Search This Blog

Showing posts with label காமராசர். Show all posts
Showing posts with label காமராசர். Show all posts

17.7.11

மதம் மக்களுக்குச் சோறு போடுமா?- காமராசர்

காமராசர் எனும் பெருமகன்-2



நீங்க பூசையெல்லாம் செய்யறதில்லையா? இது கேள்வி.

அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் பண்ற துன்னேன். அடுத்த வேளைக்குச் சோறு இல்லாதவன் கடன் வாங்கி, ஷேத்ராடனம் போறான். எந்தக் கடவுள் இவன் கிட்டேவந்து, நீ ஏண்டா, என்னைப் பார்க்க வரலேன்னு கோவிச்சுக்கிட்டான். அபிஷேகம் பண்றதுக் குக் குடம் குடமா பாலை வாங்கி வீணாக்குகிறானே மடையன். அந்தப் பாலை நாலுப் பிள்ளைக் கிட்டே கொடுத்தா அதுங்க வலிமையா வளருமில்லியா?

பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்கு பி.எச்டி யா கொடுக்குறாங்க.பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்! பக்தி வேஷம் போடுறது நாலு பேர் பாராட்டணுமிங்கறத்துக்காகத்தான்.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லையா?

ஊருக்கு நூறு சாமி; வேளைக்கு நூறு பூசைன்னா, மனுஷன் என்னைக்கு உருப்படறது? நாட்டிலே வேலை யில்லாத் திண்டாட்டம், வறுமை, சுகாதாரக்கேடு, ஏற்றத் தாழ்வு இத்தனையும் வச்சுக்கிட்டு, பூசை என்ன வேண்டிக் கிடக்கு பூசைன்னேன்? ஆயிரக்கணக்கான இந்த சாமி கள் இதப் பாத்துக்கிட்டு ஏன் பேசாமே இருக்குன்னேன்?

பட்டறிவாளரான காமராசரின் பதில்கள் பேர் பெற்ற பகுத்தறிவாளனின் பதிலைப் போலல்லவா அமைந் துள்ளது. தலைவர் காமராசர் வீசிய வீரியமுள்ள அறிவுக் குண்டுகள் இவை. தொடர்ந்து பகுத்தறிவுக் கணை பாய்வதைப் பாருங்கள். . .

லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்தியெல்லாம் ஓவியர்கள் வரைஞ்சு வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்ம ஆளு கும்பிட ஆரம்பிச்சுட்டான்.

சுடலைமாடன், காத்தவராயன் பேர்ல அந்தந்த வட்டாரத்துல பிரபலமானஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்ம ஆளு. கடவுள் கண்ணை உருட்டிக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான் னான். செருசலத்திலே இருக்கிறவன் கர்த்தர்ன்னான், இதிலேயும் சில பேர் மேரியை கும்பிடாதேன்னான். கிறித்துவ மதத்திலேயே ஏழெட்டு டெனாமினேஷன் உண்டாக்கிட்டான்.

மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் அக்னி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமிகளைச் சொன்னான். நம்மநாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது?

மதம் மக்களுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களைப் போக்குமா? இந்தக் குறைஞ்சபட்ச அறிவு கூட வேணாமா மனுஷனுக்கு?

உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு மதமும் நான் பெரிசா நீ பெரிசான்னு மோதிக்கிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே! இப்படியெல்லாம் அடிச்சிக்கிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்? பச்சைத் தமிழரின் நியாயமான கேள்விக்கு எந்த பக்த பிரசங்கி பதில் சொல்லுவார்?

தீபாவளி கொண்டாடுவதில்லை . . .

நரகாசூரன் கதையை வச்சுத் தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரிக் கதையைச் செல்லி சரசுவதி பூசை பண்றான். விக்னேசுவரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை படைக்கிறான். இது மாதிரி செய்து பாமர மக்களைத் தம் மதத்தின் பிடிக்குள்ளே வச்சுப் பொழப்பு நடத்துறான்.

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்லே. எண்ணைத் தேய்ச்சுக் குளிச்சதுமில்லே. புதுசு கட்டனதுமில்லே. பொங்கல் மட்டும்தான் நம்மக் கலாச்சாரத்தோடு ஒட்டுன விழான்னேன்.


நான் தீ மிதி, பால் காவடி அப்படீன்னு போனதில்லே. மனிதனைச் சிந்திக்காத எந்த விஷயமும் தேவையில்லே. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக் குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்லே. இவன் லட்சக்கணக்கான ரூவாயிலே வைர ஒட்டியாணம் செய்து காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடுறான்.

தீர்க்கமான மானுட நேயச் சிந்தனையை மக்கள் தலைவரான காமராசர் எவ்வளவு நியாயமாக முன் வைக்கிறார். வரால் மறுத்துரைக்க முடியும் காமராசரின் கருத்தை?

திருப்பதி உண்டியலில் கருப்புப் பணம்!

கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டிய லில்லே கொண்டு போய்க் கொட்டுறான். அந்தக் காசிலே ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக் கூடம் கட்டிக் கொடுக்கலாம். அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடுமுன்னு பயந்துகிட்டுச் செய்வான்.

மதம் மனிதனைப் பயமுறுத்தி வைக்கிறதேத் தவிர தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித் தான் இருக்கான்னேன்!

கோயில், பிரார்த்தனை, நேர்த்திக் கடன் கழிக்கிறது. இதிலே உங்களுக்கு அனுபவமுண்டா? என்று தலை வரிடம் கேட்டதற்கு, பெருந் தலைவர் சொன்ன பதில் வியக்க வைக்கிறது - விலா நோக சிரிக்க வைக்கிறது.

சின்னப்பையனா இருந்தப்போ பத்ரகாளியம்மன் திருவிழா நடக்கும். அந்தச் சிலைக்கு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930க்கு முன்னாலே சஞ்சீவிரெட்டியோடு திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுக்கிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்புறம்தான் நினைச்சுப் பார்த்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணுச்சு. போயும் போயும் தலை முடியைத்தானா கடவுள் கேட்கிறாரு. எல்லாம் செட்டப் அப்படின்னு சிந்திச்சேன். விட்டுட்டேன் . . . தலையிலே இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆனா, ஆண்டவனுக்காக தலையையே கேட்டாக் கொடுப்பானா? எவ்வளவு ஆழமான கேள்வி. அறிவில் ஆர்வமுள்ளோர் சிந்திக்க வேண்டும்.

காமராசரை நமது நாட்டு முதல் மந்திரியாக அடை வற்கு ஓர் அளவுக்குக் காரணமானவன் என்று சொல் வேன். இத்தனை நாள்களுக்குள் குலக்கல்வித் திட்டம் பற்றிய முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், பலாத்காரத்தில் ஈடுபடுவோம் என்று முதல் அமைச்சர் சி.இராசகோபாலாச்சாரிக்கு எச்சரிக்கை செய்தோம். அதன் காரண மாக உடம்புக்குச் சவுகரியம் இல்லை என்று சாக்குக் கூறிப் பதவியை விட்டு விலகினார். அவர் விலகாமல் இருந்தால் காமராசர் பதவிக்கு வரமுடியாது!


இந்தியாவிலேயே எந்தப் பகுதியும் அடையாத நன்மைகளை தமிழர்களாகிய நாம் அடைந்திருக்கிறோம். ஏனெனில், தமிழர்களாகிய நமக்குக் கல்விக் கண் கொடுத்தவர் காமராசர் ஆவார்! காமராசர் பதவிக்கு வராத வரைக்கும் நாம் 100 க்கு பத்துபேர்தான் படித்திருந் தோம். இந்த நிலையை மாற்றி 100க்கு 40 பேருக்கு மேல் படிக்கும் நிலையைக் காமராசர்தான் ஏற்படுத்தினார்.


இன்றைக்குப் பிள்ளைகள் பாஸ் செய்து, என்ஜினீரிங், மெடிகல் கல்லூரிகளில் சேரப் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றதை நாம் காண்கிறோம்.
- (பெரியார் : 18.7.1965)

இது மட்டுமா? இதோ இன்னும் பெரியார் பேசுவதைக் கேளுங்கள். பெருந்தலைவரின் ஆட்சிக் காலம் தமிழர் வாழ்வில் பொற்காலம். அப்படிப்பட்ட காமராசரை பயன் படுத்திக் கொள்வது தமிழர் கடன் என்பதை 18.7.1961 விடுதலை வெளிப்படுத்துகிறது.

தோழர்களே! எனக்கு 82 வயது ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறக்க நேரலாம். உங்களையும் விட பெரியவனான நான் என் மரணவாக்கு மூலம் போல இதைக் கூறுகிறேன். நாம் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை.

இன்றைய நமது காமராசர் ஆட்சியில் நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும், அடுத்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முகலாய மன்னர்கள், அதன் பின்னர் வந்த வெள்ளைக்காரர்கள் ஆகிய இவர்களின் ஆட்சிகளிலாகட்டும் நமது கல்விக்கோ, முன்னேற்றத் துக்கோ வழி செய்யவில்லை!

தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உண்மையில் உருப்பட வேண்டுமானால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் நம்மை அடையுங்கள்!

தமிழர்கள் - குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற காமராசர் பல்வேறு வகையிலே பாடுபட்டு ஆட்சியின் மூலம் செயல்படுத்தி உள்ளார். அவற்றிற்கு அடிப்படையாக, மூலகாரணமாக இருந்தவர் அய்யா பெரியாரே! ஓங்கட்டும் காமராசர் புகழ்!

-------------------முனைவர் துரை.சந்திரசேகரன் துணைப் பொதுச் செயலாளர் ,திராவிடர் கழகம் -”விடுதலை” 17-7-2011

ஜாதி ஒடுக்கு முறைக்கு எதிராக . . .காமராசர்

காமராசர் எனும் பெருமகன்


காமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீரர். தந்தை பெரியாரை பெற்றதால் ஈரோடு பேர் பெற்றது. அண்ணா பிறந்ததால் காஞ்சி சிறந்தது. காமராசர் பிறந்ததால் விருதுப்பட்டி சீர்பெற்றது என்பது மிகையான வார்த்தை அல்ல.

பொதுவாழ்வில் ஈடுபட, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்கள் தொண்டாற்ற, நாட்டு விடுதலையில் நாட்டம் கொள்ள காமராசருக்கு - இளமைக்கால ஈர்ப்புக் குக் காரணமாய் அமைந்தவர்கள் காந்தியும், பெரியாரும்.

வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் ஈடுபட்ட போது, இளைஞராய் பங்கேற்றவர் காமராசர். சத்தியமூர்த்தி யின் சீடராக அடையாளப்படுத்தப் பட்டாலும் அரசியலில் இராசகோபாலாச் சாரியின் ஆதிக்கத்தை அகற்றி அணிய மானவர் காமராசர்.

ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்திட வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சிறப்பாக செயலாற்றியவர். காங்கிரசில் இருந்தாலும், காங்கிரஸ் முதலமைச்சரான இராசகோபாலாச்சாரி குலக் கல்வித் திட்டத்தைச் செயலாக்க முனைந்தபோது எதிர்த்தவர். அத்திட்டம் ஒழிய காங்கிரசாரை அணிதிரட்டியவரும் கூட. தேவை என மக்கள் கருதியபோது, அவசியம் என அவர் உணர்ந்தபோது இராசகோபாலாச்சாரியை வீட்டுக்கு அனுப்பி தமிழக முதல்வராக பொறுப் பினை ஏற்றவர்.

பெரியாரின் கருத்தினை ஏற்று ஆட்சித் தேரினை செலுத்தியவர் காமராசர். தகுதி-திறமை பேசிய கூட்டத் தினருக்கு உன் தகுதியும் தெரியும், உனக்கு சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும் என்றவர். இந்திய பிரதமர்களை உருவாக்கிடும் ஆற்றல் பெற்ற கிங் மேக்கர் அவர். சோசலிச சமுதாயம் அமைவதை லட்சியமாகக் கொண்டவர். ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரானவர். அவரின் சாதனைகளை, சிறப்புகளை, செயல் திறனைப் பார்ப்போம்.

எத்தனை எத்தனை திட்டங்கள்

மணிமுத்தாறு அணை, அமராவதி அணை, வாலையார் அணை, ஆரணி யாறு அணை, மங்கலம் அணை, வீடூர் அணை, கிருட்டிணகிரி அணை, மேல்கட்டளைக் கால்வாய், புள்ளம்பாடி கால்வாய், சாத்தனூர் அணை, கோமுகி அணை, பரம்பிக்குளம் - ஆளியாறு அணை, கீழ் பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம் இப்படியாய் எத்தனை எத்தனை அணைகள் காமராசர் ஆட்சியில் அமைக்கப்பட்டன. எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன. வேளாண்மை செழித்திட காமராசர் ஆற்றிய பணிகள்.

திருச்சி பெல் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி உற்பத்தி சாலை, மேட்டூர் காகித ஆலை, ஆவடி ராணுவ டாங்கித் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, குன்னூர், கிண்டி இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ், நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம், திருச்சி துப்பாக்கித் தொழிற் சாலை, இப்படியாய் இன்னும் ஏராளமான சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பல்வேறு தொழிற்சாலைகள் தலைவர் காமராசரின் ஆட்சியின் சாதனைகளாக மலர்ந்தன.

நீர்மின்திட்டங்கள், அனல்மின் திட்டங்கள், அணு மின் திட்டங்கள் பல காமராசர் ஆட்சிக் காலத்தில் செயல் படுத்தப் பட்டு கிராமப்புற மக்கள் மின் னொளி பெற காரணமானவர் காமராசர். மின்வாரியம் அமைத்து மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு என செயல்படுத்தி மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட வைத்தார்.

மக்கள் பங்களிப்புடன் கல்வி . . .

ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைந்திட மாணவர்களாகிய பிஞ்சு உள்ளங்களில் ஜாதி, பொருளியல் ஏற்றத் தாழ்வு எனும் நஞ்சு கலந்துவிடக் கூடாது என எண்ணிய காமராசரின் உள்ளத்தில் உதித்திட்ட திட்டம்தான் மதிய உணவுத் திட்டம் - சீருடைத் திட்டம். ஒடுக்கப்பட்ட சமுதாய பிள்ளைகள் படிக்கவும், படித்து சிறக்கவும், மதிய உணவுத் திட்டம் மகத்தான வழி வகுத்தது என்றால் மிகையல்ல. அனை வரும் சமம் என்ற உணர்ச்சி, ஒன்றாக அனைத்து மாணவர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிடவும், ஒரே மாதிரியான உடைஅணிந்து வருவதும் ஆன நிலை ஏற்பட வழி வகுத்தது. மக்கள் பங்களிப் போடு இத்திட்டங்களை நிறைவேற்றினார்.

அரை நேரம் படிப்பு - அரை நேரம் குடும்பத் தொழில் என்று குல்லுகபட்டர் இராசகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து - கல்விச் சோலை மலர காமராசரும் காரணமானார். உள்ளம் கொதித்து அவர் கொட்டிய வார்த்தைகள் இதோ, இது ஒரு பைத்தியக்காரத் திட்டம். இதை ஒழித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் என்றார்.

நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை . . .

கடையர் எனப்படுவோர் எவ்விதம் கடைத்தேற முடியும்? கல்வி பெற்றுச் சிறந்தால்தான் தேறுவார்கள். படிக்கிற கல்வி மூலம் நல்ல அறிவும் திறமையும் வளர்ந்தால் நிச்சயமாகப் பிழைத்துக் கொள்வார்கள். ஆம்., அவர்கள் சிறந்த மனிதர்களாக மாறுவார்கள். ஆனால் பலருக்கு எழுத்தறிவே கிடையாது. ஊர்களில் பள்ளிக் கூடம் இல்லாத போது எப்படி எழுத்தறிவைப் பெற முடியும்? ஆகவே முதல் வேலையாக எல்லா ஊர்களிலும் பள்ளிக் கூடங்களைத் திறக்க வேண்டும். கல்வியை எல்லார்க்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வியை இலவசமாகப் பெற வேண்டும். இன்னொன்று நிலம் ஈரமாக இருந்தால் தான் பயிரிட முடியும்; காய்ந்து கிடந்தால் விதை எப்படி முளைக்கும்? பிள்ளைகளின் வயிறு எந்தக் காரணம் கொண்டும் காயவே கூடாது. அவர்களின் வயிறு காய்ந்திருந்தால் அவர்களுக்கு எவ்விதம் படிப்பு ஏறும்? இந்த நாட்டில் ஏழைகள் மலிந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு அங்கேயே, பள்ளிக் கூடத்திலேயே சோறிட வேண்டும். இதுதான் நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, இனிமேல் வரும் தலைமுறையினராவது பெற்றுப் படித்து வளர்ந்து வாழட்டும் . . . எல்லாருடைய கண்களையும் திறக்கும் பள்ளிகளைத் திறப்பதை விடவும் முக்கிய வேலை இப் போதைக்கு இல்லை. எனவே மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஊர் ஊராக வந்து பகலுணவுத் திட்டத்திற்குப்பிச்சை எடுப்பதற்கும் சித்தமாக உள்ளேன் - காமராசரின் எட்டையபுரம் பேச்சு இது. படிப்பை மக்கள் - குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் நுகரச் செய்ய தலைவரின் எண்ணம் எப்படி இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஜாதி ஒடுக்கு முறைக்கு எதிராக . . .

தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப் பில் இருந்தபோது பெரியாரின் எண்ணக் கனவை ஈடேற்றும் வண்ணம் பெருந் தலைவர் காமராசர் அற்புத சாதனைகளை நிகழ்த்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயில் கதவுகள் திறக்க மறுத்தன - திமிர்வாதம் பேசினர் ஆதிக்க வாதிகள். பரமேசுவரன் என்ற தாழ்த்தப்பட்டவரை இந்து அறநிலையத் துறை அமைச்சராக்கியதன் மூலம் பூரணகும்ப மரியாதை கொடுத்து அழைக்க வேண்டிய உரிமைப் பிரகடனமாயிற்று. போலீஸ்துறை அமைச்சராக கக்கன் அவர்களை நியமனம் செய்ததன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட வழியாயிற்று.

ஏழை எளிய மக்கள் வாழ்வில் மாற்றமும், ஏற்றமும் பெற கல்வி வள்ளல் காமராசர் தமது ஆட்சியைப் பயன்படுத் தினார். எளிமையாக, நேர்மையாளராக தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்.

எல்லாம் பெரியார் அய்யாவாலேதான் நடக்குது. அவர் சொல்றார் - நாம் செய்கிறோம்! இது 1952லே துவங்கின சிக்கல் இல்லை. அய்யாயிரம் ஆண்டு களாக இருக்கிறதாச்சே!

தெய்வத்தின் பேராலேயும், மதத்தின் பேராலேயும் நம்மை ஒதுக்கி வைச்சுட் டானுங்க! இதை தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! யார் கவலைப்பட்டா?

பெரியார் ஒருவர்தானே தலையில் எடுத்துப் போட்டுக் கிட்டுப் பண்ணிக் கிட்டிருக்கார். அவரில்லேன்னா, நம்ம பிள்ளைங்க கதி என்னவாயிருக்கும்? அத்தனை பேரும் கோவணத்டே வய லிலே ஏரோட்டிக்கிட்டிருப்பான்! இன் னைக்கு டெபுடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரெட்டிரியாகவும் உட்கார்ந்திருக்கான். நம்ப கிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார் நினைச்சதிலே ஏதோ கொஞ்சம் பண்ணிக்கிட்டிருக்கோம்.

அவர் எந்த அதிகாரமும் இல்லாமே, நமக்காக ஊர் ஊரா அலைஞ்சு சத்தம் போட்டுக்கிட்டே வர்ராரு! அவராலேதான் நமக்கெல்லாம் பெருமை.

தந்தை பெரியாரை - அவர்தம் உழைப்பை - அதனால் விளைந்த பயனை நன்றி உணர்வோடு பெருந்தலைவர் காமராசர் பகன்றுள்ளதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அய்யாவின்மீது காம ராசர் வைத்திருந்த மதிப்பை உணர முடியும்.

குலக்கல்வித் திட்டம் என்ற பேரால் - தமிழினத்தின் எதிர்காலத்தையே சூனிய மாக்கிடவும், ஒரு இனத்தின்அறிவுக் கண்ணை ஊனப்படுத்தவும், இராச கோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டத்தைப் பெரியார் எதிர்த்து முறியடித்தது ஒரு புறம் - அதனால் இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண் டது இன்னொரு புறம் - பெருமைக்குரிய காமராசர் தமிழ்நாட்டின் ரட்சகராக - முதல் அமைச்சராக அரியணை ஏறியது என்பது மற்றொரு புறம் தமிழ்ச் சமுதா யத்திற்குக் கிடைத்திட்ட பெருவாய்ப்பு. இவற்றிற்கெல்லாம் தந்தை பெரியார் தான் காரணம்.

இராசாசியால் மூடப்பெற்ற 6000 பள்ளிகளை மீண்டும் காமராசர் திறந் தார்- மேலும் 14000 பள்ளிகள் என ஆக் கினார். 300 பேர் கொண்ட கிராமத்தில் எல்லாம் பள்ளிகள் திறப்பு. 14 வயதுக் குட்பட்ட அனைவரும் படித்திட வேண்டும் என்ற கட்டாய இலவசக் கல்வி. 1954 இல் தமிழகத்திலிருந்த தொடக்கப்பள்ளிகள் 30,000 இதர உயர் நிலைப் பள்ளிகள் 2,200. தமிழக வரலாற்றில் காமராசர் காலம் கல்வி வளர்ச்சியில் பொற்காலம்.

இருக்கு இல்லைங்கறது பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையா துன்னேன். நாம் செய்யறது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்கியனா இருக் கனும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிக்கிட்டுக் கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா?

மேல்சாதி, கீழ்சாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுகப் பண்ணின ஏற்பாடுன்னேன். சுரண்டித் திங்கறதுக்காகச் செய்ததுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்திலே பத்துமாதம் இருந்துதானே பிறக்குறோம். அதுவே என்ன பிராமணன்-சூத்திரன், ரொம்ப அயோக்கியத்தனம்.

நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி, ஆத்திகவாதி எல்லோருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்ரவனை மனுஷன்னுதான் பார்க்குறேன். பிராமணன்- சூத்திரன்னு பார்க்குறதில்லை.

தனிப்பட்ட முறையிலே நான் கோயில், பூசை, புனஸ்காரமுன்னு பைத்தியம் பிடிச்சி அலையறதில்லே. மனிதனோடே அன்றாடக் கடமைதான் முக்கியமுன்னு நினைக்கிறவன் நான்.

மனிதனை மதிக்க வேண்டும். மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை களை சரிவர செய்ய வேண்டும். மக்களைப் பிரித்து வைக்கும் ஜாதியின் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது. யோக்கியப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதிலே அழுத்தமான நம்பிக்கை உள்ளவராக தலைவர் காமராசர் வாழ்ந்தார் என்பது மேலே அவன் பதில்கள் பறைசாற்றுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களின் ஒருவரும் முன்னாள் மேலவை உறுப்பினரும், சீரிய பகுத்தறி வாளருமான சீர்காழி பெ.எத்திராஜ் எழுப்பிய வினாக்களுக்கு தலைவர் காமராசர் அளித்திட்ட பதில்கள்தான் இவை. இவற்றுக்கும் மேலாக நம்மை சிலிர்க்க வைக்கும் சிந்தனை பதில்களைத் தொடர்ந்து பாருங்கள்.

--------------------முனைவர் துரை.சந்திரசேகரன்
துணைப் பொதுச் செயலாளர் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை” தொடரும் 16-7-2011


15.7.11

தெய்வ வழிபாட்டை வெறுக்கிறீங்களா? காமராசர் பதில்


(காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இப்பதிவை பதிவு செய்கிறோம். படியுங்கள்!சிந்தியுங்கள்!! தெளிவடையுங்கள்!!! - தமிழ் ஓவியா)

கடவுள் பற்றி காமராசர்

தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளை யெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரிவட்டமும் கட்டிக் கொள்வார். தீபாராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார். விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக்கணும் அதுதான் மனுஷ நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில்லியா…. அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே…!” என்பார். தலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு…?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.

“ஏன்ய்யா… குருக்கள்…. நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க…. இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா…? எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப்போனார்கள்.

தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு… அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காமராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு…!’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க…!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச்சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன்.

“கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்… பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.

“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா…?”

“இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா…?” என்றார்.

நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே…” என்று ஆரம்பிக்கவும்.

அவரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னு” சொல்றீயா…? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா… மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்… ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்… இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா…?” என்று கேட்டார்.

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக் கிறீங்களா…?இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே…! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட்டாரே…?” என்றேன்.

“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்…? ரொம்ப அயோக்கியத்தனம்…!” என்றார் காமராசர்.

எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா…..? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை…?” என்று கேட்டேன்.


“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி – ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே…. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்(Govern)” பண்றவனோட வேலை.

“நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே…! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்…” என்று மிகத் தெளிவாகப் பேசினார்.

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா…?” எனக் கேட்டேன்.

“அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்… எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்….?’ அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்…. அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா…?”“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க…? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்(Social Status)’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக் கலாமில்லியா….” ஊருக்கு நூறு சாமி… வேளைக்கு நூறு பூஜைன்னா…. மனுஷன் என்னிக்கு உருப்படறது…? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்….. வறுமை – சுகா தாரக்கேடு…. ஏற்றத் தாழ்வு இத்த னையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு…. பூஜைன் னேன்…..? ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்…?”

தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர்சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன்.

“அப்படியானா…. நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா…. இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா….?” என்று கேட்டேன்.

அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்… “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா…? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பக வான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்….? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்… காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்… மதம் மனிதனுக்குச் சோறு போடுமா…? அவன் கஷ்டங்களப் போக்குமா…? இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு…? உல கத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா… நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே…! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே….! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்…?” தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே… அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே…?” என்று வினாத் தொடுத்தேன்.

தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய்… கிறுக்கா… நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்….? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்….! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா… அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும்.”….காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக் கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க…. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல… எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல… புதுசு கட்டுனதுமில்ல… பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்…” என்று விளக்கினார்.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்…!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே…?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன்.

தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல… பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா…? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்….” என்றார்.

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா…? அதிலேருந்து எப்போ விலகுனீங்க…?” இது நான்.

“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு… எல்லாம் ‘பார்பர் ஷாப்(Barber Shop)’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா…?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.

“அப்படியானா… மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே… அதப்பத்தி….?” என்று கேட்டேன்.

“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா… தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்…!”

காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா…?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.

---------------------------நன்றி: திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்)

15.7.10

கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை கர்மவீரர் காமராசர்


காமராசர்

பச்சைத் தமிழர் என்றும், கல்வி வள்ளல் என்றும், ரட்சகர் என்றும் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட கர்மவீரர் காமராசர் அவர்களின் 108 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1903).

காமராசர் அவர்களைப் பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கலாம். சுதந்திரப் போராட்டத்தின் தியாகியாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக, அரசியல் வாதியாக, ஆட்சித் தலைவராக விரித்துப் பேசலாம்; என்றாலும் தந்தை பெரியார் பார்வையில், தமிழினத்தின் கண்ணோட்டத்தில், பார்ப்பன எதிர்ப்பு என்ற தளத்தில் அவரை வெளிப் படுத்துவதுதான் இன்றைய தேவையும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் ஆகும்.

1953 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த டி.வி.எஸ். கட்டடத் திறப்பு விழா அது. சி.பி. ராமசாமி அய்யரும் இந்த விழாவிலே கலந்து கொண்டார்.

விழாவில் முதல் அமைச்சர் ராஜாஜி பேசும் போது, பிராமணன், சூத்திரன் என்று பேச்சை ஆரம்பித்தார். சூத்திரன் செய்ய வேண்டிய மோட்டார் தொழிலைப் பிராமணன் செய்வதாகத் தமது பேச்சில் ராஜாஜி குறிப்பிட்டார். ராஜாஜி இவ்வாறு குறிப்பிட்டதும் காமராசர் கோபம் கொண்டார். தொடர்ந்து பேசிய ராஜாஜி டி.வி.சுந்தரம் அய்யங்காரைப் பாராட்டியும் பேசினார். வயதானாலும் டி.விசுந்தரம் அய்யங்கார் தமது புத்திரர்களிடம் தொழிலை ஒப்படைத்திருக்கிறார் என்றும், டி.வி. சுந்தரம் அய்யங்காரின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது என்றும் ராஜாஜி பேசினார்.

அடுத்து காமராஜ் பேசினார். வாலிபர்களிடம் வயோதிகர்கள் பொறுப்பை ஒப்படைப்பது பற்றி ராஜாஜி இங்குக் கூறினார். ராஜாஜி இவ்வாறு பேசியதை நான் ஆதரிக்கிறேன். வர்த்தகத்தில் மட்டும் அல்ல, ராஜ்ய நிர்வாகத்திலும் கூட அந்த வழியை வயோதிகர்கள் (ராஜாஜியைப் போன்றவர்கள்) பின்பற்றினால் நாட்டிற்கு நிச்சயமாக நன்மை ஏற்படும் என்று காமராஜ் பேசியதைக் கேட்டதும் விழாவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் அதை வரவேற்றுக் கரகோஷம் செய்தனர்.

(ஆதாரம்: முருகு தனுஷ்கோடி எழுதிய காமராசர் ஒரு சரித்திரம்).

காமராசரின் இந்த இனவுணர்வை நன்கு புரிந்து கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அதனால்தான் சென்னைக் கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராஜாஜி, இந்தியாவிலேயே ஒரு கருப்புக் காக்கை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதைக் கல்லால் அடித்து வீழ்த்தவேண்டும் என்றார். காமராஜரைத்தான் அப்படி ஜாடையாகப் பேசினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கிகள் கார்ட்டூன் போட்டதும் அந்த அடிப்படையில்தான்.

இன்னொரு கார்ட்டூன் கண்டிப்பாக நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று.

குயில் முட்டையிட்டு வந்தவுடன் காகம் அடை காத்து குஞ்சு பொரிக்கச் செய்யும் என்ற கருத்தில் பெரியார் என்ற குயில் கொள்கை என்ற முட்டை போட்டுவிட்டு மரத்துக் கிளையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. காமராசர் என்ற காக்கை அந்த முட்டைகளை அடைகாப்பது போன்ற கார்ட்டூன் அது.

பெரியார் கொள்ளையைக் காமராசர் கடைப்பிடிக்கிறார் என்பதே அவாளுக்கே உரித்தான பாணியில் அன்று கார்ட்டூன் போட்டார்கள்.

காமராசரை சரியாக அடையாளம் கண்டு, மக்கள் மத்தியில் பெரிய நிலைக்கு உயர்த்தினார்தந்தை பெரியார். ரட்சகர் என்று பெரியார் சொன்னார் என்றால் சாதாரணமா?

கல்வி விழாக்களிலே கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக காமராசர் வாழ்த்துப் பாடவேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார் (சேலம் 5.7.1968).

இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விக் கதிர்க் கட்டுகளாக பரிணமிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பெரியார், காரணம் கர்மவீரர் காமராசர் ஆகியோரே! கண்ணீர் மல்க நன்றி கூறுவோம்!

-------------- மயிலாடன் அவர்கள் 15-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

15.7.08

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிந்தனைகள்...!





பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சாரம் காரணமாகத்தான், பார்ப்பனர்களால் இழித்துக் கூறப்பட்ட ஜாதியில் பிறந்த காமராசர் தமிழக முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் வர முடிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசர் ஆட்சியைப்பற்றி இன்று நடப்பது காந்தி காங்கிரஸ் அல்ல; சுயமரியாதை காங்கிரஸ் என ஆச்சாரியாரே கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்பட்டது காமராசரால்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட காமராசர் பெரியாரை தம் வழிகாட்டியாகக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கதர்ச் சட்டைக்குள் ஒரு கருப்புச் சட்டை ஆட்சி நடத்துகிறது என்று காமராசர் ஆட்சியை விமர்சித்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எந்த இந்துமதப் பண்டிகையும் கொண்டாடாதவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954-1963 காமராசரின் ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என அறிவாசான் தந்தை பெரியாரால் போற்றப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954 தேர்தலில் காமராசரை பச்சைத் தமிழர் என வர்ணித்து தேர்தலில் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அண்ணாவின் திராவிட ஏடு பத்திரிகையில் புகழ் பெற்ற குலக்கொழுந்தே, குணாளனே என பாராட்டி, காமராசரைப்பற்றி அறிஞர் அண்ணா தலையங்கம் எழுதினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1939 இல் 2500 ஆரம்பப் பள்ளிகளையும், 1953 இல் 6000 ஆரம்பப் பள்ளிகளையும் கிராமங்களில் இழுத்து மூடி, எஞ்சியுள்ள பள்ளிகளில் ஜாதித் தொழில் பயிற்சி (குலக்கல்வி) என்ற கொடுமையான கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் கொண்டுவர, பெரியாரின் கடும் போராட்டம் (கத்தி, பெட்ரோல், தீப்பந்தம்) காரணமாக ஆச்சாரியார் பதவியை விட்டு விலகினார். தந்தை பெரியாரே காமராசரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954 இல் 16,000 தொடக்கப் பள்ளிகளை, காமராசர் ஆட்சியில் 30,000 தொடக்கப் பள்ளிகளாக உயர்த்தி, 16 லட்சம் மாணவர்கள் படித்த நிலையை மாற்றி, 48 இலட்சம் மாணவர்கள் படிக்க வழிவகை செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதேபோல், 1954-இல் 450 உயர்நிலைப் பள்ளிகள் 2200 உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தி 3.86 இலட்சம் மாணவர் எண்ணிக்கையை 13 இலட்சம் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து படிக்கக் காரணமானவர் காமராசர்; அதற்குக் காரியம் ஆனவர் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?


பள்ளிக் கூடங்களையும், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைகளையும் உயர்த்தியதோடு, மதிய உணவு திட்டமான பகல் உணவு மய்யங்களையும் காமராசர்தான் திறந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசரை கல்விக் கண் திறந்த இரட்சகர் எனப் பேராசான் தந்தை பெரியார் பாராட்டினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு, காமராசர் வாழ்த்து பாடலாம் என காமராசருக்குப் புகழ் சேர்த்தவர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பலரது பார்வையில் காமராசர் படிக்காதவர்; ஆனால், அவரால்தான் மக்கள் படித்தனர். அவருக்குக் குடும்பம் எல்லாம் மக்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசரின் நிர்வாகத் திறன் காரணமாக, மக்கள் நல அணுகுமுறைகள், கிராமங்களிலெல்லாம் கல்வி நீரோடை வாய்ப்பற்ற மக்களுக்கு வாய்ப்பு தந்தவர்; பிரதமர் பதவிக்கு அவரை அழைத்தும்கூட, ஏற்காத தியாக உள்ளத்திற்குச் சொந்தக்காரர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பதை மாற்றி, பள்ளி இல்லாத ஊரில் யாரையும் குடியிருக்கவிட மாட்டேன் என்று ஆட்சி புரிந்தவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உழைக்கவேண்டியதே, ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால், அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுதுவேன் என்றவர் தான் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதற்காக அயோக்கியனாய், திருடனாய், சோம்பேறியாய் இருந்தாலும் உத்தமன் ஆகிவிடுகிறான். தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும், இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது. இப்பிளவை நீக்கி அனைவரும் சமம் என்ற ரீதியில் மக்களை நடத்துவதுதான் சமதர்மம் என்றவர்தான் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தகுதி - திறமை பேசும் மோசடிப் பார்ப்பனர்களைப் பார்த்து,
எந்தத் தாழ்த்தப்பட்டவன் படித்து இன்ஜினியராகி பாலம் கட்டி இடிந்தது; எந்தத் தாழ்த்தப்பட்டவன் படித்து டாக்டராகி ஊசி போட்டு நோயாளி செத்தார் எனச் சாட்டையடியாகக் கேள்வி கேட்டு இடித்துரைத்தவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?


1954-1957 அவரது அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறையில் பரமேஸ்வரன் என்ற ஆதிதிராவிடரை அமைச்சராக்கி, சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1961 இல் சென்னையில், தந்தை பெரியாருக்குப்பின் காமராசருக்குத்தான் உயிரோடு இருக்கும்போதே சிலை வைத்து, பிரதமர் நேருவால் திறக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசர் ஆட்சியில்தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

1966 இல் டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராசர் வீட்டிற்கு, பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரால், திரிசூலங்களுடன் நிர்வாணச் சாமியார்கள், தீ வைத்து காமராசரை உயிரோடு கொளுத்திட முயற்சி செய்த கூட்டம்தான் இன்றைய பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். (அன்றைய ஜனசங்கம்) என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் இன்னும் 10 ஆண்டுகாலம் காமராசரை பதவியிலிருக்கும்படி பார்த்துக்கொண்டால், பார்ப்பான் கைக்கு மண் வெட்டியும், பாப்பாத்தி கைக்கு களைக்கொத்தும் வந்துவிடும் எனத் தந்தை பெரியார் கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

------------------ தொகுப்பு: த. செயக்குமார் எம்.எஸ்ஸி., "விடுதலை" 15-7-2008

கடவுள் பற்றி காமராசர் - அதிகம் அறியப்படாத செய்தி

{காமராசர் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இக்கட்டுரையை வெளியிட்டு மகிழ்கிறோம். காமராசர் என்ற மாமனிதரின் யதார்த்தமான சிந்தனைகளைப் படியுங்கள்; அவைகளைக் கடைப்பிடியுங்கள்.}

தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார்.சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளை யெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர்.ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும்,

கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரிவட்டமும் கட்டிக் கொள்வார். தீபாராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங் காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார்... விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக்கணும் அதுதான் மனுஷ நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில்லியா.... அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே...!” என்பார்.தலைவர்

இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து,

“இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு...?” என்றார்.

குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.

“ஏன்ய்யா... குருக்கள்.... நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க.... இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா...? எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப்போனார்கள்.

தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலே ருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு... அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காமராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு...!’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க...!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது
.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச்சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். “கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்... பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.

“கடவுள்னு ஒருத்தர் இருக் கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?”

“இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா...?” என்றார்.


நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே...” என்று ஆரம்பிக்கவும்.

அவரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னு” சொல்றீயா...? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா... மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயி ருந்தா அதைத் தூக்கிக் குப்பை யில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்... ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்... இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா...?” என்று கேட்டார்.

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக் கிறீங்களா...? இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே...! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட்டாரே...?” என்றேன்.

“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்...? ரொம்ப அயோக்கியத்தனம்...!” என்றார் காமராசர்.

எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா.....? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை...?” என்று கேட்டேன்.

நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லா ருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்”னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே.... அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல் வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்(Govern)” பண்றவனோட வேலை.

“நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே...! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்...

என்று மிகத் தெளிவாகப் பேசினார்.“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா...?” எனக் கேட்டேன்.

“அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்... எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்....?’ அபி ஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்.... அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா...?”“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க...? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்(Social Status)’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக் கலாமில்லியா....” ஊருக்கு நூறு சாமி... வேளைக்கு நூறு பூஜைன்னா.... மனுஷன் என்னிக்கு உருப்படறது...? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்..... வறுமை - சுகா தாரக்கேடு.... ஏற்றத் தாழ்வு இத்த னையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு.... பூஜைன் னேன்.....? ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்...?”


தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர் சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன்.

“அப்படியானா.... நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா.... இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக் கிறீங்களா....?” என்று கேட்டேன்.அவர் கொஞ்சம் கூடத் தாம திக்காமல்... “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா...? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பக வான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்....? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்... காங்கிரஸ் - கம்யூ னிஸ்ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்... மதம் மனிதனுக்குச் சோறு போடுமா...? அவன் கஷ்டங்களப் போக்குமா...? இந் தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு...? உல கத்துல இருக்கிற ஒவ்வொரு மத மும், நீ பெரிசா... நான் பெரி சான்னு மோதிகிட்டு ரத்தம் சிந் துதே...! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே....! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்...?” தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே... அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே...?” என்று வினாத் தொடுத்தேன்.தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.

“டேய்... கிறுக்கா... நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்....? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவு ளாக்கிட்டேன்னேன்....! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா... அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும்.”....காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக் கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.... புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்ான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவ ராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல... எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல... புதுசு கட்டுனதுமில்ல... பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்...”
என்று விளக்கினார்.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்...!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே...?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன்.

தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல... பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா...? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய் வான். மதம் மனிதனை பயமுறுத் தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்....” என்றார்.

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா...? அதிலேருந்து எப்போ விலகுனீங்க...?” இது நான்.

“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட் டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு... எல்லாம் ‘பார்பர் ஷாப்(Barber Shop)’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா...?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.

“அப்படியானா... மனிதர் களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே... அதப்பத்தி....?” என்று கேட்டேன்.

அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா... தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்...!


காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா...?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.


---------------- நன்றி: திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்)