Search This Blog

15.7.09

மூடநம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய போதை பக்தி போதை
நான் தனியே உட்கார்ந்து யோசித்துப் பார்த்தேன்

சுயமரியாதை இயக்கத்திற்கு மிகப் பெரிய சவால்

தஞ்சை: விடுதலை பவள விழாவில் தமிழர் தலைவர் பாராட்டு


நான் தனியே உட்கார்ந்து யோசித்துப் பார்த்தேன் சுயமரியாதை இயக்கத்திற்கு மிகப் பெரிய சவால் என்ன என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தஞ்சையில் 27.6.2009 அன்று நடைபெற்ற விடுதலை பவள விழா பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

முதல் தவணை என்று சொன்னார்கள். மிகுந்த ஆறுதலாக இருந்தது. பெருமையாக இருந்தது எனவே அவர்கள் தொடர்ந்து இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

இது எங்களுக்காக அல்ல, அருமைப் பெரியோர்களே! தோழர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முயற்சியிலும் செய்யலாம். நான் நம்முடைய மத்திய அமைச்சர்களிடத்திலே கூட இதைக் காட்டினேன். ஒரு நல்ல திட்டத்தை நம்முடைய பவளவிழா குழுவினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

விடுதலை அன்பளிப்புக்கான கூப்பன்

அழகான ஒரு கூப்பன். விடுதலை இதழை ஆறுமாதத்திற்கு நீங்கள் பெறுவதற்கு இந்தப் பற்றுச்சீட்டு அனுமதிக்கிறது என்று இதிலே இருக்கிறது.

இதிலே தனியே ஒரு பகுதி. செக் புக்கிலே எழுதுவதைப் போல ஒரு பகுதி. விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு குழந்தைகளுக்கு ஆக இந்த நான்கு ஏடுகளையும் போட்டு அத்துடன் கீழ்க்குறிப்பிட்ட இதழ்களில் ஏதேனும் ஒன்றினை ஒரு மாதகாலத்திற்கு இலவசமாக நீங்கள் பெறலாம். இவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மாதமிருமுறை உண்மை, குழந்தைகளுக்கான மாத இதழ் பெரியார் பிஞ்சு, ஆங்கில மாத இதழ் மாடர்ன் ரேசனலிஸ்ட்.

இங்கே கூப்பன்கள் வைத்திருக்கிறார்கள். நீங்கள் திருமணங்களுக்குச் செல்லும்பொழுது மணமக்களுக்கு இந்த சந்தா கூப்பன்களையே அன்பளிப்பாகக் கொடுத்துவிடலாம். இப்படி எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நீங்கள் 500 ரூபாய், 1000 ரூபாய்க்கு சந்தாக்களுக்குரிய கூப்பனை பெற்று அதை அனுப்பி வைத்தால் அவர்களுக்கு ஏடுகள் வரும். இப்படிப்பட்ட புதிய முறையை உருவாக்கியிருக்கிறார்கள்.

டாக்டர் இலக்குவன் தமிழ்

வெளிநாட்டுத் தமிழர்கள் சார்பாக பெரியார் பன்னாட்டமைப்பைச் சார்ந்த டாக்டர் இலக்குவன் தமிழ் டலஸ் நகரிலே இருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியதிலே ஒரு நல்ல செய்தியைச் சொன்னார்.

நேற்று கூட நான் பயணம் செய்யும் பொழுது என்னிடம் தொலைப்பேசியிலே வாழ்த்துச் சொல்லிவிட்டுச் சொன்னார். இணையத்திலே அதிகமான நாடுகள் விடுதலையைப் படிக்கின்றன. அதிகமான நாடுகளிலே இருக்கின்ற தமிழர்கள் உடனடியாகப் படிக்கிறார்கள். எல்லா கண்டங்களிலும் இருக்கிற தமிழர்கள் இணையத்திலே படிக்கிறார்கள் என்று சொன்னபொழுது எல்லையற்ற மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் உங்களுடைய அன்பான ஒத்து-ழைப்பு இருக்க வேண்டும்.

விடுதலை இயக்கத்தின் கருவி

இயக்கம் எப்படி எதிர் நீச்சல் அடித்துப் பழக்கப்படுகிறதோ அதே பணியைத்தான் விடுதலை ஏடு செய்யும் எனவே விடுதலை ஏடு இயக்கத்தின் ஒரு கருவி என்று சொன்னாலும், அது எங்களுக்காக அல்ல கட்சிக் கண்ணோட்டத்திற்காக அல்ல சமுதாயத்திற்காக, நாட்டிற்காக, நம்முடைய பெண்ணடிமையை நீக்குவதற்காக, அதைத்தான் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள், அளித்த வாழ்த்திலே தெரிவித்திருக்கிறார்கள். தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பவள விழா காணும் இந்நாளில் சமூகநீதி, பெண்கல்வி, அறிவியல் சிந்தனைகள் போன்ற களங்களில் விடுதலை நாளிதழ் தொடர்ந்து தொண்டாற்றி வெற்றிகள் குவித்திட, என் உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக. என்றும் அன்புடன் என்று எழுதி முதல்வர் கலைஞர் அவர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

அடைய வேண்டிய வெற்றிகள் இன்னும் அதிகம்

எல்லோருக்கும் நன்றி செலுத்துகின்ற இந்த நேரத்திலே சமூக நீதிக்காக, பெண்கல்விக்காக, பெண்ணினத்தினுடைய அடிமையைப் போக்குவதற்காக அறிவியல் சிந்தனைகள் பரப்பப்படுவதற்காக தொடர்ந்து விடுதலை தன்னுடைய பணியை அடக்கத்தோடும், உறுதியோடும், எதிர்ப்புகள் எந்தத் திசையிலே இருந்தாலும், அதை சந்திக்கக் கூடிய அளவிலே செய்யக்கூடிய அளவிலே இருப்போம் என்று சொல்லும்பொழுது, இன்னும் நாம் காணவேண்டிய வெற்றிகள் அதிகம் என்று நினைக்கின்ற பொழுது, எங்களுக்குச் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

பொதுவாகவே இதுவரை நீங்கள் பெரிய எல்லையை அடைந்து விட்டீர்கள். என்று நினைத்து எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொள்ள மாட்டோம்.

தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலே இருந்ததை விட, இன்றைக்கு உலகளாவிய நிலையிலே தந்தை பெரியார் தத்துவம் பரவியிருக்கிறது.

அது மிகப்பெரிய லாபம். அதே நேரத்திலே கடவுள் நம்பிக்கை பரவுவது போல ஒரு புறத்தோற்றம் இருக்கிறது. ஆனால் உண்மையில் கடவுளுக்கு சக்தியில்லை என்ற நிகழ்வுகள் நாட்டிலே நடந்து கொண்டிருக்கின்ற பொழுது இந்த இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறது.

விடுதலையின் நோக்கம் நிறைவேறிருக்கிறது என்பதற்கு அடையாளம் என்ன? கடவுள்களுக்கே பாதுகாப்பு ஏ.கே 47

எந்தக் கோவிலாக இருந்தாலும், அந்தக் கோவிலிலே ஏ.கே 47 பாதுகாப்பு இல்லாமல் எந்த கடவுளரும் இன்றைக்கு இல்லை.தீவிரவாதத்தைக் கண்டு பயப்படுகிறது.


எனவே, ஏ.கே.47 பாதுகாப்பிலே தான் கடவுள் இருக்கிறான். எளிமையாக கொஞ்சம் சிந்தித்தால் புரியும். சிந்திக்க வைக்க வேண்டும். பொறித்தட்டும் படியாகச் செய்ய வேண்டும். அந்தப் பணியைத் தான் இயக்கம் ஒரு பக்கத்திலே பிரச்சாரமாகச் செய்கிறது. இன்னொரு பக்கத்திலே அடிப்படையிலே மாற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய வகையிலே இங்கு பட்டி மன்றத்திலே தெளிவாகச் சொன்னார்கள் அல்லவா? பக்தி போதைதான் பெரிய போதை

மூடநம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய போதை பக்தி போதை பல பேர் ஏமாறுகிறார்கள். இல்லையானால் எத்தனை முறை எழுதினாலும் சாமியார்களின் மோசடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. விடுதலையினுடைய பணி இன்னமும் தேவைப்படுகிறது.

மருத்துவமனைகளை மூடிவிட முடியாது. பல பேருக்கு ஆயுள் பெருகியிருக்கிறது என்பது ஒரு பக்கம் உண்மை. ஆனால் நோய்களும் புதிதாக வருகின்றன. இதுவரை கேள்விப்படாத பன்றிக் காய்ச்சல் இப்பொழுது எல்லோரையுமே பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. காரணம் என்ன? நம்முடைய நாட்டிலே புதுப்புது நோய்கள் வருகின்றன.

மருத்துவமனைகள் அதிகம் தேவைப்படுகின்றன. புதிய நோய்களை அணுகுகிறார்கள். ஆயுள் வளர்ந்திருக்கிறது. ஏழு வயதிலே, பத்து வயதிலே, 27 வயதிலே இறந்த இந்தியர்கள் ஏராளம். இன்றைக்கு இந்தியர்களில் சராசரி வயது 69. மூடநம்பிக்கை குறைந்த காரணத்தால்தான், இவ்வளவு மருத்துவ வசதிகள் வந்த காரணத்தால்தான் மனித சராசரி வயது உயர்ந்திருக்கிறது. பேயடித்து இறந்தார்கள் என்று சொல்லுவதற்குரிய சூழல் கிடையாது. ஆகவே, அந்த நம்பிக்கைகள் குறைந்திருக்கின்றன. நேற்று மாலை நான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது, ஒரு மாலை நாளிதழிலே ஒரு செய்தி படித்தேன்.

நான் தனியே உட்கார்ந்து யோசித்துப் பார்த்தேன்

சுயமரியாதை இயக்கத்திற்கு மிகப்பெரிய சவால்; ஏன் விடுதலைக்கே கூட மிகப்பெரிய சவால். இன்னமும் நாம் ஆற்றவேண்டிய பணி எவ்வளவு இருக்கிறது என்று நானே தனியாக உட்கார்ந்து ஒரு பத்து நிமிடம் யோசித்துப் பார்த்தேன்.மாலையில் வந்த ஏட்டைப் படித்தவுடன் தோன்றியது. என்ன அந்தச் செய்தி? அந்தச் செய்தியை உங்களுக்குச் சொல்லுகிறேன். நம்மைப் பார்த்து பலபேர் கூட இதே பிரச்சினையைக் கேட்பார்கள். அதற்கும் விளக்கம் சொல்ல வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது அந்த செய்தியாளர் சொல்லுகிறார். நேற்று மாலை வந்திருக்கிற செய்தி. கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை 32 மடங்காக உயர்ந்துள்ளது.

இதைப் படித்தவுடனே சரி, நமக்குச் சரியான வேலையிருக்கிறது. விடுதலையினுடைய பணி இன்னும் விவேகமாக வேகமாகச் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது என்ற ஒரு வைராக்கியம், ஓர் உறுதியினுடைய உந்துதல் உள்ளத்தில் தானாகவே எழுந்தது.

கோயில்களில் வசூல் எவ்வளவு?

தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 30 ஆயிரம் கோவில்களில் தினமும் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று அந்தச் செய்தியாளர் எழுதியிருக்கிறார். ஒட்டு மொத்தமாக கோவில்களையும் சேர்த்து ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் காணிக்கையாக வருகிறது கோயில்களுக்கு. ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டுக் கோவில்களினுடைய சொத்து மதிப்பு ரூபாய் இரண்டு இலட்சம் கோடியைத் தாண்டுகிறது. இதிலே எந்தெந்தக் கோயில் முன்னணியிலே இருக்கிறது.? ஒரு செய்தி. பழனி மலை முருகன் கோவிலுக்கு தினம் ரூ.50 ஆயிரம் பக்தர்கள் ஆண்டுக்கு 50 கோடி வருமானம். முக்கிய திருவிழாக்களில் 10 இலட்சம் பேர் திரள்கிறார்கள். தமிழ்நாட்டின் நெம்பர் 1 வருமானம் உள்ள கோயில் இது தான்.

திருச்சி சமயபுரம் கோயிலுக்கும், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கும் சராசரி 40 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். சமயபுரம்கோயில் ரூ.25 கோடி ஈட்டுகிறது. அதற்கடுத்து திருச்செந்தூர் முருகன், தினமும் 25 ஆயிரம் பேர் வருகை ஆண்டு வருமானம் ரூ.15 கோடியைத் தொடுகிறது. அதற்கடுத்து திருவண்ணாமலை. அண்ணாமலையாருக்கு கிரிவலமாக வரக்கூடியவர்கள் பத்து லட்சம் பேர் வருகிறார்கள். இங்கே ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய். அதற்கடுத்த வரிசையிலே திருத்தணி முருகன். பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயில், தினசரி 20 ஆயிரம் பேர் வருகிறார்கள். திருத்தணியின் வருமானம் 7 கோடிரூபாய். மீனாட்சியம்மனின் வருமானம் மதுரையிலே 5 கோடி ரூபாய். ஆனால் இவைகள் எல்லாம் ஒரு பக்கத்திலே இருந்தாலும் இவைகள் எல்லாம் தமிழ்நாட்டிற்குள்ளே இருக்கின்றன.

திருப்பதி கோயிலில் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வருமானம்

பக்கத்திலேயிருக்கின்ற திருப்பதியிலே ஆயிரம் கோடி ரூபாய் கடந்த ஆண்டையும் தாண்டிவிட்டது. அங்கு மட்டும் தினமும் ஒரு இலட்சம் பக்தர்கள் வருகிறார்கள். கேரளாவிலே சபரிமலையிலே ரூ.80கோடி வருமானம். ஆண்டுக்கு மூன்றரை கோடி பக்தர்கள் வருகை.

பொது மக்களுடைய நலன் இந்த நாட்டு மக்களுடைய நலன் அல்லது நாட்டின் சுபிட்சம். வளம் இது பெருக வேண்டும் என்பதற்காகவா? அதே செய்தியிலே கீழே சொல்லுகிறார் ஏன் சொல்லுகிறார் என்று யூகம் செய்த அந்த குறிப்பில் என்ன சொல்லுகிறார்?

சிலருக்கு நோய் தீர வேண்டும். இன்னும் சிலருக்குப் பணக்கஷ்டம் விலக வேண்டும். மூன்றாவது, சிலருக்கு குடும்பச் சண்டை நீங்க வேண்டும். நான்காவது, குழந்தை பாக்கியம் பெறுவதற்காக. ஏதோ அங்கு சைஸ்வாரியாக அடுக்கி வைத்திருப்பதைப் போல கோவிலுக்கு வந்தவுடனே தூக்கிச் செல்லுவதைப் போல கருதுகிறார்கள்.

------------------தொடரும் ...."விடுதலை"15-7-2009

0 comments: