Search This Blog

7.12.09

கட்டாயப் பதிவு திருமணம் அவசியம் ஏன்?எதனால்?


திருமணம், கட்டாயப் பதிவு
வரவேற்கத்தக்கது

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மதம் சாராதவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் திருமணங்கள் கட்டாயப் பதிவு செய்யப்படவேண்டும் எனும் சட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இது நடைமுறையில் இருந்துதான் வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதத்திற்குள்ளேயும்கூட ஒரே மாதிரியான திருமண முறை கிடையாது. பல்வேறு ஜாதிகளிடையே பல்வேறு முறைகளில் இருந்து வருகின்றன.

எல்லா ஜாதியினரும் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணம் செய்கிறார்கள் என்பதும் கிடையாது. ‘கீழ்மட்ட’ ஜாதிகளில் அழைத்தாலும் புரோகிதப் பார்ப்பனர்கள் செல்லமாட்டார்கள் என்பது இன்னொருபுறம்.

பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்தியிராத சில சமூகத்தினர், பொருளாதார ரீதியாக கொஞ்சம் அந்தஸ்து வந்ததும், பார்ப்பனர்களை அழைத்துத் திருமணம் நடத்திக் கொள்ளும் போலி கவுரவத்திற்கு ஆளானார்கள்.

தந்தை பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணம் ஒரு தலைகீழ்ப் புரட்சியைத் தமிழ்நாட்டில் உருவாக்கியது. அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வந்தாலும்கூட, அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், தன்மானம்தான் முக்கியம் என்ற அடிப்படையில், புரோகித மறுப்புத் திருமணங்கள் நாட்டில் ஆயிரக்கணக்கில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இது உலகத்தில் எங்கும் கண்டிராத, கேட்டிராத சமூகப் புரட்சியாகும்.

திருமணங்களைப் பதிவு செய்யவேண்டும் என்ற கருத்தினையும், பகுத்தறிவு இயக்கம் எடுத்துரைத்துதான் வந்திருக்கிறது. இதனால் பலவித நன்மைகள் உண்டு. வெளிநாடு செல்லும் தம்பதியினருக்கு திருமணம் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. அரசிடமும் திருமணம் ஆனவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் கிடைத்து வருகின்றன.

அதைவிட மிக முக்கியம்; இதன்மூலம் குழந்தைத் திருமணம் தடுக்கப்படுகிறது.

வடமாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசங்களில் குழந்தைகள் திருமணம் என்பது சர்வசாதாரணமாகும். பெண்ணுக்குத் திருமண வயது 18 என்றும், ஆணுக்கு 21 வயது என்பதும் சட்டப்படியான நிலையாகும்.

திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்படவேண்டும் என்கிறபோது, வயதுக்கான சான்றிதழ் கட்டாயமாகிறது. இந்த வயதுக்குக் குறைந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது தடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பங்களிலும் சட்டப்படி திருமண வயதுக்கு வராதவர்களிடையே கல்யாணம் நடைபெற்று வருகிறது. குடும்பச் சொத்துகள் பாதுகாப்பு என்ற மூடுதிரையில் இவை நடந்துவருகின்றன. கட்டாய திருமணப் பதிவு முறையால் இந்தக் கொடுமை தடுத்து நிறுத்தப்படுகிறது.

திருமண வயது தொடர்பான பிரச்சினை இந்துக்கள் சமுதாயத்தில் நீண்டகால பிரச்சினையாகும். திருமண வயதை உயர்த்தக் கூடாது என்று காங்கிரசில் இருந்த சனாதனவாதிகளான பார்ப்பனர்கள் எம்.கே. ஆச்சாரியார் போன்றவர்கள் திருமண வயதை உயர்த்துவது இந்து சாஸ்திரங்களுக்கு விரோதம் என்றெல்லாம் வாதிட்டனர்.

ருது ஆவதற்கு முன் பெண்ணுக்குத் திருமணம் செய்துவிடவேண்டும் என்று பராஸர் கூறுகிறார். இதனை மீறினால் நரகத்துக்குப் போகவேண்டி வரும். நாங்கள் சட்டத்தை மீறினாலும் மீறுவோமே தவிர, ஒருபோதும் சாஸ்திரங்களை மீறமாட்டோம் என்று கூச்சல் போட்டனர். சாரதா சட்டம் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது.

பல தடைகளைக் கடந்து, ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதனையும் ஏமாற்றும் வகையில் நடைபெற்றுவரும் சட்ட விரோத நடவடிக்கைகளையும் கட்டாயப் பதிவு திருமணம் என்பது தடுக்கக் கூடிய ஒன்றாகும். வரவேற்கவேண்டிய சட்டம் அதனை இலகுவாகப் பதிவு செய்யும் நடைமுறைகளை உருவாக்கவேண்டியது அவசியம் என்பதை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-------------------"விடுதலை" தலையங்கம் 7-12-2009

0 comments: