Search This Blog

17.9.11

தந்தை பெரியாரின் மதமற்ற உலகம்!19ஆம் நூற்றாண்டில் பிறந்த பெரியார் 20 ஆம் நூற்றாண்டின் முக்கால் பகுதி வரை வாழ்ந்தவர். இந்த 95 அகவையில் அவரின் பொது வாழ்வுக்கு வயது கிட்டத்தட்ட 75.

யார் சொன்ன கருத்தையும் அவர் சொன்னதில்லை. தனக்குத் தோன்றியதை ஜோடனை செய்யாமல் சொக்கத் தங்கமாக எடுத்துரைத்தார்.

திருவள்ளுவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கூட நான் சொன்ன கருத்தை வள்ளுவனே சொல்லியிருக்கிறான் என்று எடுத்துச் சொல்லும் அளவுக்குத் தன்னம்பிக்கையும், தன்னறிவும் கை கோத்த காலக்கதிரவன் அவர்.

சென்னை சட்டக் கல்லூரியில் தமிழ் இலக்கியக் கழகத்தவரால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டார். விழாவுக்கு தலைமை வகித்தவர் சாதாரணமான வரல்லர். சட்டக்கல்லூரி இயக்குநர் திரு. ஏ.எஸ்.பி. அய்யர். அய்யர் பேசும்போது குறிப்பிட்டார்.

கீழை நாடுகளைப் பற்றி பெர்ட் ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் பொழுது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டி ருக்கிறார். நான் அறிந்தவரையில், மேற் கோள்காட்டிப் பேசாமல், தன் அறிவையே முன்னிலைப்படுத்திப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான் என்று பேசினார் (10.2.1960) என்றால் தெரிந்து கொள்ளலாமே ஈரோட்டு ஏந்தலைப் பற்றி.

இவ்வளவுக்கும் இப்படிப் பேசியவர் யாரென்றால், கலெக்டர் மலையப்பன் சம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தந்தை பெரியார் அவர்களுக்குத் தண்டனை கொடுத்தவர்! (1957)

கேட்கலாம் _ எல்லா காலத்துக்கும் பொருந்துமா இந்த ஈரோட்டுக் கிழவரின் கருத்துகள் என்று. இன்னும் சொல்லப் போனால், இப்படிக் கேட்கச் சொன்னவரே அவர்தானே! என் கருத்து பிற்காலத்தில் கண்டிக்கப் படலாம் - படட்டும் - அது வரவேற்கத்தக்கதே என்று சிந்தனைக்குத் தாழ்ப்பாள் போடாத தாராள சிந்தனையாளராயிற்றே தத்துவத் தந்தை பெரியார்!

இன்றைக்கு உலகெங்கும் மதக் கலவரங்கள்! மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போல வேறு எந்தக் காரணத்துக்காகவும் சிந்தப்படவில்லை என்பது நிதர்சனமான வரலாறு.

அமெரிக்காவின் ஆட்சித் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் விவகாரத்தையே எடுத்துக் கொள்ளலாம்.

2003_ஆம் ஆண்டில் அமெரிக்கா ஈராக்கின் மீது வெறி கொண்டு தாக்கி அப்பாவி மக்கள் பரிதாபகரமான முறையில் பலியானார்கள் . பலியானவர்கள் ஆறைரை லட்சம் பேர் என்று கூறப்படுகிறது. ஈராக் அதிபர் சதாம் உசேனும் தூக்கிலிடப்பட்டார்.

ஆடு _ ஓநாய் கதை போல காரணம் சொல்லி அமெரிக்க அடியாள் இந்தக் கோரக் கொலை நர்த்தனத்தை நடத்தி முடித்தான்.

2003 இல் இந்தக் கொடூரம் அரங்கேற்றம் செய்யப் பட்டபின் எகிப்தில் ஷரம்-_எல் ஷேக் நகரத்தில் ஒரு முக்கிய சந்திப்பு நடந்தது. இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன், பாலஸ்தீன பிரதமர் முகம்மது அபாஸ் - அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரின் அக்கேனா சந்திப்பு அது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னார்: என்னை இயக்குபவர் யார் தெரியுமா? கடவுள்தான் என்னை இயக்குகிறார். எனக்கென்று சில வேலைகளைக் கொடுத்துள்ளார்.

ஜார்ஜ்! ஆப்கானிஸ்தானம் சென்று பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டு என்று கடவுள் என்னிடம் சொன்னார். உடனே அதனை நான் செய்து முடித்தேன்.

அதன் பின்னர் கடவுள் என்னிடம் ஜார்ஜ்! ஈராக்குக்குச் செல். அங்கு நடந்து கொண்டிருக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டு என்று கூறினார்; அதனையும் உடனே செய்து முடித்தேன்.

தற்போது மீண்டும் என்னை அனுப்பியிருக்கிறார். பாலஸ்தீனத்துக்கு நாட்டையும், இஸ்ரேலியர்களுக்குப் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடு! மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்துஎன்று எனக்குக் கடவுள் சொல்லி யிருக்கிறார். கடவுளின் ஆணைப்படியே இங்கு நான் வந்திருக்கிறேன் என்றார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.

40 ஆவது வயதில் நான் தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவன் என்று அறிவித்துக் கொண்டவர் இவர். ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை தீவிர மதத் தலைவனான நான் கைப்பற்ற வேண்டும் என்று தேர்தலில் பிரச்சாரமே செய்து வெள்ளை மாளிகைக் குள் புகுந்த வேங்கை.

இந்த ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை யாரான சீனியர் ஜார்ஜ் புஷ்சுக்கு உதவி யாளராகவும், இந்த ஜூனியர் ஜார்ஜ் புஷ்சுக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த தௌக்வீட் சில இரகசியங்களை ஜார்ஜ் புஷ் தன்னிடம் பேசியதை எல்லாம் 1998 முதல் ரகசியமாகப் பதிவு செய்து வைத்திருந்து, அதிரடியாக அதனை வெளியிட்டு புஷ்சை அம்பலப்படுத்தினார்.

ஜார்ஜ் பஷ் ஒரு கஞ்சா போதைக்காரர். பழைமைவாத கிறித்துவ மத நம்பிக்கையாளர்களை தனது மத நம்பிக்கையை முன் வைத்துத் தூண்டுபவர். அதனைத் தம் வெற்றிக்குச் சாதகமான வாக்குகளாக மாற்றியவர். மதத்தையும், அரசியலையும் ஒன்றாகக் கலக்க முயற்சித்தவர் என்று அம்பலப்படுத்தப்பட்டார்.

2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மய்யக் கட் டடமும், பெண்டகனும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டன. அதில் 2752 மனிதர்கள் கொல்லப்பட்டனர் என்பது மிகப் பெரிய சோகச் செய்தியாகும்.

யார் அழித்தது, -பின்னணி என்ன என்று உலக மக்கள் சிந்தனையைச் செலவழித்த தருணத்தில் இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள்தான்!- சிலுவைப் போர் மீண்டும் மூண்டு விட்டது; -சந்திக்கத் தயார் என்று சவால் விட்டார் அதிபர் புஷ்.

முசுலிம்களின் அல்கொய்தா இயக்கமும், அதன் தலைவன் ஒசாமா பின்லேடனும்தான் காரணம் என்று கர்ஜித்தார். ஆப்கானிஸ்தானில் ஓடி ஒளிந்து கொண்டார் என்று கூறி அந் நாட்டினை ஆக்கிரமித்து குண்டுமாரி பொழிந்தார். கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் ஆப்கானிய மக்கள் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டனர்.

10 ஆண்டுகள் கழிந்து அமெரிக்காவின் அதிபரான ஒபாமா, பின்லேடனை வேட்டையாடினார். பாகிஸ்தானின் அபோடாபாத்தில் அடுக்கு மாடியில் பாதுகாப்பாகத் தங்கியிருந்த பின்லேடனை பாகிஸ்தானுக்குத் தெரிவிக்காமலேயே அமெரிக்க விமானங்கள் அத்து மீறி நுழைந்து , தனக்குத் தேவையான படுகொலையை நடத்தி முடித்து, பத்திரமாகத் திரும்பி விட்டன.

மதவாதம் _ எத்தனை லட்ச மக்களைக் கொன்று பழி தீர்த்திருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வுகள் போது மானவையே!

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். சீனாவில் கிறிஸ் தவர்களின் உரிமைகள் நசுக்கப் படுகின்றன. நைஜீரியாவில் கிறித்த வர்கள் மீது கொலை வெறித் தாக்குதல். மசூதிமீது குண்டுவீச்சு, ஈராக்கில் கொல்லப்பட்ட கிறிஸ்தவ இளைஞரின் தலை துண்டிப்பு! என்ற செய்திகள் அலை அலையாக வந்து கொண்டே யிருக்கின்றன.

நாட்டிற்குள் நிம்மதியாக வாழவும் முடியாமல், நாட்டை விட்டு வெளி யேறவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றனர் ஈராக் கிறிஸ்தவர்கள் என்ற அந்நாட்டின் பேராயர் பாஸ்கர் வர்தா தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ஜி யா-உல்-ஹக் ஆட்சியின் போது மதத்துவேஷ எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டது. இஸ்லாத்துக்கு எதிராக யாராவது கருத்துகள் சொன்னால் அவருக்கு மரண தண்டனை விதிக்க அந்தச் சட்டம் வகை செய்கிறது.

அச்சட்டத்தின் கீழ் பஞ்சாப் மாநிலக் கிறித்தவப் பெண்மணி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அவர் சிறையில் உள்ளார்.

அவரை விடுவிக்க பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த சல்மான் தசீர் தக்க முயற்சிகளை மேற்கொண்டார். மதவாத சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். மதவெறியாளர்களோ தோள் தட்டினர். இவ்வாண்டு சனவரியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர் வெளியிலிருந்து வந்தவரும் அல்லர் - அவரின் மெய்க் காப்பாளர்தான். (இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு ஏற்பட்ட அதே நிலை!)

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சபாஷ் பத்தி என்பவரும் - மதவாதச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய நிலை யில் சுட்டுக் கொல்லப்பட்டார். (2.3.2011)

கிறிஸ்துவின் மீது தாங்கள் கொண் டிருக்கும் விசுவாசத்திற்காக ஆண்டு தோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப் படுகின்றனர் என்று அய்ரோப்பிய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பிரதிநிதி மசிமோ இண்ட்ரோலிஜின் என்பவர் மனம் புழுங்கி தெரிவித்துள்ளார். ஹங்கேரி நாட்டில் நடை பெற்ற அகில உலகக் கருத்தரங்கில் இதனை வெளிப்படுத்தினார். 5 நிமிடத்துக்கு ஒரு கிறிஸ்தவர் இவ்வாறு கொல்லப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இந்தியாவிலோ கேட்கவே வேண் டாம். 450 ஆண்டு கால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழி பாட்டுத் தலத்தை பல்லாயிரக்கணக்கில் கூடி பட்டப் பகலில் இடித்து முடித்தனர். இதன் தொடர்ச்சியாக 2000 பேர் கொல்லப்பட்டனர். அதைவிட நாட்டின் மதச்சார்பின்மைக்குக் கொள்ளி வைக்கப்பட்டது.

2002 இல் குஜராத்தில் என்ன நடந் தது? கோத்ராவில் ரயில் எரிக்கப் பட்டது என்ற பெயரால் அம்மாநில முதல் அமைச்சர் (பி.ஜே.பி.) நரேந்திர மோடி தலைமையில் திட்ட வட்டமான வகையில் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் வேட்டையாடப்பட வில்லையா?

2000 இஸ்லாமியர்கள் படுகொலை! கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு சிசுக்கள் நெருப்பில் தூக்கி எறியப்பட்டன. அந்தத் துடிப்பைக் கண்டு எக்காளமிட்டனர் இந்துத்துவா வெறியர்கள்.

1 லட்சத்து 70 ஆயிரம் சிறுபான்மையினரின் வீடுகள் தரைமட்டமாக் கப்பட்டன. 230 தர்க்காக்கள் இருந்த சுவடு தெரியவில்லை. 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகள் சாம்பலாக்கப்பட்டன. ஆயிரம் உணவு விடுதிகள் காணோம். 3800 கோடி ரூபாய் சிறுபான்மை யினருக்கு இழப்பு என்ற நிலைமை.

அதோடு முற்றுப் பெற்று விடவில்லை இந்த மத வெறி. மீண்டும் மீண்டும் காவு வாங்கிக் கொண்டே இருக்கிறது.

எந்த அளவுக்குத் தலை தூக்கி நிற்கிறது? பா.ஜ.க. வின் அதிகாரப் பூர்வமான மக்களைவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் என்பவர் கொஞ்சம் கூடக் கூனிக் குறுகாமல், வெட்கப் படாமல், ஆமாம்! பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோம். முடிந்தால் எங்களைக் கைது செய்து பாருங்கள் பார்க்கலாம்! (11.11.2008) என்று சவால் விட்டாரே! நாடாளுமன்றத்தில் பதிவாகியிருக்கிறதே. பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் 19 ஆண்டு களாகத் தண்டிக்கப் படாமல் சுதந்திரமாகத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் துணைப் பிரதமர் வரை பதவி வகித்து விட்டார்களே! தொடர்ந்து இந்துத் துவா வாதிகளின் வெறித்தனம் நான்கு கால் பாய்ச்சலோடு நடந்து கொண்டே இருக்கிறது.

2002 இல் பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபால் ரயில் நிலையத்தில் அதி பயங்கரமான வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தாப்லிகி ஜமாத்தின் நிகழ்வுகளில் பங்கேற்க வரும் முஸ்லிம்களைக் குறி வைத்துத் தாக்குவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டவை என்று விசாரணையில் தெரிய வந்தது.

2003 நவம்பர் 21_ஆம் தேதி மகாராட்டிரத்தில் பாப்பானி என்னும் இடத்தில் உள்ள முகமதியா மஸ்ஜித்தில் குண்டு வெடிப்பு. போபாலில் கையாண்ட அதே வகை வெடி மருந்துகள் பறிமுதல். இதிலும் காவிப் படையினரின் கைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2004 ஆகஸ்டு 27 அன்று, அதே மகாராட்டிரத்தில் பூர்ணா பகுதியில் உள்ள மீர்ஜ் உல்உலூம் மதரசாவிலும், ஜால்னா பகுதியில் குலஎத்ரியா மஸ்ஜித்திலும் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதிலும் இந்துத்துவ வாதிகளின் கைவரிசை.

2006 செப்டம்பர் 8 இல் மகாராட் டிர மாநிலம் மாலேகானில் மசூதிகளை ஒட்டி வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 38 அப்பாவி முஸ்லிம்கள் பலியானர்கள்.

முதலில் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, அதற்குப் பிறகுதான் உண்மை கண்டறியப்பட்டு காவி வெறியர்கள் கைது செய்யப்பட்டனர்.

2007 பிப்ரவரி 18 ஆம் தேதி, அரியானாவில் உள்ள துவானா என்ற கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த இந்தியா _ பாகிஸ்தான் நல்லுறவுக்காக இயக்கப்பட்ட சம்ஜீதா விரைவு ரயிலில் இரண்டு சூட்கேஸ்கள் வெடித்ததால் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா _ பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுப் பேச்சு வார்த்தையை முறியடிக்க வேண்டும் என்ற முரட்டு வெறித்தனத்தினால் இந்துத்துவா வாதிகளின் புத்தி இப்படி மேயப் போய்விட்டது.

அதே ஆண்டு மே 18 இல் உலகப் புகழ் பெற்ற ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு - ஒன்பது பேர் படுகொலை!

2008 செப்டம்பர் 29 அன்று மீண்டும் மாலேகானில் குண்டு வெடிப்பு - 5 முசுலிம்கள் கொல்லப்பட்டனர். இந்த சதியில் சம்பந்தப்பட்ட காவிகள் - ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்பது எவ்வளவு பெரிய அபாய கரமான தகவல்!

2009 அக்டோபர் 16 இல் கோவா வில் மர்கோவா என்ற இடத்தில் தீபாவளியன்று குண்டு வெடிப்பில் 5 இஸ்லாமியர்கள் பலி. இந்தக் குண்டு வெடிப்பு சத்தம் அடங்குவதற்குள் குஜராத்தில் மோடாசா எனும் இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு!

இப்படி தொடர் கொலைகள் - அழிவுகள். மதவாதம் பீடித்த மனிதர்களான மாக்களால்!

இதற்கு எதிராக முஸ்லீம்களிலும் தீவிரவாதிகள் வெடித்துக் கிளம்ப வேண்டிய நிலை!

இந்தியா முழுமையும் நடை பெற்றுள்ள மதவாத வன் முறை களுக்குப் பின்னால், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலின் பின்னல் இருப்பது கண்டு பிடிக்கப்பட் டுள்ளது. மதம் மக்களை நல்வழிப்படுத் தும் மார்க்கம்; கடவுள் நம்பிக்கை _ கெட்டது செய்ய அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய உணர்வு என்று கொட்டி அளக்கவில்லையா? இதில் கடுகு மூக்கு முனையளவாவது உண்மை இருக் கிறதா? யதார்த்தத்தில் நாட்டில் நடப்பது என்ன? என்று சிந்திக்க வேண் டியது பொறுப்பான மனிதர்களின் பொன் போன்ற கடமையாகும்.

இப்பொழுது தேவை மதமல்ல. அது மனிதனுக்குப் பிடிக்கப்படக்கூடாது. மதம் யானைக்குப் பிடிக்கலாம், நாய்க் குப் பிடிக்கலாம். மனிதனுக்குப் பிடித் தால் அதே நிலை என்பது சரிதானே?

அதனால்தான் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகச் சொன்னார். ஆணித்தரமாகச் சொன்னார், அறிவு துலங்கச் சொன்னார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத் திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங் கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின் பேரிலேயே புரட்சி தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம்.

வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று புரட்சி ஏடு வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த புரட்சி தோன்றவில்லை. அதுபோலவே, இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப புரட்சி தோன்றியதல்ல. அது போலவே இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலை நிறுத்த புரட்சி வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் - பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே புரட்சி தோன்றியிருக்கிறது. அது உயிருள்ள வரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும். ஆதலால் புரட்சியில் ஆர்வமுள்ள மக்கள் புரட்சியை ஆதரிக்க வேண்டும்.

-----------------------(புரட்சி - தலையங்கம் 26-11-1933)

என்று தந்தை பெரியார் கூறும் புரட்சிகரமான கருத்தேதான் மானு டத்தை வாழ வைக்கும் - புதிய உலகைப் பூக்க வைக்கும்.

மதங்களால் மானுடம் பகை நெருப்பைக் கக்கி ஒருவரை ஒருவர் எரித்துக் கொண்டது போதும். மதப்போர்வையைத் தன் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டிருக்கும் சங்கராச்சாரியார் இங்கு கொலைக் குற்றவாளிகளாக நடமாடுகின்றார்.

லோகக் குரு என்று தூக்கி வைத்து இங்கு ஆடப்படும் சங்கராச்சாரியார் நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்ற குரூரக் குணம் படைத்தவராக இருக்கிறார். கோயில் குருக்கள் கோயில் கரு வறையை கருவை உண்டாக்கும் காமலீலா நடத்தும் பள்ளியறையாகப் பயன்படுத்துகிறான்.

யோகக் குரு என்று கூறிக் கொண்டு காமக் குருவாகக் காட்சி அளிக்கிறான்.

கடவுள் பிறப்பற்றது என்கிறான் - ஆனால் ராமன் பிறந்த நாள் என்கிறான். அவன் பெயரால் பாலம் உண்டு என்கிறான். அதனைக் காட்டி வளர்ச்சித் திட்டத்தை முடக்குகிறான். அந்த மதப்போதை நம் நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை புரையோடிக் கிடக்கிறது. ஒற்றுமையை மட்டுமல்ல; மனித குல வளர்ச்சியையும் தடுக்கிறது இந்த மதம்.

மனித அன்பைக் குலைக்கும் - சகோதரத்துவத்தை சாவுக் குழிக்கு அனுப்பும் - ஒற்றுமைக்கு உலை வைக் கும் - வளர்ச்சியைத் தடுக்கும் மதத்திற்கு முற்றாக விடை கொடுப்போம்!

மனித நேயத்தை முன்னிறுத்தி, அறிவை வழி காட்டும் விளக்காக்கி, அன்பை அரவணைக்கும் மலராக்கி, நம் கையில் கொடுத்துள்ள பகுத்தறிவுப் பகலவன் - உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் கருத்தியலைக் கொள்வோம்! காலத்தை வெல்வோம்! தன்னலம் துறந்து தொண்டறம் பேணுவோம்!

அதுதான் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு - சுயமரியாதைத் தத்துவம்! மதம் காட்டும் வழிகள் மரணக் குழிக்குத் தான் என்று கண்ட பிறகு மாற்று மார்க்கம் தேவை தானே!

மதமற்ற அந்தப் புத்துலகை உருவாக்குவோம்! ஒன்று பட்ட ஒப்புரவு வாழ்வில் துய்ப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


---------------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 17-9-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

பெரியாரே நம் ஒளி - விழி - வழி!

இன்று (செப்.17-2011) நமக்கு விழி திறந்த வித்தகர் - மான உணர்வை மறந்து, துறந்து அடிமைகளாகி காலங்காலமாய் கால்நடைகளைவிட கேவலமான வாழ்வு வாழ்ந்த திராவிட மக்களாகிய நமக்கு, மானமும் அறிவும் போதித்த நம் அறிவுப் பேராசான், தலைவர் தந்தை பெரியார்தம் 133ஆவது ஆண்டு பிறந்தநாள் பெருவிழா!

திக்கெட்டும் திருவிழா - தெவிட்டாத அறிவுப் புதுவிழா!

பெரியார் என்ற தொண்டு பழத்தின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் வகையில்,

பற்பல நாடுகளிலும் - மலேசியா, சிங்கப்பூர், மியான்மா என்ற பர்மா, குவைத், துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, செஷல்ஸ் இப்படி - திசையெட்டும் தமிழர்களால் - திராவிடர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழா - ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகி வரும் கொள்கை பரப்பும் விழாவாக, குவலயம் குதூகலத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடும் நிலை கண்டு, பெரியார் தொண்டர்களின் உள்ளங்கள் குளிர்ந்துள்ளன உவகையால் கூத்தாடுகின்றன.

கோடையிலே இளைப்பாறும் குளிர் தருகின்ற தருவாக, தருநிழலாக, நிழல் கனிந்த கனியாக வந்த கொள்கைக் கோமானின் தொண்டால் தலை நிமிர்ந்த மக்கள், நன்றித் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் செப்.17 தொடங்கி அடுத்த செப்டம்பர் 16-ஆம் தேதி வரை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பெரியார் என்ற தத்துவ ஜீவ நதி என்றும் வறளாது,

வற்றாது ஓடிக் கொண்டே இருக்கும் வெள்ளப் பெருக்கு அல்லவா!

அய்யாவின் லட்சியங்களுக்கு அவ்வப்போது அறை கூவல்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன!

எதிர்நீச்சல்தான் அந்தத் தலைவர் தொண்டர்களுக்குக் கொடுத்த மகத்தான பயிற்சி என்பதால், தடைக் கற்கள் ஆயிரம் என்றாலும் அதனை சுக்கு நூறாக்கி, பயணம் தடைப்படாமல் இலக்கு நோக்கியே ஈரோட்டுச் சிங்கக்குட்டிகள் சென்று வெற்றி வாகை சூடிடுவது உறுதியிலும் உறுதி!

பெரியாரே நம் ஒளி!

பெரியாரே நம் விழி!!

பெரியார்தம் இயக்கமே நம் வழி!!!

அவர் வைத்த இலக்கே எம் போக்கும் - நோக்கும்!

என்ற பயணங்கள் தொடரட்டும், தொய்வின்றித் தொடரட்டும்!

21ஆம் நூற்றாண்டு மட்டுமல்ல; இனிவரும் நூற்றாண்டுகளும், பெரியார் என்ற சமூக விஞ்ஞானியின் சகாப்தமாகவே மலரும் என்பது உறுதி!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

- கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம் 17-9-2011