Search This Blog

16.11.22

ஜாதி ஒழித்து சமத்துவம் காண்போம்!

ஜாதி ஒழித்து சமத்துவம் காண்போம்!


தந்தை பெரியார்

சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால், எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய விரும்புபவன் கீழே விழுந்து பல கஷ்டங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.


கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான். பின், இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பிரயாணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது, மண்ணெண்ணெய் கூடாது என்று கூறியவர்கள் கூட இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தி இருக்கிறார்கள். பறவைகளுக்கும் எருமை, புலி, எலி போன்றவைகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. ஆனால், மனிதன் அய்ந்து அறிவைத் தாண்டி, ஆறாவது அறிவைப் (பகுத்தறிவைப்) பெற்றிருக்கிறான். அனுபவத்தைப் பெறுவதும், மற்றவர்கள் செய்வதை, சொல்வதை யோசிக்க சக்தி பெற்றிருப்பதும் மனித இனம். எனவே, மனித இனம் வாழ்வில் வளர்ச்சியடைந்து வருகிறது.

அறிஞர்களின் ஏற்பாட்டால் 1910இல் வெளிவந்த வாகனத்துக்கும் 1951இல் வெளி வந்திருக்கிற வாகனத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. உலகம் நாளுக்கு நாள், மணிக்கு மணி முன்னேறிக் கொண்டு போகும்போது, நமது தமிழர் சமூகம் மட்டிலும் சூத்திரப் பட்டத்துடன் பின்னேறிக் கொண்டு போகிறது. நாம் செய்யும் மாறுதல் சுகபோகி-களுக்குப் பாதகமாக இருந்தால் _ அவர்களின் இன்ப வாழ்வு பாதிக்கப்படும் என்று நினைத்தால், அவர்கள் மாறுதலை மறுப்பார்கள்; எதிர்ப்பார்கள்.


1928 என்று நினைக்கிறேன்; எங்கள் சுயமரியாதை இயக்கத்தில் பல செட்டியார்கள் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் கப்பல் ஏறி வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது. அப்படிப் போனால் ஜாதிக்குப் பாதகம் விளையும் என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று ஜாதி ஆசாரத்தையும் மறந்து, வெளிநாடுகளுக்காகக் கடல் கடந்து பிழைப்புக்காகவும், பதவிகள் வகிக்கவும் செல்லுகிறார்கள்.

இதுவும் மாறுதல்தானே! முப்பது ஆண்டுளுக்கு முன்பு ரோமத்தைக் கத்தரித்து ‘கிராப்பு’ வைத்திருந்தால் பள்ளிக்கூடத்தில் படிக்க இடம் தரமாட்டார்கள். ஆனால், இப்பொழுது அவர்களே கிராப்பு வைத்துக் கொள்ளுகிறார்கள். நெற்றியில் எதுவுமில்லை என்றால் பள்ளியில் மாணவர்களை நுழைய விடமாட்டார்கள்; ஆனால், இன்று 100க்கு 90 விகிதம் தமிழர்கள் நெற்றியில் எதுவும் வைத்துக் கொள்ளுவதில்லை. 150 ஆண்டுகட்கு முன்பு பெண்கள் ரவிக்கை போட்டுக் கொண்டதில்லை; மலையாளத்தில் மார்பில் துணிகூடப் போடக்கூடாது; இன்று பாட்டியம்மாள்கூட ரவிக்கை போட ஆசைப்படுகிறார்கள். நான் ஈரோடு சேர்மனாக இருந்த பொழுது குழாய்த் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால், என் தாயார் மட்டிலும், குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் யார் பிடித்துவிடுகிறார்களோ  அதில் தீட்டு ஒட்டியிருக்குமே என்பதற்காக! பிறகு திருந்தினார்கள். மாறுதல் வேண்டும் போது பிடிவாதம் இருக்கத்தான் செய்யும்.

அக்கம் பக்கத்தைப் பார்த்து மாறுதல் ஏற்பட்டுவிடும். உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மனித சமுதாய வளர்ச்சி எந்த அளவில் கொண்டு போய் விடுமோ! என்ன ஆகுமோ! யார் கண்டது?


நம் நாட்டு ராஜாக்களெல்லாம் கடவுளாக மதிக்கப்பட்டார்கள்; கடவுள் அவதாரமென எண்ணப்பட்டார்கள். கடவுளுக்குச் செய்வதெல்லாம் ராஜாவுக்கும் செய்தார்கள். ஆனால், அந்த ராஜாக்களெல்லாம் இன்று என்ன ஆனார்கள்? அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் ராஜாவாக ஆக்கப்பட்டார்கள். ஜமீன்தார்களும் இப்படியே ஒழிக்கப் பட்டார்கள். ‘கடவுள் ஒருவனை உயர்ந்த-வனாகவும், ஒருவனைத் தாழ்ந்தவனாகவும் படைத்தார்’ என்ற வருணாசிரம வேதாந்தம் எங்கே போயிற்று? இப்படியே சுதந்திர ஜனநாயக எண்ணத்துடன் ஆராய்ந்தால் மாறுதல் கண்டிப்பாய்க் கிடைக்கும்.

2000 ஆண்டுகளாக சூத்திரர்கள் இருக்கிறார்கள்; ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாத குழந்தை பிறந்ததும், நடமாட ஆரம்பித்ததும் ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டிலும், ஏன் புராணத்திலும், சாஸ்திர சம்பிரதாயத்திலும் சூத்திரப் பட்டம் இருக்கவேண்டும் என்று கேட்பது தப்பா? உள்ளதைச் சொல்லி மாறுதல் விரும்பும் எங்களைக் குறை கூறுபவர்கள், தொந்தரவு கொடுப்பவர்கள் ஒரு காலத்தில் அதே மாறுதலுக்காக உழைப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக, விலை கொடுத்து வாங்கும் அடிமைகளாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார்; மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம், பிற இனத்தவர்களுடன் சரிசமமாக வாழும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது.

சீனாவில் சன்யாட்சன் தோன்றினார்; மாறுதலை உண்டு பண்ணினார். ‘அய்ரோப்பா-வின் நோயாளி’ என்று கூறப்பட்ட துருக்கி நாட்டிலே கமால் பாட்சா தோன்றி மாறுதலை உண்டு பண்ணினார். ஆனால், தமிழ் நாட்டில் சித்தர்களும் வள்ளுவரும் புத்தரும் தோன்றி  ஜாதி ஒழிய வேண்டும், மாறுதல் வேண்டும் என்று கூறியும் மாறுதல் காண முடிய-வில்லையே! உழைப்பதெல்லாம் நம்மவர்களாக இருந்தும், கீழ் ஜாதியாகத்தானே வாழ்கிறோம்! மலையாள நாட்டில் ஈழவர்கள் வீதியில் நடக்கக்கூடாது என்ற சம்பிரதாயமெல்லாம் மாறி, மாறுதல் ஏற்பட்டு, இன்று வீதியில் நடக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் தீண்டப்படாதவன் இருக்கத் தானே செய்கிறான்! அது போகட்டும். நம் தாய்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்; ஆனால் தமிழுக்கு இடமில்லை. கோயிலில் வடமொழியில் மந்திரம் ஓதப்படுகிறது; இந்தி படித்தால்தான் பதவி கிடைக்கும்; தமிழில் சங்கீதம் வராது; தெலுங்கில்தான் சங்கீதம் வரும்.

சாஸ்திரம், புராணம் எல்லாம் வடமொழியில்!

காந்தியார் நம் நாட்டில் என்ன ஆனார்! மகாத்மாவாகி, மகானான அவரே மூன்று குண்டுகளுக்கு இரையானாரே! ‘சூத்திரன் படிக்கக் கூடாது’ என்கிறது மனுதர்மம்; ‘எல்லோரும் படிக்க வேண்டும்’ என்றார் காந்தியார். உடனே பாய்ந்தன மூன்று குண்டுகள்! ’முஸ்லிம் மதமா, இந்து மதமா! எல்லாம் ஒன்றுதான்’ என்றார் காந்தியார். பாய்ந்தன மூன்று குண்டுகள்! எனவே, மாறுதலுக்கு எதிர்ப்பு இருந்துதான் தீரும்; அதைப்பற்றிக் கவலையில்லை.
நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ளப் பாடுபடுங்கள்! உயர்ந்தவன் _ தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள்! இந்நாட்டில் தமிழர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். அதற்காகப் பாடுபடுபவர்–களுக்கு உதவியாக இருங்கள். என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் ஜாதி ஒழிப்பேயாகும்.


        -----------------------------------மலாயாவில், கோலப்பிறை செயின்ட் மார்க் ஸ்கூல் திடலில் 16.12.1954இல் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு – ஆதாரம் : பினாங்கு, ‘சேவிகா’ 18.12.1954 – ‘விடுதலை’, 23.12.1954