Search This Blog

31.8.15

ஜாதியை ஒழித்தால் - ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு தானே ஒழிந்து விடுமே!


ஊன்றிப்  படித்து உண்மையை உணர்வீர்!
  • குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை வைத்து ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்பதா?

  • ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் ஞான கங்கையில் ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறாரே! 

  • சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூக நீதிக்கான அறிக்கை

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை  வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி!

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர் - சட்டப்படி ஜாதியை ஒழித்துவிட்டு, அதன்பிறகு அந்தக் கோரிக்கையை முன் வைக்கட்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

குஜராத்தில் அண்மையில் பட்டேல் ஜாதியினர் தாங்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப் பட்டு, இடஒதுக்கீடு தர வேண்டும்; குஜராத் மக்கள் தொகையில் 15 விழுக்காடு தாங்கள் உள்ளதாகக் கூறி, மிகப் பெரிய கிளர்ச்சி நடத்தினர்.
குஜராத்தில் நடந்தது என்ன?
குஜராத் அரசு இதனை அடக்க முடியாத அளவுக்குச் சென்றதால், இராணுவத்தை அழைத்து அமைதி திரும்பும் நிலையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.
150 பேருந்துகள் எரிக்கப்பட்டன; துப்பாக்கிச் சூடு! 10 உயிர்களுக்கு மேல் பலி! காவல்துறையின் அடக்குமுறை காரணமாக ஏற்பட்டது என்பது குஜராத் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள செய்தி; பல ஊர்களில் ஊரடங்கு உத்தரவு.
சட்டம், ஒழுங்கு, வளர்ச்சி - எல்லாம் மாடல் குஜராத்திலேயே கேள்விக் குறியாயிற்று!
மோடியே புலம்புகிறார்
காந்தி பிறந்த மண்ணில் இப்படியா என்று பிரதமர் மோடியே புலம்பியுள்ளார்!
இதன் தாக்கமும், வேகமும் மற்ற வட மாநிலங்களிலும் பரவும் என்ற நிலை உள்ளது.
இதனை முன்னெடுத்து, அழைப்புக் கொடுக்க பட்டேல் ஜாதியைச் சேர்ந்த ஹார்திக்பட்டேல் என்ற 22 வயது இளைஞர் - பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி - என்ற ஓர் அமைப்பின் அமைப்பாளராக உள்ளார்.
ஹார்திக்பட்டேலின் குழப்பம்
அவருக்கு இடஒதுக்கீடு - சமூக நீதி பற்றிய முழுத் தெளிவு இல்லை என்பது பற்பல நேரங்களில் அவரது கருத்துக் குழப்பத்தின் மூலம் தெரிகிறது.
பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு தேவை; அது கிடைக்கா விட்டால் யாருக்குமே கிடைக்காத அளவுக்கு அந்த இடஒதுக்கீடு அறவே ஒழிக்கப்படுதல் வேண்டும் என்று பேசுவது அவரது கருத்துக் குழப்பத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு.
(அவரே டில்லி பேட்டியில் - 30.8.2015) அதை மாற்றி OBC  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எங்களை இணைத்ததோடு இதைக் கோரும் மற்ற ஜாதியினரை இணைத்து ஒரு தேசீய முன்னணியை உருவாக்கும் என்றும் பேசியுள்ளார்)
எம்.ஜி. வைத்யா என்ன கூறுகிறார்?
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை விளக்கவாதியான எம்.ஜி. வைத்யா (என்ற பார்ப்பனர்) ராய்ப்பூரில் நேற்று உடனே செய்தி யாளர்கள் சந்திப்பில், (ஆதாரம்: 31.8.2015 ஹிந்து நாளேடு)
ஜாதி அடிப்படையில் தரும் இடஒதுக்கீடு (கல்வி, உத்தியோகங்களில்) உடனடியாக ஒழிக்கப்படல் வேண்டும்; ஏனெனில் இனி ஜாதியை அடிப்படையாகக் கொள்வது என்பது எவ்வகையிலும் பொருத்தமானது அல்ல என்று கூறுகிறார்.
இதன் மூலம்தான் இந்த இடஒதுக்கீடு போராட்டத் திட்டம் விதை எங்கே உருவானது என்ற நியாயமான சந்தேகம் நாட்டில் பல சமூகநீதிப் போராளிகளுக்கும் உண்டாவது இயல்புதானே!
ஜாதி ஒழிப்புக் கொள்கை ஆர்.எஸ்.எசுக்கு உண்டா?
ஆர்.எஸ்.எஸ். கருத்து - கொள்கை என்பது தெளிவாகிறது. அவர்களை நோக்கி நாம் சில
கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்:
(1) ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை ஒழிக்க வேண்டுமென்று  முழங்கும் ஆர்.எஸ்.எஸ்.,  ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லத் தயங்குவதேன்?
ஜாதிபற்றி கோல்வால்கர்
சட்டம் போட்டு - ஜாதியை ஒழித்தால் -  ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு தானே ஒழிந்து விடுமே! அதற்கு ஆர்எஸ்.எஸ். தயாராகாது; சந்தேகமிருந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தத்துவ கர்த்தா -  சர்சங்க் ஜாலக் முதன்மையர் கோல்வால்கரின் ஞான கங்கை (Bunch of Thoughts) நூலைப் படிக்கட்டும்.
நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறிக் கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால்வருண அமைப்பில் உருவாகிய சமூக அமைப்பினை, சமூக சமநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.
வருண அமைப்பில் தோன்றிய உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற  ஏற்றத் தாழ்வு உணர்வு சமீப காலத்தில் தோன்றியதாகும் என்று எழுதியுள்ளார் கோல்வால்கர்.
எவ்வளவு பெரிய கோணிப் புளுகு இது! மனு தர்மத்தை வெள்ளைக்காரனா எழுதினான்?
இவர்களின் சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன?
மனுஸ்மிருதியில் எடுத்த எடுப்பில் முதலாவது அத்தியாயத்தில் 87ஆவது சுலோகத்தில் உள்ளது என்ன?
அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினி ருந்து உண்டான பிராமண, க்ஷத்திரியர், வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு உபயோகமான கருமங்களை தனித்தனியாக பகுத்தார்.
88வது சுலோக பதில்:
பிராமணனுக்கு ஓதுவித்தல்; ஓதல், யக்யம் செய்தல், தானங் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய தொழிலை ஏற்படுத்தினர்.
91வது சுலோகத்தில்
சூத்திரனுக்கு இம்மூன்று வருணத்தாரும் பொறாமை இன்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.
இதன்படி கீழ்ஜாதி மக்களுக்கு காலங்காலமாய் கல்வி அதன் காரணமாய் வேலை வாய்ப்பு உரிமை மறுக்கப் பட்டதன் விளைவாக எழுந்த குரல் தான் பிறகு சமூகநீதி முழக்கமாய் மாறியது.
எல்லார்க்கும் எல்லாம் என்றால் இடஒதுக்கீடு தேவைப்படாது. இருப்பது குறைவானது; பசித்தவர்கள் அதிகம். யாருக்குத் தரப்படல் வேண்டும் என்பதற்கான பதில்தான் இடஒதுக்கீடு.
பசியேப்பக்காரனுக்கு முதல் பந்தி புளியேப்பக்காரனுக்குக் கடைசிப் பந்தி
இது எப்படி தவறாகும்?

உயர்ஜாதியினரால் சேவை என்ற முகமூடி போர்வையைப் போர்த்திக் கொண்டு ஹிந்து வருண தர்மத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அதன் தலைவர் எப்படி ஜாதியை ஒழிக்கச் சொல்வார்?
ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன்?
(2) நாடு முழுவதும் முன்பு அரும்பாடுபட்டு முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது ஒப்புக் கொள்ள வைத்த ஜாதிவாரி கணக்கு - மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும்போது இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையின்படி, எடுக்கப்பட்ட ஜாதிவாரி புள்ளி விவரத்தை - சென்சஸ் மக்கள் தொகை கணக்கீட்டை, பழைய சட்ட வரைமுறையின்படி அது ரிஜிஸ்டிரார் ஜெனரல் சுதந்தரமாக வெளியிட வேண்டிய கணக்கீட்டை, இம்முறை மோடி அரசு பிரதமர் அலுவலகம் மூலம் வெளியிட்டதே -சட்ட நடைமுறை விரோதச் செயல் அல்லவா! அதுவல்லாமல் முழுமையாக ஜாதி வாரியும் இணைத்து வெளியிடாமல் மதக் கணக்கினை மட்டும் வெளியிட வேண்டிய அவசரம் என்ன?
ஜாதிவாரியான கணக்கீடு வெளியிடாததற்கு தென்னை மரத்தில் ஏறியவன் புல் பிடுங்கப் போனதாகச் சொன்ன சமாதானம், போல தவறுகள் உள்ளன என்று ஏனோ தானோ வெண்டைக்காய் விளக்கம் எதற்கு? மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாகத் தானே வெளியிடப்பட வேண்டும்? இதனை பிரதமர் அலுவலகமா ஆணையிட்டு சில பகுதிகள் மட்டும் வெளியிட வேண்டும்?
எனவே, ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். மாய்மாலம் சுத்தப் புரட்டு ஆகும்!
அரசியல் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இடம் பெற்றுள்ளதை அறியாதவர்களா இவர்கள்?
அறியாமையா? தகிடு தத்தமா?
(3) தற்போதைய சமூகநீதி இடஒதுக்கீட்டுக் கால நிர்ணயம் இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி வேலை வாய்ப்பில் கிடையாது.
அரசியல் தேர்தலில் ரிசர்வ் தொகுதிக்குத்தான் 10 ஆண்டு முதலில் கூறி அது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதையும், காலநிர்ணயம் செய்யப்படாத கல்வி, வேலை வாய்ப்பையும் ஒன்றாகக் குழப்புவதும் ஒன்று அறியாமை; இன்றேல் திட்டமிட்டு தகிடுதத்தம்  புரிந்து கொள்ளுங்கள்.

--------------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்   31.8.2015,  சென்னை


30.8.15

மதம் ஏன் ஒழிய வேண்டும்?-பெரியார்

மதம் ஏன் ஒழிய வேண்டும்?








மதம் என்பதைப் பற்றி இதற்கு முன் குடிஅரசு, புரட்சி முதலிய பத்திரிகை களில் அநேக வியாசங்கள் பல தலைப் புகளின் கீழ் எழுதப்பட்டிருப்பது யாவருக்கும் தெரியும்.

மதமானது இன்று உலகில் மனித சமுகத்தின் வாழ்வைத் துக்க மயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்று உள்ள பகுத்தறிவை அடிமைப்படுத்தி ஒற்று மையைக் குலைத்து, மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது என்பதற்கு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றோம்.
தேசிய சிங்கங்களான அலி சகோ தரர்கள் ஒரு காலத்தில் நாங்கள் முதலில் மகம்மதியர்கள், பிறகுதான் இந்தியர்கள் அதாவது முதலாவது மதம், பிறகு தான் தேசம் என்றும், உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா காந்தி நானே இந்து மதத்தில் உருவம்!  நான் மூச்சுவிடுவதும், வாங்குவதும் இந்து மதத்திற்காகவே!!  நான் உண் பதும், உயிர் வாழ்வதும் இந்து மதத் திற்காகவே!!! மதத்தைக் காக்கவே நான் சுயராஜ்ஜியம் கேட்கின்றேன்!!!! அதா வது இந்து மதம் தான் எனக்கு முதலும், கடைசியும், என்றும், பழைய காங்கிரஸ் வாதி, மாசற்ற தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி என்று சொல்லப்பட்ட, பண்டித மதன் மோகன மாளவியா எனது மதத் தையும், எனது ஜாதியையும் காப்பதே எனது முதல் வேலை என்றும், அதாவது வருணாசிரமத்தைக் காக்கத் தான் நான் தேசியவாதி என்றும், சொல் லும்படி செய்துவிட்டது என்றால் மதத் தின் ஆதிக்கத்திற்கு வேறு என்ன உதா ரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.
பெருத்த தேசாபிமானிகள், தேசத் துக்காகச் சகலத்தையும் தியாகம் செய் தவர்கள் என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மதத் தத்துவத்தை உள் எண்ணமாக வைத்து, அவற்றின் கொள்கைகளைக் காப்பதற் காகவே அவர்களது தேசாபிமானமும், உயிர் வாழ்வும் இருந்து வருகின்றது என்றால் மற்ற சாதாரணமான அதாவது மதத்தைத் தவிர மற்றொன்றும் அறி யாத பாமர மக்களின் யோக்கியதை யைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.
வட்ட மேஜை மகாநாடு உடைந்து போனதும் அரசியல் சீர்திருத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றுபடாமல் போன தும் இந்து முலீம்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் அரசியலில் தனித் தொகுதி வேண்டுவதற்கும், காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டி ருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் தனித்தொகுதி கேட்பதற்கும் கூட்டுத் தொகுதியில் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவேண்டும் என்று கேட் பதற்கும், மக்களை மக்கள் தீண்டப் படாதவராய் கீழ் மேல் ஜாதியாராய் கருதப்பட்டு வருவதற்கும் மதமே காரணமாய் இருந்து வருகின்றது என்பதையும் எவராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
மற்றும் மனித சமுக வாழ்வுக்கு ஏற்ற சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் என்பவை களில் பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறி வுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அனேக விஷயங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும் அமலுக்குக் கொண்டு வரவோ தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரணமாகச் சொல்லப்படு கின்றதா, இல்லையா என்று கேட்கின் றோம். ஆகவே மனித வாழ்க்கைக்கு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்படிப்பட்ட இந்த மதம் ஒன்று இரண்டு என்று இல்லாமல் நூற்றுக் கணக்காய் இருந்துகொண்டு பலவித கடவுள்களை சிருஷ்டித்து பலவித மேல் உலகங்களையும் மோட்ச நரகங் களையும் கற்பித்து அவரவர் கடவு ளுக்குத் தனிப்பட்ட குணங்களும், அவரவர் மேல் உலகங்களுக்கு தனிப் பட்ட பூகோளங்களும், அவரவர்கள் மோட்ச நகரங்களுக்குத் தனிப்பட்ட வருணனைகளும் கற்பித்து மக்களை மயக்கி வருவதோடு வாழ்க்கை ஒழுக் கம், நடத்தை என்பவைகளும் அவரவர் மதத்துக்கு ஒவ்வொருவிதமாய் கற்பிக் கப்பட்டு நடந்து வருவதும் அறிஞர்கள் அறியாததா?
இப்படிப்பட்ட மதத்தை மக்களுக் குள் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு சில நபர்கள் பாதிரி என்றும், முல்லா என்றும், தம்பிரான் என்றும், சங்கராச் சாரி என்றும், ஜீயர் என்றும், சாமியார் என்றும், பெயர்கள் வைத்துக் கொண்டு, உலகச் செல்வத்தில் தனிப்பெரும் பாகத்தை வீணாக்கி மக்களுக்குப் போதை ஊட்டிவருவதானது எவ்வளவு அவிவேகமான காரியம் என்பது சுய அறிவோடு பரிசுத்த தன்மையில் இருந்து யோசிப்பவர்களுக்கு விளங்கா மல் போகாது. இவைகளைப் பற்றி இன்னமும் விவரிக்குமுன் மதம் என் றால் என்ன என்று நாம் கருதிக் கொண்டு அதைப்பற்றி இவ்வளவு எழுதுகின்றோம் என்பதை வாசகர் களுக்கு விளக்க ஆசைப்படுகின்றோம்.
1. மதம் என்பது இவ்வுலக மானிட வாழ்வுக்கு ஏற்ற சட்ட திட்டங்கள் என்று சொல்லப்படுமானாலும்,
2. அல்லது மதம் என்பது இவ்வுல கில் மக்கள் கூடி வாழ்வதற்கு ஏற்ற ஒழுங்கு முறைகளைக் கொண்டது என்று சொல்லப்படுமானாலும்,
3. அல்லது (ஒருவர் கூறியபடி) மதம் என்பது மனிதனுக்கும் மற்ற ஜீவராசி களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படு மானாலும், அவைகளைப் பற்றியெல் லாம் நாம் அதிகக் கவலைக் கொண்டு மதங்களை எதிர்க்க ஆசைப்படுவ தில்லை.
அப்படிக்கெல்லாம் அல்லாமல்.

1. மதமானது மனிதனுடைய ஜட சம்பந்தத்தை விட்டு விட்டு ஜடம் நீங்கின
ஆத்மாவைப் பொறுத்ததென்றும்.

2. மதமானது இவ்வுலக வாழ்வை இன்ப துன்பத்தைத் துச்சமாக மதித்து விட்டு மேலுலக வாழ்வை முக்கிய மாகப் பொறுத்ததென்றும்.
3. மதமானது கடவுளுக்கும் மனித னுக்குமுள்ள சம்பந்தத்தை விளக்கு வதைப் பொறுத்ததென்றும்
4. மதமானது பஞ்சேந்திரியங் களுக்கு விளக்கக்கூடிய வது என்ற தத் துவத்தை விட்டு பஞ்சேந்திரியங்களா லும் உணர முடியாத ஆத்மார்த்தம் ஆவிதத்துவத்தை, அசரீரியை அடிப் படையாகக் கொண்டது என்றும்,
5. மதமானது உலக போக போக் கியம் இன்ப துன்பம் ஆகியவைகளை அலட்சியம் செய்து கடவுளின் பாதார விந்தத்தை அடையவும், மோட்ச சாம்ராஜ்யத்தைப் பெறவும், ஏற்ற மார்க்கம் என்றும் சொல்லப்படும் மதங்களையும், மதத் தத்துவங்களையும் பற்றி நாம் பேசுகின்றோம், என்றாலும் முதலில் கூறப்பட்ட அதாவது,
மதம் மனித வாழ்க்கைக்கு ஏற்ற சட்டதிட்டங்களுக்கோ மக்களின் கூட் டுறவு வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுங்கு முறைக்கோ ஏற்பட்டது என்கின்ற விஷயங்களிலும் கூட நமது ஆட்சே பணையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது இன்று நாம் மதங்கள் என்று சொல்லிக் கொள்ளப் படுபவைகளில் மேற்கண்ட குணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், இந்தக் காரியங் களுக்காக மக்கள் செலவில் நடை பெறும் அரசாங்க நிருவாகமும், சிவில் கிரிமினல் சட்டதிட்டங்களும் அவை களை நிறைவேற்ற நியாயதலம், தண் டனை, சன்மானம் ஆகிய முறைகளும் இருந்து வரும்போது இவை அல்லாத ஒரு சாதனம் அதாவது மதம் என்கின்ற விஷயம் எதற்காக இருக்க வேண்டும்?
அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை முதலியன இல்லாமல் மனித சமுகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா? என்பதை யோசித்தால் மதம் மேல் கண்ட காரியங்களுக்கு உண்மையாய் பயன்படுகிறதா என்பது விளங்கும். இன்று எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், எந்த சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும், சரீரம் காப் பாற்றப்படுவது மதத்தினாலா, அர சாங்க சட்ட திட்டங்களினாலா என் பதை யோசித்துப் பார்த்தாலே, மதத் தின் காப்பும் நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் விளங்கிவிடும். மதம் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாய் காருண்யத்துடன் இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றது என்று மதக்காரர்கள் சொல்லக்கூடும். ஆனால், மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் பற்றி கவலைப்படாமல் மற்ற ஜீவராசிகளைக் கொல்லவும், தின்னவும், இம்சிக்கவும் தனக்கு இடையூறு என்று கருதினால் அழிக்கவும் செய்கிறான். ஆனால் மனிதனை மாத்திரம் அந்தப்படி செய்வதில்லை. இதற்குக் காரணம் மதமா?  அல்லது அரசாங்க சட்ட திட்டமா? என்று கேட்கின்றோம். மனிதனை அந்தப்படி எங்கோ ஒன்று இரண்டு சமயம் செய்வதாக வைத்துக் கொண்டாலும் அதற்காகத் தண் டனையை அடைகின்றான்.
ஆதலால் மதம் எங்கே பொது வான ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றுகின்றது என்று கேட்கின்றோம்.
மதம் மனிதனுக்கும், மற்ற ஜீவராசி களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படுவதும் மிகுதியும் பொருத்தமற்றது என்றே கருதுகின்றோம்.
மனிதனுக்கும் மற்ற ஜீவவர்க்கத் துக்கும் உள்ள வித்தியாசம் எந்தத் துறை யினாலும், அறிய வேண்டுமானால், பிராணிவர்க்கத் தத்துவம் கொண்ட நூல்களைப் பார்த்தால் தாராளமாக மதசம்பந்தம் இல்லாமலே அவை களைத் தெரிந்து கொள்ளலாம். அப்படி யில்லாமல் மதத்தின் மூலம் அறிந்த ஜீவத் தத்துவங்கள் இன்று சிரிப்புக் கிடமாகத்தான் இருந்து வருகின்றன.
மதம் மனிதனுக்கு மனிதன் வித்தி யாசம் கற்பிக் கின்றது. மிருகங்களை, பட்சிகளை, பூச்சிகளை, புல் பூண்டு களை மனிதனைவிட உயர்வாய் மதிக் கின்றது. ஒரு மிருகத்தை உயர்வாய், ஒரு மிருகத்தை தாழ்வாய் கற்பிக் கின்றது. இந்த விஷயங்களுக்குப் பிராணி சாத்திரமே முக்கியமானதும், சரியானதுமே தவிர, மதத்தின் மூலம் அறியக் கூடியதாய் இருக்கும் தன்மை மிகவும் மோசமானதும், மூர்க்கத்தன மானதும், முட்டாள்தனமானது மென்றே சொல்லுவோம்.
மேற்கண்ட 1, 2, 3 விஷயங்களைப் பற்றிய வரையி லாவது மதத்தை ஒப்புக் கொள்ள செய்யலாமென்று பார்த் தாலும் கூட, அதுவும் அறிவுக்குப் பொருத்த மற்றதும், மூர்க்கத்தனம் கொண்டதுமான கருத்துக் களால் பாதகமடைகின்றது. அதாவது எந்த மதக் காரனும் தன்தன் மதத்தைப் பற்றிய ஆதாரங்களும், கொள்கை களுமே எந்த தேசத்துக்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என் றும், அவைகளில் ஒரு முற்றுப்புள்ளிக் குறிப்புக் கோடு கூட மாறக் கூடாது என்றும், தன்தன் மதத்துக்குத் தலை வன் என்பவன் எவனோ அவனே உலக மதத்தலைவனாக இருக்க வேண்டும் என்றும் செய்யப்படும் பிடிவாதங்களும் முரட்டுத் தனங்களும் எந்த மதத்தையும் மனித சமுக வாழ்வுக்கு வழிகாட்டி என்று ஒப்புக் கொள்ள முடியாமல் செய்கின்றது.
ஆகவே மனித சமூகக் கூட்டு வாழ் வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங் களைவிட அரசாங்கத் சட்டதிட்டங் களையே ஆதாரமாகக் கொள்வது தான் அறிவுடைமை என்று கூறுவோம். அதுதான் இன்று உலகமெங்கும் அனு பவத்தில் இருக்கின்றது என்றும் சொல் லுவோம். ஏனெனில் அவைகளில் காலத்துக்கும், தேசத்துக்கும், ஒத்தபடி, அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்றபடி, மாற்றிக் கொள்ளவும், திருத்திக் கொள் ளவும் உரிமை இருக்கின்றது. மதங்களில் அவை காணவே முடியாது அப்படி ஏதாவது முயற்சித்தாலும் கலகம், கொள்ளை, கொலை முதலியவைகளை உண்டாக்கி விடுகின்றது.
எனவே இந்த விஷயங்களே அதாவது இந்த உலக பிரத்தியட்ச மனித வாழ்வு சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களை மதத்தின் பயனாக இப்படி இருந்தால் இனி மேலுலக மனிதனுடைய கண்ணுக்கும் மனதுக் கும் பஞ்சேந்திரிங்களுக்கும் எட்டாத விஷயங்களைப் பற்றிய மத போத னைகள் என்ன பயனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்ட தாக இருக்கும்?  என்பதைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட் கின்றோம்.
மற்றபடி மதம் சட சம்பந்தத்தை விட்டு விட்டு ஆன்மாவைப் பொறுத் தது என்று சொல்லப்படுவதைப் பற்றியதென்றால் இந்தக் காரணத்துக் காகவே மதங்களை எல்லாம் அடி யோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் இருக் கின்றோம்.
ஆத்மா என்பதை இதுவரை ஒரு மனிதனும் அர்த்தத்தோடு உறுதிப் படுத்தவேயில்லை.
4+3=10 என்று சொல்லிவிட்டு அந்த பத்தைப் பற்றியே விவரித்துக் கொண்டி ருக்கின்றது போலவே, அதாவது 10அய் யார் யாருக்கு எப்படி பங்கிடுவது எங்கு எங்கு வைப்பது என்று வேண்டு மானால் பேசு. அதற்கு மேல் 4+3 எப்படி 10 என்று மாத்திரம் கேட்கக்கூடாது என்கின்ற நிலையில்தான் இன்று ஆத்ம தத்துவம் இருந்து வருகின்றது.
அதாவது ஆத்மா என்றால் என்ன?  அது எப்படி சரீரம் பெற்றது?  அதற்கு எப்படி கருமம் ஒட்டிற்று?  அதன் நடத்தைக்குக் காரணம் என்ன?  அது எப்படி மோட்சம் போகின்றது?  அது எப்படி மறுபடியும் சரீரம் பெற்று எழுகின்றது?  மனித ஆத்மா, மிருக ஆத்மா. பட்சி ஆத்மா, புழு பூச்சி ஆத்மா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன?  என்பனவற்றைப் பற்றி எல்லாம் பேசலாம், விவரிக்கலாம். வால்யூம், வால்யூமாக புத்தகம் எழுத லாம். ஆனால் ஆத்மா என்றால் என்ன?  அது எப்படிப்பட்டது?  அப்படி ஒன்று இருக்க விஞ்ஞான சாத்திரம் (சையன்ஸ்) அல்லது ஜீவ தத்துவ சாதிரம் இடம் கொடுக்கின்றதா?  என்பதைப் பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆத்மா இருப்பதாக அவர் சொன்னார், இவர் சொன்னார், மகமது சொன்னார், கிறிஸ்து சொன்னார், கிருஷ்ணன் சொன்னார், புத்தர் சொன்னார்,... என்று சொல்லி விடுவதும் ஆத்மாவை நம்பாதவர் கடவுளை நம்பாத நாத்திகனை விடக் கேடானவன். மடையன், மட்டி என்றும் கடவுளை நம்பாவிட்டால் ஆத்மாவை நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லி விடுகிறார்களே ஒழிய காரண காரியங்களுடன் அறிவு அனுபவங் களுடன் பேசுகின்றவர்களே காணக் கிடைப்பதில்லை.
இது ஒரு புறமிருந்தாலும், ரூபம் இல்லாத வது  தத்துவமில்லாத மனதுக் குப் புரியாத விசயத்துக்காக இவ்வுலக பிரத்தியட்ச வாழ்க்கையையும், அடை யும் இன்ப துன்பங்களையும் பற்றிய கவலை கூடாது என்றோ அல்லது இக்கவலையை விட ஆத்மா கவ லையே பிரதானமென்றோ, பெரிய தென்றோ சொல்லப்படுமானால் அப் படிப்பட்ட மதத்துக்கு உலகில் மனித ஜீவன்கள் இடம் கொடுக்கலாமா என்றுதான் கேட்கின்றோம்.
நிற்க மதமானது மேல் உலக வாழ் வுக்கு ஆதாரமானது என்று சொல்லப் படுமானால் முதலாவதாக மேல் உலகம் என்பது என்ன என்பதைப் பற்றி இதுவரை யாராவது, எங்காவது விளக்கி, இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.
பூகோள சாதிர நிபுணர்கள், பூமியின் கீழ் மனதிற்கு எட்டக்கூடிய அளவு வரையும், பூமியின் மேல் ஆகாய மார்க்கமாக மனதிற்கு எட்டக் கூடிய அளவு வரையிலும் ஆராய்ந்து பார்த்து லட்சக் கணக்கான மைல் ஏன் கோடிக்கணக்கான மைல் தூரம் வரையில் ஆராய்ச்சி செய்து மேல் கீழ் நிலைமையை விளக்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு நிபுணத் துவர்கள் என்கின்ற நிலையிலும் அனேக வருஷ காலம் அதற்காகப் பாடுபட்டு உழைத்து அனேக கருவி களின் உதவியைக் கொண்டு கண்டு பிடித்தும் சொன்ன பிரத்தியபடி அனுபவ ருஜுப்பிக்கக் கூடிய உண் மைகளே ஒழிய ஞான திருஷ்டி அதா வது ஒரு மனிதனுடைய புத்திக்கு திடீரென்று தோன்றிய விஷயம் என்று சொல்லப்படுவது போல் சொல்லப் பட்டதல்ல. அன்றியும் பள்ளிக் கூடங் களில், அல்லது பூகோள புதகங்களில் முறையே கற்பிக்கப்படாததும், காணப் படாததுமான விஷயங்களுமல்ல.
அப்படியிருக்கும்போது இந்த பிரத்தியட்ச உலக விஷயத்தை விட்டு விட்டு மேலுலக விஷயத்தை பற்றிப் பேசுவது என்றால் அதில் அடங்கியிருக் கும் மவுடீகத் தன்மைக்கு எதை ஒப்பிடு வது என்பது நமக்கு விளங்கவில்லை.

இதுவரையில் மனிதன் மேல் உலகத்தை எப்படிக் கண்டுபிடித்தான்?  அதன் விதீரனத் தன்மை என்ன?  என்பவைகளைப் பற்றிய உண்மை எதுவும் சொல்லப்படாமல் முதலில் மேல் உலகத்தை நம்பு. பிறகு எப்படி வேண்டுமானாலும், அதாவது மோட் சம் எப்படிப்பட்டது? நரகம் `எப்படிப் பட்டது?  தண்டனை எப்படிப்பட்டது?  அது யாருக்குச் சொந்தம்?  பரம பிதாவா, அல்லாவா, வைகுண்ட நாதரா?  கைலாச வாசரா?  யார் அதற்கு எஜமான்?  என்பதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாதம் செய் என்று கற்பிப்பதாய் இருப்பதைத் தவிர வேறு என்ன உண்மை, அல்லது அறிவு டைமை மேல் உலக விஷயத்தில் இருக்கிறது என்று கேட்கின்றோம்.
அதுபோலவே மதம் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது என்று சொல்லப்படும் வார்த்தையும், அர்த்தமற்றதாகவே இருக்கிறது.
கடவுளைப் பற்றி அதாவது, கடவுள் என்றால் என்ன என்பதைப் பற்றி இதுவரை ஒரு ஆத்தீகனாவது, அல்லது கடவுள் தன்மை பெற்ற பெரியவர் களாவது விளக்கினவர்களே அல்ல. கடவுள் என்றால் கண்ணுக்கும், மன துக்கும் எட்டாதது. ரூபமும் குணமும் இல்லாதது, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளது என்று சொல்லிவிடுவதும், அதைச் சொல்லு கின்றவர்களே அந்தக் கருத்தை நம் பாமல் இருப்பதும் பிறகு அதற்கு முரணாகப் பேசுவதுமான காரியங் களுக்கே இதுவரை கடவுளைப் பற்றிய வாதங்களின் முடிவுகள் இருந்து வந்திருக்கின்றன.
மனத்துக்குட்படாத கடவுளைப் பற்றி மனிதன் எப்படி எந்த இந்திரி யத்தினால் உணர்ந்தான் என்று கேட் டால் அதற்குப் பதிலே இல்லை. குணமும் ரூபமும் இல்லாத வதுக்குச் செய்கை எது என்று கேட்டால் அதற்கும் பதிலே இல்லை. சர்வசக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் செயலில் நன்மை, தீமை, துன்பம் - இன்பம், மேல் - கீழ், சுகம் - துக்கம், மோட்சம் - நரகம், எப்படி உண்டா யிற்று என்று கேட்டால் இதற்கு பதில் இல்லை. அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்கக் கூடாது கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவன் நாத்திகன் நம்பாவிட்டால் நரகம், அரச தண்டனை - ஆஸ்திகர்கள் கண்டனம் கிடைக்கும் என்று மிரட்டுவதும், உருட்டுவதும் தவிர கடவுளைப் பற்றி வேறு விளக் கமே இல்லை.
சர்வ சக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான் ஏன் கடவுளை அறியமுடியவில்லை?  ஏன் கடவுளே இல்லை?  என்று சொல்லுகிறேன், என்று ஒருவன் கேட் டால், அது உன்னுடைய அகம்பாவம், உன்னுடைய மடமை, உன்னுடைய பாவச் செய்கை என்று சொல்லிக் கட வுளைவிட அவனைப் பெரியவனாக மதித்து இகழ்வதாயிருக்கின்றதே தவிர வேறு சமாதானமில்லை.
இப்படிப்பட்ட தத்துவங்கள் கொண்ட மதங்களைப் பற்றி, மக்கள் வேற்றுமை உணர்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்து பலாத்காரச் செய்கைகள் செய்து மக்களைத் துன்புறுத்துவதென்றால் மதத்தை ஒழிக்காமல் இருக்க யாருக்குத்தான் மனம் வரும் என்று கேட்கின்றோம்.
மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங் களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற் படுகின்றதே ஒழிய சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.
கிறித்தவ மதத்தைப் பற்றி எழுதி னோம் என்பதற்குக் குடிஅரசு பத் திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி, எழுதின தற்காக புரட்சிப் பத்திரிகை நிறுத்தப் பட்டு போயிற்று.
இந்து மதத்தைப் பற்றி எழுது கிறோம் என்பதற்காக தினம்தோறும், நிமிஷம் தோறும் அடைந்துவரும் தொல்லையும், நசுங்கு சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது. பார்ப்பனர்களை உத்தி யோகஸ்தர்களைக் கொண்ட போலீஸ் இலாகா, போடல் இலாகா, ரயில்வே இலாகா, நீதி இலாகா, நிர்வாக மற்றும் அனேக துறைகளில் கீழே இருந்து ஹைகோர்ட் நிர்வாகசபைவரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம், சித்திரவதைக் கொப் பாக இருந்து வருகின்றது.
நாம் மாத்திரமல்லாமல் நம்மைப் போல் கஷ்டப்படும் மக்கள் கோடிக் கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.
மதமானது பணக்காரத் தன் மையைப் பிரதிபலித்துக் கொண்டும், அதை ஆதரித்துக் கொண்டும் இருந்து வருகின்ற சாதனமாய் இருப்பதால்; அதற்கு இவ்வளவு ஆதிக்கம் இருந்து வருவதில் அதிசயமில்லை. ஆதலாலே யேதான் மதங்கள் ஒழிக்கப்படுவ தாலேயே மனித சமுகத்துக்கு ஒற்று மையும் சாந்தியும் ஏற்படும் என்று கரு துவதோடு, பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருது கின்றோம்.
சென்ற வாரத்தில் சென்னைக் கடற்கரையில் நடந்த மத சம்பந்தமான ஒரு முஸ்லீம் கூட்டத்தில் கலகம் ஏற்பட்டு ஒரு முஸ்லீமை ஒரு இந்து குத்தி விட்டானாம். முஸ்லீமும் அத னால் செத்துவிட்டான். நாளைய தினம் ஒரு கிறிஸ்தவன் அதை விசாரித்து உண்மை கண்டு இந்துவை தண்டிக்கப் போகிறான் என்றாலோ அதில் அதிசய மில்லை. ஒரு கிறிஸ்தவன் முகம்மது நபியைப் பற்றி ஏதோ எழுதிவிட்டால் முகம்மதியர்களுக்கு ஆத்திரம் வரு கின்றதும், ஒரு முகம்மதியன் கிறிஸ்து வைப் பற்றி எழுதிவிட்டால் கிறிஸ்தவ னுக்கு ஆத்திரம் வருவதும், இது போலும் இந்துக்களுக்கும், கிறிஸ்து முகம்மதியர்களுக்கு நேருவதும், அதற்காக கொலை, கொள்ளை, கொடு மைகள் நடப்பதுமான காரியங்கள், அதுவும் இன்று நேற்று அல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, அதுவும் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் அய்ரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய எல்லா தேசங் களிலும் நடந்து வருகின்றது என்றும் மதம் மக்களுக்கு கூட்டு வாழ்க் கையையும், ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும் வாழ்க்கை ஒழுங்கு களையும், ஒழுக்கங்களையும் போதித்து வருகின்றதா? என்றும் கேட்கின்றோம்.
மதம் ஒழுக்கத்தை, கூட்டு வாழ்க்கை ஒழுங்கு மனிதர்களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே எப்படி முறையை கற்பித்து இருக்கின்றது என்று மத பக்தர்களைக் கேட்கின்றோம்.
------------------------- தந்தை பெரியார் - 
- பகுத்தறிவு - தலையங்கம் - 09.09.1934

28.8.15

உலக பிராமணர்கள் World Brahmins!

RL.Narayan Nallappa
உலக பிராமணர்கள் World Brahmins!

Congratulations Mr. Sunder Pitchai. yet another tamil brahmin iyengar reached the heights! Veeramani and karunanidhi vairu yeriyudha. Go and agitate in Google office.
வாழ்த்துகள் திருவாளர் சுந்தர்பிச்சை. இன்னுமொரு பிராமின் அய்யங்கார் உயர்ந்த இடத்தை எட்டியுள்ளார்! வீரமணி மற்றும் கருணாநிதி வயிறு எரியுதா? கூகுள் அலுவலகத்துக்கு சென்று போராடுங்கள் என்று உலகப் பிராமணர்கள் சொல்லி இருக்கிறார்களாம் இணையதளத்தில் வந்துள்ள செய்தி இது.
இதன்மூலம் உலகப் பிராமணர்கள் என்ற ஓர் அமைப்பை - அணியை உருவாக்கியிருக் கிறார்கள் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மிகப்பெரிய பொறுப் புக்கு வந்துள்ளது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பெருமையுடன் வாழ்த்துகளைக் கூடக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் பார்ப்பன அமைப்பு கலைஞர் அவர்களைச் சாடுவது ஏன்?
இந்தக் கூட்டம் சதா கலைஞரையும், ஆசிரியர் வீரமணியையுமே உருப் போட்டுக் கொண்டு (Phobia) அஞ்சிக் கிடக்கிறார்கள் என்பது அம்பலமாகிவிட்டதா, இல்லையா?
இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்; கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளவர் அய்யங்கார்ப் பார்ப்பனர் என்று அடையாளம் காட்டுவது ஏன்? - இவர்கள் சொல்லும்வரை இந்தக் கண்ணோட்டத்தில் யாரும் சிந்தித்துக்கூட பார்க்க வில்லையே!
திராவிடர் இயக்கத்தவர் தமிழர், திராவிடர் என்று பேசினால், தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்று பேசினால், அதற்கு வேறு வண்ணம் பூசும் பூசுரர் கூட்டம் இப்பொழுது தன்னை அறி யாமலேயே தாங்கள் யார் -  தங்களின் ஆழமான உணர்வு வெறி என்ன என்பதைத் தங் களுக்குத் தாங்களே அம்பலப் படுத்திக் கொண்டுவிட்டார் களே! பார்ப்பனர் அல்லாத மக்கள் பார்ப்பனப் பூசுரர்கள், எந்த நிலையில் உள்ளனர் என்பதை இந்த இடத்திலாவது, இந்த  நேரத்திலாவது புரிந்து கொண்டால் சரி!
அதேநேரத்தில், இந்த இடத்தில் இன்னொரு சாத னையாளரை நினைவுப்படுத்து வது அவசியமும் - பொருத்த மும் ஆகும்.
அவர்தான் இராஜ பாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிவ.அய்யாதுரை என்ற தமிழர் மின் அஞ்சலை (இ-மெயில்)க் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.
சுந்தர் பிச்சை புதிதாக எதையும் கண்டுபிடித்துவிட வில்லை. அவருக்குள்ள திற மைக்காக ஒரு நிறுவனத்தின் பெரிய பொறுப்புக்கு அமர்த்தப் பட்டுள்ளார். ஆனால், சிவ.அய்யாதுரையோ புதுக் கண்டுபிடிப்பினைச் செய்தவர்.
மின்னஞ்சல் மனித குல வளர்ச்சியில் ஒரு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தி விட்டது.
ஆனால், அந்த சிவ. அய்யாதுரை எப்படிப் பார்க்கப் பட்டார்? இதனை அவரே சென்னையில் ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொன்னது - கவனிக்கத்தக்கது (22.7.2013).
மேற்கத்திய நாடுகளில் அறிவியலார் மற்றும் விஞ் ஞானிகள் என்றால் வெள் ளைத்தோல் உடையவராகவும், இந்தியாவில் பார்ப்பனராகவும் இருக்கவேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளது. வேதனை யான செய்தி, அய்தராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வரும் ஓர் ஆங்கில நாளேட் டின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவுப் பெரிய அரிய கண்டுபிடிப்பினை செய்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பியதாகவும்;
தம்மைப்பற்றி செய்தி வராமல் பார்த்துக் கொண்டார் என்றும் சிவ.அய்யாதுரை பேசியதையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்த்தால், பசுத் தோல் போர்த் திய பார்ப்பன விலங்குகளைத் தெரிந்து கொள்ளலாமே!
------------------------------- மயிலாடன் அவர்கள் 25-08-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

27.8.15

காந்தியார் மாநிலத்தில் பெரியார்!

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மதுரைக்கு வந்து தோள் தட்டினார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா
அவரின் குஜராத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ!
காந்தியார் மாநிலத்திற்கு பெரியார் சென்றுவிட்டார்
அடிமை ஜாதிகள் இனி விடமாட்டார்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா - இன்றோ அந்த அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ பற்றிக் கொண்டு விட்

தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா - இன்றோ அந்த அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ பற்றிக் கொண்டு விட்டது. ஆம் காந்தியார் மாநிலத்தில் பெரியார் நுழைந்துவிட்டார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சமூகநீதி எங்களுக்கும் தேவை என்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மிக ஆவேசமாக போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது - பட்டேல்கள் என்ற பட்டிதார் வகுப்பினரால்.
1980-களில் இட ஒதுக்கீட்டை எதிர்த்த குஜராத்தில் இன்று இட ஒதுக்கீடு கேட்டுக் கிளர்ச்சி!
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாதவராவ் சோலங்கி அவர்கள், இட ஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்தார்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அப்போது பெருங்குரல் கொடுத்தது - குஜராத்தின் செல்வாக்கான இதே பட்டிதார் ஜாதியாகிய பட்டேல்கள் பிரிவினர்.
அதை ஒரு வாய்ப்பாகக் கருதி, தமிழ்நாட்டிலும் (அப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது) உரிமை பறிக்கப்பட்ட முற்பட்ட வகுப்பினர் என்ற ஒரு புது அமைப்பாக மார்த்தாண்டம் பிள்ளை என்ற ஒரு முன்னேறியவரின் (சைவப் பிள்ளை) தலைமையை வைத்து, பார்ப்பனர்கள் பின்னணியில் இருந்து கொண்டு, கொம்பு சீவி விட்டு, இட ஒதுக்கீட்டை ஒழிக்க நீதிமன்ற வழக்கு என்ப தைப் போட்டதோடு, வீதியிலும் போராட ஆயத்த மாயினர்.
திராவிடர் கழகம் பதிலடி!
உடனே திராவிடர் கழகத்தின் சார்பில் நாம் தமிழ்நாட்டை ஒருபோதும் குஜராத் ஆக - அதாவது இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் போராட அனுமதிக்க மாட்டோம் என்ற எதிர் போராட்டம் - பேரணி - உண்ணும் விரதம் எல்லாம் அறிவித்தோம்; கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டோம்.
இட ஒதுக்கீட்டை எதிர்த்து மதுரைக்கு வந்து தோள் தட்டினார் அமித்ஷா - இப்பொழுதோ குஜராத்திலேயே கிளர்ச்சி!
பிறகு இன்று,
சில வாரங்களுக்குமுன் (6.8.2015) மதுரையில் சில ஜாதியினரை பார்ப்பன குருமூர்த்திகள் அக்கிரகார வளர்ப்புக் கிளிப் பிள்ளைகளாக்கி எங்களுக்கு கீழ்ஜாதி அந்தஸ்து கூடாது; உயர்ந்த ஜாதியாக எங்களை எண்ணவேண்டும். எனவே, எங்களுக்கு இட ஒதுக் கீடே வேண்டாம் என்று பேச வைத்து, அதற்கு அகில இந்திய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவையே மதுரைக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதுபோல, பேசி, முன்னோட்டம் பார்த்தனர். இட ஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடியவர் களாகி விட்டனர் என்று அவர்கள் தலையில் அய்ஸ் கட்டிகளை வைத்தார்.
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். குழாம் எல்லாம் இப்படி சில வித்தைகளை முதல் முறை அரங்கேற்ற ஒத்திகை பார்த்தனர்.
22 வயது இளைஞர் ஆட்சிக்குச் சவால்!
ஆனால், குஜராத்தில் இன்று பா.ஜ.க. ஆட்சியை நோக்கி, இட ஒதுக்கீடு சமூகநீதி எங்களுக்கும் தேவை என்று பட்டேல் ஜாதியினர் 18 லட்சம் பேர் ஓர் இடத் தில் திரண்டு 22 வயது இளைஞர் ஆர்டிக் பட்டேல் குஜராத் பா.ஜ.க. அரசுக்கு நிபந்தனை விதிக்கிறார்!
அவர்களது எதிர்ப்புக்குரலின் வெப்பத்தைத் தணிக்க அரசே இறங்கி - கிளர்ச்சிக்காரர்களின் கோரிக்கைகளை சமாதானப்படுத்த,
1. பேரணி, கூட்டம் நடத்திட ஜி.எம்.டி.சி. (மைதா னத்தை) அரசு வாடகை வாங்காமல் இலவசமாகத் தருகிறது.
2. வெளியூரிலிருந்து வரும் அத்தனை வண்டிகள், கார்கள் - பேருந்துகளுக்கு சுங்கவரி - டோல் கேட்டுகளில் வசூலிக்கப்படவேண்டாம் - அதனை  தள்ளுபடி செய்து அறிவிக்கிறது!
சமூகநீதி எங்களுக்கும் தேவை என்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மிக ஆவேசமாக போர்க்கொடி உயர்த்தி - பட்டேல்கள் என்ற பட்டிதார் வகுப்பினரால் நடத்தப்பட்ட பேரணியில் திரண்ட லட்சோப லட்ச மக்கள் திரள்.
பிரதமர் மோடி இறங்கி வரும் நிலை!
அந்த இளைஞரோ,
எங்கள் கோரிக்கை மனுவை முதலமைச்சர் இங்கே வந்து வாங்கிச் செல்வதோடு, கோரிக்கையை நிறை வேற்ற உறுதி தர முன்வரவேண்டும்.
இல்லையேல் எங்கள் உண்ணாவிரதம் (ஏற்கெ னவே சில இடங்களில் காவல்துறை தடியடி), கடை மூடல் போன்ற நிகழ்வுகள் தொடரும்.
பிரதமர் மோடி சாந்தி நிலவட்டும் என்று பேசி யுள்ளார்; அதனை வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள்  ஒலி-ஒளிபரப்புகின்றன.
இது எப்படி முடியுமோ என்ற கவலை குஜராத் பா.ஜ.க. ஆர்.எஸ்.எசுக்கு ஏற்பட்டுள்ளது!
எங்களது இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டால், 2017 இல் ஆட்சி அமைத்து, நாங்களே இட ஒதுக்கீட் டுக்கான ஆணையைப் பிறப்பிப்போம் என்று முழங்கியுள்ளார் அந்த இளைஞர் தலைவர்!
நிதிஷ்குமார் பச்சைக்கொடி!
பட்டேல்கள் குஜராத்தில் இட ஒதுக்கீடு கோரி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்கக் கோருவது நியாயமானதுதான்; அதனை நான் வாழ்த்தி வரவேற்கிறேன் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார்,  பேசியுள்ளார்!
இது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்; வரலாறு திரும்புவது மட்டுமல்ல; ஆங்கிலப் பழமொழிபோல் சக்கரம் முழுமையான வட்டத்தைச் சுற்றி வந்துள்ளது - அதாவது முழுமையடையத் தொடங்கியுள்ளது என்ற கருத்து (The Wheel has come to a full circle) என்பது போன்ற நிலை குஜராத்தில் 30, 35 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.
காந்தியார் மாநிலத்தில் பெரியார்!
காந்தியார் பிறந்த மாநிலத்தில் பெரியார் கொள்கைப்பூர்வமாக வரவேற்கப்படுகிறார் என்று தானே அதற்குப் பொருள்!
தமிழ்நாட்டிலே சக்கரம் முழுமையாகச் சுழன்று வந்ததே! எந்த பார்ப்பனர்கள் கம்யூனல் ஜி.ஓ., வகுப்புரிமை கூடாது என்று கோர்ட்டுகளுக்குச் சென்று ஒழித்துக் கட்டினரோ அவர்களே இன்று, சமூகநீதியை இனி அசைத்துவிட முடியாது என்பதை உணர்ந்து, சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்ற பரிதா பத்திற்குரிய கணவனைப் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு எங்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று அன்றைய முதல்வர் கலைஞரை, திராவிடர் கழகத்தை அணுகவில்லையா? அது எதைக் காட்டுகிறது?
இதுபோன்ற வகுப்புவாரி உரிமைக் குரல் சமூகநீதி கோரி இனி பல மாநிலங்களிலும் ஓங்கி ஒலிக்கவே செய்யும்; அது காலத்தின் கட்டாயம்.
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டுக்குக் குரல்
தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்பதை இன்று பிரபல அரசியல் கட்சிகளும் கொள்கை அளவில் - நாம் தொடக்கத்தில் இருந்தே கூறியதை ஏற்றுக்கொண்டுள்ளார்களே!
எனவே, சுவர் எழுத்தைப் படிக்க மத்திய மற்றும் குஜராத் போன்ற வட மாநில அரசுகள் தவறக்கூடாது!
ஆதிக்கவாதி எளிதில் தரமாட்டார் -
அடிமை ஜாதிகள் இனி விடமாட்டார்!

(குறிப்பு: அடிமை ஜாதிகள் (Servile Class) என்பது டாக்டர் அம்பேத்கர் தந்த பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் அனைவரையும் உள்ளடக்கிய சொற்றொடர் ஆகும்).


-------------------------------------கி.வீரமணி  தலைவர் , திராவிடர் கழகம் சென்னை 27.8.2015


25.8.15

ஜாதி ஒழிய வேண்டுமானால்...




ஜாதி ஒழிய வேண்டுமானால் கடவுள், மதம் ஒழிய வேண்டியது எவ்வளவு அவசியமோ, அது போலவே அவசியமான மற்றொரு காரியமான ஏழை, பணக்காரத் தன்மை ஒழிய வேண்டுமானால், தனியுடைமைத் தத்துவம் ஒழிந்தேயாக வேண்டும்.


ஜாதி ஒழிப்பு என்னும் காரியம் இன்றைய நிலையில் சட்டத்தினால் ஒழிக்க முடியாதபடி, அரசியல் சட்டப் பாதுகாப்பு இருப்பதுபோல், ஏழை, பணக்காரத் தன்மையும் சட்டத்தினால் ஒழிக்க முடியாதபடி இன்றைய அரசியல் சட்டம் தடையாய் இருக்கிறது. இவற் றிற்குக் காரணம் நமது அரசியல் சட் டத்தை உருவாக்கினவர்கள் பார்ப் பனரும், செல்வவான்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஆனதால், அவர்கள் தங்களுக்கு நல்ல பாதுகாப்பை அரசியல் சட்டத்தில் ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதே!


என்ற போதிலும் மக்களுக்குள், சென்ற 30, 40 ஆண்டுகளாகப் புகுத்தப் பட்ட இன உணர்ச்சி காரணமாக சட்ட மில்லாமலேயே ஜாதி ஒழிப்புக் காரியம் ஓரளவு மக்கள் உணர்ச்சியில் ஊறி வருகிறது. ஜாதியால் தாழ்த்தப்பட்ட வர்கள், கீழ் ஜாதியார் என்பவர்கள் ஆகிய எல்லோருடைய உணர்ச்சியிலும் தங்களுக்கு மேல் ஒரு ஜாதி இருக்கக் கூடாது என்ற எண்ணம் நல்ல வண்ணம் வளர்ந்து- வலுப்பெற்று இருக்கிறது. என்றாலும், தங்களுக்குக் கீழ் உள்ள ஜாதியார் என்பவர்களிடம் புழங்குவதில் ஓரளவு இசைந்தாலும், கொள்வினை கொடுப்பனை என்பது, மேல்- கீழ் மக்கள் என்பவர்களிடம் பெரும் வெறுப்பாய்த் தான் காணப்படுகிறது.

கல்வி பெற்றவர்கள் என்பதிலும் இந்தத் தடை இருந்துதான் வருகிறது. இந்தத் தடை ஒழிய வேண்டுமானால், அரசியல் சட்டம் மாற்றப்படுவது மாத்திர மல்லாமல், புரட்சிகரமான ஜாதி ஒழிப்புச் சட்டமும் கொண்டு வர வேண்டும். எப்படி யென்றால் :-

1. உத்தியோகத் துறையில் தாழ்ந்த (தாழ்த்தப்பட்ட) ஜாதியாரும், உயர்ந்த ஜாதி என்று கருதப்பட்டவர்களும் தங்களுக்குள் திருமணம் செய்து கொண் டவர்களுக்குத் தாம் முதல் உரிமை கொடுக்கப்பட வேண்டும்.
2.    தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப் பட்ட வகுப்புப் பெண்களுக்கும் ஆண் களுக்கும் 100க்கு 100 பேருக்கு (எல்லோ ருக்கும்) கல்வி (சலுகை)யுடன் கல்லூரிச் சலுகையும் கொடுத்துப்பட்ட தாரிகளாக ஆக்கிவிட வேண்டும்.
3. அவர்களுக்கு உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்.
4. ஆண்களில் மேல் ஜாதியார் என்ப வர்களிலும், கல்வித் தகுதி சிறிது குறைவாய் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மணம் செய்து கொண்டவர்களுக்கு முதல் உரிமை என்று வைத்துவிட வேண்டும்.
5.    சர்க்கார் லைசென்ஸ் கொடுக்கும் தொழில், வியாபாரம், தொழிற்சாலை முதலிய வற்றிலும் இந்த முறைகளைக் கையாள வேண்டும்.
இவற்றால் தகுதிக் குறைவோ, நிர்வாகக் குறைவோ ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவ தில்லை.


உயர் தகுதி (தேவையில்லாத தகுதி) என்பதுதான் குறைவாக இருக்கலாமே ஒழியத் தேவையான அளவு தகுதி என்பது எந்த விதத்திலும் குறைந்து விட முடியாது.


இன்று என்ஜினீயரிங், வைத்தியத்துறை முதலியவற்றிக்கு நாம் உயர்ந்த கல்வித் தகுதி, மார்க்குத் தகுதி, பாஸ் செய்த தகுதி என்பவற்றை எவ்வளவு கட்டுப்பாடு இருந்தும் அவை காரணமாக ஏற்றுக் கொள்வதே இல்லை. தெரிந்தெடுக்கும் கமிட்டியாருடைய சுதந்திரத்திற்குத் தான் பரீக்ஷிக்க விட்டிருக்கிறோம்.

அது எப்படி நடந்த போதிலும், அந்தக் காரணத்தினால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் எவரிலும் அந்தக் கல்வியில் தவறியோ தகுதியற்றோ, போனவர்களோ, போனவர்களாக ஆக்கப் பட்டவர்களோ, மற்றும் தொழில் பாஸ் செய்து தொழிலுக்குப் போனவர்களில், தொழிலுக்குத் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கப்பட்டோ, தள்ளப்பட்டோ போன வர்களோ, என்பதாக இதுவரை யாரையும் ஆக்கவில்லை, சொல்லவும் முடியவில்லை. அது மாத்திரமல்ல; தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்விக்கென்று ஏராளமான பணத்தை ஒதுக்கி வைத்துச் செலவழிக்கிறோம். இதைப் பற்றி  இது வரை யாரும், எந்த மேல் ஜாதிக்காரரும் குறை கூறவேயில்லை.

மற்றும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்னும் பேரால் மிகமிகத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று அவர்களது ஜனத்தொகை விகிதாசாரமாக 100க்கு 16 பேர்களுக்குப் பதவிகளை ஒதுக்கி, எப்படியோ பாஸ் செய்தால் போதும் என்று  திட்டம்  வைத்து இருக்கிறோம். இந்த முறையை - அந்த  விகிதத்தை (அய்க் கோர்ட் நீதிபதிப் பதவி ஒன்று போக மற்ற) எல்லாப் பதவிகளிலும் நிறைவேற்றி வரு கிறோம். அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாம் ஜாதி  காரணமாக ஒதுக்கி வைத்து இருக்கிறோம். இவை மாத்திரமா!  பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளைச்  சேர்ப்பதிலும் இந்த முறையைக் கண்டிப்பாய் நிறைவேற்றி வருகிறோம். அதாவது முதல் வகுப்பில் தேறியவனை விட்டுவிட்டு மூன்றாவதாகத் தேறியவனைச் சேர்த்துக் கொள்கிறோம்.

இவற்றால், உயர்ந்த வகுப்பில் பாஸ் செய்தவர்கள், உயர்ந்த எண்ணிக்கை மார்க்கு வாங்கினவர்கள் முதலியவர்கள் இவற்றை வாய்மூடி ஏற்றுக் கொண்டுதான் வருகிறார்கள்.

இவற்றிலிருந்தே தகுதி , திறமை, அனு பவம் என்பவை எல்லாம் பலித்தவரைப் பார்த்துக் கொள்வது என்று, ஒரு பித்த லாட்டத் தத்துவத்தில்தான் இருக்கிறதே தவிர, எந்த நியாயத்தையும், நேர்மையை யும் கொண்டல்ல என்பது யாருக்கும் நன்றாய் விளங்கும்.
ஆகவே ஜாதி அமைப்பு, ஜாதி முறை, ஜாதிப் பிரிவு, ஜாதி உணர்ச்சி ஒழிய வேண்டும் என்றால் மேற்கண்ட மாதிரியான ஒரு முறையைக் கையாண்டு தான் தீர வேண்டும். இதற்கேற்ற அரசியலை அவசிய மேற்பட்டால் பலாத்காரத்தின் மூலமாவது, மேலும் அவசியப்பட்டால் இதற்கு இணங்குகிற அன்னிய ஆட்சி யாரின் உதவி கொண்டாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசிய மாகிறது.

ஏனெனில், ஒரு நாட்டு மக்கள் சமுதாயத்தில் 100-க்குத் 97 பேர்கள் கீழ் ஜாதி மக்களாய்க் கடவுள் செயல்படி, மதக் கட்டளைப்படி, சாஸ்திர தருமங் களின்படி, சட்டத்தின்படி, நடப்புப்படி பல்லாண்டுகளாய் இருந்து வருவது என்றால், அது மாத்திரமல்லாமல் எந்த விதத் தனி யோக்கியதையும், தகுதியு மில்லாமல் 100-க்கு மூன்று பேர்களாக இருக்கும் ஒரு சிறு கூட்டத்தார், பல தந்திரங்களால் அரசியல் ஆதிக்கம் பெற்று, அதன் காரணமாக மேல் ஜாதி யாக, முதல் ஜாதியாக, மற்றவர்களைத் தொட்டால் தீட்டு, மற்றவர்கள் கண் ணால் கண்ட உணவை உண்டால் தீட்டு, மற்றவர்கள் மொழியைப் பேசினால் தீட்டு என்றும் கூடத் திட்டம் வைத்துக் கொண்டு, பெரும் பாலானவற்றை அமுலிலும் நடத்தி வரும் போது, இதற்கு ஆட்சியும் இடம் கொடுத்து வரும்போது, அதை இந்த ஆட்சியால் மாற்ற முடியா விட்டால், ஏன் அவசியப்பட்டால் அன்னிய ஆட்சியாளரைக் கொண் டாவது இதற்குப் பரிகாரம் செய்து கொள்ளக் கூடாது? என்பதுதான் எனக்குக் கவலை கொண்ட சிந்தனை யாக இருந்து வருகிறது. அதனால் தான் ஜாதி ஒழிப்பு என்று மேற்கண்ட திட் டத்தை அமுலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஏழை பணக்காரன் என்கின்ற நிலைமை ஒழிக்கப்படுவதற்கும் இதுபோன்று ஒரு திட்டம் தயாரித்துத்தான் ஆக வேண்டும். 
 -----------------------------------------------------------------தந்தை பெரியார்- `உண்மை, 14.9.1970