Search This Blog

31.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சோமாலியா-தென் ஆப்பிரிக்கா


சோமாலியா

தற்போது ஏமன் எனப்படும் ஏடன் 1839இல் பிரிட்டனால் ஆக்ரமிக்கப்பட்டது. 1920இல் தற்போது சோமாலியா எனப்படும் நாடு பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளின் பாதுகாப்பில் இருந்தது. 1941இல் நாட்டின் முழுப் பகுதிக்கும் பிரிட்டன் உரிமை எடுத்துக்கொண்டது. 1950இல் உலக நாடுகள் மன்றத்தின் ஆணைப்படி இத்தாலி இந்த நாட்டின் பொறுப்பை ஏற்றது. 1960இல் பிரிட்டனும் இத்தாலியும் சேர்ந்து சோமாலி நாட்டுக்கு (பிரிட்டிஷ் சோமாலிலாந்து, இத்தாலி சோமாலிலாந்து) விடுதலை தந்தனர். அய்க்கிய சோமாலியக் குடியரசு 1960 ஜூலை முதல் தேதியில் உருவானது.

1991இல் நாட்டிலுள்ள ஏராளமான இனக் குழுக்கள் எப்படியோ ஆயுதங்களைப் பெற்று தங்களுக்கென தனித்தனிப் பிரதேசங்களை உருவாக்கிக் கொண்டனர். அதில் ஒன்று சோமாலிலாந்து. சோமாலி தேசிய இயக்கம் எனும் அமைப்பு பழைய பிரிட்டிஷ் சோமாலிலாந்து பகுதியில் செல்வாக்கு பெற்று அதனைத் தனி நாடாக அறிவித்தது. நாட்டின் பாதுகாப்பு, குடியரசுத் தலைவர், தனி நாணயம் முதலிய எல்லாம் உள்ளன. சர்வதேச அங்கீகாரம்தான் இல்லை.

2002இல் நாட்டின் தென் பகுதியில் போர்ப்படைத் தளபதிகள் 6 மாவட்டங்களைக் கொண்டு தனி அரசு அமைத்தனர். போரில் ஈடுபட்ட பிறகு குழுக்களுடன்அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

ஆப்ரிகாவின் கிழக்குப் பகுதியில் எதியோப்பியா வுக்குக் கிழக்கே உள்ள இந்நாட்டின் பரப்பு 6 லட்சத்து 37 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 89 லட்சம். மக்கள் அனைவரும் சன்னி முசுலிம்கள். ஆட்சி மொழி சோமாலி, ஆபி, இத்தாலி, இங்கிலீஷ் பேச்சு மொழிகள்.

குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் பிரதமர் ஆட்சித் தலைவராகவும் உள்ளனர். இவ்வளவு பெரிய நாட்டில் இருப்புப் பாதையே இல்லை. சுமார் 22 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மட்டுமே சாலை வசதிகள் உண்டு. பாலை நிலம் மிகுந்த இந்நாட்டில் வறுமைதான் எங்கும்.

தென் ஆப்பிரிக்கா

1480இல் போர்த்துகீசியரான பார்த்தலோமு டயஸ் என்பவர்தான் ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் பயணித்தார். 1497இல் வாஸ்கோடகாமா, நேடாலில் கரையிறங்கினார். 1652இல் டச்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனியை ஜான்வான் ரீபீக்டேபிள் கூல் பகுதியில் அமைத்தார். இந்தப் பகுதியை பிரிட்டன் 1795இல் கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். 1840இல் டச்சு நாட்டைச் சேர்ந்த ஆப்ரிக்க போயர் இனத்தவர் ஆரஞ்சு சுதந்திர நாடு, டிரான்ஸ்வால் ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். 1879இல் ஜுலு மக்களைத் தோற்கடித்த பிரிட்டிஷார் மீண்டும் ஆங்கிலேயர் - போயர் யுத்தத்தைச் சந்தித்தனர். டிரான்ஸ்வாலும், ஆரஞ்சு சுதந்திர நாடும் தன்னாட்சி உரிமை பெற்ற பிரிட்டனின் குடியேற்ற நாடுகளாயின.

1910இல் தென்ஆப்ரிக்க யூனியன் உருவாக்கப் பட்டது. 1912இல் ஆப்ரிக்க தேசிய மாநாட்டுக் கட்சி தொடங்கப்பட்டது. 1948இல் ஆட்சிக்கு வந்த தேசியக்கட்சி இன ஒதுக்கல் கொள்கையான நிற வேற்றுமையைக் கடைப்பிடித்தது. தேசிய மாநாட்டுக் கட்சி இந்த முறையை எதிர்த்தது. அதன் தலைவர் நெல்சன் மண்டேலா. கட்சி தடை செய்யப்பட்டது. 155 தலைவர்களை சிறையில் அடைத்தது. 1961இல் குடியரசு நாடென அறிவித்து பிரிட்டிஷ் காமன் வெல்த்திலிருந்து விலகிக் கொண்டது.

ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுச் சதிச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி 1964இல் நெல்சன் மண்டேலாவைச் சிறையில் தள்ளியது அரசு. டி கிளெர்க் என்பார் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆப்பிரிக்க தேசிய மாநாட்டுக் கட்சி மீதான தடை நீக்கப்பட்டு நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகாலச் சிறை வாழ்வுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். நிற வெறியின் அடிப்படையிலான இன ஒதுக்கல் கொள்கை விலக்கிக் கொள்ளப்பட இதற்குக் காரணமாக இருந்த நெல்சன் மண்டேலாவுக்கும் டி கிளார்க்குக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1994இல் நடந்ததேர்தலில் நெல்சன் மண்டேலா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் நாடு பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் இணைந்தது.

ஆப்ரிகக்கண்டத்தின் தென் முனை நாடான தென் ஆப்ரிகாவின் பரப்பு 12 லட்சத்து 19 ஆயிரத்து 912 சதுர கி.மீ. மக்கள் தொகை 4 கோடி 42 லட்சம். மக்களில் 68 விழுக்காடு கிறித்துவர். எல்லா உயிரினங்களுக்கும் (தாவரங்கள் உள்பட) ஆத்மா உண்டு எனும் பழமை வாத நம்பிக்கை கொண்டோர் 29 விழுக்காடு உள்ளனர். பல்வேறு ஆப்ரிக்க மொழிகளைப் பேசும் மக்கள் உள்ளனர்.

31.-5.-1910 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இக்குடியரசு நாட்டுக்குக் குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். 50 விழுக்காடுக்கு மேல் உள்ள மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர். 25 விழுக்காடுக்கு மேல் வேலை கிட்டாதோர் உள்ளனர்.

----------------"விடுதலை" 307-2009

0 comments: