Search This Blog

31.7.09

ஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரசின் கையில்தானிருக்கிறது!




புழுவா, புலியா?


அகதிகள் முகாம்களில் முள்வேலிகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் தமிழர்கள். வேளைக்கு உணவு இல்லை; குடிக்கவோ நீரில்லை, ஒண்டு குடிசையில் உட்காருவதற்கு இடமில்லாத அளவுக்கு நெரிசல், கழிவிடங்களோ கேட்கவே வேண்டாம். அய்.நா. பொதுச்செயலாளர் பான்கீமூனும், இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் பார்த்து கண்ணீர் வடித்திருக்கின்றனர்.

ஆனால், இந்து ராமுக்கு மட்டும் இவையெல்லாம் தெரியவே தெரியாது; முகாம்களில் தேனாறும், பாலாறும் பொங்கி நுரை தள்ளி ஓடுவதாகக் கூறுவார். இந்து ராம் முன்மொழிந்ததை, துக்ளக் சோ வழிமொழிவார். காரணம், இனம் இனத்தோடு சேர்கிறது.

விளையாட்டுக்கல்ல, இதே இந்து ஏட்டில் (31.8.1983) அதன் செய்தியாளர் எஸ். பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரையின் அடிப்படையில்தான் கூறுகிறோம்.

இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனேயிடம் மேற்கு வங்கப் பத்திரிகையாளர் (அமிர்தபஜன் பத்திரிகை) ஒருவர் பேட்டி கண்டார்.

ஜெயவர்த்தனே: நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியிலிருந்து வந்திருக்கிறீர்கள் எனவே சிங்களவர்க்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள மைனாரிட்டிகளான தமிழர்கள் திராவிட இனத் தொடர்புடையவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என்று அதிபர் ஜெயவர்த்தனே மிக வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

இந்தப் பேட்டியின் அடிப்படையில் இந்து ஏட்டின் செய்தியாளர் எஸ். பார்த்தசாரதி தம் கட்டுரையில் என்ன எழுதியிருக்கிறார்?

சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் தமிழர் சிங்களர் போராட்டத்தை ஆரியர் திராவிடர் போராட்டமாகவே கூறுகிறார்கள். படித்த சிங்களவர்களின் எண்ணம்கூட எந்த வழியில் செல்கிறது என்பதற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டு.

இப்படி சொல்வது விடுதலையல்ல இந்து ஏட்டில்தான் (31.8.1983) கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்து ராம், துக்ளக் சோ, தினமணி வைத்தியநாதய்யர் வகையறாக்கள் எப்படி ஈழத் தமிழர்ப் பிரச்சினையை அணுகுவார்கள் எழுதுவார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை.

தமிழர் முகாம்கள்பற்றி உண்மைக்கு மாறாக அவர்கள் எழுதுவது அவாளுக்கே உரிய தமிழின வெறுப்புதான்.

விரைவில் தமிழர்கள் அவரவர் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று உலகத்தை ஏமாற்றிட அதிபர் ராஜபக்சே சொல்லிக் கொள்வார். இடையிலே எதையாவது கிளப்பிவிட்டுப் பிரச்சினையைத் திசை திருப்பி விடுவார்.

இப்பொழுது என்ன தெரியுமா? தமிழர்கள் முகாம்களில் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் இருக்கிறார்களாம். இது ஒன்று போதாதா காலத்தை நீட்டித்துக் கொண்டே போக!

ஒன்று மட்டும் உண்மை! உரிமையும், தன்மானமும் நசுக்கப்படும்பொழுது புழுக்களாகவே எப்பொழுதும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதே! புலிகளாக ஆவதும் தவிர்க்கப்பட முடியாததுதானே!

ஒட்டுமொத்த ஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரசின் கையில்தானிருக்கிறது!

-------------- மயிலாடன் அவர்கள் 31-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

150 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வின் கூற்று நிரூபணம்




கடலுக்குள் வாழும் உயிரினங்கள் அனைத்துமே ஆய்வு என்ற ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள். அவ்வாறு கடலுக்குள் வாழும் சிறு மீன் ஒன்றினால் , பரிணாம வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் டார்வினின் கூற்று 150 ஆண்டுகளுக்குப் பின் நிரூபணம் ஆகி உள்ளது. சூரியனுக்கு கீழே ஆழ்கடலில் பூமத்திய ரேகைக்கும், துருவங்களுக்குமிடையே குளிர்ந்த நீரும், வெப்ப நீரும் மாறி மாறி ஒன்று சேருவதுதான் சமுத்திரக் கலவை எனப்படுகிறது. கடல் உயிரின ஆய்வில் மிக முக்கியமானதாக கருதப்படும் இதற்கும் பூமியின் தட்ப வெப்ப நிலை மாற்றத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால்தான் மீன் மற்றும் கடலில் நீந்தும் உயிரினங்கள் நீரோட்டத்தின் போக்கிலேயே நீந்துகின்றன என்ற கருத்தை சார்லஸ் டார்வின் 19 ஆம் நூற்றாண்டிலேயே தெரிவித்தார்.ஆனால் அவருடைய கருத்தை ஏற்க அன்றைய விஞ்ஞானிகள் மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக தற்போது தீவிர ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் , பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றில் உள்ள உப்பு ஏரியில் ஆய்வு நடத்தினர். அதில் மீன்கள் நீந்திச் செல்லும் பாதையில் சாயத்தைக் கலந்தனர். இது பற்றி வீடியோ படமும் எடுத்தனர். அதில் ஆழமான குளிர்ந்த நீர் உள்ள பகுதியிலிருந்து , மேற்பரப்பில் உள்ள வெப்ப நீருக்கு மீன்கள் செங்குத்தாக நீந்திச் செல்லும் போது குளிர்ந்த நீரும் அதனைப் பின்பற்றிச் செல்வதைக் காணமுடிகிறது. இதிலிருந்து கடலில் குளிர்ந்த நீரும், வெப்ப நீரும் இரண்டறக் கலந்திருப்பது தெளிவாகி உள்ளது.

இதே கருத்தைதான் டார்வின் 150 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருந்தார்.அக்கருத்து இப்போது ஒரு மீன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

--------------------"விடுதலை" 30-7-2009

உலக நாடுகள் -தூரப்பார்வை - சோமாலியா-தென் ஆப்பிரிக்கா


சோமாலியா

தற்போது ஏமன் எனப்படும் ஏடன் 1839இல் பிரிட்டனால் ஆக்ரமிக்கப்பட்டது. 1920இல் தற்போது சோமாலியா எனப்படும் நாடு பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளின் பாதுகாப்பில் இருந்தது. 1941இல் நாட்டின் முழுப் பகுதிக்கும் பிரிட்டன் உரிமை எடுத்துக்கொண்டது. 1950இல் உலக நாடுகள் மன்றத்தின் ஆணைப்படி இத்தாலி இந்த நாட்டின் பொறுப்பை ஏற்றது. 1960இல் பிரிட்டனும் இத்தாலியும் சேர்ந்து சோமாலி நாட்டுக்கு (பிரிட்டிஷ் சோமாலிலாந்து, இத்தாலி சோமாலிலாந்து) விடுதலை தந்தனர். அய்க்கிய சோமாலியக் குடியரசு 1960 ஜூலை முதல் தேதியில் உருவானது.

1991இல் நாட்டிலுள்ள ஏராளமான இனக் குழுக்கள் எப்படியோ ஆயுதங்களைப் பெற்று தங்களுக்கென தனித்தனிப் பிரதேசங்களை உருவாக்கிக் கொண்டனர். அதில் ஒன்று சோமாலிலாந்து. சோமாலி தேசிய இயக்கம் எனும் அமைப்பு பழைய பிரிட்டிஷ் சோமாலிலாந்து பகுதியில் செல்வாக்கு பெற்று அதனைத் தனி நாடாக அறிவித்தது. நாட்டின் பாதுகாப்பு, குடியரசுத் தலைவர், தனி நாணயம் முதலிய எல்லாம் உள்ளன. சர்வதேச அங்கீகாரம்தான் இல்லை.

2002இல் நாட்டின் தென் பகுதியில் போர்ப்படைத் தளபதிகள் 6 மாவட்டங்களைக் கொண்டு தனி அரசு அமைத்தனர். போரில் ஈடுபட்ட பிறகு குழுக்களுடன்அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

ஆப்ரிகாவின் கிழக்குப் பகுதியில் எதியோப்பியா வுக்குக் கிழக்கே உள்ள இந்நாட்டின் பரப்பு 6 லட்சத்து 37 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 89 லட்சம். மக்கள் அனைவரும் சன்னி முசுலிம்கள். ஆட்சி மொழி சோமாலி, ஆபி, இத்தாலி, இங்கிலீஷ் பேச்சு மொழிகள்.

குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் பிரதமர் ஆட்சித் தலைவராகவும் உள்ளனர். இவ்வளவு பெரிய நாட்டில் இருப்புப் பாதையே இல்லை. சுமார் 22 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மட்டுமே சாலை வசதிகள் உண்டு. பாலை நிலம் மிகுந்த இந்நாட்டில் வறுமைதான் எங்கும்.

தென் ஆப்பிரிக்கா

1480இல் போர்த்துகீசியரான பார்த்தலோமு டயஸ் என்பவர்தான் ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் பயணித்தார். 1497இல் வாஸ்கோடகாமா, நேடாலில் கரையிறங்கினார். 1652இல் டச்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனியை ஜான்வான் ரீபீக்டேபிள் கூல் பகுதியில் அமைத்தார். இந்தப் பகுதியை பிரிட்டன் 1795இல் கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். 1840இல் டச்சு நாட்டைச் சேர்ந்த ஆப்ரிக்க போயர் இனத்தவர் ஆரஞ்சு சுதந்திர நாடு, டிரான்ஸ்வால் ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். 1879இல் ஜுலு மக்களைத் தோற்கடித்த பிரிட்டிஷார் மீண்டும் ஆங்கிலேயர் - போயர் யுத்தத்தைச் சந்தித்தனர். டிரான்ஸ்வாலும், ஆரஞ்சு சுதந்திர நாடும் தன்னாட்சி உரிமை பெற்ற பிரிட்டனின் குடியேற்ற நாடுகளாயின.

1910இல் தென்ஆப்ரிக்க யூனியன் உருவாக்கப் பட்டது. 1912இல் ஆப்ரிக்க தேசிய மாநாட்டுக் கட்சி தொடங்கப்பட்டது. 1948இல் ஆட்சிக்கு வந்த தேசியக்கட்சி இன ஒதுக்கல் கொள்கையான நிற வேற்றுமையைக் கடைப்பிடித்தது. தேசிய மாநாட்டுக் கட்சி இந்த முறையை எதிர்த்தது. அதன் தலைவர் நெல்சன் மண்டேலா. கட்சி தடை செய்யப்பட்டது. 155 தலைவர்களை சிறையில் அடைத்தது. 1961இல் குடியரசு நாடென அறிவித்து பிரிட்டிஷ் காமன் வெல்த்திலிருந்து விலகிக் கொண்டது.

ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுச் சதிச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி 1964இல் நெல்சன் மண்டேலாவைச் சிறையில் தள்ளியது அரசு. டி கிளெர்க் என்பார் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆப்பிரிக்க தேசிய மாநாட்டுக் கட்சி மீதான தடை நீக்கப்பட்டு நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகாலச் சிறை வாழ்வுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். நிற வெறியின் அடிப்படையிலான இன ஒதுக்கல் கொள்கை விலக்கிக் கொள்ளப்பட இதற்குக் காரணமாக இருந்த நெல்சன் மண்டேலாவுக்கும் டி கிளார்க்குக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1994இல் நடந்ததேர்தலில் நெல்சன் மண்டேலா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் நாடு பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் இணைந்தது.

ஆப்ரிகக்கண்டத்தின் தென் முனை நாடான தென் ஆப்ரிகாவின் பரப்பு 12 லட்சத்து 19 ஆயிரத்து 912 சதுர கி.மீ. மக்கள் தொகை 4 கோடி 42 லட்சம். மக்களில் 68 விழுக்காடு கிறித்துவர். எல்லா உயிரினங்களுக்கும் (தாவரங்கள் உள்பட) ஆத்மா உண்டு எனும் பழமை வாத நம்பிக்கை கொண்டோர் 29 விழுக்காடு உள்ளனர். பல்வேறு ஆப்ரிக்க மொழிகளைப் பேசும் மக்கள் உள்ளனர்.

31.-5.-1910 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இக்குடியரசு நாட்டுக்குக் குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். 50 விழுக்காடுக்கு மேல் உள்ள மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர். 25 விழுக்காடுக்கு மேல் வேலை கிட்டாதோர் உள்ளனர்.

----------------"விடுதலை" 307-2009

ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை செய்யும் கொடுமை


உ.பி. கொடூரம்!

உத்தரப்பிரதேசம் மீரட் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவரும், முசுலிம் பெண்ணும் காதலித்தனர் என்பதற்காகக் கொல்லப்பட்டுள்ளனர். குடும்பத்தின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் கூறியதாவது:

இதுபோன்று பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் அவமானமாகவே கருதவேண்டும்.

குடும்பக் கவுரவத்தை காப்பாற்றுவதற்காக பெண்கள் கொல்லப்படுவதை அடையாளம் காணுவதோ, அவற்றை வகைப்படுத்துவதோ கடினமான செயல். இந்தக் குற்றத்தைத் தடுப்பதற்கு தனிப்பட்ட சட்டம் ஏதும் இல்லை. இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்மூலம்தான் இதுபோன்ற குற்றங்களை அணுகுகிறோம்.

எனினும், குடும்பக் கவுரவத்தைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை அதிகரித்துவரும் விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கல்வியறிவும், விழிப்புணர்வும் மிகவும் பின்தங்கி உள்ளன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய அமைப்புகளும் அங்குக் கிடையாது. கான்ஷிராம் அவர்கள் ஒரு முயற்சியை மேற்கொண்டார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் கருத்துகளைப் பரப்பவேண்டும் என்று எண்ணினார்.

உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் அரசு சார்பாகவே மூன்று நாள்கள் பெரியார் மேளாவை நடத்தச் செய்தார் (1995). அப்பொழுதும் முதலமைச்சர் செல்வி மாயாவதிதான்.


கான்ஷிராம் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் எண்ணியது நிறைவேற்றப்படாத நிலைதான் ஏற்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு, எந்த நோக்கத்துக்காக பகுஜன் சமாஜ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தையும் குழிதோண்டிப் புதைத்து பச்சைப் பதவிப் பித்துக்காக சித்தாந்தங்களைப் பலி கொடுத்துவிட்டார் மயாவதி. அந்த வகையில் சாதாரண அரசியல்வாதி என்று தனக்குத்தானே நிரூபணம் செய்துகொண்டு விட்டார்.

பெருமக்கள் பட்டியலிலிருந்து தந்தை பெரியார் அவர்களையே நீக்கி விட்டார் என்றால், இதற்குமேல் எதைச் சொல்லவேண்டும்?

சரியான சட்டங்கள் இல்லை என்று உள்துறை அமைச்சர் குறைபட்டுக் கொண்டார். தவறு நடக்கிறது என்று தெரிந்த நிலையில், அதனைக் களைய எந்த வகையில் சட்டம் இயற்றலாம், நிருவாகத்தை நடத்தலாம் என்று தீர்மானிப்பதுதான் உள்துறை அமைச்சரின் கடமையாகும். அதிகாரம் இல்லாத மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு அவரும் ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை.

இந்தியத் தண்டனைச் சட்டத்தைக் கொண்டே குற்றவாளிகளைத் தண்டிக்கலாம் என்றால், அதனைக் கறாராகக் கடைபிடிக்கவேண்டியதுதானே!

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை இப்பொழுது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியும் சரி, முன் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவரும் பாரதீய ஜனதா கட்சியும் சரி பிற்போக்குத்தனமான சிந்தனை உடையவைகளே!

முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கும் சரி, காங்கிரசு கட்சிக்கும் சரி, சமுதாயச் சழக்குகளைச் சரி செய்வதில் சரியான பார்வை அங்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சனாதனவாதம் பேசும் பார்ப்பனர்கள் உ.பி.யில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

அண்மையில் சூதாட்டம் ஒன்றில் தன் மனைவியை வைத்துப் பகடையாடினான் என்ற ஒரு செய்தி கூட இதே உத்தரப்பிரதேசத்திலிருந்துதான் வெளிவந்தது.

சாமியார்களும், மவுடீகவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் நடமாடும் பூமி அது. ராமர் ஜென்மபூமி என்று சொல்லப்படுவதும், கும்பமேளா நடை-பெறுவதும் எல்லாம் கூட அங்குதான்.

கல்வி வளத்தைப் பெருக்கி, பாடத் திட்டத்தின்மூலம் சீர்திருத்த எண்ணங்களைப் புகட்டி புதிய தலைமுறையை வளர்த்தெடுக்கும் பொறுப்பு அங்கு தேவைப்படுகிறது.

சூத்ரா போன்ற அமைப்பு அங்கு அண்மையில் தோன்றியுள்ளது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கருத்துகளைத் தாங்கியவர்கள் அவர்கள். அவர்களின் பணிகள் மேலோங்கவேண்டும். படித்தவர்கள் கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அமைப்பினை உருவாக்கி ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமைக்கு எதிரான எண்ணங்களை மேலோங்கச் செய்யவேண்டும்.

நடைமுறை குற்றவியல் சட்டங்களையும் சரியாகப் பயன்படுத்தி குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை செய்யும் கொடுமைக்கு ஒரு முடிவு ஏற்பட முடியும்.

-----------------------"விடுதலை"தலையங்கம் -307-2009

பெரியார் பிறந்திருக்காவிட்டால் ....?


பெரியார் பிறந்திருக்காவிட்டால் நாம் படித்திருக்க முடியுமா? அல்லது பதவிக்குத்தான் சென்றிருக்க முடியுமா?

கண்ணுகுடி மேற்கு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு


பெரியார் பிறந்திருக்காவிட்டால் நாம் படித்திருக்க முடியுமா? அல்லது பதவிக்குத்தான் போயிருக்க முடியுமா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி பதிலளித்தார்.

உரத்தநாடு வட்டம் கண்ணுகுடி மேற்கில் 18.7.2009அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பெரியாருக்கு எடுத்த நன்றித் திருவிழா

நம்முடைய செயலவைத் தலைவர் குறிப்பிட்டதைப் போல இந்த விழா அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு இந்த கண்ணுகுடி மேற்கில் சிலை எடுத்த விழா இருக்கிறதே அது இவ்வூர் மக்கள் கட்சிக் கண்ணோட்டம், ஜாதி, மதக்கண்ணோட்டம் எத்தகைய பண்பு நெறியினுடைய உச்சத்திற்குச் சென்று, நன்றி காட்டக் கூடிய அளவிற்குத் தந்தை பெரியாருக்கு ஒரு நன்றித் திருவிழாவாக இந்தத் திருவிழாவை அமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கின்ற நேரத்திலே நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அவடைவதோடு அவர்களைப் பாராட்டவும் செய்கிறேன்.

இதிலே கலந்துகொள்வதிலே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி, எனக்கு மகிழ்ச்சி, மனிதநேயருக்கு மகிழ்ச்சி, காந்தி அவர்களுக்கு மகிழ்ச்சி, செயலவைத் தலைவர் அவர்களுக்கு மகிழ்ச்சி, பதிவாளர் அவர்களுக்கு இப்படி எல்லோருக்கும் மகிழ்ச்சி இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையிலே, நான் அதிகமான அளவிற்கு இந்த நிகழ்விலே மகிழ்ச்சி அடையக்கூடிய ஒன்று, ஒரு பேறு என்று கருதக்கூடிய ஒன்று.

ஜாதி ஒழிப்பிற்காக 48 பேர் மறைந்தார்கள் ஜாதி ஒழிப்புப் போரிலே இந்த பகுதியிலே 48 தியாக சீலர்கள் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே இன்றைக்கும் அவர்கள் நிறைந்திருக்கக் கூடியவர்களாக இருக்கக் கூடியவர்கள்.

48 பேர் இன்றைக்கு இல்லை என்றாலும் அவர்களுடைய பிரதிநிதிகளைப் போல, இரண்டு போராட்ட வீரர்கள், அன்றைக்கு இளைஞர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு முதியவர்களாக இருந்து இங்கே வந்து அவர்களுக்கு நான் சிறப்புச் செய்தது அது எனக்குக் கிடைத்த பேறு என்று நினைத்து அதைத்தான் நான் மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

அவர்கள் செய்த தியாகம் தான்

ஏனென்றால், அவர்களுடைய தியாகம்தான் எங்களை எல்லாம் இந்த மேடையிலே நிறுத்தியிருக்கிறது. அவர்கள் எதையும் கருதவில்லை. அவர்கள் மனு போடவில்லை. அவர்கள் புகழுக்கோ, பதவிக்கோ அல்லது வேறு எந்த ஒரு வாய்ப்புக்கோ நினைக்காமல் பல சங்கடங்களை அனுபவித்தவர்கள்.

பட்டுக்கோட்டை இராமசாமி மணல் மேடு வெள்ளைச்சாமி

அதிலும் இங்கிருந்து சென்றவர்கள் எல்லாம் திருச்சி சிறையிலே அன்றைக்கு அவதிப்பட்ட நிலை இன்றைக்கும் நினைவிலே நிற்கிறது. பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி இவர்களைப் போன்றவர்கள், மூவாயிரம் பேருக்கு மேலாக அரசியல் சட்டத்தை எரித்து ஜாதி ஒழிப்பு போராட்டத்திற்கு அவர்கள் சென்றிருக்கின்றார்கள்.

ஆனால், இன்றைக்கு எதை நினைத்து அவர்கள் மகிழ வேண்டும் என்று சொன்னால், எந்த லட்சியத்திற்காக தந்தை பெரியார் அவர்களுடைய ஆணையை ஏற்று எதையும் கருதாது அவர்கள் சிறைக்குச்சென்றார்களோ, அந்தப் பெரியாரின் லட்சியம் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுடைய அய்ந்தாவது முறையின் பொற்கால ஆட்சியிலே, முழுமையாக நிறைவேற்றப்பட்டது. ஜாதி ஒழிப்பிற்காகத்தான் இவர்கள் சிறைக்குச் சென்றார்கள். இன்றைக்கு நடைமுறையிலே, சட்டப் பூர்வமாக ஜாதியை ஒழிப்பதற்காக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்தான் என்ற அந்த சட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாக இன்றைக்குத் தெளிவாக அதை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். எனவே, நம்முடைய சூத்திரப்பட்டம் இழிபட்டம் நிலைத்திருக்க முடியாத அளவிற்கு அது அழிக்கப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் பாக்கியிருக்கிறது

இன்னும்அது முழுமையான வடிவம் பெறுவதிலே கொஞ்சம் பாக்கியிருக்கிறது. அது நீதிமன்-றங்களாலே தடை என்று சொல்லக்கூடிய அளவிற்கு தடை கூட அல்ல, கொஞ்சம் குறுக்கே நிற்கிறது அவ்வளவு தான். ஆனால், அவர்கள் எந்த லட்சியத்திற்காக தியாகம் செய்தார்களோ, தங்கள் வாழ்வை இழந்தார்களோ எதையும் அவர்கள் பெறவில்லை இன்னமும்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு லட்சியத்தை அவர்கள் பெற்றதிலே, மிகப்பெரிய மனநிறைவு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் தந்தை பெரியார் அவர்கள் எந்த லட்சியத்தை எடுத்து நம்முன்னாலே வைத்தார்களோ, அந்த லட்சியம் என்றைக்கும் தோற்றுப்போகாது.

நிச்சயமாக வெற்றி பெற்றே தீரும் என்கிற அளவுக்கு இன்றைக்கு நாடு தழுவிய அளவிலே போராட்டம் வெற்றி அடைந்து கொண்டுவருவதைப் பார்க்கின்றோம். அருமை நண்பர்களே! நானே பலமுறை இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். ஒரு முறை அய்யா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு கூட அன்னை மணியம்மையாரும் நானும் இங்கே வந்து இங்குள்ள பள்ளி கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டோம்.

தண்டராம்பட்டு பகுதியாக இருந்தாலும் கண்ணுகுடி பகுதியாக இருந்தாலும் ஏராளமான இயக்கத் தோழர்கள் நிறைய வந்த பகுதி இந்தப் பகுதி எனவே, இந்தப் பகுதியிலே உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு பணிகள் இருந்த நேரத்திலே கூட, நெருக்கடியாக இருந்த நேரத்திலும் இந்தச் சிறப்பான முறையிலே உங்களை சந்திக்கின்றேன்.

இந்தக் கிராமத்தில் பெரியார் படிப்பகம்

அந்த அளவுக்கு ஊர்ப் பொதுமக்கள் பெருமனதோடு நீங்கள் சிறப்பாக ஒத்துழைத்து நல்ல அளவிற்கு அய்யா அவர்களுக்குச் சிறப்பு செய்திருக்கின்றீர்கள்.

அதுமட்டுமல்ல, நல்ல இடத்திலே ஒரு நல்ல படிப்பகத்தை, அறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவை நினைவூட்டக் கூடிய அளவிற்கு, தந்தை பெரியார் படிப்பகத்தை அமைத்திருக்கின்றீர்கள்.

இதைவிடச் சிறந்த ஒரு வாய்ப்பு கிராமத்திற்கு வேறு இருக்க முடியாது. கிராமங்கள், நகரங்கள் என்ற பேதமே இருக்கக் கூடாது என்று சொன்னவர் தந்தை பெரியார்.

இராணுவத்திற்குச் சென்ற பல பேர்

எப்படி மேல் ஜாதி, கீழ்ஜாதி என்று இருக்கக் கூடாதோ, அதே போன்று உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று இல்லாமல் எல்லோரும் சமம் என்று இருக்க வேண்டுமோ அதே போன்றுதான் நகரம் என்று சொன்னால் ஏதோ மேல்தட்டு; கிராமம் என்று சொன்னால் கீழ்த்தட்டு என்று இல்லாமல் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். சமப்படுத்தப்பட வேண்டும், சமச்சீராக அமைய வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அதன் காரணமாகத்தான் இன்றைக்கு இந்தப் பகுதியிலிருந்து ஏராளமான தோழர்கள், இளைஞர்கள் கல்வி கற்றிருக்கின்றார்கள். எனக்குத் தெரியும். இந்தப் பகுதியிலிருந்து இராணு-வத்திற்குச் சென்றவர்கள் பல பேர் உண்டு. ஆகவே, அப்படிப்பட்ட நிலையிலே அந்த இராணுவத்திற்கும் சென்றார்கள் பெரியாரின் கட்டுப்பாடு மிக்க கருஞ்சட்டை ராணுவத்திலும் தம்மை இணைத்துக்கொண்டார்கள். அப்படிப்பட்ட ஓர் அருமையான பகுதியிலே அய்யா அவர்களுக்கு சிலை திறந்து வைத்திருப்பது, படிப்பகங்களை இங்கே ஏற்பாடு செய்தது, அது போலவே என்னுடைய நூலை அவர்களுடைய அன்பினாலே வெளியிட்டு இங்கே சிறப்புச் செய்தது எல்லாவற்றிற்கும் அனைவருக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டி-ருக்-கின்றேன்; நன்றி செலுத்துகின்றேன்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால்

அருமை நண்பர்களே! ஒரு கண நேரம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்தக் கேள்வியை மட்டும் நீங்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும். நீங்கள் எந்த அமைப்பைச் சாந்தவராக இருந்தாலும் சாராதவராக இருந்தாலும் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள். அதை மட்டும் மனதிலே எண்ணிப்பாருங்கள்.

நம்முடைய நிலை எப்படியிருக்கும் என்று பார்த்தால், முழங்காலுக்குக் கீழே நம்முடைய வேட்டி தொங்காது. மேலே துண்டு போட்டு நடக்கக் கூடிய வாய்ப்பும் நாம் பெற்றிருக்க மாட்டோம். தெருக்களிலே நாய் போகலாம், பன்றி போகலாம், கழுதை போகலாம். ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் அவன் கீழ்ஜாதியாக இருந்தான் இருக்கிறான் என்கின்ற காரணத்திற்காக தெருவிலே நடமாடக் கூடாது என்று சொல்லியிருந்த நாட்டிலே, இன்றைக்கு எல்லோரும் சமம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை அய்யா அவர்கள் உருவாக்கிக் காட்டியிருப்பதனுடைய விளைவாகத்தான் இன்றைக்கு நாமெல்லாம் தலை நிமிர்ந்து நிற்கின்றோம்.

பெரியார் தொண்டின் சிறப்பென்ன?

அய்யா அவர்கள் மட்டும் பாடுபட்டிருக்காவிட்டால் நம்முடைய மனிதநேயர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, நம்மவர்கள் எல்லாம் மிகப்பெரிய பதவிக்குப் போயிருக்க முடியுமா?

இந்தமேடையிலே வழக்குரைஞர்கள் அமந்திருக்கின்றோம். அதே போல பேராசிரியர் அமர்ந்திருக்கிறார்.

இந்த மேடையைப் பார்த்தாலே பெரியார் தொண்டுக்கு என்ன அடையாளம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் சமுதாயத்தைப் பார்க்க வேண்டும்.

மேடையைப் பாருங்கள். பெரியார் பிறந்திருக்காவிட்டால் எங்கள் பையிலே பேனா இருக்குமா? தோளிலே துண்டு இருக்குமா? இவ்வளவு வெள்ளை சள்ளையாக நாங்கள் உடுத்திக்கொண்டிருக்க முடியுமா? அதற்கு மாறாக கையிலே கோல்தான் இருக்கும் ஆடு மாடு ஓட்டக் கூடிய கோல் தான் கையிலே இருக்குமே தவிர பேனா இருந்திருக்க முடியாது.

ஏனென்றால், அதை தலைவிதி என்று ஏற்றுக்கொண்டிருக்கிற மக்களாகத்தான் காலம் காலமாக நம்பி கொண்டிருக்கின்ற அடிமை மக்களாகத்தான் ஆக்கப்பட்டிருந்தோம்.

அவைகளை எல்லாம் மாற்றிய பெருமை அதோ சிலையாக நிற்கிறாரே அந்த சீலர் சுயமரியாதை வீரர் புரட்சி வீரர் தந்தை பெரியார் அவர்களைச் சாரும்.

அன்றைக்குப் பார்ப்பன முதலைகள்

அய்யா அவர்கள் தான் கேட்டார்கள், ஏன் நம்மவர்கள் படிக்கக் கூடாது? கல்வி நீரோடை நாடெல்லாம் பாய வேண்டும் என்று சொன்னார்கள். பாயவிடாத அளவிற்குப் பார்ப்பன முதலைகள் அந்த நீரோடையிலே இருந்து குழந்தைகளை இறக்கவிடாத அளவுக்கு அல்லது இறங்க முடியாத அளவிற்கு தடுத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தை எல்லாம் மாற்றி, அனைவருக்கும் கல்வி என்று ஆக்கினார்கள்.

இன்றைக்குத் திரும்பிப் பாருங்கள். தமிழ்நாட்டிலே எங்கு பார்த்தாலும் மேல் நிலைப்பள்ளிகள், எங்கு பார்த்தாலும் உயர்நிலைப் பள்ளிகள், எங்கு பார்த்தாலும் மெட்ரிகுலேசன் பள்ளிகள். எங்கு பார்த்தாலும் பாலிடெக்னிக்குகள், எங்கு பார்த்தாலும் கல்லூரிகள், எங்கு பார்த்தாலும் பொறியியல் கல்லூரிகள். இந்த ஆண்டு மட்டுமே தமிழ்நாட்டிலே உருவாகியிருக்கின்ற எஞ்சினியரிங் கல்லூரிகள் 420. பாலிடெக்னிக்குகள் 400க்கு மேல்.

தந்தை பெரியார் தன்னுடைய தோளிலே சுமந்தார்

இவைகளை எல்லாம் நம்மவர்கள் நினைத்துப் பார்க்க முடியாது. அக்கிரகாரத்திற்கோ படிப்பு சொந்தம் என்று இருந்தது. ஆசிரியர்கள் என்று சொன்னால் பார்ப்பனர்கள் தான் வரமுடியும் என்ற அளவிலே இருந்தது, அதோடு இன்றைக்கு அது மாற்றப்பட்டது. உங்களுக்குத் தெரியும். தந்தை பெரியார் அவர்கள் நம்மைப் படிக்க வைத்தது மட்டுமல்ல, உத்தியோகத்திற்குப் போவதற்கு அவர்கள் தோள்கொடுத்தார்கள். தன்னுடைய தோளிலே தமிழனை ஏற்றி அதற்காக அவ்வளவு சங்கடங்களைப் பெற்றார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதிகமாகப் போக வேண்டிய அவசியமில்லை. சுருக்கமான நேரத்திலே சொல்லுகிறேன். உங்களுக்குத் தெரிந்த பகுதி, கண்ணந்தங்குடி ஒரத்தநாடு பெரியார் நாடு என்று சொல்லக் கூடிய இந்த பகுதிதான் கண்ணந்தங்குடி. அந்த கண்ணந்தங்குடியிலே இருந்து படித்து படிப்படியாக உத்தியோகத்திற்குச் சென்றவர்தான் ஆர்.எஸ்.மலை-யப்பன்அவர்கள்.

திருச்சி கலெக்டர் மலையப்பன்

அந்த மலையப்பன் அவர்கள் காமராஜர் ஆட்சிக் காலத்திலே திருச்சி கலெக்டராக வந்தார். அவருடைய திறமை, ஆற்றல், உழைப்பு, திராவிடர் இயக்கத்தின் படிக்கட்டு இவை எல்லாம் கிடைத்த காரணத்தால் தான் அவர்கள் வந்தார்கள். ஆனால், அவர்களை மேலே விட்டால் இன்னும் மேல் பதவிக்கு வந்து விடுவார்கள். பார்ப்பனர்களே அமர்ந்திருக்கக் கூடிய அரசாங்கத்தினுடைய செயலாளர் போன்ற பதவிக்கு வந்து விடுவார்கள் என்று கருதிய காரணத்தால் தான் அவர் போட்ட ஓர் உத்தரவு பலபேருக்குத் தெரியாது.

----------------தொடரும்......"விடுதலை"30-7-2009

மக்கள் தொகையைவிட கடவுள்கள் எண்ணிக்கை அதிகம்!




பிழைப்பு


கடவுள் ஒருவர் தான் உருவமற்றவர் (அரூபி) எங்கும் நிறைந்தவர்; சர்வசக்தி வாய்ந்தவர்; அன்பே உருவானவர் என்றெல்லாம் கூறுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.

ஆனால், நடப்பில் காண்பது என்ன? மக்கள் தொகையைவிட கடவுள்கள் எண்ணிக்கைப் பெருக்கம்; ஒவ்வொரு கடவுளுக்கும் மனைவி, கூத்திகள், பிள்ளைகள் என்று மனித சமூகத்தின் பிரதிபலிப்பைத்தானே மதக் கடவுள் விவகாரங்களில் காண முடிகிறது.
கடவுள் அரூபி என்று கூறி அதோடு நிறுத்திவிட்டால், மத வியாபாரிகளுக்குப் பிழைப்பு என்னாவது? கோயில், குளம், பூஜை, பண்டிகை, விரதம், பரிகாரம், இத்தியாதி... இத்தியாதிப் பட்டியல்கள் இருந்தால்தானே அவாளின் வயிற்றுப் பிழைப்பு ஆண்டு முழுவதும் நடக்கும்.

ஆண்களை அசத்த சில நிரல்கள் என்றால், பெண்களை பித்துப் பிடிக்க வைக்க வேறொரு பட்டியல் சிவராத்திரி, நவராத்திரி என்று போட்டா போட்டி.

நாளை வரலட்சுமி விரதமாம். இந்த நாளில் பெண்கள் வரம் இருந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீருமாம்; உண்மையில் பக்தர்கள் இதனை நம்புகிறார்களா? பத்திரிகைகளில் பத்திப் பத்தியாகச் செய்தி வெளியிடுபவர்கள்தான் நம்புகிறார்களா?

வீணாக மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள். பொழுதும், பொருளும் வீணாகும். வரலட்சுமி விரதம் நடக்கட்டும். நோய்கள் நொடிப்பொழுதில் ஓடிவிடும் என்று அடித்துக் கூற ஜீயர்கள் தயாரா?

வரலட்சுமி விரதம் இருந்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் கல்யாணம் நடக்குமாம். நாட்டில் இலட்சாதி லட்சம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாத நிலை இருக்கிறது. அரசே பல சலுகைகளை அளிக்கிறது; கூட்டுத் திருமணங்களை நடத்துகிறது இவை எல்லாம் வீண் வேலைகள். விரதம் ஒன்றால் கைகூடும் என்று கண்டிப்பாக உத்தரவாதம் கொடுக்கத் தயாரா? கடவுள் என்ன கல்யாண புரோக்கரா?

சரி, இன்னொன்று; தலையெழுத்துப்படிதானே நடக்கும்? அப்படியிருக்கும்பொழுது விரதம் இருந்தால் அந்தத் தலையெழுத்து எப்படி மாறும்?

விதி பெரிதா? விரதம் பெரிதா? இல்லை, இல்லை விதியை மாற்றத்தான் விரதங்கள், பூஜைகள், பரிகாரங்கள் என்பது, வியாபார ரீதியாக மக்களின் பணத்தைக் களவாடும் ஒருவகையான திட்டமிட்ட ஏற்பாடுதானே!

வரலட்சுமி விரதத்தில் இதை இதையெல்லாம் வைத்துப் படைக்கவேண்டும்; கோயிலுக்குச் செல்லவேண்டும், சிலவற்றைக் கொட்டி அழவேண்டும் என்பது எல்லாம் புரோகிதன் தொப்பையை நிரப்பத்தானே?

உள்ளமே கோயில், உண்மையே நெய்வேத்தியம் என்பதெல்லாம் பகட்டுப் பேச்சுத்தானா?
பிழைப்பு ஸ்தாபனமே கோயிலும், குளங்களும், பரிகாரப் பூஜைகளும் என்பதில் இன்னுமா சந்தேகம்?


------------------மயிலாடன் அவர்கள் 30-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

30.7.09

பூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்த்து வாடா என் தேவடியாள் மகனே! என்று கூப்பிடவேண்டும்


தினமணிக்குத் தீராக் காதலா?



பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்காது; பிரச்சாரம் இருக்காது; அவர் கொள்கைப் பரவாது என்று மனப்பால் குடித்த கூட்டத்துக்கு மரண அடி விழுந்தது.

இந்தியாவையே குலுக்கிய இராவண லீலா நடைபெற்றது அன்னை மணியம்மையார் தலைமையில். நீதிமன்றம்வரை சென்று இராமனை, சீதையை, இலட்சுமணனைக் கொளுத்தியது குற்றமல்ல கொள்கையுடைய மாந்தர்களுக்கு உள்ள உரிமை என்பதை நிலைநாட்டப்பட்டது.

நாட்டைக் களவாடிடக் கலகம் விளைவிக்கும் காவிக் கொடியைக் கொளுத்தி இந்தியத் துணைக் கண்டத்தையே திராவிடர் கழகத்தின்பால் ஈர்த்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கறுஞ்சட்டை இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி.

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்ம சாஸ்திரத்தை மகளிரையே தலைமை தாங்கச் செய்து நாடெங்கும் கொளுத்தி பெண்ணுலகின் பார்வையைப் பெரியாரை நோக்கிப் பயணிக்கச் செய்தவரும் அவரே!

விதவைக்குப் பூ சூட்டும் விழாக்களை நடத்திக் காட்டி வைதீகத்தின் நச்சுப் பல்லைப் பிடுங்கி எறிந்து பெரியாரின் சரியான வாரிசு இதோ என்று மக்கள் மத்தியில் பவனி வந்தார் வருகிறார்.

இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பைப் புகுத்தி, சமூகநீதியின் ஆணிவேரை எம்.ஜி.ஆர். அழிக்கிறார் என்றவுடன், ஆரியத்தை வீரியத்துடன் அணைக் கும் எம்.ஜி.ஆர். என்று நாடெங்கும் சுவரொட்டிகளை ஒட்டி, ஆனந்தத் தாண்டவம் ஆரியம் ஆடிய நேரத்தில், ஒடுக்கப்பட்டவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, தந்தை பெரியார் மூட்டிய சமூகநீதி என்னும் எரிமலையின் சீற்றம் எத்தகையது என்பதைக் காட்டும் வண்ணம், மக்களவைத் தேர்தலில் (1980) எம்.ஜி.ஆர். அவர்களைத் தோற்கச் செய்து (39 இடங்களில் 37 இடங்களில் தோல்வி!) தான் பிறப்பித்த வருமான வரம்பு ஆணையைத் தானே திரும்பப் பெறும்படிச் செய்து, அதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்துவந்த 31 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக அதே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்த ஆற்றலுக்குச் சொந்தக்காரரும், மானமிகு வீரமணியே!

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்-டோருக்கு இட ஒதுக்கீடு என்பது அறவேயில்லை என்ற நிலையில், மண்டல் குழுப் பரிந்துரைகளை அம்பலப்படுத்த வைக்கவேண்டும் என்பதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி (டில்லி வரை சென்று பிரதமர் இந்திரா காந்தி வீட்-டின் முன்பும் மறியல், நாடாளுமன்றத்தின் முன்பும் மறியல்) இந்தியத் துணைக் கண்டத்தில் முதன்முதலாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடுக்கு வழி செய்த வரலாறும் அவருக்குண்டு.

பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு மாநாடு, பார்ப்பனர் ஆதிக்க ஒழிப்பு மாநாடு, ஜாதி ஒழிப்பு மாநாடுகள், மதவெறியை மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்! என்ற முழக்கத்தோடு வட்டார மாநாடுகள், மாநில மாநாடுகள், பேரணிகள், பகுத்தறிவுக் கண்காட்சிகள், கிராமப் பிரச்சாரத் திட்டம், பயிற்சி முகாம்கள், அணி அணியாக நூல்கள் வெளியீடு, புத்தகச் சந்தைகள், ஆஃப்செட்டில் விடுதலை (8 பக்கங்களுடன்) இரண்டு இடங்களில் பதிப்பு என்று இன எதிரிகள் மருண்டோட இடைவெளியின்றிப் பெரியாரின் பணிகள்! பணிகள்!! பணிகள்!!!

தாம் ஆசிரியராய் பொறுப்பேற்ற காலம்முதல் (1962) தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் மலர் என்னும் வரலாற்றுப் பேழை வெளியிடல் என்பதெல்லாம் கண்ணும், கருத்தும் உடையோர்க்கு தெரிந்த அத்துப்படி.

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று பார்ப்பனர்கள் பழனியில் மாநாடு கூட்டி பாடை கட்டித் தூக்கிச் சென்றனர் என்றால், வேறு என்ன மதிப்பீடு வேண்டும் மானமிகு வீரமணி அவர்களுக்கு?

நான்கு இடங்களில் அவர் உயிருக்குக் குறி வைத்தனர். ஆனாலும், தப்பினார் ஆம், தமிழினமும் தப்பிப் பிழைத்தது, நாடாளுமன்றம்வரை வீரமணிக்கு ஜிந்தாபாத்! என்று முழக்கம் கேட்கவில்லையா!

அடடே, தப்புக் கணக்குப் போட்டுவிட்டோமே என்று ஆரியப் பார்ப்பனர்கள் அங்கலாயித்தனர். அக்னிக் குண்டத்தில் வீழ்ந்ததுபோல் துடியாய்த் துடித்தனர்.

இட ஒதுக்கீட்டை எதிர்த்து நிர்வாண ஆட்டம் போட்ட ஆரியப் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி எங்களுக்கும் இத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு என்னும் அருள்பாலியுங்கள்! என்று பிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஒரு நிலையை உருவாக்கியவருக்குப் பெயர்தான் வீரமணி.

பெரியார் அறிவித்த இறுதி ஆணையான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான சட்டம், அதற்கானப் பயிற்சிகள், அடுத்து நியமனங்கள் என்ற எல்லைவரை உருவாக்கம், ஆபாச ஆரிய ஆண்டு பிறப்பைத் தூக்கி எறிந்து, தைமுதல்நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற ஆணை உள்ளிட்ட பண்பாட்டு மறுமலர்ச்சிகள் அரசு ரீதியாகப் பெற்றுத்தர உந்து சக்தியாக நிற்கும் ஒப்பரும் தலைவராக ஒளிர்பவர் தான் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களாலேயே தமிழர் தலைவர் என்று மதிக்கப்படும் மானமிகு கி. வீரமணி அவர்கள்.


பொறுக்குமா பார்ப்பனர்களுக்கு? புழுங்கிச் சாகிறார்கள் இந்த இராட்சசனை எப்படி ஒழிப்பது? எப்படி மட்டம் தட்டுவது? என்பதில்தான் அவர்களின் குறியும், கோபமும்!

சிறு துரும்பு கிடைக்காதா? அதைத் தூணாக்கித் தூள் பரப்பிடுவோம் என்று காத்துக் கிடந்தனர். ஈரையும் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிக் காட்டும் எத்தர்களாயிற்றே!

இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைக்கிறார்கள். திராவிடர் கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் தூக்கி எறியப்பட்டவர்கள் விளம்பரத்துக்காக ஒரு மோதல் போக்கை உருவாக்கவேண்டும் என்பதற்காக பெரியாரின் குடிஅரசு இதழ்களை வெளியிடப் போகிறோம் என்று விளம்பரப்படுத்தினார்கள்.

தந்தை பெரியார் மறைந்தபோது இயக்கம் வெளியிட்ட நூல்கள் எத்தனை? அதற்குப்பின் இன்றைய காலகட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை எத்தனை?

300க்கு மேற்பட்ட நூல்கள் இருமடங்கு எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ளனவே. தமிழ்நாட்டில் இணைய தளத்தில் முதன்முதல் வந்த ஏடு விடுதலைதானே! பெரியார் வலைக்காட்சிமூலம் கொள்கைப் பிரச்சாரம் இன்னொரு பக்கம்! ஒரு பகுத்தறிவு இயக்கம் இதைவிட வேறு என்ன செய்யவேண்டும்? உலகப் பகுத்தறிவாளர்களே, வியக்கின்றனரே!

ஒரு சித்தாந்தத்தை இயக்கத்தை உருவாக்குவோர் வரலாற்றுச் சிறப்புக்குரியவர்கள். அவர் மறைவிற்குப் பிறகு அதனைத் தொடர்ந்து நடத்திச் செல்பவர்களுக்கும் மிக முக்கியத்துவம் உண்டு வரலாற்றில் என்று உலகப் பகுத்தறிவு மனிதநேய சிந்தனையாளர் பால்கர்ட்ஸ் (நியூயார்க்) பெரியார் இயக்க நடவடிக்கைகளைப் பார்த்து வியந்து பாராட்டவில்லையா?

மலிவு விலையில் மக்கள் நெஞ்சில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை மலிவுப் பதிப்பாக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறது கழகம். முதலமைச்சர் கலைஞர் அவர்களே, மனதாரப் பாராட்டியிருக்கிறாரே!

எல்லாம் தெரிந்திருந்தும் வீம்புக்காக, வெட்டி விளம்பரத்துக்காக பதிப்புரிமை பெற்றவை என்று தெரிந்திருந்தும் பெரியார் படைப்புகளைத் தாங்கள் வெளியிடப் போவதாக அறிவித்தனர்.

முறைப்படி நீதிமன்றத்தை அணுகி அதற்கான தடை ஆணை பெறப்பட்டுவிட்டது.

அவ்வளவுதான்? ஆகா! பெரியார் கொள்கையைப் பரப்பிட தடை வாங்குவதா? பெரியார் வீரமணிக்கு மட்டும் சொந்தமா? நாட்டோரே கேளீர், கேளீர்! என்று எகிறிக் குதிப்பது கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சிலர் மட்டுமல்ல பார்ப்பன ஏடுகளும்தான்!

தினமணி கார்ட்டூனே போடுகிறது. பெரியார் எனக்கு மட்டுமே தான் சொந்தம் என்று வீரமணி சொல்கிறாராம் அவரைப் பார்த்து, இதுக்குப் பெயரா பகுத்தறிவு? வெங்காயம்? என்று பெரியார் சொல்கிறாராம் இதற்குப் பெயர் மதி கார்ட்டூனாம்.

காலே இல்லாதவருக்கு நடராஜர் என்று பெயர் வைப்பதில்லையா? பேசாப் பெண்ணுக்குத் தேன்மொழி என்று நாமகரணம் சூட்டுவதில்லையா? அதுபோல்தான் இதுக்குப் பெயர் மதி.

அது இருக்கட்டும், தினமணிக்குப் பெரியாரின் பகுத்தறிவின்மீது அளவு கடந்த காதலா? அடக்கவே முடியாத ஆர்வக் கோளாறா?

பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளில் எதை எதையெல்லாம் தினமணி ஏற்றுக் கொண்டிருக்கிறது என்று பட்டியல் போடத் தயாரா? சோவின் பரமார்த்த சீடர் வைத்தியநாதய்யர் ஆசிரியராக வந்த பிறகு, பார்ப்பனர்களுக்கு நாளேடு கிடைத்துவிட்டதே! பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்திலேயே பச்சையாகப் பேசியிருக்கிறார்களே நமக்கு ஒரு நாளேடு கிடைத்துவிட்டது என்று.

தினமணி ஒன்று செய்யுமா? பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையில் எங்கள் உள்ளத்தை அப்படியே பறிகொடுத்துவிட்டோம். இனி ராசி பலனை வெளியிடுவதில்லை என்று அறிவிக்கத் தயாரா?

ஆன்மிக சிந்தனைப் பகுதியில், அதற்குப் பதிலாக அய்யாவின் இராமாயணச் சிந்தனைகளை வெளியிடுவார்களா?

நம்மை சூத்திரன் என்று கூறி, பூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்த்து வாடா என் தேவடியாள் மகனே! என்று கூப்பிடவேண்டும் என்று தந்தை பெரியார் இறுதி உரையிலே (19.12.1973) சொல்லியிருக்கிறார்.


என்ன தினமணியாரே! பெரியாரின் இந்தக் கூற்றை வரவேற்று மதி கார்ட்டூன் போடுவாரா? அதனை வெளியிட தினமணி வைத்தியநாதய்யரும் தயார்தானா?

எந்த அளவுக்கு தினமணி தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் புரிந்திருக்கிறது?

தந்தை பெரியார் மறைந்த நேரத்தில், ஈ.வெ.ரா. மறைவு என்ற தலைப்பில் எழுதியபோதுகூட, அரிஜனங்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமை கிடைக்கச் செய்வதற்கு நடைபெற்ற வைக்கம் சத்யாக்கிரகத்தில் பங்குகொண்டதன் விளைவாக அவர் (ஈ.வெ.ரா.) பெயர் பிரபலமாயிற்று (25.12.1973) என்று எழுதியதே! வீதியில் நடக்கும் உரிமைக்காகவா _ ஆலய வழிபாட்டு உரிமைக்காகவா? எதற்காகப் போராடினார் தந்தை பெரியார்?

கழகம் வெளியிட்ட தீண்டாமையை ஒழித்தது யார்? என்ற சிறு நூலை இனியாவது படித்துப் பார்க்கட்டும். அதே கட்டுரையில் மத நம்பிக்கையாளர்களின் மனதைப் புண்படுத்தியவர் பெரியார் என்று எழுதவில்லையா தினமணி? இந்த லட்சணத்தில் பெரியார் கொள்கைக்காக வக்காலத்து வாங்குவதாக நீலிக்கண்ணீரா?


தி.க. தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற ஒரு கட்டுரையை இதே தினமணி (13.1.1990) வெளியிடவில்லையா?

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகத்தை குறைகூறி எழுதிடவில்லையா? அப்படிப்பட்டவர்களுக்கு இப்பொழுது என்ன பெரியார் கொள்கைமீது திடீர் பக்தி? வீரமணிமீது பாய்வோர்களை கொஞ்சம் தட்டிக் கொடுத்தால் அது மறைமுகமாகப் பார்ப்பனியத்திற்குப் பயனாக மாறும் என்ற பார்ப்பனிய நரித்தனம்தானே இதில் பதுங்கியிருக்கிறது.

அந்தக் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுதி அனுப்பியபோது, அதனை வெட்டிச் சுருக்கி ஆசிரியர் கடிதம் பகுதியில் வெளியிட்ட தினமணி பத்திரிகாதர்மத்தை என்னவென்று சொல்ல!

பெரியார் கொள்கைகளைப் பரப்புவதே தனது உயிர்மூச்சு என்று வீரமணி நினைக்கிறார் செயல்படுகிறார் என்பதை தம்மை அறியாமலேயே தினமணி கூட்டம் ஒப்புக்கொண்டுவிட்டதே இந்தக் கார்ட்டூன்மூலம்!

வீரமணியின்மீது சேற்றை வாரி இறைக்கும் ஒரு சிறு கூட்டத்தைத் தூக்கி விடுவதால் சமுதாயத்தில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை; அதேநேரத்தில், வீரமணியைக் கொச்சைப்படுத்தினால் திராவிடர் கழகத்தின்மீது களங்கத்தைக் கற்பித்தால் அதன்மூலம் பெரியார் கொள்கைக்கு ஒரு சிறு ஊனத்தையாவது ஏற்படுத்தலாம்; பெரியார் கொள்கைப் பரப்பும் பாதையில் ஒரு முள்ளையாவது எடுத்துப் போடலாம் என்பதுதான் பார்ப்பனர்களின் கணிப்பு ஒரு எதிர்ப்பார்ப்பு அவ்வளவுதான்.

பெரியார் நூல் வெளியீட்டுப் பிரச்சினையில் யார் யார் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள்? தந்தை பெரியார் பார்வையில் பார்த்தால், இவர்களின் அடையாளத்தை எளிதாக அறிந்துகொண்டு விடலாமே!

------------ வளரும்

-----------------கலி. பூங்குன்றன் பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 30-7-2009

ஜாதியம், தேசியம், ஆத்மீகம், மூடநம்பிக்கை, பார்ப்பனியம் - பலம் பொருந்திய எதிரிகள்




புதிய போரைத் தொடங்கியது எது?

கண்களை உருட்டியும், தலைகளை ஆட்டியும், மூக்கின் மீது விரலை வைத்தும், முதுமையில் மோகங் கொண்டோர் முறைத்துப் பார்க்குமளவு தீவிரவாதத்தைப் பேசியவன் சுயமரியாதைக்காரனே!


"நாட்டின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அதோ உள்ள வெள்ளையனும், அவனிடம் உள்ள துப்பாக்கியும் வெடி குண்டும்" என்று தேசபக்தர்கள் கூறியபோது "அதுசரி தேசியத் தோழனே, இதோ பார் உள்நாட்டிலே உன்னை வாட்டி வதைத்துப் பிரித்துக் கெடுக்கும் பார்ப்பனீயமும் அதன் ஆயுதங்களாகிய கிழிந்த பஞ்சாங்கமும், உலர்ந்த தர்ப்பையும்" என்று எடுத்துக் காட்டியதும் சுயமரியாதை இயக்கமே

ஆத்மிகம், தேசியம் இரண்டுமே பார்ப்பனியத்திற்கு இன்று அரணாக விளங்குகின்றன என்ற உண்மையையும், நாட்டுப்பற்றுக் கொண்டு நம்மவர் உழைத்த உழைப்பின் உறுபயன்யாவும் விழலுக்கிறைத்த நீராகியதையும் எடுத்துக்காட்டிப் புதிய போராட்டத்தைத் தொடங்கியதும் சுயமரியாதை இயக்கமேயாகும்.




புராணப் புரட்டை விளக்கியது எது?



திருவாங்கூர் கோயிலைத் திறக்கச் செய்ததும், அச்சமஸ்தானத்தில் தீண்டாதாருக்குத் தெருவில் நடக்கவும் உரிமை இல்லாதிருந்த கோர நிலைமையை மாற்றியதும், நேற்று மதுரை அழகர் கோயில் ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் உள்ளே செல்ல முடிந்ததும், இவைகள் இன்று சர்வ சாதாரணமாக விஷயமாக மக்களால் கருதப்படக் கூடிய அளவு மக்கள் மனத்தைத் தீவிரத்தில் பக்குவப்படுத்தியதும் எது?



வேதம், ஆகமம், ஸ்மிருதி என்றால் கேட்டதும் கிடுகிடுவென நடுங்கி எதைச் செய்தால், எந்த வேதப்படி எந்த சாத்திரப்படி குற்றமாகுமோ என மக்கள் பயந்து பதைபதைத்து வாழ்ந்து வந்த நிலை மாறி உலகப் போக்குக்கு ஒத்ததும், அறிவுக்குப் பொருத்தமானதும் பகுத்தறிவுக்கு ஏற்றதுமான காரியங்களே நிகழ வேண்டும். எமக்கு அந்த நாளைய ஆகம வேதஸ்மிருதி புராண ஆபாசங்களைப் பற்றி இலட்சியமில்லை என்று பெரும்பாலோர் கூறும் நிலைமையை உண்டாக்கியது எது?


ஆகம விதிப்படி கோயில்கள் நடத்தப்பட வேண்டுமானால் அங்கு ஆடுவதற்கு என ஒரு கூட்டம் இருக்க வேண்டும்; அக்கூடடம் விபசாரத்தால் பிழைக்க வேண்டும் என்று இருந்த நிலைமை மாறி, தாசி என்ற பேச்சுக்கே இடமின்றி அவர்களை மறையச் செய்து வருவது எது?


சாதி மதத்தைச் சாய்த்தது எது?


அந்த ஸ்மிருதி இப்படிச் சொல்கிறது, இந்த சுருதி அப்படிச் சொல்கிறது என்ற முறையைக் கொண்டே நடந்து வந்த பாலிய விவாகக் கொடுமை மாறி சம்மத வயதுச் சட்டத்தை நாட்டிலே உண்டாக்கி அதன்படி மக்கள் நடக்கும்படி செய்து வைத்தது எது?



ஜாதி பேதமெனும் 'சைத்தான்' மக்களை ஆட்டி அடக்கி ஒடுக்கி இருந்த நிலைமாறி, பார்த்தால் தோஷம், தொட்டால் பாவம் என்ற நிலை மாறி பெரும்பாலோருக்குள் ஒருவருக்கொருவர் பழகவும் உண்ணவுமேயன்றி, பெண் கொடுக்கவும் வாங்கவுமான நிலை ஏற்பட்டதும், அதுவும் சர்வ சாதாரணமானதாக இன்று கருதப்படுவதுமான நிலையைச் செய்தது எது?



அரசாங்க ஆதிக்கம், உத்தியோக வர்க்கம் ஆகியவற்றால் தவிர, மற்றைய பொது வாழ்க்கையிலே, உயர் சாதிக்காரனென்பான், தாழ்ந்த சாதிக்காரன் என்பானுக்குக் கை எடுக்கச் செய்தது எது?



எண்ணற்ற புரட்சியை ஏற்படச் செய்தது எது?



எந்த ஒரு சடங்கும், பார்ப்பனனின்றி முடியாது; பார்ப்பனர் வந்தால் தான் மதிப்பு, கவுரவம் என்று இருந்த நிலை மாறி, இன்று எந்த சடங்குக்கும் பார்ப்பனரை வரவழைப்பதென்பது அவமானம், நமது சுயமரியாதைக்குக் கேடு என்று கருதும்படி நினைக்க வைத்தது எது? இவ்வளவுதானா? தாழ்த்தப்பட்ட இழிகுலமென்று கருதப்பட்ட மக்களை மேயராக்கி மந்திரியாக்கி மகிமையளித்தது எது? இவ்வளவும் இன்னமும் இதுபோன்ற எண்ணற்ற புரட்சிகரமானவைகளையும் நாட்டிலே தோற்றுவித்தது சுயமரியாதை இயக்கமே என்பதை யாரே மறுக்கவல்லார்? மறுப்பவர் யாராவது இருந்தால் இந்த 15-வருஷமாக சு.ம. இயக்கம் செய்து வந்த பிரசாரத்தையும் மாநாடுகளில் செய்த தீர்மானங்களையும் கண்டு தெளியும்படி வேண்டிக் கொள்கிறேன்.


ஜாதியம், தேசியம், ஆத்மீகம், மூடநம்பிக்கை, பார்ப்பனியம் ஆகிய பலப்பல பயங்கரமான பலம் பொருந்திய எதிரிகளுடன் மல்யுத்தம் செய்து, அவைகளைக் கீழே வீழ்த்தியுள்ளன. 1926-29 காலங்களில், சுயமரியாதை இயக்கத்தைக் கண்டு மிரண்டவர்களும் கூட இன்று தமது வாழ்க்கையிலேயே சிறிதாவது சுயமரியாதை மிளிர வேண்டும் என்னும் கருத்துக் கொண்டு காரியங்களை நடத்துகிறார்கள்.


அன்றும் - இன்றும் - நாம்


அன்று நாம் இவ்வளவு அமளியில் ஈடுபட்டிருந்த காலத்தில், நமக்குப் போதிய பணபலமோ, சர்க்கார் உதவியோ, அறிவாளிகள், பண்டிதர்கள், செல்வர்கள், மிராசுதாரர்கள், முக்யஸ்தர்கள் எனப்படுவோரின் உதவியோ இருந்ததில்லை. இவ்வளவு காரியங்களையும் நாம் தனித்து நின்று அரசியலைக் கைப்பற்றாமலே, அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே பெருத்த கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொண்டே நடத்தி இருக்கையில் இன்று சகல தமிழர்களும், பண்டிதர்களும், அறிவாளிகள், பிரமுகர்கள், செல்வர்கள், அரசியல் தலைவர்கள், மதக்காப்பாளர்கன் எனப்படும் பலதிறப்பட்ட தமிழரும் ஒன்றுகூடி இருக்கையில், முன்னம் சாதித்ததை விட அதிகமாக, முன்னைய வெற்றிகளை விட அதிகமான கீர்த்தியுள்ள வெற்றிகளைப் பெற முடியுமன்றோ!


நமக்குள் ஒற்றுமையும், பொறாமையற்ற கூட்டுவாழ்க்கை நடத்தும் திறனும், கட்டுப்பாடும் சுயநலமற்ற தன்மையும், பதவி மீது வேட்கையில்லா நிலையும் ஏற்பட்டு விடுமேயானால் நாம் வெற்றி காண்பது மாத்திரமல்லாமல் இந்திய நாட்டிற்கே ஒரு மாபெரும் புரட்சிக்கு வழிகாட்டியாக ஆகிவிடலாம் என்பது உறுதி.




------------------"குடி அரசு" 16-07-1939 அருப்புக் கோட்டையில் பெரியார் பேருரை

பெண்கள் திதி கொடுக்கக்கூடாது-பார்ப்பான் வயிறு புடைக்க ஏற்படுத்திய பித்தலாட்டம்!




பெண்கள் திதி கொடுக்கக்கூடாது


தாயோ, தந்தையோ இறந்தபின அவர்களுக்கு திதி கொடுக்க ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. பெண்களுக்கு உரிமை இல்லை. இந்துமத வெறியர்கள் இதுபற்றி எவரும் வாய்திறப்பதில்லை. காரணம், பார்ப்பான் வயிறு புடைக்க ஏற்படுத்திய பித்தலாட்டம் தான் அது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் சிவநேசன் பத்திரிகையில் சிரார்த்தபலம் என்ற தலைப்பில் பிதிர்கள் என்பது பற்றி சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார். நீங்களும் படியுங்களேன்.

"பிதிர் எனும் சொல் அன்னையையும் குறிக்குமா? குறிக்கும் எனில் எவ்வாறு குறிக்கும்? குறியாது எனில் இறந்துபோன அன்னையர் தென்புலத்தாரிற் சேர்ந்தவா? வேறு புலத்தவரா?

இப்போதும் கவனிக்கலாம் இறந்த தந்தைக்குத்தான் மகன் திதி கொடுப்பாரே தவிர தாய்க்கு அல்ல. மகளோ தாய் தந்தை இருவருக்கும் திதி கொடுப்பதில்லை. பெண்களக்குத் திதி கொடுக்கிற உரிமை, - பெறுகிற உரிமை கிடையாது. அதாவது பெண் ஜீவனே அல்ல. இது ஆணாதிக்கத்தின் சித்தாந்த வெளிப்பாடுகள்"
.

(அருணன் எழுதிய வ.உ.சி.கடைசிக் காலத்தில் தடம் மாறினாரா? என்ற நூலிலிருந்து.)

-----------------தகவல்: பொன். வெங்கடேசன், வடமணப்பாக்கம் -"உண்மை" ஜூலை 16-31_2009

ஏழுமலையான் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயமாம்!


திருப்பதி தேவஸ்தானத்தின் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு ஓர் அரிய ஆலோசனை வழங்கியுள்ளனர்.திருமலை வெங்கடாசலபதிக்கு சிலைக்கு அதிக எடை கொண்ட கிரீடம் அணிவிக்கப்படுவதால் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்! குறைந்த எடையுள்ளவற்றை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது வெங்கடாசலபதிக்கு அணிவிப்பதற்காக மட்டும் 11 டன் அளவுக்கு தங்கம், வெள்ளி, வைர, வைடூரிய நகைகள் உள்ளனவாம்!

தினமும் ஏழுமலையானுக்கு 60 முதல் 70 கிலோ எடையுள்ள நகைகள் அணிவிக்கப்படுகின்றனவாம்! இது மட்டுமல்லாமல், 30 கிலோ எடை கொண்ட வைர கிரீடமும் அணிவிக்கப்படுகிறது!

இவ்வளவு எடை கொண்ட நகைகள் எட்டு அடி உயரமுள்ள மூலவருக்கு அணிவிக்கப்படுவதால் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது என அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனராம்!


சிலையைப் பாதுகாக்கும் பொருட்டு தினமும் சந்தனமும், புனுகும் பூசப்படுகிறதாம்! இருப்பினும் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிட அதிக அளவு எடை கொண்ட கிரீடங்களைக் காணிக்கையாக அளிக்கின்றனராம்!

சமீபத்தில் கர்நாடக அமைச்சர் 34 கிலோ எடை கொண்ட ஒரு வைரக் கிரீடத்தை திருமலை கோயிலுக்கு வழங்கினார்.

அதிக எடை கொண்ட கிரீடத்தை ஒரு அர்ச்சகரால் தூக்கி ஏழுமலையானுக்கு அணிவிப்பது மிகவும் சிரமமாம்!

எனவேதான், அர்ச்சகர்கள் மேற்சொன்ன இலவச ஆலோசனையை வழங்கியுள்ளார்கள்!

அடடா, என்னே பக்தி! என்னே பக்தி! அதிலும் ஏடு கொண்டலவாடு (ஏழுமலையான்) தான் இருக்கும் கடவுள்களிலேயே பெரிய கேப்டலிஸ்ட் கடவுள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை அசையாது நின்ற இடத்திலேயே அன்றாடம் சம்பாதிக்கும் அருமையான முதலாளிக் கடவுள்.

அவரைக் கடவுளாகக் கருதிதான் பக்த கோடிகள் கொள்ளையடிப்பதில் ஒரு பகுதி திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டுதல் என்ற பெயரில் லஞ்சமாகக் கொடுத்து, அப்பா ஏழுமலையானே, எங்களை வருமான வரியிலிருந்தும் மற்றும் நாங்கள் செய்யும் பல்வேறு லீலா வினோதங்களிலிருந்தும் காப்பாற்றி, தொடர்ந்து சுரண்டிட தொய்வின்றி உதவுக பகவானே!

தீராத நோய் எல்லாம் தீர்த்து வைக்கும் உனக்கு கோவிந்தா, கோவிந்தா போட நாங்கள் எப்போதும் தயார்! தயார்! ஒரு பங்கு உனக்கும் தானே! சில கம்பெனிகளில் (Sleeping Partner) தூங்கும் பங்குதாரர்கள் _ (அதாவது நேரடியாக வணிகத்தில் ஈடுபடாதவர்களைப்போல் உள்ளவர்) நீ எங்களுக்கு ‘Standing Partner’ தானே எப்போதும்!

தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் ஏழுமலையானே, உனக்கா எடை தாங்க முடியவில்லை? நம்ப முடியவில்லையே!


என்ன செய்வது சிலையின் விரிசல் காட்டிக் கொடுத்துவிட்டதே நீ கடவுள் அல்ல; வெறும் சிலைதான் என்று இந்த கறுப்புச் சட்டைகளும், நாத்திகாளும் பேசுவாளே அதுதான் எங்களுக்குச் சங்கடம்!

இந்த லோகத்தையே தாங்கும் உன்னாலா இந்தக் கிரீடத்தையும், நகைகளையும் தலையில் வைத்து சுமக்க முடியவில்லை?

அபச்சாரம்! அபச்சாரம்!

அர்ச்சகர்களிலும் ஒருவேளை சு.ம.னாக்கள் இருப்பாளோ?

மனுஷாள்பற்றிதான் ஓர் ஆங்கிலப் பழமொழி முன்பு உண்டு! அதாவது, பொறுப்புகளை ஏற்கும் பெரிய மனிதர்களுக்கு மிகுந்த சங்கடம் சிரமம் எப்போதும் உண்டு என்று அர்த்தப்படும் வகையில் அப்பழமொழி,

‘uneasy lies on the head that wears the crown.’

கிரீடத்தை அணியும் தலைக்குள் எப்போதும் பல்வேறு சங்கடங்கள் தோன்றுவது இயல்பு என்பதே அது!

ஆட்சி, அதிகாரம் என்றால் அவ்வளவு எளிதானதல்ல என்பதை அது வலியுறுத்தும்!

உனக்கு அதுபோல் தலைக்குள் நெளிய ஒன்றுமில்லையே; காரணம், அர்ச்சகர்களே நன்னா சொல்லிட்டாளே சிலையால் தாங்க முடியவில்லை பாரத்தை. எனவே, அதிக எடையோடு நகைகளைக் கொண்டு வராதீர்ன்னு!

எனவே, ஒன்று தெளிவாகிவிட்டது! ஏழுமலையான் கடவுள் அல்ல; வெறும் கற்சிலைதான் என்பது!

ஆனால், பக்திப் பரவசம் வந்தவர்களுக்குப் புத்திப் பிரவேசம் எப்போதும் கிடையாதே! ஜாம், ஜாம் என்று வருமானத்தை வாரிக் கொட்டி தூக்கி வைக்கையில் அர்ச்சகர்கள் வசதிக்காகத்தானே இப்படி ஒரு வேண்டுகோள்! ஏ.கே. 47 துணையோடு என்றும் வாழும் ஏடுகொண்டல வாடு விரிசல் ஏற்பட்டால், ரிப்பேர் செய்தால் போச்சு!

-------------------- 28-7-2009 "விடுதலை"யில் "அகப்பையார்" எழுதிய கட்டுரை

வாடா, போடா என்று ஒருமையில்கூட திருவாரூர் கடவுளும், சுந்தரரும் பேசிக் கொள்வார்களாம்!




தங்கம் வேண்டுமா?


தங்கம் விலை ஏறிக்கொண்டிருக்கிறது.... வாங்க முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? வேண்டாம் உங்களுக்கு அந்தக் கவலை. பொழுது விடிந்தால் உங்கள் தலைக்குத் தங்கம் கிடைக்கும்.

என்ன புதிராக இருக்கிறதா? நாங்கள் சொன்னால், புதிராகத்தானிருக்கும்; புராணம் சொன்னால் பிடித்தமாக இருக்கும், அப்படித்தானே!

சுந்தரர் சுந்தரர் என்று ஒருவர் இருந்தார் தெரியுமா? சைவ சமயக் குரவர்களுள் ஒருவர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நான்கு குரவர்களுள் ஒருவர்தான் சுந்தரர்.

சுந்தரருக்கு நண்பர்கள் என்றால் அச்சு பிச்சு அல்ல; மானிடப் பதர்களும் அல்லர். சாட்சாத் எம் பெருமானே அவருக்கு நண்பர்; ஆமாம், திருவாரூர் தியாகராசர் இருக்கிறாரே அவர் தோள்மீது மானசீகமாய் கைபோட்டுப் பேசக்கூடியவராம்.


அதுமட்டுமல்ல, வாடா, போடா என்று ஒருமையில்கூட திருவாரூர் கடவுளும், சுந்தரரும் பேசிக் கொள்வார்கள் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்.

நண்பனேயானாலும், தம் கடமையைச் செய்யாமல் இருக்க முடியுமா? ஆண்டு தவறாமல் அவருடைய மானசீக நண்பனான ஆரூரானுக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவை நடத்தி விடுவாராம்.

அந்த நாளில் மகேசுவரப் பூஜை செய்து, சிவனடியார்களுக்கு ஆடை அணிவித்து 32 விதப் பலகாரங்களுடன் உணவளித்து, ஆடல், பாடல் சகிதமாக கோலாகலமாக விழா எடுக்கத் தவறமாட்டார் சுந்தரர்.

ஒரு ஆண்டு அவருக்குக் கடும் சோதனை; கையில், பையில் பணம் இல்லை; பங்குனி உத்திரமோ நெருங்கிவிட்டது. என்ன செய்வது என்று பெரும் தவிப்பு. கால்நடையாகவே திருப்புகலூர் செல்கிறார். அப்பொழுது அங்கு ஆலயத் திருப்பணி நடந்துகொண்டிருந்த நேரம் அது. எங்குப் பார்த்தாலும் செங்கல்லும், மணலும் கொட்டிக் கிடக்கின்றன.

புகலூர் பெருமானை வழிபட்டார் சுந்தரர். இரவு வழக்கம்போல வந்தது. சுந்தரர் என்ன செய்தார். இரண்டு செங்கற்களை தலைக்கு வைத்து இரவுத் தூக்கம் போட முயற்சித்தார். ஆரூரானுக்கு பங்குனி உத்திரப் பூஜை நடத்தவில்லையே என்ற ஏக்கத்தால் தூக்கம் வரவில்லை; புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தார். கடைசியில் ஒரு வழியாக தூங்கிவிட்டார். காலைக் கதிரவனும் உதித்துவிட்டான். விழித்துப் பார்த்தார், என்ன ஆச்சரியம், விட்டலாச்சார்யா திரைப்படத்தில் வருவதுபோல ஒரு காட்சி அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.

தலையில் செங்கற்கள் இரண்டை வைத்துப் படுத்தார் அல்லவா! அந்த இரு செங்கற்கல்லும் அப்படியே தங்கமாக மாறியிருந்தனவாம்.

எம் பெருமான் கருணையே கருணை என்று நெக்குருகிப் போனாராம். அப்புறம் என்ன, பங்குனி உத்திரம் தடபுடல்தான்.

தங்கத்துக்காக ஏங்கித் தவிக்கும் பக்தர்களே, உடனே திருப்புகலூர் போகவேண்டியதுதானே_ புகலூரானைப் போற்றிப் பாட வேண்டியதுதானே (அய்சுக்கு மயங்காதார் யார்?) இரு செங்கற்களை வைத்து அக்கடா என்று படுக்கவேண்டியதுதானே, விடிந்து பார்த்தால் தங்கம்! தங்கம்!! வெளியில் சொல்லாதீர்கள்!


அப்படித் தங்கம் கிடைத்தால் அவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்துவிடுமே! செங்கல் தங்கமாக மாறாவிட்டால்,தயாராக ஒரு காரணத்தைக் கையில் வைத்திருப்பார்கள். உண்மையான பக்தியிருந்தால்தான் செங்கல்லு தங்கமாகும். உன்னிடம் ஏதோ குற்றம் இருக்கிறது என்று கூறித் தப்பித்து விடுவார்கள்.

(தகவல்: குங்குமம், 16.7.2009)

-------------------- மயிலாடன் அவர்கள் 29-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா?




ஆனந்தவிகடன் அன்றும் இன்றும்
முதல்வர் கலைஞரின் கடிதம்


ஆனந்தவிகடன் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் முதல்வர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் எழுதியுள்ள உடன்பிறப்புக்கான கடிதத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.

உடன் பிறப்பே,

அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உன்னைப் போன்ற உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும் அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதி மொழிகளை வழங்கிக் கொண்டும் என் நாடி நரம்புகளில பாசப் பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது சில பார்ப்பன வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும் - கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.

இதோ! என் துணைவி ஆம் - உன் அண்ணி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச்சித்திரம் போடவும், பார்ப்பனீய பேனா தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24.6.2009 தேதிய ஆனந்த விகடனில் வந்துள்ள கன்னா பின்னா கார்ட்டூன்களில் ஒன்றை உனக்குக் காட்டியிருக்கிறேன்.

உடன்பிறப்பே, அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா?

என்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கு எழுதி அதே ஆனந்தவிகடன் 25.4.1954 இல் எழுதிய மனோகரா திரைப்பட விமர்சனத்தையும் அந்த ஏட்டிலிருத்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார்.

நல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு மனோகராவை எடுத்துக் காட்டலாம். இவ்வாறு விகடன் விமர்சனம் எழுதியது 1954 இல்!

அந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்!

தம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு மனோகரா படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய அய்ம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா? அதே போல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வர மறுத்த நிலையிலும் கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்ச ரூபாய்க்கு வாங்கிட வேண்டும் என்றும் ஆணையிட்டிருப்பேனா? அது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் மீது தமிழக சட்டமன்றத்தின் சார்பில், அ.தி.மு.க. ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச் செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியில் கேட்டுவிட்டு உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா?

நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா?

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ளார்

----------------நன்றி:-"விடுதலை" 29-7-2009

29.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - ஸ்லோவேகியா-ஸ்லோவேனியா-சாலமோன் தீவுகள்


ஸ்லோவேகியா

ஆறாம் நூற்றாண்டுக் காலத்தில் ஸ்லேவிக் ஸ்லோவாக் இனத்தவர் இன்றைய ஸ்லோவேகியா பகுதியில் குடியேறி வாழ்ந்தனர். 9ஆம் நூற்றாண்டில் மொராவியன் அரச வமிசம் இவர்களை ஒன்று படுத்தியது. 907ஆம் ஆண்டில் மொராவியா நாடு மாக்யர்களின் கையில் வீழ்ந்ததால் ஸ்லோவேகியர்கள் ஹங்கேரி நாட்டின் ஆட்சியில் 1918 வரை இருந்தனர். அதன் பின்னர் பொஹமியாவுடன் இணைந்து பிறகு செக்கோஸ்லேவேகியா என்ற நாடாக உருப்பெற்றது.

1990இல் கம்யூனிஸ்ட் ஆட்சிகள் கலைந்து போன நிலையில் செக்கோஸ்லேவேகியாவின் குடியரசுத் தலைவராக வாக்லவ் ஹாவல் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1991இல் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவாக செக் நாடு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி ஸ்லோவேகியக் குடியரசாக 1.-1-.1993 முதல் விளங்கியது.

மத்திய அய்ரோப்பாவில் போலந்து நாட்டுக்குத் தெற்கே உள்ள இந்நாட்டின் பரப்பு 48 ஆயிரத்து 845 சதுர கி.மீ. மக்கள் தொகை 55 லட்சம். ரோமன் கத்தோலிகர் 69 விழுக்காடு புரொடஸ்டன்ட் 11 விழுக்காடும் உள்ளனர். மீதிப்பேர்களில் 13 விழுக்காடு மக்கள் மதம் இல்லை எனக் கூறுபவர்கள். ஸ்லோவேக் மொழி ஆட்சி மொழி. மக்கள் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்கள். நாட்டின் அதிபராகக் குடியரசுத் தலைவர் உள்ளார். ஆட்சித் தலைவராகப் பிரதமர். 11 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

ஸ்லோவேனியா

ஸ்லோவென் குழுவைச் சேர்ந்த ஸ்லேவிக் மக்கள் 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது சாமு அரசை நிறுவினார்கள். ஹங்கேரியில் ஆதிக்கம் செலுத்திய ஆவர் மக்களுடன் இணைந்து, 1867இல் ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் ராஜ்யத்தை உருவாக்கினர். முதல் உலகப் போரில் இந்நாடு தோற்கடிக்கப்பட்ட பின் ஸ்லோவேனியா தன் நாட்டு விடுதலையை 1918இல் அறிவித்தது. யூகோஸ்லேவியா என்ற பெயரில் செர்பியா, மான்டெனெக்ரா, குரோஷியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியது.

1991இல் ஸ்லோவேனிய நாடு விடுதலையை அறிவித்துக் கொண்டது மத்திய அய்ரோப்பிய நாடான இதன்பரப்பளவு 20 ஆயிரத்து 273 சதுர கி.மீ. மக்கள் தொகை 20 லட்சம். கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களில் சுமார் 33 விழுக்காடு மதம் இல்லை எனக் குறிப்பிடுபவர்கள்.

சுலோவேனிய மொழியை 92 விழுக்காட்டினர் பேசுகின்றனர். மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். 25-.6-.1991இல் யுகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்ததை விடுதலை நாளாகக் கொண்டாடு கிறார்கள். குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 10 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

சாலமோன் தீவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டமான சாலமோன் தீவுகள் 1893இல் பிரிட்டிஷ் பாதுகாப்பில் வந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு 1975இல் தீவுகளுக்கு சுயாட்சி வழங்கப்பட்டது. 1978இல் விடுதலை அளிக்கப்பட்டது. 28 ஆயிரத்து 450 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டில் மக்கள் தொகை 6 லட்சத்துக்கும் சற்றுக் குறைவு. மக்கள் அனைவரும் கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இங்கிலீஷ் ஆட்சி மொழியாக இருந்தாலும் பேச்சுமொழி மெலெனேசியன் பிட்கின் மொழி. பூர்வ குடிகளின் குழு மொழிகளாக 120க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.

6-.7-.1978இல் விடுதலை நாள். பிரிட்டனின் ராணிதான் ஆட்சித் தலைவர். கவர்னர் ஜெனரலும் பிரதம மந்திரியும் நிருவாகம் செய்கின்றனர். இருப்புப் பாதையே இல்லாத நாடு.

------------------"விடுதலை" 29-7-2009

ஜாதி வெறி, மதவெறி, மூடநம்பிக்கைகளை அகற்றி மனித குலம் ஒன்று என்று முழங்குவோம்!




சிம்பதியை விட எம்பதியை மக்களிடத்திலே பிரதிபலியுங்கள்
புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேச்சு


சிம்பதி என்பதைவிட எம்பதி என்பதை மக்களுக்குக் காட்டுங்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்து விளக்கவுரையாற்றினார்.

புதுச்சேரியில் 7.7.2009 அன்று நடைபெற்ற காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அதை எடுக்க வேண்டுமென்று நாங்களே சொன்னோம். பெரியார் பெயரையும் சேர்த்து எடுங்கள் அதைப் பற்றிக் கவலை இல்லை என்று சொன்னோம். அதனால் பெரியாருக்குப் பெயர் குறையாது. அண்ணா அவர்களுக்குப் பெயர் குறையாது.

அதன் பிறகு பார்த்தீர்களேயானால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிது புதிதாக ஜாதித் தலைவர்களுடைய பெயரைக் கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டான்.

வ.உ.சியை ஜாதிக்குள் அடக்கி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவருக்கு இருந்த பெருமை, அவருக்கு இருந்த தியாகம் சாதாரணமல்ல. இந்தியாவிலேயே இப்படிப்பட்ட தியாகம் செய்த ஒருவரைப் பார்க்கவே முடியாது. (கைதட்டல்). கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதியினர், நாங்கள். எங்கள் ஜாதியைச் சார்ந்தவர் இவர் என்று சொல்லி, இவரை ஒரு ஜாதி வட்டத்திற்குள்ளே அடைத்து மாலையிடுகிறோம் என்று சொல்லுகின்றார்கள். ஏன் அந்த குமிழுக்குள் அடைக்கிறார்கள்? நல்ல வாய்ப்பாக இதில் தப்பித்தவர் பெரியார் ஒருவர்தான். மீதி யாருமே தப்பிக்கவில்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களையே ஜாதிக்குள் அடைத்தவர்கள் உண்டு. ஜாதி சங்கத்தவர்கள் ஒரு பக்க விளம்பரம்

அதே மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஜாதி சங்கத்தைப் போட்டு ஒரு பக்க விளம்-பரமாகக் கொடுத்து அரசாங்கம் எங்களுடைய ஜாதித் தலைவரின் பெயரை மாவட்டத்திற்கு வைத்ததற்காக நன்றி என்று போட்டார்கள். திருவள்ளுவருக்கு மட்டும் நன்றியே வரவில்லை

பெரம்பலூர் மாவட்டத்திற்கு திருவள்ளுவர் மாவட்டம் என்று அரசின் சார்பிலே பெயர் வைத்தார்கள். அதற்கு மட்டும் தான் நன்றியே வரவில்லை. காரணம் என்னவென்றால், திருவள்ளுவர் என்ன ஜாதி என்று முடிவாகவில்லை. ஆக இப்படிப்பட்ட சமுதாயத்திலே ஜாதி நம்மைப் பிரிக்கிறது மதம் நம்மைப் பிரிக்கிறது.


மதக்கோளாறுகள் எவ்வளவு பெரிய தீவிரவாதத்தை இன்றைக்கு உருவாக்கி எங்கு பார்த்தலும் நாம் நடுங்கிக்கொண்டிருக்கக் கூடிய அளவிலே மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலை இருக்கிறது.

இந்த இடத்திலே நீங்கள் யாரும் ஜாதிக்கண்ணோட்டத்தை வைத்துப் பார்ப்பதில்லை. யாரையும் மதக் கண்ணோட்டம் கொண்டும் பார்ப்பதில்லை. யாரையும் கட்சிக் கண்ணோட்டம் கொண்டும் பார்ப்பதில்லை. மனிதக் கண்ணோட்டத்தோடு மட்டும்தான் பார்க்கிறீர்கள் என்று சொன்னால் உங்கள் எல்லை விரிந்த எல்லை, உலகளாவிய எல்லை என்று சொல்லும் பொழுது இந்தத் தத்துவம் தான் நாட்டிற்கு இப்பொழுது தேவை. மக்களுக்கு மட்டுமல்ல, பல தலைவர்களுக்கே தேவை. பல முக்கியமானவர்களுக்கே தேவை.

ரொட்டேரியன் தலைவர் நம்முடைய வீரமணி அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தவன் நான். அது ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சி. இன்றைக்கு அவரைத் தலைவராக பார்க்கும் பொழுது மெத்த மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே இன்னும் பல பெரிய பொறுப்புகளை அவரும் அவரைச் சார்ந்தவர்களும், நீங்களும் எல்லோரும் சிறப்பாக இருக்க வேண்டும். நல்ல அருமையான இளைஞர்கள் நடுத்தர வயதுடையவர்களுக்கு இப்படித் தொண்டு மனப்பான்மை இருக்கிறதே அதுதான் சிறப்பு.

பணம் சம்பாதிக்க சம்பாதிக்க

பணம் அதிகம் சம்பாதிக்க, சம்பாதிக்க ரத்தக் கொதிப்பு வரலாம், வருமானவரி பயம் வரலாம். ஆனால், அதெல்லாம் இல்லாமல் தொண்டு செய்ய உங்கள் ஆயுள் நீள்வதற்கு, உங்கள் மகிழ்ச்சி பெருகுவதற்கு நீங்கள் மற்றவர்கள் உள்ளத்தில் இடம் பெறுவதற்கு இதைவிட அருமையான முறை இருக்க முடியாது.

எனவே, இந்த ரொட்டேரியன் அமைப்பு வாழ்க! ரொட்டேரியன் அமைப்பு வளர்க! ரொட்டேரியன் காஸ்மாஸ் மட்டு-மல்ல, இந்த தத்துவங்கள் உலகம் முழுவதும் பரவட்டும் என்று சொல்லி, எது உண்மையானது? எது நியாயமானது? எது ஏற்புடைத்து, எது தேவையானது? என்பதை வாழ்நாளிலே நீங்கள் ஒவ்வொருவரும் கடைப்பிடியுங்கள். அப்படிக் கடைப்பிடித்தால் இன்றைக்கு நீங்கள் நம்புகிற பல மூட நம்பிக்கைகள் உங்களைவிட்டு ஓடிப் போகும்.

மூடநம்பிக்கையையும் முறியடியுங்கள்

நோய்களை எதிர்த்து மட்டும் நீங்கள் தொண்டு செய்யாதீர்கள். கொஞ்சம் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து நீங்கள் தெளிவாகப் பணி செய்யுங்கள். அந்தப் பக்கமும் கொஞ்சம் திரும்புங்கள்.

ஏனென்றால், மூன்று கிரகங்கள் சேர்ந்தால் உலகமே அழிந்து போய்விடும் என்று சொல்லி மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு நாட்டில் ஏராளமான பேர் இருக்கிறார்கள். அறிவியல் அறிந்த உங்களுக்குத் தெரியும் கிரகணம் வருவதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.

எட்டு கிரகங்கள் ஒன்று சேர்ந்தால்

எட்டு கிரகங்கள் சேர்ந்தால் உலகமே தீர்ந்து விட்டது என்று சொல்லி, இருக்கிற ஆட்டுக்குட்டியையும் சேர்த்து அடித்து சாப்பிட்டார்கள் கிராமத்தில். குடும்பத்தோடு இருந்து நாம் கடைசிவரை முடியப்போகிறோம் என்றெல்லாம் நினைத்தார்கள். ஆனால், உலகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, நீங்கள் நோய்நாடி, நோய் முதல் நாடக்கூடிய மருத்து-வர்களாக அந்த அளவுக்குத் திகழுங்கள். நீங்கள் வறுமை நோயை மட்டும் போக்காதீர்கள்.

அறியாமை நோயைப் போக்குவதற்கு முயற்சி எடுங்கள். ஜாதிக்கொடுமையைப் போக்குவதற்கு முயற்சி எடுங்கள்.

ஜாதியை ஒழிப்பதற்கு முயற்சி

தீண்டாமையை ஒழிப்பதற்கு முயற்சி எடுங்கள். ஏனென்றால், இன்னமும் பல கிராமங்களிலே இரண்டு குவளைகள் தேநீர்க்கடைகளிலே இருக்கிறது. ஒன்று பொதுத் தொகுதி இன்னொன்று ரிசர்வ் தொகுதி. ஆனால், அதே கிராமங்களிலே கள்ளச்சாராயத்தை அவன் குடிக்கும் பொழுது ஜாதிக்குச் ஜாதி கிளாஸ் வைத்து அவன் குடிப்பதில்லை.

ஒரே கிளாசில் தான் இருவரும் குடிக்கிறார்கள். பல நேரங்களில் எங்களுக்குக் கூட சலிப்பு ஏற்படுகிறது. பரவாயில்லை. நம்மால் செய்ய முடியாததை ஒரு கிளாஸ் சாராயம் தற்காலிகமாக செய்கிறதே என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.

மனித நேயத்தை நிலைநாட்டிட ஆகவே ஜாதி வெறி, மதவெறி, மூடநம்பிக்கை, இவைகளை அகற்றி, மனித குலம் ஒன்று என்று சொல்லி, மனித நேயத்தை நிலைநாட்டிடக் கூடிய இந்தப் பணிகள் தொடரட்டும். உங்கள் தொண்டுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

நீங்கள் வெளிச்சத்தைக் காட்டுகிறீர்கள். அந்த வெளிச்சம் எல்லாப் பகுதிக்கும் பரவட்டும். அதிலே இன்னும் சிறப்பு கிராமங்களை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள்.

இந்தக் கிராம மக்களுக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றீர்கள். அது தான் சிறப்பானது.

ஏ.பி.ஜே அப்துல்கலாம் பாராட்டுகிறார்

நாங்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்ட புரா திட்டத்தை மேநாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் எங்கு சென்றாலும் பாராட்டுவார்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவத்திலே கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பேதமிருக்கக் கூடாது. அப்படி இருப்பது அது ஒரு நவீன வர்ணாஸ்ரம தர்மமம் என்று அவர்கள் சொன்னார்கள். ஆகவே அந்த வகையிலே நீங்கள் கிராமங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

எல்லோரும் சமம்!

அடித்தளத்திலே இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். யார் ஒதுக்கப்பட்டவர்களோ, அவர்களை அணைத்து, நீங்கள் எல்லோரும் சமம் என்று காட்டக் கூடிய அந்த உணர்வைக் காட்டுங்கள்.

நீங்கள் சிம்பதியைக் காட்டுவதைவிட, அதிகமாக எம்பதியைக் காட்டுங்கள் என்று சொல்லி வாய்ப்பளித்தமைக்கு நன்றியைக் கூறி அனைவருக்கும் வாழ்த்தைக் கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-------------------"விடுதலை" 29-7-2009

கோயில்- விபச்சாரிகளின் விடுதி என்றார் காந்தியார்! அப்படி சொன்னது ஏன்?



கோயில்- விபச்சாரிகளின் விடுதி என்றார் காந்தியார்! அப்படி சொன்னது ஏன்?

ஜூனியர் விகடனில் வெளிவந்த (26.7.2009) இக்கட்டுரையைப் படியுங்கள்


திருவொற்றியூரின் அழகிய அடையாளமே வடிவுடையம்மன் கோயில்தான். ஆனால், கோயில் வாசலில் நடக்கும் கூத்துகளை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கோயில் இருக்கிற இடம் என்றுகூட எண்ணாமல், சில கும்பல்கள் நடத்தும் சகிக்க முடியாத வேதனைகளை எழுதி, அரசின் கவனத்தை திருப்புங்களேன் சார்....

பக்தர் ஒருவர் ஆதங்கத்தோடு நம்முடைய ஆக்ஷன் செல்லில் இப்படி வேண்டினார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் வாசலில் கடை விரித்திருந்த சிலரிடம் நாம் பேசியபோதுதான், அந்த ஆதங்கத்தின் அடர்த்தி நமக்குப் புரிந்தது.

வெளியூர்ல இருந்து இந்தக் கோயிலுக்கு வர்றவங்க, முதல் நாள் இரவே வந்து அக்கம்பக்க பகுதிகள்ல தங்கிடுவாங்க. கோயில் வாசல்லயும் தூங்குவாங்க. இது தெரிஞ்சு, லோக்கல் ஏரியாவில் இருக்கிற நாலஞ்சு கும்பல்கள் திருட்டு வேலைகளில் இறங்கிடுச்சுங்க. பணத்தையும், பொருளையும் பறிகொடுத்த பக்தர்கள் போலீஸ்கிட்ட போய் புகார் கொடுத்து, எவ்வித நடவடிக்கையும் இல்லாம சோகத்தோட ஊருக்குத் திரும்புற கதை தொடர்ச்சியா நடந்துகிட்டு இருக்கு. இதுக்கிடையில, காமவெறி பிடிச்சு அலையிற சிலரும், வடிவுடையம்மன் கோயில் பக்கத்தில இருக்கிற கடைகளையே பெஸ்ட் ஸ்பாட்டா நினைச்சு சல்லாபக் கூத்து நடத்துறாங்க. தண்ணி, கஞ்சான்னு முழு போதையில அந்த ஏரியாவையே நாசப்படுத்துறாங்க. முன்னால எல்லாம் பஸ் ஸ்டாண்ட் கிராக்கிகளை அழைச்சு வந்து இந்தப் பகுதிகள்ல கூத்து நடத்தியவங்க, இப்போ அடுத்த நாள் வழிபாட்டுக்காக வந்து தங்கியிருக்கிற பெண் பக்தர்கள்கிட்டயும் வம்புதும்பு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நாலஞ்சு பெண்கள் இந்த மாதிரி சம்பவங்களால பாதிக்கப்பட்ட விஷயம் இங்கே இருக்கிற எல்லோருக்கும் தெரிஞ்சும், எந்த நடவடிக்கையும் இல்லை... என்றவர்கள், சமீபத்தில் அங்கு நடந்த துயர நிகழ்வையும் கூறினார்கள்.

கடல் அரிப்பில் வீடு வாசலை இழந்த ஒரு பெண், வடிவுடையம்மன் கோயில் வாசல்ல இருக்கிற ஒரு கட்டடத்திலே தங்கி இருந்தாங்க... அவங்களுக்கு மூன்று கைக்குழந்தைங்க வேற... ஆண் துணை இல்லாம அவங்க தங்கி இருக்கிறது தெரிஞ்சு, ராத்திரி நேரத்தில அவங்களை நெருங்கிய சல்லாபக் கும்பல், குழந்தைகளோட அழுகையைக்கூட பொருட்படுத்தாமல், கந்தல் கோலமா சீரழிச்சிட்டுப் போயிடுச்சு. அஞ்சாறு பேர் வெறித்தனமா நடந்துக்கிட்டதால, கிட்டத்தட்ட அந்தப் பெண்ணோட மனநிலையே கெட்டுப் போயிடுச்சு. கலைச்சுப் போட்ட துணியைப் போர்த்தக்கூட நினைக்காமல், அடுத்த நாள் காலையில அந்தப் பொண்ணு கந்தலா நின்ன கோலத்தை ஊரே பார்த்துச்சு. அதுக்கப்புறம்தான், இங்கே கடை வச்சுருக்கிற எல்லாரும் சேர்ந்து லோக்கல் ஸ்டேஷன்ல போய் புகார் பண்ணினோம். சில நாள்கள் மட்டும் ராத்திரில போலீஸ் ரவுண்ட் வந்துச்சு. ஆனா, அதுக்கப்புறம் போலீஸ் வரலை. ஆடிய காலு அடங்குமாங்கிற மாதிரி இப்போ சல்லாபக் கும்பல்கள் மறுபடியும் கோயில் வாசல்ல கூத்து நடத்த ஆரம்பிச்சிட்டாங்க... என்றார்கள் வேதனையின் உச்சத்தில்.

போலீஸ் தரப்பிலோ, இப்போ, அப்படியெல்லாம் ஏதும் நடக்கலையே சார். நைட்ல போலீஸ் கண்காணிப்பை பலப்படுத்தி இருக்கிறோம்... என்றார்கள்.

காவல்துறை கைகழுவிவிட்டால்... அம்மன்தான் ஆக்ஷன் எடுக்கவேண்டுமோ?

-------------------நன்றி:"விடுதலை" 29-7-2009

சிறப்பு யாகம், பூஜையால் மழை பெய்யுமா? மேட்டூர் அணை நிரம்புமா?

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துவிட்டது. இதனையடுத்து, 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டும், டெல்டா பகுதி விவசாயிகளின் பாசன வசதிக்காகவும் அணையைத் திறந்து தண்ணீர் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பக்தர்கள் சிலர் மேட்டூர் அணை நிரம்பவேண்டும் என்ற வேண்டுதலுடன் சிறப்பு யாகமும், பூஜையும் நடத்தி இருக்கிறார்கள்.

யாகத்தால் பூஜையால் மழை பெய்யுமா? ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுக்குமா? மேட்டூர் அணை நிரம்புமா?

கர்நாடக மாநிலத்தில் கனத்த மழை பெய்து, அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்தால் கர்நாடகம் அந்த அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும். அப்படித் தண்ணீர் திறந்துவிட்டால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் உயரும்; டெல்டா விவசாயிகளுக்குப் பாசனத்திற்குத் தண்ணீரும் கிடைக்கும் மற்றபடி,

யாகத்தாலும் பூஜையாலுமே மேட்டூர் அணையை தண்ணீரால் நிரப்பிவிட முடியும்; காவிரியில் வெள்ளத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்துவிடமுடியும் என்றால் -

காவிரிப் பிரச்சினை என்று ஒன்று ஏது? கர்நாடக அரசோடு நமக்கு வாதாடல் - வழக்காடல் எல்லாம் எது? ஒன்றுமிருக்காதே!

இதுவெல்லாம் சிறப்பு யாகம், பூஜை நடத்திய பக்தர்களுக்குத் தெரியாதா? தெரியும்! என்றாலும் யாகத்தால், பூஜையால் மழை பெய்யும் அணை நிரம்பும் என்று ஓர் ஆவலாதிதான்; வேறென்ன?

இவர்கள் பரவாயில்லை என்பது போல, மழை பெய்யவேண்டும் என்று வேண்டி, பிகாரில் - ஒரு கிராமத்தில் கன்னிப் பெண்களை நிர்வாணமாக வயல்களில் ஏர் உழச் செய்திருக்கிறார்கள்! அப்படிச் செய்வதால் மட்டும் மழை பெய்துவிடுமா? அதுவும் ஓர் ஆவலாதிதான்!

-------------------------நன்றி: முரசொலி, 28.7.2009

ஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி?


தாய் தந்தையரிடத்திலே நன்றி பாசம் காட்டக்கூடிய உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா?
சமூக அவல நிலையைப் படம் பிடித்து தமிழர் தலைவர் விளக்கம்


தாய், தந்தையரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி இன்றைக்குக் குடும்பங்களிலே உண்டா? என்ற கேள்வியை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுப்பினார்.

புதுச்சேரியில் 7.7.2009 அன்று நடைபெற்ற காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நாம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அந்தப் பணம் நமக்காக மட்டுமல்ல; பணத்தை நமக்கு மட்டுமே வைத்திருந்தால் என்ன ஆகும்? கவலைதானிருக்கும். தன்பெண்டு, தன்பிள்ளை, என்று ஒரு குறுகிய வட்டத்திலே நிற்கக் கூடாது. தொல்லுலக மக்கள் எல்லாம் நம்மக்கள் என்று சொல்லி எங்கே சங்கடப்படுகிறார்களோ அவர்களுடைய துயரத்தைப் போக்க வேண்டும்.

நான் அடிக்கடி இது போன்ற அமைப்புகளில் பேசும்பொழுது ஒரு கருத்தை வலியுறுத்து-வதுண்டு. உங்களிலே மிகப் பெரும்பாலோர் அறிவீர்கள். நாம் ஒருவரைப் பார்த்து இரங்குவது என்பது வேறு. ஆனால் அவர்களுடைய நிலையிலேயே நம்மை ஆளாக்கிக் கொள்வது, தக்கவைத்துக்கொள்வது என்பது வேறு.

சிம்பதி- எம்பதி

உதவி செய்வதிலே கூட இந்த இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. சிம்பதி என்று சொல்லும்பொழுது அதற்கு என்ன பொருள்? நாம் அவரைப் பார்த்து பரிதாபப்படுகிறோம் என்று அர்த்தம், அதற்குப் பெயர் சிம்பதி.

ஆனால், அதைவிட சிறந்த சொல் ஒன்று உண்டு. ஆங்கிலத்திலே எம்பதி என்ற சொல். சிம்பதி என்ற சொல்லுக்கும் எம்பதி என்ற சொல்லுக்கும் என்ன வேறுபாடு என்றால், சிம்பதி என்பது வெறும் இரங்குதல். பரிதாபப்படுதல் அய்யோ அவர் இப்படி இருக்கிறாரே என்று நினைப்பது, அது ஓரளவு தான். ஆனால், எம்பதி என்ற சொல் இருக்கிறதே துன்பப்பட்டவர் இடத்தில் அவராகவே மாறி, அவரிடத்தில் இருந்து நம்மை வைத்துப் பார்ப்பது.

தன்நோய்போல் போற்றாக்கடை

அறிவினால் ஆகுவதுண்டோ பிரிதின் நோய் தன்நோய் போல் போற்றாக்கடை

என்று வள்ளுவர் சொன்னார். நாம் அந்த இடத்திலே இருந்தால் நமக்கு அப்படி ஏற்பட்டி-ருந்தால், என்ன ஆகியிருக்கும்? ஆகவே நாம் உதவ வேண்டாமா? என்று நினைக்கின்ற பொழுது தான் அவன் உயர்ந்த மனிதனாகிறான். சிறந்த மனிதனாகிறான். எப்பொழுதும் மற்றவர்களாலே மதிக்கக் கூடிய மனிதன் ஆகின்றான்.

அதைத்தான் உங்களிடத்திலே வலியுறுத்திடக் கடமைப் பட்டிருக்கின்றோம். ஒரே ஒரு கருத்தை உங்களுக்கு வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

எதை வைத்து மனிதனை அளக்க வேண்டும்?

மனிதர்கள் எதை வைத்து அளக்கப்பட வேண்டும் என்று சொன்னால், பணத்தால் அல்ல; அல்லது பட்டத்தால் அல்ல; அல்லது அவர்களுடைய பெருமைகளால் அல்ல. அவர்களுடைய தொண்டினால் மனிதர்கள் அளக்கப்பட வேண்டும். தெண்டினால் அவர்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறார்களோ, அந்த அளவிற்குத் தான் அவர்கள் சிறந்த மனிதர்கள். மாமனிதர்களாக இருக்க முடியும்.

புகழ்வேட்டை என்பது வரக்கூடாது. புகழ்தானே இவரை அடையாளம் கண்டு வரவேண்டுமே தவிர, புகழை நோக்கி நாம் போகக் கூடாது. அந்த வகையிலே ஒரு கருத்து மனிதனுக்கும், மிருகத்திற்கும் இருக்கின்ற வேறுபாடு என்ன? என்பதை சொல்லுகிற நேரத்தில் தத்துவரீதியாக ஒரு கருத்தை தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகின்றார்.

மனித குலம் பெற்ற பயன் என்ன?

மாமனிதர்கள் நிறைந்திருக்கின்ற மன்றம் இந்த மன்றம். எல்லோருக்கும் பகுத்தறிவு இருக்கிறது. ஆறாவது அறிவு இருக்கிறது. வளர்ச்சி மனிதனுக்கு ஓங்கிக்கொண்டேயிருக்கிறது.

நேற்றைய விஞ்ஞானம் இன்றைக்குப் பழையதாகப் போய்விட்டது. இன்றைக்கு மின்னணுவியல் யுகம். எனவே தான் இதை எல்லாம் நினைத்துப் பார்க்கிற பொழுது இந்த வளர்ச்சியினாலே மனித குலம் பெற்ற பயன் என்ன? முன்னேற்றம் என்ன? ஆக்கரீதியான பயன் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனித சுபாவம் என்னவென்று பார்த்தால், ஜீவன்களுக்கு இல்லாத சுபாவமுள்ளவனாக இருக்கின்றான்.

நாய்க்கு நன்றி உண்டு

நாய்க்காகிலும் நன்றி விசுவாசமென்பது மிகவும் உண்டு. நன்றியைக் கொஞ்சம் கூட மறக்காமல் நாய்தன் எஜமானனிடம் விசுவாசத்துடன் இருக்கும் தன் எஜமானன் தன்னை விட்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகும் தன் நன்றியின் அறிகுறியாக எட்டித்தாவி வாலை ஆட்டிக் கொண்டு துள்ளிக்குதித்து, மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும். மனிதனோ நாயைப் போல நன்றி விசுவாசம் உடையவன் அல்லன்.

நன்றி காட்டுவது என்பது அரிதிலும் அரிது. அதிலும் பிள்ளைகளை நாம் இப்பொழுது நிறைய படிக்க வைக்கின்றோம். ஒரு சிறிய உதாரணம் உங்களுக்குச் சொல்லுகின்றேன். ஒருவர் பெரிய வீடு கட்டினார். வீடு திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்களை எல்லாம் கொடுத்தார். பெரிய உத்தியோகத்தில் இருக்கிறவர். தன்னுடைய நண்பர்கள் எல்லாம் வந்தார்கள். வீட்டிற்குப் பெயரோ அன்னை இல்லம்.....!

அவருடைய வீட்டிற்கே அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருந்தார். எல்லோரும் அந்த அழைப்பிதழைப் பார்த்து அவருடைய புதுமனை விழாவிற்கு வந்திருந்தார்கள்.

அந்த இல்லத்துக்காரர் வந்திருந்த முக்கிய பிரமுகர்களுக்கு ஒவ்வொரு அறையாகக் காட்டினார். வீடு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று பாராட்டினார்கள். அதிலே ஒருவர் கேட்டார். அன்னை இல்லம் என்று நீங்கள் பெயர் வைத்திருக்கின்றீர்களே, இவ்வளவு பெரிய பாசத்தை தாய் மீது நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். அதனால் தான் அன்னை இல்லம் என்றே பெயர் சூட்டியிருக்கின்றீர்கள்.

தாயாரோ முதியோர் இல்லத்தில்

ஆகவே, உங்களுடைய தாயாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபொழுது,அந்த புதிய இல்லத்துக்காரர், அவர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார் என்று பதில் சொன்னார்.

இது கற்பனை அல்ல. வாழ்க்கை ஒரு பக்கம் உயர்ந்திருக்கிறது. சம்பளங்கள் கை நிறைய கிடைக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால் தன்னுடைய தாயிடத்திலே, பெற்றோரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி பல குடும்பங்களிலே இருக்கிறதா? என்று பார்க்கின்ற நேரத்திலே நீங்கள் எத்தனையோ உதவிகளை செய்கிறீர்கள். இடையிடையே அதை நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

ஏனென்றால் நோய்களிலே பெரிய நோய் அறியாமை மற்றும் இது போன்ற சிக்கல்களான நிலைகள்தாம். ஆகவே அதைச் சொல்லுகிறார்கள்.

நாயை அடித்தாலும் உதைத்தாலும்

நாயைத் தன் எஜமானன் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும் அதே நாய் தன்னுடைய எஜமானனிடம் அன்பு காட்டுவதைக் காணலாம். சோறு போடாவிட்டாலும், நாய் விசுவாசம் காட்டும். ஆனால், மனிதன் அப்படி அல்லன். மனிதனுடைய இயல்பு தன்மை என்ன? அதைப் பார்க்கும் பொழுதுதான் உங்களுடைய தொண்டின் சிறப்புத் தெரிகிறது.

திட சித்தத்தோடு உறுதி எடுத்துக்கொண்டு

இவ்வளவு பேர் சேர்ந்து அற்புதமான ஒரு புதிய சமுதாயத்தை இதற்கு விதிவிலக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் திட சித்தத்தோடு உறுதி எடுத்துக்கொண்டு நாம் தொண்டாற்ற வேண்டும்.

அதிலே சொல்லுகின்றார். மனிதன் அப்படி அல்ல. என்ன நன்மை அடைந்தாலும் ஒரு தீமை நேர்ந்துவிட்டாலும் முன்பு அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும் எடுத்துக்கொள்வான்.

நாம் எத்தனை நண்பர்களைப் பார்க்கின்றோம். எத்தனையோ உதவிகளைத் தொடர்ந்து செய்திருப்பீர்கள். ஒரே ஒரு உதவியை நீங்கள் மறுத்தீர்கள் என்று சொன்னவுடனே பல உதவிகள் செய்தது அவருக்கு நினைவுக்கு வராது. எட்டாவது உதவியை நீங்கள் செய்யவில்லையே அதை மட்டும் தான் சொல்லிச் சொல்லிக் காட்டக் கூடிய, சுட்டிக்காட்டக் கூடிய உணர்வோடு இருப்பார்கள்.

துரோகம் என்பது இயல்பு

எனவே, மனிதனுக்கு சகலமும் சுய நலம். வியாபாரமுறை. மனிதனுக்கு துரோகம் என்பது இயல்பு என்ற நிலையிலே இப்படி இருக்கிறார்கள். ஆனால் பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் பறக்கும் பருந்து பூமியில் கிடக்கும் சிறிய வஸ்துகளை அது கண்டுபிடித்து விடுகிறது.

கரும்பை பயிர் செய்ய யானைக்குத் தெரியாது

நம்முடைய கண் பருந்தின் கண்களைவிட பெரிது நம் கண் உருவத்தில் பெரிதே தவிர, பறவைக்குள்ள கண்ணின் சக்தியைவிட அதிகம் சக்தி கொண்டதில்லை.

பருந்தின் கண்களுக்கு தனி சக்தி இல்லை. மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பைத் தின்பதற்குத் தான் தெரியும். கரும்பை பயிர் செய்யத் தெரியாது.

எவ்வளவு அழகான கருத்து என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள். மனிதன் பிறருக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறியாகக் கொண்டுள்ளான். ஆனால் இந்தக் குறிக்கோள் மற்ற ஜீவனுக்கு இல்லை. எனவே தொண்டு செய்து அதன் விளைவாக மனிதன் புகழ் ஈட்டுவதிலே அவனுக்குத் தனி சிறப்பாகும். தொண்டின் மூலமாக கிடைக்கின்ற பெருமை தான்

இது தான் அவர்களுடைய கருத்து எனவே அந்தத் தொண்டின் மூலமாகக் கிடைக்கின்ற பெருமையிருக்கிறதே, அது தான் நிலையான பெருமை.

இங்கே விழிக்கொடை அளித்தவர்கள் பற்றிச் சொன்னார்கள். ஒன்று, விழிக்கொடை கொடுத்ததாலே உங்களுக்கு மனநிறைவு ஏற்படுகின்றது. இரண்டாவது, யாருக்கு விழிக்கொடை கொடுத்தீர்களோ அதன் மூலம் அவர் இறக்கவில்லை. மாறாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வு இருக்கிறதே அது தான் முக்கியம். செத்தவர்களைப் பிழைக்க வைக்க முடியும் நம்மாலே. எப்படி முடியும்? நம்முடைய தொண்டறத்தாலே, நம்முடைய ஆற்றலாலே, நம்முடைய பரந்து விரிந்த மனத்தாலே. இதே நகரிலே எங்களுடைய இயக்கத்தைச் சார்ந்த கண்ணாடிக் கடை வைத்திருக்கின்ற தோழருடைய தந்தையார் உடல் முழுவதும் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினார். இன்றைக்கும் எத்தனையோ பேர் உடல்தானம் செய்து வைக்கின்றார்கள். விழிக்கொடை, அதே போல சிறுநீரகம், உறுப்புக்கொடை அத்தனையும் தருகிறார்கள்.

ஜாதி செத்து விடுகிறதல்லவா?

இதில் மகிழ்ச்சி என்னவென்றால், மனித நேயம் தழைக்கிறது. மற்றவர்களை நாம் வாழ வைக்கிறோம் என்பது மட்டு-மல்ல; அதே நேரத்திலே ஜாதி என்ற கொடுமையிருக்கிறதே அதுவும் செத்துவிடுகிறது. இவர்கள் வாழ்கிறார்கள். ஏனென்றால், இந்த ஜாதிக்காரன் கண் இந்த ஜாதிக்குத் தான் பொருந்தும் என்பது கிடையாது.

இன்ன ஜாதியினர் ரத்தம்_அதாவது செட்டியார் ரத்தம் செட்டியாருக்கு, முதலியார் ரத்தம் முதலியாருக்கு, அய்யங்கார் ரத்தம் அய்யங்காருக்கு என்று கிடையாது.

அதற்கு மாறாக, எந்த குரூப் பொருந்துமோ அந்த குரூப்புக்குக் கொண்டு போய் வைக்கிறார்கள். அடிபட்ட ஒருவர் மருத்துவமனையிலே இருக்கிறார். அவருக்கு உடனடியாக ரத்தம் கொடுக்க வேண்டும். என்னங்க அவரைத் தொட்டாலே குளிக்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள்.

ஓர் ஆதி திராவிடர் ரத்தம்

ஓர் ஆதிதிராவிட தோழர்தான் ரத்தம் கொடுக்க வந்திருக்கிறார். உங்களுடைய ரத்த குரூப்பும், அவருடைய ரத்த குரூப்பும் தான் பொருத்தமாக இருக்கிறது. அவருடைய ரத்தத்தை உங்களுடைய அனுமதி இல்லாமல் ஏற்றக் கூடாது என்பதற்காக காத்திருக்கிறோம் என்று சொன்னால் இல்லிங்க நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று யாராவது சொல்லுவார்களா?

கையைப் பிடித்துக்கொண்டு, இப்பொழுது யாருங்க அதை எல்லாம் பார்க்கிறார்கள். நான் பெரியார் கட்சியில் சேர்ந்து ரொம்ப நாள் ஆச்சே. சீக்கிரம் அந்த ஆளைப் பிடியுங்கள் என்று தான் கேட்பார்கள்.

ஜாதி சாகிறது மனிதன் பிழைக்கிறான்

காரணம் என்ன? அப்பொழுது ஜாதி செத்து விடுகிறது; மனிதன் பிழைக்கிறான். ஏன் இதைச் சொல்லுகிறேன்? நம்முடைய நாட்டில் தியாகம் செய்த தலைவர்களையே ஜாதிச் சட்டிக்குள் அடைத்துவிட்டார்கள்.

அதுவும் அரசியல் எவ்வளவு ரொம்ப மோசமாகப் போய்விட்டது.

--------------------தொடரும் ...."விடுதலை" 28-7-2009

28.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சியர்ரா லியோன்ஸ்-சிங்கப்பூர்


சியர்ரா லியோன்ஸ்

இப்பகுதிக்கு முதலில் வந்த அய்ரோப்பியர்களான போர்த்துகீசியர்கள் வைத்த பெயர் லியோன்ஸ் என்பது. 1787இல் அடிமைகளாக இருந்தவர்களுக்கான மறு வாழ்வுக்கான திட்டத்தைச் செயல் படுத்த இந்நாட்டைப் பிரிட்டிஷார் தேர்வு செய்தனர். 1808இல் பிரிட்டனின் குடியேற்ற நாடாக ஆயிற்று.

1961இல் நாட்டுக்கு, விடுதலை தரப்பட்டது. 1971இல் குடியரசு நாடானது. 1978இல் புதிய அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு ஒரு கட்சி ஆட்சி முறை ஏற்பட்டது.

ஆப்ரிகாவின் மேற்குப் பகுதியில் வட அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் கினியாவுக்கும் லைபீரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு. பரப்பளவு 71 ஆயிரத்து 740 சதுர.கி.மீ. மக்கள் தொகை 60 லட்சம். இசுலாமியர் 60 விழுக்காடு. கிறித்துவர் 10 விழுக்காடு. மீதிப் பேர் பழங்கால நம்பிக்கைகளைக் கொண்டிருப்போர்.

இங்கிலீஷ் ஆட்சி மொழி 30 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவரும் கூட. 68 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பழைய பெயர் புலுவோசுங் என்பதாகும். மூன்றாம் நூற்றாண்டின் சீன நூல்களில் இப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. தீபகற்ப முனையில் உள்ள தீவு என இதற்குப் பொருள். அமைப்பின்படி பொருத்தமான காரணப் பெயர்தான். சுமித்ரா நாட்டின் சிறீவிஜய வமிச அரசின் அவுட் போஸ்ட் ஆக சிங்கப்பூர் 14ஆம் நூற்றாண்டு வரை திகழ்ந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஜாவா, சயாம் நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கடைசியாக மலாக்கா நாட்டைச் சேர்ந்ததாக ஆனது. அடுத்த இருநூறாண்டு களில் போர்த்துகீசியர்களும் டச்சுக்காரர்களும் மாறி மாறி ஆண்டனர்.

1819இல் பிரிட்டிஷார் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை ஜப்பான் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. போரின் முடிவுக்குப் பிறகு 1946இல் மீண்டும் பிரிட்டனின் ஆட்சிக்கு வந்தது. 1963இல் மலேசிய நாட்டரசில் சிங்கப்பூர் அங்கமாகியது. இதில் மலேயா, சபா மற்றும் சரவாக் மாநிலங்களும் அங்கம் வகித்தன. 1965இல் மலேசிய கூட்டரசிலிருந்து பிரிந்து தனி நாடாகியது.

692.7 சதுர கி.மீ. பரப்புள்ள இத்தீவின் மக்கள் தொகை 45 லட்சம். சீனப் பவுத்தர்கள், மலாய் முசுலிம்கள், இந்து, கிறித்துவ, சீக்கிய எனும் பல்வேறு மதத்தவர்களும் வாழும் நாடு. 93 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். சீனம், மலாய், தமிழ், இங்கிலீஷ் ஆகிய நான்கு ஆட்சி மொழிகள். மலாய் தேசிய மொழி.

9.-8.-1965இல் விடுதலை நாள் கொண்டாடப் படுகிறது. குடியரசுத் தலைவர் அதிபர். பிரதமர் ஆட்சித் தலைவர். அங்கும் கூட 3 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர்.


----------------"விடுதலை" 28-7-2009

இந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?


இந்துத்துவாவா?

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கு இந்துத்துவா கொள்கை காரணமல்ல. பா.ஜ.க.வை மதவாதக் கட்சி என்று மதச்சார்பற்ற கட்சிகள் கூறினாலும், இந்துத்துவா கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டோம். இந்துத்துவா கொள்கையில் பா.ஜ.க. உறுதியாக இருக்கும். இந்துத்துவா என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே, அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டோம். என்ன விலை கொடுத்தாகினும் இந்துத்துவா கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங் லக்னோவில் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த 15 ஆவது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழுவில், தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டன. இந்துத்துவாவை முதன்மைப்படுத்தியதால்தான் தோல்வி கண்டோம் என்று கட்சிக்குள்ளேயே பேசினார்கள். மக்கள் பிரச்சினையைப் பேசவேண்டும் என்று கூறியவர்களும் உண்டு. எதிர்க்கட்சிகள் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும். கட்சிக்குள்ளேயே அந்தப் பிரச்சினை வெடித்துக் கிளம்பியதே அதன் அடிப்படையைப்பற்றி கட்சியின் தலைவர் சிந்திக்கவேண்டாமா?

பொய்யை மட்டும் பேசுவது உண்மையைத் திரித்துக் கூறுவது என்பதிலே பி.ஜே.பி. சங் பரிவார் வட்டாரத்தை வெல்ல உலகத்தில் வேறு யாருமே கிடையாது.

காந்தியாரைப் படுகொலை செய்த, நாதுராம் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு, காந்தியாரைக் கொன்றது முசுலிம்தான் என்று மக்களை நம்ப வைக்கவேண்டும் என்று சூழ்ச்சி செய்யவில்லையா?

அதுபோல, இந்துத்துவா பற்றி ஏதோ உச்சநீதிமன்றமே சொல்லி விட்டது, சொல்லிவிட்டது என்று ஒரு கரடியை நீண்டகாலமாகவே இந்தக் கூட்டம் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது.

உண்மை என்னவென்றால், அந்தத் தீர்ப்பைக் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா இந்துத்துவாபற்றி தான் கூறிய தீர்ப்பை சில அரசியல்வாதிகள் திரித்து அரசியலாக்கிவிட்டனர் என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினாரே!

இந்துயிசம் குறித்து தாம் பொறுப்பில் இருந்தபோது வழங்கிய தீர்ப்பை சில அரசியல்வாதிகள் தவறான அர்த்தத்தில் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். தமது தீர்ப்பின் சாரத்தை அவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமல் தங்கள் வசதிக்கேற்ப திரித்துக் கூறுகின்றனர்.

இந்து, இந்துயிசம், இந்துத்துவா ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், குறிப்பிட்ட நோக்கத்துக்காக திட்டமிட்டு அந்த வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதுதான் தவறு.

விவேகானந்தர் சகிப்புத்தன்மை என்ற பொருளில் இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அந்த அர்த்தத்தில்தான் தம் தீர்ப்பில் இந்துயிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று கூறியதாகக் கூறினார்.


(தி இந்து, 6.2.2003, பக்கம் 11)

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தமது தீர்ப்பை பி.ஜே.பி. வகையறாக்கள் திரித்துக் கூறுகின்றன. தாம் கூறியதை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று கூறியதிலிருந்தே காவிக்கூட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்பதை தீர்ப்பு வழங்கிய நீதிபதியே அம்பலப்படுத்தி விட்டாரே! விவேகானந்தர் கூறிய பொருளில்தான் தாம் கூறியதாகச் சொல்லியிருக்கிறாரே தவிர, காவிக்கூட்டம் சொல்லும் சித்தரிக்கும் பொருளில் கூறவில்லை என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக இந்தச் சொல்லை காவிக் கூட்டம் சொல்லி வருகிறது என்பதையும் முகத்திரையைக் கிழித்தக் காட்டிவிட்டாரா இல்லையா?

காவிக் கூட்டத்தின் அந்தக் குறிப்பிட்ட நோக்கம் எது? இந்துக்கள் அல்லாத முசுலிம்கள், கிறித்துவர்களை அந்நியப்படுத்திக் காட்டவேண்டும் என்பதுதானே அந்தக் குறிப்பிட்ட கூட்டத்துச் சொல்லாடலின் நோக்கம்!

இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் தங்கள் மதத்தையே இந்து மயமாக, இந்திய மயமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கூறவில்லையா? கிறிஸ்துவைத் தூக்கி எறிந்துவிட்டு கிருஷ்ணனைக் கும்பிடவேண்டும் என்று கூறிடவில்லையா? அல்லாவை மறந்துவிட்டு அவதாரக் கடவுளான ராமனை வழிபடவேண்டும் என்று வெளிப்படையாகப் பேசவில்லையா?

அந்த அடிப்படையில்தானே இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை இடித்தனர். குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் சர்ச்சுகளை இடித்துத் தள்ளினர். வாடிகன் போப் இந்தியா வந்தபோது, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததும் அந்த நோக்கத்தில்தானே!


எதைச் செய்கிறார்களோ அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் அவர்களிடத்தில் கிடையாது என்பதற்கும் இது ஓர் எடுத்துக்காட்டுதானே!

-------------------"விடுதலை" தலையங்கம் 28-7-2009

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் சாதனைகள்




அருள்வாக்காம்


எந்த ஒரு பார்ப்பனர் இதழ் நடத்தினாலும், அதில் கண்டிப்பாக சங்கராச்சாரியாரின் ஒரு பொன்மொழி இடம்பெற்றிருக்கும். புரிகிறதோ இல்லையோ சடங்காச்சாரமாக பெரிய வாளி(லி)ன் படம் போட்டு 10 வரிகளாவது நிரப்பிவிடவேண்டும். அப்படி செய்யாவிட்டால், ஏதோ பெரும்பாவம் செய்துவிட்டதாக அவர்களைப் பொறுத்தவரை அப்படி ஒரு நினைப்பு பிழைப்பு.

அதேபோல, இந்த வார கல்கியில் (2.8.2009) ஒரு அருள்வாக்கு:

ஞானிக்கு ஆத்ம ஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மாதான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டுகொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்ம ஸ்வரூபத்தை மட்டுமே அனுபவிக்கிறவன் அவன். வெளிப் பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாமே ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.

பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், இந்த மாயை உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈசுவரன் என்று ஒருவனைப் பூஜை செய்து தங்கள் காரியங்களை நடத்தித் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனஸோடு பிரார்த்தித்தால் ஈசுவரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈசுவரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்

யாருக்கும் புரியாத வகையில் வார்த்தைகளை ஜாலமாக அடுக்கினால் அதற்குப் பெயர் அருள்வாக்கு தெய்வவாக்கு அவாள் அகராதியில்.

ஒன்று மட்டும் புரிய வருகிறது. இந்தவுலகம் மாயை இந்த நிலையில் இந்த லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை என்று சொல்ல வருகிறார் பெரியவாள்.

சரி... இந்தக் கருத்தை ஞானியாகிய அவரைப் பொறுத்து எந்த வகையில் சரி? மாயையான இந்த லோகத்தில் இந்த ஞானி எந்தக் காரியத்தையும் செய்யவில்லையா?

பிராமணப் பெண்களுக்கான கன்னிகாதானம் டிரஸ்டை ஏற்படுத்தவில்லையா? கம்யூனல் ஜி.ஓ.வைப்பற்றிப் பேசவில்லையா? ரிட்டயர்டு ஆன பிராமணர்களுக்கு அறிவுரை கூறி பிராமணர்களுக்கு உதவி செய்யக் கூறிடவில்லையா?

நாஸ்திகர்களுக்கு மருத்துவ உதவி செய்யக்கூடாது என்று தனது கடல் போன்ற பரந்து விரிந்த உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டவில்லையா?

தீண்டாமை க்ஷேமகரமானது என்று நியாய விரோதமாக, சட்ட விரோதமாக அருளுபதேசம் செய்யவில்லையா?

பாலக்கோட்டில் காந்தியாரே நேரில் வந்து கேட்டுக்கொண்டும் தீண்டாமை சாஸ்திர சம்பந்தமானது. அதற்கு எதிராகத் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கறாராகக் கூறவில்லையா?


இந்த லட்சணத்தில் இந்த லோகம் மாயை. இதில் செய்யவேண்டியது ஒன்றும் இல்லை என்று இவர் சொல்வாராம் அதைக் கல்கி வெளியிடுமாம். அதையும் காசு கொடுத்து வாங்கி இந்தச் சூத்திர மக்களும் படித்துக் கிழிக்க வேண்டுமாம்! பலே! பலே! -

-------------------மயிலாடன் அவர்கள் 28-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை