வாராக்கடன்
கடந்த மூன்று ஆண்டுகளில் வாராக்கடன் ரூ.25 ஆயிரம் கோடி என்று வங்கிகள் அறிவித்துள்ளன. 2007 இல் ரூ. 9400 கோடி, 2008இல் ரூ.9300 கோடி, 2009 இல் ரூ.11000 கோடி.
இப்படி கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காதவர்கள் காந்தியார் கூற்றுப்படி ‘‘தரித்திர நாராயணர்கள்’’ அல்லர். மிகப் பெரிய பணக்காரர்கள், தொழில் அதிபர்கள் என்ற நிலையில் உள்ளவர்கள்தாம்.
இதில் ஒரு கெட்டிக்காரத்தனமும், சூழ்ச்சியும் குத்துக்கல்லாக நிற்கின்றன.
வாராக்கடன்களை வசூலிக்க முடியாத நிலையில், ஒரே நேரத்தில் தீர்வு (ONE TIME SETTLEMENT) என்ற ஒரே தவணையில் கடனை அளிக்க சலுகைத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட சதவிகிதக் கடன் பாக்கி தள்ளுபடியும் செய்யப்படுகிறது.
பல பணத் திமிங்கிலங்கள் இந்தச் சலுகை சந்தர்ப்பம் வரை காத்திருந்து பகுதித் தொகைக்கு மேல் ‘‘சுவாகா’’ செய்யும் தந்திரசாலிகளாக, சூழ்ச்சிக்காரர்களாக, ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள்.
இதில் ஒழுங்காக வட்டியும் முதலுமாகக் கட்டிய நேர்மையானவர்கள் ஏமாளிகளாகி, ‘பைத்தியக்காரர்களாகக்’ கருதப்படுகிறார்கள் என்பது தானே உண்மை. இத்தகைய நாணயமானவர்கள் மத்தியில்கூட மாற்று எண்ணம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே!
ஏழை எளிய மக்கள் கடன் வாங்கினால் அவர்களை அச்சுறுத்தி எப்படியும் கடனை மீட்டு விடுகின்றனர். கடனாளியால் செலுத்த இயலாவிட்டால் அவருக்காக பொறுப்புறுதி (SECURITY) கையொப்பம் போட்டவர்களிடமிருந்து வசூலித்து விடுவார்கள்.
ஆனால் பணத்திமிங்கிலங்களோ, சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து ‘டிமிக்கி’ கொடுத்து விடுகின்றனர்.
இந்தியா எழைநாடு என்று சொல்லிக் கொள்ளலாம்; உண்மையில் ஏழைநாடல்ல. இயற்கை வளங்களுக்கும் பஞ்சமில்லை.
திருப்பதிகோயிலில் நகைகளின் மதிப்பு மட்டும் 35,000 கோடி ரூபாய். இந்தியக் குடிமக்கள் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளவை மட்டும். ரூ.108 லட்சத்து 75 ஆயிரம் கோடியாகும். இந்தியாவில் அயல்நாட்டுக்கடன் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கோடி என்று ஒரு பக்கத்தில் புள்ளி விவரம் காட்டுகிறது.
இந்தியாவில் உள்ள கருப்புப்பணம் ரூ.75 லட்சம் கோடியாகும். இந்தக் கருப்புப்பணம், பதுக்கல் பணம், வாராக்கடன் பணம் இவ்வளவையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால் இந்தியா பெரும் பணக்கார நாடாகத்தான் கருதப்படும். இந்தியாவில் 77 சதவிகித மக்களின் நாள் வருமானம் ரூ.20 என்கிற ‘பிச்சைக்காரத்தனமும்’ ஒழிந்து போய்விடுமே!
--------------- மயிலாடன் அவர்கள் 9-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
1 comments:
திருப்பதி,சபரிமலை,பழனி,திருத்தனி..இவற்றின் காணிக்கைகளை அரசுக்கு ஒப்படைத்தால் கூட போதும்..இன்னும் சொல்லப்போனால்..பணத்தை வீணாக உண்டியலில் போடாமல்..அவரவர் தம் சொந்த ஊருக்கு தேவையான் அடிப்படை வசதிகளை செய்யலாம்...உதாரணமாக சாலை வசதி,குடிநீர் வசதி,அடிப்படை சுகாதர நிலையங்கள்...பள்ளிக்கூடங்கள்..எவ்வளவோ இருக்கின்றன..
Post a Comment