Search This Blog

5.9.11

இன்று வ.உ.சி. பிறந்த நாள்


கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம் பரனார் அவர்களின் ஒரு பக்கம்தான் பெரிய அளவில் பேசப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் - ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார் என்பது மட்டும்தான் கூடுமானவரை வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவர்தம் இன்னொரு பக்கம் மிகவும் வித்தியாசமானது! அதுதான் பார்ப்பனர் அல்லாதார் என்ற அரும் பெரும் உணர்வு - இந்நாட்டுக்குத் தேவையானதும் கூட! இந்தத் திசையில் தந்தை பெரியார் அவர்களுடன் அவருக்கு இருந்த நெருக்கமும் - இசைவும் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஞானசூரியன் எனும் நூல் சுவாமி சிவானந்த சரஸ்வதி என்னும் சமயங்களை, சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த ஆன்மிக முதுமகனால் எழுதப்பட்ட தாகும். மானமிகு கலைஞர் அவர்கள் கூட ஞானசூரியனை படியுங்கள் என்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளதையும் இவ்விடத்தில் நினை வூட்டுவது பொருத்தமாகும்.

அந்த நூலுக்கு வ.உ.சி. அவர்கள் அருமையானதோர் அணிந்துரையை ஆய்வு ரையாகத் தந்துள்ளார்.

பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமணர் அல்லாதவர்களுடைய பொருள்களைக் கவர்வதற் காகத் தொன்று தொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளை யும், மோசங்களையும், கொலைகளையும் எடுத்துக் கூறி, பிராமணர் அல்லாத வர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர்களையும் பூசாரிகளையும் விரும்புகின் றார்களா என அவன் (ஞான சூரியன்) வினவுகிறான்.

இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டுகளை யும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப் படும் சடங்குகளின் வாயி லாகப் பிராமணர்அல்லா தார்கள் தாழ்த்தப்படுவதையும், அக் கொள்கைகளினின்றும், தாழ்வினின்றும் பிரா மணரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும் அவன் (ஞானசூரியன்) நன்கு விளக்குகின்றான் என்று ஞானசூரியன் எனும் ஆய்வு நூலுக்குத் தந்துள்ள அணிந்துரையில் குறிப்பிட் டுள்ள சில பகுதிகளாகும்.

இதன் மூலம் ஆரியப் பார்ப்பனர்கள், இந்து மதம் என்னும் சதி மதம் ஆகிய வற்றைப் பற்றி வ.உ.சி. அவர் களுக்கு இருந்த கருத்தின் கூர்மை தெளிவாகுமே.

1920 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடை பெற்ற 26 ஆவது மாகாண காங்கிரஸ் மாநாட்டின் நிருவாகக் குழுவில் சட்ட சபைகள் முதலிய தேர்தல் தானங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தி யோகங்களிலும் வகுப்பு ஜனசங்கைக்குத் தகுந்தபடி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தந்தை பெரியார் முன் மொழிய, அதனை வழி மொழிந்தவர்தான் வ.உ.சி. என்பது நினைவில் இருக்கட்டும்!

பார்ப்பனர் அல்லாதார் உணர்வை நாத்திக இயக்கத்தோடு முடிச்சுப் போட்டு தனிமைப்படுத்தி விடலாம் என்ற தப்புக் கணக்குப் போடுபவர்களின் முகத் திரையை வ.உ.சி. போன்ற நம்பிக்கையாளர்கள் கிழித்து எறிந்துவிடவில்லையா?

இன்று வ.உ.சி. பிறந்த நாள் (1872)

---------------- மயிலாடன் அவர்கள் 5-9-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: