Search This Blog

29.9.22

3-பேய்கள், 5-நோய்கள் - பெரியார்

 

கடவுள், மதம், சாதி, ஜனநாயகம் இம்முன்றும் கற்பனைப் பேய்களே!

 


முதலில் நாங்கள் யார்? என்பது பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டும். அப்போதுதான் எங்கள் கொள்கை உங்களுக்குத் தெளிவாகும். நாங்கள் (திராவிடர் கழகத்தினர்) சமுதாயப் புரட்சிக்காரர்கள் - அரசியல்காரர்கள் அல்ல. இன்று அரசியல் என்றால் தேர்தலில் போட்டிப் போடுவது; எந்த வகையிலாவது வெற்றி பெறுவது, அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வது பதவி, புகழ், பணம் சம்பாதிக்க முயல்வது, தங்கள் சுயவாழ்வை உயர்த்திக் கொள்வது - இதுதான். இது காங்கிரசுக்காரன் முதல் எல்லாக் கட்சிக்காரனும் செய்து வரும் வேலையாகும். மற்றக் கட்சிக்காரர்களுக்கும் அரசியல் என்றால் காமராசரைத் திட்டுவது என்பதும் ஒன்றாகக் கொண்டு இருக்கின்றனர்.

 

இப்படி எல்லாம் கூறுகின்றீர்களே! நீங்கள் யார்? உங்கள் கட்சி மட்டும் என்ன நெய்யில் பொரித்தது? என்று கேட்கலாம். நாங்கள் இந்த ஆட்சியே பித்தலாட்டம். இந்த ஆட்சியே ஒழிய வேண்டும் என்பவர்கள். தேர்தலில் கட்சியின் பெயரால் ஈடுபடக் கூடாது என்று வரையறை வைத்துக் கொண்டு இருப்பவர்கள்.

 

சென்ற மாதம் இந்த ஆட்சி ஒழியவேண்டும் என்பதற்காக இந்திய தேசப்படத்தையே பதினாயிரக்கணக்கானவர்கள் தீயிட்டுக் கொளுத்தியவர்கள். இதன் காரணமாக இராஜத் துவேஷக் (ஆட்சிப் பொறுப்பு) குற்றஞ்சாட்டப்பட்டுப் பலர் தண்டனை அடைந்து சிறையில் இருக்கிறார்கள்; பலர் மீது அரசாங்கம் வழக்குத் தொடுத்து இருக்கின்றது - விசாரணையில் உள்ளது.

 

இதற்கு முன்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே நெருப்பு வைத்துக் கொளுத்தியவர்கள் நாங்கள் என்பதன் காரணமாக இந்த இயக்கத் தலைவர் திரு. கிருஷ்ணசாமி உள்பட பலர் 6-மாதம், 9-மாதம், 1-வருஷம், 2-வருஷம், இரண்டரை, 3-வருஷம் என்று கடுங்காவல் தண்டனை அனுபவித்தவர்கள்.

 

அதற்கு முன்பாக இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பது கண்டு இந்திய அரசாங்கத்தின் கொடிக்கே தீ வைப்போம் என்று எச்சரிக்கை செய்தவர்கள்! இப்படி அரசாங்கத்திற்கு விரோதம் (பகை) ஆனவர்கள் நாங்கள்!

 

மற்றும் நாங்கள் பொதுமக்களாகிய உங்கள் தயவில் கட்சி நடத்த வேண்டும், பிழைக்க வேண்டும் என்ற அவசியத்தில் (கட்டாயத் தேவையில்) இல்லாதவர்கள். ஓட்டுப் பிச்சைக்காக உங்களிடத்தில் வந்து பொய்யும், புளுகும் சொல்லவேண்டிய அவசியத்தில் இல்லாதவர்கள்; ஓட்டுக்காக உங்களை இந்திரன், சந்திரன் என்று புகழ வேண்டாதவர்கள்; "ஓட்டர்கள் (வாக்காளர்கள்) எல்லாரும் முட்டாள்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள்; இந்தச் சனநாயகம் என்பதே வெறும் புரட்டு - பித்தலாட்டமானது" என்று கூறி வருகின்றவர்கள் நாங்கள்.

 

"இப்படியெல்லாம் கூறுகின்ற தாங்கள் காமராசர் ஆட்சியை மட்டும் ஆதரித்து அவர் பதவியில் இருக்க வேண்டும், அவரைப் பதவியிலிருந்து போகாதபடி மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்களே ஏன்?" என்று கேட்கலாம்.

 

நாங்கள் இந்த நாட்டுக்கு நாட்டு மக்களுக்குக் காமராசர் செய்துள்ள நன்மைகளையும், செய்துவரும் நன்மைகளையும் பார்த்துப் பாராட்டுகின்றோம். மற்றவர்கள் ஆட்சியில் நடந்த தீமைகளை எல்லாம் கண்கூடாகப் பார்த்தவர்கள் தானே நாம்? மற்றக் கட்சிக்காரன் கூறுவதுபோல காமராசர் ஒழிந்து விடுகின்றார் என்றே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த (முதலமைச்சர்) இடத்துக்கு யார் வருவார்? பார்ப்பான்தானே வருவான்? அல்லது பார்ப்பன அடிமை தானே வர முடியும்? பார்ப்பானுடைய ஆட்சியில் இதைவிட இன்னும் கேடான நிலைதானே ஏற்படும்?

 

இந்தக் காமராசருக்கு முன் பதவியில் இருந்த நண்பர் (இராசகோபால) ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில் அதற்கு முன் யாரும் செய்ய முடியாத - செய்யாத கேடுகள் எல்லாம் நம்மவருக்குச் செய்ததனைக் கண்டோமே! நம்மவருக்குக் கல்வியிலே, உத்தியோகத்துறையிலே, மற்ற மற்றத் துறைகளிலே எல்லாம் அவரால் (இராஜாஜியால்) ஏற்பாடு செய்த தீமைகளை எல்லாம் நீக்கி நம்மவர்களுக்காக அந்தத் துறைகளின் பாடுபடுகின்ற காமராசரை ஆதரிப்பதில் என்ன தப்புக் கூற முடியும்?

 

இராஜாஜி ஆட்சிக் காலத்தில் அவர், அவனவன் சாதித் தொழிலை அந்த அந்தச் சாதிக்காரன்தான் செய்ய வேண்டும் என்ற வருணாசிரமத் திட்டத்தைக் கொண்டு வந்து புகுத்தினாரே! பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் அரை மணி நேரம் படித்தால் போதும், பாக்கி அரை நேரம் அவன் அவன் சாதித் தொழிலைப் பழகவேண்டும் என்று உத்தரவே போட்டாரே? வண்ணான் வெளுக்கவேண்டும், நாவிதன் சிரைக்க வேண்டும், குயவன் சட்டிப் பானை செய்ய வேண்டும், வேளாளன் ஏர் உழவேண்டும் என்று பொம்மை அல்லவா போட்டுக் காட்டினார்? அதிகம் பள்ளிக் கூடங்கள் தேவையில்லை என்று ஆயிரக்கணக்கான கிராமப் பள்ளிகளை எல்லாம் மூடினாரே! எவர் எந்தக் கட்சிக்காரர்கள் இதுபற்றிக் கேட்டார்கள்! நாங்கள் தான் கூப்பாடு போட்டோம். இந்தத் திட்டத்தை இந்தத் தேதிக்குள் வாபஸ் (திரும்பி) வாங்காவிட்டால் பலாத்தாரத்தில் (வன் செயலில்) இறங்குவோம் என்று தீர்மானம் போட்டோம்.

 

எங்கள் கூப்பாடுக் காரணமாக அவர் உடம்புக்குச் சவுக்கியம் இல்லை என்று கூறி ஆட்சியை விட்டுச் சென்றார். அந்தத் தருணத்தில்தான் காமராசர் பதவிக்கு வந்தார்.

 

பார்ப்பனர்களும், பார்ப்பாரப் பத்திரிகைகளும் அவரைக் கட்டுப்பாடாக எதிர்த்து ஒழிக்கப் பார்த்தன. அதன் காரணமாகவே நாங்களாகவே வலிய அவரை ஆதரிக்க முன்வந்தோம்.

 

காமராசர் (முதலமைச்சர்) பதவிக்கு வந்த உடனேயே இராஜகோபாலாச்சாரியாரால் கொண்டுவரப்பட்ட வர்ணாசிரமக் கல்வித் திட்டத்தை வாபஸ் (திருப்பி) வாங்கினார். இனிமேல் ஒரு நேரம் மட்டும் படிக்கத் தேவையில்லை. இரண்டு நேரமும் படிக்கலாம் என்று உத்தரவு போட்டார்.

 

ஆச்சாரியாரால் மூடப்பட்ட அத்தனை பள்ளிகளையும் திறந்து, மேற்கொண்டும் பல்லாயிரக்கணக்கில் பள்ளிகளைத் திறந்திருக்கிறார்!

 

ஆச்சாரியார் காலத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளிகள் 500-தான் அதுவும் பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில்! அதாவது நம்முடன் மலையாளி, கன்னடியர், ஆந்திரர் ஆகியவர்கள் இருந்த காலத்திலாகும்.

 

ஆச்சாரியார் புதிதாக உயர்நிலைப்பள்ளி வைக்க உத்தரவு கொடுக்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார். காமராசர் ஆட்சிக்கு வந்த பிற்பாடு இன்று 1100- உயர்நிலைப் பள்ளிகள் ஏற்பட்டு உள்ளன. பெரும்பாலும் கிராமங்களிலேயே தான் ஏற்படுத்தியுள்ளனர். ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகச் சோறு, புத்தகம், சிலேட்டு, உடை முதலியன கொடுத்துப் படிக்க ஏற்பாடு செய்து உள்ளார். இதன்படி பல இலட்சம் பிள்ளைகள் நன்மை அடைகின்றனர். அவ்வளவும் நம் பிள்ளைகளே.

 

முன்பெல்லாம் நம் திராவிடப் பிள்ளைகள் கல்லூரியில் சேருவது மிகமிகக் கஷ்டம் (துன்பம்). இராஜாஜி காலத்தில் இருந்ததைவிட இன்று 10, 12- புதிய கல்லூரிகள் காமராசர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இன்று கல்லூரிக்காரன் தங்கள் தங்கள் கல்லூரியில் இத்தனை இத்தனை இடங்கள் உள்ளன. வருகின்றவர்கள் வரலாம் என்று விளம்பரம் போடுகின்றான். இராஜாஜிக் காலத்தில் இஞ்சினியரிங் (பொறியியல்), அக்கிரிகல்ச்சர் (வேளாண்மை) கல்லூரி ஆகியவற்றில பார்ப்பான்தான் 100-க்கு 70, 75- படிப்பான். இன்று காமராசர் வந்த பிற்பாடு நம்மவர் 100-க்கு  70, 80-படிக்க வகை செய்து விட்டார்.

 

இராஜாஜி காலத்தில் 100-க்கு 75- உத்தியோகம் பார்ப்பானுக்குத் தான் கொடுப்பார். பெரிய உத்தியோகங்கள் எல்லாம் அவர்களுக்கே. தம் இனத்துக்காரர்கள் கூன், குருடு, கிழடுகளுக்கு எல்லாம் உத்தியோகத்தைப் பதவிக் காலத்துக்குமேல் நீடிப்புச் செய்தார்.

 

ஆனால், காமராசர் ஆட்சிக்கு வந்த பிற்பாடு நம்மவர்கள் அதாவது 100-க்கு 97-பேராக உள்ள திராவிடர்கள், 100-க்கு 97- பதவிகள் அடைய முடியாவிட்டாலும் 100-க்கு 60, 70- பதவிகளாவது அடைய வகை செய்துள்ளார். தலைமைப் பதவிகளில் பெரும்பான்மையானவைகளில் இன்று நம்மவர் அமர வழிவகை செய்துள்ளார்.

 

இத்தனை நன்மைகளையும் பார்ப்பனர் அல்லாதார் நலனுக்காக என்று அமைக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜஸ்டிஸ் கட்சிக் (நீதிக்கட்சி) காலத்தில்கூடச் செய்ய முடியவில்லை என்று நான் துணிந்து கூறுவேன். இப்படித் தமிழர்களுக்குப் பல்துறைகளிலும் நன்மைகள் செய்து வரும் ஒருவரைத் தமிழர் நலனுக்காகப் பாடுட்டு வரும் நானும், எனது கட்சியும் ஆதரிக்காமல் எப்படி இருக்க முடியும்? அப்படி ஆதரிப்பதில் தவறுதான் என்ன? இப்படிப்பட்டவரை நாங்களும், மற்றக் கட்சிக்காரர்கள் மாதிரி எதிர்த்து ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் நாங்கள் எப்படித் தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆவோம்?

 

நடுநிலையில் இருந்து பொது மக்கள் சிந்திக்கவேண்டும். இவ்வளவு நல்ல காரியம் ஆற்றிவரும் மந்திரி சபைக்குத் (அமைச்சரவைக்கு) தமிழ் மக்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளுபவர்கள் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டியது அவசியம் (கட்டாயத் தேவை) அல்லவா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

சும்மா வயிற்றுப் பிழைப்பிற்காகவும், சுயநலத்திற்காகவும், எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றார்கள் என்றால் பொது மக்களும் அதற்குச் செவி சாய்ப்பதா?

 

தோழர்களே! காலம் அதிகமாகிவிட்டபடியால் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கருத்துகளை எல்லாம் சுருக்கமாகவே எடுத்துச் சொல்லுகிறேன். நான் இப்போது சொல்லப் போகும் கருத்துகள் எல்லாம், வட நாட்டிலேயே நான் போய் இருந்தபோது எடுத்துச் சொல்லிவிட்டு வந்த கருத்துகளாகும்.

 

நம்மைப் பீடித்துள்ள "3-பேய்கள், 5-நோய்கள்" என்பது பற்றி விளக்கலாம் என்று நினைக்கின்றேன். தோழர்களே! நமது மனித சமுதாயத்தை இன்று 3- பேய்கள் பிடித்துக் கொண்டு ஆட்டுகின்றன.

 

ஒன்று : கடவுளும், மதமும்.

இரண்டு : சாதி என்கின்ற பேய்.

மூன்றாவது : ஜனநாயகம் (மக்களாட்சி) என்கின்ற பேய்.

 

தோழர்களே! பேய் என்றால், என்ன அர்த்தம்! இல்லாதது - இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டது என்பதுதான் பொருள். ஆனால் மனிதர்கள் பேய் என்றால் பயப்படுகின்றார்கள். நம் பெண்களையும் பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுகின்றது. உண்மை என்னவென்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொண்டு அஞ்சுவதேயாகும்.

 

எப்படிப் பேய் என்பது இல்லாத ஒன்றோ? அதுபோலவே நம் கடவுளும் - மதமும் உண்மையிலேயே இல்லாதவையாகும். நம்மவர்கள் குழவிக் கல்லில் கடவுள் இருப்பதாக எண்ணி முட்டிக் கொள்ளுகின்றார்கள்.

 

அடுத்தது சாதி : இதுவும் இல்லாத, காண முடியாத ஒன்றாகும். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனாலும், அது எல்லா மனிதனையும் பிடித்துள்ளது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சாதியைக் கூறிக் கொள்கின்றான்.

 

இது இயற்கைக்கு மாறானது. இருக்க முடியாத ஒன்று. ஆனால், மனிதன் இதில் முழு நம்பிக்கை வைத்து ஈடுபட்டு வருகின்றான்.

 

முதலாவது கடவுளும், மதமும் என்கின்ற முதலாவது பேய்களைச் சிறிது பார்ப்போம். நமக்குக் கடவுளே இல்லை. இருக்கின்றது என்று எவராவது கூற முடியுமா? கிறித்தவன், முஸ்லிம் கடவுள் உண்டு என்று கூறுகிறான் என்றால், அதிலாவது ஏதோ அர்த்தம் இருக்கின்றது - உனக்கு என்ன உள்ளது?

 

நான் உங்களைக் கடவுள் நம்பிக்கை அற்றவராக மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறவில்லை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். கடவுள் இல்லை என்று கூறி நடக்க அதிக அறிவு ஆராய்ச்சி வேண்டும். அவ்வளவு தூரம் நம் மக்களிடம் எதிர்ப்பார்ப்பது என்பது இயலாதது. ஆகவே, வைத்துக் கொள்ளுங்கள்.

 

இன்று (1960-இல்) உலகத்திலே 280- கோடி மக்களுக்குமேல் இருக்கின்றார்கள் என்றால், இதில் 100, 120-கோடி மக்களுக்குத்தான் கடவுள் இல்லை; சைனாக்காரனுக்கு இல்லை; ஜப்பான்காரனுக்கு இல்லை; மற்றும் பர்மா, சிலோன் (இலங்கை) போன்ற நாட்டுக்காரர்களுக்கு இல்லை. இவர்கள் எல்லாரும் பவுத்தர்கள். மற்றும் இஷ்யாக்காரனுக்கு இல்லை.

 

ஆனால், கடவுள் உண்டு என்று நம்பும் மக்கள் உலகத்திலே 150-கோடிக்கு மேல் இருக்கின்றார்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எனப்படுபவர்கள் ஆவார்கள்.

 

நீயும் இந்து என்று கூறிக்கொண்டு கடவுள் நம்பிக்கைக்காரர்கள் என்றும் 25, 30- கோடி இருக்கின்றாய். உன்னை எதில் சேர்த்துக் கொள்வது? உண்டு என்பவர் லிஸ்டிலும் (பட்டியல்) சேர்த்துக் கொள்ள முடியாது. நீ வவ்வால் மாதிரிதான்.

 

கிறிஸ்தவனும், முஸ்லிமும் கடவுள் இருக்கின்றது என்று கூறுகின்றான் என்றால், அவன் கூறும் கடவுளுக்கு இலக்கணத்தை வரையறுத்து வைத்துக்கொண்டு இருக்கின்றான்.

 

"கடவுள் உருவமற்றவர் - ஒரே கடவுள்தான் உண்டு. அவர் பிறப்பு, இறப்பு அற்றவர்; கடவுளுக்கு ஒன்றுமே வேண்டாம். கடவுள் அன்பானவர், கருணையே வடிவாக ஆனவர்" என்று கூறுகின்றான். இப்படிக் கருணையே வடிவாக ஆனவர் என்று கூறுகின்றான். இப்படிக் கிறிஸ்தவனும், முஸ்லிமும் கூறும்படியான இலக்கணத்தை உடைய கடவுள் உன்னிடத்தில் (இந்து மதத்தான்) ஏதாவது உண்டா? நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.

 

கிறித்தவனும், முஸ்லிமும் ஒரு கடவுள் என்கின்றான். உனக்கு அப்படியா? ஆயிரக்கணக்கான கடவுள்கள்! படுத்துக் கிடக்கும் கல்லை நிமிர்த்தி வைத்தால் அது ஒரு கடவுள். மரம் எல்லாம் கடவுள்; மாடு கடவுள்; பாம்பு, பருந்து இவை எல்லாமும் கடவுள்.

 

கிறிஸ்தவனும், முஸ்லிமும் கடவுள் உருவம் அற்றவர் அரூபி என்கின்றான். உன் கடவுளுக்கு இரண்டு தலை, 6-தலை, 10-தலை, நான்கு கை, 8-கை, 12-கை! அப்புறம் முகம் ஆனை, உடம்பு மனிதன் மாதிரி. தலை, மனிதன் மாதிரி, உடல் மாடு மாதிரி. மற்றும் முகம் குரங்கு மாதிரி, பன்றி மாதிரி, சிங்கம் மாதிரி! இப்படி எல்லாம் வைத்துக் கொண்டு பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினதுபோல் கூத்தடிக்கின்றாய்.

 

அவன் கடவுளுக்கு ஒன்றுமே வேண்டாம். அவர் நமக்கு வேண்டியதை அளிக்க இருக்கின்றாரே ஒழிய நம்மிடம் அவர் ஒன்றும் எதிர்ப்பார்ப்பவர் அல்ல என்கின்றான்.

 

உன் சங்கதி அப்படியா? உன் கடவுளுக்குச் சோறு வேணும்! ஒரு வேளை இரண்டு வேளை அல்ல நான்கு வேளை! அப்புறம் பெண்டாட்டி வைப்பாட்டி! நகை, துணி, மணி இவ்வளவும் கேட்கின்றது! எவனாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா? சாமிக்கு எதற்காகக் கலியாணம் (திருமணம்)? அப்படித்தான் தொலைகிறது - ஒரு தடவை பண்ணினால் போதாதா? எதற்காக வருஷா வருஷம் பண்ண வேண்டும்? போன வருஷம் பண்ணிய கல்யாணம் என்ன ஆயிற்று? எந்தக் கோர்ட்டில் இரத்தானது? அல்லது செத்துப் போயிற்றா? அல்லது ஓடிப்போயிற்றா? என்று எண்ண வேண்டாமா?

 

கல்யாணம்தான் பண்ணித் தொலைக்கின்றாய்; பிறகு கடவுளுக்கு வைப்பாட்டி ஏன்? கடவுளை வைப்பாட்டி வீட்டுக்குத் தூக்கிச் செல்லும் திருவிழா வேறு நடத்துகின்றாயே - வெளிநாட்டான் கண்டால் சிரிக்கமாட்டானா?

 

அவன், கடவுள் அருளானது, அன்பானது என்கின்றான். உனது எந்தக் கடவுள் இப்படி இருக்கின்றது? உன் கடவுள் எதை எடுத்துக் கொண்டாலும் அவனைக் கொன்றது; இவனைக் கொன்றது. 1000-ம் பேரைக் கொன்றது; 10,000-ம் பேரைக் கொன்றது. ஓர் இனத்தையே கருவறுத்தது - என்று தானே கூறுகின்றாய்? மற்றும் உன் கடவுள் எதை எடுத்துக் கொண்டாலும் கையில் அரிவாள், கொடுவாள், ஈட்டி, வேலாயுதம், சூலாயுதம், கொட்டாப்புளி, தலையைக் கரகரவென்று அறுக்க சக்கரம் இதுதானே உள்ளது? இந்த ஆயுதங்கள் (கருவிகள்) எல்லாம் கருணையே உருவான கடவுளுக்கு எதற்குத் தேவை? இந்த ஆயுதங்கள் திருட்டுப் பயல்களுக்கும், தடத்தில் மறித்து வழிபறி செய்பவர்கள் ஆகியவர்களுக்கும் தானே தேவை? அருளான, அன்பான கடவுளுக்கு இவை எதற்காக வேண்டும்?

 

இப்போது கூறுங்கள் - நாம் கடவுள் துறையில் காட்டுமிராண்டிகளாக இல்லையா என்று?

 

அடுத்து, மதம்தான் உனக்கு என்ன அழுகிறது? உன் இந்து மதம் காட்டுமிராண்டி மதம். கிறிஸ்தவனும், முஸ்லிமும் தங்களுக்கு மதம் இருக்கின்றது என்று கூறுகின்றான் என்றால் அதற்கு அவர்களுக்கு ஆதாரம் இருக்கிறது. உனக்கு ஏதாவது உண்டா?

 

கிறிஸ்தவனை உன் மதம் எப்போது ஏற்பட்டது என்றால் இன்றைக்கு 1960- ஆண்டுகள் ஆகின்றது என்பான். யார் ஏற்படுத்தியது என்றால், இயேசு கிறிஸ்து என்பான். ஆதாரம் என்ன என்றால் பைபிள் என்பான்!

 

முஸ்லிமைக் கேட்டால் முகம்மதிய மதத்தை முகம்மது நபி ஏற்படுத்தினார். உண்டாகி 1400-வருடமாகின்றது. மதத்துக்கு ஆதாரம் குரான் என்பான்.

 

உன் இந்து மதத்தை ஏற்படுத்தியது யார்? ஏற்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? அந்த மதத்திற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால் நீ என்ன கூற முடியும்?

 

நீ உன் மதத்தை இந்து மதம் என்று கூறிக் கொள்ளுகின்றாய். ஆனால், சங்கராச்சாரியார் "இந்து மதம் என்று கூறுவது தவறு; வைதீக மதம் அல்லது பிராமண மதம் என்றுதான் கூறவேண்டும்" என்கின்றார். 1960-ஆம் ஆண்டில் விஞ்ஞான அதிசய அற்புதங்கள் கண்டுபிடிக்கக் கூடிய இந்தக் காலத்தில் இப்படிப்பட்டக் கடவுளையும், மதத்தையும் கட்டிக் கொண்டு அழுதால் நாம் காட்டுமிராண்டிகள் அல்லவா?

 

அடுத்தது சாதி - உலகத்திலேயே எங்கும் இல்லாத சாதி இந்த நாட்டில்தான் இருக்கின்றது. சாதி என்று சொல்லுவதும் நம் சொல். சாதி என்பதற்கு என்ன அர்த்தம் (பொருள்) மனிதனில் காண முடியும்? உலகத்தில் இந்த 30- கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டில்தான் இந்த அக்கிரமம்.

 

மக்களைப் பார்த்து இவர் இவர் இன்ன சாதி என்று கூற என்ன அடையாளம் உள்ளது?

 

நாயில் வேண்டுமானால் சாதி உள்ளது. இது அல்சேஷன், இது புல்டாக், இது கோம்பை, இது இராஜபாளையம் என்று பார்த்தவுடனே கூறலாம். அதுபோலவே, மாட்டில் இது மைசூர் மாடு, இது பர்கூர் மாடு, இது மணப்பாறை, இது காங்கேயம், இது தஞ்சாவூர் மொட்டை என்று படிக்கத் தெரியாதவன் கூடக் கூற முடியும். குதிரையில் இது டில்லி மட்டம், இது அய்தராபாத் குதிரை, இது வேதாரண்ணியம் குதிரை என்று கூற முடியும்? ஒரு பறையன், ஒரு பார்ப்பான், ஒரு செட்டி, ஒரு பிள்ளை, ஒரு முதலி இப்படி 5-பேரையும் வரிசையாகக் கோவணம் கட்டி நிறுத்தி, ஒருவனை விட்டு எந்தச் சாதி இன்ன இன்னார் என்று கேட்டால், காட்ட முடியுமா?

 

பறையன் கருப்பாகவும், பார்ப்பான் சிவப்பாகவும் இருப்பான் என்று கூறுவாய். சிவப்புப் பறையனையும், கருப்புப் பார்ப்பானையும் நிறுத்தி வைத்தால், நீ கண்டு கொள்ள முடியுமா? எனவே, சாதி என்பது இல்லாத ஒன்றாகும். இந்தச் சாதி இருப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை? மக்களை மடையர்களாக முட்டாள்களாக வைத்திருக்க வேண்டுமானால் இது உதவும்.

 

இதுவும் ஒரு புரட்டு ஆகும். இல்லாத ஒன்று - இயற்கைக்கு முரண்பட்டது! ஜனநாயகம் என்றால் மக்களிடம் ஓட்டு வாங்கி மக்கள் ஆளும் ஆட்சி என்று கூறப்படுகின்றது. நம் நாட்டு ஓட்டர்கள் (வாக்காளர்) என்பவர்கள் யார்? ஆண்களில் 100-க்கு 80-பேர் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள். இந்த நாட்டு ஓட்டர்களில் சரி பாதி, பெண்கள் ஆவர். அவர்களிலே 100-க்கு 95-பேர்கள் தற்குறிகள். இவர்களுக்கு யாருக்கு ஓட்டுப் போடுகின்றோம் என்பது தெரியாது. யாருக்கு ஓட்டு என்றால், மரத்துக்கு, மாட்டுக்கு, குதிரைக்கு, பூவுக்கு, வெங்காயத்துக்கு என்று இப்படித்தான் கூறுவார்களே தவிர, இன்னாருக்கு ஓட்டுப் போடுகின்றேன், அவர் இப்படிப்பட்டவர், அவர் கொடிவழி பட்டியல் இன்னது என்று தெரியாது. பெரும்பாலான ஓட்டர்கள் (வேட்பாளராக) நிற்பவரையே பார்த்திருக்க மாட்டார்கள்!

 

நம் நாட்டு ஓட்டர்கள் அணா 2, 4-அணாவுக்கும், ஒரு கப் டீக்கும் தங்கள் ஓட்டை விற்பவர்கள். தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருக்கும் ரிப்போர்ட்டின்படி ஓட்டர்கள் அயோக்கியர்கள் - தேர்தல் காலங்களில் கள்ள ஓட்டுப் போடாதிருக்க ஓட்டர்கள் கையில் கரி பூசப்பட்டது. ஆனால், அதனை எப்படியோ அழித்துவிட்டு வந்து மறுபடியும் மறுபடியும் திருட்டு ஓட்டுப் போட்டு விடுகின்றார்கள். எனவே, இந்தத் திருட்டு ஓட்டைப் போக்க அம்மை குத்திக் கையில் காயம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

 

அந்தச் சமயத்தில் நான் சென்னேன், "ஓட்டர்கள் ஓட்டுப் போடுங்காலத்தில் யார் மீது சந்தேகமாக இருக்கின்றதோ அவர்களை ஃபோட்டோ எடுத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் திருட்டு ஓட்டும் செத்த ஓட்டும் வர முடியாது" என்றேன். என்னவோ இப்போது ஃபோட்டோ எடுப்பது பற்றி ஆலோசிக்கின்றார்களாம். நிற்பவர்களும் என்ன செய்தாவது எந்த வழியிலாவது ஜெயித்தால் போதும் என்று துணிந்து பணம், காலித்தனம் முதலியவற்றைப் பயன்படுத்துகின்றார்கள். தேர்தல் காலங்களில் அபேட்சகர் செலவு செய்ய இவ்வளவுதான் என்று அரசாங்கம் ஒதுங்கி இருக்கும் பணத்திற்கு மேல் இரண்டு பங்கு, மூன்று பங்கு செலவு செய்துவிட்டுப் பொய்க் கணக்கு எழுதி அரசாங்கத்திற்குக் காட்டுகின்றார்கள்.

 

எனவே, இந்தத் தேர்தல் என்பது எவ்வளவு யோக்கியமானவர்களையும் அயோக்கியர்களாக, நாணயக் குறைவு உடையவர்களாக ஆக்கி விடுகின்றது! இதனால் ஓட்டர்கள், நிற்பவர்கள் மட்டும், ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு உடையவர்களாக ஆகவில்லை. நாட்டு மக்களின் பொது ஒழுக்கம், நாணயம் ஆகியவை இதனால் பாதிக்கப்படுகின்றன.

 

இந்த ஜனநாயகப் புரட்டுக்கு இன்று சரிவு காலம் ஏற்பட்டு உள்ளது. படித்தவர்கள், அறிவாளிகள், சட்டதிட்டங்கள் நன்கு உணர்ந்தவர்கள் - அப்படிப்பட்ட மக்களைக் கொண்ட அனேக நாடுகளிலேயே இன்று சனநாயகம் (மக்களாட்சி) வீழ்ச்சி அடைந்துவிட்டதைக் காண்கின்றோம்! அந்த நாடுகளில் எல்லாம் இன்று இராணுவ ஆட்சி, இராணுவ நாயகம் ஆட்சி புரிவதைத் தான் காண்கின்றோம்! எனவே, சனநாயகம் என்பதும் இருக்க முடியாத - இயங்க முடியாத ஒன்று ஆகும்

 

அடுத்து 5-நோய்கள் என்பதைப் பற்றிக் கொஞச்ம் பார்ப்போம்

 

பார்ப்பான் ஒரு நோய்.

 

பார்ப்பான் பத்திரிகைகள் ஒரு நோய்

 

அரசியல் கட்சிகள் ஒரு நோய்

 

தேர்தல் ஒரு நோய்.

 

சினிமா ஒரு நோய்.

 

இந்த 5-நோய்களும் மனித சமுதாயத்தைப் பற்றி அரித்துக் கொண்டே வருகின்றன

 

இவன் (பார்ப்பான்) இந்த நாட்டுக்குக் குஷ்டரோகத்தை (தொழுநோயை) விடக் கொடிய நோய் ஆவான்! அவன் நம்மை வாழ விடமாட்டான்! நம்மை ஏய்த்துப் பிழைப்பதோடு நம்மை முன்னுக்கு வரவும் விடமாட்டான்! நம்மை விடக் காட்டுமிராண்டிகளாக இருந்த வெள்ளைக்காரன், நீக்கிரோக்கள் எல்லாரும் இன்று எவ்வளவோ முன்னுக்கு வந்துவிட்டார்கள்

 

ஆனால், நாம் மட்டும் 3000, 4000-ஆண்டுகளாகக் காட்டுமிராண்டிகளாக, கீழ் மக்களாகவே இருக்கின்றோம் என்றால் அதற்குக் காரணம் இந்தப் பார்ப்பனர்தான்

 

இந்தப் பார்ப்பனர்களால் இந்த நாட்டுக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு நன்மையாவது உண்டா

 

இந்த நாட்டுக்கு நெசவாளர் வேண்டும். அவன் இல்லாவிட்டால் எல்லோரும் அம்மணமாகத் திரியவேண்டி வரும். நாவிதர் வேண்டும் - அவன் இல்லாவிட்டால் எல்லோரும் சிரைத்துக் கொள்ள முடியாமல் கரடிக் குட்டி மாதிரி ஆகிவிட வேண்டி வரும். கக்கூஸ் (மலக்கழிவு) சுத்தம் செய்பவர் இல்லாவிட்டால் ஊரே நாறிவிடும். உழுபவன் இல்லாவிட்டால் எல்லோரும் பட்டினி கிடக்க வேண்டிவரும். ஆனால், பார்ப்பான் இல்லாவிட்டால் நாட்டில் என்ன கெட்டுப் போகும்? எந்தக் காரியம் நின்று விடும்? எதற்காகப் பார்ப்பான் தேவை? எனவே, இந்த நாட்டு சமுதாய முன்னேற்ற வளர்ச்சியினைக் குறைத்துக் கொண்டே வரும் குட்டரோகம் இந்தப் பார்ப்பான் ஆகும்

 

அடுத்தது இந்த நாட்டுப் பத்திரிகைகள் இவை இந்த நாட்டைக் கெடுத்து வரும் ஒரு கொடிய நோயாகும். இந்த நாட்டுப் பத்திரிகைகளில் பெரும்பகுதி இந்தப் பார்ப்பனர்கள் கையில்தான் உள்ளன. அதன் பிரச்சாரம் - வேலை எல்லாம் நம்மை ஒழிக்கவும், நம்மவர்களின் வளர்ச்சியை ஒடுக்கித் தலையெடுக்க ஒட்டாமல் தடுக்கவுமே ஆகும். இவை இந்த நாட்டுக்கு க்ஷய நோய் (காசநோய்) மாதிரியாகும்.

 

அடுத்து, பார்ப்பனர் அல்லாதார் பத்திரிகைகள் சில இருக்கின்றன என்றாலும் அவைகள் எல்லாம் பார்ப்பனக் கூலிகளால் - அடிமைகளால் நடத்தப்படுவன ஆகும். அவை பார்ப்பானுக்கு நல்லப் பிள்ளையாக நடந்து அவர்களிடமும் நன்மதிப்பும், பெயரும், விளம்பரமும் அடையத்தான் முயலுகின்றன. எனவே, எல்லாப் பத்திரிகைகளுமே இந்த நாட்டின் - இந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையில்லாமல் கேடு விளைவிப்பனவாகவே இருந்து வருகின்றன

 

இந்த அரசியல் கட்சி என்னும் நோய்க்கு ஆட்படாமல் தப்பித்து உள்ள மனிதர்களே மிக மிகக் குறைவு! எவனை எடுத்துக் கொண்டாலும் நான் அந்தக் கட்சி! நான் இந்தக் கட்சி! வெங்காயம் இப்படித்தான் கூறுவான்! இந்த அரசியல் கட்சிகளால் இந்த நாட்டுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்படவில்லை என்றாலும் - தீமைதான் மிகுதியாக ஏற்படுகின்றன

 

மக்களிடத்தில் என்ன என்ன பொய்யையும், புளுகையும் கூறினால் மக்கள் செவி சாய்ப்பார்கள் என்று கருதி அவற்றைப் புளுகி, மக்களை ஏமாற்றி - எப்படியாவது ஓட்டுப் பெற்றுச் சட்டசபைக்குப் போக வேண்டும். அங்கு போய்ப் பொறுக்கித் தின்ன வேண்டும்! விளம்பரம் பெறவேண்டும்! தன் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வேலை இன்னது என்று யாராவது கூற முடியுமா

 

இது நான் முன் கூறியதுபோல நல்ல மனிதனையும் அயோக்கியனாக ஆக்கவல்லது! ஜனங்களை (மக்களை) நாணயம் அற்றவர்களாக ஆக்கிவிட வல்லதாக இருக்கிறது (அரசியல்).

 

இந்த நோய் எல்லா மக்களையுமே பற்றிக் கொண்டு இருக்கின்றது! மனிதன் இன்று சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடந்தாலும் கிடப்பான். ஆனால், சினிமா பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைமையில் கொண்டு வரப்பட்டுள்ளான். ஒரு தடவை பார்த்துத் தொலைந்தாலும் போகின்றது எனலாம். ஒரு படத்தையே பல தடவைகள் பார்க்கின்றார்கள். கிழடு - கிண்டு எல்லாரும் இன்று சினிமா பார்க்கவில்லை என்றால், தூக்கம் வரவில்லை என்கிறதுகள்! நாட்டில் சம்பளம் போதவில்லை என்று போராட்டம், வேலை நிறுத்தம் செய்கின்றார்கள். அவர்கள் எத்தனை தடவை சினிமா பார்க்கிறார்கள் தெரியுமா? அதுவும் குடும்பத்தோடு போய்ப் பார்க்கிறார்களே? 6-மணி ஆட்டத்துக்குப் பகல் 3-மணிக்கே அல்லவா வேகாத வெய்யிலில் ஓடி வரிசையில் நிற்கின்றான். எனவே, இந்த நாட்டைப் பிடித்துள்ள 1.கடவுள், மதம், 2.சாதி, 3.ஜனநாயகம் என்ற மூன்று பேய்களும் ஒழியவேண்டும்

 

அதுபோலவே, இந்த நாட்டை உருக்குலைத்துவிடும் 1.பார்ப்பான்! 2. பார்ப்பனப் பத்திரிகைகள்! 3.அரசியல் கட்சிகள், 4.தேர்தல், 5.சினிமா ஆகிய 5- நோய்களும் ஒழியவேண்டும்.

 

       ------------------------ 04.07.1960 அன்று சின்னாளப்பட்டியில் பெரியார் .வெ.ரா சொற்பொழிவு. 'விடுதலை', 22.07.1960