Search This Blog

25.3.23

நான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....-- பெரியார்

 

நான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....


 

இன்றையத் தினம் உண்மையிலேயே நமக்கெல்லாம் பண்டிகை நாள் போன்றதாகும் என்றாலும், இதற்காக அவர் எடுத்திருக்கிற முயற்சியும், செய்திருக்கின்ற பெரிய ஏற்பாடும், செலவும் தான் பயமாக இருக்கிறது. நண்பர் முத்து அவர்கள் ஒரு காசு செலவு இல்லாமல் பெரிய வீரராகி விட்டார். தன்னுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் நடத்தி, அதன்பின் பல பெருமைகளை எல்லாம் பெற்று, அதைத் தன் பெண்ணும் அடைய வேண்டுமென்று அவளுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் அமைத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்து - காலம் பார்த்து, நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட பரிதாபத்திற்குரியவர்கள் பொறாமைப்படும்படியான அளவிற்கு அவர் வீரராகி விட்டார். நேரம், காலம், பொருத்தம் எல்லாம் பார்த்துத் தான் கண்ணகி - சீதை - சந்திரமதி - திரவுபதை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றன என்றாலும், இவற்றில் ஒழுக்கமாக நாணயமாக நடந்து கொள்ளவில்லை.

 

தமிழனுக்கு இதுபோன்ற ஒரு முறையே கிடையாது. இந்தக் கட்டுப்பாடு முறை எப்போது வந்தது என்றால், பார்ப்பான் வந்த பின் ஏற்பட்டது தானாகும். பார்ப்பான் இங்கு வரும்போது தேவையான பெண்களோடு வரவில்லை. இங்குள்ளவர்களைச் சரி செய்து கொண்டு வாழ்ந்தனர்.

இவர்கள் சரி செய்து கொண்ட பெண்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவர்களிடையே ஒழுக்கக் கேடுகள் ஏற்பட்டன. அதனால் பார்ப்பான் தனக்கு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பெண்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டான். எப்படி அரசாங்கமானது நெருக்கடி நேரும்போது சட்டம் இயற்றிக் கொண்டு சமாளித்திருக்கிறதோ, அதுபோன்று பார்ப்பான் (சட்டம்) கட்டுப்பாடு ஏற்படுத்தினான். இதை நான் சொல்லவில்லை. தமிழனின் மிகச் சிறந்த இலக்கண நூல் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியத்தில் எழுதி இருக்கிறான். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப" என்று. அய்யர் என்பது பார்ப்பனரைக் குறிப்பிடும் சொல் அல்ல. அக்காலப் பெரியவர்களை, அறிவில் சிறந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லாகும் என்று சில தமிழ்ப் புலவர்கள் கூறுவார்கள். இது சரியல்ல என்பதற்குத் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே" என்று. பார்ப்பனர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் கீழேரான சூத்திரர்களுக்கும் ஆயிற்று என்று குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து அய்யர் என்ற சொல் பார்ப்பானையே குறிப்பதாகும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றார்.

 

நானும் 100-வருடத்திற்கு இருந்து அவர்களும் (தி.மு. அரசும்) 100- வருஷமிருந்தால் இத்திருமணத்தைக் கிரிமினலாக்கி விடுவார்கள். ஆண்கள், என்று அயோக்கியராயினரோ அன்றே பெண்களை அடிமையாக்கி விட்டான். நம் நாட்டிலே மட்டுமல்ல - உலகமே இப்படித்தான் இருக்கிறது. நம் நாட்டிலாவது நாகம்மாள், ராஜம்மாள் என்று பெண்கள் பெயரைக் குறிப்பிடுகின்றோம். ஆனால், வெள்ளைக்காரன் நாட்டில் எல்லாம் மிஸஸ் தான். பெண்ணிற்கு உரிமையில்லை. எனவே, பெண்ணடிமையைப் பற்றி எவனுமே கவலைப்படவில்லை. இந்தியாவிலேயே இதற்காகப் பாடுபடக் கூறயவர்கள் நாங்கள் ஒருவர் தான்.

 

பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடையவளாக இருக்க வேண்டுமென்று வள்ளுவன் சொல்கிறான் - அவ்வை சொல்கிறாள். மற்ற எல்லா புலவனும் இதைத்தான் சொல்கிறான். இரண்டு பேர்களும் சமம் என்று இம்முறையில் இருவரிடமும் உறுதி வாங்குகிறோம். அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்களோ, இல்லையோ. ஆனால் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உறுதி வாங்குகிறோம். அவர்களும் நடந்து கொள்வதாக உறுதியளிக்கின்றார்கள்.

 

வழக்கம் என்பது காட்டுமிராண்டி காலத்ததும், சாஸ்திரம் என்பது மிருகப் பிராயத்ததும் ஆகும்.

 

பொருத்தம் பார்ப்பது - சாமி கேட்பதும், ஜாதகம் பார்ப்பது, ஜோசியம் பார்ப்பது இவை யாவும் முட்டாள்தனமானது. மூட நம்பிக்கையானது. பெரிய பி.., எம்.., படித்தவனெல்லாம் மேதாவி, அறிவாளி எல்லாம் இதைப் பார்த்துத் தான் திருமணத்தை ஏற்பாடு செய்கின்றனர். அவ்வளவு மூட நம்பிக்கை படிந்திருக்கிறது. அறிவு வளர்ச்சி இல்லை.

 

இப்போது நடைபெற்ற இத்திருமணமானது 68-ஆம் வருஷ மாடல் ஆகும். 1967-ஆம் வருட மாடல் - இத்திருமணம் செல்லாதென்றிருந்தது. 1968-ஆம் வருடத்தில் சட்டப்படிச் செல்லும் என்றாகி இருக்கிறது. நாளை 1969-இல் இத்திருமண முறை எப்படி மாறுமோ சொல்ல முடியாது.

 

மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கடங்கி செலவு செய்ய வேண்டும். ஆடம்பரமான வாழ்வு வாழக் கூடாது. பிறர் கண்டு பொறாமைப்படும்படியாக வாழாமல் எளிய வாழ்வு வாழ வேண்டும். தங்களின் குடும்பத்தை மட்டும் நினைக்காமல் நம் சமுதாயத்தையே நினைக்க வேண்டும். நம் இனத்திற்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். மோட்சம் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கவலையற்ற தன்மையாகும். பிள்ளைகள் இல்லாமலிருப்பதும் வரவிற்கு மேல் செலவிடாமலிருப்பதும், மனிதனுக்குக் கவலையற்ற வாழ்வாகும், மோட்சமாகும். சிலர் அறிவுள்ள குழந்தைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்றார்கள். அறிவுள்ள பிள்ளையைப் பெற வேண்டுமானால் எந்தக் கடையிலே போய்ச் சாமான் வாங்குவது? பிள்ளை பிறந்த பின்தானே அதை அறிவுள்ளதாக்க நாம் தானே மாரடிக்க வேண்டும். பிறப்பதற்கு முன்பே - பெறும் போதே எப்படி அறிவுள்ளதாகப் பெற முடியும்?

 

         ---------------------------- 12.07.1968 அன்று நடைபெற்ற பெருமாள் - இலங்கனி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை."விடுதலை", 12.08.1968

17.3.23

பெரியாரை வைத்தியநாத அய்யர் காப்பாற்றினாரா?

தந்தை பெரியாரை வைத்தியநாத அய்யர் காப்பாற்றினாரா? மதுரைக் கலவரம் பற்றி தந்தை பெரியார் விளக்கம்!



மதுரை கருப்புச் சட்டைப் படை மாகாண மாநாடு ஊர்வலம் 11.05.1946ஆம் தேதி மதுரை காங்கிரசுக்காரர்களைக் கதி கலங்கச் செய்துவிட்டது. 50,000 மக்கள் கொண்ட 6 மைல் ஊர்வலமும், சவுராஷ்டிர, பார்ப்பன ஆண்கள், பெண்மணிகள் உள்பட ஊர்வலத்தைக் கடவுள் உற்சவ ஊர்வலமாகக் கருதிக் கும்பிட்டு மரியாதை செய்த மூட-நம்பிக்கைக் காட்சியும், வைகை ஆற்றில் போடப்பட்டிருந்த பிரமாண்டமான கொட்டகையிலும் அதற்கு வெளியிலும் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களையும் கண்டு மனம் வெடிக்கப் பொறாமை கொண்ட காங்கிரசாரில் 11ஆம் தேதி இரவே சில தலைவர்கள் கூடி, சுமார் 1000 ரூபாய் போல் தங்களுக்குள் செலவு தொகை ஏற்பாடு செய்து கொண்டு இரவு முழுதும் சுற்றி அலைந்து தொண்டர்களையும், கலகக்காரர்களையும் ஏற்பாடு செய்து கொண்டு 12ஆம் தேதி காலையில் அட்டூழியம் துவக்கி விட்டுவிட்டார்கள்.


இப்படிச் செய்வதற்கு தங்களுக்கு ஒரு சாக்கு கற்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இரண்டு விஷயங்களை கற்பனை செய்து கொண்டார்கள்.

1. கருப்புச் சட்டையினர் கோவிலில், சாமி, பெண்கள் ஆகியவர்களை அவமதித்ததாகவும்,
2. காங்கிரசு கொடியை கொளுத்தினதாகவும்,

கற்பித்த இரு விஷயங்களைக் காங்கிரசு தொண்டர்கள் ஊர் முழுவதும் குழாயில் கூவியும், பறையடித்தும் ஜனங்களை கிளப்பி விட்டார்கள். அப்படி இருந்தும் ஜனங்கள் ஒன்றும் ஆத்திரம் அடையாமல் அலட்சிய-மாகவே இருந்துவிட்டார்கள்.

பிறகு காங்கிரசுக்காரர்கள் சிலர் மதுரை நகரில் உள்ள கருப்புச் சட்டைப்படை காரியாலயத்தில் புகுந்து (அந்த சமயம் அங்கு ஒருவரும் இல்லை, எல்லோரும் மாநாட்டில் இருந்தார்கள்) அங்குள்ள சாமான்களை எடுத்துக் கொண்டு கட்டி இருந்த கொடியையும் சாய்த்துப் பிடுங்கிக் கொண்டு, கூட்டமாக வீதியில் கூப்பாடு போட்டுக் கொண்டு வழி நெடுக கட்டி இருந்த கொடிகளையும் பறித்துக் கொண்டு எதிரில் தென்பட்ட இரண்டொரு கருப்புச் சட்டை போட்டிருந்தவர்களையும் தாக்கிக் கொண்டு கூத்தடித்தவண்ணம் தோழர் ராதா வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அந்த வீடு தாளிட்டிருந்த படியால் பெரும் பெரும் கற்களை கதவின் மீது எறிந்திருக்-கிறார்கள்.

இந்தச் சமயத்தில் இரண்டொரு தொண்டர்கள் டவுனிலிருந்து கொட்டகைக்கு ஓடிவந்து இந்தப்படி காங்கிரசுக்காரரால் டவுனில் காலித்தனம் நடப்பதாகச் சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் நான் கொட்டகை-யில் இருந்தவர்களுக்குத் தக்கபடி அடக்கம், பொறுமை, கட்டுப்பாடு ஆகியவை-களைப் பற்றி மறுபடியும் (அதாவது முதல்நாள் எனது தலைமை உரையில் இவைகளையே சொன்னேன்.) வற்புறுத்திச் சொல்லி யாரையும் பந்தலுக்கு வெளியில் போகக் கூடாது என்றும் சொல்லி அடக்கிவிட்டு மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மறுபடியும் சில தொண்டர்கள் மேடைக்கு ஓடிவந்து, காங்கிரசு காலிகள் வழிநெடுக கருப்புச் சட்டைக்காரரை தாக்கிக் கொண்டு இங்கும் வரவும், கொட்டகையை கொளுத்தவும், திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், வரப்போகிறார்கள் என்று சொன்னார்கள். நான் அதைப் பற்றி கவலைப் படாதீர்கள்; வந்தால் பார்த்துக் கொள்ளலாம்; நீங்கள் வெளியில் போகாதீர்கள் என்று சொன்னேன்.


கொட்டகையில் இருந்த ஒரு தொண்டர் இரண்டு ஊர் வாலண்டியர்கள் ஒன்றாய் வந்து கேளுங்கள் என்று ஒலி பெருக்கியில் கூப்பிட்டார். அவர்கள் பந்தலுக்கு முன்புறம் சுமார் 100, 200 பேர்கள் ஒன்று சேர்ந்திருக்-கிறார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தத் தொண்டர் ஊருக்குள் இருக்கும் கருப்புச் சட்டைப் பிரதிநிதிகளை காப்பாற்றி அழைத்துவரச் சென்றார்கள். வழியில் ஒரு இடத்தில் இவர்களைக் கண்ட போலிசார் மேலே செல்ல ஒட்டாமல் தடுத்து அப்படியே ஒரு இடத்தில் சேர்த்தாற்போல் அடைத்து-வைத்துக் கொண்டார்கள். இது தெரிந்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டுக் காரியதரிசி தோழர் திராவிடமணி கொட்டகையில் இருந்த ஒரு சப் இன்பெக்டரை அழைத்துக்கொண்டு டவுனுக்குள் சென்றார். சப்இன்பெக்டர் சைக்கிளில் சென்றார், திராவிட மணி குதிரை வண்டியில் சென்றார். சைக்கிள் வேகமாகச் சென்றதால் மறைந்துவிட்டது.

திராவிடமணி சென்ற வண்டியைக் காங்கிரசுகாரர்கள் நிறுத்தி, திராவிட மணியை இறங்கச் செய்து கடினமாகத் தாக்கினார்கள். தாக்குதல் பொறுக்கமாட்டாமல் அவர் ஓடி ஒரு அடுத்த முசுலிம் வீட்டிற்குள் புகுந்துவிட்டார். ஆனால் அவர் எங்கு போனார் என்று மற்ற நம் தொண்டர்களுக்குத் தெரியாததால் திராவிட மணியை தூக்கிக் கொண்டுபோய் விட்டார்கள் என்று சத்தம் கொட்டகையில் போடப்பட்டது. ஜனங்கள் ஒரே கட்டுப்பாடாய் எழுந்தார்கள். நான் எழுந்து அவர்களை உட்காரச் சொல்லிக் கொண்டிருக்கும்போது போலிசு ஜில்லா சூப்பிரண்டு, சில இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், மேஜிஸ்ட்ரேட்டுகள் ஆகியவர்கள் கொட்டகைக்குள் நுழைந்து மேடைக்கு வரலாமா என்று கேட்டார்கள். நான் வரலாம் என்று சொன்னேன். நகரத்தில் காலித்தனம் (ஹூலிகானிசம்) தலைவிரித்து ஆடுகின்றது. இங்கு வராதபடி தக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். உங்கள் கூட்டத்தை எவ்வளவு சுருக்கி நடத்தலாமோ அவ்வளவு சுருக்கமாக நடத்தி முடியுங்கள் என்று சொன்னதோடு, உங்கள் ஆட்களுக்கு ஒன்றும் கவலை வேண்டியதில்லை. அவர்களை அடக்கமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜில்லா சூப்பரண்ட் சொன்னார். கலகத்துக்குக் காரணம் என்ன என்று கேட்டேன். அதில் ஒருவர் இன்றைய ஆட்சி அப்படி இருக்கிறது நாம் என்ன செய்ய முடியும்? என்றார்.

அதோடு கூடவே மற்றொருவர் உங்கள் ஆளுகள் காப்பிக் கடை கண்ணாடிகளை உடைத்த-தாகவும், காங்கிரசு கொடியை அவிழ்த்து கொளுத்தியதாகவும், கோவிலில் சென்று கணேச விக்கிரகத்தைத் தொட்டு விட்டதாகவும் சொல்லுகிறார்கள் என்று சொன்னார். உடனே எனக்கு கோபம் வந்து இந்தப்படி நம்மவர்கள் நடந்ததாக அதிகாரிகள் சொல்லுகிறார்கள். இப்படி நம்மவர்கள் செய்வது என்றால் நமக்கு யோக்கியதையா என்று கேட்டேன். உடனே ஞி.ஷி.றி. அவர்கள், அவர்கள் செய்ததாக நான் சொல்லவில்லை, செய்ததாகக் காங்கிரசுக்காரர்கள் சொன்னார்கள், அதை உங்களிடம் சொன்னேன் என்று சொன்னதோடு, இதை இந்த ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றார் (அதாவது இந்தப் பழி கற்பனை என்பதை அவர் அப்போதே உணர்ந்திருக்கிறார் என்பதற்கு அறிகுறியாகும்).


எனவே முதல்நாள் ராத்திரி, காங்கிரசு தலைவர்கள் தோழர் வைத்தியநாதய்யர், தந்தி பத்திரிகை ஆசிரியர் இன்னும் இரண்டொருவர் சேர்ந்து வம்புச்சண்டைக்கு வர ஏற்படுத்திக் கொண்ட காரணங்கள் இவை என்றும், அங்கு கோவிலுக்கு உண்மையில் ஆண்கள் யாரும் செல்ல-வில்லை. வெளியூர் பெண்கள் சிலர் கோவிலுக்குப் போனார்கள் என்றும் சிலர் அப்போதே சொன்னார்கள்.

இதன் பின் சில தீர்மானங்கள் படிக்கப்பட்டு என்னால் முடிவுரை கூறப்பட்டுத் தலை-வருக்கும், போலிசுக்கும் நன்றிகூறிக் கூட்டம் முடித்து யாவரும் கொட்டகைவிட்டு வெளிவந்துவிட்டோம்.

வெளிவந்தவர்கள் ஊருக்குள் சாப்-பாட்டுக்குப் போனால் காங்கிரசார் அடிப்பார்கள் என்றும் சாப்பாடு இங்கேயே கொண்டு வரப்படும் என்றும் யாரும் வெளியில் போகக்கூடாது என்றும் மேஜிஸ்ட்ரேட், சப்இன்ஸ்பெக்டர் என்னிடம் வந்து சொன்னார்கள், அதன் மீது யாரும் வெளி செல்லவில்லை. கடைசிவரை அன்று முழுவதும் சாப்பாடு வரவில்லை. காரணம் கேட்டதில் காங்கிரசார் நாம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த ஓட்டலுக்குள் புகுந்து சாப்-பாட்டை நாசம் செய்துவிட்டதாகப் பிற்பகல் 4 மணிக்குச் சொன்னார்கள். இதற்குள் காலி கூட்டம் பந்தலுக்கு வந்து அங்கு ஒவ்வொரு கொட்டகையாக நெருப்புவைத்துவிட்டு பிரதிநிதிகள் தங்கியிருந்த ஒரு முனிசிபல் பள்ளிக்கூடக் கட்டிடத்திற்குள் புகுந்து அங்குள்ள சிலரை அடித்துவிரட்டிவிட்டு, அங்குள்ள சுமார் 300, 400 பிரதிநிதிகளின் கைப்பை, பெட்டி, செருப்பு, குடை, பாத்திரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். சிலர் நான் இருந்த கட்டிடத்-தையும் மற்றும் பிரதிநிதிகள் இருந்த கட்டிடத்தையும் சூழ்ந்து கொண்டு கற்களை எறிந்தார்கள், இந்த இடத்தில் போலிசார் துப்பாக்கியுடன் காவல்காத்து காங்கிரசுக்-காரர்களை விரட்டிக் கொண்டே இருந்தார்கள்.

எனவே, முதலில் கொட்டகையிலும், பிறகு பிரதிநிதிகள் சுமார் 2000 பேர்கள்  அடை-பட்டுக்கிடந்த கட்டடத்திலும் இந்த காரியம் மாலை 7 மணி வரை நடந்த வண்ணமாக இருந்தது.

மாலை சுமார் 5.30 மணிக்கு D.I.G. (டி.அய்.ஜி.), D.S.P. (டி.எஸ்.பி) சில இன்ஸ்பெக்டர்கள், மேஜிஸ்ட்ரேட்டுகள் நான் இருந்த ஜாகைக்கு வந்து தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டு, தங்களால் அடியோடு அடக்க முடியாததற்குக் காரணம் சொல்லி தங்களுக்கும் (ஞி.ஷி.றி.க்கும்) கண்ணிற்கு பக்கத்தில் கல்லடிபட்டு ஒழுகிய ரத்த ஒழுகலோடு,  காயத்தைக் காட்டிவிட்டு இன்று 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் போடப்போகிற படியால் யாரும் ஊருக்குள் நடமாடமுடியாதென்றும் ஆதலால் நீங்கள் இன்றே போவதானால் அடுத்த டேஷன்களுக்கு வண்டி சப்ளை செய்கிறோம் என்றும் இல்லாவிட்டால் காலை போகலாம் என்றும் சொன்னார்கள்.

காலை முதல் பலருக்கு ஆகாரமில்லை ஆதலால் இப்பொழுதே அவர்களை அனுப்பிக்கொடுத்து விட்டால் நலம் என்றேன். சரி, வண்டியும் ஆளும் அனுப்புகிறேன் என்று சொல்லிப் போய்விட்டார். 7.30க்கு பஸ்கள் வந்தன. மக்கள் ஏறிச் சென்று கொண்டே இருந்தார்கள். மற்றும் பலர் டவுனுக்குள் இருந்து வந்து சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.

விசாரித்ததில், கருப்புச் சட்டை போட்ட தோழர்கள் சுமார் 40, 50 பேர்களுக்கு காங்கிரசுக்காரரால் அடி என்றும், ஒரு கருப்புச் சேலை அணிந்திருந்த பெண்ணை அடியோடு சேலையை அவிழ்த்துக் கொண்டு நிர்வாண-மாகத் தெருவில் ஓடஓடத் துரத்திக் காங்கிரசுக்காரர்கள் அடித்தார்கள் என்றும், சில பெண்களின் முகத்தில் காரி உமிழ்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஜாகையில் இருந்து எடுத்துக் கொண்டு ஓடிய சாமான்களும் பிரதிநிதிகளிடம் அடித்து மிரட்டிப் பிடுங்கிக் கொண்ட பணமும் காணாமல் போன சாமான்களின் பெருமானமும் எல்லாம் சேர்ந்து சுமார் 5000, 6000 ரூபாய் மதிப்பிடப்படுகிறது. இவை தவிர கொட்டகை, ஸ்டால்கடைகள் ஆகியன நாசப்படுத்திக் கொள்ளையடித்ததின் காரணமாய் ஏற்பட்ட நஷ்டம் சுமார் 15000 ரூபாய் என்று சொல்லப்படுகிறது.


தோழர் வைத்தியநாதய்யர் அவர்கள் கலவரத்தின் போது வந்தார் என்பது அவர் பணம் கொடுத்து ஏவிவிட்ட காலித்தனம் கிரமமாய், வெற்றியாய் நடந்ததா என்பதைப் பார்க்க வந்தார் என்றே நம் கூட்டத்தினர் கருதி அவரைக் கோபித்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் அவர் வந்தவுடன் காலிகள் அவரை மரியாதை செய்து வழியனுப்பி-யிருக்கிறார்கள். போலிசு சூப்பிரண்டை கல்லால் அடித்த காலிகள் தோழர் வைத்தியநாதய்யருக்கு அடிபணிந்து வாழ்த்து கூறினார்கள் என்றால் அதில் நம்மவர்கள் கொண்ட கருத்துக்கு ஆதரவு இல்லாமல் இருக்க முடியாது.

ஊர்வலத்தின் போதும், மாநாட்டில் எனது தலைமை உரையிலும் கருப்புச் சட்டைப் படையினரையும், திராவிடர் கழகத் தொண்டர்களையும் புத்தி கூறி அவர்களுக்கு அடக்கம், பொறுமை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கீழ்ப்படிதல் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதைத் தொண்டர்கள் மனம் புண்படும்படியான அளவுக்கு நான் இடித்து இடித்துக் கூறியிருக்கிறேன். மக்களிடம் சிறப்பாக காங்கிரசு கம்யூனிஸ்ட் தோழர்களிடம் நட்புரிமை காட்டவேண்டும் என்றும் கூறியிருக்கிறேன். இரவு நடந்த நாடகத்தையும் அடக்கமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்-கொண்டிருக்கிறேன். இவை சி.மி.ஞி சுருக்கெழுத்து ரிப்போர்ட்டை பார்த்தால் தெரியும். இப்படியெல்லாம் இருக்கக் கருப்புச் சட்டையினர் கோயிலுக்குள் செருப்புடன் சென்றது என்பதும் பெண்களை இழிவாகப் பேசியது என்பதும் காங்கிரசு கொடி கொளுத்தப்பட்டது என்பதும் எப்படி நடந்திருக்க முடியும் என்பதும் எனக்கு விளங்கவில்லை.


தோழர் இராதா வீட்டிற்குப் போய் அங்கு குழப்பமும், நாச வேலையும் செய்யப்பட்டதற்கு தோழர் வைத்தியநாத அய்யர் அறிக்கையிலும் நிருபர் சேதிகளிலும் ஒரு காரணமும் சொல்ல-வில்லை.

தவிர கோவில் பெண்கள் சாமி சாக்கை, காங்கிரசார் குறிப்பாகப் பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக கற்பித்துப் பேசி வருகிறார்கள்

திருச்சி மாநாடு நடந்த மறுநாள் இதையே சொல்லிக் கலகம் துவக்கினார்கள். அதாவது மலைக்கோட்டைக் கோவிலுக்குள் சென்று சுவாமியை அசுத்தப்படுத்தினார்கள் என்று எல்லாப் பத்திரிகைகளும் பிரசுரித்தன. பிறகு அது சிறிது கூட உண்மையற்ற அபாண்டப் புளுகாக முடிந்தது. ஒரு கருப்புச் சேலை கட்டிய பெண்ணை நிர்வாணமாக்கினார்கள் இந்தக் காலிக் கூட்டத்தினர். இந்த அட்டூழியம் பார்ப்பனர் பணத்தால் பார்ப்பனர்கள் பத்திரிகையால் கட்டுப்பாடாகச் செய்யப்-படுகின்றன. இன்று நேற்றல்ல வெகு நாளாகவே செய்யப்படுவதாகும். தோழர் வைத்தியநாத அய்யர் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வார் என்று நான் கருதவேயில்லை. ஆனால், முதல்நாள் ஊர்வலமும் மாநாடும், நாடகமும், பார்ப்பனர்களை அவர்களது கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தி செய்தேதான் தீரும்.

அதனாலேயே அவர்கள் இந்த விளையாட்டு விளையாடினார்கள் எனலாம். ஆனால் சுத்த திராவிடர்கள் இதற்கு வானர சேனைகளாக விபீஷணர்களாக இருந்தது நம் சமுதாயத்-திற்கே இழிவான காரியமாகும்.

பத்திரிகைகளின் விஷமப் பிரசாரத்தால் பார்ப்பனர்களுக்கு, இவ்வளவு அட்டூழியம் செய்ய முடிகிறது. இவற்றால் எல்லாம் நமது தன்மானக் கிளர்ச்சி அடங்கிவிடும் என்று நினைப்பது அறியாமையேயாகும்.

கருப்புச் சட்டை படையினர் இதை ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டும். அடுத்த கருப்புச் சட்டைப் படை மாகாண தனிக் கூட்டம் ஒன்று சமீபத்தில் கூட்டப்பட வேண்டும். அது சமீபத்தில் நாம் கூட்டப்படப்-போகும் திராவிடர் கழகத் தனி ஸ்பெஷல் மாகாண மாநாட்டுடன் கூட்டப்பட வேண்டும். அதில் நாம் இதில் விட்டுப்போன காரியங்களைத் தொடர்ந்து நடத்தி நம் எதிர்காலப் போக்கை நிர்ணயிக்க வேண்டும். அதற்குள் கருப்புச் சட்டை போடுகிறவர்கள் பெருகி அங்கத்தினர் எண்ணிக்கையும் நிதி வசூலும் பூர்த்தியாக வேண்டும். மதுரையில் நடந்த பார்ப்பன சூழ்ச்சி, தொல்லை, துன்பம் ஆகியவை நாம் வேகமாய் நமது லட்சியத்தை நாடிச் செல்வதற்கு சாட்டை அடியேயாகும். நம் பெண்களுக்கும், சில பிரதிநிதிகளுக்கும் மதுரையில் ஏற்பட்ட இழிவு, துன்பம் ஆகியவை நமக்கு உணர்ச்சியை உள்கொள்ளும் மருந்தின் மூலம் கொடுக்காமல் இஞ்சக்ஷன் (அதாவது ஊசிபோடுவதன்) மூலம் செலுத்தப்பட்ட மருந்து மூலம் கொடுக்கப்பட்டதாகக் கருத வேண்டும். பார்ப்பனர் இப்படிச் செய்தும் நமக்கு மான உணர்ச்சி வரவில்லையானால் பிறகு நமக்குப் பார்ப்பனர் சொல்லும் வேசிமகன், சூத்திரன், கீழ்ஜாதி, என்பனவாகிய பேர் மிக மிகப் பொருத்தமானதே யாகும். ஆகையால், மதுரை படிப்பினையைக் கொண்டு யார் யார் பரிட்சையில் தேறுகிறார்கள் என்று பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம்.


குறிப்பு:- கவர்மெண்டில் இருந்து ரிபோர்ட் கேட்டவுடன் தோழர் வைத்தியநாதய்யர் தமது இயற்கையான கவுண்டர் ஸ்டேட்மெண்ட் போடும் தொழில் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி மதுரை அதிகாரிகளுக்கு இன்னவிதமாய் ரிபோர்ட் செய்வது என்று வழி சொல்லிக் கொடுக்கும் முறையில் ஒரு அபாண்ட அறிக்கை விட்டிருக்கிறார். துப்பாக்கி அடிபட்டுச் செத்தவர்கள் சவுராஷ்டிரப் பார்ப்பன ஆட்கள், இவர்கள் காங்கிரசுக்காரர்கள். குத்துப்பட்டவர் போலிசார் என்பதை மறந்து பத்திரிகை நிருபர்களும், நிகழ்ச்சி அன்று இவரது (தோழர் வைத்தியநாத அய்யரது) யோசனை கேட்டு அந்தப் படியே சேதி தயாரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

இனி இவைகளை அனுசரித்துத்தான் மதுரை அதிகாரிகள் ரிபோர்ட் செய்வார்கள் என்பதில் அய்யமில்லை. ஆனால் அந்த அதிகாரிகளில் சிலரே மதுரையில் காங்கிரசு ஆட்சியில் இவற்றை நீங்கள் எதிர்பார்க்க வேண்டியதுதான் என்று ஜாடை காட்டினார்கள். ஆனதால் மந்திரிகள் நீதியும் எப்படி இருக்கும் என்பது முடிவான-தேயாகும். எப்படி இருந்தாலும் நமக்கும் நம் தோழர்களுக்கும் அங்கு நடந்த உண்மைகள் தெரியும். கலவரம் எப்படி நடந்தது? யாரால் நடத்தப்படுகிறது? என்பதை கண்ணால் பார்த்ததேயாகும். எதிரிகள் தொல்லையையும், துன்பத்தையும், அனுபவிக்க சக்தி நமக்கும், நமது தொண்டர்களுக்கும் உண்டு. ஆகவே நாம் பயப்படவோ, கலங்கவோ, தேவையில்லை. இந்த மதுரை படிப்பினையில் நம் முயற்சியும், உள்ளமும் சற்று அதிகமாக உரம் பெற்றிருக்-கிறது. யாரும் கலங்க வேண்டியதில்லை.


                        --------------------------"குடிஅரசு" - தலையங்கம் - 18.05.1946
                                                                       ***

வைத்தியநாத அய்யரின் சதிவேலைகள் பற்றி

தந்தை பெரியார் கூறிய குறிப்புகள்!

¨    மதுரையில் கருப்புச் சட்டைப் படையினர் பிராமண சமுகத்தைக் கேவலமாகத் தாக்கியதாக பிராமண சேவா சங்கம் கண்டித்திருப்பதாகவும், மேற்படி சங்க காரியதரிசி சட்டமந்திரியிடம் இதுபற்றி புகார் செய்திருப்பதாகவும் - அதில் இந்தியன் பினல் கோட்படி கருஞ்சட்டைப்-படை நடத்தை குற்றமாகுமென்றும், 25 வருட காலத்துக்குமேல் பிராமணர்கள் பொறுத்து வந்ததாகவும், இனிப் பொறுக்க முடியா-தென்றும், குறிப்பிட்டிருக்-கிறதாகவும், 15ஆம் தேதி தினமணி எழுதுகிறது. இதிலிருந்து மதுரைக் கலவரத்துக்கு பார்ப்பன தூண்டு-கோல் எவ்வளவு இருக்கும் என்பதையும், தோழர் வைத்தியநாதய்யர் பணம் கொடுத்து கலவரத்தை கிளப்பிவிட்டார் என்பதில் உண்மை இல்லாமலிருக்குமா என்பதையும் திராவிடர்கள் சிந்திப்பார்களாக.

                       -----------------------"குடிஅரசு" - பெட்டிச்செய்தி - 18.05.1946


                                                                          ***

¨    அதில் மதுரை வக்கீல் தோழர் வைத்தியநாத அய்யர் என்பவர் இரண்டு விதத்தில் முக்கியமானவராகி அட்டூழியத்தை அவசிய-மாக்கி விட்டார் என்று தெரிகிறது. 
 
அவையாவன:- 1. மதுரையில் பொதுவாக இருந்து வரும் பார்ப்பனர்,- பார்ப்பனரல்லா-தார் என்கிற பேத உணர்ச்சி
 
 2. தோழர் வைத்தியநாத அய்யர் ஆச்சாரியார் கட்சியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவருக்கு மதுரையில் மதிப்பு இல்லாமல் போனதோடு அவர் பேரில் மதுரை காங்கிரசின் பார்ப்பனரல்லாதாருக்கு வெறுப்பு அதிகமாய் இருந்ததும், அவருக்கு அங்கு மேடையே இல்லாமல் இருப்பதும், வீதியில் நடக்கக்கூட போதிய தாராளம் இல்லாமல் இருந்ததுமாகும். இந்த இரண்டு காரியத்துக்கும் பரிகாரம் தேட வேண்டிய முறையில் மதுரை அட்டூழியத்திற்கு அவர் பிறப்பிடக்காரராக ஆகவேண்டியவராகி-விட்டார். அதனாலேயே இந்த அட்டூழியத்-திற்கு வழி சொல்லிக் கொடுக்கவும், துவக்கப்படுவதற்கு செலவு கொடுக்கவும், இவர் பேரில் வெறுப்புள்ள காங்கிரசு தலைவர்களைக் கண்டு நேசம் பேசவும் முனைந்தார் என்றும் தெரியவருகிறது.

¨    தடிகளுடனும், கல்லுகளுடனும் காலிகள் வந்து பிரதிநிதிகள் தங்கியிருந்த கட்டடங்கள் மீது கல்லெறியவும் உள்ளே நுழையவும் ஆரம்பித்தார்கள். ரிசர்வ் போலிசார் துப்பாக்கிகளுடன் இருந்து அவர்கள் கட்டடங்களுக்குள் புகாமல் தடுத்து-வந்தார்கள். எனினும் அவர்கள் கலகமும், கல்வீச்சும் நடந்தவண்ணமாகவே இருந்தன. இதே சமயத்தில் தோழர் வைத்தியநாதய்யர் வந்து காலிகளுடன் குலாவி காலிகளின் புகழ் வார்த்தைகளை பெற்றுக் கொண்டு ஆசிர்வதித்துவிட்டுப் போனார் என்றும் தெரியவந்தது.

¨    இந்தக் காலித்தனத்தக்குக் காரணஸ்தர்களில் தோழர் வைத்தியநாத அய்யர் அவர்களே முக்கியமானவரும் முதன்மையானவரும் என்று பல இடங்களிலிருந்து சேதிகள் வந்து-கொண்டு இருக்கின்றன. அதற்கேற்றாற்-போல் கலவரத்துக்கு மறுநாளே மதுரை பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து கருப்புச் சட்டைப் படைக்காரர்-களால் தங்களுக்கு பயமாயிருக்கிறதென்றும் மந்திரிகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருக்-கிறார்கள். தோழர் வைத்தியநாத அய்யரும் எங்க அய்யா குதிருக்குள் இல்லை என்கிற பழமொழியை அனுசரித்துத்தான் இந்தக் கலவரத்தில் பிரவேசித்ததற்குச் சமாதானம் சொல்லும் முறையில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை எந்த விதத்திலும் அதிகாரமுறையில் வைத்தியநாத அய்யருக்கு சம்பந்தப்-பட்டதல்ல. அவர் மதுரையில் காங்கிரசு பிரதிநிதி என்று ஒப்புக் கொள்ளப்பட்டவருமல்ல. அங்குள்ள காங்கிரசு பார்ப்பனர் அல்லாதாருடைய வெறுப்புக்கு ஆளானவர். அப்படிப்பட்டவர் அபாண்டமான ஒரு அறிக்கையை வெளியிட முன்வந்ததானது அவருடைய சம்பந்தத்தை உறுதிப்-படுத்தத்தக்கது ஆகும்.
 
                     ----------------தந்தை பெரியார் சொற்பொழிவில் இருந்து.‘குடிஅரசு’ - 25.05.1946
 
இப்படி கலவரத்தைத் தூண்டிய காரண-கர்த்தா வைத்தியநாத அய்யரை, காப்பாற்றிய கர்த்தாவாகக் காட்டுவது உலகமகா மோசடியல்லவா? நரியைப் பரியாக்கிக் காட்டிய ஆரிய கூட்டமல்லவா? அதுதான் கலவரகர்த்தாவை காருண்ய கர்த்தாவாக காட்ட முயலுகிறது! ஆரிய பார்ப்பன இனப் புத்தி என்றைக்கும் மாறாதோ?