Search This Blog

30.7.09

வாடா, போடா என்று ஒருமையில்கூட திருவாரூர் கடவுளும், சுந்தரரும் பேசிக் கொள்வார்களாம்!




தங்கம் வேண்டுமா?


தங்கம் விலை ஏறிக்கொண்டிருக்கிறது.... வாங்க முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? வேண்டாம் உங்களுக்கு அந்தக் கவலை. பொழுது விடிந்தால் உங்கள் தலைக்குத் தங்கம் கிடைக்கும்.

என்ன புதிராக இருக்கிறதா? நாங்கள் சொன்னால், புதிராகத்தானிருக்கும்; புராணம் சொன்னால் பிடித்தமாக இருக்கும், அப்படித்தானே!

சுந்தரர் சுந்தரர் என்று ஒருவர் இருந்தார் தெரியுமா? சைவ சமயக் குரவர்களுள் ஒருவர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நான்கு குரவர்களுள் ஒருவர்தான் சுந்தரர்.

சுந்தரருக்கு நண்பர்கள் என்றால் அச்சு பிச்சு அல்ல; மானிடப் பதர்களும் அல்லர். சாட்சாத் எம் பெருமானே அவருக்கு நண்பர்; ஆமாம், திருவாரூர் தியாகராசர் இருக்கிறாரே அவர் தோள்மீது மானசீகமாய் கைபோட்டுப் பேசக்கூடியவராம்.


அதுமட்டுமல்ல, வாடா, போடா என்று ஒருமையில்கூட திருவாரூர் கடவுளும், சுந்தரரும் பேசிக் கொள்வார்கள் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்.

நண்பனேயானாலும், தம் கடமையைச் செய்யாமல் இருக்க முடியுமா? ஆண்டு தவறாமல் அவருடைய மானசீக நண்பனான ஆரூரானுக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவை நடத்தி விடுவாராம்.

அந்த நாளில் மகேசுவரப் பூஜை செய்து, சிவனடியார்களுக்கு ஆடை அணிவித்து 32 விதப் பலகாரங்களுடன் உணவளித்து, ஆடல், பாடல் சகிதமாக கோலாகலமாக விழா எடுக்கத் தவறமாட்டார் சுந்தரர்.

ஒரு ஆண்டு அவருக்குக் கடும் சோதனை; கையில், பையில் பணம் இல்லை; பங்குனி உத்திரமோ நெருங்கிவிட்டது. என்ன செய்வது என்று பெரும் தவிப்பு. கால்நடையாகவே திருப்புகலூர் செல்கிறார். அப்பொழுது அங்கு ஆலயத் திருப்பணி நடந்துகொண்டிருந்த நேரம் அது. எங்குப் பார்த்தாலும் செங்கல்லும், மணலும் கொட்டிக் கிடக்கின்றன.

புகலூர் பெருமானை வழிபட்டார் சுந்தரர். இரவு வழக்கம்போல வந்தது. சுந்தரர் என்ன செய்தார். இரண்டு செங்கற்களை தலைக்கு வைத்து இரவுத் தூக்கம் போட முயற்சித்தார். ஆரூரானுக்கு பங்குனி உத்திரப் பூஜை நடத்தவில்லையே என்ற ஏக்கத்தால் தூக்கம் வரவில்லை; புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தார். கடைசியில் ஒரு வழியாக தூங்கிவிட்டார். காலைக் கதிரவனும் உதித்துவிட்டான். விழித்துப் பார்த்தார், என்ன ஆச்சரியம், விட்டலாச்சார்யா திரைப்படத்தில் வருவதுபோல ஒரு காட்சி அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.

தலையில் செங்கற்கள் இரண்டை வைத்துப் படுத்தார் அல்லவா! அந்த இரு செங்கற்கல்லும் அப்படியே தங்கமாக மாறியிருந்தனவாம்.

எம் பெருமான் கருணையே கருணை என்று நெக்குருகிப் போனாராம். அப்புறம் என்ன, பங்குனி உத்திரம் தடபுடல்தான்.

தங்கத்துக்காக ஏங்கித் தவிக்கும் பக்தர்களே, உடனே திருப்புகலூர் போகவேண்டியதுதானே_ புகலூரானைப் போற்றிப் பாட வேண்டியதுதானே (அய்சுக்கு மயங்காதார் யார்?) இரு செங்கற்களை வைத்து அக்கடா என்று படுக்கவேண்டியதுதானே, விடிந்து பார்த்தால் தங்கம்! தங்கம்!! வெளியில் சொல்லாதீர்கள்!


அப்படித் தங்கம் கிடைத்தால் அவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்துவிடுமே! செங்கல் தங்கமாக மாறாவிட்டால்,தயாராக ஒரு காரணத்தைக் கையில் வைத்திருப்பார்கள். உண்மையான பக்தியிருந்தால்தான் செங்கல்லு தங்கமாகும். உன்னிடம் ஏதோ குற்றம் இருக்கிறது என்று கூறித் தப்பித்து விடுவார்கள்.

(தகவல்: குங்குமம், 16.7.2009)

-------------------- மயிலாடன் அவர்கள் 29-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: