Search This Blog

17.7.08

இடதுசாரிகள் சிந்திக்கட்டும்!

செய்தியும் சிந்தனையும் `கசப்புடன் ஏற்கலாமே!

ஜூலை 22-ஆம் தேதியை இந்திய மக்களின் கண்கள் ஊடுருவிக் கொண்டு இருக்கின்றன.

மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய ஆட்சி பிழைக்குமா? கவிழுமா? என்ற கேள்வி இந்தியாவைப் பொறுத்தது மட்டுமல்ல - சுழலும் உலகப் பந்தைப் பொறுத்ததும்கூட!

இதுவரை வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த இடதுசாரிகள், அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினையில் மாறுபட்டு நிற்கின்றனர். மாறுபடுவது ஒன்றும் குற்றமல்ல - புதிதும் அல்ல!

கொள்கைப் பார்வையில் எந்த அளவுக்குக் கடுமையாக மத்திய அரசை விமர்சிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மேலும்கூட, கடைசி எல்லை வரை சென்று தம் எதிர்ப்பினைப் பதிவு செய்து விட்டனர் இடதுசாரிகள்; இதுவரை கூட சரி என்று ஏற்றுக் கொள்ள வேண் டும். அடுத்து அவர்களின் நடவடிக்கைகள் தான் இப்பொழுது பிரச்சினைப் புயலை எழுப்பியுள்ளன - விபரீதமாக முடிவுகள் அமைந்து விடக் கூடாதே!

மத்தியில் உள்ள இந்த அரசைக் கவிழ்ப்பதன் மூலம் அதன் விளைவு என்கிற கனியைச் சுவைக்கப் போகிறவர்கள் யார்? நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் இந்துத்துவா பேசும் பாரதீய ஜனதா ஓநாய்தான் அது என்பது சிறுபிள்ளை களுக்கும்கூட தெரிந்துவிட்ட ஒன்றாகும். கொள்கைக்காக ஒரு ஆட்சியை எதிர்க்கிறோம் என்பதும், அந்த ஆட்சியைக் கவிழ்க்கிறோம் என்பதும் ஒன்றல்ல!

மதவாதத் தன்மை கொண்ட ஆட்சிகூடாது என்பது இடதுசாரி களின் அசைக்க முடியாக் கொள்கையாக இருக்கும் பொழுது, அணுசக்தி ஒப்பந்த ஆட்சியைக் கவிழ்ந்து விட்டு, மதவாத ஆட்சியைக் கொண்டு வந்து உட்கார வைக்கப் போகிறோம் என்பது எப்படி சரியான அணுகு முறையாக இருக்க முடியும்?

இதற்கு நாங்கள் பொறுப்பல்ல - பிரதமர் மன்மோகன் சிங்தான் பொறுப்பு - என்று சமாதானம் சொல்வதோடு, இடதுசாரிகள் பொறுப்பு முடிந்து விட்டதா? அதற்கு அடுத்த கட்டம் என்கிற அளவுக்கு அவர்களின் உரத்த சிந்தனை பயணிக்க வேண்டாமா? அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லையா?

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் என்பது கொள்கைக்கு விரோதமானது என்றுகூறி, அதற்காக இந்த ஆட்சியை வீழ்த்தப் போகிறோம் என்று மார்தட்டும் இடதுசாரிகள், அந்த வீழ்ச்சியை ஏற்படுத்திய பிறகு, அந்த இடத்தில் தங்கள் பலத்தைக் கொண்டு மதச் சார்பற்ற தன்மையுள்ள ஒரு ஆட்சியை அமர வைப்பதற்கான சக்தியும், சாத்தியமும், சூழலும் அவர்களுக்கு இருக்கின்றனவா?

ஒன்றைச் செய்யத் தொடங்கு முன் அதன் விளைவை பற்றிச் சிந்திப்பதுதான் விஞ்ஞான ரீதியான சிந்தனையாக இருக்க முடியும்.

இதில் இன்னும் குறிப்பிடத்தக்க - அடிக்கோடிட்டுக் காட்டத் தக்கது என்னவென்றால் - அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை பதவியிலிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அமரத் துடித்துக் கொண்டு இருக்கும் பா.ஜ.க. ஆட்சி ஒன்றும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானது அல்ல! மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி என்ற இரு தலைக் கொள்ளி எறும்பின் நிலையை அல்லவா இடதுசாரிகள் சந்திக்க வேண்டி வரும்!

பா.ஜ.க.வுடன் சேர்ந்து இடதுசாரிகள், ஒரு மதச் சார்பற்ற ஆட்சியைக் கவிழ்த்தனர் என்பதும்கூட கொள்கைப் பார்வையில் குடைச்சலான ஒரு அம்சம்தானே? மூத்த அரசியல்வாதியும், முதுபெரும் பொதுவுடைமை இயக்கவாதியுமான ஜோதிபாசு போன்றவர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள் என்ற செய்திகள் ஊடகங்களில் மிதந்து வருகின் றனவே. நல்லெண்ணத்திலும் தொலைநோக்குப் பார்வையிலும் முன் வைக்கப்படும் இந்தக் கருத்துகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியாதே!

உலகமயக் கொள்கையைக்கூட நாம் ஏற்றுக் கொள்ளவில்லைதான்; அதில் உடன்பாடு இல்லைதான்; என்றாலும் அந்தக் கொள்கையை உடைய மத்திய அரசுக்கு ஆதரவுக் கரத்தைக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறோம். இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களிலும்கூட இந்த நிலைதானே? அதே அணுமுறையை அணுசக்தி ஒப்பந்தப் பிரச்னையிலும் மேற்கொள்ளலாமே - கொஞ்சம் கசப்போடு!

இதுதான் சந்தர்ப்பம் என்று `என்ன கருடா சவுக்கியமா? என்று சில பாம்புகள் குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனவே!

முலாயம்சிங் எடுத்த முடிவின் காரணமாக மூன்றாவது அணி மூலையில் உட்கார்ந்து கொண்டு மூக்கைச் சிந்திக் கொண்டுள்ளது. ஒரு சமாஜ்வாடி கட்சி போனால் இடதுசாரிகள் நமக்கு கிடைத் திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை கொஞ்சம் அவர்களை எழுந்து உட்கார வைக்கக் கூடும்; அதுவும்கூட விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

மூன்றாவது அணி உருவாகி விடும் - அது பலம் பெற்று காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுத்து விடும் என்று இடதுசாரிகள்கூட நம்பமாட்டார்கள்.
இன்னும் சில கட்சிகளுக்கு இன்னொரு நப்பாசை! வாயில் எச்சல் ஊறல் எடுத்துக் கொட்ட ஆரம்பித்திருக்கிறது.

பா.ம.க., தி.மு.க.,வோடு மோதி தனியாகச் கழன்று கொண்டு விட்டது.

இடதுசாரிகள் மத்தியில் எடுத்த முடிவினால் மாநில அரசியலும் மாற்றத்திற்கு ஆளாகுமா? மூன்றாவது அணி என்னும் சந்துக்குள் நுழைந்து சென்று இடதுசாரிகளுடன் கைகோர்த்து ஒட்டிக் கொள்வதன் மூலம் மறுவாழ்வு நமக்குக் கிடைக்குமா? என்ற சிந்தனை சிலருக்கு.

தங்கள் தொலைக்காட்சியில் (ஜெயா) இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் சி. மகேந்திரனை அழைத்து தூண்டில் போடும் சித்து விளை யாட்டைக் காட்டியுள்ளனர். அந்தச் சுறாமீன் அந்தத் தூண்டிலில் சிக்கவில்லை.

தி.மு.க.,வுக்கு எதிராகக் கேள்விக் கணைகளை எழுப்பி, எப்படியாவது தி.மு.க., ஆட்சிக்கு எதிராக தோழர் மகேந்திரன், அவர்களின் வாயிலிருந்து நாலு வார்த்தைகளைப் பிடுங்க வேண்டும் என்று ரபிபர்னாட் படாத பாடுபட்டு மூக்கறு பட்டதுதான் மிச்சம்.

தனக்குப் பலம் இருக்கிறதோ? இல்லையோ - எதிரியின் பலகீனம்தான் தன் பலம் என்று நினைப்பதைவிட பலகீனமானது வேறு ஒன்றுமில்லை.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தம் அறிக்கையில் (`விடுதலை 10.7.2008) தெளிவாக வழிகாட்டியது போல, மத்தியில் ஆதரித்தாலும் - மே.வங்கத்திலும், கேரளாவிலும் இடதுசாரிகள் வேறு முடிவு எடுத்ததுபோல, தமிழ்நாட்டில் திமுக அணியில் இருந்து கொண்டே மத்தியில் வேறு முடிவு எடுப்பதில் ஒன்றும் சங்கடம் இருக்காது.

அப்பன் எப்பொழுது சாவான்; அவன் இடுப்புச் சாவி தன்னிடத்தில் வரும் என்கிற சாக் குருவிகள் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்க வேண்டியதுதான்!

கடைசியாக ஒன்று: அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரித்தால் அணுசக்தி ஒப்பந்தம் என்ற ஒன்றோடு போய்விடும்; பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் அபாயகரமான மதவாதம் என்ற இரண்டையும் சேர்த்து சுமக்க வேண்டுமே! இரண்டில் ஒன்றுதான் இப்போதைக்குச் சாத்தியம்! அரசியலில் அத்துபடியான இடதுசாரிகள் சிந்திக்கட்டும்! சிந்திப்பதில் அவர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் கிடையாதே!

--------------- மின்சாரம் அவர்கள் 17-7-2008 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

2 comments:

Robin said...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பர். கம்யூனிசமும் அளவுக்கு அதிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அழிவே மிஞ்சும். ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போதோ நடைமுறை உண்மையை உணர்ந்து மாறிக்கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் மட்டும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

tamiloviya said...

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே. தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும்.