Search This Blog

14.11.09

நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் பெரியாரைத்தான்-அண்ணா

‘‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் பெரியாரைத்தான்’’
அண்ணா கூறிய கருத்தை விளக்கி தமிழர் தலைவர் பேச்சு

நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியாரைத்தான் என்று அண்ணா கூறிய கருத்தை விளக்கி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்..

சென்னை பெரியார் திடலில் அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி ‘‘அறிஞர் அண்ணாவின் நிலைத்த எழுத்தோவியங்கள்’’ என்ற தலைப்பில் 1.9.2009 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

வருகிறாயா? கேட்கமாட்டார்

வருகிறாயா? என்று என்னை கேட்க மாட்டார். (பெரியார்) வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆதலால் என்ன அழகு நடை பாருங்கள். செல்வோம் பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில் உருட்டல், மிரட்டல் கடிதங்கள் இருந்திருப்பின், அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக்கொண்டுதான் வருவார். அத்தகைய தெளிவும், வாதத் திறமையும், பேச்சில் கிடைக்கும். (அய்யா அவர்களுடைய பேச்சில் கிடைக்கும் என்று அண்ணா அவர்கள் சொல்லுகிறார்).

அத்தகைய தெளிவுரையைப் பெற்று, பெற்று தமிழரில் பலப் பலர் (சொற்கள் பாருங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது.) திருந்தினர் என்பது மட்டுமல்ல. தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. பெரியார் அவர்கள் ஒரு தனி மனிதரல்லர்.

அவர் ஒரு சகாப்தம்

அவர் ஒரு காலகட்டம். அவர் ஒரு சகாப்தம், ஒரு திருப்பம் என்று அழகாக அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து உள்ளத்தைத் திறந்து பேசி எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும், கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை.

நான் அப்பொழுது சிறுவன்

அந்த வரலாறு தொடங்கப்பட்ட பொழுது நான் சிறுவன். (எவ்வளவு அடக்கத்தோடு சொல்லுகிறார்கள் பாருங்கள்) அந்த வரலாற்றில் புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாள்களில் ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கின்றேன்.

(அண்ணாவின் அடக்கம் எவ்வளவு அற்புதமான ஒன்று என்பதை இன்றைக்குப் பலரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில பேரை எங்கேயாவது நாம் கூட்டத்தில் கண்டு ஒரு ஆட்டோகிராப் வாங்கி விட்டாலே அவரும், நானும் நெருங்கிய நண்பர் என்று சொல்லக்கூடிய நிலைகள் எல்லாம் உண்டு.

ஆனால் அண்ணா அவர்கள் எவ்வளவு துல்லியமாக, எவ்வளவு அடக்கமாக சிறப்பாகச் சொல்லுகிறார் பாருங்கள்)

அந்த நாள்களைத்தான் என் வாழ்நாளில் வசந்தம் என்று குறிப்பிட்டிருக்கின்றேன்.

குரு பக்தி

பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர் பற்பலர் அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்.

(ஒரு காதலன் காதலிக்கு எழுதுகின்ற கடிதம் கூட இவ்வளவு சுவையாக இருக்குமா என்பது கேள்விக் குறி இது கொள்கை காதல். ஒரு பக்கம் குரு பக்தி, இன்னொரு பக்கம் கொள்கை காதல். இதுதான் சுயமரியாதை இயக்கக் குடும்பப் பாசம் என்ற அளவிலே அண்ணா அவர்கள் மிக அருமையாகச் சொல்லுகின்றார்கள்.

இன்றும் நினைவிலே கொண்டு வரும்பொழுது இனிமை பெறுகிறேன். எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார்.

எதையும் தாங்கும் இதயம்

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதிலே ஒரு ஆர்வமும் அகமகிழ்வும், மனநிறைவும் பெற்றிடச் செய்தார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை நான் கற்றுணர வாய்ப்பும்தந்தார் என்பதில் ரொம்ப விசயங்கள் உள்ளே உள்ளன.

தன்னை தாக்கியிருக்கின்ற கட்டங்கள் உண்டு. அதையும் தாங்கியாக வேண்டும். அது மட்டுமல்ல எதிர்ப்புகள் வரும். இதையும் தாங்க வேண்டும். எங்கிருந்து வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம்) பொதுத் தொண்டாற்றுவதிலே அகமகிழ்வும், மனநிறைவும் பெற்றிடச் செய்தார். கோபத்துடன் அவர் பலரிடம் பேசியிருக்கக் கண்டிருக்கின்றேன்.

உன்னை எனக்குத் தெரியும் போ!

கடிந்துரைக்கக் கேட்டிருக்கின்றேன். உன்னை எனக்குத் தெரியும் போ என்று உரத்த குரலில் கூறியிருப்பதைக் கேட்டிருக்கின்றேன். ஒரு நாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு.எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தமது குடும்பத்தின் பிறவா பிள்ளையென கொண்டிருந்தார். நான் கண்டதும், கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான் (கைதட்டல்).

கண்டது ஒரே தலைவர் என்று சொன்னால் அது சாதாரணமானது. ஆனால் அடுத்து அண்ணா அவர்கள் பயன்படுத்துகின்ற சொல் இருக்கிறது பாருங்கள் அதைப் பார்க்க வேண்டும்.

நான் கண்டதும் கொண்டதும்

‘‘கண்டதும், கொண்டதும்’’ கொண்டவன் என்றால் கணவன். அதாவது கொண்டவன் மாறினால் எப்படியிருக்கும். கொண்டவன் சரியில்லாததினாலே கண்டவன் இப்படி பேசுகிறான் என்று கிராமங்களில் கூட சாதாரணமாகச் சொல்லுவார்கள்.

ஆகவேதான், கொண்டது என்ற சொல்லை அண்ணா அவர்கள் பயன்படுத்தினார். கடைசி வரையிலே பெரியார்தான் என் தலைவர், பெரியார் மட்டுமே தலைவர் என்ற அந்த சிந்தனையோடுதான் அவர்கள் தனது இறுதி மூச்சு அடங்குகிறவரையிலே சிறப்பாக இருந்தார்கள்.

எனவேதான் நான் கண்டதும், கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான் என்று சொன்னார். இப்பொழுது நான் உள்ள வயதில் அவர் இருந்தார். நான் அவருடன் இணைந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பு.

அதைத்தான் தன்னுடைய காலத்திலே சொல்லுகிறார். இவர் வருவதற்கு முன்னாலே இருந்த 30 ஆண்டுகள் அந்த 30 ஆண்டுகள் தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள்.

ஒருவர் எழுதியிருக்கிற வரலாறு

அண்ணா அவர்கள் வருவதற்கு முன்னாலே துவக்க காலம். அண்ணா அவர்களின் அறிவு நாணயம் எவ்வளவு பாராட்ட வேண்டிய ஒன்று என்பதையும்இந்த நேரத்திலே குறிப்பிட வேண்டும். சில பேர் வரலாற்றைச் சொல்லுகிற பொழுது மாற்றிச் சொல்லுவர்கள். எல்லாம் நான்தான் சொன்னேன் என்று ஒருவர் ஒரு வரலாறு எழுதியிருக்கின்றார். பெரியாருக்கே ஒரு குறிப்பிட்ட ஒருவர்தான் கருத்துரையை, சிந்தனையை யோசனையை சொல்லிக்கொடுத்து அதற்குப்பிறகுதான் பெரியாரே தலைவராக உருவானார். பெரியாருக்கே இவர்தான் குருவாக இருந்தார் என்று ஒருவர் நூல் எழுதியிருக்கின்றார்.

நாம் மகிழ்ச்சியாக இருக்கின்ற நேரத்தில் இப்படிப்பட்ட கருத்துச் சிதறல்களுக்குக் கூட இடம் கொடுக்கக் கூடாது என்பது என் எண்ணம்.

30 ஆண்டுகள் அய்யா அவர்கள் பணியாற்றி வந்திருக்கின்றார். இந்த ஆண்டுகள் தமிழனின் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஆண்டுகள் எப்படி முக்கியமான ஆண்டுகள்? அண்ணா விளக்குகிறார். கேட்போம்.

விட்டு வைக்கக் கூடாது

திடுக்கிட வைக்கிறாரே. திகைப்பாக இருக்கிறதே. எரிச்சலூட்டுகிறாரே. ஏதேதோ சொல்லுகிறாரே என்று கூறி இது ஒருபக்கம்.

விட்டு வைக்கக் கூடாது. ஒழித்துக் கட்டியாக வேண்டும். நானே தீர்த்துக் கட்டுகிறேன் என்று மிரட்டியும் தமிழகத்தில் உள்ளோர் பலர் பேசினர், ஏசினர், பகைத்தனர், எதிர்த்தனர், ஏளனம் செய்தனர். மறுப்புரைத்தனர்.

ஆனால் அந்தப் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூலையில் நின்றாகிலும் மறைந்திருந்தாகிலும் அந்தப் பேச்சு 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது.

இவ்வளவு மிரட்டியவர்கள் எப்படி பேச்சைக் கேட்டனர். மூலையில் நின்றாகிலும், மறைந்திருந்தாகிலும் கேட்டனர்.

அந்தப் பேச்சு 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது.

மிரட்டினோர் பணிந்தனர்

எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோ, தானோ என்றிருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர். குதித்தவர்கள் அடங்கினர்.

இந்த எழுத்தோவியத்தின் நயத்தைப் பாருங்கள். கொதித்தவர்கள் அடங்கினர். மிரட்டினோர் பணிந்தனர். அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர். அவருடைய பேச்சோ தங்கு தடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது. மலைகளைத் துளைத்துக்கொண்டு, கற்களை உருட்டிக்கொண்டு, காடு கழனிகளை வளம் பெறச் செய்து கொண்டு, ஓசை நயத்துடன் ஒய்யார நடையுடன் அங்கே பேசுகிறார். இங்கே பேசுகிறார், அது குறித்துப் பேசுகிறார், இது குறித்துப் பேசுகிறார் என்று தமிழ்நாடு இந்த 50 ஆண்டுகளாக கூறி வருகிறது.

வெற்றியின் விளைவு

மனதில் பட்டத்தை சொல்லுவேன். எது நேரிடினும் என்ற உரிமைப் போர் அவருடைய வாழ்வு முழுவதும் அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திட வில்லை. இன்று அனைவரும் பெற்றுள்ளனர். அந்த வெற்றியின் விளைவுகளை இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனதிற்கு சரி என்று பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

அறிவுப் புரட்சியின் முதல் கட்ட வெற்றி இது. இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பாளர் பெரியார்.

இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண்டின் அளவு மிகப்பெரியது. தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.

கே.பிளான்

இந்த நேரத்திலே ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். காமராஜர் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த தந்தியையும் மீறி சென்றார்.

நேரு அவர்களுடைய வற்புறுத்தலிலே பதவியை ராஜினாமா செய்து விட்டு போனார். ‘‘கே’’ பிளான் என்பது உங்களுக்குத் தெரியும்.

--------------------தொடரும் ....."விடுதலை" 14-11-2009

0 comments: