Search This Blog

15.9.11

பெரியாரும் - அண்ணாவும்

மேலைநாடுகளுக்கும் நமது நாட்டிற்கும் உள்ள பல வேறுபாடுகளில் ஒன்று; அங்கே வாழ்ந்த-வாழும் தலைவர்கள் பற்றி ஏராளமான அரிய தகவல்கள் கொண்ட புத்தகங்களை அவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள், உதவியாளர்கள், முதலிய நேரிடையான பல அனுபவங்களை அவர்களிடமிருந்து பெற வாய்ப்புள்ளவர்கள் ஆகியவர்களால் எழுதப்பட்டு வெளிவரும்.

நம் நாட்டில் அத்தகைய வரலாற்று உணர்வுகள் மிகமிகக் குறைவு என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.

அங்கே பல்வேறு கடிதங்கள் விலை மதிப்பற்ற முறையில் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. சில நேரங்களில் அந்தக் குடும்பத்தவர்களேகூட பல தலைமுறைகள் கழித்து ஏலம் விடுகின்றனர் - அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் கூட சேர்த்து.

அல்லது மிகப் பிரபலமானவர்கள் என்றால் அவை ஆவணங்களாகப் பாதுக்காக்கப்படுகின்றன.

அதுபோல நம்நாட்டுத்தலைவர்களின் வரலாறுகள் -நிகழ்வுக் கொத்துக்களாக்கப்பட்ட பல்வேறு சுவையான புத்தகங்கள் வெளிவருவது மிக மிக அரிதாக உள்ளது.

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு முடிந்து 2 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் நல்ல புத்தகங்கள் - உண்மைச் சம்பவங்கள் - அப்படியே ஒப்பனையோ, கற்பனையோ கலக்காமல் சில வந்துள்ளன.

அண்மையில் திருச்சியில் மறைந்த வழக்குரைஞர் எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள், ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக எழுதும் ஆற்றல் படைத்தவர்; மாணவப் பருவம் தொட்டே அறிஞர் அண்ணாவிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்ணா நடத்திய ழடிஅந டுயனே - ஹோம் லேண்ட் ஆங்கில வார ஏட்டில் எழுதிட, அண்ணாவால் அழைக்கப்பட்டவர் அவர். அண்ணா பற்றி ஓர் அருமையான நூலை எழுதியுள்ளார். அதைப் படித்துப் பாராட்டி அவருக்கே நான் கடிதம் எழுதினேன்.

ஆங்கிலத்தில் புரட்சிக்கவிஞரின் பல கவிதைகளையும் மொழியாக்கம் செய்தவர் அவர். அய்யாவின் எழுத்துக்களையும் மொழி பெயர்க்கவிருக்கின்றேன் என்றும் என்னிடம் கூறினார். இயற்கை அதற்குள் அவரை நம்மிடமிருந்து பறித்துக்கொண்ட கொடுமை!.

அண்ணாவிடம் பல ஆண்டுகாலம் மிகவும் நெருக்கத்துடன் அண்ணா டில்லியில் இருந்தபோது பழகிய கொள்கை உணர்வாளர் தோழர் டில்லி சம்பத் அவர்கள் ஆவார்கள்!

மத்திய அரசு ஊழியராக டில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை-கல்வித்துறையில் பணியாற்றி, பிறகு டில்லி தமிழ்நாடு இல்லத்திலும் அதிகாரியாக இருந்து, தமிழ்நாட்டில் தற்போது சென்னையில் உள்ள அவர், பெரியார், அண்ணா, கலைஞர் மாறன் ஆகியவர்களிடம் மிகவும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளவர்.

அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், இரா.செழியன், முரசொலிமாறன் ஆகியவர்களிடம் அதிக நெருக்கமாக டில்லியில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது பழகியவர்.

இன்றும் கலைஞர் அவர்களிடம் மிகுந்த ஈடுபாட்டுடன், அண்ணா அறிவாலயத்தில் தொண்டறப்பணி செய்பவர்.

இனிய சுபாவமும், எளிமையும், அடக்கமும் ஆழமும் உள்ள கருத்தாளர். பயில்தொறும் பண்புடையாளர்.

டில்லியில் தி.மு.க., அண்ணா, கலைஞர் என் பார்வையில் -டில்லி சம்பத் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு புத்தகம் மிகவும் சுவையான வரலாற்றுச் செய்திகளையும், நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.

நேற்று எனக்குக் கிடைத்தவுடன் படித்தேன்; சுவைத்தேன். நிகழ்ந்த நிகழ்ச்சிகள், நெருடல் இல்லாமல், சரளமாக, அப்படியே தரப்பட்டுள்ளன. மிகவும் ஆற்றொழுக்காக பல்வேறு தலைப்புகளில் தரப்பட்டுள்ளன.

அறிஞர் அண்ணா பற்றியும், டில்லியில் திராவிடர் இயக்க நிகழ்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய பல செய்திகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. வாங்கிப் படிக்க வேண்டிய நூல்-உயிர்மைப் பதிப்பக வெளியீடு (சென்னை).

சில அரிய தகவல்கள் இதோ ஒரு பகுதி:

....அண்ணா சட்டென்று எல்லோருடனும் பழகிவிட மாட்டார். ஆனால், நெருங்கிய நண்பர்கள் இருக்கும் போது ஒரே கலகலப்பாக இருப்பார். நிறைய ஜோக் அடிப்பார். பார்லிமெண்டில் மற்ற அங்கத்தினர்கள் பேசுவது மாதிரி பேசி நடித்துக் காண்பிப்பார்.

அண்ணா சொன்ன ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.

ஒரு சமயம் அண்ணாவும், பெரியாரும் ரயிலில் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு பிச்சைக்காரன் தன் துயரத்தை எல்லாம் சொல்லி உருக்கமாகப் பிச்சை கேட்டான். அப்பாலே போ! என்று பெரியார் சொல்லிவிட்டார். அவன்மேல் பரிதாபப்பட்டு அண்ணா ஒரு ரூபாய் கொடுத்தார். பிச்சைக்காரன் போனதும் பெரியார் அண்ணாவைக் கடிந்துகொண்டார்: இவனுங்கல்லாம் ஏமாத்துப் பேர்வழிங்க. சும்மா வேஷம் போடறான். ஒரு ரூபாயைத் தூக்கிக் கொடுக்கிறாயே என்றார்.

அவர், அவன் சொன்னது உண்மையாக இருந்தால் ஏழைக்கு உதவின திருப்தி எனக்குக் கிடைக்கிறது. பொய்யாக இருந்தாலும் நஷ்டமில்லை. நானே பரிதாபப்படும்படி நடித்தானல்லவா? ஒரு நல்ல நாடகத்தைப் பார்த்தேன் என்று திருப்திப்படுகிறேன் என்று சொன்னதும் பெரியார் சிரித்துவிட்டாராம்.

இதுபோல பல்வேறு சுவையான நிகழ்வுகள். புத்தகம் வாங்கிப்படியுங்கள்.

ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தால் நல்ல உணவை-சுவைமிக்க விருந்துண்டபோது ஏற்படும் மகிழ்ச்சியை விட அதிகம் ஏற்படும் எனக்கு-உங்களுக்கும் தானே?

--------------------”விடுதலை” 11-12-2010

0 comments: