Search This Blog

3.12.09

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கோடீஸ்வரராக இருக்கவேண்டும்!


பக்தியின் விலை

கையில் காசில்லாதவன் கடவுளேயானாலும் கதவை சாத்தடி என்ற ஒரு பாடல் வரி இந்த நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைகிறது.

திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளியை உடனடியாக தரிசிக்க வேண்டுமா? நீங்கள் கோடீஸ்வரராக இருக்கவேண்டும். வெறும் கோடீசுவரராக இருந்தும் பயனில்லை. ஏழுமலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை மன்னிக்கவேண்டும்; லஞ்சம் கொடுப்பவராக இருக்கவேண்டும்.

துண்டு துக்கடா கிச்சு கிச்சு மூட்டும் தகவல் இல்லை இது. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலைக்குப் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாள் கணக்கில் காத்திருந்துதான் ஏழுமலையானைத் தரிசிக்க முடிகிறது. இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு மகாதுவார தரிசன ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

இந்த வசதிமூலம் முக்கிய பிரமுகர்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் மகாதுவாரம் வழியாக மிக அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்க முன்வருபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை (குடும்ப உறுப்பினர் நான்கு பேர்களையும் சேர்த்து) அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தத் தரிசனத்தின் போது ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிற பட்டு வஸ்திரம் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும், பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்ட பட்டுசேலை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அரசன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்குக் கோயில் கட்டவேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் எழுதிய கவுடில்யன் கூறியுள்ளான். அதனைக் கறாராக திருப்பதி தேவஸ்தானத்தவர்கள் கடைபிடிக்கிறார்கள் போலும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், திருப்பதி தேவஸ்தானத்தில் இந்த ஏற்பாட்டை அர்ச்சகர்களும், பக்தர்களும் எதிர்க்கிறார்களாம். இது ஆகம விதிகளுக்கு முரணானது என்று குரல் கொடுத்துள்ளனராம். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏழுமலையானைத் தொடுவதற்கு அனுமதிப்பார்களோ என்றும் கேட்கிறார்களாம். பரவாயில்லை, பக்தர்களுக்குக்கூட கொஞ்சம் பகுத்தறிவு வேலை செய்கிறது போலிருக்கிறது.

அறிஞர் அண்ணா அன்று எழுதினார்:

கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான். விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்கிறாள். குடிகெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செய்பவர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாத தடை உண்டா? இல்லை. ஆனால், ஆதிதிராவிடர் மட்டும் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தடுக்கிறோம், நியாயமா? (நூல்: தீண்டாமை, 1948).

இந்த நூறு கோடி ரூபாய் நன்கொடையாளர்கள் பட்டியலில் எத்தனைக் கள்ளமார்க்கெட்காரர்களோ!

இதற்கு மேலும் விளக்கமும் தேவையோ!

---------------- மயிலாடன் அவர்கள் 3-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: