Search This Blog

27.9.11

சாக்ரட்டீஸ் பெற்ற வெற்றியின் ரகசியம்ஒரு குடும்பமாக இருந்தாலும், ஓர் அமைப்பாக (Organization) இருந்தாலும், குழுமமாக இருந்தாலும் கட்சி அல்லது இயக்கமாக இருந்தாலும், நண்பர்கள் வட்டமாகஇருந்தாலும் கூட, கலந்து உரையாடும்போது, முக்கியமான பொறுப்பாளர் (உதாரணத்திற்கு குடும்பத் தலைவர் - தலைவி) சில செயல்களைத் திட்ட மிடுவது பற்றிக் கூறுகையில், அருகில் அவர்களுக்கு அடுத்த நிலையிலோ, அல்லது சம நிலை நண்பர்களோ, பொறுப்பாளர்களோ இரண்டு வகைகளில் அதனை எதிர்கொள்ள வாய்ப்புண்டு.

ஒன்று (1): உடனே எடுத்த எடுப்பிலேயே அதெல்லாம் நடக்காதுங்க, முடியாதுங்க, யாருங்க முன் வருவாங்க, பெரிய செல்வாக்குள்ளவர்களால்தான் அதனைச் செய்ய முடியுங்கோ, நமக்கு அது பெரிய சுமையாகிவிடுங்க, அதிலிருந்து மீளுவது முடியாதுங்க என்று எதிர்மறையாக முகத்தில் அடித்தது போல - ஒரு குடம் பச்சைத் தண்ணீரை எடுத்து அப்போது ஊற்றி உற்சாகத்தை விரட்டி ஊர் எல்லைக்கே கொண்டு நிறுத்திடும் சுபாவத்தினர் ஒரு வகை!

இரண்டு (2): நல்ல திட்டந்தாங்க, நாம் எல்லோரும் சேர்ந்து கடுமையாக உழைத்தால் நிச்சயம் வெற்றி அடையமுடியுங்க, விடாமுயற்சி செய்தால் ஏன் அதை வெற்றியாக்க முடியாது? என்று கூறி, கிரியா ஊக்கிகளாகி நமக்கு - தூக்க மாத்திரை தேவைப்படும்படி செய்த முன்வகையறா பேர்வழிகளைப் போல் இல் லாது, ஊக்க டானிக் தந்து ஊழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று கூறி சாதிக்க வைக்கும் சரித்திரம் உருவாக துணை நிற்போர். மற்றொரு வகை!

முடியாது; இயலாது என்பதைக் கூட - யதார்த்தத்தில் அப்படிப்பட்டநிலை என்கின்ற போதிலும் கூட, அதனை உடனடியாக ஏற்க மனமின்றி தயக்கத்தை வேறு மாற்று வழியும் வார்த்தையும் காண முயலவேண்டியது முன்னேற விரும்புவோர் செய்யும் செயலாகும்! அந்த அணுகு முறையும் மனப்போக்கும்தான் நம்மை உயர்த்திட உதவும்!

நம் விழைவு, விருப்பம், வேட்கை (Aptitude) தான் நமது எண்ணப் போக்கை (Attitude) உருவாக்கிடஅடித்தளம் ஆகும்! அந்த எண்ணப் போக்குதான் நாம் ஏறி ஏறி வெற்றி கொள்ள உதவும் சிகரங்களைத் தொட உதவி செய்யும். ஆங்கிலத்தில் இதைத்தான் (Your attitude decides your altitude) என்று கூறுவர். நமது இலக்கை எட்ட, இடையூறுகள், இடுக்கண்களை தடை களாகக் கருதாமல், படிகளாக, மனதால் கொள்ளுங்கள் - தாண்டுவது சுலபம்.

முடியாது என்பது தாழ்வு மனப் பான்மையின் முக்காடிட்ட தோல்வியின் வெளிச்சமாகும்!

நமது உரையாடலின் மூலம், கேட்கும் கேள்வியின் பரி பக்குவத்தின் மூலம் இல்லை என்ற விடை வராமல் தடுக்கலாமே!

கிரேக்கத்துச் சாக்ரட்டீஸ் இளைஞர்களைத் திரட்டி ஏதென்ஸ் நகர வீதிகளில் சிந்தனையைத் தூண்ட கேள்விகளிலிருந்து பெற்ற விடை எல்லாம் ஆம்! ஆம்! என்ற விடைகளே. இளைஞர்களிடம் பீறிட்டுக் கிளம்பி வந்து பெரிய தோர் அறிவுப் புரட்சியை உருவாக்கியது!

தென்கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ் என்று தந்தை பெரியாரை அய்.நா. யுனெஸ்கோ மன்றம் பாராட்டி விருது (1970) வழங்கியதே. அந்த அய்யாவும் நான் சொல்வதை அப்படியே நம்பாதீர்கள். சிந்தித்து சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தன்னடக்கத்துடன் சொன்ன முறைதான் அவர் கூறிய அனைத்து அப்பட்ட அனுபவத்தில் முகிழ்த்த அறிவுரை என்பதைப் புரிய வைத்து, பல கோடி மக்கள் இன்று உலகில் பகுத்தறிவாளர்களாக, மனிதநேயர்களாக வாழ வைத்துள்ளது!

எனவே சிந்தனை, சொல் எல்லாம் அடக்கத்திலிருந்தும், உறுதியிலிருந்தும் பிறக்க வேண்டும்
------------------கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் - "விடுதலை” 27-9-2011

0 comments: