Search This Blog

30.9.11

காந்தி ஜயந்தி புரட்டு


இவ்வாரம் 2-10-29 தேதி புதன்கிழமை தமிழ்நாட்டில் பல இடங்களில் திரு.காந்தியின் சஷ்ட்டி பூர்த்தி தின திருவிழா என்னும் காந்தி ஜயந்தி புரட்டு ஒன்று பார்ப்பனர்களால் வெகு அக்கரை உள்ளவர்கள் போல் கொண்டாடப் பட்டது. அவைகளை ஒன்றுக்கு இரண்டு பத்து வீதம் பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் இரகசியம் என்ன வென்று பார்த்தால் கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் உண்மை விளங்காமல் போகாது. அதாவது இந்தப் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தியை திரு.காந்தி மீதுள்ள அன்புக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக கொண்டாடினார்களா அல்லது திரு.காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமாக பார்ப்பன விஷயத்தை பாராட்டக் கொண்டாடினார்களா? என்பது விளங்காமல் போகாது. தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு எப்போதாவது திரு.காந்தியிடம் மரியாதையோ பக்தியோ இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? எந்தப் பார்ப்பனர் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் அடைக்கும் படிக்கும் அந்தப்படி அடைக்காவிட்டால் அராஜகம் பெருகி நாடும் சர்க்காரும் அழிந்துபோகும் என்று சர்க்காருக்குச் சொல்லி சர்க்காரிடம் மகாப்பட்டம் வாங்கினாரோ, அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனிவாச சாஸ்திரியாரும், எந்தப் பார்ப்பனர் காந்தி அரசியலுக்கு லாயக்கில்லை என்று சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சத்தியமூர்த்தியும், எந்தப் பார்ப்பனர் திரு.காந்தியை பயித்தியக்காரர் என்று சொன்னதோடு அவரது இயக்கம் சட்டவிரோதமானது என்று சர்க்காருக்கு யோசனை சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனி வாசய்யங்காரின் உண்மை சிஷ்யராகிய திரு. முத்துரங்கமும், திரு.காந்தியின் கொள்கையை ஒழிக்கப் புறப்பட்ட எதிரிகளுக்கு அடிமையாயிருந்தவரும் திரு.காந்திக்கு மண்டையில் மூளையில்லை என்று சொன்னவருமான திரு.வரத ராஜுலுவும் மற்றும் இவர்களது சிஷ்யகோஷ்டிகளும் முக்கியமாயிருந்து காந்தி ஜயந்தியை சென்னையில் கொண்டாடி இருப்பதுடன் வெளியிடங்களிலும் மேல்கண்ட கூட்டத்தைச் சேர்ந்த வக்கீல் பார்ப்பனர்களும் அவர்களது குமாஸ்தாக்கள் கட்சிக்காரர்களுமே முக்கியமாயிருந்திருக்கின்றார்கள். இந்த கூட்டத்திற்கு இப்போது திரு.காந்தியிடம் ஏற்பட்ட அபிமானத்திற்கும் பக்திக்கும் காரணம் என்ன என்பது வேடிக்கை விஷயமாகும்.

இவர்கள் ஒன்றாய் திரு.காந்தி செல்வாக்கில் இருந்த காலத்தில் அவர்களை உண்மையில் பின்பற்றினவர்களாகவாவது இருந்திருந்தாலும் அல்லது அவர் இப்போது மூலையில் அடங்கிவிட்டாலும் அவருடைய அப்போதைய கொள்கையையாவது அல்லது இப்போதைய கொள்கையை யாவது பின்பற்றுகின்றவர்களாகவாவது இருந்தாலும் ஒரு விதத்தில் காந்தி ஜயந்தி கொண்டாட யோக்கியதை உடையவர்கள் என்று சொல்லலாம்.

அப்போதும் கீழ்ப்படியாமல், இப்போதும் ஏற்றுக் கொள்ளாமல் மூலையில் உட்கார வைத்து ஜயந்தி கொண்டாடுவது எதற்கு சமானம் என்று பார்க்கப் போனால் புத்தரை நாஸ்திகர் என்று பழி சுமத்தி அவர் கொள்கையை அடியோடு அழித்து நாட்டில் செல்வாக்கில்லாமல் செய்துவிட்டு புத்தர் ‘மகா விஷ்ணு’வின் பத்தாவது அவதாரம் என்று புராணங்கள் எழுதிவைத்து வணங்கி வந்ததைத்தான் சமானமாகச் சொல்லலாம். இந்தத் தமிழ் நாட்டில் ஒரு பார்ப்பனராவது திரு.காந்தி அபிப்பிராயத்தை ஒப்புக்கொள்ளுகின்றார் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். உதாரணமாக சாரதா மசோதாவுக்கு ஆதரவளித்ததில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 24 வயதும் கல்யாண வயதாயிருக்க வேண்டும் என்று சொன்னதை எந்தப் பார்ப்பனர் ஒப்புக் கொண்டார் என்று கேட்கின்றோம். தீண்டாமை ஒழிந்தா லல்லாது நமக்கு சுயராச்சியம் கிடைக்காதென்றும், தீண்டாமையை அடியோடு ஒழிக்காவிட்டால் நாம் சுயராச்சியத்திற்கு அருகரல்லவென்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக்கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயற்சித்தாரா? முயற்சிக்கிறாரா? முயற்சிக்கப்போகிறாரா? என்று கேட்கின்றோம். கோவில் களில் தீண்டப்படாதாரை விடாவிட்டால் அது மிகவும் அக்கிரமம் என்று சொன்னாரே, அதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு கோயிலுக்குள் விட்டார்களா என்று கேட்கின்றோம். விதவைகளுக்கு மறுமணம் செய்யுங்கள் என்றும் மறுமணம் செய்யப்படாத விதவைகள் வீட்டைவிட்டு ஓடிப்போய் யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது கேட்டார்களா என்று கேட்கின்றோம்.

மற்றும் காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், பூரண சுயேச்சை என்பது பயித்தியக்காரத்தனமென்றும் சொன்னதை யாராவது எந்தப் பார்ப்பனராவது மதித்தார்களா? அன்றியும் கோயில்களில் கடவுள்கள் இல்லை என்றும், கோயில்கள் விபசார விடுதிகள் என்றும் சொன்னதை யாராவது மதித்து எந்தக் கோயில்களை யாராவது இடித்தார்களா அல்லது அடைத்தார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் லாகூர் காங்கிரசில் ஒரு காரியமும் ஆகப் போவதில்லை; காங்கிரசியக்கமும் ஒழுங்காயில்லை; ஆதலால் நான் காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதற்கு யாராவது பதில் சொல்லவோ அல்லது காங்கிரசை விட்டு வெளிவரவோ அல்லது காங்கிரசின் கொள்கைகளைத் திருத்தவோ ஒப்புக் கொண்டார்களா என்று கேட்கின்றோம். கடைசியாக திரு.காந்தி இன்னமும் தனக்கு ஒத்துழையாமையில்தான் நம்பிக்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லி வருகின்றாரே! இதையாவது எந்தப் பார்ப்பனராவது கேட்டு உத்தியோகத்தை விடவோ சட்டசபையை விடவோ, பட்டத்தை விடவோ, பள்ளியை விடவோ, வக்கீல் வேலையை விடவோ, சம்மதித்தார்களா என்றும் கேட்கின்றோம். திரு.காந்தி சொல்வதில் ஒன்றைக்கூட கேட்காமல் அவரை பயித்தியக்காரரென்றும், முட்டாள் என்றும், மூளை இல்லை என்றும், அரசியலுக்கு லாயக்கில்லை என்றும், அராஜகன் என்றும், சட்ட விரோதி என்றும் மற்றும் அயோக்கியன், மடையன், போக்கிரி (கும்பகோணம் பம்பாய் முதலிய இடங்களில்) என்றும் சொல்லிவிட்டு அதுவும் சென்ற வாரத்தில் சொல்லிவிட்டு இந்த வாரத்தில் அதே பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் சேர்ந்து காந்தி ஜயந்தி கொண்டாடுவதென்றால், இதைப் போன்ற வஞ்சகமும் சூட்சியும் வேறு உண்டா என்றுதான் கேட் கின்றோம்.

ஒரு காரியத்திற்காக காந்தி ஜயந்தி கொண்டாடப்பட்டது என்றால், அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான். அதாவது தென்னிந்தியாவில் வருணாச்சிரமப் பிரசாரம் செய்ததற்கும் இந்த ஜென்மத்தில் “சூத்திரன்” தனது வருண தர்மத்தைச் செய்தால் அடுத்த ஜன்மத்தில் “வைசியனாக”, அடுத்த ஜன்மத்தில் “க்ஷத்திரியனாக”, அடுத்த ஜன்மத்தில் “பிராமண”னாகலாம் என்று சொன்னதற்கும், மற்றும் ராமாயண, பாரத பிரசாரம் செய்ததற்கும் கதரின் பேரால் லட்சக்கணக்காக பணம் பிடுங்கி பார்ப்பனாதிக்கத்திற்கு செலவு செய்ய பார்ப்பனர்கட்கு இடம் கொடுத்துவிட்டுப் போனதற்கும் வேண்டுமானால் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி கொண்டாடலாம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆனால் சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லாதார்கள் அதில் கலந்து கொண்டதற்கு நாம் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. இன்றைய தினமும் நமது நாட்டில் நடக்கும் அனேக ஜயந்திகளும் பண்டிகைகளும் திருநக்ஷத் திரங்களும் உற்சவங்களும் பார்ப்பனாதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாதார் இழிவுக்கும் அறிகுறியாக நடத்தப்படுகின்றது என்பதை பலர் அறிந்தும் அவ்வித பண்டிகைகளையும் உற்சவங்களையும் இன்னமும் அறிவும் உணர்ச்சி யுமற்ற பார்ப்பனரல்லாதார்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். அது போலவே காந்தி ஜயந்தியும் கொண்டாடப்பட்டது என்றுதான் நாம் வருத்தத் துடன் சொல்ல வேண்டியிருக்கின்றது. எனவே இனியாவது பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் இம்மாதிரியான பார்ப்பன சூட்சியிலும் வஞ்சகத்திலும் விழாமலிருக்க எச்சரிக்கை செய்கின்றோம்.

-------------- தந்தைபெரியார் - "குடி அரசு" - துணைத் தலையங்கம் - 06.10.1929

29.9.11

அர்த்த நாரீஸ்வரராக இருப்பதன் அர்த்தம்!


இன்று மதுரை மீனாட் சியம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்று உணர்த் தும் கோலம் இது.


அம்மனும், சிவனும் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாட்சி செய்யும் பெருமை மதுரைக்குரிய சிறப்பு! நம்புங்கள் - மதுரையை ஆள்வது - தமிழ்நாடு அரசோ - மாநகராட்சியோ அல்லவே அல்ல! மீனாட்சியும் சிவனும்தான் ஆட்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

சித்திரை முதல் ஆடி வரை மீனாட்சியும் ஆவணி முதல் பங்குனி வரை சொக்கநாதராகிய சிவனும்தான் மதுரையை ஆள்வதாக அய்தீகமாம்.
இப்படி இருக்கும்போது ஆன்மீக நம்பிக்கைப்படி சொல்ல வேண்டுமானால், மதுரையில் மாநகராட்சித் தேர்தல் - மேயர் தேர்தல் எல்லாம் தேவையில்லாத ஒன்று. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், மதுரையை ஆளும் மீனாட்சி - சொக்கநாதர் ஆகியோருக்குப் போட்டியாக நடத்தும் நாத்திகத் தன்மை கொண்டதும் ஆகும் இந்தத் தேர்தல்கள் எல்லாம். நியாயமாக மதுரை வாழ்மக்கள் ஏதாவது குறைபாடுகளும், தேவைகளும் இருக் குமானால் அவர்கள் முறைப் படி புகார்மனு கொடுக்க வேண்டியது மதுரை மீனாட்சி அல்லது சொக்கரிடம்தான். ஏனெனில் அவர்கள்தானே அவ்வாறு மாதமாகப் பிரித்துக் கொண்டு மதுரையை ஆட்சி செய்கிறார்கள்? மதுரையை மட்டும்தான் சொக்கனும், மீனாட்சியும் ஆள்கிறார்களா? மற்ற பகுதிகளை ஆள்ப வர்கள் வேறு யார்? எதற்கும் மீனாட்சி - சிவன் தம்பதிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அது ஒருபுறம் இருந்து விட்டுப் போகட்டும்! இன்றைக்கு அர்த்தநாரீஸ்வரராக மீனாட்சி அம்மையார் மதுரையில் காட்சி தருகிறாளாம். அர்த்தம் என்றால் பாதி; நாரி என்றால் பெண்; அர்த்த நாரி என்றால் ஈஸ்வரனில் பாதியாக இடம் பெற்ற பெண். இந்த அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தைத் தரிசித்தால் கணவன் - மனைவியரின் ஒற்றுமை நிலைத்திருக்குமாம். அப்படியானால் மதுரையில் குடும்ப நீதிமன்றமே கிடையாது என்று நம்பு வோமாக!

சிவனும் - பார்வதியும் அர்த்த நாரீஸ்வரராக இருப்பதன் அர்த்தம் - ஆணும் பெண்ணும் சமம் என்பது தான் என்று சொல்லப் படுகிறதே - நமக்கு ஒரு சந்தேகம்! பார்வதியின் தந்தையாரான தட்சன் நடத்திய யாகத்தில் மருகனான சிவனை அழைக்கவில்லை. மருமகனாகிய பரமசிவனுக்கோ மகா மகாகோபம் - தன்னை அவமானப்படுத்தியதாக! எவ்வளவோ சிவன் தடுத்தும் தன் மனைவி பார்வதி அந்த யாகத்துக்குச் சென்றாளாம். சென்ற இடத்திலும் அவமானப்பட்டு, பார்வதி திரும்பியபோது சிவன் பார்வதியை ஏற்க மறுக்கிறான். கெஞ்சுகிறாள் பார்வதி. அப்படியானால் மயில் உருவெடுத்து தன்னை பூஜித்து சாப விமோசனம் பெறுமாறு உத்தரவிடுகிறார் - அவ்வாறே செய்து விமோசனம் பெற்றாள் பார்வதி அந்த ஊர்தான் மயிலாடு துறையாம். நமது கேள்வி - ஆண் - பெண் சமம் என்பதுதான் அர்த்தநாரீஸ்வரர் என்பதற்கு அடையாளம் என்றால் சிவன் எப்படி சாபம் விடலாம்? பார்வதி ஏன் மயிலாகி சிவனைப் பூஜிக்க வேண் டும்? தர்க்கவாதம் (Logic) இடிக்கிறதே!

--------------- மயிலாடன் அவர்கள் 29-9-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.9.11

அமாவாசை இந்துக்களுக்குத்தான் நல்ல நாளா?இஸ்லாமியர் களுக்கு?கிறித்தவர்களுக்கு?....


நேற்று அமாவாசையாம் - நல்ல நாளாம் - அதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் போட் டியிட பல்லாயிரக்கணக்கா னோர் மனு தாக்கல் செய் தார்களாம் - தொலைக்காட்சிகள் இவ்வாறு அறிவிக்கின்றன.

அப்படியென்றால் நல்ல நாள் என்று நம்பி மனு தாக்கல் செய்துள்ள அத்தனைப் பேரும் வெற்றி பெற்றுவிடுவார்களா? ஒரு தொகுதியில் ஒருவர்தானே வெற்றி பெற முடியும்?

அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்துக்கு அளவே கிடையாதா?

அமாவாசை நாளல்லாமல் வேறு நாள்களில் போட்டியிட்டவர்கள் தோல்வி அடைந்து அமாவாசை நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று எந்த சோதிடராவது சவால் விடத் தயாரா?

சரி, இந்த அமாவாசை இந்துக்களுக்குத்தான் நல்ல நாளா? இஸ்லாமியர் களுக்கும், கிறித்தவர்களுக்கும் அமாவாசை எந்த நாள்? இவர்களுக்கு நல்ல நாள் ஒன்றும் கிடைக்கவே கிடைக்காதா? அப்படி கிடைக்காத காரணத்தால், இவர்கள் போட்டியிடும் இடங்களில் எல்லாம் தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வுவார்களா?

அமாவாசை அமாவாசை என்று சொல்லுகிறார்களே - அது என்ன, அதன் தாத்பரியம்தான் என்ன?

இதற்கெல்லாம் அகராதியாக இருக்கக் கூடிய அபிதான சிந்தாமணியை ஒரு புரட்டுப் புரட்டலாமா?

அச்சோதை - இவள் ஒரு புண்ணிய நதி வடிவமான பெண். இவள் மரீசி மக்களாகிய பிதுர்க்களுக்குக் குமரி. இவள் தன் பிதுர்க்களால் நிரூபிக்கப் பட்ட அச்சோதம் என்னும் நதிக்கரையில் ஆயிரம் வருஷம் தவம் செய்ய, பிதுர்க்கள் பிரத்தியக்ஷமாயினர். அவர்களுள் ஒருவனாகிய மாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் அவள் விபச்சாரியாய், பூமியில் விழாது அந்தரத்தில் நின்று தவஞ் செய்தனள். அவள் வசமாகாத மாவசு இச்செய்தி நடந்த தினத்தை அமாவாசை ஆக்கினான்.

அவள் மீண்டும் அவர்களை வேண்ட, நீ தேவர் கர்மத்தைப் புசித்து, துவா பரயுகத்தில் ஒரு மீன் வயிற்றில் சத்தியவதியெனப் பிறந்து, பராசரனைக் கூடி, வியாசனைப் பெற்றுப் பிறகு சந்தனின் தேவியாய் இரண்டு புத்திரர்களைப் பெற்று அப்பால் அச்சோதையெனும் புண்ணிய நதியாகவென அருளிப் போயினர். இத்தினத்தில் அப்பிதுர்க்களை நினைத்துக் கர்மாதிகள் செய்யின், அவை பிதுர்ப் பிரீதியைத் தரும் (மச்ச புராணம்) என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி.

இந்து மதம் என்று எடுத்துக்கொண்டால் அதில் விபச்சார சமாச்சாரம் இல்லையென்றால் சுவை படாது போலும்.

ஒருவனை அடைய நினைத்ததே விபச்சாரமாம்... அது எப்படியோ இருக்கட்டும். இந்த விபச்சாரத்துக்கான நாளான அமாவாசை எப்படி நல்ல நாள் ஆகும்?
தர்க்கமுறை (லாஜிக்) இடிக்கிறதே!

--------------- மயிலாடன் அவர்கள் 28-9-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

தலைவன் என்பவன் யார்? - பெரியார்நான் யாரையும் எந்தக் காரியத்தையும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள் இடம் விட்டுவிடுவது வழக்கம். பொறுப்பு ஏற்காமல் அதிகாரம் செய்பவர்களை அலட்சியமாய் விட்டுவிடுவதும் வழக்கம். நம் இயக்கங்கள் தொண்டாற்றித் தொல்லை ஏற்றுக்கொண்டு அவதிப்பட வேண்டிய இயக்கமாகும். இதில் வெறும் அதிகாரக்காரருக்கு இடம் கொடுத்தால் தொண்டாற்றுகிறவர்கள் சலிப்படைந்து விடுவார்கள். ஒரு தலைவன் வேண்டும். அவன் நடத்துபவனாய் இருக்கவேண்டுமே ஒழிய, நடத்தப்படுபவனாய் இருக்கக்கூடாது. அடுத்தாற்போல் பின்பற்றுபவர்கள் இருக்க வேண்டும், அவர்கள் தலைவர் அபிப்பிராயத்துக்கு ஒத்துக்கொண்டு (ஒத்து) உழைக்கிறவர்களாக இருக்கவேண்டும்.

அதற்குத்தான் ஒத்துழைப்பு என்று பேர். அதிகாரம் செய்துகொண்டு தலைவரை டைரி கேட்பவர்களாக இருக்கக்கூடாது. பலபேர் அதிகாரம் செய்தாலும் காரியம் கெட்டுப்போகும்.

சிலருக்குப் பின்பற்றுவது அவமானமாய் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு வேறுபல கட்சி அமைத்துக் கொள்ளப் பல வசதியும் வேறு காரியங்களும் அப்படிப்பட்ட தொண்டர்களை ஆதரிக்கப் பல தலைவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் நம் கட்சிகள் அப்படிப்பட்டவை அல்ல. பின்பற்றி தொல்லைப்பட வேண்டியது, சிறைவாசம், குடும்பநஷ்டம், வாழ்வுகேடு, பாமர மக்களிடம் அவமதிப்பு, சர்க்காரிடம் வெறுப்பு முதலியவை அடையவேண்டிய சங்கடமான காரியத்தில் பட்டதாகும். இதற்கு அப்படிப்பட்ட காரியங்களில் நம்பிக்கையும் அவற்றிற்குத் தயாராகும் தகுதியும் உள்ளவர்களுக்கே இடம் இருக்க முடியும். இல்லாதவர்கள் வீண் மனச் சங்கடமும், கட்சிப் போக்கைத் தடைப்படுத்தி முட்டுக்கட்டை போடும் வேலையுமே செய்ய வேண்டி இருக்கும். இந்த முட்டுக்கட்டைக்காரரிடம் எனக்கு காங்கிரசில் இருந்த காலம் முதல் அனுபவம் உண்டு. அவசியம் இல்லாத காலம்வரை தெரியாதவன்போல் இணங்கி இருப்பேன். அவசியம் ஏற்பட்டதும் யாரையும் உதறித் தள்ளிவிட்டு என் காரியத்தைச் சாதிக்க முனைந்துவிடுவேன். அப்படிச் செய்தால்தான் உண்மையாகப் பாடுபடுவதாய் கருதிக் கொண்டிருப்பவனுக்குத் திருப்தி ஏற்படும். இது இயற்கை. ஆதலால் சர்வாதிகாரம் என்பதைக் குறை கூறாதீர்கள். ஜனநாயகம் என்பதே பித்தலாட்டமான காரியம். அதிலும் நமக்கு அது பித்தலாட்டமும் முட்டாள்தனமானதுமான காரியம். நீங்கள் பெரிதும் இந்த இயக்கத்தில் தொண்டாற்றுவதை என்னிடம் நம்பிக்கை உள்ளவரை என் காரியத்திற்கு உதவி செய்வதாய்க் கருதுங்கள். நம்பிக்கை அற்றபோது என்னைத் தள்ளி விடுங்கள் அல்லது என் தலைமையை உதறித் தள்ளி விட்டுப் போய் ஒரு கட்சி அமைத்துக் கொள்ளுங்கள். அந்த மாதிரியாக இருந்தால்தான் சுயநலமற்ற தொண்டு, பொறுப்புள்ள கவலையுள்ள தொண்டு செய்ய முடிகிறது. இதை 25 வருஷமாய்ச் சொல்லி வருகிறேன். குடிஅரசைப் பாருங்கள், என் பல பேச்சைப் படியுங்கள், மரியாதையும், செல்வாக்கும் ஏற்படுகிறவரை இவற்றைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும், கூடவே இருந்து பெரியார் கூறுகிறபடி நடப்பதாகப் பொய்ச் சத்தியம் செய்வதும், உறுதி கூறுவதும், தங்களுக்குத் தனி செல்வாக்கு ஏற்பட்டதாக நினைத்த உடன் அல்லது அசவுகரியம் ஏற்பட்டவுடன் பெரியார் சர்வாதிகாரம் என்று கூறுவது, நாணயமான காரியமாகாது, நமக்கு வேண்டியது நம் இழிவும், நம் அடிமைத் தன்மையும் நீங்க வேண்டியது. இதற்கு என் வழி தனி வழி, சுயேச்சை வழி இதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள். இது தவிர தனிவழி, சுயேச்சை வழி உள்ளவர்கள் தனியாய், சுயேச்சையாய் நடத்துங்கள். என்மீது கோபியாதீர்கள். முட்டுக்கட்டை போடாதீர்கள். சில தோழர்கள் பேசுவதுபோல் முட்டாள்களாய் இருக்கும்வரை என்கூட இருந்ததாகவும் இப்போது அறிவு ஏற்பட்ட உடன் விலகி கெட்டிக்காரர்களாக உஷார் காரர்களாக ஆகிவிட்டதாகவும் கூறிப் பெருமை அடைவதுபோல், மற்றவர்களும் ஒவ்வொருவரும் முட்டாள்களா அறிவாளிகளா என்று இப்போதே சிந்தித்துப் பார்த்துத் தொண்டில் இறங்குங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் சமீபத்தில் உங்களுக்குப் பெரிய கஷ்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வரும். அப்போது மற்றவர்கள் போல் என்னை சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டி மற்றவர்கள்போல் கைவிட்டு ஓடிவிடாதீர்கள், தொல்லை கொடுக்காதீர்கள்.

-------------------23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹால் மண்டபத்தில் ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை மாகாண மாநாட்டுக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...
குடிஅரசு - 25.08.1945

27.9.11

சாக்ரட்டீஸ் பெற்ற வெற்றியின் ரகசியம்ஒரு குடும்பமாக இருந்தாலும், ஓர் அமைப்பாக (Organization) இருந்தாலும், குழுமமாக இருந்தாலும் கட்சி அல்லது இயக்கமாக இருந்தாலும், நண்பர்கள் வட்டமாகஇருந்தாலும் கூட, கலந்து உரையாடும்போது, முக்கியமான பொறுப்பாளர் (உதாரணத்திற்கு குடும்பத் தலைவர் - தலைவி) சில செயல்களைத் திட்ட மிடுவது பற்றிக் கூறுகையில், அருகில் அவர்களுக்கு அடுத்த நிலையிலோ, அல்லது சம நிலை நண்பர்களோ, பொறுப்பாளர்களோ இரண்டு வகைகளில் அதனை எதிர்கொள்ள வாய்ப்புண்டு.

ஒன்று (1): உடனே எடுத்த எடுப்பிலேயே அதெல்லாம் நடக்காதுங்க, முடியாதுங்க, யாருங்க முன் வருவாங்க, பெரிய செல்வாக்குள்ளவர்களால்தான் அதனைச் செய்ய முடியுங்கோ, நமக்கு அது பெரிய சுமையாகிவிடுங்க, அதிலிருந்து மீளுவது முடியாதுங்க என்று எதிர்மறையாக முகத்தில் அடித்தது போல - ஒரு குடம் பச்சைத் தண்ணீரை எடுத்து அப்போது ஊற்றி உற்சாகத்தை விரட்டி ஊர் எல்லைக்கே கொண்டு நிறுத்திடும் சுபாவத்தினர் ஒரு வகை!

இரண்டு (2): நல்ல திட்டந்தாங்க, நாம் எல்லோரும் சேர்ந்து கடுமையாக உழைத்தால் நிச்சயம் வெற்றி அடையமுடியுங்க, விடாமுயற்சி செய்தால் ஏன் அதை வெற்றியாக்க முடியாது? என்று கூறி, கிரியா ஊக்கிகளாகி நமக்கு - தூக்க மாத்திரை தேவைப்படும்படி செய்த முன்வகையறா பேர்வழிகளைப் போல் இல் லாது, ஊக்க டானிக் தந்து ஊழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று கூறி சாதிக்க வைக்கும் சரித்திரம் உருவாக துணை நிற்போர். மற்றொரு வகை!

முடியாது; இயலாது என்பதைக் கூட - யதார்த்தத்தில் அப்படிப்பட்டநிலை என்கின்ற போதிலும் கூட, அதனை உடனடியாக ஏற்க மனமின்றி தயக்கத்தை வேறு மாற்று வழியும் வார்த்தையும் காண முயலவேண்டியது முன்னேற விரும்புவோர் செய்யும் செயலாகும்! அந்த அணுகு முறையும் மனப்போக்கும்தான் நம்மை உயர்த்திட உதவும்!

நம் விழைவு, விருப்பம், வேட்கை (Aptitude) தான் நமது எண்ணப் போக்கை (Attitude) உருவாக்கிடஅடித்தளம் ஆகும்! அந்த எண்ணப் போக்குதான் நாம் ஏறி ஏறி வெற்றி கொள்ள உதவும் சிகரங்களைத் தொட உதவி செய்யும். ஆங்கிலத்தில் இதைத்தான் (Your attitude decides your altitude) என்று கூறுவர். நமது இலக்கை எட்ட, இடையூறுகள், இடுக்கண்களை தடை களாகக் கருதாமல், படிகளாக, மனதால் கொள்ளுங்கள் - தாண்டுவது சுலபம்.

முடியாது என்பது தாழ்வு மனப் பான்மையின் முக்காடிட்ட தோல்வியின் வெளிச்சமாகும்!

நமது உரையாடலின் மூலம், கேட்கும் கேள்வியின் பரி பக்குவத்தின் மூலம் இல்லை என்ற விடை வராமல் தடுக்கலாமே!

கிரேக்கத்துச் சாக்ரட்டீஸ் இளைஞர்களைத் திரட்டி ஏதென்ஸ் நகர வீதிகளில் சிந்தனையைத் தூண்ட கேள்விகளிலிருந்து பெற்ற விடை எல்லாம் ஆம்! ஆம்! என்ற விடைகளே. இளைஞர்களிடம் பீறிட்டுக் கிளம்பி வந்து பெரிய தோர் அறிவுப் புரட்சியை உருவாக்கியது!

தென்கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ் என்று தந்தை பெரியாரை அய்.நா. யுனெஸ்கோ மன்றம் பாராட்டி விருது (1970) வழங்கியதே. அந்த அய்யாவும் நான் சொல்வதை அப்படியே நம்பாதீர்கள். சிந்தித்து சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தன்னடக்கத்துடன் சொன்ன முறைதான் அவர் கூறிய அனைத்து அப்பட்ட அனுபவத்தில் முகிழ்த்த அறிவுரை என்பதைப் புரிய வைத்து, பல கோடி மக்கள் இன்று உலகில் பகுத்தறிவாளர்களாக, மனிதநேயர்களாக வாழ வைத்துள்ளது!

எனவே சிந்தனை, சொல் எல்லாம் அடக்கத்திலிருந்தும், உறுதியிலிருந்தும் பிறக்க வேண்டும்
------------------கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் - "விடுதலை” 27-9-2011

திராவிடர் என்பது - ஏன்?

தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது.
ஆனால் படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களி டத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.

உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருது வதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப் படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல்லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர் களாகிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வான சாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, ராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.

நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவதில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகிய வர்களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறை களும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100க்கு 90 மாண வர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கர வர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மை யென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.

படிப்பால் ஏற்படும் பயன்

இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள்ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவதால் கேடு எதுவும் எற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை.

ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்

உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும் புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர் கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறை பாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரி யானதும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன்? இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படு கிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சி யையும் கெடுக்கப் பார்ப்பார்கள்.

இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களு மாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினை வுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகி றோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினை வுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலை என்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென் படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக் குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும்.

சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்கு முள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக் கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்ஜியம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல் லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்து விட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும்.

திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக்குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத் தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமி யனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண் யுடவை நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச் சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சி யால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளை ஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக் கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள்.

அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவை களைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

--------------------09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு - "குடிஅரசு" - சொற்பொழிவு - 14.07.1945

26.9.11

பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு. ஆனால் பெரியார் என்றால், மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமுதாய சமத்துவம் காணப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களை மட்டுமே அடையாளம் காட்டி நிற்கும் சொல்லாகத் திகழ்கிறது.. அத்தகு பெருமைபெற்ற நம் அய்யா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளுள் சில:

@@@@@

அய்யாவின் அறிவாற்றல்

கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அய்யா சொற்பொழிவாற்றினார். மொழிபெயர்ப்புப் பணிக்காக நமது உண்மை ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் உடன் சென்றிருந்தார். இயல்பிலேயே தன்னம்பிக்கையினை அதிகமாகப் பெற்ற அய்யா அவர்கள் எதையும் தாமே செய்து பார்ப்போம் என்ற ஆர்வம் கொண்டவர்.

கான்பூர் மாநாட்டினை முடித்துவிட்டு லக்னோ சென்று பேசச் சென்றார். ஆங்கிலத்தில் பேச முயன்றார். ஆசிரிருக்கோ வியப்பு. பேசும் இடமோ பல்கலைக்கழகம், அய்யா படித்ததோ மூன்றாம் வகுப்புவரை மட்டுமே. எனினும், அறிவு ஆசான் துணிச்சலுடன் பேச நினைத்தார்.

ஒரு சிறிய முன்னேற்பாட்டின்படி பேசத் தொடங்கினார். அதாவது, அய்யா ஆங்கிலத்தில் பேசுவார். அய்யாவுக்குப் பேசும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர் அந்த வார்த்தையினை எடுத்துக்கொடுத்து சரிசெய்ய வேண்டும். அய்யாவின் விருப்பப்படி ஆசிரியர் தயார்நிலையில் இருந்தார்.

அய்யா பேசத் தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தபோது அடுப்பு எனும் பொருளை உணர்த்தும் ஆங்கிலச் சொல்லினைச் சொல்ல வேண்டும். அது அவரது நினைவுக்கு உடனே வரவில்லை. பேச்சு தடைப்பட்டது. ஆசிரியரைப் பார்த்தார். அவசரத்தில் ஆசிரியருக்கும் அந்த வார்த்தை நினைவில் வராததால் ஆசிரியர் சிறிதுநேரம் யோசித்தபோது, அய்யா ஓவன் (Owen) என்னும் ஆங்கிலச் சொல்லினைக் கூறி பேச்சைத் தொடர்ந்து ஆசிரியரை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் (Appropriate Word) சரியான சொல்லையே தேர்வு செய்து பேசினார். லக்னோ பல்கலைக்கழகத்தில் அய்யா பேசிய பேச்சுத் திறமையும் நுண்ணறிவும் பாராட்டுக்குரியதே. அய்யா அவர்கள் கருத்தைத்தான் பார்த்தார். அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்.

@@@@@

அய்யாவின் பொறுமை

அய்யாவும் கண்ணப்பரும் ஒரு முறை ரயிலில் பயணம் செய்தபோது கண்ணப்பர் பார்ப்பனர் ஒருவரோடு வாக்குவாதம் செய்துகொண்டே வந்துள்ளார். அப்போது கடுமையான பல சொற்களைப் பேசும்படியான சூழ்நிலை உருவானது.

இதனை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்த அய்யா, இப்படியா பேசுவது? பொறுமையாக அவருக்குப் புரியும்படி பதில் கூறினால்தானே அவரது தவறான எண்ணத்தை மாற்றி நம் பக்கம் திருப்ப முடியும் என்றார்.

உடனே அந்தப் பார்ப்பனர், பெரியவரே நீங்கள் சொல்வதை அவர் கேட்க மாட்டார். இவர்கள் இராமசாமி நாயக்கர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் பேசுவர் என்றார். அய்யாவும் கண்ணப்பரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

கண்ணப்பர் அடுத்த வண்டிக்குச் செல்வதற்காக இறங்கிவிட்டார். அய்யா கழிப்பறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அந்தப் பார்ப்பனரைப் பார்த்து, அவர்தானய்யா ராமசாமி நாயக்கர். இப்படிப் பேசிவிட்டீரே என்றார். கழிப்பறையிலிருந்து அய்யா வந்தவுடன் பார்ப்பனர் எழுந்து நின்று இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, என்னை மன்னித்துவிடுங்கள் அய்யா. தங்களை யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களே பொய்யர்கள். தங்களது நற்குணமும் பொறுமையும் யாருக்கும் வராது. எங்கள் வீட்டிற்குத் தாங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று உபசரித்துச் சென்றார்.

@@@@@

அய்யாவின் சமாளிப்புத் திறமை

ஒருமுறை அய்யாவும் அண்ணாவும் மும்பை சென்றிருந்தனர். அங்கு எம்.என்.ராய் அவர்களைச் சந்தித்தனர். அய்யாவிடம் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தவர் ராய். தமது அன்பினை வெளிப்படுத்த அய்யாவுக்கு விருந்து கொடுக்க நினைத்து அழைத்தார். அய்யாவும் அண்ணாவும் விருந்திற்குச் சென்றனர். ராய்க்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழ் தெரியாது. அய்யாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் மட்டுமே தெரியும்.

பிரமாதமாக நடைபெற்ற விருந்தில் இருவருக்கும் ராய்தான் பரிமாறினார். அய்யாவுக்கு, குறிப்பிட்ட ஒரு பதார்த்தத்தின் மீது ஆசை ஏற்பட்டது. மனதிற்குப் பிடித்ததைக் கேட்டு விடுவது அய்யாவின் குணங்களுள் ஒன்று. எப்படிக் கேட்பது? ராய்க்குத் தமிழ் தெரியாதே, ஊறுகாய் என்றால் ராய்க்குப் புரியாதே, என நினைத்தார். இதன் ஆங்கிலப் பெயரும் அப்போது மறந்துவிட்டது அய்யாவுக்கு.

அய்யாவின் தேவையை அண்ணா புரிந்துகொண்டார். எனினும் அய்யாவின் சமாளிப்புத் திறமையைக் கண்டு ரசிக்க விரும்பினார். ராய் அருகில் வந்தபோது, நாக்கில் கையை வைத்து நாக்கால் ஒரு சொடக் கொடுத்து ஓசை எழுப்பிக் காட்டினார் அய்யா.

உணவு பறிமாறிக்கொண்டிருந்த ராய் புரிந்துகொண்டு, ஓ பிக்கிள் என்றார். உடனே, எஸ் எஸ் பிக்கிள் என்றார் மலர்ச்சியுடன் அய்யா.

நாவினால் ஓசை எழுப்பியே தமது கருத்தைத் தெரிவித்துச் சமாளித்த அய்யாவின் திறமையை எண்ணி வியந்தார் அண்ணா.

@@@@@நாகப்பட்டினம் விஜயராகலு வீட்டிற்கு அய்யா உணவு சாப்பிடச் சென்றார். 15 பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. அய்யா 25 பேருடன் சென்றார். சென்றவர்களுள் பட்டுக்கோட்டை அழகிரி மெதுவாகச் சாப்பிடும் இயல்புடையவர். பச்சரிசிச் சோறு காலியாகிவிட்டது. எனவே, அழகிரிக்கு மோர் சாப்பாடு சாப்பிட்டபோது குறுவை அரிசிச் சோறு பரிமாறினர். சிவந்த நிறத்தில் பெரிது பெரிதாக இருந்த சோற்றினைப் பார்த்த அழகிரி கோபமுற்றார். சாப்பிட்ட கையை உதறிவிட்டு வேகமாக எழுந்தார். இதனைப் பார்த்த அய்யா, அப்பா அழகிரி இதுவரை மல்லிகைப்பூ, இப்போது ரோசாப்பூ என்றதும் அனைவரும் சிரித்தனர். மேலும் அய்யா, அழகிரிக்கு இரண்டு சாத்துக்குடிப் பழம் கொடுங்கள். பசியும் தணியும் சினமும் போய்விடும் என்றாராம்.

@@@@@

தண்ணீரும் மோரும்!

ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவர் அய்யாவிடம் பேட்டி காண வந்தார். வந்தவருக்குக் காப்பி கொடுக்கச் சொன்னார் அய்யா. நான் இப்ப இங்க காப்பி சாப்பிடுகிறேன். போன தலைமுறையில் இது நடந்திருக்குமா? நான் ஆச்சாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் என்றார் வந்தவர். புன்முறுவல் பூத்த அய்யா, இப்போது காபி சாப்பிடுகிறீர் என்றால் என் பிரச்சார மாற்றம்தானே! என்றார்.

மேலும் அய்யா, பல வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ப்பன நண்பர் - குடும்ப நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஏதாவது சாப்பிடுங்கள் தாகமாக வந்திருப்பீர்களே என்றேன். ஒன்றும் வேண்டாம் என்றார் நண்பர். கொஞ்சம் வற்புறுத்தவே, சரி மோரும் தண்ணீரும் கொடுங்கள் என்றார். கொடுத்தோம்.

மோரில் சிறிது நீரைச் சேர்த்துச் சாப்பிட்டார். எதற்காக மோரில் நீரைக் கலந்து சாப்பிட்டீர்கள் என்றேன். மோரில் நீர் கலந்தால் மோர் சுத்தமாகிவிடும் அதனால்தான் என்றார். நீரும் மோரும் எங்கள் வீட்டிலே இருந்தது. எங்க வீட்டு மோரை எங்க வீட்டுத் தண்ணீரே சுத்தப்படுத்துமா என்று கேட்டேன் என்றார். பேட்டி காண வந்தவர் தனது மடைமைத்தனத்தை நினைத்து தலைகுனிந்து சிரித்தாராம்.

நாகம்மையார் மரணமடைந்தபோது உள்ளே சென்று பார்க்கச் சென்றவர்களைப் பார்த்து, யாரும் அழக்கூடாது. அழுவதால் இறந்தவர் மீண்டு வரப் போவதில்லை. அமைதியாகச் சென்று பார்த்து வாருங்கள் என்றார் அய்யா. மேலும், அவரது உடல் அடக்கத்தினைப் புதுமையான முறையில் செய்தார். நாகம்மையாரின் உடலினை ஒரு பெட்டியில் வைத்து (முஸ்லிம் முறை) மாடு பூட்டிய வண்டியில் எடுத்துச் சென்று (கிறித்துவ முறை) எரியூட்டி (இந்துமுறை) ஒற்றுமையினைப் புகுத்தி சமத்துவம் கண்டார் அய்யா.

@@@@@


அய்யாவின் தாடி ரகசியம்

ஒரு நாள் இரவு அய்யாவின் வீட்டு மாடியில் அவரது நண்பர்கள் அய்யா தாடி வளர்ப்பது ஏன் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முக அழகுக்காக தாடி வளர்ப்பதாக என்னிடம் அய்யா சொன்னார் என்றார் மாயவரம் நடராசன். எஸ்.வி.லிங்கமோ, இல்லையில்லை ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் என்று என்னிடம் கூறினார் என்றார். உடனே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், சவரச் செலவு தினமும் நாலணா மிச்சமாகிறது என்றாரே என்னிடம் என்றதும், பட்டுக்கோட்டை அழகிரி, கொஞ்ச நேரம் என்றாலும் இன்னொரு வரிடம் தலைகுனிந்து உட்காருவது தன்மானக் கேடாக உள்ளது என்றாரே என்னிடம் என்றார்.

மேடைஏறி பலரைத் தாக்கித் திட்டும்போது, போனால் போகிறான் கிழவன், வயதானவன் என்று விட்டுவிடுவார்கள் என்று என்னிடம் கூறினாரே என்றார் பூவாளூர் பொன் னம்பலனார். அப்போது கி.ஆ.பெ.விசுவநாதம், தூங்குங்கள் நாளை உங்களுக்கு உண்மையான காரணத்தை அய்யாவிடமே கேட்டுச் சொல்கிறேன் என்றார்.

மறுநாள் அய்யாவிடம் தாடியின் ரகசியம் கேட்டுவிட்டு, தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டேன். தானாக வளர்ந்துவிட்டது. வேறெதுவும் காரணம் இல்லை என்று அய்யா கூறியதாக அனைவரிடமும் கூறினார். அப்போது கருகுடி சின்னையா பிள்ளை, இன்னும் யார் யாரிடம் என்னென்ன காரணங்கள் சொல்லியுள்ளாரோ அதையும் கேட்டு அனைவரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

ஒருமுறை ரயில் நிலையத்திலிருந்து வந்தபோது எதிரில் வந்த ஒருவர் அய்யாவைப் பார்த்து, நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, எனக்கு பிளேடு செலவு மிச்சம், உனக்கு என்ன நஷ்டம் என்று கூறியுள்ளார்.

தமிழிசை ராஜா அண்ணாமலை (செட்டியாரும்), ஆர்.கே. சண்முகம் (செட்டியாரும்) தமிழிசை இயக்கம் தொடங்கி அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். பல லட்சம் செலவு செய்தனர். வீண் விரயம் செய்வதைக் கண்டித்து அய்யா கூட்டத்தில் பேசினார்.

மருமகனுக்குப் பல் தேய்க்க சோம்பேறித்தனம். பல் தேய்க்கும்படி மருமகனிடம் சொல்ல வெட்கப்பட்டார் மாமியார். ஒரு யுக்தி தோன்றியது மாமியாருக்கு. கரும்பு மென்று தின்றால் பல் சுத்தமாகுமே என்று நினைத்து, மாப்பிள்ள இந்த ஊர்க் கரும்பு ரொம்ப ருசியாக இருக்கும். ஒரு பணத்துக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள் என்று கூறி பணமும் கொடுத்து அனுப்பினார். மாப்பிள்ளையோ பணத்தை வாங்கி எள்ளுப் புண்ணாக்கு வாங்கித் தின்றுவிட்டு பல்லை மேலும் கேவலமாக்கி வந்து நின்றார். மாமியாருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதுபோலல்லவா இந்தத் தமிழிசைக் கிளர்ச்சியும் ஆகியுள்ளது. தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவு உணர்வு தோன்றிவிடுமானால் தமிழிசை தானாக வளர்ந்துவிடும் என்றார்.

(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து)

ஆத்திகத்தின் சலசலப்புக்கு அஞ்சிவிடுமா நாத்திகம்? - 2

விலக்கப்பட்ட கனியைப் படைத்தது ஏன்?


குறிக்கோள் உண்டாமே?

நாத்திகர்கள் எல்லாமே குறிக்கோளின்றி குருட்டாம்போக்கில் வந்ததென்று நம்பு கிறார்கள். ஆத்திகர்களோ, புத்திக்கூர்மையுள்ள காரணகர்த்தா இருக்கிறார் என நம்புகிறார்கள் என எழுதியுள்ளார்.

உலகிலுள்ள உயிரற்ற, உயிருள்ள அனைத்தும், படிப்படியாக பரிணாம வளர்ச்சிப் படிநிலையில் உருமலர்ச்சி பெற்றது.

நுண்ணிய ஆற்றலிலிருந்து பேரண்டம் (Universal) எவ்வித நோக்கமுமின்றி இயற்கைப்போக்கில் தானாகவே உண்டானது; அதுபோல, வைரஸ், பாக்டீரியாவிலிருந்து ஒரு செல் (Cell) உயிரிலிருந்து படிப்படியாக உருமலர்ச்சி பெற்று சடுதி மாற்றம் (Mutation) காரணமாக..... மனிதர்வரை மாற்றம் பெற்று வந்துள்ளது என்று, நாத்திகர்கள்அறிவியல் நெறிப்படி குறிக்கோள் எதுவுமின்றி உண்டானவை என்று கூறி வருகின்றனர்.

இவர்கள்தான் சொல்லட்டுமே?

ஆனால், இந்த ஆத்திகப் பேரறிவாளர் (?)களோ குறிக்கோளோடு படைக்கப்பட்டது; புத்திக்கூர்மையுள்ள கடவுளால் படைக்கப் பட்டது என்று கிளிப்பிள்ளைப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிக்கோளோடு புத்திக்கூர்மையுள்ள கடவுள் படைத்தார் என்று உளறிக் கொட்டித் தீர்க்கும் இவர்கள் என்ன குறிக்கோளோடு படைத்தார் என்று சொல்ல வேண்டாமா? சொல்ல முடியுமா? சொன்னார்களா இதுவரை? இனியும்தான் சொல்வார்களா?

ஞானப்பழத்தைப் பிழிந்து....

கடவுள் புத்திக்கூர்மையுள்ளவராமே? நல்ல நகைச்சுவை! இவரது நுண்ணறிவுக்கு, புத்திகூர்மைக்கு ஒரே ஒரு சான்றினை மட்டும் பார்ப்போமா?

விலக்கப்பட்ட கனிபற்றி புத்திக் கூர்மையுள்ள கடவுள் கர்த்தர் ஆதாமிடம் என்ன சொன்னார்? நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்! _ (ஆதியாகமம் -2-17)

ஆதாம், ஏவாளின் சொல்லைத் தட்டாது அந்த மரத்தின் கனியை உண்டார்.

விலக்கப்பட்ட பொருளை - சாகடிக்கும் அளவுக்கு நஞ்சுடைய கனியைக் கர்த்தர் ஏன் படைக்க வேண்டும்? தேவையில்லாமல் படைத்துவிட்டு அதனை முதல் மனிதர் உண்ணக்கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும்? நம் ஆணையை ஆதாம் மீறுவான் என்ற முன்னறிவு கர்த்தருக்குக் கிடையாதா? நுண்ணறிவு இவ்வளவுதானா? இதுதான் கர்த்தரின் புத்திக்கூர்மையா? வெட்கம்! வெட்கம்!

கற்பனையாம்! கட்டுக்கதையாம்!

மைக்கேல் டென்டன் என்பவர், தம்முடைய பரிணாமம் - சர்ச்சையிலுள்ள ஒரு கோட்பாடு (ஆங்கிலம்) என்ற நூலில், பரிணாமக் கோட்பாடு ஒரு முக்கியமான விஞ்ஞானக் கோட்பாடாக இருப்பதற்குப் பதிலாக, அந்தக் காலத்து ஜோதிடர்களின் கற்பனைபோலவே இருக்கிறது; நம் நாளில் உள்ள பிரபலமான கட்டுக்கதைகளில் ஒன்று டார்வினின் பரிணாமக் கோட்பாடு என்பதாகக் குறிப்பிட்டுள்ளது கட்டுரையின் ஒரு பகுதி, டார்வினின் பரிணாமக் கோட்பாடு கட்டுக்கதையாம்! ஜோசியக் கற்பனையாம்!

போப் ஏன் அங்கீகரித்தார்?

ஜோசியர்களின் கட்டுக்கதை எனக் கூறும் இந்தக் கோட்பாட்டை ஏன் ரோமிலுள்ள போப் ஜான்பால் அங்கீகரிக்க வேண்டும்? ஃபோண்டிபிகல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்று 5.10.1996 நாளிட்ட செய்தியில், புதிய அறிவு, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தினை அங்கீகரிக்கச் செய்கிறது. டார்வின் கொள்கைகளைப் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

(செய்தி: The Hindu - 26/10/1996).

“With a formal statement sent to the pontifical Academy of Science on Wednesday, the Pope John Paul said that fresh knowledge leads to recognition of the theory of evolution as more than a hypothesis” -
(The Hindu. 26/10/1996).

மாற்றம் பெற்ற போப் மனநோயாளியா?

வெறும் ஜோசியக் கட்டுக்கதை யாயிற்றே, டார்வின் பரிணாமக் கோட்பாடு, அப்படியிருக்க அதனை ஏன் பரிணாமக் கோட்பாடு (Theory) என்றும், அதனைப் புதிய அறிவுபெற கல்வி நிலையங்களில் கற்பிக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்ப வேண்டும்?

ஜோசியக் கட்டுக்கதை என்று மைக்கேல் கென்டன் கூறியுள்ளாரே, யாராவது கட்டுக்கதையைப் பள்ளிகளில் பயிற்ற வேண்டும் என்பார்களா? போப்பாண்டவர் அறிவு அற்றவரா? அல்லது மனநோயாளரா? இதனை, மைக்கேல் டென்டனும், விழித்தெழு இதழின் கட்டுரையாளரும் விளக்க வேண்டும்! என்ன பிதற்றல்!

பாமரத்தனமான பல்கலைக்கழகப் பேராசிரியர்

ஒரு காலத்தில் நாத்திகராக இருந்து இப்போது கடவுள் நம்பிக்கையாளராக மாறிவிட்டராம் பிராக் நகரிலுள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபிராண்டீ ஷேக் விஸ்கோசில், தமது மாற்றத்திற்கான காரணங்கள் பலவற்றைக் கூறியுள்ளாராம். அவை அத்தனையும் ஒரு பேராசிரியருக்குரிய விளக்கமாகத் தெரியவில்லை. பொருந்தாக்கூற்றாக _பாமரனின் விளக்கமாகத்தான் தெரிகிறது. அவற்றுள் ஒன்றை மட்டும் பார்ப்போம்!

படி, படி, பைபிள்படி!

உயிரினங்களின் தோற்றம் பற்றிய ரஷ்யாவின் பிரபலமான விஞ்ஞானியின் சொற்பொழிவில் கலந்து கொண்டாராம் இவர் 1970இல். அவர் உயிரினத் தோற்றம் பற்றிப் பதில் தெரிய வேண்டும் என்றால் பைபிளைப் படியுங்கள். முக்கியமாக, ஆதியாகமத்தில் படைப்பைப் பற்றிச் சொல்லியிருக்கிற தகவலைப் படியுங்கள் என்றாராம். அவரும் படித்தாராம்... புரிந்து கொண்டாராம்! என்ன வேடிக்கை! என்ன கோமாளித்தனம்! என்ன பைத்தியக்காரத்தனம் பார்த்தீர்களா? இவர் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர்!

படைப்புபற்றி பைபிள் பகர்வது:

பைபிள் ஆதியாகமத்திலுள்ள உயிரினத் தோற்றம் பற்றித்தான் தெரிந்து கொள்வோமே! இல்லை, நினைவுபடுத்திக் கொள்வோமே? பைபிள் ஆதியாகமப்படி,

முதல் இரண்டு நாட்களில், பகல், இரவு, வானம், இவற்றைப் படைத்தார் கர்த்தர்.

3ஆம் நாள்: புவி, கடல், புல், பூண்டு, கனிமரங்கள்.

4ஆம் நாள்: சூரியன், சந்திரன், விண்மீன்கள்

5ஆம் நாள்: நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள்.

6ஆம் நாள்: காட்டு விலங்குகள், ஊர்வன.

கடைசியில், முதல் மனிதன் ஆதாம், முதல் மனுசி ஏவாள் (Adam and Eval) படைத்தார் கடவுள்.

பரிதிக்கு முன் பயிருயிரியா?

3ஆம் நாள்: புல், பூண்டு, மரங்களைப் படைத்தாராம். 4ஆம் நாள்தான் சூரியனைப் படைத்தாராம். சூரியன் இல்லாமல், ஒளிச்சேர்க்கை இல்லாமல், மாவுச்சத்து (Starch) உருவாக்காமல் தாவரம் தழைக்க முடியுமா? பைபிள் ஆதிகயாகமம் சொல்வது அறிவியலுக்கு அடிப்படையாமே! பினாத்தலாக இல்லை? கோடிக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் பேரண்டம், விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் உண்டானவை என அறிவியல் கூற, இவற்றை வெறும் ஆறே நாளில் ஆண்டவர் படைத்தாராமே? இது எந்த வகை அறிவியல்?

பாக்டீரியா - வைரஸ் பற்றி பைபிளில் இல்லையே?

பிற உயிரினங்கள் படைக்கப்பட்டனவே, வைரஸ், (Virus), பாக்டீரியா (Bacteria) இவற்றை ஆண்டவர் படைக்கவில்லையா? யார் படைத்தது? இவைபற்றி மூச்சு_பேச்சு இல்லையே பைபிள் ஆதியாகமத்தில்? ஏன்? இவற்றைப்பற்றி அறிவியல் என்ன கூறுகிறது? பாக்டீரியா மிகவும் எளிமையான உட்கரு செல் (cell), நுண்ணுறுப்புகள் இல்லாத தொன்மையான செல் ஆகும்.

ஒரு செல் பச்சைப்பாசிகளிலிருந்து, பச்சையத்தை (Chlorophil) இழந்து பரிணாமத்தில் சாறுண்ணி (அ) ஒட்டுண்ணி வாழ்க்கைக்கேற்ப தகவமைப்புகளைப் பெற்று பாக்டீரியா உருவாக்கியிருக்கலாம் என்கிறது அறிவியல்.

வைரஸ் எனப்படுவது ஒரு சாதாரண உயிரியைப்போல செயல்படுவது அன்று: அது, தனித்து இருக்கும்போது. உயிரற்றதனைப் போலவும், ஒரு செல்லினுள்ளோ பாக்டீரியாவினுள்ளோ நுழைந்து செயல்படும்போது உயிருள்ளது போலவும் இயங்கும்.

விழித்தெழு ஏடு விடையளிக்குமா?

இவைபற்றி, பைபிள் ஆதியாகமம் சொல்லவில்லையே, ஏன்? பேராசிரியர் விஸ்கோசில் ஆவது பதில் சொல்வாரா? ஆதியாகமம் பயின்றவராயிற்றே அவர்? அல்லது, விழித்தெழு இதழாவது விடை சொல்லுமா? சொல்லத் தெரியாவிட்டால் இப்படியெல்லாம் எழுதாமல் அடங்கிப்போகுமா? அதுதான் அதற்கும் நல்லது; அனைவருக்கும் நல்லது! விரிவஞ்சி, முதன்மையான சில கருத்துகளுக்கு மட்டுமே மறுப்பு வரைந்துள்ளோம். வேண்டாத இந்த வேலையை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமா, விழித்தெழு இதழ்? இல்லையேல், நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ளும்! வசதி எப்படி?

-------------- பேராசிரியர் ந. வெற்றியழகன் அவர்கள் ”உண்மை” செப்டம்பர் 15-30 2011 இதழில் எழுதிய கட்டுரை

25.9.11

கி.வீரமணி கூட்டத்தில் கல்வீச்சு - ஆர்.எஸ்.எஸ். காலிகளின் வன்முறை

காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டம்

காந்தியை கொன்ற, மத்திய அரசாலே 3 முறை தடை செய்யப்பட்ட

காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டம்

ஜாதி ஒழிய சமத்துவ சமுதாயம் மலர பாடுபடுகின்ற எங்கள்மீது

கற்களை, டியூப்லைட்டுகளை வீசி தாக்குவதா?

தமிழர் தலைவர் கண்ணியத்துடன் எழுப்பிய கேள்வி

கூட்டத்தினர் மீது கல்வீச்சு நடந்தபோது பரபரப்பு... (விருகம்பாக்கம், 24.9.2011)

தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர் (விருகம்பாக்கம், 24.9.2011)

காந்தியைக் கொன்ற, 3 முறை மத்திய அரசாலே தடை செய்யப்பட்ட, காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்றக் கூட்டம் மக்கள் அறிவு பெற, நாட்டில் மனிதநேயம் மலர்ந்தோங்கிட ஜாதியை ஒழித்து சமத்துவ சமுதாயம் மலர பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற எங்கள் கூட்டத்தில் கல்வீசி தாக்குவதா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விளக்கவுரை யாற்றினார்.

சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ்.காலிதத்தனம்

எப்படியாவது திராவிடர் கழக பொதுக் கூட்டத்தை நிறுத்த வேண்டும். திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி பேசுவதை தடுத்து நிறுத்தி முறியடிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி அமைப்பினர் பா.ஜ.க.வினர் ஆகியோர் திட்டமிட்டு வன்முறை கலவரத்தில் கூட்டம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை தொடர்ந்து ஈடுபட்டனர். கூட்டத்தில் கற்களை வெளியில் இருந்து பல முறை வீசினர்.

கல்வீச்சு, டியூப்லைட் தாக்குதல்

பொதுக்கூட்டத்திற்கு போடப்பட்டிருந்த டியூப்லைட்டுகள் சுமார் 5க்கும் மேற்பட்டவைகளை உடைத்தெறிந்தனர். இப்படிப்பட்ட பதற்ற மான சூழ்நிலையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சுமார் முக்கால் மணிநேரத்திற்கு மேல் மனிதநேயத்துடன் அதே நேரத்தில் ஆவேசமாகவும் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரையில் கூறியதாவது:


இன்றைக்கு இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய 133ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காவல்துறையினருடைய அனு மதியோடு ஏற்பாடு செய்து நடைபெற்றுக்கொண் டிருக்கின்ற இந்த கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பொதுக்கூட்டம் நடைபெறக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள், பி.ஜே.பி.யினர் திட்டமிட்டு பொதுக்கூட்டத்தில் கற்களை வீசியிருக்கிறார்கள்.

எனக்கு கறுப்புக்கொடியா?

அது மட்டுமல்ல. நான் இந்த பொதுக்கூட்டத் திற்கு வரும் பொழுதே எனக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்திருக்கிறார்கள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கூட என்னிடம் கேட்டார். நீங்கள் வரும்பொழுது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் உங்களுக்கு கறுப்புக்கொடி காட்டினார்களா? என்று கேட்டார்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை என்று சொன்னேன்.

இன்று ஒரு நாளில் மட்டும் பல நிகழ்ச்சிகள்

நான் காலையில் வேலூருக்குச் சென்று அங்கு அய்யா அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் வேலூர் வி.அய்.டி பல்கலைக் கழக வேந்தர் விசுவநாதன் அவர்களுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிவிட்டு மாலை சென்னைக்கு வந்து பெரியார் திடலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு அவசரமாகப் புறப்பட்டு இந்த மேடைக்கு வந்து சேர்ந்தேன் என்பதை நண்பர் சுப.வீரபாண்டியனிடம் கூறினேன்.

வெளியே கிளம்பும்போதே செலவு கணக்குதான்

ஒன்றைத் தெளிவாக இந்தக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். நாங்கள் கறுப்புச்சட்டை அணிந்துகொண்டு வெளியே வரும்பொழுதே உயிரை துச்சமென மதித்து வந்துதான் நாள்தோறும் மக்களைத் திருத்த அவர்களை அறிவாளிகளாக்க அவர்களுடைய வாழ்வு முன்னேற பாடுபட்டுக்கொண்டு வருகின் றோம்.

நாங்கள் வீட்டை விட்டு வரும்பொழுதே திரும்பி வரமாட்டோம். சென்றால் செலவு கணக்கு திரும்ப வீட்டிற்கு வந்தால்தான் வரவுக்கணக்கு என்று தான் எங்களுடைய பொதுத்தொண்டை நாள்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

உயிரை துச்சமென கருதக்கூடியவர்கள்

இங்கே என்னை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இங்கே அமர்ந்திருக்கின்ற தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆனாலும், எங்கள் கழக பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆனாலும், அல்லது எங்களுடைய தோழர்கள் எவராக இருந்தாலும் உயிரை துச்சமாக கருதக் கூடியவர்கள்.

இந்த இயக்கமே எதிர் நீச்சலில் வளர்ந்த இயக்கம் . தந்தை பெரியார் அவர்களே எதிர் நீச்சலில் தனது வாழ்நாள் முழுக்க பிரச்சாரம் செய்து மக்களுக்காக பாடுபட்டார்.

பெரியார் அவர்கள் மறைந்து 38 ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கு தந்தை பெரியாருடைய கொள்கைகள், இலட்சியங்கள் உலகம் முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கின்றன.

பெரியார் ஒரு சகாப்தம்

பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும் பொழுது பெரியார் ஒரு சகாப்தம் அவர் ஒரு திருப்பம், அவர் ஒரு காலகட்டம் என்று சொன்னார்.


ஏதோ இங்கே கல்வீசி இந்த கூட்டத்தை கலைத்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். அய்யா அவர்கள் மீது கல்வீசி காலித்தனங்கள் செய்த எத்த னையோ சம்பவங்கள் உண்டு.

கற்காலத்தில்தான் வாழுகிறீர்களா?

நாம் கற்காலத்தில்தான் வாழுகிறோமா? அல்லது தற்காலத்தில் வாழுகிறோமா? உங்களை எல்லாம் கற்காலத்திலிருந்து விடுவித்து பொற்காலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற் காக எங்களுடைய உயிரைக் கொடுத்து நாள்தோறும் அறிவுப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.

அழகிரியே உரத்துப் பேசு

பட்டுக்கோட்டை அழகிரி கூட்டத்திலும் கற்கள் வந்து விழும். அப்பொழுது அவர் சொல்லுவார். கற்கள் வந்து விழவிழ அழகிரியே இன்னும் உரத்துப் பேசு, அழகிரியே இன்னும் நெஞ்சை நிமிர்ந்துப் பேசு என்ற எண்ணம் தான் வரும் என்று பேசுவார்.

உனக்குத் தெளிவிருந்தால் எங்களுடன் இதே இடத்திற்கு வந்து வாதம்செய். எங்களுடைய கருத்துகளை சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு. உனக்கு தைரியம் இருந்தால் தெளிவு இருந்தால் இதே இடத்தில் பொதுக்கூட்டம் போட்டு பதில் சொல்.
எனதருமை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சகோதரர்களே நீங்கள் அந்த அமைப்பு களில் புரியாமல் இருக்கிறீர்கள்.

பார்ப்பனர் ரத்தம் குடிக்கப் பார்க்கின்றனர்

பார்ப்பன நரிகள் நம்மை முட்டவிட்டு ஆரிய நரிகள் ரத்தம் குடிக்கப் பார்க் கின்றன. இது உங்களுக்கு புரியவில்லை. நீங்களும் ரத்தம் சிந்தக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் நாங்கள்.

ஏதோ எங்கள் மீது கற்கள் வந்து விழுந்தால் நாங்கள் ஓடிப்போய்விடுவோமா? அல்லது கூட்டத்தை நிறுத்தி விட்டு ஓடிப்போய்விடுவோமா?

எங்கள் மீது கற்கள் வீசினால் கூட்டம் நின்றுவிடுமா?

நீங்கள் எங்கள் மீது கற்களை வீசினால் அதனால் கூட்டம் நின்றுவிடும் என்று மட்டும் கருதாதீர்கள். ஆர்.எஸ்.எஸ். நண்பர்களே, உங்களுக்குத் தவறான வழிகளை காட்டிக்கொண்டிருக்கிறார் கள். நீங்கள் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறீர்கள்.


நாங்கள் எதையும் அறிவுப் பூர்வமாக அணுகுகிறவர்களே தவிர, உணர்ச்சிப் பூர்வமாக அணுகக் கூடியவர்கள் அல்ல

கருத்தை கருத்தாலே சந்திக்கக் கூடியவர்கள்

நாங்கள் கருத்தை கருத்தாலே சந்திக்கக் கூடியவர்கள். வன்முறையிலே நம்பிக்கை இல்லாதவர்கள். உங்களுக்கு அறிவு நாணயம் இருந்தால் நாங்கள் பேசிய இன்ன கருத்து தவறு என்று சொல்லுங்கள். எங்களைப் பொறுத்த வரை இனம் இனத்தோடு மோதக் கூடாது என்று கருதக்கூடியவர்கள். நாளையே ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கூட திருந்தக் கூடும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள்.

திருந்து அல்லது திருத்து

தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவமே திருந்து அல்லது திருத்து என்பதுதான். நாங்கள் தவறான கருத்துகளைச் சொன்னால் எங்களைத் திருத் துங்கள். எங்கள் கருத்து சரியானது என்று புரிந்துகொண்டால் நீங்கள் திருந்தி விடுங்கள். எந்த கேள்விகளுக்கும் என்றைக்கும் பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கின்றவர்கள். நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள். கடைசி மூடநம்பிக்கையாளர் இருக்கிற வரை, கடைசி பார்ப்பனர் ஆதிக்கம் இருக்கிறவரை, தந்தை பெரியார் கொள்கைக்கு வேலை உண்டு. அண்ணா சொல்லுவார். பெரியாரின் போர் முறை எப்படிப்பட்டது என்று சொல்லும்பொழுது சொல்லுவார். கண்ணுக்குத் தெரியாத மூலபலத்தை முறியடிப்பது தான் பெரியாரின் போர் முறை என்று சொல்லுவார். உலகத்தி லேயே வேறு எந்த நாட்டில் இங்குள்ளது போல் வர்ணாஸ்ரம தர்மம்-குலதர்மம் இருக்கிறது? எந்த நாட்டில் ஜாதி உண்டு?

எந்த நாட்டிலாவது ஜாதி உண்டா? பிறக்கும் பொழுதே ஒருவன் பார்ப் பானாகப் பிறக்கின்றான். பிறக்கும் பொழுதே இன்னொருவன் பறையனாகப் பிறக்கின்றானா? இல்லையே.

ஜாதி ஒழிந்த சமுதாயம் மலரவேண்டும். சமத்துவ சமுதாயம் பூத்துக் குலுங்க வேண்டும். என்பதற்காகத்தான் நாங்கள் வாழ்நாள் முழுக்க பாடுபட்டுக்கொண்டு வருகின்றோம்.

இந்து மதத்தை மட்டும்தானே நீங்கள் பேசுகிறீர்கள்? ஏன் இஸ்லாம் மதத்தைப் பற்றி பேச வில்லை? ஏன் கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றிப் பேசவில்லை என்று எண்ணலாம். அழுக்கு எங்கே இருக்கிறதோ அங்கு சோப்பு போட்டு தேய்த்துக்குளிக்கின்றோம்.

நீங்கள் கூட்டுங்களேன் அந்த குப்பையை!

எங்கே குப்பை இருக்கிறதோ அந்த இடத்தை கூட்டுகின்றோம். அடுத்த வீட்டில் குப்பை இருக்கிறதே என்று சொன்னால் அந்த குப்பையை நீங்கள் போய் கூட்டுங்கள்.

உங்களுடைய இந்து என்ற சொல் என்ன தமிழ் மொழிச்சொல்லா? இந்த நாட்டுக்கே சம்பந்தமில்லாத சொல். கைபர் போலன் கணவாய் வழி வந்த வர்கள் இந்து மதம் என்று பெயர் வைத்தார்கள். இந்து மதம் என்றால் அது வேதமதம். பார்ப்பன மதம், சனாதன மதம் என்றுதான் பெயர்.

எங்களைப் பற்றி எழுதுவார்கள். ஜெயிலுக்கும், பெயிலுக்கும் புதுச்சேரியில் அலைந்து கொண்டிருக்கின்ற சங்கராச்சாரியாரைப் பற்றி எழுத மாட்டார்கள்.

சூத்திரன் என்ன பாரத ரத்னா பட்டமா?

உன்னுடைய மனுதர்மத்தில்தானே உன்னை சூத்திரன் என்று சொல்லப் பட்டிருக்கிறது. சூத்திரன் என்றால் தாசி மகன் என்று பொருள். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வில் இருக்கின்ற தோழர்களே சூத்திரன் என்றால் அது பாரத ரத்னா பட்டம் என்று கருதுகிறீர்களா?


ஆதாரத்துடன் சொல்லுகின்றோம். உன்னுடைய மனுதர்மத்தில் 412 ஆவது சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதே. இதைப் பார்த்து எங்களுக்கு ரத்தம் கொதிக்கிறது. உங்களுக்கு அறிவையும், மான உணர்வையும் ஊட்ட நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

பெரியாரால் படித்தோம்

தந்தை பெரியார் வகுப்புவாரி உரிமை இடஒதுக்கீட்டால்தான் இன்று பல வெளிநாடுகளில் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பெரியாருடைய உழைப்பு அல்லவா காரணம். உலகில் அடிமையாக வாழ்ந்த நீக்ரோக்களுக்குக் கூட சூத்திரன் என்ற இப்படிப்பட்ட ஒரு அவமரியாதை ஏற்பட்டதில்லையே!

உன்னுடைய குலதர்மம் இருந்திருந்தால் உன்னுடைய பிள்ளை படிப்பதற்கு வாய்ப்பும், வெளிநாட்டில் கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆவதற்குரிய வாய்ப்பும் கிடைத்திருக்குமா? குலதர்மக் கல்வியை ஒழித்தவர் தந்தை பெரியார் அல்லவா?

எதிர்ப்பு-சலசலப்பு எல்லாம் எங்களிடம் நடக்காது

உங்களுடைய எதிர்ப்பு சலசலப்பு என்பதெல்லாம் கருப்புச்சட்டைக்காரர் களிடம் நடக்காது. நாங்கள் காவல் துறையை மதிக்கிறவர்கள். நாங்கள் சட்டத்தை மதிக்கிறவர்கள். நீங்கள் வன்முறையிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்.

கொத்து கொத்தாக கற்களைவீசி, டியூப்லைட்டுகளை உடைத்து இந்தக் கூட்டத்தை கலைத்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது நடக்காது. நாங்கள் மதவெறியை ஒழித்து மனித நேயத்தைப் பரப்புகிறவர்கள்.

3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம்

உங்களுடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்த நாட்டிலே மூன்று முறை தடைசெய்யப்பட்ட இயக்கம். காந்தியை கொன்ற கோட்சே யார்? ஆர்.எஸ்.எஸ். காரன் அல்லவா? நான் கீதையைப் படித் தேன். வன்முறைக்கு ஆயத்தமாக வேண் டும் என்று சொல்லப்பட்டிருக் கின்றது.

எனவே காந்தியை கொன்றது தவறு அல்ல என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவன் கோட்சே. டில்லியில் காம ராஜரை உயிரோடு எரிக்க முயன்ற கூட்டத்தினர்தானே ஆர்.எஸ்.எஸ் சங்பரி வார் கூட்டம்.

அம்பேத்கர் விசன் வடநாட்டிலிருந்து அம்பேத்கர் விசன் என்ற பத்திரிக்கையில் 30 பக்கங்களுக்கு மேல் இந்தியில் பாராட்டி அவருடைய கருத்துகளை எழுதியிருக்கின்றார்கள். பெரியாருடைய படத்தை அட்டையிலே போட்டிருக்கின்றார்கள்.


பெரியார் அவருடைய இளமைக் காலத்தில் காசிக்கு சந்நியாசியாகச் சென்றார். ஆனால் இன்றைக்கு அதே காசியில் பெரியார் ஒரு தத்துவ கர்த்தா வாக வரவேற்கப்படுகின்றார்.

பெரியார் மூச்சுக்காற்று

எனவே ஆர்.எஸ்.எஸ். நண்பர்களே, பி.ஜே.பி., நண்பர்களே நீங்கள் இருட்டில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு அறிவு வெளிச்சத்தைக் கொடுப்பவர் பெரியார்.

பெரியார் என்பவர் மூச்சுக் காற்று போன்றவர் அந்த மூச்சுக் காற்றை நீங்கள் மறுக்க முடியாது. கலைஞர் அவர்கள் ஆட்சியில் அறிவித்த தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதனைக் கொண் டாடக்கூடாது என்று ஒரு பண்பாட்டு படை எடுப்பு இப்பொழுது உள்ளே புகுந்திருக்கிறது. மனிதநேய அடிப்படையில் சொல்லு கின்றோம். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் உயிர் ஊசலாடுகிறது. இப்பொழுது உலக அளவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு வருகிறது.

அவர்களை மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். அவர்களது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்படவேண்டும். 30 கல் தொலைவிலே தமிழினம் அழிக்கப் பட்டதே அவர்கள்இந்துக்கள் இல்லையா?

கலைஞர் ஆட்சி

தமிழின உணர்வைப் பற்றி சகோதரர் பழ.நெடுமாறன் அவர்களும், சுப. வீர பாண்டியன் அவர்களும் பேசினார்கள். அதற்காக அவர்கள் சிறை வைக்கப்பட் டார்கள்.

அடுத்து கலைஞர் ஆட்சி வந்தது. நாங்கள்தான் பொதுக்கூட்டத்திலே சொன்னோம். கோயில் பூட்டுக் கதவையே (அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்) திறந்தவர் முதல்வர் கலைஞர். இவர்களுடைய பூட்டையும் திறக்க வேண்டும். என்று கேட்டோம். அதற்குப் பிறகு வெளியே வந்தார்கள். அவர்களுக்கும் போடப் பட்டிருந்த வாய்ப்பூட்டும் அகற்றப்பட் டது.

இனிமேல் அடிக்கடி இந்த பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவோம். இத்தோடு நின்றுவிடமாட்டோம்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ். காலிகளின் வன்முறைக்கு கழகத் தோழர்களைக் கைது செய்வதா?


விருகம்பாக்கம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். காலிகளின் வன்முறைக்கு கழகத் தோழர்களைக் கைது செய்வதா?


  • காவல்துறையினரின் போக்கு கண்டிக்கத்தக்கது
  • கழகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொதுச் செயலாளர் அறிக்கை

விருகம்பாக்கத்தில் நேற்று (24.9.2011) மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். காலிகள் மேற்கொண்ட வன்முறை குறித்தும், காவல் துறையினர் நடந்துகொண்ட போக்கு குறித்தும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங் குன்றன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியார் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சென்னை விருகம்பாக்கத்தில் , உரிய காவல் துறை அனுமதி பெற்று நேற்று மாலை (24.9.2011) சிறப்பாக நடைபெற்றது. திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசையோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கழகத் தோழர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர் களும், பொது மக்கள் உள்பட ஏராளமானோர் திரண் டிருந்தனர்.

கூட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை வகித்தார். சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.ரா. இரத்தினசாமி, செயலாளர் வே. ஞானசேகரன், தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோரின் பேச்சைத் தொடர்ந்து, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு. சுப.வீரபாண்டியன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தை நோக்கி கற்கள் வந்து விழுந்தன. கழகத் தோழர்களும், பொதுமக்களும் பதற்றம் அடைந்தனர். கொந்தளிப்பான சூழ்நிலையில் தோழர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் - குற்றவாளிகளைக் காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் - கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதுதான் நமக்கு முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறினார். ஒலிபெருக்கியிலும் அவ்வாறே கூறப்பட்டது.

தோழர்களும் கட்டுப்பாட்டோடு கூட்டம் நடத்துவதில் கவனமாகவே இருந்தனர்.

தொடர்ந்து பேசினார் கழகத் தலைவர்

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் மீண்டும் கூட்டத்தை நோக்கிக் கற்கள் வீசப்பட்டன. ஒரு கும்பல் கையில் கற்களோடும், கம்புகளோடும் உடைந்த டியூப்லைட்டுகளிலும் மேடையை நோக்கி வந்து கொண் டிருந்தது. கம்புகளையும் உடைந்த டியூப்லைட்டுகளையும் கற்களையும் மேடையை நோக்கி வீசினர். ஆனால் கூட்டத்தை நிறுத்தாமல் கழகத் தலைவர் விளக்கம் கொடுத்துப் பேசிக் கொண்டேயிருந்தார்.

எங்கள் கருத்தைக் கூட்டம் போட்டு பேசிக் கொண்டி ருக்கிறோம். நாங்கள் பேசியதில் தவறு இருந்தால், நாளை இதே இடத்தில் நீங்கள் கூட்டம் போட்டு பதில் சொல் லலாம். நாங்கள் நாளை மறுநாள் அதற்கு பதில் சொல் லுவோம். ஜனநாயக உரிமை - பண்பாடு என்பது இதுதான். அதனை விட்டுவிட்டு தற்காலத்திலும் இப்படியெல் லாம் கற்களை வீசுவது - கற்கால மனிதர்களின் மனப்பான்மை; இதனை மாற்றி, நாட்டை பொற்காலத் துக்கு அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகத்தின் கொள்கை என்று பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன.

தொடர்ந்து கழகத் தலைவர் பேசிக்கொண்டே இருந்தார். முழுமையான அளவில் பேசியே முடித்தார். கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்ற காலிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

காவல்துறையினரின் போக்கு

காலிகள் 54 டியூப்லைட்டுகளையும், நாற்காலிகளை யும் உடைத்துக் கொண்டேயிருந்தனர். இவ்வளவும் காவல்துறையினர் முன்தான் நடந்து கொண்டிருந்தது. காவல்துறையோ செயலற்று வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தது.
இவ்வளவு நடந்து கொண்டிருந்தும், காவல் துறையினர் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது -

ஒரு மாநிலத் தலைவர் கலந்து கொள்ளும் கூட்டம் அது!

அத்துமீறி கூட்டம் நடக்கும் பகுதியில் நுழைய முனைந்த இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வினரோடு சமாதானப் பேச்சுக்களை நடத்திக் கொண்டி ருந்தார்களே தவிர, காவல்துறையினரின் கடமைக்கான - செயல்பாடுகளே இல்லை. தொடக்கத்திலேயே லத்தி சார்ஜோ அல்லது அத்து மீறி நுழைந்தவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையையோ எடுத்திருந்தால் பிரச்சினை முற்றிப் போயிருக்காது.

கழகத் தோழர்களைத் தடுத்தனர்

கூட்டப் பகுதியிலிருந்து திராவிடர் கழகத் தோழர்கள் கற்களை வீசிய பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்வதில்தான் காவல்துறையினரின் கருத்தும் கவனமும் இருந்தன.

முக்கியமாக ஒரு மாநிலத் தலைவர் பேசும் கூட்டத்தில் இப்படி கலாட்டா செய்கிறார்களே, கல் வீசுகிறார்களே அவர்களைப் பிடிக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்பதில் சற்றும் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என்பது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும்.

பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியது குறித்த சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படாதது - ஏன்?

காவல் துறையினரின் இத்தகைய போக்கு ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை உற்சாகப்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

காவல் துறைத் தலைமை இயக்குநருக்கு புகார் செய்யப்படும்

இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் புகார் செய்யப்படும்.

திராவிடர் கழகப் பொதுக் கூட்டங்கள் நாடெங்கும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக் கூடியவைதான். காரணம் இது ஒரு பிரச்சார இயக்கமாகும். இதுகுறித்து காவல்துறை இயக்குநர் மாநிலம் தழுவிய அளவில் உரிய வழிகாட்டுதலை சுற்றறிக்கையாகக் கொடுக்க வேண்டும்.

அடுத்து நமது நடவடிக்கை

நிலைமையைப் பொறுத்து பொதுக் கூட்ட ஏற்பாடு களைச் செய்யும் கழகத் தோழர்கள், எத்தகைய அணுகுமுறையினை மேற்கொள்வது என்பது குறித்துக் கழகத் தலைமை முடிவு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உளவுத்துறை என்ன செய்தது?

விருகம்பாக்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்திட காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்தும், விளம்பரம் செய்தும் அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திராவிடர் கழகக் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று காவல்துறையிடம் நேரில் சென்று பேசியுள்ளனர். தென் சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் சி. செங்குட்டுவன் அவர்களிடம் காவல் துறையினர் இது பற்றிக் கூறியபோது, கூட்டம் போட்டுப் பேசுவது என்பது உரிமை - கூட்டத்தில் எங்கள் தலைவர், பெரியார் கருத்துக்களைக் கூறுவார்; ஆர்.எஸ்.எஸ். காரர்கள் புகார் கூறுவதால் எங்கள் கருத்துரிமையை யாரும் பறிக்க முடியாது என்று கூறினார்.

வழக்கமாக விருகம்பாக்கத்தில் கூட்டம் நடைபெறும் இடத்தில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடத்திட காவல்துறை அனுமதியும் வழங்கியுள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில், காவல்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கை களை எடுத்திருக்கவேண்டாமா? உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.

கழகத் தோழர்களைக் கைது செய்வதா?

கடைசியில் திராவிடர் கழகத் தோழர்கள் அய்வரையும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிலரையும் காவல் துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கூட்டத்தில் கலாட்டா செய்தவர்கள் யார்? கூட்டத்தை நடத்தக்கூடாது என்று அத்துமீறி நுழைந்தவர்கள் யார்? தலைவரை நோக்கி கற்களை வீசியவர்களின் நோக்கம் என்ன? தலைவருக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்? என்பதைப் பற்றி சிந்தனை செலுத்தாமல், அடித்தவர்களையும், அடிபட்டவர் களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது காவல் துறையினரின் கடமை உணர்ச்சிக்கு உகந்தது தானா?

காலிகளைச் சந்திக்கும் திராணி கழகத்திற்கு உண்டு

ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது என்பதால் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் காலித்தனத்தில் இறங்குவார்களேயானால், அவற்றைச் சந்திக்கும் திராணி திராவிடர் கழகத்திற்கு உண்டு - உறுதியாக உண்டு.

அதே நேரத்தில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய கழகத்தினால், முறைப்படி காவல் துறைத் தலைமை இயக்குநருக்கு உரிய முறையில் புகார் கடிதம் கொடுக்கப்படும்.

கழகத் தலைவர் கலந்து கொண்ட கூட்டத்தில் விஷமிகள் கலாட்டா - கல்வீச்சு என்ற செய்தியை தொலைக் காட்சியில் பார்த்த கழகத் தோழர்களும், தமிழர்களும் தொடர்ந்து தொலைபேசி மூலம் விவரங்களைக் கேட்டுக் கொண்டே உள்ளனர். பதற்றமான ஒரு சூழல் பல இடங்களிலும்.

கழகத் தலைவரின் கட்டளையை ஏற்றுத் தோழர்கள் அமைதி காத்தனர். பொறுப்புணர்வுடன் கழகத் தலைவர் அவ்வாறு அவர் அறிவுறுத்தாதிருந்தால் நிலைமை விபரீதமாகப் போயிருக்குமே!

தோழர்கள் பதற்றமும் அடைய வேண்டாம். உரிய நடவடிக்கைகளை தலைமைக் கழகம் எடுத்துக் கொண்டி ருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கலவரம் செய்தவர்களையும் பாதிப்புக்கு ஆளான கழகத் தோழர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுகும் காவல்துறையின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு கவலையளிப்பதாகவே உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

70 ஆண்டு காலமாக மேடைகளில் பேசிக் கொண்டி ருக்கும் தலைவரின் கூட்டத்திற்கே அச்சுறுத்தல் என்றால் மற்ற மற்ற கூட்டங்களின் நிலை என்ன? காவல் துறையினரின் அலட்சியப் போக்கில் மாற்றம் தேவை! தேவை!!

-------------- கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம் “விடுதலை” 25-9-2011


விருகம்பாக்கம் கூட்டம்
கழகத் தோழர்கள் கைது - விடுதலை

சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் கலவரம் செய்த கீழ்க்கண்ட சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் இளங்கோ (இந்து முன்னணி மாவட்டத் தலைவர்), செந் தில், விட்டல், மனோகர், நாகேஸ்வரராவ், செந்தில் குமார், தயாளன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

குற்ற எண் 17,73/2011, சட்டப் பிரிவுகள் 147, 148, 294(b), 324, 336. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

கழகத் தோழர்கள் கைது

கழகத் தோழர்கள் தமிழ் சாக்ரட்டீஸ், நடராசன், அரசு, பரசுராமன், ஏழுமலை ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை 23ஆவது மெட்ரோ பாலிட்டன் குற்றவியல் நீதிபதி அகிலா ஸ்டாலின் முன்பு ஆஜர் செய்யப்பட்டு, சொந்தப் பொறுப்பில் (ஜாமீனில்) விடுவிக்கப்பட்டனர். குற்றப் பிரிவு எண் 1772/2011 சட்டப் பிரிவு 147, 148, 294(b), 324, 336.


தினகரன் வெளியிட்ட செய்தி
வீரமணி கூட்டத்தில் கல்வீச்சு

சென்னை, செப் 25- சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நேற்றிரவு நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் தி.க. தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் அப்பகுதியை சேர்ந்த இந்து அமைப்பினர் சுமார் 40 பேர் கூட்டத்தை நடத்த விடாமல் கற்களை மேடை மீது வீசி ரகளை செய்தனர்.

இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் அவர்களை எச்சரித்து வெளியேற்றினர். பின்னர் வீரமணி பேச்சை தொடங்கியபோது சிலர் கோஷம் போட்டனர். திடீரென அவரது பேச்சைக் கேட்ட இந்து அமைப்பினர் அவர் மீது கற்களை வீசினர் ஆனால் அது அவர்மீது விழவில்லை. உடனே தி.க தொண்டர்கள் திரண்டு வந்து கற்களை வீசிய இந்து அமைப்பினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பிறகு போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது.

(நன்றி: தினகரன் 25.9.2011)

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கண்டனம்


திராவிடர் கழக நிகழ்ச்சியில் வன்முறையை ஏவியவர்களுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தார். அறிக்கை வருமாறு:

திராவிடர் கழகம் சார்பில் நேற்று (24.09.2011) மாலை, சென்னை விருகம்பாக்கத்தில் பெரியார் பிறந்த நாள் விழாக் கூட்டம் நடைபெற்றது. அப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசத் தொடங்கியதும், ஆர்.எஸ்.எஸ்.சைச் சேர்ந்த சிலர், கற்களை வீசிக் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். மக்கள் கலையவுமில்லை, கூட்டம் நிறுத்தப்படவுமில்லை.

அதற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில், 40,50 பேர்களைக் கொண்ட ஒரு கும்பல் கையில் கற்களோடும், கம்புகளோடும் மேடையை நோக்கி வந்தது. கலவரக்காரர்களோ, கம்புகளையும், டியூப்லைட்டுகளையும் மேடையை நோக்கி வீசினர்.

கருத்துகளை, கருத்துகளால் சந்திக்கும் துணிவும், நேர்மையும் அற்றவர்கள் செய்யும் இதுபோன்ற கலவரங்களைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற கலகங்களைக் கண்டு கருஞ்சட்டைப் படை ஒருநாளும் கலங்காது என்பதை உரத்து அறிவிக்கிறது.
- இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

------------------”விடுதலை” 25-9-2011