Search This Blog

19.8.15

பெரியாரின் சிந்தனைத் திரட்டு!

சிந்தனைத் திரட்டு!

பெரியார் அவர்கள் பற்பல சந்தர்ப்பங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து திரட்டிய அரிய சில கருத்துக்கள்.

"மேலுலகம்" என்பதும், "தேவலோகம்" என்பதும் கண்ணினால் பார்க்கக் கூடியவைகளாகவோ மனிதன் போய் வரக் கூடியவைகளாகவோ இருந்திருந்தால், பார்ப்பனர்கள் இவ்வளவு புளுகு புளுகி இருக்க மாட்டார்கள்.

***

மதம் என்றால் என்ன? அது எத்தனை? எப்பொழுது செய்தது? யார் செய்தது? யாருக்காகச் செய்தது? எது சரி? எது தப்பு? என்பவற்றைத் தேடிக் கொண்டு திரிவதை விட இயற்கை என்ன சொல்லுகின்றது? உன் புத்தி என்ன சொல்லுகின்றது? என்பதைக் கவனித்தால், அது சீக்கிரத்தில் உன்னை நல்வாழ்க்கையில் உனக்குத் திருப்தியும் சாந்தியும் உண்டாகக் கூடிய வாழ்க்கையில் கொண்டு விட்டுவிடும்.

***

மதத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு இடமிருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அது மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? இல்லையா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.

***

மதத்தை நம்பாதவர்களும், மதப்படி நடக்காதவர்களுமே மதம் மதம் என்று நம்மைத் தொல்லைப் படுத்துகிறார்கள்.

***

என் கஷ்டத்தைச் சாஸ்திரமும், மதமும், கடவுளும் கவனிக்கவில்லை. ஆனால் நான் ஏன் அவற்றை மதிக்க வேண்டும்?

***

மனிதனின் அடிமைத்தனத்திற்கு மூன்று காரியங்கள் இப்போது முக்கியமாய் இருந்து வருகின்றன. அவையாவன:

. யாரோ ஒருவன், ஏதோ ஒரு காலத்தில் என்னவோ ஒரு பாஷையில் யாருக்காகவோ, என்ன உத்தேசத்தின் மீதோ, சொன்னதாக யாராலோ எழுதி வைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டு பின்பற்றச் சம்மதிப்பது.

. மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று பயப்படுவது.

. நாம் இறந்த போனால் நமது பெண்டு பிள்ளைகளுக்கு என்ன கதி என்று நினைப்பது!

***

காங்கிரசுக்காரர்கள் சீர்திருத்தக்காரரையும் வைதிகர்களையும் ஏமாற்றி அதிகாரமும், பதவியும், பணமும், சம்பாதிக்கப் பார்க்கிறார்கள். உதாரணமாக,

வைதிகர்களிடம் சென்று ! வைதிகர்களே! எனக்கு ஒட்டு கொடுங்கள்; நான் சட்டசபைக்குச் சென்று எவ்வித சீர்திருத்தச் சட்டமும் செய்யப்படாமல் முட்டுக்கட்டை போட்டு காப்பாற்றுகிறேன் என்கின்றார்கள்.

***

சீர்திருத்தக்காரர்களிடம் வந்து ! சீர்திருத்தக்காரர்களே! எனக்கு ஓட்டுக் கொடுத்து சட்டசபைக்கு அனுப்புங்கள்; எவ்வித சீர்திருத்தம் வேண்டுமானாலும் சட்டம் செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி இருவரையும் ஏமாற்றுகிறார்கள்.

***

கோவில்கள் சாமிக்காக கட்டியதல்ல. மற்றெதற்காக என்றால், ஜாதியைப் பிரித்துக் காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து, ஒரு கூட்டத்தார் பிழைக்கவும், மக்களை அறியாமையில் வைத்த அடிமைகளாக்கவும் கட்டப்பட்டதாகும்.

***

ரயிலும், மோட்டாரும், ஆகாயக் கப்பலும், போக்குவரத்து சாதனங்களும் இல்லாத காலத்தில் புளுக ஆரம்பித்தால், ஜனங்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று கருதி பூலோகத்தில் இமயமலையைக் கைலயங்கிரி (வெள்ளிமலை) என்றும், பால் கடல், தயிர்க்கடல் என்றும், சிரஞ்சீவிகளும், சித்தர்களும் இங்கு இருக்கிறார்கள் என்றும், மற்றும் இதுபோல் ஆசை தீரப் புளுகிவைத்தான்.

***

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதமாயிருக்கின்றன.

***

சுயமரியாதை இயக்கமானது வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான்.

***

ஒரு மனிதன் தனக்கு மோட்சத்தில் இடம் பிடிப்பதற்கு ஆக வெகுபேர்களை நரகத்தில் (துக்கத்தில்) ஆழ்த்துகிறான்.

***

மாடுகள் தினவெடுத்துக் கொண்டால் உரசிக் கொள்வதற்குத் தேய்ப்புக் கல் அடித்து நட்டு வைக்கும் இந்து மக்கள் விதவைகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?

***

மணமென்பது மணமக்களின் மன மொத்ததேயாகும்.

***

ஒரு குறிப்பிட்ட பண்டிதனை விபசாரி மகன் என்று ஒரு காவியம் எழுதி, அதில் அவனையே தன் தாயின் விபசார வியாபாரத்திற்குத் தரகனாய் வைத்து அருமையான கற்பனைகளைக் கொண்டு பாடியிருந்தால், அந்தப் பண்டிதன் அந்தக் காவியத்தின் இன்பத்திற்கும் பொருட்சுவைக்கும் கற்பனை அலங்காரத்திற்கும் ஆசைப்பட்டு அக்காவியத்தைப் படிப்பானா, காப்பாற்றுவானா? காவியக்காரர்களே! பதில் சொல்லுங்கள். கம்பராமாயணம் அதில் சேர்ந்ததா அல்லவா?

***

பெரிய புராணமும், ராமாயணமும், பாரதமும், கீதையும் உள்ளவரை ஜாதி பேதமும் வருணாசிரமும் ஒழியவே ஒழியாது!

***

சைவமும் வைணவமும் வருணாசிரம மதமே ஒழிய சமரச சமயமல்ல. எப்படியெனில், விபூதி பூசினால் தான் சைவன் நாமம் போட்டால்தான் வைணவன், தீட்சையும் சமானமும் (முத்திரையும்) பெற்றால் தான் உயர்ந்தவன் என்று மேற்படி இரு மதமும் நிபந்தனை கொண்டிருக்கிறது.

***

கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன் பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

***

சுயமரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றையத் தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அங்கே கடவுள் செத்துப் போய்விட்டது.

***

ஆனால், நமது நாட்டில் அந்தச் செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுயமரியாதைக்காரர்கள் செய்கிறார்கள்.

***

பார்ப்பனர் நம்மைச் சூத்திரர்கள் என்று கூப்பிட்டால் நாம் அவர்களை மிலேச்சர்கள் என்ற கூப்பிட்டு வழக்கப்படுத்த வேண்டும்.  
                          -------------------பெரியார் - "குடிஅரசு", 04.10.1947

0 comments: