Search This Blog

Showing posts with label பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம். Show all posts
Showing posts with label பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம். Show all posts

7.2.18

பார்ப்பன வைரி பாவாணர்

பாவாணரைப் பார்ப்பனர்கள் மறக்க மாட்டார்கள். காரணம், பார்ப் பனீய சமஸ்கிருத அடிவேருக்கு எரி மலைக் குழம்பினைப் புகுத்தியவர்.
‘‘பாவாணர் நினைவலைகள்’’ எனும் நூலினை அவரின் மகன் தே.மணி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
‘‘தமிழை வட மொழியினின்றும், தமிழனை ஆரியனிடமிருந்தும் மீட்க வேண்டுமென்பதே என் குறிக்கோள். அதற்கென்றே மொழியாராய்ச்சியைக் கற்றாய்ந்தேன். தமிழ் திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்ற உண்மையை உலகமறியச் செய்ய வேண்டும்‘’ என்று பாவாணரின் கருத் தைப் பதிவு செய்துள்ளார் இந்நூலில்.
திருநெல்வேலி மாவட்டம் சங்க ரன் கோவில் திரு.ஞானமுத்தனார்- பரிபூரணம் அம்மையார் ஆகிய வாழ்விணையருக்குப் பத்தாவதாகிய கடைக்குட்டி மகனாகப் பிறந்தவர் தான் தேவநேயனார் (7.2.1902).
வாழ்நாள் எல்லாம் வறுமைச் செந்தேளால் கொட்டப்பட்டவர் என்றாலும், ஆரியத்தின் மூர்க்கக் கொம்பை தன் எழுத்தாணியால் முறித்துப் போட்ட மூண்ட பெரு நெருப்பாகக் கடைசிவரை கனன்றவர் அவர்!
1940 ஆம் ஆண்டில் மொழி ஆராய்ச்சி நூலான ‘‘ஒப்பியன் மொழி நூல்’’ ஒப்பானதும் மிக்கானதும் இல்லாத மேருமலைச் சிகரமாகும்.
அந்தோ, தமிழனின் நிலையை என்ன சொல்ல! அந்நூல் விற்பனைத் தளத்தில் வீழ்ந்துபட்டது. மிகுந்த பண நெருக்கடி, தந்தை பெரியார் வாயிலாக அரை விலைக்கு விற்க நேர்ந்தது என்று இந்நூலாசிரியரும், பாவாணரின் மகனுமான தே.மணி குறிப்பிட்டுள்ளார் (நூல் பக்கம் 37).
பாவாணரின் நெஞ்சில் வேர்ப் பிடித்து நின்ற அந்த வேழத்தின் வேகப் பாய்ச்சல் எத்தகையது?
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திருவரங்கனாருக்குப் பாவாணர் எழுதிய கடிதம் அதற்கான ஆவணப் பெட்டகம்.
அது இதோ:
‘‘அன்பார்ந்த அய்யா,
நலம்; நலமாக.
கடந்த 5000 ஆண்டாகத் தமிழையே பேசித் தமிழாலேயே வயிறு வளர்த்துவரும் பார்ப்பனக் கயவர் சங்க காலத்திலிருந்து இதுவரை ஏராளமான தென்சொற்களையும், தென்னூல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளை கொண்டு, நமக்கும், நமது முன்னோர்க்கும் முட் டாட் பட்டங்கட்டி அகமகிழ்ந்து, தூற்றியது போதாதென்று தமிழ் மொழியையும், வடமொழி போல வழக்கொழிந்து சிதையும்படி வழிய மைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவது போலக் குடியரசிற்கும் இந்திக்கும் இயைபு கற்பித்து, அதைச் சட்டசபைத் தேர்தல் நிகழ்ந்து பதவி பற்றும்வரை எழுதாக் கிளவியாக மட்டுமின்றி ஓதாக் கிளவியுமாக மறைத்துக் காத்துத் தீதுநலமறியாத கோடிக்கணக்கான பேதை மக்களின் நம்பிக்கையைப் பல்வகை விரகு நெறியிற் கவர்ந்து இன்று நட்டாற்றிற் கழுத்தறுப்பது போலத் திடுமென இந்தி கட்டாயக் கல்வியைத் தமிழரின் விருப்பத்தைக் கேளாதுஆங்கிலேயரினும்பன் மடங்கு ஆணவத்தோடும், அகங் காரத்தோடும் எடுத்தும் உரப்பியும் கனைத்துக் கூறி வருகின்றனர்’’ என்று அக்கடிதத்தில் அனல் கக்கியுள்ளார்.
சமஸ்கிருதம், இந்தி என்ற இரு பார்ப்பனக் கூறுகள் கொம்பைத் தீட்டிப் பாயும் இக்காலத்தில் பாவா ணரை உரிய முறையில் நினைவு கூரவேண்டாமா? நாட்டு மக்களும் கூர்மை பெறவேண்டாமா?

   ------------ மயிலாடன் அவர்கள் 7-2-2018 ‘விடுதலை’ யில் எழுதிய கட்டுரை

25.8.16

கோகுலாஷ்டமி கொண்டாடும் பக்தர்களே சிந்திப்பீர்! கண்ணன்... காமுகன்...

கோகுலாஷ்டமி கொண்டாடும் பக்தர்களே சிந்திப்பீர்! கண்ணன்... காமுகன்...



விஷ்ணு (கிருஷ்ணன்) மும்மூர்த்தி களில் ஒருவரான தேவன் விஷ்ணு வென்றால் - இரட்சிக்கிறவன் என்பது பொருளாம். புராணங்களில், விஷ்ணுவை மகாதேவன் என்று சொல்லப்படவில்லை. விஷ்ணுவுக்கு பல பெயர்களும் - அவதாரங்களும் உண்டாம்.
விஷ்ணுவின் மறுபெயர்கள்:
அச்சுதன் - சரவணச் செல்வன் - அரி அரிந்தமன் - உவணதேவன் - கடல்வண் ணன் - கமலக்கண்ணன் - கரியன் - கருட கேதனன் - கேசவன் - கொண்டல் வண் ணன் - சக்கரபாணி - சக்ராயுதன் - சக்கிரி - சங்கமேந்தி - சனர்த்தனன் - சம்பு - சலச லோசனன் - சாரங்கபாணி - சிறீதரன் - சவுரி - திருநாதன் - துளாய்மவுலி - நாராயணன் - நெடியோன் - பிச்சை - பஞ்சாயுதன் - பதுமநாதன் - பிரமன்றாதை - பிள்ளை கேள்வன் - பீதாம்பரன் - பூமிகொழுநன் - பெம்மான் - பெருமான் - மாதவன் - மாயன் - மால் - முகுந்தன் - முண்டகாசனைக் கேள்வன் - வலவன் - வனமாலி - விண்டு வேலைற்றுயின் றோன், என்பனவாம்
தச அவதாரப் பெயர்கள்
மச்சன் - கூர்மன் - வராகன் - நரசிங்கன் - வாமணன் - இந்திரவாசன், உலகளந்தோன், கிரிவிக்கிரன், பரசுராமன் - இராகவன், இராமன், நாகுத்தன் - பலபத்திரராமன், குண்டலன் அலகை முலையுண்டோன் - கண்ணன் - கிருஷ்ணன், கோவிந்தன், தாமோதரன், தேவகி மைந்தன், நந்தநந்த னன், பஞ்சவர்தூதன் - புத்தன், மதுசூதனன், முராரி, கோபாலன், கோபிநாதன் பலராமன் என்பதும் விஷ்ணுவின் பெயர்களே.
விஷ்ணு - சுய உருவை, நாலுகையு டையதாய் கறுப்பு நிறத்திற் செய்து, மஞ்சள் நிற ஆடையை அணிவித்து வணங்கு வார்கள். விஷ்ணு பக்தர்களில் சிறீ வைண வர், ராமாஞ்சி மதத்தார், எம்பெருமாள் மதத்தார், சாத்தாதிகள், எனப்பல வகுப்பாய் பிரித்து, மந்திரங்கள் சடங்குகளுடன் விஷ்ணுவை தெய்வமென்றும், சிறீமன் நாராயணனென்றும் போற்றி வணங்கி வருகிறார்கள்.
பிர்மாவுக்கு ஆயுள் கணித்திருப்பது போல், விஷ்ணுவுக்கும் ஆயுள் கணிக்கப் பட்டிருக்கிறது, விஷ்ணுவுக்கு ஆயுள் பதிநான்கு கோடியே நாற்பது லட்சம் (14,40,00,000) ஆண்டுகள். விஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம்.
விஷ்ணுவுக்கு மனைவி - வைப்பாட்டி யாரும் உண்டு. மனைவியின் பெயர் லட்சுமி. இவள் பிர்மாவின் உடன்பிறந்த சகோதரி. ருக்மணி, ராதை வைப்பாட்டிகள். இவையன்றி இளம் பெண்களைக் கற்பழித் துக் கறைப்படுத்தி, சீர்கெடச் செய்த காம சேட்டைகள் நிறைந்த கதைகள் ஏராளம் உண்டு. இத்தனையும் சேர்ந்ததயையே கிருஷ்ணலீலை என்கிறார்கள்.
கல்வியறிவும், நாகரீகமும்,  நாட்டு முன்னேற்றமும் பெற்றுள்ள இக்காலத்தில் புராணச் செயல்கள் உச்சம் பெற்றிருந்த காலங்களில் நடத்திய கிருஷ்ணலீலையைப் போல நடந்தேறச் சமயம் பெற்றால் இளம் பெண்களைப பெற்ற பெற்றோரின் கண் ணும் மனமும் இக்காதல் காட்சிகளைக் கண்டு சகிக்குமா? கொழுந்துவிட்டுத் தாவிப் படர்ந்து பற்றி எரியும் நெருப்பு முன் விழுந்த மெழுகு போல் பொங்கி உரு காதோ? இப்படி காமச்செயல் புரிவோரை இன்று எவரேனும் கண்டால் மனங்கனிய கடவுளென்று வணங்க மனம் இடம் தருமா? இக்காமக்கோட்டிக் காட்சி நாடகக் கதையை கண்கூடாகப் பார்க்கவும், கேட்கவும் கூடுகின்ற கூட்டம் அங்கங்கே எண்ணற்ற பல ஆயிரம் என்பது பொருந்துமல்லவா? இப்படி கண்ணன் காதல் கதையை உணர்ந்து அறியாதிருப்பது எத்தனை பரிதாபமென்பதை சற்று சிந்தியுங்கள்.
ஒருமுறை கிருஷ்ணன் நடத்திய காதற் செயலால் பார்வதியிட்ட சாபம் பலித்துப் பாம்பாய்ப்போன கதையும், தனக்கு மனை வியிருந்தும் திருப்தியின்றி ஒரு காட்டு வேடுவப்பெண்ணை இச்சித்து மோகித்துக் கூடிப் புணர்ந்ததை தன் மனைவி லட்சுமி கேள்விப் பட்டு கிருஷ்ணனை வாசல் வழியாய்  நுழைய விடாதபடி - வாயில் காவலருக்குக் கட்டளையிட கிருஷ்ணன் வேறுவழியாய் உட்புகுந்து வந்ததாயும் கதையுண்டு.
விஷ் ணு, கிருஷ்ணவதாரத்தில் நடத் திய காமச்சேட்டைகளும், ரிஷிபத்தினி களில் உண்டாக்கிய கற்பழிவும், நட்டமும் கணக்கற்றதாய்த் தெரிகிறது. இதன் உண் மையினை அய்ந்தாம் .. பாரதத்தில் மிகத் தெளிவாய் அறியலாம். அவற்றில் சிசு பாலன் அரசக் கூட்டத்தில் கிருஷ்ணவதார மெடுத்த விஷ்ணுவின் தீயச் செயல்களில், செவிசாய்த்து கேட்டு சகிக்க முடியாத - வெட்கத்துக்குரிய பெருங்குற்றங்களை அறவே தள்ளிவிட்டு அதில் கண்டபடியே கீழே விளக்கிக் காட்டியுள்ள சிலவற்றைப் பாருங்கள்.
பாரதம், சபாபர்வம் 27ஆம் பக்கம்: “சூதுவாது அக்கிரமம், கொலை, களவு, கள், காமம் முதலியவை நிறைந்த பாண்டமாகிய இந்தக் கரியக் கிருஷ்ணனை ஆக்கிரம கண்ணியனாக்கி, பூசைகொடுவென்று வியாசர் சொல்லுவது தகுதியா?”

“தன்னைப் பெற்ற தேவகியிடத்து ஒரு பெண்ணை உண்டாக்கி வைத்தான்...

“ஆச்சியர், வெண்ணையைத் திருடித் திருடித் தின்கிறபோது, கண்டுபிடித்து, அசோதையிடத்து வந்து முறையிட அசோதை யிவனைப் பார்த்து என்னடா கிருஷ்ணா வெண்ணையைத் திருடித் தின்பது தகுதியா எனக்கேட்க - தன் கையிலிருந்த வெண்ணையை நக்கி கொண்டே நான் அறியேன் என்று பொய்மை கூறினான். (பாரதம் - சபாபர்வம் 28ஆம் பக்கம் பார்க்கவும்)
ஆயர் மாதர்கள் இவன் செய்யும் துடுக்கனைத்தும் அசோதைக்குச் சொல்லி, தங்களுக்கு நன்மை கிடையாதிருப்பதை நினைத்து திருஷ்டாந்தத்துடன் பிடித்துப் போக வேண்டுமென்று தகுந்த முயற்சி யோடிருக்கும்போது ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்வான்’, என்ற பழமொழி போல (பாரதம் - சபாபர்வம் 29ஆம் பக்கம்) வெண்ணெய் திருடித்தின்ற இந்த கிருஷ்ணன் ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டு, பூனை வாயில் எலிபோல மன வருத்தமுற்றிருக்க, ஆயர் மாதர் இவனைப் பிடித்துக் கல்லுரலில் கட்டி அசோதைக்குத் தெரியப்படுத்த, அசோதை வந்து திருடர்க்கு தரப்படும் தண்டனையை அவ்விடத்தில் தானே செய்யக் கருதி இவனைத் தன் கையிலிருக்கும் பிரம்பாலும், ஆயர்மாதர் மத்தாலும் அடிக்க, கிருஷ்ணன் அடிபட்டு ஓவென்று அலறி இரண்டு கண்ணிலும் அருவிபோல ஜலம் வர அழுதான்...” தன் னந்தனியாக ஒரு மாது செல்வாளாகில் அவளைப் பின்தொடர்ந்து தன் கருத்துக் கிசைந்தவிடம் சமீபித்தபோது வேடரைப் போல் வீழ்ந்து கற்பழித்துத் திரிந்தான் - (பாரதம் - சாபபர்வம் 20ஆம் பக்கம் காண்க)

“தாயோடு பிறந்த அம்மானாகிய நஞ்சனை கிஞ்சித்தேனும் இரக்கமில்லாமல் கொன்று போட்டான்”.
“தன் தந்தையோடு பிறந்தவளை அத் தையென்று மதிக்காமல், அவளைக் கட்டிப் புணர்ந்தான்.
“இந்தக் கிருஷ்ணனுக்கு, ஏழு மனைவி கள் இருக்கிறார்கள். அவர்களிருக்க, பதினாயிரம் கோபிகாஸ்திரிகளை மனைவி களாக வைத்திருக்கிறான்” என்று சிசுபாலன் சொன்னான். அப்படிவெட்கத்திற்குரிய பற்பல குற்றங்களை விவரித்தபின் கிருஷ் ணனை நோக்கி நானாவித தண்டனைகளில், அவன் மீளவும் சொன்னதாவது. “அடா கொலையாளி, ஸ்திரிகளை கொலை செய்வது மகாபாதகமென்று பேதைகளுக் குத் தெரிந்திருக்க நீ அஃது உணராமல், உனக்குப் பாலூட்டும் தாயாகிய ஒரு ஸ்திரியை கொலை செய்தாயே!...”
“அடா பாவி உன் செயல்களில் ஒன்றாவது நன்னெறிக்கேதுவாக இருக் கின்றதா? நான் எவ்வளவு எடுத்துரைத்தேன். நல்ல யோக்கியதையுடையவனாய் இருப் பாயாகில் விடை கொடாதிருப்பாயோ. நீ தான் விடை கொடாமலிருந்தாலும் சபை யார் மவுனமாக இருப்பார்களோ? நான் கூறுவது உண்மையாய் இருப்பதினால், நீயும் சித்திரப் பதுமைபோல சற்றும் அசைவின்றி இருக்கின்றனையே என்றான்.
அவதரித்த விஷ்ணுவாகிய கிருஷ்ண னோவெனில்  சினந்து, சிசுபாலனைக் கொன்று போட்டானே ஒழிய, அதெல்லாம் பொய்யென்று மறுக்க, அவனாற் கூடாமற் போயிற்று. (பாரதம் - சபாபர்வம் 36 ஆம், 38ஆம் பக்கம்) அல்லாமலும் தன் குருவின் மனைவியை களவாய்க் கொண்டு போய், கானகத்தில் கூடியிருந்ததாகக் கதையுண்டு. இதல்லாமல், தன் தாயையும், சகோதரியை யும் மோகித்து பற்பலச் செயல்களைச் செய்ததாயும் தெரிகிறது.
கடைசியாய் கிருஷ்ணன் ஓர் ஆல மரத்திலேறி படுத்திருக்கையில், வேடன் ஒருவன் மிருகமென்றெண்ணி அம்பால் எய்ய - அம்பு பட்டு செத்து. உடல் கழுகு களால் கொத்தப்பட்டதாகவும், நரிகளால் பிடுங்கப் பட்டதாயும் கதையுண்டு.
பார்த்தீர்களா? - இத்துணைச் செய்தி களையும் நாம் கற்பனையாகக் கூறவில்லை. அவர்கள் எழுதி வைத்த புராணத்திலி ருந்தே கிருஷ்ணபரமாத்வாவின் வண்ட வாளங்கள் தெரிகின்றன. இதைப் பார்த்த பிறகும் படித்த பிறகும் கிருஷ்ண ஜெயந் தியைக் கொண்டாடப் போகிறீர்களா?
                                     ---------------------இரா.கண்ணிமை அவர்கள் எழுதிய கட்டுரை--’விடுதலை’  24-08-2016--http://viduthalai.in/page-2/128308.html
                ***********************************************************************

‘அட, கோகுல கிருஷ்ணா?’

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தேய் பிறையின் எட்டாம் நாளில் (அஷ்டமி) ரோகிணி நட்சத் திரம் சேர்ந்த நேரத்தில், மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரானகிருஷ்ணன்என் பவன் பிறந்தானாம். அன் றைய நாளை தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி என்றும், கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றும் கொண் டாடுகிறார்கள்.
இந்து மதத்தில் ஒரு யோக்கியமான, ஒழுக்கமான, நாணயமான கடவுளை உண்டாக்க முடியவில்லை என்பதற்கு இந்தக் கிருஷ்ண அவதாரக் கடவுள் ஒன்றே போதுமானது.
சிறிய வயதில் வெண் ணெய்யைத் திருடி, வாலிப வயதில்பெண்ணைத்திரு டியவன்என்றுஇந்தக் கடவுளைப்புகழுவதில் பக்தர்கள் வெட்கப்படுவதில் லையே, ஏன்?
கோகுலத்தில் அடுத்தவர் வீட்டுக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து யாரும் அறியாவண்ணம் பால், தயிர், வெண்ணெய்யை உண்டு உடலை வளர்த்தவன் இவன்; சிறு வயதிலேயே திருட்டைக்கற்றுக்கொண் டவனைக் கடிந்து கொள்ளா மல் கடவுள் என்று கன்னத்தில் போட்டுக் கொள்ள வெட் கப்படுவதில்லையே ஏன்?
ஒருமுறை ஒரு வீட்டில் வெண்ணெய்யைத் திருடிய போது கையும் களவுமாகப் பிடிபட்டான். அவனை அவ னது தாயிடம் அழைத்துச் சென்றாள் மதுகரவேணி என்ற அந்தப் பெண். அப் பொழுது அந்தச் சிறுவன் கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகச் சொல்லி, தான் துடைத்து விடுவதாகச் சொன்னான்; அந்தப் பெண் குனிந்தபோது, வெண்ணெய்யை அந்தப் பெண்ணின் வாயிலும், கையிலும் தடவி விட்டு, தன் தாய் யசோதையிடம் என்ன சொன்னான் தெரியுமா?
‘‘இந்தப் பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெய்யைத் தின்று விட்டு, என்மீது பழியைப் போடுகிறாள். இதோ பாருங் கள், இவளின் வாயிலும், கையிலும் வெண்ணெய் ஒட் டிக் கொண்டு இருக்கிறது’ என்றானேபார்க்கலாம்! மகனின் வார்த்தைகளை நம்பி அந்தப் பெண்ணைக் கடிந்து கொண்டாள் தாயான யசோதை.
பிஞ்சிலேயேமுத்திப் போன இந்தப் பித்தலாட்டக் காரனை பெருமாளின் அவ தாரம் என்று சொல்லிப் பெருமையாகப் பேசுவதற்கு வெட்கப்படுவதில்லையே, ஏன்?
ஆம்! இந்துக்களால் ஒரு ஒழுக்கமான, யோக்கியமான, நாணயமான கடவுளைக் கற்பிக்கமுடியவில்லை.தங்களைப்போலவேதங் களின் கடவுளையும் கற் பித்துக்கொண்டு விட்டனரோ!
வெட்கக்கேடு - இந்தக் கேவலமானவனுக்குக் கோகு லாஷ்டமி விழாவாம்!
ஆமாம், ஒரு சந்தேகம் - பகவான் கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியை கெட்ட நாள் என்கிறார்களே, ஏனாம்? ஒருக்கால் அவன் கெட்டவனாக இருந்ததால், இருக்குமோ!
--------------------------- மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரை--’விடுதலை’   24-08-2016  http://viduthalai.in/e-paper/128300.html

30.9.15

இதுதான் இந்து மதம்!இந்துத்துவா பேசும் சகோதரிகாள், சிந்தியுங்கள்!


இந்து மதத்தைப் பொறுத்த வரை பெண் - ஒரு மானுடக் கூறேயல்ல! கூலி கூடக் கொடுக்காது ஆண் ஆதிக்க நுகத்தடியின் கீழ் மாட்டப் படும் மாட்டினும் கீழானவள்; அதனால்தான் கணவன் இறந்தவுடன் - அவனோடு வைத்து எரிக்கப்படவண்டி யவள் என்பதை சாத்திர ரீதியாகவே செதுக்கி வைத்து விட்டனர்.
இன்னும் விதவையா காமல், சுமங்கலிகளாய் இருக் கிற பெண்கள் விலை உயர்ந்த வாசனைத் திரவியங்களுட னும், மலர்ந்த முகத்துடனும், ஆபரணாதிகள் அணிந்தும் எவருக்கும் முன்னதாக சடலம் வைக்கப்பட்ட கட்டை யண்டை வருவர்.- (ரிக் வேதம், 4-11-17)
கருட புராணம் என்ன கதைக்கிறது? அதனையும் பார்த்துவிடலாமே!
மாசு மூடிய பொன்னை அக்னியானது அம்மாசை மாத்திரம் போக்கி, அப் பொன்னை கெடுக்காமை போல, கொழுநனோடு உயிர் விடும் புண்ணியவதியின் மேனியை மாத்திரம் அக்னி யானவன் தகிப்பானேயன்றி, அவளைச் சிறிதும் வருத் தான். தாய், தந்தை, மகன், பேரன், அண்ணன், தம்பி முதலியோரையும் மற்று முள்ள சுற்றத்தாரையும் மனை முதலிய பொருள்களையும், உயிரையும் துறந்து - கண வனே தெய்வம் அவனைப் பிரிந்து வாழ்வதென்பது அடுக்காது என்று, தனது கணவனுடனே துஞ்சும் உத் தமியை ஒப்பவர் உலகில் யாருள்ளார்? சாக மனம் (உடன்கட்டை) செய்த புண் ணியவதி மூன்றரைக் கோடி தேவ வருஷ காலமும் சுவர்க் கத்தில் கணவனோடு இன் பம் துய்ப்பாள். நாயகனோடு உடன்கட்டை ஏறாதவள் எந்த ஜென்மத்திலும் துக் கமே அடைவாள் என்கிறது விஷ்ணு புராணம் (14 ஆம் அத்தியாயம்).
கணவன் இறந்த பின்பு அவனுடைய சடலத்துடன் அக்னிப் பிரவேசம் செய்ய எத்தனிக்கும் பெண்கள் அசுவமேத யாகம் செய்த பலனை அடைகின்றார்கள் என்கிறது காசிக் காண்டம்.
இந்து மதத்தின் சீலங்கள் என்று கூறி ஏற்றுக்கொள்ளும் ஒரே ஒரு பெண்ணை இந்து ராஷ்டிர பேர்வழிகளே காட்டுங்கள் பார்க்கலாம்.
இங்கிலீஷ்காரன் - அவன் கிறிஸ்தவன் - இந்துக் கலாச் சாரத்தை நாசமாக்கி விட்ட வன் என்று நா சுளுக்கேறக் கூச்சலிடும் பேர்வழிகள் - இங்கிலீஷ்காரன் இந்த நாச மாகப் போகிற உடன்கட்டை ஏற்றுதலை சட்டம் போட்டு ஒழித்தானே - அதற்காக இந்துப் பெண்கள் ஆயிரம் சலாம் போட வேண்டாமா வெள்ளைக்காரனுக்கு?
1628 இல் மதுரை நாயக்க மன்னனுடன் 700 மனைவிகளும், திருமலை நாயக்கனுடன் 200 மனைவி மார்களும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்ட கொடு மையை அறிந்த பின்னும் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கலாமா?
அது, 18 ஆம் நூற்றாண்டு; மராட்டியப் பார்ப்பனர் ஒரு வரின் மனைவி கோகிலா; அந்தப் பார்ப்பனன் மரணம் அடைந்தான். அவன் சடலம் சென்றது - அதற்குப் பின் னால் அந்தப் பெண் அலங் கரித்து ஊர்வலமாக சுடுகாட் டுக்கு அழைத்து வரப்பட்டாள்.
அதனை வேடிக்கைப் பார்த்த இராணுவத்தினர் மனம் இரங்கி, உள்ளே புகுந்து கொடியவர்களிட மிருந்து அப்பெண்ணை மீட்டனர். ஆனால், அந்தப் பெண்ணை வீட்டார் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்; ஜாதிப் பிரஷ்டம் செய்தனர்.
அந்தப் பெண்ணை இரா ணுவத் தலைவர் கர்னல் லிட் டில்டன் பங்களாவிலேயே வைத்து ஆளாக்கினர். கல்வி கொடுத்து இராயல் குளோரித் தாள் என்று பெயர் சூட்டி, நெல்லை மாவட்டத்தில் சுவிசேஷ ஊழியராக்கினர்.
மனிதப் பண்பு எங்கே இருக்கிறது?
இந்துத்துவா பேசும் சகோதரிகாள், சிந்தியுங்கள்!
------------------------------- மயிலாடன் அவர்கள் 30-09-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29.9.15

மகாபாரதத்தின் யோக்கியதை என்ன?-பிஜேபி, சங்பரிவார் சகோதரிகளே சிந்திப்பீர்!

மகாபாரதத்தின் யோக்கியதை என்ன?



கல்வித் திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம், கீதை முதலிய நூல்கள் இடம் பெறச் செய்யப்படும் என்று மத்திய பிஜேபி அரசு அறிவித்துள்ளது.

இந்நூல்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மதச் சார்பற்ற அரசு - இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் நூல்களைக் கற்பிக்கத் திட்ட மிடுவது சரியா? என்பது நியாயமான கேள்வி.
பிற மதத்தவர்கள் மத்தியிலும் மத நம்பிக்கையற்ற வர்கள் மத்தியிலும் இத்தகு செயல்பாடுகள் எந்த அளவு மனப் புண்ணை ஏற்படுத்தும்? வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் இப்படித்தான் ஆரம்பித்தார்கள். கடவுள் வாழ்த்துப் பாடலாக சரஸ்வதி வந்தனா என்ற இந்துத்துவா பாடலை அறிமுகப்படுத்தி னார்கள்; பிஜேபி அரசு கூட்டிய மாநிலக் கல்வி அமைச் சர்கள் மாநாட்டிலேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது; அம்மாநாட்டில் பங்கேற்ற  தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அதனை எதிர்த்து மாநாட்டை விட்டே வெளியேறினார். பெரும் பாலான மாநிலக் கல்வி அமைச்சர்களும், எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
காலம் கடந்து விட்டதால் மக்கள் மறந்து இருப்பார்கள் என்ற நினைப்போ என்று தெரியவில்லை. இப்பொழுது ஒருபடி மேலே சென்று இந்து மத இதிகாசங்களை கல்வித் திட்டத்தில் புகுத்த உள்ளனர்.

இராமாயணத்தின் தன்மைபற்றி நேற்றைய தலையங் கத்தில் குறிப்பிட்டு இருந்தோம். இன்று மகாபாரதத்தைப் பற்றி ஒரு வரைபடத்தைக் கொடுப்பது நமது கடமை.

ஏகலைவன் என்ற வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவன் வில் வித்தையில் திறமை உள்ளவனாக இருந்தான். நாய் குரைக்கும் ஒலியைக் கணித்து அம்பு எய்துக் கொன்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன். துரோணாச்சாரிக்கு மிகப் பெரிய ஆச்சரியம். தன் சீடன் அர்ச்சுனனால் தானே இது இயலக் கூடியது. இதனை எய்தவன் யார் என்று அவன் யோசித்தபோது அம்பை எய்த அந்த ஏகலைவன் துரோணாச்சாரியின் முன் வருகிறான்.
உனது குரு யார் என்ற கேள்வியைத் தொடுக்கிறான்? சுவாமி நான் உங்களிடம் வில் வித்தை கற்றுக் கொள்ள வந்தபோது, நான் தாழ்ந்த ஜாதி குலத்தில் பிறந்தவன் என்று கூறி வில் வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்தீர்கள்.
மனம் நொந்து போனேன்; ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை; உங்களைப் போல உருவம் செய்து தங்களையே என் குருவாகக் கருதி இந்த வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தேன்! என்றான் பவ்யமாக.
அப்படியா சீடா? உன் குரு பக்தியை மெச்சினோம் என்று முதுகைத் தட்டிக் கொடுத்தாரா?
எப்படிப் பாராட்டுவார்? அவர்தான் உயர் குலத்தோர் ஆயிற்றே! - வருணாசிரமத்தைக் கட்டிக் காக்கும் காகப்பட்டராயிற்றே!
அவர் திருவாய் மலர்ந்தது என்ன? நீ என்னை குருவாக வரித்துக் கொண்டுதானே வில் வித்தை கற்றாய்?
ஆமாம் என்று அடி பணிந்து நின்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன்.
அப்படியானால் எனக்குக் குரு தட்சணை கொடுக்க வேண்டாமா? கொடுப்பாயா? என்று கேட்டார்.
எது கேட்டாலும் கொடுப்பேன் என்றான் அந்த ஏதுமறியாத அப்பாவி.
உன் கட்டை விரலை குருதட்சணையாகக் கொடு! என்றான் இரக்கம் என்னும் ஒரு பொருளில்லா அந்தக் குரூரனான துரோணாச்சாரி.
அக்கணமே வெட்டிக் கட்டை விரலைக் காணிக்கை யாகத் தந்தான். கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றால், அவன் வில்லை வளைத்து அம்பை எய்ய முடி யுமா? சூழ்ச்சியிலே பிறந்த கூட்டத்தின் தலைவனல்லவா - அந்தத் துரோணாச்சாரி பார்ப்பான்.
ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மகாபார தத்தைத்தான் பள்ளிகளில் பாடத் திட்டத்தில் சேர்க்க  வேண்டுமாம்.
இதுபோல எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டு களைக் கொண்டு வந்து முன்னிறுத்தலாம். இதனையும் தாண்டி மகாபாரதம் போதிக்கும் நீதிதான் என்ன? பாண்டவர்கள் கிருஷ்ணன் துணையோடு உறவினர் களுடன் போரிட நேரிட்டது பலன் கருதாப்பணியா? அவர் களைக் கொன்று வென்று நாட்டை ஆள வேண்டுமென விரும்பியது பலனை எதிர்பார்த்த பணிதானே?
துரோணரின் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்று தருமரை ஏவிப் பொய் சொல்ல வைத்தது ஏன்? கவுரவர்களுக்குப் போரில் பெருந் துணையாக இருக்கும் துரோணாச்சாரியாரைக் கொல்ல வேண்டுமென்ற சூழ்ச்சியால் தானே? தருமரைப் பொய் சொல்ல வைத்தது பலன் கருதாப் பணியா? கிருஷ்ணன் போரில் ஜயந்திரனை நோக்கி சூரியன் மறைந்து விட்டது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்? பலன் கருதாப் பணியை வலி யுறுத்தும் கிருஷ்ணன், இதனைப் பலன் கருதாமலா சொன் னான்? மெய்க் காப்பாளர்கள் துணையின்றித் தனிமையி லிருந்த ஜயந்திரனை அம்பெய்து கொன்றது பலன் கருதாப் பணியா?
பெண்ணாகப் பிறந்தவரிடம் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை அவருக்கு எதிரேயிருந்த சிகண்டிக்குப்பின் நின்று கொண்டு அர்ச்சுனன் பீஷ்மரைக் கொன்றது பலன் கருதாப் பணியா? (நூல்: கீதையின் மறுபக்கம் ஆழமும் அகலமும் - பா. வீரமணி)
இத்தகு ஒழுக்கக் கேடான நூலை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டுமா?
தி இந்து இங்கிலீஷ் நாளேட்டின் ஆசிரியர் கடிதம் பகுதியில் ஒரு கடிதம் வெளி வந்தது. அதனை எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் வெளிவந்த நாள்: 17.12.1988.
அந்தக் கடிதம் என்ன கூறுகிறது?

எமதர்மன்  வாயு பகவான்  ஆகியோரால் குந்திக்கு, தர்மர் முதலியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப் பற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கு கிறார்கள். பெற்றோர்களால் பிள்ளைகளின் அத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை; அது தெய்வ சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது பாண்ட வர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?
எனவே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மகாபாரதம் தொடரை வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பார்க்க முடியவில்லை. வயது வந்தவர்களுக்கு மட்டும்  என்று அறிவித்து நள்ளிரவு நேரத்தில் மகாபாரதத் தொடரை ஒளிபரப்ப வேண்டும் என்று இந்து ஏட்டில் கடிதம் எழுதப்படவில்லையா? அந்த மகாபாரதத்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப் போகிறதாம் பாரதிய ஜனதா அரசு; பெற்றோர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!!

                     -----------------------------”விடுதலை” தலையங்கம் 29-09-2015
*********************************************************************************


இந்து மதம் பெண் களுக்கு இழைத்த கொடுமை போல வேறு எந்த நிறுவ னமும் இழைத்திடவில்லை. கணவன் இறந்தால் அவ னோடு கட்டி வைத்து பெண்ணை எரித்த கொடுமையை என்னென்று சொல்ல!

வரலாற்றாசிரியர் ஃபிலிப் மேசன் எழுதிய ஒரு கட்டு ரையில் இவ்வாறு கூறப்படு கிறது.


வங்காளத்தில் உடன் கட்டை ஏறிய பத்துப் பெண் களில் ஒன்பதுபேர் அச்சத் துடனும், நடுக்கத்துடனும் சிதையில் (நெருப்பில்) அமர்ந் தனர். (விருப்பத்துடன் அல்ல) உயிருடன் எரிக்கப்பட விருப்பதை அறிந்தவுட னேயே தன்னிலை இழந்து - தன் நினைவு இழந்து விடு கின்ற பெண்ணை அவனது கணவனின் சடலத்துடன் சேர்த்துக் கட்டி விடுவது வழக்கம். சிதையில் வைக்கப் பட்டால் எரியும் நெருப் பினால் கட்டுக்கள் தளர்ந்து விடும் நிலையில், அந்த பெண் சிதையிலிருந்து எழுந்து ஓடி வந்து விடுவாள் என்ற எதிர்பார்ப்புடன், அப்படி ஓடி வந்தால் அவளை சிதை நெருப்பில் தள்ளுவதற்காக ஆண்கள் பலரின் கைகளிலும் கம்பு களுடன் சிதையைச் சுற்றி நிற்பார்கள். சிதையில் ஏற்றப் பட்ட ஒரு பெண் - மழை பெய்து கொண்டிருந்த இரவில், சிதையிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, ஊரார் தன்னைப் பார்த்து விட்டால், மீண்டும் நெருப் பில் தள்ளி விடுவார்கள் என்று அஞ்சி ஒரு புதரில் ஒளிந்து கொண்டிருந்தாள். ஆனால், ஊரார் அப்பெண் ஒளிந்து கொண்டிருந்ததைக் கண்டு பிடித்து விட்டனர். அந்தப் பெண்ணினுடைய மகனே அந்தத் தாயை இழுத்துக் கொண்டு வந்து அவளது கைகளையும், கால்களையும் கட்டி, மீண்டும் நெருப்பில் தள்ளி விட்டுச் சென்றான்

- வரலாற்று ஆசிரியர் ஃபிலிஃ மேசன் தி வீக் 11- 17,1987).


இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம். பிஜேபி ஆட்சி கொண்டு வரத் துடிக்கும் ராமராஜ்ஜியம் - இந்து ராஷ்ட்டிரா!
வெகு தூரம் போக வேண்டாம். நாம் வாழும் காலத்திலேயே ராஜஸ்தானில் ரூப்கன்வர் என்ற பெண் ணுக்கு என்ன நேர்ந்தது? அந்தக் கருப்பு நாளில் (1987 செப்டம்பர் 4) கணவனோடு எரித்துக் கொலை செய்ய வில்லையா!?
சதி மாதா! ஆக்கப் பட்டுக் கோயில் கட்டிக் கும்பிட ஆரம்பித்தனரே! காணிக்கையாக ரூ.21 லட்சம் பூஜைப் பொருட்கள் விற் பனை மூலம் ரூ.20 லட்சமும் கிடைத்த தகவலை அதே தி வீக் இதழ்தான் அம்பலப் படுத்தியது.
இதில் கொடுமைக்குப் பொட்டு வைத்த கதை ஒன்று இருக்கிறது. அவரையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆஞ்ச நேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பதிவர்த்யத்தால் (சக்தியால்) அவரைப் பாதிக்காமலேயே இருந்தது. குமாரிலபட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற (சங்கர) ஆச் சாரியாரின் ஸாந்நியத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது. அனேக பதி விரதைகளுக்கு அவருடைய பதிபக்தியினாலேயே சிதாக்னி (நெருப்பு) சந்தன மாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்துணை அக்னி யிலும் எரியாமல் இருக்கு மாம். அதை எடுத்துப் பூஜை பண்ணுவதுண்டு!
- காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி
தெய்வத்தின் குரல் 2ஆம்பகுதி பக்கம் 967-968)
ஈவு இரக்கமற்ற இவர் தான் லோகக் குருவாம் - மகா பெரியவராம் - அருமை சகோ தரிகளே - இந்த இந்துத் துவா உங்களுக்கு வேண்டுமா?
பிஜேபி, சங்பரிவார் சகோதரிகளே சிந்திப்பீர்!

------------------------------  மயிலாடன் அவர்கள் 29-09-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.9.15

பாடத் திட்டத்தில் பாரதம் - இராமாயணமா?-இந்து சகோதரிகாள்!


பி.ஜே.பி., மற்றும் ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரைச் சேர்ந்த இந்துத் துவ அமைப்பில் இருக்கும் பெண்கள்  சிந்திப்பதற்கான உண்மைகள், தக வல்கள் ஏராளம் உண்டு!
வடமொழியிலிருந்து சுலோகம் ஒன்று ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப் பட்டு இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்தது.
Only when fire will cool, the moon Burn, or the ocean fill with tasty water will a woman pure.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.12.1990)

எப்பொழுது தீ தென்ற லாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ, அப் போதுதான் ஒரு பெண் ணும் தூய்மையான வளாக இருப்பாள் - இது தான் இந்தியன் எக்ஸ் பிரஸ் வெளியிட்ட ஆங்கி லத்தில் இருந்த சுலோகத் தின் பொருளாகும்.
விடுதலை வெளி யிட்டு இருந்தால் வேறு கண்ணோட்டத்தில் பேசக் கூடும்; வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு அல்லவா?
பி.ஜே.பி. - இந்து முன்னணி வகையறாக்கள் என்பதைவிட இவ்வமைப் புகளில் உள்ள சகோதரிகள் சிந்திக்க வேண்டும். இந்த அமைப்புகள் கூறும் இந்து ராஜ்ஜியத்தில் இவைதானே சட்டாம்பிள்ளைகள்?
கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏ(ற்)றும் கொடுமை இந்த அர்த்தமுள்ள (?) இந்து மதத்தில்தானே இருந்தது.
வெள்ளைக்காரன் கிறிஸ்தவன் - அவன் இந்த நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டான் என்று ஆக்ரோசமாக வார்த்தைகளைக் கொட்டு வார்கள்; அந்த வெள்ளைக் காரன் சதி என்ற உடன் கட்டை ஏ(ற்)றுதலை சட் டப்படி ஒழிக்காவிட்டால் ஒரு வசந்த்ரா ராஜே ராஜஸ் தான் முதல் அமைச்சராக இருக்க முடியுமா? ஒரு விஜயலட்சுமி பண்டிட் அய்.நா.வின் தலைவராக வந்திருக்க முடியுமா? ஒரு சிவசங்கரி எழுத்தாளராக  உலா வர முடியுமா?


கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் சதி (உடன்கட்டை) தடை செய்யப்பட்டபோது, இந்திய இராணுவத்தின் கமாண்டர் - இன் - சீஃப் சர் சார்லஸ் நேப்பியரை பார்ப்பனர் குழு ஒன்று சந்தித்து, இந்துக்களின் தேசிய பழக்க வழக்கங் களில், கலாச்சாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டீஷ் மகாராணி உறுதி அளித்திருப்பதை அவருக்கு நினைவுப்படுத் தினார்கள்.

அதற்குக் கமாண்டர் - இன் - சீஃப் நேப்பியர் சொன்ன பதில் தான் அலாதியானது. ஆம் அழகானது!
என்னுடைய நாட்டி லும் ஒரு பழக்கம் இருக் கிறது. பெண்களை உயி ருடன் எரிக்கும் ஆண் களைத் தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக் கம். நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படி தான் நடக்கிறோம் என்று பதிலடி (தி வீக் - அக் டோபர் 11-17 (1987) கொடுத் தாரே பார்க்கலாம்! வந்த பார்ப்பனக் குழுவோ கப்-சிப்! என்ன சொல்கிறீர்கள் இந்துத்துவா சகோதரிகளே?
                   ----------------------- மயிலாடன் அவர்கள் “விடுதலை” 28-09-2015 இல் எழுதிய கட்டுரை
********************************************************************************************************

இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் சிறப்புப் பாடமாக சேர்ப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.   இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா புதுடில்லியில் கூறிய தாவது: கலாச்சார சீரழிவுகளால் நம்நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சார பெருமைகளை இளம் தலை முறைகள் உணர வேண்டும் என்பதற்காக, நம் பழம்பெரும் இதிகாசங் களான இராமாயணம், மகாபாரதம் மற்றும், புனித நூலான பகவத் கீதையை, பள்ளி, கல்லூரிப் பாடத் திட்டங்களில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. நமது கலாச்சாரத்தின் ஒரு அம்சமாகவே இத்திட்டம் வரவிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை அரசு திணிக்க உள்ளது போன்ற விமர் சனங்கள் வந்தாலும், இத்திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை. உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சாரப் பெருமைகளை, இளம் தலைமுறைக்கு கற்பிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் எங்கிருந்து வந்தது? என்று இணைஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவர் செப்டம்பர் 4 ஆம் தேதி பத்திரிகை யாளர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்து மகேஷ் சர்மா பேசிய விவரம் குறித்து எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள் ளது. அதில் பாஜக கல்வி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்கள் நாடு முழுவதுமுள்ள அனைத்து கலாச்சார அமைப்புகள், மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விரைவில் சந்திப்பு நடத்தவிருக்கிறோம். இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வரும் புதிய கல்வித் திட்டத்தை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைக்குக் கொண்டுவர வேகப்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதற்கான தடைகள் மற்றும் எதிர்ப்புகளை எவ்வாறு கையாளவேண்டும் என்று ஆலோசனைகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.
மத்தியில் உள்ள பிஜேபி அரசு பச்சையான பார்ப்பனீய அரசு என்று நாம் சொன்னால் உங்களுக்கு எப்பொழுதும் இது போன்ற பார்வைதான்! என்று பொத்தாம் பொதுவாகப் பேசும் புண்ணியவான்கள் இதற்குப் பிறகாவது கண்களைக் கொஞ்சம் கழுவி சுத்தம் செய்து விட்டு இதனைக் காண வேண்டும்.
இராமாயணமும், மகாபாரதமும் காவியங்கள் தானே? அவற்றைப் போதிப்பதில் என்ன தவறு? என்று மேலெழுந்த வாரியாகக் கேள்வி கேட்பவர்கள் உண்டு, விவரம் தெரியாத முறையில் இப்படிக் கேள்வி கேட்பவர்கள் உண்டு. விவரம் தெரிந்தும், இந்தப் பிரச்சினையில் வேர் வரை சென்று எவரும் வெடி வைத்து  விடக் கூடாதே என்ற ஜாக்கிரதைத் தனத்தோடு திசை திருப்பும் வகையில் இதே கேள்வியைக் கேட்பவர்கள் ஆபத்தானவர்கள்.
இராமாயணம், மகாபாரதம் குறித்து தந்தை பெரியார் அவர்களோ, கைவல்யம் போன்றவர்களோ, அறிஞர் அண்ணாவோ, மறைமலை அடிகள் போன்ற தமிழ்க் கடலோ கூறுவதைக்கூடக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்!
வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொன்னார்கள் என்பதைக் கண்டிப்பாகக் கணக்கில் கொண்டு சிந்திக்க இணங்குவது தான் கண்ணியமானது.
வரலாற்றாளர்களில் மற்றவர்கள் சொல்லுவதைக்கூடப் பொருட்படுத்த வேண்டாம் விவேகானந்தர் யார்? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்தவர்தானே? அவர் என்ன சொல்லுகிறார்?
தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அழைக்கப்பட்டிருக் கிறார்கள். (சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டு ரைகளும் எனும் நூல் - இராமாயணம் என்ற தலைப்பு பக்கம் 587).
இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
இராமாயணம், மகாபாரதம் என்னும் இரண்டு இதிகாசங் களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன. மகாபராதம் கங்கை நதிச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.
இவ்வாறு எழுதி இருப்பது திராவிடர் இயக்கச் சிந்தனை யாளர்கள் அல்லர் - எழுதி இருப்பவர் முன்பு கல்வி அமைச்ச ராக விருந்த சி.ஜே. வர்க்கி  - நூல் இந்திய சரித்திரப் பாகுபாடு - பக்கம் 15).
இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப் பட்ட நூலாகும்.
- (பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளை மலபார் குவார்ட்டிர்லி ரிவ்யூ)
இதுபோல இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளை வண்டி வண்டியாகக் குவிக்கலாம்.

இராமாயணத்திலிருந்து ஒரே ஒரு எடுத்துக்காட்டை முன்னிறுத்தினாலே கூடப் போதுமானது. சம்பூகன்வதை என்ற ஒன்று போதாதா?
ஒரு நாள் ஒரு பிராமணன் இறந்துபோன தனது பிள்ளை யினுடைய உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, உனது கொடுங்கோலாட்சியில் நடந்த கதியைப் பார் என்று பலவிதமான வசைமொழிகளைப் பொழிந்து கதறினான். அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும்பொழுது, சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணு கிறான். அவனைக் கொல்லாமிலிருந்த குற்றத்தால், இக்குழந் தையின் உயிர் நீங்கிற்று. ஆயினும், காலங்கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும் என்று அசரீரி வார்த்தை மொழிந்ததாம். உடனே கோடை காலத்தில் காட்டுத்தீயின் நடுவில்  அகப்பட்டவன் மழையினால், எங்ஙனம் மகிழ்ச்சியுறுவானோ, அத்தகைய மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று, அந்தத் துறவியைப் பார்த்து, நீ எதன் பொருட்டுத் தவம் பண்ணுகிறாய்? என வினவ, அதற்கு அவர், இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை. உண்மை நிலை ஒன்றினையே விரும்பு கிறேன் என்று விடை பகர, ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, சூத்திரன் தவம் பண்ணலாமா? இதனாலன்றோ பிராமணச் சிறுவன் இறந்தான்! ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்லுவது பாவமாகாது. எதிர்மறையாக, இவனைக் கொல்லுவதால், இறந்துபோன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால், பெரும் புண்ணியத்தை அடைவோமே என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து இங்ஙனம் கூறுகிறான்:-
ஹே! ஹஸ்த தக்ஷிண மருதஸ்யசி சோர்த்விஜஸ்ய
ஜிவாதலே விஸ்ருஜ சூத்ர முனௌக்ருபாணம்:
ராமஸ்ய காத்ரமஸி..............................................................................

பொருள்: ஓ! வலக் கையே, இறந்துபோன 1 பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர் பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்றன்றோ? இராமனால் சூத்திரன் சம்பூகன் வெட்டப்பட்டதும் செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர் பெற்றது என்று எழுதி இருக்கிற அக்கிரமத்தை என்னவென்று சொல்ல!
இது அறிவுக்குப் பொருந்துமா என்பது ஒரு புறம் இருக் கட்டும். இதன் நோக்கம் பிறப்பின் அடிப்படையிலான வருண தர்மத்தை நிலை நிறுத்துவது தானே!
இந்த இராம ராஜ்ஜியத்தை உருவாக்கவே - மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி தோள் தட்டி எழுந்து நிற்கிறது. அதன் முதற் படியாகக் கல்வி திட்டத்தில் இந்த இரு இதிகாசங் களையும் வைக்கிறது என்றால் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா?
இராமாயணத்தையும் இராமன் படத்தையும் எரித்த இயக்க மட்டுமல்ல. இராவண லீலா நடத்திய தன்மான இனமான இயக்கம்தான் திராவிடர் கழகம். மத்திய அரசு இந்த இதிகாசங் களைக் கல்வித் திட்டத்தில் திணிக்குமானால், அதன் எதிர் விளைவு கடினமானதாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
                              -------------------------------------"விடுதலை” தலையங்கம் 28-09-2015