Search This Blog

30.11.09

பெரியார் கருத்துகளை அப்படியே பிரதிபலித்தவர் அண்ணா!


குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி 16.10.2009 சிறப்புரையாற்றினார்.

பெரியார் கருத்துகளை அப்படியே பிரதிபலித்தவர் அண்ணா என்று குவைத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கி பேசினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் நேற்றையமுதல்நாள் தொடர்ச்சி வருமாறு:-

அண்ணா அவர்கள் பொதுக்கூட்டத்தில் அடுத்து எழுந்து பேசினார். நீங்கள் எவ்வளவு தூரம் இடைஞ்சல் செய்தாலும் நாங்கள் இந்த இடத்தை விட்டுப் போவதாக இல்லை.

நீங்கள் எறிகின்ற ஒவ்வொரு கல்லும்

நீங்கள் எறிகின்ற ஒவ்வொரு கல்லும் எங்களை உரத்துப் பேச வைக்கும். தந்தை பெரியார் அடுத்த படியாக என்னைவிட வேகமாகப் பேசுவார். ஆனால் ஒன்றைச் சொல்லுகின்றேன்.

பெரியாருக்கு தாடி இன்னும் முழுமையாக வெள்ளையாகவில்லை. ஆங்காங்கு சில கருப்பு முடிகளும் இருக்கின்றன. நீங்கள் அந்த சாம்பலை எங்கள்மீது வீசினால் வெண்ணிறத் தாடிதான் எங்களுக்குத் தெரியுமே தவிர, இதையே நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அண்ணா உட்கார்ந்தார் (கைதட்டல்). அந்த வசந்தம் கட்டுரையில் அண்ணா சொல்லுகிறார்.

உருட்டல் மிரட்டல்

செல்வோம், பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில், உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந்திருப்பின் அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக்கொண்டுதான் வருவார். அத்தகைய தெளிவும், வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய, தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல; தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை.

அந்த வரலாறு தொடங்கப்பட்ட போது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாள்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன்.

என் வசந்தம்

அந்த நாள்களைத்தான் என் வசந்தம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பாணியாற்றியவர், பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும் போது இனிமை பெறுகின்றேன்.

எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும், அக மகிழ்வும் மன நிறைவும் பெற்றிடச்செய்தார்.

உன்னை எனக்குத் தெரியும், போ!

கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன், கடிந்துரைக்கக் கேட்டிருக்கிறேன், உன்னை எனக்குத் தெரியும் போ என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு நாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தமது குடும்பத்தில் பிறவாப் பிள்ளை எனக் கொண்டிருந்தார்.

கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர்

நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான். இப்போதும் நான் உள்ள வயதில் அவர் இருந்தார். நான் அவருடன் இணைந்த போது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நேரத்தின் நெருக்கடி காரணமாக உங்களுக்கு அண்ணா அவர்கள் எழுதியதை தொட்டுத் தொட்டு காட்டுகிறேன். இதுதான் குவைத் என்று விமானத்தில் சென்று பார்த்தால் எப்படியிருக்குமோ அது போலத்தான் அண்ணா நூற்றாண்டு விழாவிலே என்னுடைய உரையும் இருக்கும். காலத்தைக் கருதி சுருக்கமாக உரையாற்றுகிறேன்.

எதற்கு அவர் பணிந்தார்

இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழைமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரின் தாக்குதலைப் பெறாதது?

ஏ அப்பா! ஒரே ஒருவர் அவர் நம்மை அக்குவேறு ஆணிவேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று, இந்நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை. என்று எக்காளமிட்டுக்கொண்டிருந்த பழைமை அலறலாயிற்று! புதுப்புதுப் பொருள் கொடுத்தும் பூச்சு மெருகு கொடுத்தும் இன்று பழைமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய் விட்டிருக்கிறது என்பதை அறியாதவர் இல்லை.

எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம்; ஒரு காலக்கட்டம்; ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை என்று கூறுகிறார்.

இப்படி எழுத்தாளராக, பேச்சாளராக இருந்த அண்ணா பல நாடகங்களை உருவாக்கினார். நாடகங்களில் ஆரம்பத்தில் அவரே நடித்தார். தன்னுடைய தோழர்களை வைத்துக்கொண்டு நடித்தார்.

சந்திரோதயம் என்று ஒரு நாடகம் நாங்கள் எல்லாம் அந்த நாடகத்தைப் பார்க்கக் கூடிய வாய்ப்பை பெற்றோம். அந்த நாடகத்திலே ஜமீன்தார் வேடமுண்டு. அந்த வேடத்தில் அவரே நடித்து ஏராளமான மக்களை அவர் வசியப்படுத்தினார்.

அண்ணா அவர்களைப் பற்றி கலைவாணர்

அண்ணா அவர்களுடைய நடிப்பைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய பொழுது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு முறை சொன்னார்.

அண்ணா அவர்கள் நடிப்புத்துறைக்கு வந்திருந்தால் நாங்கள் எல்லாம் கையில் ஓடெடுத்துக்கொண்டு போயிருக்க வேண்டும்.

நல்ல வாய்ப்பாக அவர் நிரந்தர நடிகராக வரவில்லை. அண்ணா அவர்கள் எந்தத் துறைக்குப் போனாலும் அவருடைய கொள்கை முக்கியம், பகுத்தறிவு முக்கியம், இலட்சியம் முக்கியம்; லட்சங்கள் அல்ல. இதைத் தெளிவாக எடுத்துச்சொல்ல அண்ணா அவர்கள் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கினார்கள்.

சிதம்பரத்தில் ஒரு கூட்டம்

சிதம்பரத்திலே ஒரு கூட்டம் அய்யா அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார். வேகமாக, கடுமையாக சமுதாயக் கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அய்யா அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்ற பொழுது ஒரு வயதான பெரியவர் எழுந்து கேள்வி கேட்டார். நாயக்கரே! என்று ஆரம்பித்தார். அந்த காலத்தில் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்று தான் சொல்லுவார்கள். பெரியார் என்று சொல்லமாட்டார்கள்.

அவர் கேட்கிறார், நாயக்கரே! நீங்கள் பேசுவதில் பல நியாயங்கள் இருக்கின்றன. ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்பவைகள் பற்றி சொல்வதெல்லாம் சரி. ஆனால், எனக்கு மனம் புண்பட்ட விசயம் என்னவென்றால் சாமியைப் போய் கல்லென்று சொல்லுகிறீர்களே; கடவுளைப் போய் கல் என்று சொல்லுகின்றீர்களே! அது எப்படி? அதை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனே தந்தை பெரியார் அதற்கு ஒன்றும் பெரிய விளக்கம் ஒன்றும் சொல்லவில்லை. உடனே பெரியார் சொன்ன பதில்

அய்யா அவர்கள் உடனே சால்வையை எடுத்துபோட்டுக்கொண்டு, தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அய்யா என்னோடு வாருங்கள்.

நீங்கள் என்னை அனுமதித்தால் சிதம்பரம் கோவிலில் உள்ளது சாமி அல்ல; அது கல் என்று சுட்டிக்காட்டுவேன் என்று சொன்னார். உடனே எல்லோரும் கைதட்டினார்கள்.

உடனே அந்த பெரியவர் சொன்னார், நிறுத்துங்கள்! அது சாதாரண கல் அல்ல; மந்திரத்தை விட்டு, கும்பாபிஷேகம் நடத்தி கடவுளாக்கப்பட்டது. எனவே அது சாதாரண கல் என்று நினைக்காதீர்கள். மந்திரத்தை உள்ளே விட்டவுடனே அது கடவுள் என்று சொன்னார்.

அந்த மந்திரத்தை இங்கே விட வேண்டியதுதானே

இவர் இப்படி சொன்னவுடனே தந்தை பெரியார் கேட்டார், அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. கல்லுக்குள் மந்திரத்தை விட்டால் அதை கடவுளாக்கும் சக்தி உங்களிடத்திலே இருக்கிறது என்றால், இதோ என்னுடைய தாழ்த்தப்பட்ட சகோதரன் தலையிலே அந்த மந்திரத்தை விட்டு கொஞ்சம் உயர்ஜாதிக்காரனாக ஆக்குங்களேன், பார்ப்போம்! நாட்டில் தகராறே இருக்காது என்று சொன்னார்.

அதற்கு அந்த பெரியவராலே பதில் சொல்ல முடியவில்லை. போய்விட்டார். என்ன பதில் சொல்லமுடியும்?

ஆனால், இதையே அண்ணா அவர்கள் நாடகத்திலே எப்படி சித்தரித்தார்கள்? இதைக்கேட்டால் நீங்களெல்லாம் வியப்படைவீர்கள். அண்ணா அவர்கள் எழுதிய சந்திரோதயம் நாடகம் ஜமீன்தார் வேடத்தைப் போட்டிருக்கின்றார் அண்ணா. ஜமீன்தாரின் வேலைக்காரர் பெயர் வீராச்சாமி அந்த நாடகத்திலே ஒரு காட்சி.

வீராச்சாமி சொல்லுவார்

என்னப்பா உன்னை நான்கு நாள்களுக்கு மேல் நான் பார்க்கவில்லையே, என்ன காரணம்? என்று ஜமீன்தார் வேடம் போட்டிருக்கின்ற அண்ணா வீராச்சாமியிடம் கேட்பார்.

வீராசாமி சொல்லுவார். அய்யா உங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லுவார். எல்லாம் அண்ணா அவர்களுடைய தோழர்கள் தான் நடிப்பார்கள். என்ன காரணம்? சும்மா சொல்லு, பரவாயில்லை என்று அண்ணா அவர்கள் சொல்லுவார்கள்.

வேலைக்காரர் வீராசாமி சொல்லுவார், அய்யா சிதம்பரத்திற்கு ஆருத்ரா தரிசதனத்தைப் பார்க்கப் போனேன் என்று சொன்னார். வேண்டுமென்றே அண்ணா அவர்கள் அடுத்த கேள்வியை கேட்பார்.

என்னப்பா விஷேசம்? எனக்குக் கொஞ்சம் சொல்லேன் என்று கேட்பார். உங்களிடம் சொன்னால் எப்படிங்க அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள் ஆனால், ஒரு வேளை மாறினாலும் மாறலாம். நான் சொல்லச் சொல்ல அந்த மாறுதல் உங்களிடமே கூட வரலாம். சுயமரியாதைக்காரர்கள் சுயமரியாதைக்காரர்கள் மாறுவார்கள் என்று சொல்லி சில இடங்களில் ஏமாற்றுகிறார்கள் அல்லவா? அது போல இப்படி அவர் சொன்னார். பரவாயில்லை, நீ சொல், எப்படி இருப்பார்? என்று கேட்டார். அந்த நடராஜப் பெருமான் காலைத் தூக்கி ஆடுகிறான் பாருங்கள், அந்தக் காட்சியை எப்பொழுது பார்த்தாலும் மனம் ஈர்க்கக் கூடிய அளவிலே இருக்கும்.

எங்கே? நீயும் அப்படியே நில்

நடராஜர் பெருமான் காலைத் தூக்கி ஆடுகின்ற காட்சியைத்தான்_ அந்த ஆருத்ரா தரிசனத்தைத் தான் நான் பார்க்கச் சென்றேன். லட்சக் கணக்கான பக்தர்களும் அந்த காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்கள் என்று சொல்லுவார். உடனே ஜமீன்தார் வேடம் போட்டிருக்கின்ற அண்ணா கேட்பார், அவர் எப்படி காலைத் தூக்கி ஆடுகிறார் என்று கொஞ்சம் காட்டு, என்று கேட்பார்.

அப்படியா? என்று கேட்டுவிட்டு வேலைக்காரர் வீராசாமி காலைத்தூக்கி நின்று காட்டுகிறேன். நீங்களே மாறிவிடுவீர்கள் எஜமான் பாருங்கள் என்று சொல்லுவார். கையை மடக்கி ஒரு காலைத் தூக்கி நடராஜர் பெருமான் நிற்கிறமாதிரி நின்று காட்டுவார் வீராசாமி. உடனே எஜமானர் சொன்னார், வீராசாமி நீ காட்டிய காட்சி ரொம்ப அற்புதமாக இருக்கிறது. ஆனால் ஒன்று நான் சொல்லுகிற வரையிலே நீ காலைக் கீழே போடக்கூடாது. ஏனென்றால் இந்தக் காட்சி அவ்வளவு நன்றாக இருக்கிறது.

எனவே நீ காலைக் கீழே போடக்கூடாது. அப்படியே நில் என்று அண்ணா சொன்னார். இவரும் இரண்டு, மூன்று நிமிடம் நின்றார். நான்காவது நிமிடம் ஆன உடனே வீராசாமி சொல்லுவார், அய்யா காலை கீழே போடலாமா? என்று கேட்பார். போடக் கூடாது என்று பதில் சொல்லுவார். காலை இப்பொழுது வைத்திருப்பது போல் அப்படித்தான் வைத்திருக்க வேண்டும். கொஞ்ச நேரம் ஆன உடனே அய்யா! கால்வலிக்குதுங்க. காலை கீழே போடட்டுமா? என்று கேட்பார் வீராசாமி.

உடனே அண்ணா சொல்லுவார், என்னப்பா நடராஜர் எத்தனை ஆண்டுகளாக காலைத் தூக்கி அப்படியே வைத்துக்கொண்டிருக்கின்றார். நீ அவரைப் போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய் அப்படி இருக்கும்பொழுது நீ அய்ந்து நிமிடத்திற்கு மேல் நிற்க முடியவில்லை என்று சொல்லுகிறாயே, அதெல்லாம் முடியாது அப்படியே நில்! என்று சொல்லுவார்.

அது கல், நிற்கும்

நீங்கள் ஒன்று எஜமான்; அது கல்லு அதனாலே அப்படியே நிற்கிறது; நான் மனிதன் எப்படி அப்படியே காலைத் தூக்கி நின்று கொண்டிருக்க முடியும்? என்று கேட்டார். (சிரிப்பு கைதட்டல்).

ஆகவே இரண்டு கருத்துகள் ஒருவர் நேரடியாக சொல்லுகிறார். இன்னொருவர் நாடகத்தின் மூலம் சொல்லும் பொழுது நீங்கள் எப்படி சிரித்தீர்களோ அது போல வைதீகர்களும் சிரித்தார்கள்.

அதே மாதிரி நாடகத்தைப் பார்க்கின்ற மக்கள் அண்ணா அவர்களுடைய கருத்தை வரவேற்று கைதட்டி சிரிப்பார்கள்.

-------------------தொடரும்...."விடுதலை" 30-11-2009

பார்ப்பனர்களின் பிறவிக்குணம்


பிறவிக்குணம்

முல்லை பெரியாறு பிரச்சினையிலே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே அலட்சியப்படுத்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்த கேரள முதல்வரின் துணிச்சல் எனக்கு இல்லை. நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று முதலமைச்சர் கலைஞர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் கேட்கிறாராம்.

அதற்கு வீரமணி அவர்கள் என்ன சொல்கிறாராம்?

அட விடுங்க, இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படிப் பாராட் டறீங்களே, அய்ம்பது சதவிகிதத்துக்குமேலே இட ஒதுக்கீடு இருக்கக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருந்தும் எத்தனையோ வரு ஷமா 69 சதவிகிதம் கொடுத்துட்டு வர்றோமே! அதுவிடவா இது பெரிய துணிச்சல்?

------------------ துக்ளக் கார்ட்டூன் 2.12.2009

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று சொல்லுவார்களே, அது நூற்றுக்கு நூறு இதற்குத்தான் பொருந்தும். பொதுவாக சோவின் விவாத முறை என்பதே இந்தத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கும்.

முல்லை பெரியாறு விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரள அரசு சட்டம் கொண்டு வந்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேநேரத்தில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் சொன்ன சட்ட ரீதியான யோசனையை, கருத்துரையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை, உச்சநீதிமன்றம் குற்றமுடையது என்று இதுவரை சொல்லவில்லையே! 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தாண்டி வட கிழக்கு மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் அளிக்கப்பட்டுக் கொண்டு-தானிருக்கிறதே!

உண்மை இவ்வாறு இருக்க, சோ இப்படிக் குழப்புவது ஏன்? தமிழ்நாட்டுக்கோ, தமிழர்களுக்கோ நன்மை _ உரிமை கிடைக்கும் எதையும் கொச்சைப்படுத்துவதும், குறுக்குச்சால் ஓட்டுவதும்தான் பார்ப்பனர்களின் பூணூல் தர்மமும், ரத்த ஓட்டமும் ஆகும்.

கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார்பற்றி எழுதும்போது, அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கூசாமல் இந்தக் கூட்டத்தால் எழுத முடிகிறதே!

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக்கொள்ளவே மாட்டான் என்ற டாக்டர் டி.எம்.நாயரின் பொன்மொழியை தமிழர்கள் கண்ணாடி சட்டம் போட்டு வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வார்களாக!

----------- மயிலாடன் அவர்கள் 30-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?கேரளம் _ கேர என்ற மலையாள சொல்லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இருமுடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்வாகமும் ஏதாவது எண்ணைய் எடுக்கிற நிறுவனத்திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்காயை விலைக்கு வாங்கிய தமிழன்,அதே தேங்காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்பவும் விலைக்கு வாங்குகிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழனின் தலையில் இப்படித்தான் மிளகாய் அரைக்கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவிலுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் சரியாகச் சொன்னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்குமாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்கிறார்கள்!

கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது, அய்யப்பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடுகள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..!

கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்ததாக கூறப்படும் கேரளத்தில், கேரள மக்கள் அய்யப்பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்றுகிறார்கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள... அதாவது தன்னை சிலுவையில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்களாக இருங்கள்!!

------------------நன்றி: ஓடும் நதி

29.11.09

கார்த்திகை தீபம் பற்றி பெரியார்

கார்த்திகை தீபம்

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம்.

எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப் பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூட நம்பிக்கையும் ஒழிந்தபாடில்லை.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல், அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்படுத்தி வருவதனால், நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம்.

சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டியைப் பற்றி எழுதியிருந்தோம்.


அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகையால் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுங்கிப் புகையும் கரியுமாக ஆகிய வகையிலும் செலவாகியிருக்கும் என்பது மட்டுமல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி, ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக்கதை, மூடநம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடி புகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரம் அல்ல, தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்களின் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்மடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

தீபாவளிக்கு முன் சில நாட்களும் தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டுகளிலும் வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால், அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.

இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்விகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது.

இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பதுதான்.

இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்விகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.

சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன்கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?

இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!

கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!

கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!

இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதை இரண்டு. அவைகளில்

ஒன்று:

ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம்.

அதையறிந்த அவன் மனைவி சுவாகாதேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப்படுவான் என்று எண்ணினாளாம்.

அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம்.

இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைகள்தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப் படுவதாகும்.

இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதையெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை.

இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.

பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபச்சாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று.

மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று.

இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்விகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று.

ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.

இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:


ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம்.

அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம்.

ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம்.

உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம்.

பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம்.

அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறார்? என்று கேட்க, அது, நான் பரமசிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.

உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல்லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.

அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம்.

பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.

பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம்.

இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர்.

இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாசகங்களும், தோத்திரங்களும் இல்லை.

இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறியலாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக் கதையில் அநேக செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகையினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?

இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவு படுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப்பார்களா?

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாததுதானே கடவுள் என்றும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும்போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள்,அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடாவிட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டிருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.

ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர்களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சியெடுத்துக் கொண்டார்களா?

இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங்களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி, என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங்களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

-------------தந்தைபெரியார் - "குடிஅரசு" 22-11-1931

பெரியாரும் - கலைவாணரும்

கலைவாணர்

கலைவாணர் என்.எஸ். கிருட்டிணன் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1908). 49 ஆண்டுகளே வாழ்ந்து மக்கள் மத்தியில் என்றென்றும் குடிகொண்டிருக்கும் இலட்சியக் கலைஞர் அவர்.

இனி என்.எஸ். கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக் காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப்பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால், அந்தச் சரித்திரத்தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண் டப்படாததாக ஆகி விடும் (குடிஅரசு, 11.11.1944) என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார் என்றால், கலைவாணர் தம் பெருமையின் சிகரம் எவ்வளவு உயரமானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

தந்தை பெரியார் ஒருவரைப் பாராட்டுகிறார் என்றால், அதன் பொருள், அந்த மனிதரால் சமுதாயம் பெற்றிருக்கும் வளர்ச்சியை எடை போடுவதாகும்.

சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்த சீலர் என்பதுதான் கலைவாணருக்குரிய தனித்தன்மையாகும்.

எத்தனை எத்தனையோ சொல்லலாம்; ஒவ்வொன்றும் சிந்தனைக் கற்கண்டு, அறிவு மணக்கும் பூச்செண்டு.

திருநீலகண்டர் படம் 1939 இல் வெளியானது. அதில் ஆத்திக _ நாத்திக லாவணிப் பாடல் (கலைவாணருக்குக் கிடைத்த அருமையான நாத்திகக் கவிஞர் உடுமலை நாராயணகவி).

கலைவாணரும், டி.எஸ். துரைராஜும் எதிர் எதிர் பாட்டுப் பாடுவார்கள்:

கல்விக்கரசி தமிழ்ச்செல்வி

என்றொரு பெண்ணைக்

கைதொழுதீரே, அந்த மங்கை

மறையவன் நாவிலவள்

உறைவது நிஜமானால்

மல ஜலம் கழிப்பது

எங்கே எங்கே?

என்று பாடி வெடிச்சிரிப்பைக் கிளப்பினார் கலைவாணர்.

1956 இல் திருச்சியில் தி.மு.க. மாநில மாநாடு கலைவாணர் புத்தர் கதை வில்லுப்பாட்டு நடத்தினார். பெரியாரும், அண்ணாவும் பிரிந்திருந்த காலகட்டம்.

அந்த நேரத்தில், இட்டுக்கட்டி இடையில் விட்டார் இரண்டு வரிகளைப் பாட்டாக.

அய்யாவும், அண்ணாவும்

ஒன்றானால் புத்தர்

ஆசை நிறைவேறும்

என்று பாடினாரே பார்க்கலாம்! மக்கள் கடல் கரவொலி அடங்கிட வெகுநேரமாயிற்று.

கலைவாணர், நடிகவேள் எம்.ஆர். இராதா போன்ற கலைஞர்கள் இன்று இல்லையே, என் செய்ய?

--------------------- மயிலாடன் அவர்கள் 29-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

28.11.09

சாயிபாபா பாணியில் திருநீறு வருவித்துக் காட்டுதல்தன்னைத்தானே அவதாரம் என விளம்பரப் படுத்திக் கொள்ளும் சாயிபாபா செய்வது போலவே சாதாரண மந்திரவாதியும் திருநீறு வருவித்துக் காட்டுகிறார்.

அவரது உள்ளங்கை கீழ்நோக்கி இருக்க, கையை இரண்டு மூன்று முறை வட்டவடிவில் அசைக்கிறார். பின் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவரது விரல் நுனிகளில் இருந்து திருநீறு கொட்டுகிறது. இந்த திருநீற்றின் தரமும் மணமும் கூட சாயிபாபா வழங்கும் திருநீற்றின் தரத்திலேயே உள்ளது. ஏனெனில் இந்த சாமியார் திருநீறு வாங்கும் அதே கடையிலிருந்துதான் இந்த மந்திரவாதியும் திருநீற்றை விலைக்கு வாங்குகிறார்.

தேவையான பொருள்கள்: வாசனை விபூதி, அரிசிச்சோறு வடித்ததில் இருந்து பெறப்பட்ட கஞ்சி, விபூதியை வில்லைகளாக தயாரித்துக் கொள்ள ஒரு தட்டு.

செய்முறை: வாசனைத் திருநீற்றை அரிசிக் கஞ்சி நீரில் கலந்து, சிறு வில்லைகளாக செய்து காயவைக்கவும். இந்த வில்லையைக் கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் மறைத்துக் கொள்ளவும். விரைப்பாக வைக்காமல் கையைத் தளர்த்தி வைத்துக் கொள்ள பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

விபூதி வில்லையைப் பார்வைக்குப் படாமல் விரலிடுக்கில் ஒளித்து வைத்திருக்கும் நிலையிலேயே வணக்கம் சொல்லவும், கை குலுக்கவும், காப்பி குடிக்கவும், சாப்பிடவும், எழுதவும் கூட விரல்களையும் கைகளையும் பயன்படுத்திக் கொள்ளப் பழகி இருக்க வேண்டும். பின் கைகளைச் சுழற்றுங்கள். உள்ளங்கை கீழே போகட்டும். விரைந்த அசைவில் விபூதிக் குளிகையை விரல் நுனிகளுக்குக் கொண்டு வாருங்கள். பொடித்தூளாக நுணுக்குங்கள். பக்தரின் கைகளில் உதிருங்கள்.

மந்திரவாதியின் இதே கைச்சால முறையைச் சாமியார் பயன்படுத்துவதில்லை என்றால் பின் ஏன் அவர் சோதனைக்கு உட்பட மறுக்கிறார்? தனது முறை கைச்சால வித்தை அல்ல என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் மெய்ப்-பிக்க வேண்டாமா? எதைக் குறித்து அவர் அஞ்சுகிறார்? தான் அம்பலப்பட்டு விடுவோம் என்றா? மோசடிக்கு இடம் தராத நிலைகளின் கீழ், அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி, அவரது சக்திகள் அறிவியலுக்கும் மனித புரிதல் திறனுக்கும் அப்பால் பட்டவை என மெய்ப்பிக்க மட்டுமே கைத்திற முறையைத் தாம் கையாளவில்லை என்பதை அவதாரங்கள் முதலில் மெய்ப்பித்தாக வேண்டும்.

இந்த வித்தையை அம்பலப்படுத்த, மனிதர் தம் கைகளை வட்டமாக ஆட்டி, அதே போது தூள் செய்வதற்காக வில்லைகளை விரல்களுக்குக் கொண்டு வரும் நேரம் பார்த்து கையைத் தட்டிவிட்டால் போதும், வில்லை கீழே விழுந்து, அவர் அம்பலப் படுவார்.

கைச்சால வித்தை

கைச்சாலம் என்றால், தம் செய்முறையைப் பிறர் அறிய முடியாத அளவுக்கு மிக வேகமாக வித்தைகளைச் செய்யும் திறன் இந்தக் காரணத்துக்காகத்தான் கைகளையும் உடலையும் அசைக்கிறார்கள். பொருள்களைப் படைத்துக் காட்டுதல், பொருள்களைத் தோற்றுவித்தல், மறைய வைத்தல், ஒன்றை இன்னொன்றாக உருமாற்றுதல் முதலிய சால வித்தைச் செயல் பாட்டை மறைக்க இந்த உடலியக்கம் உதவு கிறது.

---------------நன்றி:- பி.பிரேமானந்து "அறிவியலா, அருஞ்செயலா'

27.11.09

லிபரான் அறிக்கையும், பா.ஜ.க.-அ.தி.மு.கவும்1992 டிசம்பர் 6 ஆம் தேதி, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளைத் தேர்வு செய்து பா.ஜ.க., சங் பரிவார் வன்முறைக் கும்பல், அயோத்தியில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை தரைமட்டமாக இடித்துத் தள்ளி உலக மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு மாபெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்து, பெரிய பெரிய பதவிகளில் கொஞ்சம்கூட கூச்சமின்றி, வெட்கமின்றி அங்கம் வகித்தனர் என்பது கடைந்தெடுத்த வெட்கக்கேடாகும்.

இந்திய அரசமைப்பு ஆட்சி முறையில் ஆணையங்களின் செயல்முறைகள், வழக்குகளின் ஆயுட்காலம் என்பதெல்லாம் குறிப்பிட்ட காலவரையறை என்கிற எல்லைகளைக் கடந்து செல்வது என்பது சர்வ சாதாரணம் ஆகும்.

17 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்துள்ள நீதிபதி லிபரான் தலைமையிலான ஆணைய அறிக்கையில், உலகமே எதிர்பார்க்கும் பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான குற்றவாளிகளின் பட்டியலில், முன்னாள் பிரதமர், முன்னாள் துணைப் பிரதமர், முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட 68 பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மதச் சார்பின்மை மீதும், நீதியின்மீதும், சமூகத்தின் நல்லிணக்கத்தின்மீதும் அக்கறை உள்ளவர்களின் எண்ணம் எதுவாக இருக்க முடியும்?

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது முறையாக விரைவாக வழக்கு நடத்தி, உரிய தீர்ப்பினைப் பெறவேண்டும் என்றுதானே கருதவேண்டும்?

ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? பிரச்சினையின் அடிநாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, லிபரான் ஆணையத்தின் அறிக்கை எப்படி ஏடுகளில் கசிந்தது என்பதைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளது. குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒரு கட்சி இத்தகைய ஆர்ப்பாட்டத்தை நடத்துவதன்மூலம் அவர்களின் உண்மை உருவங்களும் ஆர்ப்பாட்டமாகவே தெரியக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இதில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு என்ன வந்தது? அவரும் பா.ஜ.க.வின் குரலை எதிரொலிக்கும் வகையில் லிபரான் ஆணையத்தின் அறிக்கை வெளியில் கசிந்ததற்காக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலகவேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இதன் தன்மை என்ன?

மசூதி இடிக்கப்பட்டதற்குப்பின் சம்பந்தப்பட்ட குற்றப் பத்திரிகையில் உள்ளவர்கள், பல தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறார்களாம்; பதவிகளிலும் இருக்கிறார்களாம் இருக்கட்டும்; பெரிய பதவிகளில் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் எந்த குற்றங்களைச் செய்திருந்தாலும் கண்டு கொள்ளக்கூடாது என்பதுதான் செல்வி ஜெயலலிதாவின் கருத்தா?

பாபர் மசூதி இடிப்பு என்பதைச் சர்வசாதாரணமாக அவர் கருதுகிறாரா?

பாபர் மசூதி இடிப்புக்கு, கரசேவைக்கு அ.இ.-அ.தி.மு.க. ஆள்களை அனுப்பியது என்ற ஒரு குற்றச்சாற்று ஏற்கெனவே அவர்மீது பரவலாக இருக்கிறது; ராமன் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்ட முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியவர் இந்த ஜெயலலிதா அம்மையார்தான்.

அதேபாணியில்தான் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையும் தொனிக்கிறது.

பிரச்சினையைத் திசை திருப்பத்தான் ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாம். பா.ஜ.க.வின் மறுபக்கமாக இந்த அம்மையார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இனம் இனத்தோடு சேர்கிறது.

இதன்மூலம் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்ய ஒரு சதித் திட்டம் பின்னப்படுகிறது என்று கருதிட இடம் இருக்கிறது.

இந்த நிலையில், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரப்படவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும்.

வழக்கம்போல திராவிடர் கழகம் தன் கடமையைச் செய்ய முன்வந்துவிட்டது. டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சிகளைக் கடந்து ஆதரவு தரக் கோருகிறோம்.

-------------------"விடுதலை" 27-11-2009


மதம் பற்றி பெரியார்


மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடையைப் பற்றிய கொள்கைகளைக் கொண்டது என்பவர்களிடத்தில் நமக்குச் சண்டையில்லை.

அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பைக் கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் 'சைவம்' என்பதனால் நாமும் சைவன் என்று சொல்லிக் கொள்ளவும் ஆசைப்படுகின்றோம். அதுபோலவே "ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள் தான் விஷ்ணு, அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம்" என்பதான விஷ்ணுவிடத்திலும், வைணவனிடத்திலும் நமக்குத் தகராறில்லை என்று சொல்லுவதோடு நாமும் நம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் "சைவத் தன்மை"யும் "வைணவ தன்மை"யும் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
 
அப்படிக்கில்லாமல் இன்ன மாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகிறவன் தான் சைவனென்றும் இப்படி வணங்ககிறவன் இன்னமாதிரியான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள இன்ன காரியம் செய்த கடவுள்களைப் பற்றி பாடின, எழுதின ஆசாமிகளையும், புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும் தான் சைவம் என்றும், மற்றபடி வேறு என்ன உருவமோ, பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர்களையும் வேறு குறி இடுகின்றவர்களையும் சைவரல்லாதவர் என்று சொல்லுவதுமான கொள்கைக்காரரிடமே நமக்குப் பெரிதும் தகராறு இருக்கிறது என்று சொல்வதுடன் அக்கொள்கைகளையும் அச்சமயங்களையும் அக்கடவுள்களையும் பாமர மக்களிடம் பரவ விடக்கூடாது என்றே சொல்லுகின்றோம்.
 
அன்றியும் பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது "நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்தவோ ஒரு குணமோ இருப்பதாகச் சொல்லவில்லை" என்றும், மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமூத்திரம் தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம் தான் கடவுள், அதன் மணம் தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம் தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம் தான் கடவுள்" என்பதாக நமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் "சிவன்தான் முழு முதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும், பிரம்மாவும், அவரது பரிவார
தேவதைகள், சைவ சம்யம் தான் உண்மைச் சமயம், அதுதான் முக்தி அளிக்க வல்லது" என்பதும், அல்லது "விஷ்ணுவின் பரிவார தேவதைகள்" என்பதும், "வைஷ்ணவ சமயம் தான் உண்மைச் சமயம், அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு" என்பதும், அச்சிவனையோ விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களையும் அச்சமயங்களையும் பாடினவர்கள் தம் கடவுள் நெறிகளையும் நிலைமைகளையும் உணர்த்தி பெரியோர்கள் சமயச்சாரியார்கள்" என்பதுமாக மக்கள் முன் உளறிக்கொட்டி அவர்களது மனதைக் குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளியாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றுதான் சொல்லுகின்றோம்.
 
உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விவரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்று கூடச் சொல்லுவோம்.
 
எனவே மக்களின் பாரம்பரியமானதும் பரவியிருக்கும் படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச்சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையே தான் பெரிதும் (இவ்வறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்றது. இவைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாபச்செயல் என்றும் யார் சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் பயப்படக்கூடாது.
 
 
------------------"பெரியார் மொழி" என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. "விடுதலை" 05.03.1950

வி.பி. சிங் நினைவு நாள் சிந்தனைகள்

வி.பி. சிங்

விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக் காட்டிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர்.

அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால், சமூகத் தின் மய்ய நீரோட்டத்திலி ருந்து ஒதுக்கி வைத்திருப் பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர்.

இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்கீடு என்ற உரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர்.

பிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால், பா.ஜ.க.வுடன் சமரசமாகப் போயிருக்கலாம். மண்டல் குழுப் பரிந்துரையின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலும் இருந்திருக்கலாம். அதற்குமுன் பத்தாண்டுகால ஆட்சியாளர்கள் அப்படித்தானே நடந்துகொண்டார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால், பாரதீய ஜனதா தன் ஆதரவை விலக்கி தன் முகவரியைக்காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க. உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்துகொண்டு வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தது. (விதிவிலக்கு, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஏ.கே. அப்துல்சமது என்னும் பெருமகனார்) அப்போதுகூட அந்த உத்தரப்பிரதேச சிங்கம் எப்படி கர்ச்சித்தது தெரியுமா? சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்! என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்!

மும்பையில் வன்முறையைக் கண்டித்து ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல், உண்ணாவிரதம் இருந்தார். இரு சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், அவருக்காக சிறுநீரகங்களைத் தானமாகக் கொடுக்க திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் நீண்ட வரிசையில் நின்றனரே!

திராவிடர் கழகத் தோழர்களிடத்திலும், தலைவரிடத்திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன் என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்தாலும் நம் கண்களில் நீர் கசிகிறது.

வி.பி. சிங் மறைவைக்கூட இருட்டடித்தன உயர்ஜாதி ஊடகங்கள்! அந்த அளவுக்கு அவர் சமூகநீதியாளர் என்பதுதான் அதன் ஆழமான பொருளாகும்.

வி.பி. சிங் மறைந்து இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனாலும், அவர் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடியை இறக்கிட எந்தக் கொம்பனாலும் முடியாது.முடியவே முடியாது! வாழ்க வி.பி. சிங்!!

---------------------- மயிலாடன் அவர்கள் 27-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

26.11.09

மதவெறிக் கும்பலில் இந்து என்ன? இஸ்லாமியர் என்ன?

ஜஸ்டிஸ் லிபரான் ஆணையத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் அறிக்கை


"சரியாக ஓராண்டுக்குமுன் மும்பை தாஜ் ஓட்டலில் மதவெறிக் கும்பல் பயங்கரவாதிகள் திட்டமிட்டுப் புகுந்து நிகழ்த்திய படுகொலைகளைவிட இந்த பாபர் மசூதி இடிப்புப் படுபயங்கரத்தை நாடு முழுவதும் ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அந்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது என்று இந்தியா குற்றம் சாற்றிவருகிறது.

இந்த அறிக்கையை கிடப்பில் போட்டு, உரியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையானால், பாகிஸ்தான் அரசு செய்யும் அதே தவறினை நமது மத்திய அரசு செய்யலாமா? மதவெறிக் கும்பலில் இந்து என்ன? இஸ்லாமியர் என்ன? இதில் ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனுதர்ம அணுகுமுறை இருக்கலாமா? "

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1992 டிசம்பர் 6 ஆம் தேதி அன்று பாபர் மசூதியை இடித்து, அந்த இடம் இராமன் பிறந்த இடம், எனவே, அங்கே இராமன் கோயில் கட்டவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களான பி.ஜே.பி., விசுவ இந்துபரிஷத், பஜ்ரங்தள் போன்ற பல மதவெறி அமைப்புகள் நாடு முழுவதும் மதக் கலவரங்களை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்தன.

நாட்டில் ரத்த ஆறு ஓடி, மிகப்பெரிய அவலத்தை மத அடிப்படையில் ஏற்படுத்தி, இந்திய வரலாற்றில் ரத்தக் கறை படிந்தது. இடிக்கப்பட்டது வெறும் மசூதி அல்ல; ஜனநாயகம், மதச்சார்பின்மை என்ற அடித்தளங்களாகும் என்பதைக் கண்டு நல்லவர்கள் மனந்துடித்தனர்!

4000 உயிர்கள் பலி!

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் சுமார் 3000, 4000 உயிர்கள் தேவையின்றி பலியாக்கப்பட்டது. இந்து மதவெறித்தன, பாசிசக் கொடி ஏற்றப்பட்டது.

ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது மற்றவை அமளிக்காடுகளாக இருந்தபோது! காரணம், ஆய்வாளர்கள், ஏடு எழுதுவோர் சரியாகக் கணித்துக் கூறினர். இதற்கு மூலகாரணம் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தமிழ் மக்களைப் பக்குவப்படுத்தி வைத்த-மையே என்று.

பாபர் மசூதி சம்பந்தமாக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக்சிங்கால், திகம்பரா, உமாபாரதி, கல்யாண்சிங் போன்றவர்கள்மீதான கிரிமினல் வழக்குகள் அலகாபாத் நீதிமன்றங்களில் ஊறுகாய் ஜாடியில் இன்னமும் ஊறிக் கொண்டுள்ளன! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்!

மசூதி இடிக்கப்பட்ட பின்பு, அதுபற்றிய உண்மைகளைக் கண்டறிந்து குற்றவாளிகள் யார் என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திட ஜஸ்டிஸ் லிபரான் அவர்கள் தலைமை நீதிபதியாக இருந்தபோதே நியமிக்கப்பட்டார்; அந்த விசாரணை தொடர் கதையாகி அவர் ஓய்வு பெற்ற நிலையிலும் தொடர்ந்து 48 முறைகளுக்குமேல் பதவி நீடிப்புப் பெற்று, 8 கோடி ரூபாய் செலவில் (மக்கள் வரிப்பணம்தான்) அது கடைசியாக ஒரு வழியாக அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விட்டது.

குற்றவாளிகளின் பட்டியல்....

அதில் வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங் மற்றும் சிலர் உள்பட 68 பேர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று சில நம்பகத்தன்மை உடைய ஆங்கில நாளேடுகளில் செய்திகள் (ஸ்கூப்) வெளிவந்துள்ளன; இதைக் கண்டு இந்த மதவெறிக் கூட்டம் படமெடுத்தாடியது. நாடாளுமன்றத்தினை நடைபெறவிடாமல் கூச்சல், குழப்பம், அமளி துமளிகளை நடத்தின!

குற்றமுள்ள நெஞ்சுகள்

அவசரமாக மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் லிபரான் ஆணையத்தின் அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்; அதனையே தடுத்து நிறுத்திட முயன்றது இந்தக் கூட்டம். அடுத்து அதுபற்றி டிசம்பர் 1 ஆம் தேதி விவாதிக்க நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவெடுத்துள்ளனர்!

பா.ஜ.க.வினர் ஏன் இவ்வளவு பதற்றமுற்று ஓலமிடவேண்டும்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பதால்தானே!

இந்த அறிக்கை விளையாட்டு வேடிக்கை அறிக்கை அல்ல; மதவாத பயங்கரவாதத்தினை அடையாளம் காட்டும் காலந்தாழ்ந்த காலக்கண்ணாடி; இதன்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உடனடியாக முன்வரவேண்டும்; சிறீ கிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கைக்கு ஏற்பட்ட கதி அலமாரியில் தூசியுடன் வைக்கப்பட்ட அவலம் இதற்கும் ஏற்பட்டு-விடக் கூடாது!

மதவெறிக் கும்பலில் இந்து என்ன? முஸ்லிம் என்ன?

சரியாக ஓராண்டுக்குமுன் மும்பை தாஜ் ஓட்டலில் மதவெறிக் கும்பல் பயங்கரவாதிகள் திட்டமிட்டுப் புகுந்து நிகழ்த்திய படுகொலைகளைவிட இந்த பாபர் மசூதி இடிப்புப் படுபயங்கரத்தை நாடு முழுவதும் ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அந்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது என்று இந்தியா குற்றம் சாற்றிவருகிறது.

இந்த அறிக்கையை கிடப்பில் போட்டு, உரியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையானால், பாகிஸ்தான் அரசு செய்யும் அதே தவறினை நமது மத்திய அரசு செய்யலாமா? மதவெறிக் கும்பலில் இந்து என்ன? இஸ்லாமியர் என்ன? இதில் ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனுதர்ம அணுகுமுறை இருக்கலாமா?

எனவே, நாடு முழுவதும் உள்ள முற்போக்கு, ஜனநாயக மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள அனைத்து சக்திகளும், கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் நடவடிக்கை உடனடியாக எடுக்க வலியுறுத்தவேண்டும். தனி நீதிமன்றம் அமைத்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்கும் வண்ணம் செய்து மக்களுக்கு நீதி வழங்கவேண்டும்!

டிசம்பர் 3 இல் ஆர்ப்பாட்டம்!

திராவிடர் கழகம் இதனை வலியுறுத்தி டிசம்பர் 3 ஆம் தேதி அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திடும்.

இதில் கழக முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்வர்; குறிப்பாக இளைஞரணி, மாணவரணியினர், மகளிரணி, விவசாய அணியினர் பெருவாரியாக கலந்துகொள்வர்.

ஜஸ்டிஸ் லிபரான் ஆணையத்தின் அறிக்கையை வெளியிட நமது திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு தீர்மானம் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளது! நடவடிக்கை எடுக்க நாம்தான் தொடர் குரல் கொடுக்க வேண்டும். தண்டனைக்குத் தப்பினால், நாட்டின் ஜனநாயக, மதச்சார்பின்மை என்ற அடித்தளம் நொறுங்கி விழுகிறது என்பது பொருளாகி விடக்கூடும்! எனவே, விரைந்த நடவடிக்கை தேவை! தேவை!!

தலைவர்,
திராவிடர் கழகம்.

--------------------"விடுதலை" 26-11-2009

பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றம் பாராட்டு!

எனக்கென்று ஒரு வசந்தகாலம்!
குவைத்தில் தமிழர் தலைவர் அற்புத உரை!

குவைத்தில் 16.10.2009 அன்று நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றுகிறார்.

எனக்கென்று ஒரு வசந்தகாலம் ஒன்று இருந்தது. அது எந்தக் காலம் என்பதை அண்ணா அவர்கள் விளக்கிய செய்தியை குவைத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

யுனெஸ்கோ மன்றம் பாராட்டு!

யுனெஸ்கோ மன்றம் அய்க்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார மன்றம். அந்த யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியார் அவர்களுக்கு 1971 காலகட்டத்திலே மிகப் பெரிய விருது ஒன்றை அளித்தது.

1971ஆம் ஆண்டு வாக்கிலே அந்த விருது வழங்கப்பட்டது. அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள்தான் அந்த விருதினை அளித்தார்கள்.

அன்றைக்கு எங்கள் நாட்டின் மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் திரிகுணசென் அந்த விருதினை வழங்கினார்.

அந்த விருதுக்குரிய காரணங்களை அற்புதமான வரிகளில் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் பெரியார். பெரியார் அவர்கள் காலத்தைக் கடந்த ஒரு முன்னோடி. அது மட்டுமல்ல, மூடநம்பிக்கையின் முடை நாற்றம் வீசாமல் தடுக்கக்கூடிய முழு எதிரி.

மனித நேயத்தின் மறுஉருவம் என்று தெளிவாகச் சொன்னார்கள்.

அண்ணா தலைசிறந்த பேச்சாளர்

தந்தை பெரியார் அவர்கள் செய்த சாதனை இருக்கிறதே அது ஒப்பற்ற சாதனை. வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை.

அய்யா அவர்களிடம் பயின்ற அண்ணா ஒரு தலைசிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். அண்ணா அவர்களைப் பற்றி ஒரு சில உதாரணங்களை ஆங்காங்கே தொட்டுத் தொட்டு காட்டுகிறேன். அண்ணா அவர்களுடைய பேச்சு என்றால் பலாச்சுளையை தேனில் தோய்த்து சாப்பிடுவதைப் போன்று இனிக்கும்.

எதிரிகள் கூட வியப்பர்

எதிரிகள் என்று வருபவர்கள் கூட அவர் வயப்படுவர். அண்ணா அவர்களுடைய சிந்தனை, சொற்கள் எங்கிருந்து விழுகின்றதென்பதே தெரியாது. குற்றால அருவியின் நீர்வீழ்ச்சி போல, நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல அண்ணா அவர்களுடைய கருத்துகள் அவ்வளவு வளம் பெற்ற கருத்துகளாகும்.

அண்ணா அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம். அண்ணா அவர்களுடைய பேச்சுகளை அருகில் இருந்து கேட்டவர்கள் நாங்கள்.

கேள்விக்கு பதில் சொல்கின்ற ஆற்றல்

கேள்வி கேட்டு பதில் சொல்வது என்கிற முறை தந்தை பெரியாரிடம், அண்ணா அவர்களிடம், கலைஞர் அவர்களிடம், திராவிட இயக்கத்தினரிடம் உண்டு. எந்தக் கேள்விகளுக்கும் சரளமாகப் பதில் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். பெரியார் குருகுலத்திலே அப்படிப்பட்ட ஒரு பயிற்சி தெளிவாக உண்டு. காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு அவசரமாக ரயிலுக்குப் போக வேண்டும் என்று அண்ணா அவர்கள் மேடையை விட்டு இறங்குகின்றார்.

அண்ணா அவர்களிடத்திலே ஒரு கேள்வி

அவர் அவசரமாக இறங்குவதைப் பார்த்த அப்பொழுது இருந்த எதிர் கட்சியினர் உடனடியாக எழுதி வேண்டுமென்றே ஒரு கேள்வித்தாளை அண்ணா அவர்களிடத்திலே கொடுக்கின்றார்கள். இது நீண்ட காலத்திற்கு முன்னாலே நடந்த செய்தி.

பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து அப்பொழுது பிரியவில்லை. பாகிஸ்தான் பிரிவினையை அப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜின்னா ஆரியரா? திராவிடரா? என்று கேள்வி. அண்ணா அவர்கள் அந்தக் கேள்விச் சீட்டைப் பார்த்தார். படித்தவுடனே மேடையை விட்டுக் கீழே இறங்கிய அண்ணா, மீண்டும் மேடை ஏறினார்.

ஜின்னா ஆரியரா? திராவிடரா?

ஜின்னா ஆரியரா? திராவிடரா? என்று ஒரு தோழர் கேள்வி கேட்டிருக்கின்றார். திரு. ஜின்னா திராவிடர்; ஸ்ரீமான் ஜின்னா ஆரியர்; ஜனாப் ஜின்னா அவர்தான் இஸ்லாமியர் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு மேடையைவிட்டு கீழே இறங்கிப் போய்விட்டார். (கைதட்டல்)

அண்ணா அவர்கள் எதற்கும் மிகச் சிறப்பாக பதில் சொல்லக் கூடியவர். ஆற்றல் வாய்ந்த பேச்சாளர். அதேபோல அண்ணா அவர்களுடைய எழுத்துகள் சாதாரணமானவை அல்ல. அண்ணா அவர்களின் எத்தனையோ சிறப்பான எழுத்துகளை எடுத்துக் காட்டலாம்.

அண்ணா பகுத்தறிவுக் களஞ்சியம்

அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவுக் களஞ்சியம் என்ற நூலை நாங்கள் வெளியிட்டி ருக்கின்றோம். இந்த நூலிலே அற்புதமான செய்தி இதைத் திராவிடநாடு ஏட்டிலே அண்ணா அவர்கள் எழுதினார். இது ஒரு சுவையானது.

அண்ணா அவர்களுடைய தலைப்பே அற்புதமானது. அண்ணா அவர்களைப் போல தலைப்பு எழுதுகின்ற ஏட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் வேறு யாரும் கிடையாது.

அண்ணா விடுதலையின் ஆசிரியர்

கிளிநிறம் பெற்ற கழுகு. கிளி போன்று பச்சை நிறம் பெற்றிருந்தால் அது சரியாகுமா? அதற்கான உவமையை அவர்கள் சொன்னார்கள். அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தபொழுதுகூட தன்னுடைய முதலமைச்சர் பதவியை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை.

அண்ணா அவர்கள் விடுதலையின் பழைய ஆசிரியர் என்ற முறையிலே பெரியார் மலருக்கு, அய்யா பிறந்த செப்டம்பர் 17 க்காக ஒரு கட்டுரையை விடுதலை ஆசிரியர் என்ற முறையிலே கேட்டிருந்தேன்.

அண்ணா முதல்வராகி அப்பொழுதுதான் சில மாதங்கள் ஆகின்றன. முதல்வர் பதவியை ஏற்பதற்கே அண்ணா அச்சப்பட்டார். எல்லோரும் பதவி கிடைக்காதா என்று பார்க்கிறார்கள்.

முதல்வர் பதவியை அச்சத்தோடு பார்த்தார்

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலே யாராவது ஒரு கட்சியைத் தொடங்கினாலே நான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். (கைத்தட்டல்) எனவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே அண்ணா அவர்களை முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஆனால், அச்சத்தோடு அண்ணா அவர்கள் பொறுப்பேற்கிறார்கள்.

இவ்வளவு மக்கள் நம்மீது இவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்களே இவர்களுடைய நம்பிக்கைக்கு மாறாக நான் நடக்க முடியுமா? நடக்கக் கூடாது.


அண்ணாவைத் தொந்தரவு செய்தேன்

எனவே, அந்த நம்பிக்கையை நியாயப்படுத்த வேண்டும் என்று அண்ணா அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்திலேதான் அண்ணா அவர்களிடம் கட்டுரை வேண்டினேன். அவர்களிடம் மலருக்கு கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று அண்ணா அவர்களை நான் தொந்தரவு செய்தேன். அண்ணா அவர்களுடைய நிகழ்ச்சிக்கு இரண்டு, மூன்று முறை சென்றிருப்பேன் என்னுடைய முகத்தைப் பார்க்கின்ற அளவுக்கு முன்னாலே உட்கார்ந்திருப்பேன்.

நிகழ்ச்சி முடிந்து அண்ணா அவர்களை சந்திக்கும்பொழுது சொல்லுவார். என்னப்பா, மலருக்கு கட்டுரை கேட்கத்தானே வந்திருக்கிறாய்? கொஞ்சம் பொறு; எழுதிக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லுவார்.

சரித்திரம் படைத்த எழுத்துகள்!

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எழுதினார். அவருடைய எழுத்துகள் எப்படிப்பட்ட உயிருள்ள எழுத்துகள் என்பதை சரித்திரம் படைக்கக்கூடிய எழுத்துகள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா அவர்கள் விடுதலை மலருக்காக அவரே தலைப்பிட்டு எழுதிக்கொடுத்த கட்டுரைதான் அந்த வசந்தம் என்பது. கட்டுரையின் துவக்கமே மிகச் சிறப்பானதாக இருக்கும். எழுத்தாளர் அண்ணா அவர்களை இப்பொழுது பாருங்கள்.

எனக்கென்று ஒரு வசந்தகாலம்

எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆண்டு பலவற்றுக்குப் பிறகு அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றைய கவலைமிக்க நாள்களிலே எழமுடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி அவருடன் காடுமேடு பலசுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக்குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.

அப்பொழுது கலவரம் எழாமல் ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும்; பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும்.

தலைபோகும் - உயிர்போகும்...

புறப்படு முன்னர் தலைபோகும் _ தாடிபோகும் _ தடிபோகும் _ உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண்டிய நிலை.

அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா? என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு பொருளற்ற ஒரு பதில் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார் _ வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால்

பெரியார் மீது கற்கள்...

ஈரோட்டுக்குப் பக்கத்திலே இருங்கூர் என்ற ஊர் பெரியாரும், அண்ணாவும் செல்லுகிறார்கள். அந்த ஊரிலே பெரியார் பேசக் கூடாது என்பதற்காக பெரியார் மீது கற்கள் விழுந்து கெண்டிருக்கின்றன ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சாம்பலைக் கொண்டு வந்து இருவரின் எதிரிலே நின்று கொண்டு ஏராளம் வீசிக்கொண்டேயிருக்கின்றார்கள்.

------------------தொடரும் .."விடுதலை" 26-11-2009

இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்காகக் கொளுத்தப்பட்டது?


நவம்பர் 26


இந்த நாள்பற்றி இரு குறிப்புகள் உண்டு.

ஒன்று, இந்திய அரசமைப்புச் சட்டம் செய்து முடிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் (1949).

இரண்டு, இதே நாளில் தந்தை பெரியார் அவர்களின் ஆணைப்படி திராவிடர் கழகத் தோழர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்திய நாள் (1957).

எதற்காகக் கொளுத்தப்பட்டது? இந்திய அரசமைப்புச் சட்டம் பச்சையாக ஜாதியைப் பாதுகாக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 13(2), 25(1), 29(1) (2), 368. இந்தப் பகுதிகள் பச்சையாக ஜாதியைப் பாதுகாக்கின்ற பகுதிகள். (அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதிபற்றி வருகிறது).

இவை அரசமைப்புச் சட்டத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு (3.11.1957) தனி மாநாட்டில் ஓங்கித் தீர்மானமாகக் குரல் கொடுத்தார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்.

பிரதமர் நேருவோ சட்டத்தைத் திருத்தவில்லை; மாறாக சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்ட வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்தார்கள்.

என்ன ஆச்சரியம்!

சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே சரத்து இல்லை; மண்டையைப் பிய்த்துக் கொண்டார்-கள்.

அவசர அவசரமாக சென்னை மாநில அரசின் மூலம் ஒரு சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். தேசிய கவுரவம் அவமதிப்புத் தடுப்புச் சட்டம் (Prevention of Insult to National Honour Act-1957) என்று அதற்குப் பெயர். இதன்படி மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம்.

தந்தை பெரியாரா, கருஞ்சட்டைத் தொண்டர்களா அஞ்சுவர்? எந்த நியாயமான உரிமைகளைப் பெறுவதாக இருந்தாலும், அதற்குரிய கஷ்ட நஷ்டம் என்னும் விலை கொடுக்கவேண்டும் என்பதுதானே தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடு!

1949 இல் சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில், ஆம், இந்த நவம்பர் 26 நாளில்தான் (1957) பத்தாயிரம் திராவிடர் கழகத் தொண்டர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தினர்! கொளுத்தினர்!! சாம்பலை அமைச்சர்களுக்கு அனுப்பினர்! அனுப்பினர்!!

தந்தை பெரியார் முதல் நாளே கைது செய்யப்பட்டார். மூன்று குழந்தைகள்கூட ஈராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.

சென்னை ராஜ்ஜியத்தில் பழைய பரம்பரையைச் சேர்ந்த 2000-த்துக்கும் மேற்பட்ட திராவிடர்கள் இந்தியக் குடியரசின் அர சியல் சட்டத்தைக் கொளுத் தியதற்காகக் கைது என்று அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் எழுதியது.

சிறையில் சிலர் மாண்டனர்; சிறையிலேயே நோய்க்குப் பலியாகி, வெளியில் வந்த சில நாள்களிலேயே மரணத்தைத் தழுவியர் பலர்.

உலக வரலாற்றில் கருஞ்சட்டைத் தோழர்களின் இந்தப் போராட்டத்துக்கு நிகரானது வேறு ஒன்றும் இருக்கவே முடியாது!

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? இந்தக் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

---------------- மயிலாடன் அவர்கள் 26-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

நம்மில் ஒருத்தியை பத்தினியாக்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் புலவர்கள்?திராவிடர்கள் இந்த நாட்டின் பழங்குடி மக்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். அவர்களுக்கு இன்று என்ன பெயர் இருக்கிறது என்றால் சூத்திரர்கள், பஞசமர்கள் என்பதுதான். இந்த நாட்டில் யார் யார் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்களோ அவர்களெல்லாம் தான் திராவிடர்கள். அந்த எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தால் 100 க்கு 97 பேர்கள் இருக்கிறார்கள். உயர் ஜாதிக்காரர்கள் பார்ப்பனர்கள் என்று கூறப்படுபவர்கள் 100 க்கு 3 பேர்தான் இருக்கிறார்கள். இவ்வளவு பெரும்பான்மையோராக இருக்கும் நாம் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரராகிய நாம் இந்த நாட்டை ஆண்டவர்களின் பரம்பரையிலே வந்த நாம் சூத்திரர்களாய், பஞ்சமர்களாய் ஆகியிருக்கிறோமே, இந்த இழிநிலையில் ஏன் இருக்க வேண்டும், மனிதர்கள் என்றுதான் இருக்க வேண்டும் என்று நாங்கள் பணி செய்து வருகிறோம்.

நம்முடைய நாட்டில் நாம் இழிந்தவர்களாய் கடைஜாதி மக்களாய் மதத்தால் ஆக்கப்பட்டிருப்பதால் தான் நமக்குப் படிப்பு வசதி இல்லாமல் போய்விட்டது. பார்ப்பான் எந்த ஊரில் இருந்தாலும் அக்ராகரத்தில் மாடி வீட்டில் வசதியுள்ள இடத்தில் தான் வாழுவான். நம்மவர்களோ நாற்றமடிக்கும் சேரியில்தான் வாழ்ந்து வாடுவார்கள். காரணம் பார்ப்பனர்கள் மேல்ஜாதிக்காரர்கள் என்பதால் அவர்களுக்குச் சகல வசதிகளும் கிடைக்கிறது. நம்மவர்களுக்கு இழிவின் காரணமாக கொடுமைகள் தான் நடைபெறுகின்றன. இன்றைய சர்க்காரும் அதையேதான் பாதுகாக்கிறது. இன்று பல காங்கிரஸ் தோழர்கள் எனக்கு ஜாதியில்லை என்று பேசலாம். நம் வீட்டுச் சாப்பாடு ருசியாக இருந்தால் சாப்பிட்டுவிடுவான். ஜாதி, பேதம் இல்லை என்று கூறிக் கொண்டு. எனக்குத் தெரியும்.

அந்த காலத்தில் 1920, 24-இல் பஞ்சமர்களின் தண்ணீர் குடிப்பதற்கு என்று அந்த ஊர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பணம் வசூலித்து அவர்களுக்குத் தனிக் கிணறு என்று செய்வார்கள். காங்கிரசிலேயிருந்து வெளியே வந்து, நாங்கள் "அவர்களுக்குத் தனிக் கிணறு என்று வைத்து, என்றைக்குமோ அவர்களின் இழி தன்மையை நிலை நிறுத்துகிறாயே" என்று கூப்பாடு போட்டதற்கு அப்புறம்தானே சிறிது மாற்றம் ஏற்பட்டது. அதுபோலவே ஆதிதிராவிடர்கள் கும்பிடுவதற்குத் தனிக்கோவில் கட்ட வேண்டும் என்று காங்கிரசுக்காரர்கள் ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு மட்டும் தனிக்கோயில் என்று வைத்துக் கொண்டு அவர்களை என்றுமே தாழ்த்தி வைக்க முயற்சி செய்ததால் அதையும் நாங்கள் கண்டித்தோம். இன்று மட்டும் என்ன? கோவில்களில் சுங்கக்கேட்டு வரையிலும் தானே நம்மவர்களை விடுகிறார்கள். இன்னமும் தட்டும் மணியும் அவனிடத்திலே. தட்டில் விழும் காசை இடுப்பில் செருகுவதும் அவனே என்றுதானே இருக்கிறது.

ஆகவேதான் நாங்கள், சாதி, பேதங்கள் நம் இழிவுகள் ஒழிய வேண்டுமானால் நம்மவர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கு ஆதாரமாயுள்ள கடவுள் மத சாஸ்திரங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம்.
  
நம்மிலே ஒருத்தியை (கண்ணகியை) பத்தினியாக்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் புலவர்கள்? அவள் கணவனைத் தாசி வீட்டுக்குப் போகச்சொல்லி கண்ணகி அவனையே நினைத்து வாழச் செய்து, அவளின் துணி, நகை, நட்டு பொருள்களையெல்லாம் கணவனுக்குக் கொடுக்கச் செய்து இப்படியெல்லாம் பல கஷ்டங்கள் படச்செய்து அவளைப் பத்தினியாக்கினார்கள். ஆனால் ஆரியர்கள் அய்வருக்கும் மனைவியாய் இருந்தும் ஆறாவதாகக் காதலித்த பெண்ணை அதாவது நம்மில் அந்த மாதிரி இருந்தால் "குச்சுக்காரி" என்று சொல்லும்படியான பெண்ணாயிருந்தாலும் அவளை பத்தினியாக்கியிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் பண்பு அதுதான். நம் பண்பு ஒழுக்கப்பண்பு என்பதால்தான். நம் பண்பு ஒழுக்கப்பண்பு என்பதால் தான் ஒழுக்கமுடைய கதையைக் கற்பனை செய்தோம். அவர்களுக்கு எவ்வளவு மோசமான குணமாக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை அவளைப் பத்தினியாக சித்தரித்துக் காண்பிப்பார்கள்.
  
இத்ததைய இழிவான பண்பகள் கொண்ட அவர்கள் பூசரர்கள், உயர்ந்த பண்பாடுடைய நாம் சூத்திரர், பஞ்சமர் என்று கூறுகிறானே என்ன நியாயம்?
 
நம்மவர்கள் எவ்வளவு பொருள் சம்பாதித்தாலும், மந்திரியானாலும், எம்.எல்.ஏ வானாலும் வேறு எந்தப் பதவிகள் பெற்றாலும் அவர்கள் சூத்திரர்கள்தானே. அவர்களில் எவ்வளவு இழிமகனானாலும் பூசுரர்கள். ஆனால் நம்மை சூத்திரர்களாக்கியிருக்கும் இந்து மத, சாஸ்திரக் கடவுள்களை ஒழித்துவிட்டால் நமக்குப் பணமில்லாவிட்டாலும் பலம் பெற்று வாழலாம். பார்ப்பனன் என்ன பணக்காரனா? இல்லையே இருந்தும் வாடாமலர் போன்று வாழுகிறானே. ஆகவே நம்முடைய இழிதன்மை ஒழிய அந்த இழி தன்மைகளுக்கு எவையெவைகள் காரணமாய் இருக்கின்றனவோ அந்த ஆதாரங்களை அழிக்க வேண்டும்.

------------------தந்தைபெரியார்-29-5-1950

பெரியாரின் அறிவாயுதங்கள்

1925இல் பெரியாரால் தொடங்கிய குடிஅரசு ஏடு
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை சென்று பெரும் புரட்சியை ஏற்படுத்தியது
குவைத் நாட்டில் தமிழர் தலைவர் உரை

(குவைத்தில் 16.10.2009 அன்று நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றுகிறார்.)

தந்தை பெரியார் 1925இல் தொடங்கிய குடிஅரசு இதழ் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரை வருமாறு:

தமிழ்நாட்டில் கூட இவ்வளவு தமிழ் கொஞ்சி விளையாடுமா?

தந்தை பெரியாரின் தலைமகனாம், பகுத்தறிவு சிந்தனையின் தலைமகனாம், எல்லோராலும் அண்ணன் என்று அழைக்கக் கூடிய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கூட தமிழ் இவ்வளவு கொஞ்சி விளையாடுமா? என்று எங்களுக்கெல்லாம் அய்யம் வரக் கூடிய அளவுக்கு உங்களுடைய கருத்துகள் இருந்தது. வளநாடு என்று சொல்லக் கூடிய குவைத் நாட்டில் நான் செம்மொழியைக் கண்டேன் (பலத்த கைதட்டல்). இங்கு வருவது பொருள்களை வாங்கிச் செல்ல அல்ல. நல்ல இன உணர்வுத் தோழர்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு.

தோழர்களின் பொருளுள்ள பேச்சு

தோழர்களுடைய பொருளுள்ள பேச்சுகளை கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல தோழர்களை, நல்ல தோழியர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொருளுள்ள கவிதைகளை, புரட்சிகரமான சிந்தனைகளை கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவிலே நீங்கள் அழைத்தமையை ஏற்று கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

உங்களுடைய நாட்டிலே மின்தடை என்பதே அறியாத நாடு. ஆனால் எங்களுடைய நாடோ அதில் கொஞ்சம் வித்தியாசம் கொண்ட நாடு.

இங்கு எங்கும் மின்மயம். மின்மயம் போல் ஆளுமை நிலை உள்ளது-.

தென்னிந்தியாவில் அரசியல் புரட்சி

தந்தை பெரியாரின் தலைமகனாம் பேரறிஞர் மத்திய அரசு அண்ணா அவர்கள் முதன் முறையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்தார். தென்னிந்தியாவிலே ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை நடத்தியவர் அண்ணா. முழுக்க முழுக்க தமிழர்களின் ஆட்சியை அமைத்தவர்.

அண்ணா அவர்களுடைய நூற்றாண்டை ஒட்டி அண்ணா அவர்களது உருவம் பொறித்த சில்வர் நாணயத்தை வெளியிட்டு மரியாதை செய்திருக்கிறது. (கைதட்டல்)

திராவிடர் கழகம் சமூக சீர்திருத்தப் பணிகளை மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளை, விஞ்ஞான அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பணிகளை செம்மையாகச் செய்து கொண்டு வருகின்றது. தமிழ்நாட்டில் பெரியார் மணியம்மை கல்வி நிறுவனம் போன்ற பல கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வருகிறோம்.

இங்கே நான் சொன்ன பெயர்களின் பட்டியலை குறைத்திருக்கிறோம். பட்டியலில் விடுபட்ட தோழர்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆகவே நீங்கள் அதற்காக பொறுத்தருள வேண்டும் என்று கேட்டு என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

அற்புதமான விழா

முதலாவதாக இப்படிப்பட்ட ஓர் அற்புதமான விழாவை அமைப்பதற்கு செல்லப்பெருமாளுக்கு உரிமை தந்தவர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கின்ற ஆழ்வார் அவர்கள் ஆவார்கள். எனவே அவர்களுடைய நினைவைப் போற்றி என்னுடைய உரையை நான் துவக்குகின்றேன். அவருக்கு நாம் வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.

மகிழ்ச்சி கடலிலே மூழ்கி

இந்த விழா ஒரு முத்திரை பதித்த விழாவாக குவைத் நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சிக் கடலிலே நான் மூழ்கித் திணறிக்கொண்டிருக்கின்றேன்.

அதுவும் உங்களுடைய அன்பு என்பதிருக்கின்றது; அது எங்களை ஆட்கொண்ட முறை இருக்கிறது; அது மூச்சுத் திணறக் கூடிய அளவுக்கு எங்களை கொண்டு போய்விட்டிருக்கிறது.

இங்கே பேசிய தோழர்கள் என்னை அன்போடு வரவேற்றீர்கள். உபசரித்தீர்கள்.

பெரியார், அண்ணாவுக்கு செய்த சிறப்பாக

இங்கேயும் எங்களுக்கு ஏராளமான சிறப்புகளை செய்திருக்கின்றீர்கள். அந்தச் சிறப்புகள் என்னைப் பொறுத்த வரையிலே, எனக்கு செய்யப்பட்ட சிறப்பாக நான் கருதவில்லை.

மாறாக நம்முடைய அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணாஅவர்களுக்கும் செய்த சிறப்பாக நான் ஏற்றுக்கொண்டு அதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். எமை நத்துவாய் என எதிரிகள் கோடியிட்டழைத்தாலும் தொடேன் என்று சொன்னாரே புரட்சிக் கவிஞர் அத்தகைய புரட்சிக் கவிஞருடைய பொன் வரிகளுக்கு இலக்கியமாய் திகழ்ந்து குவைத் செல்லப்பெருமாள் அவர்கள் இங்கே மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார். அதனை இயக்க சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சாதனையாகும்.

இங்கே பேசிய அத்துணை பேரும் பெரியார் பெருந்தொண்டர் குவைத் செல்லப்பெருமாள் அவர்களுடைய உழைப்பைப் பற்றி, அவர்களுடைய கொள்கை உறுதியைப் பற்றி சொல்லும்பொழுது தனிமரம் தோப்பாகிவிட்டது என்று மிக அழகாகச் சொன்னீர்கள்.

தனிமரம் தோப்பாகிவிட்டது

ஆம்! உண்மைதான்; தனிமரம் தோப்பாகிவிட்டது. காரணம்அது கனிமரமாக இருந்த காரணத்தால் (கைதட்டல்)

கனிகள் தந்து அவை விதைகளாகப் பூமியில் விழும்பொழுது தோப்பு தானே உதயமாகும். தோல்வி வராது. தோப்புதான் வரும். அவரைப் பொறுத்தவரையிலேயே அவர் யாரைப்பற்றியும் கவலைப்பட்டதில்லை.

தனித்தே நின்றார். தனித்தே வென்றார் என்று நீங்கள் சொன்னீர்கள். குவைத்தில் செல்லப்பெருமாள் பெரியார் படிப்பகத்தை நடத்துகின்றார்.

பெரியார் தனித்து நின்றுதான்

ஆழமாக சிந்தித்து பார்த்தால் தந்தை பெரியாரே தனித்து நின்று தான் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். நான் தன்னந்தனியராக இயக்கத்தைத் தொடங்குகிறேன், யார் எனக்கு முன்னாலே செல்லுகிறார்கள், யார் எனக்குப் பின்னாலே வருகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.

அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசிய பல உரைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து பெரியார் ஒரு சகாப்தம் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றோம். அண்ணா அவர்கள் குறிப்பிட்ட ஒரு சொல்.

அண்ணா அவர்கள், பெரியார் ஒரு காலகட்டம், அண்ணா அவர்கள் ஒரு திருப்பம் என்று சொன்னார்கள்.

அண்ணா சென்னார்

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அண்ணா அவர்கள் சொல்லுகிறார். அவர் பின்னாலே யார் வருகிறார், யார் செல்லுகிறார் என்று எதைப்பற்றியும் அவர் கவலைப்பட்டதில்லை. அவர் இயக்கத்தை நடத்திக்கொண்டே போவார் என்று சொன்னார்.

உங்களிலே எத்தனைபேர் பெரியார் திரைப்படம் பார்த்தீர்கள் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் இதே போல ஒரு அரங்கத்தில் பெரியார் படத்தைப் பார்க்கலாம். அதிலே கூட அந்தக்காட்சி இணைக்கப்பட்டிருக்கிறது.

பெரியாரின் அறிவாயுதங்கள்

தந்தை பெரியாருடைய அறிவு ஆயுதங்கள், குடிஅரசு, பகுத்தறிவு, விடுதலை போன்ற ஏடுகள். அண்ணா அவர்களின் அறிவாயுதம் எது? அவர் விடுதலையின் ஆசிரியராக இருந்து, தொடர்ந்து அவர்கள் திராவிட நாடு இதழை தனி ஏடாக, வார ஏடாக நடத்தினார்கள். ஒரு மிகப்பெரிய அறிவுப்புரட்சியை அமைதிப் புரட்சியாக உருவாக்கினார்கள்.

அந்த அறிவுப் புரட்சியை, அமைதிப் புரட்சியை செய்து காட்டினார்.

1925இல் தொடங்கிய குடிஅரசு ஏடு

தந்தை பெரியார் அவர்கள் 1925இலே குடிஅரசு ஏட்டினைத் துவக்கினார்கள். எங்களைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்திலே அந்த இதழைத் தொடங்கினார்.

இந்தக் காலத்திலேயே இவ்வளவு எதிர்ப்பு. நான் உள்பட எதிர் நீச்சல் அடித்துக் கொண்டுதான் வருகின்றேன். முதல்வர் கலைஞர் அவர்களிடம் நெருக்கடி காலத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள். உங்கள் மீது ஒரு குற்றம் சுமத்துகிறார்களே, தேசிய நீரோட்டத்தில் நீங்கள் கலக்கவில்லையே என்று செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு கலைஞர் அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார். ஏனென்றால் அது ஈரோடு குருகுலத்தின் பயிற்சி.

கலைஞர் சொன்ன பதில்

நான் ஈரோடு போனவன்; ஆகவே நீரோடு போக விரும்பவில்லை என்று கலைஞர் சொன்னார் (கைதட்டல்). எதிர் நீச்சல் அடித்தால் தான் நமது வல்லமை தெரியும்.

நீரோட்டத்தில் யார் வேண்டுமானாலும் குதித்து விட்டால் அது இழுத்துக் கொண்டே போகும். ஆகவே இந்த எதிர்நீச்சல் அப்படித்தான். தந்தை பெரியார் அவர்கள் எதிர் நீச்சலோடு தன்னுடைய பணியைத் தொடங்கினார்கள்.

உலகெலாம் பரவியது

பெரியார் தொடங்கிய குடிஅரசு, இதழ் பெரும் புரட்சியை அந்தக் காலத்திலே செய்தது. உலகெலாம் சென்றது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்றது.

ஏட்டிற்கு நட்டம் வந்த பொழுது

அப்படி சென்ற பொழுது ஒரு காலக்கட்டத்திலே அந்த ஏட்டிற்கு நட்டம் வந்தது. நம்முடைய இலட்சிய ஏடு என்றால் நட்டம் தான் வரும். பொருள் நட்டம் வந்தது. அங்கே அருகிலிருந்தவர்கள் சொன்னார்கள். அய்யா மிகுந்த பொருள் நட்டம் ஏற்படுகின்றது. எனவே இதனை நிறுத்திவிடலாமா? என்று கேட்டார்கள்.

அதற்கு தந்தை பெரியார் அவர்கள் தந்த பதில் என்ன தெரியுமா? செல்லப்பெருமாளை எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

நான் ஒருவனே எழுதி, ஒருவனே அச்சடித்து, ஒருவரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே திண்ணையில் அமர்ந்து படித்து வெற்றி கொள்வேன் என்று சொன்னார். (கைதட்டல்).

அன்றைக்கு பெரியார் சொன்னார்.

இன்றைக்கு செல்லப்பெருமாள் அதை குவைத்திலே செய்து காட்டியிருக்கின்றார். (கைதட்டல்). எனவே அதில் எங்களுக்கு வியப்பில்லை.

குவைத் செல்லப்பெருமாள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் அந்த உறுதி வெற்றி பெறும்.

இந்த நிலையிலே பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டிலே கொண்டாடினோம்.

தமிழ் செம்மொழி என்பதற்கு

தமிழ்நாட்டை விட அதிகமான அளவுக்கு சொல்வளத்தோடு, கருத்து வளத்தோடு, தமிழ் செம்மொழி என்பதற்கு ஆதாரம் வேறு எங்கும் தேடிக் கண்டுபிடிக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டிற்குப் போய்ச் சொல்வேன். குவைத்துக்குப் போய் ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள். அப்பொழுது அந்தத் தமிழின உணர்வு, உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்று. (கைதட்டல்).

அவ்வளவு ஆழமாக இங்கு எல்லோரும் கருத்துகளை எடுத்து சொன்னீர்கள். உங்களைப்பின் பற்றி ஒரு சில கருத்துகளை சொல்லுகின்றேன்.

நீதியின் குரல் ஒலித்தது

இங்கே நீதியின் குரல் தெளிவாக ஒலித்தது. சில நேரங்களிலே எங்கள் நாட்டிலே இந்த குரல் நெரிக்கப்படுகிறது; அல்லது வளைக்கப்படுகிறது; அல்லது குரல் கம்மியிருக்கிறது.

ஆனால் இங்கு பளீர் பளீர் என்று நீதியின் குரல் கேட்கிறது என்று சொன்னால் இங்குள்ள ஆட்சியாளரை நாம் பாராட்ட வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு பெரிய புரட்சியை செய்தார்கள் என்பதற்கு அடையாளமாக அங்கீகரித்தது யார் என்று சொன்னால், பெரும் எதிர்ப்புகளுக்கிடையே அங்கீகரித்து யுனெஸ்கோ மன்றம்.

---------------------தொடரும் 25-11-2009

25.11.09

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச நாள் சிந்தனை


பெண்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச நாளாக இன்று கொண்டாடப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் டில்லியில் கருத்தரங்கம் ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது.

இதுபோன்ற நாள்கள் அனுசரிக்கப்படுவதால் என்ன இலாபம் என்பதைவிட, பெண்களின் நிலை எந்த இடத்தில் இருக்கிறது என்கிற வரவு_செலவு பார்ப்பதற்கு நிச்சயமாகப் பயன்படும். அதன்மூலம் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்தவரை 2001 முதல் 2007 வரையிலான ஒரு புள்ளி விவரம்:

பாலியல் வன்முறை (கற்பழிப்பு) _ 3,176

பாலியல் தொந்தரவு _ 10,006

கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டோர் _ 4,482

வரதட்சணை சாவு _ 1,261

கணவனாலும், உறவினர்களாலும் கொடுமைக்கு ஆளானோர் _ 8,549.

அரசுக்குத் தெரிந்த புள்ளி விவரங்கள் இவை. உண்மையில் இதைவிட அதிகமான துயரங்கள்தாம் பெண்களைக் குத்திக் குதறியிருக்கும்.

பரிதாபப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் இந்தப் பெண்களைக் கைதூக்கிவிட ஆண்கள் தோள் தூக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பூனைகளால் எலிகளுக்கு உரிமை கிடைக்குமா என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாதான் இதற்குப் பதிலாகும்.

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடம் என்பது (நியாயமாக 50 விழுக்காடு தேவையே!) 1996 ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கட்சிகளைக் கடந்து ஆண்கள் இதில் எதிர்ப்பாக உள்ளனர் என்பது வெட்கப்படத்தக்கதாகும்.

உலகில் இந்தப் பிரச்சினையில் இந்தியா 104 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 10.7 விழுக்காடுதான். பாகிஸ்தானில்கூட 21.3 விழுக்காடாகும். முதல் இடத்தில் இருப்பது ருவாண்டா (48.8 விழுக்காடு).

பெண்களின் மக்கள் தொகையும் சரிந்து வருகிறது. இந்தியாவில் 1000 ஆண்களுக்குப் பெண்களின் எண்ணிக்கை 933 ஆகும். சீனாவிலோ 100 ஆண்களுக்கு 117 பெண்கள் என்ற நிலை உள்ளது.

ஒரு நல்ல தகவல இந்தியாவில் ஆண்களின் சராசரி வயது 63.9. பெண்களின் சராசரி வயதோ 66.9. இவ்வளவு இடர்ப்பாடுகளையும் கடந்து இந்த நிலை; காரணம், ஆண்களைவிட பெண்களுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகமாம். இருந்தாலும் அவர்கள் தலையெடுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஆண்மை என்ற ஆண்களின் அடக்குமுறை தத்துவம்தான் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும். விழா எடுப்பவர்கள் இதுபற்றியெல்லாம் எங்கே சிந்திக்கப் போகிறார்கள்?

----------- மயிலாடன் அவர்கள் 25-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

பெரியார் கண்ட வாழ்வியல்

மனிதனுக்கு மட்டும்தான் மான உணர்ச்சி
அதைத் தெளிவுபடுத்தும் சொல்தான் சுயமரியாதை
தந்தை பெரியார் கருத்தை எடுத்துக்காட்டி சிங்கப்பூரில் தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவருடன், தமிழர் பேரவை தலைவர் டாக்டர் ஆர்.தேவேந்திரன்...

மனிதன் என்றால் யார்? அவனுக்குள்ள தனித்தன்மை என்ன? என்பது குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்துகளை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிங்கப்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் விளக்கவுரையளித்தார்.

சிங்கப்பூரில் பெரியார் கண்ட வாழ்வியல் மகத்தான வரவேற்பு பெற்றதையொட்டி பேரா. ரெத்தினக்குமார் தமிழர் தலைவருக்கு மகிழ்ச்சியுடன் 15.11.2009 அன்று விருந்தோம்பல் அளித்தார். பல்துறை அறிஞர்கள் மற்றும் பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இவ்விழா ஒரு மகிழ்ச்சியான கலந்துரையாடலாக அமைந்தது.

விழாவினை பேரா. ரெத்தினக்குமார் மிக அழகாக Periyar Self-Respect Movement

Common Sense

Rationalist

Humanism

Humanist

Periyar (1879-1973)

Dr. K. Veeramani என 15 க்கும் மேற்பட்ட Power Point Slide களில் ரத்தினச் சுருக்கமாக பெரியாரைப்பற்றி ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதுபோல் எடுத்துக்கூறி, தமிழர் தலைவரை கருத்து விருந்து வழங்க அழைத்து அழகாக விழாவினைத் தொடங்கி வைத்தார்.

தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்த பல்துறை அறிஞர் பெருமக்கள் (சிங்கப்பூர், 15.11.209)

தமிழர் தலைவரின் சிறப்புரை

பின்னர் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரின் உரை வருமாறு:

நம் அனைவருக்கும் தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் என்ன என்பதனை ஒரு கணக்கு வகுப்பு (அ) ரசாயன வகுப்பு (கெமிஸ்ட்ரி) என அத்தனையும் கலந்து புதிய அணுகுமுறையில் நம்முடைய மனங்களில் பதியக்கூடிய வகையில் தந்தை பெரியாரை நேரில் பார்த்திராத ஒரு பெருமகனார் அவர்களுடைய நூல்களையும், கருத்துகளையும் மட்டுமே படித்துத் தெரிந்து தொடர்ந்து வரக்கூடிய இயல்பான பகுத்தறிவாதியாக வாழக்கூடிய பேரா. ரத்தினக்குமார் இந்நிகழ்ச்சியை அழகாக தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி. காரணம், இங்கு வந்துள்ள பெரும்பாலானோர் பெரியாரைப்பற்றி அறிந்தவர்கள், முதன்முறையாக தெரிந்துகொள்ளக்கூடியவர்கள், இன்னும் விரிவாக புரிந்துகொள்ளக் கூடியவர்களாக உள்ளீர்கள்.

ஈசா விசுவநாதன் ஆய்வு

தந்தை பெரியாரைப்பற்றி பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு செய்கிறார்கள். நேஷனல் யூனிவர்சிடி ஆஃப் ஆஸ்திரேலியா என்பதிலேகூட தந்தை பெரியார் அவர்களைப்பற்றி நீண்ட காலத்துக்கு முன்பு 25 (அ) 35 ஆண்டுகளுக்கு முன்பு ஈசா விசுவநாதன் என்பவர் பெரியார் என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார். அதைப்போலவே ஒரு டச்சு அம்மையார், ஒரு கிறிஸ்துவ பாதிரியாரின் உதவியுடன் தந்தை பெரியாரை நேரடியாகப் பார்த்து ஆய்வு செய்துள்ளார்கள். இப்படி வெளிநாட்டவர் ஆய்வு செய்த பின்புதான் தமிழ்நாட்டவர்கள் ஆய்வு செய்தார்கள். தமிழ் உலகுக்கு இது புதுமையல்ல; வெளிநாட்டவர்கள் திருக்குறளைப்பற்றி பெருமைகளைப் பேசிய பின்புதான் தமிழ்நாட்டவர்கள் திருக்குறளை பார்க்கவே ஆரம்பித்தார்கள்.

ஜான்ரெய்லி என்ற அமெரிக்கப் பேராசிரியர் பெரியார் என்ற புரட்சியாளர், சமூக சிந்தனையாளர், அநீதிகளை, அக்கிரமங்களை எதிர்த்துப் போராடக்கூடியவர் 2000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றுவார் என்று சொல்லியுள்ளார்.

பேரா. ரத்தினக்குமார், பெரியாரை அறிமுகப்படுத்தும்போது Top Rank Rationalist என்று சொன்னார். அதுபோலவே, தந்தை பெரியார் அவர்கள் தன்னைத்தானே அறிமுகப்படுத்திச் சொல்லும்போது, நான் ஒரு பூரண பகுத்தறிவாதி (Perfect Rationalist) என்று சொல்கிறார்கள். பூரண பகுத்தறிவு என்பது பகுத்தறிவுக்கு எல்லை இல்லை என்பதாகும்.

கலிலியோ, சாக்ரட்டீஸ், பெரியார்

கலிலியோ, கோப்பர் நிக்கோலஸ் ஆகியோர் உலகம் உருண்டை என்று சொன்னபோது, அவர்கள் பட்ட பாடு நாம் அறிந்ததே. அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல், சிறையில் அடைத்தார்கள். சிறையில் அடைத்த பின்பு கேட்டார்கள், உயிர்மீது ஆசை இருந்தால் உலகம் தட்டையென்று சொல்லுங்கள், விட்டுவிடுகிறோம் என்று கேட்டார்கள். ஆனால் கலிலியோ அவர்கள் இன்னமும் சொல்கிறேன், உலகம் உருண்டையென்று; அதுபோல், கோப்பர் நிக்கோலஸ் அவர்களிடம் கேட்டபோது, இந்த முட்டாள் மக்களிடம் உண்மையைச் சொல்லி உயிர் விடுவதற்குப் பதிலாக கொஞ்சம் பின்வாங்கி ராஜதந்திரத்தைப் பயன்படுத்தினார்கள். அதுபோலவே, நஞ்சைப் பெற்ற சாக்ரட்டீஸ், தன்னுடைய நிலையை மாற்றியிருந்தால், உயிரோடு வாழ்ந்திருக்க முடியும். ஆனால், வரலாற்றில் வாழ்ந்திருக்க முடியாது. அதுபோலவே, தந்தை பெரியார் அவர்களும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

பெரியார் படித்தது

தந்தை பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். அவர்களுடைய சுய சிந்தனை எந்த ஒரு நூலகத்தாலும் உருவாக்கப்பட்டதல்ல; நாம் பல நூல்களைப் பார்க்கிறோம்; அதற்குப் பிறகு செய்திகளை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் நான்காம் வகுப்புவரைதான் பள்ளிக்கூடம் போனவர்; அந்த குறுகிய காலத்தில் சென்றபோதுகூட அவர் கண்ட காட்சிகளைப் பரிசோதனைக் கூடமாக மாற்றினார். அவர் சிறு வயதிலிருந்து புத்தகங்களாக மனிதர்களைப் படித்தார். அதனால் மனிதர்களைப்பற்றி தெரிந்துகொண்டு மனிதர்கள் இருக்கிறார்கள்; ஆனால், அவர்களிடம் மனிதம் இல்லையே என்று கவலைப்-பட்டார். அதுதான் அவர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதன் அடிப்படை. மனிதன் என்று சொன்னால், மானமும், அறிவும்தான் மனிதர்க்கு அழகு என்று சொல்வார்.

ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு. அது விலங்குகளுக்குக் கிடையாது. அதனால்தான் யானை, சிங்கம் போன்ற நம்மைவிட வலிமையான மிருகங்களை நாம் அடக்கி ஆள்கிறோம் என்றால், அவைதான் பகுத்தறிவின் சிறப்பு. அப்படிப்பட்ட சுதந்திரமான அறிவாக இருக்கவேண்டும்.

மானம் இல்லையா?

மனிதனுக்கு எது தேவை? மான உணர்ச்சி தேவை. நீண்ட நாள் பழகிய நண்பர்களாக இருந்தால்கூட ஒருவர் வீட்டில் திருமணம், நீங்கள் போகவில்லையா என்று கேட்டால், அந்த நெருங்கிய நண்பர் எனக்கு அழைப்பில்லை, நான் எப்படிப் போவேன், எனக்கு மானமில்லையா? என்று கேட்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

மானத்திற்கு உண்மையான பொருள் என்ன என்பதை தெரிந்துகொண்டால், வியப்பு இருக்காது. மானம் என்றால், அளவு என்று பொருள். அந்த அளவு கீழே போய்விட்டால் குறைந்துவிட்டால் மானத்தை விட்டுவிட்டு வாழ்கிறோம் என்று சொல்கிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் மானத்தைப்பற்றி சொல்லும்போது மனிதர்களுக்கு மட்டும்தான் மானம் இருக்கிறது. அதை தெளிவுபடுத்துகின்ற ஒரு நிலையென்றால் அது சுயமரியாதை (Self-Respect) என்று சொன்னார்.

சுயமரியாதை இயக்கம் யாருக்குச் சொந்தம்?

உலக நாடுகளில் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் எத்தனையோ நாடுகளில் புரட்சிகரமான இயக்கம் தோன்றிய வரலாற்றை அன்றும், இன்றும், நாளையும் படிக்கக் காத்திருக்கிறோம். ஆனால், தோழர்களே, தோழியர்களே ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள். தந்தை பெரியார் தொலைநோக்கோடு எல்லோருக்கும் பொருந்தக்கூடிய வகையில் இயக்கத்தை உருவாக்கினார் என்றால், அது சுயமரியாதை இயக்கம்தான்; அதை யாராலும் மறுக்கவே முடியாது. அந்த சுயமரியாதை இயக்கம் ஒரு நாட்டுக்கு, ஒரு கட்சிக்கு, ஓர் இனத்துக்கு, ஒரு ஜாதிக்கு, ஒரு பாலுக்கு (Gender) மட்டும் சொந்தமில்லை. மனிதர்களாகப் பிறந்திருக்கிற எல்லோருக்குமே சொந்தம். எல்லோருக்குமே சுயமரியாதையென்பது உண்டு.

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி தெளிவாக சொல்கிறார்.
பெரியார் பேசுகிறார் கேளுங்கள்:

இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் புரட்டிப் பார்த்தால் சுயமரியாதை என்ற சொல்லைத் தவிர மிகுந்த ஈர்ப்பு உடைய சொல், அதற்குச் சமமான சொல் கிடையவே கிடையாது என்று சொல்கிறார். எனவே, அந்த சுயமரியாதைதான் மனிதர்க்கு இருக்கவேண்டும். மனிதர்க்கு சூடேற்ற சுயமரியாதை தேவை என்றார். உங்களுக்கெல்லாம் வெட்கப்படக் கூடிய சூழ்நிலையிலே நாம் சுட்டிக்காட்டினால்தான் மனிதர்கள் திருந்துவார்கள் என்பதற்காக சுயமரியாதை இயக்கம் Self- Respect Movement என்று சொல்லக்கூடிய இயக்கம் இருக்கவேண்டும் என்று கருதினார். எனவேதான் அவருடைய சிந்தனை ஒப்பற்ற சுயசிந்தனை, தானே சிந்தித்தவர். இன்னொரு நிலையை எடுத்து மேற்கோள் காட்டமாட்டார்.

நான் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது சென்னை சட்டக் கல்லூயின் தலைமை இயக்குநர் Director of Legal Studies ஆக இருந்தனர். A.S.P. அய்யர் ICS அவர் நிறையப் படித்தவர். அவர் நீதிபதியாக இருந்தபோது பெரியார் அவர்கள் நீதிமன்ற தவறுகளை சுட்டிக்காட்டியதற்காக பெரியாரை தண்டித்தவர் ஆவார். அவர் ஓய்வுபெற்ற பின்பு மதிப்பு ஊதியம் பெற்று சட்டக்கல்லூரியில் பணிபுரிந்தார். நாங்கள் சட்டம் படித்தபோது, அந்த A.S.P அய்யரிடம் கேட்டோம். பெரியாரை சட்டக் கல்லூரிக்கு அழைக்கிறோம். உங்கள் அனுமதி தேவையென்று. உடனே அவர் தந்தை பெரியார் அவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். அவருக்கு அனுமதியளிப்பதோடு அந்தக் கூட்டத்துக்கு நானே தலைமை தாங்குகின்றேன் என்று சொன்னார்கள்.

பெரியார்பற்றி ஏ.எஸ்.பி. அய்யர்

அவர் அந்தக் கூட்டத்தில் தந்தை பெரியாரை அறிமுகப்படுத்திப் பேசும்போது எனக்குத் தெரிந்த வரையில் இந்திய நாட்டிலேயே அடுத்தவர்களின் நூல்களை மேற்கோள் காட்டாமல், இது என்னுடைய கருத்து; ஏற்றால் ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்று எடுத்துச் சொல்கிற தலைவர் இருக்கிறார் என்றால், ஒரே ஒரு தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான் என்று மிகப் பிரமாதமாக எடுத்துச் சொன்னார். தந்தை பெரியார் அவரைப் பின்பற்றி பேசும்போது, ஆம், எனக்கு மேற்கோள் காட்டி பேசிப் பழக்கமில்லை. உடனே நீங்கள் கேட்கலாம், திருக்குறளையெல்லாம் கையாண்டு இருக்கிறீர்களேயென்று கேட்கலாம். அதற்கு நான் பதில் சொல்கிறேன்; என்னுடைய கருத்தை வள்ளுவரும் சொல்லியிருக்கிறார் என்பதற்காகத்தான் வள்ளுவரிடம் சென்றிருக்கிறேனே தவிர, வள்ளுவர் சொன்னார், அதனால் நான் எடுத்துக் கொள்கிறேன் என்பதல்ல. எனக்கு மாறுபடுகிற இடங்கள் வள்ளுவரிடம் இருந்தால் ஒதுக்கிவிடுவேன். எல்லாமே வள்ளுவர் சொன்னது சரிதான் என்று நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதுபோல, நான் சொல்வது சரிதான் என்று நீங்கள் யாரும் எடுத்துக்கொள்ளக்கூடிய அவசியமில்லை. சரியென்றுபட்டால், எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விரும்பாத ஒரு நிகழ்ச்சியை வானொலியில் கேட்டதுபோல் விட்டுவிடுங்கள் என்று பெரியார் சொன்னார்.

மாணவி கேட்ட கேள்வி

வானொலியில் இளைஞர்கள், கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடிய நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். அப்போது ஒரு கல்லூரி மாணவி ரொம்ப கெட்டிக்காரத்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டார். எல்லோருக்கும் பகுத்தறிவு இருக்கிறது. ஆனால், உங்களை மட்டும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, இது எப்படி பொருத்தமாகும்? என்று கேட்டார்.

இது அற்புதமான கேள்வியென்று நான் பதில் சொன்னேன். இந்த எல்லைவரை பகுத்தறிவு செல்லலாம். இந்த எல்லைவரை பகுத்தறிவு செல்லக்கூடாது என்று நினைத்தால், அவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்லர். பகுத்தறிவு எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. ஆனால், அதனை எல்லை போடாமல் கடைசிவரை எடுத்துச் செல்லக்கூடிய துணிச்சல் எங்களுக்கு இருக்கிறது என்று கூறி, சாலையில் நடந்து செல்லும்போது சாணியை மிதித்துக்கொண்டால், உடனடியாகக் காலைக் கழுவிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறீர்கள். ஆனால், அடுத்த பத்தடி தாண்டி சாணியில் இரண்டு அருகம்புல் வைத்திருந்தால், நீங்கள் தண்டால் எடுத்து சாமி, கடவுள் என்று விழுந்து கும்பிடுகிறீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். உடனே ஆம் தவறுதான் என்று சொன்னார்கள். இந்த மாதிரி நினைக்காமல் இரண்டு இடத்தில் இருப்பதும் சாணிதான் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய துணிச்சல் யாருக்கு இருக்கிறதோ, அவர்கள்தான் பகுத்தறிவாளர்கள் என்று எடுத்துச் சொன்னவுடன், அந்த மாணவிகள் இப்ப எங்களுக்கு நன்றாக விளங்குகிறது என்று சொன்னார்கள்.

பகுத்தறிவு வாதம் என்பது என்னவென்று சொன்னால், மனிதர்கள் இரட்டை வாழ்க்கை வாழக்கூடாது. அதை நம்புகிறோமோ, அதை சொல்லவேண்டும்; எதை சொல்கிறோமோ அதை செய்யவேண்டும். நம்புகிறது ஒன்று, செய்வது இன்னொன்று என்று உலகத்திற்குப் பயந்துகொண்டு வாழக்கூடாது. பகுத்தறிவு என்பது இரட்டை வாழ்க்கை முறையை ஒழிப்பது. பெரியாருடைய பகுத்தறிவு என்பது அவர் எதை நம்பினாரோ அதை உறுதியாக மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னார் என்று எடுத்துக்கூறி, மனிதன் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்; பிறவி பேதம் கூடாது; பெண்கள் கல்வி, தலையெழுத்து, பெரியாரின் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக குடிஅரசு ஏட்டில் வெளிவந்த பிராமண விதவைப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்த நிகழ்வு என பல சுவையான நிகழ்வுகளை செவிக்கு சுவைப்பட எடுத்துக்கூறி, பெரியாரை மேலோட்டமாக உங்களுக்குக் காட்டியுள்ளேன் என்று கூறி, சுமார் 1 மணி 10 நிமிடத்திற்குமேல் அனைவருக்கும் கருத்து விருந்தளித்தார்.

இறுதியாக, பெரியார் கண்ட வாழ்வியல் வெற்றிகரமாக நடந்ததை பாராட்டி, பெரியார் சமூக சேவை மன்றத்தின் நிறுவன தலைவர் வீ. கலைச்செல்வத்திற்கு, திராவிடர் கழகத் தலைமைக் கழகத்தின் சார்பாக தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.

திருமதி மலையரசிக்கு தமிழர் தலைவரின் வாழ்விணையர் திருமதி மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்தார். மற்றும் பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசினை தமிழர் தலைவர் வழங்கினார்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் தமிழர் தலைவருடன் உணவு உண்ட பின், ஒளிப்படம் எடுத்துக்கொண்டு அன்புடன் விடைபெற்றனர்.

இந்நிகழ்வில் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன், புதுமைத் தேனீ மா. அன்பழகன், திருமதி அருள்பாலு, ரெத்தின வெங்கடேசன், தொழிலதிபர் ஆண்ட்ரூ ஃபூங்க் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மாணவர்கள், பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


---------------------"விடுதலை" 25-11-2009