Search This Blog
23.7.08
வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரா?
பெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்
மனிதன் ஆக்க வேலைக்குப் பயன்பட வேண்டியவன். மனிதன் பகுத்தறிவு பெற்றிருப்பது, உலகிலுள்ள மனித சமுதாயத்தின் ஆக்கத்திற்குப் பாடுபடவேயாகும். ஆக்க வேலையென்றால் பண்பட்ட நிலமாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி வாழலாம். ஆனால், முள்ளும் புதரும் நிறைந்த காடு போன்ற நிலத்தில் உள்ள முட்கள், புதர்களை ஒழித்து நிலத்தைப் பண்படுத்தி, அதன்பின் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதுபோன்று நம் மனிதர்கள் மனதில் நிறைந்திருக்கின்ற முட்டாள்தனம், மூடநம்பிக்கை, மடமை, அறிவற்றத் தன்மை ஆகிய முட்களையும், புதர்களையும் அழித்து ஒழித்துப் பண்படுத்தி மனிதனை அறிவுப் பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இப்போது நாம் மனிதனிடமிருக்கும் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கைகளை அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்.
ஒருவன் தனக்கிருக்கிற பழைய காரை வீட்டை மாற்றி, புதிய வீடாக்க வேண்டுமானால், பழைய வீட்டை இடித்து ஒழித்துவிட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவது என்பது இயலாது என்பதோடு, கூரை வீட்டிலுள்ள சாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியமைத்திருக்கின்றோம்.
பொதுவாக ஒரு ஜீவன், தன் உணர்ச்சிக்காகவும் இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவையே ஆகும்.
கல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்பட்டு விடுகின்றது. ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீர வேண்டுமென்றிருக்கின்றது. இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால், கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது. இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல், தங்களின் அடிமைகளாக
உரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர்.
நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.
அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், "சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர் "திருக்குறளிலிருந்து "பிறன் இல்விழையாமை'' என்ற அதிகாரத்தைக் காட்டி, "வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்'' என்று சொன்னார். நான் உடனே, "பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக்கூடாது என்று சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்லவில்லையே'' என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
-------------- தந்தைபெரியார் - 18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
தமிழ் ஓவியா....
வள்ளுவரையுமா? வாழ்க்கை துணைநலம், பிறனில் விழையாமை, தீவினையச்சம், ஒழுக்கமுடைமை, வினைத்தூய்மை, பண்புடமை, வரைவின் மகளிர், எல்லாம் படித்த பின்னும் ஆணுக்கு கற்புன்னு தனியா சொல்லல என்று கூறினால், .... ஒன்னு, திருக்குறளை புரிந்துகொள்ள படிக்காமல், மேற்கோள் காட்ட படித்தவராக இருக்க வேண்டும், இல்லையென்றால், பேச வேண்டுமே என்பதற்காக ஏதோ ஒன்றை பேசியதாக இருக்க வேண்டும்...
பெண்களை அடிமையென்று எந்த புலவரும் சொல்ல மாட்டார்... காதல், அன்பு எல்லாம் இருவருக்கும் பொது... காதலில் கூட ஏற்றத்தாழ்வை உண்டு பண்ணுவதில் நம்ம மக்களை யாரும் விஞ்சமுடியாது... அன்பின் அடிப்படையில் வாழ்வது வாழ்க்கை...
அன்பு வழி வேண்டாம்... பெண்ணியம் வழியிலேயே.. எத்தனையோ மகளிர் தனித்து வாழ்கிறார்கள்... ஒழுக்கம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது, திரு. வி. கா. தனது மனைவி இறந்த பின்னர் மறுமணம் செய்துகொண்டாரா என்ன? எத்தனை பெண்கள் தனி நபர் ஒழுக்கம் இல்லாமல் வாழ்கிறார்கள்? ஆண்கள் அனைவரும் ஒழுக்கம் தவறியவர்களும் அல்ல, பெண்கள் அனைவரும் கற்பு நெறியில் நிற்பவர்களும் அல்லர்... குறைகள் கூறும்போது மட்டுமாவது, பொதுமைபடுத்துவதை தவிர்க்கலாம்...
ஆனா நாம் மாறமாட்டோம்... தலைவர் சொன்னால் அப்படியே ஏற்றக்கொள்வோம்.. நாளைக்கே திருவள்ளுவர் ஒழிகன்னு ஒரு பெரியார் வழியில் ஒரு பாசரை தொடங்கி புரட்சி செய்வோம்... பகுத்தறிவு - எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு...
இது என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே... மறுப்பு இருந்தால், புன்னகைத்து delete செய்யவும்... ;)
வளம் சிறக்க வாழ்த்துக்கள்...
தங்களின் விமர்சனத்தைப் படித்தேன். நீங்கள் திருவள்ளுவரைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் மற்றும் புலவர்கள் பற்றியும் சரியாக அறிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
பெரியாரைப் பொறுத்தவரை விறுப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் யாருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை சொல்லியவர்.
மனிதநேயத்தை வலியுறுத்தியவர். அதற்கு இடையூறாக எது வந்தாலும் எதிர்த்தவர். அந்த அடிப்படையில் தனது கருத்துக்களை வெளிப்படையாக அறிவித்தவர்.
தாங்கள் இன்னும் பெரியாரைப் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள "திருக்குறளும் பெரியாரும்" நூலைப் படிக்க வேண்டுகிறேன்.
இது குறித்து பெரியாரின் கருத்தையும் கீழே தந்துள்ளேன். படியுங்கள்; தெளிவு பெறுங்கள். நன்றி.
"தற்காலம் நமது தமிழ்நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூல்களிலெல்லாம் திருவள்ளூவனால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகின்றதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்தப் பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக் கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும்.
என்றாலும் திருவள்ளூவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்து விடுவார்கள். பார்ப்பனர்களென்றாலோ திருவள்ளூவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்து விடுவார்கள்.
இவ்வளவு இருந்தாலும், திருவள்ளுவர் யார் ? என்ன ஜாதி ? என்ன மதம் ? அவரது கொள்கை என்ன என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரைத் தம் சமயத் தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை வைணவர் என்று கொண்டாடுகின்றனர். சமணர்கள் அவரைத் தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாராராகிய பறையர்கள் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரைத் தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகிறார்கள். அவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டு விட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய்க் காணப்பட வில்லை. அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்கம், நரகம், மேல்லோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரியமத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கையையும் கொண்ட விஷயங்களையும் பரக்கக் காணலாம்.
எனவே, இவற்றைக் கொண்டு திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர் தற்காலப் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக்கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள், புராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, பார்ப்பனீயம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தாங்கள் பெரிய கல்வி கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச் சமயத்தவர் என்றும், உள்ளூக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்துகொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளூம் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார்.
இவை எப்படி இருந்தாலும் திருவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையைப் பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளிலுள்ள நீதிகள் ஒருபுறம் இருக்க, திருவள்ளுவன் மனைவியாகிய வாசுகியம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமலிருக்க முடியாது. அதாவது வாசுகி அம்மையாரைத் திருவள்ளுவர் தம் மனைவியாக ஏற்றுக்கொள்ளுமுன் ஆற்று மணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்புள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்க. அவ்வம்மையார் அந்தப்படியே மணலைச் சாதமாகச் சமைத்து கொடுத்து திருவள்ளுவருக்குத் தமது கற்பைக் காட்டினாராம்.
அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிட, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்தபோது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.
திருவள்ளுவர் ஒரு நாள் பகலில் நூல் நூற்கும் போது நூற்கதிர் கீழே விழ, உடனே அம்மையாரைக் கூப்பிட்டு, 'விளக்கேற்றிக் கொண்டுவா, நூற்கதிரைத் தேடவேண்டும் ' என்று சொல்ல அம்மையார் 'பகல் நேரத்தில் விளக்கு எதற்கு ' என்று கேட்காமல் - கேட்டால் பங்கம் வந்து விடுமெனக் கருதி உடனே விளக்குப் பற்ற வைத்துக்கொண்டு வந்து கொடுத்தார்களாம்.
ஒரு நாள் நாயனார் பழைய சாதம் சாப்பிடும்போது 'சாதம் சுடுகின்றது ' என்று சொன்னவுடன் அம்மையார் 'பழைய சாதம் சுடுமா ' என்று கூடக் கேட்காமல் - கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமோ என்று கருதி உடனே விசிறி எடுத்துக்கொண்டு வந்து வீசி ஆற்றினாராம்.
திருவள்ளுவர் அம்மையாரைத் தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாகக் கொண்டு வந்து வைத்துவிட்டு, சாதம் பரிமாறும்படி கட்டளை யிட்டிருந்தாராம். அவ்வம்மையாரும் 'இது எதற்காக ' என்று கேட்காமல், கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப்போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்தப் படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மையாரின் நிர்வாண காலத்தில் அம்மையார் உயிர் போகாமல் ஊசலாடிக் கொண்டிருக்க, அது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது, அம்மையார் பயந்து கொண்டு 'தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் ஊசியும் வைக்கச் சொன்னீர்களே அது எதற்காக என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை முடிவு பெறாமல் இருப்பதால் உயிர் போகாமல் ஊசலாடி மரணாவஸ்தைப்படுகிறேன் ' என்று சொன்னாராம்.
பிறகு திருவள்ளுவர் தயவுசெய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தை, அதாவது சாப்பிடும் போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தி எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம். இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச் செருகலாகவோ, கற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாயிருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும் கற்பனையாக இருந்தால் கற்பனையல்லாத புராணம் எது ? அதற்கு என்ன பரிட்சை ? என்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக".
- ஜனவரி 20, 1929 'குடி-அரசு ' இதழில் தந்தை பெரியார் அவர்கள், சித்திரபுத்திரன் என்னும் புனை பெயரில் எழுதிய கட்டுரை.
என்ன நண்பரே... திருவள்ளுவர் எந்த சமயமாய் இருந்தால் என்ன? நல்ல கருத்துக்கள்தானே கூறினார்? சங்க புலவர்களில் எத்தனை பேர் வாழ்க்கை வரலாறு நமக்கு சான்றுகளாக உள்ளன? செவி வழி கதைகளாகவே உள்ள நிலையில் அவரது வாழ்க்கையை ஏன் இவ்வளவு கொச்சைபடுத்த வேண்டும்... பெரியார் அவர்கள் சமூக நீதிக்காக போராடியதையோ, அல்லது, சமூகத்தின் பல முகங்களும் அடிப்படை உரிமைகளை கூட கேட்டு பெற வேண்டிய ஒரு காலம் இருந்ததையோ நான் மறுக்கவில்லை... நீங்கள் பெரியாரை படித்து அறிந்தது போல, நானும் இளமையில் இருந்து திருக்குறளை அறியும் வாய்ப்பு இருந்ததால் ஒரு விருப்பம்... திருக்குறளை, திருக்குறளாக மட்டும் ஒரு முறை படித்து பாருங்கள்... எந்த அரசியல்வாதிகளின் விளக்கவுரையும் இல்லாமல்.... குறை சொல்வது மிக எளிது... அதுவும் கதைகளின் அடிப்படையில்... புராண ஆபாசங்கள் உட்பட பல பெரியார் பாசறை புத்தகங்களை நானும் படித்துள்ளேன்.... புராண அபத்தங்களை எதிர்த்தது அத்துனையும் சரி.... ஆனால் திருக்குறள் மட்டும் வாழ்வியல் கருத்துக்களையே கொண்டுள்ள காரணத்தாலேயே இந்த கருத்தை பதிகிறேன்.... வளம் சிறக்க வாழ்த்துக்கள்...
குறளை உங்களைப்போலவே நாங்களும் கடைபிடிக்கிறோம். பெரியாரைப் போலவே வள்ளுவரையும் நான் மதிக்கிறேன். குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிக நாடி மிக்க கொளல் என்ர குறளுக்கேற்ப பெரியாரி கட்டுரை ஒன்றை தருகிறேன். படியுங்கள். தெளிவடையுங்கள்.
"வள்ளுவரும் கற்பும்!
கற்பு என்ற நமது கட்டுரைக்கு மறுப்பாகத் திருக்குறளை மேற்கோலாகக் காட்டி நமது தோழர் ஒருவர் நீண்ட மறுப்பு எழுதியுள்ளார். அதில் நாம் வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால் இக்கருத்துக்களைக் கூறியிருக்கமாட்டார் என்று குறிப்பிட்டிருந்ததற்கு நமது தோழர் அதை ஒருவாறு ஒப்புக் கொண்டு தன்னலங்கொண்ட ஒரு கூட்டத்தார் ஏற்றுக்கொள்ளவில்லையானால் நீதியானது அநீதியாகி விடுமோ என்று பதில் கூறியிருக்கிறார்.
இங்கு பெண்களைத் தன்னலங்கொண்ட கூட்டத்தார் என்று குறிப்பிட்டது பெண்களுக்கு நீதிவழங்கியதாகுமோ? என்பதை யோசிப்பதோடு பெண்கள் தர்மம் என்று எழுதுவதில் ஆண்கள் இம் முறையைக் கொண்டு பிரவேசிப்பது தன்னலங் கொண்டதாகாதா? என்பதையும் சிந்திக்க வேண்டுகிறேன் (இந்த இடத்தில் கருத்து இன்னது என்பதை முடிவுகட்டாவிட்டாலும்) தமிழ்நாட்டில் வாழ்ந்த வாழுகின்ற பெண்ணரசிகளும் அக்கருத்துகளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார்.
எந்தப் பெண்ணரசியாலும் தம்மை ஆண் பிறவிக்கடிமையென்றாவது, தாம் அப்பிறவிக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்றாவது, ஆண் தன்மையைவிட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைப் பெண்ணரசி என்று சொல்ல நாம் ஒருக்காலும் ஒப்போம். பல தலைமுறைப் பழக்கத்தால் பெண்கள் அக்கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றனர் என்று நாம் எழுதியிருப்பதும் அதைத் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் தாழ்ந்த நிலையை ஏற்றுக் கொள்வது போலாகும் என்பதற்கு ஒப்பிட்டு நாம் எழுதியிருப்பதும் தாய்மார்களைப் பழித்துக் கூறியதாகும் என்ற நமது தோழர் கூறியிருக்கிறார்.
அதற்குக் காரணம் காட்டுவதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் கிடைக்கவொட்டாமல் செய்து விட்டதால் அன்னார்கள் அறியாமையுடையவர்களாகி விட்டார்கள் பெண்களுக்கு பொருந்தாது என்றும் நமது தோழர் சொல்லுகிறார். இதை அவர் ஆராய்ச்சியுடன் கூறியிருப்பதாக நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் எந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற கூட்டம் ஏற்பட்டதோ எந்தக் காலத்தில் எந்தக் கூட்டத்தார்கள் தாழ்த்தப்பட்டோருக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்தனரோ அக்காலத்திலேயே அக்கூட்டத்தராலேயே பெண் மக்களுக்கும் அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்யப்பட்டு தாழ்த்தி அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
இதை ஏன் நமது தோழர் உணர முடியவில்லை என்பதும் நமக்கு அறியமுடியவில்லை. தவிர பெண்களின் அறிவுத் திறத்திற்கு உதாரணமாக இவர் ஒரு அவ்வைப் பிராட்டியை எடுத்துக் காட்டுகிறார். அதே மூச்சில் திருவள்ளுவரையும் எடுத்துக் காட்டியிருப்பாரானால் தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளும் ஏதோ ஒருவருக்கு அறிவு வளர்ச்சி இருந்து வந்தது என்பதை ஒத்துக் கொண்டிருப்பார். எனவே நாம் ஒன்றிரண்டு பெண்ணரசிகளைப்பற்றி பேச வரவில்லை என்பதையும் தற்காலத்தில் வாழும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் வீதமுள்ள பெண்களைய்பற்றிப் பேசுகின்றோம் என்பதையும் உணர வேண்டுகிறோம்.
இப்படிச் சொல்லுவதால் நாம் தாய்மார்களையே பழித்துக் கூறியதாகுமானால் நமது தோழர் சொல்வதிலிருந்து அவர் தாழ்ந்தஜாதி என்பவர்களைப் பழித்துக் கூறியதாக ஏற்படவில்லையா? என்று வினாவுகின்றோம். தவிர அவ்வைப் பிராட்டியாரும் திருவள்ளுவரையே அரண் செய்கின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவ்வையாரின் 'தையல் சொற்கேளேல்' என்கின்ற முதுமொழியை எடுத்துக்காட்டி அதற்கு அரணாக வள்ளுவரின் 'பெண்வழிச்சேரல்' என்கின்ற வாக்கைச் சுட்டிக் காட்டுகின்றார். 'பேதைமை என்பது மாதர்க்கணிகலம்' என்ற பிராட்டியாரின் முதுமொழியையும் கூடவே குறிப்பிட்டிருக்கிறார். இதனால் நமது தோழர் தனது கடைசி ஆயுதத்தை எறிந்திருக்கிறார் என்றே கூற வேண்டியிருக்கின்றது.
பெண்களும் பகுத்தறிவுள்ள சிந்தனா சக்தியுள்ள மனித ஜீவன் தான் என்பதை ஒப்புக்கொள்ளும் எவரும் இம்மூன்றையும் ஒருக்காலும் நடுநிலைமை உள்ளவர் வாக்கென்றோ உண்மையை ஆராய்ந்த அறிவுடையோர் வாக்கென்றோ ஒப்புக் கொள்ள முடியாதென்பதே நமது துணிபு. அங்ஙனமில்லையாயின் அவ்வக்கால நிலைக்கேற்றதென்றாவது சொல்லியாக வேண்டும்.இங்குச் சற்று வாசகர்களுக்குச் சங்கடமுண்டாகும் என்பது நமக்குத் தெரியும். ஆகிலும் குற்றமில்லை.
முதலாவது அவ்வையும் வள்ளுவரும் சகோதரர்கள் என்பது கதை. ஆதி என்கின்ற புலைச்சிக்கும் பகவன் என்கின்ற பார்ப்பானுக்கும் பிறந்த பிள்ளைகளில் 7-இல் இவர்கள் இருவர் என்று அக்கதையே சொல்லுகிறது. இவற்றுள் மற்றொரு விசேடமென்னவென்றால் மேற்கண்ட ஆதிக்கும் பகவனுக்கும் புணர்ச்சி முடிந்ததும் பிள்ளை பிறந்ததாகவும் அதை அங்கேயே போட்டு விட்டுப் போய் விட்டதாகவும் அக்கதை கூறுகிறது. இது சம்பந்தமாக மற்றும் பலப்பல கதைகளும் உண்டு. அன்றியும் மற்றும் பலப்பல அவ்வைகள் இருந்தார்கள் என்றும் சிலர் கூறுவார்கள்.
எனினும் இது விஷயத்தில் புராண கூற்றையும் தெய்வீக மூடநம்பிக்கையையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு மேற்கண்ட நீதி வாக்கியங்களும், குறள்களும் யாரால் சொல்லப்பட்டிருந்தாலும், அதனையும் கவனியாமல் மேற்படி வாக்கியங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு அதுபோன்ற மற்ற வாக்கியங்களுக்குப் பொருள் காணுவது போலவே இவைகளுக்கும் பகுத்தறிவைக் கொண்டு பொருள் காணுவோமேயானால் மேற்கண்ட முதுமொழிகளின் கருத்தான பெண்கள் சொல்லைக் கேட்கக் கூடாது என்பதும் அறியாமை என்பது பெண்களது ஆபரணம். அதாவது அவர்களின் தன்மைக்கு ஏற்றது என்பதும் பெண்கள் இஷ்டப்படி நடக்கக் கூடாது என்பதுமே பொருளாகி விளங்குகின்ற கருத்துக்கள் தான் காணக்கிடைக்கும்.
இனி இதற்கு விசேட உரைகளும் தத்துவார்த்தங்களும் பலப்பல சொல்லப் பல வித்துவான்கள் முந்தக்கூடும். ஆனாலும் தத்துவார்த்தமும் விசேட உரையும் சொல்ல முடியாத சப்தங்களும், எழுத்துக்களும், வாக்கியங்களும் செய்யுள்களும் உலகத்தில் கிடைப்பது அரிது என்பது யாவரும் அறிந்ததாகும். ஆதலால் இதற்கு மாத்திரம் தத்துவார்த்தமும், விசேட உரையும், கொண்டுபொருள் கூற வரவேண்டிய காரணம் அறிவாளிகளால் ஒப்புக் கொள்ளக் கூடியதாகாது. அவ்வை முதுமொழியும் - வள்ளுவர் குறளும் யார் சொன்னார்கள் என்பது இங்குக் காணவேண்டிய விஷயமல்ல. மற்றபடி இவ்விரண்டும் நீதி நூல்களில் சிறந்ததாக எடுத்துக் கொள்ளப்பட்டிருகிகின்றன. ஆதலால் இதைப்பற்றிப் பேசவே இங்கு முன் வருகின்றோம்.
இதில் குறுக்கே நிற்கும் சங்கடமென்னவென்றால் இவ்வளவு உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட நீதிகளை உணர்ந்தவர்கள் இவ்வளவு பெரிய பிழைகளை இழைத்திருப்பார்களா? என்னும் விஷயமாகும். ஆனால் எல்லா விஷயங்களுக்கும் இவ்வாயுதத்தை உபயோகிக்க முற்படுவதால் அவ்வாயுதம் சில சமயங்களில் உபயோகிப்பவர்களையே மோசம் செய்து விடக்கூடும். அல்லாமலும் கால தேச வர்த்தமானத்தைக் கொண்டு தான் யாவரும் எதையும் சொல்லியிருக்க முடியுமேயானால் பார்ப்பனர்கள் சொல்வது போல் எதையும் கடவுள் சொன்னார் என்பதும் அது எக்காலத்திற்கும் ஏற்றது என்பதும் இக் காலத்திற்குப் பொருத்தமற்றதாகும்.
இவ்விரு பெரியார்களும் உண்மையாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்நீதி நூல்கள் சொல்லப்பட்ட காலம் ஆரிய ஆதிக்கம் பரவியிருந்த காலமென்பதையாவது ஒவ்வொருவரும் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். தவிர அவ்வைப் பிராட்டியார் பெயராலோ, வள்ளுவர் பெயராலோ சொல்லப்பட்ட நீதிகளை ஆக்கிய கர்த்தர்கள் நம்மைப் போன்ற மனிதத் தன்மை வாய்ந்தவர்கள் தான் என்பதை முதலாவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் மேலே குறிப்பிட்டது போல் தெய்வத் தன்மைகள் என்று சொல்லப்படுவதை அதாவது மனிதத் தன்மைக்கு மேற்பட்டது என்பதையும் மூட்டை கட்டி வேறாக வைத்துவிட்டுப் பார்த்தால் தான் உண்மை விளங்கும். அப்படியில்லாவிட்டால் யாரும் எதையும் சொல்ல இடமேற்பட்டு விடும். ஆகவே அப்படிப் பார்த்தால் தான் இவர்கள் இப்படிச் சொன்னதற்கு நியாயம் கிடைக்கும்.
அதாவது அக்காலத்திய நிலைமைக்கு யாராயிருந்தாலும் நீதி இப்படித்தான் சொல்லி இருக்க முடியும் என்கின்ற முடிவு காணலாம். எப்படியென்றால் கம்பர் அறிவுத்திறமுடைய கவி என்பதில் யாருக்கும் வேறுபாடு இராது. ஆனாலும் அப்படிப்பட்ட கம்பர் ராமாயணம் பாடினார் என்றால் ஆரியர் செல்வாக்குக் காலத்தில் ஆரிய ஆதிக்கத்தில் மக்களுக்கு உணர்ச்சி உள்ள காலத்தில் பாடியதானதால் அதில் வால்மீகி உரைத்த கருத்துக்களை மாற்றி அதிலுள்ள ஆபாசங்களை எல்லாம் நீக்கி ஆரியர்களுக்கே முழு உயர்வையும் ஆதிக்கத்தையும் வைத்து மக்கள் கொண்டாடும்படியாக பாடியிருக்கிறார். அது போலவே இப்பொழுதுங்கூட எவ்வளவு அறிவு முதிர்ச்சியும் ஆராய்ச்சி முதிர்ச்சியும் பல பண்டிதர்களுக்கு இருந்தாலும் ஆரிய ஆதிக்கத்தை மறுப்பதற்குப் பயப்படுகின்றார்கள்.
ஆரிய உயர்வையே பேசுகின்றார்கள். காரணம் ஆரியருக்குப் பயந்தல்லவென்று சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்கு ஏற்பட்ட ஆரியப் பழக்க வழக்கமும் ஆரியர் கதைகளையே படிப்பதும் ஆரிய ஆதிக்கத்திற்கு ஏற்படுத்தின கடவுள் தன்மைகளையே வணங்கி வருவதும், ஆரியக் கதையை ஆதரித்துப் பாடுவதும் எழுதுவதும் ஆகிய குணங்களே இப்படித்தான் நடக்கச் செய்யும். எனவே இம்முறையில் குழந்தைப் பருவ முதல் வளர்ந்து சரீரத்தின் மூலமாகவும், மயிர்க்கால்கள் மூலமாகவும் ஆரியத் தன்மையை ஏற்றுக்கொண்டு மூளையை நிரப்பி வைத்திருப்பவர்கள் என்ன செய்யக்கூடும்? ஆதலால் அவர்கள் பரிசுத்த தன்மையும் மேன்மையும் உற்றவர்களானால் அக்காலத்திற்கேற்பக் கூறினார் என்பதோடு முடித்து விடுவதே நன்று. அப்படி இல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்றதென்போமாயின் அவைகள் குற்றம் குற்றமே.
"நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே" தான். பின்பு நமது தோழர் சமத்துவம் என்பது பற்றி என்ன என்னமோ அவசியமில்லாத அனேகவற்றைச் சொல்லுகிறார். அதைப்பற்றி இங்கு இது சமயம் ஒரு விவகாரம் வைத்துக் கொள்ளவும் அவ்வளவு அவசியமில்லை என்றாலும் கடைசியாக அவர் குறிப்பிடும் சமத்துவக் கொள்கையாவது என்ன என்று எடுத்துப் பார்த்தாலும் அதிலும் முற்றும் முறையாகச் சொல்லாமல் நழுவி விட்டார் என்றே கூறவேண்டும்.
அதாவது பெண்மக்கள் தமது உரிமையையும், தேவையையும் ஆண்மக்கள் தடையில்லாமலும் பெண்ணின் தடையின்றி அவர்களுக்குத் துன்பமில்லாமல் பெறுதலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதும் ஆண், பெண் சமத்துவமாகும் என்று சொல்லுகிறார். ஆனால் அதே மூச்சில் ஆண் உரிமை யாது? பெண் உரிமை யாது? அன்னாரின் தனித்தனித் தேவைகள் யாவை? என்பதைப் பற்றி ஆராய்வது வேறொன்று விரித்தலாகும் என்று சொல்லிவிட்டார். இவ்வியாச விவகாரத்தின் ஜீவநாடி ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்க வேண்டும்? என்பதேயாகும்.
அப்படி இருக்க நமது தோழர் அதை ஆராய்வது வேறொன்று விரித்தல் என்னும் குற்றமாகிவிடும் என்பது உள்ளதை விரிக்கப் பயந்து மறைத்தல் என்கின்ற குற்றத்திற்கு ஆளாகுமே தவிர வேறில்லை என்று சொல்ல வருந்துகிறோம்.தவிர ஆணின் தன்மை வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் கொண்டு விளங்குகிறது என்றும் பெண்ணின் தன்மை அன்பு, மேன்மை, சாந்தம், பேணுந்திறம் கொண்டு விளங்குகிறது என்றும் சொல்லுகின்றார். இம்முடிவு தான் நமது தோழர் திருவள்ளுவருக்கு வக்காலத்துப் பெற்று மறுப்பெழுத முன்வரச் செய்துவிட்டதென்பது இப்பொழுது நமக்கு நன்றாய் விளங்குகின்றது.வன்மை, கோபம், ஆளும்,திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி பேணும் திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.
நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். அன்றியும் மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலருக்கும் நமது தோழர் குறிப்பிட்ட இருபாலர் குணங்களும் சமமாய் இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும். இரு பாலருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது. ஆனால் அது செயற்கையால் ஆண்களின் சுயநலத்தால் சூழ்ச்சியால் மாறுபட்டு வருகின்றது.
கர்ப்பமாகிப் பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுகின்ற குணம் பெண்களுக்கு இருப்பதாலேயே பெண்கள் நிலை ஆண்களைவிட எந்த விதத்திலும் அதாவது வீரம், கோபம் ஆளுந்திறம் வன்மை முதலியவைகளில் மாறுபட்டு விடவேண்டியதில்லை என்றே சொல்வோம். கர்ப்பம் தரித்துப் பிள்ளை பெறாத காரணத்தினாலேயே ஆண்மக்களுக்கு அன்பும், சாந்தமும், பேணுந்திறமும் பெண்களைவிட மாறுபட்டதாகிவிடாதென்றும் சொல்லுவோம். உண்மையான சமத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்போமானால் உண்மையான அன்பு இருக்குமேயானால் பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர மற்றக் காரியங்கள் இருபாலருக்கும் ஒன்று போலவே இருக்கும் என்பது உறுதி. தவிர தற்கொண்டாள் என்பதற்கு அன்பைக் கொண்டவள் என்கின்ற பொருளை வருவித்துக் கொள்வது இங்கு வள்ளுவருக்குக் காப்புச்செய்யக் கருதியதாகுமேயல்லாமல் குறளுக்கு நீதி செய்ததாகாது.
அன்றியும் பெண்ணிடமிருந்து ஆண் அறிய வேண்டிய குணம் ஒன்றும் இல்லையென்பதும் அப்படியிருந்தால் தான் தற்கொண்டாள் என்பதாகச் சொல்லலாம். அது போலவேதொழுதெழுவதையும் ஆணுக்கு குறிப்பிட்ட நியதி இல்லையென்பதும் பொருத்தமற்றதே ஆகும்.பெண்ணைக் கொள்ள ஆணுக்கு உரிமையிருந்தால் ஆணைக் கொள்ள பெண்ணுக்கு உரிமை இருக்க வேண்டும். ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால் பெண்ணையும் ஆண் தொழுதெழ வேண்டும். இதுதான் ஆண் பெண் சரிசம உரிமை என்பது.
இஃதில்லாதது எதுவானாலும் சுய நன்மையும் மூர்க்கமுமேயல்லாமல் அன்பு அல்லவென்றே சொல்லிவிடுவோம். தவிர நமது தோழர் அவர்கள் குறளில் ஆண்களுக்கும் வள்ளுவர் கற்பு கூறியிருப்பதாகச் சொல்லுகின்றார். இருக்கலாமானாலும் பெண்களுக்குக் கூறியது போல் இல்லையென்று தான் சொல்லுகிறோம். அதாவது ஆண்களின் கற்புக்கு நமது தோழர் அவர்கள் இரண்டு குறளை எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறார். அவைசிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை. நிறை நெஞ்ச மில்லவர் தோய்வர் பிற நெஞ்சிற் பேணிப்புணர்பவர் தோள். இவைகளை ஆண்கள் கற்பை வலியுறுத்தக் கூறியதாக கூறுகிறார் போல் காண்கிறது. இவைகள் அதற்காகக் கூறியதல்ல என்பதும் நமது அபிப்பிராயம். அதாவது முதற்குறளுக்கு காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் பயனில்லை பெண்கள் தாங்களாகவே கற்பாயிருக்க வேண்டும் என்பது தான் கருத்தாக இருக்கலாம் என்று கருதுகின்றோம்.
இரண்டாவது குறள் விலைமாதரைப் புணர்கின்றவர்க்குக் கூறிய பழிப்புரையேயல்லாமல் காதல் கொண்ட மற்றப் பெண்களைக் கூடித்திரியும் ஆண்களைக் குறித்துக் கூறியதல்லவென்பது நமதப்பிப்ராயம். நிறை என்கின்ற வார்த்தை மாத்திரம் காணப்படுகின்றதே தவிர நிர்ப்பந்தமில்லை. ஆகவே இருபாலருக்கும் சம நிபந்தனை குறளில் இல்லை என்பதற்கு மற்றும் பல குறள்களையும் நாம் கூறக்கூடும். தவிர கடைசியாக நமது தோழர் நமக்கு உணத்தும் அறிவுக்கு நாம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர் விரும்புவது போலவே ஆன்றோர் நூல்களில் அய்யம் தோன்றும் இடங்களில் அய்ய வினாவாகவே எழுதி வருகிறோம். ஆனால் இக்கற்பு விஷயத்தில் நாம் குறிப்பிட்ட குறளின் கருத்தில் நமக்கு அய்யமில்லை என்று கருதுவதோடு நமது கூற்றுக்கு ஆதரவாக மற்றும் சில அறிஞர்களின் கருத்தையும் பெற்றோமென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
மற்றும் குறள் விஷயத்திலும் குறளாசிரியர் விஷயத்திலும் நாம் கொண்டுள்ள பக்தி நமது தோழர் கொண்டுள்ள பக்திக்கு மீறியதல்லவானாலும் குறைந்ததல்ல என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதற்கு அநேக சான்றுகள் உண்டு. மற்றபடி நமது தோழர் குறிப்பிட்ட கடைசிக் குறள்கள் இரண்டையும் பற்றி அதாவது பெரும்பான்மை மக்களது கருத்துக்கு மாறுபடுவதும் பெரியோரிடம் குறை காணுவதும் மடமை என்கின்ற பொருள் கொண்ட வேறு இரண்டு குறள் பற்றி நாம் சிறிதும் கவலைப்படவில்லை. ஏனெனில் சரி என்று பட்டதைச் சொல்லும் தன்மை எவனிடமிருந்தாலும் அவன் இக் குறள்கள் மாத்திரமல்ல இது போன்ற வகைகள் பலவற்றிற்கும் மற்றும் அநேக காரியங்களுக்கும் தயாரயிருக்க வேண்டியவன் தான் என்கின்ற முடிவால் கவலைப்படவில்லை
---தந்தைபெரியார்
Post a Comment