வழக்கம்போல வெளியிடும் அய்யா சுவரொட்டிகளை விட இவ்வாண்டு மிகவும் வித்தியாசமானது, மேன்மை யானது - பல வண்ணங்களில் ஜொலிக்கக் கூடியதாகும்.
அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இச்சுவரொட்டிகளை சுவர்களில் ஒட்டாமல் தட்டிகளில் ஒட்டி மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் வைத்தால் பொது மக்களைப் பெரிதும் ஈர்க்கும்; அதிக நாட்களும் நிலைக்கும்.
மிக அழகாக இருக்கிறது என்று தோழர்கள் அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டாம். பொது மக்களின் பார்வைக்கும், கருத்துக்கும் விருந்தாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிக செலவு செய்து மிகவும் நேர்த்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
(2) இரண்டாவதாக தந்தை பெரியார் சிந்தனைச் செல்வங்கள் என்ற வகையில் 13 சிறு வெளியீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
(1) கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
(2) கடவுளும், மதமும் ஒழிய வேண்டும் - ஏன்?
(3) மாணவர்களுக்கு...
(4) தமிழசை மாற்றம் வேண்டும்.
(5) வகுப்புவாரி உரிமையின் வரலாறும், பின்னணியும்
(6) எது கலை வளர்ச்சி?
(7) தன்மானம் - இனமானமும் தமிழ்ப் புலவர்களும்
(8) கல்வி பற்றிய சிந்தனைகள்
(9) சுயமரியாதை இயக்கத் தத்துவம் (கடவுள், மத, ஆபாசங்கள்)
(10) வாழ்விணையர்க்குப் பெரியார் அறிவுரை
(11) இனிவரும் உலகம்,
(12) பெரியார் பற்றி பெரியார்,
(13) தமிழனை அடிமையாக்கியவை எவை?
- ஆகிய அறிவுலக ஆசானின் பத்து வெளியீடுகள் (குறைந்தளவு நன்கொடை 13 நூல்கள் - நன்கொடை ரூ.100/- மட்டுமே) வெளியிடப் பட்டுள்ளன. அழகிய அட்டை வடிவமைப் புடன் நேர்த்தியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூல்களை அய்யா விழாவையொட்டி நண்பர்களுக்கு, இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு பரிசளிக்கலாம். இந்நூல்களில் இருக்கும் கருத்துகளையும் எடுத்துக் கூறலாம் - விவாதிக்கலாம். தந்தை பெரியார் என்றாலே சிந்தனைப் பொறிதானே - கருத்துக் கருவூலம்தானே - நம் சிந்தனைகளைக் கூர் தீட்டிக் கொள்ள நமது அறிவை விசாலமாக்க இவை பெரிதும் பயன்படுமே!
முதலில் நம் கழகத் தோழர்கள் பாட நூல்கள் போல படிக்க வேண்டும். சிறிய நூல் என்பதால் படிக்க அதிக நேரமும் தேவைப்படாது. நாம் உள்வாங்கிக் கொண்டால் தானே மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற முடியும். முனையுங்கள் தோழர்களே!
(3) தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் வழக்கமான விடுதலையோடு தந்தை பெரியார் அவர்களின் எழிலார்ந்த வண்ணப் படம் இணைத்து அனுப்பப்படுகிறது. கண்ணாடி சட்டம் போட்டு வீட்டில் இடம் பெறச் செய்யலாம், அந்த அளவுக்குச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
(4) நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது கழகக் கொடி மரங்களைத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் அகற்றி விட்டது (கொடி மரம் என்ன வெடிகுண்டா?)
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அதனைப் புதுப்பிக்குமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும் கழகக் கொடி பட்டொளி வீசி பறந்திட வேண்டும். கழகத் தோழர்களின் வீடுகளில் கூட கழகக் கொடி பறந்திட வேண்டும். ஒரு ஊரில் கழகத் தோழர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமும்கூட!
(5) பல ஊர்களில் (ஊற்றங்கரை போன்ற இடங்களில்) பல்வேறு போட்டிகளை நடத்திட உள்ளனர். விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதனைப் பரவலாக்கி ஒவ்வொரு ஊரிலும் செய்தால் கருத்துப் பரவல் என்னும் திசையில் நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்பதில் அய்யமில்லை.
கடவுளுக்கு உருவம் இல்லை என்று சொல்லி, கடவுள் பிறந்தார் என்று எழுதி வைத்து, கிருஷ்ண ஜெயந்தி, பிள்ளையார் சதுர்த்தி, ராம நவமி என்று கதைகள் கட்டி கொண்டாடச் செய்து மக்களை மடமையில் ஆழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றின் மூலம் சிலருக்கு வயிற்றுப் பிழைப்பும் நடக்கிறது.
இத்தகு மூடத்தனங்களும் சுரண்டல்களும் கூண்டோடு ஒழிக்கப்பட வேண்டுமானால், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை, தமிழர் தம் தேசியத் திருவிழாவாக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடத்தினால் கொள்கைப் பிரச்சாரத்தில் புதிய வீச்சை எட்ட முடியுமே!
சிறுவர்களையும், மாணவர்களையும் கவர்ந்திழுக்க ஆயிரம் ஆயிரம் மூடத்தனங்கள் நாட்டில் இருக்கும் பொழுது அவற்றை ஒட்ட நறுக்கி எறிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விழா ஒன்று போதுமே!
பொது இடங்களிலும், கழக இல்லங்களிலும் பெரியார் படத்தை அலங்கரித்து வைக்கலாம் - ஒலி பெருக்கி வைத்து அய்யா உரைகளை ஒலிபரப்பலாமே! எளிய வழிகள் பெரிய விளைவுகள் - மறவாதீர், தோழர்களே!
-----------------------"விடுதலை” தலையங்கம் 16-9-2011
0 comments:
Post a Comment