Search This Blog

29.5.16

தமிழனுடைய கடவுளை பார்ப்பான் கும்பிடுகிறானா?

தமிழனுடைய கடவுளை பார்ப்பான் கும்பிடுகிறானா?
- தந்தை பெரியார்
தலைவரவர்களே, தோழர்களே,
சிறை சென்ற தலைவர்களை பாராட்டுவதற்கு ஆக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் தலைவர்களை பாராட்டிப் பேசினவர்கள் அவ்வளவு பேரும் அரசியலில் காங்கிரஸ்காரர் செய்த கொடுமையை எடுத்துச் சொல் லியும், அவர்கள் ஒழிந்துவிட்டதற்கு மகிழ்ச்சி அடைந்தும், இனி பார்ப்பனர் ஆட்சி தலை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வெகு உருக்கமாகவும் உற்சாகமாகவும் பேசி னார்கள். அவர்களது உற்சாகத்தை நான் பாராட்டுகிறேன். ஆனாலும் இன்றுள்ள நிலையில் பார்ப்பனர் களை அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விரட்டி விட முடியுமா? ஒரு சமயம் முடிந்துவிட்டாலும் அதனாலேயே பார்ப்பனிய எல்லாக் கொடுமைகளில் இருந்து நாம் விடுதலை அடைய முடிந்து விடுமா?
பார்ப்பனியக் கொடுமை
உதாரணம் சொல்லுகிறேன். பார்ப்பன ஆதிக்கம் அரசியல் ஆதிக் கத்தைக் கைப்பற்றி இந்த 30 மாத காலத்தில் செய்த கொடுமை அளவற் றது என்று நீங்களே இப்பொழுது எடுத்துக் காட்டினீர்கள். நமது கல் வியை அழிக்கக் குழி வெட்டி விட் டது. உத்தியோகத்திலுள்ள பார்ப்பன ரல்லாதார்களை ஒழிக்கப் பல சூழ்ச் சிகள் செய்தது. பார்ப்பனர்களுக்கு ஆயிரக்கணக்கில் உத்தியோகம் கொடுக்க 10 புது வரிகளைப் போட்டு பணம் திரட்டிக் கொண்டது. அதற் காகப் பல கொடுமைகள் செய்து, பல இலாகாக்களைச் சிருஷ்டித்து, உத்தி யோகங்களைச் சிருஷ்டித்துக் கொடுத் திருக்கிறது. இதற்காக நமது பேரால் 6 கோடி ரூபாய் கடனும் வாங்கப்பட்டு இருக்கிறது. நம்மவர்களை - நான் உட்பட 1300 பேர்கள் - சிறையில் தள்ளிக் கொடுமை செய்தது. மற்றும் பல அட்டூழியங்கள் நடத்திற்று.
இந்த விஷயம் நம் நாட்டிலுள்ள ஆண், பெண், கூன், குருடு, மொண்டி, முடம் வரை எல்லோரும்தான் அறிந் திருக்கின்றனர். அதனால் துன்பமும் அடைகின்றனர். கிராமம் சந்து பொந்து எங்கும் இதே பேச்சாய் இருக்கிறது. இதை யாராலாவது மறுக்க முடியுமா? மறுப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு சமா தானம் சொல்லுகின்றேன். அதாவது, இம்மாதிரி பொது ஜனங்கள் பேசி ஆத்திரம் கொண்டிருப்பதால்தான் மந்திரிகள் செல்லுமிடங்களில், அதுவும் முதல் மந்திரியும், முஸ்லிம் மந்திரியும் செல்லுமிடங்களில்கூட என்றாவது எங்காவது கறுப்புக் கொடி, போலீஸ் பந்தோபஸ்து இல்லாமல் செல்ல முடியாமலும், 144 போட்டு எதிர்ப்பு களை அடக்கி போலீஸ் படை வைத்து ஊர் ஜனங்களை மிரட்டியும் அல் லாமல் எங்கும் மந்திரிகள் நடமாட முடியாமலும் இருந்து வருகிறது. இதுவே போதுமானதாகும்.
இப்படியெல்லாம் இருந்து சமீப காலத்தில் நடந்த 5 ஜில்லாபோர்டு தேர்தல்களில் பார்ப்பன ஆதிக்கத் திற்கே பெருமிதமான வெற்றி ஏற்பட் டிருக்கிறது. தோழர் ஆச்சரியார் வைஸ்ராய், கவர்னர் ஆகியவர்களி டம் தனது வகுப்பாருக்கும், தனது ஆட்சிக்கும் தமிழ்நாட்டில் ஆதரவும் செல்வாக்கும் இருப்பதாகச் சொல்லி இந்தத் தேர்தலையே உதாரணமாகக் காட்டியதோடு, சட்டசபையிலும் ஆணவமாகப் பேசி இவ்வளவு மக்கள் ஆதரவு எங்களுக்கு இருக் கையில் நாங்கள் எப்படி இந்தப் பதவிகளை விட்டுப் போவது என்று கேள்வி கேட்டிருக்கிறார். அவர் சொல்வதற்கு நாம் என்ன பதில் சொல்லுவது?  அவர்கள் தேர்தலில் செய்த சூழ்ச்சிகளும் நாணயக் குறை வான காரியங்களுமே காட்டப்பட் டால் போதுமானதாகி விடுமா? இனி யும் அந்தச் சூழ்ச்சிகளும், நாணயக் குறைவுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ள நம்மிடம் என்ன இருக்கிறது?
இனி மேல்?
ஆகவே, இனி பார்ப்பன ஆதிக்க ஆட்சியின் கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் மாத்திரமே பொது மக்களிடம் சொல்லிக் கொண்டிருந் தால் போதாது. பல தடவை எடுத்துச் சொன்ன பிறகும்தான் இந்தப் பலன் ஏற்பட்டிருக்கிறது. ஆதலால், இனியும் தோழர்கள் ஆச்சாரியாரையும், சத் தியமூர்த்தியாரையும்பற்றிய குறை யையும், அவரது ஆட்சி கொடுமை யையும் மாத்திரம் சொல்லிக் கொண் டிருந்தால் ஒரு பயனும் ஏற்படாது. ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியும் அரசியலில் இல்லாத காலத்தில் நாம் என்ன நல்ல யோக்கியதையில் இருந்து விட்டோம்? இவர்கள் போய்விட்டால், இவர்களது ஆட்சியை ஒழித்து இவர் களை வீட்டிற்கு அனுப்பி விட்டால் இனி வேறு ஆச்சாரியும், சத்திய மூர்த்தியும், ஸ்ரீநிவாச சாஸ்திரியும் வர மாட்டார்களா அல்லது உற்பத்தி ஆக மாட்டார்களா என்று கேட்கிறேன்.
ஆகவே, இனி நாம் ஏதாவது பயன்படத்தக்க வேலை செய்ய வேண்டுமானால் ஆச்சாரிகளும், சாஸ்திரிகளும் விரட்டப்படுவது மாத்திரம் பயன்படாது. சிறிதும் பயன் படாது. இனி மேலும் ஆச்சாரியார், சாஸ்திரிகள் உற்பத்தி ஆகாமல்  பார்த் துக்கொள்ள வேண்டும். அவர்கள் உற்பத்தி ஆவதற்கு நாம் தான் உரம் போட்டு, தண்ணீர் விட்டுக் காப் பாற்றிக் கொடுக்கிறோம். வெள் ளாமை செய்து பயிர் வளர்த்துக் கொடுத்து விட்டு விளைந்த விளை வால் நாம் துன்பப்படுகிறோமே என்று சொல்லுவது முட்டாள்தனமா இல் லையா என்று கேட்கின்றேன்.
அஸ்திவாரத்தில் கை வைக்க வேண்டும்
ஆதலால், அஸ்திவாரத்தில் அடி வேரைப் பறித்து வெந்நீர் ஊற்றி, அந்தப் பயிர் முளையிலேயே கருகிப் போகும்படி செய்யவேண்டும், அனா வசியமாகப் பார்ப்பனர்மீது குறை சொல்லி வருத்தப்படுவதில் பய னில்லை. அவர்கள்மீது  ஒரு தப்பித மும் இல்லை. நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி நமக்கு இல்லாத தப் பிதத்தைத் திருத்திக்கொள்ள வேண் டும். நம்மைப் பார்ப்பனிய பிளேக்கும், உளமாந்தையும் அழிக்காமல் பார்த் துக்கொள்ள நமக்குச் சக்தி இல்லை.  நோய்க்கு இடம் கொடுத்துவிட்டு நோய் வந்த பிறகு மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பதில் நம் வாழ்நாள் பூராவையும் கழித்துக் கொண்டிருப் பதைவிட நோயினால் செத்துப் போவதே மேல் என்பேன்.
ஆகையால், நோயே ஏற்படுவ தற்கு வகை இல்லாமல் செய்ய வேண் டும் இனி அதுவும் நமது வேலையாய் இருக்க வேண்டும். ஆரிய மதம் காரணம்
இன்று இப்பார்ப்பன விஷ நோய் நம் நாட்டில் பெருகியதற்கும், நம் மக்கள் அதற்கு பலியாவதற்கும் காரணம் பார்ப்பனர்கள் அல்ல. நாம்தான் நம்முடைய அறிவீனம் என்னும் அசுத்தத்தால் அந்நோய்க்கு ஆதாரமான பூச்சியை வளர்த்துக் கொண்டோம். அந்த அசுத்தம்தான் தமிழன் ஆரியப் பார்ப்பன மதத்தைத் தழுவியதாகும். தமிழன் என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ, ஆரி யனைத் தமிழன், என்று தன்னுடைய நாட்டான் தோழன் என்று  கருதி னானோ அன்றே தமிழனுக்கு உள மாந்தையும், பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும், வீரமும், அறிவும், ஆற்றலும் அடி யோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் - ஆண் பெண் அடங்கலும் அடிமை, வைப்பாட்டி மக்கள் ஆக இருக்கும் படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட் டன. அந்த ஆதாரங்களே தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின. அந்த - அதாவது தமிழன் ஏற்றுக் கொண்ட ஆரிய மதமும், அவன் ஏற்றுக் கொண்டு நடக்கும் ஆரிய மதக் கொள்கையும்தான் இன்று ஆயிரக் கணக்கான ஆச்சாரியார் களையும், டாக்டர் ராஜன்களையும், சத்தியமூர்த் திகளையும், வரதாச்சாரி ஆலாசியம் என்கின்றவர்களுமான நோய்ப் பூச்சிகளையும், நோய்களையும் உற்பத்தியையும் செய்து வருகின்றன.
தமிழன் ஆரிய மதத்தைவிட்டு வெளியே வந்தாலொழிய தமிழன் வேறு, ஆரியன் வேறு; தமிழன் மதம், கடவுள், கலைகள், வேறு; ஆரியன் மதம், கடவுள், கலை, சாஸ்திரங்கள் வேறு என்ற உணர்ச்சி வந்து உண்மை அறிந்தாலொழிய இந்த பார்ப்பனிய உளமாந்தை, பிளேக் நோய்களிலி ருந்து தப்ப முடியாது; அந்நோய்ப் பூச்சிகளையும் அழிக்க முடியாது. ஆச்சாரியாரும், சத்தியமூர்த்தியாரும் எங்கிருந்து தொப்பென்று குதித் தார்கள் அவர்கள் என்ன ராமன் கிருஷ்ணன் போல் ராட்சதர்களை (தமிழர்களை) அழிக்க அவதாரமெ டுத்தவர்களா? இல்லை இல்லை. அவர்கள் தகப்பன்மார்களுக்கு நாம் திதி, திவசம், சங்கல்பம், அஷ்டோத் தரம், சகஸ்ரநாமம், அபிஷேகம், உற்சவம், கல்யாணம், சாந்திமுகூர்த் தம், எட்டு எழவு, கல்லெடுப்பு என்னும் பேரால் அழுத பணங்களும் காசுகளும், அரிசி, பருப்பு, செருப்பு புடவைகளும் அல்லவா இன்று ஆச்சாரியார், சாஸ்திரியார், அய்யங் கார், அல்லாடியார், மூர்த்தியார் என்கின்ற விஷக் கிருமிகளாக நம்மை அரித்து தின்கின்றன என்று கேட்கிறேன்.
தமிழனுக்கு மானம் வேண்டும்
தமிழனுக்கு இந்த இடத்தில் தெளி வும் மானமும் ரோஷமும் ஏற்பட்டா லல்லவா இவ்விஷ நோயிலிருந்து இனியாவது தப்ப முடியும்? வீணாக பார்ப்பனத் தோழர்களை குறை சொல்லுவதில் பயன் என்ன என்றே மறுபடியும் கேட்கிறேன்.
நீங்கள் எவ்வளவு வேண்டுமானா லும்  கட்சி ஏற்படுத்துங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் ஸ்தாபனத்தைப் பலப்படுத்துங்கள். இந்த அஸ்திவார வேலையையும் செய்யாமல் தமிழன் ஒரு நாளும் மானமுள்ள மனிதத் தன் மையுள்ள தமிழனாக வாழ முடியாது என்பது எனது பலமான உறுதி.
ஆத்திரமுண்டு - ஆனால்?
தமிழர் கட்சியிலும் ஜஸ்டிஸ் கட்சி யிலும் உள்ள அனேக தமிழர்களை எனக்குத் தெரியும். பார்ப்பனர்களைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சலாமா என்கின்ற ஆத்திரத்தோடு அனேகர் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அத் தமிழர்கள் தங்கள் வீட்டில் பெண்டு பிள்ளைகளுடன் பார்ப்பான் காலைக் கழுவின நீரை உட்கொண்டால்தான் மோட்சம் உண்டு; அவன் காலில் தங்களது குடும்ப மக்களின் உச்சித் தலை பட்டால்தான் ஜன்மசாபல்யம் ஆகும் என்று கருதி இருக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இக்காட் சியை சென்னையில் அதிகமாகக் காணலாம்.
சனாதனப் பார்ப்பனர்களோடு நான் பேசினேன். என்பதற்கு ஆகவும், உண்மையான சனாதனிகள் தாங்கள் தங்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாய்ச் சொல்லி விடு கிறார்கள் என்று பாராட்டியதற்கு ஆக வும் என்மீது கோபித்துக் கொண்ட சென்னைத் தமிழர்களும் - பார்ப்பன ரல்லாத தலைவர்களும், பலர் தங்கள் வீட்டில் இன்றைக்கும் பார்ப்பான் வந் தால்தான் வீடு புனிதமாகுமென்றும் அவன் காலில் தங்கள் தலைமுட்டி னால்தான் தங்கள் பெற்றோர்கள் மோட்சமடைவார்கள் என்றும் கருதிக் கொண்டிருக்கிற அநேக முட்டாள் களைப் பார்க்கிறேன்.
நாம் இங்கு கிளர்ச்சி செய்து ஒரு ஆச்சாரியையும், ஒரு சாஸ்திரியை யும், ஒரு அய்யரையும் ஒழிப்பதானால் நமது மக்களில் ஏழை முட்டாள்களும், பணக்காரமடையர்கள் கற்றறிந்த மூடர்களும் ஆயிரக்கணக்கான ஆச் சாரியும், அய்யரும், சாஸ்திரியும் உண் டாகச் சடங்குகள்மூலம் நன்றாய் உழுது, தட்சணை அரிசி பருப்பு சாமக்கிரியைகள் மூலம் நல்ல எருப் போட்டு அவர்கள் கடவுள்களையும், பண்டிகைகளையும் கொண்டாடு வதன் மூலம் நல்ல மணியான விதை விதைத்து ஜாதிகள் மூலம் பயிர் களைக் காப்பாற்றி ஆச்சாரி, சாஸ்திரி அய்யர் அய்யங்கார் என்ற நல்ல அறுவடை உண்டாகி குதிர் நிரப்பும் படி செய்து விடுகிறார்கள். இந்த மடஜனங்களைக் கொண்ட தமிழர் சமுகம் என்றுதான் மானமடையும் - என்று தான் மனிதத் தன்மை அடைந்த மனிதனாக  வாழ முடியும் என்பதை தயவு செய்து சற்று சிந்தித்துப் பாருங்கள்; வீணாகப் பார்ப்பனர்கள்மீது குறை கூறாதீர்கள். அவர்களைத் துவேஷிக் காதர்கள். அவர்களால் நாமடையும் கொடுமைக்கு அஸ்திவாரம் இன்னது என்று கண்டுபிடித்து அதை அடி யோடு அழிக்க முயற்சி செய்யுங்கள் என்பதற்கு ஆகத்தான் இதைச் சொல் லுகிறேன் ஒழிய வேறில்லை. இதை 15 ஆண்டுகளாகவே சொல்லி வருகி றேனே ஒழிய, இன்று மாத்திரம் அல்ல.
நம் ஈன நிலைக்கு உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். இன்னும் சிறிது நாளில் தீபாவளி என்னும் ஆரியப் பண்டிகை வருகிறது. அத்தீபாவளிக் கும் கலப்பில்லாத தமிழனுக்குப் பிறந்த தமிழனுக்கும்  என்ன சம்மந் தம்? தமிழர் சமயத்திலோ தமிழர் கலைகளிலோ சங்க இலக்கியங் களிலோ தமிழன் தீபாவளி கொண்டா டியதாக ஆதாரமிருக்கிறதா? கொண் டாடுவதற்குத் தேவை இருக்கிறதா?
தமிழன் சாஸ்திரமும், கடவுளும்
பாரதமும், ராமாயணமும், கந்த புராணமும், இவைகளில் வரும் கதைகளும் கடவுள்களும் மற்றும் அவை சம்மந்தமான பண்டிகை விர தங்களும் தமிழனுக்குச் சம்பந்தப்பட் டவையா? இவை தமிழனுடைய கலைகளா? தமிழர் சமய சாஸ்தி ரங்களா? என்று கலையுணர்ந்த சகல வல்லப பண்டிதர்களைக் கேட்கிறேன்.
ராமனும், கிருஷ்ணனும், சுப்ரமணி யனும், கணபதியும், அவர்கள் அப்பன் களாகிய - லட்சுமி புருஷனான மகா விஷ்ணுவும், பார்வதி புருஷனான பரமசிவனும் தமிழர்களுடைய கடவுள்களா என்று கேட்கிறேன்.
தமிழர்களுடைய கடவுளானது முஸ்லிம்களுடைய கடவுள் போல வும், கிறிஸ்தவர்களுடைய கடவுள் போலவும் உருவம் குணம் பஞ்சேந்தி ரியங்களுக்கும் எட்டும் தோற்றம் ஆகியவை இல்லாதது என்றல்லவா தமிழர் கலை ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். வேண்டுமானால் அப்படிப்பட்ட கடவுளையல்லவா தமிழ் மக்கள் தொழவேண்டும்.  பிரார்த்திக்க வேண்டும்.
மனித உருவம், அதுவும் பார்ப்பன உருவம் 2 பெண்டாட்டி பல பெண் டாட்டி, மற்றும் வைப்பாட்டி, தாசி, தனக்குப் பிறந்த குழந்தைகள், தாசிக் குப்பிறந்த குழந்தைகள், விபசாரத்தில் பிறந்த குழந்தைகள் அவைகளும் கடவுளாகவும்; தினமும் கட்டிலில் அம்மனுடன் படுத்து உறங்கும் கட வுளும், அதற்காக சீனா கற்கண்டும், சாரப்பருப்பு பாதாம் பருப்பு சத்துக் கலந்த சுண்டின பாலையும் தன் கட் டிலடியில் வைத்துவிட்டுப் போகும் படி குருக்களுக்குச் சொல்லும் கடவுளும் ஒரு மணி நேரம் பொறுத்து அதே குருக்கள் வந்து அதை எடுத்து குடிக்கப் பார்த்திருக்கும் கடவுளும் தமிழனுடைய கடவுளாகுமா என்று கேட்கிறேன்.
ராமனும் கிருஷ்ணனும், கந்தனும் பட்சி மீதும் மிருகம்மீதும் சவாரி செய்து கொண்டிருக்கும் கற்பனை உருவங்களும், மற்றொருவனும் தமி ழனுக்கு எப்பொழுது எப்படி கடவு ளானார்கள் என்றும், நமக்கு உருவ முள்ள பெண்டு பிள்ளை உள்ள கடவுள்கள் எப்படி வந்தன. எப்பொ ழுது வந்தன? இம்மாதிரி கடவுள் வைக்கப்பட்டிருக்கும் கோவில் களுக்கு நல்ல ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஏன் போக வேண்டும் என்றும் நான் முட்டாள் களைக் கேட்கவில்லை. பட்டை நாமமும் சூட்டுக்கோல் விபூதியும் அணிந்து வெட்கமில்லாமல் வெளி யில் தலை காட்டித் திரியும் சமயப் பண்டிதர்களைக் கேட்கிறேன். இக் கூட்டத்தால் அல்லவா தமிழ் மக்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக பாவிக்கப்பட்டான். இதை ஒழியுங்கள் முதலில். பின்னால் தானாகவே தமி ழனுக்கு மானம் முளைக்கும் என்கி றேன். இதனால் நான் சமயத் துரோ கியா, கடவுள் துரோகியா என்று கேட் கின்றேன். நான் சொல்வதெல்லாம் சமயத்துறையில் இந்துமுஸ்லிம் என்ற பிரிவு இருப்பது போல ஆரியன் தமிழன் என்று பிரிவு இருக்க வேண்டு மென்று ஆசைப்படுகிறேன்.
தீபாவளியும் நரகாசூரனும்
நரகாசூரன் என்பவன் யார்? அவன் செத்ததால் யாருக்கு லாபம் ஏற்பட்டது? யாருக்கு லாபம் ஏற்பட் டது? யாருக்குக் கேடு ஏற்பட்டது? அதற்கு ஆக தமிழன் ஏன் கொண் டாட வேண்டும்? அதற்கு ஆக பார்ப் பானுக்கு சங்கல்பத்திற்கும் தட்சணைக் கும் தமிழன் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? என்று ஆராய்ந்து பார்க் கும்படி தமிழர்களை வேண்டிக் கொள்வதற்கு ஆகவே இவைகளைப்  பேசுகிறேன். எங்காவது ஒரு பார்ப் பான் மதுரை வீரனையோ, காத்தவ ராயனையோ கும்பிடுவதைக் காண் கிறீர்களா? பச்சையம்மனையோ, மாரியம்மனையோ பண்டிகை கொண்டாடுவதைப் பார்க் கிறீர்களா? நாம் ஏன் அவர்களுக்கு மாத்திரம் உயர்வையும் நமக்கு இழி வையும் கொடுக்கும் கடவுள்களையும், பண் டிகைகளையும், சடங்குகளையும் கொண்டாட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.
மானமுள்ள தமிழர்கள் இனி தங்கள் வீட்டில் ராமன் சீதை, கிருஷ் ணன், ருக்மணி, ரங்கநாதன், கந்தன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியன், பார்வதி, பரமசிவன் முதலிய உருவப் படங்கள் தொங்கவிடக் கூடாது என்றும், அக்கதைகளையும் புஸ்தகங் களையும் தங்கள் கலைகளாக சமய ஆதாரங்களாக கொள்ளக்கூடாது என்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்.
பார்ப்பன ஆதிக்க ஆட்சி தற்கால மாக ஒழிந்துவிட்டது. இனி பெரிதும் நமக்கு இந்த வேலையும் இருக்க வேண்டும். பார்ப்பன ஆட்சி வந்தால் அப்புறம் மறுபடியும் பார்த்துக் கொள் ளலாம். அதற்குள் நாம் உண்மைத் தமிழர்களாகி ஆரிய சம்பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆரியர் வேறு - தமிழர் வேறு என்பதை உணர்ந்து தமிழ்நாடு தமிழருக்கு ஆக்கும் சுய மரியாதைப் பாதையில் நடப்போமாக.
----------------------------------------------03-11-1939 அன்று ஈரோடு தியாகராயர் கட்டடத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு பாராட்டு கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு - "குடிஅரசு" - சொற்பொழிவு - 12.11.1939