Search This Blog

Showing posts with label பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம். Show all posts
Showing posts with label பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம். Show all posts

19.6.14

சவாலை ஏற்குமா ஜோதிடம்? 10 இலக்கம் வெகுமதி

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...


நூல்: சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை
ஆசிரியர்: சிந்தனையாளர்: பேரா.ஏ.எஸ்.நடராஜ்
தமிழ் மொழியாக்கம்: பகுத்தறிவுப் பாவலர். வீ.இரத்தினம், பெங்களூரு.
பக்கங்கள்: 108  |  விலை: ரூ.10  |  வெளியீடு: தங்கம் இராமச்சந்திரா
நூல் கிடைக்குமிடம்: வீ.இரத்தினம்,
1157, 11ஆவது மெயின் ரோடு, ஹம்பி நகர்,
பெங்களூரு - 560 014.  செல்பேசி: 94498 80117.

மிகப்பெரிய ஜோதிட குடும்பத்தில் பிறந்து ஜோதிடத்தை நன்கு கற்று தொழில் நடத்தி, ஆயிரக்கணக்கான ஜாதகம் எனப்படும் பிறந்த நாள் குறிப்புகளை எழுதி, ஒரு காலத்தில் அதையே நம்பி அதில் ஆய்வு செய்த பிறகு ஜோதிடம் பொய் என்னும் உண்மையை அறிந்துகொண்டு அதைத் துணிவுடன் வெளிச் சொன்னதோடு மட்டுமல்லாமல், ஜோதிடம் உண்மை என்று மெய்ப்பிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தருவதாக அறைகூவல் விடுத்துள்ளவர் பேராசிரியர் ஏ.எஸ்.நடராஜ். விரிவான அவருடைய ஜோதிடத்திற்குச் சாவல் என்ற நூலைத் தொடர்ந்து, அதைவிடக் கூர்மையாக ஜோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை என்ற நூலை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவமே இந்நூல். பாராட்டுக்குரிய வெளியீடான இந்நூலிலிருந்து சில பகுதிகள்...
சில பலசோதிடம் (பலன் கூறல்) வெற்றி / தோல்வியாவதன் இரகசியம் -
1. சோதிடர்களின் சில முற்குறிப்பு Prediction) உண்மையாவது எப்படி? என்று கேட்கிற கேள்விகளில் இரகசியம் இருக்கிறது?

சோதிடம் பொய், அறிவியல் அல்ல என்பதே விஞ்ஞானிகள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் ஆகியோரின் வாதம்: சோதிடம் பொய் மற்றும் அறிவியல் அற்றது. சில சோதிடர்களின் சில முற்குறிப்புகள் உண்மையாவது சோதிட சாத்திரத்திலிருந்து அல்ல. சோதிடம் தெரியாதிருந்தாலும் பலன் சொல்கிறவனுடைய கீழ்க்கண்ட சிந்தனையிலிருந்து சில உண்மைகள் நடக்கக் கூடியனவே!

i.. கேள்வி விதி, ii. திறன், iii. அனுபவம், iv. வாக்குச் சாதுரியம், v. சாதகனின் மனநிலை, vi. சாதாரண அறிவு மற்றும் vii. வாய்ப்பும் திறமைமிக்க ஊகமும் ஆகிய ஏழு கூறுகள் (அம்சங்கள்) மீது சோதிடம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல் வேறுஎந்த ஆதாரத்தின் மீதும் இது நடப்பதில்லை. எ.கா: கண்கட்டி வித்தைகள் மந்திரத்தின் மேல் அல்லாமல் உண்மையில் அது அவன் செய்யும் தந்திரத்திலும் அவனது கைச் சாதுரியத்திலும் இருக்கின்றது. அதைப் போலவே பலன்கள் சோதிடத்தில் இல்லை, சோதிடனின் திறமையில் இருக்கின்றன. சில சோதிடர்கள் சிலருக்குச் சொல்லும் சோதிடங்களில் ஒரு சிலவே உண்மையாகின்றன.

அந்த சில சோதிடம் உண்மையாவது சோதிடம் உண்மை என்ற காரணத்திற்காக அல்ல. சூழ்நிலைக்கேற்றபடி ஊகிக்கும் அவனது திறன், இருமுறை சொல்வதில் யாரும் எதிர்பார்க்காதபடி உண்மையைத் தேர்ந்தெடுக்கும் அவனது அனுபவ நுண்ணறிவு ஆகியவைகளே சோதிடம் உண்மையாவதற்கான காரணங்களாகும்.

1. கேள்வி விதி - சோதிடர்கள் கேட்கும் கேள்விகளில் அமைந்திருக்கும் திறன்.

கேள்வி அதிகப்படியான சோதிடர்களை வெற்றி பெறச் செய்ய பெரும் உதவியாக இருக்கிறது. வெற்றியின் இரகசியத்தை மக்கள் அறிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அது எப்படி என்றால்:

1.1.  50 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம்:-

சோதிடரிடம் வந்து சோதிடம் கேட்பவர்கள் எல்லோரும் அதிகமாக இரு கருத்துகளடங்கிய கேள்விகளைக் கேட்கிறார்கள். எ.கா: காரியத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால் ஆகுமா, ஆகாதா? வெற்றி _ தோல்வி தொடர்புடையதானால் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? மங்கள காரியமானால், நடக்குமா, நடக்காதா? படிப்பு தொடர்புடையதானால் தேர்வில் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? (பாசா _ பெயிலா), நலம் கிட்டுமா _ நலம் கிட்டாதா? ஈட்டமாகுமா _ இழப்பு ஏற்படுமா? இப்போது காலம் நன்றாக இருக்கிறதா _ இல்லையா? திருமணம் இப்போது நடக்குமா _ நடக்காதா? குழந்தை ஆணாகப் பிறக்குமா _ பெண்ணாகப் பிறக்குமா? பொதுத் தேர்தலில் இந்தத் தடவை காங்கிரசுக் கட்சி வருமா _ பா.ஜ.க. வருமா? இப்படி இரண்டு பதில்கள் இருப்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாக உள்ளது. இந்தக் கேள்விகளில் எப்போதும் சோதிடம் பாதி மெய் _ பாதி பொய் (பஞ்சபவேத் _ பஞ்ச நா பவேத்) என்பதைப் போல 50 விழுக்காடு முற்குறிப்பு உண்மையாகிறது.

1.2. சோதிடம் 100 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம். எ.கா:-

தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று வருமா? பா.ஜ.க. வருமா? அவன் முதலமைச்சர் ஆவானா _ இல்லையா? இந்தக் கேள்விகளில் சில சோதிடர்கள் பா.ஜ.க. என்று சொல்கிறார்கள். சிலர் காங்கிரசு என்கின்றனர். அப்பொழுது எந்தக் கட்சி வந்தாலும் அப்படிச் சொன்ன சில சோதிடர்கள் வெற்றி பெற்றவர் ஆகின்றனர். காரணம், வந்த கட்சி வெல்லும் என்று சொன்ன சோதிடர்கள் இருக்கிறார்கள் அல்லவா? யாரோ சோதிடர்கள் சொன்னது உண்மையாகுவதானது சோதிடம் உண்மையானதைப் போல ஆனதல்லவா? அப்படி ஆவது ஒவ்வொரு தேர்தலிலும் யாரேனும் சோதிடர்களின் முற்குறிப்புகள் உண்மையாவதனால்தான்!

1.3. நீண்ட கால தீர்மானத்திற்கான கேள்விகள்:-

நடந்தாலும் உண்மை, நடக்காவிட்டாலும் உண்மையே! எ.கா: எனது மகளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அதற்கு பதில்: தற்போது 3 திங்கள் கிரகபலன் இல்லை. இப்போது திருமணம் நடப்பது சற்று கடினம். 4லிருந்து 6 திங்களுக்குள் நடந்தால் நடக்க வேண்டும். இல்லையானால் இரண்டு ஆண்டுகள் வரை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதன் பிறகு கண்டிப்பாக ஆகும். இப்படி நீண்டகால பவிஷியம் (எதிர்கால பலன்) சொல்லும்போது சிலருக்கு நடந்தே நடக்கும்.

1.4. சரியாகச் சொல்வதில் சோதிடர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் அப்படிச் சொல்வது பொய்யாகி விடுகிறது. எ.கா:

எனது மகனுக்கு எந்தத் திங்கள் எந்த நாளில் திருமணம் நடக்கும்? எங்கள் பாட்டி எந்த ஆண்டு, எந்தத் திங்கள், எந்த நாளில் இறப்பாள்? எனது மனைவிக்கு எந்த நாளில் மகப்பேறு (பிரசவம்) ஆகும்? எனக்கு பதவி உயர்வு எந்த ஆண்டு, எந்த நாளில் கிட்டும்? தேர்தலில் பேராயக் கட்சி (காங்கிரசு) எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும்? பா.ஜ.க. எவ்வளவு இடங்களைப் பிடிக்கும்? ஒரு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் எவ்வளவு வாக்கில் வெற்றி பெறுவார்? எந்தக் காலத்தில், எந்த நேரத்தில் நேர்ச்சி (விபத்து) நிகழும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைவு. அப்படி ஏதாவது ஒன்றோ இரண்டோ உண்மையாக இருக்குமானால் அது தப்பித் தவறி இருப்பதே அல்லாமல் சோதிடனின் தந்திரத்திலிருந்து ஆனதல்ல.

1.5. எதிர்கால பலன் (பவிஷியம்) - Prediction) சொல்லும் காலத்தின் கேள்விகள்:

இதை எந்த சோதிடனும் சரியாகச் சொல்வது இல்லை. ஊகத்தினால் சொல்வது ஏதோ ஒரு சமயத்தில் உண்மையாகி விடலாம். நீங்கள் ஆய்விலும் பார்க்க வேண்டுமானால் 1 திங்களில் அல்லது 3 திங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி பற்றிய கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள்.

1.6. இறந்தகால கேள்விகள்

அங்கே கூட முன்பே சொன்ன எல்லா தந்திரங்களும் பயன்பாட்டிற்கு வருகின்றன. இந்த எல்லா பின்னணியிலும் சில சோதிடர்களின் சில குறிப்புகள் உண்மையாகின்றன.

1.7. சோதிடர்கள் அல்லாத பிறர் எவ்வளவோ எதிர்கால பலன் சொல்கிறார்கள். 

இந்தக் கேள்விகளை எல்லாம் அவர்களிடம் கேட்டால் சோதிடம் தெரியாத அவர்கள் சொல்லும் எதிர்கால பலனில் சில சரியாக இருக்கும். சில தடவை சோதிடர்கள் சொல்வதைவிட இன்னும் நன்றாகவே சொல்வார்கள். இதனால் எதிர்கால பலன் உண்மையாகுவது சோதிடத்திலிருந்து அல்ல, புத்தி கூர்மையான சோதிடனின் மோசம் செய்யும் திறமையினாலும் தந்திரத்தினாலுமே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

2. சோதிடரின் திறமை - புத்தி சாதுரியம், அனுபவம், சந்தர்ப்பம்.

பல சோதிடம் பல சோதிட நூல்களில் சொல்லப்பட்ட சில கூறுகளை (அம்சங்களை) உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னணியில் சிலர் வெறும் ஊகத்தின் மேல் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வெறும் சாதகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலையின் ஊகத்தை சோதிடரின் புத்திசாலித்தனம், அனுபவங்களின் பின்னணியில் சில தடவை சரியாகச் சொல்லி விடுகின்றனர்.

3. அனுபவம் - சோதிட அனுபவம் அதிக வேலை செய்கிறது. சொல்லிச் சொல்லி என்ன செய்ய வேண்டும் என்னும் திறமை தெரிவிக்கிறது.
சோதிடரின் வெற்றிக்கு சோதிடத்தில் அவர் முன்பே சொல்லிச் சொல்லிப் பெற்றிருக்கும் அனுபவம் மிகவும் உதவிக்கு வருகிறது. பாடிப்பாடி பாடகன் ஆகு என்று சொல்லும் பழமொழி போல பொய்யை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் இறுதியில் பொய்யே ஒரு தடவை உண்மையாகி விடுகிறது.

4. வாக்குச் சாதுரியம் - இதுவே சோதிடனின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திறமையாகப் பேச வராதவன் சோதிடனாக இருக்க மாட்டான். இருக்க முடியாது.

இது சோதிடனின் வெற்றிக்கு முதன்மையானதாக இருக்கிறது. ஈர்க்கும்படியான பேச்சு, சொல்லுக்குச் சொல் சுலோகங்கள் சொல்வது, இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் சில மேற்கோள் சொல்வது, பலன் சொல்லும்போது குறுக்குச் சுவற்றின் மீது விளக்கு வைத்ததைப் போல சொல்வது ஆகிய இவை யாவுமே மிக மிக உதவிக்கு வருகின்றன. வாக்குச் சாதுரியமே சோதிடம் சொல்வதில் இருக்கும் உயிர். சோதிடம் சொல்பவனுக்கு சோதிடம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடம்பரம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

5. சாதகனின் மனநிலை அறிந்து கொள்ளல்

சாதகனின் மனநிலை, துக்கம், கவலை, அச்சம், நிறைவேறாத ஆசை, பிற ஆசைகள் முதலிய மனத்தின் நிலைமையை சோதிடன் பயன்படுத்திக் கொண்டு ஊகம் செய்கிறான். திறமையான ஊகம் சில சமயம் உண்மையாகலாம்.

6. சாமானிய அறிவு

சோதிடனின் சாமானிய அறிவு, விஞ்ஞான அறிவு, சமூக மற்றும் குடும்ப அறிவு ஆகிய அனைத்துமே சோதிடம் சொல்பவனுக்கு முன்வந்து கை கொடுத்து உதவுகின்றன. சந்தர்ப்பம், சூழ்நிலையை அறிந்து அதற்குத் தகுந்தபடி பவிஷியம் சொல்பவன் வெற்றி பெறுவான். பலதுறை அறிவு படைத்த ஒருவன் சோதிடம் சொல்வதில் சிறந்து விளங்குவான்.

7. சந்தர்ப்பம் அறிய வல்லவனின் ஊகம்

நிலைமை, சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவைகளைத் திறம்பட அறிந்து கொண்டு திறமையாக ஊகம் செய்வதில் வல்லமையுடைய சோதிடன் அதிகமாக வெற்றி பெறுகிறான்.

8. எந்த சோதிடனும் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே சொல்வதில்லை. ஒருவேளை சொன்னால்கூட குறுக்குச் சுவற்றின் மேல் இட்ட விளக்கு நாலா பக்கமும் ஒளி கொடுப்பதைப் போல அது எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துமாறு சொல்வதாக இருக்கும்.

அதிகப்படியான சோதிடர்கள் நிகழ்ச்சி, சம்பவம், விளைவுகள் ஆகியன இயற்கையாக நடந்ததன் பிறகு அவைகள் எப்படி நடந்தனவென்று ஆய்வு செய்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சி நடப்பது, வெற்றி _ தோல்வி ஏற்படுவது, வியாதி வருவது _ அது குணமாவது, விபத்து உண்டாவது, இலாப _ நட்டம் ஏற்படுவது ஆகியன பற்றி முன் கூட்டியே உறுதியாக உரைக்கும் சோதிடர் இல்லவே இல்லை. ஒருவேளை சொன்னாலும், குறுக்குச் சுவற்றின் மேல் விளக்கு ஏற்றி வைப்பதைப் போல சொல்கின்றனர்.

9. பல சோதிடம் பொய்யான அனேக எடுத்துக்காட்டுகள்

சில சந்தர்ப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை வெளிக்கொண்டு வருவதற்குப் பரப்புரை செய்யப்படுவதில்லை. விஞ்ஞானமில்லாத, உண்மை இல்லாத, தர்க்கத்திற்கு உட்படாத மற்றும் மயக்கம் (பிரமை) என்று மேலே சொல்லப்பட்ட எல்லாம் நிரூபணங்களால் தெளிவாகி உள்ளன. அவ்வளவின் மேல் சோதிடத்தை உண்மையாக்கிக் காட்டுகிறேன் என்பவர் என்னுடைய ஒரு சாதகத்தின் மேல் கேட்கும் 10 கேள்விகளில் 8 கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுத்து உண்மையை மெய்ப்பித்து ரூபாய் ஒரு கோடியைப் பரிசாகப் பெறலாம். சவாலை ஏற்றுக் கொள்ளும் எந்தத் தனிப்பட்ட மனிதரானாலும் அல்லது குழுவானாலும் கீழ்க்கண்ட எனது கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விவரம் பெறுக.

10. சவால் 1: 1 கோடி

பவிஷியம் _ இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் ஒரு சாதகத்தின் மீது கேட்கும் 10 கேள்விகளில் 80 விழுக்காடு சரியான பதிலுக்கு ரூபாய் ஒரு கோடி சவால். இது சரியாக எதிர்கால பலன் சொல்லும் தைரியசாலிகளுக்குக் கொடுக்கப்படும். ரூபாய் ஒரு கோடி சவாலின் விவரங்கள்:

இந்த ரூ. ஒரு கோடி சவாலுக்குக் கொடுக்கப்படும் சாதகம் ஒரே ஒரு சாதகம் மட்டுமே. அப்படிக் கொடுக்கப்படும் ஒரு சாதகத்தின் மேல் 10 கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகள் முதலிலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சரியான கேள்விகளாக இருக்கும். எந்த விதம் மற்றும் எந்த விடயங்களுடன் தொடர்புடைய கேள்விகள் என்பது பற்றிய விவரங்கள், அத்துடன் தீர்மானிக்கப்பட்ட கேள்விகள் எவை மற்றும் அவைகளுக்கான பதில்களை எப்படித் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த 10 கேள்விகளில் (ஏ _ பாகம்) 1 முதல் 6 கேள்விகள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால், (பி _பாகம்) கேள்வி 7 முதல் 10 வரையிலான 4 கேள்விகள் 3 திங்கள் பவிஷிய காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சி பற்றிய கேள்விகளாக இருக்கும். சோதிடர்கள் எதிர்கால பலன் சொல்பவராக இருப்பதனால் அவர் குறிப்பிடும் காலத்தில் நடக்கும் கேள்விகள் மிக முக்கியமாக இருக்கின்றன. அதிகப்படியான சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷியம் 80 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை சரியானது என்று சொல்லிக் கொள்வதால் அவர்கள் சொல்வதைப் போலவே நாம் அவர் சொல்லும் எதிர்கால பலன் 80 விழுக்காடு மற்றும் அதைவிட அதிகம் சரியான பதில் சொல்பவருக்கு ரூபாய் ஒரு கோடி பரிசைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

அந்த 80 விழுக்காடு எப்படி இருக்க வேண்டு மென்றால் ஏ _ பாகத்தில் _ அப்படி என்றால் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேலுள்ள 6 கேள்விகள் குறைந்தது 5 எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும். இப்படி 5 கேள்விக்கான பதில்களில் ஒரு கேள்விக்கான பதில் தப்பானாலும் 5 கேள்விக்கான பதில்களும் தப்பு என்றே அறிவிக்கப்படும்.

பி பாகத்தில் அதாவது கேள்வி 7லிருந்து 10 வரையிலான பவிஷிய கால 3 திங்களுக்குள் நிகழும் சம்பவம் தொடர்பான 4 தீர்மானமான கேள்விகளில் குறைந்தது 3 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கொடுக்க வேண்டும். இப்படி 10 கேள்விகளில் குறைந்தது 8 கேள்விகளுக்கு (80%) சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகள் எளிதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கும். இறந்த மற்றும் நிகழ்காலம் பற்றிய கேள்விகள் அனைத்துமே எளிதாகவும் மற்றும் சாதாரணமானதாகவும் இருக்கும். சோதிடத்தில் கேட்கப்படும் கேள்விகள் கூட 3 திங்களுக்குள் நிகழக் கூடியதான சாதாரண கேள்விகளாக இருக்கும். ஆயுள் காலம், மரணம், தனயோகம், திருமணம், மக்கள் பேறு முதலான நீண்ட காலத்தில் நிகழும் சம்பவங்கள் பற்றிய கேள்விகள் இல்லை. மிகுதியான நன்னடத்தை, ஊர்திகள் (வாகனம்) வாங்குதல், வழிபாட்டு இடங்களுக்குப் பயணம் செய்தல் ஆகியவைகளின் மேல் கேள்விகள் இருக்கும்.
சவால் 2:  ரூ. 10 இலக்கம்
வெறும் இறந்த காலத்தின் மேல் மற்றும் 10 சாதகங்களின் மேல் வெறும் 3 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில்களின் மேல் ரூ.10 இலக்கம் சவால். இது பவிஷியம் சொல்வது பற்றி அதைரியப்படும் பயந்தாங் கொள்ளிகளுக்காக. சில சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷிய வாணியில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்வது நடக்கக் கூடியதல்ல. நீங்கள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் கேள்வி கேட்டு நூற்றுக்கு நூறு உண்மையைச் சொல்கிறோம் என்று சொல்கிறீர்கள். அந்த அச்சப்படும் சோதிடர்களுக்காக இந்தச் சவாலை இப்போது விடுக்கிறேன்.

10 சாதகங்களின் மேல் வெறும் 4 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதிலுக்குச் சவாலாக நான் 10 சாதகங்களைக் கொடுக்கிறேன். அந்த சாதகங்களின் மீது பின்வரும் கேள்விகள் கேட்கப்படும்.

கேள்வி 1: எந்த சாதகர் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்? எந்த சாதகர் இப்பொழுது மரணமடைந்தவர்? இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும்.

கேள்வி 2: அந்தச் சாதகங்களில் எந்தச் சாதகம் பெண்ணுக்குரியது, எந்தச் சாதகம் ஆணுக்குரியது என்று சொல்ல வேண்டும்.

கேள்வி 3: அந்த பத்து சாதகங்களில் எந்தச் சாதகருக்குத் திருமணம் ஆகி இருக்கிறதோ அவருடைய முதல் திருமண காலம் அதாவது திருமண நாள், திங்கள், ஆண்டு ஆகியவைகளைத் தெரிவிக்க வேண்டும்.

கேள்வி 4: சாதகன் படித்த படிப்பு அதாவது பத்து சாதகத்தில் யார் எந்த வகை பல்கலைக்கழக பட்டம் அல்லது அதை விடவும் அதிகம் படித்திருந்தால் அப்படி அதிகம் படித்துப் பெற்ற பட்டம் குறிப்பிட வேண்டும். சான்று அளிக்கப்பட வேண்டும். (டிப்ளொமா மற்றும் அதைவிடக் குறைந்த கல்வியைக் கணக்கில் எடுக்கக்கூடாது.) பட்டப்படிப்பு அல்லது அதைவிட அதிகப் படிப்பு படித்தவரை மட்டும் சொல்ல வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் ரூ.10 இலக்கம் வெகுமதி இருக்கிறது. ஒவ்வொரு சாதகத்தின் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் ((Column) வீ. வாழ்பவர் / இறந்தவர், வீவீ. பெண் / ஆண், வீவீவீ. திருமணம் ஆகியிருந்தால் திருமணமான நாள், திங்கள் மற்றும் ஆண்டு கிறித்தவ காலண்டர் (நாள்காட்டி)படி, திருமணம் ஆகவில்லையானால் ஆகவில்லை என்று, வீஸ். பட்டம் பெற்றவர் / பெறாதவர் போன்ற விவரங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான விவரங்களுக்கு மூடத்தனம் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் (மௌடிய மத்து வைச்சாரிகே) என்ற கன்னட நூலில் சோதிடத்திற்கு ரூபாய் கோடி சவால் என்னும் அத்தியாயம் படிக்கவும்.

பொய்யான ஜோதிடர்கள்
பலசோதிடங்கள் (பலன் சொல்லும் சோதிடங்கள்) அதிகமான தடவைகளில் பொய்யாய்ப் போனதற்கான பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. இங்கே சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.

11.1. 1982இல் எக்கனாமிக் டைம்சில் வைசம்பாயா என்னும் சோதிடர் எழுதிய பல சோதிடம் முற்றிலும் பொய்யாகி விட்டது.

11.2. 1983இல் ஜகஜித்பால் என்பவர் சன்டே அப்சர்வர் என்ற வார இதழில் தூமகேது மற்றும் கிரகண பலத்தைப் பற்றி பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று தீர்மானமாகச் சொன்னது எதுவும் நடக்கவில்லை.

11.3.: அஷ்ட்ட கிரகங்களின் (8 கிரகங்கள்) யோக சம்பந்தம் குறித்து எல்லா சோதிடர்களும் ஆபத்து, நாசம், கேடு, வெள்ளம், தீ, பூகம்பம், போர் முதலியன நடக்கப் போகின்றன என்று பெரும் பரப்புரையைச் செய்தார்கள். ஆனால் அஷ்ட்ட கிரகம் அமைதியாக வந்து போனது. யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

11.4: இராஜீவ் காந்தியின் கொலையைப் பற்றி எந்த ஜோதிடனும் முன்னதாகச் சொல்லவே இல்லை. கொலையுண்ட பிறகு நான் முன்பே சொல்லி இருந்தேனே என்று சொல்லத் தொடங்கினார்கள்.

11.4.1: 21, மே, 1991இல் இராஜீவ் காந்தியின் கொலை ஆனது. கொலையாகும் முன்பு மே, 1991இல் இல்லஸ்ட்ரேட் வீக்லியின் 1991க்குப் பிறகு இராஜீவ் காந்தி இந்த நாட்டின் முக்கிய தலைவராகி ஆட்சி நடத்துவார் என்று எழுதியது.

11.4.2: 1991 மே திங்களுக்கு முன்பே இந்த நாட்டின் மிகையான பத்திரிகைகள், அதிகப் படியான சோதிடர்கள் இராஜீவ் காந்திக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பல ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுவார் என்று சொன்னார்கள்.

11.4.3: புகழ்பெற்ற சோதிடர் கே.எஸ்.சரஸ்வதி இதையே ஆதரித்தார்.
11.4.4: புகழ்பெற்ற சோதிடர் பி.கே.சக்கரவர்த்தி 1991க்குப் பிறகு இராஜீவ் காந்திக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று எதிர்கால பலன் சொன்னார்.
11.4.5: மற்றொரு புகழ்பெற்ற சோதிடர் ஏ.கே.இராசா என்பவர் அதே சந்தர்ப்பத்தில், இராஜீவ் காந்தி 10ஆவது லோக்சபை (மக்கள் அவை) ஆளும் கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து அவருடைய தலைமையில் முழுமையாக அய்ந்து ஆண்டுகள் அவர் இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருப்பார் என்று  எதிர்கால பலன் சொன்ன இரண்டாவது வாரத்திலேயே அவரது படுகொலை நிகழ்ந்துவிட்டது.
11.4.6: வந்தனா முண்டேல்கர் என்ற வேறொரு சோதிடர் இராஜீவ் காந்தி சாவது தெரிந்திருந்தது; ஆனால் தான் வேண்டுமென்றே சொல்லவில்லை என்று கனமானதொரு பொய்யை அனுப்பினார்.
11.4.7: இன்னுமொரு சோதிடர் கே.என்.ராவ் என்பவர் இராஜீவ் காந்திக்கு சாவு வருவது தனக்கு முதலிலேயே கட்டாயம் தெரியுமென்றும் அதனால்தான் இராஜீவ்காந்தி 1991 சூலையிலிருந்து ஆகஸ்ட் நடுவிற்குள் இறப்பார் என்றும் தெரிவித்தேன் என்றும் கணக்கு கொஞ்சம் தப்பியதால் அவருடைய இறப்பு சற்று வேகமாகவே வந்துவிட்டது என்றும் பெரிய இரயில் விட்டார்.
இப்படியே தேர்தல் பற்றி, மந்திரி பதவிகள் பற்றி, ஆளும் கட்சிகள் பற்றி, இடங்கள் பற்றி ஒவ்வொரு தேர்தலிலும் இந்தச் சோதிட இரயில் விடும் சோதிடர்கள் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விடும் இரயிலுக்கு தண்டவாளமும் இல்லை, சக்கரங்களும் இல்லை. இருந்தாலும் அவர்களது சோதிட இரயில் அப்பாவிகள், மூடர்கள் ஆகியோர் மீது ஓடுகிறது.

-----------------------சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வைநூலிலிருந்து...

22.6.12

ஜோதிடமும், பஞ்சாங்கக் கிரகணக் குறிப்புகளும் அறிவியலா?


சேது வெளியிட்ட செய்தி

2012 மே 20 நாளிட்ட தினமலர் இதழின் வாரமலரில், கேள்விகளும் ஆச்சரியங்களும் என்கிற பகுதியில் "நவக்கிரக சன்னதி உணர்த்தும் அறிவியல் உண்மைகள்" என்னும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. செய்தியை எழுதியிருப்பவர் சேது என்பவர். அந்தச் செய்தி பின்வருமாறு:

"சூரியனை மய்யமாகக் கொண்டு பூமி உட்பட எல்லாக் கிரகங்களும் சுற்றி வருகின்றன என்ற வானியல் உண்மையை நமது முன்னோர் திறம்பட அறிந்து இருந்தார்கள் என்பதற்கு நமது ஆலயங்களில் காணப்படும் நவக்கிரக பிரதிஷ்டையில் சூரியன் நடுநாயகமாக அமைக்கப் பட்டுள்ளதே நிரூபணமாகும்.

அதுமட்டுமன்றி, திருக்கணித பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் நேரத்தில்தான் அறிவியல் நீதியாக வரும் சூரியகிரகணம், சந்திரகிரகணம் ஆகியவை நிகழ்கின்றன.

எனவே, ஜோதிடம் என்பது முழுவதும் அறிவியலடிப்படையானதே!' என்கிறார் வேதஜோதிடத்தில் நீண்ட அனுபவம் கொண்ட கோவை ஸ்ரீஜெகநாத சுவாமி".

கோவை ஜெகநாதசவாமியின் கோமேதகக் கருத்துகளை ஆய்வு செய்வோமே?

புவி எங்கே போயிற்று?

ஜோதிடத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என ஒன்பது கோள்கள் (நவக்கிரகங்கள்) இடம்பெற்றுள்ளன.

ஆனால், அந்தக் கோள்பட்டியலில், இந்தக் கோவை ஜோதிடர் ஜெகநாத சுவாமி உட்பட நாம் வாழும் புவி (Earth) இடம்பெறவில்லையே? ஏன் இந்த நிலை? அறிவி(வானி)யலில் புவி ஒரு கோள் ஆயிற்றே? ஜோதிடத்தில் புவி இல்லையே! புவி எங்கே போயிற்று? புவி என்பதாக ஒரு கோள்பற்றிய அடிப்படை அறிவே இந்த வேத ஜோதிட மேதைகளுக்கு இல்லையே? பின் எப்படி ஜோதிடம் அறிவியல் ஆகும்?

விண்மீனுக்கும் கோளுக்கும் வேறுபாடு தெரியவில்லையே?

ஜோதிடத்தில் சூரியன் ஒரு கோள் ஆகும். ஆனால், அறிவியலில் சூரியன் கோள் (Planet) அன்று; விண்மீன் ஆகும். (Star). வேதஜோதிடம் சூரியனை ஒரு கோள் ஆகக் கருதுகிறதே? 'க்ரஹாணாம் ஆதிராதித்யோ' -_ அதாவது, கிரகங்களுள் முதன்மையானவன சூரியன் என்று ஸ்ரீசூர்யஸ்தோத்திரம் என்னும் நூலுள் கூறப்பட்டுள்ளது.

"ஓம் க்ரஹாணாம் பதயே நமஹ!" அதாவது, கோள்களின் தலைவனே! வணக்கம்! என்று, 108 பெயர் வரிசையுள் 89வது சூரியனின் பெயர் வரிசையாக ஸ்ரீசூர்யா அஷ்டோத்ர சத நாமாவளி என்னும் நுல் கூறுகிறது. (தகவல்: பாலஜோதிடம்; டிசம்பர் 1987. இதழ்)

சூரியன் அய்யத்திற்கிடமின்றி கோள் (கிரகம்)என்றே ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கொண்ட ஜோதிடம் எப்படி அறிவியலாகும்? ஜெகநாத சுவாமி செப்புவாரா விடை?

கோளா? துணைக்கோளா?

ஜோதிடத்தில் சந்திரன் ஒரு கோளாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், புவி என்னும் கோளைச்சுற்றிவரும் ஒரு துணைக்கோள் (Satelite) ஆகவே அறிவியல் கூறுகிறது.

சந்திரனை _ ஒரு துணைக்கோளை, கோள் என்று வைத்துச் சதிராட்டம் போடும் ஜோதிடம் எப்படி அறிவியல் ஆகும்?

விண்ணிலே எத்தனை வெண்ணிலவுகள்?

ஜோதிடத்தில் இருப்பது ஒரே ஒரு சந்திரன் (நிலவு)தான்! இதை வைத்துக்கொண்டுதான் திரையிசைப் பாடலாசிரியர்கள், அன்று வந்ததும் இதே நிலா! இன்று வந்ததும் அதே நிலா!! என்றும் உள்ளதும் ஒரே நிலா! இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா!! என்று கொட்டி முழக்குகிறார்கள். ஆனால், வானியலில், 112 பெரியவை; 16 சிறியவை. ஆக, 128 சந்திரன்கள் உள்ளன என்று கண்டுபிடித்தும் கூறப்பட்டுள்ளது.

புவிக்கு அமைந்த துணைக்கோள் ஆன ஒரே ஒரு சந்திரனுக்குத்தான் ஜோதிடப் பலன்கள் கூறப்பட்டுள்ளன.

ஏனைய 127 சந்திரன்கள் என்ன குற்றம் செய்தன? அவர்கள் மொழியில் சொல்வதானால் அவை என்ன பாவம் செய்தன? இந்த வேத ஜோதிட அனுபவசாலி ஜெகநாதசுவாமி பதிலளிப்பாரா?

இல்லாத கோள்கள் இரண்டு

ஜோதிடத்தில் விண்மீனான சூரியன், துணைக்கோளான சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி, இவற்றோடு இராகு, கேது எனப்படும் இரண்டு கோள்களும் இடம் பெற்றுள்ளன. இவை, உண்மையில் இல்லவே இல்லை. கற்பனைப் புள்ளிகள். வானியலில் இவை இடம்பெறவில்லை. இப்படியிருக்க, இராகு, கேது உள்ளிட்ட கோள்கள் எனக் குறிக்கும் ஜோதிடம் அறிவியல் ஆவது எப்படி?

இருக்கும் கோள்கள் இடம் பெறவில்லையே?

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியன சூரிய குடும்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டவை. இவை ஜோதிடத்தில் இன்றும் சேர்க்கப்படவில்லையே? எப்படி ஜோதிடம் அறிவியலாகும்?

அண்மைய அறிவியல் ஆய்வின்படி, புளூட்டோ, ஒரு கோளுக்குரிய தகுதிப்பாடு இல்லை என்று விலக்கிவிட்டனர் அதனை அறிவியலார்.

பேச்சு _ மூச்சு இல்லை

அதே சமயம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யத்தின் (நாசா) நிதியுதவியுடன், அறிவியலாளர்கள் புதியகோள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு செட்னா (ஷிமீஸீணீ) எனப் பெயரும் இட்டுள்ளனர். இவ்வாறான கோள்பற்றி மூச்சு விடாத ஜோதிடம் அறிவியல் ஆவது எப்படி?

நவக்கிரகங்களின் நடுநாயகமாம்

கோளே இல்லாத, கோள்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையான விண்மீன் ஆன சூரியன் ஆலயங்களில் நவக்கிரங்களின் நடுநாயகமாக ஏனைய கோள்களோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஜோதிடம் அறிவியல் என்பதை மெய்ப்பிக்கும் என்று பிதற்றுவது சரிதானா?

இப்படிக் கூறுவது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது? ஜெகநாதசுவாமி ஏன் இப்படி ஜோதிடத்தையும் அறிவியலையும் போட்டுக் குழப்புகிறார்? எதற்காக இவர் இவ்வண்ணம் குழப்பத்தின் குட்டையாக மாறவேண்டும்?

வர்ணதர்ம வல்லாண்மை:

வர்ண தர்மப் பிடியில் மக்களை அழுத்தி வைத்ததுபோல கோள்களையும் வர்ண வல்லாண்மையின் பிடியில் வைத்துள்ள ஜோதிடத்தின் போக்கைக் கீழே பாருங்கள்:

குரு (வியாழன்), சுக்ரன் (வெள்ளி) இரண்டும் பிராமண ஜாதி (வர்ணம்)யாம்! சூரியன், செவ்வாய் சத்திரிய ஜாதியாம், சந்திரன், புதன் வைசிய ஜாதியாம், சனி சூத்திர ஜாதியாம்! இராகு, கேது _ சாங்கிரம (கலப்பு) ஜாதியாம்! இவ்வாறு எழுதிவைத்துள்ளனர் ஜோதிடகர்த்தாக்கள்.

இழிவுக்கும் அவமரியாதைக்கும் உரிய கோள் ஆக, சனியை வைத்திருக்கிறார் பாருங்கள்! சனி சூத்திர ஜாதியாம்! வர்ணதர்ம ஒடுக்குமுறையும் உயர்ஜாதி வெறியும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள போக்கு இது! அறிவியலில் இல்லாத அது சொல்லாத வர்ண தர்மத்தைச் சுமத்தும் இந்த ஜோதிடம் எப்படி அறிவியலாகும்?

ஆணாம்! பெண்ணாம்! அலியாம்!!

கோள்கள்பற்றிய ஜோதிடத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை! உயிரற்ற அறிவற்ற, மனமற்ற வெறும் அஃறினைப் பொருள்களாகிய கோள்கள், துணைக்கோள், விண்மீன் இவை ஆணாக, பெண்ணாக, அலியாக இருக்கின்றனவாம்!

சூரியன், செவ்வாய், குரு(வியாழன்) இவை ஆண்களாம்! சந்திரன், சுக்ரன்(வெள்ளி), ராகு இவை பெண்களாம்! புதன், சனி, கேது இவை அலிகளாம்!! கேலிக்கூத்தாக இல்லை? இப்படி எந்த அறிவியல் கூறுகிறது? பின், எப்படி இந்த ஜோதிடம் அறிவியலாகும்? ஆகும் என்கிறாரே கோவை சுவாமிகள்!

கிரகணம் பற்றிய கிறுக்குத்தனம்

திருக்கணித பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்பட்டுகின்றனவாம்! ஆகவே, ஜோதிடம் அறிவியலாம்! சொல்கிறார் கோவை சுவாமிகள்! கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் உண்யில் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த முன்னோர் கண்டுபிடிப்பா?

வரலாறு கூறும் வானியல் செய்திகள்

கி.மு.747இல், அதாவது கி.மு.8ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாவில் கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் இருந்துள்ளதாக, கிரேக்க வானியலறிஞர் டாலமி குறிப்பிடுகிறார்.

இந்தக் குறிப்புகள் எகிப்து, இந்தியா, சீனாவுக்குப் பரவியதாக வரலாற கூறுகிறது. கி.மு.7-_6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தேலீஸ் என்னும் கிரேக்க அறிஞர், கதிரவனுக்கும் புவிக்கும் இடையே நிலவு புகுவதால் சூரிய கிரகணம் (Solar Eclipse) ஏறப்டுவதாக, கணித்துச் சொல்லியிருக்கிறார்.

கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனக்காரஸ் என்னும் கிரேக்க அறிஞர், சூரியனுக்கம் சந்திரனுக்கும் இடையே புவி வருவதால் நிகழ்வதே சந்திரகிரகணம் (Lunar Eclipse) என்றார்.

இவர்களுக்கு உரிமை இல்லை!

ஓர் இடத்தில், ஒருமுறை முழுச்சூரிய கிரகணம் (Total Solar Eclipse) தோன்றினால், பின்னர் 360 ஆண்டுகட்கு பிறகுதான் மறுபடியும் முழுச்சூரிய கிரகணம் தோன்றும்.

இதுபோல, பிறவகைக் கிரகணங்களுக்கும், சந்திர சூரிய கிரகணங்களுக்கும் அவற்றிற்கென சுழற்சிக்கால முறை உண்டு. மேலைநாட்டிலிருந்து _ நாடுகளிலிருந்து பெற்ற இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதான் பஞ்சாங்கத்தில் கிரகணக் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனரே தவிர, இவர்களாகவே கண்டுபிடித்துச் சொல்லவில்லை! இப்படிச் சொந்தம் கொண்டாட இவர்களுக்கு எவ்வகை உரிமையும் கிடையாது.


இந்தியாவில் தோன்றவில்லை!

இதுமட்டுமல்ல, ஆண்டுகள், மாதங்கள் ஆகவும், மாதங்கள் வாரங்கள் ஆகவும், வாரங்கள் நாள்கள் ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளன. வாரத்தின் 7 நாள்களுக்கும் தனித்தனிப் பெயர்கள் உள்ளன. இந்தப் பெயர்கள் 7 கோள் (கிரகங்)கள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

இந்த முறைமை, 2000 ஆண்டுக்காலமாகவே இந்திய நிலப்பரப்பில் நடைமுறையில் இருந்துவந்தாலும் இந்தியாவில் தோன்றியது அன்று. இந்த முறை, முதன்முதலில் எகிப்தில் தோன்றியது.

பின்னர், அலெக்சாண்டர், எகிப்தை வெற்றி கண்டபோது இது கிரேக்கநாட்டிலும் பரவியது. கிரேக்க நாட்டிலிருந்துதான் இது இந்தியாவிலும் பரவியது. 12 இராசிகளின் பெயரும் இதுபோல் வந்தவைதாம். இப்படி இருக்க, இந்தியப் பஞ்சாங்கத்தின் கிரகணக் குறிப்புகளை வைத்துக் கொண்டு என்னமாய்க் குதியாட்டம் போடுகிறார் இந்தக் கோவை சுவாமிகள்!

மூடநம்பிக்கைகளின் முகாம்

இனியும், ஜோதிடம் அறிவியல் என்று கிறுக்குத்தனமாக_ அசட்டுத்தனமாகக் கூறுவதை, வேதஜோதிடத்தில் நீ.......ண்ட அனுபவம் வாய்ந்த ஜெகநாத சுவாமிகள் போன்ற ஜோதிட பற்றாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜோதிடம் அறிவியல் என்று கூறுவது அபத்தம் ஆகும். அது, அறிவியல் அல்ல; அல்ல; அல்லவே அல்ல! ஆனால், அது மூடநம்பிக்கைகளின் முகாம்.

---------------- பேரா.ந.வெற்றியழகன் அவர்கள் ஜுன் 1 15 20112 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

22.3.12

சோதிடம் என்பது வேறு - வானவியல் என்பது வேறு



மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பாடத் திட்டம் வைப்பது என்ற முடிவை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. (20.1.2012)

அதற்குக் கை மேல் பலன் கிடைத்துள்ளது. சோதிடம் (Astrology) என்பது வேறு வானவியல் என்பது வேறு (Astronomy!) இரண்டும் ஒன்றல்ல படித்தவர்கள்கூட இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்பிக் கொள்வது பரிதாபமே!

சோதிடர்கள் கோள் என்று சொல்லும் சூரியன் உண்மையில் நட்சத்திரமாகும். சோதிடத்தில் முக்கிய கோளான பூமிக்கு இடமில்லை அதே நேரத்தில் பூமியின் துணைக்கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு.

இராகு, கேது என்று இரு கோள்களைக் குறிப்பிடுகிறார்களே உண்மையில் அப்படி கோள்கள் கிடையாது என்று வானவியல் அறுதியிட்டு அறை கிறது. செவ்வாய், வியாழன், சனி இவைகளுக்குத் துணைக்கோள்கள் முறையே 2,16,22 இருக்கின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் எழுதி வைத்துள்ளனரா? இப்படி துணைக்கோள்கள் உண்டு அறியாதவர்கள் எப்படி இவற்றிற்குப் பலன் எழுதி வைத்திருக்க முடியும்?

பூமி நிலையானது என்றும், சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்கிற சோதிடத்தை நம்பி பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்று எப்படிதான் துணிந்தனரோ தெரியவில்லை.

நம் நாட்டுக் கல்வியின் தரம் இதுதானா?

சோதிடர் கூறும் இராசி வட்டத்தில் பல கோடி நட்சத்திரங்கள் உண்டு. இவர்களுக்குத் தெரிந்த தெல்லாம் 27 நட்சத்திரங்களே.

ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு இடைவெளி துரத்தில் இருக்கும் பொழுது கிரகங்கள் எப்படி இராசி வட்டத்துக்குள் குடியிருக்கின்றன?

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் கிடையாது.

சனிக்கிரகம் பொல்லாதது - பாவம் பிடித்தது என்றெல்லாம் உளறி வைத்துள்ளனர். 28.1.2006 அன்று சூரியன் - பூமி - சனி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்தன. அதனால் என்ன பாவம் வந்து சூழ்ந்து விட்டது?

இப்படி நேர்நோட்டில் வந்ததைக்கூட விஞ் ஞானிகள்தானே தெரிவித்தனர். 10.2.2007 அன்று பூமிக்கு அருகில் வந்த சனிக்கிரகத்தை பெரியார் அறிவியல் மய்யத்தில் உள்ள கோளரங்கத்திற்குச் சென்று பொது மக்கள் பார்வையிட்டனரே! அப்படிப் பார்வையிட்டவர்களை சனிப் பகவான் பிடித்துக் கொண்டானோ!

கண்டுபிடிப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படு கின்றன; நிரூபணம் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக புளூட்டோ என்னும் கிரகம் பற்றி 1930இல் கூறப்பட்டது. 2006ஆம் ஆண்டில் கிரகத்திற்குரிய தகுதிகள் அதற்கு இல்லை என்று கூறி கோள்களின் பட்டியலிலிருந்து அகற்றி விட்டனர்.

இப்படி விஞ்ஞானம் புதுப்புது உண்மைகளைக் கண்டறியும் நிலையில், அறிவியல் வளராத காலத்தில் வெறும் கண்களால் விண்வெளியைப் பார்த்து அப்பொழுது இருந்த அறியும் பக்குவத்திற்கு ஏற்ப எதையோ கிறுக்கி வைத்தனர்.

அவற்றை நாளும் அறிவியல் வளரும் இந்தக் கால கட்டத்தில் கண்மூடித்தனமாக நம்புவது, பல்கலைக் கழகங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு பக்கத்தில் கூறுகிறது; இன்னொரு பக்கத்தில் பல்கலைக் கழகத்திலேயே அறிவியல் மனப்பான்மைக்கு விரோதமாகப் பாடத் திட்டத்தை வைக்கத் துடிக் கின்றனர் என்பது வெட்கக் கேடாகும்.

பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம்தான் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

---------------"விடுதலை” தலையங்கம் 22-3-2012

14.10.11

சோதிடப்புரட்டும் கிரகங்களும்


சோதிடத்தில் கிரகங்களின் இருப்பிடத்தை வைத்து பலாபலன் சொல்லப்படுகிறது!

சூரிய வட்டத்தில் எந்தெந்தக் கிரகம் எந்தவிடத்தில் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் சோதிடம் கணிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, டில்லிக்குப் பக்கத்தில் வடக்கே இருப்பதாகவும், பம்பாய் கன்னியாகுமரிக்குத் தெற்கே இருப்பதாகவும் கூறுவது போலத்தான் சோதிடத்தில் கிரகங்கள் இருக்குமிடம் சொல்லப்பட்டிருக்கிறது!

சூரியனுக்குப் பக்கத்திலே இருக்கும் புதன் கிரகத்தை செவ்வாய் கிரகத்திற்கு பக்கத்தில் இருப்பதாகவும், சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கும் வெள்ளி கிரகத்தை 5ஆவதாக இருக்கும் வியாழன் கிரகத்திற்குப் பக்கத்தில் இருப்பதாகவும் இப்படி ஒரே குழப்பமாக கிரகங்களின் வரிசையை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று கூறினால் அதைக் கேட்பவர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா!

அறிவியல்படி சூரியனிலிருந்து கிரகங்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று இருப்பதை சோதிடத்தில் சூரியன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மிகப் பெரிய தவறை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று பொய் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் நம்பினார்கள் பூமியை மய்யமாக வைத்துத் தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருவதாக! அறிவியல் ஆய்வுக்குப்பின் அது தவறு என்று தெரிந்த பிறகாவது சோதிடர்கள் திருத்திக் கொள்ள வேண்டாமா? எனவே சோதிடம் என்பது தவறான அடிப்படையில் தவறாக கணிக்கப்பட்டு பொய்யும் புரட்டும் இணைக்கப்பட்டு கூறப்படுவதுதான் என்பதை சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்!

பூமியின் துணைக் கோள் சந்திரனை சோதிடத்தில் சேர்த்துக் கொண்டவர்கள், செவ்வாய் கிரகத்தின் துணைக்கோள் 2, வியாழனின் துணைக் கோள் 16, சனியின் துணைக்கோள் 22, இவை சோதிடத்தில் சேர்க்கப்படவில்லை! அக்கால சோதிடருக்கு இந்த துணைக்கோள்கள் தெரிந்திருக்கவில்லை! அவர்களுக்கு தெரிந்திருந்த அரைகுறையான வானவியல் அறிவைக் கொண்டு மனித வாழ்க்கையின் முழுமையையும் கூறிட முடியும் என்று நம்ப வைத்து வருகின்றனர்!

ஒரே ஒரு மூலிகையைக் கொண்டு மனிதனின் அத்தனை நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறும் ஏமாற்றுக்காரனைப் போல், அறிவியலுக்குச் சம்பந்தமில்லாத சோதிடத்தால் மனித வாழ்வின் பிரச்சினைகளை எல்லாம் அறிந்து தீர்த்து வைக்க முடியும் என்று சோதிடர்கள் கூறி வருகிறார்கள். இருவரும் ஏமாற்றுக்காரர்களே!

வேத காலத்திலேயே சோதிடம் இருப்பதாகக் கூறுகிறார்களே அவர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டு வரை கூறி வருவது இந்த சோதிடம் மட்டும்தானே! அன்று சொன்னதைத்தானே இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! வேதத்தையும், சோதிடத்தையும் அதன் கணிப்பையும் கொண்டு புதிய கண்டுபிடிப்பு எதையாவது செய்ததுண்டா! பழைய சோதிடத்தை வைத்து ஏமாற்றுவது தானே உங்கள் வேலையாக இருக்கிறது. எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்! மேல் நாட்டினர் புதிது புதிதாக வானவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து வருகிற போது இந்த வேதகாலச் சோதிடர்கள் ஒரு கண்டுபிடிப்பைக் கூட செய்யவில்லையே!

மேல்நாட்டு விஞ்ஞானிகள் ஹால், கலிலியோ, பர்னால்டு, பெரைன், நிக்கோல்சன், ஹெர்ஷ்செல், கேசினி மற்றும் பல விஞ்ஞானிகள் 1610ஆம் ஆண்டிலிருந்து புதிய துணைக் கோள்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

2008ஆம் ஆண்டில் சனிக்கிரகத்தின் துணைக் கோளில் ஒன்றான டைட்டானில் பூமியில் கிடைக்கும் எண்ணை வளம் போல அங்கு திரவ வடிவமான ஹைட்ரோ கார்ப்பன்கள், மீத்தேன், ஈத்தேன் உருவில் கிடைக்கின்றன! இவ்வாறு வானவியல் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சோதிடர்கள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அறிவியலை நம்பாத மக்கள் சோதிடத்தை நம்புகிறார்கள். அறிவியலை ஏற்று மக்கள் விழிப்படைய வேண்டும்.

-----------கவிஞர் தி.பொன்னுசாமி, தூத்துக்குடி. நூல்:-” சோதிட மறுப்பும், வானவியல் சிறப்பும்

6.10.11

செவ்வாய்த் தோஷம் பார்க்கும் மூட சோதிடர்களுக்கு மரண அடி!


செவ்வாயில் தண்ணீர்!

செவ்வாய்த் தோஷம் பேசும் - பார்க்கும் மூட சோதிடர்களுக்கு மரண அடி விழுந்து விட்டது. கிரகங்களை அவற்றின் விஞ்ஞான தன்மையோடு பார்க்காமல், அவற்றின்மீது அபார சக்திகளைக் கற்பித்து அவை மனித வாழ்வைப் பாதிக்கச் செ ய்கின்றன என்று கதை விடுவதை இனியாவது நிறுத்த வேண்டும்.

செவ்வாயில் தண்ணீர் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கிறது; மனிதர்கள் குடியேறி வாழ வாய்ப்புண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் 2003-ஆம் ஆண்டில் ரூ.3600 கோடி செலவில் எஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி என்ற இரு ஆய்வுக் கலன்களை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பி வைத்தன. ஸ்பிரிட் ஆய்வுக் கலம் மணிக்கு 19790 கிலோ மீட்டர் வேகத்தில் 38 கோடி கிலோ மீட்டர் தூரத்தை ஏழு மாத காலம் பயணம் செய்து 3.1.2004 அன்று செவ்வாயில் இறங்கியது. ஆப்பர்சூனிட்டி ஆய்வுக்கலம் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி செவ்வாய்க்கிரகத்தில் இறங்கியது.

இவ்விரு விண்கலங்களும் செவ்வாய்க் கிரகத்தின் எதிர் எதிர் இடத்தில் (மறுபக்கம்) இறங்கி அங்குள்ள பாறைகளைத் தோண்டி துருவிப் பார்த்து ஆய்வு செய்து படங்களை அனுப்பி வைத்தன.

2007ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், பகடெனா என்ற இடத்தில் உள்ள ஜெட்பிரபல்கல் லெபாரட்டரி எனும் ஆய்வு நிலையத்திலிருந்து 4,200 கோடி டாலர் செலவில் உருவாக்கப்பட்ட போனிக்ஸ் செயற்கைக் கோள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது. மணிக்கு 21 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து 9 மாதம் பயணித்து 25.5.2008 அன்று செவ்வாயில் இறங்கியது. முன்னிலும் அதிக ஆய்வுகளை நடத்திய இது கனிமங்கள் பாறைகள், பனிக்கட்டிகள் என்று பல வகைகளிலும் ஆய்வு செய்து நம்பிக்கையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இவ்வாறு அனுப்பப்படும் விண் கலங்களால் இப்பொழுது ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளனர்.

செவ்வாய்க்கிரகத்தில் உள்ள காற்று மண்டலத்தின் மேல் பகுதியில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது என்பது மனிதகுலத்திற்கு மகிழ்ச்சி நிறைந்த தகவலாகும்.

மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரம் கிடைத்து விட்டது என்று விஞ்ஞானிகள் மகிழ்கின்றனர். ஏற்கெனவே சந்திர மண்டலத்தில் குடியேறிடலாம் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது. நிலாவுக்கு உல்லாசப் பயணம் சென்றுவர பல நாடுகளில் சுற்றுலா மய்யங்களே தொடக்கப்பட்டு விட்டன என்ற சேதி வெளி வந்தது.

அடுத்த கட்டமாக செவ்வாய்க் கிரகமும் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பது மனித அறிவின் மகத்தான ஆற்றலையும், கண்டு பிடிப்பையும் பறைசாற்றக் கூடியதாகும்.

அறிவியல் இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த வளமான சிந்தனைச் செழிப்புக்கிடையே செவ்வாய்த் தோஷம்பற்றி பேசும் சோதிடர்களும் படித்த - படிக்காத பாமரர்களும் இருப்பது கண்டு வாயால் சிரிக்க முடியவில்லையே. ஆம்! அவர்களின் அறிவை மத - மூடக்கிரகணம் பிடித்து ஆட்டுகிறது.

சூரியனிலிருந்து நான்காவது கிரகம் - பூமிக்கு அடுத்த வெளி வட்டத்தில் இருக்கக் கூடியது செவ்வாய்க் கிரகம். அது தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 24 மணி நேரம் 37 நிமிடம் ஆகிறது. சூரியனை ஒரு முறை சுற்றிவர ஓர் ஆண்டு 321 நாட்கள் ஆகின்றன.

வினாடிக்கு 24 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது செவ்வாய்க்கிரகம். பூமியின் பாதி அளவே உள்ளது. செவ்வாய்க்கிரகம். இதற்கு இரு துணைக் கோள்கள் உண்டு. ஒரு துணைக் கிரகம் 9340 கிலோ மீட்டர் தூரத்திலும், மற்றொரு துணைக் கிரகம் 23500 கிலோ மீட்டர் தொலைவிலும் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வருகின்றன.

2003ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி செவ்வாய்க்கிரகம் 9 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அய்ந்தரைக் கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமியை நெருங்கி வந்தது. அதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவும் இல்லை.

இவ்வளவு விஞ்ஞான தகவல்கள் செவ்வாயைப் பற்றி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு செவ்வாய்த் தோஷம் உள்ள பெண்ணுக்குச் செவ்வாய்த்தோஷம் உள்ள மாப்பிள்ளையைத்தான் தேட வேண்டும் என்று கூறி, சிலருக்கு திருமண வயது கடந்த போன கொடுமையும் நடப்பதுண்டு.

மக்களை வஞ்சிக்கும் இந்த சோதிட மூடத்தனத்தைத் தடை செய்ய வேண்டும் மக்கள் நல அரசுகள்.

21.8.11

அது என்ன பஞ்சாங்கம்?பஞ்சாங்கம் என்பது பார்ப்பனப் புரட்டே!


சீறீரங்கம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா என்கிற சண்டை வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் பிரிவு கவுன்சில் வரை சென்றது.

காஞ்சிபுரம் கோயில் யானை விடயத்திலும் இதே கதைதான். சென்னை உயர்நீதிமன்றம் வேடிக்கையான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. 15 நாள்கள் வடகலை நாமம்; அடுத்த 15 நாள்களுக்குத் தென்கலை நாமம் போடும்படி ஆணை பிறப்பித்தது.


யானைக்கு நாமம் போடுவது ஒருபுறம் இருக்கட்டும்; அது ஒழுங்கா லத்தி போடுகிறதா என்று பாருங்கள் என்றார் ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்.

தன் பக்தர்களுக்குள் நடக்கும் கோயில் யானை நாமச்சண்டையையே தீர்த்து வைக்க முடியாத கடவுளா பக்தர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போகிறது என்று ஒரே ஒரு கணம் புத்தியைப் பயன்படுத்தினாலே போதும்; பக்தி பஞ்சாய்ப் பறந்து போகும்.

இப்பொழுது சீரங்கம் கோயிலிலே இன்னொரு தமாஷான பிரச்சினை!

சீறீரங்கத்தைச் சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் பட்டர் (வயது 72) மது ரையில் உள்ள உயர்நீதி மன்ற கிளையில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பட்டருக்கு அப்படி என்ன அவசரப் பிரச் சினை? கோயிலில் நீண்ட காலமாக அவர் பஞ்சாங்கம் வாசித்து வந்தாராம்; வயது 72 ஆன நிலையில், அந்த வேலையிலிருந்து நீக்கி விட்டார்களாம்; அதற்காகத்தான் இந்த ரிட் மனுவாம் (சீறீரங்கநாதர் கனவில் வந்து மேலதிகாரிகளிடம் சொல்லித் தொலைத்து இருக்கக் கூடாதா?)

பிரபஞ்சத்தையே படைத்து ஆக்கும் கடவுளுக்குக்கூட பஞ்சாங்கத்தைப் படித்துத்தான் சேதி சொல்ல வேண்டுமா? ஒரு பார்ப்பானுக்கு வேலை கொடுக்க வேண்டுமென்றால் என்னென்ன உத்தியோகங்களை எல்லாம் உருவாக்கி வைத்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அது என்ன பஞ்சாங்கம்? திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சத்தையும் (அய்ந்தையும்) கூறுவதால் இதன் பெயர் பஞ்சாங்கமாம்!

இப்படிக் கூறும் பஞ்சாங்கத்துக்கும், அறிவியலுக்குள் என்ன சம்பந்தம்?

ஒரு சமயம் தினமணி ஏட்டில் பிரபல பத்திரிகையாளர் ஏ.என். சிவராமய் யரே ஒப்புக் கொண்டு (1979) எழுதியதுண்டு.

சூரியனும், கிரகங்களும் பூமியைச் சுற்றுவதாக நம்புவது அய்தீகம்! (என்பது நம்பிக்கை, என்பது அய்தீகம் என்று சில சொற்களைக் கைவசம் வைத்துக் கொண்டு தப்பிக்கப் பார்க்கின்றனர்).

என்பது.. அறிவியல்... என்பது விஞ்ஞானம்... என்று சொல்லிக் கொள்ளும் தைரியம் அவர்களி டத்தில் இருப்பதில்லை - இதற்குப் பெயர் தான் அறிவு நாணயமற்ற தன்மை என்பது.

மேலும் சிவராமன் எழுதுகிறார்: பஞ்சாங்கம் என்பது அதிர்ஷ்டம் பார்ப்பதற்கு உருவானதல்ல. மேலை நாட்டினரின் அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கம் தரும் தகவலுக்கும் வித்தியாசம் இருக்கும் என்று சொல்லி விட்ட பிறகு பஞ்சாங் கத்தைப் பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனம் அல்லவா; மக்களை நம்பச் செய்து ஏமாற்றும் அசல் பித்தலாட்டம் அல்லவா!

அறிவியல்படி சூரியன் என்பது வெறும் நட்சத்திரமே! ஆனால் பஞ்சாங்கம் சூரியனை கிரகத்தின் பட்டியலில் அல்லவா சேர்த்து வைத்துள்ளது.

சூரியன் மகர ராசியில் டிசம்பர் 22இல் பிரவேசிக்கிறது என்பது விஞ்ஞானம். ஆனால் சோதிடமோ சனவரி 13 அல்லது 14இல் மகரராசியில் சூரியன் பிரவேசிப்பதாகச் சொல்லுகிறது. இரண்டுக்கும் இடையில் 22 நாட்கள் இடிக்கின்றன.

உண்மை இவ்வாறு இருக்க, விஞ்ஞான ரீதியாகத் தயாரிக்கப்படும் ஏடுகளிலும், இதழ்களிலும் பஞ்சாங்கத்தின் அடிப் படையில் பலா பலன்களை அள்ளி விடுவது அசல் ஏமாற்று வேலையல்லவா!

எந்த அளவுக்கு இந்தப் பஞ்சாங்கம் மக்களைப் பாழ்படுத்தியிருக்கிறது தெரியுமா?

இந்தியாவில் மன்னர் மான்யம் ஒழிக்கப்பட்ட போது அரசிடம் மன்னர்கள் என்ன கேட்டார்கள் தெரியுமா?

ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மான்யமாக அளிக்க வேண்டும் என்பதோடு கூடுதலாக அவர்கள் கேட் டது ஆண்டுடொன்றுக்கு 40 பஞ்சாங்கங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்றால் இவர்கள் மன் னர்களா மண்ணர்களா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது!

கடவுளும், மதமும் இந்தப் பார்ப்பனீயமும் மனிதன் மூளையை எந்த அளவுக்குப் பாழ்படுத்தியிருக்கிறது - பார்த்தீர்களா!

பஞ்சாங்கம் என்பது பார்ப்பனர் புரட்டு என்று சும்மாவா சொன்னார்கள் சுயமரியாதைக்காரர்கள்?

----------------"விடுதலை” 21-8-2011

24.7.11

பஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானதா?

பஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்பது அப்பட்டமான பொய்!

1979ஆம் ஆண்டு தினமணி நாளிதழில், பழைய பஞ்சாங்கமும் வானவியல் பற்றிய நவீன ஆய்வுகளும் என்ற தொடர்கட்டுரையை திரு. ஏ.என்.சிவராமன் எழுதி வந்தார். அந்தக் கட்டுரையில் சூரியனும், கிரகங்களும் பூமியை சுற்றுவதாக நம்புவது அய்தீகம்.

பஞ்சாங்கம் என்பது அதிர்ஷ்டம் பார்ப்பதற்கு உருவானதல்ல! மேலை நாட்டினரின் அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கம் தரும் தகவலுக்கும் (சோதிடம் பஞ்சாங்கத்தை வைத்தே கணிக்கப்படுகிறது) வித்தியாசம் இருக்கும்! தோராயமான பல உண்மைகள் நமக்குத் தெரிந்தேயிருந்தன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திரு. ஏ.என்.சிவராமன் கருத்துப்படி அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கத் தகவலுக்கும் வித்தியாசம் இருக்குமென்றால் பஞ்சாங்கக் கணக்கு தவறு என்றுதானே பொருள்!


பஞ்சாங்கம் தோராயமானது என்றால் சோதிடமும் தோராயமானதுதானே

பஞ்சாங்கம் அறிவியலுக்கு வித்தியாசப்பட்டது - தோராயமானது என்றால் அந்தப் பஞ்சாங்கத்தைக் கொண்டு கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியல்

அடிப்படையானதும் - துல்லியமான கணக்குமாகும்!

சோதிடம் இன்றைய அறிவியலுக்கு வித்தியாசமானது ஒத்து வரக்கூடியது அல்ல என்பதுதானே உண்மை. தனி மனிதன் வாழ்வை சோதிடத்தின் மூலம் துல்லியமாகக் கூறமுடியும் என்பது ஏமாற்றுத்தானே! அப்படிப்பட்ட சோதிடத்தை நம்பிக் கொண்டு அதிலே அறிவியல் இருப்பதாக சோதிடரைக் தேடிக் கொண்டு அலைந்ததால் தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காணமுடியுமா!

அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் பெருமளவு வித்தியாசம்

அறிவியல்படி உண்மை நிலவரப்படி சூரியன் மகர ராசியில் டிசம்பர் 22இல் பிரவேசித்து விடுகிறது. ஆனால் சோதிடக் கணக்குப்படி ஜனவரி 13 அல்லது 14இல் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதாகக் கணக்கிட்டு மகர சங்கராந்தி கொண்டாடுகிறார்கள். அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் 22 நாள்கள் வித்தியாசம் இருக்கின்றன. இந்தச் சோதிடம் எப்படித் துல்லியமானதாகவும் அறிவியலின்படியும் ஆனதாகும்!

நிரூபிக்கப்படுவது அறிவியல்

அறிவியல் என்பது நிலைநாட்டப்பெற்ற உண்மைகள். சோதிடம் நிலைநாட்டப்பெற்ற அறிவியலா? உண்மையானதா? உலக விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டனரா!

கணித மேதை ராமானுஜம் தனது கணிதம் பற்றிய ஆய்வுகளை உலகுக்கு அறிவித்தார். உலக விஞ்ஞானிகளிடம் ஆய்வுகளை அளித்தார். நிரூபித்துக் காட்டினார். அவரது கணிதம் பற்றிய ஆய்வை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டதுடன் அவருக்குச் சிறந்த பட்டமும் வழங்கிச் சிறப்பித்தனர்.

மூலிகைப் பொருளிலிருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் என்ற இராமர்பிள்ளையால் அதை விஞ்ஞானிகளின் மத்தியில் செய்து காட்டி நிரூபிக்க முடியவில்லை. விஞ்ஞானிகள் அவரின் ஆய்வை ஏற்றுக் கொள்ளவில்லை!

எனவே நிரூபிக்கப்பட்டதைத் தான் உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வார்கள். நிரூபிக்கப்படாததை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று இதுவரை நிரூபித்துக்காட்டியதில்லை. சோதிடர்களால் நிரூபிக்கவும் முடியாது. அவ்வளவு தவறுகள் சோதிடத்தில் இருக்கின்றன. சூரியனை ஒரு கிரகமென்றும், அது ஒரே இடத்தில் நிலையாக இருக்கிற பூமியைச் சுற்றி வருவதாகவும் சோதிடம் கூறுகிறது. இந்த அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியல் பூர்வமானது என்று கூறமுடியும்.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது அண்டத்தில் ஒரு நட்சத்திரம். நொடிக்கு 60 கோடிடன் ஆற்றலை வெளியிடும் பேராற்றல் மிக்க சூரியனை, வறண்டு போன, கடும்பனி மூடிய கிரகங்களுடன் சேர்த்து சூரியனை ஒரு கிரகமென்று சோதிடம் குறிப்பிடுவது மிகப்பெரிய தவறு!

வானவெளியிலுள்ள புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கிரகங்களைத் தான் இன்றைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சோதிடம் எழுதப் பெற்ற அக்காலத்தில் யுரேனஸ், நெப்டியூன் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த கிரகங்கள் 6 மட்டுமே!

ராகு, கேது என்பது கிரகமே அல்ல! அதையும் சோதிடத்தில் கிரகமென்று சேர்த்துக் கொண்டார்கள். கிரேக்க நாட்டு வானவியல் கருத்து அது.

சூரியனிலிருந்து கிரகங்களின் வரிசை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி என்று இருப்பது கூடத் தெரியாமல் சோதிடத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வரிசைப்படுத்தியிருக்கின்றனர். கிரகங்களின் வரிசையே தவறாக இருக்கும் போது, அந்த அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் தவறானதுதானே! அது அறிவியல் அடிப்படை ஆகுமா!

ராசி வட்டத்திலும் சோதிடம் தவறாக கணக்கிடப்படுவதாக வானவியல் விஞ்ஞானி. எஸ்.சுந்தரம் தான் எழுதிய நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். வானவியல் விஞ்ஞானத்திலிருந்து சோதிடம் விலகி விட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அறிவியல்படி கிரகங்களுக்கு ஈர்ப்புவிசை கொஞ்ச தூரத்திற்கே உண்டு. ஈர்ப்பு விசையும் பூமியை எட்டுகிற அளவிற்கு கிடையாது! சில குறிப்பிட்ட தூரத்திற்கே ஈர்ப்பு விசை உண்டு! பூமியின் ஈர்ப்பு விசை 350 கிலோ மீட்டர் உயரத்தில் வலுவிழந்து இருப்பதால் விண்வெளி வீரர்கள் மிதந்தபடி இருக்கிறார்கள். ஆனால் சோதிடர்கள் கிரகங்களின் ஆற்றலால் (சக்தி) பூமியில் தனி மனிதனின் வாழ்வு நிருணயிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். அறிவியல் அறிஞர்களின் கருத்துகளை நம்பாமல் சோதிடர்களின் கருத்தை நம்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

பூமியின் துணைக்கிரகம் சந்திரனை சோதிடத்தில் சேர்த்துக் கொண்டவர்கள் மற்றக் கிரகங்களிலுள்ள துணைக் கிரகங்களைச் சோதிடத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை! அக்காலத்தில் தெரிந்திருப்பதைக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டதே தவிர, அறிவியல் தெரிந்து எழுதப்பட்டதல்ல!

சோதிடத்தில் கிரகங்கள் வரிசையில் முரண்பாடு, ராசி வட்டத்தில் தவறு, கிரகங்களுக்கு ஏதோஆற்றல் இருப்பதாகக் கூறுவது தவறு, இத்தனை தவறுகளை சோதிடத்தில் வைத்துக் கொண்டு பஞ்சாங்கமும், சோதிடமும் அறிவியல் அடிப்படையானது என்று சொல்ல எப்படித் துணிந்தார்களோ.

--------------------------தி.பொன்னுசாமி எழுதிய சோதிட மறுப்பும், வானவியல் சிறப்பும் என்ற நூலிலிருந்து

18.9.10

ஜோசியம் முழு முட்டாள்தனம் - பண்டித நேரு



பாக் இந்தியா போர்ப் புரளிகளைப் பத்திரிகைகள் வெளியிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் இக்கூட்டத்திற்கு வரும் சமயத்தில் டில்லியில் பலமான வதந்தியொன்று கிளப்பிவிடப்பட்டிருப்பதை அறிந்தேன். அதாவது, இந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாக் இந்தியா போர் தொடங்கப் போகிறதென்று டில்லியில் பேச்சாகவுள்ளது. இது எந்த ஜோதிடர் கிளப்பிவிட்ட புரளி என்பது எனக்குத் தெரியவில்லை. சில நாட்களுக்கு முன், டில்லி செய்தித்தாளொன்றும் இதேமாதிரி வதந்தியைக் கொட்டை எழுத்துத் தலைப்புடன் தந்து வெளியிட்டிருந்தது. பத்திரிகையை அதிகம் விற்க இம்மாதிரிச் செய்திகளை வெளியிடுகிறார்கள் போலும்.

சில பஞ்சாப் பத்திரிகைகளும், சில பம்பாய் பத்திரிகைகளும் இந்த வதந்திகளை வெளியிடுகின்றன. இந்த ஆசிரியர்களின் மனம் மெய்மையில் பாய்வதில்லை போலும். இந்த வதந்திகளின் விளைவாக அமிர்தசரசில் அவதி ஏற்பட்டுள்ளது. இந்த முட்டாள் தனமெல்லாம் எதற்காக?

இந்த நாடு எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஜோதிடர்களை நம்பிக் கிடக்கப்போகிறதா? ஜோதிடர்களின் கருணையால் பிழைக்கப்போகிறதா? பின்னால் நடக்கப் போகும் நிகழ்சிகளைப்பற்றி நிமித்தம் கூறக்கூடிய சக்தி இந்த ஜோதிடர்களுக்கு இருந்திருக்குமேயாயின் அவர்கள் முதலில் தங்கள் சொந்த வாழ்க்கைக்கு வழியைக் கணித்தறிந்துகொண்டிருக்க வேண்டும், பிறரிடம் பிச்சைக் காசுக்குக் கையேந்திநிற்பதை விடுத்து, பிழைக்கும் வழியையறிந்து நடந்து கொண்டிருக்கவேண்டும். இந்த உண்மையை மக்கள் திட்டவட்டமாக அறிந்து ஆராய்ந்து பார்த்து நடந்துகொள்ள வேண்டும்.

மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஜோதிடர்களின் நிமித்தத்தை நம்பிக் கிடப்பது அறிவுகெட்ட முட்டாள்தனத்தின் உச்ச நிலையாகும். இந்நாடு நல்வாழ்வு மிக்க நல்ல நாடாகவிருக்கப்போகிறதா? அல்லது யாரோ ஒரு ஜோதிடன் ஆபத்து வரப் போகிறது என்று சொல்லிவைத்தது கேட்டு திகில் கொண்டு ஓட்டமெடுக்கப் போகிறதா?

செப்டம்பர் 9 ஆம் தேதி பாக்_இந்தியா போர் தொடங்கப் போகிறதென்று இந்த ஜோதிடர்கள் சொல்லி வைத்திருக்கிறார்களே பாருங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சண்டை தொடங்கப் போகிறதா என்று. அன்று சண்டை ஏற்படாவிட்டால், இனிமேல் இந்த ஜோதிடப் புளுகுகளை நம்பும் குருட்டு நம்பிக்கைப் போக்கைக் கைவிடுங்கள். இத்தகைய வதந்திகள் இனச்சச்சரவுகளைத்தான் மூட்டிவிடும். எனவே, மக்கள் இத்தகைய வதந்திகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

(டில்லி ராஜ்ய காங்கிரசுக் கமிட்டி ஆதரவில் கரோல்பாகில் நடந்த பொதுக் கூட்டத்தில் பண்டித நேரு பாகிஸ்தான் போர்பற்றிய வதந்திகளைக் கண்டித்துப் பேசியபோது குறிப்பிட்டது)

----------------"விடுதலை" 08.09.1951

2.9.10

ராசியும் வானியலும்


ஜோதிடத்தில் தலையாய பங்குவகிப்பது இராசி அல்லது இராசிச் சக்கரமாகும். இந்த இராசி என்பது என்ன? இதற்கும் வானியலுக்கும் என்ன தொடர்பு? இதனை முதலில் விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள ஏதுவாகும். இரவு வானில் விண்மீன்கள் ஜொலிப்பதைக் கண்டு களித்திருப்பீர்கள். சற்றுக் கவனமாக நோக்கினால், விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போன்று தோற்றமளிப்பதைக் காணலாம். மெய்யாக, பூமி சூழல்வதால்தான் இத்தோற்றம் ஏற்படுகிறது.

மேலும், சலியாது பலநாள்கள் வானத்தை உற்று நோக்கினால் சில விண்மீன்கள் மட்டும் ஏனைய விண்மீன்களிலிருந்து வேறுபட்டுத் தோற்றமளிப்பதைக் காணலாம். மேலும் விண்மீன்களின் பின்புலத்தில் இந்தக் குறிப்பிட்ட சில மட்டும் சலனிப்பதைக் காணலாம். இவைதான் கோள்கள். கிரகம் என்று வடமொழியிலும் பிளானட் என்று கிரேக்க மொழியிலும் வழங்கப்படுகிறது. பிளானட் என்றால் அலைபவன் என்று பொருள்.

விண்மீன்களை உற்றுநோக்கினால் வேறு சில தோற்றங்களையும் காணலாம். சிலசமயம் வானில் புலப்படும் முகில்களில் யானை, குதிரை என பல உருவங்கள் தென்படுவது போன்று, விண்மீன்கள் இடையே சில உருவங்களைக் கற்பனை செய்ய முடியும். சில வார இதழ்களில் புள்ளிகளை இணைத்து மறைந்துள்ள உருவங்களைக் கண்டுபிடி எனக் கூறுவதுபோல, விண்மீன் சிலவற்றை இணைத்துப் பார்த்தால் சில உருவங்களைக் காணலாம்.

இவ்வாறுதான் கரடி, நாய், மீன், மனிதத் தலை, குதிரை, வேடுவன், எருது எனப் பல உருவங்களை நமது முன்னோர்கள் கற்பனை செய்துள்ளனர். இவைகளை விண்மீன் தொகுப்பு எனக் கூறலாம். இவை கற்பனைதானே தவிர, மெய்யாக இரவு வானில் உள்ள பொருள்கள் அல்ல. கோள்கள், விண்மீன்கள் தவிர வானத்தில் காட்சி தருபவை சூரியனும் சந்திரனும்தான்.

பூமி கோள வடிவில் உள்ளதால் பூகோளம் என்கிறோம். பார்வைக்கு இரவு வான் நம் தலைமீது கவிழ்த்து வைக்கப்பட்ட தேங்காய் மூடி போன்று உள்ளது அல்லவா? கற்பனையாக இரவு வானின் தேங்காய் மூடி உருவை முழுமையாக்கினால், ஒரு பெரும் கோளம் கற்பனை செய்யலாம் அல்லவா? இதைத்தான் வான்கோளம் என்கிறோம். அதாவது, ஒரு மிக மிகப்பெரிய கோளத்தில் விண்மீன்கள் பதிந்துள்ளன எனவும், இந்தக் கோளத்தின் மய்யத்தில் சிறு எலுமிச்சைப் பழம்போல் பூமி கோளமாய் இருக்கிறது என்றும் கற்பனை செய்யலாம் அல்லவா? இவ்வாறுதான் நமது முன்னோர்களும் கற்பனை செய்தனர். இதனை, பூகோளம் என்றழைத்தனர்.

வான்கோளத்திற்கும், பூமிக்கும் இடையே கோள்கள் பூமியைச் சுற்றி வலம் வருவதாகவும் புனைவு செய்தனர். சூரியன் ஒரு நாளில் பூமியைச் சுற்றுவதால் இதனை முதல்கோள் எனவும், அதற்கு மேலே சந்திரன் என கோள்களை வரிசைப்படுத்தினர்.

சூரியன் பூமியைச் சுற்றும் பாதைக்கு, பூமியின் அச்சு 23லு பாகை சாய்வாக உள்ளது. ஆகவே, பூமியின் வட, தென் முனைகளுக்கு நேரே வான்கோள வட, தென் முனைகள் அமையாது, 23லு பாகை சாய்வாக வான்கோளத்தின் மத்திய ரேகை அமையும். வான்கோளத்தில் சூரியன் வலம் வரும் பாதை சூரிய வீதி என்றழைக்கப்படுகிறது. சூரியவீதியின் சிறப்பு என்னவெனில், கோள்கள் அனைத்தும் மற்றும் நிலவும் சூரிய வீதியைச் சார்ந்தே வான்கோளத்தில் சலனிக்கும். சூரியவீதிக்கு 80 இரண்டு பக்கமும் உள்ள பகுதியில் மட்டுமே கோள்கள் பாயும். சூரியவீதியின் இருபுறமும் 80 உள்ள வான்கோளம் பகுதியே ராசி என்று அழைக்கப்படுகிறது. வான் கோளத்தின் மத்தியப் பகுதியில் 160 அகலத்தில் 3600 வட்டமாக ராசி உள்ளது.

இந்த ராசியை 12 சம பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியில் உள்ள விண்மீன்களைக் கற்பனையாக, சில உருவங்களைப் புனைவு செய்தனர் நமது முன்னோர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ன 12 ராசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பூமி (1) வான்கோளத்தில் உள்ள மேஷ ராசிக்கு நேராய் உள்ளது. ஆகவே, சூரியனிலி ருந்து யாராவது பூமியைப் பார்த்தால், பூமி மேஷ ராசியில் உள்ளது போன்று தோன்றும். ஆனால், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு, சூரியன் துலாம் ராசி யில் உள்ளது போன்று தோன்றும். வானியலில், இதை, சூரியன் துலாமில் இருப்பதாகக் கூறுவோம்.

ஆனால், பூமி (2) என்ற இடத்தில் பூமி தனது சுற்றுப்பாதையில் அமைத்தால், சூரியனிலிருந்து பார்ப்பவருக்கு பூமி மிதுனத்திலும், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு சூரியன் தனுசுவிலும் உள்ளது போன்று தோன்றும்.

ஆக உள்ளபடியே ராசிகளையும், விண்மீன் தொகுப்பு (Constellations) களை நமது முன்னோர் வடிவமைத்தது, இரவு வானின் நிகழ்வுகளைச் சுட்டுவதற்குத்தான். காலப்போக்கில் இந்த உருவங்கள் தான் புராணங்கள் உருவாகி புனைவுகள் புரட்டுகள் நிலைகொண்டிருக்கும் எனக் கருதலாம். சந்திரன் இன்று இரவு எங்கே இருக்கும் என்று எப்படி விவரிப்பது. பூமியின் சூழற்சியால் சந்திரன் மேற்கு முகமாக மெல்ல மெல்ல ஒவ்வொரு நொடியும் நகரும் அல்லவா? இச்சூழலில் எப்படி விவரிப்பது. இங்குதான் ராசிகள் உதவுகின்றன. இன்று கடக ராசியில் சந்திரன் இருக்கும் என்றால் மிகத் தெளிவாக அனைவரும் விளங்கிக்கொள்ள முடியும். கடக ராசி மேற்குமுகமாக நகர்ந்தாலும் அத்துடன் சந்திரனும் இணைவாக நகரும் அல்லவா? ஆகவே விண்மீன் தொகுப்புகள் வானவியலில் கற்பனைப் பிரதேசங்கள், வான் நிகழ்வுகளை எளிதில் சுட்ட உபயோகமானவையாகத் திகழ்கின்றன. கோள்களும், சந்திர சூரியனும் ராசி மண்டலத்தில்தான் சலனிப்பவை என்பதால் விண்மீன் தொகுப்புகளிலேயே மிக முக்கியத்துவம் பெற்றதாக ராசி மண்டலமும், அதன் 12 விண்மீன் தொகுப்பும் (ராசிகளும்) திகழ்கின்றன.

உத்ராயணம் தட்சணாயனம் என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் இருக்கும். ஜூன் 21ஆம் தேதி கடக ராசியிலும், செப்டம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியையும், டிசம்பர் 22 ஆம் தேதி மகர ராசியிலும் அமையும். மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் இரவு பகல் பூமி முழுவதும் சரிசமமாக இருக்கும். இந்த இரண்டு நாள்களை, சம இரவு நாள்கள் எனவும் இந்நாள்களில் வான்கோளத்தில் சூரியன் அமையும் புள்ளிகளை, சம இரவுப் புள்ளிகள் எனவும் அழைப்பர்.

மார்ச் 21ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் மேஷத்திலிருந்து கடகம் நோக்கி நகரும். பூமி 23லு பாகை சாய்வாக இருப்பதால், சூரிய ஒளி பூமியின் வடகோளத்தில் அதிகமாயும் தென் கோளத்தில் குறைவாகவும் விழும். வடகோளத்தில் கோடை; தென் கோளத்தில் குளிர் நிலையைப் பூமியில் தோற்றுவிக்கும். இச்சமயத்தில் நமது பார்வைக்கு, சூரியன் நேர் கிழக்காக உதிக்காது. சூரிய உதயப் புள்ளி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகரும். இச் சமயத்தில் வடகோளத்தில் உள்ளவர் களுக்குப் பகல் பொழுது நீளும். ஜூன் 21 ஆம் தேதி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதயப் புள்ளி தெற்குநோக்கி நகரத் தொடங்கும். செப். 23 அன்று மறுபடி சமஇரவு. அன்று மார்ச் 21ஆம் தேதி உதித்தது போல, சூரியன் நேர்கிழக்கில் உதிக்கும். செப். 23 முதல் டிச. 22 வரை சூரிய உதயப்புள்ளி தெற்கு நோக்கி நகரும். டிச. 22 அன்று, உச்ச கட்டத் தெற்குப் புள்ளியில் சூரிய உதயம் அமையும். டிச. 23 முதல் சூரியன் வடக்கு நோக்கி நகரும். மறுபடி மார்ச் 21 சம இரவு நாள். அன்று நேர் கிழக் காக சூரிய உதயம் அமையும்.

அதாவது டிச. 23 முதல் ஜூன் 21 வரை சூரிய உதயப் புள்ளி வடக்கு முகமாகவும், ஜூன் 22முதல் டிச. 22 வரை தெற்குநோக்கியும் அமையும். ஆகவே, இதனைக் குறிக்க முன்னதை உத்தராயணம் எனவும் பின்னதைத் தட்சணாயனம் என்று அழைப்பர். ஆக மகரம் முதல் கடகம் வரை சூரியப் பெயர்ச்சி உத்தராயணம். சிம்மம் முதல் மறுப்பு கடகராசியை அடைவது தட்சணாயனம்.

ராசிகள் உருவானது எங்கே?

இந்திய ஜோதிடத்திலும் வானவியலிலும் பயன்படுத்தப்படும் ராசி எனும் கருத்தும், 12 ராசிகளின் பெயர்களும் பெரும்பாலும் கிரேக்க பாபிலோனியக் கொள்கைகளுக்கு ஒப்பாக இருப்பது வியப்பான சிறப்புச் செய்தி ஆகும்.

வராகமிகிரர் தனது பிரஹத் சம்ஹிதையில் கிரேக்க ஜோதிடர்கள் குறித்துக் (யவனர், மிலேச்சர் என குறிப்பிட்டு) கூறுகிறார். மேலும், பிரஹக் ஜாதகம் எனும் நூலில் ராசிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. சிதம்பர அய்யர் இந்நூலினைக் குறித்துக் கூறும்போது, கிரேக்கர்கள் இந்தியர்களிடையே நீண்டகாலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. அதுபோன்றே வராகமிகிரர் பயன்படுத்தும் சில கலைச் சொற்கள் கிரேக்க மொழியின் திரிபு என பாலசந்திரராவ் சுட்டிக்காட்டுகிறார். மேலும், வானியல் நூல்கள் ஆசிரியர்கள் குறித்துக் கூறும்போது, பவுலிஸ், ரோமசு சித்தாந்தங்கள் எனவும் சுட்டப்படுகின்றன. பவுலிஸ் என்பது பவுலஸ் அலெக்ஸாண்டிரனஸ் என்பர் எனவும் ரோமசு என்பது ரோமபுரியைக் குறிப்பது எனவும் கூறப்படுகிறது. ஆக வானவியல் கருத்துகள் பரவியதுபோல ஜோதிடக் கருத்துகளும் இங்கும் அங்கும் உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடும் என துணியலாம்.

2.8.2000 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கூடினர். அந்நகரமே அல்லோலப் பட்டது. அன்று சனி பகவான், அதுவரை தான் குடியிருந்த மேஷ ராசியை விட்டு அகன்று ரிஷபராசிக்கு மாறியதே இதற்குக் காரணம்.

சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்ற சுமார் 36 ஆண்டுகள் எடுக்கும். ஆகவே, 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள், காணப்படும். இதனைத்தான், அந்த ராசியை, சனி பிடித்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரண்டரை ஆண்டுகள் கழித்து, சனி அந்த ராசியிலிருந்து விலகி அடுத்த ராசிக்கு மாறும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி எனக் கூறுகிறார்கள்.

ஆகஸ்ட் 2000த்தில் மேஷ ராசிக்காரருக்கு சனி விலக ஆரம்பித்து விட்டதாகவும், ரிஷப ராசிக்காரரை சனி பிடித்து விட்டதாகவும் அதற்கடுத்துள்ள மிதுன ராசிக்காரருக்கு சனியின் பார்வை படியத் தொடங்கிவிட்டதாகவும் ஜோதிடம் கூறுகிறது. இதுதான் 7லு நாட்டுச் சனியின் பின்புலமுள்ள கருத்து. (புரட்டு)

சனி மட்டுமல்ல, எல்லாக் கோள்களுமே சூரியனைச் சுற்றுவதால் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும். சந்திரன் இரண்டே கால் நாளும், இராகு, கேது ஒன்றரை வரு டமும், சனி இரண்டரை வருடமும், குரு ஒரு வருடமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், சூரியன், சுக்கிரன், புதன் ஆகியவை ஒரு மாதமும் ஒரு ராசியில் தங்கும் என்பது வழக்கு. (நன்றி: விவேகானந்தன், தீக்கதிர்). நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்?

தி. வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை”14-8-2010

28.7.10

பஞ்சாங்கத்தில், சோதிடத்தில் இடம் உண்டா?



சூரியன் அருகே வால் நட்சத்திர வடிவத்தில் புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்தனர். ஒசிரிஸ் என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. பூமியிலிருந்து 153 ஒளி ஆண்டு தூரத்தில் இது உள்ளதாம்.

அதெல்லாம் சரி, இன்னும் பஞ்சாங்கத்திலும், ஜோதிடத்திலும் நவக் கிரகங்களுக்கு மட்டும் பலன் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே - இப்படி புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கிரகங்களுக்கு என்ன பலனோ!

இதில் விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதை ஒன்று உண்டு. உண்மையான கிரகமான பூமிக்கு ஜோதிடத்தில் இடம் இல்லை. பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டாம். ஹி... ஹி...

அதைவிட ஒரு தமாஷ் என்ன தெரியுமா? சூரியன் ஒரு நட்சத்திரம்தான்; ஆனால், ஜோதிடத்தில் சூரியன் கிரகமாம்.

இன்னொரு சுவையான தகவலும் உண்டு.

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் உண்டே பஞ்சாங்கக்காரர்களுக்கு இவையெல்லாம் தெரியாத காரணத்தால், இவற்றுக்கு ஜோதிடத்தில் பலன் சொல்லப்படவில்லை.

மேலும், ஒரு வயிறு வெடிக்கும் சிரிப்பு!

ஜோதிடத்தில் ராகு, கேது என்று இரண்டு கிரகங்களைச் சொல்லுகிறார்களே - அப்படி எந்தக் கிரகமும் கிடையவே கிடையாது என்று காது செவிடாகும் வகையில் விஞ்ஞானிகள் அடி கொடுக்கிறார்கள்.

இதற்கு மேலும் ஜோதிட நம்பிக்கையா? நம்புபவர்களை எதைக் கொண்டு சாற்ற?

---------------------நன்றி:- “விடுதலை” 27-7-2010

27.6.10

பிட்டத்தில் அடித்தான் பல் விழுந்து போச்சு!

பஞ்சாங்கம் 40+


தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பது சட்டப்படியாகவும் வழக்கப்படியாக வும் வந்துவிட்ட நிலையிலும் கூடச் சில மண்டூகங்கள் சித்திரை மாதத்தில் வருஷம் பிறப்பதாகக் கூறிக் கொண்டு கோயிலுக்குப் போய்ப்பஞ்சாங்கம் படிப்பதைப் பழக்கமாக வைத்துள்ளார்கள். பஞ்சாங்கம் படிப்பதால் நிலத்தில் விளைச்சல் கூடுதல் ஆகுமாம். பிட்டத்தில் அடித்தான் பல் விழுந்து போச்சு என்று புகார் கொடுத்தவனைப் போல இதைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். கிணற்றுக்குள் மூழ்கிக் கிடக்கும் தவளைக்கு அதுவே மிகப் பெரிய கடல் என்ற எண்ணமாம். அதனால்தான் இவர்களை மண்டூகம் (தவளை) என்கிறோம்.

பஞ்சாங்கத்திற்கும் பயிர் செய்வதற்கும் என்ன தொடர்பு? யாரும் விளக்கவில்லை. அப்படித் தொடர்பு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், எந்தப் பஞ்சாங்கத்தைப் படித்தால் பயிர் வளரும்? சுத்த வாக்கியப் பஞ்சாங்கம், எண் கணிதப் பஞ்சாங்கம் என்று இரண்டு பஞ்சாங்கங்கள் தமிழ்நாட்டில் விற்கிறார்களே! இவற்றில் எதில் பயிர் வளர்க்கும் உரங்கள் கிடைக்கின்றன? ஒன்றில் இயற்கை உரமும் மற்றொன்றில் இரசாயன உரமும் கொட்டிக்கிடக்கின்றதா? விவரம் சொல்லலாமே!

40க்கும் மேலே

தமிழ்நாட்டில் இப்படிக் குழப்பம் என்றால், பாரதநாடு முழுவதிலும் பெருங்குழப்பமே உள்ளது. ஏறத்தாழ 40 வகையான பஞ்சாங்கங்கள் இந்தப் புண்ணியப் பாரத பூமியில் புழங்கி வருகின்றன. மகாராட்டிரத்தில் மட்டும் எட்டுவிதப் பஞ்சாங்கங்கள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று உடன்பாடானவை அல்ல; எதிரும் புதிருமானவையாகவே உள்ளன.

சூரியனை மய்யமாக வைத்து இந்துமதப் பஞ்சாங்கங்கள் நாள், மாத, வருடக் கணக்குகளைச் செய்து வருகின்றன. இசுலாமிய மார்க்கத்தில் இருப்பது நிலவை மய்யமாக வைத்துக் கணக்கிடும் முறை. இந்து மதத்திலேயும் பகுதிக்குப் பகுதி மாறுபாடுகள் உண்டு. வடஇந்தியப் பகுதிகளில் முழு நிலவு (பவுர்ணமி) நாளை வைத்து மாதங்கள் பிறக்கின்றன. மத்திய இந்தியப் பகுதிகளில் இதுவே மறைநிலவு (அமாவாசை) நாளை வைத்துப் பிறப்பதாகச் சொல்கிறார்கள். தென் இந்தியாவிலோ சூரியன் நுழையும் ராசிகளுக்கு ஏற்ப மாதப் பிறப்பைக் கணக்கிடுகிறார்கள்.

இரவில் திருமணம்

வட இந்தியாவில் விக்ரம சகாப்தம் என்று கூறி, தீபாவளிப் பண்டிகை அன்று புத்தாண்டு பிறப்பதாகக் கூறுகிறார்கள். மற்றப் பகுதிகளில் சாலிவாகன சகாப்தம் எனக் கூறி வசந்த காலத்தில் வருடம் பிறப்பதாகக் கூறுகிறார்கள். குஜராத்தி, மார்வாடி-கள் போன்ற வணிக ஜாதிகள் நிறைந்துள்ள பகுதிகளில் திருமணங்கள் எல்லாமே இரவு நேரங்களிலேயே நடக்கின்றன.

இரவு நேரத் திருமணம் என்பதைத் தென் இந்தியாவிலோ மகாராட்டிரத்திலோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பகல் முழுவதும் வியாபாரம் செய்து லாபம் சம்பாதித்துப் பிறகு ஓய்வாகக் குடும்பச் சடங்குகளைச் செய்வது அங்கு வியாபாரிகளின் வாடிக்கை. அதில் குறைகாண முடியாதே!

ஒரே இந்து நாடாக இருந்த நேபாளத்தில் வாரத்தின் ஏழு நாள்களிலும் திருமணங்கள் நடக்கும். மாலை தொடங்கி இரவில் முடியும். யாருக்கும் சிரமம் இல்லாமல், அனைவரும் கலந்து கொள்ளும் காலமாக இருப்பதால் சிறந்த நடைமுறை. ஆனாலும், தென்னாட்டில் கடைப்பிடிப்பது கிடையாது. பின் என்ன பாரதம் ஒரு நாடு? பின் என்ன இந்து மதம்? ஒரே மாதிரியான நடைமுறை இல்லையே! பிறகு எப்படி, இந்து என்று பெருமைப்படுவது? பஞ்சாங்கத்தின்படி நாள் ஒன்றுக்கான 24 மணிநேரம், 60 நாழி-கைகளாகப் பிரிக்கப்படுகிறது. பகல் 12 மணி நேரத்திற்கான 30 நாழிகைகளுக்கு மட்டுமே, நல்ல நேரம், கெட்ட நேரம், ராகுகாலம், எமகண்டம், குளிகை, மேல்நோக்கு, கீழ்நோக்கு எல்லாம்? சூரியன் மறைந்த பிறகு உள்ள 12 மணி நேரத்திற்கான 30 நாழிகைக்கு எதுவுமே கிடையாது. ஆகவே இந்த நேரத்தில் சுப காரியங்கள் செய்வதற்குத் தடை ஏதும் கிடையாது. இது வட நாட்டாருக்கு வசதி என்றால், தென் நாட்டாருக்கு வசதி இல்லை என்றால் பின் எப்படி பாரதம் ஒரு நாடு நாம் அதன் புதல்வர் அந்த நினைப்பை நாம் அகற்றக் கூடாது என்றால், என்ன நியாயம்? கேட்க மாட்டோமா?

எல்லா மாதமும் திருமணம்

இந்த நிலையில் மாராட்டியத்தில் புதிய பிரச்சினை. திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்ட முகூர்த்த நாள்கள் பஞ்சாங்கப்படி மிகவும் குறைவு. அதிலும் மழைக்கால மாதங்களில் (சாதுர் மாதம்) அறவே முகூர்த்த நாள்கள் கிடையாது கூடாது. வேலை செய்யாமல் பிச்சை எடுத்துச் சாப்பிடவேண்டிய சாமியார்கள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள் போன்ற ஆள்கள் மழைக்காலத்தில் ஊர், ஊராகப் போய்த் தெருத்தெருவாகத் திரிந்து பிச்சை எடுப்பது சிரமம் என்ற காரணத்தால் _ இந்தத் தெண்டச்-சோற்று மனிதர்களை ஓரிடத்தில் தங்கவைத்து வடித்துப் போடுவது என்ற பழக்கத்தினால் வந்தது இந்த ஏற்பாடு. மழைக்காலத்திற்கு எறும்பு தன் தீனியைச் சேகரித்து வைத்துச் சாப்பிடுவது போன்ற வகையிலான ஏற்பாடு. ஆகவே, இவை கெட்ட மாதங்களாம். சுப காரியங்கள் நடக்கக் கூடாதாம்.

பஞ்சாங்கத்தை மாற்று

இதை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை மாராட்டியத்தில் எழுந்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட கோல்காபூர் (சமஸ்தானம்) மாவட்டத்தில் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அந்த ஊரில் உள்ள கர்வீர் பீட சங்கரமடத்தின் அதிபதி கிறீவித்யா நிருசிங் பாரதி என்ற பெயர் கொண்ட சங்கராச்சாரி இதற்கு முன் முயற்சி எடுத்துள்ளார். மாராட்டியத்தில் பஞ்சாங்கம் போடும் எட்டுப் பேரில் அய்ந்து பேரைக் கூட்டிப் பேசியிருக்கிறார். இவர்களின்முடிவு சில நாள்களில் அனைத்து சங்கராச்சாரிகளின் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்படுமாம்.

சாதுர்மாதகாலமாகிய நான்கு மாதங்களிலும் திருமணங்கள் நடக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என்பது வெளிநாடுகளில் உள்ள மராட்டிய மக்களின் வேண்டுகோளாம். அதற்-கான முயற்சிகளை எடுப்பவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நாளில் பெரும்பகுதியை வீணாக்குவது வாரத்தில் செவ்வாய், சனி இரண்டு நாள்களை ஒதுக்குவது, மாதத்தில் நான்கைந்து நாள்களை மட்டும் நல்ல நாள் என்பது, ஆண்டில் நான்கு மாதங்களைப் புறக்கணிப்பது என்று மதத்தைக் காரணங்காட்டிக் கூறுவது என்பது மா-றுமா? இந்து மக்களும் ஏனைய மக்களைப் போலவே மூளையைப் பயன்படுத்தும் மாற்றம் ஏற்படுமா? சட்டப்படி நாமும் இந்து என்பதால் இந்தக் கவலை நமக்கும் ஏற்படுவது சரிதானே!

இடிபாடும் தங்கத்தகடும் மிஞ்சிப்போன சந்தனத்தை எங்கெல்லாமோ பூசிக் கொள்வது என்று கொச்சையான சொலவடை ஒன்றுள்ளது. அதைப்போல, திருப்-பதிக் கோயிலின் தங்கத்தை என்ன செய்வது என்று புரியாமல், சுவரில் அடிக்கப் போகிறார்களாம். ஏற்கெனவே கோபுரத்தில் அடித்திருக்-கிறார்கள். அமிர்தசரஸிலுள்ள சீக்கியர்களின் தங்கக் குருத்வாரா போலத் திருப்பதி பெயர் வாங்க வேண்டு-மாம்!

பக்கத்தில் உள்ள சிலந்தி பாம்பு யானை க் கோயில் (சீகாளத்தி) இடிந்து விழுந்துவிட்ட நிலையில் வைணவர்களுக்கு இது தேவையா? சிவன் கோயிலில் இருந்து சிறு சுண்ணாம்புக் கல் கீழே விழுந்ததற்குக் காரணமான காக்கையை வீர வைணவக்காக்கை ஆக்கிய நாமதாரிகள், மறைவாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து போனார்கள் என்பது ஏடுகள் எழுதாத சேதி. திருப்பதியில் கோடி கோடியாகக் கொட்டப்படுவதற்கும், சீகாளத்தியில் ஈ ஓட்டும்நிலை உள்ளதற்கும் வாஸ்துவைக் காரணம் காட்டி வயிறு வளர்த்தவர்கள் காட்டில் கனமழை! இப்போது கோபுரமே இடிந்து விழுந்துவிட்டதில், வாஸ்து வியாபாரிகளுக்கும் வருமானம்!

தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் என்பது பொய்யாகிவிட்டது. சர்வேஸ்வரன், பரமேசுவரன் என்பதெல்லாம் பொசுங்கிவிட்டது. கைலாசபதியின் குளிர்கால வாசஸ்தலம் இடிந்து நொறுங்கிப் போனதில் கடவுள் ஸ்தானம் கனவாகிப் போய்விட்டதில் வைணவர்களுக்கு வெகு சந்தோஷம்!

சிவன் கோயில் இடிந்ததற்குக் கொஞ்சங்கூட வருந்தாமல், சுவருக்குத் தங்கத் தகடாம். 10 ஆயிரம் சதுர அடிப் பரப்புள்ள கருவறைச் சுவர்களில் தங்கத் தகடாம். 200 கிலோ தங்கமாம். 100 கோடி ரூபாய் செலவாம். 125 கிலோ தங்கம் வசூலாகி விட்டதாம். முகேஷ் அம்பானி, அவர் தம்பி அனில் அம்-பானி, விஜய் மல்லய்யா போன்ற நெற்றி வியர்வை நிலத்தில் விழச் சம்பாதிக்கும் தொழில் முதலாளிகள் நன்கொடையாளர்களில் சிலர். முகேஷ் கொடுத்தது 5 கோடியாம், கருவறைக் கதவுகளுக்குத் தங்கம் பதிக்க 6 கோடி ரூபாய் தருகிறாராம் மல்லய்யா.

கொள்ளையோ கொள்ளை

இந்தக் கணக்கு வழக்குகளில் சுத்தம் இல்லை சுரண்டல் நிறைய கொள்ளை ஏராளம் என்னும் புகார் வந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானக் குழு உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி புகார்தாரர்.

10ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் முழுமையாக மூடப்பட்டுவிடும் என்பதால் இதனை எதிர்க்கிறார் பேராசிரியர் கிரண்காந்த் சவுத்ரி. வெங்கடேசுவரா பல்கலைக் கழகப்பேராசிரியர் இவர். சுவரிலிருந்து சில அங்குல இடைவெளியில் தங்கத் தகடுகள் பதிக்கப்படுவதால், ஒளி, காற்று இல்லாமல் சுவரே பாதிக்கப்படும் என்கிறார். இதே கருத்தைத் திருப்பதி தேவஸ்தானத் தலைமைப் பொறியாளர் ஆஞ்சனேயலு நாயுடுவும் தெரிவித்திருக்கிறார். தங்கத் தகடுகளைத் திருடிக் கொண்டு போகாமல் தடுப்பதற்காகத் தனியாக வேலி அமைக்கப்பட வேண்டும் (ஏன் என்றால் ஏழுமலையான் எதுவும் செய்திட இயலாத, கையாலாகாத கடவுள்தானே) அப்படி அமைத்தால் கருவறை அளவு வெறும் 5 அடியாகக் குறைந்துவிடும் என்கிறார்.

(அப்படியானால் பக்தர்கள் எங்கே நிற்பது? ஜருகண்டி, ஜருகண்டி என்று விரட்டும் ஆள் எங்கே நிற்பது? பெருமாள் எங்கே நிற்பது?)

திருப்பதி கோயிலுக்குள் 640 கல்வெட்டுகள் உள்ளன. பழைமையான இவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறும் கல்வெட்டுக்கூட உண்டு. இவற்றைச் சேதப்படுத்துவது ஆயிரம் பார்ப்பனர்களைக் கொன்றதற்கும், ஆயிரம் பசுக்களைக் கொன்றதற்கும் சமம் எனக்கூறிப் பயமுறுத்தும் கல்வெட்டும் உண்டு. ஆயினும், இதை மறைத்து அழிக்கும் செயலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜசேகரன் ஈடுபட்டார். (இவர் கிறித்துவர்)

பரமேஸ்வர சேவா சமிதி எனும் அமைப்பின் சார்பாக வழக்குப் போட்டுள்ள சிரேயஸ் ரெட்டி, ஆந்திர அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளைத் திருப்பதி கோயில் மீறி இருக்கிறது என்று வாதிடுகிறார். இந்தக்கோயிலை உலகப் புராதனச் சின்னமாக 1977 இல் அறிவித்துள்ள யுனெஸ்கோ அமைப்புடன் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி அரசு நடக்கவேண்டும் என்று வழக்குப் போட்டவர் கூறுகிறார்.

ஏழுமலையான் கையில் எதிர்காலம் என்கிறார்கள். ஏழுமலையானின் எதிர்காலமே நீதிமன்றத்தின் கையில் என்றாகி-விட்டது. கொடுமைதான்!

--------------------- சு. அறிவுக்கரசு -“ விடுதலை” ஞாயிறுமலர் 26-6-2010

7.3.10

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு


ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு
ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.

ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தியாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், ராமாயணம், உபநிஷத்துகள் போன்றவற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை.

ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை.

ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க ரோமானிய கலாச்சாரத்திலிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.

பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.

இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.

தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரிடம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள். பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது

ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதிடத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதிடம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறுபிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கடவுள்கள் உள்பட அனைத்துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.

முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வர-வில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.

எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:

சவாலை ஏற்று வரும் ஜோதிடரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.

ஜோதிடம் என்பதே எதிர்காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திரவாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.

ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.

ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார். ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்துள்ளார்.

ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று அறிந் தார்.

ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் பங்குச் சந்தை ஆலோசகராக உள்ளார்.

மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம்.

மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்கியத்தனம் என்கிறார்.

---------------------------------இயற்கைவாதி செ. கஜபதி
நன்றி: எதிரொலி -28.2.2010

22.1.10

சோதிடம் பற்றி கல்லூரி மாணவிகள்



முனைவர் இராமாத்தாள் அவர்களின் தலைமையிலான மகளிர் ஆணையம் மிகவும் தேவையான அவசியமான ஆய்வு ஒன்றினை நடத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் கடந்த இரு மாதங்களாக அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் வாழ்க்கைத் துணையைப் பெண்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்னும் ஆய்வுதான் அது.

97 விழுக்காடு பெண்கள் தங்களுக்கு வாய்க்கவிருக்கும் துணைவரின் கல்வி, வேலை வாய்ப்பு, குடும்பப் பின்னணி இவற்றோடு ஜாதகப் பொருத்தம் தேவையில்லையென்றும், அதே நேரத்தில் மருத்துவப் பரிசோதனை இரு தரப்பிலும் தேவையென்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நம் நாட்டுக் கல்வி என்பது பெரும்பாலும் வயிற்றுப் பிழைப்புக்கான லைசென்ஸ்தான்; அது பகுத்தறிவையோ, அறிவியல் மனப்பான்மையையோ வளர்க்கக் கூடியது அல்லவென்றாலும், அதனையும் மீறிக் கல்லூரி மாணவிகள் பெரும்பாலும் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. 2.4 விழுக்காடு பெண்களே ஜாதகப் பொருத்தம் தேவையென்று கூறியுள்ளனராம்.

ஜாதகப் பொருத்தம் பார்த்து, நல்ல நாள், நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொள்வோர்தான் சுகமாக வாழ்கிறார்கள்; ஆயுள் கெட்டியாக வாழுகிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.

விவாகரத்துக் கோரி குடும்ப நீதிமன்றங்களில் மனு போடுவார்கள் எல்லாம் ஜாதகப் பொருத்தம் பார்க்காதவர்கள்தான் என்று சொல்ல முடியுமா?

ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொள்வோர் வாழ்க்கை தோல்வி கண்டுவிட்டது; அற்ப ஆயுளில் மாண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல முடியுமா?

ஜாதகம் என்பதே பிறந்த நேரத்தை வைத்துக் கணிக்கப்படுவதுதானே!

எது பிறந்த நேரம்? குழந்தை தலையை நீட்டிய நேரமா? அல்லது பூமியில் விழுந்த நேரமா? நர்சு தமது கடிகாரத்தைப் பார்த்த நேரமா? அல்லது வெளியில் வந்து உறவினர்களிடம் சொல்லும் நேரமா? எந்த நேரம் என்று தந்தை பெரியார் கேட்டாரே, இதுவரை பதில் உண்டா?

ஒரு குழந்தை பிறந்த அதே நேரத்தில் இன்னொரு நாய்க்குட்டி பிறந்திருந்தால் இரண்டும் ஒரே குணத்தோடு, ஆயுளோடு இருக்குமா?

நாய்க்குட்டி பிறந்த நேரத்தையும், மணமகன் பிறந்த நேரத்தையும் கொடுத்து சோதிடம் பார்க்கச் சொன்னால், எந்த சோதிடனாவது அது நாய்க்குட்டிக்குரியது என்று சோதிடம் சொல்லுவானா?

60 ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயது 30 தானே! இப்பொழுது ஆண்களின் சராசரி வயது 63.3 ஆகவும், பெண்களின் சராசரி வயது 66.3 ஆகவும் உயர்ந்துள்ளதே! இதற்குக் காரணம் என்ன?

மருத்துவ வளர்ச்சி ரீதியாகப் பதில் சொல்ல முடியுமே தவிர, சோதிட ரீதியாகப் பதில் சொல்ல முடியுமா?

இன்னும் நவக்கிரகங்களை (அதாவது ஒன்பது கிரகங்களை)ப்பற்றி தானே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்?

1781 இல் யுரேனசும், 1846 இல் நெப்டியூனும் 1930 இல் புளூட்டோவும் கண்டுபிடிக்கப்பட்டனவே இவற்றிற்குச் சோதிடப் பலன் உண்டா?

இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியன் என்பது நட்சத்திரம். ஆனால், சோதிடத்தில் அதனைக் கிரகத்தின் பட்டியலில்தானே சேர்த்துள்ளனர்? நவக்கிரகத்தில் பூமிக்கு இடம் இல்லை; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு.

படித்தவர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்கவேண்டும்.

கல்லூரி மாணவிகள் பெரும்பாலோர் சோதிடத்தைப் புறந்தள்ளிக் கருத்துக் கூறியது வரவேற்கத்தக்கது. தேவையான ஓர் ஆய்வை நடத்திய மகளிர் ஆணையத்துக்கும் நமது பாராட்டுகள்.

--------------------- “விடுதலை” தலையங்கம் 22-1-2010

5.12.09

சோதிடமும் அறிவியல் சார்ந்ததா?

அறிவியல் சிந்தனை வளர்ப்போம்!

நாம் வாழ்கின்ற பூமி, எல்லையில்லாப் பரந்த விண்வெளியில் வலம் வரும் லட்சக்கணக்கான பெரிய நட்சத்திரக் கூட்டங்களில் காணப்படும் சிறிய நட்சத்திரமான சூரியனின் சிறிய பகுதியே. இதில் மனித குலம் மூடநம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவும், நம்பிக்கையும் சேர்ந்து அறிவுப்பாதையின் வழிச் செல்லத் தூண்டுகிறது. மூடநம்பிக்கையானது கற்றுணர்ந்தவர்களின் தன்னம்பிக்கையைக் கூட தகர்த்து தடுமாறச் செய்கிறது. தன்னம்பிக்கையில் வாழ முனைவோருக்கு எதிர்நீச்சல் வாழ்வு மிகமிக அவசியமாகிவிட்டது.

சோதிடம் என்பது ஜோதி என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருவது வான்வெளி ஒளி என்பதாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவதோடு சோதிட சாஸ்திர விதிமுறைகளை அறிந்தவராகவும்,. கடவுள் அருளால் தீர்க்க தரிசனம், இயற்கையின் இரகசியங்களை முன்னுணரும் திறன் இருப்பது அவசியம் என விளக்கம் தருவார்கள். இத்தகைய ஆற்றல் பெற்ற சோதிடர்கள் எத்தனை பேர்? ஆனால் வேதனைக்குரியது என்னவெனில் குழந்தை பிறந்து விட்டாலோ, திருமணப்பொருத்தம் என்றாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே ஓடுவது சோதிடரிடம்தான். சோதிடர் சொல்வது போல் நடக்க வில்லையென்றால், சரியான ஜாதகம் கணிக்கப்பட முடியவில்லை யென்றால் நான் என்ன செய்ய முடியும், குறித்த நேரம், பிறந்த நேரம் சரியில்லை எனத் சோதிடர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.

சோதிடமும் அறிவியல் சார்ந்ததே எனக்கூறி கற்றோரையும் கவரும் கவர்ச்சிகரமான கருத்துக்கள் கூறுவோர் உண்டு. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற ஒன்பது கிரகங்களை (கோள்களை) கொண்ட ஜாதகம் கணிக்கப்படுகிறது, சோதிடம் பார்க்கப்படுகிறது என்பர். இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல. சூரியனும், சந்திரனும் நேர்பாதையில் வரும் போது இரு பக்கங்களிலும் விழும் நிழல்களே ராகு, கேது என்பதை உணர வேண்டும். மேலும் சந்திரன் பூமியின் துணைக்கோளாகும்.

சோதிட முறைப்படியே ஒருவருக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க வேண்டுமானால் அந்த ஜாதகக்காரரின் பிறந்த தேதி, சரியான நேரம் இடம் தேவை. சூரிய உதயத்தை கணக்கிட்டு ஜாதகத்தைக் கணிப்பதால் பிறந்த இடத்தின் தீர்க்க ரேகை (Longitude), , அட்ச ரேகை (Latitude) மிகமிக தேவை. எத்தனை சோதிடர்கள் இதை அறிவார்கள்? அதன்படி கணிக்கிறார்கள்? ஒரே நேரத்தில் மும்பையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைக்கும் கூட ஜாதகத்தில் நிறைய வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புண்டு. காரணம் சூரிய உதய நேரம். செவ்வாய் தோஷம் எனக்கூறி எத்தனை பெண்களின் வாழ்வைப் பாழடிக்கிறார்கள்.

சூரியன் வடபாகத்தில் மகர ராசியிலிருந்து மிதுன ராசி வரை ( தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) வலம் வருவதை உத்திராயணம், இது தேவர்களுக்கு பகற் காலம் என்பதும் தென்பாகத்தில் கடக ராசி முதல் தனுசு ராசி வரை (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) தக்ஷ்ணாயணம். இது தேவர்களின் இரவு காலம் என்பதையும் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும்? மனிதனுக்கு ஒரு நாளில் வந்து செல்லும் பகல் இரவு, மனிதனின் 365 நாள்கள் தேவர்களுக்கு ஒரு பகல் இரவு ஆகிறது. அந்த தேவர்கள் எங்கே? எனக் கேட்க துடிக்கிறது.

ஒரு ராசிக்கு 9 நட்சத்திரப் பாதங்கள் என்றும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் 108 பாதங்கள் 3600 க்குள் அடங்கும். அப்படியெனில் இந்தியாவில் வாழும் 100 கோடிக்கு மேலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் 3.7 கோடி பேர் ஒரே நட்சத்திரம். 8.3 கோடி பேர் ஒரே ராசி கொண்டவர்களாக அமைவர். இவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் அமையவேண்டும். இது சாத்தியமா? அல்லது அது போன்று அமைந்துள்ளதா? சிந்திக்கவும்.

இந்தியாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ராசிகளும், ஆயிரக்கணக்கான உள்பிரிவுகளுக்கும் காரணமானவர்கள் கோள்களையும், நட்சத்திரங்களையும், விட்டு வைக்க வில்லை. 27 நட்சத்திரங்களுக்குள் ஆண் (11) பெண் (13), அலி (3) எனப் பிரித்தனர். கோள்களுக்குள் ஜாதிப் பாகுபாடுகள் கண்டனர். குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் வகுத்தார்கள் சூழ்ச்சியாளர்கள்.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களும் அதன் தூரமும், அறிவியல் கூறும் ஆதாரங்களையும் காண்போம். சூரியனிலிருந்து பூமி 14.96 கோடி, புதன் 5.79 கோடி, வெள்ளி 10.82 கோடி செவ்வாய் 22.79 கோடி வியாழன் 77.83 கோடி, சனி 142.7 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சந்திரன் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

நட்சத்திரங்களின் தொலை குறைந்த பட்சம் 50 ஒளி ஆண்டுகளுக்கு(Light years) மேற்பட்டது. ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். எண்ணிப் பாருங்கள் இந்த நட்சத்திரக்கூட்டத்தை வைத்து தான் நமது வாழ்வு கணிக்கப்படுகிறது. அதுவும் யாரால் தனது வாழ்க்கையின் நிலை பற்றியே அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் என்பது தான் வேடிக்கை.

சோதிடர் சொல்வதில் உண்மையிருக்குமானால் தலைவர்களின் மரணம், தீவிரவாதத்தினால் ஏற்படும் அழிவுகளை பற்றியெல்லாம் முன்னரே ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை? சிந்திக்கவும்.

மூடநம்பிக்கைகள் மீண்டும் துளிர் விட வேண்டுமென அரசியல் நோக்கத்திற்காக அடிமை வாழ்வை மீண்டும் கொணர்ந்து ஆதிக்கம் செலுத்திட முனைவதை மக்கள் பகுத்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தூண்டி விடப்படும் மதவெறியால் பலியாகிப் போகாமல் வாழ்க்கையின் எதிர்காலத்தை அறிவியல் துணைகொண்டு வாழப் பழகிட வேண்டும். கல்வியால் தன்னம்பிக்கை மேற்கொள்வோம். மக்கள் தொண்டால் மனித நேயம் பூத்துக் குலுங்கி, ஒற்றுமையுடன் நாட்டை மலர்ச்சியடையச் செய்வோம். அறிவியலால் பயன் பெறுவோம். அறிவியல் சிந்தனை வளர்ப்போம். (தமிழர் நட்புறவு பேரவை, மும்பை தமிழ் டைம்ஸ் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவை).

--------------------மும்பை தமிழ் டைம்ஸ் 14-.12.2003.
நூல்: வாழ்வுரிமை விழிப்புணர்வு.