Search This Blog

15.7.08

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிந்தனைகள்...!





பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சாரம் காரணமாகத்தான், பார்ப்பனர்களால் இழித்துக் கூறப்பட்ட ஜாதியில் பிறந்த காமராசர் தமிழக முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் வர முடிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசர் ஆட்சியைப்பற்றி இன்று நடப்பது காந்தி காங்கிரஸ் அல்ல; சுயமரியாதை காங்கிரஸ் என ஆச்சாரியாரே கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்பட்டது காமராசரால்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட காமராசர் பெரியாரை தம் வழிகாட்டியாகக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கதர்ச் சட்டைக்குள் ஒரு கருப்புச் சட்டை ஆட்சி நடத்துகிறது என்று காமராசர் ஆட்சியை விமர்சித்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எந்த இந்துமதப் பண்டிகையும் கொண்டாடாதவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954-1963 காமராசரின் ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என அறிவாசான் தந்தை பெரியாரால் போற்றப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954 தேர்தலில் காமராசரை பச்சைத் தமிழர் என வர்ணித்து தேர்தலில் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அண்ணாவின் திராவிட ஏடு பத்திரிகையில் புகழ் பெற்ற குலக்கொழுந்தே, குணாளனே என பாராட்டி, காமராசரைப்பற்றி அறிஞர் அண்ணா தலையங்கம் எழுதினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1939 இல் 2500 ஆரம்பப் பள்ளிகளையும், 1953 இல் 6000 ஆரம்பப் பள்ளிகளையும் கிராமங்களில் இழுத்து மூடி, எஞ்சியுள்ள பள்ளிகளில் ஜாதித் தொழில் பயிற்சி (குலக்கல்வி) என்ற கொடுமையான கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் கொண்டுவர, பெரியாரின் கடும் போராட்டம் (கத்தி, பெட்ரோல், தீப்பந்தம்) காரணமாக ஆச்சாரியார் பதவியை விட்டு விலகினார். தந்தை பெரியாரே காமராசரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954 இல் 16,000 தொடக்கப் பள்ளிகளை, காமராசர் ஆட்சியில் 30,000 தொடக்கப் பள்ளிகளாக உயர்த்தி, 16 லட்சம் மாணவர்கள் படித்த நிலையை மாற்றி, 48 இலட்சம் மாணவர்கள் படிக்க வழிவகை செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதேபோல், 1954-இல் 450 உயர்நிலைப் பள்ளிகள் 2200 உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தி 3.86 இலட்சம் மாணவர் எண்ணிக்கையை 13 இலட்சம் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து படிக்கக் காரணமானவர் காமராசர்; அதற்குக் காரியம் ஆனவர் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?


பள்ளிக் கூடங்களையும், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைகளையும் உயர்த்தியதோடு, மதிய உணவு திட்டமான பகல் உணவு மய்யங்களையும் காமராசர்தான் திறந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசரை கல்விக் கண் திறந்த இரட்சகர் எனப் பேராசான் தந்தை பெரியார் பாராட்டினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு, காமராசர் வாழ்த்து பாடலாம் என காமராசருக்குப் புகழ் சேர்த்தவர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பலரது பார்வையில் காமராசர் படிக்காதவர்; ஆனால், அவரால்தான் மக்கள் படித்தனர். அவருக்குக் குடும்பம் எல்லாம் மக்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசரின் நிர்வாகத் திறன் காரணமாக, மக்கள் நல அணுகுமுறைகள், கிராமங்களிலெல்லாம் கல்வி நீரோடை வாய்ப்பற்ற மக்களுக்கு வாய்ப்பு தந்தவர்; பிரதமர் பதவிக்கு அவரை அழைத்தும்கூட, ஏற்காத தியாக உள்ளத்திற்குச் சொந்தக்காரர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பதை மாற்றி, பள்ளி இல்லாத ஊரில் யாரையும் குடியிருக்கவிட மாட்டேன் என்று ஆட்சி புரிந்தவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உழைக்கவேண்டியதே, ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால், அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுதுவேன் என்றவர் தான் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதற்காக அயோக்கியனாய், திருடனாய், சோம்பேறியாய் இருந்தாலும் உத்தமன் ஆகிவிடுகிறான். தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும், இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது. இப்பிளவை நீக்கி அனைவரும் சமம் என்ற ரீதியில் மக்களை நடத்துவதுதான் சமதர்மம் என்றவர்தான் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தகுதி - திறமை பேசும் மோசடிப் பார்ப்பனர்களைப் பார்த்து,
எந்தத் தாழ்த்தப்பட்டவன் படித்து இன்ஜினியராகி பாலம் கட்டி இடிந்தது; எந்தத் தாழ்த்தப்பட்டவன் படித்து டாக்டராகி ஊசி போட்டு நோயாளி செத்தார் எனச் சாட்டையடியாகக் கேள்வி கேட்டு இடித்துரைத்தவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?


1954-1957 அவரது அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறையில் பரமேஸ்வரன் என்ற ஆதிதிராவிடரை அமைச்சராக்கி, சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1961 இல் சென்னையில், தந்தை பெரியாருக்குப்பின் காமராசருக்குத்தான் உயிரோடு இருக்கும்போதே சிலை வைத்து, பிரதமர் நேருவால் திறக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசர் ஆட்சியில்தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

1966 இல் டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராசர் வீட்டிற்கு, பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரால், திரிசூலங்களுடன் நிர்வாணச் சாமியார்கள், தீ வைத்து காமராசரை உயிரோடு கொளுத்திட முயற்சி செய்த கூட்டம்தான் இன்றைய பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். (அன்றைய ஜனசங்கம்) என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் இன்னும் 10 ஆண்டுகாலம் காமராசரை பதவியிலிருக்கும்படி பார்த்துக்கொண்டால், பார்ப்பான் கைக்கு மண் வெட்டியும், பாப்பாத்தி கைக்கு களைக்கொத்தும் வந்துவிடும் எனத் தந்தை பெரியார் கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

------------------ தொகுப்பு: த. செயக்குமார் எம்.எஸ்ஸி., "விடுதலை" 15-7-2008

0 comments: