நான்காவது வகுப்பு படிக்காத பெரியாருக்கு
பல பல்கலைக் கழகங்களில் அவருடைய பெயர்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர் அறிவுப்பூர்வமான விளக்கம்
நான்காவது வகுப்பு வரை படிக்காத தந்தை பெரியார் அவர்களுக்குப் பல பல்கலைக் கழகங்கள் அவருடைய பெயரைச் சூட்டியுள்ளன என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் 21.12.2009 அன்றைய உரையின் தொடர்ச்சி வருமாறு:
அனைத்து பெருமைகளும் பெரியாருக்கே
எங்களை சிங்கப்பூர் நாட்டினர், அமெரிக்காவிலே இருந்து வந்திருக்கிறவர்கள் பாராட்டுகிறார்கள் என்பதை விட, நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தைபெரியார் அவர்களுக்குத் தான் இந்த அனைத்து பெருமைகளும் சாரும். இன்றைக்கு இந்த நிலையிலே உங்கள் மத்தியிலே வாழ்கிறேன் என்று சொன்னால் எனக்கு மட்டுமல்ல; இந்த இனத்திற்கே மானத்தையும், அறிவையும் தந்த மாபெரும் அறிவு வள்ளல் தந்தை பெரியார். (கைதட்டல்). எனவே அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய பெயராலே விருது வழங்கியதை எண்ணி மகிழ்கிறேன்.
வேர்கள் சரியாக இருந்தால் விழுதுகள்...!
அதே போல இன்னொரு சிறப்பைப் பார்த்து எண்ணி நான் மகிழ்வது என்னவென்றால், ஒரு ஆலமரத்துக்கு விழுதுகள் முக்கியம். விழுதுகள் அடிப்படையானவை. அந்த விழுதுகள் மிக நீண்ட காலமாக இருப்பது சிறப்பானது.
வேர்கள் சரியாக இருந்தால்தான் விழுதுகள் சரியாக இருக்கும். விழுதுகளாக வரக்கூடியவர்களுக்கு விருதுகள் வழங்குவது மிகச் சரியான ஒரு முறையாக இருக்கும்.
அந்த வகையிலே பெண்ணியத்தினுடைய உரிமையைத் தந்தை பெரியார் வலியுறுத்தினார்கள். அது எப்படி மலர்ந்துள்ளதென்றால் அதற்கு எடுத்துக்காட்டான நாடு இந்த சிங்கப்பூர் நாடு தான். தந்தை பெரியாருடைய கருத்தை நடைமுறைப்படுத்தியிருக்கின்ற நாடு.நான் அடிக்கடி இங்கு வரும் பொழுதெல்லாம் சொல்லுவேன். பலர் சிங்கப்பூருக்கு வருவது பெற்றுக்கொள்வதற்காக வருவார்கள்.
பெற்றுக்கொள்ள அல்ல; கற்றுக்கொள்ள
எங்களைப் பொறுத்த வரை நாங்கள் கற்றுக்கொண்டு போவதற்காக சிங்கப்பூருக்கு வந்திருக்கின்றோம். மலேசிய நாட்டைச் சார்ந்த அருமை நண்பர்கள் ஜொகூர் டத்தோ பாலகிருஷ்ணன் அவர்கள், அதே போல டாக்டர் நெடுஞ்செழியன் ஒரு சிறந்த மருத்துவர் அவர் மலேசிய நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கின்றார்.
சிங்கப்பூர் நாடு மட்டுமல்ல, மலேசியநாடும் தந்தை பெரியாருக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்த நாடு. தந்தை பெரியார் அவர்கள் 1929லேயே மலேசியாவிற்கு வந்த ஒரு நிலை உண்டு. இங்கே பலதரப்பட்ட அறிஞர் பெருமக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டு போனால் அதுவே அதிக நேரம் ஆகிவிடும்.
நேரம் அறியாமல் பேசிக்கொண்டிருப்பது என்னுடைய தலைவருக்கும் வாடிக்கை, எனக்கும் வாடிக்கை. அந்த வகையிலே அய்யா தேவேந்திரன் அவர்கள் வாழ்நாள் குடிமக்களிலே ஒருவர் என்பதை அறிந்து நாங்கள் மிகுந்த பெருமைப்படுகிறோம். சிறப்பு விருந்தினராக இங்கே வந்திருக்கின்றார்கள். அவர்களை அனைவரின் சார்பாக வரவேற்பதோடு தமிழ்நாட்டின் சார்பாகவும் வரவேற்கின்றேன்.
Management development Institute of Singapore என்ற அமைப்பிற்கு நாங்கள் அழைக்கப்பட்டு, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டோம். சென்ற ஆண்டு இதை பெரிய அளவிலே செய்தோம். பெரியார் சமூக சேவை மன்றம் நடத்தக்கூடிய விழாவில் அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த அய்யா தேவேந்திரன் அவர்கள் கலந்துகொள்வது சிறப்பு மிகுந்த ஒன்று. அவர் தொடர்ந்து பல்லாண்டு காலம் பணியாற்றி தொண்டாற்ற வேண்டும். சிங்கப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளை ஒரு கட்டமைப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கக்கூடிய
தமிழவேள் கோ.சாரங்கபாணி, அதே போல ராமசாமி இவர்கள் எல்லாம் தமிழர் சீர்திருத்த சங்கத்தை ஆரம்பித்து தமிழர் பிரநிதித்துவ அமைப்பை உருவாக்கினார்களோ, இன்றைக்கு அந்தக் கொள்கைச் சுடரை அவர்கள் ஏந்திக்கொண்டிருக்-கின்றார்கள். இன்றைக்கும் தமிழர்களுடைய அமைப்பை அவர்கள் ஒருங்கிணைக்கக் கூடிய ஓர் அற்புதமான பணியை செய்திருக்கின்றார்கள். இவர்களெல்லாம் கலந்து கொள்வதைப் பார்த்து எல்லையற்ற மகிழ்ச்சியை இந்தப் பெரியார் தொண்டன் பெறுகிறான். பெரியாருடைய பெருமைகளை பேசாத நாள்கள் எல்லாம் பிறவாத நாள்கள். அப்படிப்பட்ட நிலையிலே பெரியாருடைய பெருமைகளை பேசாத நாள்கள் எல்லாம் பிறவா நாள்கள் என்று கருதுபவர்கள். அப்படிப்பட்ட நிலையிலே பெரியாருடைய பெருமைகளை நாங்கள் பேசுவதைவிட அடுத்தடுத்த தலைமுறைகள் பேச வேண்டும். அது தான் எங்களுக்கு சிறப்பு.
ஒரு தலைவருக்கு என்ன பெருமை?
ஒரு தலைவருக்கே பெருமை என்னவென்றால் அவரோடு அந்தப் பணி முடிந்துவிட்டது என்பது பெருமை அல்ல. அவருக்குப் பிறகு அவர் ஏந்திய சுடரைத் தூக்குபவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் மெழுகுவர்த்திகள் அந்தப் பணியிலே தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.
இன்றைக்கு மூன்று நிகழ்ச்சிகள் இங்கே நடந்தன, மிக அருமையான நிகழ்ச்சிகள். ஒன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் புதியதோர் உலகு செய்வோம் என்னும் பாடல். ஓர் இளம் மாணவி அற்புதமாக நடனமாடினார். புதிய உலகத்தை உருவாக்க வேண்டுமானால் இப்படிப்பட்ட தலைமுறையினர் வரவேண்டும். அது போலவே அடுத்ததாக பெரியாருடைய சிந்தனைகளை, பெரியாருடைய பொன்மொழிகளை நம்மைவிட செல்வி குந்தவி அவர்கள் சிறப்பாக அருமையாக பல கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.
குந்தவி-பொன்மொழி
ஒவ்வொருவரும் இணைப்புரையிலிருந்து பெரியார், பெரியார், பெரியார் சிந்தனைகளையே எடுத்துக் கூறினார்கள். நாம் எல்லோருமே மழையிலே நனைந்ததைப் போல அரங்கத்திற்குள்ளாக அதே சிந்தனையில் இருந்தோம். அருமைச் செல்வி குந்தவி அவர்கள். இங்கே அருமையாகப் பேசினார்கள். அதைவிட இன்னொரு போனஸ் மகிழ்ச்சி_புரட்சிக் கவிஞர் பாடல் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாடலைக் கேட்கும் பொழுது எனக்கே வியப்பாக இருந்தது.
இனியநிலா
இணைப்புரையிலே கூட உயர்ந்த செய்தியைச் சொன்னார்கள். நாங்கள் இங்கே பேசிக்கொண்டிருந்தோம். டாக்டர் சோம.இளங்கோவனும், நானும் பேசிக்கொண்டிருந்தோம். உச்சரிப்பிலே இனியநிலா கவனமாகப் பாடுகிறது என்று சொன்னார்கள். உள்ளபடியே தன்மகனை சான்றோன் எனக்கேட்டதாய் என்பது போல எனக்குப் பெருமையாக இருந்தது. மறுபடியும் வள்ளுவர் தன் மகனுக்கே சொன்னார். இதிலே எல்லோரும் வருவார்கள் என்று மற்றவர்கள் சொல்லலாம். எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.
நான் டாக்டர் பட்டம் வாங்கினேன் என்பது போன்றவை முக்கியமல்ல. பெரியாருடைய கருத்துகள் பெரியார் பிஞ்சுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது தான் முக்கியம். இதுதான் வளர்ந்து வரக்கூடிய ஒரு பெரிய நிலை. எனவே இனியநிலாவுக்கு எனது வாழ்த்துகள். அது போல உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.
அவரது பேச்சை நான் கேட்பதில்லை
டாக்டர் சோம.இளங்கோவன் என்னுடைய உடலையும் கண்காணிக்கக் கூடியவர். நான் உரையாற்றுவதற்கு எழுந்தபொழுது என்னுடைய காதிலே மெதுவாக சொன்னார். அண்ணியார் அவர்கள் (திருமதி மோகனா வீரமணி) 30 நிமிடங்கள்தான் உங்களுக்குப் பேசக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார்.
ஆனால் இந்த மேடையிலே யாரும் என்னை வரை முறைப்படுத்தவில்லை. பல நேரங்களிலே டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுடைய பேச்சைக் கேட்பதில்லை. அதுதான் உண்மை. என்னதான் பெண்ணுரிமை பேசினாலும் சில முக்கியமான நேரங்களில் அவருடைய ஆலோசனைகளை அறிவுரைகளை, அவருடைய ஆணைகளை ஏற்பேன். ஆனால், இது போன்ற நேரங்களில் உங்களைப் பார்க்கும் பொழுது அவைகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.
நல்ல மாமருந்து
காரணம் நான் பேசுவதால் களைப்படைவதில்லை. அதற்கு பதிலாக உங்களை சந்திப்பதிலே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் நான் பெறுகின்றேன். இதுதான் எனக்கு நல்லமாமருந்து. மீண்டும் நான் சொல்லுகின்றேன். ஆகவே அருமை சான்றோர் பெருமக்களே, தோழர்களே! அனைத்து அமைப்புகளைச் சார்ந்த என்னருந் தோழர்களே! சிங்கப்பூரில் இருக்கக் கூடிய முக்கியமான அமைப்புகளான ‘சிந்தா’ போன்ற முக்கியமான அமைப்புகளுக்கெல்லாம் பெரியார் சேவை மன்றம். நல்ல நன்கொடையைக் கொடுத்து ஒரு புதிய முறையை உருவாக்கியிருக்கிறது. ஏதோ தமிழ்நாட்டிலிருந்து வந்தால், வெளிநாட்டிலிருந்து வந்தால் பெற்றுக்கொண்டு போவார்கள் என்பதல்ல.
இன்னும் கேட்டால் கட்டணம் வசூலித்துக் கூட நாங்கள் பேசி இந்த ‘சிந்தா’ போன்ற மன்றங்களுக்கு தமிழ் வளர்ச்சி பெறுவதற்குரிய வாய்ப்பை அளிப்போம். அதற்காகவும் பெரியார் சேவை மன்றத்தைப் பாராட்டுகிறோம். இதை மிக அருமையாக நீங்கள் செய்திருக்கின்றீர்கள்.
‘பெரியார் கண்ட வாழ்வியல்’
பெரியார் கண்ட வாழ்வியல் என்ற தலைப்பு எனக்குப் பேசக் கொடுத்திருக்கின்ற தலைப்பாகும். தந்தை பெரியார் அவர்கள் ஒப்பற்ற சுயசிந்தனையாளர். நான்காவது வகுப்பு கூட படிக்காத பெரியார் இன்றைக்கு அவர் பெயராலே பல்கலைக் கழகங்கள். அது மட்டுமல்ல, பல்கலைக் கழகங்களில் பெரியாரைப் பற்றி பல தலைப்புகளில் ஆராய்ச்சி செய்கிறார்கள்.
அதற்கு என்ன காரணம்? மனிதனுடைய வாழ்வியலோடு தன்னை இணைத்துக்கொண்டவர் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் ஓர் ஒப்பற்ற சுயசிந்தனையாளர் என்பதை அருமையாக எடுத்துச் சொன்னார்கள். புரட்சிக் கவிஞர் இன்னொரு பாட்டிலே சொன்னார்_உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று, தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொன்னார்கள்.
‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி’
மனிதனுடைய வாழ்வியலோடு தன்னை இணைத்துக் கொண்டவர் தந்தை பெரியார் அவர்கள்.
புரட்சிக் கவிஞர் இன்னொரு பாட்டிலே சொன்னார்கள். உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று சொன்னார்கள்.
பெரியார் அவர்கள் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு கிடைக்க முடியாத தலைவர் என்று சொல்லும் பொழுது சொன்னார்.
ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவர் அறிந்திராத அறிவாவார்
அணிந்திராத அணியாவார்
என்று அழகாக அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அப்படிபட்ட சிந்தனையிலே பெரியார் கண்ட வாழ்வியல் எப்படிப்பட்டதென்று சொன்னால் தொலைநோக்கு உடையவர் அவர். பல தலைவர்கள் தொலைநோக்குடையவர்கள். பெரியாரவர்களோ தொலைநோக்குடைவர்கள்.
தொலைநோக்கு என்றால்
தொலைநோக்கு என்றால் தன் குடும்பம், தன்பிள்ளை, தன் பெண்டு என்று பார்ப்பதில்லை. மாறாக சமூகத்தைப் பார்த்தார். மனிதனைப் பார்த்தார்.
அறிவுக்கு முன்னோடியான கிரேக்கத்து அறிஞர் பட்டப்பகலிலே சூரியன் கனன்று கொண்டிருக்கின்ற காலத்திலே கையிலே ஒரு வெளிச்சமான விளக்கொன்றை எடுத்து கிரேக்கத்து வீதிகளிலே நடந்து கொண்டு போகின்றார்.
எல்லோரும் அவரைப் பார்த்து பரிகசிக்கிறார்கள். என்னய்யா, இருட்டாக இருக்கிறதா இப்பொழுது? இவர் எவ்வளவு பெரிய பைத்தியக்காரராக இருப்பார்.
நல்ல வெளிச்சத்திலே பகல் வெளிச்சத்திலே இப்படி யாராவது விளக்கைத் தூக்கிக் கொண்டு போவார்களா? என்று சொல்லி அவரைப் பரிகசித்தார்கள்.
ஒருவர் மட்டும் துணிந்து கேட்டார்
ஒருவர் மட்டும் துணிந்து கேட்டார் அவர்களிடத்திலே. கிரேக்க அறிஞன் சாக்ரட்டீஸ் சொன்னான் ஆம். நீங்கள் எல்லாம் வெளிச்சத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை.
நீங்கள் அனைவரும் இருட்டில் இருப்பதாக நான் நினைக்கின்றேன். அந்த இருட்டு அறியாமை இருட்டு அவர்கள் மத்தியிலே வெளிச்சத்தை உண்டாக்க வேண்டுமானால் உங்கள் அறிவு என்ன சொல்லுகிறது? ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டால்தான் துணிச்சல் வரும். நோய்களிலேயே மிகப்பெரிய நோய் அறியாமை நோய்.
எனவே அந்த அறியாமையைப் போக்குவதற்காக இருட்டைப் போக்குவதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி அவர்கள் அறிவு வெளிச்சம் தந்தார்கள்.
யாரைத் தேடுகிறீர்கள்?
யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார்கள். மனிதனைத் தேடுகிறேன் என்று சொன்னார் சாக்ரட்டீஸ் இந்த நாட்டிலே பதவியாளர்கள் உண்டு. படிப்பாளிகள் உண்டு. அல்லது பெரிய பணக்காரர்கள் உண்டு. ஆனால் நல்ல மனிதர்கள் தேடப்படக் கூடிய நிலை இருக்கிறதென்று சொன்னால் எப்படிப்படிப்பட்ட நிலை இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தந்தை பெரியார் அவர்களுடைய கோணங்கள் இன்னமும் மக்கள் மத்தியிலே புரிந்துணர்வோடு இருக்கக் கூடிய அளவில் இல்லை. தந்தை பெரியார் அவர்களை வெறும் கடவுள் மறுப்பாளராகப் பார்க்கிறார்கள்; அவரை வெறும் பார்ப்பனிய எதிர்ப்பாளராகப் பார்க்கிறார்கள்; அல்லது வேறு ஏதோ சமூகத்திற்கு எதிரானவர் போல நினைக்கிறார்கள்.
யானையைக் கண்ட அய்வர் போல்
அவர்கள் எல்லோருடைய நிலையும் யானையைக் கண்ட அய்வர் நிலை போலத்தான் உள்ளது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். யானையைக் கண்ட அய்ந்து பேரில் ஒவ்வொருவரும் எப்படிச் சொன்னார்கள் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
ஆனால் உண்மையாகத் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டுமானால் அவரே சொல்லியிருக்கின்றார். என்னுடைய மக்கள் மானமும், அறிவும் உள்ள மக்களாக வாழவேண்டுமென்று மானிடப் பற்றோடு வாழ வேண்டுமென்று.
எனக்கு மற்றப் பற்றுகள் எல்லாம் கிடையாது. எனக்கு இரண்டு பற்றுதான் முக்கியம். ஒன்று அறிவுப்பற்று. மற்றொன்று மனிதப் பற்று என்று தெளிவாகச் சொன்னார்.
மனிதப்பற்றை முன்னிறுத்தியவர்
உலகத்திலேயே மனிதப்பற்றை முன்னிறுத்திய தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான். எனவே அது தமிழ்நாட்டிற்குரியதோ, இந்தியாவிற்குரியதோ, அல்லது இன்னொரு நாட்டுக்குரியதோ அல்ல. தந்தை பெரியாரின் தத்துவங்கள்.
பெரியார் மறைந்து விட்டார் என்று யாரும் நினைக்க வேண்டிய அவசியமில்லை. பெரியார் என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று நினைக்கின்றோம்.
காரணம் பெரியார் ஒரு தனிமனிதரல்ல. தனி மனிதர்களுக்குப் பிறப்பு உண்டு. இறப்பு உண்டு. ஆனால் மிகப்பெரிய தத்துவங்களாகவே வாழ்ந்து மறைந்து தனக்குப் பிறகு தனது கொள்கைகள் மக்களிடம் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டவர்.
பெரியார் கண்ட வாழ்வியல்
அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் கண்ட வாழ்வியல் எப்படி பூத்துக்குலுங்குகிறது என்பதை தாம் முதலமைச்சராக ஆன நிலையிலே எழுதிக்கொடுத்த கட்டுரையான ‘‘அந்த வசந்தம்’’ கட்டுரையிலும் சரி, அதற்குப் பிறகு திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிலும் கலந்து கொண்ட பொழுதும், அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
பெரியார் தனி மனிதரல்ல
பெரியார் என்பவர் ஒரு தனிமனிதரல்ல வாழும் பொழுதே அண்ணா அவர்கள் எழுதிக்கொடுத்தார். பகுத்தறிவு குடும்பத்தின் தலைமகன் அண்ணா அவர்கள்.
அண்மையிலேதான் அண்ணா அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடந்தது. அண்ணா சொன்னார் மிக அழகாக பெரியார் ஒரு தனிமனிதரல்ல. அவர் ஒரு சாகப்தம். என்ன ஒரு அழகான சொல் அவர் ஒரு சகாப்தம் மட்டுமல்ல தந்தை பெரியார் அவர்கள் ஒரு வரலாறு ஒரு திருப்பம் ஒரு கால கட்டம் என்று அழகாகச் சொன்னார்கள்.
பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின் என்று சமூகத்தை எல்லாத் துறைகளிலும் நீங்கள் அலசி ஆராய்ந்தீர்களேயானால் பெரியார் கண்ட வாழ்வியல் நாளும் தோற்றதில்லை. எல்லா இடங்களிலும், எல்லா நாடுகளிலும் வெற்றி பெற்றுக்கொண்டுதான் வருகின்றது என்று சொன்னார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் 1954ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தபொழுது ஒரு அறிவுரை சொன்னார்கள்.
சிங்கப்பூருக்கு விசுவாசமாக இருங்கள்
நீங்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருந்து இந்த நாட்டு நீரோட்டத்தோடே இணைந்து கொள்ளுங்கள். நீங்கள் சிங்கப்பூரியர்களாகவே இருக்க வேண்டும் என்று சொன்னார்.
அதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். இப்படி மற்றவர்கள் சொல்லமாட்டார்கள். காரணம் என்னவென்றால் நம்முடைய நாடு பிறந்தபொன்னாடு என்று ஒன்று இருக்கலாம்.
ஆனால் சிங்கப்பூரியர்களின் எல்லா அமைப்பையும் ஒன்றாக்கி ஒன்றாக வாழ்ந்து கொண்டு சகோதரத்துவத்தோடு வாழக்கூடிய சமவாய்ப்பு பெறக்கூடியவர்களாக வாழக்கூடிய சிந்தனை தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை இருந்திருக்கிறது.
இன்னொன்றைத் தந்தை பெரியார் அவர்கள் அழகாகச் சொன்னார்கள். அய்யா அவர்கள் வாழ்வியலைத் தொட்டுத்தான் அவருடைய அமைப்பையே உருவாக்கினார்கள்.
சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் என்று தனது இயக்கத்தைத் தோற்றுவித்து அதை ஏன் தோற்றுவித்தேன் என்று 1938 லேயே சொல்லியிருக்கின்றார்.
சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் அய்யா அவர்கள் தோற்றுவித்தார்கள். அப்பொழுதே அவர்கள் விளக்கினார்கள். உலகம் முழுவதும் வாழக்கூடிய மனிதர்கள் சுயமரியாதையுடன் மனிதர்களாக வாழ வேண்டும் என்று சொன்னார். அதனால்தான் சுயமரியாதை இயக்கத்தை ஏற்படுத்தினார்.
நான் எடுத்துச்சொல்வதைவிட, தந்தை பெரியார் பேசுவதையே கேளுங்கள். மனித வாழ்வின் பெருமை எது? என்று ஒரு சிறிய நூலை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம். பெரிய நூல்களைப் பலர் வாங்குகிறார்கள். ஆனால் படிப்பதில்லை. இவ்வளவு பெரியா புத்தகமா? அப்புறம் படிக்கலாம் என்று வைத்துவிடுவார்கள். அய்யா அவர்களுடைய உரைகள் எல்லாம் ‘கேப்சூல்’ மாதிரி அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
குளிகைக்குள் நூற்றாண்டு
Putting Centuries into a Capsule - நூற்றாண்டுகளை ஒரு குளிகைக்குள் அடைப்பதைப் போல தந்தை பெரியாருடைய உழைப்பு சிந்தனை இருந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
அய்யா அவர்கள் ரொம்ப அழகாக சொல்லுகின்றார். வாழ்வியலிலே இலக்கு வேண்டும் அதுதான் மிக முக்கியம். இலக்கு இல்லாமல் போனால் என்ன ஆவோம்?
எங்கள் நாட்டிலே தமிழ்நாட்டிலே மூட நம்பிக்கைகள் உண்டு. இங்கே இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் மாறுபட்ட சூழ்நிலையிலே வாழ்ந்திருக்கின்றீர்கள். வளர்ந்திருக்கின்றீர்கள். எங்கள் நாட்டிலே மூட நம்பிக்கைகள் அதிகம்.
ஒருவர் டாக்சி கூப்பிடுவார். அதில் ஒரு பயணி எழுந்து உட்காருவார். அந்த டாக்சி ஓட்டுநர் உடனே எங்கே போக வேண்டும் என்று கேட்பார்.
இதைக் கேட்டவுடனே கதவை மூடிவிட்டு அப்படியே கீழே இறங்கிவிடுவார் அந்த பயணி. டாக்சி டிரைவருக்கு ஒன்றும் புரியாது. இவர் எதற்கு கீழே இறங்கினார்? நாம் என்ன தவறு செய்து விட்டோம். இன்னும் ஏதாவது அவரிடம் சரியாக நடந்து கொள்ள வில்லையா? என்று எண்ணுகிறார்.
புறப்படும்பொழுதே எங்கே போகிறீர்?
ஆனால் டாக்சியில் ஏறிய பயணியோ என்ன சொல்லுகிறார். வண்டியில் ஏறியவுடன் எங்கே போகிறீர்கள் என்று ஓட்டுநர் கேட்டுவிட்டாரே. புறப்படும் பொழுதே எங்கே போகிறோம் என்று கேட்டுவிட்டாரே என்று புலம்புகிறார்.
ஓட்டுநர் எங்கே போகிறீர்கள் என்று கேட்காமல் வண்டியை எங்கே வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு செல்வாரா? இலக்கு என்பது மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட நிலையிலே இலக்கைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகிறார்.
------------------- தொடரும்... “விடுதலை” 19-12-2009
0 comments:
Post a Comment