் கூட்டம் டெசோ அமைப்பை எதிர்த்து எழுதலாம். டெசோ மாநாட்டில் தனி ஈழத் தீர்மானம் கொண்டுவரப்படாதது சற்று ஆறுதல் அளிக்கிறது என்று எழுதுகோல் பிடிக்கலாம்.

ஆனால் தனி ஈழம் என்று சொன்னாலும் எதிர்ப்பது, தனி ஈழத் தீர்மானம் இல்லை என்று சொன்னாலும் எதிர்ப்பது என்றால் இதற்குப் பெயர் என்ன?

கலைஞர் அவர்கள் கொண்டிருக்கும் பார்ப்பன எதிர்ப்புணர்வு என்ற கருத்தை அவர்களால் ஜீரணிக்க முடியாத காரணத்தால்தான், கலைஞர் அவர்கள் எதைச் சொன்னாலும் எதிர்ப்பது, கிண்டலடிப்பது, ஆத்திரம் தீர விமர்சிப்பது என்பதைப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் அவர்கள் தேவைப்படும்போதெல்லாம் பார்ப்பனர்களை விமர்சிக்கிறார் அல்லவா, அந்தக் கோபம்தான் அவர்களுக்கு!

இதனைப் புரிந்து கொள்ளாத பார்ப்பனர் அல்லாத நம் தமிழர்கள் கூட பார்ப்பனர்களுடன் சேர்ந்து சேற்றை வாரி இறைப்பதுதான் வருந்தத்தக்கது.

தமிழ் செம்மொழி ஆனால் பிரியாணிப் பொட்டலம் வருமா என்று கேட்கிறார்கள். வணிக விளம்பரப் பலகைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என்றால் அதனை மொழி நக்சலிசம் என்று முத்திரை குத்துகிறார்கள்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப் பட்டது பற்றிக் கேட்டால், யாரும் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்களே அதுவரை சந்தோஷம் என் கிறார்கள்.

தை முதல் நாள்தான் புத்தாண்டுத் தொடக்கம் என்றால் கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணையில் வை என்கிறார்கள்.

தனி ஈழம் என்றாலும் அதே கருத்துதான். தங்களுக்கென்று நாடு இல்லாதவர்கள் பார்ப்பனர்கள். அதனால் தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு கிடைப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வயிற்றெரிச்சலுக்கு ஆளாகிறார்கள். இது போன்ற விடயங்களில் பார்ப்பனர்கள் நியாய அநியாயங்களைப் பார்ப்பதில்லை. கண்மூடித் தனமாக தமிழ், தமிழர், தமிழ்நாடு எதிர்ப்பு என்பதை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொண்டு செயல் படுகிறார்கள். சேது சமுத்திரத் திட்டம் என்றாலும் அப்படித்தான்!

தனி ஈழம் பற்றி கலைஞர் சொன்னால் சீறி எழும் இந்தப் பூணூல்கள் தனி ஈழம் பற்றி செல்வி ஜெயலலிதா பேசினால் அந்த இடத்தில் எப்படி யெல்லாம் தடுமாறுகிறார்கள் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

கேள்வி: போர் என்றால் அப்பாவி மக்களும் பலியாகத்தான் செய்வார்கள், அதைத் தவிர்க்க முடியாது என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறிய ஜெயலலிதா, இப்போது திடீரென்று தனது கருத்தை மாற்றிக் கொண்டு இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தது பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில்: போர் நடந்தால் அப்பாவிகள் பலியாகத்தான் செய்வார்கள்; போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவதில் ஒன்றைத் தொடர்ந்து அதை ஒட்டி மற்றொன்று வருகிறது. அவர் ஏற்கெனவே போர் நிறுத்தம் பற்றிச் சொல்லியும் இருக்கிறார். ஆகையால் இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

(துக்ளக் 25-3-2009)

ஏதாவது புரிகிறதா? என்ன சொல்ல வருகிறார் இந்த மே(ல்)தாவி? ஏன் இப்படிக் குழப்புகிறார்? தத்தளிக்கிறார்? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற முறையில் ஏன் பதில் சொல்ல முடியவில்லை? வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் குழைத்து எழுதுவானேன்? இதற்குப் பெயர்தான் இனப்பாசம் என்பது.

ஒரே பிரச்சினையில் கலைஞர் என்றால் எழுதுகிற பதிலுக்கும், ஜெயலலிதா என்றால் எழுதுகிற பதிலுக்கும் இடையில் ஏன் இந்தத் தடுமாற்றம்?

பொதுமக்கள் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கட்டும். தமிழர் தேசியம் என்று கூறிக் கொள்ளும் தலைவர்கள் முதலில் புரிந்து கொள்ளட்டும்!

----------------”விடுதலை” தலையங்கம் 27-7-2012

26.7.12

தமிழ்த்தேசிய குருட்டுக் கண்களுக்குத் தெரியுமா?


இன்றைக்கு 15 ஆண்டுகளுக்குமுன்....

இன்றைக்குச் சரியாக 15 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில்தான் (1997) இரோமேசுவரத்தில் தமிழக மீனவர் பாதுகாப்பு மாநாடும் - கச்சத் தீவு மீட்பு மாநாடும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறப்புரையாற்றினார். தமிழக மீனவர்களை இலங்கைக் கப்பல் படை சுட்டுக் கொல்லுவதை எதிர்த்து உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றார் பெர்னாண்டஸ். மாநாட்டில் மருத்துவர் இராமதாசு, பழ. நெடுமாறன், கா. காளிமுத்து, பொன். முத்துராலிங்கம், இரா. சனார்த்தனம், கா. ஜெகவீரபாண்டியன் முதலியோர் பங்கேற்றனர்.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்றும் அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலேயே இலங் கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்த்த இந்திய அரசு, கசப்பான அனுபவங்களுக்குப் பிறகாவது கச்சத் தீவை மீட்டிட மீசையை முறுக்க வேண்டாமா?

நமக்குச் சொந்தமான கச்சத்தீவு அருகில் நம் தமிழர்கள் மீன் பிடிக்கச் சென்றால் குற்றமாம்! இரவ லாகப் பெற்றவர்கள் தீட்டிய மரத்தில் கூர்ப் பாய்ச்சுவது போல நம் மக்களையே சுட்டுக் கொல்லுவதா? இதனைத் தட்டிக் கேட்கா விட்டால் நம் நாட்டுக்கே சுயமரியாதை இல்லை என்று பொருளாகி விடாதா?

கொடுக்கத் தெரிந்தவர்கள்தான் மீட்டுக் கொடுப்பதற்குமான பொறுப்பை ஏற்க வேண்டும் - அதுதான் அறிவு நாணயமும் தன்மானமும் ஆகும்.

ஈழத்திலே தமிழர்களைக் கொல்லுவது மட்டுமல்ல. இந்தியாவில் இருக்கும் தமிழர்களான மீனவர்களையும் படுகொலை செய்கிறது என்றால் இதனைத் தடுத்து நிறுத்திட இந்தியாவுக்குக் கடமை இருக்கவில்லையா?

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் சரி, இந்தியத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் சரி - கொல்லப்படுவது தமிழர்கள் என்றால், எங்கள் நிலை இதுதான் என்று இந்தியா சொல்லுவதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ!

கடல் எல்லையைத் தாண்டாதீர்கள் - தாண்டினால் இலங்கைக் கடற்படை சுடத்தான் செய்யும் என்று 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் சொல்லுவதற்குக் கூச்சப்பட வேண்டாமா?

வேலியில் ஓடும் ஒணானை எடுத்துக் காதில் விட்டுக் கொண்ட கதையாக அல்லவா இருக்கிறது.

யாரைக் கேட்டு கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்தார்கள்! 1974இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் காணப்பட்ட மீன்பிடிக்கும் உரிமை கவட்டுத்தனமாக விட்டுக் கொடுக்கப்பட்டது எப்படி?

இந்திய ஜனநாயக நாடு தானே! நாட்டு மக்களுக்குத் தெரியாமல் நடுராத்திரியில் ஒப்பந்தங்கள் மாற்றப்படு கின்றனவா?

இந்த ஒப்பந்தத்திற்கு மட்டும் கறார் பேசும் இந்திய அரசு, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி இலங்கை ன் வடக்கு - கிழக்கு மாவட்டம் இணைக்கப்படுவதில் - தம் சூரத்தனத்தை இந்தியா காட்டாதது ஏன்?

ஒப்பந்தம் காப்பாற்றப்படுவதாக இருந்தாலும் சரி, மீறப்படுவதாக இருந்தாலும் சரி, அங்குப் பாதிக்கப் படுபவர்கள் தமிழர்கள் மட்டும் என்பது தான் எழுதப்படாத ஒப்பந்தமா?

டெசோ மாநாடு இந்த உணர்வுகளின் கொந்தளிப்புக்கிடையேதான் நடைபெறுகிறது.

அதே கச்சத் தீவு மாநாட்டில் தான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். கச்சத்தீவு மீட்கப்படுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழர் தலைவரின் அந்த ரிட் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசிம்மபாபு அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு (29.7.1997) இன்று வரை நிலுவையில் உள்ளது.

திராவிடர் இயக்கத்தில் இந்தத் தொடர் செயல் பாடுகள் எல்லாம் தமிழ்த்தேசிய குருட்டுக் கண்களுக்குத் தெரியாது. செவிட்டுக் காதுகளிலும் விழாது! எல் லோருக்கும் சென்னை டெசோ மாநாட்டில் (12.8.2012) புரிய வைப்போம் வாரீர்!
--------------”விடுதலை” 26-7-2012

25.7.12

பெண்களுக்குத் தாடி மீசை முளைக்காதது ஏன்?


ஆன்மிகச் சிறப்பிதழ்கள் என்று வெளியிடுகிறார்களே - கொஞ்சமாவது புத்தியைச் செலுத்துகிறார்களா? இதோ ஒரு கதையைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

சிறீபக்ஷிராஜர் திரு நட்சத்திரம்

கசியப மகரிஷி - வினதை இருவருக்கும் பிறந்தவர் கருடன். தாயின் அடிமைத் தளையை நீக்க தேவலோகத்திலிருந்து இந்திரனிடம் சண்டையிட்டு அமிர்தத்தைப் பெற்று வந்தார். அதைத் தர்ப்பையைப் பரப்பி ஊற்றி தாயின் அடிமைத்தனத்திற்குக் காரணமாக இருந்த கத்ருவின் பிள்ளைகளான நாகர்களைக் குடிக்கச் செய்தார். தர்ப்பையால் நாக்கு பிளவுபட்ட சர்ப்பங்கள் இரத்தம் கொட்ட மயங்கி விழுந்தன. மாற்றாந் தாயான கத்ரு, கருடனின் வலிமையைப் புரிந்து கொண்டு சக்களத்தியான வினதைக்கு அடிமைத் தளையிலிருந்து விடுதலை அளித்தார்.

கருடனின் தமையன் சூரியனின் ரதசாரதியான அருணன். கருடன் திருமாலின் வாகனம். நரகாசுரவதத்திற்கு பெரும் உதவியாக இருந்தவன். கருடனின் அம்சமாகப் பிறந்தவர் பெரியாழ்வார். இன்று, பெரிய திருவடி எனப்படும் பட்சி ராஜா வாகிய கருடனை பெருமாள் கோயில் சென்று வழிபடுவதால் சாதனை புரியும் ஆற்றலும், வீரமும், திருமால் அருளும் கிட்டும்.

ஏதாவது புரிகிறதா?

கருடனின் அண்ணன் சூரியனின் ரத சாரதி (எவ்வளவுக் காட்டு விலங்காண்டிகள்!) ஆகாயத்தில் இப்பொழுது பறக்கின்றனவே - இவை எல்லாம் கூட மகரிஷிக்குப் பிறந்தவைகள்தானா? பெரியாழ்வார் யார் என்று கேட்டால் கருடனின் அம்சமாம். கருடன் தலைக்கு மேல் பறந்தால் காண்பவர்களுக்கு நல்ல பலன் கிட்டுமாம். வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வழக்குகளில் ஜெயமாம். (வாதி, பிரதிவாதி இருவரும் தரிசித்தால் யாருக்கு வெற்றியாம்?) அது சரி, கோழிக்குஞ்சுக்கு மேல் கருடன் பறந்தால் யாருக்குப் பலனாம்?

அந்தப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்தான் ஆண்டாளாம். அந்த ஆண்டாள் யார் என்றால் தந்தையாகப் போற்றத் தகுந்த பெருமாளைப் புருஷனாகக் கொண்டு புணர்ந்திட ஆசைப்பட்டாளாம்! (அட ஒழுக்கம் கெட்ட கூட்டமே!)

பக்தரிடம் பெருமாள் கடிபட்டாராம்

பக்தர் ஒருவரிடம் கடவுள் பெருமாள் ஒவ்வொரு நாளும் கடிபட்டாராம். சிறீரங்கம் கோயிலில் சிறீமான் ரெங்கநாதன் பள்ளி கொண்டு இருக்கிறார் அல்லவா? அரையர் சுவாமிகள் பாடும் பாசுரங்கள் பெருமாளுக்குப் ப்ரீதியாம். அரையர் வெற்றிலைப் பாக்குப் பிரியராம். குழைய குழைய வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொண்டே பாசுரங்களைப் பாடுவாராம். பெருமாளைத் தம் வெற்றிலைப் பாக்குப் பெட்டியில் எழுந்தருளச் செய்தாராம் (பெருமாளின் கதியைப் பார்த்தீர்களா!)

அடிக்கடி வெற்றிலைப் பாக்குப் பெட்டியைத் திறந்து பார்த்துத் தொட்டு வணங்குவாராம். சில நேரங்களில் கொட்டைப் பாக்கு என்று நினைத்து பெருமாளையும் கடித்துவிடுவாராம். பிறகு நீராட்டிப் பாசுரம் பாடி வெற்றிலைப் பாக்குப் பெட்டிக்குள் வைத்துவிடுவாராம். (கடவுளா கொட்டைப்பாக்கா?)

கடவுளைப் பக்திச் சிமிழுக்குள் அடைக்கும் விபரீதத்தை என்ன சொல்ல!

பெண்களுக்குத் தாடி மீசை முளைக்காதது ஏன்?

மாண்டவ்ய முனிவருக்கும், டிண்டிகைக்கும் ஒரு மகள். தம்பதியர்கள் காசி யாத்திரை செய்ய விரும்பி, மகளை உத்தமராக நம்பிய எமதர்மனிடம் விட்டுச் சென்றனராம்.

அந்த யோக்கிய சிகாமணி என்ன செய்தான்? நம்பி விட்டுச் சென்ற அந்தப் பெண்ணுடன் சுகபோகம் அனுபவிப்பதும், பகல் நேரத்தில் அவளை விழுங்கி விடுவதும் வழக்கமாம்.

ஒருமுறை குளிக்கச் சென்றபோது அந்தப் பெண்ணை வயிற்றிலிருந்து வெளியே உமிழ்ந்து விட்டு குளிக்கச் சென்றான். அப்பொழுது அந்த வழியில் வந்த அக்னி பகவான் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி அவளை கற்பழித்துவிட்டானாம். (இந்து மதம் என்றாலே கடவுள் கற்பழிக்கவேண்டுமே!)

குளிக்கச் சென்ற எமதர்மன் வெளியில் வந்த போது வேறு வழியின்றி அக்னியை அப்படியே அலக்காகப் போட்டு அந்தப் பெண் விழுங்கி விட்டாளாம்.

எமதர்மன் வழக்கம்போல அந்தப் பெண்ணை விழுங்கி விட்டானாம். இப்பொழுது எமன் வயிற்றில் பெண் - அந்தப் பெண்ணின் வயிற்றில் அக்னி! (இன்னும் கேளுங்கள்! கேளுங்கள்!!)

அக்னி அமுங்கிவிட்டதால் தேவர்கள் யாகம் முதலியவற்றைச் செய்ய முடியவில்லையாம்.

அக்னி பகவான் இருக்கும் இடம் எப்படியும் வாயு பகவானுக்குத் தெரியும் என்று கருதி அக்னியைக் கொண்டு வருமாறு தேவர்கள் வேண்டினர்.

வாயு பகவான் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தான். எமதர்மராஜாவுக்குப் பக்கத்தில் இரண்டு இலைகள் போடப்பட்டன. எமதர்மன் வாயுவைப் பார்த்து என் பக்கத்தில் இரண்டு இலைகள் ஏன் என்று கேட்க, அதுதான் சந்தர்ப்பம் என்று கருதி, உன் வயிற்றுக்குள் பெண் இருக் கிறாரே - அவளுக்குத்தான் என்று வாயு கூற, வேறு வழியின்றி எமராஜா பெண்ணை வெளியில் கக்கினான். இன்னொரு இலை யாருக்கு என்ற வினா எழுந்தது. உன் வயிற்றில் இருக்கும் அக்னி பகவானை வெளியில் கொண்டு வா என்று அந்தப் பெண்ணிடம் கூறினான் வாயு.

அக்னி பகவான் பெண்ணின் வாயிலிருந்து வெளியே வந்தபோது பெண்ணின் தாடி மீசை பொசுங்கிப் போய் விட்டதாம். அதிலிருந்துதான் பெண்களுக்கு தாடி மீசை முளைக்காது போய்விட்டதாம்!

காட்டுமிராண்டிகளுக்கும் காட்டுமிராண்டிகள் என்பார்களே - அவர்கள் இந்த இந்து மதப் பேர்வழிகளாகத்தான் இருக்க வேண்டும்.

இந்துப் புராணங்களைப் படித்தால் பைத்தியம் பிடித்து, உலக்கையைக் கோவணமாகக் கட்டிக் கொண்டுதான் திரியவேண்டும்.

நாட்டில் பக்தி குறைந்ததால் தான் ஒழுக்கம் குறைந்து போய்விட்டது என்று கூறும் புத்தி சிகாமணிகளை முச்சந்தியில் நிறுத்தி நாலு கேள்விகளைக் கேட்கக் கூடாதா?

-------------------"விடுதலை” தலையங்கம் 25-7-2012

24.7.12

IIT என்றால் Iyer and Iyengar Technology


ஒரு காலத்தில் சொல்லப்படுவதுண்டு AIR என்றால் All Iyer and Iyengar Radio; LIC என்றால் Licentiate Iyer and Iyengar Corporation; SRy என்றால் Sri Rangam Railway என்றெல்லாம் சொல்லுவதுண்டு. அந்த அளவிற்கு இவை எல்லாம் அக்கிரகாரவாசிகளின் வேலை வாய்ப்பு உல் லாசப் பூங்காக்களாக கொழித்தன.

இப்பொழுது IIT என்றால் என்ன பொருள்? Iyer and Iyengar Technology என்பது இன்றளவுக்கும் உள்ள உண்மை யான நிலவரமாகும்.

ஒவ்வொரு அய். அய்.டி.யும் ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியில் ஒய்யாரமாக பார்ப்பனர்களுக்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டு ஒண்டிக்கட்டையாகக் காட்சி அளிக்கிறது.

மாணவர் சேர்க்கையிலும் சரி, ஆசிரியர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் சரி, அங்கே உள்ளே நுழைந்தால் அது ஒரு பெரிய அக்கிரகாரமாகவே காட்சி அளிக்கும். அவாள் வீட்டுப் பிள்ளைகளுக்கு, அந்த வளாகத்துக்குள்ளேயே கல்வி கற்க உயர் தட் டுக் கல்விக் கூடங்கள் -இத்தியாதி! இத்தியாதி!!

எடுத்துக்காட்டாக மொத்தப் பேராசிரியர்கள் 400 எனில் பார்ப்பனர்கள் 282 பேர் (70 விழுக்காடு) முன் னேறிய உயர்ஜாதி பார்ப்பனர் அல்லாதார் 40 பேர் (10 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோர் 57 (14 விழுக்காடு) தாழ்த் தப்பட்டோர் 3 (0.75 விழுக்காடு) கிறித்தவர் 15 (3 விழுக்காடு) முசுலீம் - பூச்சியம்.

இதுதான் நிலைமை. தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெயரளவுக்கு இட ஒதுக்கீடு. தப்பித் தவறி உள்ளே நுழைந்தாலும் பட்டம் பெற்று வெளியே வருவது அரிதே!

இப்படிப்பட்ட அக்கிர காரத்தில் முதன்முத லாக அய்.அய்.டி. பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பணியாளர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே. தாழ்த்தப்பட்டோர் நலச் சங்கமும், பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கமும் ஒருங்கிணைந்து அக்கிரகார ஆதிக்கத்திற்குத் தண்ணீர் காட்டு வார்களாக! இந்தி யாவுக்கே பெரியார் பிறந்த மண் இந்த வகையிலும் வழிகாட்டி யுள்ளது பாராட்டுக் குரியதே!

---------------- மயிலாடன் அவர்கள் 24-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

கடவுள் - மதம் நாட்டுக்குக் கேடே!-பெரியார்தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும், சமயாச்சாரிகளென்றும் கட்டியழுபவர்கள் ஒன்று. பகுத்தறிவில்லாதவர்களாகவாவது அல்லது வயிற்றுப் பிழைப்பிற்குப் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும்.

அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ அல்லது ஒரு ஆசாமி என்றோ அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை ஆகும்.

ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிப்பு என்பவைகளான மூவகைத் தன்மை களையும் மேற்படி சாமிகளோ, ஆசாமி களோ, ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கிறான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களை விசாரஞானமற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

அந்தக் கடவுள் என்பவைகளுக்கு கண், மூக்கு, வாய், கால், கை, தலை, பெயர், ஆண் - பெண் தன்மை பெண்சாதி - புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய் - தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அவைகளிடத்தில் பக்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றிற்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்ய வேண்டுமென்றும், அச்சாமி களுக்குக் கல்யாணம் முதலியவைகளைச் செய்வ தோடு, அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளை யாடல்கள் முதலியவைகள் செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும் என்றும், அக் கடவுள்களின் பெருமையைப் பற்றியும், திருவிளையாடல் கள் பற்றியும் பாட வேண்டும். திருமுறையாக, பிரபந்தமாக அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்று வார்கள் என்றும் மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப் போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத் தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப் படுபவைகள் மூடநம்பிக்கை - வயிற்றுப் பிழைப்பு - சுயநலப் பிரச்சாரமே.

ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட் டார்கள் போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல், மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான சாஸ்திரத்திலே (சயன்ஸ்) முன்னேற்ற மடையாமலிருப்பதற்கும், இம்மூட நம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமேதான் காரணங்கள் ஆகும்.

ஒருவரையொருவர் உயர்வு - தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய் திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சிக் கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும், உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும், அவர்களது பாடல்களும், நெறிகளுமே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவங்களுக்கும், பஜனை முதலிய காலட்சேப நேரக் கேட்டிற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங் களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்திஸ்தலம், தீர்த்தஸ்தலம் முதலிய யாத்திரை களுக்கும், இக்கடவுள் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள் களைப் பற்றிப் பாடின பாட்டுக்களை அச்சடித்து விற்கும் புத்தகங்களை வாங்குவதற்கும் மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களாலும், நேரங்களாலும் நம் நாட்டில் பல கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக் கொண்டிருக்கிறது.

இந்த பல கோடிக்கணக்கான ரூபாய்கள் இம் மாதிரியாக பாழுக்கிறைக்காமல் மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான (சயன்ஸ்) வளர்ச் சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால், நம் மக்கள் இன்னும் காட்டுமிராண்டி களாகவும், உடலுழைப்புக் கூலிகளாகவும் இருக்க முடியுமா அன்றியும் தீண்டக்கூடாத, நெருங்கக் கூடாத, பார்க்கக் கூடாத மக்கள் என்போர்கள் கோடிக்கணக் காய் இருக்க முடியுமா?

100-க்கு மூன்று பேர்களா யிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களை சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சிக் கொண்டு இருக்க முடியுமா? என்று கேட்கிறோம்.

கடவுள் - மத மூடநம்பிக்கை கள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாப காரியமென்றும் கூறுவது பகுத்தறிவற்ற பாமர மக்களை ஏமாற்றிச் சுரண்டிப் பிழைப்பவர்களின் சுயநலப் புரட்டே ஆகும்.

--------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் - "விடுதலை" 29.12.1969

23.7.12

சேதுக்கால்வாய்த் திட்டமும்- பார்ப்பனக் கூட்டமும்

இன்னும் எத்தனை நாள்?

கேள்வி: சேதுக்கால்வாய்த் திட்டம் மாற்றுப் பாதையில் சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதே, அடுத்து என்ன நடக்கும்?

பதில்: ஒன்றும் நடக்காதிருந்தால் போதும். ஏற்கெனவே ஏராளமான மக்கள் பணம் செலவழிக்கப்பட்டு, திட்டமே நிறுத்தப்பட்டதால் கடலில் பாலம் கரைந்து போய்விட்டது. இன் றைக்கு இந்தியா இருக்கும் பொரு ளாதார நிலையில், இத் திட்டத்தைக் கைவிடுவதே நல்லது. திட்டம் நிறை வேறினாலும் அதனால் கிடைக்கக் கூடிய வளம் பெரிதாக இருக்கப் போவதில்லை என்பதே உண்மை.
(கல்கி 22-.7.-2012 - பக்கம் 27)

கேள்வி: சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவ்ரி குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பற்றி . . .

பதில்: இந்தக் கமிட்டி அமைக்கப் படுவதற்கு முன்பாகவும், அதற்குப் பின்பும் கூட பல நிபுணர்கள் மாற்று வழிகள் சாத்தியமே என்பது பற்றி விவரமாக ஆராய்ந்து கூறி இருக் கிறார்கள். அந்த அபிப்பிராயங்களி லிருந்து இந்தக் கமிட்டித் தலைவரின் அபிப்பிராயம் மாறுபட்டிருக்கிறது. இதில் எது சரி என்ற ஆராய்ச்சியில் இறங்குவதை விட, ராமர் பாலத்தைச் சேதப்படுத்துவது ஏற்க முடியாத விஷயம் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷ யம்.
(துக்ளக் 18.-7.-2012 பக்கம் 29)

இந்தியக் கிழக் குக் கடற்கரையிலிருந்து சரக்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வருவது போல இந்தப் பார்ப்பனர்கள் அங்கு இங்கு சுற்றி கடை சியில் ராமர் பாலம் - அது இடிக்கப்படக்கூடாது என்று மங்களம் பாடி முடிக்கிறார்கள் என் பதைக் கவனிக்க வேண்டும்.

இன்றைக்கு இந்தியா இருக்கும் பொருளாதார நிலையில் இந்தத் திட் டம் தேவையில்லையாம் -_ ரொம்பத்தான் கசிந்து உருகுகிறது கல்கி.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பொருளாதார நிலையில் இடிந்து கிடக்கும் கோயில்களையெல்லாம் இடித்துக் கட்டலாம். பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமன் கோயிலைக் கட்டலாம். ஆனால் மக்கள் நலனுக்கு நாட்டு வளத்துக்கு பயன்படக்கூடிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மட்டும் செயல்படுத்தப்படக்கூடாது. அடேயப்பா! எவ்வளவு பெரிய இந்தியமாக் கடலைத் தாண்டிய விரிந்த உள்ளம். இந்தப் பார்ப்பனர்களுக்கு.

இந்தத் திட்டத்தினால் கிடைக்கக் கூடிய பொருளாதார வளம் பெரிதாக இருக்கப் போவதில்லை என்று பொருளாதாரப் புலி போல, திட்டத்தின் தீட்சண்யத்தில் அத்துப்படியான அறிஞர் போல கல்கி கனைக்கிறது.

இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பயன்கள் பற்றி வல்லுநர்கள் ஒன்றும் தெரிவிக்கவில்லையா? இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பி.ஜே.பி. ஆட்சியில் முடி வெடுத்தபோது இந்தக் கல்கி, துக்ளக் வகையறாக்கள் ஏன் எழுதுகோலைத் தூக்கிக் கொண்டு, விட்டேனா பார் என்று விடுபட்ட அம்பு போல கிளம்பவில்லை?

1860 இல் வெள்ளையன் ஆட்சிக் கால முதல் சாத்தியமான திட்டம்தான் என்று நிபுணர்கள் கூறிடவில்லையா?

டவுண்சென்டின் திட்டம் (1861), பிரிட்டீஷ் பாராளுமன்றக் குழுவின் திட்டம் (1862), ஸ்கோட்டர்ட்டின் திட்டம் (1871) இராபர்சனின் திட்டம் (1872) சர் ஜான் கோடின் திட்டம் (1884) தென்னிந்திய ரயில்வே பொறியாளரின் திட்டம் (1903), சர் ராபர்ட் பிரிஸ் டோவின் திட்டம் (1922) சர்.ஏ. இராமசாமி முதலியார் தலைமை யிலான குழுவின் அறிக்கை (1955) டாக்டர் நாகேந்திரசிங் தலைமை யிலான குழுவின் அறிக்கை (1964), ஏ.ஆர். இலட்சுமி நாராயணன் தலை மையிலான குழுவின் கருத்து - இத்தனை ஆண்டுகளாக எத்தனை எத்தனையோ நிபுணர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஒருவராவது இத்திட்டம் சாத்தியமற்றது - பயனற்றது என்று சொல்லவில்லையே!

ஆனால் இந்த அக்கிரகாரத்து அம்பிகள் மட்டும் இந்தத் திட்டத்தால் பயன் ஏதுமில்லை என்று சொல்லு கிறார்கள்.

இந்தத் திட்டத்தால் பயன் இல்லையாம். ஆனால் நிபுணர்கள் என்ன ;சொல்லுகிறாகள். இதோ அந்தப் பட்டியல்.

(அ) இந்திய கடல் எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை அமையும்.

(ஆ) இந்தியக் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி சரக்குகளின் போக்கு வரத்துச் செலவு குறையும். எனவே, உலகச் சந்தையில் நம் ஏற்றுமதிப் பொருள்கள் போட்டி போட முடியும். இறக்குமதியாகும் கச்சாப் ;பொருட் களின் விலை குறையும்.

(இ) இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு அடையும். இதனால் எல்லாத் துறைமுகங்களிலும் வேலை வாய்ப்பும், அதைச் சார்ந்த பகுதிகளில் தொழில் உற்பத்தியும் பெருகும்.

(ஈ) தமிழகக் கடலோர வணிகமும், பன்னாட்டு வணிகமும் சிறக்கும்; இதனால் பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இப்போது இருக்கும் சிறு துறை முகங்கள் பெருமளவில் வளர்ச்சி அடையும். இராமநாதபுரம் மாவட் டத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும்.

(உ) மீனவர்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையில் தூத்துக்குடிக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் மீன்பிடி துறைமுகங்கள் தேவைக்கேற்ப உண்டாகும்.

(ஊ) தமிழகக் கடலோரப் பகுதி களில் தொழில் வளர்ச்சி பெருகும். இதனால் பொருளாதார வளர்ச்சி அடையும். புது மீன்பிடித்துறைமுகங் களால் மீனவர்கள் பிடிக்கும் மீன் களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.

(எ) மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர் களுக்கு இக்கால்வாய் வசதியளிக்கும்.

(ஏ) தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பெருகும்.

(அய்) இந்திய சரக்குகள் அந்நியத் துறைமுகங்களில் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும்.

(ஒ) பல்வேறு வகைகளிலும் அந் நியச் செலவாணி மீதமாகும்; அந்தியச் செலவாணி வருவாயும் அதிகரிக்கும்.
வேலை வாய்ப்பும் பெருகும்.

இவ்வளவு நலன்களும், வளங் களும் கைகோர்த்து வரும் போது இந்த அக்ரகாரவாசிகள் மட்டும் ஏன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்?

ஆர்.கே.பச்சவ்ரி நிபுணர் குழு - வேறு வழியில் திட்டத்தை நிறைவேற்ற சாத்தியமில்லை என்று சொல்லுகிறது என்று சொன்னால் வேறு நிபுணர்கள் வேறு வகையாகச் சொல்லி இருக்கிறார்களே என்று விதண்டாவாதம் செய்கிறார் திருவாளர் சோ,

ஆக, சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற தமிழர் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்ற புழுக்கம் உள்ளத்தில். அதன் வெளிப்பாடுதான் இப்படிக் கோணல் சுழி வெட்டுவதாகும்.

தமிழர்களுக்கு நல்லது நடந்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு ஆர்வம்!

நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சார்பு பொறியியல் ஆய்வு மய்யம் (NEERI - The national Environment Engineering Research Institute)
என்ற நிறுவனம்தான் இந்த ஆறாவது வழித் தடத்தை ஆய்வு செய்து தேர்வு செய்தது.

இதனை ஏற்றுக் கொண்டு இசைவு அளித்தது டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசல்ல, மாறாக வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.

பி.ஜே.பி.யின் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, கப்பல் போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் சு.திருநாவுக்கரசர், கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் - இத்தனை பி.ஜே.பி. அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்ட திட்டம் இப்பொழுது ஆகாத திட்டமாக மாறியது எப்படி? அப்பொழுது வராத ராமன் பாலம் இப்பொழுது வந்து குதித்த மர்மம் என்ன?

அதுவும் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பாலம் கட்டினானாம். கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். சொல்பவர்கள் சாதாரணமான ஆசாமிகளா? சாட்சாத் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணோத்தமர்களாயிற்றே! ஆமாம் ராமன்கட்டிய பாலம்தான் என்று கதைக்கிறார்கள்.

இவர்கள் சொல்லும் இத்தனை ஆண்டுகளுக்கு முன் மனிதன் இருந்தானா?

கடலில் இது போன்ற மணல் திட் டுகள் உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் இருக்கத்தான் செய்கின்றன என்று கடல்சார் பொறியாளர்கள் கூறுகிறார்கள்.

இவையெல்லாம் அவாள் காதில் விழவே விழாது.

ஆஸ்திரேலியா கண்டத்தில் நீண்ட நெடிய தூரம் இத்தகைய மணல் திட்டுகள் இருக்கின்றனவே - அவற்றை எந்த ராமன் கட்டினான் என்ற நிபுணர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாத பார்ப்பனர்கள் வீண் அரட்டைக் கச்சேரி நடத்து கிறார்கள் _- விதண்டாவாதம் பேசுகிறார்கள்.

ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ் செம்மொழியானால் கனல் கக்குகிறது. வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று கேலி செய்கிறார்கள்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றால் தணலாகக் கொதிக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்றால் ஆவேசப்புயலாய் ஆடிக் குதிக்கிறது. கோயிலுக்குள் தமிழ் என்றால் குடுமிகள் எல்லாம் கொந் தளித்துக் கிளம்புகின்றன.

ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு என்றால் இரக்கமற்ற முறையில் ஈட்டியைப் பாய்ச்சுகிறது.

தமிழர்களின் நீண்ட நாள்கனவான தமிழன் கால்வாய்த் திட்டம் என்ற சேது சமுத்திரத் திட்டம் என்றால் சீறிப் பாய்கிறது. இந்தக் கூட்டத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு சகித்துக் கொள்ளப்போகிறோம் என்பதுதான் தமிழர்கள் முன் , திராவிடர்கள் முன் செங்குத்தாக நிற்கும் வினா எனும் எரிமலை!

இராமனே உடைத்த பாலம்


மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!

மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக் கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.

கட்டியவனே உடைத்துவிட்டான், பாலம் எங்கே இருக்கிறது?

உ.வே. சுமிநாதய்யர் பதிப்பித்த சிறீமத் கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057க்கு உரை எழுதும் போது அய்யர் எழுதுகிறார்: வில்லின் குதை யால் (அம்பின் நுனி கீறித் தருக்கிய இடம் இன்னும் தனுக் கோடி என்றும், அவ்விடத்தில் உள்ள நீர்ப்பகுதி தனிக்கோடி தீர்த்தம் என்றும் வழங்குகிறது.

திரும்ப அழகிய தேசிகர் இயற்றிய சேது புராணத்திலும், பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய தேவை உலாவிலும் இதன் வரலாறு காண்க.

கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தமையால், ராமனே தனது வில்லின் நுனி யால் பாலத்தைக் கீறி உடைத்து விட்டான் என்பதுதானே இதன் பொருள்.

இராமாயணத்தின் அடிப்படையில் தானே ராமன்பாலத்தை உடைக்கலாமா? என்று பிரச் சினையைக் கிளப்புகிறார்கள். அந்த இராமாயணம் தானே இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும். பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

-----------------------மின்சாரம் அவர்கள் “விடுதலை” ஞாயிறுமலர்
21-7-2012 இல் எழுதிய கட்டுரை