Search This Blog

15.8.15

மார்க்ஸ் வழியோ,லெனின் தலைமுறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது!-பெரியார்

ஜாதி காரணமாகவே ஒருவன் உழைக்காதிருக்கவும் மறற்றொருவன் உழைக்கவும் ஏற்படுகிறது


ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அவர்களுக்கு  இந்த வார்த்தை வாயில் நுழைய மாட்டேன் என்கிறது. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும் அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப்போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

இங்கத்திய மகன் அறிவு பெற்றவனாக இல்லை; கிணற்றுத் தவளைகளாகத்தான் அவன் வளருகிறான். இந்த நாட்டு மக்களிலே 100-க்கு 85-பேர்கள் கல்வியறிவில்லாத தற்குறி மக்கள் இந்த நிலைமைகள் எல்லாம் மாற்றம் அடையும்படியாக ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டால் தான் முடியுமே தவிர, அதை விட்டுவிட்டு இதெல்லாம் பிற்போக்கு சக்தி என்ற பல்லவி பாடிக்கொண்டு திரிவதில் எந்தவித பலனும் இல்லை; ஏற்படவும் ஏற்படாது. 

மார்க்ஸ், லெனின், ஏஞ்செல்ஸ் முதலியவர்கள் இந்தப்படி தான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் வாதம் நம்முடைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கசல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், இருக்கிற சமுதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது தெரியாது. அவர்கள் தங்களுடைய நாட்டிலே இருக்கிற என்பது தெரியாது. அவர்கள் தங்களுடைய நாட்டிலே இருக்கிற சமுதாய அமைப்புகளுக்கும் அவற்றின் குறைகளுக்குப் பரிகாரம் ஏற்படுகிற மாதிரியில் கொள்கைகள், திட்டங்கள் ஏற்படுத்தினார்களே தவிர, இந்த நாட்டைப் பற்றி அவர்கள் நினைக்கவுமில்லை தெரியவும் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைமுறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம். 

ஸ்டாலின் இறப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஒருமுறை சொன்னார். அதாவது, "நாம் நினைக்க முடியாத, அறிந்திருக்க முடியாத  சமுதாயக் கஷ்டங்கள் இந்தியாவிலே இருக்கின்றன. எனவே  அந்தச் சமுதாயக் கஷ்டங்களை ஒழிக்காமல் வெறும் பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டும் முன்னிறுத்திப் போராடுவதால் இந்தியாவில் கம்யூனிசத்தைக் கொண்டுவந்துவிட முடியாது" என்பதாகச் சொல்லியிருக்கிறார். இது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. அப்படி அவர்களுக்கு இந்த நாட்டின் நிலைமை, கஷ்டம், அமைப்புகள் தெரியாது. அவர்களுக்கு இந்த மாதிரியான ஒரு அமைப்பு ஒரு நாட்டிலே இருக்கும் என்பதே அதிசயமாக இருக்கிறது. அறிந்த பிற்பாடுதான் அவர்களும் சொல்லுகிறார்கள் நம்மைப்போலவே. 

உண்மையாக இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும். அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறியவேண்டும். முதன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரசாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான் என்பதை. 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள் பொருளாதாரத்துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான். ஆனால் சமுதாயத்துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத்துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால் சமுதாயத்துறை பேத ஒழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை. இதைப் பற்றிப் பேசுவதே பாபம் என்று கருதுகிறார்கள். பிற்போக்குச் சக்தி என்று கருதுகிறார்கள். பிற்போக்குச் சக்தி என்று சொல்லுகிறார்கள்.

மற்றும் சொல்லுகிறேன் தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்குச் சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும் ஆனால் சமுதாயப் புரட்சியைச் சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும், மக்கள் உள்ளத்திலே இன்றைய சமுதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும் இன்றைய சமுதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி பிரத்தியட்ச நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமுதாய அமைப்பை, இன்றைய அமைப்பு சர்க்கார் இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படி செய்வதன் மூலமாக. 30-வருடங்களுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம் திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவமும் திமிரும்? 30- வருடங்களுக்கு முன் எவ்வளவு தேர் திருவிழா நடைபெறும்! சாமிக்கு எவ்வளவு கூட்டம் சேரும்! இன்றைய தினம் சாமி ஊர்வலத்தின் போது பார்ப்பான், தூக்குகிறவர்கள், தீவட்டி பிடிப்போரைத் தவிர வேறு யாரும் காணுவதில்லையே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. எதற்குச் சொல்லுகிறேன், சர்க்காரைக் கவிழ்க்காமலேயே ஒழிக்காமலேயே மக்கள் உள்ளத்திலே உணர்ச்சியை அறிவை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த சமுதாயப் புரட்சியைச் செய்ய முடியும் என்பதற்கு ஆகவே சொல்லுகிறேன்.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம்; பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும் பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன். 

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே (மாவட்டத்தையே) எடுத்துக் கொள்ளுங்களேன்; யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் - பார்ப்பான் , அதற்கடுத்தபடியாக பணக்காரன் நிலமுடையோன் - சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கும் ஒன்றும் இல்லை யென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமேயில்லை. இப்போது சொல்லுங்கள்; பணக்காரன் - ஏழை என்கிற பாகுபாடு உயர்ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு சார்ந்து இருக்கிறதா? இல்லையா? என்று

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி இந்த அமைப்பின் மூலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000-வருடங்களாக இப்படியே இருக்கிறோம்.

இன்னமும் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவு கூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாக கூறுவேன்.

------------------------------------ மன்னார் குடியை அடுத்த வல்லூரில் 27.04.1953-ல் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 05.05.1953

0 comments: