Search This Blog

5.12.09

சோதிடமும் அறிவியல் சார்ந்ததா?

அறிவியல் சிந்தனை வளர்ப்போம்!

நாம் வாழ்கின்ற பூமி, எல்லையில்லாப் பரந்த விண்வெளியில் வலம் வரும் லட்சக்கணக்கான பெரிய நட்சத்திரக் கூட்டங்களில் காணப்படும் சிறிய நட்சத்திரமான சூரியனின் சிறிய பகுதியே. இதில் மனித குலம் மூடநம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவும், நம்பிக்கையும் சேர்ந்து அறிவுப்பாதையின் வழிச் செல்லத் தூண்டுகிறது. மூடநம்பிக்கையானது கற்றுணர்ந்தவர்களின் தன்னம்பிக்கையைக் கூட தகர்த்து தடுமாறச் செய்கிறது. தன்னம்பிக்கையில் வாழ முனைவோருக்கு எதிர்நீச்சல் வாழ்வு மிகமிக அவசியமாகிவிட்டது.

சோதிடம் என்பது ஜோதி என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருவது வான்வெளி ஒளி என்பதாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவதோடு சோதிட சாஸ்திர விதிமுறைகளை அறிந்தவராகவும்,. கடவுள் அருளால் தீர்க்க தரிசனம், இயற்கையின் இரகசியங்களை முன்னுணரும் திறன் இருப்பது அவசியம் என விளக்கம் தருவார்கள். இத்தகைய ஆற்றல் பெற்ற சோதிடர்கள் எத்தனை பேர்? ஆனால் வேதனைக்குரியது என்னவெனில் குழந்தை பிறந்து விட்டாலோ, திருமணப்பொருத்தம் என்றாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே ஓடுவது சோதிடரிடம்தான். சோதிடர் சொல்வது போல் நடக்க வில்லையென்றால், சரியான ஜாதகம் கணிக்கப்பட முடியவில்லை யென்றால் நான் என்ன செய்ய முடியும், குறித்த நேரம், பிறந்த நேரம் சரியில்லை எனத் சோதிடர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.

சோதிடமும் அறிவியல் சார்ந்ததே எனக்கூறி கற்றோரையும் கவரும் கவர்ச்சிகரமான கருத்துக்கள் கூறுவோர் உண்டு. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற ஒன்பது கிரகங்களை (கோள்களை) கொண்ட ஜாதகம் கணிக்கப்படுகிறது, சோதிடம் பார்க்கப்படுகிறது என்பர். இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல. சூரியனும், சந்திரனும் நேர்பாதையில் வரும் போது இரு பக்கங்களிலும் விழும் நிழல்களே ராகு, கேது என்பதை உணர வேண்டும். மேலும் சந்திரன் பூமியின் துணைக்கோளாகும்.

சோதிட முறைப்படியே ஒருவருக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க வேண்டுமானால் அந்த ஜாதகக்காரரின் பிறந்த தேதி, சரியான நேரம் இடம் தேவை. சூரிய உதயத்தை கணக்கிட்டு ஜாதகத்தைக் கணிப்பதால் பிறந்த இடத்தின் தீர்க்க ரேகை (Longitude), , அட்ச ரேகை (Latitude) மிகமிக தேவை. எத்தனை சோதிடர்கள் இதை அறிவார்கள்? அதன்படி கணிக்கிறார்கள்? ஒரே நேரத்தில் மும்பையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைக்கும் கூட ஜாதகத்தில் நிறைய வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புண்டு. காரணம் சூரிய உதய நேரம். செவ்வாய் தோஷம் எனக்கூறி எத்தனை பெண்களின் வாழ்வைப் பாழடிக்கிறார்கள்.

சூரியன் வடபாகத்தில் மகர ராசியிலிருந்து மிதுன ராசி வரை ( தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) வலம் வருவதை உத்திராயணம், இது தேவர்களுக்கு பகற் காலம் என்பதும் தென்பாகத்தில் கடக ராசி முதல் தனுசு ராசி வரை (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) தக்ஷ்ணாயணம். இது தேவர்களின் இரவு காலம் என்பதையும் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும்? மனிதனுக்கு ஒரு நாளில் வந்து செல்லும் பகல் இரவு, மனிதனின் 365 நாள்கள் தேவர்களுக்கு ஒரு பகல் இரவு ஆகிறது. அந்த தேவர்கள் எங்கே? எனக் கேட்க துடிக்கிறது.

ஒரு ராசிக்கு 9 நட்சத்திரப் பாதங்கள் என்றும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் 108 பாதங்கள் 3600 க்குள் அடங்கும். அப்படியெனில் இந்தியாவில் வாழும் 100 கோடிக்கு மேலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் 3.7 கோடி பேர் ஒரே நட்சத்திரம். 8.3 கோடி பேர் ஒரே ராசி கொண்டவர்களாக அமைவர். இவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் அமையவேண்டும். இது சாத்தியமா? அல்லது அது போன்று அமைந்துள்ளதா? சிந்திக்கவும்.

இந்தியாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ராசிகளும், ஆயிரக்கணக்கான உள்பிரிவுகளுக்கும் காரணமானவர்கள் கோள்களையும், நட்சத்திரங்களையும், விட்டு வைக்க வில்லை. 27 நட்சத்திரங்களுக்குள் ஆண் (11) பெண் (13), அலி (3) எனப் பிரித்தனர். கோள்களுக்குள் ஜாதிப் பாகுபாடுகள் கண்டனர். குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் வகுத்தார்கள் சூழ்ச்சியாளர்கள்.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களும் அதன் தூரமும், அறிவியல் கூறும் ஆதாரங்களையும் காண்போம். சூரியனிலிருந்து பூமி 14.96 கோடி, புதன் 5.79 கோடி, வெள்ளி 10.82 கோடி செவ்வாய் 22.79 கோடி வியாழன் 77.83 கோடி, சனி 142.7 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சந்திரன் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

நட்சத்திரங்களின் தொலை குறைந்த பட்சம் 50 ஒளி ஆண்டுகளுக்கு(Light years) மேற்பட்டது. ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். எண்ணிப் பாருங்கள் இந்த நட்சத்திரக்கூட்டத்தை வைத்து தான் நமது வாழ்வு கணிக்கப்படுகிறது. அதுவும் யாரால் தனது வாழ்க்கையின் நிலை பற்றியே அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் என்பது தான் வேடிக்கை.

சோதிடர் சொல்வதில் உண்மையிருக்குமானால் தலைவர்களின் மரணம், தீவிரவாதத்தினால் ஏற்படும் அழிவுகளை பற்றியெல்லாம் முன்னரே ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை? சிந்திக்கவும்.

மூடநம்பிக்கைகள் மீண்டும் துளிர் விட வேண்டுமென அரசியல் நோக்கத்திற்காக அடிமை வாழ்வை மீண்டும் கொணர்ந்து ஆதிக்கம் செலுத்திட முனைவதை மக்கள் பகுத்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தூண்டி விடப்படும் மதவெறியால் பலியாகிப் போகாமல் வாழ்க்கையின் எதிர்காலத்தை அறிவியல் துணைகொண்டு வாழப் பழகிட வேண்டும். கல்வியால் தன்னம்பிக்கை மேற்கொள்வோம். மக்கள் தொண்டால் மனித நேயம் பூத்துக் குலுங்கி, ஒற்றுமையுடன் நாட்டை மலர்ச்சியடையச் செய்வோம். அறிவியலால் பயன் பெறுவோம். அறிவியல் சிந்தனை வளர்ப்போம். (தமிழர் நட்புறவு பேரவை, மும்பை தமிழ் டைம்ஸ் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவை).

--------------------மும்பை தமிழ் டைம்ஸ் 14-.12.2003.
நூல்: வாழ்வுரிமை விழிப்புணர்வு.

1 comments:

Unknown said...

thaankal siramam paarkamal enathu pinnootthai veliyiduveerkal endra nambikaiyudan ln_prabakaran madurai