Search This Blog

30.7.08

கலைஞர் எழுதிய - சாராய சகாப்த மென்று ஓர் கவிதை



நமது முதலமைச்சர் கலைஞர் ஆட்சியை
கண் இமை காப்பதைப்போலக் காக்கவேண்டும்



தமிழக முதலமைச்சர் கலைஞர்அவர்களது ஆட்சியை கண் இமை காப்பது போல காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். `கலைஞர் படைப்புலகம் நூல் வெளியீட்டு விழாவில் (26-7-2008 சென்னை - கலைவாணர் அரங்கம்) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து


``கொழுந்து விட்டு எரியும் தீப்பந்தத்திற்குள்ளே கொளுத்தப் படாத கற்பூரமாகத் தமிழகம் இருக்கிறது என்று அன்றைக்கு பட்ஜெட்டிலே கலைஞர் அவர்கள் அற்புதமாக வாசித்த வரிகள் இவைகள்.

ஏற்கெனவே ஆச்சாரியார் அரசியலிலே அதிர்ச்சியுறக் கூடிய தோல்வியை காமராஜர் அவர்களுடன் சேர்ந்த பிற்பாடுகூட கண்ட காலம். எனவே அவர் அந்தக் கோபத்தை வேறு வகையிலே காட்டினார்.

இன்றைக்கு வேறு சிலர் கோபத்தை வெளிப்படுத்துகின்றார்கள்

இன்றைக்கு வேறு சிலர் அரசியல் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அல்லவா? அதுபோல அன்றைக்கு வெடித்த நேரத்திலே ``கல்கி பத்திரிகையிலே ஆச்சாரியார் ஒரு கவிதை எழுதினார். கலைஞர் அவர்களுடைய படைப்புலகத் திற்கு இன்னொரு அங்கீகாரம். `கல்கி பத்திரிகையிலே ஆச்சாரியார் ஒரு கவிதை எழுதினார். யாரைப் பார்த்து? கலைஞரைப் பார்த்து. கலைஞர் அவர்களுடைய படைப்புலகத்திற்கு இது ஒரு தனிப்பட்ட அங்கீகாரம். வேண்டுமென்றே ஆச்சாரியார் எழுதினார்.

``சாராய சகாப்தம் என்று கல்கி பத்திரிகையிலே எழுதினார். இதில் முதலில் ஆச்சாரியார் கவிதையைப் படிக்கின்றேன். அதற்குக் கவிதை வரியிலேயே முதல்வர் கலைஞர் அவர்கள் கவிதை எழுதினார்.

இந்தக் கவிதையை ஈரோட்டிலே பெரியார் முன்னி லையிலேயே மேடையிலேயே வாசித்தார். அந்த வாரம் ஆச்சாரியார் எழுதிய கவிதையையும், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதற்குப் பதில் சொல்லுகின்ற அளவிலே அய்யா அவர்கள் முன்னிலையிலேயே ஈரோடு பெரியார் சிலை திறப்பு விழாவில் கவிதை பாடினார்.

அரசியலில் ஆச்சாரியாருக்கு ஏற்பட்ட தோல்வியை மறைக்க

இந்த இரு கவிதைகளும் 18.9.1971 அன்றைய விடுதலையில் வந்திருக்கிறது. வேண்டுமென்றே அரசியலில் ஏற்பட்டத் தோல்வியை மறைக்க ஆச்சாரியார் கோபத்தோடு, ஏதோ ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக அவருடைய எரிச்சலைப் பயன்படுத்தி எழுதுகின்றார்.

`சாராய சகாப்தம் ஆச்சாரியார் கவிதை


ஆச்சாரியார் அவர்களுடைய கவிதையைப் படிக்கின்றேன். ``சாராய சகாப்தம் இது தலைப்பு.

ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல

ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா

தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்;

வீழ்ந்தவர்கள் முன்போல் வாட

ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு

வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு

வரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார்

கள்ளும் சாரயமும் தந்தார்

அரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில்

போற்றுக முதல்வர் பணியை!

சோற்றுத் திண்டாட்டம் - ஏழை மனைகளில்

சாராயக் கடைகளில் பெரும் கொண்டாட்டம்!

போற்றுக தமிழ் நாட்டு முதல்வரை!

சாராயக் கடைகளை அரங்கேற்றினார்

வரம்பெற்ற கருணைச் செல்வர்!


---------------ஆச்சாரியார்

நம்முடைய கலைஞரைச் சொல்லுகிறார் ஆச்சாரியார், `வரம் பெற்ற கருணைச் செல்வர்! என்று.

கலைஞரைக் கேலி செய்யும் நோக்கத்தோடு

`கிழ பிராமணா உன் வாக்குப் பலித்தது

என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் குடிஅரசிலே ஒன்றை எழுதினார். அது தனி ஒரு செய்தி.

இப்பொழுது நான் உபகதைகளுக்குள்ளே நுழைந்து நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. கலைஞரைக் கேலியாக எழுதுவதைப் போலவும், அதே நேரத்திலே சொல்கிறார்.

`வரம் பெற்று பதவியடைந்த: ஏனென்றால் ஆச்சாரியாருக்கு ஏமாற்றம். மக்கள் - கலைஞர் அவர்களுக்கு `வரம் தந்தார்கள். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. 1971-லே.

ஆனால் பெரியாரிடத்திலே பயின்று ஈரோட்டுக் குரு குலத்திலே இருந்தவர்கள் எங்கேயிருந்து கேள்விக் கணைகள் வந்தாலும், உடனே பதில் சொல்லாமல் இருப்பார்களா? (பலத்த கைதட்டல்). பதிலடி கொடுக்காமல் இருப்பார்களா?

பல பேராசிரியர்கள் ஆய்வு செய்யாத கவிதை

இந்தக் கவிஞர் அன்றைக்கு மட்டும் கவிஞர் அல்ல. இந்தக் கவிதை பல பேராசிரியர்கள் ஆய்வு செய்யாத கவிதை ஒரு வேளை, அதிலிருந்து தப்பியிருக்கக் கூடும். இதையும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த உரையிலே இதை நான் சொல்லுகின்றேன். ஆச்சாரியார் எழுதிய கவிதைக்குப் பதில் உடனடியாக முரசொலியிலே கலைஞர் அவர்கள் எழுதினார்கள். கலைஞர் எழுதிய கவிதை

கலைஞர் அவர்கள் எழுதிய கவிதையை உங்கள் முன் வைக்கின்றேன்.


`சாராய சகாப்த மென்று ஓர் கவிதை

சக்ரவர்த்தி ராஜாஜி மாமுனிவர்

தாராளமாய்க் `கல்கி ஏட்டில் தீட்டியதால்

யார் யாரோ சுதந்தராக்கள் மகிழ்கின்றார்.

`பார் பாராய்க் குடித்தவர்கள் பர்மிட் வாங்கி

நேர்மாறாய்ப் பேசுகின்றார் புத்தர்போல!

இதயத்தில் நோய் என்றும்

இரு யூனிட் வேண்டுமென்றும்

இதோ `டாக்டர் சர்டிபிகேட் பாருமென்றும்

இங்கிருக்கும் சுதந்தராக்கள் குடித்த கதைஊர் அறியும்

பணக்காரர் பகல் வேடக்காரரெல்லாம்

மணக்கும்மது வாங்குவதற்கு பர்மிட் வேண்டும்

பகட்டுக்கு ஒருநீதி - பாவம் ஏழைக்கு ஒருநீதி

பஞ்சாங்க சாத்திரத்தின் புதுநீதி

வாடுகின்ற ஏழைக்குடிகாரன்

வார்னீஷைக் குடித்து செத்த போதும்தனம்

மேவுகின்ற சீமான்கள் - போதை

மோதுகின்ற `விஸ்கி, ரம் அடித்தபோதும்

நவ்ரோஜி வீதியில்தான்

நாற்றம் துளைக்கலையோ?

நாடுதான் பார்க்கலையோ?

`ஆழ்ந்த அறிஞர் அண்ணா என்று

அன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்

அயர்ந்தேதான் போனேன் அய்யா!

இன்னொருநாள்,

அண்ணாபற்றி அரசாங்கப் பாடநூல் வந்தபோது அற்பவயதில் செத்தவரெல்லாம்

அவதாரப் புருடர் தாமோ என எழுதி

அவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தாபோகும்?

ஒரிசாவில் இவர்கட்சி ஆட்சியிலே

ஓடிற்றே மதுவின் வெள்ளம்! அப்போது

தரிசாகப் போனவது ஏன் இவரின் உள்ளம்?

வரம் பெற்ற கருணைச்செல்வா என - எனை

வாழ்த்துகின்றார்! வணங்குகின்றேன்

வரம் தந்தார் இவரல்ல; நேசக்

கரம் தந்த நாட்டு மக்கள்!

வரம் பெற்றேன் - பெரியார் அண்ணா தந்த நெஞ்ச

உரம் பெற்றேன்.

இப்போதும் சொல்கின்றேன்,

கேட்டிடுக!

இந்தியா முழுமைக்கும் அறவே

மதுவிலக்கு கொண்டுவர

சட்டம் செய்தால்:

சிரம் தாழ்த்தி கரம் குவித்து

சிறப்பான செயல் என்று போற்றி நின்று

செயலாக்க முந்திடுவேன்

அதன் பிறகும்;

இதய நோய் என்று - சிலர்

இருட்டினிலே குடிப்பதையும்

இனி அனுமதிப்பதில்லை யென்று விதி செய்வேன்

முழுவிவரம் தேவை யெனில்

பட்டியல் பிறகு சொல்வேன்!


--------------17.9.1971 ஈரோடு தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் போது பாடிய கவிதை.

நவ்ரோஜி வீதி கல்கி அலுவலகம் இருந்த இடம்

ஆச்சாரியார் அன்றைக்கே சுதந்தரா கட்சியை நடத்தினார். `இளைய தலைமுறையினர் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கலைஞர் அவர்கள் கவிதையில் எழுதியுள்ள நவ்ரோஜி வீதிதான் கல்கி அலுவலகம் இருந்த இடம் (சிரிப்பு கைதட்டல்) அதைத்தான் கலைஞர். எழுதுகிறார்.

`நவ்ரோஜி வீதியில்தான்

நாற்றம் துளைக்கலையோ?

``ஆழ்ந்த அறிஞர் அண்ணா என்று

அன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்

அயர்ந்தே தான் போனேன் அய்யா! இதில்கூட கலைஞர் சொல்லுகிறார். ஆச்சாரியாரே `ஆழ்ந்த அறிஞர் என்று அண்ணாவை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். அதுதான் எனக்குப் பெருமை. என்னைத் தாக்கியது பற்றிக்கூட எனக்குக் கூச்சம் இல்லை. இப்பொழுதாவது அந்த உண்மை வெளிவருகிறதே என்று மகிழ்ச்சி அடைகின்றார்.

ஈரோடு - சிலைத் திறப்பு விழாவில் அய்யா அவர்களின் முன்னிலையில்

ஈரோடு - சிலைத் திறப்பு விழாவில் பக்கத் தில் உட்கார்ந்திருக்கின்ற அய்யா அவர்களைப் பார்த்து சொல்கின்றார். கலைஞர் அவர்களின் இந்தக் கவிதை பதிவாக வேண்டிய செய்தி. ``அண்ணாபற்றி அரசாங்கப் பாட நூல் வந்தபோது அற்பவயதில் செத்தவரெல்லாம் அவதாரப் புருடர் தாமோ என எழுதி அவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தாபோகும்? அரசியலில் இலக்கியத்தில் இப்படிப்பட்டவைகள் எல்லாம் கலைஞர் அவர்களுடைய பேனாவைத் தவிர, வேறு எங்கும் இருக்க முடியாது (கைதட்டல்).

``வரம் பெற்றேன் - பெரியார் அண்ணா தந்த நெஞ்ச உரம் பெற்றேன்

``வரம் பெற்ற கருணைச் செல்வா என; எனை வாழ்த்து கின்றார்! வணங்குகின்றேன் ஆச்சாரியார் வாழ்த்துகிறார். கலைஞர் அவர்கள் அதற்கு வணங்குகிறேன் என்று பதில் சொல்கின்றார்.

`வரம் தந்தார் இவரல்ல; நேசக் கரம் தந்த நாட்டு மக்கள்!

(பலத்த கைதட்டல்).

1971 தேர்தலில் மக்கள் - என்னை `வரம் கொடுத்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள் என்று கலைஞர் அவர்கள் சொல்கின்றார். மேலும் கலைஞர் சொல்கிறார்:

`வரம் பெற்றேன் பெரியார் அண்ணா தந்த நெஞ்ச உரம் பெற்றேன் (பலத்த கைதட்டல்).

கலைஞரின் வாதத்திறமையைப் பாருங்கள்

அடுத்து கலைஞர் அவர்களுடைய வாதத் திறமையைப் பாருங்கள்.

``இப்போதும் சொல்கின்றேன், கேட்டிடுக!

இந்தியா முழுமைக்கும் அறவே மது விலக்கு கொண்டு வரச் சட்டம் செய்தால்; சிரம் தாழ்த்தி கரம் குவித்து சிறப்பான செயல் என்று போற்றி நின்று செயலாக்க முந்திடுவேன் என்று சொல்கின்றார் - கலைஞர் (பலத்த கைதட்டல்).

தொடர்ந்து சொல்கிறார்: அதன் பிறகும்; இதய நோய் என்று சிலர் இருட்டினிலே குடிப்பதையும்! இனி அனுமதிப்பதில்லை யென்று விதி செய்வேன்! முழுவிவரம் தேவையெனில் பட்டியல் பிறகு சொல்வேன்! என்று கலைஞர் அவர்கள் 17.9.1971-ல் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் பொழுது முதல்வர் கலைஞர் அவர்கள் பாடிய கவிதை. பெரியார் முன்னிலையில் அரங்கேறிய கவிதை - ஆச்சாரியாருக்குப் பதில் சொன்ன கவிதை.

``கருணைச் செல்வர் என்று ஆச்சாரியாராலே பாராட்டப் பெற்றிருக்கின்றார். இன்றைக்கு அந்த கருணைதான் நாட்டை ஆளுகிறது.

என்றைக்கும் மானமிகு சுயமரியாதைக்காரர்

``அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்

தன் நோய் போல் போற்றாக் கடை

என்று வள்ளுவர் சொன்னார்.

அறிஞர்கள் ஆயிரம் பேர் வருவார்கள்.

ஆனால் அந்த அறிவுக்கு என்ன மரியாதை? என்று சொன்னால் - பிறருடைய நோயைப் போக்க வேண்டும். கலைஞர் அவர்கள் - அந்த நோயைப் போக்குகின்ற பணியைச் செய்கின்றார். வறுமை நோயைப் போக்குகின்ற ஆட்சியைத் தந்து கொண்டிருக்கின் றார்கள். அறியாமை நோயைப் போக்கக் கூடிய ஆட்சியைத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்ற ஜாதி ஒழிப்புக்குரிய வாய்ப்பைத் தந்திருக்கின்றார்கள். (பலத்த கைதட்டல்).

எனவேதான் கவிதைகள் பாடினாலும், இலக்கியம் எழுதி னாலும், திரைக்கதை எழுதினாலும் அது பராசக்தியாக இருந் தாலும் - உளியின் ஓசையாக இருந்தாலும் நிச்சயமாக கலைஞர் அவர்கள் மானமிகு சுயமரியாதைக்காரராகத் தான் என்றைக்கும் கலைஞர் அவர்கள் வாழ்த்து கொண்டிருக்கின்றார்கள். (பலத்த கைதட்டல்). எனவே அப்படிப்பட்ட கலைஞருடைய இந்த படைப்பிலக்கிய ஆய்வுக் கோவை - இன்னும் பல்வேறு கோவை களாக ஆக வேண்டும். அதற்கு - அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் தந்தை பெரியாரையும் தாண்டி வாழ்ந்து இந்தச் சமுதாயத்திற்கு நிரந்தரமான வளம் செய்ய வேண்டும்.

கலைஞர் ஆட்சியைக் கண்ணை இமைகாப்பது போலக் காப்பீர்

தமிழர்களே! தமிழர்களே!! நன்றியை மட்டும் மறக்காதீர்கள்; பெற்றுக் கொண்டதை மறக்காதீர்கள். அதை உற்றுப் பார்த்துப் பயனடையுங்கள். இந்த ஆட்சியை கண்ணை இமை காப்பது போலக் காத்து இது அவர்களுக்காக அல்ல நமக்காக - இனிவரும் தலைமுறைக்காக எதிர் காலத்திற் காக என்று கூறி இம்முயற்சி எடுத்தவர்களைப் பாராட்டி அமைகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------- நன்றி:"விடுதலை" 30-7-2008

0 comments: